Search This Blog

Monday, October 29, 2012

வேலைவாய்ப்புகள் - ரீடெயில் துறை

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதம் அளவுக்கு அனுமதிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் பெரிய கம்பெனிகள் இந்தியாவுக்குள் கடை விரித்தால், சின்ன சின்னதாக  கடை வைத்திருப்பவர்கள் காணாமல் போய்விடுவோம் என்று அஞ்சுகிறார்கள் பலர்.

இந்த பயம் ஒருபக்கமிருக்க, சூப்பர் மார்க்கெட்டுகளின் ஆதிக்கம் என்பது கடந்த அறுபது ஆண்டு கால சமாசாரம்தான். இந்த சூப்பர் மார்க்கெட்டுகள் வருவதற்கு முன்பு உலக அளவில் சிறிய கடைகள்தான் இருந்தன. பெரிய கடைகள் வழக்கத்திற்கு வந்தபோது இந்த சின்னக் கடைகள் எப்படி ஈடு தந்து வியாபாரம் செய்தன? இது தொடர்பாக அமெரிக்கா முதல் சீனா வரை உள்ள அனுபவங்களையும் படிப்பினையையும் கொஞ்சம் தேடிப் பார்ப்போமா..?

 
அமெரிக்கா!

செப்டம்பர் 1, 1945 சாம் வால்ட்டன் தனது 27-வது வயதில் அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரில் பட்லர் பிரதர்ஸ் நஷ்டத்தில் நடத்திவந்த பென் ஃபிராங்க்ளின் என்கிற கடையை 25 ஆயிரம் டாலருக்கு வாங்கி நடத்த ஆரம்பித்தார்.

நான்கே ஆண்டுகளில் அதை பென் ஃபிராங்க்ளின் கடைகளிலேயே முதலாவதாக மாற்றிக் காண்பித்தார். இந்த வெற்றிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு 1962 ஜூலையில் தனது முதல் வால்மார்ட் கடையை அதே அர்கன்சாஸ் நகரில் ஆரம்பித்தார் சாம் வால்ட்டன்.

வருமானத்தில் இன்று உலகிலேயே நம்பர் ஒன் இதுதான். இதன் வருமானம் 421 பில்லியன் டாலர்கள். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் 21 லட்சம் பேர். கிட்டத்தட்ட 15 நாடுகளில் 8,900 கடைகளுடன் தனது வளர்ச்சியைப் பறைசாற்றி வருகிறது. இதனுடன் அமெரிக்காவில் கிரோஜர், டார்கெட், காஸ்ட்கோ என பல கடைகள் போட்டி போடுகின்றன.  

எங்கெல்லாம் வால்மார்ட் கடைகள் ஆரம்பிக்கப்பட்டனவோ, அங்கெல்லாம் இருந்த 'மாம்-பாப்’ என அழைக்கப்படும் சிறிய கடைகள் 'நடையை’க் கட்ட ஆரம்பித்தன என்று உலகம் முழுவதும் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. இதுகுறித்து அயோவா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பொருளாதார பேராசிரியராக வேலை பார்க்கும் கென்னத் ஸ்டோன் என்பவர் ஒரு ஆய்வு நடத்தினார். அதன்படி வால்மார்ட் ஆரம்பித்த பத்தாண்டுகளில் அந்த பகுதியில் இருந்த பல சிறிய கடைகள் நடையைக் கட்டத்தான் செய்தன. ஆனால்,  வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்ட கடைகள் நன்றாகவே 'கடை’ கட்டின என்கிற உண்மையை எடுத்துச் சொன்னார். 

தென் கொரியா!

இந்தோனேஷியாவில் 1990-களில் மாடர்ன் ரீடெயில் தலையெடுக்க ஆரம்பித்தது. எத்தனை கடைகள் வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம் என நூறு சதவிகிதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. இருந்தாலும், இன்றைக்கு பெரிய ரீடெயில் நிறுவனமாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பது 'மாட்டாஹரி’ என்கிற உள்ளூர் ரீடெயில் நிறுவனம். 'மாட்டாஹரி’ என்றால் 'சூரியன்’ என்று அர்த்தம். சூரியனுக்கு நிரந்தர அஸ்தமனம் உண்டா என்ன?! ஆரம்பத்தில் அரசு சிறு வணிகர்களுக்குப் பாதுகாப்பு தரும் பொருட்டு சில வரைமுறைகளை அறிவித்தது. அதற்குப் பிறகு அவைகள் தளர்த்தப்பட்டன.

சீனா!

1992-ல் சில்லறை வணிகத்தில் 49 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதித்தது. அதன்படி அந்நிய நிறுவனங்கள் ஆறு பெரிய நகரங்களிலும், ஐந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் தங்களது கடைகளை ஆரம்பிக்கலாம் என அறிவித்தது. அதன்பிறகு சீனா டபிள்யூ.டி.ஓ. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின் 2002-ல் 100 சதவிகித முதலீட்டை அனுமதித்தது. இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 600 ஹைப்பர் மார்க்கெட்டுகள் (வால்மார்ட், கார்ஃபோர், மெட்ரோ மற்றும் சீன ரீடெயில் நிறுவனங்கள்) ஆரம்பிக்கப்பட்டன. இதனால் சிறுவணிகர்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடவில்லை. மாறாக 19 லட்சம் சிறு கடைகள் 25 லட்சமாக வளர்ந்தது. ரீடெயில் மற்றும் மொத்த விற்பனையில் வேலை வாய்ப்பு 2.8 கோடியிலிருந்து  5.4 கோடியைத் தொட்டது. எப்படி இது சாத்தியமானது?  

சீனாவின் மக்கள் தொகை, நகர்ப்புறமாகிவரும் கிராமங்கள், பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் வேலைவாய்ப்பு வளர்ச்சி, ரீடெயில் நிறுவனங்கள் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்ததால் இடைத்தரகர்கள் அகற்றப்பட்டார்கள். இதனால், பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு விற்க முடிந்தது. வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையினால் விநியோகச் சங்கிலி மேலாண்மை (Supply Chain Management) மேன்மையடைந்தது; உற்பத்தித்திறன் அதிகரித்தது. இன்றைக்கு சீனாவில் மாடர்ன் ரீடெயிலின் பங்கு 20 சதவிகிதம். மீதி 80 சதவிகிதம் சிறு வணிகர்களின் கையில்.

இந்தியாவில்..?

இந்திய அரசும் சில்லறை வணிகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் திறந்துவிடவில்லை. பல வரைமுறைகளை விதித்தே அந்நிய நிறுவனங்களுக்கு தற்போது அனுமதி தந்திருக்கின்றன. அதன்படி, அவர்கள்,

1. மெட்ரோ நகரங்கள் என அழைக்கப்படும்  10 லட்சம் மக்கள் தொகை கொண்ட 53 நகரங்களில் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) மட்டும்தான் கடைகளை நிறுவலாம்.

2. குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதில் 50 சதவிகிதம் பேக் எண்ட் உள்கட்டமைப்பு எனப்படும் பதப்படுத்துதல், உற்பத்தி, விநியோகம், தர நிர்ணயம், பேக்கேஜிங், லாஜிஸ்டிக், ஸ்டோரேஜ், குடோன், டிசைன் இன்ப்ரூவ்மென்ட் என பல துறைகளில் செலவிட வேண்டும்.

3. முப்பது சதவிகித பொருட்களை உள்நாட்டில் உள்ள 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக மூலதனத்தில் நடத்தப்பட்டு வரும் சிறிய, நடுத்தர நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்.  

ஆரம்பத்தில் இந்தியத் தொழில் குழுமங்கள் ரீடெயில் துறையில் நுழைந்தபோது இதே மாதிரியான எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஆனால், 2008-09 பொருளாதார நெருக்கடி எனும் சுனாமியில் இந்த தொழில் குழுமங்களைச் சேர்ந்த சில கிளைகள் மூடின. இதனால் மாடர்ன் ரீடெயிலின் வளர்ச்சி சிறிது பாதிக்கப்பட்டது. ஆனால், சிறு வணிகர்கள் முன்பைவிட இன்றைக்கு தங்களது வியாபாரத்தைச் சிறப்பாகவே நடத்தி வருகிறார்கள்.

தவிர, மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி. போன்ற அமெரிக்க நிறுவனங்கள் வந்ததினால் உள்ளூரில் எந்த உணவு விடுதியும் மூடவில்லை. மாறாக, பலவிதமான ரெஸ்டாரன்ட்கள் திறக்கப்பட்டுதான் வருகிறது. பாரிஸ்டா, கோஸ்டா காபி, ஸ்டார்பக்ஸ் காபி கடைகள் வந்தாலும் நம்மூரில் டீ கடைகள் மூடப்படுமா என்ன?  

வெளிநாட்டு நிறுவனங்கள் குட்டிக் கரணம் போட்டாலும் லோக்கல் கடைகளுடன் போட்டி போட முடியாது. உதாரணத்திற்கு, வீட்டிற்கு அருகில் கடை இருப்பதால் நமக்கு வேண்டிய சாமான்களை உடனடியாகச் சென்று வாங்கி வரமுடியும் அல்லது ஒரு போன் போட்டால் வீட்டுக்கே சரக்கு அனுப்பிவிடுவார் அண்ணாச்சி. தவிர, கடையில் கணக்கு வைத்துக்கொண்டு மாத இறுதியில் பணம் செலுத்தலாம். அரிசி, பருப்பு சரியாக அவியவில்லை என்றாலும் திரும்ப வாங்கிக்கொண்டு, மாற்றித் தருவார். இன்றைய தேதியில் மார்டன் ரீடெயிலின் பங்கு இந்திய நுகர்பொருள் சந்தையில் 6 சதவிகிதம்தான். மீதி 94 சதவிகிதம் அண்ணாச்சிகளின் கையில்தான்.

என்றாலும், வெளிநாட்டு ரீடெயிலின் வருகையால் வேலைவாய்ப்பும், உள்கட்டமைப்பு வளர்ச்சியும் கண்டிப்பாக இருக்கும். இதனால் குடோனில் வீணாகிக் கொண்டிருக்கும் அரிசி, கோதுமை, காய்கறி, பழங்கள் நுகர்வோர்களைச் சென்றடையும். இன்றைய நிலையில் நமது எதிர்கால வளர்ச்சிக்கு இது மிக மிக முக்கியம். எந்தவொரு துறையிலும் வளர்ச்சி என்று வரும்போது வீழ்ச்சியும் இருக்கத்தான் செய்யும். ஆனால், பொதுவாக வீழ்ச்சியை ஒப்பிடும்போது வளர்ச்சியே அதிகம் இருக்கும்.

உதாரணமாக, கம்ப்யூட்டர் அறிமுகமானபோது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் அதை எதிர்த்தார்கள். ஆனால், இன்று கம்ப்யூட்டர் நுழையாத துறையே இல்லை.

இதுபோல ரீடெயில் துறையிலும் வேலைவாய்ப்புகள் பன்மடங்கு பெருகவே வாய்ப்புண்டு.

  
 
 

Sunday, October 28, 2012

சோலார் பவர் மானியம் - குழப்பங்கள் தீருமா?


அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர், காற்றாலை என அத்தனையையும் தாண்டி மின்சாரத்தின் தேவை அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கு எல்லோரது கவனத்தையும் பெற்றிருக்கிறது சோலார் பவர் எனப்படும் சூரிய சக்தி. சிறிய அளவில் சூரிய சக்தியை பயன்படுத்திய காலம் மாறி, இப்போது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் பெரும்பகுதியை நம் வீட்டிலேயே உருவாக்கிக் கொள்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது சோலார் பவர் திட்டங்கள். இந்த திட்டங்களுக்கு அரசு பல வகையிலும் ஊக்குவிப்பதோடு, அவற்றுக்கு கணிசமான மானியமும் தந்து வருகிறது. இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டாலே நம் பட்ஜெட்டுக்குள் சோலார் பவர் யூனிட்டுகளை அமைக்க முடியும் என்கிறார்கள் இந்த துறை சார்ந்த நிபுணர்கள்.

''மாற்று எரிசக்திக்கு என மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக துறைகளை ஏற்படுத்தி, அவற்றை ஊக்குவித்து வருகின்றன. சோலார் பவர் திட்டங்களுக்கான மானியங்களும் இந்த துறைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சோலார் பவர் தயாரிப்புகளுக்கு என்று தனித்தனியாக மானியம் எதுவும் தரப்படுவதில்லை. நிறுவனங்கள் தயாரித்து தரும் திட்டங்களுக்கு ஏற்பவே மானியங்களை அளித்து வருகிறோம். இதன்படி அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குபவர்கள் மானியம் போக மீதித் தொகையைச் செலுத்தினால் மட்டுமே போதுமானது.  தரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நிறுவனமும் ஒரு விலை நிர்ணயித்திருக்கும். தமிழ்நாடு மாற்று எரிசக்தி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இருந்தால் மானியம்போக மீதி தொகையை மட்டும் வசூலிப்பார்கள். அனுமதி வாங்கப்படாத நிறுவனத்தின் மூலம் சோலார் உபகரணங்கள் பொருத்திக்கொண்டாலும் நீங்கள் நேரடியாக மானியத்தை வாங்கிக்கொள்ள முடியும்.'' என்றார். பொதுவாக அனைத்து வகையான சோலார் திட்டங்களுக்கும் சுமார் 30 சதவிகிதம் வரை மானியங்கள் கிடைக்கிறது. ஆனால், நாம் அதிகமாகப் பயன்படுத்தும் இரண்டு திட்டங்களுக்கு கூடுதலாக மானியம் தரப்படுகின்றன. அவை...

சோலார் வாட்டர் ஹீட்டர்!

இதில் தட்டையான பிளேட் வடிவிலான வாட்டர் ஹீட்டர், குழாய் வடிவிலான வாட்டர் ஹீட்டர் என இரண்டு திட்டம் இருக்கிறது. தினசரி 100 லிட்டர் என்ற அளவில் 1.5 ச.மீ அளவில் உள்ள குழாய் வடிவ ஹீட்டர் 15,000 ரூபாயும், 2 ச.மீ அளவில் உள்ள தட்டையான வாட்டர் ஹீட்டர் 22,000 ரூபாய் எனவும் அரசு விலை நிர்ணயித்துள்ளது.

மலைப்பிரதேசங்கள், கிராமப் பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகளில் சோலார் திட்டங்கள் அமைக்கும்போது 15-லிருந்து 20 சதவிகிதம் விலையை அதிகரித்துக் கொள்ளலாம் என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. எனவே, சிறப்பு மானியமாக 60 சதவிகிதம் வரை பெற முடியும்.  

இன்னொரு வகையில் குழாய் வடிவ ஹீட்டருக்கு 1 ச.மீட்டருக்கு 3,000 ரூபாயும், தட்டை வடிவ ஹீட்டருக்கு 1 ச.மீட்டருக்கு 3,300 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. மானியம் பெற்ற தயாரிப்பாளர் தங்களது தயாரிப்புகளுக்கு ஐந்து வருடங்களுக்கு கேரன்டி கொடுக்க வேண்டும். பொருட்களின் தரத்திற்கு ஏற்ப விலை வித்தியாசங்கள் இருக்கலாம். இதுகுறித்த விவரங்களும், மாற்று எரிசக்தி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட வாட்டர் ஹீட்டர் தயாரிப்பாளர்கள் குறித்த விவரங்களும்  www.solarwaterheater.gov.in. என்ற இணையதள முகவரியில் கிடைக்கும்.

சோலார் பேனல்கள்!

வீட்டுத் தேவைகளுக்கான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் எடுத்துத் தரும் போட்டோவோல்டைக் (Photovoltaic)  எனப்படும் சோலார் பேனல்களுக்கு அதிகபட்சமாக 50 சதவிகிதம் வரை மானியம் கிடைக்கிறது. ஜவஹர்லால் நேரு தேசிய சோலார் திட்டம் மூலம் இதற்கான மானியத் தொகை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தெருவிளக்குகள், வீட்டுத் தேவைகள், மோட்டார் பம்புகள் போன்றவற்றிற்கு மொத்த தொகையில் 30 சதவிகிதம் மானியம் கிடைக்கிறது. திட்ட மதிப்பைப் பொறுத்து         50 சதவிகிதம் வரை வங்கிக் கடன் அனுமதிக்கப்படுகிறது.

ஒரு கிலோ வாட் முதல் ஐந்து கிலோ வாட் வரை வீட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்றால், இதற்கான சாதனங்களை வாங்கும்போது 1 கிலோ வாட் அமைக்க தரத்திற்கு ஏற்ப இரண்டு லட்சம் முதல் செலவாகும். இதில் 80 ஆயிரம் வரை அரசு மானியம் கிடைக்கிறது. மோட்டார் பம்புசெட்டுகள், அலுவலகங்கள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்கிறபோது மானியத்தோடு வங்கிக் கடனும் தரப்படுகிறது. அதாவது, 20 சதவிகித பணத்தை மட்டும் கட்டினால் போதும்,                                            30 சதவிகித மானியம், 50 சதவிகிதம் வங்கிக் கடன் பெற்று சோலார் திட்டத்தை அமைத்துவிட முடியும். மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பேட்டரி இல்லாமல் சோலார் திட்டங்களை அமைக்கிறபோது, ஒரு கிலோ வாட்டுக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு குறையும்.

குழப்பங்கள் தீருமா?

சோலார் மின் உற்பத்தி சாதனங்களை அமைத்துதரும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையைச் சொல்கின்றன. இது முறைப்படுத்தப்படவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்வதுதான் விலையாக இருக்கிறது. திட்டதிற்கான மானியத் தொகையை பெறும் நிறுவனங்கள் அதை உபயோகிப்பாளர்களுக்கு சரியாக வழங்குகிறதா என்கிற விஷயத்திலும் தெளிவு கிடையாது. மானியத் தொகை அறிவிப்புக்கு முன்னர், உபயோகிப்பாளர்களே நேரடியாக சோலார் ஏற்பாடுகளை நிறுவியிருந்தால் மானியம் பெறுவது சிரமமாக இருக்கிறது. 

உபயோகிப்பாளர்கள் மானியத்துக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதும், அக்டோபர் மாதத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்கிற நடைமுறை சிக்கல்களும் உள்ளது. என்றாலும், ஒரு கிலோ வாட் யூனிட் அமைக்க அதிகபட்சமாக 80 ஆயிரம் மானியம்   அனுமதிக்கப்படுகிறது.

மானியத்தை வழங்குவதன் மூலம் கடமை முடிந்துவிட்டதாக அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அது ஒழுங்காக மக்களுக்குச் சென்று சேர்கிறதா என்று கவனிப்பதும், தரத்திற்கு ஏற்ப விலையைத் தெளிவாக முறைப்படுத்துவதும் அரசுத் துறையின் கடமை. இதை முறைப்படுத்தவில்லை எனில் மானியக் குழப்பத்திற்கு எப்போதும் தெளிவு கிடைக்காது. 


 
 

அருள்வாக்கு - ஸ்வாமியே தான் அம்மா அப்பா!


நமக்கு எப்போதும் நல்லதையே நினைத்துக் கொண்டு, நம்முடைய சந்தோஷத்துக்காக எத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொள்கிற அன்பு நம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இருக்கிறதல்லவா? நாம் நல்லவர்களாக வேண்டும்; புத்திசாலிகளாக வேண்டும்; நாம் வாழ்க்கையில் நன்றாக முன்னுக்கு வர வேண்டும் என்பதுதானே நம் பெற்றோரின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது? இதற்காகவேதான் அவர்கள் சில சமயங்களில் நம்மைத் தண்டிக்கிறார்கள், கண்டிக்கிறார்கள். இதைக் கொண்டு நாம் அவர்களிடம் கோபப்படக் கூடாது.

நம்முடைய நல்லதை நினைத்தே தான் அவர்கள் கண்டிக்கிறார்கள் என்று உணர வேண்டும். அவர்கள் கோபித்துக் கொண்டாலும் அதற்குக் கூடக் காரணம் நம்மிடம் அவர்களுக்குள்ள அன்புதான். இந்த அன்பினால்தான் அவர்கள் நம்மை வளர்த்துப் படிக்க வைத்து, நமக்கு உடம்புக்கு வந்தால் இரவெல்லாம் கண் விழித்துக் கவனித்து, எல்லாக் காரியங்களும் செய்கிறார்கள். இப்பேர்ப்பட்ட அன்பு அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், இந்த அன்பு என்ற சரக்குக்கும் மூலம் ஸ்வாமிதான். ஸ்வாமியேதான் அப்பா, அம்மா என்கிற உருவங்களில் வந்து நம்மிடம் அன்பைச் செலுத்துகிறார்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Saturday, October 27, 2012

ஸ்கை ஃபால் - ஜேம்ஸ்பாண்ட்

திரைப்படங்களில் பெயர், கதை, காட்சிகளின் களன்கள், கதாநாயகர், நாயகிகள் எல்லாம் மாறும்; ஆனால் கதாநாயகரின் பெயர் மட்டும் மாறாது. இப்படி அரை நூற்றாண்டாக சரித்திரம் படைத்துக் கொண்டிருப்பவை ஜேம்ஸ்பாண்ட் படங்கள். 1953 இல் இயான்பிளிமிங் என்ற நாவலாசிரியர் எழுதிய ‘டாக்டர் நோ’ என்ற நாவலின் நாயகனின் பெயர் ஜேம்ஸ்பாண்ட். இந்தப் பெயர் ஹாலிவுட்டில் நிரந்தரப் பெயராக நிலைக்கும் என அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இதுவரை வந்த படங்கள் இருபத்து இரண்டு. இறுதியாக இம்மாதம் திரைக்கு வந்திருப்பது ஸ்கை ஃபால். எல்லாவற்றிலும் நாயகனின் பெயர் ஜேம்ஸ்பாண்ட்தான். 
இங்கிலாந்து அரசியினால் நியமிக்கப்பட்ட ஒரு சர்வ வல்லமை வாந்த ரகசிய ஏஜெண்ட்களின் குழு M16. அதில் 007 என்ற க்ரேடில் இருப்பவர்கள் தேச நலனுக்காக எவரையும் கொல்லும் லைசென்ஸ் பெற்றவர்கள். இதன் தலைமையில் M என்ற பெயர் கொண்ட பெண் அதிகாரி உண்டு. உலகின் அத்தனை விஷயங்களையும் நன்கு அறிந்த சூப்பர் புத்திசாலியான ஜேம்ஸ்பாண்ட் இவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். உலகின் எந்தப் பகுதியிலும் வீரதீர சாகஸங்களை மிக அனாயாசமாகச் செய்பவர் என வர்ணிக்கப்படும் இந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களினால் உண்மையிலேயே பிரிட்டிஷ் அரசில் அப்படி ஓர் அமைப்பு இருப்பதாகப் பலரும் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.  ஒவ்வொரு படத்திலும் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்த சக்திவாய்ந்த கார்கள், துப்பாக்கிகள், கடிகாரங்கள் தயாரிக்கப் படுவதாகக் காட்டப்படும். பாண்ட் படங்களில் மிக அழகான பெண்கள் அவருக்குத் துப்பறியும் வேலைகளில் உதவுவார்கள். ஆனால் அவர், அவர்களைக் காதலிக்கவோ அல்லது மணம்செய்து கொள்ளவோ மாட்டார். அவர் என்றும் எலிஜிபிள் பேச்சுலர்தான்.
கடந்த 50 ஆண்டுகளில் ‘டாக்டர் நோ’ படத்தில் சீன்கானரியில் தொடங்கி டேனியல் கிரேக் வரை இதுவரை 6 கதாநாயகர்கள் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகர்கள் மாறினாலும், எல்லா படங்களும் ஹிட். காட்சி அமைப்புகளும், உலகின் பலநாடுகளின் கதைக் களன்களும் ஒரு காரணம். கடந்த சில ஆண்டுகளாக உலகின் பலமொழிகளில்(தமிழ் உள்பட) மொழிமாற்றம் செய்யப்பட்ட எல்லா பழைய படங்களும் வசூல் மழை கொட்டுகின்றன. இந்த அழியா இமேஜ் உருவானதற்கு முக்கிய காரணம் முதல் 6 படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த சீன்கானரி. இவர் இதைத் தவிர பல படங்களில் நடித்திருந்த போதிலும், இன்றும் (வயது 82) ஜேம்ஸ்பாண்ட் கானரியாகத்தான் பிரபலம்.  இதுவரை எந்தக் கதாபாத்திரமும் 50 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்ததில்லை என்பதால், ஜேம்ஸ்பாண்டின் 50வது பிறந்த நாளை ஹாலிவுட்டும், இங்கிலாந்து சினிமா உலகமும் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுகிறது. இதுவரை வந்த ஜேம்ஸ் படங்களின் காட்சிகள், செட்களுடன் ஒரு மியூஸியம். எல்லா ஜேம்ஸ் படங்களைத் திரையிடும் விசேஷத் திரைப்படவிழா என அமர்க்களப்படுத்துகிறார்கள். இதுவரை வந்த படங்களில் வசூல் சாதனை விவரங்களைத் தாண்டி எந்தக் கதாநாயகன், ‘பாண்ட்-ஜேம்ஸ்பாண்ட்’ என்ற புகழ் பெற்றார்? எத்தனை பேரைக் கொன்றார்? எந்த பாண்டுக்கு காதலிகள் அதிகம்? சினிமாவுக்கு வெளியே இந்த பாண்டுகளில் யாருக்கு எத்தனை காதலிகள் போன்ற புள்ளிவிவரங்களை பிரிட்டிஷ் சினிமா பத்திரிகைகள் அள்ளி வீசுகின்றன. இங்கிலாந்து நாட்டின் சுற்றுலா வாரியம் ‘ஜேம்ஸ்பாண்ட் எவரிதிங் ஆர் நத்திங்’ என்று ஒரு ஆவணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது (பாண்ட்கதைகளின் படி ஜேம்ஸ் அரசிக்கு விசுவாசமுள்ள ஒரு பிரிட்டிஷ் பிரஜை).
இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல விஷயம், இரண்டு தலைமுறையாக ஜேம்ஸ்பாண்ட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் இயான் நிறுவனத்தினர் இதுவரை ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பயன்படுத்தப்பட்ட கார், கைக்கடிகாரம், உடை, கேமரா போன்றவற்றை ஏலமிட்டு அந்தப் பணத்தை ‘யூனிசெப்’ போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதுதான். ஆன்லைனில் மட்டும் நடைபெறும் இந்த ஏலத்தில் இதுவரை கிடைத்திருப்பது ஒரு மில்லியன் (பத்து லட்சம்) பவுண்ட்களுக்கும் மேல். இன்னும் ஏலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Friday, October 26, 2012

‘‘ரஜினிக்கு என்னிடம் கதை இல்லை!’’ - மணிரத்னம்


தமிழ் சினிமாவை உலக சினிமா உயரத்துக்கு தூக்கிப் பிடித்த முன்னோடி மணிரத்னம். தாம் பேசுவதைவிட, தம் படங்கள் பேசவேண்டும்; பேசப்பட வேண்டும் என்ற கருத்துக்குச் சொந்தக்காரர் அவர். 1983, ‘பல்லவி அனுபல்லவி’ கன்னடத் திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் பிரவேசித்தவர். அடுத்த படம் மலையாளத்தில் ‘உணரு’. 85ல் ‘பகல் நிலவு’ மூலமாக தமிழில் களமிறங்கினார். 86ல், ‘மௌனராகம்’ மூலமாக தம்மைத் திரும்பிப் பார்க்க வைத்தார். ‘நாயகன்’ மூலமாக அகில இந்திய வீச்சு கிடைத்தது. தற்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் ‘கடல்’ படத்தோடு மணிரத்னத்துக்கும் சினிமாவுக்குமான தொப்புள் கொடி உறவுக்கு வயது முப்பது. இந்தத் தருணத்தில் தாம் வந்த சினிமா பாதையைத் திரும்பிப் பார்த்து, தமது எண்ண ஓட்டங்களை ஆங்கிலப் புத்தகமாகப் பதிவு செய்து, இந்திய சினிமாவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். தலைப்பு: Conversations with Mani Ratnam. எழுதி இருப்பவர்: பரத்வாஜ் ரங்கன். பெங்குயின் வெளியீடு. தம் படங்களைப் பற்றி மணிரத்னம் என்ன சொல்கிறார்? ஒரு சுவையான டிரெயிலர்:

விவேகானந்தா கல்லூரியில் பி. காம் படித்த பிறகு, மும்பை சென்று பஜாஜ் இன்ஸ்டிட்டியூட்டில் எம்.பி.ஏ. முடித்து விட்டு, ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் பணியாற்றினேன். அங்கே எனக்கு வேலை பிடிக்கவில்லை என்றாலும், சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளிக்கூட இல்லை. பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகனும், என் நண்பருமான ரவி சங்கர் தமது முதல் (கன்னட) படத்தை எடுக்க முடிவு செய்த போது, வீணை பாலசந்தரின் மகன் ராமனும், நானும் சேர்ந்து மூவருமாக ஆபீஸ் விட்ட பிறகு மாலை நேரங்களில் சந்தித்து, படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுத முடிவு செய்தோம். ஒவ்வொரு சீன் குறித்தும் கடுமையான விவாதம் நடக்கும். ஆங்கிலத்தில் ஸ்கிரிப்ட்டை தயார் செய்து கொண்டு, ரவிசங்கர் ஷூட்டிங் ஆரம்பித்தார். கோலாரில் படப்பிடிப்பு. நாங்கள் ஆங்கிலத்தில் எழுதிய சீன்களை, கன்னட வசனகர்த்தாவுக்கு விளக்கிச் சொல்வது என் வேலை. முதல் ஷெட்யூல் முடியும் தறுவாயில் ‘எனக்கான இடம் சினிமா’ என்று நான் முடிவு செய்தேன். அப்போது கூட படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி, டைரக்டர்களுக்குக் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால் ‘பல்லவி அனுபல்லவி’ ஸ்கிரிப்ட் ரெடியானபோது, ‘படத்தை நாமே இயக்கினால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது.  


மும்பையில் இரண்டு வருடங்கள் படித்தபோது, மும்பை நிழல் உலகில் மிக உச்சத்தில் இருந்தார் வரதராஜ முதலியார். மாதுங்கா பகுதி மக்கள் அவரை தெய்வமாகவே நினைத்தார்கள். சக மனிதர் ஒருவரை ஏன் இவர்கள் தெய்வமாக மதிக்கிறார்கள்? என்பது எனக்குப் புதிராகவே இருந்தது. அது எனக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலிருந்து போன ஒருவரால் எப்படி மும்பை நகரத்தையே கட்டி ஆள முடிகிறது என வியந்து போனேன். கமலிடம் திருப்பங்கள் நிறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையைப் படமெடுக்கலாம் என்று சொன்னதும் உடனே சம்மதித்தார். ‘மௌனராகம் கதை’ அப்ரூவ் ஆவதற்கு ஐந்தாண்டுகள் பிடித்தது. நாயகன் பத்தே நிமிடங்களில் ஓ.கே. ஆனது.

‘அக்னி நட்சத்திரம்’ படத்துக்கு இளையராஜா ரீ-ரிக்கார்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருடைய நண்பரான இன்னொரு இசையமைப்பாளர், ‘ இப்படியே படத்தை ரிலீஸ் பண்ணாதீர்கள்! கிளைமாக்சை மறுபடியும் எடுங்கள். இல்லையென்றால் படம் பார்க்கிறவர்கள் கண் வலிக்கிறது என்று சொல்வார்கள். நான் சினிமாவில் பல வருடமாக இருப்பவன். நான் சொல்கிறேன். நீங்கள் தப்பு செய்திருக்கிறீர்கள். படம் வெற்றி பெற்றால், நான் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்’ என்று சொன்னார்.  

என் படங்களில் வரும் மழைக் காட்சிகளுக்கு (ஜப்பானிய இயக்குனர்) குரசோவாதான் காரணம். அவரது படங்களில் பஞ்சபூதங்களும் உயிரோட்டத்தோடு இடம்பெற்றிருக்கும். மழை, என் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது. பேபி ஷாம்லிக்கு அப்போது இரண்டரை அல்லது மூன்று வயது. அழகான, ஆரோக்கியமான, துறுதுறு வென்று இருக்கும் அந்தக் குழந்தையை மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் போல நடிக்க வைப்பது பெரும் சவாலாகத்தான் இருந்தது. ஒரு சிறிய வீட்டில் வீடியோவில் ஒருநாள் படம் பிடித்தோம். எதிர்பார்த்தபடி அமையவில்லை. ‘அஞ்சலி’ படத்தையே டிராப் பண்ணி விடலாமா என்று யோசித்தோம். அண்ணா நகரில் உள்ள சிறப்புக் குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று, அங்கே இருந்த எஸ்தர் என்ற குழந்தையின் சிரிப்பு, அழுகை, கோபம் என்று விதம் விதமாக இரண்டு மூன்று நாட்களுக்கு கூடவே இருந்து டெஸ்ட் ஷூட் பண்ணினோம். பேபி ஷாம்லிக்கு அதைப் போட்டுக் காட்டினோம். அதன்பிறகு பிரச்னை ஏதுமில்லை.


ரஜினிக்கு என்னோடு பணியாற்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய ஸ்டாரை வைத்துப் படமெடுக்க என்னிடம் கதை இல்லை. ரஜினியை வைத்து வழக்கமான ஒரு படத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை. ரஜினியின் இமேஜுக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் அது என் படமாகவும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். அப்போது தான் மகாபாரத கர்ணன் ஐடியா எனக்குத் தோன்றியது. என் அண்ணன் ஜி.வி. யோடு போய், ரஜினியைச் சந்தித்துப் பேசினேன். உடனே சம்மதித்தார். ‘தளபதி’ இப்படித்தான் ஆரம்பமானது.

‘இருவர்’ படத்தின் ஹீரோயினுக்காக ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, ராஜிவ் மேனன், ஐஸ்வர்யா ராயை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். ‘உங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வழிசெய்யும் படம் அல்ல ‘இருவர்’ படம். படத்தில் அவருக்குரிய இருமாறுபட்ட ரோல்களைப் பற்றிச் சொன்னேன். நடிக்க சம்மதமா?’ என்று கேட்டபோது, சினிமாவில் நடிப்பதா? வேண்டாமா? என்று தயக்கத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் ஓ.கே. சொன்னார். அடுத்து, ஆபீசில் டெஸ்ட் எடுத்தோம். தமிழ் வசனம் கொடுத்துப் பேசச் சொன்னோம். முதல் நாள் ஷூட் டிங்கில் ஐஸ்வர்யா ராய் பேசிய ‘எனக்குப் பேசணும்’ என்ற வசனத்தை அவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஃபிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு குழந்தை அமெரிக்காவில் ஒரு தம்பதிக்கு, தத்து கொடுக்கப்பட்டது. அதன் வளர்ப்புப் பெற்றோர்கள், அந்தக் குழந்தைக்கு அதன் பெற்றெடுத்தவர்களைக் காட்டுவதற்காக ஃபிலிப்பைன்சுக்கு அழைத்து வந்தார்கள். உணர்ச்சிபூர்வமான அந்தச் சந்திப்பு பற்றி டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதை சுஹாசினி படித்துவிட்டு, என்னிடம் காட்டினார். அதை வைத்து ஒரு படம் எடுக்கும்படி அவரிடம் சொன்னேன். அவர் டி.வி. சீரியலில் பிசியாக இருந்ததால், நானே, ஸ்ரீலங்கா பின்னணியில் படமெடுத்தேன். அதுதான் ‘கன்னத்தில் முத்த மிட்டால்.’சீதை கேரக்டருக்கு மிகப் பொருத்தமான முகம் ஐஸ்வர்யா ராய்யுடையதுதான் என்று நான் நினைத்தேன். அதனால்தான் ராவணனில் அவரை நடிக்க வைத்தேன்.

மணிரத்னத்தோடு 100 மணி நேரம்

மணிரத்னத்தின் படங்கள் பற்றி அவரோடு நீண்ட உரையாடல்கள் நடத்தி, Conversations with Mani Ratnam புத்தகத்தை எழுதி இருப்பவர் ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன். சினிமா தொடர்பான ஆழமான கட்டுரைகள் பல எழுதியவர். பரத்வாஜ் ரங்கன் பேசுகிறார்:  

நான் மணிரத்னத்தின் படங்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்து விட்டு, என்னை ஒரு புத்தகம் எழுதும்படி பெங்குயின் நிறுவனம் கேட்டது. ஒரு பத்திரிகையாளராக அவரைச் சந்தித்துப் பேட்டி காண்பதற்கான எனது முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பதால், மணிரத்னத்தின் ஒவ்வொரு படமாக எடுத்துக் கொண்டு அலசி, ஒரு புத்தகம் எழுத நினைத்தேன். அதற்கு முன்பாக, மரியாதை நிமித்தம் அவரைச் சந்தித்தேன். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான், ஒவ்வொரு படம் பற்றியும் அவரோடு உரையாடி புத்தகத்தையும் உரையாடல்களின் தொகுப்பாகவே எழுதுவது என்பது முடிவானது.  ஒரு சந்திப்பில் இரண்டு மணி நேரம் பேசுவோம். இதுபோல 50 தடவைகள் சுமார் 100 மணிநேரம் பேசி இருப்போம். என் கேள்விகள், அவை எரிச்சலூட்டும்படி இருந்தாலும் அவர் கோபப்படாமல், தம் கருத்தை அழுத்தமாகத் தெரிவித்தார். அவரது பேச்சில் நேர்மை இருக்கும். ‘ராவணன்’ படம் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஆரம்பித்தோம். அவரோடு பேசிய அனைத்தையும் எழுதியிருந்தால், இந்தப் புத்தகம் 300 பக்கங்களுக்குப் பதிலாக 600 பக்கங்கள் வந்திருக்கும். மணிரத்னம் நேரத்தைப் பொன்னாக மதிப்பவர். சந்திப்புக்கு நேரம் கொடுத்துவிட்டார் என்றால், அந்த நேரத்தில் ரெடியாக இருப்பார். ஒரு சந்திப்பில் அவர் சொன்ன விஷயங்களை, அடுத்த முறை சந்திப்பதற்கு முன்னால் எழுதிவிடுவேன். ஒவ்வொரு படத்தின் கதை, கதாபாத்திர உருவாக்கம், நடிகர்கள், வசனம் போன்றவற்றோடு கேமரா, எடிட்டிங், மியூசிக் போன்ற டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றியும் நிறைய பேசினோம். ஆனால், எல்லோருக்கும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்படி புத்தகம் அமைய வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தேன்." 

எஸ். சந்திரமௌலி

பொன்விழா! - ஓ பக்கங்கள் , ஞாநி


இந்திய - சீனப் போர் நடந்து 50 வருடங்களாகின்றன. இதை நிச்சயம் பொன்விழாவாகக் கொண்டாட முடியாது.

ஆனால் 1962ல் நடந்த இந்த யுத்தம் இந்திய அரசியலில், இந்திய வெளியுறவில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. ஒற்றைப் பெரும் கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த யுத்தம் பற்றிய உட்கட்சிக் கருத்து மோதலின் தொடர்ச்சியால், இரண்டாக உடைந்து மார்க்ஸிஸ்ட் கட்சி உதயமாயிற்று. தேர்தல் அரசியலில் நுழைந்தபின்னர் தனித் திராவிட நாடு கோரிக்கையை எப்படி, எப்போது கைவிடுவது என்று தவித்துக் கொண்டிருந்த தி.மு.க.வுக்கும் அண்ணாவுக்கும் இந்த யுத்தம் நல்வாப்பாக அமைந்தது. நேருவின் உலகளாவிய ராஜதந்திர பிம்பம் இந்த யுத்தத்தால் நொறுங்கியது.

உண்மையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்திருக்க வேண்டிய ஒரு பிரச்னையை யுத்தமாக்கி இந்திய - சீன உறவில் நிரந்தர விரிசலை ஏற்படுத்தி வைத்த ‘பெருமை’ இந்திய அரசியல்வாதிகளுக்கும் சீனத் தலைவர்களுக்கும் உரியது.

இன்று இந்த யுத்தம் பற்றிப் பேச இந்தியாவிலும் சரி சீனாவிலும் சரி அரசியல் தலைமைகள் விரும்பவில்லை. ஆனால் இதை நினைவுபடுத்தித் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பகைமையை நீட்டிப்பதில் அமெரிக்காவுக்கு லாபம் இருக்கிறது. தன்னை முற்றிலும் அமெரிக்காவின் தோழனாக இந்தியா காட்டிக் கொண்டால், அது நிச்சயம் சீன - இந்திய உறவை கடுமையாகப் பாதிக்கும்.

சீனாவுடன் வர்த்தகத்தின் மூலம் தோழமையை வளர்த்துக் கொள்வதுதான் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் நல்லது. ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் தலைவலிகளைத் தணிக்க சீனாவுடன் நட்பை உருவாக்குவதுதான் இந்தியாவுக்கு சரியான தீர்வு. தலாலாமாவுக்கு விருந்து வைத்தாலும்கூட, திபெத் விஷயத்தில் இந்தியா, சீனாவின் நிலையையே ஆதரிக்கிறது. அருணாசலப் பிரதேசம் மட்டும்தான் சீனாவுடன் இருக்கும் ஒரே உறுத்தல். இதைப் பேசித் தீர்க்க முடியும். வணிக உறவுகளை பலப்படுத்தினால் இது சாத்தியம்.

இந்தியாவையும் சீனாவையும் பிரித்து வைத்துக் குளிர் காயும் தந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா பயன்படுத்தும். மன்மோகன் போன்றோர் அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தச் சூழ்ச்சியிலிருந்து இந்தியா எளிதில் தப்பிக்கும் வாய்ப்பு இல்லை.

ஓ பக்கங்கள் - மனசாட்சி அரசியல்! ஞாநி


எம்.ஜி.ஆரின் தொண்டர்களைக் காப்பாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக எம்.ஜிஆருக்கு, தாம் கொடுத்த வாக்குறுதியைத் தம் மனசாட்சிக்குத் தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றியிருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். 

அரசியலில் மனசாட்சியைப் பற்றி முதலில் பேசியவர் காந்தி தான். அதற்கு அவர் உள்ளுணர்வு என்று பெயர் வைத்திருந்தார். பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போதெல்லாம் தம் உள்ளுணர்வின் குரல் என்ன சொல்கிறது என்று காத்திருந்து, அதைக் கேட்டு அதன்படியே முடிவுகளை எடுத்ததாக அவர் சொல்லியிருக்கிறார். காந்திக்கு வெளியிலும் ஒரு மனசாட்சி இருந்தது. ராஜாஜிதான் அந்த மனசாட்சி. காந்தியின் பல முடிவுகள் பற்றிய மாறுபட்ட கருத்துகளை நேரடியாக அவருடன் ராஜாஜி விவாதிப்பது நடந்திருக்கிறது. அப்படி விவாதிக்கும் குரலைத் தான் காந்தி மனசாட்சி என்று வர்ணிக்கிறார்.

இப்போதைய அரசியல் வாதிகளுக்கெல்லாம் மனசாட்சி உண்டா என்று தெரியவில்லை. சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று சொன்னபோது தம் மனசாட்சி சொன்னபடி அப்படிச் செய்வதாகச் சொல்லியிருந்தார். கலைஞர் கருணாநிதியின் இன்னும் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பே மனசாட்சியைக் குறிப்பதுதான். ஆனால் அந்தப் புத்தகத்தில் அதன் குரல் எதுவும் ஒலிப்பதில்லை என்பது கண்ணதாசனின் வனவாசத்தைப் படித்தால் புரியும். கருணாநிதியின் வெளி மனசாட்சியாக முரசொலி மாறன் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. மாறன் சொன்னது எல்லாவற்றையும் கருணாநிதி கேட்டுக் கொண்டாரா என்பது தெரியவில்லை. சாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று மாறன் சொன்னதைக் கேட்காமல் அமைத்து, தேர்தலில் அடி வாங்கினார். 

இனி சாதிக் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருப்பது அவருடைய மனசாட்சியின் சொல் கேட்டுத்தான் என்றே தோன்றுகிறது. நாமே சாதிக் கட்சிதானே, அப்புறம் மீதி சாதிக் கட்சிகளுடன் அணி சேர்ந்தால் என்ன முழுகிப் போய் விடும் என்று அவர் மனசாட்சி சொல்லியிருக்கலாம். 

கம்யூனிஸ்டுகள் பகுத்தறிவின்படி மனசாட்சி என்று ஒன்று தனியே இருப்பதாக நம்பலாமா என்று தெரியவில்லை. மனிதர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனசாட்சிகளும் கூட தற்கொலை செய்துகொள்ள முடியும் என்று தா. பாண்டியனை நினைக்கும்போது நம்பத் தோன்றுகிறது.

சிலருடைய மனசாட்சிகள் ( இருந்தால்) என்ன சொல்லும் என்று அறிய நான் ஆசைப்படும் பட்டியலில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். 

குறிப்பாக மன்மோகன்சிங், மாயாவதி, சுப்பிரமணியன் சுவாமி. மம்தா பானர்ஜி இந்தப் பட்டியலில் இல்லை. காரணம், அவர் தன் மனசாட்சி ஏதாவது குரல் எழுப்பினால், நீ யார் என்னைக் கேள்வி கேட்க என்று அதைக் கைது செய்ய உத்தரவிட்டு விடுவார் என்ற பயத்தினால் அது தானே தலைமறைவாகி விட்டிருக்கும் வாய்ப்பிருக்கிறது.

மம்தாவைப் போலவே பிடிவாதமும் உறுதியும் நிரம்பித் ததும்புபவரான ஜெயலலிதாவின் மனசாட்சியும் இதேபோல கியூ பிராஞ்சுக்கு அஞ்சி ஓடி ஒளிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதை அங்கீகரித்து அவர் அறிக்கை வெளியிட்டிருப்பதால், ஜெயலலிதாவின் மனசாட்சியும் அவரைப் போலவே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர். அ.இ.அ.தி.மு.கவை ஆரம்பித்து 41 வருடங்கள் ஆவதையொட்டி ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் அறிக்கையில்தான் முதன்முறையாக அவர் மனசாட்சி குறிப்பிடப் படுகிறது. எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதி அவர் தொண்டர்களைக் காப்பாற்ற தம் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகும். ஏன் அந்தத் தொண்டர்களைக் காப்பாற்ற வேண்டும்? அவர்கள்தான் அண்ணாவின் தி.மு.கவை தன் சுயநலத்துக்காகக் கைப்பற்றிய தீயசக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டு அண்ணாவின் அரசியலையும் திராவிட இயக்கக் கொள்கைகளையும் காப்பாற்றுவார்களாம்.

‘என் மனசாட்சிக்கு சரி என்று தெரிந்தவரை’ என்று ஜெயலலிதா இந்த அறிக்கையில் சொல்கிறார். அவருடைய இந்த நீண்ட நெடிய அர்ப்பணிப்பு வாழ்க்கையில் எதையெல்லாம் அவர் மனசாட்சி சரியென்று சொல்லியது, எதையெல்லாம் தவறென்று சொல்லியது என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. அது ஒரு பெரும் பட்டியலாக இருக்கும் என்பதால், ஒரு சிலவற்றிலேனும் அறிய முடிந்தால் நலம்.

எம்.ஜி. ஆர் உயிரோடு இருந்த கடைசி காலத்தில் அவர் ஆட்சி பற்றி புகார் செய்து பிரதமர் ராஜீவ்காந்திக்கு, ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினாரே, அது மனசாட்சி சரியென்று சொன்னதால்தானா?

தனக்கெதிராக சதி நடப்பதாக அறிவித்து உதவியாளர்/உடன் பிறவா சகோதரி சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றி அவர் உறவினர்கள் மீது வழக்குகள் தொடுத்தபோது மனசாட்சி என்ன சொல்லிற்று? திரும்பவும் சில வாரங்கள் கழித்து சசிகலாவை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்ட போது மனசாட்சி என்ன சொல்லிற்று ?

காரணமே சொல்லாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் முதல் சபாநாயகர் வரை ஆறு வாரத்துக்கொருமுறை மாற்றப்படுவதும் மனசாட்சியின் சரியைக் கேட்டுத்தானா?

தீய சக்தியின் ஊழலை எதிர்த்துத் தனிக்கட்சி கண்ட எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியவர் சொத்துக் குவிப்பு வழக்குக்காக ஒவ்வொருமுறை பெங்களூரு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறும்போதும், மனசாட்சி என்ன சொல்லும்?

உங்களில் ஒருத்தியாக நிற்பேன் என்று அணு உலை எதிர்ப்புப் போராட்டக் காரர்களிடம் சொன்ன சில மாதங்களிலேயே அவர்கள் அத்தனை பேர் மீதும் தேசத் துரோக வழக்கு போடச் செய்வது மனசாட்சியின் குரலைக் கேட்டுத்தானா? 

பொதுவாக மனசாட்சி என்பது ஒருவரின் சரி, தவறு இரண்டையும் அவரிடம் சொல்லும் என்பதே மனசாட்சியைப் பற்றிய உளவியல் மருத்துவக் கருத்து. ஆனால், ஜெயலலிதாவின் மனசாட்சி மட்டும் ஓ. பன்னீர்செல்வம் பாணியில் இடுப்பை வளைத்து முதுகைக் கவிழ்த்து எதற்கெடுத்தாலும் சரி என்று மட்டுமே சொல்லும் விசித்திர மனசாட்சியாக அமைந்திருப்பது உளவியல் மருத்துவத் துறைக்கே ஒரு மாபெரும் சவாலாகப் படுகிறது.

பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை எழுதாதே என்று ஒரு குரலும், எழுது என்று ஒரு குரலும் என் மனசுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. எழுதுவதே சரி என்று மனசாட்சி சொல்லிவிட்டதால் எழுதிவிட்டேன்.

அக்டோபர் 26 -ஜம்மு&காஷ்மீர் தினம்

1947 அக்டோபர் 26 அன்று  பாரதத்துடன் மற்ற சமஸ்தானங்கள் எப்படி இணைந்ததோ அது போன்றே ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானமும் பாரதத்துடன் முழுமையாக இணைந்தது.மன்னர் ஹரி சிங் பாரதத்துடன் இணைத்த ஜம்மு காஷ்மீர் பல்வேறு காரணங்களால் நமது நாட்டின் சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பாக ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் இணையவில்லை, அச்சமயத்தில் அது நமது நாட்டுடன் இணையாமல் தனியான சுதந்திர நாடாகத் திகழ்ந்து வந்தது. அந்நாட்டினை டோக்ரா பரம்பரையைச் சார்ந்த ஹிந்து மன்னர் ஹரி சிங் ஆட்சி செய்து வந்தார். ஆனால் அந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை யினராக வாழ்ந்து வந்தனர். டோக்ரா ஹிந்து மன்னர் பரம்பரையினர் மீது ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் பெருமதிப்பு வைத்திருந்தனர். நமது நாட்டில் வேறெங்கும் காண முடியாத காட்சி அது.

இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன் அவர்களுக்கு 1947 ஆம் வருடம் அக்டோபர் 26 ஆம் தேதியன்று பாரதத்துடன் எவ்வித நிபந்தையும் இன்றி தனது ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை மற்ற சமஸ்தானங்கள் எப்படி ஒன்றினைந்ததோ அதேபோன்று  தானும் இணைப்பதாக எழுதி கையொப்பமிட்டு அனுப்பிவைத்தார். அக்டோபர் 27, 1947 அன்று அதை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து கைச்சாத்து இட்டதுடன் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவித்தார் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் கூட எவரும் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்று குரல் எழுப்பிடவில்லை. மன்னர் ஹரி சிங் ஜம்மு காஷ்மீரை பாரதத்துடன் இணைத்த பிறகும் கூட அம்முடிவை எந்த ஒரு முஸ்லிமும் எதிர்க்க வில்லை. தனி உரிமைகள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்று கூட  அவர்கள் கேட்டிடவில்லை.  அப்படி இருக்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசியல் சாசனத்தில் பிரிவு 370 எதற்காக உருவாக்கப்பட்டது. தற்காலிகமானது வெறும் 10 வருடங்களுக்கு மட்டுமே இது அமுலில் இருக்கும் பின்னர் அகற்றிக் கொள்ளப்படும் என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 62 வருடங்கள் சென்ற பிறகும் அந்த அரசியல் சாசன சட்டம் 370 வது பிரிவு நீக்கப்படாமல் இருப்பது ஏன்?

1947ஆம் வருடம் மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீர் இன்று நம்முடன் உள்ளதா? ஜம்மு காஷ்மீர் துண்டாடப்பட்டதற்கான காரணம் என்ன? பாரத ராணுவம் வெற்றிகரமாக பாகிஸ்தான் கூலிப்படையினரை விரட்டி அடித்துக் கொண்டிருந்த போது திடீர் என போரை நிறுத்திட வேண்டியதன் காரணம் என்ன? இந்திய பாகிஸ்தான் பிரச்சனையை தேவையில்லாமல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது ஏன்? ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் என்றைக்காவது அது நடுநிலையாக நடந்து கொண்டதுண்டா?  பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து முற்றிலுமாக தனது ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியும் இன்று வரை அதற்கு பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரும் இன்று நம்மிடம் இல்லை.

1947இல் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் நம்முடம் இணையும்போது ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்கித் மற்றும் பால்டிஸ்தான் என ஐந்து வகைப் பகுதிகளாக இருந்தது. சுதந்திர பாரதத்துடன் இணைந்த சமஸ்தானங்களிலேயே நிலப்பரப்பில் மிகப் பெரியது ஜம்மு காஷ்மீர். இணையும்போது மொத்தம் 2,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது அதை ஒருபக்கம் பாகிஸ்தானும் மற்றொருபக்கம் சீனாவும் ஆக்கிரமித்துள்ளது. மன்னர் ஹரி சிங் இணைத்த ஜம்மு காஷ்மீரில் தற்போது 45% மட்டுமே இன்று நம் வசம் உள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை.

ஜம்மு பகுதி 36,315 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் வெறும் 26,000 ச.கி.மீ.மட்டுமே உள்ளது. இதன் தெற்கே பீர்பாஞ்சால் என்கிற எவராலும் எட்ட முடியாத மிக உயர்ந்த மலைத்தொடர் உள்ளது. அங்குதான் தாவி, சீனாப், ரவி, போன்ற  வற்றாத ஜீவா நதிகள் உற்பத்தியாகி ஜம்மு காஷ்மீரை வளப்படுத்துகின்றன. தற்போது நம் வசம் இருக்கின்ற ஜம்மு பகுதியில் 67% சதவிகிதம் பேர் இந்துக்கள். இவர்கள் பேசுகின்ற மொழி டோக்ரா மற்றும் பஹாடி ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மொத்தம் 22,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் இருப்பது வெறும் 16,000 ச.கி.மீ.மட்டுமே. தற்சமயம் இங்கு முஸ்லிம்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு காலங்காலமாக வசித்து வந்த ஹிந்துக்கள் 4 லக்ஷம் பேர்கள் வெளியேற்றப்பட்டு ஜம்மு உட்பட நாட்டின் பல இடங்களில் வசித்து வருகின்றனர். இங்கு ஜீலம் மற்றும் கிஷன் கங்கா நதிகள் பாய்ந்தோடுவதால் அழகிய இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகள் உள்ளன. ஒன்று ஜீலம் பள்ளத்தாக்கு மற்றொன்று லோலாப் பள்ளத்தாக்கு ஆகும். இங்கு மக்கள் பேசுகின்ற மொழி கஷ்மீரி. ஆனால் மூன்றில் ஒரு பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஞ்சாபி-பஹாடி மொழி பேசுகின்றனர்.

லடாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே மிகப் பெரிய பகுதியாகும். மொத்தம் 1,64,748 ச.கி.மீ.பரப்பளவு கொண்டது. அதில் மிகக் குறைந்த பரப்பளவே அதாவது வெறும் 59,000 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே இன்று நம்வசம் உள்ளது.

இயற்கை தனது அத்தனை வளங்களையும் இங்கு கொட்டிவிட்டதோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிக அழகிய அற்புதமான பகுதி. எண்ணற்ற புத்த மடாலயங்கள், விஹார்கள் உள்ளன. அமைதி தவழும் பகுதியாகும். கார்கில் போன்ற மிக உயரமான மலைத் தொடர்கள் உள்ள பகுதி லடாக். ஆறுகள் எப்போதும் பனி உறைந்தே காணப்படும். வருடத்தில் மிக மிகக் குறைவாக மழை பொழிகின்ற இடம் இதுதான். காரகோரம் நெடுஞ்சாலை இங்குதான் செல்கிறது. லே, மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. ஒரு நாடாளுமன்றம் 4 சட்டமன்றத் தொகுதிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

கார்கில் பகுதியில் வாழ்ந்து வருகின்ற “ஷியா” பிரிவு முஸ்லிம்கள் தீவிரமான தேச பக்தர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. லடாக்கின் பெரும் பகுதியை சீனா கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளது. லடாக்கினை தெற்கு திபெத் என்று சீனா அழைக்கிறது. லே, சன்ஸ்கார், சங்தங், நுப்ரா, பள்ளத்தாக்குகளில் முழுக்க முழுக்க பௌத்தர்கள் வாழ்கின்றனர். சுரு பள்ளத்தாக்கில்  முஸ்லிம்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் லடாக்கி, பால்ட்டி அல்லது பாலி மொழிகளில் பேசுகின்றனர்.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி முழுவதும் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளது. 1947 ஆம் வருடம் பாகிஸ்தான் ஆக்கிரமித்ததை நாம் இன்று வரை மீட்காமல் இருந்து வருகிறோம். அப்பகுதியை விடுதலை செய்யப்பட்ட அதாவது “ஆசாத் காஷ்மீர்” என்று பாகிஸ்தான் அழைக்கிறது. நாம் அதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கிறோம். ஆக்கிரமித்த அப்பகுதிகளை பாகிஸ்தான் தனது முழுமை யான அரசு நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டு, அதை நேரிடையாக நிர்வாகம் செய்து வருகிறது.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி மொத்தம் 63,000 ச.கி.மீ.பரப்பளவு கொண்ட தாகும். அதில் கில்கித் மட்டும் 42,000ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. பால்டிஸ்தான் 20,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. கில்கித் ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமான பகுதியாகும். அங்கு சர்வதேச எல்லைக்கோடு உள்ளது. 6 நாடுகளின் எல்லைகள் சந்திக்கின்ற மிக முக்கியமான இடமாகும். ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா, திபெத் மற்றும்  பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைகள் அங்கு சங்கமமாகின்றது. இப்பகுதி யார் வசம் இருக்கிறதோ அவர்கள் ஆசியப் பிராந்தியத்தில் இராணுவரீதியில் மற்றும் பல வகைகளில் ஆதிக்கம் செய்யமுடியும்.

இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறிந்த அமெரிக்கா மற்றும்  சோவியத் ரஷ்யா கூட இப்பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திட முயன்றன. கில்கித்தை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதற்காக சோவியத் ரஷ்யா அவ்வப்போது பாகிஸ்தானுக்கு உதவி செய்து வந்துள்ளது. தற்போது அங்கு11,000 சீனத் துருப்புகள் இருந்து வருகின்றனர். சீனா ஒரு லக்ஷம் கோடிக்குமேல் அங்கு முதலீடு செய்துள்ளது. மேலும் சீனக் கம்பெனிகளில் வேலை செய்வதற்காக பல ஆயிரம் சீனர்கள் அங்கு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில், பஞ்சாபி மட்டும் பஹாடி மொழி பேசுகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் சுமார் 10 ௦ லக்ஷத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஹிந்துக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்முவிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

1962 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதியன்று சீனா நமது நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தது. அப்போரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில்  36,500 ச.கி.மீ. பரப்பளவு இடத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வேறு தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளவற்றிலிருந்து சுமார் 5,500 ச.கி.மீ.பரப்பளவு இடத்தை சீனாவிற்கு தாரை வார்த்துள்ளது. அதில் இப்போது பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் சாலை போடப்பட்டுள்ளது. அங்குதான் காரகோரம் நெடுஞ்சாலை செல்கிறது.

நமது நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிட வேண்டும் என 1994 ஆம் வருடம் நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதையும் நமது மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அம்மாதிரி ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே நாட்டு மக்கள் பலருக்குத் தெரியாது.

மன்னர் ஹரி சிங் 1947 ஆம் வருடம் பாரதத்துடன் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரை என்று காண்போம். நமது  நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிடுவோம். இருக்கின்ற ஜம்மு காஷ்மீரைக் காத்திடுவோம்.

Thursday, October 25, 2012

ஆம்னி பேருந்து அடாவடிகள்

தீபாவளியை விடுங்கள்... 2013 பொங்கலுக்கே வெளியூர் செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் இல்லை. எல்லாம் புக் ஆகிவிட்டது. உங்களின் ஒரே சாய்ஸ் பேருந்துப் பயணம்தானா? அதிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்பவர் என்றால், இந்தக் கட்டுரை உங்க ளுக்கே உங்களுக்குத்தான்!
 
பெரும்பாலான ஆம்னி பஸ் நிறுவனங்கள் தீபாவளி டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது என்கின்றன. சில நிறுவனங்களில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்புதான் முன்பதிவு ஆரம்பிக்கும் என்கிறார்கள். ஆன்-லைனிலும் அதே(£)கதிதான். ஆனால், விசேஷ நாட்கள் முன்பதிவு எல்லாம் கண்துடைப்புதான். தங்களது வழக்கமான வாடிக்கையாளர்கள் சிலருக்கு மட்டும் முன்பதிவை அனுமதிப்பார்கள். முன்பதிவில் டிக்கெட்டை எல்லாம் நியாயமான விலைக்கு விற்றுவிட்டால், தீபாவளிக்கு எப்படிக் கொள்ளை அடிப்பது? கடந்த தீபாவளியின்போது சென்னை டு மதுரைக்கு ஏ.சி. இல்லாத வால்வோ ஆம்னி பஸ்ஸில் வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு தெரியுமா? 1,600. இது வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிகக் கட்டணம். இந்த தீபாவளிக்கு இது 2000-மாகக்கூட உயரக்கூடும். தட்டிக்கேட்க முடியாது. கேட்டால், தாக்கப்பட்டலாம். நடுவழியில் இறக்கிவிடப்படலாம். அவர்கள் வைத்ததுதான் சட்டம். இதுவும் எத்தனைக் காலம் கடந்துபோகும்?
 
ஆம்னி பஸ்... அர்த்தம் என்ன?


மோட்டார் வாகனச் சட்டப்படி ஆம்னி பஸ் பயணிகளுக்கானது அல்ல. தனி நபரோ, குடும்பத்துடனோ டிக்கெட் எடுத்துப் பயணிக்க முடியாது. இதை சாட்டர்டு டிரிப் என்பார்கள். ஒரு பஸ்ஸின் 25 முதல் 35 வரையிலான மொத்த இருக்கைகளையும் பதிவுசெய்து சுற்றுலாவுக்காகவோ இதர காரியங்களுக்காகவோ தனியார் பேருந்தில் பயணிப்பதையே தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், சொகுசுப் பேருந்துகள் என்கிற பெயரில் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து புறப்படுகின்றன ஆம்னி பஸ்கள். அதனால்தான் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் தருவது இல்லை. போர்டிங் பாஸ் போன்ற சீட்டுகளையே தருகிறார்கள்.

சில காலம் முன்பு ஆம்னி பஸ்களில் ஒரு வெள்ளைத்தாளில் பயணிகளின் பெயர்களை எழுதி, பெயர்களுக்கு எதிரே கையெழுத்து வாங்குவார்கள் - குழுவாகச் செல்கிறோம் என்று அரசுக்குப் பொய் கணக்குக் காட்ட. ஆனால், இன்றைக்கு அதுவும்கூட நடைமுறையில் இல்லை. அரசு கண்டுகொள்ளாது என்று அவ்வளவு துணிச்சல்... அவ்வளவு நம்பிக்கை. அவ்வப்போது சில வழக்குகள்... அதிகார வர்க்கத்துக்கு ஆண்டுக்கு சிலபல கோடிகள்... பிரச்னை தீர்ந்தது. ஆனால், அங்குதான் பயணிகளுக்கான பிரச்னையே ஆரம்பிக்கிறது.

சரி... அது ஒருபக்கம்! பேருந்துப் பயணத்தின் போது பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும்?
கூடுதல் கட்டணத்துக்காகக் கூடுதல் வசதிகள், அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, மரியாதை... இவை எல்லாம் ஆம்னியில் கிடைக்கிறதா? பஸ்ஸில் ஒரு பயணி மட்டும் இருந்தாலும்கூட கிளம்ப வேண்டிய நேரத்தில் பஸ்ஸை இயக்க வேண்டும். அல்லது அதே நேரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். பயணிக்குக் குடிக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தர வேண்டும். இயற்கை உபாதைகளுக்காக கேட்டால், இடையே நிறுத்த வேண்டும். சாய்வு இருக்கை சரி இல்லா விட்டால், உடனடியாகச் சரிசெய்து தர வேண்டும். ஏ.சி. பேருந்துகளில் குளிரைச் சமாளிக்க, போர்வை தர வேண்டும். கட்டாயம் முதலுதவிப் பெட்டி வேண்டும். தினமும் இருக்கை விரிப்புகளை மாற்றி, கொசு, கரப்பான் பூச்சி மருந்து அடிக்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் தரமான ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றுகின்றன.

நடைமுறை யதார்த்தம் என்ன?

நிறைய ஆம்னி பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் கிளம்புவது அபூர்வம். தமிழகத்தில் 686 ஆம்னி பஸ்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அனுமதி இல்லாத ஆம்னி பஸ்கள் 1500-க்கு மேல் உள்ளன. வழக்கமான 56 இருக்கைகள் கொண்ட ஸ்பேர் பஸ்களையே பக்கத்து மாநிலங்களில் பதிவுசெய்து, இங்கு போலி ஆம்னிகளாக இயக்குகிறார்கள். உண்மையான ஆம்னி வாகனங் கள் காலாண்டுக்கு ஓர் இருக்கைக்கு 3,000  மாநில அரசுக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், இந்தப் போலி ஆம்னிகள் 'சுற்றுலா பஸ்’ என்று கணக்கு காட்டி இருக்கைக்கு 450 மட்டுமே வரி செலுத்துகின்றன.

தவிர, தமிழகத்தில் உட்கார்ந்து செல்லும் இருக்கை வசதிகொண்ட ஆம்னி பஸ்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால், பக்கத்து மாநிலங்களில் பதிவுசெய்து சுமார் 200 ஆம்னி பஸ்கள் படுக்கை வசதிகளுடன் ஓடுகின்றன. சில பெரிய ஆம்னி பஸ் நிறுவனங்களிலும், போலி ஆம்னி பஸ்களிலும் விசேஷ காலங்களில் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் புரோக்கர்கள் நியமிக்கப்பட்டு, சினிமா தியேட்டர் களில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதைப்போல ஆம்னி நிறுவனங் களே மொத்தமாக டிக்கெட்டை புரோக்கர்களுக்கு விற்பனை செய்து விடுகின்றன. புரோக்கர்கள் வைப்பது தான் விலை!

எங்கே சிக்கல்?

தமிழகத்தில் எட்டு கோட்டங்கள், 23 மண்டலங்கள், 206 டிப்போக்களில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் பஸ்களில் இரண்டு கோடிப் பேர் பயணிக்கின்றனர். ஒரு நாள் வருமானம் 22 கோடி. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆண்டுக்கு 1,000 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. அதன் மொத்தக் கடன் 6,150 கோடி. மொத்தம் உள்ள 206 டிப்போக்களையும் அடமானம் வைத்துக் கடன் வாங்கித்தான் சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த நிமிடம் ஜப்தியில் இருக்கும் பஸ்களை மீட்கவே சுமார் 100 கோடி வேண்டும். அரசு விரைவுப் பேருந்து கள் தரமான சேவையை அளித்தால், ஆம்னியை நோக்கி அலைபாய்வார்களா மக்கள்? ஓர் அரசு நினைத்தால் தனியார் பேருந்து நிறுவனங்களை விடத் தரமான சேவையை மக்களுக்கு வழங்க முடியும். ஆனால், அது நடக்காததற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, ஊழல். அடுத்து, தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தும் லாபி.

ஒரு சாதாரண ஹார்டுவேர் கடையில் ஒரு போல்டின் விலை 50 காசு என்றால், அதை அரசுப் போக்குவரத்துக் கழகம் ஐந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. கழகங்களின் நேரடிக் கொள்முதல் வெகு குறைவு. ஒப்பந்ததாரர் நிர்ணயிப்பதுதான் விலை. கடந்த 91-96-ம் ஆண்டுகளில் இப்படி நடந்த போக்குவரத்துக் கழக மெகா ஊழல்களால் சிறையில் அடைக்கப்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், இன்றும் ஊழல் தொடர்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அரசு பஸ்களின் பெயர்ப் பலகைகளை டிஜிட்டல் ஆக்கினார்கள். அதற்கு செலவு அதிகபட்சமாக 2,000  மட்டுமே ஆகும். ஆனால், ஒரு பேருந்துக்கு 50 ஆயிரம் அள்ளிக்கொடுத்தார்கள்.

அடுத்து தனியார் லாபி. அரசு போக்குவரத்து துறை சுறுசுறுப்பாக இயங்காததன் பின்னணியும் இதுதான். அரசு பஸ்கள் ஓட்டையும் உடைசலுமாக இருந்தால்தான் இவர்கள் சம்பாதிக்க முடியும். அமைச்சரில் தொடங்கி அதிகாரிகள் வரை இவர்களின் கறை கரங்கள் நீள்கின்றன.

இந்த லாபிதான் முறையற்ற வணிகமான ஆம்னியையும் அனுமதிக்கிறது. அதற்குக் கட்டண நிர்ணயம், சேவை கண்காணிப்புகள், தரக் கட்டுப்பாடுகள் என எதையுமே செய்ய மறுக்கிறது. இந்த லாபிதான் கடந்த ஆண்டு வேலூர் அருகே காவிரிப்பாக்கத்தில் 22 பேர் உடல் கருகி இறந்தபோதும்... அரசு பெரிதாக நடவடிக்கை ஒன்றும் எடுக்காததற்குக் காரணமாக இருந்தது. இந்த லாபி தான் உயர் நீதிமன்றம், 'மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி ஆம்னி பஸ்களுக்காக புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டபோதும் அரசை மௌனம் காக்கவைக்கிறது.

ஒரு வழித்தடத்தில் மக்கள் அதிகம் பயணிக்கிறார்கள் என்றால், அதில் அரசு பஸ்கள்தான் அதிகம் விட வேண்டும் என்பது அடிப்படை விதிமுறை. இங்கு அரசு பஸ்களைவிட தனியார் பஸ்களே அதிகம். பிரச்னையைத் தீர்க்க வேண்டும் எனில், அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க வேண்டும். குறிப்பாக, 'கரகாட்டக்காரன் கார்’ ரேஞ்சுக்கு இருக்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களைப் புதுப் பிக்க வேண்டும். தமிழகத்திலும் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் மொத்தம் உள்ள 4,372 வழித்தடங்களிலும் ஆம்னி பஸ்கள் இயங்குகின்றன. இந்த ஒவ்வொரு வழித்தடத்திலும் கூடுதலாக மூன்று அரசு பஸ்களை விட்டாலே, சுமார் 15 ஆயிரம் புதிய பஸ்கள் தேவைப்படும். இதைச் செய்தாலே, 75 சதவிகிதம் பிரச்னைகளைத் தீர்க்கலாம்.

தீபாவளி நெருங்கிவிட்டது... சென்னைகோயம் பேடு ஆம்னி பேருந்துகள் முறைகேடு குறித்துப் புகார் செய்ய, 044-23452377, 23452320 ஆகிய எண் களில் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்!


 

 

அருள்வாக்கு - சத்தியம்!


நடைமுறையில் செய்து காட்டுவதால் நல்லதை விளைவிக்கும் ஒழுங்குமுறைதான் தர்மம் என்பது. இந்த நடைமுறைக்கு ஆதாரதத்வமாக ஓர் அடிப்படை இருக்க வேண்டும்; ஓர் ஒழுங்கு என்றால் அது அப்படிப்பட்ட ஒழுங்கிலே இருக்கிறது என்பதை உணர்த்துவதாக ஓர் அடிப்படை உண்மை இருக்க வேண்டும். தீபாலங்காரம் செய்யும்போது வட்டமாக, சதுரமாக, கோணமாகப் பல வரிசைகளில் தீபங்களை வைத்தால் அந்த ஒழுங்கிலே மனஸுக்கு ஒரு நிறைவு தெரிகிறது. ஏதோ ஓர் ஒழுங்கிலே வளைத்தும் நீட்டியும் கோலம் போட்டிருந்தால் அதைப் பார்க்கிற போது ஒரு ஸந்தோஷம், எதுவோ ஒன்று ரொம்ப சரியாயிருக்கிறது என்ற ரசிப்பு உண்டாகிறது. வட்டமோ, சதுரமோ, வளைவோ, கோணமோ கொஞ்சம் கோணலாக இருந்தால் மனஸுக்கு என்னமோபோல் இருக்கிறது. எதனாலென்றால் இந்த வெளி ஒழுங்குகளுக்கு ஆதாரமாக ஏதோ ஓர் உள்ளொழுங்கான தத்துவம் இருக்கிறது. கண்ணுக்கு வெளியொழுங்கு தெரிகிற மாதிரி நம் உள்ளுக்குள்ளே, உள்ளத்துக்குள்ளே அந்தத் தத்துவத்தைப் பற்றி நமக்குத் தெரியாமலே ஒரு ஞானம் இருக்கிறது. எனவே, அதற்கு இது - வெளியிலே ஒழுங்கு செய்திருப்பது - ஒத்துப்போகிற போது மனஸில் நிறைவு உண்டாகிறது.

இதே மாதிரி சுத்தமான அந்த கரணமுள்ள ரிஷிகள் முதலான மஹான்களுக்கு உள்ளுக்குள்ளே ஸ்வச்சமாகத் தெரிந்த ஒரு அடிப்படைக்கு ஒத்துப் போவதாக வெளியிலே பின்பற்ற வேண்டிய அநேக ஒழுங்குகளைத்தான் ஒழுக்கம் என்று வைத்து தர்ம வாழ்க்கையை அமைத்திருக்கிறது. இதற்கு அடிப்படையாய் உள்ளே ஒரு தத்துவம் இருக்கிறது என்றேனே, அது என்னவென்றால், அதுதான் ‘ஸத்யம்’ என்பது. நம்முடைய வெளி அறிவுக்கும் புரிகிறமாதிரி இந்த ஸத்யத்தை எடுத்துச் சொல்பவையே வேத, உபநிஷத சாஸ்திரங்கள், ஒழுங்கு மாதிரி, தர்மம் மாதிரி வெளியிலே எத்தனை செய்தாலும் அந்த ஸத்யத்துக்கு இது ஒத்துப் போகாவிட்டால் இது மன நிறைவைத் தராது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Wednesday, October 24, 2012

அருள்வாக்கு - கிருபை!


அன்பு முற்றுகிற போது யாவுமே அவனாகத் தெரியும். ஒன்றிடம் அன்பு - அது காரணமாகவே இன்னொன்றிடம் துவேஷம் என்றில்லாமல், எல்லாம் அவனானதால் எல்லாவற்றிடமும் ஏற்றத் தாழ்வில்லாமல் அன்பாக இருப்போம். அன்பற்ற வாழ்வு வாழ்ந்து மனுஷ்ய ஜன்மாவை விருதாவாக்கிக் கொள்ளாமல் இருக்க பக்தியே உதவுகிறது.

பக்தியால் படிப்படியாக லௌகிக கஷ்டங்களைப் போய்க் கடித்துக் கொள்ளலாம்; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்தாத நிலைக்கு மனோபாவத்தை உயர்த்திக் கொள்ளலாம்; மனத்தின் அழுக்கைப் போக்கிக் கொள்ளலாம்; அலைகிற மனசை ஒருமுகப்படுத்தலாம்; ஈசுவரனின் கல்யாண குணங்களை நாமும் பெறலாம்; என்றும் அழிவில்லாத சாசுவதமான அன்பைப் பெற்று ஆனந்திக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கர்ம பலனைத் தருகிறவனைத் தஞ்சம் புகுந்தால்தான் அவன் கர்மகதிக்குக் கட்டுப்பட்ட ஸம்ஸாரத்திலிருந்து நம்மை விடுவித்து முடிவில் முக்தி தருவான். அதாவது அவனேதான் நாமாகியிருப்பது, எல்லாமுமாகி இருப்பது என்று அனுபவத்தில் அறிந்து கொண்டு, அப்படியே இருக்கச் செய்வான். இந்த அத்வைத ஞானத்தையும் முக்தியையும் அவன் கிருபையாலேயே பெறலாம். பக்தி செலுத்துவதற்கு இத்தனை காரணம் இருக்கிறது.

- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஜெயம் தரும் விஜய தசமி!

 
சுரர்களுடன் போரிட்டு அவர்களை வதைத்த தேவி சக்தியின் வெற்றியை தேவர்கள் யாவரும் கொண்டாடி மகிழ்ந்த திருநாள் விஜய தசமி.

பத்து தலைகளை உடைய ராவணனை வதம் செய்ததால் இந்த நவராத்திரியின் கடைசி நாளான விஜய தசமி’ 'தசரா’ என்றும் அழைக்கப்படுகிறது (தச ஹரா - தசரா). இதையட்டி, வட மாநிலங்களில் ராம்லீலா வைபவம் நிகழும். மேலும், வில்லுக்கு விஜயன் எனப் போற்றப்படும் அர்ஜுனனுக்கு வெற்றி நல்கிய திருநாளும் கூட! அதோடு, நாம் துவங்கும் நல்ல காரியங்கள் வெற்றி பெற துணையாக நிற்கும் திருநாளும் இதுவே. எனவேதான், நம் முன்னோர் கல்வி ஆலைகளையும், கலாசாலைகளையும் இந்த நாளிலேயே தொடங்கினார்கள். அதேபோன்று, புதிய கலைகளைத் துவக்கவும், வித்யையில் சிறந்து விளங்கிட அக்ஷராப்யாஸம் என சொல்லக்கூடிய சடங்கினை ஆரம்பிக்கவும் சிறந்த நாள் விஜய தசமி.

இந்த நாளில் கீழ்க்காணும் அபிராமி அம்மை பதிகத்தைப் பாடி அம்பிகையை வழிபட, குறையாத செல்வமும் நிறைவான வாழ்வும் பெற்று சிறக்கலாம்.

அபிராமி அம்மைப் பதிகம்

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!

வன்னி மர வழிபாடு!

மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமி தினத்தன்று வழிபடுவதோடு அதன் இலைகளையும் பறிப்பர். அங்கு வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். இளைஞர்கள் இந்த நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து அவர்களது ஆசியைப் பெறுவார்கள்.


எனது இந்தியா (புத்தகம் படித்தால் கொடூர தண்டனை!) - எஸ். ராமகிருஷ்ணன்....

மரம் வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற கைதிகளை, ஆதிவாசிகள் தாக்கினர். அதைத் தடுப்பதற்காக, துப்பாக்கியோடு காட்டுக்குள் புகுந்த சிறைக் காவலர்கள் ஆதிவாசிகளைத் தேடித் தேடிக் கொன்று குவித்தனர். அந்தமான் தீவில் இருந்து எவர் தப்ப முயன்றாலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களுக்கான சிறைச்சாலையில் இருந்த கைதிகளை, ஜெயிலர்கள் ஆசைநாயகிகளாக்கிக்கொள்வதும், பெண் கைதிகளுக்காக மற்ற ஆண் கைதிகள் சண்டையிட்டு செத்துப்போவதும் தொடர்ச்சியானது. 18 முதல் 20 வயது வரையிலான இளைஞர்கள், பாய்ஸ் கேங் எனப்படும் தனிக் கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். பெண்கள் சிறைச்சாலையினுள் முறையான அனுமதிச் சீட்டு பெற்ற கைதிகள் பகலில் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்ப காலத்தில், கொள்ளையரையும் கொலைகாரர்களையும் நாடு கடத்திய பிரிட்டிஷ் அரசு, சுதந்திர உணர்ச்சி தலை தூக்கத் தொடங்கியதும் அரசியல் தலைவர்களையும் நாடு கடத்தத் தொடங்கியது. குறிப்பாக, முதல் இந்திய சுதந்திர எழுச்சியை ஒடுக்கிய பிரிட்டிஷ் அரசு, அதில் தொடர்பு உடையவர்களைக் கைதுசெய்து அந்தமான் சிறைக்கு அனுப்பிவைத்தது.
இந்தியாவில் உருவான சுதந்திர வேட்கையை ஒடுக்குவதற்காக ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு அந்தமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 1901-ம் ஆண்டு, அந்தமானில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 592. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 635 பேர். 17 வயதில் இருந்து 40 வயது வரை உள்ளவர்கள் 7,264 பேர்.


1913-ம் ஆண்டு, அந்தமானுக்கு வந்த ரெஜினால்ட் க்ராட்டக், அந்தமான் சிறைச்சாலை குறித்து ஒரு விரிவான அறிக்கையை அனுப்பினார். அதில், இந்தச் சிறைச்சாலையை மூடிவிட வேண்​டும். அங்குள்ள கைதிகளை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதுதான் சரி​யானது. இல்லாவிட்டால் சாவு எண்ணிக்கை அதிகமாவதைத் தடுக்க முடியாது. ஒருவேளை, இதை மூட முடியாத சூழல் இருந்தால், சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளை நடத்​தும் முறையில் சீர்திருத்தங்களை உடனே ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், 'இந்தியாவில் இருந்த சிறைத் துறை, அந்தமானுக்கு புதிய சிறை அதிகாரிகளை அனுப்புவதாலும் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதாலும் எந்த நன்மையும் விளையப்போவது இல்லை. அது வீண் முயற்சி. அந்தமானில் உள்ள கைதிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருவது செலவு ஏற்படுத்தக்கூடியது’ என்று பதில் சொல்லிவிட்டது.

இந்த நிலையில், அந்தமான் சிறைச்சாலையின் மோசமான அனுபவங்கள் குறித்து தகவல்கள் வெளியாகத் தொடங்கின. பத்திரிகைகள் அதை விமர்சனம் செய்ய ஆரம்பித்​தன. உள் துறை உறுப்பினரான வில்லியம் வின்சென்ட், அந்தமானைப்பார்வை​யிட்ட பிறகு, சிறைச்சாலையை மூடிவிடப்​போவதாக அறிவித்தார். ஆனால், அது நிறைவேற்றப்​படவில்லை. மாறாக, கைதிகளுக்கு கை, கால்களில் விலங்கு போடுவது, இருட்டறையில் நிர்வாணமாக அடைத்துவைப்பது போன்ற தண்டனைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. கைதிகள் படிப்பதற்கு நூலகம் அமைக்கப்பட்டது. அந்தமானில் இருந்து பெண் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனர். 1925-ம் ஆண்டு, அந்தமானின் நிலையை அறிவதற்காக வந்த அலெக்சாண்டர் முடிமான், அந்தமான் சிறைச்சாலை அவசியமான ஒன்று. அதை மூடுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறிவிட்டார். 1942-ம் ஆண்டு அந்தமானை, ஜப்பான் கைப்பற்றும் வரை அங்கிருந்த சிறைச்சாலை தொடர்ந்து செயல்பட்டே வந்தது.

இதில், 1896-ம் ஆண்டு புதிதாக செல்லுலார் ஜெயில் ஒன்றைக் கட்டுவது என முடிவு செய்து வேலை தொடங்கியது. கட்டுமானப் பணிகளை கைதிகளே செய்தனர். மெக்கலன் என்ற பொறியாளர், கட்டுமான நிர்வாகியாகப் பணியாற்றினார். பர்மாவில் இருந்து தேக்கும் செங்கல்லும் கொண்டுவரப்பட்டன. ஏழு இதழ் கொண்ட மலர் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தச் சிறைக்கூடம் தனித் தனி வளாகங்களைக்கொண்டது. இதில், 698 அறைகள் அமைக்கப்பட்டன.

1906-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சிறைச்​சாலையில்தான் சுதந்திரப் போராட்​டத்தின் முக்கியத் தலைவர்கள் பலர் அடைக்கப்பட்டு இருந்தனர். மூன்று தளங்களாக அமைந்த இந்தச் சிறைச்சாலையை கட்டுவதற்கு ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 352 ரூபாய் செலவு ஆனது. உறுதியான இரும்புக் கதவுகளையும் உயரமான சுவர்களையும் பெரிய எச்சரிக்கை மணி ஒன்றையும் உயர்ந்த காவல் கோபுரங்களையும்கொண்ட இந்தச் சிறைச்சாலை ஒரு தனி உலகம் போலவே இருந்தது. சிறைக்குள் கைதிகளை சுவரோடு சேர்த்து இணைப்பதற்காக நிறைய கொக்கிகள் மாட்டப்பட்டு இருந்தன. தூக்குப் போடுவதற்கு தனி வளாகம் இருந்தது. ஒட்டுமொத்த சிறைச்சாலைக்கும் சேர்த்து ஒரே சமையல் அறை மட்டும்தான் இருந்தது. இரவில், கைதிகள் தங்கள் அறைகளில் உணவை தட்டில் பெற்றுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

மல, மூத்திரம் கழிப்பதற்கு தார் பூசிய ஒரு மண் பாத்திரம் வழங்கப்படும். அதை தினமும் சுத்தம் செய்துகொள்ள வேண்டியது கைதிகளின் வேலை. ஜெயிலில் எண்ணெய் ஆட்டும் இயந்திரம் ஒன்றும் இருந்தது. முக்கியக் கைதிகளின் கை, கால்களில் விலங்கு போட்டு தனிமைச் சிறையில் அடைத்துவைத்தனர். அதன் காரணமாகவே, செல்லுலர் ஜெயில் என்ற பெயர் உருவானது. இந்தச் சிறைச்சாலையில்தான் வீரசாவர்கர், யோகேந்திர சிங் சுக்லா, ஜகதீஷ் சந்திரபால், நந்தகோபால், மௌல்வி அப்துல் ரகீம், பக்தேஸ்வர் தத் பரீந்திர குமார் கோஷ், உபேந்திரநாத் பானர்ஜி, பீரேந்திர சந்திர சென் போன்ற முக்கியப் போராளிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்தச் சிறையில் இருந்து 1868-ம் ஆண்டு மார்ச் மாதம் 238 கைதிகள் தப்பிச் செல்லத் திட்டமிட்டனர். இது நீண்ட நாள் கனவு. அதற்காக அவர்கள் சிறைச்சாலையை எப்படித் தாக்குவது. எப்படித் தப்பிச் செல்வது என்று விரிவாகத் திட்டம் தீட்டினர். தப்பிச் செல்ல உதவுவதற்கான படகுகள் கடலில் காத்திருந்தன. அதன்படி, 238 பேரும் சிறையில் இருந்த காவலர்களைத் தாக்கித் தப்பிச் சென்றனர். உடனே, அபாய மணி ஒலிக்கத் தொடங்கியது. சிறைக் காவலர்கள் அவர்களை விரட்டினர். கடலில் சிலர் பிடிபட்டனர். ஒரு மாத காலம் இந்தத் தேடுதல் வேட்டை நடந்தது. முடிவில், அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்களில், 87 பேருக்கு உடனே தூக்கு விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், சிறைச்சாலையின் இயல்பைப் பெரிதும் மாற்றி அமைத்தது. அதன் பிறகு, சிறை அதிகாரிகள் கைதிகளை மிக மோசமாக நடத்தத் தொடங்கினர்.

1930-ம் ஆண்டு, தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முறையான உணவு, குடிநீர் வழங்கப்படுவது இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்து, மகாவீர் சிங் என்ற லாகூர் சதி வழக்கைச் சேர்ந்த கைதி உண்ணாவிரதம் தொடங்கினார். அவர், பகத்சிங்கின் நண்பர். கட்டாயப்படுத்தி உணவை அவர் வாயில் திணித்தனர் சிறை அதிகாரிகள். ஆனாலும், அவர் சாப்பிட மறுத்து பட்டினிகிடந்து சிறையிலேயே இறந்தார். அந்தச் சம்பவம், இந்திய அரசியலை உலுக்கியது. கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தாகூரும் காந்தியும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

கைதிகளுக்கு தினமும் ஆறு அவுன்ஸ் அரிசி, ஐந்து அவுன்ஸ் பருப்பு, ஒரு கிராம் உப்பு, ஒரு கிராம் எண்ணெய், எட்டு அவுன்ஸ் காய்கறிகள் வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், ஒரு சிரட்டைக் கஞ்சி மட்டுமே கைதிகளுக்கு வழங்கப்பட்டது. அதில், உப்புகூட போட்டிருக்க மாட்டார்கள். அத்துடன், வேகவைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பருப்புத் தண்ணீர் வழங்குவார்கள். சில நாட்கள், கஞ்சியில் வேண்டுமென்றே மண்ணெண்ணெய் கலந்துவிட்டிருப்பார்கள். அதனால், கைதிகள் பட்டினி கிடக்க நேரிடும். வாரம் ஒரு முறை கைதிகளுக்குத் தயிர் வழங்கப்படும். ஆனால், அதில் பாதியை சிறை அதிகாரிகள் தங்களது வீட்டுக்குக் கொண்டுபோய்விடுவார்கள்.

அரிசி சாப்பிடாதவர்களுக்கு கோதுமை ரொட்டி வழங்கப்படும். ரொட்டியில் கரப்பான் பூச்சி செத்துக்கிடப்பது வழக்கமான ஒன்று. சாப்பிடும் வேளையில், யாராவது ஒரு கைதி வரிசையில் இருந்து நகர்ந்துவிட்டால், அவன் உடனே தண்டிக்கப்படுவான். அவனது உணவு பறிமுதல் செய்யப்படும். பாதி சாப்பிடுவதற்குள் நேரம் முடிந்துவிட்டது என்று எழுந்து போகச்சொல்லி உத்தரவிடுவார் சிறை அதிகாரி.

தப்பியோடிப் பிடிபட்ட கைதிகளுக்கு வேகவைத்த எலிக் கறியும் மணல் கலந்த காட்டுக் கீரையின் சாறும், குப்பையில் வளரும் செடிகளின் இலையை அவித்து அதில் மூத்திரம் பெய்து தருவதும் வாடிக்கை. கைதிகள் குளிப்பதற்கு மூன்று குவளை கடல் தண்ணீர் வழங்கப்படும், அந்தத் தண்ணீரிலேயே உடையையும் துவைத்து குளித்தும்கொள்ள வேண்டும். குளிக்கும் இடத்தில் கூட ஒரு காவலர் நின்று, எப்படிக் குளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டபடியே இருப்பார்.

காகிதம், பேப்பர், பேனா, பென்சில் போன்றவற்றை வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. புத்தககத்தைத் திருடிப் படித்த குற்றத்துக்காக ஒரு கைதி நான்கு நாட்கள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. சிறைக்குள், கைதிகளில் சிலர் அதிகாரிகளின் ஒற்றர்களாக செயல்படுவது உண்டு. அரசியல் கைதிகளுக்கு D என்ற முத்திரை அளிக்கப்படுவது வழக்கம். நோயுற்ற கைதிகளுக்கு உடனே சிகிச்சை அளிக்க மாட்டார்கள். அவர்கள், மருத்துவரிடம் செல்வதற்கு தனி அனுமதி பெற வேண்டும். இரவில் நோயுற்றால் விடியும் வரை அவர் வலியோடு போராடவே வேண்டும். இப்படி சொல்லித் தீராத கொடுமைகளின் விளைநிலமாக இருந்திருக்கிறது அந்தமான் சிறைச்சாலை.

இன்றும், அந்தச் சிறைச்சாலையில் உள்ள மரத்தின் இலைகள், இறந்துபோன சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனம் உருகப் பாடிய பாடல்களை மறக்க முடியாமல் நினைவுகொள்வதைப்போல அசைந்தபடியே இருக்கின்றன. கடந்த காலத்தின் சாட்சியாக கடல் அமைதியாக அந்தமானைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறை வலி மிகுந்த கடந்த காலத்தின் நினைவுகளின் ஈரம் படாமல் அந்தமானை பொழுதுபோக்குக்கான சுற்றுலாத் தலமாகக் கொண்டாடிவருகிறது. அவர்களின் இந்த சுதந்திரம் எத்தனையோ பேரின் ரத்தம் சிந்திப் பெற்றது என்பதை எப்போது உணர்வார்கள் என்ற ஆதங்கம் மேலிடவே செய்கிறது

Tuesday, October 23, 2012

நல்ல மாணவன்... ஆசிரியர் பொறுப்பா... பெற்றோர் வளர்ப்பா..?


வீட்டில் ஒழுங்காக படித்துக் கொண்டு வராவிட்டால்... பெற்றோரிடம் சொல்வேன்' என்று கண்டித்த ஆசிரியையை, வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக் கொன்றான் ஒரு மாணவன்.
 நன்றாகப் படித்து நேர்மையான ராணுவ அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு கண்டிப்புக் காட்டிய தந்தையை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்கு மனதில் வெறியேறிப் போயிருக்கிறான் ஒரு மகன்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, 'இன்றைய மாணவ சமூகத்தின் போக்கு சொல்லிக் கொள்ளும்படி இல்லை' என்ற விரக்தி பேச்சுகளே எங்கும் எதிரொலிக்கின்றன. 'இதற்குக் காரணம், மாணவர்கள் மட்டுமல்ல... அவர்கள் உலகத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஆசிரியர், பெற்றோர் இருதரப்பும் காட்ட வேண்டிய கண்டிப்பிலும் கனிவிலும்   ஏற்பட்டிருக்கும் பழுதும்தான்’ என்பது கல்வியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

''இன்றைய ஆசிரியர் பயிற்சிக் கூடங்கள் பதிவேடுகள், துணைக் கருவிகள், பாடத்திட்டம் என்று ஒரு குறுகிய வட்டத்தில் செயல்பட்டு, புத்திசாலியான மற்றும் எந்திரத்தனமான ஆசிரியர்களைத்தான் உருவாக்குகின்றன. சமூக மதிப்பீடுகள், அதை மாணவர்களிடம் போதிக்க வேண்டிய ஆசிரியரின் கடமைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், கலைப்பாடங்கள் போலவே ஆசிரியர் கல்வியும் கற்பிக்கப்படுகிறது. கற்பவர்களும் தங்களை ஆசானாக உணராமல், கல்லூரி மாணவர்களாகவே உணர்கிறார்கள்.

ஆசிரியர் வேலை பெற்ற பலரும் மிகப்பெரிய சவாலாக நினைப்பது... வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆசிரியர்களும் நல்லாசிரியராக  முடிவதில்லை, மாணவனையும் குணநலம் மற்றும் சமூக அக்கறையுள்ளவனாக உருவாக்க முடியவில்லை.

சாப்பிடும், தூங்கும் நேரம் போக மீதமுள்ளதில் அதிக நேரம் ஆசிரியரிடம்தான் குழந்தை இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, மாணவனை சாதாரணமாக கவனித்தாலே, வகுப்புக்கு ஒவ்வாத அவனுடைய சூழல் ஆசிரியருக்குத் தெரிந்துவிடும். அவனை அழைத்து கனிவாக பேசினாலே... தீர்ந்தது பிரச்னை.

மாணவர்களின் மனநிலை என்ன என்பதை ஆசிரியர் அறிந்து கொண்டு விட்டாலே மிகத் தெளிவான மாணவர்களை உருவாக்கிவிட முடியும்

உணவா...விஷமா

கடந்த 50 ஆண்டுகளில் பல துறைகளிலும் விஞ்ஞானம் அசுர வேகத்தில் முன்னேறி வந்துள்ளது. தொலைத்தொடர்பு, கணினி, விண்வெளி ஆராய்ச்சி... இவை எல்லாவற்றுக்கும் இணையாக மருத்துவம்!

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சராசரி இந்தியனின் ஆயுட்காலம், வெறும் 28 வயதுதான். அந்த காலகட்டத்தில்... வளர்ந்த மேலை நாடுகளில் சராசரி வயது 58. இப்போது இந்தியனின் சராசரி ஆயுள் 68 என உயர்ந் திருப்பது ஆச்சர்யமான உண்மை!

அப்படியானால், நாம் இப்போது மிக ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமா?

அதுதான் இல்லை. 100-ல் 40 பேருக்கு சர்க் கரை நோய், 100-ல் 30 பேருக்கு ரத்தக்கொதிப்பு, 100-ல் 10 பேருக்கு புற்றுநோய்... இன்னும் பலப்பல. அதாவது ஒவ்வொரு இந்தியனும் ஏதோ ஒன்று அல்லது பல நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களையும், மருத்துவமனை களையும் சார்ந்து 68 வயது வரை வாழ்நாளை எப்படியோ ஓட்டுகிறான்.

உலகளவில், இன்று நம் நாடுதான் சர்க்கரை, மாரடைப்பு, எய்ட்ஸ் என பல நோய்களிலும் முதலிடம். புற்றுநோயில் இப்போதைக்கு இரண்டாவது இடம், முதல் இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம் என்பது கூடுதல் தகவல். எலும்புச்சிதைவு நோயில் தற்போது இரண்டாவது இடம்.


இன்னொரு பக்கம், இருக்கும் இடத்தைப் பறிகொடுக்கும் பயங்கரமான, பூதாகாரமான பிரச்னை ஒன்று நம்மை மிரட்டுகிறது. என்ன அது..?

இதுவரை ஜனத்தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் வகித்திருக்கிறோம். அதற்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. இப்போதைய இந்திய ஆண்களில் பலருக்கு ஆண்மைக் குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு இருக்கிறது என்பது மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. முன்பெல்லாம் தம்பதியருக்கு குழந்தை இல்லை என்றால், பெரும்பாலும் பெண்களிடம் மட்டுமே குறைபாடு இருந்தது. பின்னர் இந்நிலை மாறி, பெண்களில் 75%, ஆண்களில் 25% குறைபாடு என்ற நிலை உருவானது. பிறகு, 50% - 50% என்று மாறிய இந்தக் குறைபாடு... தற்போது ஆண்கள் 75%, பெண்கள் 25% என்று தலைகீழாக மாறிவிட்டது.

அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் கலந்துகொண்ட 205 நாடுகளில் நம்நாடு 45-ம் இடத்தில் வந்தது. சில லட்சங்களே ஜனத்தொகை கொண்ட சிறுநாடுகள் தங்கப்பதக்கங்களை அள்ளிச்சென்ற வேளையில், 120 கோடி ஜனத்தொகை கொண்ட நம்நாடு ஒரு தங்கம்கூட வெல்ல முடியவில்லை என்ற கசப்பான உண்மையைப் பார்த்தோம்.

மோசமான வியாதிகளில் மட்டும் நாம் ஏன் இப்படி முதலிடத்திலிருந்து 'தங்க'ங்களை அள்ளிக் குவிக்கிறோம்? ஆயுளும் அதிகரித்து, அதேநேரத்தில் வியாதிகளும் அதிகரித்திருப்பது வேடிக்கையாக இல்லையா?

முதலில், இன்றைய இந்தியனின் ஆயுள் அதிகரித்ததின் ரகசியத்தை ஆராய்வோம்...

முன்பெல்லாம் தொற்றுநோய் களின் தாக்கம் மிகவும் அதிகம். அம்மை நோய் வந்தால், ஊரிலுள்ள குழந்தைகளில் 100-க்கு 90 பேரை இழந்துவிடுவோம் (எங்கள் கிராமத்தில் அம்மை நோயில் தப்பிப் பிழைத்த ஒரு சில குழந்தைகளில் நானும் ஒருவன்!). காலரா நோய் வந்தால் ஊரில் பாதிப்பேர் இறந்துவிடுவார்கள் (இப்போது காலரா இருக்கிறது - ஆனால் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சையில் பிழைத்துக் கொள்கிறார்கள்). பிளேக், மலேரியா போன்ற நோய்களும் மனிதர்களை ஒட்டுமொத்தமாக அழித்து வந்தன.

பின் நாட்களில் காசநோய், தொழுநோய் போன்ற நோய்களும் இதே வேலையைச் செய்தன. ஆகவே, டார்வின் பரிணாமக் கொள்கைப்படி உயிர் வாழ்வதற்குப் போராட்டம், இயற்கையின் தேர்வு முறை மற்றும் தகுதியானவர்களே ஜெயிப்பர்  என்ற தத்துவப்படி காலரா, பிளேக், அம்மை போன்ற நோய்களில் தாக்குப் பிடித்தவர்கள், 100 வயதுவரை பூரண ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். ஆனாலும், மொத்தத்தில் சராசரி வயது வெறும் 28-தான். 
 
இன்று நிலைமை வேறு. அம்மை, பிளேக் போன்ற கொடிய நோய்களை வேரோடு பிடுங்கிவிட்டோம். அம்மை நோய் இருப்பதாக யாராவது தகவல் கொடுத்தால் 1 லட்ச ரூபாய் பரிசுதர அரசாங்கம் தயாராக இருக்கிறது. மலேரியா, காலரா, காசநோய், தொழுநோய் போன்ற நோய்களுக்கும் நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. 'பென்சிலின்’ மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பாக்டீரியா கிருமிகளின் தாக்கம் வெகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. தற்போது எல்லோரையும் பயமுறுத்தும் எய்ட்ஸ் நோய்கூட கூடிய சீக்கிரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆக, யாரும் 28 வயதுக்குள் சாவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. 68 வயது வரை கட்டாயம் வாழ்ந்து தீர வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

சரி, ஆயுள் அதிகரித்த அதேசமயம், ஆரோக்கியம் குன்றிப்போனதற்கான கார ணங்கள் என்ன..?

உலகளவில், அலசப்படும் 10 முக்கியக் காரணங்களில், ஆறு காரணங்கள் உணவு முறை சம்பந்தப்பட்டவை என்கின்றன ஆய்வு முடிவுகள்!

ஆம்! மாறிவிட்ட நம் உணவுப் பழக்கங்கள், எத்தனை தூரம் நம்மை நோய்களிடம் அழைத்துச் செல்கின்றன என்பதை யாரும் அறிவதில்லை. 'சுத்திகரிக்கப்பட்ட' (ரீஃபைண்ட்) என்கிற வார்த்தை மயக்கத்தில், அரிசி, சர்க்கரை, எண்ணெய், கோதுமை, பருப்பு என எல்லாமே 'ரீஃபைண்ட்’ பிராண்ட்களாகத்தான் விரும்புகிறோம். விளைவு... கணையத்தில் இன்சுலின் சுரக்கச் செய்யும் பீட்டா செல்களை நாம் உண்ணும் 'ரீஃபைண்ட்’ உணவுப் பொருட்கள் அழிக்க, அது சர்க்கரை நோய் ஏற்படக் காரணமாகிறது.

விவசாயத்துக்குப் பயன்படுத்தும் ரசாயன பூச்சிக்கொல்லிகள், விளைபொருட்களில் விட்டு வைக்கும் ரசாயன எச்சங்களை, உணவுடன் சேர்த்து உண்கிறோம்... அதன் பாதிப்பு நரம்பு மண்டலம் வரை தொந்தரவு செய்யும் என்பதை அறியாமல்!

மரபணு மாற்றம் செய்யப் பட்ட விதைகளில் விளைந்த உணவுப் பொருட்கள், விலை கொடுத்து வாங்கும் ஸ்லோ பாய்சன்கள்.

அலுவலகத்தில், ஹோட்டல்களில், டீக்கடைகளில் என தொடர்ந்து பேப்பர் கப்களில் காபி, டீ அருந்துகிறோம். அந்தக் கப்களில் 'கோட்டிங்’ கொடுக்கப் பட்டிருக்கும் மெழுகு, வயிற்றில் சேகரமானதால் அவதிப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றுமளவுக்குச் சென்றவர் களின் கதைகளும் இங்கே உண்டு.

இன்னும் நிறைய நிறைய!

சின்ன சின்ன விஷயங்கள்தான் என்று நினைத்து நாம் உணவில் செய்யும் தவறுகள், பெரிய ஆபத்துகளைத் தரவல்லவை. தேவை அச்சம் அல்ல... விழிப்பு உணர்வே.


டாலி - குளோனிங் - நோய் தீர்க்குமா 'நோபல்' கண்டுபிடிப்பு?

இந்த ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்று இருக்கும் ஜான் கார்டன் - சின்யா யாமனாகா ஆகியோரின் ஆராய்ச்சி பெரிய புரட்சியையே உருவாக்கலாம். அவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இவர்கள் செய்த ஆராய்ச்சி என்ன? இது மனித குலத்திற்கு எப்படி நன்மை பயக்கும்?
 
''1997-ம் ஆண்டு முதன் முறையாக குளோனிங் முறையில் டாலி என்ற ஆட்டுக் குட்டி உருவாக்கப்பட்டபோது உலகமே ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றது. இந்த டாலி ஆட்டுக்குட்டியை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்தவர்தான் ஜான் கார்டன். மருத்துவ உலகத்தால், 'குளோனிங்கின் தந்தை’ என்று பாராட்டப்படுபவர். இதே துறையில் பல வியத்தகு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் சின்யா யாமனாகா.


நாம் அனைவரும் வளமூட்டப்பட்ட முட்டை செல்களில் இருந்துதான் வளர்ச்சி அடைந்தோம். உடல் உறவு நடந்து கருவூட்டல் ஏற்பட்டதற்கு அடுத்த நாள் 'எம்ப்ரியோ’ எனப்படும் கருமுட்டையின் மையப் பகுதியானது முதிர்வடையாத திசுக்களைக்கொண்டதாக இருக்கும்.

இந்த ஒவ்வொரு திசுவும் வளர்ச்சியடைந்த உடலில் உள்ள எந்த ஓர் உறுப்பாகவும் வளர்ச்சியடையும் தன்மைகொண்டது. இந்தத் திசுக்கள் நம்முடைய மூளையின் நரம்பு செல்லாகவும் தசைத் திசுவாகவும் கல்லீரல் திசுவாகவும் மாறும்.

ஜான் கார்டன் மற்றும் சின்யா யாமனாகா இருவரும் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால், எம்ப்ரியோ திசுக்களாகவும், திசுக்கள் செல்களாகவும் மாறுவதைப் போல, செல்கள் திசுக்களாகவும் எம்ப்ரியோவைப் போன்ற ஸ்டெம் செல்களாகவும் மாறும் தன்மைகொண்டவை என்று கண்டுபிடித்து  இருக்கிறார்கள்.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான சர் ஜான் கார்டன் தவளையின் முட்டையை எடுத்து, அதில் 'நியூக்ளியஸ்’ எனப்படும் மையப் பகுதியை நீக்கினார். அதே நேரத்தில், வேறு ஒரு தவளைக் குஞ்சின் குடல் திசுவைப் பிரித்து எடுத்து அதை அந்த முட்டையில் சேர்த்தார். இந்த மாற்றியமைக்கப்பட்ட முட்டையைக்கொண்டு புதிய தவளைக் குஞ்சு உருவாக்கப்பட்டது. இதுதொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை 1962-ல் வெளியானது. முதிர்ந்த ஒன்றில் இருந்து இளையதான ஒன்றை உருவாக்கும் இவரது கோட்பாடு பல்வேறு மருத்துவ உண்மைகளில் நேர்மாறாக இருந்தது. இதுபற்றி தொடர் ஆராய்ச்சிகள் மற்றும் விவாதங்கள் நடந்தன. தொடர் ஆராய்ச்சியின் விளைவாக, தவளைத் திசுவைக்கொண்டு செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சியைப் பாலூட்டி இனத்தில் செய்து பார்க்க முடிவு எடுக்கப்பட்டது. இப்படி 1997-ல் உருவாக்கப்பட்டதுதான் டாலி ஆடு. இரண்டு ஆடுகளில் இருந்து முட்டை, டி.என்.ஏ. பெற்று, மாற்றம் செய்யப்பட்ட எம்ரியோவை மற்றொரு ஆட்டில் செலுத்தி இந்த டாலி உருவாக்கப்பட்டது.

கார்டரின் ஆராய்ச்சி வெளியாகிக் கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் கழித்து ஜப்பானைச் சேர்ந்த யாமனாகா இந்த முறையைப் பின்பற்றி, சில மாற்றங்கள் செய்து முதிர்ந்த செல்லை அதன் பழைய இளம் நிலைக்கு கொண்டுவருவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் அடிப்படையில் எலியின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட செல்லில் அவர் நான்கு முக்கிய ஜீன்களை மாற்றினார். மாற்றி அமைக்கப்பட்ட இந்த செல்லானது எந்த ஒரு திசுவாகவும் மாறும் தன்மைகொண்ட 'ப்ளூரிபொட்டன்ட்’ செல்லாக மாற்றப்பட்டது. இந்தக் கோட்பாட்டின்படி ஓர் எலி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. இந்த செல்லை மனிதர்களிடம் பயன்படுத்தி பல்வேறு நோய்களைக் குணமாக்க முடியும். நோய் வருவதற்கு முன்பு மட்டும் அல்ல, நோய் வந்தவர்களின் உடலில் இருந்தும் செல்லை எடுத்தும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் இதயம், மூளை நரம்பு, ரத்தம் உள்ளிட்ட எல்லா வகைத் திசுக்களையும் உருவாக்க முடியும். இதுதான் ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் உடலில் பழுதடைந்த செல்லை மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இவர்களின் ஆராய்ச்சி மூலம் 'பார்க்கின்சன்’ எனப்படும் நடுக்குவாதம் போன்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். மூளையில் 'டோபோமின் நியூரான்’ என்ற செல் பழுதடைந்துவிடுவதால், நடுக்குவாதம் ஏற்படுகிறது. இவர்களின் ஆராய்ச்சி முறைப்படி பழுதடைந்த செல்லுக்கு பதிலாக இளம் செல்லை உருவாக்குவதன் மூலம் பார்க்கின்சன் நோயைக் குணப்படுத்த முடியும்.

இதுவரை 'ஸ்டெம்செல்’ உருவாக்க, கருச்சிதைவு, கருகலைப்பு செய்யப்பட்டவர்களிடம் இருந்துதான் 'எம்ரியோ’ பெறப் பட்டுவந்தது. இதனால் இந்தத் திசுவைப் பெறுவது மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், யாமனாகாவின் ஆராய்ச்சி மூலம் இனி கருச்சிதைவு இல்லாமலேயே முதிர்ச்சியடையாத செல்லைப் பெற முடியும். இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை!''


 

Monday, October 22, 2012

அருள்வாக்கு - பிரிய பத்தினியின் வாக்கு!


ஒரு யஜமானன் கட்டளை இடுவதுபோல் ‘சத்தியம் பேசு; தர்மமாக நட’ என்று வேதம் ஆக்ஞை பிறப்பிக்கும். இதற்குப் ‘பிரபு ஸம்மிதை’ என்று பெயர். இதையே நண்பன் எடுத்துச் சொல்கிற மாதிரி புராணங்கள் கதா ரூபத்தில் விளக்கும். இதற்கு ’ஸுஹ்ருத் ஸம்மிதை’ எனப் பெயர். கதையானாலும் புராணம் செய்த ரிஷிகளும் தர்மத்தை ரொம்பவும் வெளிப்படையாகவே வலியுறுத்திக் கொண்டு போவார்கள் - ‘ஸுஹ்ருத்’ அல்லது நீதிமானான நண்பன் பேசுகிற பாணியில். இதைவிட ஹிதமாகவும் மதுரமாகவும் தர்மத்தைச் சர்க்கரையில் தோய்த்த மாத்திரை மாதிரிக் கதையில் தோய்த்துச் சொல்கிறவன் கவி. நம் நாக்குக்குச் சர்க்கரை ருசிதான் தெரியும்; மருந்துச் சரக்கு இருப்பதே தெரியாது. வயிற்றுக்குள் போய்த்தான் அது வேலை செய்யும். இம்மாதிரி காவிய ரஸத்தை நாம் அநுபவிக்கிறபோது நமக்குத் தெரியாமலே நமக்குள் தர்மங்கள் ஊறுகிற விதத்தில் கவி பேசுவான். காவியத்தை ‘காந்தா ஸம்மிதை’ என்பார்கள் - அதாவது அது பிரிய பத்தினியின் வாக்கு மாதிரி என்று அர்த்தம். 

உயர்ந்த கவி மகத்தான தர்மங்களையும் தத்துவங்களையும் நவரஸத்தில் தோய்த்து மிகவும் ரஞ்ஜகமாகக் கொடுத்து விடுகிறான். இலக்கிய உலகத்தில் இருப்பவர்கள் இதையே ஸ்வதர்மமாகக் கொள்ள வேண்டும் - வெறும் ரஞ்ஜகமாக மட்டுமல்லாமல் அதற்குள் தர்மமான பலனும் இருக்கிற மாதிரி எழுத வேண்டும். படிக்கிறவனை அப்போதைக்குச் சந்தோஷப் படுத்துவதோடு நில்லாமல் அவனை உயர்த்துகிற விதத்தில் எழுத வேண்டும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Saturday, October 20, 2012

கேஜரிவால்

சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா தொடர்பான நிலப் பரிவர்த்தனைகளையும், அதனால் அவருக்குக் கட்டுமான நிறுவனம் டி.எல்.எஃப். மூலமாகக் கிடைத்த ஆதாயங்களையும், ஆவணங்களின் ஆதாரங்களோடு அர்விந்த் கேஜரிவால் அம்பலப்படுத்தினார் அல்லவா?! அதற்கு அடுத்த சில நாட்களில் சல்மான் குர்ஷித்தைக் குறி வைத்தார் கேஜரிவால். பின்னர் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி மற்றும் வேறு பலர் மீது பல குற்றச் சாட்டுகளை வைக்கப்போகிறார் என்ற செய்தி பரவிக்கொண்டிருந்த நேரம். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தில்லி மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம், ‘கேஜரிவால் குற்றச்சாட்டுகளைக் கூறும்போது, தற்காத்துக் கொள்ள மீடியாவை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்கிறது. காரணம் கேஜரி வாலை நாங்கள் அலட்சியப்படுத்த முடியாது. நடுத்தர மற்றும் உயர்நிலை மக்கள் அவர் சொல்வதை நம்புகிறார்கள். 

ஆளும் காங்கிரஸையும் அதன் தலைவர்களையும் மட்டும்தான் கேஜரிவால் சங்கடத்தில் சிக்க வைப்பார் என்று குஷியாக இருந்த பா.ஜ.க., கட்கரியின் முகத்திரையைக் கிழித்தது கண்டு அதிர்ந்து போய்விட்டது. 

குற்றச்சாட்டுகளைச் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கம் போல மறுத்தாலும், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் கேஜரிவால் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள். அந்தளவுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை சரிந்து கிடக்கிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், மக்கள் அவற்றை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் பெரும்பாலான அரசியல்வாதிகள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருப்பதும், அவர்கள் நேர்மை கேள்விக் குறியாக இருப்பதும்தான். ஆனால் இங்கேதான் வித்தியாசப்படுகிறார் கேஜரிவால். சுத்தமான கரங்களுக்குச் சொந்தக்காரராக அவர் இருப்பதால், அவரின் ஊழல் புகார்களை அலட்சியப்படுத்த முடியவில்லை.  

வதேரா மீது சென்ற வருடமே, பல பத்திரிகைகளும் ஏன் பா.ஜ.க.கூட புகார்களைக் கூறின. இருந்தும் அவை எடுபடவில்லை. ஆனால், கேஜரிவால் அம்பலப்படுத்தியபோது பற்றிக் கொண்டது; பதறியது காங்கிரஸ். 

ஊழலை வெளிப்படுத்தும் கேஜரிவாலின் நோக்கம் மக்களால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதில்லை. அவர் துணிச்சலைக் கண்டு வியக்கும் மக்கள், அவர் ஊழல் எதிர்ப்புப் போரில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஊடகங்கள் அவருக்குப் பக்க பலமாக இருக்க, கேஜரிவால் ஊழல் எதிர்ப்பில் இன்று லட்சிய நாயகனாக உருவெடுத்து நிற்கிறார். கட்சியைத் தொடங்கி இன்னமும் பெயர்கூட வைக்காத நிலையில் அவருக்கு ஆதரவு அலை பெருகுகிறது. காங்கிரஸும் பா.ஜ.க.வும் கலக்கத்தில் நிற்கின்றன.

கரக்பூர் ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிப்பை முடித்த கேஜரிவால், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால், அந்த வேலையில் அவர் நீண்டநாள் நீடிக்கவில்லை. ‘சமூகத்துக்கு என்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்ற உந்துதல் நீண்ட காலமாகவே எனக்குள் இருந்து வந்தது.

ஐ.ஐ.டி.யில் படிக்கும்போது அந்த எண்ணம் வலுப்பட்டது. படிப்பறிவில்லாத நமது மக்களை அரசியல்வாதிகள் சுரண்டுவது மிகப் பாதித்தது. ஊழலும் லஞ்சமும் தாண்டவமாடி யதைக் காணச் சகிக்கவில்லை. எனவே, சமூக சேவையோடு மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் டாடா ஸ்டீலை விட்டு வெளியே வந்தேன்’ என்கிறார் கேஜரிவால்.

பிறகு மதர் தெரஸாவின் தொண்டு நிறுவனம், ராமகிருஷ்ணா மிஷன், நேரு யுவகேந்திரா ஆகிய அமைப்புகளின் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் கேஜரிவால். இடையில் தாம் ஐ.ஏ.எஸ். படித்தால் என்ன என்ற எண்ணமும் தோன்றியது. அதிகாரத்தின் மூலமாக மக்களுக்கு நிறைய செய்ய முடியும் என்ற நோக்கத்தில் ஐ.ஏ.எஸ் எழுதினார். ஆனால், அவருக்கு வருவாய் பணியில் (I.R.S.)தான் இடம் கிடைத்தது. வருமானவரித் துறையில் சேர்ந்த அவர் இணை கமிஷனர் அளவுக்கு உயர்ந்த நிலையில், வாழ்க்கையை முழுதாக சமூகத்துக்கு அர்ப்பணிக்கும் முடிவில் 2006ல் விருப்ப ஓய்வில் வெளியே வந்து விட்டார்.

பின்னர் தில்லியில் ‘பரிவர்த்தன்’ என்ற அமைப்பை உருவாக்கி, பல சமூகப் பணிகளில் இறங்கினார். பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் அறிமுகம் கிடைத்தது. தகவல் உரிமைச் சட்டத்துக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள். நடைமுறைக்கு வந்த பின்னர், தகவல் உரிமைச் சட்டம் மூலமாக அரசிடம் பல தகவல்கள் பெற்று ஊழல்களும், முறைகேடுகளும், அதிகாரத் துஷ் பிரயோகங்களும் நடந்திருப்பதை அறிந்து கொண்டனர். ஆனால், தவறு செய்தவர்கள் மீதும், தவறுக்குக் காரணமானவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து விரைவாகத் தண்டனை கொடுக்கும் வகையில் நமது அமைப்பு முறையும் சட்டங்களும் இல்லையே என்ற நிலை அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.  அண்ணா ஹசாரே கரம்கோத்துக் கொள்ள உருவானது ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பு. ஊழல் செய்பவர்களை விரைவாகத் தண்டிக்க எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய உறுதியான லோக்பால் சட்டம் உடனடி தேவை என்று போராட்டத்தில் குதித்தது அமைப்பு. கண்துடைப்புப் போல உறுதிப்படாத, அர்த்தமில்லாத ‘லோக்பால்’ சட்டத்தைக் கொண்டுவர அரசு முயல, ‘இந்தப் பல்லில்லாத சட்டம் தேவையில்லை. எங்களுக்கு தேவை உறுதியான ‘ஜன்லோக் பால்’ என்று தெருவில் இறங்கினார்கள். ஹசாரேயும் கேஜரிவாலும். மக்கள் இவர்கள் பின்னால் அணி திரள பணிந்த மத்திய அரசு, பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. லோக்பால் வரைவு மசோதா தயாரிக்க, கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இப்படி கடுமையாகப் போராடியும் மத்திய அரசு இறுதியில் பலவீனமான லோக்பால் மசோதாவைத் தயாரித்து மக்களவையின் அனுமதியைப் பெற்றுவிட ஜன்லோக்பால் போராட்டம் தொடர்கிறது. இந்தச் சூழலில்தான் அரசியல் ரீதியாக அரசாங்கத்துக்குள் நுழைவதன் மூலமே தாம் நினைத்த மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற நோக்கில் அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்தார். ஆனால், அண்ணா ஹசாரே உடன்படவில்லை. ‘என் படத்தையோ பெயரையோ பயன்படுத்தக் கூடாது’ என்று சொல்லிவிட்டார். அவரது ஆசியும், வழி காட்டுதலும் எங்களுக்கு இருக்கிறது. ‘நோக்கம் ஒன்றுதான்; வழிமுறைகள்தான் மாறுபடுகின்றன’ என்று அண்ணா சொல்லியிருக்கிறாரே" என்று சொல்கிறார் கேஜரிவால். அரசியல் கட்சி என்றாலே அதை நடத்தவும், தேர்தலைச் சந்திக்கவும் ஏகப்பட்ட பணம் தேவையாயிற்றே! என்ன செய்யப் போகிறார் கேஜரிவால். ‘எளிய, சாமான்ய மக்களிடம் மட்டுமே நிதி பெறுவோம். வரவு செலவு கணக்கை கட்சியின் இணைய தளத்தில் வெளியிட்டு, வெளிப்படைத் தன்மையோடு இருப்போம்’ இதுவே கேஜரிவால் பதில்.இன்று சமூக வலைத்தளங்களில் நடத் தப்படும் கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கு ஏற்றவராக ராகுல் மற்றும் மோடிக்கு அடுத்தபடியாக முந்திக் கொண்டிருக்கிறார் கேஜரிவால். இவரது அரசியல் கட்சி, தங்கள் ஆதரவுத் தளங்களைக் கரைத்து விடுமோ என்ற பயத்தில் அவரது செயல்பாடுகளில் உள்நோக்கம் கற்பிக்கத் தொடங்கிவிட்டன பா.ஜ.க.வும் காங்கிரஸும். இருந்தும் கவலைப்படாமல் வர இருக்கும் தில்லி மாநிலத் தேர்தல் களத்தில் குதிக்கத் தயாராகிவிட்டார் கேஜரிவால். மின் கட்டண உயர்வு காரணமாக பணம் கட்ட முடியாத தொழிலாளி ஒருவருக்கு மின் இணைப்பைத் துண்டித்தது மின் வாரியம். உடனே அந்தத் தொழிலாளியின் வீட்டுக்குச் சென்று மின் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தினார். இவரது ஆக்ஷன் - அதிரடி சாமான்ய மக்களையும் ‘அட’ என்று வியக்க வைத்தாலும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்ட அவரது செயல்பாடு விமர்சிக்கப் பட்டது.

எங்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் பத்தே நாட்களில் அமைப்பு முறையிலும், சட்டங்களிலும் மாற்றம் கொண்டு வந்து உண்மையான மக்களாட்சியை மலரச் செய்வோம். ஆளும் அரசியல் அதிகாரத்தில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் வந்து விட்டது’ - என்று ஆவேசப்படுகிறார் கேஜரிவால். இனி அவரது அரசியலை முன்னெடுத்துச் செல்ல, பல அதிரடிகள் தேவைப்படும்!