Search This Blog

Friday, February 20, 2015

பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ்!

உடலுக்கு எப்படி உடற்பயிற்சி தேவையோ, அதேபோல் நம் அறிவுக்கும் பயிற்சி தேவை. இதற்கு சரியான தீர்வுதான் ’Brain Training Apps'. அமெரிக்க உளவியல் அமைப்பும் இந்த 'பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ்’  மனித அறிவின் செயல்பாட்டை சரிவர வகுத்து அதன் திறனை அதிகரிக்க உதவும் என்று சொல்கிறது. இதோ சில பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ் இதோ...

Lumosity
இந்த அப்ளிகேஷன்தான் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனானது நம் அறிவின் ஞாபகத்தன்மை, கவனம், பிரச்னைகளைத் தீர்க்கும் அணுகுமுறை, வேகம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த அப்ளிகேஷனின் குறிப்பிட்ட சேவைகள் மட்டும்தான் இலவசம். இதன் முழுச் சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு $15 அல்லது வருடத்துக்கு $80 செலுத்த வேண்டும்.

இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.

 Fit Brain Trainer
இது ஒரு ஆல்இன்ஒன் பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன். இதில் 360க்கு அதிகமான டிரெய்னிங் கேம்ஸ் உள்ளது. இவை அனைத்தும் பயன் பாட்டாளர்களின் ஞாபகத்திறன், கவனத் தன்மை ஆகியவற்றை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. இதில் ஒவ்வொரு வாடிக்கையாளர் களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண் அதே வயதில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களின் மதிப்பெண் களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.

இந்த அப்ளிகேஷன் இலவசமானது. இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.

Cognifit Brain Fitness

இதில் உள்ள புதிர்கள் மற்றும் கேம்ஸ்கள் அனைத்தும் நரம்பியல் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப் பட்டவை. பயன்பாட்டாளர்கள் தங்களது வளர்ச்சியை இந்த அப்ளிகேஷனில் எளிதாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் திறமைக்கேற்ப இந்த அப்ளிகேஷன் புதிர்களையும், விளையாட்டுகளையும் மாற்றி வழங்கும் தன்மையைக் கொண்டது. இதில் நான்கு விளையாட்டு கள் மட்டும் இலவசம். முழுச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் மாதமொன்றுக்கு $13 அல்லது முழுவது மாக $120 கட்ட வேண்டும்.

 
 
Brain Trainer Special

இந்த அப்ளிகேஷன் எழுத்துக்களை வெவ்வேறு வரிசையில் நினைவில் வைத்துக்கொள்வது, போன் நம்பர்களை நினைவில் வைத்துக்கொள்வது, கணித புதிர்கள் ஆகியவற்றைக் கொண்டு       பயன்பாட்டாளர்களின் அறிவுத்திறனை வளர்க்கிறது. இது முற்றிலும் இலவசமான அப்ளிகேஷன். இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும்தான் பெற முடியும்.

Happify

நேர்மறை உளவியல் யுக்திகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், இதில் உள்ள புதிர்கள், விளையாட்டுகள் அனைத்தும் பயன் பாட்டாளர்களை நாள் முழுவதும் மகிழ்ச்சி யாக வைத்திருக்க உதவும். இந்த  இலவச அப்ளிகேஷன், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓஸ் இயங்குதளத்தில் மட்டுமே  பயன்படுத்த முடியும்.

ஸ்டீவ் ஜாப்

ஆப்பிள்’ என்றவுடன் ஆதாம் - ஏவாள்,  ஐசக் நியூட்டன் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வரும் பூகோள வரலாற்றுச் சரித்திரத்தை மாற்றியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இன்று 'ஆப்பிள்’ என்றால் பழம் என்பதுகூட மறந்து, ஆப்பிள் நிறுவன செல்போனே நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு உலகத்தின் கவனம் கவர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாள் பிப்ரவரி 24. அன்றைய தினம் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் என்ன செய்வார்கள்? வழக்கம்போல பரபரப்பாக வேலைபார்ப்பார்கள். ஏனென்றால், ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருந்திருந்தாலும் அதுதான் நடந்திருக்கும். 2011-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பிறகு, மூன்றரை வருடங்களை, அவர் இல்லாமலேயே கடந்துவிட்டது ஆப்பிள். முதல் இரண்டு வருடங்கள் சிரமப்பட்டாலும், இப்போது சுதாரித்து 'டிரெண்டிங் ரூட்’ பிடித்து, கேட்ஜெட்ஸ் உலகில் மீண்டும் தன் ஆதிக்கத்தை  நிலைநாட்டிவருகிறது ஆப்பிள். அதற்குக் காரணம், ஆப்பிளை வழிநடத்தும் ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகளே. 'மாத்தி யோசி’ என்பதை உலகத் தொழிலதிபர்களின் தாரக மந்திரம் ஆக்கியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். 


நண்பர்களுடன் சேர்ந்து 1,000 டாலர் முதலீட்டில்  கார் ஷெட்டில் வைத்து கணினி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கியபோது, அந்த நிறுவனத்துக்குப் பெயர் எதுவும் இல்லை. தான் போகும் வழியில் இருக்கும் ஆப்பிள் பழத் தோட்டங்கள் நினைவில் வர, தன் நிறுவனத்துக்கு 'ஆப்பிள்’ எனப் பெயர் வைத்தார் ஸ்டீவ். அப்போது  'ஆப்பிள் ரெக்கார்ட்ஸ்’ என்ற ஒரு நிறுவனம் சந்தையில் ஏற்கெனவே இருந்தது. கார் ஷெட்டில் தொடங்கப்பட்ட ஆப்பிள்  நிறுவனத்தைவிட ஆப்பிள் ரெக்கார்ட்ஸ் பல மடங்கு பெரிது. 'எங்கள் நிறுவனத்தின் பெயரை எப்படி உங்கள் நிறுவனத்துக்குச் சூட்டலாம்?’ என ஸ்டீவ் ஜாப்ஸ் குழாம் மீது அது வழக்கு போட்டது. வழக்கை எதிர்கொண்டார் ஸ்டீவ்.' 'ஆப்பிள்’ எனப் பெயர் வைத்தால், டெலிபோன் டைரக்டரியில் என் நிறுவனத்தின் பெயர்தான் முதலில் வரும். டெலிபோன் டைரக்டரியாக இருந்தாலும், என் நிறுவனம்தான் முதலில் இருக்க வேண்டும். அதுவும் போக பசிக்கும்போது சில ஆப்பிள்களை மட்டுமே சாப்பிட்டுப் பசியாறியிருக்கிறேன். அந்த நன்றிக் கடனுக்காகவும் 'ஆப்பிள்’ என்ற பெயரை நான் விட்டுத் தர மாட்டேன்’ என, பல வருடப் போராட்டத்துக்குப் பிறகு 'ஆப்பிள்’ என்ற பெயரையே தன் நிறுவனத்துக்கு என பிரத்யேகமாகப் பெற்றார்.
உலகின் வேறு எந்த கேட்ஜெட்டிலும் இல்லாத புது நவீன வசதிகள், தன் நிறுவனத் தயாரிப்புகளில் இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தார் ஸ்டீவ். கணினிகள் புழக்கத்துக்கு வந்த புதிதில், பெரும் நிறுவனங்களில் கணினிப் படிப்பு படித்தவர்கள் மட்டுமே அவற்றை இயக்க முடியும் என்ற நிலையே இருந்தது. அந்த சமயம், 'எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகூட நம் நிறுவன கணினிகளை இயக்கும் அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டும்’ என அடம்பிடித்து ஆப்பிள் கணினிகளை வடிவமைக்கச் செய்தார் ஸ்டீவ். 'எல்.கே.ஜி குழந்தை கணினியைப் பயன்படுத்த வேண்டும்’ என அதற்கு முன்னர் யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்த 'மாத்தி யோசி’தான் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை சாமான்யர்களிடமும் கொண்டுசேர்த்தது.

ஐ.பி.எம்., ஹெச்.பி., மைக்ரோசாஃப்ட்... போன்ற நிறுவனங்கள் தங்கள் மின்னணுப் பொருட்களின் உள்கட்டமைப்பு பற்றி மட்டுமே யோசித்தனர். ஆனால், ஸ்டீவ் தங்கள் பொருட்களின் சாஃப்ட்வேர், ஹார்டுவேர்... இரண்டுக்கும் சரிசம முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கினார். மென்பொருள் தயாரிக்கவும் வெளிக்கட்டமைப்பைத் தயாரிக்கவும் தனித் தனி குழுக்களை நியமித்திருந்தார் ஸ்டீவ். இதை, 'ஸ்டீவுக்கு ஹார்டுவேர், சாஃப்ட்வேர் என இரண்டு மனைவிகள். ஆனால், அவர்களுக்குள் எப்போதும் யார் சிறந்தவர் என சண்டை வராது’ என்பார்கள் ஆப்பிள் ஊழியர்கள்.

23 வயதில் 10 லட்சம் டாலர், 24 வயதில் 10 கோடி டாலர் என ஸ்டீவ் ஜாப்ஸின் சொத்து அசுரத்தனமாக அதிகரிக்க, அவர் முதலீடு செய்தது 500 டாலர் மற்றும் நிறைய புத்திசாலித்தனம் மட்டுமே. ஆப்பிள் ஐ-போன் அறிமுகமாகி உலகெங்கும் பரபர வரவேற்பு குவித்த புதிதில், 'மற்ற நிறுவனங்கள் 10 வருடங்கள் கழித்து செய்யத் திட்டமிட்டிருந்ததை ஸ்டீவ் இப்போதே செய்துவிட்டார்’ என மீடியா பாராட்டின. அதற்கான மனநிலை குறித்தும் பின்னொரு நாளில் குறிப்பிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்... ' 'எல்லா நாளும், இது என் கடைசி நாள் என எண்ணி வாழ்ந்தால், நிச்சயம் ஒருநாள் அது நிஜமாகிப்போகும்’ என சிறுவயதில் நான் படித்த ஒரு வாசகம் என் மனதில் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. அதனால் என் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் கடைசிநாளாகவே கருதுவேன். அதுதான், 'பத்து வருடங்கள் கழித்தே இது சாத்தியம் ஆகும்’ என்ற எண்ணத்தை மீறி புதுப் புது தயாரிப்புகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தை அளித்தது’ என்றார் ஸ்டீவ்.

'ஆப்பிள்’ தன் புதுமைப் பசியை இன்னும் தக்கவைத்திருப் பதற்கு, ஸ்டீவ் ஜாப்ஸின் அந்த வெற்றி ஃபார்முலாவே காரணம்!

Monday, February 09, 2015

ஏடிஎம் - உலகை மாற்றிய புதுமைகள்!

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒருவர் எப்போதும் கையிலும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. சட்டைப் பையில் இருக்கும் பணம் எப்போது வேண்டுமானாலும் தொலைந்து போகலாம். ஆனால், திடீரென பணம் தேவைப்பட்டால்..?

 இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப அறிஞர்கள் யோசித்தபோது உருவானதுதான் ஏடிஎம் என்று சொல்லப்படும் ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின். இந்த ஏடிஎம் தோன்றிய வரவாறு சுவாரஸ்யமானது.

பட்டனைத் தட்டுவதன் மூலம் சாக்லேட் தரும் இயந்திரம்தான் பணம் தரும் ஏடிஎம் மெஷினுக்கான அடிப்படை. 1960-களில் பார்க்லேஸ் வங்கி லண்டனில் முதல்முறையாக இந்த ஏடிஎம்  இயந்திரத்தைப் பொருத்தியது. இதன்மூலம் வங்கிக் காசாளர் அளிக்கும் காசோலையை நகலெடுத்து கொள்ளும் இயந்திரமாக அறிமுகப்படுத்தியது. பின்னர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வசதியையும் அறிமுகம் செய்தது.


பின்னர் வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை, கடைசியாகச் செய்த பரிமாற்ற விவரங்கள், சிறு அறிக்கை ஆகியவற்றையும் அறிந்துகொள்ளும் விதமாக இந்தக் கண்டுபிடிப்பு மாறியது. வங்கிக் கணக்குகள் கணினிமயமானபின்பு, பிளாஸ்டிக் கார்டுகள் மூலம் பணம் எடுக்கும் வசதிகள் உருவாக்கப்பட்டன. இதனை ஒருவர் மட்டுமே பயன்படுத்த ரகசிய எண்களும் அறிமுகம் செய்யப்பட்டு பாதுகாப்பாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இன்றைக்கு பிளாஸ்டிக் கார்டு என்பது மறைந்து, வெறும் ரகசிய எண்ணை மட்டுமே பதிந்து, பணத்தை எடுக்கிற அளவுக்கு ஏடிஎம் தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. இந்தியாவில் இந்தத் தொழில்நுப்டம் அறிமுகமான 15 ஆண்டுகளுக்குள் அன்றாட மக்களின் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டது ஏடிஎம் இயந்திரம். இன்று ஏடிஎம்மை பயன்படுத்த கட்டணம் என்றாலும், அதற்காக அதை பயன்படுத்துவதை மக்கள் குறைத்துக் கொள்ளவில்லை.

இன்று நீங்கள் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும், உங்கள் செலவுக்குப் பணம் எடுத்துக் கொள்ளாமல் வெறும் ஒரு பிளாஸ்டிக் கார்டை எடுத்துக்கொண்டு சென்றால், உங்களால் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். இந்த 'எனி டைம் மணி’ மூலம் நமக்குக் கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை!

ச.ஸ்ரீராம்


ஃபிட்னெஸ் கேட்ஜெட்ஸ்

 பரபரப்பான வாழ்க்கையில் ஃபிட்னெஸ் என்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் முக்கியமான பங்கைப் பெற்றுவிட்டது. அதைச் சரிவரச் செய்வதற்கு உதவியாக இருப்பதுதான் ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகள். இந்த ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகளை வைத்துக்கொண்டு, நமது ஃபிட்னெஸ் பயிற்சிகளை யார் உதவியும் இல்லாமல், எந்தத் தவறும் இல்லாமல் செய்யலாம்.

 1. Nike+Fuelband:
கவர்ச்சியாகக் காட்சியளிக்கும் இந்த கேட்ஜெட்டைக் கையில் ஒரு ப்ரேஸ்லெட்டைப்போல அணிந்துகொள்ளலாம். இந்தக் கைப்பட்டையில் (Band)  உள்ள சென்சார்கள் மனிதனின் தினசரி அசைவுகளைக் கண்காணித்துக் கொள்கிறது. கண்காணித்த தகவல்களை ‘Nike Fuel’-களாக மாற்றிவிடும். ‘Nike Fuel’ என்பது ஒவ்வொரு வேலைக்கும் நாம் செலவிடும் சக்தியின் ஒரு புதுமையான அளவுகோல். இதைவைத்து ஒருவர் தங்களது தினசரி உழைப்பைக் கண்காணித்துக் கொள்ளலாம். இந்தக் கைப்பட்டையை ப்ளூ-டூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் இணையத்தில் ஒரு நைக் அக்கவுன்ட்டும் தேவை. இந்தக் கைப்பட்டை இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 14,590 என்ற விலையில் விற்கப்படுகிறது.

 2. Polar RC*3 GPS:

இந்த கேட்ஜெட் சைக்கிளிங் செய்பவர்களுக்கும் ஓடுபவர்களுக்கும் மிகப் பயனுள்ள கேட்ஜெட்டாக அமையும். பார்ப்பதற்கு ஒரு வாட்ச் போலக் காட்சியளிக்கும் இந்த கேட்ஜெட் GPS வசதியைக் கொண்டது. இதன்மூலம் ஒருவர் பயணத்தைக் கடக்கும் தூரம், நேரம் மற்றும் வேகம் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ளலாம். இந்த விவரங்கள் அனைத்தும் 'Polar’ இணையதளத்தின் அக்கவுன்ட்டில் சேமிக்கப்படும்.

இந்த கேட்ஜெட்டின் விலை ரூ.20,000.

3. Griffin Adidas MiCoach Armband:

இந்தக் கைப்பட்டையை கையின் மேற்பகுதியில் மாட்டிக்கொள்ளலாம். இந்த கைப்பட்டை முழுவதும் ‘நைலானால்’ ஆனது. மேலும், இதன் எடை மிகக் குறைவு. எனவே, இந்தக் கைப்பட்டையை கையில் அணிவதற்கு எந்த இடையூறும் இருக்காது. இந்தக் கைப்பட்டையில் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது ஐ-பேடு ஆகியவற்றைப் பொருத்திவிடலாம். ஓடும்போதும் வொர்க்-அவுட் செய்யும்போதும் இந்த பட்டை கையில் அணிவதற்கு வசதியாக இருக்கும். ஸ்மார்ட் போன்/ஐ-பேடில் உள்ள அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த இந்தக் கைப்பட்டை மிக உதவியாக இருக்கும். ஹெட்-போன்ஸ் இணைப்பதும் இந்தப் பட்டையில் சுலபம்தான். இதன் விலை இந்தியாவில் ரூ.2,500/

   4.Beddit - Sleep Monitor:

நல்ல தூக்கமே நல்ல ஆரோக்கியத்துக்கு வழி. அந்த வகையில் நம் தூக்கத்தைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டதே இந்த 'Beddit’ கேட்ஜெட். இந்த கேட்ஜெட் பார்ப்பதற்கு ஒரு பெரிய கைப்பட்டை (Band) போல இருக்கும். இதை நாம் தூங்கும் படுக்கையில் நன்கு விரித்து, அதன் மீது படுத்துத் தூங்கினால் போதும். இந்த கேட்ஜெட் தூங்குபவர்களின் இதயத் துடிப்பு, சுவாச அளவு, தூக்க சுழற்சி மற்றும் தூங்கும் நேரம் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ளும். கண்காணித்த தகவல்களை வைத்துக் கொண்டு 110 மதிப்பெண்ணுக்கு மார்க்கும் தரும். இந்த மார்க்கை ப்ளூடூத் மூலம் நமது போனுக்கு அனுப்பி விடும். இதன்மூலம் நம் தினசரி தூக்கத்தின் தரத்தைத் தெரிந்துக்கொள்ளலாம். இதன் விலை ரூ.9,200.

கேட்ஜெட்டுகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்!
 
செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, February 07, 2015

சொல்லும் பொருளும் போல!

 
வாழ்க்கை என்பது தம்பதிகளாக வாழ்வதுதான். ஆண்கள் இந்தக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே பந்தமில்லாமல், பொறுப்பில்லாமல் சுதந்திரமாக வாழலாம் என்ற பலரும் நினைக்கிறார்கள். அதேபோல் பெண்களும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே ஏதோ உத்யோகம் செய்துகொண்டு, சம்பாதித்து சுதந்திரமாக ஒரு பந்தத்திலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். 
 
ஆனால் உண்மையாகப் பார்க்கும்போது கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் பல பொறுப்புகளையும், பல பந்தங்களையும் பல கஷ்டங்களையும் எற்றுக் கொண்டிருப்பதானது கண்கூடாகத் தெரிகிறது.

கல்யாணமான தம்பதிகளுக்கு வரக்கூடிய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தம்பதிகளே, பரஸ்பரம் பேசி பலவித பிரச்னைகள், கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. கணவனும், மனைவியும் சொல்லும் அதன் விளக்கமும் போல, இரு உடல் ஒரு மனதாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்றால் சந்தேகங்கள் அபிப்ராய பேதங்கள் இருப்பது சகஜம். அவைகளைப் பெரிதுபடுத்தாமல் இறைவன் கொடுத்த புத்தியை நன்றாக உபயோகித்து, ஒரு தடவைக்குப் பலதடவை நன்றாக செது, பொறுமையுடன், பொறுப்புடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், ‘நான் எவ்வளவு நாள் விட்டுக் கொடுப்பது? நீங்கள் விட்டுக்கொடுத்தால் என்ன?’ என்று சொல்லிக்கொள்ளாமல் இரு உடல் ஒரு மனதுடன், சொல்லும் பொருளும் போலும், சமுத்திரத்தில் வரும் அலை எப்படி வந்து போய் ஒன்றாகிறதோ அதுபோல், நம்மிடையே ஒருவருக்கொருவர் மனஒற்றுமையுடன் வாழ்வதே வாழ்க்கை.
 

Friday, February 06, 2015

பன்றிக் காய்ச்சல்...

சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகையே பீதிக்கு ஆளாக்கிய பன்றிக்காய்ச்சல், இப்போது மீண்டும் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளது. சென்னையில் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக ஒருவரைக் கண்டறிந்த நிலையில், சென்னையை அடுத்த மறைமலைநகரில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொஞ்சம் பாதுகாப்பாக இருந்தால், பன்றிக்காய்ச்சலைத் தவிர்க்க முடியும், ஒருவருக்குப் பன்றிக்காய்ச்சல் வந்தாலும் சரிப்படுத்த முடியும்.
 
சாதாரண வைரஸ் காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால், பன்றிக் காய்ச்சல் மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தீவிரமாகும். இருமல், தும்மல் அதிகமாக இருக்கும். தலைவலி, தொண்டை வலி, உடல் வலி, கண்களில் எரிச்சல் என்று, பாதிப்புகள் தொடர்ச்சியாக வரும். சிலருக்கு இடைவிடாத வாந்தி, வயிற்றுப்போக்கும் வரலாம். இருமல் அதிகமாகி எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. இருமலை அலட்சியப்படுத்தினால், நுரையீரலின் தசைகள் ஆரோக்கியத்தை இழந்து, சுருங்க ஆரம்பித்துவிடும்.

இருமல், சளி இருப்பவர்கள் இரண்டு மூன்று முறையாவது சோப் போட்டுக் கை கழுவ வேண்டும். நோய் உள்ளவர்களின் கை, கால், வாய்ப் பகுதிகளை மற்றவர்கள் தொடக் கூடாது. சளி, இருமல் தொடர்ந்து இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல், உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ என்று வந்தால், சிகிச்சைக்காக உடனே அவரைத் தனிமைப்படுத்த வேண்டும்.

காய்ச்சல் வந்தவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்புவதும் சளி சிந்துவதும் கூடாது.

வாஷ்பேசினில் எச்சில் துப்பினால், தண்ணீரால் வாஷ்பேசினை நன்கு கழுவிவிட வேண்டும். சளி சிந்திவிட்டு, கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவ வேண்டும். பன்றிக்காய்ச்சல் உள்ளவர்கள் வெளி இடங்களுக்குச் செல்லக் கூடாது. கூட்டம் கூடுகிற இடங்களுக்குச் சென்றால், அவரால் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு அதிகம். அதேபோல், நோயாளிகள் உபயோகப்படுத்திய பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, நோயாளியின் எச்சில்பட்ட டம்ளர், தட்டு போன்றவற்றை, மற்றவர்கள் தொடக் கூடாது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை, இது எளிதில் தாக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்துமா, கல்லீரல், நுரையீரல், ரத்த சம்பந்தமான குறைபாடு உள்ளவர்கள், நரம்பியல் கோளாறுகள், சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்களுக்கு வர சாத்தியங்கள் அதிகம். அதேபோல், பன்றிக் காய்ச்சல் இருப்பவர் உங்கள் அருகில் இருந்தால், அது உங்களைத் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை!

கருணாநிதி, பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர்

அரிசி சக்கையா? சத்தா?

‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்கள், பிரவுன் அரிசிதான் பெஸ்ட்’ - ஆரோக்கிய விரும்பிகளின் அட்வைஸ் இது. பிரவுன் (பழுப்பு) அரிசியா? வெள்ளை அரிசியா எதைச் சாப்பிடுவது?

பிரவுன் அரிசியும் வெள்ளை அரிசியும் வெவ்வேறு ரகமோ, வெவ்வேறு இடங்களில் விளைபவையோ இல்லை. பிரவுன் அரிசி என்பது தவிடு நீக்காத அரிசி. நாம் தற்போது சாப்பிடும் அரிசி, தவிடு நீக்கப்பட்டு, வெள்ளை நிறத்துக்காக, நன்றாக பாலீஷ் செய்யப்பட்டது. பிரவுன் அரிசி எனப்படும் தவிடு நீக்காத அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அரிசியை பாலீஷ் செய்யும்போது, இந்தச் சத்துக்கள் நீக்கப்படுகின்றன.

பிரவுன் அரிசி யாருக்கு ஏற்றது?

அனைவருக்குமே ஏற்றது. வெள்ளை அரிசியைக் காட்டிலும் அதிக நார்ச்சத்து கொண்டது பிரவுன் அரிசி. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதிக உடல் உழைப்புள்ள வேலைகளைச் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவர்கள் ஆகியோருக்கு மிகவும் நல்லது. இந்த அரிசியில் செலினியம் அதிகம் இருப்பதால், இதயநோய், கீல்வாதம், புற்றுநோய் போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கும், நரம்புமண்டலங்கள் சீராக செயல்படுவதற்கும் மக்னீசியம் அவசியம். நாள் ஒன்றுக்குத் தேவையான மக்னீசியத்தில் 80 சதவிகிதம் ஒரு கப் பிரவுன் அரிசியில் கிடைத்துவிடுகிறது.


பிரவுன் அரிசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக ஏற்றும். இந்த அரிசியின் கிளைசமிக் குறியீட்டு எண், வெள்ளை அரிசியைவிடவும் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள், ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை அரிசியைத் தவிர்த்து, பிரவுன் அரிசியைச்  சாப்பிடலாம். குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே பிரவுன் அரிசியைக் கொடுத்துப் பழக்குவது நல்லது. உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கவும், தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும் பிரவுன் அரிசி வழிவகை செய்கிறது. செரிமானத்திறன் பிரச்னை உள்ளவர்கள், வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் பிரவுன் அரிசியைத் தவிர்ப்பது நல்லது.

பிரவுன் அரிசியை எப்படிச் சாப்பிடவேண்டும்?

பிரவுன் அரிசியை வெள்ளை அரிசியைக் காட்டிலும் அதிக நேரம் வேகவைத்துப் பயன்படுத்த வேண்டும். பிரவுன் அரிசியை சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற கலவை சாதங்களுக்குப் பயன்படுத்தலாம். சுவையும் பலனும் கூடுதலாக இருக்கும்.


பிரவுன் அரிசியை மாவாக அரைத்து, எண்ணெய் சேர்க்காமல் தோசையாகச் சுட்டு சாப்பிட்டால்  நல்ல பலன் கிடைக்கும். வேகவைத்த அரிசி சாதத்தை, அப்படியே விழுங்கக் கூடாது. நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.

வெள்ளை அரிசி யாருக்கு ஏற்றது?

நோயாளிகள், ஜீரணக்கோளாறு உடையவர்கள், பற்கள் இல்லாததால், மென்று சாப்பிட முடியாமல் அவதிப்படுபவர்கள் போன்றோருக்கு, வெள்ளை அரிசி ஏற்றது. வெள்ளை அரிசியில் சில சத்துக்கள் குறைவே தவிர, அனைவரும் பயன்படுத்தலாம்.

பிரவுன் அரிசியும் சிவப்பு அரிசியும் ஒன்றா?

சிவப்பு அரிசியும், பிரவுன் அரிசியும் வேறு வேறு ரகம். அனைத்து ரக அரிசியிலும் தவிடு நீக்கப்படாத அரிசியே பிரவுன் அரிசி என்கிறோம். தவிடு நீக்காத சிவப்பு அரிசியை பிரவுன் -சிவப்பு அரிசி என்கிறோம். கேரளாவில் தான் சிவப்பு அரிசி அதிகளவு பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் பெரிய அளவில் புழக்கத்தில் கிடையாது. பிரவுன் அரிசியை மெஷின் மூலம் தவிடு நீக்கிவிட்டு மேலும் மேலும் பாலீஷ் செய்யப்பட்டு கடைகளில் கிடைப்பது தான் நாம் தற்போது உணவாக பயன்படுத்தும் வெள்ளை அரிசி.

- எஸ்.ஷோபனா, உணவியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்

Sunday, February 01, 2015

காப்பீடு! - உலகை மாற்றிய புதுமைகள்!


நான் இல்லாவிட்டால் என் குடும்பத்தைக் காப்பாற்றுவார் யார் - எதற்குமே அஞ்சாதவர்கூட இந்தக் கேள்வியைக் கேட்டு மிரண்டுபோவது உண்டு. இன்னும் சிலருக்கு, தீவிபத்து, வெள்ளம், பொருட்கள் திருடு போவது என ஏதாவது ஓர் அசம்பாவிதத்தினால் செய்யும் தொழிலில் நஷ்டம் வந்தால், என்ன செய்வது என்கிற பயம். இதுமாதிரியான அத்தனை பயங்களுக்கும் மனிதன் கண்டுபிடித்த ஓர் எளிய தீர்வுதான், இன்ஷூரன்ஸ் திட்டங்கள்.

கி.மு 3 மற்றும் 2-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சீன மற்றும் பாபிலோனிய வணிகர்கள் தங்களது வர்த்தகத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க, கடன் வாங்குபவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. பொருட்களைக் கொண்டு செல்லும்போது பாதி வழியில் திருடு போனாலோ,  இயற்கைச் சீற்றத்தால் அழிந்துபோனாலோ ஏற்படும் இழப்பிலிருந்து மீண்டுவர   இந்த ஏற்பாடு மிகவும் உதவியாக இருந்தது.


14, 15-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலிருந்து உலகம் முழுக்க வணிகம் செய்ய வர்த்தகர்கள் கிளம்பியபோதுதான் பொருட்களுக்குப் பாதுகாப்பு தரும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.  ஆனால், 19-ம் நூற்றாண்டில்தான் தனிநபர்களுக்கான மருத்துவக் காப்பீடு அறிமுகமானது. தனிநபர்களுக்கு  வரும்  நோய்களுக்கான இன்ஷூரன்ஸ் வசதி உருவானபோது தான், திடீரென ஏற்படும் மருத்துவச்  செலவை எப்படி சமாளிப்பது என்கிற பயம் பலருக்கும் நீங்கத் தொடங்கியது.

இன்றைக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தானாகவே முன்வந்து ஆயுள்காப்பீட்டு பாலிசிகளை எடுக்கின்றனர். தொழில் துறை சார்ந்தவர்கள் பொருட்களை அனுப்பும்போது அதற்கான இன்ஷூரன்ஸை எடுக்காமல் அனுப்புவதே இல்லை என்கிற அளவுக்கு நிலைமை முன்னேறி இருக்கிறது.

சில பிரபலங்கள் தங்கள் உடல்  உறுப்புகளைக் கூட இன்ஷூரன்ஸ் செய்யும் வழக்கம் வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல, நம் நாட்டிலும் உருவாகி இருக்கிறது. பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் தன் கால்களையும், பாடகரான ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டன் தனது குரலையும் இன்ஷூரன்ஸ் செய்தனர். நம்மூர் சச்சினும் தோனியும் இதுமாதிரி இன்ஷூரன்ஸ் செய்து வைத்திருக்கின்றனர்.

திடீரென வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க 2000 வருடங்களுக்கு முன்பே மனிதன் சிந்தித்திருக்கிறான் என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

ச.ஸ்ரீராம்
 

சுகன்யா சம்ரிதி திட்டம்...


மோடி அரசு ஆட்சிக்கு வந்தபின் அடிக்கடி புதிய திட்டங்கள் அறிமுகமாகி வருகிறது. ஜன் தன் திட்டத்தின் மூலம் இந்தியாவில் வசிக்கும் எல்லோருக்கும் வங்கிக் கணக்கு என்கிற திட்டத்தை ஆர்வத்துடன் அமல்படுத்தியது. தற்போது, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்துக்காக புதிதாக ஒரு வங்கிக் கணக்கை அறிமுகம் செய்துள்ளது.

யார் தொடங்க முடியும்? 

பிறந்த பெண் குழந்தை முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் வங்கி அல்லது அஞ்சலகத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் துவங்கி 1.5 லட்சம் ரூபாய் வரை அந்தக் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். இப்படி 14 ஆண்டுகள் வரை இந்தக் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தக் கணக்கை துவங்கியபின் அந்தக் குழந்தையின் 18வது வயது வரை கணக்கில் செலுத்தியுள்ள பணத்தை எடுக்க முடியாது. அதன்பின் 50 சதவிகிதம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். இந்தக் கணக்கு 21 வருடங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும். ஒருவேளை இடையே திருமணம் நடந்தால், அந்த வருடத்தோடு இந்தக் கணக்கு முடிந்துவிடும்.அதற்குப்பின் இந்தக் கணக்கைத் தொடர முடியாது. 21 வருடங்கள் கழித்து மீதமுள்ள தொகையையும் அதற்கான ஆண்டுக் கூட்டு வட்டியையும் பெறலாம்.

ஒரு பெண் குழந்தைக்கு அதிகபட்சமாக 10 வயதில் இந்தக் கணக்கைத் துவங்கினால் 31 வயது வரை அதன் கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் உதவும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதிக்கு அரசு 9.1 சதவிகித கூட்டு வட்டியை யும், முதலீட்டில் வருமான வரி விலக்கும் அளித்துள்ளது.

இதனால் இனி பெண் குழந்தைகள் கல்விக்கும், திருமணத்துக்கும் பணம் ஒரு தடையாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது. உதாரணமாக, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் இந்தத் திட்டத்தில் கணக்கைத் துவங்கி, ஆண்டுக்கு 50,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால், வருடத்துக்கு 9.1 சதவிகிதம் வட்டி என்ற கணக்கின்படி 21 வருடங் கள் கழித்து, சுமார் 28.3 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது அந்தக் குழந்தையின் திருமணத்துக்கு உதவியாக இருக்கும். ஒருவேளை 18வது வயதில் எடுத்தால், ரூ.20 லட்சம் கிடைக்கும். இதில் பாதி தொகை அந்தக் குழந்தையின் கல்விக்குப் பயன்படும்விதமாக அமையும். மீதித் தொகை கணக்கு ஆரம்பித்து 21 வருடம் முடியும்போது கொடுக்கப்படும்.  

 

மனமும் அறிவும் தெளிய...


மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிறபோது தான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி தெளிவாக இருக்கிறபோது படித்தால் பாடம் நன்றாக ஏறுகிறது. கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப் போகிறது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது.

தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியைப் பார்வதி - பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி - மஹாவிஷ்ணுவாகவோ நினைத்துக்கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும்; புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாகவரும். நன்றாகப் பாஸ் பண்ணிவிடலாம்.

ரொம்பப் புத்திசாலியாக இருந்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணினால்கூட, நல்லவன் என்ற பெயரெடுக்காவிட்டால் பிரயோஜனம் இல்லை. நல்ல பெயர் இல்லாவிட்டால் பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நல்லவனாக இருந்து விட்டால் அது நமக்கும் சந்தோஷம்; மற்றவர்களுக்கும் சந்தோஷம்; பெரியவனான பின் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும் அதுதான் உதவும்.

நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாக, இரண்டாகவும் செய்வது ஸ்வாமியிடம் நாம் வைக்கிற பக்திதான்.

Friday, January 30, 2015

பிழைச் சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்களாவன....


பிழை மற்றும் பிற மொழிச் சொற்களைக் கண்டுகொள்ள கீழுள்ள விதிகளின் துணையை நாடவும்.   மொழி முதல் மற்றும் இறுதியில் வரும் எழுத்துக்கள்:

 1) மெய் எழுத்துக்கள், ஆய்தம், ங, ட, ண, ன, ர, ற, ல, ழ, ள ஆகிய உயிர் மெய்கள், இவையாவும்  மொழி முதலில் வாரா.

2)  “எ” என்ற உயிரும், க், ச், ட், த், ப், ற், ங் ஆகிய மெய்களும் மொழி இறுதியில் வாரா.

 3) பன்னிரெண்டு உயிர், மற்றும் க ச த ந ப ம வ ய ஞ ஆகிய உயிர் மெய்களும், மொழி முதலில் வரும் எழுத்துக்களாம்.

  4) எகரம் ஒழிந்த 11 உயிர்கள், மற்றும் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய மெய்களும், மொழி இறுதியில் வரும் எழுத்துக்களாம்.   மொழி இடையில் வரும் எழுத்துக்கள்:

 1) க், ச், த், ப் ஆகிய மெய்களை அடுத்து அவற்றின் உயிர்மெய்கள் மட்டுமே வரும்; இதில் வேறு உயிர்மெய்கள் வாரா.

2) றகர வரிசை உயிர்மெய்கள் ற், ன் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து வரும்.

3) ய், ர், ழ் என்ற மெய்களை அடுத்து க், ச், த், ப், ங், ஞ், ந், ம் ஆகிய மெய்கள் இரண்டு ஒற்றாக வரும்

 4) ர், ழ் ஆகிய மெய்களை அடுத்து அவற்றின் வரிசை உயிர்மெய்கள் வாரா.

 5) டகர வரிசை உயிர்மெய்கள் ட், ண் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து வரும்.

6) ல, ள, ன, ண ஆகிய மெய்களை அடுத்து ‘ந’ வரிசை உயிர்மெய்கள் மற்றும் ‘த’ வரிசை உயிர்மெய்கள் வரின் அவை திரிந்து வரும்.

7) தனிக்குறிலை அடுத்து ர், ழ் ஆகிய மெய்கள் வாரா.

 8) ல், ள், ன், ண் ஆகிய மெய்களை அடுத்து மொழி முதல், இறுதி, இடைகளில் மேலே கூறப்பட்ட மரபுகளுக்கு மாறாக வந்திருந்தால் அவை பிழை அல்லது பிறமொழிச் சொற்களாம்....!!!

Sunday, January 25, 2015

முக்தம்; முத்து; முக்தி


ஸமுத்ரத்தில் கரையோரமாகக் கொஞ்ச நாழி மூச்சைப் பிடித்துக் கொண்டு நீச்சலடிப்பதில்தான் ஆரம்பிக்க வேண்டும். அதுதான் அப்புறம் பலப்பட்டுக் கொண்டு, பலப்பட்டுக் கொண்டு போய் நல்ல ஆழத்தில் அடிவாரத்தில் ரொம்ப நாழி மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்து முத்துச் சிப்பிகளை சேகரம் பண்ணும் ஸாமர்த்தியத்தை உண்டாக்கும். கரையோர நீச்சல் மாதிரி இப்போது சொன்ன அடிப்படை ச்ரத்தை. முத்துக் குளிப்பு முழுக்கு மாதிரி அப்புறம் வரப்போகும் ச்ரத்தை.

முத்து என்று சொன்னதில் தன்னையறியாமல் ஒரு பொருத்தம் தெரிகிறது. ‘முக்தம்’ என்ற வார்த்தைதான் அப்படி ஆனது. ‘முக்தம்’ என்றால் விடுபடுவது. சிப்பியிலிருந்து தெறித்து விடுபட்டு வருகிற மணியே ‘முக்தம்’ என்கிற முத்து.
ஸம்ஸாரத்திலிருந்து தெறித்து விடுபடுவது முக்தி. முக்தரைத் தமிழில் முத்தர் என்றே சொல்வது வழக்கம். முக்தி பற்றிக் கதை என்றே சொல்வது வழக்கம். முக்தி பற்றிக் கதை பேச உட்கார்ந்த இடத்தில் முத்து உபமானம் வந்துவிட்டது.

அம்பாளுடைய சிரிப்பை ஒரு கவி பார்த்தாராம். வெள்ளை வெளேரென்று அவளுடைய தந்த காந்தி பரவுவதைப் பார்த்து சுப்ரமாயிருக்கிற சங்கின் ப்ரகாசம் மாதிரி இருக்கிறது என்று உவமை சொன்னாராம். உடனே இன்னொரு கவி அவரிடம் சண்டைக்குப் போனாராம். ‘எப்படிங்காணும் சங்கையும் அம்பாளுடைய மந்த ஸ்மித்தையும் (புன்னகையையும்) ஒன்றாகச் சொல்வீர்? சங்கு ஸ்மிதமோ முக்தர்களுக்குப் பரமப் பிரீதியை உண்டு பண்ணுகிறது. அதற்கும் இதற்கும் எப்படி ஒப்பு?’ என்று கவி பாடினாராம்:

முத்து எடுப்பது போல முக்தியைப் பிடிக்கும் கட்டத்திற்கு முன்னால் ஸாதனைக் கிரமத்தில் ச்ரத்தையைச் சோல்லியிருந்தாலும் நான் ஸகலத்திற்கும் ஆரம்பத்திலிருக்க வேண்டிய ச்ரத்தையைப் பற்றித்தான் இப்போது சொல்லிக் கொண்டிருந்தது.

ச்ரத்தையோடு இன்றைக்கே ஒரு பிள்ளையார் சுழி போட்டு ஆத்ம வழியில் போக ஆரம்பித்தால், என்றைக்கோ ஒருநாள் லட்சியத்திற்குப் போய் சேரலாம்.

லெனோவோ A6000 (Lenovo A6000)

குறைந்த விலையில் அதிகமான தொழில்நுட்பம் என்பதுதான் தற்போதைய ஸ்மார்ட் போன் கம்பெனிகளின் புதிய மார்க்கெட் ட்ரென்ட். லெனோவோவின் புதிய அறிமுகமான ‘லெனோவோ A6000’  இந்த ட்ரென்ட்டுக்கு லேட்டஸ்ட் எடுத்துக்காட்டு. இன்றைய தேதியில் இதுதான் இந்தியாவின் குறைந்த விலை 4G ஸ்மார்ட் போன்.

வடிவமைப்பு

‘லெனோவோ A6000’ ஸ்மார்ட் போன் சிம்பிளான டிசைனைக் கொண்டது. 8.2mm அடர்த்தியுள்ள மெல்லிசான இந்த ஸ்மார்ட் போனின் எடை 128 கிராம். இது பெரும்பாலான ஸ்மார்ட் போன்களைவிடக் எடை குறைவு என்பது சிறப்பம்சம். பின்புறம் முழுவதும் ‘Matte’ பினிஷ் கொண்டது. இதனால் போனை பிடிக்கும்போது கையிலிருந்து விழுவதைத் தடுக்கலாம்.
 டிஸ்ப்ளே 

‘லெனோவோ A6000’ அகலமான 5 இன்ச் HD 720X1280 IPS டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ‘Dolby Digital Plus’ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

 பிராசஸர் 

‘லெனோவோ A6000’ ஸ்மார்ட் போன் சக்திவாய்ந்த 64-பிட் Snapdragon 410 (MSM8916) SoC Quadcore பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. சக்திவாய்ந்த இந்த 1.2 GHz பிராசஸரோடு பிரத்யேகமான Adreno 306 GPU என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 1GB ரேமோடு வரும் இந்த ஸ்மார்ட் போனின் செயல்பாட்டில் எந்தக் குறைபாடும் இருக்காது. 8GB இன்டெர்னல் மெமரியுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனை 32 GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

கேமரா 

8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவையும், 2 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது. உட்புறத்தில் ப்ளாஷ் இல்லாமல் கேமராவைப் பயன்படுத்தினால் சுமாரான படங்களையே எடுக்க முடியும்.

பேட்டரி 

2300 mAh பேட்டரியைக் கொண்டுள்ள ‘லெனோவோ A6000’ முழுமையான பயன்பாட்டுக்கு 13 மணி நேரம் வரை தாங்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இந்த ஸ்மார்ட் போன் 3G நெட்வொர்க்கில் 264 மணி நேரம் (Standby time) வரை தாங்கும் என்று லெனோவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.


ஓ.எஸ் 

‘லெனோவோ A6000’ ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் ஓ.எஸ் கொண்டு இயங்குகிறது. லெனோவோ நிறுவனத்தின் பிரத்யேகமான ‘Vibe UI 2.0’ டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.

மேலும், இந்த ஸ்மார்ட் போனுக்கு ஆண்ட்ராய்டு 5.0 ‘லாலிபாப்’ அப்டேட் கிடைக்கும் என்று லெனோவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தொலைக்காட்சிப் பெட்டி

உலகின் ஏதோ ஒரு பகுதியில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதனை மனிதர்கள் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகமாக உள்ளது. முன்பு மற்ற நாடுகளில் ஒரு விஷயம் நடந்தால் நேரில் பார்த்தவர்கள் வந்து சொன்னால்தான் அந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியும். ஒரு தனிமனிதன் எத்தனை பேருக்கு ஒரு கருத்தைச் சொல்லிவிட முடியும் என்கிற நிலையில்  பரந்துபட்ட மக்களுக்கு தகவல்களும் கருத்துகளும் சென்று சேருவதற்காக உருவானதுதான் பத்திரிகைகள்.

ஆனால், படிக்கத் தெரிந்த மனிதனுக்கு மட்டுமே பத்திரிகைகள் போய்ச் சேர்ந்தன. படிக்கத் தெரியாதவர்களுக்கும் பல விஷயங்கள் சென்று சேர வேண்டும் என்று நினைத்தபோது வானொலி என்கிற கண்டுபிடிப்பு தோன்றியது. ஆனால், வானொலி என்பது வெறும் காதால் மட்டுமே கேட்கக்கூடிய ஒரு கருவியாக இருந்தது. இங்கிலாந்து இளவரசியின் திருமணம், உலகக் கோப்பை போட்டி, அமெரிக்க அதிபர் பதவியேற்பு  என  எதுவாக இருந்தாலும் அதை நேரில் பார்க்கிற மாதிரி எந்தக் கருவியும் இல்லையே என மனிதர்கள் வருத்தப்பட்டதன் விளைவு, தொலைக்காட்சிப் பெட்டி உருவானது.


1843 முதல் 1846 வரையிலான காலகட்டத்தில் அலெக்ஸாண்டர் பைன் மற்றும் ஃபெட்ரிக் பேக்வெல் ஆகியோர் வெவ்வேறு நாடுகளில் தங்களது ஆராய்ச்சியின் மூலம் புகைப்படங்களை நகரவைக்கும் அமைப்பைக் கண்டுபிடித்தனர். இதன்பின் தொலைக்காட்சி பல்வேறு பரிணாமங்களை அடைந்து, 1926-ம் ஆண்டு பொதுமக்கள் பயன்படுத்தும் நகரும் படங்களைக் காட்டும் தொலைக்காட்சியை ஜான் லியோ பேர்டு கண்டுபிடித்தார். பின்னர் ஒலி உடைய தொலைக்காட்சி, நீண்ட நேர வீடியோக்களைக் காட்டும் விதத்தில் அமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் அலைக்கற்றைகளை வாங்கி ஒளிபரப்பும் விதமான அமைப்புடன் தொலைக்காட்சி இருந்தது. பிற்பாடு அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இன்றைக்கு முழுக்க டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. தற்போது வை-ஃபை வசதியுடன் கூடிய இணையதளத் தொலைக்காட்சி யாக வளர்ந்திருக்கிறது.

இன்று டெல்லியில் மோடியும், ஒபாமாவும் சந்திப்பதை வீட்டில் உட்கார்ந்தபடி பார்க்க முடிகிறதென்றால், ஆஸ்திரேலியாவில் தோனி விளையாடுவதை சென்னையிலிருந்து பார்க்க முடிகிறதென்றால், தொலைக்காட்சி பெட்டிதான் காரணம். ‘இடியட் பாக்ஸ்’ என பெர்னாட்ஷா அதைச் சொன்னாலும், சாதாரண மனிதர்கள் எல்லோருக்குமே அது இன்றியமையாத பாக்ஸ்தான்!

ச.ஸ்ரீராம்

Tuesday, January 20, 2015

இதுதான் குடியரசு


இப்போது முடியரசு ஸாத்யமில்லை. ஈஸ்ட் இன்டியா கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து அப்புறம் ப்ரிட் டிஷ் ராஜாங்கத்துக்கு தேசம் கை மாறின காலங்களில் இந்தத் தேசம் முழுவதற்கும் ஒரு ராஜா இருக்கவில்லை. பிற்பாடு ஸ்வதேச ஸம்ஸ் தானங்கள் என்று பெயர் பெற்ற ஏராளமான ராஜ்யங்களே அப்போது இருந் தன. நமக்கு ஸ்வதந்த்ரம் வந்தபோது இவற்றில் ஏதோ கொஞ்சம் ஸ்வயா திக்யம் பெற்றிருந்தவற்றைத்தான் ஸ்வதேச ஸம்ஸ்தானம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். என்பார்கள். 

Native state இப்படி ஐந்நூற்றுக்கு மேல் இருக்கின்றனவென்றால், இம்மாதிரி கொஞ்சம் ராஜ்யாதிகாரம் கூடக்கொடுக்காமல் ப்ரிட்டிஷ்காரர்கள் முழுங்கியேவிட்ட சின்னச் சின்ன ராஜ்யங்கள் எத்தனையோ இருந்திருக்கும். ஏகப்பட்ட ராஜாக்களின் ஆளுகையில் இருந்த தேசம் அப்புறம் வெள்ளைக்கார, ‘கிங் எம்பர’ரிடம் போயிற்று. அதிகாரமில்லாமல் figure-head என்று ராஜாவாக இருப்பவர் அவர். அந்த ஹிஸ்டரி இப்போது வேண்டாம். சொல்ல வந்தது, இப்போது அந்த ஒரே ராஜாவிடமிருந்து தேசம் நமக்குத் திரும்பி வருகிற போது இது முழுதையும் ஒப்பிப்பதற்கு பாரம்பர்ய ரைட் உள்ளவராக ஒரு ராஜகுடும்ப வாரிசும் இல்லை. ஆனபடியால், மற்ற காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இப்போது தேசம் பூராவையும் ஏதோ ஒரு ராஜ வம்சம் வாங்கிக் கொள்வதற்கில்லாமல் ஜனங்கள் தான் வாங்கிக்கொள்ள வேண்டும். 

குடியரசுதான் இங்கே வரமுடியும். வெள்ளைக்காரர்களோடு ராஜா யாரும் சண்டை போட்டு தேசத்தைத் திரும்பவும் ஜயிக்கவில்லை. ஜனங்களே தான் கூடிய மட்டும் அஹிம்ஸை மார்க்கம் என்று சொல்லக்கூடிய முறையில் ஓரளவு ஸாத்விக யுத்தம் செய்து ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். அதனால் ஜனங்களே இதை ஆண்டுக்கொள்ள உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதைத்தான் குடியரசு என்பது.

பல் நோய்கள்!


பனிக்கால நோய்களில் முக்கியமானது பல், ஈறு பிரச்னை. பொதுவாக பெண்களின் உடலில் ஹார்மோன்களின் தாக்கம் அதிகம் இருக்கும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் இது இன்னும் அதிகமாகவே இருக்கும். அப்போது பல், ஈறு அதிகமாகப் பாதிக்கப்படும். இதற்கு அவர்களின் வாய் பராமரிப்பின்மையும் ஒரு முக்கிய காரணமாகும்.

கர்ப்பகால ஈறு நோய்க்கு பிரக்னென்ஸி ஜின்ஜிவிடிஸ் (Pregnancy Gingivitis) என்று பெயர். ஈறுகளில் ரத்தம் கசிதல், ஈறுகளில் வீக்கம், வலி போன்றவை இருக்கும். கர்ப்ப காலத்தில் பயன்படுத்தும் கர்ப்பத் தடை மாத்திரைகளாலும் ஈறு நோய்கள் ஏற்படுவதுண்டு.

பொதுவாக கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை. பல் சிகிச்சைகளைப் பொறுத்த வரை முதல் மூன்று மாதங்கள் (Ist Trimester) மற்றும் கடைசி மூன்று மாதங்களில் (3rd Trimester) எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அவசியமேற்படின் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரையிலான (3rd Trimester) சிகிச்சைகள் மேற்கொள்ளலாம். குழந்தைப் பேறுக்குப் பின் இந்த ஈறு நோய்கள் குறைந்துவிடும்.

பாதுகாப்பு முறைகள் என்ன?

பற்களையும் வாயையும் சுத்தமாகப் பராமரித்தல், இரண்டு முறைகள் மிருதுவான பிரஸ்ஸால் பல் துலக்கவேண்டும். பின் ஈறுகளை விரல்களால் நன்கு மசாஜ் செய்யவேண்டும். இரவில் வெந்நீரில் உப்பிட்டு வாய் கொப்புளித்தல், இனிப்பான உணவு வகைகளைத் தவிர்த்தல் வேண்டும். உணவுக்குப் பின் வாய் கொப்புளித்தல் வேண்டும். மேலும் சரிவிகித உணவான (Balance diet) பால், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகளவு உட்கொள்ளவேண்டும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வர வாய்ப்புண்டு. அவர்கள் கண்டிப்பாக மேற்கண்ட பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

- டாக்டர் த. கோபாலகிருஷ்ணன்

ரகுராம் ராஜன்!

 
இந்த வருடத்தின் (2015) சிறந்த கவர்னருக்கான விருதினை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்குத் தந்துள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்கிங் என்கிற பத்திரிகை. 2014-ல் ரகுராம் ராஜனின் திறமையான செயல்பாட்டுக்காகவும் இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரம் பற்றிய புரிதலுக்காகவும் இந்த விருதினை அளித்துள்ளது. ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் எடுத்த முடிவுகள் மற்றும் அவரது தெளிவான அணுகுமுறை மூலம் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார் என்று புகழ்ந்திருக்கிறது அந்தப் பத்திரிகை. இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகை ரகுராம் ராஜனுக்கு விருது வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.
 
தானமளிப்பதில் போட்டி!


பெங்களூரில் இருக்கும் அட்சய பாத்திரா என்கிற தொண்டு நிறுவனம் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைத் திறம்பட நடத்தி வருகிறது. டாடா குழுமமும் இன்ஃபோசிஸ் நிறுவனமும் இணைந்து இந்தத் தொண்டு நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்துள்ளன. நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி 147 கோடி ரூபாய் அளித்துள்ளார். ஜாம்ஷெட்ஜி டாடா டிரஸ்ட்டின் மூலம் 55 கோடி ரூபாயும் நன்கொடை யாக அளிக்கப்பட்டுள்ளது. அட்சய பாத்திரா நிறுவனம் செய்துவரும் சேவையை 2008-ம் ஆண்டிலேயே புகழ்ந்து பேசினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
நல்ல விஷயம், தொடரட்டும்!

மூன்று ஹோட்டல் மாறிய ஜான் கெர்ரி!

வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சிக்காக இந்தியா வந்த அமெரிக்கச் செயலாளர் ஜான் கெர்ரி தங்குவதற்கு குஜராத்தில் அதிரடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அமெரிக்கத் தூதரகம் பாதுகாப்பு நடவடிக்கைக்காக புதிய உத்தியைக் கையாண்டுள்ளது. ஜான் கெர்ரிக்கு மூன்று ஹோட்டல்களை புக் செய்தது அமெரிக்கத் தூதரகம். அவர் எந்த ஹோட்டலில் தங்குவார் என்பதை படுரகசியமாக வைத்திருந்தது. ஒரு ஹோட்டலில் காலை உணவு, இன்னொன்றில் மதிய உணவு, மூன்றாவதில் தூங்கச் செல்வது என்று திட்டமிட்டு எல்லோரையும் திக்குமுக்காட வைத்தது அமெரிக்கத் தூதரகம்.



நிதி ஆயோக் சிஇஓ ஆனார் சிந்து!


திட்ட கமிஷனுக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் என்னும் அமைப்புக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், திட்ட கமிஷனின் செயளராகப் பணியாற்றிய சிந்து குலார் (Sindhushree Khullar) சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1-ம் தேதி முதல், ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்தப் பதவியை வகித்து வருகிறார். ஏற்கெனவே திட்ட கமிஷனில் பணியாற்றி இருப்பதால், இவரது பங்களிப்பு இதில் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
ட்விட்டர் வாங்கும் இந்திய நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் ட்விட்டர் இணையதளம், இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஜிப்டயல் நிறுவனத்தை 30 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 185 கோடி ரூபாய்க்கு மேல்) தந்து வாங்க முயற்சித்து வருகிறது. 2010-ல் தொடங்கப்பட்ட ஜிப்டயல் நிறுவனம், 2014-ல் இந்தியாவின் எட்டாவது மிகச் சிறந்த இன்னோவேட்டிவ் கம்பெனி என்கிற சிறப்பைப் பெற்றது. இந்த நிறுவனத்துக்கு உலக அளவில் 500 வாடிக்கையாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது!
 

 
 

வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள்

பொருளாதாரம் ஒருபக்கம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இந்த வருடம் வேலைவாய்ப்பு பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் சில தங்களின் தொழிற்சாலைகளை மூடி வருகின்றன. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர். ஐ.டி கம்பெனிகளிலும் ஆட்குறைப்பு அதிகமாகி வருகிறது.  வேலை இழப்பு ஏற்படும்போது அடுத்த வேலையைத் தேடிக்கொள்ள சில மாதங்களாவது ஆகும். அந்தச்சமயத்தில் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லாமல் இருந்தாலே எளிதாகவும், நிம்மதியாகவும் வேலை தேட முடியும். மாத சம்பளம் தடைபடும்போது அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்வது அவசியம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொருளாதார ரீதியாக சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

1. வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் நீண்ட காலத்தில் சேமிப்பு அதிகம் இருக்கும். பெரும்பாலும், 23-25 வயதுக்குள் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். வேலைக்குச் சேர்ந்தது முதல் மாத சம்பளம் வாங்கியதும் குறைந்தபட்சம் மாதம் ரூ.2 ஆயிரமாவது சேமிப்பது நல்லது. ஆக, ஒரு வருடத்துக்கு ரூ.24 ஆயிரம் சேமிப்பாக இருக்கும். அப்போதுதான் இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும்போது அதைச் சமாளிக்க எளிதாக இருக்கும்.


2.எப்போதுமே மாத சம்பளத்தைப் போல, 3-லிருந்து 6 மடங்கு தொகையைக் கையில் வைத்திருப்பது நல்லது. மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் எனில், ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.1.2 லட்சம் வரை வைத்திருப்பது முக்கியம். இந்த அளவு தொகையைச் சேமிப்பாக வைத்தபிறகே, பிற தேவைகளுக்காக பணத்தைச் சேமிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தில் 50 சதவிகிதத்தை தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கிலும், 50 சதவிகித தொகையை லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் வைத்திருப்பது நல்லது.

3. கடன் வாங்கி எந்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. அதாவது, சிலர் தங்களுடைய நண்பர்கள் வாங்குவதைப் பார்த்து, தனிநபர் கடனை வாங்கி, நிலம் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறு. காரணம்,  வாங்கிய கடனுக்கான வட்டியைவிட, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. கையில் பணம் இருந்தால் மட்டும் முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும். மேலும், மாத சம்பளத்தில் 30-50 சதவிகிதத்துக்குமேல் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை தனிநபர் கடனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதற்கு வட்டி விகிதம் அதிகம்.


4.வேலைக்குப் போகிறோம், அதன் மூலம் சம்பளம் கிடைக்கிறது என்றில்லாமல், சில முதலீடுகள் மூலமாக வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளை மேற்கொள்வது நல்லது. பெரும்பாலான வர்கள் தங்கத்தை சிறந்த முதலீடாக நினைப்பார்கள். தங்கத்தின் விலை முன்புபோல் அதிக லாபம் தருவதாக தற்போது இல்லை. தவிர,  தங்க நகையை விற்கும்போதும் சேதாரம் என்கிற வகையில் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கும். இதனால் குறைவான லாபமே கிடைக்கும். எனவே, முதலீட்டின் மூலமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

5. பள்ளி கல்விக் கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றை ஆண்டின் துவக்கத்தில் மொத்தமாகச் செலுத்திவிடுவது நல்லது. இப்படி செலுத்தும்போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தனியாக வங்கியில் ஆர்டி கணக்கு ஆரம்பித்து, அதன்மூலம் சேமிக்கலாம். அப்போதுதான் வேலை இழப்பின்போதும் இதுபோன்ற முக்கியமான காரியங்கள் தடைபடாமல் இருக்கும்.

6. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவர் செய்யும் வகையில் ஹெல்த் இன்ஷூரஸ் பாலிசி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளிலிருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், மருத்துவச் செலவு என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். அது வேலை இல்லாத நேரத்தில் நிகழும்போது கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்கும். மேலும், சிலர் நிறுவனத்தில் வழங்கும் குரூப் இன்ஷூரன்ஸை மட்டும் நம்பியிருப்பார்கள். இது முற்றிலும் தவறு. வேலையில் இல்லாத நேரத்தில் இது கைகொடுக்காது.

7.சம்பளத் தொகை முழுவதுக்கும் செலவுகளைத் திட்டமிடாமல், 70 சதவிகிதக்குள் செலவுகளை வைத்துக்கொள்வது நல்லது. மீதமுள்ள 30 சதவிகித தொகையை முதலீடு செய்வது நல்லது. மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் எனில், அதில் ரூ.14 ஆயிரத்துக்குள் செலவுகளைத் திட்டமிட வேண்டும். தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. மீதமுள்ள தொகையை நல்ல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.

8. கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்கும் கடன்களை வாங்குவதில் தவறில்லை. காரணம், இதற்கு வட்டி குறைவு. அதுவே தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. சில நிறுவனங் கள் ஜீரோ சதவிகிதத்தில் கடன் கொடுக்கிறோம் என்று சொன்னால், உடனே கடன் வாங்க கையை நீட்டிவிடக்கூடாது. இது சாத்தியமா என்பதை நன்கு ஆராய்ந்தபின்பே வாங்க வேண்டும். முன்பின் யோசிக்காமல் கடனை வாங்கிவிட்டால், பிற்பாடு வேலை இழந்து நிற்கும்போது அசலையும் வட்டியையும் தவறாமல் கட்டுவது கூடுதல் சுமையாக இருக்கும்.

9.பார்க்கும் பொருளை எல்லாம் வாங்க  வேண்டும் என நினைக்கக் கூடாது. அந்தப் பொருள் கட்டாயம் தேவையா, அதனால் என்ன பயன் என்பதையெல்லாம் யோசித்த பின்பே முடிவு எடுப்பது புத்திசாலித்தனம். வீட்டுக்கு ஏசி தேவை எனில், அதன் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, தேவை என்கிற பட்சத்தில் மட்டுமே வாங்க வேண்டும்.

10.வேலை இழப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதே தவற்றைத் திரும்பவும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு நின்றுவிடாமல் இடைப்பட்ட காலத்தில் வேலை சார்ந்த திறமைகள் மற்றும் தகுதியை வளர்த்துக்கொள்வது இக்கட்டான சூழலில் கைகொடுக்கும்.

வி.டி.அரசு, நிதி ஆலோசகர்


ஒப்போ R5 (Oppo R5)

ஒரு ஸ்மார்ட்போனின் தொழில்நுட்பமும், பேட்டரியும்தான் முக்கியத் தேவையாக இருந்தாலும், அதன் டிசைன்தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அந்தவகையில் டிசைனுக்கு முக்கியத்துவம் தந்து வடிவமைக்கப்பட்டுள்ள  ஸ்மார்ட் போன் ‘ஒப்போ R5’.

வடிவமைப்பு

‘ஒப்போ R5’ ஸ்மார்ட் போன் ‘Micro Arc Frame’ என்ற பிரத்யேகமான பிரேமைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. மெல்லியதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க ‘Hand Polishing’ மூலம் செய்யப்பட்டுள்ளது. இது பிரசித்தி பெற்ற ‘Swiss’ வாட்ச்களில் மட்டும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும். கவர்ச்சியான மெட்டாலிக் லுக்கைத் தரும் இந்த ஸ்மார்ட் போன் 155 கிராம் எடையைக் கொண்டது.


டிஸ்ப்ளே ஒப்போ R5 அகலமான 5.2 இன்ச் 1080X1920 AMOLED டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. 5.2 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருந்தாலும், முழு வெளிச்சத்திலும் சிறப்பான சேவையை அளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக ‘Corning Gorilla Glass 3’யையும் இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது என்பது சிறப்பம்சம்.


பிராசஸர்

ஒப்போ R5 ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 615 SoC அக்டோ-கோர் பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்த பிராசஸர் 64-பிட் அப்ளிகேஷன்ஸ் இயங்க போதுமான தாக இருக்கும்.

மிகச் சக்திவாய்ந்த இந்த பிராசஸரோடு பிரத்யேகமான Adreno 405 GPU என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 2GB ரேமோடு வரும் இந்த ஸ்மார்ட்போனின் செயல்பாட்டில் எந்தக் குறைபாடும் இருக்காது.

16GB இன்டெர்னல் மெமரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனை SD கார்டு மூலம் மெமரியை விரிவுபடுத்த முடியாது.

கேமரா

13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் ‘ULTRA HD’ என்ற போட்டோ எடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. 

இந்த ‘ULTRA HD’ முறை மூலம் பத்து போட்டோக்களிலிருந்து 50 மெகா-பிக்ஸல் போட்டோவை உருவாக்கலாம்.


பேட்டரி

2000 mAh பேட்டரியைக் கொண்டுள்ள ஒப்போ R5, விரைவாக சார்ஜ் ஆகிக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது. இந்த விலையில் மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் ஒப்போ R5யின் பேட்டரி திறன் குறைவுதான். முழுமையான பயன்பாட்டுக்கு இந்த ஒப்போ R5 ஸ்மார்ட்போன் 7 மணி நேரம் வரை தாங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஓ.எஸ்

ஒப்போ R5 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் ஓ.எஸ் கொண்டு இயங்குகிறது. ஒப்போ நிறுவனத்தின் பிரத்யேகமான ‘Color ஓ.எஸ் skin’ டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.


உறைய வைத்த ஃப்ரிட்ஜ்!

இயற்கையாக உள்ள விஷயத்தை எல்லாம் செயற்கையாக, தானும் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதன் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறான். அதில் முக்கியமான ஒன்று, இயற்கையில் உருவாகும் பனிக்கட்டியை ஏன் நாமும் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம். இந்த எண்ணம்தான் ஃப்ரிட்ஜ் எனும் குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது.

முதலில் 1750-களில் ரெஃப்ரிட்ஜிரேஷனுக்கான கண்டுபிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. வெற்றிடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஐஸ்கட்டி உருவாக்கும் இயந்திரம் முதலில் 1854-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மைகேல் பாரடேவின் விதிப்படி, அம்மோனியாவும், இதர சில வாயுக்களும் உயர் அழுத்ததில் வெப்பத்தைக் குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஃப்ரிட்ஜின் கண்டுபிடிப்பு வேகமெடுத்தது.


1930 வரை இந்தச் சோதனை ஐஸ் தயாரிக்கும் முயற்சியாகத்தான் இருந்தது. 1930-ம் ஆண்டு முதன்முதலில் மக்கள் உபயோகப்படுத்தும் ஃப்ரிட்ஜ் என்ற அமைப்பு உருவானது. உணவுப் பொருட்கள், மாமிசம் ஆகியவைக் கெடாமல் இருக்கவும், ஐஸ்கட்டி தயாரிக்கவும் உதவியாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது.

பின்பு அதன் வடிவம் அமைப்பு, திறன் ஆகியவை மாற்றம் கண்டு, தற்போது தொழிற்சாலைகளும்கூட மிகப் பெரிய ஃப்ரிட்ஜ் அமைப்பைப் பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இது மனிதர்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத கண்டுபிடிப்பாக மாறியுள்ளது. பல நிறுவனங்கள் எளிதில் கெடக்கூடிய பொருளை அதிக நாட்கள் வைத்திருக்க இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக மாறியுள்ளது.

அதைவிட முக்கியமாக, இன்று பல வீடுகளில் ஃப்ரிட்ஜ் இல்லை எனில், காலை உணவு இல்லை என்ற நிலைக்கு மாறியுள்ளது. காலை இட்லிக்கான மாவு முதல் இந்த வாரம் முழுவதுக்கும் வேண்டிய உணவுப் பொருட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளும் சேமிப்புக் கிடங்காகவே மாறியுள்ளது ஃப்ரிட்ஜ்.

ச.ஸ்ரீராம்

Monday, January 12, 2015

கூகுள் க்ரோம் காஸ்ட்

டிசைன்

கூகுள் க்ரோம் காஸ்ட் ஒரு பிரீமியம் டிசைனைக் கொண்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு பென்-டிரைவ் போலத் தோற்றமளிக்கும் இந்த கேட்ஜெட், இந்தச் செயல்பாட்டைக் கொண்ட ஆப்பிள் டிவி, ரோக்கூவை (Roku)விடச் சிறியதாக இருக்கிறது. பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

அப்ளிகேஷன்ஸ்

க்ரோம் காஸ்ட்டை கனெக்ட் செய்தவுடன் செட்-அப் அப்ளிகேஷன் மூலம் விவரங்களை செட் செய்ய வேண்டும். இந்த அப்ளிகேஷனை ஸ்மார்ட் போன்/டேப்லெட்/லேப்டாப் ஆகியவற்றிலிருந்து பயன் படுத்தலாம். யூ-டியூப், HBO Movies, க்ரோம் Browser போன்ற பல ஆப்ளிகேஷன் களை க்ரோம் காஸ்ட் மூலம் பயன்படுத்தலாம்.


கூகுள் க்ரோம் காஸ்ட் (Google Chrome Cast)

சமீபத்தில் கூகுள் நடத்திய ‘Great Online Shopping Festival’ (GOSF) என்ற இணைய வர்த்தக விழாவில், கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் க்ரோம் காஸ்ட்’ கருவியை வெளியிட்டது. ‘கூகுள் க்ரோம் காஸ்ட்’ என்பது ஒரு மீடியா ஸ்ட்ரீமிங் அடாப்டர். இதை HDMI வசதியுள்ள ஒரு டிவியில் பொருத்திவிட்டால், உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஆப்ஸ்களை டிவியில் பயன்படுத்தலாம். இதற்கு கூகுள் க்ரோம் காஸ்ட்டும் ஒரு ஸ்மார்ட் போனும் ஒரே WiFi நெட்வொர்க்கில் இணைந்திருக்க வேண்டும். சில டிவி மாடல்களைப் பொறுத்து இந்த க்ரோம் காஸ்ட் செயல்பாட்டுக்கு டிவியின் USB போர்ட்டிலிருந்து ஒரு கேபிள் மூலம் பவர் தரலாம்.


ஸ்கிரீன்-மிரரிங்: (Screen Mirroring)

இதை ஆண்ட்ராய்டு 4.4.2 மற்றும் அதற்குமேல் உள்ள வெர்ஷனில் இயங்கும் கேட்ஜெட்டில் மட்டும் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஸ்மார்ட் போன், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றின் திரையை, டிவி திரையில் தோற்றுவித்துப் பயன்படுத்தலாம்.

உதாரணத்துக்கு, ஸ்மார்ட்போன், லேப்டாப்களில் யூ-டியூப் பார்ப்பதாக இருந்தால் ஓரளவுக்கு திரையின் அளவை பெரிது படுத்தி பார்க்கலாம். ஆனால், கூகுள் க்ரோம் காஸ்ட்டைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பை டிவியுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் டிவி-யின் திரை அளவு யூ-டியூப் வீடியோக்களைப் பார்க்க முடியும்.


மேலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை ஸ்மார்ட்போனில் கையாள்வதை சிரமமாக நினைப்பவர்கள். இந்த கருவியின் மூலம் ஃபேஸ்புக் பக்கத்தை டிவி திரைக்கு கொண்டு சென்று பயன் படுத்தலாம். அது மட்டுமல் லாமல், ஸ்மார்ட்போன் கேம்ஸ்களை, டிவி திரையில் பெரியதாக்கியும் விளையாட முடியும்.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, January 10, 2015

உள்ளத் தூய்மை


உடல், உடை இவற்றுக்கு மேலாக ஒன்று இருக்கிறது. அதுதான் உள்ளம், மனம் என்பது. மனச் சுத்தம், உள்ளத் தூய்மைதான் மிக மிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும், உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனேயில்லை. மனசிலே அழுக்குப் படியாமல் அதை அவ்வப்போது தேத்துக் கழுவிக் குளிப்பாட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

மனசுக்கு ஏற்படுகிற அழுக்கு என்பது என்ன? தப்பு, தவறு செய்வதுதான் உள்ளத்துக்கு அழுக்கு. நாம் செய்கிற காரியங்களில் தவறு ஏற்படக்கூடாது. அதாவது கெட்ட நோய்க்கங்களுக்காகக் காரியம் செய்யவே கூடாது.

ஆனாலும் காரியம் என்று வந்து விட்டால் நல்லதைச் செய்கிறபோதுகூட அதிலே சில தப்பு, தவறுகள் நேர்ந்து விடலாம். இதனால் பெரிய குற்றம், அதாவது தோஷம் இல்லை. ரொம்பப் பெரியவர்கள்கூட எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்கிறபோது அவர்களையும் கொஞ்சம் சறுக்கிவிட்டிருக்கிறது. நாமே எல்லாம் செய்து கொள்ள முடியும் என்று கர்வப்படாமல், பகவான் துணையால்தான் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் உணறுவதற்காகவே இப்படிச் சில தவறுகள் நேர்ந்துவிடுகின்றன. இம்மாதிரி சமயங்களில் நீங்கள் பகவானை வேண்டிக் கொள்வதுதான் சரி. அதுவே அழுக்கைக் கழுவிவிடும்.

சர்ச்சை - தோனி!

 
புயலின் மையம் எப்போதும் அமைதியாக இருக்கும் என சொல்வார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இறுதியில் தோனி ஓய்வு அறிவித்ததும் அதைச் சுற்றி ஒரு மீடியா புயல் வீசியது. கோலியின் நடவடிக்கைகள், அதிகாரத்தை நோக்கிய நகர்வு தோனியை எரிச்சல்படுத்த அவர் அதிரடியாக ஓய்வு அறிவித்தாரா? தொடர்ந்து டெஸ்ட் தொடர் தோல்விகள் பற்றி தோனி மீது குற்றச்சாட்டுகள் குவிய, அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள டெஸ்டிலிருந்து விலகினாரா? இப்படி பல கேள்விகள். ஆனால் இந்தப் புயலுக்கு மத்தியில் தோனியின் மனம் அமைதியாக, சஞ்சலப்படாது இருப்பதை நாம் கவனிக்கவில்லை.
 
2011 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை வென்ற பின் மொத்த கவனத்தையும் சச்சின் மீது திருப்பி விட்டு, அந்த வெற்றி உற்சாகத்தில் பட்டுக் கொள்ளாமல் விலகி இருந்த தோனி இப்போது ஒரு இளம் நட்சத்திர வீரரைப் பார்த்து அஞ்சுகிறார் என்றோ தோல்வி பற்றிய குற்றச்சாட்டுகளினால் பதறுகிறார் என்றோ கருதுவது அபத்தம். வெற்றியினால் மிகுதியாக எக்களிக்கும் மனிதன் தம் தோல்வி கண்டு அஞ்சிக் கலக்கமடைவான். இரண்டிலும் பட்டுக் கொள்ளாத தோனி போன்றோர் அல்ல. தோனியின் ஓய்வு ஒரு பட்டும் படாத, நடைமுறை தேவையைக் கருதி எடுக்கப்பட்ட முடிவு.  தோனி புத்தர் அல்ல. வெற்றியின் போது அவர் நிச்சயம் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைவார். ஆனால் அதை பெரிதுபடுத்தாமல், எளிய விஷயமாக எடுத்துக் கொண்டு நகர்ந்துவிடுவார். வெற்றிக்கு பின்னர் நடக்கும் மீடியா சந்திப்புகளில் தாம் பேசாமல் தம் அணியின் மற்றொரு வீரரைப் பேச வைப்பார். இது வேறெந்த அணியிலும் நடக்காதது. அதேநேரம் தோல்வி அடைந்தால் அதற்குப் பொறுப்பேற்று பதில் சொல்வார். இதுபோன்ற ஒரு தன்னலம் கடந்த பொறுப்புணர்வுதான் தோனியின் சிறப்பு. அவர் டெஸ்ட் அணியின் தலைவராக செயல்பட்ட தும் கூட தன்னலமற்ற செயல்தான். அடிப்படையில் தோனி டெஸ்ட் வீரர் அல்ல. அவருக்கு அதற்கான பொறுமையோ தொழில்நுட்பமோ இல்லை. 290க்கு மேல் கேட்ச்/ஸ்டம்பிங்களை செய்துள்ள போதும் கூட ஒரு கீப்பராகவும் அவரது விளையாட்டு குறைபட்டதுதான். ஆனால் அவர் ஒரு சிறந்த ஒருநாள் அணி வீரர் மற்றும் தலைவர். நியாயமாக கடந்த ஆறு வருடங்களில் அவருக்கு பதில் டெஸ்ட் அணியில் சாஹா ஆடியிருக்க வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட ஒரே அணி இரண்டு வடிவங்களிலும் விளையாடுவதால் இரண்டு அணித் தலைவர்கள் அதிகார சமகுலைவை, குழப்பத்தை அணிக்குள் ஏற்படுத்தும். டெஸ்ட் அணியில் தோனி ஆடினது ஒரு சமரசம்தான். ஆனால் அதனால் இந்திய டெஸ்ட் அணி மேம்படவில்லை என்றாலும் ஒருநாள் அணி மிகவும் பயனடைந்தது.
 
ஆரம்பத்தில் அவர் கங்குலி மற்றும் திராவிட் ஆகியோரால் உருவாக்கி பயிற்றுவிக்கப்பட்ட அணியை எளிதாக வழிநடத்தி டெஸ்ட் அணி வரிசையில் முதலாவதாக கொண்டு சென்றார். ஆனால் இதே மூத்த வீரர்களின் அணி பின்னர் சறுக்கத் தொடங்க, அவர்களிடத்தில் இளம் வீரர்கள் வந்து அனுபவமின்றி ஆட இந்திய அணி தோனியின் கீழ் நான்கு தொடர்களை வெளிநாட்டு மண்ணில் இழந்தது. அணி முதலிடத்தைப் பிடித்தபோது எப்படி தோனி அதை தம் சாதனையாகக் கருதவில்லையோ தொடர்ந்து ஒவ்வொரு தொடரையும் வெளிநாடுகளில் இழந்தபோதும் அவர் அதைத் தம் தோல்வியாகக் கருதவில்லை.அவர் பார்வையில் இத்தோல்விகளைத் தவிர்க்க இயலாது. வேறு யார் தலைவராக இருந்தாலும் இப்படித்தான் தோற்போம். இத்தோல்விகளின் பொறுப்பை தாம் ஏற்பதன் மூலம் ஒரு தியாகம் செய்தவராக தோனி நினைத்திருக்ககூடும். இதனால் அணியையோ ஆட்டத் திட்டத்தையோ அவர் மாற்ற முனையவில்லை.இந்தப் போக்கு மீடியா மற்றும் ரசிகர்களைக் கடுமையாக எரிச்சலூட்டியது. தோனியின் பட்டும் படாத குணம் ஒரு டெஸ்ட் அணியை அதன் சவால்களை எதிர்கொள்ள தூண்டவோ புதிதாய் கட்டமைக்கவோ உதவவில்லை. தோனி அடிப்படையில் சம்பிரதாயமான மனிதர். சராசரி இந்தியனைப் போல் விதியை நம்புபவர். இந்த மிதவாதப் போக்கு எதிர்மறையாக முடிந்தது. நியூசிலாந்தின் பிரண்டன் மக்கெல்லம் போல் அவர் சோதனை முயற்சிகளை செய்து பார்க்க விரும்பவில்லை. ஜடேஜாவை ஆல்ரவுண் டராக்க பார்த்தது, ஆட்டத்தை விட்டுப் பிடிக்கும் பாணி ஆகியவை அவரது டெஸ்ட் தலைமை வாழ்வில் படுதோல்வியானது. இதையெல்லாம் தோனி நம்மை விட நன்றாகவே உணர்ந்திருந்தார்.
 
2013இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என அவர் உலகக்கோப்பை முடிந்ததும் அறிவித்தார். ஆனால் 2015இல் அவர் உலகக் கோப்பையின் போது வழி நடத்த வேண்டுமென்றால் டெஸ்டில் இருந்து அதற்கு முன் ஓய்வுபெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை. இப்போது தோனி இருதலைக்கொள்ளி மனநிலையில் இருக்கிறார். டெஸ்ட் அணியின் கடுமையான தோல்விகளால் தமது நற்பெயர் கெடப் போகிறது என இரண்டு வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருந்தார். அதை அவரால் தடுக்க முடியாது. அதேநேரம் அவரது ஒருநாள் அணி தொடர்ந்து வெற்றியைக் குவித்து பேர் வாங்கும். கெட்டபெயர் வேண்டாம் என்றால் நல்லபெயரும் சேர்ந்து கிடைக்காது. தோனி ஒரு முடிவெடுத்தார். அந்த முடிவுதான் இந்த டெஸ்ட் கிரிட்கெட் ஆட்டங்களில் இருந்து விலகல்.அயல்நாட்டில் பெற்ற தோல்விகளால் அவர் சற்றும் பாதிக்கப்படவில்லை என்றில்லை. உள்ளூர் டெஸ்ட் தொடர்களைப் பெரும் வித்தியாசத்தில் வெல்வதற்குச் சாதகமான ஆடுதளங்கள் அமைக்க அவர் தள அமைப்பாளர்களை வற்புறுத்தினார். அவ்வாறு அவர் ஆஸ்திரேலியா, மே.இ தீவுகளூக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை வெல்லவும் செய்தார். ஆனால் அவை தற்காலிக தீர்வுகள்தாம். கோலி முதல் டெஸ்டை வென்றிந்தால் அவரால் தோனி அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார் என கூறுவதில் நியாயம் இருக்கும். தோனி நினைத்திருந்தால் உலகக்கோப்பைக்கு பின் மே.இ தீவுகள், நியூசிலாந்து, வங்கதேசம் போன்ற ஒரு கரகாட்ட அணியை இந்தியாவுக்கு அழைத்து சுலபமாக தோற்கடித்து கொண்டாட்டமா விடைபெற்றிருக்கலாம். ஆனால் அவர் தலைமைப் பதவியை ஒரு பொறுப்பாக பார்த் தார். உலகக்கோப்பைக்கு பின் அடுத்த டெஸ்ட் தொடர் நடக்க எட்டுமாதங்கள் ஆகும். அதுவரை அவர் எப்படியும் தலைவராக இருக்கப் போவதில்லை. இடையில் ஒரே ஒரு டெஸ்ட். அதை அவர் கோலிக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். உண்மையில் நாம் இதற்காக தோனியை கொண்டாடி இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி திடீரென்று விலகியதற்கு மேலும் பல காரணங்களும் சொல்லப்படுகின்றன.. இணையத்திலும் பத்திரிகைகளிலும் சொல்லப்படும் ஊகங்களுக்கு எந்தவொரு நிரூபணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், புயல் ஓந்தாலும் சர்ச்சைகள் ஓயவில்லை. தோனி தன் வழக்கமான அமைதியை இங்கேயும் நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறார்.
 
ஆர்.அபிலாஷ்

Sunday, January 04, 2015

ஹாலிவுட் ட்ரெய்லர்!

2015 வந்தாச்சு. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவர இருக்கும் ஹாலிவுட் படங்களின் முன்னோட்டம் இது.


உலகம் முழுவதுமே ஆர்வமாக எதிர்பார்க்கும் படம் ஸ்டார் வார்ஸ் - 7. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் உயிர்களுக்கும் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும்  உயிர்களுக்கும் இடையே நடக்கும் ஆதிக்கப் போட்டிதான் கதை. அந்தக் கதையின் அடிப்படையில் இதுவரை 6 படங்கள் வெளிவந்துள்ளன. இதுவரை வெளியான அனைத்து ஸ்டார் வார்ஸ் படங்களும் இயக்குநர் லூகாஸின் லூகாஸ் பிலிம்ஸ் மூலம்தான் தயாரிக்கப்பட்டது. தற்போது டிஸ்னி நிறுவனத்தின் கைகளில் லூகாஸ் உள்ளது. 'டிஸ்னி தயாரிப்பதால், ஸ்டார் வார்ஸ் தொடர் படங்களின் தாக்கத்தைக் குறைவாக எண்ண வேண்டாம், படத்தின் கதை இயக்குநர் ஜார்ஜ் லூக்காஸ்தான்’ என்கிறது டிஸ்னி. இந்திய மதிப்பில் 1,400 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகிற இந்தப் படம் 3டியிலும் பரவச அனுபவம் தரக் காத்திருக்கிறது!  


ஹங்கர் கேம்ஸ் மோக்கிங் ஜாய் - 2:   டைஸ்டோபியன் எனும் கிரகத்தை ஆட்சி செய்யும் அரசன் புரட்சி செய்த கிராமங்களை இரு குழுவாக்கி சாகும்வரை சண்டையிட வைக்கும் கதை. இதுவும் தொடர் படம்தான். அதில் இது மூன்றாவது பாகம். ஹங்கர் கேம்ஸ் சீரிஸ் படங்களில் கேட்னீஸ் என்கிற கேரக்டரில் வரும் கதாநாயகி ஜெனிஃபர் லாரன்ஸ்தான் இதுவரை வெளியான மூன்று படங்களின் முதுகெலும்பே. அந்த வரிசையில் கடைசிப்படம் என்கிற அறிவிப்போடு வெளிவர இருக்கும் இந்தப் படம் 2015 நவம்பர் 20ல் ரிலீஸ் ஆகிறது!


ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே: கோடீஸ்வரர் ஒருவரைப் பேட்டி எடுக்கப் போகும் பெண்ணுக்கும் அந்தப் பணக்காரருக்கும் இடையிலான கதைதான் இது. புத்தகமாக வெளிவந்து டாப் விற்பனையில் இருக்கும் ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே படமாக வரப்போகிறது என்றவுடனே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது. நாவலைப் படித்தவர்கள் மட்டுமில்லாமல் அதன் விற்பனையைக் கேள்விப்பட்டவர்களும் எதிர்பார்க்கும் இந்தப் படம் பிப்ரவரி மாதம் வெளியாகிறது!


பீநட்ஸ்:  ஆங்கிலப் படவுல கில் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்க வைக்கும் ஒரு விஷயம், மற்ற படங்களைப் போலவே பிரமாண்ட தயாரிப்பில் அனிமேஷன் படங்களும் துணிச்சலாகப் போட்டியில் இறங்குவதுதான். அமெரிக்காவில் நவம்பர், டிசம்பர் விடுமுறைக்காலம் என்பதால், அதை கணக்கில் கொண்டு நிறையப் படங்கள் வெளியாகும்.  அந்தக் காலகட்டத்தில் வெளியாகிறது இந்த பீநட்ஸ். ஸ்னூப்பி எனும் கார்ட்டூன் கேரக்டர் காமிக் ரசிகர்களிடம் அதிகம் பரிச்சயம். 100 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் குழந்தைகளைக் குறிவைத்து மயக்கக் காத்திருக்கிறது!


ஃபென்டாஸ்டிக் ஃபோர்: விண்வெளி ஆராய்ச்சிக்குப் போகும் நால்வருக்கு அவர்களின் விண்வெளி ஓடத்தைக் கடக்கும் காந்தப் புயலால் நான்கு வித ஆற்றல்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் உலகை அவர்கள் எப்படி தீய சக்தியிடம் இருந்து காக்கின்றனர் என்பதே கதையின் ஒன்லைன். ஒரு நல்ல கதையை எத்தனை முறை படமாக எடுத்தாலும் ஓடும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஃபென்டாஸ்டிக் ஃபோர். இதற்கு முன்னர் 2005-ல் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இப்போது மீண்டும் முதல் பாகம் முற்றிலும் ரீமேக் செய்யப்பட்டு புதிய நடிகர்களுடன் தயாராகி ஆகஸ்ட் - 7 அன்று திரைக்கு வருகிறது. ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு ஹை டெசிபலில் எகிறிக் கிடக்கிறது எதிர்பார்ப்பு!  


ஸ்பெக்டேர்: ஜேம்ஸ் பாண்டின் லேட்டஸ்ட் அதிரடிச் சரவெடி.  பிரிட்டன் உளவு அமைப்பான எம்.ஐ.6ஐக் கலைத்து விடும் சூழல் மிஸ்டர் எம்முக்கு ஏற்படுகிறது. அதில் ஜேம்ஸ் பாண்ட் வெற்றி பெறுகிறாரா என்பதுதான் கதை. கடைசியில் ஜேம்ஸ் பாண்ட்தான் ஜெயிப்பார் என்று எல்லோருக்குமே தெரியும். இருந்தாலும் எப்படி ஜெயிக்கிறார் என்கிற ட்ரீட்மென்டில்தான் இருக்கிறது பாண்ட் வித்தை. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பாண்ட் கார், பாண்ட் கட்டப்போகும் வாட்ச் எல்லாமே நெட்டில் உலாவ ஆரம்பித்துவிட்டன. விதவிதமான பெண்கள், விதவித துப்பாக்கிகள் என ரஜினி போல் மவுசு குறையாத பாண்ட்தான் இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பு!


செந்தில்குமார்

ஹோம் லோன்..

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்களின்  எண்ணத்தை நனவாக்குவது வீட்டுக் கடன்தான். ஏனெனில், இன்றைக்கு வீடு விற்கும் விலையில் ஒரு தனிநபர் மொத்தப் பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்குவது என்பது முடியாத காரியம். எனவே, வீடு வாங்கும் கனவை நனவாக்குவதில் வீட்டுக் கடன் பெரும்பங்கு வகிக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி நிலையான வட்டி (ஃபிக்ஸட் ரேட்), மாறுபடும் வட்டி (ஃப்ளோட்டிங் ரேட்) என இருவிதமாக இருக்கும்.


பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்களில் நிலையான வட்டி விகிதம் என்பது 2, 3 வருடங்களுக்கு இருக்கும். அதன்பிறகு அப்போதுள்ள மாறுபடும் வட்டிக்கு மாற்றப்படும். ஆனால், தற்போது சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு நிலையான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளன. அதாவது, 10 வருடங்கள் வரை நிலையான வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகின்றன.

கடந்த பத்து வருடங்களில் வீட்டுக் கடனுக்கான வட்டியானது 7 சதவிகிதத்துக்கு இறங்கி 13 சதவிகிதத்துக்கு உயர்ந்துள்ளது. இப்போது நீண்ட காலத்தில் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க என்ன தேவை ஏற்பட்டிருக்கிறது?

தற்போது பண்டிகைக் காலம். இந்த நேரத்தில் பலரும் சொந்த வீடு வாங்க விரும்புவார்கள். இனிவரும் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. வட்டி விகிதம் குறையும்போது, வங்கிகளின் வருமானம் குறைய வாய்ப்புள்ளது.

லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீண்ட கால நிலையான வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை வைத்துக்கொள்வது நல்லது என வங்கிகள் நினைப்பதால், நீண்ட காலத்தில் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் திட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நிலையான வட்டி விகிதத்தில் கடனை முன்கூட்டியே அடைக்கும்போது நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு 2% அபராதம் இருக்கிறது. அதனால், வட்டி விகிதம் குறையும்போது, ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வாடிக்கையாளர்கள் மாறும் சதவிகிதம் குறைவாக இருக்கும் என்கிற எண்ணத்திலும்  நிலையான வட்டி விகிதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் 10 ஆண்டு களுக்கும், ஆக்ஸிஸ் பேங்க் 20 ஆண்டுகளுக்கும் நிலையான வட்டி விகிதத்தில் கடன் திட்டங்களை அறிவித்துள்ளன.

பொதுத்துறை வங்கிகள் இந்த நிலையான வட்டி விகிதத் திட்டம் எதையும் புதிதாக அறிவிக்காமல் உள்ளன.

கவனிக்க வேண்டியவை!

மத்தியில் நிலையான ஆட்சி, நவம்பர் மொத்த பணவீக்க விகிதம் பூஜ்ஜியம், கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைவது, ஜிடிபி உயர்வு போன்றவற்றால் இனிவரும் காலத்தில் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.


வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்போது, ஃபிக்ஸட் வட்டியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள், அதே  வங்கியில் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு மாற முடியாது என்பது முக்கியமான விஷயம். கடனை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் எனில், பாக்கி கடன் தொகையில் 2% அபராதம் கட்ட வேண்டிய சூழல் உருவாகும்.

இந்தத் தொகையைக் கடன் வாங்கியவர் கையிலிருந்து கொடுக்க வேண்டும். இதன் விளைவாக, வட்டி மிச்சம் ஏற்படாமல் இழப்புதான் ஏற்படும். கூடவே, வேறு வங்கிக்குக் கடனை மாற்றும் போது மீண்டும் செயல்பாட்டுக் கட்டணம், லீகல் ஒப்பீனியன் சார்ஜ், சொத்தின் சந்தை மதிப்பைக் கணக்கிடுவதற்குக் கட்டணம் என பல கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

வட்டி விகிதம் குறைந்தால், மாறுபடும் வட்டி விகிதத்தில் இஎம்ஐ தொகை குறைவதற்கோ அல்லது கடனை முன்கூட்டியே முடிக்கவோ வாய்ப்புள்ளது.

ஆனால், நிலையான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்பவர்கள்  அந்தசமயத்தில் அதிக இஎம்ஐ தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தநிலையில், ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர், தவணை சரியாகக் கட்டிவரும் நிலையில், வட்டி குறையும் போது வேறு வங்கிக்கு கடனை மாற்றப்போவதாக தன் வங்கியில் சொன்னால், அவர்கள் வட்டியைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு சில ஆயிரம் ரூபாயைக் கட்டணமாக வசூலிப்பார்கள்.  

தற்போதைய நிலையில், நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையேயான வட்டி வித்தியாசம் 0.5%  1% சத விகித அளவில்  உள்ளது. இது நிலையான வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்க வைப்பதுபோல் இருந்தாலும், விரைவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்பதால், மாறுபடும் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பதே லாபகரமாக இருக்கும்.  


ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல், கடன் காலம் முழுக்க நிலையான வட்டி விகிதம், குறுகிய காலத்தில் கடனை கட்டத் திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் ரிஸ்க்கே வேண்டாம் என்பவர் களுக்குத்தான் ஃபிக்ஸட் வட்டி விகிதம் என்பதை மனதில் கொண்டு முடிவு எடுங்கள்!

இரா.ரூபாவதி


Saturday, January 03, 2015

இயற்கைப் புரதம் இருக்கையில் செயற்கைப் புரதம் வேண்டாமே!


சமீப காலமாகக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஆரோக்கியம் காக்க உதவும் பானங்கள் என்ற பெயரில் புரதச் சத்து பானங்களைக் குடிக்கச் சொல்லி விளம்பரப்படுத்துகிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று பார்ப்போம்.

நம் ஒவ்வொருவரின் உணவிலும் புரதம் நிறைந்த உணவு கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு கிலோ உடல் எடைக்கு, ஒரு கிராம் புரதம் தேவை என்பது பொதுவான கணக்கு. ஒரு கிராம் புரதச் சத்து 4 கலோரி சக்தியைத் தருகிறது.
‘எக்ஸ்ட்ரா எனர்ஜி’க்குப் புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக், புரோட்டீன் சப்ளிமென்ட் சாப்பிடுங்கள்’ என்ற விளம்பரங்கள் வெகுவாகப் பிரபலமாகி வருகின்றன. ஆரோக்கியமான உடல்நிலை உள்ள எவருக்கும் இந்த வகைப் புரதப் பானங்கள் தேவையே இல்லை.

நீண்ட காலம் நோய்வாய்ப் பட்டவர்கள், நாள்கணக்கில் பட்டினி கிடந்து, உடல்நிலை மோசமானவர்கள், புரத உணவைக் குறைத்துச் சாப்பிட்டு மராஸ்மஸ் மற்றும் குவாஸியார்க்கர் போன்ற புரதப் பற்றாக்குறை நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், பாடி பில்டர்கள், தீவிரமான விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு வேண்டுமானால் இந்தப் பவுடர்கள் தேவைப்படலாம்.
இப்படிப் புரதம் தேவைப்படுபவர்கள் மிகவும் குறைந்த சதவீதத்தினர்தான். மற்றவர்கள் இந்த பானங்களை எடுத்துக்கொள்ளும் போது சில வேண்டாத விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

பசிக்கும்போது சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும் என்பதுதான் இயல்பான முறை. ஆனால், அப்படிப் பசிக்கிற வேளைகளில் இந்தப் புரதச் சத்து பானங்களைக் குடித்து விட்டால், வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து விடும். பசி போய்விடும். பிறகு வழக்கமாகச் சாப்பிட வேண்டிய மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியன அடங்கிய உணவைச் சாப்பிடமாட்டோம். இதனால் வைட்டமின் சத்துக்குறைவு நோய்கள் ஏற்படும். உடல் பலம் பெறுவதற்குப் பதிலாக பல வீனம் ஆகும்.

அடுத்து, இந்த வகைப் பானங்களில் கலக்கப்படும் சர்க்கரைப் பொருள், செயற்கை இனிப்புகள், செயற்கை நிறங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தவை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. சிறு வயதிலேயே உண்டாகும் நீரிழிவு நோய், ஹார்மோன் கோளாறுகள்,புற்றுநோய் போன்றவற்றுக்கு இவை வழி வகுக்கின்றன என்கிறது அந்த நிறுவனம்.

எனவே, செயற்கையாகத் தயாரிக்கப்படுகிற இம்மாதிரியான பானங்களைத் தவிர்த்துவிட்டுப் பால், தயிர், லஸ்ஸி, பருப்பு, முளை கட்டியப் பயறுகள், முட்டை, மீன் போன்ற இயற்கை உணவுகளிலிருந்து புரதச் சத்தைப் பெற முயல்வதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

டாக்டர் கு.கணேசன்

‘என்னை அறிந்தால்’, - ‘ஐ’, - ‘ஆம்பள’ டிரெய்லர்

‘என்னை அறிந்தால்’

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, விவேக், அருண் விஜய் நடித்துள்ள படம் ‘என்னை அறிந்தால்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். 

அஜித் படத்துக்கு எப்போதுமே நல்ல ஓபனிங் கிடைக்கும், அது ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு மேலும் அதிகமாகும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் 50 கோடி பட்ஜெட்டில் 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போட்டா நான் ரொம்ப கெட்டவன்’ என அஜித் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 

‘ஐ’

‘ஐ’ படத்தை உருவாக்க இரண்டு வருடங்கள், நான்கு மாதங்கள் ஆகியிருக்கிறது. சீனாவில் 2 மாதங்கள் தங்கியிருந்து 40 சதவிகித படத்தை எடுத்திருக்கிறார்கள். இதில் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள் தான் ‘ஐ’ படத்தின் கதைக்களம். விக்ரம் 40 கிலோ எடை கொண்ட ஒல்லிப்பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், அந்நியன் ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இது தவிர நான்கு கெட்அப்கள் இருக்கின்றன. இந்திய மொழிகள் 6, உலக மொழிகள் 14 என 20 மொழிகளில் ரிலீசாகும் படத்தின் பட்ஜெட் மட்டுமே 200 கோடி என்கிறார்கள். இங்கு 400 தியேட்டகளில் ரீலிஸ் செய்ய இருக்கிறார்கள். 

மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் ‘என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்’ என்கிற பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும், இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை பாடல் ஒன்றை அனிருத்தும் பாடி உள்ளனர்.

‘ஆம்பள’

சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் இரண்டாவது படம். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். 20 கோடியில் தயாராகியுள்ள படத்தை 300 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படத்துக்கு முதலில் யுவன் சங்கர்ராஜா இசையமைப்பதாக இருந்தது. பின்னர் அவரை நீக்கிவிட்டு, ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக கூறினார் சுந்தர். சி. தொடர்ந்து அந்த முடிவை மாற்றிக்கொண்டு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதிக்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார். 
 

மகான்களுக்கு நாம் பைத்தியம்!


பைத்தியம் பிடித்த ஒருவனிடம் ‘இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக்கொண்டே இரு’ என்றால் அவனால் முடியாது. நம்மால் அந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக்கொண்டிருக்க முடிகிறது. ஸ்தூல வஸ்துவை நம்மால் பிடிக்க முடிகிறது. ஆனால் ‘ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை நினைத்துக்கொண்டு இரு’ என்றால் அப்படிச் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப் படங்கள் ஓடுவதுபோல் ஓட்டமாக ஓடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எப்படிப் பைத்தியங்களை நினைக்கிறோமோ, அதுபோல் மகான்களுக்கு நாமும் பைத்தியமாகத்தான் படுவோம்.

மனம் கட்டப்படுகிற வரையில் எல்லோரும் பல வகைப்பட்ட பைத்தியங்களே. அழுக்குடனுள்ள கண்ணாடி ஆடுவதுபோல் நம்முடைய சித்தம் தோஷத்துடனும் ஐகாக்ரதை இல்லாமலும் (ஒரு முகமாகாமலும்) இருப்பதுதான் இதற்குக் காரணம். தோஷம் போனால் ஐகாக்ரதை வரும்; ஐகாக்ரதை வந்தால் உண்மை விளங்கும்.

தோஷத்தைப் எப்படிப் போக்குவது?

நமக்கு அழுக்கு என்பது தேகம். இந்தத் தேகம் எதனால் வந்தது? பாபத்தினால் வந்தது. அந்தப் பாபத்தை எதனால் செய்தோம்? கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்தோம். சுற்றியுள்ள கயிற்றை அவிழ்க்க வேண்டியிருந்தால், சுற்றின பிரகாரமே மறுபடியும் திரும்பவும் அவிழ்க்க வேண்டும். அதேமாதிரி அஸத் காரியங்களை ஸத் காரியங்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் புண்ணியம் தொலைக்க வேண்டும். கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்த பாவங்களை இந்த அவயவங்களினாலேயே தொலைக்க வேண்டும்.