Search This Blog

Friday, September 06, 2013

நோ மோர் நோக்கியா!

 
நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் பிரிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரும்தொகை கொடுத்து வாங்கிவிட்டது என்பதுதான் ஹாட் டாபிக். ஒரு காலத்தில் நோக்கியா போன்கள்தான் மார்க்கெட்டையே கலக்கிக் கொண்டு இருந்தன. விலை குறைவான ஆரம்ப நிலை போன்கள் அனைத்துமே நோக்கியாவுடையதுதான். ஸ்மார்ட் போன்கள் வருவதற்கு முன்பு, உலக போன் விற்பனையில் அதுதான் முதலிடத்தில் இருந்தது.ஆனால், ஸ்மார்ட்போன்களால் ஏற்பட்ட போட்டியை நோக்கியாவால் எதிர்கொள்ள முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அதன் விற்பனை படிப்படியாக விழ ஆரம்பித்தது. லாபமும் குறைய ஆரம்பித்தது. ஆப்பிள் ஐபோன்களும் கூகுளின் ஆண்ட்ராய்டு வகை போன்களும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துவிட, நோக்கியா பின் தங்கிவிட்டது.இதேபோல், மொபைல் தொழிலில் பின்தங்கிய நிறுவனம், மைக்ரோசாஃப்ட். அதன் விண்டோஸ் இயங்குதளம் சந்தைக்கு வந்தபோது, ஏற்கெனவே ஐபோன் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியிருந்தது. ஒருவகையில், தான் இழந்த சந்தையைக் கைப்பற்றவே நோக்கியா மொபைல் போன் பிரிவை மைக்ரோசாஃப்ட் வாங்கியிருக்கிறது. இரண்டு நிறுவனங்களுமே தோல்வி அடைந்தவை என்பதனால், இவை இணைவதனால் என்ன பெரிய பயனை அடைந்துவிடப் போகின்றன என்ற கேள்வி நிபுணர்களால் எழுப்பப்படுகிறது.
 
ஆனால், நோக்கியாவில் இருக்கும் பல காப்புரிமைகள், முக்கியமாக பல அப்ளிகேஷன்களின் காப்புரிமைகள் மைக்ரோசாஃப்டுக்கு பெருமளவு உதவும். ஐபோனும் ஆண்ட்ராய்டு போன்களும் வேகவேகமாக புதிய அறிமுகங்களைச் செய்து கொண்டே, மக்களைத் திக்குமுக்காடச் செய்து வருகின்றன. அத்தகைய புதுமைகளை, மிக வேகமாகவும் நேர்த்தியாகவும் செய்ய, இந்தக் கூட்டணி உதவும். நோக்கியாவின் 32,000 ஊழியர்களும் இப்போது மைக்ரோசாஃப்டுக்கு மாறியிருப்பதால், அவர்களின் பங்களிப்பும் மைக்ரோசாஃப்டின் விற்பனைத் திறனும் ஐபோனுக்கும் ஆண்ட்ராய்டுக்கும் வலுவான போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இன்னும் தனியாக, துண்டாக இருப்பது ப்ளாக்பெர்ரி மட்டுமே. ப்ளாக்பெர்ரி போன்களையும் இயங்குதளத்தையும் பயன்படுத்தும் ஒருசிலர் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். போகிற போக்கில், ஒரு நாள் மைக்ரோசாஃப்ட், ப்ளாக்பெர்ரியையும் வளைத்துப் போட்டால் ஆச்சர்யமில்லை. ஸ்மார்ட்போன்களின் போட்டியில், காலாவதியாகி விடாமல் இருக்கவே மைக்ரோசாஃப்ட் விரும்புகிறது.
 
சரி, இந்த இணைப்பு நம் இந்தியாவுக்குச் சொல்லும் செய்தி என்ன? ஆரம்பநிலையில் உள்ள குறைந்த விலை நோக்கியா போன்கள் எல்லாம் இனி காணாமல் போய்விடும். 1100 மாதிரியான அற்புத மாடல்கள், இனி கனவுதான்! 

ஆர்.வெங்கடேஷ்

No comments:

Post a Comment