சிரியா’
என்ற நாட்டைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால், சில நாட்களுக்கு முன்
ரசாயனக் குண்டு தாக்குதலில் 600 குழந்தைகள் உள்பட சுமார் 1,429 பேர் கொலை
செய்யப்பட்ட காட்சிகள்தான் உலகின் கவனத்தை சிரியா மீது திருப்பியது!
இப்படி ஒரு 'சம்பவத்துக்காக’ காத்திருந்த அமெரிக்கா, 'இதை எங்களால்
பொறுத்துக் கொள்ள முடியாது. சிரியா மீது போர் தொடுப் பது நிச்சயம்’ என்று
வெளிப்படையாக அறிவித்து, அதற்கான ஆயத்தங்களையும் தொடங்கி விட்டது.
மறுபுறம், 'சிரியா மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள்
பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்கிறது ரஷ்யா. சிரியாவை முன்வைத்து
மூன்றாம் உலகப்போருக்கான அறிகுறிகள் தென்படும் வேளையில், அந்த நாட்டை
இன்னோர் ஆஃப்கானிஸ்தானாக மாற்றுவதே அமெரிக்காவின் எண்ணமாக இருக்கிறது.
எண்ணெய் வளம் மிக்க சிரியா, பற்றி எரிவதன் காரணம்தான் என்ன?
மத்தியக் கிழக்கு நாடுகள் சூழ அமைந்திருக்கும் சிரியா,
ஒரு மேற்காசிய நாடு. இதன் அதிபர் பஷர்-அல்-ஆசாத். 1971-ம் ஆண்டு முதல்
இப்போது வரை இவரது குடும்பத்தினர்தான் அதிபர் பதவியை
அலங்கரித்துவருகின்றனர். ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக்
கைப்பற்றிய இவரது குடும்பத்தினர், இன்றுவரை அதைத் தக்கவைத்துக்
கொண்டுள்ளனர். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில், பெரும்பாலான அரபு நாடுகள்
இஸ்ரேலுக்குத் தோள்கொடுத்து அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்க,
சிரியாவோ, 'இஸ்ரேல், எங்கள் எதிரி’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இதேபோல அறிவித்த ஈரான் நாட்டுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இதனால்
அரபுலகின் மற்ற நாடுகளில் இருந்து சிரியா தனித்து நிற்கிறது.
இது ஒருபுறம் இருக்க, உள்நாட்டில் அதிபர் ஆசாத்தின் 42
ஆண்டுகால ஆட்சி, சர்வாதி காரமாக மாறிவிட்டதால் மக்களிடையே வெறுப்பு உணர்வு
தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில்தான் 2011, ஜூலை மாதத்தில்
'சிரிய சுதந்திரப் படை’ என்ற குழு உருவானது. இவர்கள் அரசை எதிர்த்து ஆயுத
வழியில் போராடினார்கள். சவுதி அரேபியா, கத்தார், துருக்கி போன்ற இஸ்லாமிய
நாடுகளும் அமெரிக்காவும் இந்தச் சுதந்திரப் படைக்கு ஆயுத மற்றும் நிதி உதவி
அளித்தனர். சிரியாவில் போராடுவது முழுக்க முழுக்க மக்கள் இல்லை.
அவர்களைவிட அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவால் பயிற்று விக்கப்பட்ட
ஆயுததாரிகளும் மத தீவிரவாத இயக்கங்களுமே ஊடுருவியுள்ளன. இந்தப்
போராட்டக்காரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஜோர்டானில் ஒரு முகாமையே
அமைத்துள்ளது அமெரிக்கா. இந்த பலத்தின் காரணமாகவே கடந்த மூன்றே ஆண்டுகளில்
சிரியாவின் பல பகுதிகளை புரட்சிப்படை கைப்பற்றியது.
தனது செல்வாக்கு எல்லை மிக வேகமாகச் சுருங்கிவருவதைக்
கண்ட அதிபர் ஆசாத், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கடுமையான தாக்குதல் ஒன்றை
நடத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டார். 'ரசாயன ஆயுதங்களால் நிகழ்த்தப்பட்ட
அந்தத் தாக்குதலில், மொத்தம் 1,429 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 600
பேர் குழந்தைகள்’ என்கிறது அமெரிக்கா. இது தொடர்பாக வெளியிடப்பட்ட
காட்சிகள், மனதைப் பதை பதைக்க வைக்கின்றன. ஆனால் அதிபர் ஆசாத், 'நாங்கள்
அப்படி ஒரு ரசாயன தாக்குதலை நடத்தவே இல்லை’ என்று திட்டவட்டமாகக்
கூறுகிறார். இதைத் தொடர்ந்தே சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான வேலைகளை
அமெரிக்கா தொடங்கிவிட்டது. ஃப்ரான்ஸ் இதற்கு ஆதரவாக உள்ளது. சிரியாவுக்கு
ஆதரவாக ரஷ்யா நேரடியாகக் களம் இறங்கியுள்ளது. இதனாலேயே இன்னோர்
உலகப்போருக்கான அபாயம் தென்படுகிறது.
சிரியாவில் புரட்சிப்படை மட்டுமே கலகத்தில்
ஈடுபடவில்லை. அங்கு 'ஜபாத் அல் நுஸ்ரா’ என்ற இஸ்லாமிய மத தீவிரவாத
அமைப்பும் அரசுக்கு எதிரான தாக்குதலில் முக்கியமான பங்காற்றுகிறது.
அல்கொய்தா பாணியிலான இந்த அமைப்புக்கு, அமெரிக்கா ஆசி உண்டு என்பது ஒரு
முக்கியமான செய்தி.
சரி, அமெரிக்கா ஏன் சிரிய அரசை வீழ்த்த நினைக்கிறது?
ஏனெனில், மத்தியக் கிழக்கில் தனது விசுவாசியாக இருக்கும் இஸ்ரேலுக்கு
சிரியா எதிரி. அத்துடன் அமெரிக்காவின் நீண்டநாள் எதிரியான ஈரானுடன், சிரியா
நட்பாக இருக்கிறது. இந்த இரண்டு பேரையும் ஒழித்துக்கட்டுவதன் மூலம்
மத்தியக் கிழக்கை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.
முதலில் சிரியாவில் இருக்கும் சர்வாதிகாரத் தலைமையை அகற்றி, அங்கு ஒரு
பொம்மை அரசைக் கொண்டுவந்துவிட்டால் அது நடந்துவிடும். அதன்பிறகு ஈரான்
தனித்துவிடப்படும்; அதை வீழ்த்துவதும் எளிது. இதுவே அமெரிக்காவின் திட்டம்
என்பது, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து. அமெரிக்காவில் இந்தத்
திட்டத்துக்கு சிரியாவின் சர்வாதிகாரத் தலைமையும், அதன் மனிதாபிமானமற்றத்
தாக்குதல்களும் ஓர் அடிப்படையை உருவாக்கித் தருகின்றன.
சிரியாவை முன்வைத்து உலகின் பல நாடுகளில் இருந்து
உதிர்க்கப்படும் சவடால்களும் எச்சரிக்கைகளும், எஞ்சியிருக்கும் சிரிய
மக்களை உயிரோடு கொன்றுகொண்டிருக்கின்றன!
No comments:
Post a Comment