‘நம்முடையது, பழையது என்பதற்காகவே ஒன்றை நல்லது என்று தீர்மானித்து
விடக்கூடாது. பிறருடையது, புதிது என்பதற்காகவே ஒன்றைத் தள்ளியும்
விடக்கூடாது. பரீட்சை பண்ணிப்
பார்த்தே ஏற்க வேண்டியதை ஏற்றுத்தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டும். முதலிலேயே
முடிவுகட்டி மனத்தைக் குறுக்கிக் கொள்வது மூடனின் காரியம்’ என்று இதை
விரித்துப் பொருள்
கொள்ளலாம். அதனால்தான் விதேசமானது, நவீனமானது எதுவுமே நமக்குக் கூடாது
என்று சொல்லிவிடவில்லை. ஆனால், இப்போது காளிதாஸன் சொன்னதற்கு நேர்மாறாக,
‘நம்முடையது பழசு என்பதாலேயே மட்டம், அது தள்ள
வேண்டியது; மேல்நாட்டிலிருந்து வந்ததுதான் modern (புதிது) என்பதாலேயே அதை
அப்படியே யோசிக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றாயிருக்கிறது!
இதுவும் தப்பு.
ஆகையால் அன்னியமும், நவீனமும் கூட எங்காவது நமக்குக் கொஞ்சம்
தேவையாயிருந்தாலும் பெரும்பாலும் நம்முடையதான பழைய விஷயங்கள்தான் விசேஷமாக,
அதிகமாக அனுசரிக்கத்தக்கன என்று சொல்ல வேண்டியதாகிறது. புதிதில்
எவையெல்லாம்
வேண்டும் என்று நாம் ஆலாப் பறக்கிறோமோ, அவைகள் வேண்டவே வேண்டாம் என்று
அவற்றைக் கண்டுபிடித்த நாடுகளிலேயே பக்குவிகள் விட்டு விட்டு நம்முடைய
யோகம், பஜனை, ஆத்மவிசாரம் முதலியவற்றுக்குக்
கூட்டம் கூட்டமாகத் திரும்பிக் கொண்டிருப்பதை முக்கியமாகக் கவனிக்க
வேண்டும்.
நவீனம் என்று நாம் எதை நாடிப் போகிறோமோ அதிலே கரை கண்டவர்கள்
பெரும்பாலும் அது பிரயோஜனமில்லை என்றே உணர்ந்து நம் வழிகளுக்கு வந்து
கொண்டிருக்கிறார்களாதலால், நாம் நம்முடைய பழைய
வழியைத்தான் ஆதாரமாக வைத்துக் கொண்டு, அதன்படிதான் செய்ய வேண்டும் என்பது
தெளிவு. இப்போது செய்கிற மாதிரி, மேல்நாட்டார் கழிசடை என்று ஒதுக்கித்
தள்ளுகிறவற்றை நாம் கொண்டாடி எடுத்துக் கொள்வதற்காக
நான் புது ஸயன்ஸ்களைப் படிக்கச் சொல்லவில்லை. நம் வழிக்குப் பாதகமில்லாமலே,
அதற்கு அநுகூலமாகவே ஏதாவது அம்சங்களில் இந்த ஸயன்ஸ்களின் மூலம் பண்ணிக்
கொள்ள முடியுமா என்று
தெரிந்து கொள்வதற்கே இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவை லோக
கே்ஷமத்துக்குப் பிரயோஜனப்படுமா என்று தெரிந்து கொள்வதற்காகவே கற்றறிய
வேண்டும்.
No comments:
Post a Comment