Search This Blog

Thursday, August 30, 2012

அருள்வாக்கு - கல்யாண குணங்கள்!


உலகத்திலுள்ள நல்லது-கெட்டது, அழகு-அவலக்ஷணம், இன்பம்-துன்பம் எல்லாமே பிரம்மத்திடமிருந்து வந்தவைதாம். ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஐக்கியமாகி பிரம்மநிலை அடையும்போது நல்லது, கெட்டது, அழகு, அவலக்ஷணம், சந்தோஷம், துக்கம் என்கிற பேதமில்லை.

ஆனால் இப்போது நாம் இருக்கிற நிலையில் இவை எல்லாம் ஒன்றாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் ஈசுவரனை எல்லா அழகுகளுக்கும், எல்லா நன்மைகளுக்கும், எல்லா இன்பங்களுக்கும் உருவமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். குணமே இல்லாத பிரம்மத்தை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அந்த நிர்குணத்திலிருந்தே சகல குணங்களும் தோன்றியிருக்கின்றன. ஒரு நிறமும் இல்லாத சூரிய வெளிச்சம் கண்ணாடிப் ‘பிரிஸத்’தில் பட்டு ஒளிச் சிதறலில் (refraction) சகல வர்ணங்களையும் வாரிக் கொட்டுகிறதல்லவா? அப்படியே நிர்குணப் பிரம்மம்மாயை என்கிற கண்ணாடியில் பட்டு ஈசுவரனாகி சகல குணங்களையும் வாரிக் கொட்டுகிறது. நிர்குணத்தை நம்மால் நினைக்க முடியாது. ஆனால் குணங்களை நினைக்க முடியும். ஆனால் கெட்ட குணங்களை நினைத்தால் அது நம்மை மேலும் கஷ்டத்தில், சம்ஸார ஸாகரத்தில் தான் இழுத்துக் கொண்டு போகும். அதனால் நல்ல குணங்களை கல்யாண குணங்களையே நினைக்க வேண்டும். வெறுமே குணத்தை நினைப்பதென்றால் முடியாது. அதனால் உயிரோடு, உருவத்தோடு, அந்த நல்ல குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒருத்தனை நினைக்க வேண்டும். எல்லாக் குணங்களும் உயிர்களும் உருவங்களும் எதனிடமிருந்து வந்ததோ, எது இதையெல்லாம் ஆட்டிப் படைத்து வைத்துக் கொண்டிருக்கிறதோ, அதையே அனந்த கல்யாண குணங்களும் கொண்ட தெய்வ ரூபமாக அன்போடு நினைக்க நினைக்க அந்தக் கல்யாண குணங்கள் நமக்கும் வரும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

Wednesday, August 29, 2012

எனது இந்தியா (காதலுக்கு எதிரியா அக்பர்?! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


அக்பரின் அந்தப்புரத்தில் எண்ணிக்கையற்ற நடனப் பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தி நாதிரா. அவள், இளவரசன் சலீம் மீது ஆசைகொண்டாள் என்பதற்காக அக்பர் அவளை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் என்றும் ஒரு கதை இருக்கிறது. லாகூரில் உள்ள அனார்கலி நினைவு மண்டபத்தில் நாதிரா என்ற பெயர் காணப்படுகிறது. ஆகவே அது, நாதிராவின் நினைவாக சலீம் எழுப்பிய மண்டபம் என்றும் கூறப்படுகிறது.

அக்பரின் மூன்றாவது பிள்ளையும் பின்னாளில் ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் ஆட்சி செய்தவருமான சலீம் குறித்து 'மொகல் இ ஆசாம்’ படத்தில் சொல்லப்படும் பல நிகழ்வுகள் கட்டுக்கதையே. அவை, வரலாற்றுக் குறிப்புகளைவைத்துப் பின்னப்பட்ட கதைகள் என்பதால், நிஜம்போலத் தோன்றுகின்றன. அக்பர் தனது ஆளுகைக்கு உட்பட்ட மன்னர்களுடன் இணக்கமான உறவைப் பேணுவதற்காக பல பெண்​களைத் திருமணம் செய்துகொண்டார். அதில் ஒருவர் ராஜபுதனத்தைச் சேர்ந்த ஜோதாபாய். அவருக்குப் பிறந்த பிள்ளைதான் சலீம். ஒரு மான்சப்​தராக தனித்து நிர்வாகம் செய்யும்படி இளவயதிலேயே சலீம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான். 12 வயதில் காபூல் பகுதியின் தளபதியாக இருந்த அவனுக்குத் தனித்த அதிகாரம் வழங்கப்பட்டது. 16 வயதில் மன்பவாவதி என்ற ஆம்பர் இளவரசியைத் திருமணம் செய்து இருக்கிறான். அந்தப் பெண் சலீமின் தாய்வழி ராஜபுதனத்தைச் சேர்ந்தவள்.

மாமன்னர் ஜஹாங்கீராக சலீம் முடிசூட்டப்பட்ட பிறகு, அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்​கள் இருந்தனர். ஜஹாங்கீர் 12 திருமணங்களைச் செய்து இருக்கிறார். அவற்றில், தனது 42-ம் வயதில் வங்காளத்தின் புர்த்வான் பகுதியின் கவர்னரான ஷேர்கானின் மனைவியான நூர்ஜஹானை வலுக்கட்​டாயமாகக் கவர்ந்து தனது அந்தப்புர அழகியாக்கி, பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆகவே, எந்த வயதில் அவர் அனார்கலியைக் காதலித்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒருவேளை, அக்பரின் அந்தப்புர பெண்களில் ஒருத்தியாக அனார்கலி இருந்திருக்கலாம் என்​கின்றனர். அப்படி என்றால், அவள் சலீமைக் காதலித்த சம்பவம் உண்மையா என்ற அடுத்த கேள்வியும் எழுகிறது. அரண்மனைப் பெண்களில் இருந்த நாதிராதான் அனார்கலி, மெஹர்னிசா என்ற பெண்தான் அனார்கலி, ஷர்புனிசா என்ற பெண்தான் அனார்கலியாக குறிப்பிடப்படுகிறாள் என்று மூன்று விதக் கருத்துக்கள் நிலவுகின்றன.

அக்பரின் விருப்பத்துக்குரிய ஆசைநாயகியான அனார்கலியை, சலீம் விரும்பி இருக்கிறான். அது பிடிக்காமல் அவளை உயிரோடு புதைக்கும்படி அக்பர் உத்தரவிட்டார். இது, அப்பாவுக்கும் மகனுக்குமான போட்டி. மற்றபடி, அக்பர் காதலுக்கு எதிரி அல்ல என்று முகமது பஷீர் என்ற உருது ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அனார்கலி பல்வேறு ரூபங்கள் எடுத்ததற்கு முக்கியக் காரணம் 'வில்லியம் பின்ஞ்ச்’சின் குறிப்புகளே. பின்வந்தவர்கள், அந்தக் குறிப்புகளை அப்படியே நகலெடுத்த காரணத்தால் அது உண்மைச் சம்பவமாக உருப்பெறத் தொடங்கியது. மேலும் நாடகமாக, திரைப்படமாக, நீள்கவிதையாக மக்கள் மனதில் அனார்கலி பதிந்துவிட்டதால் அது வரலாற்றின் பகுதியாக​வே மாறியது. ஓர் சாதாரண மனிதன் இன்று, மாமன்னர் அக்பரை நினைவுகொள்வதற்கு அனார்கலி கதை மட்டுமே காரணமாக இருக்கிறது. வரலாற்றில் புனைவு எவ்வளவு வலிமையானது என்பதற்கு இது ஒன்றே சரியான உதாரணம்.

எப்படி இறந்தார் புத்தர்?

அனார்கலி கதைக்காவது நினைவு மகால் ஒன்று சான்றாக இருக்கிறது. ஆனால், பன்றிமாமிசம் சாப்பிட்டு ஜீரணம் ஆகாமல் புத்தர் இறந்து​போனார் என்பதை நிரூபிக்க நேரடிப் பதிவான கல்வெட்டுக்​களோ, செப்பேடுகளோ எதுவும் கிடையாது. உயிர்க் கொலை​யை மறுக்கும் புத்த பிக்குகள் பன்றி மாமிசம் சாப்பி​டுவார்​களா? புத்தர், பன்றி மாமிசம் சாப்பிடக்​கூடியவரா? மாமிச உணவை உண்பது பௌத்த தர்மத்துக்கு எதிரானது இல்லையா? என்று பல கேள்விகள் எழக்கூடும்.

புத்த மதத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று ஹீனயானம். இந்தப் பிரிவினரின் கூற்றுப்படி, புத்தர் ஒரு அவதார புருஷர் அல்ல. அவர் ஓர் சாதாரண மனிதர். தனது நல்லொழுக்க நெறிகளின் மூலம் உயர்ந்த நிர்வாண நிலையை அடைந்து புத்த​ராக மாறியவர். ஆகவே, அவரது ஞானநெறியைப் பின்பற்றி வாழ்வதே இந்தப் பிரிவினரின் நோக்கம். இரண்டாவது பிரிவு மஹாயானம். இது, ஹீனயானத்​தில் இருந்து மாறுபட்டது. மஹாயானம் என்பதற்கு சிறந்த வழி அல்லது பெரிய வழி என்பது அர்த்தம். இந்தப் பிரிவினரின் கூற்றுப்படி, புத்தர் ஓர் அவதார புருஷர். புத்தரின் போதனைகளைத் தொகுத்து வாழ்வியல் அறமாக மாற்றி புதிய நியதி​களுடன் கட்டுப்பாடுகளுடன் புத்தத் துறவிகளாக வாழும் முறையை மஹாயானமே அறிமுகம் செய்து​வைத்தது.

சீனா, கொரியா, வியட்நாம், தய்வான், திபெத் முதலிய நாடுகளுக்கு மகாயானம் மிக வேகமாகப் பரவியது. மகாயான பௌத்தத்தில் இருந்தே தாந்த்ரீக பௌத்தமான வஜ்ரயான பௌத்தம் தோன்றியது. இது திபெத், பூட்டான், மங்கோலியா போன்ற இடங்களில் பரவிக் காலூன்றியது. மஹாயானமே, புத்தருக்கு சிலைகள்வைத்து வழிபடுவதை முதன்மையாக்கியது. ஹீனயானத்தைச் சேர்ந்தவர்களுக்கு சைவ உணவுக் கட்டுப்பாடு கிடையாது. மான், பன்றி, மாடு உள்ளிட்ட விலங்குகளின் மாமிசத்தைச் சாப்பிடலாம் ஆனால், தங்கள் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதற்கு அனுமதி இல்லை. ஆனால், மஹாயானப் பிரிவில் உணவுக் கட்டுப்பாடு முக்கியமானது. அவர்களுக்கு மாமிச உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது கட்டாயம். புத்தர் காலத்தில், துறவிகள் மாமிசம் சாப்பிடுவது இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கிறது. 'ரிக்வேத கால ஆரியர்கள்’ என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், ஆரியர்களில் மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை. பெரிய ரிஷிகள், முனிவர்களுக்கு விருந்து படைக்க மான் மற்றும் பசுவின் மாமிசம் மிகவும் அவசியமான ஒன்றாகும்’ என்று  குறிப்பிட்டு இருக்கிறார்.புத்தரின் கடைசி நாளைப்பற்றி பரிநிர்வாண சூத்திரத்தின் 16-வது சூத்திரம் குறிப்பிடுகிறது. அதன்படி, சுந்தா என்ற கொல்லனின் மாந்தோப்பில் புத்தர் தங்கியிருந்தார். புத்தருக்கு என்று பிரத்யேக உணவுகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. அதைத் தனக்குப் பரிமாறும்படி சுந்தாவைக் கேட்டுக்கொண்டார் புத்தர். சுந்தா பரிமாறிய உணவை ருசித்த புத்தர், உணவு கெட்டுப்போய் இருக்கிறது. அதை அப்படியே குழி தோண்டிப் புதைத்துவிடுங்கள் என்று கூறினார். உணவு முழுவதையும்  மண்ணுக்குள் புதைத்துவிட்டார் சுந்தா. சாப்பிட்ட சிறிது நேரத்துக்குள் புத்தர் வாந்தி எடுத்தார். கூடவே, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. சுந்தா தந்த உணவால்தான் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்று அவன் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக, தான் பரிநிர்வாணம் அடையும் நேரம் வந்துவிட்டது. ஆகவே, புத்தரது கடைசி உணவைத் தந்த பெருமை அவனுக்கு உண்டு என்று சொன்ன புத்தர், அடுத்த சில மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 80 என்கிறது அந்தச் சூத்திரம்.

சுந்தா தந்த உணவு பன்றி மாமிசம். அது, புத்தருக்கு ஒப்புக்கொள்ள​வில்லை. ஆகவே, அவர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள். இது தவறான தகவல். புத்தர் உண்டது பன்றி மாமிசத்தை அல்ல. அவர் உண்டது காளான் உணவு. அதுவும் நச்சுத்தன்மை உடைய காளான். அவை,  காட்டில் பறிக்கப்பட்ட காளான்கள். காளானைச் சமைத்து உண்பது புத்தத் துறவிகளின் வழக்கம். அன்று, புத்தர் சாப்பிட்ட உணவும் காளானே. அது, கெட்டுப்போய்விட்டது என்பதால்தான் வேறு யாரும் சாப்பிட்டுவிடாமல் புதைத்துவிடும்படி புத்தர் சொல்லி இருக்கிறார். சூக்ரமாத்வா என்ற வார்த்தைக்கு பன்றிகள் விரும்பிச் சாப்பிடக்கூடியது என்பதுதான் அர்த்தம். ஆனால், சில வரலாற்று ஆய்வாளர்களால் பன்றி மாமிசம் என்று அர்த்தப்படுத்தப்பட்டுவிட்டது. அது, தவறு என்கிறார்கள் பௌத்தத் துறவிகள். பன்றி மாமிசம் சாப்பிட்டு, புத்தர் இறந்து போனார் என்பதை நிரூபிக்க நேரடிப் பதிவான கல்வெட்டுக்களோ, செப்பேடுகளோ எதுவும் கிடையாது.  19-ம் நூற்றாண்டில்தான் பாலி மொழியில் எழுதப்பட்ட புத்த சூத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போதுதான், இந்தச் சர்ச்சை மேலோங்கத் தொடங்கியது. அதுவரை, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டாரா, இல்லையா என்ற கேள்வி இந்தியாவிலும் மேற்குலகிலும் முக்கியமாகக் கருதப்படவே இல்லை. இவ்வளவு ஏன்... சீனாவில் எழுதப்பட்ட எந்த புத்த நூலிலும் இப்படியான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை. உணவு ஒவ்வாமையால் புத்தர் இறந்தார் என்றுதான்  சீன பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.

புத்தம் தழைத்தோங்கி இருந்த காலத்தில், இந்தியா முழுவதும் துறவிகள் முழுமையான சைவ உணவுப் பழக்கத்தைத்தான் கைக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எவ்விதமான உணவை யாசகம் பெறலாம் என்பதற்கான குறிப்புகளில் நெய், காய்கறிகள், தேன், அரிசி, ஊறவைத்த பயறு வகைகள், பழங்கள், தயிர், கரும்புச் சாறு, தானியங்கள், பால் முதலியவையே இடம்பெற்று இருக்கின்றன. புத்தர் என்ன உணவுகளைச் சாப்பிட்டார் என்ப​தைப் பற்றி 'சுத்த விபாங்கம்’ உள்ளிட்ட பல நூல்களில் தகவல்கள் காணப்படுகின்றன. பாலில் வேகவைக்கப்பட்ட அரிசி, பார்லி கஞ்சி, வேகவைக்​கப்பட்ட சோளம், மாம்பழத் துண்டுகள் கலந்த சோறு, அவித்த காய்கறிகள், தேன் போட்டுப் பிசைந்த மாவு உருண்டைகள், வேகவைத்த மாமிசம், உலர்ந்த பழங்கள், தயிர், நெய், பழச் சாறுகள், குருணைக் கஞ்சி போன்றவையே அந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவர், பன்றி மாமிசம் சாப்பிட்​டதைப்​பற்றி வேறு எந்த நூலிலும் ஒரு தகவலும் கிடையாது.

ஆகவே, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டுஇறந்து​போனவர் என்பதை இகழ்ச்சியான ஒரு குற்றச்சாட்​டாக உருமாற்றியது அன்றைய அரசியல் காரணங்களே. மற்றபடி, அவர் சாப்பிட்டது காளானா இல்லை பன்றி மாமிசமா என்பதைத் தெளிவாக்க இன்றும் எவராலும் முடியவில்லை. புத்தர் எப்படி இறந்தார் என்பது முக்கியம் இல்லை. எப்படி வாழ்ந்தார்? என்ன போதித்தார்? அதை ஏன் நாம் கைவிட்டோம் என்பதுதான் முக்கியம். இன்று, அதைப்பற்றி எந்த விவாதமும் இந்தியாவில் நடக்கவில்லை என்பது ஆதங்கமாகவே இருக்கிறது.

எனது இந்தியா (அனார்கலியின் காதல்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ரலாற்றில் புனைவு கலந்துவிடும்போது, அதைத் தனித்துப் பிரித்து எடுக்கவே முடியாது. முற்றிலும் உண்மையாக வரலாறு எழுதப்படுவது இல்லை. அதன் இடை​வெளியைப் புனைவுகளே பூர்த்திசெய்கிறது. பல நேரங்களில் வரலாற்று உண்மைகளைவிட, புனைவையே மக்கள் அதிகம் நம்புகின்றனர். இரண்டு முக்கியமான வரலாற்றுப் புனைவுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒன்று, அக்பரின் மகன் சலீம் அடிமைப் பெண்ணான அனார்கலியைக் காதலித்தான். அது பிடிக்காத அக்பர், அனார்கலியை உயிரோடு சமாதி கட்டிவிட்டார் என்பது. மற்றொன்று, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டு ஜீரணமாகாமல் இறந்துபோனார் என்பது. இந்த இரண்டும் உண்மையா? அல்லது யாரோ கட்டிவிட்ட கதைகள் சரித்திர உண்மைகள் என்ற பெயரில் உலவுகின்றனவா?

அனார்கலி பற்றி 'மொகல் இ ஆசாம்’ என்ற ஹிந்தித் திரைப்​படம் வெளியான காலத்தில் இருந்து இன்று வரை வாதப்பிரதி​வாதங்கள் நடக்கின்றன. அனார்கலி என்ற நடனக்காரி உண்மையிலேயே இருந்தாளா? அவள் சலீமைக் காதலித்த குற்றத்துக்காக உயிரோடு புதைக்கப்பட்டாளா? என்ற கேள்விகள் இன்றும் இருக்கின்றன. இதே நிகழ்வின் மாற்று வடிவம்போலவே கம்பரின் மகன் அம்பிகாபதி, சோழ இளவரசி அமராவதியைக் காதலித்த கதையும் இருக்கிறது.வரலாற்றின் ஊடாக இப்படியான புனைவுகள் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. அதை, முழுவதும் பொய் என்று புறந்தள்ளவும் முடியாது. இதோ இருக்கின்றன சான்றுகள் என்று நிரூபிக்கவும் முடியாது. அவை, மக்களின் நம்பிக்கை உருவாக்கிய கதைகள்.அனார்கலி கதையை நிரூபிக்க, லாகூரில் அனார்கலிக்காக கட்டப்பட்ட நினைவு மஹால் இருக்கிறது.

ஷாஜகான் தனது காதலியின் நினைவாக தாஜ்மகால் கட்டப்படு​வதற்கு இதுவே முன்னோடி என்கின்றனர். இன்றும் லாகூரில் அனார்கலி பஜார் என்ற வீதி இருக்கிறது. அதை ஒட்டியே அந்த நினைவு மண்படம் இருக்கிறது.  அங்கே, சலீம் எழுதிய பிரிவுக் கவிதை ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த மஹால், நாதிரா என்ற நடன மங்கையின் நினைவாகக் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இவைதான் அனார்கலி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்கின்​றனர் ஒரு சாரார்.

ஆனால், அனார்கலியை உருகிஉருகிக் காதலித்த சலீம் தனது நினைவுக் குறிப்பில் அனார்கலியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதவில்லை? அக்பரின் வாழ்க்கைக் குறிப்புகளிலும் அனார்கலி பற்றி ஒரு தகவலும் இல்லை. இவை தவிர, லாகூரின் வரலாற்றை விவரிக்கும் பஞ்சாப் சரித்திர நூல்களில் அனார்கலி பற்றி ஒரு சொல்கூட கிடையாது. ஆகவே, இது ஒரு கட்டுக்கதை. சுவராஸ்யத்துக்காகப் புனையப்பட்ட கதையை நிஜம் என்று மெய்ப்பிக்கப் போராடுகின்றனர். வரலாற்றில் இதற்கான எந்த நேரடிச் சான்றுகளும் இல்லை என்று மறுக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.'மொகல் இ ஆசாம்’ இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு காவியம். ஆசிப் இயக்கத்தில் 1960-ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். கவித்துவமான வசனங்களைக் கொண்ட இந்தப்படம் சலீம்-அனார்கலி ஜோடியின் காதலைக் கொண்டாடுகிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள பிரித்வி ராஜ்கபூரைப் பார்த்தால், அக்பர் இப்படித்தான் இருந்திருப்பார், இப்படித்தான் பேசியிருப்பார் என்று தோன்றும். அத்தனை கச்சிதமான நடிப்பு. அதுபோலவே, சலீமாக நடித்துள்ள திலிப்குமார், அனார்கலியாக நடித்துள்ள மதுபாலா ஆகியோரின் நடிப்பும் அற்புதம்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே, வட இந்தியா எங்கும் அனார்கலியின் கதை நாடகமாகவும், கதைப் பாடலாகவும் பொதுமக்களிடம் பிரபலம் ஆகியிருந்தது. இந்தப் படத்தின் இமாலய வெற்றி, அனார்கலியை காதலின் ஒப்பற்ற நினைவுச் சின்னமாக்கியது.

அனார்கலி கதை எங்கிருந்து தொடங்கியது? வரலாற்றில் இப்படி ஓர் புனைவை யார் உருவாக்கியது? 1608-ம் ஆண்டு முதல் 1611-ம் ஆண்டு வரை இந்தியாவில் சாயப் பொருட்களை விற்பதற்காக பயணம் மேற்கொண்ட 'வில்லியம் பின்ஞ்ச்’ என்ற கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த வெள்ளைகாரர்தான் அனார்கலி கதையை முதலில் பதிவுசெய்தவர். அவர், லாகூரில் உள்ள ஒரு மலர்த் தோட்டத்துக்குள் புராதனமான சமாதியைக் கண்டதாகவும், அந்தச் சமாதி அக்பரின் ஆசை நாயகிகளில் ஒருத்தி இறந்துபோனதற்காக கட்டப்பட்டது எனவும், அவள் பெயர் அனார்கலி, அவளை இளவரசன் சலீம் காதலிப்பதை விரும்பாத அக்பர், அனார்கலியைக் கொன்றுவிட்டார் என்றும் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் வில்லியம் பின்ஞ்ச்.

இந்தக் கட்டுகதைதான் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. வில்லியம் பின்ஞ்சுக்கு முன், அனார்கலி - சலீம் காதல் குறித்து வேறு எந்த சரித்திரப் பதிவுகளும் இல்லை. பின்ஞ்சைப் போலவே, இந்தியாவுக்குள் பயணம் மேற்கொண்ட 'எட்வர்ட் டெர்ரி’ என்ற வெள்ளைக்காரர், தானும் லாகூரில் இந்தக் கதையைக் கேள்விப்பட்டதாகவும், அது உண்மை என்பதை நிரூபணம் செய்யும் நினைவு மண்டபத்தை தான் பார்த்ததாகவும் தனது குறிப்பேட்டில் எழுதிவைத்து இருக்கிறார்.

இந்த இரண்டு வெள்ளைக்காரர்களின் குறிப்பு​களையும் நம்பிய உருது வரலாற்று ஆசிரியர்கள், லாகூரில் உள்ள நாதிரா நினைவு மஹாலை இந்தக் கதையோடு இணைத்து விட்டனர். அப்படி உருவானது​தான் அனார்கலி - சலீம் காதல் கதை.

அனார்கலியின் காதலை மறக்க முடியாத சோக நாடகமாக உருமாற்றியவர் உருது நாடக ஆசிரியரான சையத் இமிதியாஸ் அலி. அவர்தான் அனார்கலியின் காதல் கதையை முதலில் நாடகமாக எழுதி வெற்றி கண்டவர். 1922-ம் ஆண்டு அவரது நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தைத் தழுவியே 'மொகல் இ ஆசாம்’ படம் தயாரிக்கப்பட்டது.

லாகூரைச் சேர்ந்த இமிதியாஸ் அலி, சிறுவயதில் தான் கேட்ட கதைகளைக்கொண்டு அனார்கலியைப் பற்றி ஒரு நாடகத்தை எழுத விரும்பினார். அதற்காக அவர் உருது வரலாற்று ஆசிரியர்களைத் தேடிச்சென்று விவரங்களைச் சேகரித்து இருக்கிறார். நேரடிச் சான்று​கள் கிடைக்காதபோதும், ஜெயின்கானின் மகளை சலீம் காதலித்து இருக்கிறான், அது அக்பருக்குப் பிடிக்கவில்லை என்ற அபுல்பாசல் எழுதிய நாட்குறிப்​பைக்​கொண்டு தனது நாடகத்தை எழுதி இருக்​கிறார். நாடகத்தின் முன்னுரையில், இது கற்பனையான நாடகம், இதில் உள்ள வரலாற்றுத் தகவல்களுக்கு எந்தச் சான்றுகளும் கிடையாது என்று இமிதியாஸ் அலியே குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், சோக ரசம் சொட்டும் அந்தக் காதல் நாடகத்​தை வெகுவாக ரசித்த மக்கள் அது வரலாற்​றில் மறைக்கப்பட்ட உண்மை என்று நம்பத் தொடங்​கினர்.
அதற்குத் துணைசெய்வதுபோல அமைந்தது இமிதியாஸ் அலி வெளியிட்ட நாடக நூலின் முகப்பில் இருந்த அனார்கலியின் படம். அனார்கலி எப்படி இருப்பாள் என்ற ஓவியத்தை முகப்புச் சித்திரமாக முதன்​முதலில் வெளியிட்டவர் இமிதியாஸ் அலி. அந்த ஓவியத்தின் பிரதிகள்தான் இன்றும் அனார்கலியைச் சித்திரிக்கும் ஓவியமாக உலவுகின்றன.

இமிதியாஸ் அலிக்காக அனார்கலி ஒவியத்தை வரைந்தவர் அவரது நண்பரும் புகழ்பெற்ற ஓவியருமான அப்துல் ரஹ்மான் சுக்தி. அனார்கலி என்பதற்கு மாதுளை மலர் என்று பொருள். ஆகவே, அப்துல் ரஹ்மான் மொகலாய நுண்ணோவிய மரபில் வரையப்படுவதுபோல கையில் மலரோடு உள்ள இளம் பெண்ணாக அனார்கலியை எழிலோடு வரைந்து இருக்கிறார். இந்தச் சித்திரம் அனார்கலி உண்மையான பெண் என்று நம்புவதற்குப் பெரிதும் துணை செய்தது.

அந்த நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதைத் திரைப்படம் ஆக்குவதற்கான முயற்சியில் பலர் இறங்கினர். 1923-ம் ஆண்டு, மும்பையில் மௌனப் படமாக அனார்கலி தயாரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பேசும் படம் உருவான காலத்தில் இமிதியாஸ் அலியே தனது நாடகத்தைத் திருத்தி எழுதி அனார்கலி என்ற பேசும் படம் தயாரிக்க உதவி செய்தார். அதன் பிறகு வங்காளத்திலும், 1953-ம் ஆண்டு நந்தலால் ஜஸ்வந்த் லால் இயக்கத்தில் ஹிந்தியிலும் அனார்கலி கதை படமாக வெளியானது. 1960-ல் ஆசிப் இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக 'மொகல் இ ஆசாம்’ வெளியாகி மிகப் பெரிய வெற்றியைக் கண்டது. அது முதல், அனார்கலியின் கதை மக்கள் மனதில் மாறாத வரலாற்றுச் சம்பவமாகப் பதிவாகிவிட்டது.

அனார்கலி கதை முழுவதும் கற்பனை இல்லை. அதனுள் வரலாற்று உண்மைகள் புதையுண்டு இருக்கின்றன. அபுல் பாசல் எழுதியுள்ள 'அக்பர் நாமா’வில் அக்பருக்கும் இளவரசர் சலீமுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்றும், மன்னரது அந்தப்புரத்துக்குள் சலீம் அனுமதியின்றி நுழைந்தார் என்றும், அவரைக் கடுமையாகத் தண்டிக்கும்படி அக்பர் உத்தரவிட்டதாகவும் குறிப்பிடப்​​பட்டு இருக்கிறது.
26,000 கோடி! திரும்ப எடுப்பது எப்படி?


ல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்ற அரசாங்கத்திடம் பணமில்லை என்று கேட்டிருக்கிறோம். ஆனால், நமது வங்கிகளில் முதிர்வு அடைந்த ஃபிக்ஸட் டெபாசிட், உபயோகத்தில் இல்லாத சேமிப்புக கணக்கு, முடிந்துபோன பிராவிடெண்ட் ஃபண்ட் கணக்கு, முதிர்வு பெற்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஆகியவற்றில் மட்டும் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? 

நம்பித்தான் ஆகவேண்டும். காரணம், இது அரசே தரும் உண்மைத் தகவல்.

இப்படி கேட்பாரற்றுக் கிடக்கும் பணம், ஏதோ ஒரு காலத்தில் நீங்கள் எடுக்க மறந்த பணமாகக்கூட இருக்கலாம். அந்த பணத்தை எப்படி திரும்ப பெறுவது? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

பிராவிடெண்ட் ஃபண்ட்..!

கேட்பாரற்றுக் கிடக்கும் பணத்தில் பெரும்பகுதி பிராவிடெண்ட் ஃபண்டில்தான் இருக்கிறது. இதில் மட்டும் 22,600 கோடி ரூபாய் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது. இதற்கு பல காரணங்கள். பலர் ஒரு நிறுவனத்தில் ஒரு சில மாதம் வேலை பார்த்துவிட்டு வேறு நிறுவனத்துக்கு மாறிவிடுகிறார்கள். இவர்கள் சம்பளத்திலிருந்து எடுக்கப்பட்ட பி.எஃப். பணத்தை திரும்பப் பெறுவதே இல்லை. காரணம், இத்தொகை சிறிதாக இருப்பதால் அதற்காக அலைய விரும்புவதில்லை.

அடுத்து, வேலை பார்த்த நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருப்பது. அதனால், பி.எஃப். பணத்தைத் திரும்ப பெறும் விண்ணப்பத்தில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் கையெழுத்திட மறுப்பது, அப்படியே கையெழுத்துப் போட்டாலும் அந்த படிவத்தை பி.எஃப். அலுவலகத்திற்கு அனுப்பாமல் இருப்பதால், நான்கைந்து ஆண்டு வேலை பார்த்தவர்கள்கூட தங்கள் பணத்தைத் திரும்ப எடுக்காமலே இருக்கின்றனர்.

இன்னும் சிலர் நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்பத் தராமலே வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள். கடனை கட்டாததால், கடனுக்கான தொகையை பி.எஃப். பணத்திலிருந்து அந்த நிறுவனம் எடுத்துக்கொள்ளும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இப்படி செய்ய நிறுவனத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே, அந்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். சிலர், பி.எஃப்.-ல் இருக்கும் பணத்துக்கு வட்டி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆக்டிவ்வாக இல்லாத பி.எஃப். கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்காது.

பி.எஃப். பணத்தை எப்படி பெறுவது?

பி.எஃப்-ல் இருக்கும் பணத்தை திரும்பப் பெற வேலை பார்த்த நிறுவனத்தின் பி.எஃப் எண், ஊழியரின் பி.எஃப். எண் ஆகியவற்றைத் தெரிந்து வைத்திருந்தாலே போதும். வேலை பார்த்த நிறுவனத்துடன் சுமூகமான உறவு வைத்திருந்தால் பணத்தைத் திரும்ப பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஒருவேளை நல்ல உறவு இல்லை எனில், அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மேலாளரிடம் கையெழுத்து வாங்கி, அதை பிராவிடெண்ட் ஃபண்ட் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தந்தால், அவர் உங்கள் விண்ணப்பத்தை ஏரியா என்குளோஸ்மென்ட் ஆபீஸருக்கு அனுப்பி, உண்மை நிலையை விசாரிக்கச் சொல்லி, அதன்படி முடிவெடுப்பார். ஒருவேளை நிறுவனம் மூடப்பட்டு இருந்தால், அதற்கான சான்றுகளோடு வங்கி மேலாளரிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

பி.எஃப்.-ல் இருக்கும் உங்கள் பணத்தைத் திரும்பப் பெற வங்கிக் கணக்கு எண் (ஜாயின்ட் அக்கவுன்ட் கூடாது), சரியான முகவரி, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை கொடுப்பது முக்கியம். இவற்றில் எது இல்லை என்றாலும் உங்களின் பி.எஃப். பணம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.

வங்கிச் சேமிப்பு கணக்கு!

வங்கிச் சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் மட்டும் 425 கோடி ரூபாய் (கடந்த மார்ச் 2012 நிலவரம்) திரும்பப் பெறாமலே கிடக்கிறது. இவற்றில் வேலை நிமித்தமாக ஊர் மாறிச் செல்பவர்கள் விட்டுச்செல்லும் தொகை,  இறந்து போனவர்களின் கணக்கு போன்றவற்றில் மட்டுமே அதிகத் தொகை இருக்கிறது. இறந்தவர்களின் வாரிசுகள் நாமினியாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் அந்த  பணத்தை சட்டரீதியாக கேட்டு பெறலாம். இதற்கு நாமினியாக இருப்பவர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றைக் கொடுத்து அந்த பணத்தைப் பெறலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட்..!
தன் பிள்ளைகள், பேரக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என ஃபிக்ஸட் டெபாசிட்டில் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பணத்தைப் போட்டு வைத்திருப்பார்கள் சிலர். இந்த விவரத்தை குடும்பத்தில் யாரிடமும் சொல்லாமலே ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் இறந்துவிடுவார்கள்.  

உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா /பாட்டி டெபாசிட் ஏதும் செய்திருந்த விவரம் தெரிந்தால் அதற்கான ஆதாரங்களை தேடி பார்க்கலாம். இல்லை எனில், அந்த வங்கியின் கிளைக்குச் சென்று விசாரிக்கலாம். டெபாசிட் இருப்பது உறுதி செய்யப்பட்டபிறகு, தகுந்த வாரிசுச் சான்றிதழை பெற்று பணத்தைப் பெறலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்தால், அவர்கள் ஒன்றுகூடி அந்த பணத்தை யாரிடம் ஒப்படைக்கலாம் என்பதை முடிவு செய்து, அதை வங்கிக்குத் தெரியப்படுத்தி, பணத்தைப் பெறலாம். இதற்கு ஃபிக்ஸட் டெபாசிட் போட்ட ரசீது இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.  
இன்ஷூரன்ஸ் பாலிசிகள்..!

இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முதிர்வுத் தொகை சுமார் 3,000 கோடி ரூபாய் கோரப்படாமலே கிடக்கிறது. பிரீமியத்தைத் தொடர்ந்து கட்ட முடியாதவர்கள் பாலிசிகளை அப்படியே விட்டுவிடுகிறார்கள். இந்த பாலிசிகளை சரண்டர் செய்தால் குறைந்த அளவு பணமே கிடைக்கும் என்பதால் பணத்தைத் திரும்ப எடுக்க அவர்கள் முயற்சிப்பதில்லை. அதன் விளைவே இந்த துறையில் முடங்கிக் கிடக்கும் 3,000 கோடி ரூபாய். மூன்று வருடம் கட்டாயம் கட்டிவிட்டால் சரண்டர் தொகையை வாங்கலாம்.    

இனிமேலாவது நாம் பரிவர்த்தனை செய்யும் எல்லா நிதி சம்பந்தமான விவரங்களையும் கணினியிலோ அல்லது டைரிகளிலோ குறித்து வைப்பதோடு மட்டுமல்லாமல் நம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிகிற மாதிரி செய்வோமே!Saturday, August 25, 2012

தூத்துக்குடி உப்பு விஷமாகுது!

இந்தியாவின் உப்பு உற்பத்தியில் முதலிடம் குஜராத். இரண்டாம் இடம் தமிழகம். காரணம், தூத்துக்குடி உப்பு உற்பத்தி; கிட்டத்தட்ட 25000 ஏக்கர்கள். அவை இன்று பெருகிவரும் அனல் மின்நிலையங்கள், தனியார் கெமிக்கல் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபட்டு விஷமாகி வருகின்றன.

பளீரென்று வெள்ளை நிறத்தில் இருக்கும் உப்பு ரத்தச் சிவப்பாக மாறுவது உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.

முன்பு உப்பு உற்பத்திக்குத் தேவையான நீரை, கடலிலிருந்து நேரடியாக உப்பு வயல்களுக்குக் கொண்டு வரப்பட்டு, உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. கால மாற்றத்தாலும் கடல் மாற்றத்தாலும், கடலில் கலக்கும் கழிவுகள், மீன் உணவு, கெமிக்கல் தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளால் கடல்நீர் மாசடைந்து போனது. இதனால் உப்பு உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. 50 அடி ஆழத்திலேயே உப்பு உற்பத்திக்குக் கிடைத்த நீர், இப்போது 200 அடி ஆழத்தில்தான் கிடைக்கிறது.

இச்சூழலில் தூத்துக்குடி வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள் அபரிமிதமான கழிவுகளை வெளியேற்றுகின்றன. தவிர அனல்மின் நிலையத்திலிருந்து உயரமான சிம்னிகள் (குழாய்கள்) வழியாக புகையோடு வெளியேறும் நச்சுத்துகள்களும் வெளியேறி, காற்றில் கலந்து உப்பளங்கள் மீது படிகின்றன. இதனால் உப்பின் தரம் குறைவதுடன், உணவுக்குப் பயன்படுத்த முடியாத நிலையை அடைகிறது.

மாவட்டத்தின் தென்கடற்கரைப் பகுதியிலிருக்கும் ஆறுமுக நேரியில் சுமார் 4000 ஏக்கர் உப்பளங்கள், தனியார் கெமிக்கல் தொழிற்சாலைக் கழிவுகளால் மட்டுமே மாசுபட்டு வருகின்றன. அத்துடன் மணவாளக்குறிச்சி மணல், ரசாயன மாற்றம் செய்யப்பட்டு யுரேனியம் பிரித்தெடுக்கப்படுவதும் தூத்துக்குடியில்தான்.

மேலும்,தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் உப்பளங்களுக்கு மத்தியிலுள்ள நிலத்தில் பாத்திகட்டிச் சேகரிக்கப்படுகின்றன.

இவையெல்லாம் சேர்ந்துதான் உப்பு வயல்கள் சிவப்பு நிறமாக, உற்பத்தியாகும் உப்பும் சிகப்பு நிறமாகி விடுகிறது. நஞ்சான இந்த உப்பு தவறுதலாக உணவுக்கான உப்புடன் கலந்தால், உண்டவர்கள் கதி அதோகதிதான்.

சேகரித்து வைக்கப்பட்டுள்ள ரசாய னக் கழிவுகள் எல்லாம் மழைக் காலங்களில் கடம்பா குளத்தின் வடிகால் ஆறுகள் மூலமாக அருகில் இருக்கும் கடலில் கலக்க, கடல்நீர் நிறம் மாறுவதுடன், கடல்வாழ் உயிரினங்கள், அரியவகை கடல் தாவரங்களும் அழிந்து விடுகின்றன.

இதேநிலை தொடர்ந்தால் ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற சொல் வழக்கு, ‘மாசுபட்டு விஷமான தூத்துக்குடி உப்பு குப்பையிலே’ என்று மாறினாலும் ஆச்சர்யமில்லை.


ஓ பக்கங்கள் - விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி. நோயாளி! - ஞாநி


நிறைய பேர் என்னை ஒரு வி.ஐ.பி என்று கருதுகிறார்கள். பத்திரிகைகளில் எழுதுவதால், டி.வி.களில் தோன்றுவதால், பரவலாகப் பலருக்கு என் முகம் பரிச்சயமாகியிருப்பதால், நான் ஒரு வி.ஐ.பி. என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

வி.ஐ.பி. என்ற ஜாதியே இந்தியாவுக்கே உரியது. மேலை சமூகத்தில் அதை ஏறத்தாழ ஒழித்துவிட்டார்கள். எல்லோரும் சமம்.

வி.ஐ.பி. என்றால் என்ன அர்த்தம்? எல்லா பொது இடங்களிலும் முன்னுரிமை, சலுகைகளுக்கு உரியவர் என்றே இங்கே அர்த்தம். ஏர்-போர்ட்டில் ஒருமுறை லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது பார்த்தேன். இன்னும் சிலர் இருந்தார்கள். ஒரு சினிமாப் பாட்டு சக்கரவர்த்தி வந்ததும் எல்லோரும் ஒதுங்கி அவர் முதலில் லிஃப்டுக்குச் செல்ல வழிவிட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட முன்னுரிமைகளைப் பெற குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடற்குறையுடையோர் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என்பதே என் கருத்து.

நான் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்கிறேன். பரிசோதனை நிலையங்களுக்குப் போகிறேன். டோக்கன் வரிசைப்படி என் முறைக்காகக் காத்திருக்கிறேன். நான் ஐந்நூறு ரூபாய் பீஸ் கொடுக்கும் டாக்டரைச் சந்திக்க இரண்டு மணி நேரமெல்லாம் வரிசையில் காத்திருந்திருக்கிறேன். காத்திருக்கும் மற்றவர்களும் அதே பீஸ்தான் கொடுக்கிறார்கள். அவர்களும் காத்திருக்கிறார்கள்.

க்யூவில் நிற்காமல் முன்னே செல்லும் உரிமையுடையவர் வி.ஐ.பி. என்பது நம் சமூகத்தில் நிலவும் கிறுக்குத்தனம். இதை வோட்டுச் சாவடியிலிருந்து ஏர்-போர்ட் வரை எங்கேயும் பார்க்கலாம். தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கக் கூட முடியாத நிலை ஒரு வி.ஐ.பி.க்கு என்ன தான் இருக்க முடியும்? மலம் கழிக்கும் அவசரத்தைத் தவிர வேறெதற்கும் இந்தச் சலுகையைத் தரமுடியாது.

வி.ஐ.பி.யின் நேரம் பொன்னானது. அந்த நேரத்தில் அவர் சமூக மேம்பாட்டுக்காக உழைப்பது வீணாகிவிடும் என்றெல்லாம் கற்பனையாகச் சொல்லப்படுகின்றன. இந்த வி.ஐ.பி. கலாசாரத்தை எல்லா இடங்களிலும் நிச்சயம் ஒழித்துக் கட்டவேண்டும்.

குறிப்பாக மருத்துவத் துறையில் ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது. வி.ஐ.பி.களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல. சுமார் 29 வருடங்களுக்கு முன்னால் என் அம்மா ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அதிகாலையில் இறந்துபோனார். அந்த வார்டுக்குப் பக்கத்து வார்டில் ஒரு முன்னாள் அமைச்சர் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். என் அம்மா இறந்த உடனே மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நிமிடமே பிணத்தை எடுத்துக் கொண்டு ஓடும்படி என்னைத் துரத்தினார்கள். காரணம் செத்துக் கொண்டிருக்கும் வி.ஐ.பி.யைப் பார்க்க சாகப் போகும் சில வி.ஐ.பி.கள் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிடுவார்களாம். அப்போது வார்டில் பிணம் இருக்கக்கூடாதாம். மாடியிலிருந்து அம்மாவின் உடலைக் கீழே எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டேன். வரவில்லை. அம்மாவின் உடலை என் இரு கைகளில் ஏந்திக் கொண்டு படிகளில் இறங்கி வெளியே வந்தேன். நான் வெளியேறவும் வி.ஐ.பி.களின் கார்கள் நுழையவும் சரியாக இருந்தது!

சிகிச்சையில் ஒரு வி.ஐ.பி.க்கு முன்னுரிமை உண்டா என்ற கேள்வி இந்த வாரம் மனத்தில் அலைமோதியது. காரணம் மத்திய அமைச்சரும் முன்னாள் மராட்டிய முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்தான்.

மரணப்படுக்கையில் இருந்த விலாஸ்ராவுக்கு கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் முழுக்கக் கெட்டுவிட்டன. அவற்றை உறுப்பு தானமாக வாங்கி அவருக்குப் பொருத்தி அவரைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் குடும்பத்தினர் முயற்சி செய்தார்கள்.

உறுப்பு தானத்தில்தான் வி.ஐ.பி. பிரச்னை நுழைகிறது. இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்கள் மிகக் குறைவு. மூளைச் சாவு ஏற்பட்டதும் உறவினர் சம்மதத்துடன் ஒருவரின் உறுப்புகளை எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமே நம் நாட்டில் தாமதமாகத்தான் வந்தது.

எப்போதுமே தேவைப்படும் உறுப்புகளின் எண்ணிக்கையை விட, கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எனவே உறுப்பு பொருத்தப்பட வேண்டிக் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உறுப்பு கிடைக்கக் கிடைக்க வரிசைப்படி அளிக்கப்படுகிறது. இதுதான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் பின்பற்றும் நடைமுறை.

விலாஸ்ராவ் இந்தப் பட்டியலில் முதலில் இருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு முன்பே பலர் காத்திருந்தார்கள். ஆனால் விதிகளை வளைத்து விலாஸ்ராவுக்கு ஒரு கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பெற்றுவிடமுடியுமா என்று கொஞ்சம் முயற்சிகள் நடந்திருக்கின்றன.

காத்திருப்போரில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. திடீரென உடல்நலம் குலைந்து உடனடியாக மாற்று உறுப்பு பொருத்தப்படாவிட்டால் இறந்துவிடும் ஆபத்தான நிலையில் இருப்பவரை அக்யூட் நோயாளி என்று சொல்வார்கள். இவர்களிலும் மிக அவசர நிலையில் இருக்கும் சிலரே முன்னுரிமைக்கு உரியவர்கள். நீண்ட காலமாக உடலின் ஒவ்வொரு பாகமாகப் பழுதடைந்து மெல்ல மெல்லச் சீர்குலைந்து வந்த நிலையில் இருப்போர் க்ரானிக் எனப்படுவர். இவர்கள் முன்னுரிமைக்கு உரியவர்கள் அல்ல.

விலாஸ்ராவ் தேஷ்முக்கின் கல்லீரல் பழுதாகி, பல காலம் ஆயிற்று. அதன்பின் அதில் புற்றுநோயும் ஏற்பட்டது. அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. அவர் க்ரானிக் நோயாளி நிலையில் இருந்தவர்.

வி.ஐ.பி. என்பதற்காக அவருக்கு முன்னுரிமை தர மாற்று உறுப்புகள் தொடர்பான சட்டங்களில் ஒரு வழியும் கிடையாது. அவ்வளவு ஏன், இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் வி.ஐ.பி. என்ற வரையறையோ, யாருக்கும் சலுகையோ கிடையாது.

எனவே விலாஸ்ராவை க்ரானிக் கேட்டகரியில் இல்லாமல், ஹைப்பர் அல்ட்ரா க்ரிட்டிகல் கேஸ் என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அறிவித்தது. அந்த முன்னுரிமை பெற்றும் கூட, இன்னமும் அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக இல்லாத நிலையிலேயே அவர் காலமாகிவிட்டார்.

மும்பையில் கல்லீரல் பெற இயலாத நிலையில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்து இங்கே விதியை வளைக்க ஏதேனும் செய்யமுடியுமா என்ற முயற்சி நடந்திருக்கிறது. இங்கேயும் சிரமம் என்ற போது மறுபடியும் மும்பையில் முயற்சித்தார்கள். உறுப்பு தான விதிகளின்படி வி.ஐ.பி. என்று யாரும் இல்லை. எனவே அவரை வி.ஐ.பி. யாகக் கருதி முன்னுரிமை தந்து உறுப்பை ஒதுக்கீடு செய்யமுடியாது என்று மும்பையில் சொல்லிவிட்டார்கள். ஆனால் க்ரானிக் நிலையில் இருந்த அவர் உறுப்பு கிடைக்கும் முன்பே காலமாகி விட்டார்.

அமெரிக்கா, மும்பை, சென்னை, ஏர் ஆம்புலன்ஸ் என்றெல்லாம் அலைந்து விலாஸ்ராவுக்கு உறுப்பு தானம் பெற்று பொருத்த முயற்சித்தவர்கள், அவர் இறந்த பின் அவரது கண்களையோ உடலையோ கூட தானமாகத் தரவில்லை. இதுதான் நம் சமூகத்தின் வி.ஐ.பி. மனநிலை. எனக்கு எல்லோரும் தரவேண்டும். நான் யாருக்கும் எதையும் தரமாட்டேன்.

மருத்துவச் சிகிச்சை பெறுவதில் வி.ஐ.பி.க்கு முன்னுரிமை என்று எதுவும் இருக்க முடியாது. எல்லா உயிரும் சமமானவை என்பதே சரியான கோட்பாடு. ஆனால் நாம் உயிர்களை வி.ஐ.பி. உயிர், சாதா உயிர் என்று பிரித்தே நடத்துகிறோம்.

விலாஸ்ராவ் தொடர்பாக வெளியான இணையச் செய்திகளில் கமெண்ட் அடித்த பல வாசகர்கள், ‘விலாஸ்ராவ் ஆதர்ஷ் ஊழலில் தொடர்புள்ள நபர். அவர் இருந்தால் என்ன, இறந்தால் என்ன’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இதுவும் தவறான அணுகுமுறைதான். ஊழலில் தொடர்புடையவர் செத்து ஒழியட்டும் என்று விட முடியாது. அவரை நீதிக்கு முன் நிறுத்திக் குற்றத்தை நிரூபித்து, தண்டிப்பதுதான் சரியான வழி. எந்த மனித உயிரும் காப்பாற்றப்படவேண்டியதுதான் - விலாஸ்ராவ் உட்பட. ஆனால் விலாஸ்ராவ் வி.ஐ.பி. என்பதால் முதலில் காப்பாற்றப் படவேண்டும் என்பதே தவறான அணுகுமுறை.

உண்மையில் எல்லா உயிர்களையும் சமமாக மதித்துக் கவனிப்பவர்கள் மருத்துவ மனையில் இருக்கும் நர்சுகள்தான். எங்கிருந்துதான் இப்படி அற்புதமான நர்சுகள் வருடந்தோறும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு முறை மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும்போதும் வியக்கிறேன். அவர்கள் தான் நம் நாட்டு மருத்துவத்துறையின் மிகப்பெரிய சொத்து.

எனக்கு மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு அவற்றிலிருந்து மெல்ல மெல்ல முழுமையாகக் குணமடைய ஆறு வாரங்கள் தேவைப்படும் நிலையில், சென்ற இரண்டு வாரங்கள் ஓ பக்கங்களை எழுத முடியாமல் போய்விட்டது. எனக்கு முகம் தெரியாத எண்ணற்ற வாசகர்கள் என்னை நலம் பெற வாழ்த்தியதுதான் ஒருவன் எழுத்தாளனாக இருப்பதில் கிடைக்கும் மிகப்பெரிய வருவாய். அறுவை அனுபவங்களைப் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

இந்த வாரக் கேள்வி

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்து வேலை பார்த்த ஆயிரக்கணக்கானோர் பதற்றமான மனநிலையில் ஊர் திரும்பியது வருத்தமான விஷயம்தான். ஆனால் எனக்கு ஒரு அடிப்படைச் சந்தேகம். ஏன் இத்தனை ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்து பிழைக்க வேண்டியிருக்கிறது? அந்த மாநிலங்களில் விவசாயம், தொழில் இவற்றின் நிலை என்ன? ஏன் அங்கே வேலை வாய்ப்புகள் இல்லை? அதற்கு யார் பொறுப்பு?

இந்த வார பதில்

தியேட்டர்களில் கூட்டம் குறைந்ததற்குக் காரணம் என்ன என்று சினிமா பிரமுகர்கள் ஒரு கூட்டத்தில் கேட்டிருக்கிறார்கள்:

இதோ பதில்: காரணம் 1: குப்பையாக படம் எடுக்கிறீர்கள். 2. பெண்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்பாதபடி படம் எடுக்கிறீர்கள். 3. பெரும்பாலான தமிழ் டி.வி. சேனல்கள் தாங்களே சினிமா கொட்டகை மாதிரி இருக்கின்றன. 4. கொட்டகைக்கு வந்து காஃபி சாப்பிட்டாலே திவாலாக்கிவிடுகிறீர்கள். அண்மையில் ஒரு சாதாரணக் கொட்டகையில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ. 30 கொடுத்து படம் பார்த்தேன். கேன்டீனில் மோசமான காஃபி குடித்தேன். விலை: பத்து ரூபாய்.

இந்த வாரப் பூச்செண்டு!

கட்சி சார்பு இல்லாமல் மக்கள் சார்பாகச் செய்திகளை வழங்கி வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து இரண்டாம் ஆண்டில் நுழையும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு!

வெளிவராத தகவல்-பளபளக்கும் கோடிகள்!


தமிழ்நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகள் கிரானைட் தொழிலின் மீது கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழ் நாட்டில் மட்டும் கோடானுகோடிகள் கிரானைட்டில் புரள்வதாக, செய்திகள் படபடக்கின்றன. ஆனால் உண்மை நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்"- என்கிறார் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி. கடந்த 30 வருடங்களுக்கு மேல் கிரானைட் தொழிலில் இருக்கும் வீரமணி, மத்திய அரசின் எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுன்ஸிலின் கனிமவள ஏற்றுமதி பிரிவின் தலைவர். இது தொடர்பான உலக அமைப்புகளிலும் பங்கு வகிக்கிறார்.

மத்திய அரசின் சட்டத்தின் கீழ் இந்தத் தொழில் நடக்கிறது. மத்திய அரசின் சட்டத்தையொட்டி மாநில அரசுகள் தங்கள் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப பல விதிகளை வகுத்துக் கொள்ளலாம். இதில் சிறு கனிமங்கள் என்ற பிரிவின் கீழ் ‘கிரானைட்’ வருகிறது. கனிம வகைகள் பல. அணுசக்திக்குத் தேவையான கனிமங்கள், இரும்புத் தாது, பாஸ்பேட், நிலக்கரி, அரிதான கற்கள்... என்று பற்பல தேவைகளுக்கு கனிமங்கள் இருக்கின்றன.

கட்டடத்துக்கு வெளிப்புறச் சுவர்களில் கிரானைட் பதிப்பது, தரையில் பதிப்பது, சமையலறை, வாஷ்பேஸின் போன்ற இடங்களில் பதிப்பது என்று கிரானைட் கற்கள் பயன்பாடு (கறுப்புக் கற்கள்) பல வகைகள். அடுத்து நினைவு மண்டபங்கள், சமாதிகள் கட்ட பயன்படுத்தும் உயர்வகையான கறுப்புக் கற்கள். மற்றொரு வகை பொறியியல், மற்றும் ஆய்வுக் கூடங்களில் மேஜைகளாகப் பயன்படுத்தக் கூடியவை. நம் ஊரில் இருப்பது போல் அல்லாமல் வெளிநாடுகளில் வேகத் தடைகளை, கருங்கற்களைக் கொண்டு அரை மி.மீ. நீளத்தில் அமைப்பார்கள். நடை மேடைகளிலும் பயன்படுத்துவார்கள். சிலைகள், படங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டவென்று கிரானைட்டின் பயன்பாடுகள் அதிகம். வெட்டியெடுத்த கற்களை அப்படியே பயன்படுத்த முடியாது. பயன்பாட்டுக்கு ஏற்ப அதை மேம்படுத்திப் பளிச்சிட வைக்க வேண்டும். இதற்கான மிகச் சிறந்த தொழில்நுட்பம் இந்தியாவில் உண்டு. 12 வகையாக ஃபினிஷிங் செய்கிறோம். பத்தாயிரம் டன் எடையுடைய கல்லைக் கூட வைரக் கம்பியால் தேவைக்கேற்ப ஸ்லைஸ் போடுகிறோம்.

கறுப்புக் கற்களைத் தவிர சாம்பல் நிறக் கற்களும் உண்டு. ஆந்திராவில் குப்பம் என்ற இடத்தில் மிகச் சிறந்த கறுப்புக் கற்கள் கிடைக்கின்றன. பொதுவாகவே எரிமலைகள் வெடித்துக் கிளம்பிய பின்னர் இறுகிப் போய் பூமியின் மத்தியிலிருந்து வெளிவந்தவைதான் இந்தக் கற்கள். இந்த மாற்றம் கோடிக் கணக்கான ஆண்டுகளில் நிகழ்வது. கலர் கிரானைட் என்று நூறுவிதமான உயர்ரகக் கற்கள் இருக்கின்றன. இளமையான கல் என்றால் 60 கோடி ஆண்டுகள். முதிர்ந்த கல் என்றால் நூறு கோடி ஆண்டுகள்.

1978க்குப் பிறகு கிரானைட் தொடர்பான கொள்கை தமிழ்நாட்டில் திருத்தப்பட்டு ‘தமிழ்நாடு கனிமவள நிறுவனம்’ ஏற்படுத்தப்பட்டது. பல மாநிலங்களில் அரசு கனிம நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல காலமாய் கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருந்த உற்பத்தியாளர்கள் 1978க்கு வேறு பல மாநிலங்களுக்கு தொழில் செய்யக் கிளம்பி விட்டனர். ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில், கிரானைட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடக்கிறது. கிரானைட் தொழில் தொடர்பான மிகச் சிறந்த கொள்கை ஆந்திராவில் அமல்படுத்தப்படுகிறது. ஆந்திராவில் கரீம் நகர் மற்றும் ஓங்கோல் பகுதிகளில் மிகச்சிறந்த, தரமான கிரானைட் வெட்டியெடுக்கப்படுகின்றன. வெண்புள்ளிகள், வெடிப்புகள் இருக்கும் கற்கள் ஏற்றுமதிக்கு ஏற்றவையல்ல. எண்பது சதவிகிதம் சேதாரம் இருக்கும். இந்திய அளவில் ஐயாயிரம் கிரானைட் நிறுவனங்கள் இருக்கின்றன. நான்காயிரம் குவாரிகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த கிரானைட் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 22 முதல் 25 சதவிகிதம்தான்.

உலகில் எண்பது நாடுகள் கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. உலகச் சந்தையில் நமக்கு பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள்தான் கடும் போட்டி. நமது உற்பத்தியில் பத்து சதவிகிதம்தான் நமது தேவைக்கு. தொண்ணூறு சதவிகிதம் ஏற்றுமதிதான். 2000-2001ம் ஆண்டில் நாம் 1954 கோடிக்கு ஏற்றுமதி செய்தோம். 2011 - 12ம் ஆண்டில் அது 6000 கோடி. இந்திய அளவில் இந்தப் பத்தாண்டுகளில் 43000 கோடிக்கு ஏற்றுமதி செய்கிறோம். தமிழ்நாட்டில் இந்தக் காலகட்டத்தில் 11500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது. இங்கு 120 நிறுவனங்கள் (டாமின் உட்பட) ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இது மத்திய அரசின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள். சராசரியாக பார்த்தால் ஒரு வருடத்தில் சுமார் 100 கோடி அளவுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி நடந்திருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் (அரசு நிறுவனம் உட்பட) ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஏதேனும் ஒரு நிறுவனம் மட்டும் லட்சம் கோடி, ஆயிரக்கணக்கான கோடிகள் என்று எப்படி ஏற்றுமதி செய்திருக்க முடியும்? மற்றொரு ரகசியம்! மிக உயர்ந்த ரகக் கற்கள் கிடைப்பதாகச் சொல்லும் தென் தமிழகக் கற்களை அமெரிக்க இறக்குமதியாளர்கள் விரும்புவதில்லை. நான் ஏற்றுமதி செய்த கற்கள் அமெரிக்காவில் இரண்டு லட்சம் கட்டடங்களிலும் ஜப்பானில் 65 கட்டடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு சதவிகிதம் கூட தமிழ்நாட்டுக் கற்கள் கிடையாது.

நமது நாட்டு மலைகளை கிரானைட்டுக்காக வெட்டியெடுப்பதை விட, வீடுகட்ட மற்றும் சாலை போட பயன்படுத் தப்படும் கருங்கல் ஜல்லிக் கற்களுக்காக வெட்டியெடுப்பது அதிகம். ஒரு பக்கம் இந்தியாவின் கிரானைட் ஏற்றுமதி வணிகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று குளறுபடிகளும்; தனி மனிதர் செயல்பாடுகளும் தொழிலின் முன்னேற்றத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுவது வருத்தமான விஷயம்தான்.


ப்ரியன்

 

லஷ்மண் ஓய்வு! என்ன காரணம்?


வங்கிபுரப்பு வெங்கட சாய் லஷ்மண் என்கிற பெயர் கொண்ட வி.வி.எஸ். லஷ்மணை, வெரி வெரி ஸ்பெஷல் லஷ்மண் என்று மாற்றினார்கள் ஆஸ்திரேலியர்கள். மற்ற யாரை விடவும் ஆஸ்திரேலியர்கள் அதிகம் பயந்தது லஷ்மணைக் கண்டு தான். சமகால இந்திய பேட்ஸ்மேன்களில், இரண்டாவது இன்னிங்ஸ்கில் அதிக ஆவரேஜ் கொண்டவர். எத்தனை விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கடைசியில் வருகிற லஷ்மண், அனுமன் போல காப்பாற்றுவார். ஆனால், 134 டெஸ்டுகளில் ஆடியிருந்தாலும் லஷ்மணின் தலைக்கு மேலே எப்போதும் கத்தி தொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஒரு முறை மோசமாக ஆடினாலும் லஷ்மண்மீது உடனே அம்புகள் பாயும். அனைத்துக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இளம் வயதில் சச்சின், எப்படி மும்பை வட்டாரத்தில் புகழ்பெற்று இருந்தாரோ அதுபோல டீன்-ஏஜ் வயதில் லஷ்மண் என்றால் ஹைதராபாத்தில் அப்படியொரு பேர். ரஞ்சி மேட்சுகளிலும், இந்தியா ஏ மேட்சுகளிலும் ரன் மழை பொழிந்ததால் 1996ல், 22வது வயதில், இந்திய அணிக்குத் தேர்வானார் லஷ்மண். ஆனால், சச்சின், திராவிட் போல கௌரவமான தொடக்கம் அமையவில்லை. இதனால் பல சந்தர்ப்பங்களில் தொடக்க ஆட்டக்காரராகக்கூட ஆட நேர்ந்தது. 2001ல், கொல்கத்தாவில் நிகழ்த்திய அற்புதம், லஷ்மணுக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கே ஒரு பெரிய திருப்புமுனையாக இருந்தது.

ஆஸ்திரேலிய அணி, அப்போது கிரிக்கெட்டின் தாதா. தொடர்ந்து 16 டெஸ்டுகளில் ஜெயித்து உலக சாதனை நிகழ்த்தியிருந்தது.

ஆனால், அத்தனை பெருமைகளையும் துவம்சம் செய்தது லஷ்மணின் ஆட்டம். அவர் அடித்த 281 ரன்கள், இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய மலர்ச்சியைக் கொடுத்தது. மெக்ராத், வார்னே போன்ற வீரர்கள் கொண்ட ஆஸி அணியை வேரோடு சாய்த்தார் லஷ்மண். புதிதாகப் பொறுப்பேற்ற கேப்டன் கங்குலியும் பயிற்சியாளர் ஜான் ரைட்டும் இந்திய கிரிக்கெட்டை மீட்டுக் கொண்டுவரமாட்டார்களா என்று ஏங்கிய தருணம் அது. கொல்கத்தா டெஸ்ட் வெற்றி இந்திய கிரிக்கெட்டையே திருப்பிப் போட்டது. 2003 உலகக்கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம்வரை சென்றது, 2011 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்தைப் பிடித்தது... என்று எல்லாவற்றுக்கும் தொடக்கப் புள்ளி கொல்கத்தா டெஸ்ட் வெற்றிதான். லஷ்மணின் 281க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கே மாறிப்போனது. ஃபாலோ ஆன் செய்ய எல்லா அணிகளும் அதிதீவிரமாக யோசிக்க ஆரம்பித்தன.

சமீபத்திய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டூர்களில் லஷ்மண் சரியாக ஆடவில்லை. டிராவிட் இங்கிலாந்தில் மூன்று செஞ்சுரிகள் அடித்தார்; அவ்வளவுதான். இந்நிலையில் டிராவிட் ரிடையர் ஆனார். இதனாலேயே லஷ்மண் ரிடையர் ஆவதும் உறுதி என்றானது. ஆனால் நியூசிலாந்து தொடரில் லஷ்மண் இடம்பிடித்தார். இந்த நிலையில், முதல் டெஸ்ட் ஆரம்பிக்க நான்கு நாளே இருக்கும் சமயத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் லஷ்மண். லஷ்மணுக்கு பி.சி.சி.ஐ. தரப்பிலிருந்து நெருக்கடிகள் தரப்பட்டதாகச் சொல்லப்பட்டதை பி.சி.சி.ஐ. மறுத்தாலும் திரைமறைவில் ஏதோ நடந்திருக்கிறது.

134 டெஸ்டுகள் ஆடியும் லஷ்மணுக்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லை. பெரும்பாலும் ஆறாவது பேட்ஸ்மேனாகக் களம் இறங்கியதால் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. 2003 உலகக்கோப்பையில் லஷ்மண் இடம் பெறவில்லை. இது தவறுதான் என்று இப்போது ஒப்புக்கொள்ளும் கங்குலி, அப்போது லஷ்மணுக்கு ஆதரவாக இருக்கவில்லை. இத்தனை வருடங்கள் ஆடியும் ஒருபோதும் கேப்டன் பதவிக்கு லஷ்மணின் பெயர் பரிந்துரைக்கப்பட வில்லை. ஒவ்வொரு டெஸ்டிலும் தம்மை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார் லஷ்மண். 2000லிருந்து ஆரம்பித்த ஒரு சகாப்தத்தில் லஷ்மணுக்கும் பங்கிருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் லஷ்மணின் 281க்கு ஓர் இடமுண்டு, டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டம் என்கிற மகுடத்துடன். எந்தக் காலத்திலும் அவருடைய ஆட்டத்துக்கு ரசிகர்கள் இருப்பார்கள்.

Saturday, August 18, 2012

எனது இந்தியா (அபினிப் போர்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ப்படிக் கப்பலில் கொண்டுசெல்லும் அபினிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய கூலிப் படைகள் உடன் சென்று இருக்கின்றனர். இந்தக் கள்ள வணிகத்தில் சீனாவின் உயர் அலுவலர்களாக இருந்த மாண்ட்ரின்களுக்கும் தொடர்பு உண்டு. 1780-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 15 டன் அபினி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுவே, 1813-ம் ஆண்டில் 75 டன்னாக உயர்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குள் 93 கப்பல்கள் அபினி ஏற்றிச் சென்றுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன் சபையின் 1782 ஜுலை 7-ம் தேதியிட்ட பதிவில், சீன அரசு அலுவலர்களுக்குக் கையூட்டு கொடுத்துத்தான் அபினி விற்பனை நடைபெற்றது என்பதற்காக சான்று இருக்கிறது. அபினி விற்பனையில் 1830-ம் ஆண்டு மட்டும் 34 மில்லியன் டாலர்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்து இருக்கிறது. ஆண்டுக்கு 900 டன் அபினி சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.

அபினி கடத்தலுக்கு உதவி செய்ய துப்பாக்கி ஏந்திய கூலிப் படைகள் பல்வேறு குழுக்களாக உருவாக்கப்பட்டன. இதுதான், ஆசிய நாடுகளில் இன்று புகழ்பெற்றுள்ள மாஃபியா என்ற தொழில்முறைக் கடத்தல்காரர்கள் உருவானதின் முதல் புள்ளி. அப்போது, சீனாவில் குவிங் வம்சப் பேரரசு ஆட்சி செய்துவந்தது. பிரிட்டிஷ்காரர்களின் அபினி வணிகத்தால் சீனாவுக்குள் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுகி றது என்று உணர்ந்த குவிங் பேரரசு, அபினி இறக்குமதிக்குத் தடை விதித்தது. ஆனாலும், பிரிட்டிஷ் கம்பெனியின் அபினி வணிகத்தை அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1810-ம் ஆண்டில் சீனப் பேரரசு கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், 'அபினி ஓர் மோசமான போதைப் பொருள். அதை ஐரோப்பியப் பேய்கள் நம் நாட்டில் விற்பனை செய்கின்றனர். அபினி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். அபினி நுழைகிற குவான்டுங் மற்றும் பூக்கீன் பகுதிகளைப் பொறுத்தவரை, அங்குள்ள, சுங்க அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முறையான தேடுதல் வேட்டை நடத்தி அபினியை முற்றிலும் தடுக்குமாறு உத்தரவு இடப்படுகிறது’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவால், பிரிட்டிஷ் கம்பெனியின் அபினி வணிகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், சீன அரசாங்கத்தின் தலைமை பெய்ஜிங்கில் இருந்தது. கடத்தல் நடக்கும் துறைமுகங்களை அவர்களால் நேரடியாகக் கண்காணிக்க முடியவில்லை. மேலும், பணத்தாசை காரணமாக சீன அதிகாரிகள் பலரும் கடத்தலுக்கு துணை நின்றனர். அப்போது, குவண்டோன் பகுதியின் சிறப்பு ஆளுனராக  லின் சே சூ என்பவர் பொறுப்பு ஏற்றார். இவர், சீனாவுக்குள் சட்ட விரோதமாக நடந்த போதைப் பொருள் இறக்குமதியை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்தார். அத்துடன், சீனாவுக்குள் பிரிட்டிஷ் கம்பெனி அபினி இறக்குமதி செய்வதை உடனே நிறுத்தும்படி விக்டோரியா மகாராணிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதம் மகாராணி கைக்கு சென்று சேரவே இல்லை.

கடத்தல் விவகாரத்தில் சீன அரசின் உத்தரவுகள், விதிமுறைகள் எதையும் பிரிட்டன் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், லின் சே சூ ஆத்திரம் அடைந்தார். இவர் முன்னதாக, ஹுனான் பகுதியின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றியவர். தேர்ந்த அறிவாளி மற்றும் தைரியசாலி. ஆகவே, சீனாவின் தெற்குக் கடல் பகுதி முழுவதும் அபினி கடத்தல்காரர்கள் வசமாவதை ஒடுக்குவதற்கு கமிஷனர் லின் கடும்  நடவடிக்கையைத் தொடங்கினார். துறைமுகப் பகுதியில் எங்கெல்லாம் அபினி பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறதோ, அங்கெல்லாம் தேடிச் சென்று அவற்றை அழிக்கத் தொடங்கினார்.இந்த அதிரடி நடவடிக்கையில் 1,700 கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டனர். 70,000 ஓபியக் குடுவைகள் அழிக்கப்பட்டன. 23 நாட்களில் 500 அரசாங்க வீரர்கள் ஒன்று சேர்ந்து 1.2 மில்லியன் கிலோ அபினியை அழித்தனர். கடத்தல்காரர்கள் பொது இடத்தில் தூக்கில் போடப்பட்டனர். காவல் படகுகள் துறைமுகத்தில் இரவு பகலாக ரோந்து சென்று கண்காணித்தன. இந்தக் கெடுபிடி, பிரிட்டிஷின் அபினி வணிகத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனி 6 போர்க் கப்பல்களையும் 7,000 பேர்கொண்ட படைகளையும்கொண்டு, 1839-ல் சீனாவைத் தாக்கத் தொடங்கியது. அந்தப் போர், 'அபினி யுத்தம்’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. உலக அளவில் போதைப் பொருள் வணிகத்துக்காக நடந்த முதல் போர் இதுவே!

இரண்டு ஆண்டுகள் நடந்த இந்தப் போரின் முடிவு, பிரிட்டிஷ§க்குச் சாதகமாக அமைந்தது. பிரிட்டிஷ் படைகள், ஹாங்காங் தீவுகளைக் கைப் பற்றின. இதன் விளைவாக, ஒரு தலைப்பட்சமாக தயாரிக்கப்பட்ட நான்கிங் என்ற ஒப்பந்தத்தில் சீனா கையெ ழுத்துப் போட்டு ஹாங்காங்கை பிரிட்டனின் காலனி நாடாக விட்டுக் கொடுத்தது. கூடவே, ஆண்டுக்கு 15 மில்லியன் வெள்ளிப் பணமும் கப்பமாக செலுத்த ஒப்புக்கொண்டது. அதன் மூலம், விரிவான அபினி சந்தை ஒன்றை பிரிட்டிஷ் கம்பெனி ஆசிய நாடுகளில் உருவாக்கியது.

அதே நேரம், இந்திய சமஸ்தானங்கள் பலர் தாமே நேரடியாக அபினி வணிகத்தில் ஈடுபட முயற்சிப்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு அதை ஒடுக்க லைசென்ஸ் முறையை அறிமுகம் செய்தது. அதன்படி, உரிமை பெற்றவர்கள் மட்டுமே அபினி விளைவிக்க முடியும், அத்துடன், அபினி விவசாயிகள் அதை வேறு யாரிடமும் விற்க முடியாதபடி தந்திரமும் மேற்கொண்டது.
 ஒரு பக்கம் சீனாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தி தனது வருவாயைப் பெருக்கிக்கொண்டது என்றால், மறு பக்கம் தனது காலனிய ஆட்சியில் இருந்த இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தேயிலையை அறிமுகம் செய்து தங்களுக்கான தேயிலைத் தேவையை தாங்களே உற்பத்திசெய்துகொண்டது கிழக்கிந்திய கம்பெனி. இந்த தேயிலைத் தோட்டப் பணிக்காக கொத்தடிமைகளாக பல ஆயிரம் பேர் வேலைக்கு சென்று குளிர் தாங்காமலும், நோய் ஏற்பட்டும் செத்து மடிந்தது தனிக் கதை.

இந்திய ஆங்கில எழுத்தாளரான அமிதாவ் கோஷ் 'ஸீ ஆஃப் பாப்பிஸ்’ என்ற தனது நாவலில், அபினி வணிகத்தின் வரலாற்றை விரிவாக எழுதி இருக்கிறார். இதற்காக விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட அமிதாவ் கோஷ், வங்காளத்தின் காஸிப்பூரில் இன்றும் இயங்கிவரும் ஓபியம் தொழிற்சாலையைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். 'பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தே அபினி வணிகத்தின் மையமாக இருக்கிறது காஸிப்பூர். இங்கேதான், அபினி உற்பத்தி ஒருமுகப்படுத்தப்பட்டது. 32 மாவட்டங்களில் விளைந்த அபினி இங்கே கொண்டு வரப்பட்டுப் பதப்படுத்தப்பட்டது. ஓபியம் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் ஓர் உயர் அதிகாரி இந்த அபினி விற்பனையை நடத்திவந்தார். காஸிப்பூரில் உள்ள குரங்குகள்கூட அபினி சாற்றைக் குடித்து போதையில் அலைகின்றன. அந்த அளவுக்கு அந்த ஊர் அபினி தொழிலில் கொழிக்கிறது. இன்றும் காஸிப்பூரில் ஓபியம் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. அங்கே எடுக்கப்படும் ஓபியம் உலகெங்கும் விற்பனை ஆகிறது. 1800-களில் மத்திய இந்தியாவில் இருந்த பல சமஸ்தானங்கள் தங்களின் வருமானத்துக்கு அபினி உற்பத்தியைத்தான் பெரிதும் சார்ந்து இருந்தன. மால்வாவின் முக்கிய வருமானம் அபினியே. இந்தியாவில் 6,42,831 ஏக்கர் நிலத்தில் அபினி பயிரிடப்பட்டு இருக்கிறது. இந்த உற்பத்தி 1920-களில் 1,63,125 ஏக்கராகக் குறைந்தது. அதுவரை, இந்தியாவின் முக்கிய வணிகப் பயிராகவே அபினி கருதப்பட்டது’ என்கிறார் அமிதாவ் கோஷ்.

சீனாவுக்குப் போதை மருந்து கடத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என்ற எதிர்ப்புக் குரல்கள், 1890-களில் இங்கிலாந்தில் எழுந்தன. இதையடுத்து, அபினி உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்த 9 பேர்கொண்ட ராயல் கமிஷனை நியமித்தார் விக்டோரியா ராணி. இந்தக் கமிஷன், தனது அறிக்கையை 1895-ம் ஆண்டு வெளியிட்டது. அதில், 'இந்தியர்கள் அபினியை காலம் காலமாகவே மருத்துவ ரீதியாகப் பயன்படுத்திவருகின்றனர். ஆகவே, அதை விற்பது தவறு அல்ல. சீனாவுக்கு, அபினி விற்பனை செய்ததைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. கம்பெனி நேரடியாக சீனாவில் அபினி விற்கவில்லை’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

1916 மற்றும் 17-ம் ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு துறைகள் சார்ந்த ஆண்டு வருமானம் 11,87,99968 ஸ்டெர்லிங் பவுண்ட். இதில், அபினி விற்பனையில் மட்டும் கிடைத்த தொகை 31,60,005 ஸ்டெர்லிங் பவுண்ட். அந்த அளவுக்குப் பணம் காய்க்கும் செடியாக அபினி இருந்தது. அது போலவே, அபினி புகைக்கும் பழக்கம் உருவான காரணத்தால், நாடெங்கும் ஓபியம் பார்கள் ஏற்பட்டன. அபினி போதைக்கு அடிமை ஆன வர்கள், அபின் வாங்குவதற்காக மனைவி, குழந்தை களைக்கூட விற்கத் தயாராகினர். தெற்கு சீனாவில் ஒருவன், தனது பிறந்த குழந்தையை ஐந்து கிராம் அபினிக்கு விற்ற கொடூரம் நடந்தது. அபினி பழக்கத்தால் சீனாவின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. சீனாவில் மட்டும் அல்லாமல் ஜப்பான், ஜாவா, சியாம் போன்ற இடங்களிலும் கிழக்கிந்தியக் கம்பெனி அபினி வணிகம் செய்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் அபினி வணிகத்துக்குத் துணைபோனவர்களில் முக்கியமானவர் டேவிட் சசூன். யூதரான இவர் மும்பையில் வசித்தார். பாக்தாத்தில் பெரிய வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் சசூன். இவரது அப்பா 1829-ம் ஆண்டு வணிகத்தில் பணமோசடி செய்த காரணத்தால், சசூனின் குடும்பம் பாக்தாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தது. மும்பையில், பருத்தி வாங்கி விற்கும் வணிகத்தைத் விற்பனையை செய்யத் தொடங்கியபோது, டேவிட் சசூன் அபினி விற்பனை செய்ய ஆரம்பித்து, அபினி சக்கரவர்த்தி என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார்.

ஹாங்காங் நகரின் மொத்த அபினி விற்பனையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தாராளமாகப் பணத்தை வாரி வழங்கினார் டேவிட் சசூன். போதைப் பொருள் விற்பனையில் சம்பாதித்த பணத்தைக்கொண்டு எண்ணெய் தொழிற்சாலைகளும், துணி ஆலைகளும் தொடங்கினார். கொழுத்த லாபத்துடன் லண்டன் சென்று வசிக்கத் தொடங்கி, பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்துக்கு உரிய பணியாள் என்ற விருதையும் பெற்றார் டேவிட் சசூன். இவருக்குப் பிறகு இவரது பிள்ளைகள் ஹாங்காங்கின் அபினி வணிகத்தைக் கவனித்தனர். இன்று, இங்கிலாந்தின் முக்கியத் தொழில் அதிபர்களாக  டேவிட் சசூனின் குடும்பம் இருக்கிறது.
பிரிட்டிஷின் போதை வணிகம், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மட்டும் அல்லாது இதுபோல அதன் துதிபாடிகளுக்கும் கொள்ளை லாபம் சம்பாதிக்க கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ இந்தியாதான். உலகின் பார்வையில், இந்தியாவை ஒரு அபினிக் கிடங்குபோல மாற்றியது பிரிட்டிஷ் காலனியத்தின் வெட்கமற்ற செயல். சுயலாபத்துக்காக கிழக்கிந்தியக் கம்பெனி மேற்கொண்ட போதைப் பொருள் கடத்தல் இன்று சர்வதேசக் குற்றமாக வளர்ந்து நிற்கிறது. இன்றைய இந்தியாவின் மிக முக்கியப் பிரச்னை போதைப் பொருள் கடத்தல். குறிப்பாக மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மிசோரம் போன்ற மாநிலங்களில் போதைப் பொருள் கடத்துவது ஒரு குடிசைத் தொழில்போல நடக்கிறது. பள்ளி மாணவர்கள்கூட போதை மருந்து பழக்கத்துக்கு அடிமை ஆகியிருக்கின்றனர்.

போதை என்பது கண்ணுக்குத் தெரியாத ஆயுதம். அதைவைத்து எந்த நாட்டையும் எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற பிரிட்டனின் தந்திரம் இன்று அதற்கே சவால் விடுவதாகவும் மாறியிருக்கிறது.

சீனர்களைக்கொண்டு தங்களது தேசத்தின் ரயில் பாதை, சாலை மற்றும் பாலங்களை அமைத்துக் கொண்ட அமெரிக்கா இன்று, சீனர்கள் வழியாகத்தான் போதைப் பழக்கமும் அதிகரித்து வருகிறது என்று கூக்குரலிடுகிறது. தனது வரலாற்றைத் தானே மறந்து அதற்கு இங்கிலாந்தும் ஒத்து ஊதுகிறது. அதுதான் காலத்தின் கொடுமை.Thursday, August 16, 2012

கல்யாணச் செலவுகள்


இதோ... ஆவணி வந்துவிட்டது. இனி ஊரெங்கும் கெட்டிமேளச்சத்தம்தான்!
ஆனால், 'விலைவாசி தாறுமாறாக எகிறிக் கிடக்கும் இன்றைய காலகட்டத்தில்... சிக்கனமாக ஒரு கல்யாணத்தை நடத்தி முடிக்க முடியுமா?' என்கிற கவலைதான் பலரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது!

பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு நகை, சீர், ஆடைகள் என அத்தனையும் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தாலும், மேடை அலங்காரம் முதல் பந்திக்கான மெனு வரை 'திருமணச் செலவுகள்’ என்ற விஷயம் பயமுறுத்துவதாகவே இருக்கும்.

''அஞ்சு லட்சம் ஒதுக்கியிருக்கேன்... பத்துமானு தெரியல! என்று பதறாமல், திருமண தினத்துக்கான ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டுச் செய்தால், பணத்தை மிச்சப்படுத்தலாம் தாராளமாக''...
 
முதல் வேலை... மண்டபம் புக்கிங்!  
 
''பொதுவா ஒரு சுமாரான நகரத்துல, 8 ஆயிரம் ரூபாய் வாடகையில இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் மண்டபம் கிடைக்கும். மாநகராட்சிகள்ல வாடகை அதிகமா இருக்கும். கல்யாணத்துக்கு எத்தனை பேரை அழைக்கப் போறோம், அதுக்கேத்த மாதிரி பார்க்கிங் வசதி இருக்குமா, சொந்த பந்தங்கள் வந்து போக வசதியா இருக்குமா, அவசரத்துக்கு நம்ம வீட்டுக்கு வந்து போக பக்கமா இருக்குமாங்கிறது மாதிரியான விஷயங்களை யோசிச்சு அதுக்கேத்த மாதிரியான மண்டபத்தைப் பிடிக்கணும். 
 
அழைப்பிதழ்... அழகு!  
 
ஒரு பத்திரிகை 50 காசுல இருந்து 1,000 ரூபாய் வரைக்கும்கூட இருக்கு. வெள்ளி, தங்க ஜரிகை போட்ட பத்திரிகைகள்தான் இவ்வளவு காஸ்ட்லியா இருக்கும். நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி பத்திரிகைகளை தேர்ந்தெடுத்துக்கலாம். பிரின்டிங் செலவு தனி. 2 ஆயிரம் ரூபாய் ரேஞ்சுக்கு 500 பத்திரிகைகள் வாங்கினா நல்ல ராயலா இருக்கும். பகட்டா இருக்கிறதைவிட, சிம்பிள் அண்ட் நீட்டா இருக்கிற பத்திரிகைகளா செலக்ட் செய்றது நலம்!
 
டெக்கரேஷன் உங்கள் சாய்ஸ்! 
 
கல்யாணத்துல ஒரு ஸ்பீக்கர் செட், வெல்கம் போர்டு வைக்கிறதுக்கு 1,500 ரூபாய் செலவாகும். மண்டபம் முழுக்க சீரியல், பந்தல்னு அமர்க்களப்படுத்துனா 2 லட்ச ரூபாய்கூட செலவு பண்ணலாம். பேக் டிராப், நேம் போர்டு மட்டும் வெச்சு டிஸ்கோ டெக்கரேஷன் பண்றதுக்கு 2,500 ரூபாய் செலவாகும். இதையே இன்னும் ராயலா பண்ணனும்னா 25 ஆயிரம் ரூபாய்க்கு கூட பண்ணலாம். பூ மணவறை அமைக்கணும்னா 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். ஒவ்வொரு டிஸைனுக்கும் ஒவ்வொரு தொகை நிர்ணயம் பண்ணிருப்பாங்க.
 
மாலைகள் பலவிதம்! 
 
கைச்செண்டோட, 800 ரூபாய்ல இருந்து மாலை செட் கிடைக்குது. இதுல ரோஜா இதழ் மாலை, சம்பங்கி மூணடுக்கு மாலை, மணமக்கள் பேர் போட்ட மாலைனு நிறைய டிசைன்கள் போட்டுத் தருவாங்க. ஒரு செட் 50 ஆயிரம் ரூபாய் வரைகூட இருக்கு. இதுல தலைப்பூ, உதிரிப்பூ, 10 முழம் மல்லிகையும் அடக்கம். ரோஜா இதழ் மாலைதான் இப்போ எல்லாரும் விரும்புறாங்க!
 
மங்கல இசை! 
 
மங்கல இசைக்கு ஓரளவுக்கு நல்ல மியூசிக் செட்கா£ரங்க 5 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பாங்க. பெரிய வித்வான்களைக் கூப்பிட்டா லட்சக் கணக்குல சம்பளம் கேப்பாங்க. இப்போல்லாம் நிறைய இடங்கள்ல டேப் ரிக்கார்டர்லயே நாதஸ்வரத்தைப் போட்டு முடிச்சுடுறாங்க. நம்ம வசதியைப் பொறுத்து பேண்டு வாத்தியம் மத்த விஷயங்களை முடிவு பண்ணிக்கலாம். பார்வை யற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆர்கெஸ்ட்ரா போல ஏற்பாடு பண்ணினா, அவங்களுக்கு வாய்ப்புக் கொடுத்த சந்தோஷம் கிடைக்கும்!
 
பளபள போட்டோ - வீடியோ! 

போட்டோ ஆல்பத்துல ஸ்லிப் இன் ஆல்பம், ஆட்டோ ஸ்டிக் ஆல்பம், டிஜிட்டல் ஆல்பம், பக்கெட் ஆல்பம், சூட்கேஸ் ஆல்பம், மெட்டாலிக் ஆல்பம்...னு பல ரகங்கள் பல சைஸ்கள்ல இருக்கு. ஒரு ரோலுக்கு, அதாவது 36 படங்களுக்கு குறைந்தபட்சம் 600 ரூபாய்ல இருந்து 4 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு பண்ணி போட்டோ எடுக்கலாம். அதேமாதிரி வீடியோவுல சிங்கிள் கேமரா, டபுள் கேமரா, ஸ்பாட் மிக்ஸிங், இண்டோர் மிக்ஸிங், டி.வி ரிலேனு செலவுகளைக் கூட்டிக்கிட்டே போகலாம். குறைஞ்சபட்சமா 5 ஆயிரம் ரூபாய் செலவுல ஒரு கல்யாணத்துக்கு வீடியோ எடுத்துட முடியும். அதிகபட்சமா கிரேன்லாம் வெச்சு சூட்டிங் செஞ்சா 5 லட்ச ரூபாய்கூட வீடியோவுக்கு செலவு பண்ணலாம்!

சமையல்... சிக்கனம்!  

அதிக செலவு பிடிக்கிற விஷயம் சமையல்தான். ஆள் வெச்சு சமைச்சு சாமான் வாங்கிக் கொடுத்து கூலி கொடுத்து சமைக்கிறது பெரிய வேலை. அதுக்கு அவங்க கூடவே கண்காணிக்க நம்ம தரப்புல ஒரு ஆள் இருக்கணும். திடீர் திடீர்னு ஏதாவது வேணும்னு கேப்பாங்க. ரெடிமேட் சமையலுக்கு ஆர்டர் பண்ணிட்டா இந்த பிரச்னை இருக்காது. நைட் 200 பேர், காலையில 300 பேர், மதியம் 100 பேர்னு மொத்தம் 600 பேருக்கான சாப்பாட்டை சிம்பிளா, டேஸ்டா 50 ஆயிரம் ரூபாய்க்கு ரெடி பண்ணிடலாம். இட்லி, பொங்கல், கேசரி, சாப்பாடு, 2 பொரியல், பாயசம்னு அசத்திடலாம் 
   

எனது இந்தியா (அபினி சந்தை! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
பருத்தி, அபினி இந்த இரண்டையும் 'வெள்ளைத் தங்கம்’ என்று குறிப்பிடுகிறது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. இந்த இரண்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துத் தந்தன. இன்று, மாஃபியா எனும் குற்றக் குழுக்கள் ஹாங்காங், பாங்காக், மலேசியா, சீனா என விரிந்து வளர்ந்து வலிமையான கடத்தல் மற்றும் அழித்தொழிப்பு இயக்கங்களாகச் செயல்படுகின்றன. இதற்கான தொடக்கப் புள்ளி பிரிட்டிஷ் அரசு, சீனாவுக்கு அபினி கடத்தியதில்தான் ஆரம்பம் ஆனது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி என்று அழைக்கிறோம். இதற்கு, கம்புகம் என்ற பெயரும் இருக்கிறது. பளுப்புக் கசகசாச் செடி, வெள்ளைக் கசகசாச் செடி என்று இரண்டு வித செடிகள் உண்டு. இதில், வெள்ளைக் கசகசாச் செடி இந்தியாவில் அதிகம் விளைகிறது. கசகசா சாற்றைக் குடித்தால் மிதமிஞ்சிய போதை இருக்கும் என்கின்றனர்.
 
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வங்காளத்தில் அதிகமாக அபினி விளைகிறது. வங்காளத்தில் விளையும் அபினி தரத்தில் உயர்ந்தது என்கின்றனர். கசகசா காய்கள் முற்றும்போது, அதில் விதைகள் உண்டாகின்றன. அந்த விதைகளை முற்றவிடாமல் உறிஞ்சிகள் வழியாக பாலை எடுத்து உறையவைத்து அபினி எடுக்கிறார்கள். சில நேரத்தில், கத்தியால் காயைக் கீறி அதில் இருந்து வடியும் பாலில் இருந்தும் அபினி எடுக்கப்படுகிறது. இந்தப் பாலில் 10 சதவிகிதம் முதல் 14 சதவிகதம் வரை மார்பின் எனும் போதைப் பொருள் இருக்கிறது. அதுபோலவே, 4 சதவிகதம் நார்க்கோடின் இருக்கிறது. காய் முற்றி விதையாகிவிட்டால் இந்த போதைதன்மை அற்றுப்போய்விடும்.
 
ரோமானியரின் உறக்கத்துக்கான கடவுளின் பெயர் சோம்னாஸ். இந்தப் பெயரில் இருந்தே கசகசா செடியின் தாவரவியல் பெயரான பபாவேர் சோமினிபெரம் என்பது உருவானது. அதுபோல, மார்பின் எனப்படும் போதைப் பொருள் மார்பியஸ் என்ற கனவுக்கான கடவுளின் பெயரில் இருந்து தோன்றியுள்ளது.

ஓபியத்தின் சரித்திரம் மிகவும் பழைமையானது. கிறிஸ்து பிறப்பதற்கு 3,400 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியா, சுமேரியா, எகிப்து பகுதிகளில் ஓபியம் செடி பயிரிட்டு இருக்கின்றனர். மருந்துச் செடியாகவே ஆரம்ப காலத்தில் அபினி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, வேதனையில் தவிக்கும் நோயாளிகளுக்குத் தூக்கம் வரவழைப்பதற்கும், ஆண்மையை அதிகரிக்கவும், வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாகவும் அபின் பயன்படுத்தப்பட்டது.

எகிப்தியர்கள், துயில் தரும் செடி என்று கசகசாவைக் குறிப்பிடுகின்றனர். கிரேக்கர்கள், தங்கள் கடவுளுக்கு கசகசா செடியின் பூக்களை அணிவிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கும் என்று நம்பினர். ஆகவே, பண்டைய காலத்தில் மகிழ்ச்சி தரும் செடியாக அபினி கருதப்பட்டது. அபினி புகைப்பது அல்லது அதன் சாற்றைக் குடித்து போதை ஏற்றிக்கொள்வது திருவிழா மற்றும் மதச்சடங்குகளுடன் சம்பந்தப்பட்ட பழக்கமாக ராஜஸ்தானில் இன்றும் நிலவுகிறது. இதே பழக்கம், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருக்கிறது. மருத்துவப் பொருளான அபினியை, வணிகத்துக்கான போதைப் பொருளாக அடையாளம் கண்டுகொண்டது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிதான்.

அக்பர் காலத்திலேயே, பீகார் மற்றும் வங்காளப் பகுதியில் விளைந்த அபினியை கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கி விற்பனை செய்துவந்தது. வங்காளம், பரோடா, மால்வா ஆகிய பகுதிகளில் அபினி அதிகமாக விளைந்தது. இந்த வியாபாரத்துக்காகவே, பாட்னாவில் அபினி வணிகக் கூட்டமைப்பு ஒன்றும் செயல்பட்டது. அபினி விற்பனையில் கொள்ளை லாபம் கிடைக்கிறது என்று கண்டுகொண்ட டச்சுக்காரர்கள், பீகார் வணிகர்களுடன் பேரம்பேசி தாங்களே அபினியை மொத்தமாகக் கொள்முதல் செய்யத் தொடங்கினர். இதைஅறிந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அபினி வணிகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தது. அதற்காக, விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து உற்சாகப்படுத்தியதோடு தானே மொத்தமாக வாங்கிக்கொள்ள ஆரம்பித்தது.

1770-களில் அபினி வணிகம் பெரும் போட்டியாக மாறியது. டச்சு வணிகர்கள் இந்தோனேஷியாவுக்கு அபினியைக் கடத்தினர். போர்த்துக்கீசியர்களோ, சீனாவுக்கு விற்க முயற்சித்தனர். ஆனால், 1773-ல் வங்காள ஆளுனராகப் பொறுப்பு ஏற்ற வாரன் ஹேஸ்டிங், அபினி வர்த்தகத்தை கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார். அதற்காக, பாட்னாவில் இருந்த அபினி கூட்டமைப்பை உடைத்து, அபினி வணிகத்தை ஏகபோகமாக்கினார். இவரது முயற்சியின் தொடர்ச்சியாகவே, சீனாவுக்கு அபினி பெருமளவு கடத்தப்பட்டது.

அபினி வணிகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, சீனா மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆகிய இரண்டுக்கும் இடையே இருந்த வணிக உறவைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

உலகுக்குத் தேயிலையை அறிமுகப்படுத்தியது சீனர்கள் தான். தேயிலைச் செடி அங்குதான் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. ஐரோப்பிய நாடுகளில் தேயிலை புகழ்பெறத் தொடங்கவே, சீனாவில் இருந்து தேயிலையை வாங்கி ஐரோப்பாவில் விற்கத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. அதுபோலவே, பட்டுக்கும் சீனக் களிமண்ணால் செய்த பாத்திரங்களுக்கும் ஐரோப்பாவில் பெரிய கிராக்கி இருந்தது. இந்த மூன்றையும் வாங்கி விற்றதில், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு லாபம் கொட்டியது. ஆனாலும், தேயிலைக்கு மாற்றாக பிரிட்டிஷ் கொடுத்த கைக் கடிகாரம், வெள்ளிப் பொருட்கள், கண்ணாடிகள் ஆகியவை, கொள்முதலுக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே, சீனாவிடம் இருந்து கடனாளி யாகவே தேயிலையைப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது. 

இதை ஈடுசெய்யும் விதமாக இந்தியாவில் விளைந்த, போதைப் பொருளான அபினியை சட்டவிரோத முறையில் சீனாவுக்கு அனுப்பத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. இந்த போதைப் பொருள் வணிகத்தில் கொள்ளை லாபம் கிடைத்ததால், அபினி வணிகத்தை முதன்மையாக்கியது பிரிட்டிஷ் கம்பெனி. துருக்கி மற்றும் அரேபிய வணிகர்களின் மூலம் 6 அல்லது 7-ம் நூற்றாண்டில்தான் சீனாவுக்கு அபினி அறிமுகமானது. அது, வலி நிவாரணியாகவே ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், 17-ம் நூற்றாண்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் சீனர்களிடம் மேலோங்கத் தொடங்கவே, போதைக்காக அபினியைப் புகைக்கும் பழக்கம் தலைதூக்க ஆரம்பித்தது.

போதை தரும் அபினியை உட்கொண்ட காரணத்தால், சீனாவில் போதை அடிமைகள் அதிகரித்தனர். குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன. இந்த அவலம்பற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல், அபினியை டன் டன்னாக சீனாவுக்கு அனுப்பி பணத்தைக் குவித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. இவ்வளவுக்கும், அபினி இறக்குமதி பிரிட்டனில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இங்கிலாந்தில், அபினியை போதைப் பொருள் எனத் தடை செய்துவிட்டு, இன்னொரு தேசத்தில் கப்பல் கப்பலாக அபினியை விற்றதுதான் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாதனை! இப்படிக் கிடைத்த பணத்தில் இந்தியப் பருத்தியை வாங்கி கனரக இயந்திரங்களுடன் புதிய நூற்பாலைகளைத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி.

பம்பாய் துணி ஆலைகள் பெருமளவு, அபினி விற்பனையில் கிடைத்த உபரிப் பணத்தில்  தொடங்கப்பட்டதே என்கிறார், இதைப்பற்றி ஆய்வு செய்த ஆர்.எஸ்.கேல்கர். இதுபற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சிவனடி, தனது இந்திய சரித்திரக் களஞ்சியம் என்ற புத்தகத்தில், 'ஜீஜீபாய் என்ற பார்சிக்காரர், சீனத்துடன் நடத்திய அபினி வணிகத்தில் பெரும் லாபம் சம்பாதித்தார். அதற்கு உறுதுணையாக இருந்த பிரிட்டிஷ்காரர்களை சந்தோஷப்படுத்துவதற்காக, 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பம்பாய் ஓவியப் பள்ளிக்கு மிகப் பெரிய தொகை நன்கொடை வழங்கினார். அபினிப் பணம்தான் இந்தியாவில் ஓவியக் கலை வளருவதற்கும் காரணமாக இருந்தது’ என்கிறார்.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வணிகர்கள், சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் ஓடும் பியர்ல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள காண்டோன் துறைமுகத்தில் மட்டுமே வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக, 13 பண்டக சாலைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த வளாகத்துக்குள் மட்டுமே அவர்கள் தங்கள் வணிகத்தை நடத்த முடியும். அதுவும், கோடைக் காலத்தில் மட்டுமே வணிகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

வணிகம் செய்யவந்த ஐரோப்பிய வணிகர்கள், சீன மொழி கற்பதற்கு அனுமதி கிடையாது. பொழுதுபோக்குவதற்குக்கூட துறைமுகத்தைத் தாண்டி, நாட்டுக்குள் செல்ல முடியாது. இவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள்தான் சீனாவில் ஐரோப்பிய கம்பெனிகளின் வணிகம் நடைபெற்று வந்தது. அபினி கடத்துவது என்று முடிவு செய்தவுடன் கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் பெரிய திட்டத்தை உருவாக்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விளைவிக்கப்பட்ட அபினியை, மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து பக்குவப்படுத்தி கல்கத்தாவில் ஏலம்விட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி, சீனாவில் நேரடியாக அபினி விற்பது தடைசெய்யப்பட்டு இருப்பதால், ஒரு மாற்று வழியை உருவாக்கியது. அதன்படி, கம்பெனியின் உயர் அதிகாரிகளும், ஆங்கிலேய விசுவாசிகளாக செயல்பட்ட தனியாரும் அபினியை விலைக்கு வாங்கி தங்களுக்கான கப்பலில் ஏற்றி லிண்டின், ஹாங்காங் போன்ற இடங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். இதனால், சீன அரசு பிரிட்டிஷ் கம்பெனியைக் கேள்வி கேட்கவே முடியாது.


 

Monday, August 13, 2012

தூங்குவதற்காக ஒரு புத்தகம்!

நன்றாகத் தூங்குவது எப்படி என்ற ஒரு ஆங்கில புத்தகம் வந்துள்ளது. கால மாற்றத்தால் தற்போது நடுத்தரவர்க்கத்தினர் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு சுமைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் இயல்பான வாழ்க்கையை மறந்து செயற்கையான வாழ்வில் புகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இந்தச் சூழலில் நடுத்தர வர்க்கம் இழந்து விட்ட நல்ல தூக்கத்தைப் பற்றிப் பேசுவதுதான் ‘ஹவ் டு ஹேவ் சவுண்டு ஸ்லீப் தி நேச்சுரல் வே’ என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம்.
இயல்பான ஆழ்ந்த தூக்க மின்மை, குறட்டைத் தொந்தரவு, கெட்ட கனவுகள், தூக்கத்தில் நடப்பது, சரியான தூக்கமின்மை போன்றவற்றுக்குத் தீர்வுகள் இதில் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக பிராணாயாமம், வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுதல், தூக்கப் பிரச்னையைக் கண்டறிய வந்துள்ள நவீன முறைகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. கன்னிமாரா நூலகத்தில் இதை வாசித்துப் பயனடையலாம்.

Sunday, August 12, 2012

எனது இந்தியா (விதவை ஆன விளையாட்டுப் பிள்ளைகள்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

ரோடா மன்னரின் மனைவியான சிம்னாபாய், சதி முறையை ஒழிப்பதற்காக 1875 முதல் தீவிரமான இயக்கத்தை நடத்தினார். அகில இந்தியப் பெண்கள் மாநாட்டில், சதி குறித்து இவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது. உடன்கட்டை ஏறுவதற்கான தடைச் சட்டம் வில்லியம் பெண்டிங் பிரபுவால் 1829-ம் ஆண்டு இயற்றப்பட்டபோதிலும், 1987-ம் ஆண்டு இந்திய அரசு இந்தச் சட்டத்தில் பல மாற்றங்களைச் செய்து அமல்படுத்தியது. இதன்படி, சதி முறை தடை செய்யப்பட்டது. அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும் இந்தப் புதிய சட்டம் வழிவகுத்தது. இந்தச் சட்டத் திருத்தம் செய்யப்படும் வரையில், இந்தியாவில் கண் ணுக்குத் தெரியாமல் சதிக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன.

சதி முறை, பெண்ணை உயிரோடு எரித்தது என்றால், வாழும்போதே அவளை முடக்கியது பால்ய விவாகம். சாரதா சட்டம் என்று அழைக்கப்படும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 1929-ல் அமலுக்கு வரும் வரை நான்கு, ஐந்து வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்துவைப்பது வழக்கமாகவே இருந்தது.

இந்தச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த 'ஹர் பிலாஸ் சாரதா’ என்ற சமூக சிந்தனையாளர். இவர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் 1867-ம் ஆண்டு பிறந்தவர். ஆக்ராவில் பி.ஏ., ஹானர்ஸ் படித்தவர். ஜெய்சால்மார் மகாராஜாவிடம் பணியாற்றியவர். 1902 முதல் அஜ்மீர் நகரக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர். அதன் பிறகு சில காலம் நீதித் துறைக்கு மாற்றப்பட்டு செஷன்ஸ் ஜட்ஜ் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்களைப் பெற்ற  ஹர் பிலாஸ், குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்தார்.

பெண்ணின் திருமண வயது 14 என்று அறிவிக்கப் பட்டு, 1930-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தச் சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஹர் பிலாஸ் சாரதா பற்றிய தனது கட்டுரை ஒன்றில் அரவிந்தன் நீலகண்டன் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றைக் கூறி இருக்கிறார். அது, பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட விதவைகளைப் பற்றிய புள்ளி விவரம். 1921-ல் விதவையான பெண் குழந்தைகளில் ஒரு வயதுக்கு உட்பட்டவர்கள் 612 பேர். ஒன்றில் இருந்து இரண்டு வயது வரையிலான விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை 498. இரண்டில் இருந்து மூன்று வயதுக்குள் இருந்த விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை 1,280. மூன்றில் இருந்து நான்கு வயது வரை இருந்தவர்கள் 2,863. நான்கில் இருந்து ஐந்து வயது வரையில் ஆன குழந்தைகள் 6,758. ஐந்தில் இருந்து பத்து வயது வரையில் இருந்தவர்கள் 12,016. பால்ய விவாகத்தின் விளைவு எப்படி இருந்தது என்பதற்கு இந்தப் புள்ளி விவரமே சாட்சி.
 19ம் நூற்றாண்டின் இறுதி யிலேயே, குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று, பி.எம். மலபாரி முயற்சி செய்தார். ஆனால், நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இந்துக்களின் நம்பிக்கைகளை வெள்ளை அரசு சீர்குலைக்கிறது என்று பழைமைவாதிகள் ஆவேசமாகக் கூக்குரலிட்டனர். மலபாரியின் முயற்சி தோற்றுப்போனது. அதன்பிறகு உருவானதே ஹர் பிலாஸின் திருமண வயது நிர்ணயச் சட்டம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் போனபோதும் இந்தச் சட்டமே பெண்களின் உரிமைக்கான முதல் அங்கீகாரம்.
பால்ய விவாகம், சதிக் கொடுமை போலவே இந்தியா முழுவதும் இருந்த இன்னொரு நடைமுறை தேவதாசிகள். கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள் என்று பெண்களில் சிலருக்கு பொட்டுக்கட்டி கடவுளுக்குத் திருமணம் செய்துவைத்து, அவர்களைக் கோயில் அடிமைகளாக மாற்றும் வழக்கமே தேவதாசி முறை. இப்படி, கோயில் பணியாளர்களாக இருந்த பெண்கள், ஆடல் பாடல்களில் நல்ல தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்தியா முழுவதும் தேவதாசிகள் மாதங்கி, நாயகி, மாத்தம்மா, பசவி, சூலி மகே, ஜோகினி, ஆடல்கணிகை, ருத்ரகணிகை, தளிச்சேரி பெண்டிர் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். கோயில் பெண்களாக இவர்கள் பணியாற்றியபோதும், வசதி படைத்தவர்களுக்கான சுகப் பெண்களாக உருமாற்றம் அடைந்ததும் காலமாற்றத்தில் நடந்தேறியது.

தேவதாசி முறை எப்போது தோன்றியது என்பதற்கான நேரடி வரலாற்றுச் சான்றுகளை ஆராய முடியவில்லை. எல்லாக் கலைகளும் கோயில்களுடன் இணைந்தே வளர்ந்தன என்பதால், கோயில்களில் நடனம் ஆடுவதற்கு என்றே கணிகைகள் இருந்ததைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டு அவர்கள் தேவதாசிகள் என்று முடிவு செய்துவிட முடியாது.

தேவதாசி மரபு மேலோங்கியது 9-ம் நூற்றாண் டுக்குப் பிறகே என்றுதான் தோன்றுகிறது. இதற்கு முக்கியக் காரணம், புத்த மதத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்து சமயம் மேலோங்கத் தொடங்கும்போது பல பௌத்த கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன. அப்படி உருவான கோயில்களில் இருந்து பௌத்தப் பெண் துறவிகளாக இருந்த பிக்குணிகள் வெளியேறவில்லை. அவர்கள், கோயில் வளாகத்துக்குள் இருந்தபடியே மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்கினர். இந்த நடைமுறையே, காலமாற்றத்தில் தேவதாசி மரபாக ஆகியிருக்கக் கூடும். 

ஆனால், சிறுவயதிலேயே பெண்கள் கோயிலுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டு கோயில் அடிமைகளாகச் செயல்பட்டதை, பௌத்தம் மேலோங்கியிருந்த காலத்தைச் சேர்ந்த இந்தியக் கோயில்கள் எதிலும் காண முடியவில்லை. நடனப் பெண்களாக இருந்த கணிகைகளைப் பற்றிக் கூறும் வட மொழி இலக்கியங்கள்கூட, இறைவனைத் திருமணம் செய்து கொண்ட பெண்கள், தேவதாசிகளாக வாழ்ந்ததைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

ஆகவே, தேவதாசிகள் என்ற மரபு எங்கிருந்து தொடங்கியது என்ற வேரைத் தெரிந்துகொள்வது  எளிதானது அல்ல. தஞ்சையில் வாழ்ந்த முத்துப்பழனி எழுதிய 'ராதா சாந்தவனம்’ என்ற காதல் பிரபந்தமும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் 'தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ நாவலும் தாசி மரபு குறித்து அறிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால், இவை இலக்கியப் படைப்புகள் என்பதால் வரலாற்றுத் தகவல்கள் அதிகம் இல்லை.

தேவதாசிப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவது இல்லை. அவர்கள், கடவுளைத் திருமணம் செய்துகொள்வதால் நித்யசுமங்கலியாகக் கருதப்பட்டனர். பூரி ஜெகன்னாதர் கோயில் வளாகத்தில் இருந்த தேவதாசிகள், புனிதமான பெண்களாகக் கருதப்பட்டு மகரி என்று அழைக்கபட்டனர்.

பெரும்பான்மை தேவதாசிப் பெண்கள் சதிர் கச்சேரி எனப்படும் நடனக் கலைஞர்களாகவே தங்கள் வாழ்க்கையைக் கழித்தனர். இசை அல்லது நடனத்தில் திறமை இல்லாதவர்கள், கோயிலைச் சுத்தப்படுத்துவது, தண்ணீர் இறைப்பது, கவரி வீசுவது, பூ கட்டுவது, அலங்காரம் செய்வது, மடப்பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்வது என்று பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

தேவதாசிகள் சமூகத்திலேயே நான்கு வகையான பிரிவுகள் இருந்தன. ஒன்று, தாங்க ளாகவே விரும்பி கோயிலுக்குத் தங்களை அர்ப் பணித்துக்கொண்டவர்கள். அடுத்தது, பெற்றோரால் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்படுபவர்கள். மூன்றாவது, தீட்சை பெற்றுக்கொண்டு கோயிலில் இறைப் பணி செய்தவர்கள். கடைசி, கோயில் வளாகத்தினுள் நடனம் ஆடும் அலங்காரத் தாசிகள். ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தேவதாசி முறை நிறுவனப்படுத்தப்பட்டு, கோயில் பணியாளர்களாக தேவதாசிகள் நியமிக்கப்பட்டனர். தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த காலத்தில் ராஜராஜ சோழன் 400 தளிச்சேரிப் பெண்களை நியமித்தான் என்றும், அவர்கள் வசிப்பதற்காக தளிச்சேரி உருவாக்கப்பட்டது என்றும் சோழர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சோழர் காலத்தில் தேவதாசிகளுக்கு இலச்சினை இடும் பழக்கம் இருந்தது. சைவக் கோயிலில் ஊழியம் செய்யும் தேவதாசிகளுக்கு, சுடுகோலால் சூல வடிவத்தில் இலச்சினை பொறிக்கப்பட்டது. வைணவக் கோயிலில் சக்கர வடிவம் பொறிக்கப் பட்டது. தேவதாசியாக இருப்பவர் காதலித்தாலோ அல்லது வேறு ஆண்களுடன் பழகினாலோ, சுடுகோலால் தொடையில் சூடு போடும் பழக்கமும் இருந்தது. அதுபோலவே, விஜயநகரப் பேரரசின் காலத்தில் தேவதாசிகளுக்கு என்று தனி வரி விதிக்கப்பட்டது.

தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று முனைந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அதற்கான மசோதாவைக் கொண்டுவந்தபோது, 'தேவதாசியாக இருப்பது தெய்வத் தொண்டு, அப்படி இருப்பவர்களுக்கு அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் மோட்சம் கிடைக்கும்’ என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. அதைக் கேட்ட முத்துலட்சுமி ரெட்டி, 'அப்படி நினைப்பவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு பொட்டுக்கட்டி தேவதாசி ஆக்கி மோட்சத்துக்கு அனுப்பிவைக்கலாமே?’ என்று சூடாகக் கேட்டதற்குப் பிறகே எதிர்ப்புக் குரல்கள் அடங்கின.

தேவதாசி தடைச் சட்டம் கொண்டுவரக் கூடாது என்ற தீர்மானத்தை 1927-ல் சிதம்பரத்தில் நடந்த தேவதாசிகள் ஒழிப்பு மாநாடு நிறைவேற்றியது. இதை தேவதாசி பெண்கள் அமைப்பினர் நடத்தினர். அதனால், முத்துலட்சுமி ரெட்டியை எதிர்த்து தேவதாசிகள் போராட்டம் நடத்தி, ஊர்வலம் சென்றனர். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக இந்தச் சட்டம் 1929-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி அமல் படுத்தப்பட்டது.

சட்டம் கொண்டுவந்தபோதும் கோயிலில் இருந்து தேவதாசி முறையை முத்துலட்சுமி அம்மையாரால் ஒழிக்க முடியவில்லை. அதன் பிறகு, 1947-ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது, பெண்களைக் கோயிலுக்கு அர்ப்பணிப்பதைத் தடுக்கும் வகையில் 'சென்னை தேவதாசி தடுப்பு மசோதா’ தாக்கல் செய்யப்பட்டு, அது சட்டமாகியது. அதன் பிறகே, தேவதாசி முறை கைவிடப்பட்டது.

இந்த மூன்று சட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு பின்னால், எண்ணிக்கையற்ற பெண்களின் வலியும் வேதனையும் படிந்து இருக்கிறது. இதை ஆவேசமாக எதிர்த்த அரசியல் தலைவர்கள், நீதிமான்கள், பழைமைவாதிகள் இன்று அடங்கி ஒடுங்கிப் போய்விட்டனர். பெண் கல்வி முதன்மையாக்கப்பட வேண்டும் என அன்று ஒலித்த குரல்தான், இன்று சகல துறைகளிலும் பெண்களின் சாதனைக்கு வித்திட்டு இருக்கிறது. அந்த வகையில் ராஜாராம் மோகன்ராய், ஹர் பிலாஸ்,  சாரதா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகிய நான்கு பேரும் என்றும் நன்றிக்கு உரியவர்கள்.

எகிறும் விலைவாசி: இன்னும் அதிகரிக்கவே செய்யும்!

நிலநடுக்கம் வந்தால்கூட பெரிதாகப் பயப்படாத நம் மக்கள் விலைவாசி உயர்வு என்றவுடன் அதிருகிறார்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறுவதே இதற்கு காரணம். இந்த விலைவாசி எதிர்காலத்தில் குறையவே குறையாது; இன்னும் கொஞ்சம் கூடவே செய்யும் என பல அனலிஸ்ட்கள் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறார்கள். எதிர்காலத்தில் விலைவாசி எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு முன்பு அனலிஸ்ட்கள் சொல்லும் காரணத்தை முதலில் பார்த்துவிடுவோம்.
 
மழை குறைவு!

80 சதவிகித இந்தியாவுக்கு நீர் ஆதாரத்தைக் கொடுப்பது தென்மேற்கு பருவமழை. ஆனால், அது தற்போதைய நிலவரப்படி 22 சதவிகிதத்துக்கும் குறைவான அளவே பெய்திருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான விளைச்சல் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக இருக்கிறது. உணவுப் பொருளின் உற்பத்தி குறைவாக இருக்கும்போது விலை உயருவது சகஜமே!
நிலங்கள் குறைவு!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தொழிற்புரட்சி தேவையாக இருக்கிறது. இதற்காக நாம் நமது விவசாய நிலங்களை கடுமையாக சூறையாடி வருகிறோம். இது மட்டுமல்லாமல் சாலைகள் அமைக்க, விமான நிலையம் அமைக்க என்று பலவிதங்களில் விவசாயத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறோம். இதனாலும் விவசாய உற்பத்தி மிகப் பெரிய பாதிப்படைந்திருக்கிறது.
தேவை அதிகரிப்பு!

இப்போது நடுத்தர வர்க்கத்திடம் பணப்புழக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதனால் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுக்காகச் செய்யும் செலவுகள் அதிகமாகவே இருக்கிறது. ஒரு பொருளை வாங்குவதற்கு அதிகம்பேர் இருக்கும்போது பொருட்களின் விலை அதிகரிக்கவே செய்யும். மேலும், உலகத்தின் வெப்பம் அதிகரிக்கும்போது விவசாய உற்பத்திக் குறையும்.

இப்படி பல்வேறு காரணங்களால் பணவீக்கம் இப்போதைக்குக் குறைய வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். இது இப்படி இருக்க, எதிர்காலத்தில் பணவீக்கம் எப்படி இருக்கும்?, மேலே சொன்ன காரணங்களால் விலைவாசி உயருமா? என கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் மோகன சுந்தரத்திடம் கேட்டோம்.


''முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பணவீக்கம் என்பது இன்றியமையாதது. ஆனால், அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில்தான் பிரச்னை.  சீரான பணவீக்கம்தான் இந்தியா வளர்ச்சி பாதையில் இருக்கும் என்பதைக் காட்டுகிறது.  பணவீக்கமே இல்லை என்றால் நாம் வளரவில்லை என்றுதான் அர்த்தம்.அதற்காக அதிகளவு பணவீக்கம் இருந்தால் வளர்ச்சியா என்றால் அதுவும் இல்லை. சராசரியாக ஐந்து முதல் ஆறு சதவிகிதம் வரைக்கும் இருக்கலாம். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருப்பது ஆபத்தானது. ஆனால், பணவீக்கத்தை நாம் குறைக்க முடியும். அதை செய்வதற்கான வழிமுறைகளை நாம் பின்பற்றுவதில்லை.

விவசாய நிலங்கள் குறைவாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும், நம் உற்பத்தி ஓரளவுக்கு இருக்கிறது. இப்போதைய பிரச்னையே நம்மிடம் இருக்கும் உணவு தானியங்களை எப்படி மக்களிடத்தில் கொண்டு செல்வது என்பதில்தான் இருக்கிறது. அதில் இருக்கும் பிரச்னைகளை களைந்தாலே விலை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும், பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கு சப்ளை டிமாண்ட் தாண்டி குரூட் ஆயில் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில மேக்ரோ பிரச்னைகளும் காரணங்களாக இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில், நடுத்தர காலத்தில் அதாவது ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்துக்கு பணவீக்கம் அதிகமாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. அரசின் பல்வேறு கொள்கை முடிவுகள், பருவமழை உள்ளிட்ட பல விஷயங்கள் இருப்பதால், அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது'' என்றார்.

எல்லா விஷயங்களும் சரியாக இருந்தாலே பணவீக்கத்தை தடுக்க முடியாது என்கிறபோது, இப்போது எந்த விஷயமும் சரியாக இல்லாத நிலையில் பணவீக்கம் எப்படி குறையும் என்று எதிர்பார்க்கலாம்? 

 

பங்குச் சந்தை என்றால் என்ன?


'மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. பீடி சிகரெட் பிடிக்கமாட்டார்... வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது... சீட்டுக்கட்டை கையால்கூடத் தொடமாட்டார். இவ்வளவு ஏன், பங்குச் சந்தையில்கூட பணம் போடலைன்னா பாத்துக்கோங்களேன்!'

இப்படிப்பட்ட பட்டியலில்தான் இருக்கிறது பங்குச் சந்தை... இன்னமும் பலருக்கு அது கெட்டசகவாசம்தான். உங்களுக்கும் அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது இருந்தால் இனியாவது அதை மாற்றிக் கொள்ளுங்கள்... கவனமாகக் கையாண்டால் நிச்சயமாக அது லாபத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல வழிதான். உடனடியாக இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை பற்றிய உங்கள் கருத்தை நிச்சயமாக மாற்றிக்கொள்வீர்கள்.

கம்பெனி நாலு விதம்!

கம்பெனி... கம்பெனினு சொல்றோமே அதிலே நாலுவிதம் இருக்கு. முதல்ல தனி ஆள் சொந்தமாக நடத்துற கம்பெனி. அடுத்து ரெண்டு மூணுபேர் சேர்ந்து நடத்துற பார்ட்னர்ஷிப் கம்பெனி... அடுத்து, கொஞ்சபேர் கூட்டாச் சேர்ந்து பணம் போட்டு நடத்துற பிரைவேட் லிமிடெட் கம்பெனி. இந்த மூணுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாலாவதா இருக்கற பப்ளிக் லிமிடெட் கம்பெனிதான் நமக்குத் தேவை! ஏன்னா, அந்த கம்பெனிக்கும் நமக்கும் தொடர்பு இருக்கே... பின்னே அந்த பப்ளிக் நாமதானே!

சிம்பிளாச் சொல்லணும்னா பப்ளிக்கா வந்து பலபேரை கூட்டாளியாச் சேர்த்துக்கிட்டு அவங்ககிட்டேயும் பங்கு வாங்கி தொழில் நடத்தும் கம்பெனிதான் பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதுல கூட்டாளியா இருக்கறவங்க பங்குதாரர். அட, நீங்கதாங்க அது!

அதாவது ஒரு கம்பெனியை நடத்துறதுக்கு பத்து கோடி ரூபா தேவைனு வெச்சுக்கோங்க... அதை கோடி பேர்கிட்டே பத்து பத்து ரூபாயா வாங்கி பணத்தைச் சேர்த்தா அது பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அந்த கம்பெனியை நடத்தி, அதில் கோடி ரூபா லாபம் வந்ததுன்னா அதை பத்து ரூபாய் கொடுத்த ஆளுக்கு ஒரு ரூபாய் லாபம்னு கணக்கு வெச்சு பிரிச்சுக் கொடுத்திடலாம். இதுதான் பங்குக் கணக்கு.

பங்குச் சந்தைன்னா என்ன?

இப்போ உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்குமே...அந்த கம்பெனியில பத்து ரூபாய் கொடுத்து பங்குதாரர் ஆகலாம்னு எப்படித் தெரிஞ்சுக்கறதுன்னு... அதைக் கூவிக் கூவி விக்கறதுக்குனு சந்தை இருக்கு... நம்ம ஊர் வாரச் சந்தை மாதிரியே... அதுக்குப் பேர்தான் பங்குச் சந்தை!

பாயின்ட்டுக்கு வந்துட்டோமா..? கம்பெனிகள் எல்லாம், 'எங்க கம்பெனிப் பங்குகளை வாங்கிக்கோங்க'னு சந்தையில் கடைவிரிப்பாங்க... வேணுங்கறவங்க பங்குகளை வாங்கி அந்த கம்பெனியில பங்குதாரர் ஆவாங்க... இப்படிப் பங்குகளை விக்கிற இடம்தான் பங்குச் சந்தை. 'சரி, இது ஒருநாள் வியாபாரம் தானே..? முதல்ல பங்கை வாங்கிட்டா... அதுக்குப் பிறகு பணம் போட்டவருக்கும் கம்பெனிக்கும்தானே நேரடி பேச்சுவார்த்தை... சந்தைக்கு என்ன வேலை'னு கேக்கத் தோணுதா..

ஐ.பி.ஓ... செகண்டரி சந்தை..!

மேலே சொன்னோமே... கம்பெனிகள் தங்களோட பங்குகளை கடைவிரிக்கும்னு அதுக்குப் பேர்தான் பங்கு வெளியீடு! இங்கிலீஷில் ஐ.பி.ஓ-னு சொல்வாங்க. அதாவது, ஒரு கம்பெனி தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துறதுக்காக பங்குச் சந்தைக்கு வந்து பங்குகளை வெளியிடுவாங்க... இந்தப் பங்கு விற்பனையை, மெர்ச்சென்ட் பேங்க்கர்ஸ் அப்படிங்குற நிதி நிறுவனங்கள் முன்னாடி நின்னு நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நிதி திரட்டிக் கொடுக்கும். ஒரு கம்பெனி பங்கு வெளியிட்டாச்சுன்னா அந்த கம்பெனி சந்தைக்கு வந்தாச்சுனு அர்த்தம்.

இப்படி ஒரு கம்பெனி ஐ.பி.ஓ. வரும்போது அது நல்ல கம்பெனி... நல்ல லாபம் கிடைக்கும்னு நினைச்சு பல பேர் அந்தப் பங்குகளை அடிச்சுப் பிடிச்சு வாங்கிடுறாங்கனு வச்சுக்கோங்க... அப்படின்னா சிலருக்கு அந்தப் பங்கு கிடைக்காமப் போயிடும் இல்லையா? ஆனா அவங்க வாங்கறதுக்கும் ஒரு வாய்ப்பு வரும். அதுக்கு செகண்டரி மார்க்கெட் அதாவது இரண்டாம் நிலை சந்தைனு பேரு!

ஐ.பி.ஓ-வுல வாங்காதவங்க அதுக்குப் பிறகு இந்த செகண்டரி மார்க்கெட்டுல வாங்கிக்கலாம். ஐ.பி.ஓ-வில பங்குகளை வாங்கினவங்க அந்தப் பங்குகள் வேண்டாம்னு நினைச்சோ அல்லது நல்ல டிமாண்ட் இருக்கிறதால லாபத்துக்கு வித்துடலாம்னு நினைச்சோ விற்க முன்வருவாங்க. அந்தச் சமயத்துல அந்தப் பங்குகளை மத்தவங்க வாங்கிக்கிடலாம். ஆனா ஒரு வித்தியாசம்... ஐ.பி.ஓ-விலே கம்பெனி நிர்ணயம் செஞ்ச விலைக்கு பங்கு கிடைக்கும். ஆனா, செகண்டரி மார்க்கெட்டுல எந்த விலைக்கு விற்க விரும்பறாங்களோ அந்த விலை கொடுத்துதான் வாங்கணும். பத்து ரூபாய் பங்குன்னா பத்து ரூபாய்தானே இருக்கணும். அது எப்படி அதிகமாகும்னு நினைக்கிறீங்களா..?

நாம பசுமாடு ஒண்ணை பத்தாயிரம் ரூபாய்க்கு ஒருத்தர்கிட்ட வாங்குறோம். வாங்கின பிறகு நாம எதிர்பார்த்ததை விட அது அதிகமா பால் கறக்குதுனு வச்சுக்குவோம்... இப்போ அந்த மாட்டை விற்க நினைச்சா அதே பத்தாயிரத்துக்கா விற்போம்? கூடுதல் லாபம் வச்சுதானே விற்போம். அப்படித்தான் நல்ல லாபம் கொடுத்தா... பங்கோட மதிப்பும் சந்தையில கூடும். பத்து ரூபாய்க்கு வாங்கின பங்கு நூறு ரூபாய்க்குகூட போகும்!

ஐ.பி.ஓவுல கம்பெனி நிர்ணயம் பண்ணின விலைக்குத்தான் பங்கு கிடைக்கும்னு முதல்ல பார்த்தோமே... அந்த காலமும் இப்போ மலை-யேறிடுச்சு. முன்ன-யெல்லாம் பத்து ரூபாய் மதிப்-புள்ள பங்குகளை ஒரு கம்பெனி வெளியிடு-துன்னா, அந்த பத்து ரூபாய்க்கே வாங்கலாம். ஆனா, இப்போ பிரீமியம் ரேட்டுங்கற பேர்ல ஐம்பது மடங்கு, நூறு மடங்கு அதிகமாத்தான் கம்பெனியே விலை நிர்ணயம் பண்ணுது.

இப்போ ஒரு விஷயம் புரிஞ்சிருக்குமே... பங்குச் சந்தைக்கு வர்ற கம்பெனிகள்ல நல்ல திறமையான கம்பெனியோட பங்குகளை வாங்கினா, அது நமக்கு நல்ல லாபத்தை சம்பாதிச்சுக் குடுக்கும்.
 

Saturday, August 11, 2012

ஒலிம்பிக்ஸ் - போதுமா இந்தப் பதக்கங்கள்?

‘நான் குத்துச்சண்டையில் ஆர்வம் காட்டியபோது, பெண்களுக்கு எதற்குக் குத்துச்சண்டை என்று கேலி செய்தார்கள். திருமணத்துக்குப் பிறகு, இனிமேல் அவ்வளவுதான் என்றார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு, இனி எப்படி விளையாட்டில் ஈடுபடமுடியும் என்று கேள்வி எழுப்பினார்கள். உலக சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து ஜெயித்துதான் என் மீதான விமர்சனங்களை ஒவ்வொரு முறையும் கடந்து வந்திருக்கிறேன்,’ -குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் ஒலிம்பிக்ஸ் சாதனை, இத்தனை தடைகளைத் தாண்டிப் பெற்றதுதான். லண்டன் ஒலிம்பிக்ஸ், மேரி கோமுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்திருக்கிறது. 1900லிருந்து இந்திய அணி, ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டு வருகிறது. இந்தமுறைதான் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளது. லண்டன் ஒலிம்பிக்ஸுக்காக இந்திய அரசு 135 கோடி ரூபாயை, கடந்த இரண்டு வருடங்களில் செலவழித்திருக்கிறது. கடைசி நேரத்தில், பணத்தை வாரி இறைத்தால் மட்டும் போதாது என்பதற்கு நிறைய படிப்பினைகள் கிடைத்திருக்கின்றன.
லண்டனில் வெள்ளிப் பதக்கம் வாங்கிய விஜகுமாருக்கு சந்தோஷமே இல்லை. ஹிமாசலப் பிரதேச அரசு ஒரு கோடி ரூபாய் அளிக்க முன்வந்ததற்கு வருத்தம்தான் தெரிவிக்கிறார். இத்தனை வருடங்களாக என்ன செய்துகொண்டிருந்தது என்று கேள்வி எழுப்புகிறார். ‘தேசிய அளவில் 110 போட்டிகளில் வெற்றி அடைந்திருக்கிறேன். 45 சர்வதேசப் பதக்கங்களும் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய சாதனையை யாரும் அறிந்துகொள்ளவுமில்லை; மதிப்பளிக்கவுமில்லை. நான் பணிபுரியும் இந்திய ராணுவத்திலும் இதே நிலைமை தான். பயிற்சிகளுக்கான வசதிகளைத் தந்து உதவினாலும், என் சாதனைகளைக் கௌரவப்படுத்தும் விதத்தில் எந்தப் பதவி உயர்வும் எனக்கு அளிக்கப்படவில்லை. 2010 காமன்வெல்த் கேம்ஸில் மூன்று தங்கங்களைப் பெற்றபிறகும் இந்திய ராணுவத்தில் இன்னமும் சுபேதாராகத்தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்,’ என்று அவர் குமுறுகிறார். இந்த அவமானங்களும் காயங்களும் எல்லா இந்திய விளையாட்டு வீரர்களிடமும் புதைந்துகிடக்கின்றன.
சானா நேவாலுக்கும் ஆரம்பத்தில் இதே நிலைமைதான். எந்த ஸ்பான்ஸரும் இல்லாததால், மகளிர் பேட்மிண்டன் தொடர்பான செலவுகளுக்காக ஆறுமுறை பி.எஃப்-லிருந்து பணம் எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது, சானாவின் தந்தைக்கு. மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றுதான் ஒவ்வொருமுறையும் காரணம் சொல்லவேண்டியிருந்தது. சானா போன்ற ஒரு வீரரை இளம் வயதிலேயே கண்டுகொள்ளாத விளையாட்டுத் துறையை என்னவென்று விமர்சிப்பது? ஜெயித்தபிறகு கொட்டிக் கொடுக்கப்படுகிற கோடிகளையெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு கொடுத்திருந்தால் லண்டனில் தங்கம் வென்றிருப்பார், சானா. அரசின் அலட்சியத்தால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதில்லை.

ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏராளமான பண உதவிகளும் அனுசரணைகளும் கிடைக்கின்றன. ஆனால், பதக்கத்துக்கு அருகில் சென்ற வீரர்களுக்குத்தான் இப்போது தனி கவனம் தேவைப்படுகிறது. கிருஷ்ணா பூனியா, கே.டி. இர்ஃபான் போன்ற வீரர்கள் கடுமையான போட்டிகளினால்தான் பதக்கம் வெல்லாமல் போனார்கள். இவர்களை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியது அரசின் பொறுப்பு. ஐந்தாண்டுத் திட்டம் போல நீண்டகால திட்டங்களால் மட்டுமே கௌரவமான நிலைமையை இந்திய வீரர்கள் அடையமுடியும். ஜமைக்கா போன்ற ஒரு சிறிய நாடு, ஒலிம்பிக்ஸ் அரங்கில் பீடு நடைபோடுகிறது. தமிழ்நாட்டை விடவும் குறைவான மக்கள் தொகை கொண்ட கொரியா, நான்காம் இடத்தைப் பிடிக்கிறது. ஆனால், வெள்ளியிலும் வெண்கலத்திலும் திருப்தி அடையும் தேசமாகி விட்டது, இந்தியா.

கியூரியாசிடி பயணம் கைவீசம்மா கைவீசு... செவ்வாய்க்குப் போகலாம் கைவீசு!


அமெரிக்கா, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய ஆளில்லா விண்கலம் வான்வெளியில் எட்டு மாதகாலம் பயணம் செய்து, செவ்வாய் கிரகத்தில் கடந்த திங்களன்று தரை இறங்கியது. ஆறு கால்கள், ஒரு டன் எடை கொண்ட அதன் பெயர் கியூரியாசிடி. இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவியல் சாதனையிது. கியூரியாசிடியுடன் நாம் கேட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கிறார் தேசிய விருது பெற்ற தமிழ் அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை.

செவ்வாய் கிரகம் - சிறுகுறிப்பு?

செவ்வாய் ஒரு பொட்டல் வெளி. அங்கே எந்த உயிரினமும் கிடையாது. எப்போதோ அங்கே ஆறுகள் ஓடியதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இப்போது பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். செவ்வாயின் கற்று மண்டலம், பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பூமியின் காற்றுமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 21 சதவிகிதம். ஆனால் செவ்வாயில் 0.1 சதவிதம்தான். கார்பன்-டை-ஆக்சைடு தான் மிக அதிகம். ஆனால், உருவத்தில் பூமியின் பாதி அளவுதான் செவ்வாய்."

செவ்வாய் ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு ஏன் இத்தனை ஆர்வம்?

ஒன்பது கோள்களில் புதன், வெள்ளி இரண்டும் மிக வெப்பமானவை. அந்த வெப்பத்தில் உயிரினங்கள் வாழ முடியாது. வியாழன், யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்றவை மிக குளிர்ச்சியானவை. அங்கே விழும் சூரிய வெளிச்சத்தில் வெப்பம் இருக்காது. எனவே மனிதன் வாழ முடியாது. மனிதன் காலடி வைக்க முடியுமென்றால் அது செவ்வாயில் மட்டுமே. அதனால்தான் செவ்வாய் மீது அமெரிக்காவுக்கு அத்தனை அக்கறை." 

வேறு எந்தெந்த நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன?

இதை முதலில் முயற்சித்தது ருஷ்யாதான். ஆனால் அதன் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ருஷ்ய விண்கலமான மார்ஸ்-3, செவ்வாயில் தரை இறங்கிய சில வினாடிகளிலேயே செயலிழந்துவிட்டது. ஐரோப்பிய கூட்டமைப்பினர் அனுப்பிய விண்கலம், செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. சீனாவின் முயற்சி வெற்றி பெறவில்லை. ஜப்பான் அனுப்பிய விண்கலம், விண்வெளிக்குச் சென்ற பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. வைகிங் 1, வைகிங் 2, பாத் ஃபைண்டர், ஆபர்சூனிடி, ஸ்பிரிட், ஃபீனிக்ஸ் என்று ஆறு அமெரிக்க விண்கலங்கள் செவ்வாயில் ஏற்கெனவே தரை இறங்கி உள்ளன. இப்போது கியூரியாசிடியும் வெற்றி கரமாகத் தரை இறங்கி இருக்கிறது. இந்தியா, செவ்வாக்கு ஒரு விண்கலத்தை அனுப்பப் போகிறது. அது அந்த கிரகத்தைச் சுற்றி வருமே தவிர, அங்கே தரை இறங்காது."

என்னென்ன சவால்கள்?

முதலில், விண்கலம் செலுத்தப்படும் ராக்கெட், பூமியிலிருந்து மணிக்கு 40 ஆயிரம் கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும். இவை நேர்கோடு பாதையில் சென்று செவ்வாயை அடைவது இயலாது. வளைந்த பாதையில்தான் செல்ல இயலும். அப்படிப் பாதையில் மாற்றம் செய்ய பூமியிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்க வேண்டும். செவ்வாயை நெருங்கும்போது, செவ்வாயின் பாதையும், விண்கலத்தின் பாதையும் இசைவாக இருக்க வேண்டும். விண்வெளியில் மணிக்கு 21 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் விண்கலம், செவ்வாயை நெருங்கும்போது வேகத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும். இறுதியாக செவ்வாயின் தரையில் இறங்கும் போதுதான் பெரும் சவால். அப்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 3 கி.மீ. ஆக இருக்க வேண்டும். அதிவேகத்தில் இறங்கினால், அதீத வெப்பம் காரணமாக விண்கலமே வெடித்துச் சிதறிவிடும். பூமியிலிருந்து பிறப்பிக்கப்படும் ஒரு கட்டளை, செவ்வாயில் உள்ள விண்கலத்தைச் சென்றடைய சுமார் 14 நிமிடங்கள் பிடிக்கும்."

கியூரியாசிடி - பெயர் காரணம்?

வழக்கமாக அமெரிக்காவில் இது போலத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என மாணவ - மாணவிகளுக்குப் போட்டி வைப்பார்கள். அப்படி இதற்கும் ஒரு போட்டியில், ஒரு சிறுமி சூட்டிய பெயர் தான் கியூரியாசிடி."

கியூரியாசிடி வேலை?

கியூரியாசிடியின் எல்லா பகுதிகளிலுமாக ஏராளமான கேமராக்கள் உள்ளன. அவற்றின் மூலமாக கறுப்பு-வெள்ளை, கலர், முப்பரிமாணப் புகைப்படங்களை எடுத்து, பூமிக்கு அனுப்பி வைக்கும். செவ்வாயின் மண்ணில் இருக்கும் தாதுப் பொருட்கள், நீர்வளம், மண்வளம் போன்றவற்றைப் பரிசோதனைகள் செய்து, பூமிக்கு உடனுக்குடன் அனுப்பும்."

சாமானிய மக்களுக்கு என்ன பயன்?

இதுபோன்ற உயர் தொழில்நுட்ப விஞ்ஞான ஆராய்ச்சிகளால் உடனடியாக என்ன பயன் என்று கண்டறிய முடியாது. எதிர்காலத்தில் உலகம் முழுமைக்கும் இவை நிச்சயம் பயன்படும்."

செவ்வாயில் மனிதன் இறங்குவது எப்போது?

சூரிய மண்டலப் பயணம் மாபெரும் ஆபத்துகள் நிறைந்தது. சவால்கள் அதிகம். அதன்பின் அங்கே இறங்குவது, தங்கி ஆராவது, உணவு மற்றும் தண்ணீர் பிரச்னைகள் என அனைத்தையும் சமாளிக்க வழிகண்டு விட்டால், மனிதன் செவ்வாயில் இறங்கிவிட முடியும்."

வெறும் கண்களால் செவ்வாயைப் பார்க்க முடியுமா?

கொஞ்சம் கியூரியாசிடியோடு, சூரியன் மறைந்த பிறகு மேற்கு நோக்கிப் பார்த்தால், சிவந்த நிறத்தில் சிறிய உருவில் செவ்வாய் கிரகத்தைப் பார்க்கலாம்."
எஸ்.சந்திரமெளலி