Search This Blog

Thursday, January 31, 2013

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?

உல கின் 60% மக்கள் அன்றா டம் உண்பது (நம்மையும் சேர்த்துதான்) வெள்ளை அரிசியே! வெள்ளை அரிசியும் நல்ல அரிசிதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஹீரோவாக இருந்த இந்த அரிசி, வில்லனாக மாறியது அண்மையில் தான். முன்பெல்லாம், கைக்குத்தல் அரிசியையே நாம் உபயோகித்து வந் தோம். அப்போது நம்நாடு சர்க்கரை நோயில் உலகில் முதலிடத்தில் இல்லை. இன்று, உரல், உலக்கை என்பதெல்லாம், காட்சிப் பொருளாகவே மியூசி யத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கி றோம். இன்றைய தலை முறை இளம் பெண்களில் பலரும் உரல், உலக்கையை பார்த்திருக்கக்கூட மாட் டார்கள்.
 
அரிசியில் நான்கு பகுதிகள் உண்டு. வெளிப்பகுதியான உமியை நீக்கிவிடுகிறோம். அடுத்த பகுதியான தவிடுதான் முக்கியமான பகுதி. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. தவிடு நீக்காத அரிசி, பழுப்பு அரிசி (Brown rice)என்றும், தவிடு நீக்கிய அரிசி வெள்ளை அரிசி (White rice) என்றும் அழைக்கப்படுகின்றன. கைக்குத்தல் அரிசி முதல் வகையைச் சார்ந்தது. இந்த இரண்டு அரிசிக்கும் உள்ள ஊட்டச்சத்து வித்தியாசங்களைப் பட்டிய லிட்டால், கைக்குத்தல் அரிசியின் சிறப்பு புரியும்.ஒரு கப் (160 கிராம்) அரிசியில் உள்ள உணவுச் சத்துக்கள் பின் வரும் அட்டவணையில்...
 
நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து, வைட்டமின் சத்துக்கள் போன்றவையெல்லாம் அதிகமாகவும், கொழுப்பு போன்றவை குறைவாக வும் இருக்க வேண்டும். அதுதான் உடலுக்கு நல் லது. இங்கே இரண்டு அரிசியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... வெள்ளை அரிசியைவிட, பழுப்பு அரிசி பல மடங்கு உயர்ந்தது என்பது புரியும்!

அரிசியைத் தீட்டும் வழக்கம் ஆங்கிலேயர் களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுப்பு நிற அரிசியை பரிசுத்த வெள்ளை ஆக்கிவிட வேண்டும் என்கிற வெறியில் அவர்கள் அதைத் தீட்டினார்கள். முதலில் 2% தீட்டினார்கள். பின்னர் 5% தீட்டினார்கள். இப்போது 12% தீட்டப்படுகிறது. விளைவு - இன்றைய அரிசி மல்லிகைப் பூபோல வெண்மையாகக் கிடைக் கிறது. இதன் மற்றொரு விளைவு - ஏற்கெனவே சத்துக்கள் இழந்த வெள்ளை அரிசி, தற்போது அத்தனை சத்துக்களையும் மொத்தமாக இழந்து, வெறும் சர்க்கரைப் பண்டமாக மாறிவிட்டது.

1963-ல் நம் நாட்டில் வெறும் ஏழு ரப்பர் - ரோலர் அரிசி மில்கள்தான் இருந்தன. இதுவே 1999-ல் 35,088 மில்களாக அதிகரித்தன. தற்போது இன்னும் பெருகி, அரிசியை அரைத்துத் தள்ளு கின்றன. சர்க்கரை நோயின் தாக்கமும் இதே வேகத்தில் அதிகரித்து வருகிறது.

அரிசியின் வெளிப்புறத் தவிடு, மருத்துவ ரீதி யாக எவ்வளவு முக்கியமானது என்பதைக் கண்டு பிடித்த வரலாறு சுவையானது. 1884-ல் கானிரோ என்ற ஜப்பானிய கடற்படை டாக்டர், ஜப்பானில் இருந்து ஹவாய் நோக்கிப் பயணம் செய்தபோது, 9 மாத பயணத்தில் 169 கப்பல் ஊழியர்களில் 76 பேருக்கு 'பெரிபெரி' (Beriberi)என்கிற நோய் தாக்கி, 25 பேர் உயிர் இழந்ததைப் பார்த்தார் ('பெரிபெரி’ நோய் - நரம்பு பாதிப்பால் கை, கால் வலி, அசதி, பசியின்றி உடல் எடை குறைதல், இதய செயல்திறன் பாதிப்பு, மூச்சுத் திணறல், உடல் வீக்கம், மூளை பாதிப்பால் சுயநினைவு இழத்தல் முதலியவை ஏற்பட்டு இறுதியாக மரணம்கூட ஏற்படலாம்).


கப்பல் ஊழியர்களை பாதித்த இந்த நோயை ஆராய்ந்த டாக்டர் கானிரோ, அவர்களுக்கு  பட்டை தீட்டிய பச்சரிசி சாதம் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டதை கவனித்தார். உடனே, இன்னொரு கப்பலில் இதே அளவு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, இதே பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். இம்முறை, அரிசி தவிர, பார்லி, காய்கறிகள், மீன், இறைச்சி போன்ற உணவும் பரிமாறப்பட்டது. இதில் 14 பேருக்கு மட்டுமே 'பெரிபெரி’ வந்தது. ஆனால், யாரும் இறக்கவில்லை. ஆகவே, உணவுதான் இந்த வியாதிக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.

ஆனாலும், அடுத்த 13 வருடங்கள் கழித்து, 1897-ல்தான் டாக்டர் கிறிஸ்டியன் ஜெக்மேன் மற்றும் டாக்டர் ஃபெரடரிக் ஹாப்கின்ஸ் ஆகியோர், அரிசியின் தவிடு கொடுத்தால்... இந்நோய் தடுக்கப்படும்/குணமடையும் என்று பரிசோதனைகள் மூலம் நிரூபித்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக, 1929-ல் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

'பெரிபெரி’யின் தாக்கம் இப்போதும் ஆங் காங்கே உண்டு. ஆனாலும், வைட்டமின் பி1 வேறு உணவுகள் மூலம் கொஞ்சமாவது கிடைத்து விடுவதால், பெரும்பாலானோர் இதிலிருந்து தப்பிவிடுகிறார்கள். மதுவுக்கு பி1 சத்தை அழிக்கும் குணம் உள்ளதால், மதுவுக்கு அடிமையானோர் பலரிடம் இந்த வியாதியை அடிக்கடி பார்க்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்... அரிசியைத் தீட்டுவதற்கு நமக்குக் கற்றுத் தந்த ஆங்கிலேயர்கள், தாங்கள் மட்டும் 'பெரிபெரி’, சர்க்கரை நோய் இவற்றில் இருந்து தப்பிவிடுகிறார்கள். அரிசியில் இருந்து பி1 மற்றும் சத்துக்களை நீக்கிய பிறகு, செயற்கையாக அவற்றை மீண்டும் அரிசியில் கலந்து விடுகிறார்கள் - சமையல் உப்பில் அயோடின் கலப்பதைப்போல (உப்பு கதை பற்றி பிறகு விரிவாக பேசுவோம்). மேலும், கோதுமை, நார்ச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி போன்ற வற்றை அவர்கள் வெகுவாக எடுத்துக் கொள் கிறார்கள். நம்மவர்களோ, நோபல் பரிசு பெற்றுத் தந்த தவிட்டை மாடுகளுக்குக் கொடுத்துவிட்டு, தீட்டிய அரிசிச் சோற்றை உண்டு, சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது - பச்சரிசியா... புழுங்கல் அரிசியா என்பது. பச்சரிசி என்பது பட்டைதீட்டப்பட்ட வெள்ளை அரிசி. புழுங்கல் அரிசி என்பது, நெல்லை தண்ணீரில் ஊற வைத்து, அவித்து, அதன்பின் தீட்டுவது. இப்படி அவிக்கும்போது, தவிட்டுப் பகுதியில் உள்ள பல சத்துக்கள் சற்று உருகி, உள்ளே உள்ள மாவுப்பகுதியில் கலந்து விடுகின்றன. ஆகவே, தீட்டப்பட்ட பிறகுகூட, பச்சரிசியை விட, புழுங்கல் அரிசியில் நிறைய சத்துக்கள் மிஞ்சியிருக்கின்றன என்பதே உண்மை.

ஊட்டப்பொருட்களையும் இழந்து, நச்சுத் தன்மையை அடைந்துவிட்ட ஆலை அரிசியை நாம் ஏன் உண்ண வேண்டும்? கைக்குத்தல் அரிசிக்கு மாறலாமே? இல்லை, ஆலை அரிசி தான் விதி என்றால்கூட, குறைந்தபட்சம் புழுங்கல் அரிசிக்கு ஏன் மாறக்கூடாது?!

 


Wednesday, January 30, 2013

எனது இந்தியா (பிரம்ம சமாஜம் !) - எஸ். ராமகிருஷ்ணன்.......

இந்திய சமூக வரலாற்றில் பிரம்ம சமாஜத்தின் தாக்கமும் பங்களிப்பும் தனித்துவம் கொண்டது. இந்தச் சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ராஜாராம் மோகன் ராய். மூன்று முக்கியக் கவனங்களைக் கொண்டிருந்தது பிரம்மசமாஜம். மூடநம்பிக்கைகளை களைந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது போன்ற ஒருமித்த, எளிய, சடங்குகள் அற்ற ஆன்மிகத்தை முன்வைப்பது இதன் முதல் கவனம். அடுத்தது, இந்தியச் சமூகத்தில் காலம் காலமாக மறுக்கப்பட்ட பெண் கல்வி, விதவை மறுமணம், பால்ய விவாகத்தை தடுப்பது, ஜாதி பேதமின்றி சமவேலை, சம ஊதியம் போன்ற சமூக மாற்றங்களை முதன்மைப்படுத்துவது.  மூன்றாவது, தேசிய உணர்வைஊட்டி இந்திய அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவது. இந்த மூன்று தளத்திலும் பிரம்ம சமாஜத்தின் செல்வாக்கும் வளர்ச்​சியும் குறிப்பிடும்படி இருந்துள்ளது.

இந்திய தேசியக் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் பலர் வங்காளிகளே. இவர்களில் பிரம்ம சமாஜத்தை சேர்ந்தவர்கள் அதிகம். குறிப்பாக, விபின் சந்திர பால், அரவிந்தர், சி.ஆர். தாஸ் போன்றோர் பிரம்ம சமாஜ உறுப்பினர்களே. இவர்களைப் போலவே, வங்காளத்தில் அறிவுஜீவிகளாக அறியப்பட்ட ஈஸ்வர சந்திரர், தாகூர், மற்றும் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ், பிரபுல்ல சந்திர ராய் ஆகியோர் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்கள்தான். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே கூட பிரம்ம சமாஜ உறுப்பினர்தான்.


பிரம்ம சமாஜம் கி.பி.1828-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே, முதல் சீர்திருத்த இயக்கம். ராஜாராம் மோகன் ராய் கி.பி. 1772-ல் வசதி படைத்த வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர். ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன், ஹீப்ரூ, கிரேக்கம், சமஸ்​கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளைக் கற்றறிந்த இவர், ஆங்கில வழிச் சிந்தனையில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்துக்குச் சென்று இருக்கிறார்.

'ஒற்றைத் தெய்வ’ வழிபாட்டைத்தான் பிரம்ம சமாஜிகள் பின்பற்ற வேண்டும். இதை பிரம்ம சமாஜ ஆவணத்தில் ராஜாராம் மோகன் ராய்  தெளிவுபடுத்தி இருக்கிறார். கடவுளை வணங்கும்போது நமது இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். குறிப்பாக, நம்மில் உள்ள 'தான்’ என்ற அகந்தையை அகற்றிவிட்டு நமது ஆத்மாவை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இதனால், மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதை உணர முடியும் என்பதை ராஜாராம் மோகன் ராய் வலியுறுத்தினார்.


பௌத்தம், சமணம், கிறிஸ்தவம் என எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் பேதம் காட்டாமல் ஒருமித்து அறிந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பரந்த உணர்வுடன் செயல்பட்டது பிரம்ம சமாஜம். இந்து மதத்தின் ஞானவழியை முதன்மையாகக் கருதியது இந்த இயக்கம். ஆகவே, அறிவார்ந்த செயல்பாட்டுக்கான களமாக தன்னை வடிவமைத்துக்  கொண்டது. பிரம்ம சமாஜமே வங்காளத்தில் நிலவிய சாதிய ஒடுக்கு முறைகளை அகற்றி, மானுட நேசத்தை வளர்த்து இருக்கிறது. பிரம்ம சமாஜம், 19-ம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமானது. இந்திய வரலாற்றில் 19-ம் நூற்றாண்டு மிகவும் முக்கியமானது. இந்த நூற்றாண்டில்தான் பல பண்பாட்டு மாற்றங்கள், அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இன்று நாம் காணும் நவீன இந்தியா என்பதே, 19-ம் நூற்றாண்டு இந்தியாவின் குழந்தைதான் என்று நேரு கூறி இருக்கிறார்.

பிரம்ம சமாஜம் என்பதற்கு பரம்பொருள் வழிபாட்டுச் சங்கம் என்று அர்த்தம். 'உருவ வழிபாடு கூடாது, ஆனால்  உபநிடதங்கள், வேதங்களை ஆழ்ந்து கற்று அந்த நெறிப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்’ என்று ராஜராம் மோகன் ராய் கருதினார் என்கிறார் தமிழகத்தில் பிரம்ம சமாஜம் நூலை எழுதிய பெ.சு.மணி. ராஜராம் மோகன் ராய், பிரம்ம சமாஜத்தை தொடங்குவதற்கு முன் ஆத்மிய சபா, யூனிடேரியன் சர்ச் எனும் இரண்டு அமைப்புகளை உருவாக்கி இருக்கிறார். 1815-ல் கல்கத்தாவில் ஆத்மிய சபா அமைக்கப்பட்டது. அதில், முற்போக்கு எண்ணம் கொண்ட வங்காளிகள் பலர் சேர்ந்தனர். இந்தச் சங்கம், உடன்கட்டை ஏறுவதை தடை செய்வது, பலதார மணமுறையை ஒழிப்பது, பெண் கல்வியை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தியது. அதேநேரம், ஆங்கிலக் கல்வியை ஆதரிப்பது, ஆங்கில வழிச் சிந்தனையை கொண்டு இந்திய வேதங்களை, மதநம்பிக்கையை ஆராய்வது என்ற செயல்பாட்டையும் முன்வைத்தது. ஆங்கிலம் கற்ற இந்தியர்கள், தங்களின் பூர்வ அடையாளங்கள் ஆங்கிலேயருடன் கலப்பதற்கு தடையாக இருப்பதில் இருந்து விடுபட ஆங்கிலக் கல்வி உதவும் என்று நம்பினர். ஒருவகையில் இது ஆங்கிலேயருடன் எளிதாகப் பழகுவதற்கும் அவர்களோடு சேர்ந்து வாழ்வதற்குமான சாளரமாகக் கருதப்பட்டது.

சமஸ்கிருத நூல்கள் மட்டுமின்றி வங்காளத்தின் சமய நூல்களில் இருந்தும் திரட்டப்பட்ட அறிவை முதன்மைப்படுத்தி விவாதங்கள் இந்தச் சபையில் நடந்தன. அதுபோலவே, கிறிஸ்தவ சமயத்தில் உள்ள டிரினிடேரியனிஷம் என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்து உருவானதே யூனிடேரியனிஷம். இது, அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கியது. ராஜாராம் மோகன் ராய் இந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்டு, 'ஒன்றே தெய்வம்’ என்ற கோட்பாட்டை இந்தியாவிலும் பரப்ப விரும்புவதாகத் தெரிவித்தார். அதன் விளைவாக உருவானதே யூனிடேரியன் சர்ச்.

1823-ம் ஆண்டு ராஜாராம் மோகன் ராய், துவாரக நாத் தாகூர், வில்லியம் ஆதம் ஆகிய மூவரும் இணைந்து 'யூனிடேரியன் சர்ச்’ என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்புக்குச் சென்னையில் ஓர் கிளை இயங்கி இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தை அதன் அற்புத நிகழ்ச்சியை விலக்கிவிட்டு தாங்கள் ஏற்றுக் கொள்வதாக ராய் தெரிவித்து இருக்கிறார். ராஜாராம் மோகன் ராய், இளவயதில் பாட்னாவில் இஸ்லாமிய மார்க்கம் குறித்து கற்று அறிந்திருக்கிறார். அதேநேரம், காசியில் இந்து சமய சாஸ்திரங்களை ஆழ்ந்து கற்று இருக்கிறார். பிறகு, கல்கத்தாவில் கிறிஸ்தவ மதநெறிகளை உணர்ந்து கற்று இருக்கிறார். அத்துடன், திபெத்துக்குச் சென்று பௌத்த ஞானத்தையும்,  யூத மத அறநெறிகளையும் ஆராய்ந்து கற்றிருக்கிறார். பல சமயத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து இயங்க ஓர் அமைப்பு தேவை என்பதை, தீவிரமாக உணர்ந்த அவர், பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார். 'என்னுடைய ஆங்கில நண்பர்கள் இந்து சமயத்தின் மூடநம்பிக்கைகளை விமர்சனம் செய்கின்றனர். அது எனக்கும் சரி என்றே தோன்றுகிறது. ஆகவே, அவற்றை விலக்கி தூய்மையான ஞானநெறியை முதன்மைப்படுத்தியே எனது அமைப்பை உருவாக்கினேன்’ என்று ராஜாராம் மோகன் ராய் கூறி இருக்கிறார். சாதி வேறுபாடு மற்றும் ஒடுக்கு முறை காரணமாகவே மக்களிடம் தேசப்பற்று ஏற்படாமல் இருக்கிறது. ஆகவே, சீர்திருத்த இயக்கங்கள் மூலமாக மக்களிடம் தேசப்பற்றை உருவாக்க முடியும் என்று ராய் நம்பினார். தனது சமாஜம் சமய வளர்ச்சியோடு சமூக வளர்ச்சியையும் முதன்மைப்படுத்தி செயல்படும் என்று கூறினார். விவேகானந்தரும் பிரம்ம சமாஜத்தில் இருந்து இருக்கிறார். அவர், ராஜாராம் மோகன் ராயைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவரிடம் வேதாந்தத்தை முதன்மைப்படுத்தும் தன்மையும் தேசபக்தியும் இந்து இஸ்லாமியர்களை சமமாக நடத்தும் மனப்பாங்கும் இருந்தது என்று கூறியிருக்கிறார். பிரம்ம சமாஜம் வங்காளத்தில் புகழ்பெற்று வளரத் தொடங்கியபோது, தங்களின் பிள்ளைகள் எங்கே பிரம்ம சமாஜிகள் ஆகிவிடுவார்களோ என்று, வங்காளத்தில் ஏராளமான பெற்றோர் பயந்து விட்டனர். தாகூர் தனது நாவலில், பிரம்ம சமாஜம் எந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ராஜாராம் மோகன் ராய் தனது அமைப்பை வலுப்படுத்த பத்திரிகைகள் நடத்தியதோடு, சமய விவாதங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தார். ராய் மறைவுக்குப் பிறகு, 'வித்யா வாகீசர்’ சமாஜத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். தேவேந்திரநாத் தாகூர் பிரம்ம சமாஜத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர், 'ஆதி பிரம்ம சமாஜம்’ என்று பெயரை மாற்றினார். இதன் விளைவாக, அமைப்பில் முதல் விரிசல் ஏற்பட்டது.

தேவேந்திரநாத் தாகூர் ஆதரவு உறுப்பினர்கள், வங்காளத்தில்தான் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறியதோடு, கிறிஸ்தவ சமயத்தோடு உள்ள நெருக்கமான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்பதையும் முதன்மைப்படுத்தினர். இது, பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதன்விளைவாக,  ஆதி பிரம்ம சமாஜம், இந்திய பிரம்ம சமாஜம், சாதாரண பிரம்ம சமாஜம் என மூன்று அமைப்பாக ஆரிய சமாஜம் பிளவுபட்டது.

பொதுவாக, பிரம்ம சமாஜத்தினர் கூடும் அறையில் ஒரு ஆச்சாரிய பீடம் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் முன், ஒரு திரை தொங்க விடப்பட்டு இருக்கும். திரைக்கு பின்னால் உள்ள ஆச்சார்ய பீடத்தில் ஒரு அந்தணர் வேதம் ஓதி பிரார்த்தனையைத் தொடங்கி வைப்பார். பிறகு, வங்க மொழியில் பிரம்ம சமாஜ பாடல்கள் ஒலிக்கும். இதைஅடுத்து இஸ்லாமிய, யூத, கிறிஸ்தவ ஞானிகளின் சொற்பொழிவு நடக்கும். தேவேந்திரநாத் தாகூர் பிரம்ம சமாஜத்தை பின்னுக்கு கொண்டு செல்கிறார் என்று, வெளிப்படையாகவே கூறிய கேசவ் சந்திர சென் அதை கிறிஸ்தவ நெறிமுறைகளுடன் இணைத்து கைக்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. ஆச்சாரிய பீடத்தில் அமருபவர் சாதிச் சின்னம் அணியக் கூடாது, படித்த, அறிவாளி மட்டுமே அந்தப் பீடத்தில் அமர வேண்டும், துதிப்பாடல்களுக்குப் பதிலாக விரிவான விளக்கவுரைகள் ஆற்றப்பட வேண்டும் என்று, கேசவ சந்திர சென் கூறினார்.

Sunday, January 27, 2013

எனது இந்தியா (காட்டின் மௌனம்!) - எஸ். ராமகிருஷ்ணன்.......

தனது கனவின் சிறிய பகுதி மட்டுமே நனவானது என்ற அவரது ஆதங்கமே, மீண்டும் அவர் இந்தியா வருவதற்குக் காரணமானது. 1684-ம் ஆண்டு டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் நடந்த முறைகேடுகளைக் களைந்து நிர்வாகத்தைச் சீரமைக்கும் பொறுப்பை ஹென்ரிக் மீண்டும் ஏற்றுக்கொண்டார். அவரது மகனை இலங்கையின் வணிக அதிகாரியாக நியமித்தது டச்சு வணிக நிறுவனம். அதன் காரணமாக, இலங்கையில் தங்கியிருந்தபடியே மலபாரில் உள்ள தாவரங்களைத் தொகுத்து வகைப்பட்டியல் செய்து மீதம் உள்ள 10 தொகுதிகளையும் வெளியிட்டார் ஹென்ரிக். இந்தப் புத்தகத்தில் 794 சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. மதபோதகரான மத்தியாஸ் தனது குழுவினருடன் இணைந்து இந்தச் சித்திரங்களை மிகத் துல்லியமாக வரைந்து இருக்கிறார்.

இந்தியாவின் அரிய தாவர வகைகளைப் பற்றிய இந்தப் புத்தகம் வெளியாகி, உலக அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றதுடன் ஆம்ஸ்டர்டாமில் ஒரு பெரிய தாவரவியல் பூங்கா அமையவும் வகை செய்தது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக லத்தீன் அறிந்தவர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டு வந்த இந்தப் புத்தகத்தை, டாக்டர் மணிபால் மற்றும் கோவிந்தன் குட்டி ஆகிய இருவரும் சேர்ந்து ஆங்கிலத்தில் இப்போது மொழிபெயர்த்து இருக்கின்றனர். 'ஹோர்டஸ் மலபாரிக்கஸ்’ என்ற இந்தப் புத்தகம், வெறும் தாவரவியல் பற்றியது மட்டும் அல்ல. கேரளாவின் வனப் பகுதி 300 ஆண்டுகளுக்கு முன், எத்தனை விதமான அரிய தாவரங்களுடன் இருந்தது? இந்தியாவின் இயற்கைச் சூழல் எப்படி இருந்தது என்பதற்கான அத்தாட்சி அது. இந்த இரண்டையும்விட தீண்டத்தகாத சாதி என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஈழவ சமுதாயத்தில் பிறந்த அச்சுதன் வைத்தியரிடம் எவ்வளவு தீர்க்கமான மருத்துவ அறிவு இருந்திருக்கிறது, அதைத் தீண்டாமையின் பெயரால் எப்படி ஒடுக்கி வந்திருக்கிறார்கள் என்ற சமூக உண்மையும் இந்தப் புத்தகத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. இந்தப் புத்தகத்தின் மூலப் பிரதி லெயிட்டன் பல்கலைகழகத்தில் இன்றும் இருக்கிறது. அங்கு, இந்தப் புத்தகத்தில் உள்ளதுபோன்ற ஈழவ வைத்திய முறைப்படியே இன்று தாவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பிரித்து வைக்கப்பட்டு இருக்கின்றன.


இத்தனை அரிய மூலிகைகள், தாவர வகைகள் இந்தியாவில் இருந்தபோதும், இந்திய மரபு வைத்திய முறைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கில மருத்துவ முறைகளையும் பக்கவிளைவு ஏற்படுத்தும் மருந்துப் பொருட்களையும் ஏற்றுக்கொண்டு மருத்துவத்தைப் பணம் கொட்டும் வணிகமாக உருமாற்றிவிட்டோம். இன்று, 'ஹோர்டஸ் மலபாரிக்கஸ்’ போன்ற புத்தகத்தைக் கையில் தொடும்போது இந்தியா ஏன் தனது இயற்கை வளத்தை இழந்தது என்ற கேள்வி நம் மனசாட்சியை தொடுகிறது. இந்திய இயற்கையியல் ஆய்வின் சிறு பகுதிதான் 'ஹோர்டஸ் மலபாரிக்கஸ்’ என்ற தாவரவியல் புத்தகம். அதுபோல, நூற்றுக்கணக்கான அரிய தாவரவியல் புத்தகங்கள் இந்தியாவில் கடந்த நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டன. அவற்றில், தேக்கு மற்றும் சால மரங்கள் இந்திய வரலாற்றில் என்ன பங்கை வகித்தன என்ற ஆய்வு முக்கியமான பல உண்மைகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது.

வட இந்தியாவில் பிரதானமாக சால மரங்கள் காணப்​படுகின்றன. அங்கே, தேக்கு கிடையாது. ஆனால், தென்னிந்தியா முழுவதும் தேக்கு மரங்கள் இருக்கின்றன. தேக்கு குறித்து சங்க இலக்கியம் நிறைய செய்திகளை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், தேக்கு பற்றி சமஸ்கிருத இலக்கியங்களில் அதிக செய்திகள் இல்லை. தேக்கு கொண்டுதான் கப்பல்கள் கட்டப்பட்டன. வட இந்தியாவில் தேக்கின் இடத்தைப் பிடித்து இருந்தது சால மரம்.

இந்த இரண்டு மரங்களின் கதையை ஆராய்ந்தால், இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வாறு தகவமைப்பு கொண்டது என்பதை எளிதாக அறியலாம். அஸ்ஸாம், வங்காளம், நேபாளம், ஹரியானா காடுகள், வட கிழக்கு மாநிலங்கள், இமயமலையின் அடிவாரம் மற்றும் மத்திய இந்தியா என அனைத்துப் பகுதிகளிலும் சால மரங்கள் செழித்து வளர்ந்து இருக்கின்றன. தென்னிந்தியாவில் தேக்கு மட்டுமே பிரதானம். சால மரம் என்பதை ஆச்சா மரம் என்றே தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகிறது. இதை, 'யா மரம்’ என்று சங்க இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது. இந்த மரத்தின் பட்டை நீர்ப்பசை மிக்கது. எனவே, பாலை நிலத்திலும் இந்த மரம் செழித்து வளர்ந்து இருக்கிறது. தேக்கின் முக்கியத்துவத்தை அறிந்த பிரிட்டிஷ் அதை இமயமலை அடிவாரத்தில் நட்டு வளர்த்துப் பார்த்து இருக்கின்றனர். ஆனால், தென்னிந்தியாவைப் போல தேக்கு அங்கே செழுமையாக வளரவில்லை. தேக்கு கிழக்கிந்தியக் கம்பெனியால் இங்கிலாந்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நடப்பட்டு இருக்கிறது. ஆனால், தென்னிந்தியாவிலும் பர்மாவிலும் காணப்படும் தேக்கு போல உறுதியாக வேறு எங்கும் தேக்கு மரங்களை உருவாக்க முடியவில்லை. அசோகர் சாலையோரம் மரங்களை நட்டார் என்று காலம் காலமாகப் படிக்கிறோம். எந்த மரங்களை அசோகர் நட்டார், செழுமையான கங்கைச் சமவெளியில் மரங்களை நட வேண்டிய சூழ்நிலை ஏன் உருவானது என்ற கேள்விகள் அந்தச் செய்திக்குள் புதைந்து இருக்கின்றன.

நகரமயம் ஆவதும், வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன. அதன் காரணமாக, பெருமளவு காடுகள் அழிக்கப்​பட்டன. வணிகர்களின் பயணத்துக்கான சாலைகள் அமைப்பதற்காக நிறைய மரங்கள் வெட்டப்பட்டு இருக்கின்றன. அதைவிட, மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பௌத்தம். பயணிகள் இளைப்பாறவும், இயற்கையைப் பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்கள் நட உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். ஏன் சால மரங்களை நட வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பௌத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. புத்தர் பிறப்பதற்கு முன், அவரது தாய் மாயா இமயமலை அடிவாரத்தில் உள்ள தனது தாய்வீடான லும்பினிக்குச் சென்றுகொண்டு இருந்தார். வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டு, ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.

புத்தரின் தாய் நின்ற நிலையில் பிரசவித்தாள் என்றும் வலியைத் தாங்கிக்கொள்ள சால மரத்தின் கிளைகள் வளைந்து கொடுத்து புத்தர் பிறக்க உதவி செய்தன என்றும் குறிப்பிடுகிறது புத்த பிறப்புக் கதை. அதுபோலவே, புத்தர் மரணம் அடைந்ததும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கு அடியில்தான். ஆகவே, சால மரம் பௌத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று. லும்பினி இன்று நேபாளத்தில் இருக்கிறது. சாக்கிய வம்சத்தினர் ஆண்ட இந்த நிலப்பரப்பு, அடர்ந்த காடுகள்கொண்டது. மல்லர் வம்சத்தைச் சேர்ந்த அரசனால் உருவாக்கப்பட்ட புத்தரின் பிறப்பைக் குறிக்கும் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தில், புத்தரின் தாய் மாயா தனது வலக்கரத்தால் சால மரத்தைப் பற்றியபடி நின்று கொண்டு இருக்கிறாள். மரத்தின் கிளைகள் வளைந்து அவளுக்கு துணையாக நிற்கின்றன. இந்தச் சிற்பத்தை புத்த மதத்தின் புனிதச் சிற்பங்களில் ஒன்றாகக் கொண்டாடுகின்றனர்.

புத்தர் பிறந்த லும்பினி கிராமத்துக்கு முழு வரிவிலக்கு அளித்து இருக்கிறார் அசோகர். அத்துடன், நான்கு ஸ்தூபிகளை அமைத்து ஒரு கல்தூணில் கல்வெட்டும் ஒன்றையும் பதித்து இருக்கிறார். அந்தக் கல்வெட்டில் தனது ஆட்சியின் இருபதாம் ஆண்டில் அசோகர் லும்பினிக்கு வந்து, அதைப் புனித ஸ்தலமாக அறிவித்தார் என்ற குறிப்பு இருக்கிறது. லும்பினியில் புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு இருக்கிறது. சௌரிய வனப் பகுதியில் சிதிலமடைந்துகிடந்த இந்தக் கோயிலை, ஜெர்மனியின் அகழ்வாய்வாளர் தனது அகழ்வாய்வுப் பணியின்போது கண்டுபிடித்து இருக்கிறார். சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், புத்தரின் பிறப்பைக் குறிக்கும் சிற்பம் இருக்கிறது. அதிலும், சால மரம் முதன்மையாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வட இந்தியத் திருமணங்களில், பெண் சாலமரத்தின் கிளை ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டுதான் மணமேடையில் உட்கார்ந்து இருப்பாள். அது, திருமணச் சடங்கின் ஒரு பகுதி. இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இதைக் கடைப்பிடிக்கின்றனர். சால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாகப் பயன்படுத்தினர். சால மர இலைகளைத் தைத்து உணவு சாப்பிடப் பயன் படுத்தினர். ஆதிவாசிகள், இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த  சால மர இலைகள் விவசாயத்துக்கான உரமாகவும் பயன் பட்டது. சால மரம் பூக்கும் காலத்தை, பழங்குடி மக்கள் விழாவாகக் கொண்டாடினர். சால மரம், புத்தரின் மறு வடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.

போதி மரத்தடியில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்றார் என்பதால், மரங்கள் ஞானத்தை அடைவதற்கான மனஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பௌத்தத் துறவிகள் நம்பினர். இதன் காரணமாகவே, அசோகர் மரங்களை நட்டார். சால மரம் மருத்துவக் குணம் கொண்டது. குறிப்பாக, இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலியைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது சால மரம். இதனால், பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால், இந்த மரங்களை வழிநெடுகிலும் வளர்த்து இருக்கின்றனர்.

மர இனங்களின் அரசன் எனப்படும் தேக்கு மரம், கப்பல் கட்டும் தொழிலில் பிரதானமாகப் பயன்பட்டது. தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் 'டெக்டோனா கிரான்டிஸ்’ ஆகும். கிரேக்க மொழியில் 'டெக்டன்’ என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது என்பது பொருள். 'கிராண்டிஸ்’ என்றால், பிரமாதமானது என்று பொருள். அதாவது, தச்சர்களுக்கு ஏற்ற பிரமாதமான மரம் என்று கூறுகிறார்கள். இந்த மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீ உயரம் வரையிலுள்ள நிலப் பகுதியில் நன்றாக வளரக்கூடியது. மண் ஆழம் குறைவாக உள்ள கடுங்களி நிலம் மற்றும் நீர்வடியா நிலங்களும் இந்த மரம் வளர ஏற்றதல்ல. தேக்கு மரம் 'ஒளி விரும்பி’ வகையைச் சேர்ந்தது. ஆகவே, பிரகாசமான சூரிய ஒளி கிடைத்தால் மட்டுமே தேக்கு நன்றாகச் செழித்து வளரும். 'கடுவளி எடுத்த கால்வழி தேக்கு இலை’ என்றும், 'தேக்கு அமல் சோலைக் கடறேங்கு அருஞ்சுரத்து’ எனவும் அகநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தேக்கு மரம், இந்தியா மற்றும் ஜாவாவின் வட கிழக்குப் பகுதிகளைத் தாயகமாகக்கொண்டது. தேக்கு மரங்களைப் பார்த்து பிரமித்த ஆங்கிலேயர், கதவு, கட்டில் செய்தல் மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகியவற்றுக்காக தேக்கு மரங்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தனர். அத்துடன், இந்தியா முழுவதும் தேக்கு விளைவதற்காக செயற்கையாக தேக்கு மரங்களை நட்டுவைத்து வளர்க்க முயன்றனர்.

தேர்கள், தேக்கு மரத்தில் செய்யப்படுவது நமது மரபு. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட பகுதிகளுக்கு ஏற்ப தேர்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. எந்தத் தேரும், ஆறு அடுக்குகளுக்கு மேல் இருக்காது. பூதப்பார், விக்கிரகப்பார், சித்துருதளம், பெரிய அங்கனம், தேவாசனம், சிம்மாசனம் என்பதுதான் அந்த ஆறு அடுக்குகள். இந்த ஆறு அடுக்குகளின் உள்கட்டமைப்பாக 15 அடுக்குகள் இடம் பெறுகின்றன. சிம்மாசனத்தில் திருவுருவம் வைக்கப்படும். இந்தச் சிம் மாசனத்தைச் சுற்றி யாளிக்கட்டை, சிங்கக் கட்டை, அஸ்தியாளி ஆகியவைகளைக்கொண்டு மறைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், எந்தத் தேராக இருந்தாலும் அதன் முகப்பில் இரண்டு அல்லது நான்கு குதிரைகள் மட்டுமே இருக்கும். தேரின் சக்கரங்கள் இலுப்பை மரத் தால் செய்வதுதான் நமது மரபு.

இப்படி, பண்பாட்டின் அடிப்படையான கலை உருவாக்கத்திலும், வாசனைத் திரவியங்கள், கட்டுமானப் பணிக்கான பொருட்களின் உருவாக்கத்திலும் இந்தியாவின் முக்கியத் தாவரச் செல்வமாக தேக்கு அடையாளம் காணப்பட்டது. மலபார் பகுதியில் கிடைத்த தேக்கு மரங்கள், இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த வன வளத்தைப் பாதுகாக்க தனியாக ஒரு கமிஷனரை 1800-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நியமித்தது. அதுபோலவே, கேப்டன் வாட்சன் என்ற அதிகாரி சென்னை ராஜதானியில் இருந்த தேக்கு மரங்களைப் பராமரித்து ஏற்றுமதி செய்யும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு இருந்தார். தேக்கை, பச்சைத் தங்கம் என்றே ஆங்கிலேயர்கள் அழைத்தனர். தேக்கு அதிகம் விளையும் ரங்கூனில், 1786-ம் ஆண்டு முதல் 1824-ம் ஆண்டு வரை 112 பெரிய கப்பல்கள் ஆங்கிலேயர்களுக்காகக் கட்டப்பட்டன. இதற்காக, 35,000 டன் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டன.

1846-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேக்கு 8,712 டன். இதுவே, 1860-ம் ஆண்டு 25,112 டன்கள். 1883-ம் ஆண்டில் 45,539 டன்களாகவும் 1900-ம் ஆண்டில் 63,598 டன்களாகவும் உயர்ந்தது. இந்த ஏற்றுமதியில் பெரும் பகுதி பர்மாவில் விளைந்த தேக்குகள்தான். இந்தியாவில் இருந்து கடந்த 300 ஆண்டுகளில் மிக அதிகமாக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பிரிட்டிஷ், டச்சு மற்றும் போர்த்துக்கீசிய வணிகக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம் தரும் விற்பனைப் பொருளாக நமது இயற்கை வளங்கள் திகழ்ந்தன. இந்த சுயலாப வணிகமே இன்று பல்கிப் பெருகி இயற்கையை அழித்தொழிக்கும் வன்முறையாக உருமாறி இருக்கிறது. அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் மரங்களும் சுதந்திரமாக இருப்பது இல்லை என்பதை உணர்த்துவதுபோலவே காடு மௌனமாக நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.

Saturday, January 26, 2013

'விஸ்வரூபம்’


'இதய பலவீனம் உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம்’ படத்தின் டைட்டில் போடுவ​தற்கு முன் திரையில் திகிலாக வந்து விழுகிறது இந்த வாசகம். அந்த வாசகத்தை நிஜம் ஆக்குவதுபோல படம் முழுவதும் கோரமான குண்டு வெடிப்புகளும் கொடூரமான கொலைகளும் நிரம்பி வழிகின்றன.

படத்தின் கதைக் களம் ஆப்கானிஸ்தான். அங்கே இருக்கும் தாலிபான்களின் செயல்பாடுகள்தான் படத்தை மொத்தமாக நகர்த்துகின்றன. இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா’வின் உளவாளி கமல், முஸ்லிம் கேரக்டரில் நடித்து இருக்கிறார். காஷ்மீரி ஒருவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்தான் கமல். காஷ்மீருக்குச் செல்லும் கமலை, அங்கே தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கிறார்கள். அவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், ஐந்து லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் கமல், தாலிபான்கள் கையில் சிக்குகிறார். அவரை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, ஐந்து லட்சம் ரூபாயை வாங்கலாமா எனக் கணக்கு போடுகிறது தாலிபான். அப்போது தமிழ் பேசும் கமலைப் பார்த்துவிட்டு, தாலிபான் தலைவர் உமர் அவரிடம் தமிழில் பேசுகிறார். ''ஐந்து லட்சத்தைவிட விலை மதிக்க முடியாத தமிழ் ஜிஹாதி. இவரைப் பிடித்துத் தர வேண்டாம். நமது குழுவிலேயே இருக்கட்டும்'' என்கிறார் உமர். நிஜத்தில் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் கேரக்டர்போலவே இந்த உமர் கேரக்டர் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உமர் தமிழ் பேசுவதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் கமல். ''நான் தமிழ்நாட்டில் கோவை மதுரையில் இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறேன்'' என்று அவர் சொல்கிறார்.

மாயவரத்தில் பிறந்த நிருபமா என்ற பெண்தான் கமலின் மனைவி. அவர் வேலை பார்க்கும் சீசியம் மற்றும் அணுக்கதிர் கையாளும் நிறுவனத்துக்கும் தாலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந் தேகப்படுகிறார் கமல். அதனால், மனைவிக்குத் தெரியாமலேயே அவர் உடையில் கேமராக்கள் வைத்து அந்த நிறுவனத்தை உளவு பார்க்கிறார் கமல். ஸ்கூலில் குண்டு வைக்கும் காட்சி முறியடிப்பு, காட்டிக்கொடுத்த போராளியை பொதுமக்கள் மத்தியில் தூக்கில் போடுவது என இப்படி அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.

தீவிரவாதச் செயல்கள் செய்யப்படும்போது எல்லாம் தொழுகைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. குர்-ஆன் வசனங்கள் அரபியில் ஓதப்படுகின்றன. ஒரு காட்சியில் 'ஜிஹாத்துக்கு (புனிதப் போர்) தயாராகுங்​கள். சொர்க்கம் உங்களுக்குச் சொந்தமாகும்’ என்ற வசனமும் அரபியில் ஒலிக்கிறது. தாலிபான்களின் செயல்பாடுகள் அப்படியே திரையில் திகிலாகக் காட்டப்​படுகின்றன. இடையில் ஒரு வசனம். 'இது ஆயிலுக்காக நடக்கும் யுத்தம்’ என எண்ணெய் வளங்களை சுரண்டும் அரசியல் பற்றியும் படம் பேசுகிறது. படத்தில் பின்லேடனும் வருகிறார். அவரை அமெரிக்கா கொன்றபோது அமெரிக்​காவில் கொண்டாட்டம் நடக்கிறது. அப்போது, தமிழ் கேரக்டர்கள் இருவர், 'அசுரனைக் கொன்றது​போல மக்கள் கொண்டாடு​கிறார்கள்’ என வசனம் பேசு​கிறார்கள்.

தாலிபான் படையில் சேரும் கமல், அங்கே நடக்கும் செயல்களை உள்வாங்கி, தகவல்களை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார். அமெரிக்கா மீது தாக்குல் நடத்தத் திட்டமிடுகிறது தாலிபான். இதற்காக உமர் அமெரிக்கா செல்கிறார். இதை முறியடிக்க கமலும் நடனக்காரர் வேடத்தில் அமெரிக்காவுக்குள் நுழைகிறார். அங்கே அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுடன் சேர்ந்து திட்டத்தை முறியடிக்கிறார். அமெரிக்காவுக்குத் தாலிபானால் வரும் ஆபத்தை இந்தியா முறியடிப்பதாகக் கதை முடிகிறது. இறுதியில் உமர் விமானத்தில் தப்பிச் செல்ல, ''உமர் சாக வேண்டும்; இல்லை, நான் சாக வேண்டும்'' என கமல் வசனம் பேச... இந்தியாவில் தொடரும் என முடிவடைகிறது  படம்.

Friday, January 25, 2013

நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி


நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ குளிக்கச் சென்று, தண்ணீரின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், தத்தளித்துத் தடுமாறி, தண்ணீரில் மூழ்கி விடுவதைச் செய்திகளில் படித்திருப்பீர்கள்.

நீர் நிலைகளில் ஏற்படும் ஆபத்தின்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீச்சல் தேவைப்படுகிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உடலின் எடை கூடிவிடும். மூட்டுகளில் அசையும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்துவிடும். இந்தக் காரணங்களால், நீச்சல் கற்றுக்கொள்வது கடினம். பத்து வயதுக்குள் ஒருவர் நீச்சல் கற்றுக் கொண்டால், அவர் தனக்கு ஒரு சொத்து சேர்த்து வைத்ததற்குச் சமம்.

நீச்சல் பயிற்சியின் நன்மைகள்:

நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது. முக்கியமாக முதுகுவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டுவலி போன்றவை பாதிக்காது. மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் நீந்துவதைப் பழக்கப் படுத்திக் கொண்டால், மன அழுத்தம் குறைந்து, நாள் முழுவதும் உற்சாகமாகப் பணி செய்வார்கள். ’டௌவுன் சின்ட்ரோம்’ போன்ற மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் நீச்சல் ஒரு நல்ல பயிற்சியே. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.

யாருக்கு நீச்சல் பயிற்சி ஆகாது?

வலிப்பு நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது. காரணம், தண்ணீரில் வலிப்பு வந்தால் உயிருக்கு ஆபத்து வந்து சேரும். அவர்களைத் தண்ணீரிலிருந்து சமாளித்துக் கரை சேர்ப்பதும் கடினம். அதுபோல் மாற்றுத் திறனாளிகள், ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், இதயநோயாளிகள், பிறவி இதயக் குறைபாடு உள்ள குழந்தைகள், ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.

நீச்சல் பயிற்சியில் பெற்றோர் பங்கு என்ன?

குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், பயிற்சிக்குத் தேவையான உடல் தகுதி குழந்தைக்கு உள்ளதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள நீச்சல் குளம் பயிற்சிக்கு உகந்தது. அதில் நீச்சல் கற்றுக் கொள்வதற்கு வசதியாக குறைந்த அளவு ஆழம், நல்ல அகலம், தூமையான தண்ணீர், சுழற்சி முறையில் தண்ணீர் வெளியேற்றப்படும் வசதி, மிதவை போன்ற கருவிகள் முதலியவை அவசியம் இருக்க வேண்டும். எட்டுக் குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாளரும், அனுபவமிக்க லைஃப் கார்டும் இருக்கிறார்களா என்பதைப் பெற்றோர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சியின்போது அப்பா, அம்மா,தாத்தா, பாட்டி, மாமா என்று உறவினர் யாராவது உடனிருக்க வேண்டும். டிரைவர், வேலையாள் போன்றவர்களை அனுப்பக்கூடாது.

நீரில் ஏற்படும் ஆபத்து:

குளத்தில் அல்லது கடலில் குளிக்கும்போது, படகில் செல்லும்போது, நீச்சல் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிடலாம். நீந்தத் தெரியாதவர்கள் அப்போது வேகமாக சுவாசித்து, தண்ணீரைக் குடித்து, திக்குமுக்காடுவார்கள். இந்த நிலைமையில் நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். காற்று இருக்க வேண்டிய இடத்தில் இப்போது தண்ணீர் இருப்பதால், மூளைக்கு பிராண வாயு கிடைக்காது. இதன் விளைவால், அந்த நபரின் மூளைக்குப் பாதிப்பு ஏற்பட்டு, மயக்கம் உண்டாகி, தண்ணீரில் மூழ்கிவிடுவார். உயிரிழப்பார்.

எப்படிக் காப்பாற்றுவது?

நன்றாக நீந்தத் தெரிந்தவர்கள் மட்டுமே தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி செய்ய முன்வர வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் இதில் ஈடுபடக் கூடாது.

தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி முறைகள் ஐந்து. அவை; அணுகுதல், கையால் இழுத்தல், எறிதல், கருவி கொண்டு இழுத்தல், அருகில் செல்லுதல். பாதிக்கப்பட்ட நபர் நினைவோடு இருக்கிறார், அதேநேரம் தண்ணீரில் தத்தளிக்கிறார் என்றால், அவருக்குக் கம்பு, கயிறு, களி, குச்சி, மரக்கிளை, வேஷ்டி, போர்வை, டவல் போன்றவற்றில் ஒன்றை நீட்டி, அதைப் பற்றிக்கொள்ளச் செய்து, அதை உங்கள் பக்கமாக இழுங்கள். இதை நீங்கள் செய்யும்போது, தண்ணீரில் தத்தளிக்கும் நபர், உங்களைத் தண்ணீருக்குள் இழுத்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட நபர் எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார் என்றால், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருள்களில் ஒன்றை - எடுத்துக்காட்டாக, கார் டயர், காற்றடைத்த பெரிய பந்து, மர மிதவைகள், ஃபோம் மெத்தைகள் போன்றவற்றில் ஒன்றை அவரை நோக்கி வீசுங்கள். அதைப் பற்றிக் கொண்டு அவர் கரைக்கு மீண்டு வந்துவிடுவார். ஒருவேளை அந்த நபர் வெகு தொலைவில் இருந்தால், நீங்கள் நன்கு நீச்சல் தெரிந்தவராக இருந்தால், அவருக்கு அருகில் சென்று அவரைக் காப்பாற்ற கவனத்துடன் முயற்சி செய்யுங்கள்.

என்ன முதலுதவி செய்வது?

* தண்ணீரில் மூழ்கியவருக்குச் சுவாசம் உள்ளதா, நாடித்துடிப்பு உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

* தண்ணீரில் மூழ்கியவர்கள் பெரும்பாலும் அதிகமாகத் தண்ணீர் குடித்து விடுவார்கள். நுரையீரலிலும் இரைப்பையிலும் தண்ணீர் நிரம்பிவிடுவதால் வயிறு வீங்கி, சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ஆகவே, இந்தத் தண்ணீரை வெளியேற்றுவதற்கு, முதலுதவி செய்யும் நபர் வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.

* தண்ணீரில் மூழ்கியவரைக் குப்புறப்படுக்க வைத்து, தலையைப் பக்கவாட்டில் திருப்பி வைத்துக்கொண்டு, முதுகையும் வயிற்றையும் அமுக்க வேண்டும். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டும்.

* அந்த நபருக்குச் சுவாசம் நின்றிருந்தால் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால், செயற்கை சுவாசம் தர வேண்டும்.

* இதயத்துடிப்பு நின்றிருந்தால் இதய மசாஜ் தர வேண்டும்.

* இதற்கு ‘இதய சுவாச மறு உயிர்ப்புச் சிகிச்சை’ (cardiopulmonary resuscitation - சுருக்கமாக - CPR) என்று பெயர்.

* இதைப் பள்ளியில் படிக்கும் போதே தெரிந்து வைத்துக்கொண்டால் நல்லது.

செயற்கை சுவாசம் தருவது எப்படி?

* அந்த நபரை மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும்.

* அவருடைய பற்களுக்கிடையில் மரக்கட்டை அல்லது துணியைப் பல மடிப்புகளாக மடித்து வைத்து, வாயைத் திறந்தபடி வைத்துக் கொள்ள வேண்டும்.

* காற்று செல்லும் பாதை தடையில்லாமல் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

* முக்கியமாக, வாயில் அந்நியப் பொருள்கள் ஏதேனும் இருந்தால், அகற்றி விட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரின் மூக்கை விரல்கள் கொண்டு மூடி, அவரது வாயில் முதலுதவி செய்பவரின் வாயை வைத்துக் காற்றை பலமாக ஊதி உள்ளே செலுத்த வேண்டும். இதனால், அவரது மார்பு உயரும். அப்போது முதலுதவி செய்பவர் வாயை எடுத்துவிட வேண்டும். மீண்டும் ஊத வேண்டும். இவ்வாறு நிமிடத்துக்கு 12 முறை ஊத வேண்டும்.

* குழந்தையாக இருந்தால் நிமிடத்துக்கு 30 முறை ஊத வேண்டும்.

இதய மசாஜ் தருவது எப்படி?

* சுவாசத்துக்கு வழி செய்யும் அதே நேரத்தில் இதயத் துடிப்புக்கும் வழி செய்ய வேண்டும். அந்த நபரின் நடு நெஞ்சில் முதலுதவி செய்பவரின் உள்ளங்கைகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, மார்பை பலமாக அழுத்த வேண்டும். நிமிடத்துக்கு 80 அழுத்தம் என்று மொத்தம் 15 முறை தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். இதனால் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.

* நான்கு சுழற்சிகள் இதய மசாஜ் செய்துவிட்டு, இரண்டு முறை செயற்கைச் சுவாசம் தர வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு ஏறுபடும்வரை இதைத் தொடர வேண்டும்.

* அதேநேரத்தில் தாமதிக்காமல் மருத்துவச் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் தண்ணீரில் மூழ்கியவரை முழுமையாகக் காப்பாற்ற முடியும்.

* இதற்கு, பாதிக்கப்பட்ட நபரை 108 ஆம்புலன்ஸ் உதவியால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.


Thursday, January 24, 2013

புலியின்றி அமையாது உலகு!

நிழல் உலகக் கள்ளச் சந்தை உலகில் முதல் இடம்... போதைப் பொருட்கள் விற்பனை. அடுத்த இடம்... ஆயுத விற்பனை. மூன்றாவது இடத்தில் இருப்பது வன உயிரினப் பொருட்கள் விற்பனைச் சந்தை. அதில் முக்கிய அங்கம் வகிப்பது... புலி வேட்டை.
 
 புலி, சிறுத்தை, யானை, காண்டாமிருகம், மான், தேவாங்கு, ஆந்தை, கீரி, நீர்நாய், மண்ணுளிப் பாம்பு, நட்சத்திர ஆமை, கடல் குதிரை, பவளப் பாறைகள்... இவை எல்லாம் இச்சந்தையின் பகீர் பட்டியல். ஆண்டுக்கு 2,000 கோடி டாலர்கள் புழங்கும் சந்தை இது.

3,500 மட்டுமே!

கடந்த நூற்றாண்டில் உலகில் இருந்த புலிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். அதில் இந்தியாவில் இருந்தவை சுமார் 40 ஆயிரம். இன்று உலகில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையே 3,500 தேறாது. கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட கணக்கெடுப்பு அறிவிப்பின் படி இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1,706 மட்டுமே.

புலி வேட்டை!

 வேட்டையர்கள், கடத்தல்காரர்கள், வியாபாரிகள் என மூன்று பிரிவுகளைக்கொண்டது புலிகள் மாஃபியா. முதலில் வேட்டையர்கள். வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் பவாரியாஸ் மற்றும் பஹாலிகாஸ் சமூகத்தினரின் ஆதித் தொழில், வேட்டை. அந்தச் சமூகத்தில் 70 சதவிகிதத்தினர் தங்கள் பாரம்பரியத் தொழிலைக் கைவிடாமல் இன்றும் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் நாடு முழுவதும் புலிகள் வாழும் வனங்களின் அருகில் உள்ள ஊர்களில் கம்பளிப் போர்வை விற்பனையாளர்கள், நகை பாலீஷ் போடுபவர்கள், வித்தைக்காரர்கள் வேடங்களில் ஊடுருவுகிறார்கள். கோடைக் காலமே இவர்களின் சாய்ஸ். கோடையில் ஓரிரு நீர் நிலைகளில் மட்டுமே நீர் இருக்கும். அங்கு புலிகள் கட்டாயம் வந்தாக வேண்டிய இடங்களைத் தேர்வு செய்கிறார்கள். இரும்புக் கண்ணிகளைப் புலிகளின் வழித்தடத்தில் பொருத்தி, சருகுகளால் மறைத்துவிடுவார்கள். இந்தக் கண்ணிகள் இரும்புச் சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்டு இருக்கும். புலியின் கால் கண்ணியில் பட்டதும், அது வெகு உறுதியாகத் தொடை வரை கால்களைப் பற்றிக்கொள்ளும். புலியின் முன்னே இவர்கள் செல்வார்கள். அது கோபத்தில் வாயைத் திறந்து உறுமும். உடனே, நீண்ட குத்தீட்டிகளைப் புலியின் வாய்க்குள் குத்தி புலியைக் கொன்றுவிடுவார்கள். புலியின் உடலைக் குத்தினால் தோல் சேதம் அடையும் என்பதால்தான், இந்தக் குரூர டெக்னிக். கொல்லப்பட்ட புலியின் அடிவயிற்றைக் கீறி, குடல் உள்ளிட்ட கழிவுகளை எடுத்து எரித்தோ புதைத்தோவிடுவார்கள். அரை மணி நேரத்தில் புலியின் இறைச்சி, எலும்புகள், பற்கள், தோல் என மொத்தத்தையும் பேக் செய்து கிளம்பிவிடுவார்கள். ஒரு புலிக்கு இவர்கள் பெறும் தொகை, ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை.

ஒரு புலி... ஒரு கோடி!

அடுத்து கடத்தல்காரர்கள். இவர்கள்தான் விலையை நிர்ணயிக்கும் புரோக்கர்கள். தரை வழி, கடல் வழி, வான் வழி என எல்லா வழிகளையும் பயன்படுத்தி வன உயிரினப் பொருட்களைக் கடத்துவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூட்டை மூட்டையாகக் கைப்பற்றப்பட்ட மான் கொம்புகளும் இவர்களின் கைங்கர்யமே. புலிகள் மட்டும் அல்லாமல் சந்தனக் கட்டை, செம்மரக்கட்டை தொடங்கி பவளப் பாறைகளும் இவர்களின் லிஸ்ட்டில் உண்டு. பெரிய மருந்து நிறுவனங்கள், அழகுப் பொருட்கள் நிறுவனங்கள், ஆடம்பரக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் வன உயிரினக் கலைப் பொருட்களில் ஆர்வம்கொண்ட கோடீஸ்வரர்கள் இவர்களின் வாடிக்கையாளர்கள். 

மத்திய அரசின் 'புராஜெக்ட் டைகர்’ சொல்லும் கணக்கின்படி கடந்த 99-ம் ஆண்டில் சீனா - வியட்நாம் எல்லையில் 10 கிராம் புலி எலும்பின் விலை 2425 டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் ஒரு கிலோ எலும்பின் விலை ஒரு லட்சத்துக்கும் மேல். இன்று இதன் விலை கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துவிட்டது. இன்று ஒரு கிலோ இந்தியப் புலியின் எலும்புக்கு 10 லட்சம் மதிப்பு. ஒரு புலியின் மொத்த மதிப்பு... சுமார் 1 கோடி.

அடுத்து வியாபாரிகள். 90 சதவிகிதப் புலி வியாபாரம் சீனாவில்தான் நடக்கிறது. ஜப்பானில் இந்தத் தொழில் 2000-ம் ஆண்டு தடை செய்யப்பட்டுவிட்டது. சீனாவின் பாரம்பரிய மருத்துவத் தின் அடிப்படைப் பொருள் விலங்குகளின் எலும்புகள். குறிப்பாக, புலியின் எலும்பு. மருத்துவப் பொருட்கள் மட்டுமின்றி அவர்களின் அழகு சாதனப் பொருட்களையும் புலிகளின் எலும்புகளை வைத்துதான் செய்கிறார்கள். புலி களின் எலும்புகளை மருத்துவத்தில் சேர்த்துக்கொள்வது ஆன்மிகம், வீரம் மற்றும் கௌரவம் சார்ந்த விஷயமாகவும் சீனர்கள் நம்புகிறார் கள்.

இதற்காகவே சீன அரசு புலிப் பண்ணைகளை உருவாக்கி, 6,000 பலி புலிகளை வளர்க்கிறது. ஆனால், காட்டு வாழ் புலிக்குத்தான் வீரியம் அதிகம் என்று நம்பும் மருந்து நிறுவனங்கள், கள்ளச் சந்தையில் வரும் காட்டுப் புலிகளின் மூலம் கிடைக்கும் பொருட்களின் மீது ஆர்வம் காட்டுகின்றன. சீனா வின் வியாபாரரீதியிலான புலி வளர்ப்புக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் குவிந்துவருகின்றன. கடந்த 73-ம் ஆண்டு வாஷிங்டனில் 80 நாடுகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய 'சைட்டிஸ்’ (CITES Convention on international trade in endangered species)  ஒப்பந்தக் குழுவினர் கடந்த 2007-ல் சீனாவில் பண்ணையில் வளர்த்து, புலிகள் கொல்லப்படுவதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனாலும், அசராமல் புலிகளை வளர்த்துப் பலி கொடுக்கிறது சீனா.

இந்தியா மற்றும் தமிழகத்தில் புலிகள்!

இந்தியாவின் வட மாநிலங்களில் புலி வேட்டையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன அரசுகள். ஏனெனில், இதில் கிடைக்கும் அபரிமிதமான பணம். கடந்த 2000 முதல் 2009-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 882 பேர் புலி வேட்டை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், இவர் களில் தண்டனை பெற்றது 18 பேர் மட்டுமே. சரியான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் புலி மாஃபியாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணம்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் கோவை, சத்தியமங்கலம், நீலகிரி வனக் கோட்டத்துக்கு உட்பட்ட இடங்களில் 10-க்கும்
மேற்பட்ட புலித் தோல்கள் பிடிபட்டன. ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையை ஒட்டி கர்நாடகாவில் இருக்கும் சாம்ராஜ் நகரில் புலியின் தோல், இறைச்சி, எலும்புகளை வைத்திருந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
ஆபத்துகளுக்கு இடையிலும் மற்ற மாநிலங்களைவிட புலிகள் பாதுகாப்பில் தமிழ கம் முதன்மையான மாநிலம் என்பதைச் சமீபத்தியக் கணக்கெடுப்புகள் நிரூபிக்கின்றன. தமிழகத்தில் களக்காடு - முண்டந்துறை, ஆனைமலை, முதுமலைப் புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதி ஆகியவற்றில் தற்போது 150 புலிகள் இருப்பதாக வனத் துறை அறிவித்துள்ளது. ஆனால், சமீபத்தில் நடந்த கணக்கெடுப்புகளின்படியும் காடுகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமரா பதிவுகளின்படியும் புலிகளின் எண்ணிக்கை உத்தேசமாக 300 ஆக உயர்ந்திருக்கும் என்கிறார்கள்.

எனது இந்தியா (தாவர உலகம்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்திய வரலாற்றின் உருவாக்கத்தில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கை வகித்து இருக்கின்றன. குறுமிளகு, கிராம்பு, அகில் மற்றும் சந்தனம் ஆகியவற்றைத் தேடிவந்த வெளிநாட்டு வணிகர்கள், வாசனைத் திரவியங்களை அள்ளிக் கொண்டுசென்றதுடன், இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ததுதான் கடந்த கால வரலாறு.

இன்று, பலரும் சாப்பிடும்போது உணவில் இருக்கும் மிளகை அலட்சியமாகத் தூக்கி எறிகின்றனர். அவர்களுக்குத் தெரியாது இந்த மிளகுக்காகத்​தான் இந்தியா அடிமைப்படுத்தப்​பட்டது என்பது. வரலாற்றைக் கற்றுக்கொள்ள கல்வெட்டுக்கள் மட்டும் அல்ல, பொங்கலில் போடப்பட்ட மிளகும் உதவக்கூடும்.

இந்திய மக்கள் எந்தத் தாவரங்களைப் புனிதமாகக் கருதினர்? மன்னர்கள் எந்தப் பூக்களை தங்களது அடையாளமாகக்கொண்டனர்? எந்த மரங்கள் மருத்துவ குணம்கொண்டதாக அடையாளப்படுத்தப்பட்டன? எவை ஸ்தல விருட்சங்களாகக் கொண்டாடப்பட்டன? என்பதை எல்லாம் ஆராய்ந்தால், தாவர உலகம் கடந்த காலத்தின் முக்கிய வரலாற்றுச் சாட்சியாக இருப்பதை உணர முடிகிறது.


இந்தியா எங்கும் தாவரங்களின் மருத்துவக் குணங்கள் பற்றிய அறிவு, குடும்ப ரகசியம்போலவே பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவர்கள் தங்களது ரத்த உறவுகளுக்கு மட்டுமே மூலிகைகளை எப்படி அடையாளம் காண்பது என்பதைக் கற்றுக்கொடுத்து இருக்கின்றனர். எளிய மனிதர்கள் நோயுறும்போது முறையான மருத்துவம் பெற சாதி ஒரு தடையாக இருந்து இருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியத் தாவரங்களை வகைப்படுத்தி, அதை ஒரு தனித்த அறிவுத் துறையாக மாற்றியவர்கள் டச்சுக்காரர்கள். அந்தப் பணியைத் தொடர்ந்து செய்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்.


டச்சுக்காரர்கள் ஆசிய நாடுகளின் தாவரங்​களை ஆராய்ந்து அதன் வழியே இந்திய மரபு மருத்துவ முறையை தங்கள் வசமாக்கிக்கொள்ள முயன்றனர். அத்துடன், புதிய வாசனைப் பொருளோ அல்லது விற்பனைப் பொருளோ கிடைக்கக்கூடும் என்றும் தேடத் தொடங்கினர். இது, சுயலாப நோக்கம்கொண்ட தேடுதல் என்றாலும், அதன் விளைவாக உருவான அரிய தொகுப்பு முயற்சிகள் இந்தியத் தாவரவியல் உலகுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது என்பதே உண்மை. 'ஹோர்டஸ் மலபாரிகஸ்’ எனப்படும் 12 தொகுதிகள்கொண்ட இந்தியத் தாவரவியல் புத்தகம், டச்சுக்காரர்களால் தயாரிக்கப்பட்டது. 1678-ம் ஆண்டு தொடங்கி 30 ஆண்டுகள் இந்தப் புத்தகத் தொகுப்புப் பணி நடந்து இருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தொகுத்த ஹென்ரிக் வான் ரேடே என்பவர் மலபார் கவர்னராகப் பணியாற்றிய டச்சுக்காரர். ஒவ்வொரு தொகுதியும் 500 பக்கங்கள் கொண்டது. கேரளாவில் காணப்படும் தாவர இனங்களை வகைப்படுத்தி அழகான சித்திரங்களுடன் லத்தீன் மொழியில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தாவரவியல் தொகுப்புப் பணியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்தப் பணியை ஒருங்கிணைத்ததில் ரானா பகத், விநாயக் பண்டிட், அப்பு பகத் மற்றும் இட்டி அச்சுதன் வைத்தியர் ஆகிய நான்கு பேர் முக்கியமானவர்கள். இதில், அச்சுதன் வைத்தியர், ஈழவ வம்சத்தைச் சேர்ந்தவர். இந்தப் புத்தகத்துக்கான ஓவியங்களை வரைந்தவர், கார்மேலிட் மத்தியாஸ் என்ற பாதிரியார். வனப் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்​பட்டுக் கொண்டுவரப்பட்ட தாவரங்களைப் புகைப்படம் எடுப்பதுபோல அத்தனை துல்லியமாக ஓவியமாக வரைந்து இருக்கிறார் மத்தியாஸ். வரையப்பட்ட தாவர ஓவியங்களின் அடியில் மலையாளத்திலும் கொங்கணியிலும் அதுபற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அந்தப் பட்டியலை இம்மானுவேல் கமிரோ என்பவர் லத்தீனில் மொழியாக்கம் செய்து இருக்கிறார்.

டச்சு அதிகாரி ஹென்ரிக் வான் ரேடேவுக்கு ஏன் இந்தியத் தாவரங்களின் மீது இத்தனை ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணம், அவருடைய தந்தை நெதர்லாந்தில் வனத் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். எனவே, சிறுவயது முதலே காட்டில் சுற்றி அலைந்து அரிய தாவரங்கள், விலங்குகளைக் காண்பது ஹென்ரிக்குக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. வணிக முயற்சிகளுக்காகத் தொடங்கப்பட்ட டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஹென்ரிக், இலங்கை மற்றும் தூத்துக்குடியில் சேவை செய்த பிறகு, கேரளாவின் மலபார் பகுதிக்கு 1658-ம் ஆண்டு வந்து சேர்ந்தார். அவரது முக்கியப் பணி வாசனைப் பொருட்களை வாங்கி விற்பது என்றாலும், உள்நாட்டு அரசியலில் தலையிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார். அதன் காரணமாக, கொச்சி மன்னருடன் நெருக்கமான நட்புடன் இருந்தார் ஹென்ரிக்.

அந்த நாட்களில் மலபார் பகுதியின் வனம் அடர்ந்து செழித்து இருந்தது. பல அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் நிறைந்த மலபார் காட்டுப் பகுதியை ஹென்ரிக் மிகவும் நேசித்தார். குறிப்பாக, மலபார் பகுதியில் விளையும் மஞ்சள் ரோஜாக்கள் அவரது கவனத்தைப் பெரிதும் கவர்ந்தன. இதுபோன்ற ரோஜா மலர்களை அதற்கு முன் அவர் பார்த்ததே இல்லை. மலபார் ரோஜாக்களில் இருந்து எடுக்கப்படும் அத்தர் வாசனை அவரை மிகவும் மயக்கியது. எத்தனை விதமான ரோஜா மலர்கள் மலபார் பகுதியில் இருக்கின்றன என்று தேடி அலைந்து, சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ரோஸ் எனப் பல்வேறு விதமான ரோஜா மலர்கள் இருப்பதைக் கண்டபோது, இவற்றைப் பயன்படுத்தி அத்தர் தயாரித்து ஐரோப்பாவில் விற்பனை செய்யலாமே என்ற எண்ணம் ஹென்ரிக்குக்கு ஏற்பட்டது. அதுவரை துருக்கியில் இருந்தே ஐரோப்பாவுக்கு வாசனைத் திரவியங்கள் வரும். இந்த எண்ணம்தான், காட்டுத் தாவரங்களை முறையாகப் பட்டியலிட வேண்டும் என்ற நோக்கமாக உருமாறியது.

இன்னொரு பக்கம், ஐரோப்பிய மருத்துவ முறைகளைவிட வியப்பளிக்கும் இந்திய மருத்துவ முறைகளையும் அதற்குப் பயன்படும் தாவரங்களையும் பற்றி அறிந்துகொண்ட ஹென்ரிக், எதிர்கால மருத்துவ உலகம் பயன்படுத்திக்கொள்ள ஏற்றபடி தாவர வகைப்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பினார். மலபார் பகுதியின் கவர்னராகப் பணியாற்றியபோதும், ஹென்ரிக்குக்கு மலையாளம் பேசத் தெரியாது. மொழிபெயர்ப்பாளர்களாகச் செயல்பட்ட துபாஷிகளைக்கொண்டே உள்ளூரை நிர்வாகம் செய்தார். மலபார் பிரதேசம் என்பது கடவுளின் பூந்தோட்டம். அதைக் கவனமாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை அமைத்து, முறையாகத் தாவரங்களைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார் ஹென்ரிக். அப்போது அவர் முன் இரண்டு சவால்கள் இருந்தன. ஒன்று, இந்தியாவில் அதுவரை இருந்த தாவரவியல் வகைப்பாடு பெரும்பாலும் அராபிய முறையில் அமைந்து இருந்தது. இன்னொன்று, அந்த வகைப்பாட்டை செய்தவர்கள் உயர் வகுப்புப் பிராமணர்கள்.

ஆனால், மருத்துவத்தைத் தொழிலாகக்கொண்ட வைத்தியர்களை கீழ்சாதியாகக் கருதி அவர்களின் மருத்துவ அறிவை ஒதுக்கியே வைத்திருந்தது மேல்தட்டு வர்க்கம். 

பாரம்பரியமாக வைத்தியம் செய்துவரும் குடும்பங்கள், படிப்பு அறிவு இல்லாமல் சரியாக மூலிகைகளை அடையாளம் காட்டிவிடுகின்றன. ஆனால், படித்த உயர்தட்டு மக்கள் ஏட்டில் உள்ளதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே தவிர, நடைமுறையில் அவர்களால் அதை மருத்துவ முறையாக மாற்ற முடியவில்லை என்பதை ஹென்ரிக் தெளிவாக உணர்ந்தார். ஆகவே, முற்றிலும் வைத்திய மரபில் வந்த ஈழவ சமுதாயத்தினரின் வைத்திய மரபுப்படியே தனது தாவர வகைப்பட்டியல் உருவாக வேண்டும் என்று விரும்பினார். இதனால், அச்சுதன் வைத்தியரை தனது பணிக்கு முக்கிய ஆய்வாளராக நியமித்தார்.

அச்சுதன் வைத்தியரை நியமித்தது தவறு. அவர் கீழ்சாதிக்காரர் என்று எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் ஹென்ரிக், அச்சுதன் வைத்தியரின் விசாலமான அறிவையும் மருத்துவத் தேர்ச்சியையும் மனதில் கொண்டு தனது உத்தரவில் உறுதியாக இருந்தார்.

அச்சுதன் வைத்தியர் தன்னிடம் இருந்த பழைய ஏடுகளைக்கொண்டு காட்டில் பறித்து வரப்பட்ட தாவரங்கள் பற்றி தெளிவான தகவல்களைத் தெரிவித்தார். ஆகவே, இந்தத் தாவரவியல் தொகுப்பு, முறையான மருத்துவரின் சான்று பெற்ற புத்தகம் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றது. அச்சுதன் வைத்தியரை டச்சுக்காரர்கள் நெதர்லாந்துக்கே அழைத்துச் சென்றுவிட்டனர். செல்வதற்கு முன் தனது அரிய ஏடுகளை அவர் ஒரு மரப்பெட்டியில் வைத்து உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். பின்னாளில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் அந்த ஏடுகள் எரிந்துவிட்டன என்ற ஒரு தகவல் இன்றும் கூறப்படுகிறது. அச்சுதன் வைத்தியரின் இந்தப் பணியைப் பாராட்டி மலபாரின் ஒரு குறிப்பிட்ட தாவர வகைக்கு அவரது பெயரைச் சூட்டிக் கௌரவப்படுத்தி இருக்கிறார் ஹென்ரிக்.

தாவரவியல் வகைப்பாட்டுக்காக பால் ஹெர்மன் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவை காட்டுக்குள் அனுப்பித் தாவரங்களை கொண்டுவரச்செய்து இருக்கிறார். இரண்டு ஆண்டுகள் நடந்த இந்த ஆய்வுப் பணியின் முடிவில் 1676-ம் ஆண்டு முதல் இரண்டு தொகுப்புகள் லத்தீனில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. 1678-ம் ஆண்டு மலபாரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஹென்ரிக், ஹாலந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Sunday, January 20, 2013

வருமான வரிச் சேமிப்பு : லாபம் தரும் வழிகள்..!

இன்றைய நிலையில் வருமானம் ஈட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த வருமானத்தை மிச்சப்படுத்த முதலீடு செய்வதுதான் பெரிய வேலையாக இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டான 2012-13 முடிய இன்னும் சுமார் 60 நாட்கள்தான் இருக்கிறது. இந்நிலையில் வரிச் சேமிப்பிற்கான முதலீட்டை எந்த அளவுக்கு மேற்கொண்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு செய்யவேண்டும் என்று திட்டமிட்டால் லாபகரமாக இருக்கும். இல்லை என்றால், கடைசி நேரத்தில் கண்ட திட்டத்தில் பணத்தைப் போட்டு பரிதவிக்கவேண்டியிருக்கும். என்னென்ன வழிகளில் வருமான வரியைச் சேமித்து, லாபம் அடையலாம் என்பதை இனி பார்ப்போம்.

80சி முதலீடுகள்..! 

வருமான வரியை மிச்சப்படுத்துவதில் 80சி பிரிவு மிகவும் உதவியாக இருக்கிறது. இப்பிரிவின் கீழ் ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற திட்டங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.


ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்களுக்கு நல்வாய்ப்பாக இ.எல்.எஸ்.எஸ். என்கிற பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் இருக்கிறது. இதில் செய்யப்படும் முழுத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு. இத்திட்டத்தில் டிவிடெண்டுக்கு வரி இல்லை. மேலும், முதிர்வுக்குப் பின் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்டவேண்டியதில்லை.

பங்குச் சந்தை சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் முதலீட்டுத் திட்டமான யூலிப் பாலிசிக்குக் கட்டும் பிரீமியத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. ஆனால், குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும் என்கிற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் யூலிப் பாலிசிகளில் முதலீட்டைத் தொடங்கலாம்.

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு என ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (சுமார் 8-9% வட்டி), ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரம் (வட்டி 8.5%), புதிய பென்ஷன் திட்டம் (வயதுக்கு ஏற்ப பங்கு முதலீடு அளவு இருக்கும்).


செலவுகள்..! 

குறிப்பிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குச் செய்யப்படும் செலவுகளுக்கு வரிச் சலுகை இருக்கிறது.

* வீட்டுக் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தும் அசல் (80சி பிரிவு) மற்றும் வட்டிக்கு (24 பிரிவு - நிதி ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது. இது வீட்டில் குடியிருப்பவர்களுக்கான கணக்கு. வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையை வருமானமாகக் காட்டினால், அசலுக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை மற்றும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.

* வீடு வாங்க கட்டும் பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. (80சி பிரிவு)

* ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் ஆண்டுக்கு ரூ.15,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000) வரை வரிச் சலுகை இருக்கிறது. பெற்றோருக்கு கட்டும் பிரீமியத்துக்கும் மகன் அல்லது மகள் வரிச் சலுகை பெற முடியும். இந்த வகையில் அதிகபட்சம் ரூ.40,000-க்கு வரிச் சலுகை பெற முடியும். (80டி பிரிவு)

*  80 சி பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இந்தச் சலுகை இரண்டு பிள்ளைகளுக்குத்தான் உண்டு. கணவன் - மனைவி, இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில் ஒருவர் ஒரு பிள்ளைக்கும், இன்னொருவர் இன்னொரு பிள்ளைக்கும் வரிச் சலுகை கோரும்பட்சத்தில் கூடுதல் வரிச் சலுகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதர வரிச் சலுகைகள்..! 

* குடியிருக்கும் வீட்டுக்குக் கொடுக்கும் வாடகைக்கு வரி விலக்கு கிடைக்கும். மொத்தச் சம்பளத்தில் 10 சதவிகிதத்திற்கு மேல் வாடகையாகக் கொடுத்திருக்கவேண்டும். மேலும், நகரம், கம்பெனி அளிக்கும் வீட்டு வாடகைபடி போன்றவற்றை பொறுத்து வரிச் சலுகை அளவு இருக்கிறது. வீட்டு உரிமையாளரிடமிருந்து ரசீது பெற்று கொடுக்கவேண்டும். (பிரிவு 10 (13ஏ))

* வரி கட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ.50,000 (தீவிரமான உடல் ஊனம் ரூ.1,00,000 ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது. (பிரிவு 80யூ)

*  வருமான வரிச் செலுத்துபவரை சார்ந்திருக்கும் செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு மேற்கொள்ளும் மருத்துவமனை செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1,00,000) வரை வருமான வரிச் சலுகை பெறலாம். மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் கட்டாயம் தேவை. (பிரிவு 80டிடி)

*  புற்றுநோய், எய்ட்ஸ், நரம்பு மண்டல பிரச்னை உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் ரூ.40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000) வரி விலக்கு உள்ளது. மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் தேவை. (பிரிவு 80டிடிபி)

* தன்னுடைய அல்லது பிள்ளைகளின்      உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த வரிச் சலுகை. அசலுக்கு வரிச் சலுகை இல்லை. (பிரிவு 80இ)


பங்குகளில் முதலீடு செய்து, ரிஸ்க் எடுத்து வருமானம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு என  புதிதாக ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்பு திட்டத்தைக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 80சிசிஜி-ன் கீழ் வருகிறது. இதில் செய்யப்படும் 50,000 ரூபாயில் 25,000 ரூபாய்க்கு வரிச் சலுகை தரப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரைக்கும் பங்குகளில் முதலீடு செய்யாதவர்கள்தான் முதலீடு செய்யமுடியும். மேலும், ஆண்டு மொத்த வருமானம் 10 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். மொத்த லாக்கின் பீரியட்

3 ஆண்டுகள்..! 

80சி பிரிவின் கீழ் மேலே கண்ட அனைத்து முதலீடு மற்றும் செலவு எல்லாம் சேர்த்து ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு.

Saturday, January 19, 2013

எனது இந்தியா (இந்தியப் பருத்தியின் அழிவு!) - எஸ். ராமகிருஷ்ணன்....

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா முழுவதும் ரயில் பாதைகள் அமைத்தனர். தொழில் துறையை மேம்படுத்தினர். அதனால், இந்தியாவின் வாழ்வு வளமானது என்ற ஒரு பொதுக் கருத்து பலரிடம் இருக்கிறது. அது உண்மை அல்ல. இந்தியாவின் அரிய செல்வங்களும் உற்பத்திப் பொருட்களும் இந்த ரயில் பாதை வழியாகப் பிரிட்​டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரிட்டனின் வாழ்வு மேலோங்கியது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் அரிய தொழில்களை, வேண்டும் அளவுக்கு உறிஞ்சிக்கொண்டு முடிவில் அதை ஒழித்தது பிரிட்டிஷ் அரசு. அதற்கான ஓர் அடையாளமே டாக்கா மஸ்லின். டாக்கா நகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் சேர்ந்த கிராமங்களில் பாரம்பரியமாக இந்த நெசவில் ஈடுபட்ட குடும்பங்கள் இருந்தனர். அவர்கள், நவாப்பின் ஆதரவைப் பெற்றவர்கள். அரச குடும்பத்தினருக்காக ஆடைகளைத் தயாரிப்பதற்கு என்று மானியம் வழங்கப்பட்டவர்கள். இந்த மஸ்லின் ஆடைகளின் நேர்த்தியை அறிந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதை இந்தியாவில் இருந்து கப்பல் கப்பலாக இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தது. மஸ்லின் ரகத்தை வாங்குவதில் ஏற்பட்ட போட்டி, அந்தத் துறையை முற்றிலும் தனதாக்கிக்கொள்ள முயன்றது பிரிட்டிஷ். அதற்காக, உள்ளூர் அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். அரசு நேரடியாக நெசவாளிகளை மிரட்டி, தங்களுக்கு மட்டுமே துணிகளை விற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது. டாக்கா, ஒரிசா மற்றும் பீகாரில் இருந்து மஸ்லின் துணிகள் பெருமளவு விலைக்கு வாங்கப்பட்டு பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த வணிகத்​தில் கொள்ளை லாபம் அடைந்தவர்கள் அன்றைய பிரிட்டிஷ் கவர்னர்கள். 1767-ல் ராபர்ட் கிளைவ் சம்பாதித்த சொத்தின் மதிப்பு 4,01,102. பவுண்டுகள், ஜான் ஜோன்ஸ்டன் சொத்து மதிப்பு 3,00,000 பவுண்டுகள். ரிச்சர்ட் ஸ்மித்தின் சொத்து மதிப்பு 1764 முதல் 1770 வரை 2,50,000 பவுண்டுகள். 1757 முதல் 1784 வரை இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்த வகையில் அதிகாரி​களுக்குக் கிடைத்த லாபம் 18,000,000 பவுண்டுகளாக இருக்கக்கூடும் என்று குறிப்​பிடுகிறார் மார்ஷல்.


கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்த ரத்தம் உறிஞ்சிய வணிகத்தைப் பற்றி, நிக்ராபின்ஸ் தனது புத்தகத்தில் மிகவும் விரிவாக எழுதி இருக்கிறார். அதில் இன்​றுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னோடி கிழக்கிந்தியக் கம்பெனியே என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனி 1664-ம் ஆண்டு மஸ்லின் துணிகளை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. அத்துடன், இந்தியாவில் இருந்து கலிக்கோ துணி ரகங்கள் அதிக அளவில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்தியத் துணிகளுக்கு ஏற்பட்ட கிராக்கி, உள்ளூர் நெசவுத் தொழிலைப் பாதிக்கிறது என்று பிரிட்டிஷ் அரசு 1721-ம் ஆண்டு கலிக்கோ சட்டம் ஒன்றை உருவாக்கியது. அதன்படி, அன்றாடப் பயன்பாட்டுக்கு கலிக்கோ துணிகளை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், இதற்கு மாற்றாக புதிய துணி ரகங்களைத் தயாரிக்குமாறு நெசவாளர்களைக் கேட்டுக்கொண்டனர்.

கலிக்கோ என்பது சாயம் போடப்படாத பூ வேலைப்பாடு நிறைந்த பருத்தித் துணி. இது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இங்கிலாந்தில் அதிகமாகப் பயன்படுத்தபட்டது. இன்றுகூட புத்தகங்​களை பைண்டிங் செய்யும்போது புத்தக முதுகில் ஒட்டுவதற்கு கலிக்கோ துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரண​மாகவே கலிக்கோ பைண்டிங் என்ற பெயரும் உருவானது. கி.பி. 1720-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான மொத்தத் துணி வியாபாரத்தில் கலிக்கோ துணி 20 சதவிகிதமாக இருந்தது. 1780-ம் ஆண்டில் 6,  1840-ம் ஆண்டில் 4 சதவிகிதமாகவும் குறைந்து இருக்கிறது. கலிக்கோ துணி, கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து உருவானது. போர்த்துக்கீசியர்கள் இந்தத் துணிக்கு கலிக்கோ என்று பெயர் சூட்டினர். சாலியர்கள் எனப்படும் நெசவாளிகள் இந்தத் துணியை நெய்துவந்தனர். இன்றும்கூட கேரளாவின் பேப்பூர் அருகே சாலியர் காலனி இருக்கிறது. அங்கு ஓடும் ஆறும் சாலியம் ஆறு என்றே அழைக்கப்படுகிறது. சாமுதிரின் அரசனால் இந்த நெசவாளிகள் கேரளாவில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களது பூர்வீகம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம். வலங்கை இடங்கை சண்டை ஏற்பட்டதில் இவர்கள் கேரளாவுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அது என்ன வலங்கை இடங்கை சண்டை? சோழர்கள் காலத்தில் அந்தணர் மற்றும் வேளாளர் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் வலங்கை இடங்கை என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர். 10-ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் படைப் பிரிவில் இந்த வழக்கம் தோன்றியது. வலங்கைப் பிரிவில் 98 குலங்களும், இடங்கைப் பிரிவில் 98 குலங்களும் இருந்தன. வலங்கைப் பிரிவினர், மன்னர் படைகளில் சிறப்பிடம் பெற்றிருந்தனர். ஆனால், இடங்கையினர் பெரும்பாலும் சிறுவணிகர்களாகவும் தொழிலாளர்களாகவுமே இருந்தனர். இவர்​களிடையே பிரிவினைகள், மோதல்கள் இருந்தன. வலங்கை, இடங்கை வகுப்பின​ரிடையே ஏற்பட்டு இருந்த மோதல்கள் 19-ம் நூற்றாண்டில் கொலையிலும் கொள்ளை​யிலும் முடிந்திருக்கிறது. அதற்குக் காரணம், இரு வகுப்பினரும் அனுபவித்துவந்த உரிமை​களைப் பற்றியது. சென்னையில் சர் ஆர்ச்சிபால்ட் காம்ப்பெல் கவர்னராகப் பதவி ஏற்ற பிறகு வலங்கை, இடங்கைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. இடங்கையினர் அனைவரும் தொழிலாளர்கள். கிழக்​கிந்தியக் கம்பெனிக்கு அவர்களுடைய வணிகத்தில் உதவிசெய்து வந்தவர்கள்.

ஒரு சமயம், வலங்கையினர் எஸ்பிளனேட் மைதானத்தைக் கடந்து கோட்டைக்குச் சென்றபோது தப்பட்டை அடித்துக்கொண்டும், கரண்டிகளைத் தூக்கிக்கொண்டும், மணியடித்துக்கொண்டும் சென்றனர். அவ்வாறு செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என, அதை எதிர்த்து இடங்கையினர் கவர்னரிடம் புகார் அளித்தனர். எஸ்பிளனேட் மைதானம் அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதில் உரிமைப் பிரச்னை ஏதும் கிடையாது என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்த பிறகுதான், பிரச்னை ஓய்ந்தது. கேரளாவுக்குச் சென்ற சாலியர்களிடமும்கூட, வலங்கை இடங்கை சண்டை நடந்து இருக்கின்றன என்பதை சாமுதிரின் குறிப்பேடுகள் கூறுகின்றன.

இதற்கிடையில், கோழிக்கோட்டில் இருந்து கலிக்கோ துணிகளை வாங்கி ஏற்றுமதி செய்துவந்த போர்த்துக்​கீசியர்கள், தாங்களே பருத்தி விளைவிப்பது என்று முடிவு செய்தனர். பிரேசிலில் பருத்தி பயிரிடுவதற்கு முயன்றனர். அத்துடன், கோழிக்கோட்டில் இருந்த சாலியர்கள் சிலரை தங்களுடன் கப்பலில் அழைத்துச் சென்று பிரேசிலில் குடியமர்த்தி அங்கே இந்திய நெசவுக் கலையை அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.

கலிக்கோவுக்கு ஏற்பட்ட தடையை அடுத்து, புதிய ரக துணிகளை உருவாக்க இங்கிலாந்து நெசவாளிகள் தீவிரமாக முனைந்தனர். மேற்கு ஸ்காட்லாந்துவாசிகள் நெசவுத் தொழிலில் ஆர்வம்கொண்டவர்கள். அவர்​கள் வெல்வெட் எனும் புதிய துணி ரகம் ஒன்றை உருவாக்கினர். இது, பட்டுத் துணி போலவே இருக்கிற மலிவு விலைத் துணி என்பதால், இதற்கு பெரிய சந்தை உருவானது. வெல்வெட் துணிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்து புதிய சந்தையை உருவாக்கியது கிழக்கிந்தியக் கம்பெனி.

இன்று, கலிக்கோ நெசவுப்பொருள் அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களில் ஒன்றான குஜராத்தின் தலைநகரமான அகமதாபாத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள காட்சிப் பொருட்களில் 15 முதல் 19-ம் நூற்றாண்டு வரை முகலாய அரசர்களும் மாகாண ஆட்சியாளரும் அணிந்த துணிவகைகள் இருக்கின்றன. இவற்றுடன், பல பகுதிகளையும் சேர்ந்த பூத்தையல் வேலைப்பாடுகொண்ட துணி வகை​களும், கட்டிச் சாயம் தோய்த்த துணி வகைகளும், சமயம் சார்ந்த துணி வகைகளும் காட்சிக்கு வைக்கப்​பட்டுள்ளன.
லங்காஷயரில் இருந்த நெசவு ஆலைகளில் இயந்திரங்​களைக்கொண்டு நூல் உற்பத்தி செய்யப்பட்டன. இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்பட்டவர்கள் சிறுவர்கள். லங்காஷயர் நூற்பு ஆலைகளில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை. ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் அந்த நூற்பு ஆலைகளில் வேலை செய்தனர். 

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மாண்டியத் என்பவர், இந்திய மஸ்லின் துணிகளைப் போன்ற ரகங்களை உருவாக்க வேண்டும் என்று, தனது பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அனுப்பி இந்தத் தொழில்​நுட்பத்தைக் கற்றுக்கொள்ளவைத்தார். அதோடு, வங்காளத்து நெசவாளிகள் சிலரை இங்கிலாந்துக்கு அழைத்துவந்து தனது ஆலையில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். இதன் மூலம், புதிய வகை மஸ்லின் துணியை மாண்டியத் தயாரித்தார். தான் தயாரித்த மஸ்லின் துணியில் தங்க ரேகைகள் பதித்து, இங்கிலாந்து மகாராணிக்குப் பரிசாக வழங்கினார். அதன் காரணமாக, இங்கிலாந்து மஸ்லின் துணியும் புகழ்பெறத் தொடங்கியது.

1787-ல் டாக்காவின் மக்கள் தொகை 2,00,000 ஆக இருந்தது. அது, 1817-ம் ஆண்டுக்குள் 79,000 ஆகக் குறைந்து விட்டது. 1787-ம் ஆண்டு டாக்கா மஸ்லின் துணி ஏற்றுமதி மூலமாக கிடைத்த வருமானம் 8,000,000, அதுவே 1817-ல் 23,000 ஆனது. டாக்கா மஸ்லின் நெசவாளிகளைத் திட்டமிட்டு ஒடுக்கி இடமாற்றம் செய்யப்பட்டனர். மஸ்லின் நெசவு முற்றிலும் கைவிடப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.

அதே நேரம், 1760 வரை லங்காஷயரில் இருந்த நெசவு நூற்கும் தொழில் பெரிய வளர்ச்சி அடையவில்லை. அதற்கு முக்கியக் காரணம், நெசவு ஆலைகள் உருவாக்கப்படவில்லை. அதற்கான, தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லை. அதே நேரம், இந்தியாவில் நெசவுத் தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து இருந்தது. இந்தியாவில், நெசவுக்கான பிரத்யேக கருவிகள், வழிமுறைகள் இருந்தன. இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்தே லங்காஷயரின் நூற்பாலைகள் உருவாக்கப்பட்டன. 1750 வரை இங்கிலாந்தில் இரும்பு உருக்காலைகள் தள்ளாட்டத்தில்தான் இருந்தன. அதன் காரணமாக, கனரக இயந்திரங்கள் உருவாக்குவது அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. அதே நேரம், இந்தியாவில் இரும்பு உருக்கும் தொழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தனித்துவமிக்க தொழிலாக விளங்கியது. இந்தியர்கள் நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்குகிறார்கள் என்பதை அறிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இங்கிலாந்திலும் நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்க முயன்றனர். அதிலிருந்து அங்கும் இரும்புத் தொழில் வளர்ச்சி அடையத் தொடங்கியது. 

1174-ல் கென்டிஷ் பாதிரியார் எட்மண்ட் கார்ட்​ரைட் உருவாக்கிய பவர்லூம் எனப்படும் நெசவு இயந்திரத்தின் வருகையும் அதைத் தொடர்ந்து உருவான நெசவு ஆலைகளும் இங்கிலாந்துக்கு ஒரு புதிய தொழில் துறையை ஏற்படுத்தியது. இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட நூலின் விலை மலிவாக இருந்தது. ஆகவே, அதைப் பயன்படுத்தி உலகம் தழுவிய ஒரு சந்தையை உருவாக்க முயன்றது பிரிட்டிஷ் காலனி அரசு. அந்த சந்தைப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்டதுதான் டாக்கா மஸ்லின். டாக்கா மஸ்லினை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக ஸ்விஸ் மஸ்லின், புக் மஸ்லின் என்று இரண்டு துணி ரகங்களை இங்கிலாந்து பெருமளவு விற்பனை செய்தது. அவற்றில், ஸ்விஸ் மஸ்லின் ஸ்விட்சர்லாந்திலும் புக் மஸ்லின் இங்கிலாந்தின் கிளாஸ்கோவிலும் தயாரிக்கப்பட்டவை. மஸ்லின் என்ற இந்தியப் பெயரையும், இந்தியாவின் தொழில்நுட்பத்தையும் தனதாக்கிக்கொண்ட பிரிட்டிஷ்காரர்கள், இந்த நெசவுத் தொழிலில் கோலோச்சிய டாக்கா நெசவாளிகளை முற்றிலும் ஒடுக்கி, தங்கள் துணிகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யத் தொடங்கினர். 1783-ல் இங்கிலாந்தில் இருந்து வங்காளத்துக்கு கப்பல் நிறைய இங்கிலாந்தின் பருத்தித் துணிகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதுதான் இந்தியாவுக்கு வந்த அந்நியத் துணிகளின் தொடக்கம். அதன் வருகை இந்திய நூற்புலகில் பெருத்த அதிர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பிரிட்டன் ஏற்றுமதியில் 8-ல் ஒரு பாகம் இந்தி​யாவுக்குச் சென்றது என்பதையும், துணி ஏற்றுமதியில் 4-ல் ஒரு பாகம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய நாட்டுப் பருத்தி தரமற்றது. அதைப் பயிரிட வேண்​டாம் என்று ஆங்கிலேயர்கள் நாடெங்கும் பரப்பினர். காரணம், அவர்களின் இயந்திரங்களுக்கு ஏற்ப அது நீண்ட இழைகளுடன் இல்லை. அதனால், வீரியப் பருத்தி விதைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்​பட்டன. ஆக, இந்தியப் பருத்தி விவசாயத்தின் அழிவுக்கும் முதல் காரணமாக இருந்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிதான்.

பட்டுத் துணிகளில் சீனர்கள் எவ்வாறு சிறந்து விளங்கினார்களோ, அதற்கு நிகராக மஸ்லின் துணியில் இந்தியா புகழ்பெற்று விளங்கியது. காலனிய ஆட்சியின் கொடுங்கரம் இந்த அருமையான நெசவுத் தொழிலை முடக்கி இன்று அடையாளமற்றதாக்கி விட்டது. இன்று, செயற்கை இழைகளால் உருவான மஸ்லின் ஆடைகள் விற்கப்படுகின்றன. இயற்கையை அழித்துவிட்டு செயற்கையான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது காலத்தின் கோலம்.

ஓ பக்கங்கள் - ‘கடல்’ படத்தின் ஒரு முத்தம்; பல கேள்விகள்! ஞாநி


‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல் முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.

பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணிபுரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்தச் சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ஃபேஸ்புக், சமூக இணையதளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.

நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா? படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான் உதவி செய்வது, மெழுகுவர்த்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா? பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்களா? இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா? தில்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த ஃபேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன்?"

இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் ஃபேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை. என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.

இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 

உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18 தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்க வைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவருடைய அம்மா ராதாவுடையதுதான்.

இப்படி வளர் இளம்பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்க வைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட தில்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும் பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர். ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்" என்று செய்தி அனுப்பினேன்.எனக்கும் செய்தி வந்தது. இனி இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்" என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.

சினிமா, சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர் களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்குப் பதிலாக பலப்படுத்துகின்றன.

தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண் பிம்பங்கள் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில் ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவச் சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர்பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சர்யமானதுதான்.

இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.

அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.

என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.

குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது, அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.

எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனத்தில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யுஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை. எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலைநாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.

பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமென்று தனக்குத் தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குனரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவர்த்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.

காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்குச் சொல்லித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாற வேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாக வேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.Wednesday, January 16, 2013

நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு


இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?
 
அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.
 
ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.
 
அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.
 

 ப்ரீத்தி ஷா சொல்கிறார் .

''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.
 
உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

Saturday, January 12, 2013

ஓ பக்கங்கள் - ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா? ஞாநி

ஒருவழியாக கலைஞர் கருணாநிதி தாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும் உணர்ந்துள்ளார். அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக அவர் சொல்லி விட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்த போதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சர் ஆனவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தாம் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவகவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்து இருக்கலாம்.

ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க. கட்சிக்குள் இருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்தது இல்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில், வைகோவை ஸ்டாலினுக்குச் சமமான தலைவராக்காமல் தமக்குச் சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக்கதை.) அப்படியே ஸ்டாலினுக்குச் சமமான தலைவர்தான் ஜெயலலிதா என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தம்மை ஜெயலலிதாவுக்குச் சமமாக தாமே குறுக்கிக் கொண்டார்.


ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளே இருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். ஸ்டாலினைவிட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ தொடக்கத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால் தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.

ஸ்டாலின்தான் அடுத்தகட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தம் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை. பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.

ஆனால் சொந்தத் தொழில் முயற்சிகளில் தோற்றுப்போன அழகிரி, அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாகச் சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அழகிரி, அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும். 

அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டும் என்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள் இருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று. தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை. 


தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை தில்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.
குடும்ப நிர்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குல் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தமக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தம்மை டி.வி. நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராகக் காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன. 

ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்து விட்டார். தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்னைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.

இப்போது ஒருவழியாக அவரைத்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவராகத் தாமே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லி விட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உட் கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும், தி.மு.க.வில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும். 


அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக அ.தி.மு.க.வுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை. 

அழகிரி செகண்ட் சாய்ஸை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.க.வைப் பலவீனப்படுத்த விரும்பும் தில்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம். 

ஆனால், அழகிரி, எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும். குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.

கலைஞர் இனி தம் முடிவை வீட்டு நிர்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, ‘கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ, அப்போது நான் உயிரோடு இருந்தால்’ ஸ்டாலினையே முன் மொழிவேன்’ என்று சோல்லி இருக்கிறார். 

தம் காலம் முடிவதற்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தாம் விடைபெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இதுகாட்டுகிறது. எனவே தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான். இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.க.வைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

‘தி.மு.க. முடிந்து போன கதை’ என்று அண்மையில் ஜெயலலிதா தம் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க. முடிந்த கதையா காது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித வோட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.

அண்ணா 1949ல் தி.மு.க.வை ஆரம்பித்த போது அவருக்கு வயது நாற்பதுதான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்தக் கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்து விட்டிருக்கும். இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி. இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடுவயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.

இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தம்மையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.க.வைப் பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?

கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வியூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்து கொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட்அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது. 

எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்குச் சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை.

தி.மு.க. என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டுப் போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்துப் பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.

எனது இந்தியா (டாக்கா மஸ்லின்) - எஸ். ராமகிருஷ்ணன்....

ஒரு மோதிர வளையத்துக்குள் டாக்​கா மஸ்லி​னால் ஆன புடவை ஒன்றை நுழைத்துவிடலாம். அந்த அளவு​க்கு அந்தத் துணி மிருதுவாக இருக்​கும் என்கிறார்கள். டாக்கா மஸ்லின் ஒரு காலத்​தில் உலகையே வியக்கவைத்த துணி ரகம். அது இன்று அடையாளமற்ற தொழிலாக, சிறுவணிகமாக சுருங்கிவிட்டது. இந்திய நெசவுத் தொழில்நுட்பத்தின் சாதனை​யாகக் கருதப்பட்ட மஸ்லின் நெசவு, பிரிட்​டிஷ் காலனிய ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி நசிந்துபோனது துயரமான வரலாறு. டாக்கா மஸ்லின் ஒடுக்கப்பட்டதற்கு முக்​கியக் காரணம், பிரிட்டிஷின் லங்காஷயர் மற்றும் மான்செஸ்டர் ஆகிய நகரங்களில், இயந்திரங்களைப் பயன்படுத்தித் தயாரித்த துணிகளை இந்தியச் சந்தைக்குக் கொண்டுவந்து தள்ள வேண்டும் என்ற வணிகத் தந்திரம்தான். பிரிட்டனின் மான்செஸ்டர் 'டி73’ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் ரகத்தைப் பூண்டோடு அழித்துவிட்டனர் என்கிறார்கள் வங்காளதேச நெசவாளிகள்.

மஸ்லின் நெசவு ஆந்திராவின் மசூலிப்பட்டி​னத்தில் பராம்பரியமாக நடந்த தொழில். அதனால்தான் அது மஸ்லின் எனப் பெயர் பெற்றது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மஸ்லின் நெசவுக்கு டாக்கா நகரம் புகழ் பெற்றிருந்தது. நுட்பமான வேலைப்பாடுகொண்ட இந்த நெசவுத் தொழிலில் இளம்பெண்களே அதிகமாக ஈடுபட்டனர். டாக்கா மஸ்லினுக்கு இணையாக தமிழகத்தில் ஆரணி மஸ்லின் தயாரிக்கப்பட்டது. இதுவும் பராம்​பரியமாகத் தயாரிக்கப்பட்டு வந்த ஒரு நெசவு முறையே. அதுபோல ஒரிசாவின் கேந்திரபாதா, ஜகத்சிங்பூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்​பட்ட மஸ்லின் துணிகளும் இங்கிலாந்துக்குப் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டன.


மஸ்லின் துணி ஏற்றுமதியில் 75 சதவிகிதம் லாபம் கிடைத்தது. மஸ்லின் துணிகளை வாங்குவதற்கு ஐரோப்பா முழுவதும் பலத்த போட்டி நிலவியது. அழகான உடைகள், திரைச்சீலைகள் மற்றும் நாடக அரங்குகளின் சித்திரத் திரைகள் ஆகியவை மஸ்லின் துணியால் தைக்கப்பட்டன. 10-ம் நூற்​றாண்டில் பிரெஞ்சுப் பெண்கள் மஸ்லின் ஆடைகளை அணிவதை பெருமையாகக் கருதினர். மார்கோபோலோ தனது பயணக்குறிப்பில் மஸ்லின் துணி பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவர், இந்தியத் துணி ரகங்கள் ஈராக்கில் உற்பத்தியானவை என்று குறிப்பிட்டு இருப்பதுதான் வரலாற்றுக் குழப்பமாகக் கருதப்படுகிறது. பாபிலோனிய நாட்டுப் பட்டியல்ஒன்றில், மஸ்லின் என்னும் துணி வகையைக் குறிக்கும் 'சிந்து’ என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. சிந்து என்னும் சொல் தமிழில் கொடியைக் குறிக்கும். கன்னடத்திலும் துளுவிலும் துணிக்குச் 'சிந்து’ என்று பெயர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. இந்தத் துணி தமிழகத்தில் இருந்து பாபிலோனியாவுக்குக் கடல் வழியாகத்தான் சென்​றிருக்க வேண்டும் என்கிறார் ஆய்வாளர் டாக்டர் கே.கே.பிள்ளை.


டாக்கா மஸ்லின், மொகலாயர்கள் காலத்திலேயே புகழ்​பெற்றிருந்தது. மொகலாயர்கள் தலையில் அணியும் டர்பன் மற்றும் பெண்களின் அலங்கார உடைகள் அத்தனையும் மஸ்லின் துணியால்தான் தயாரிக்கப்பட்டன. இந்த மஸ்லின் துணிகள் ரோம், எகிப்து ஆகிய நாடுகளுக்கும்கூட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. எகிப்தில், இறந்த உடலைப் பதப்​படுத்திய பிறகு சுற்றுவதற்குக்கூட மஸ்லின் துணிதான் பயன்படுத்தப்பட்டது.

'சர்கார் ஈஅலா’ எனும் மஸ்லின் துணிரகம், மொகலாய மன்னர்களின் தலைப்பாகை செய்வதற்கு என்றே உருவாக்கப்பட்டது. அதுபோலவே கஷிதா, குதான்ஈரூமி, நன்பதி, யகுதி, அலிஜோலா, சமந்த் ஈலகர், ரவை சல்லா மல்மல் ராஜா போன்றவை புகழ்பெற்ற மஸ்லின் துணி ரகங்கள். இந்தத் துணிகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது ஷப்னம் எனப்படும் மஸ்லின் ரகம். இது, நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அடி 40 ரூபாய் விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறது. மஸ்லின் நூல் மிகவும் மெல்லியது. ஒரு நூல்கண்டின் நீளம் 119 மைல் என்கிறார்கள். அப்படி என்றால், அது எவ்வளவு மெலிதாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனைசெய்து பார்த்துக்கொள்ளுங்கள். அர்த்த சாஸ்திரம், மஸ்லின் துணிகளின் அழகைக் குறிப்பிடுகிறது. அதுபோலவே, பெரிபிலஸ் எழுதிய குறிப்புகளிலும் மஸ்லின் துணியின் நேர்த்தி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நேரு தனது 'கண்டுணர்ந்த இந்தியா’ என்ற புத்தகத்தில், மஸ்லின் துணி ஏற்றுமதி பற்றி விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தும் அரிய துணிரகமாக மஸ்லின் விளங்கியது. நூர்ஜகான், மஸ்லின் துணிகளை விரும்பி அணிந்து இருக்கிறார். அத்துடன், நான்கு குடும்பங்களைத் தன் விருப்பத்துக்கு ஏற்ப நெசவு நெய்வதற்கு என்று நியமித்து இருக்கிறார். அதுபோலவே, அக்பர் காலத்திலும் மஸ்லின் விரும்பி அணியப்பட்டதைப் பற்றி, 'அயினி அக்பரி’ குறிப்பிடுகிறது. எளிய பருத்தி ஆடைகளை அணிவதில் ஆர்வம்கொண்ட ஒளரங்கசீப், மஸ்லின் துணியால் ஆன தலைப்பாகையை அணிய ஆர்வம் காட்டியிருக்கிறார். ஒருமுறை, அவரது மகள் ஜெபுன்னிஸா எட்டு சுற்று மஸ்லின் ஆடையை அணிந்து வந்தபோதும் அது உடலைக் கவர்ச்சியாகக் காட்டுவதாகச் சொல்லி அந்த உடையை மாற்றிவிட ஒளரங்கசீப் உத்தரவிட்டார் என்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த வெண்ணிற உடை மெலிதானது. ஒவ்வோர் ஆண்டும் டாக்கா நெசவாளிகள் தாங்கள் நெய்த சிறப்பான மஸ்லின் துணிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று மன்னர்களுக்கு பரிசாகத் தருவது வழக்கம். அந்தப் பரிசை ஏற்றுக்கொண்டு அதற்குப் பதில் மரியாதையாக நிலமும் பரிசுப் பொருட்களும் மன்னர்கள் வழங்கி இருக்கின்றனர்.


ஜம்தானி என்ற மஸ்லின் துணி மிகவும் உயர்தர​மானது. இதில் உருவாக்கப்பட்ட சேலைகளைத்தான் மகாராணிகள் அணிந்தனர். பத்து முழச் சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் அடைத்துவிடலாம் என்பார்கள். அந்த அளவுக்கு அது மிருதுவானது. இந்த ஜம்தானி நெசவு நெய்வது கடினமான பணி. இதில் தேர்ந்த குடும்பங்கள் டாக்காவைச் சுற்றிலும் ஏராளமாக இருந்தன. இன்றும் ஜம்தானி ரகம் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் மொகலாயர் கால வேலைப்பாடுகள் இன்று சாத்தியமாகவில்லை.

மஸ்லின் நெசவாளிகளைப் பற்றி குறிப்பிடும் டாக்டர் ஜெயபாரதி, இரண்டு முக்கியத் தகவல்களைத் தருகிறார். மஸ்லின் நெசவாளர்கள், பஞ்சு நூலை  நூற்பதற்கு ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தினார்களாம். அவர்களுடைய வலதுகை கட்டை விரலின் நகத்தை நீளமாக வளர்த்துவைத்திருப்பார்களாம். அந்த நகத்தின் நடுவில் சிறிய துளையைச் செய்து நூற்பதற்கு முன் பஞ்சைச் சற்று திரித்துக்கொண்டு அந்த துளைக்குள் நுழைத்துவிடுவார்களாம். பிறகு, அந்த நுனியை தக்கிலியில் இணைத்துவிட்டு நூற்பார்களாம். அவ்வாறு நூற்கப்படும் நூலை அடிக்கடி நகத்தால் மேலும் கீழுமாக வருடி நீவிவிடுவார்களாம்.

அந்த நூல் ஒரே சீரானதாகவும், பிசிறு இல்லாததாகவும் பாலிஷ் உடையதாகவும் மிகவும் மெல்லியதாகவும் வலுவானதாகவும் விளங்குமாம். இந்த நூலை வைத்துத்தான் டாக்கா மஸ்லினை நெய்வார்களாம். அந்தக் காலத்தில் டாக்கா மஸ்லினுக்கு உலகெங்கும் கிராக்கி இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் லாங்காஷர், லிவர்பூல் பருத்தித் துணிகளை இந்தியர்களின் மீது திணிக்கும்போது, டாக்கா மஸ்லினையும் வங்கத்து நெசவாளர்களையும் முதல் மிரட்டலாகக் கருதினர். ஆகவே, அந்த மஸ்லின் நெசவாளர்களைப் பிடித்து அவர்களுடைய நகங்களை வெட்டிவிட்டனர். எந்த நெசவாளரும் நகம் வளர்க்கக் கூடாது என்ற தடையும் விதித்து இருக்கின்றனர். சில இடங்களில் நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டி இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அப்படி நடைபெற்றதற்கான நேரடிச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

Friday, January 11, 2013

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?

ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.


சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் -  மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்   திருக்கின்றன.


இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும்    (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!