Search This Blog

Sunday, February 07, 2016

மகாமக மகாத்மியம்!


பிரளயமாகிற பேரழிவு நிகழப் போவதன் துவக்கத்தை உணர்ந்து கவலையுற்ற பிரம்மனுக்கு சிவனார் வழிகாட்டினார். அதன்படி, ஜீவன்களை, படைப்பின் கலன்களை, அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் வைத்து இமயத்தின் உச்சியில் வைத்தார் பிரம்மன்.

பிரளயம் வந்தது. உலகெல்லாம் நீரில் மூழ்க, நீரின் அலைகள் இமயத்தின் உச்சியைத் தொட்டன. அப்போது, அந்த அமுதக் கும்பமானது, நீரலைகளில் அடித்து வரப்பட்டது. அது, குடந்தை பகுதியில் வந்தபோது, பிரளய நீர் வடிந்து, கும்பம் தரை தட்டி நின்றது. பிரம்மனுக்கு உதவும் பொருட்டு, சிவபெருமான் வேடுவ உருவம் தாங்கி, தனது வில்லில் நாண் ஏற்றினார். சிவனாரின் பாணம் பாந்து, கும்பத்தின் மூக்கு சிதறித் தெறித்தது. அப்போது கும்பத்தில் இருந்து அமுதம் பெருக்கெடுத்து, குளமா நிறைந்தது. அந்தக் குளமே தற்போது நாம் காணும் மகாமகக் குளம்.

குடத்தின் மூக்குச் சிதறுண்டதால், குடமூக்கு என்றும், கும்பகோணம் எனவும் வழக்கப்பட்டது. குடத்திலிருந்த அமுதம், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய ஐந்து தலங்களிலும் பாந்து அப்பகுதிகளைச்
செழுமையாக்கியது. இதன் பின்னர் பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெரு மானிடம் அனுமதி கேட்டார். அவர் அருளியபடி, பிரம்மன் பூர்வபட்ச அசுவதி நாளில் கொடியேற்றம் செய்து, பெருமானையும் தேவியையும் எட்டு நாட்கள் எழுந்தருளச் செய்தார். தொடர்ந்து, ஒன்பதாவது நாள் மேரு மலைபோலும் உயர்ந்த தேரில் பஞ்சமூர்த்திகளை எழுந்தருளச் செய்து, பத்தாவது நாளான மக நன்நாளில் பஞ்ச மூர்த்திகளை வீதி உலா அழைத்து வந்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசி மகவிழாவைத் துவக்கி வைத்தார். இவ்வாறு பிரம்மனே துவக்கி நடத்தி வைத்த விழா எனப் பெருமை பெற்றுத் திகழ்கிறது, மாசி மக விழா.

இத்தகைய புராண வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட மகாமக தீர்த்தக் குளத்துக்கு தீர்த்தச் சிறப்பு கிடைத்தது நவநதி கன்னியர்களால்!

நீர், நம் அழுக்கைக் களைவது. நம் பாவங்களைப் போக்கி நம்மைத் தூமையாக்குவது. அதனால்தான் நதிகள் புனிதமாயின. நதி நீராடல் புனிதமாயிற்று. இப்படி, மனிதர்கள் தங்கள் பாவங்களைக் கழுவ புண்ணிய நதிகளில் மூழ்கித் திளைக்க, நதிகள் எல்லாம் அவர்களைக் கழுவிப் பாவங்களைச் சுமக்கத் தொடங்கின. ஒருகட்டத்தில் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து, சரயு உள்ளிட்ட நவநதிகளும் நவ கன்னியர்களா மாறி, கயிலாயத்தை அடைந்து
சிவபெருமானைத் துதிக்க, பெருமான் அவர்களுக்கு அருளினார். அதன்படி, அவர்களை காசியிலிருந்து குடந்தை நகருக்கு அழைத்து வந்து, மாசி மக நன்னாளில் மகாமகக் குளத்தில் ஒன்றுசேர்ந்து புனித நீராடச் சோன்னார். நவ நதி கன்னியரும் குளத்தில் நீராடி, ஆதிகும்பேஸ்வரரை பூஜித்து, தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று தூமை அடைந்தனர்.

மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப் பதும், தொடுவதும், பருகுவதும், அதில் நீராடு வதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இந்த தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

செங்கோட்டை ஸ்ரீராம்

ஆராய்ச்சி!


கடலிலே மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் ஜோர்டான் நாட்டில், ‘மரணக் கடல்’ என்றழைக்கப்படும் சாக்கடலில் குதிப்பவர்கள் மூழ்கி இறக்கவே மாட்டார்கள். இது எப்படிச் சாத்தியம்? ஒரு சின்னப் பரிசோதனையை வீட்டிலேயே செய்தால் இதற்கான விடையைக் கண்டு பிடித்துவிடலாம்.

பரிசோதனைக்குத் தேவையான பொருட்கள்: முட்டை, கண்ணாடி டம்ளர், உப்பு, தண்ணீர் மற்றும் ஸ்பூன்.

செமுறை: ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். முட்டையை டம்ளரில் இருக்கும் தண்ணீரில் மெதுவாகப் போடுங்கள். நீரில் அடியில் முட்டை தங்கிவிடும்.

அதே முட்டையை மிதக்க வைக்கவும் முடியும். முயன்று பார்ப்போமா?

டம்ளரில் இருக்கும் முட்டையை எடுத்து விடுங்கள். இப்போது டம்ளரில் உள்ள தண்ணீரில் நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் உப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். முட்டையை அந்த நீரில் மெதுவாகப் போடுங்கள். இப்போது முட்டை நீரில் மிதப்பதைப் பார்க்கலாம்.

முட்டை இப்போது மட்டும் ஏன் மிதக்கிறது? காரணத்தைப் பார்ப்போமா?

சாதாரணத் தண்ணீரில் முட்டையைப் போட்டபோது முட்டையின் அடர்த்தி(density), நீரின் அடர்த்தியை விட அதிகமானதாக இருந்தது. எனவே முட்டை மூழ்கி விட்டது. அடுத்தது உப்புக் கரைசலில் போட்டபோது, முட்டையின் அடர்த்தியைவிடக் கரைசலின் அடர்த்தி அதிகமாக இருந்ததால் முட்டை மிதக்க ஆரம்பித்து விட்டது. அதாவது ஒரு திடப்பொருள் திரவத்தில் மிதக்கிறதா அல்லது மூழ்குகிறதா என்பது அந்தப்திடப் பொருள், மற்றும் திரவத்தின் அடர்த்தியைப் பொருத் திருக்கிறது! பரிசோதனை இன்னும் முடியவில்லை. இப்போது முட்டையை வெளியே எடுத்துவிட்டுக் கரைசல் இருக்கும் டம்ளரில் கரைசலுக்கு மேலே சுத்தமான தண்ணீரை ஊற்றி நிரப்புங்கள். முட்டையை மீண்டும் அந்த நீரில் மெதுவாக இடுங்கள். முட்டை மூழ்குமா? மிதக்குமா?

முட்டை நீர்ப் பரப்பின் மேலேயும் மிதக்காது. டம்ளரில் அடியிலும் இருக்காது. மாறாகக் கரைசலும் புதிதாக ஊற்றப்பட்ட நீரும் சந்திக்கும் இடத்தில் நிற்கும். இதற்கு என்ன காரணம்? அடர்த்தி மிகுந்த உப்புக் கரைசல் முட்டையை மேலே தள்ளுகிறது. அடர்த்தி குறைந்த நீரோ முட்டையைக் கீழே அழுத்துகிறது. எனவேதான் முட்டை நடுவில் நிற்கிறது!

இப்போது முட்டையை வெளியே எடுத்துவிடுங்கள். கரண்டியால் டம்ளரில் உள்ள கரைசலை நன்கு கலக்குங்கள். மீண்டும் அதில் முட்டையைப் போடுங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்!

யார் இந்த ஏஞ்ஜெலிக் கெர்பர்?


செரீனா வில்லியம்ஸை டென்னிசில் தோற்கடிக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்துள்ளார் ஏஞ்ஜெலிக் கெர்பர். யார் இந்த ஏஞ்ஜெலிக் கெர்பர்?

டென்னிஸுக்கு அப்படி ஒன்றும் புதியவர் இல்லை. ஜெர்மனியில் வளர்ந்த போலிஷ் பெண் கெர்பர், 2003-ல் புரொஃபஷனல் ஆனார். 13 ஆண்டுகளில், முடிந்த ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன், இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்குத் தகுதி, சில முறை டாப் 10-ல் இடம் என்பதைத் தவிர வேறு சாதனைகள் இல்லை.

2015-ல் முதல் ரவுண்டிலேயே தோல்வியுற்ற கெர்பர், இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே நிலைக் குத் தள்ளப்பட்டார். அவர் வார்த்தைகளில் சொன்னால், ஒரு காலை விமானத்துக்குள் வைத்தபடிதான் முதல் ரவுண்டின் மூன்றாவது செட்டை ஆடினார்", எனலாம். தோல்வியின் விளிம்பில் இருந்து பெற்ற வெற்றி அவர் தன்னம்பிக்கையைக் கூட்டியிருக்க வேண்டும். அடுத்தடுத்த வெற்றிகள் அவரை காலிறுதிக்கு இட்டுச் சென்றன.

மெல்பெர்னில் நான்காவது சுற்றை முதன் முறையாகத் தாண்டிய கெர்பரை சந்திக்க விக்டோரியா அசரெங்கா காத்திருந்தார். இவ்விருவரும் இதற்கு முன் மோதியபோதெல்லாம், கிராண்ட் ஸ்லாம்கள் சில வென்றுள்ள, அசரெங்காவின் பக்கமே வெற்றி. ஆட்டத்தில் தொடக்கத்தில் அசரெங்கா ஒழுங்காக ஆட வில்லை என்றபோதும், முதல் செட்டை கெர்பர் போராடித்தான் வெல்ல முடிந்தது. இரண்டாவது செட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில், ஐந்து செட்பாயிண்டுகளைத் தவிர்த்து, அசரெங்காவை சமன் செய்தபோதும் கெர்பர் ஜெயிப்பார் என்று நினைத்திருப்பவர்கள் குறைவுதான்.

எதிர்பாராதது நடந்தது! கெர்பர் நேர் செட்களில் 6-3, 7-5 என்று ஜெயித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இறுதி ஆட்டம் கெர்பரைவிட செரீனாவுக்கே அதிக அழுத்தத்தைக் கொடுத்திருக்க முடியும். கெர்பர் ஜெயித்தாலும் தோற்றாலும்எதிர் பார்த்ததைவிட அதிகம் சாதித்து விட்டார். 

செரீனாவின் பதற்றம் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தெரிந்தது. எதிராளியை முதல் அடியிலிருந்து எழவிடாமல்திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்று வந்திருந் தார் செரீனா. துரதிர்ஷ்டவசமாக அவருடைய கணக்குகள் தப்பின. பரபரப்பில் பல முக்கிய தருணங்களில் அவருடைய ஆட்டம் அவரைக் கைவிட்டது.

மாறாக, கெர்பரோ அதிகம் அலட்டிக் கொள்ளா மல் செரீனாவின் தவறுகளுக்குக் காத்துக் கொண்டிருந்தார்.

செரீனா 46 முறை தூண்டலின்று தவறு செய்ய, கெர்பரோ அத்தகை தவறுகளை 13 முறைதான் செய்தார். சமவாப்பு அமைந்த தருணங்களில் அவசரப் பட்டு நெட்டுக்கு அருகில் செரீனா வந்தபோதெல்லாம் அவருக்குத் தோல்வியே காத்திருந்தது. கெர்பரை சாம்பியன் பட்டம் வெல்லவைத்த அந்தக் கடைசி பாயிண்டில் கூட செரீனா நெட்டுக்கு விரைந்து பந்தை வெளியில் அடித்தார்.

26 ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற செரீனா பதற்றமாகவும், முதன் முறையாக ஃபைனலில் ஆடிய கெர்பர் நிதானத்துடனும் ஆடிய விசித்திரம் அரங்கேறியது.

1990-களில் பட்டம் வென்ற கிராஃபுக்குப் பிறகு ஒரு ஜெர்மன் வீராங்கனை கிராண்ட்ஸ்லாம் வென்று, கிராஃபின் சாதனையை தற்காலிகமாகவாவது காத்துள்ளார்.
வாடி ராசாத்தீ!

தீன சரண்யர் - அருள்வாக்குதமிழ் தேசத்துக்கு அவர் ரொம்பப் பிரியம். தமிழ்த் தெய்வம் என்றே சோல்கிறோம். தமிழில் வைதாரையும் வாழ வைப்பவர் என்கிறோம். இந்த பாஷையில் அவருக்கென்று அருமையாக ஒரு பெயர் சூட்டியிருக்கிறோம் - முருகன். முருகு என்றாலே அழகு என்றுதான் சொல்கிறார்கள். காமன் எரிந்துபோன அப்புறம் அவனுடைய கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாளே எடுத்துக்கொண்டு காமேச்வரி ஆனாள். அதனால் தான் ஸுப்ரஹ்மண்ய அவதாரம் ஏற்பட்டது. அவளுக்குப் பேரே ஸுந்தரி, த்ரிபுரஸுந்தரி. அவளுடைய பிள்ளை, தாயைப் போலப் பிள்ளை என்றபடி லாவண்ய மூர்த்தியாகத் தானே இருப்பார்?


அழகு இருந்தால் போதுமா? நமக்கு வேண்டியது அருள். ஸ்வாமி அழகு வடிவமாக இருக்கிறாரென்றால் அந்த அழகே அருள் வடிவம் தான். காருண்யம்தான் லாவண்யம். இரண்டும் வேறே வேறேயில்லை. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தீன ஜனங்களுக்கெல்லாம் புகலிடமாக இருப்பவர் - ‘தீன சரண்யர்’. எளியவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்கள், தரித்ரர்கள் எல்லாரும் ‘தீனர்கள்’ என்ற வார்த் தைக்குள் வந்து விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் துக்க நிவ்ருத்தி தரும் புகலாக அவர் இருக்கிறார்.

கட்டுப்பாட்டு அணை! - அருள்வாக்கு


யௌவனம், வாலிபம் என்பது உணர்ச்சி வேகங்கள் கட்டறுத்துக் கொண்டு புரளுகிற பருவம். தற்காலத்தில் மிதமிஞ்சிய சக்தியுடன் ஸர்வ ஜனங்களின் மேலும் ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கிற பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ் ஆகியவை அத்தனை பேரையுமே உணர்ச்சி வேகங்களில் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கையில், தன்னியற்கையாகவேறு அந்த வேகங்களின் எழுச்சிக்கு ஆளாகியிருக்கிற வாலிப வயசு மாணவர்கள் - கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் - ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பது இரண்டு பங்கு (மடங்கு) சிரமம்தான்.

ஆனாலும் தங்களுடைய எதிர்காலத்துக்கான வளர்ச்சியை முன்னிட்டு அவர்கள் இந்தச் சிரமத்தைச் சமாளித்தேதீர வேண்டும். அதிலேயேதான் தேசத்தின் தற்கால அமைதி, எதிர்கால அமைதி ஆகியவையும் அடங்கியிருக்கின்றன. வாலிப வயஸுக்காரர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும் கெட்டுப் போய், வீட்டிலும் அமைதி குலைந்து கெட்டுப் போய், நாட்டிலும் அமைதியின்மையே அடிவேர் வரை பரவிக் கெடுத்து விடும்.

கட்டறுத்துப் புரளுகிற இந்த உணர்ச்சி வெள்ளத்துக்கு அணை போட்டு வைப்பதாகத்தான் நம்முடைய முன்னோர்களான பெரியவர்கள் பாலப்பிராயத்தில் அக்ஷராப்யாஸம் ஆன நாளிலிருந்து தெய்வ பக்தியையும், குரு பக்தியையும், அடக்க குணப் பண்பையும் விதித்து, நடைமுறையாக்கிக் கொடுத்தார்கள்.

Thursday, February 04, 2016

லெனோவா வைப் K4 நோட்...

லெனோவா நோட் இந்தியாவில் ஹிட் அடித்ததை தொடர்ந்து, லெனோவா தனது அடுத்த தயாரிப்பான லெனோவா வைப் K4 நோட்டை வெளியிட்டுள்ளது. இது என்.எஃப்.சி தொழில்நுட்பத்துடன் வெளியாகி யுள்ளது. ஆப்பிள் போன்களில் உள்ளதைப் போன்ற ஃபிங்கர் சென்ஸார் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.


இந்தியாவில் சுமார் 12 லட்சம் k3 நோட் செல்போன்களை விற்று சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து லெனோவா அதன் அடுத்த வெர்ஷனை களமிறக்கியுள்ளது. இது 5.5 இன்ச் டிஸ்ப்ளே அளவு கொண்டதாகவும், பின்புற கேமரா 13 MP மற்றும் செல்ஃபி கேமரா 5 MP என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3300 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த தயாரிப்பு K3 நோட்டைவிட அதிக பேட்டரி திறன் கொண்டது. இந்த மாடல் பாதுகாப்பு திறன் அதிகம் கொண்டதாகவும், 4 அடுக்கு பாதுகாப்பு வசதி கொண்ட பேப்லெட் (Phablet) வகை என கூறப்பட்டுள்ளது. (Pin, Pattern, Password, Finger print). Octa- core பிராசஸர் கொண்ட இந்த பேப்லெட் 3 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி இன்டர்னெல் மெமரியைக் கொண்டுள்ளது. 

4ஜி, இரண்டு சிம் வசதி கொண்ட இந்த பேப்லெட்டின் விலை ரூ.11,999. இந்த கேட்ஜெட் மார்ச் மாதத்துக்குள் K3 நோட்டைவிட அதிக விற்பனையாகும் என லெனோவா எதிர்பார்க்கிறது. குறைந்த விலை கேட்ஜெட்டில் K3 நோட் ஹிட் அடித்ததை போல, இது ஹிட் அடித்தாலும் இதற்கும் இதன் முந்தைய மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால், அடுத்த மாடலுக்கு அப்டேட் செய்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கியர் S2 VR...

சாம்சங் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பமான விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் சாம்சங் கியர் S2. இதன் முந்தைய மாடலுடன் 19% எடை குறைவாக வெளியாகி இருக்கும் இந்த கேட்ஜெட், 318 கிராம் எடையுள்ளதாகவும், 201.9x116.4x92.6mm அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 96 டிகிரி அளவுக்கு பார்க்க முடியும். இதில் ஆடியோவை கன்ட்ரோல் செய்யும் பட்டன், ஃபோகஸ் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும். 


360 டிகிரி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை இதன் மூலம் 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அளவை மாற்றி அமைத்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டின் விலை ரூ.8,200 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வீடியோக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தயாரிக்கும் அக்குலஸ் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. அக்குலஸ் நிறுவனத்தின் உதவியுடன்தான் சாம்சங் இந்த தயாரிப்பை தயாரித்துள்ளது. இனி ஒரு ஃப்ரேமில் மட்டுமல்லாமல் இதனைக் கொண்டு 360 டிகிரியில் வீடியோக்களை ரசிக்க முடியும்.

ச.ஸ்ரீராம்