நாம் மாடர்ன் ஸயன்ஸைப் படிக்க வேண்டும். அதில் நல்லதாகவும் பல அம்சம்
இல்லாமலில்லை. ‘களவும் கற்று மற’ என்றார்கள். முதலில் நம் ஸமயாசாரங்களால்
நல்லொழுக்கங்களைப் பாறை மாதிரி உறுதிப்படுத்திக்
கொண்டுவிட்டால், அப்புறம் எதுவும் நம்மைக் கெடுக்க முடியாது என்ற
நிச்சயத்துடன் கெட்டதோ, நல்லதோ எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு
மற்றவர்களுக்கு நல்லது - கெட்டதுகளை எடுத்துச் சொல்லலாம்.
ஆகையால் Knowledgeக்கு (அறிவை வளர்த்துக் கொள்வதற்கு) முன்னால் Character
(ஒழுக்கம்) அவசியம். இல்லாவிட்டால் அறிவு கெட்டதற்கு Apply ஆகி,
கெட்டதுகளை வளர்க்கும்.
முதலில் வரவேண்டிய இந்த ஒழுக்கம் மதாநுஷ்டானத்தால்தான் வரும்.
உலோகங்கள், மற்ற வித்யைகள், விஞ்ஞானங்கள் யாவும் லௌகிகத்துக்கும்
அறிவுக்கும் மட்டுமே பிரயோஜனமானாலும் இவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Basic ஆக (அடிப்படையாக) தெய்வ பக்தியும்,
ஸமயாநுஷ்டானங்களும் இருந்துவிட்டால் அறிவுக்கும் மனோ வளர்ச்சிக்கும்
ஏற்பட்ட விஞ்ஞானங்களையும் கலைகளையும் தெரிந்து கொள்வதுகூட அந்த அறிவையும்
மனஸையும்
நன்றாக வளர்த்து சுத்தப்படுத்தவே உதவும். அப்புறம் இவற்றைத் தாண்டி
ஆத்மாவிலேயே ஆணி அடித்த மாதிரி நிற்க, ஆரம்பத்தில் இவையே உபாயமாயிருக்கும்.
உபவேதங்கள் மட்டுந்தானா என்ன? கர்மாக்கள் அத்தனையும் - தர்மசாஸ்திரம் சொன்ன
அத்தனை விஷயங்கள், வேதத்தின் கர்மகாண்டத்திலேயே உள்ள அநுஷ்டானங்கள்
எல்லாமும்கூட - முடிவிலே அடிபட்டுப்
போகிறவைதான். ஆனால் அந்த முடிவிற்குப் போவதற்கே அடிமட்டத்தில் அவை
வேண்டும். இத்தனை படிப்பதும், பார்ப்பதும், அறிவதும், அநுபவிப்பதும்,
அநுஷ்டிப்பதும் பரமாத்மாவைத் தெரிந்து
கொள்வதற்கு வழியாகத் தான்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment