Search This Blog

Thursday, May 31, 2012

ஸ்ட்ரீட் ரேஸ் - சென்னை


ஸ்ட்ரீட் ரேஸ்.... சென்னையின் மரண விளையாட்டுகளில் முதல் இடத்தில் உள்ள விபரீதம். எந்த அனுமதியும் பெறாமல், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பரபரப்பான நகர டிராஃபிக்குகளின் இடையே புயல் வேகத்தில் ஊடுருவி நடத்தப்படும் பைக் ரேஸ் பயங்கரங்களை அறிவீர்களா?'கட்டுப்படுத்திவிட்டோம்’ என்று போலீஸார் அடித்துச் சொன்னாலும், 'வீர்ர்ர்ர்ரூம்’ சத்தத்தால் சாலையில் செல்வோரை மிரளவைக்கும் பைக் ரேஸர்களை இன்றும் காண முடிகிறது. முன்னரெல்லாம் இரவுகளில் ஆளரவம் அற்ற சாலைகளிலோ, கடற்கரைச் சாலைகளிலோ நடத்தப்பட்ட இந்த ரேஸ்கள், இப்போது நெரிசல்மிக்க அலுவலக நேரத்திலும் சாலைகளில் நடக்கின்றன. அதிலும் சில ரேஸ்களின் விதிகள்... பைக்கின் கிளட்ச், பிரேக் முதலியவை பயன்படுத்தக் கூடாது, சிக்னல் சிவப்புக்கு நிற்கக் கூடாது என்றெல்லாம் திகில் கூட்டுகின்றன.

இந்த பைக் ரேஸ்கள் எப்படித்தான் நடத்தப்படுகின்றன?

ஆதி முதல் அந்தம் வரை அறிந்துகொள்ள முயற்சித்தேன். நண்பரின் நண்பர் மூலம் பென்சில் ஸ்ட்ரெட்ச் மற்றும் ஜிக்ஜாக் பைக் ரேஸ்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.பென்சில் ஸ்ட்ரெச் என்றால், சுமார் 150 கி.மீ. வேகத்தில் ஒரே நேர்க்கோட்டில் பறந்து இலக்கை மிகக் குறைந்த நேரத்தில் கடப்பது. லயோலா கல்லூரி சாலையில் வைத்து கறுப்பு கரிஷ்மாவை உறுமவைத்துக்கொண்டு இருந்தான் அந்தச் சுள்ளான். பில்லியனில் ஏறி அமர்ந்தால், ஒட்டகத்தின் மீது அமர்ந்ததுபோல செம உயரம். செமத்தியாக உறுமிவிட்டு எடுத்த எடுப்பில் எழுபதைத் தொட்டது கரிஷ்மாவின் ஸ்பீடாமீட்டர். ஒரே நொடியில் உயிர் பயத்தைக் காட்டிவிட்டான் சுள்ளான். கண்களை மூடிக்கொண்டேன்.  கார்ட்டூன் படங்களில் வில்லனை ராக்கெட் நுனியில் கட்டி அனுப்புவார்களே... சத்தியமாக அப்படித்தான் இருந்தது. டிராஃபிக் இல்லாத அந்த அதிகாலை வேளையில் நம்பினால் நம்புங்கள்... முழுதாக ஒரே நிமிடம்தான்... மூன்று கிலோ மீட்டர்களைக் கடந்து ஸ்கைவாக் அருகே வந்து சேர்ந்தோம். பைக்கை நிறுத்திய நொடி விருட்டென்று தாவி இறங்கினால் கண்களில் பூச்சி பறக்க... காலுக்குக் கீழே சாலை நழுவியது!'ஈவ்னிங் சிக்ஸ்... ஹாரிங்டன் ரோடு... ஜிக்ஜாக்!'' என்று சங்கேத பாஷைபோலச் சொல்லிவிட்டுப் பறந்துவிட்டான் சுள்ளான்.மாலை 6 மணி... போக்குவரத்து நெரிசலில் பிதுங்கி வழிந்துகொண்டு இருந்தது ஹாரிங்டன் சாலை. குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டு அந்த பல்சரில் ஏறி அமர்ந்தேன். கியர் தட்டிப் புறப்பட்டு நூறைத் தொட்ட பின் அதில் இருந்து இம்மியும் குறையவில்லை வேகம். அவ்வளவு நெரிசலிலும் பாம்பு போல வளைந்து நெளிந்து பறந்தது பைக். முன் பின் செல்பவர்கள் பைக்கின் உறுமல் சத்தத்துக்கே வழிவிட்டுத் தெறித்தார்கள். 'ஜஸ்ட் மிஸ்’ஸில் சிக்னல் சிவப்பைக் கடந்தான் பையன். டிராஃபிக் கான்ஸ்டபிள் ஊதிய விசில் பகீர் கிளப்பியது. மாநகரப் பேருந்துக்கும் மெட்ரோ வாட்டர் லாரிக்கும் நடுவே லேசாக உரசி சைக்கிள் கேப்பில் பறந்தது பைக்.  ஸ்டெர்லிங் சாலை பெட்ரோல் பங்க்தான் எண்ட் பாயின்ட். பைக்கில் இருந்து இறங்கி நீண்ட நேரத்துக்குப் பிறகும் வயிற்றைக் கலக்கிக்கொண்டே இருந்தது.

'பிரதர்... இதெல்லாம் தப்பு இல்லையா? பப்ளிக்கை இப்படித் தொந்தரவு பண்ணலாமா? போலீஸ் பிடிச்சா என்ன சொல்வீங்க?'' என்று கேட்டேன். ''ஹ... எங்களை சேஸ் பண்ணிப் பிடிக்க சென்னை சிட்டி யில ஒரு போலீஸ்கூடக் கிடையாதுங்க. ஏன், சோழாவரம் பைக் ரேஸர்கள்கூட எங்களைப் பிடிக்க முடியாது. ஏன்னா, அவங்களுக்கு டிராக்குல மட்டும்தான் ஓட்டத் தெரியும். டிராஃபிக்ல ஓட்ட எங்களுக்குத்தான் தெரியும். சரி... வாங்க அடுத்து மவுன்ட் ரோட்ல ஒரு ஜெர்க் போடலாமா?'' என்று அழைத்தான். தலைக்கு மேலே கும்பிடு போட்டு இடத் தைக் காலி செய்தேன்.பிறகு, பைக் ரேஸ் விவரங்களை விசாரித்தால், டாப் கியரில் கிறுகிறுப்பு தட்டுகிறது.டிராக் ரேஸ்களைப் போலவே பக்கா பகீர் விதிமுறைகளுடன் சென்னையில் நடக்கின்றன ஸ்ட்ரீட் ரேஸ்கள். ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 7 வரை பல பிரிவுகளாகப் பிரித்து விதவிதமாக ரேஸ் நடத்துகிறார்கள். பல்ஸர் 180, பல்ஸர் 220, யமஹா ஆர்-15, கரிஷ்மா, அப்பாச்சி, யமஹா ஆர்.எக்ஸ் 100 இவையே ரேஸுக்கான பைக்குகள்.

ஃபார்முலா 1: ரேஸுக்கு அறிமுகமாகும் பொடிப் பையன்களுக்கான வரவேற்புப் பிரிவு. அதிகாலை அல்லது இரவு 10 மணிக்கு மேல் வெறிச்சோடிய சாலைகளில் நடக்கும். பைக்கை டியூன் செய்யக் கூடாது. அடையாறு பாலம் தொடங்கி கலங்கரை விளக்கம் சிக்னலுக்கு முன் முடியும் இந்த ரேஸ். ஐந்து நிமிடங்களுக்குள் வந்து சேர வேண்டும். 1,000 ரூபாய் அல்லது பீர் பார்ட்டி... இதுதான் பந்தயம்.

ஃபார்முலா 2: தாம்பரம், மதுரவாயல், கானாத்தூர் புறநகர் பைபாஸ், கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். பக்கம் பகல் நேரங்களில் நடக்கும் ரேஸ். டபுள்ஸ் கட்டாயம். 10 கி.மீ. பயண தூரம். பைக் டியூனிங் கூடாது. சைலன்ஸரின் உள்ளே இருக்கும் மப்ளரை வெட்டக் கூடாது. ஹெல்மெட் கட்டாயம். பந்தயத் தொகை 5,000 தொடங்கி 10 ஆயிரம் வரை!

ஃபார்முலா 3: காந்தி சிலை டு ராயபுரம் அல்லது காந்தி சிலை டு திருவான்மியூர் ரூட். பைக் நன்றாக ஓட்டத் தெரிந்த ரேஸர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும். மிதமான போக்குவரத்து இருக்கும் நண்பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணிக்குள் ரேஸுவார்கள். ஹெல்மெட் அணியக் கூடாது. பந்தயம் பணம் மட்டுமே. 10 ஆயிரம் தொடங்கி 20 ஆயிரம் வரை.

ஃபார்முலா 4: காந்தி சிலையில் இருந்து ராயபுரம் சென்று அங்கு குறிப்பிட்ட நபரிடம் இருக்கும் ரகசிய எண் எழுதப்பட்ட அட்டையை வாங்கிக்கொண்டு, ஜெமினி வழியாக வடபழனி லட்சுமண் - ஸ்ருதி சிக்னல் வரை சென்று அங்கு இன்னோர் அட்டையைப் பெற்றுக்கொண்டு காந்தி சிலை வர வேண்டும். டபுள்ஸ் கட்டாயம். பந்தயத்தை நடத்துபவர்களின் பிரதிநிதிகள் பயண தூரம் முழுக்கப் பயணித்துக் கண்காணிப்பார்கள். நேரக் கணக்கு இல்லை. முதலில் வருபவரே வெற்றியாளர். பந்தயத் தொகை 20 ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை.

ஃபார்முலா 5: சென்னையின் குறிப்பிட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களே இதில் பங்கெடுக்கிறார்கள். பல்ஸர் மற்றும் அப்பாச்சி பைக்குகளில் பூந்தமல்லி நெடுசாலையில் தாசப்ரகாஷ் ஹோட்டல் அருகே தொடங்கி, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சிப் பூங்கா வரை. காலை மற்றும் மாலையின் பீக் ஹவர்களில் மட்டுமே இந்த ரேஸ் நடக்கும். 5,000 தொடங்கி 20 ஆயிரம் வரை பந்தயம். சைலன்சரில் சின்ன மாற்றம் மேற்கொள்வதன் மூலம் செம விர்ர்ர்ரூம் சத்தத்தையும் அதிக புகையையும் கிளப்பு வார்கள்.  

ஃபார்முலா 6: மெக்கானிக்குகளுக்கு இடையே  நடத்தும் ரேஸ் இது. கலங்கரை விளக்கு முதல் திருவொற்றியூர் வரை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறைதான் நடக்கும். ஒரு டீமூக்கு இரண்டு பைக்குகள். டபுள்ஸ் கட்டாயம். இரண்டில் எந்த பைக் முந்தி னாலும் அணிக்கு வெற்றிதான். மொத்தம் ஐந்து அணிகள் களத்தில் இருக்கும். பந்தயத் தொகை 50 ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை. போட்டி தொடங்கும் முன்னே நடுவரின் சாட்சிக் கையெழுத் துடன் பந்தயத் தொகைக்குப் பத்திரம் எழுதிவிடுவார்கள். பெரும்பாலும் பல்ஸர் 220-தான் இந்தப் பந்தயத்தில் பறக்கும். குறிப்பிட்ட ஐந்து இடங்களில் பைக்கை ஜிக்ஜாக் செய்து, மெயின் ஸ்டாண்டை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். இதைக் கண்காணிக்க ஸ்பாட்டில் ஆட்கள் இருப்பார்கள். பீக் ஹவரில் நகர நெரிசலில் தொடங்கி வட சென்னையின் புழுதி பறக்கும் சாலை கன்டெய்னர் லாரி டிரைவர்கள் வரை கண்ணில் விரல்விட்டு ஆட்டிவிடுவார்கள் இந்த ரேஸர்கள். சைலன்சர் மட்டும் அல்ல, இன்ஜின் மற்றும் பெட்ரோல் டேங்குகளிலும் சிற்சில மாற்றங்களை மேற்கொண்டு பைக்கின் வேகத் திறனை அதிகரிப்பார்கள்.

ஃபார்முலா 7: செம டெரர் ரேஸ் இது தான். தேர்ந்த மெக்கானிக்குகள், கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள்எனக் கலந்து கட்டிய ரேஸர்கள் பங்கெடுக்கும் ரேஸ். இரண்டு இரண்டு பைக்குகளாக 10 அணிகள் களம் இறங்கும். ஒரே சாலையில் அத்தனை பைக்குகளும் சென்றால் சிக்கிக் கொள்வார்கள் என்பதால், ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வொரு ரூட். அனைத்து ரூட்டுகளும் சரியாக ஐந்து கி.மீ. தூரம் இருக்கும். ஹெல்மெட் அணியக் கூடாது. சைடு ஸ்டாண்டை மடக்கக் கூடாது. பைக்கை ஜிக் ஜாக் செய்து ஐந்து இடங் களில் தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். சமயங்களில் பந்தயத் தொகையைப் பொறுத்து பைக் பிரேக்கின் க்ரிப் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். சிக்னலில் நிற்கக் கூடாது. இவை இந்த ரேஸின் கண்டிப்பான விதிமுறைகள்.

கடும் போக்குவரத்து நெரிசலில் மட்டுமே நடக்கும் இந்த ரேஸில் வேகத்தைக் குறைக்க பிரேக் பிடிக்க மாட்டார்கள். கியர்கள் மூலமே வேகத்தைக் கட்டுப்படுத்தி, முழு த்ராட்டிலிலேயே பறப்பார்கள். எவ்வளவு போக்குவரத்து நெரிசலிலும், வளைந்து நெளிந்து கட் அடித்துச் செல்வது இவர்களின் முதுகெலும்பைச் சிலிர்க்கச் செய்யும் ஸ்பெஷாலிட்டி. ரேஸின்போது வேறு வழி இல்லாமல் சிக்னலில் வண்டியை நிறுத்தியவர்கள், போலீஸிடம் மாட்டியவர்கள், தடுமாறிக் கீழே விழுந்தவர்கள், விபத்தை ஏற்படுத்தியவர்கள் வாழ்நாள் முழுக்க மீண்டும் ரேஸில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.இந்த ரேஸில் கலந்துகொள்ளும் பைக்குகளின் மதிப்பு ஏழெட்டு லட்சங்களை நெருங்கும். தவிர, ரீ-மாடிஃபிகேஷனுக்கு ஓரிரு லட்சங்களை இறைத்திருப்பார்கள். பந்தயத் தொகை ஒரு லட்சம் தொடங்கி 10 லட்சம் தாண்டியும் எகிறும். அதிக ரேஸ்களில் ஜெயித்த பைக்கும் சமயங்களில் பந்தயமாக வரும். இதில் பெரும்பாலும் பைக்கை ஓட்டுபவர் பணம் கட்ட மாட்டார். குதிரைப் பந்தயத்தில் குதிரையை ஓட்டும் வீரன்போலத்தான் இதில் பைக்கை ஓட்டு பவரும். உயிரைப் பணயம் வைத்து பைக் ஓட்டுபவருக்குச் சம்பளம் 10 ஆயிரம் மட்டுமே. ஜெயித்த ரேஸர்களுக்கு பந்தயத் தொகையைப் பொறுத்து ஆயிரங்களில் தொடங்கி லட்சம் வரை போனஸ் கிடைக்கும்.இந்த ரேஸ் கொடுக்கும் விறுவிறு போதை இளைஞர்களைச் சுண்டி இழுக்கிறது. ஆனால், இதன் மறுபக்கம்... தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் இளங்கோ, வாகன விபத்துகளில் ஏற்படும் தலைக் காயம் உண்டாக்கும் பகீர் விளைவுகளைப் பட்டியலிடுகிறார். ''தலைக் காயம் ஏற்படும்போது மண்டையின் சருமம் கிழிந்து, மண்டையோட்டு எலும்புகள் நொறுங்கும். மூளையைப் பாதுகாக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்துவிடும். மூளையின் உள்ளே நிரம்பியிருக்கும் திரவம் ரத்தம் கலந்து காதில் வழியும். கண்ணுக்குச் செல்லும் நரம்புகள் அறுந்து கண் பார்வை பாதிக்கும்.       மூளைக்கு ரத்தம் செல்லும் நாளம் வெடித்து, மூளையின் உள்ளேயும் ரத்தம் உறைந்துவிட்டால்... அது கிட்டத்தட்ட மரண நிலைதான். மூளையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, ரத்த அழுத்தம் உயரும். மூளையின் செல்கள் இறந்ததாலும் ரத்த இழப்பாலும் உடனடியாக உடலின் தாதுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, சிறுநீரகமும் பாதிக்கும்! விபத்து நடந்த இடத்திலேயே அடிப்படை முதலுதவிகள் அளித்து உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கவில்லைஎன்றால், வாழ்க்கையே கேள்விக்குறியில் முடியும்!'' என்கிறார்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பைக் ரேஸ்கள் மிக அதிக அளவில் நடக்கும். போலீஸ் கண்காணிப்பு என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் இருந்தது. ஆனால், சமீப வருடங்களில் கொஞ்சம் கெடுபிடி காட்டினார்கள். இப்போது சிறுமி ஷைலஜாவின் மரணத்துக்குப் பிறகு கெடுபிடி இன்னும் இறுகி இருக்கிறது. இருந்தாலும் ஸ்ட்ரீட் ரேஸர்கள் அசருவதாக இல்லை. இப்போதும் தினமும் ஒரு ரேஸ் சென்னையின் ஏதோ ஒரு மூலையில் விறுவிறுத்துக்கொண்டேதான் இருக்கிறது.

விகடன்

Wednesday, May 30, 2012

எனது இந்தியா! (செருப்பு ஊர்வலம் !) - எஸ். ராமகிருஷ்ணன்....


விஜய நகர ஆட்சியில் கிராம நிர்வாக முறையை கட்டோடு மாற்றி புதிய ஆயக்கர் முறை அறிமுகம் செய்யப்​பட்டது. அதன்படி, 12 பேர் அடங்கிய குழு கிராமத்தைப் பராமரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயக்கர் முறையில் உள்ள 12 பேரில் கர்ணம், மணியம், தலையாரி ஆகிய மூன்று பேரும் மன்னரால் நேரடியாக நியமிக்கப்படுவர். மற்றவர்களான தச்சு வேலை செய்பவர், குயவர், தட்டார், கருமார், புரோகிதர், செருப்புத் தைப்பவர், துணி துவைப்பவர், சவரத்தொழிலாளி, தண்ணீர் கொண்டுவருபவர் ஆகியோரை உள்ளுர் முடிவு செய்துகொள்ளும். கிராமத்தின் வரி வருவாய், நிலம் மற்றும் நீர்ப் பங்கீடு பராமரிப்பு குறித்த விவரங்களைப் பதிவு செய்வது கர்ணத்தின் வேலை. நேரடியாகச் சென்று வரி வசூலிப்பவர் மணியம். இவரோடு ஊரின் காவல் பணியைச் செய்பவர் தலையாரி. இவர்களுக்கு அரசின் மானியமாக நிலம் வழங்கப்படும். ஆனால் அதற்கு, அவர்கள் தனியே வரி செலுத்த வேண்டியது அவசியம். ஆயக்கர் முறை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது. இன்றும்கூட, கர்ணம், மணியக்காரர், தலையாரி குடும்பங்கள் இருப்பது இதன் மிச்சமே.விஜய நகர ஆட்சிக் காலத்தில் தெலுங்கு, கன்னட, சமஸ்கிருத மொழிகளின் இலக்கியங்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்தன. தமிழ் அப்போது ஆட்சி மொழியாக இல்லை. ஆகவே, முக்கியத்துவம் பெறாமல் போனது. விஜய நகர மன்னர்களும் அவர்​களுக்குப் பின்வந்த நாயக்கர்​களும் கோயில்களைப் பராமரிப்பதிலும், உருவாக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டினர். பாசன வசதியைப் பெருக்கும் நீர் நிலை​களை உருவாக்குவது, ஒவியம், இசை, நாடகம் உள்​ளிட்ட கலைகளை மேம்படுத்துவதிலும் அதிக ஈடுபாடு காட்டினர்.

விஜய நகரப் பேரரசு தன்னை கர்நாடக சாம்​ராஜ்யம் என்றும் குறிப்பிட்டுக்கொண்டது. இதற்கும் இன்றைய கர்​நாடகத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மாறாக, ஆந்திராவின் கோரமண்டல் கடற்கரைப் பகுதியை ஒட்டி விஜய நகரப் பேரரசு ஆட்சி செய்ததையே கர்நாடிக் என்று கூறுகிறார்கள். மொழியியல் அறிஞர் கால்டுவெல், 'கர் என்றால் கறுப்பு. நாடு என்றால் தேசம். கரிசல் நிலம் உள்ள பகுதி என்பதால் கர்நாடகம் என்று கூறியிருக்கிறார்கள்’ என்று விளக்கம் தருகிறார். 'விஜய நகர ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த நாயக்கர் ஆட்சிக்கும் உட்பட்டு இருந்த காரணத்தால் தமிழகத்தின் சோழ மண்டலக் கடற்கரை, கர்நாடகக் கடற்கரை என்றானது. அதன் தொடர்ச்சியாகவே தெலுங்கில் இருந்து உருவான இசை, கர்நாடக இசை என்று அழைக்கப்பட்டு வருகிறது’ என்கிறார் வரலாற்று அறிஞர் ரிச்சர்ட் ஸ்மித்.தொடக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் நதி வரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் கீழ் இருந்தன. பின்னர், விஜய நகரப் பேரரசின் ஆரவீடு மரபினர் வேலூரைத் தலைநகரமாகக்கொண்டு ஆளத் தொடங்கியதும்... வடக்கே பாலாறு முதல் தெற்கே கொள்ளிடம் வரையிலானதாக செஞ்சி நாயக்கர்களின் ஆட்சி எல்லை சுருங்கியது.செஞ்சி நாயக்கர்களில் குறிப்பிடத்தக்கவர் பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர். இவர் பெயரால் கிருஷ்ணா​புரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது செஞ்சி. இன்றுள்ள செஞ்சிக் கோட்டையை வடி​வமைத்தவர் பெத்த கிருஷ்ணப்பரே. செஞ்சியில் உள்ள மூன்று குன்றுகளையும் உள்ளடக்கி எழுப்பப்பட்டு உள்ள பெருஞ்சுவர்களும் இவரால் கட்டப்பட்டவை. விஜய நகரப் பேரரசின் மிகச் சிறந்த மன்னராகக் கொண்டாடப்படுபவர் கிருஷ்ண தேவராயர். இவரது ஆட்சிக் காலத்தில் விஜய நகரப் படைகள் தொடர்ந்து வெற்றியைக் குவித்தன. கலைகளிலும் இலக்கியத்திலும் அதிக ஆர்வம்கொண்ட கிருஷ்ண தேவராயர், தொடர்ந்த படையெடுப்பின் வழியே விஜய நகரப் பேரரசை வலிமைமிக்கதாக மாற்றினார்.ஒரு முறை கிருஷ்ண தேவராயர், படைத் தளபதி நாகம நாயக்கனை மதுரையைக் கைப்பற்றிக் கப்பம் வாங்கி வருமாறு அனுப்பினார். நாகம நாயக்கர் மதுரையைக் கைப்பற்றி, தன்னையே மதுரை மன்னராகப் பிரகடனம் செய்துகொண்டார்.  இந்த அதிர்ச்சித் தகவலை அறிந்த கிருஷ்ண தேவராயர், நாகம நாயக்கரை வென்று வர அவரது மகன் விஸ்வநாத நாயக்கரின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் .நாகம நாயக்கரை வென்று அவரை சிறைப்பிடித்து வந்து கிருஷ்ண தேவராயர் முன் நிறுத்தினர் விஸ்வநாத நாயக்கர். இந்தச் செயலைப் பாராட்டிய ராயர், விஸ்வநாத நாயக்கரை மதுரையின் சுதந்திர மன்னராக பிரகடனம் செய்ததாக சொல்லப்​படுகிறது.


மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னராக 1529-ல் விஸ்வநாத நாயக்கர் முடிசூடினார். இவரது அமைச்சராக இருந்தவர் அரியநாத முதலியார். இவரது வீர சாகசம் பற்றி நிறையக் கதைகள் இருக்கின்றன. இவர்தான் தென்னகத்தை 72 பாளையங்களாகப் பிரித்து பாளையக்காரர்களை நியமித்தார்.நாயக்கர்களின் வம்சம் அதன் பிறகு மதுரையில் தொடர்ந்து அரசாட்சி செய்தது. இவர்களில் குறிப்பிடத்​தக்க இரண்டு பேர், திருமலை நாயக்கரும் ராணி மங்கம்மாளும். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை புதுப் பொலிவு அடைந்தது. திருச்சியில் இருந்த தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றியவர் திருமலை நாயக்கரே. சைவ, வைணவ ஆலயங்களுக்கு நிறையத் திருப்பணிகள் செய்து இருக்கிறார். மதுரையைச் சுற்றி உள்ள ஏரிகள், நீர்நிலைகள் இவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டு, விவசாயம் மேம்பாடு அடைந்தது. இவர், கி.பி. 1,623 முத்ல 1,659 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.இவரது ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதுதான் மதுரையில் இன்றும் நாம் காணும் நாயக்கர் மஹால். இன்றுள்ள மதுரையின் அமைப்பும், சத்திரங்களும் இவர் உருவாக்கியதே. ராணி மங்கம்மாள் 1689-ல்ஆட்சிக்கு வந்தார். இவர், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி. 1682-ல் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது, அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாதக் குழந்தை. எனவே, தன் மகனைக் காப்பாற்ற வேண்டி உடன்கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை, காப்பாளராக ஏற்றுக்கொண்டார்.இவருடைய ஆட்சிக் காலத்தில் நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சி விளங்கியது. அன்னையின் வழிகாட்டுதலில் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார். தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றைப் போரிட்டு மீட்டார். ஏழு ஆண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர், அம்மை நோயால் 1688-ல் இறந்தார். மலேசியாவில் வாழும் வரலாற்று ஆய்வாளர் ஜேபி எனப்படும் ஜெயபாரதி தனது கட்டுரை ஒன்றில், முத்துவீரப்பர் காலத்தில் நடந்த முக்கியச் சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார். இதை நிரூபணம் செய்யும் சான்று எந்த வரலாற்று ஆவணத்தில் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், ஒரு மதுரை தன்னரசின் துணிச்சலை வெளிப்படுத்துவதாக இந்தச் சம்பவம் உள்ளது.ஒளரங்கசீப் காலத்தில் யானையை அலங்கரித்து அதன் முதுகில் ஆடம்பரமாக பீடம் அமைத்து, அதன் மீது ஒரு தங்கத் தாம்பாளத்தில் ஒளரங்கசீப்பின் செருப்பு ஒன்றை வைத்து, ஊர் ஊராக ஊர்வலம் வந்தார்கள். கூடவே, ஜுல்பிர்கான் என்ற தளபதியோடு ஒரு படைப் பிரிவும் வரும். யாராவது மன்னர்கள், இந்தச் செருப்பை மதிக்கவில்லை என்றால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதற்குப் பயந்து, பல மன்னர்கள் யானையை எதிர்கொண்டு வரவேற்று செருப்பை வணங்கி மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு நகரிலும், இந்தச் செருப்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மன்னரின் அரசாளும் இருக்கையில் வைக்கப்படும். அந்த மன்னர் விழுந்து வணங்கி ஒளரங்கசீப்புக்கு அடங்கிக் கப்பம் கட்டு​வதாக சாசனம் எழுதிக் கொடுக்க வேண்டும். இந்தச் செருப்பு ஊர்வலம் மதுரை நாட்டின் எல்லையான காவிரிக் கரைக்கு வந்து சேர்ந்தது. எல்லையில் இருந்தபடியே மன்னர் முத்துவீரப்பருக்குத் தகவல் அனுப்பினர். அவர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்.   கோட்​டைக்குள் செருப்புத் தாம்பாளத்தைத் தூக்கி ​வந்தனர். முத்துவீரப்பரோ, அதை வணங்குவதற்குப் பதிலாக தன்னுடைய ஒரு காலை அந்தச் செருப்புக்குள் நுழைத்துக்கொண்டு தங்கத் தாம்பாளத்தை ஓங்கி எத்திவிட்டார்.

'முட்டாளே, உங்கள் டில்லி பாஷாவுக்கு மூளை இல்லையா? ஒரு காலுக்கு மட்டும் செருப்பை அனுப்பி இருக்​கிறானே? இன்னொரு செருப்பு எங்கே? எனக்கு வேண்டியவை இரண்டு செருப்புகள் அல்லவா?' என்று கேலியாகக் கேட்டார் முத்து வீரப்பர். பிறகு, அவர்களை அடித்து விரட்டினார். அதோடு, ஒளரங்கசீப் தன் செருப்பு ஊர்வலத்தை நிறுத்திக்கொண்டார் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.கணவர் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இறந்தவுடன், முத்தம்மாள் உடன்கட்டை ஏறினார். அவரது மகன் விஜயரங்க சொக்கநாதருக்கு பட்டம் சூட்டப்பட்டது. விஜயரங்க சொக்கநாதரின் சார்பில் அவரு​டைய பாட்டியான மங்கம்மாள் பொறுப்​பாளராக பதவிஏற்று ராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1,706 வரை ஆட்சி நடத்தினார்.17 ஆண்டுகள் ஆட்சி நடத்திய மங்கம்மாள், போரை விரும்பாதவர். இவர், மதுரையில் பெரிய அன்னச்சத்திரம் அமைத்தார். அது, 'மங்கம்மாள் சத்திரம்’ என இன்றும் அழைக்கப்படுகிறது. இப்போது, மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே, ராணி மங்கம்​மாளின் கோடைக்கால அரண்மனை. இதில் உள்ள தமுக்கம் மைதானத்தில்தான் அந்தக் காலத்தில் யானைச்சண்டை முதலான பொழுதுபோக்கு விளை​யாட்டுக்களும், அரச விழாக்களும் நடைபெற்றன. மங்கம்மாள் காலத்தில் உருவாக்கிய சாலைகள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவர் காலத்தில் உருவாக்கப்பட்ட சந்தைகள், சத்திரங்கள், தர்ம ஸ்தாபனங்கள் மக்களுக்கு  அரிய சேவை செய்தன.தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர், ராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதி சிறையில் அடைத்தார். அதில் மனம் உடைந்துபோன ராணி மங்கம்மாள் 1706-ல் இறந்துபோனார். விஜயரங்க சொக்கநாதர் மறைந்த பிறகு, அவரது மனைவி மீனாட்சி, 1732-ல் தன் உறவினரான விஜயகுமாரன் என்ற பையனைத் தத்தெடுத்து அவனை ஆட்சிப் பொறுப்பில் அமரவைத்து தானே ஆட்சியை நடத்தினார். விஜயகுமாரின் தந்தை பங்காரு திருமலை தனக்கு ஆட்சியில் உரிமை வேண்டும் என்று மதுரையின் எதிரியான ஆற்காடு நவாபிடம் கோரிக்கை வைத்தார். இதற்காக, ஆற்காடு நவாபின் மருமகனும் திவானுமாகிய சந்தா சாகிப்புக்கு லஞ்சமாக நிறையப் பொன்னும் பொருளும் தந்தார்.இந்த நெருக்கடியை சமாளிக்க, சாந்தா சாகிப் தன்னை ஆதரிக்க ஒரு கோடி பகோடா தருவதாக உறுதி அளித்தாள் மீனாட்சி. அதைச் சத்தியம் செய்து ஏற்றுக்கொண்ட சாந்தா சாகிப், சதி செய்து ராணி மீனாட்சியை சிறையில் அடைத்தார். மனம் உடைந்த அவள், விஷம் குடித்து இறந்துபோனார். அதன் பிறகு, பங்காரு திருமலையையும் நயவஞ்சக சாந்தா சாகிப் கொன்று மதுரையை வென்றார். இப்படியாக 1736-ல் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து தென்​னகக் கோயில்களைக் காப்பாற்றிய இந்துப் பேரரசு விஜய நகரம். அதன் காரணமாகவே நமது கலைச் செல்வங்கள் காப்பாற்றப்பட்டன. இல்லாவிட்டால், வட இந்தியாவைப் போல நிறையக் கோயில்கள் இடிபட்டும் கொள்ளையிடப்பட்டும் போயிருக்கக்கூடும் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.விஜய நகரப் பேரரசின் நினைவுச் சின்னமாக உள்ள ஹம்பியை, உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ பராமரித்து வருகிறது. இடிபாடுள்ள ஹம்பியோடு சுழித்து ஒடும் துங்கபத்திரையின் நீரில் விஜய நகரப் பேரரசின் அழியாத நினைவுகளும் கரைந்து ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

Tuesday, May 29, 2012

அருள்வாக்கு - புத்தியும் சக்தியும் தா!


ஆசையையும் கோபத்தையும் நம்மால் அடக்க முடியவில்லை. இவை இரண்டுமே நம்மை எப்பொழுதும் துன்புறுத்தி வருகின்றன. எந்தப் பொருளை எவ்வளவு அடைந்தபோதிலும், போதும் எனும் மனநிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகத் துயரம் நம்மை விட்டபாடில்லை. சிறு துயரத்தைக் கண்டுவிட்டாலும் மனம் கலங்கத்தான் செய்கிறது. இதனின்றும் கரை ஏற வழியென்ன?நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியெல்லாமே தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்த இந்த மனத்தைத் தன்னுள் அடக்கச் சிறிது சிறிதாகவேனும் முயற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். மனம் அடங்கிவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெறவேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனமாகும். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்மஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன்தான் உண்மையான சுதந்திரனாகிறான்.

பிற ஸ்திரீகளைத் தாயார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரைத் தன்னுயிர் போல் மதிக்க வேண்டும். உயிர் போவதாயிருந்தாலும் உண்மையே பேச வேண்டும். சமூகச் சச்சரவுகள், வகுப்புச் சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். எல்லோரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும். மக்களெல்லாம் சுகமாக வாழ வேண்டுமென ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும், ஆத்ம முன்னேற்றத்துக்கும் பாடுபட வேண்டும். இவற்றுக்கெல்லாம் புத்தியும் சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Monday, May 28, 2012

அமெரிக்காவின் தூங்கா நகரம்!


உலகிலேயே அதிகமான டூரிஸ்ட்டுகளின் வாண்டட் லிஸ்டில் முதலிடம் நியூயார்க். இதன் டைம்ஸ்கொயருக்கு கடந்த ஆண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடிக்கும் மேல். நியூயார்க் நகரின் நடுவில் இரண்டு குறுகிய தெருக்கள் ஒரு பெரிய சாலையில் சந்திக்கு மிடத்திலிருக்கும் இந்தச் சதுக்கம், 100 வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் அறிந்த புகழ் பெற்ற இடம். உலகத்தின் சாலைகள் சந்திக்குமிடம் ("The Crossroads of the World") என வர்ணிக்கப்படுகிறது. இந்த இடத்தில் நகருக்காகப் போராடி வென்ற டஃபி(Duffy) என்பவரின் நினைவாக அவரது சிலை நிறுவப்பட்டு டஃபி ஸ்கொயர் எனப் பெயரிடப்பட்டிருந்தது. நகர நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 1904ல் நியூயார்க் டைம்ஸ் தினசரி தங்களுடைய பல மாடி அலுவலகக் கட்டடத்தை இங்கு எழுப்பியபோது, டைம்ஸ்கொயராக மாறியது. டஃபியின் சிலை இன்னுமிருக்கிறது. ஆனால், நியூயார்க் டைம்ஸ் இப்போது இங்கில்லை.

உலகின் முதல் மின்சார பல்புகளுடன் விளம்பரம், நியான் விளக்கு விளம்பரம், பிளாஸ்டிக் சைன்போர்ட், டிஜிட்டல் விளம்பரம் என பல விளம்பரப் புதுமைகளின் பிறப்பிடமான டைம்ஸ் கொயரை இன்று ஒரு சதுர அங்குலம் பாக்கியில்லாமல் ஆக்கிரமித்திருப்பது வீடியோவால்ஸ் எனப்படும் பிரமாண்டமான டிஜிட்டல் விளம்பரங்கள். ஒரு கட்டடத்தின் முகப்பைக் கூட விட்டுவைக்காமல் ஜம்போட் ரான்ஸ் என்ற மிகப் பெரிய (100அடி நீளம் 60 அடி உயரம்) வீடியோ திரைகளை நிறுவியிருக்கிறார்கள். அதில் அழகாக விளம்பரங்கள், ஐ மாக்ஸ் திரையில் தெரியும் படம் போல ஓடிக்கொண்டேயிருக்கின்றன. இந்த விளம்பரங்களுக்குக் கட்டணங்கள் மிக அதிகம். சீசன் காலத்தில் ஒரு மணி நேரத்துக்கு 10000 டாலர்கள். ஆனாலும் அடுத்த புத்தாண்டுவரை எல்லாம் புக்காகி விட்டதாம்.  

உலகிலேயே வாடகை இங்குதான் மிக அதிகம். ஆனாலும் இங்கு விளம்பரத்துக்காகவாவது ஒரு ஷோரூமோ, அலுவலகமோ இருப்பதை உலகின் எல்லா பெரிய நிறுவனங்களும் கௌரவமாகக் கருதுகின்றன. ‘எங்கள் நிறுவன விளம்பர உருவத்துடன் நடனமாடினால் சாக்லெட் இலவசம், எங்கள் கேமராவில் எடுக்கப்பட்ட உங்கள் குடும்பப் படத்தை பிரமாண்ட திரையில் உடனே பாருங்கள்’ என்ற ஆர்ப்பாட்டமான அழைப்புகளுடன் கலக்குகிறார்கள்... புகழ் பெற்ற லண்டன் மேடம் டூஸாட்டின் மெழுகுச்சிலை உருவங்களின் அரங்கம் டைம்ஸ்கொயரின் சமீபத்திய புதிய வரவு. ஹாலிவுட் நட்சத்திரம் மார்கன் ஃபிரீமேன் (Morgan Freeman) சாலை நடைபாதையிலேயே நம்மை வரவேற்கிறார். அருகிலிருக்கும் பிராட்வே தியேட்டர் டிஸ்ட்ரிக்ட்டில் 40க்கும் மேற்பட்ட தியேட்டர்கள். இங்கு தியேட்டர்களில் சினிமா மட்டுமில்லாமல் நாடகம், இசை, நடனம் எல்லாம் நிகழ்த்தும் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில பழைய தியேட்டர்களைப் பாரம்பரியச் சின்னமாக அதன் பழைய முகப்போடு நகர நிர்வாகமே பராமரிக்கிறது. எல்லா தியேட்டர்களுக்கும் ஒரே இடத்தில் டிக்கெட் தருகிறார்கள். அதன் பெயர் ‘சூபாக்ஸ் ஆபிஸ்’. சூ டிக்கெட்களுக்கு 20லிருந்து 50 சதவிகிதம் வரை டிஸ் கவுண்ட். படத்துக்குக் கூட்டம் குறைய, குறைய டிஸ்கவுண்ட் கூடுகிறது. சிலசமயம் முதல் நாளே சில காட்சிகளுக்குப் பின் கூட்டமே இல்லாவிட்டால் 50% டிஸ்கவுண்ட்டில் டிக்கெட். சினிமா உலகின் ‘பாக்ஸ் ஆபிஸ் ஹிட்’ என்ற சொல் இங்கிருந்துதான் பிறந்திருக்கிறது. டிக்கெட்டுகள் கொடுக்கும் கட்டடத்தின் பின்புறத்தில் அதன் மேல் தளத்திலிருந்து தரைவரை ஒரு ஃபைபர் கிளாஸ் காலரி. டிக்கெட் கொடுக்கும் முன் உட்கார்ந்து ஓடும் பிரமாண்ட விளம்பரங்களை வேடிக்கை பார்க்கலாம். எப்போதும் பல ஆயிரக்கணக்கானவர்களுடன் பரபரப்பாக இயங்கும் இந்தப் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. வாங்கியதைச் சாப்பிட சாலையிலேயே இலவசமாக மேஜை, நாற்காலி வசதி. காஃபி கப்புடன் ரோட்டில் உட்கார்ந்து நிம்மதியாகப் படித்துக்கொண்டிருப்பவர்களையும் பார்க்க முடிகிறது. ஒரு டாலர்க்கு காஃபி குடித்தால் கூட கிரெடிட் கார்ட் தேப்பது அமெரிக்கர்களின் வாடிக்கை. ஆனால் வரும் டூரிஸ்ட்களின் வசதிக்காக இங்குள்ள பெட்டிக்கடைகளில் கூட ஏ.டி.எம். பொருத்தியிருக்கிறார்கள். 

உலகின் பல மொழிகளின் ஓசைப் பின்னணியில் பிரமாண்ட விளம்பரங்களின் ஒளி வெள்ளத்தில் நம்மை மறந்துலயித்து விடுவதால் நேரம் போவதே தெரிவதில்லை.டைம்ஸ்கொயர் தூங்குவதேயில்லை என்கிறது நியூயார்க் டூரிஸத்தின் விளம்பரம். ஆனால், பார்த்த நம்மையும் தூங்கவிடுவதில்லை என்பதுதான் உண்மை.

Sunday, May 27, 2012

வாட்டர் பியூரிஃபயர்: எது பெஸ்ட்?

னித உடல் சிக்கல் இல்லாமல் இயங்க தினசரி குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்பது மருத்துவர் களின் அறிவுரை. அதுவும் கோடையில் நம் உடலுக்கு வேண்டிய தண்ணீரின் தேவை அதிகம். பூமி மாசுபட்டு நீர் ஆதாரங்கள் கிட்டத்தட்ட விஷமாகிவிட்டது. நம் உடலை சுத்தப்படுத்த வேண்டிய தண்ணீரே அசுத்தமாக இருக்கிறது. இதனால் 75 சதவிகித நோய்கள் நம் நாட்டில் தண்ணீர் மூலம் பரவுகிறது.பழங்காலத்தில் தண்ணீரை சுத்தமாக்க அதை கொதிக்க வைத்தார்கள். இப்போதும் பல வீடுகளில் அதை செய்கி றார்கள். அப்படி செய்யும் போது தண்ணீரின் சுவை மாறி விடுகிறது. தவிர, பரபரப்பான நகர வாழ்க்கையில் இதை செய்வதற்கு நேரம் இருப்ப தில்லை. விளைவு, வாட்டர் பியூரிஃபயர்களை தேடிச் செல்லும் நிலை..!


வாட்டர் பியூரிஃபயர்கள் தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதை குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றி தருகிறது.இவை பாக்டீரியாக்கள், வைரஸ் போன்ற நுண்ணியிரி களை தண்ணீரிலிருந்து நீக்கு கிறது. இதன் மூலம் காலரா, மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் தடுக்கப்படுகிறது. மேலும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நைட்ரேட், ஆர்சனிக், குரோமியம், ஃபுளோரைட், பாதரசம் போன்ற வற்றை தண்ணீரிலிருந்து நீக்கும் வேலையைச் செய்கின்றன.நம் நாட்டில் ஏராளமான வாட்டர் பியூரிஃபயர்கள் விற்பனையாகின்றன. அவற்றில் நமக்கு ஏற்றதைத் தேர்வு செய்வது எப்படி என்கிற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. பொதுவாக இவற்றை வாங்கும்போது நவீன தொழில்நுட்பத்தில் இயங்குகின்றனவா? எந்த அளவுக்கு தண்ணீரை சுத்தப் படுத்துகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.ரசாயன சுத்திகரிப்பு, ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (ஆர்.ஓ), அல்ட்ரா வயலட் முறை, வடிகட்டுதல் உள்ளிட்ட முறைகளில் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது. விலை ரூ.2,000 தொடங்கி 25,000 வரை இருக்கிறது. மின்சாரத்தில் இயங்குவது, மின்சாரம் இல்லாமல் இயங்குவது என இரு வகைகள் இருக்கின்றன.


சுமார் அரை டஜன் நிறுவனங்களின் 10 வகையான வாட்டர் பியூரிஃபயர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அவற்றின் விலை, வாரண்டி, தரம், செயல்பாடு போன்றவை அலசி ஆராயப் பட்டதோடு, மற்ற பிராண்ட் களோடு ஒப்பிடப்பட்டன. இவை, இந்திய தர அமைப்பின் குறைந்தபட்ச தர அளவுகளுக்கு உட்பட்டிருக்கிறதா என்பதும் ஆராயப்பட்டது. இந்த ஆய்வு இந்திய அரசின் நுகர்வோர் துறையின் அனுமதியோடு நடத்தப்பட்டது. யூரேகா ஃபோர்ப்ஸ், வேர்ல்பூல், டாடா ஸ்வாட்ச், ஜீரோ பி சுரக்ஷா, ஹெச்.யூ.எல், கென்ட் உள்ளிட்ட பிராண்ட்கள் ஆராயப்பட்டது. முடிவுகளை அட்டவணைகளில் காண்க..! 

விகடன் 

ஐ.பி.எல். ஹீரோக்கள்!

ஐ.பி.எல்., இந்திய உள்ளூர்ப் போட்டி என்று சொல்லப்பட்டாலும், உலகக்கோப்பைக்கு நிகராக அந்தஸ்து பெற்றதற்கு முக்கிய காரணம், ரசிகர்கள். சென்னையிலும் பெங்களூருவிலும் எழுநூறு, ஆயிரம் ரூபாய் இல்லாமல் மேட்ச் பார்க்க முடியாது. ஆனாலும், அங்கெல்லாம்கூட ஒரு மேட்சிலும் மைதானம் காலி இல்லை. ஐ.பி.எல். சர்ச்சைகள், டி.வி. சேனல்களுக்கு சரியான தீனி அளித்தபோதும், ரசிகர்கள் கிரிக்கெட்டைத் தவிர மற்றவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த ஐ.பி.எல்.-ன் உண் மையான ஹீரோ, ரசிகர்கள்தான். இருந்தாலும் மைதானத்தில் ஹீரோவாக ஜொலித்தவர்கள் யார்?

க்ரிஸ் கெல் :

கெல் இல்லாத ஐ.பி.எல்.-ஐ நினைத்துப் பார்க்க முடியாது. ஒரு மனிதனால் இவ்வளவு லகுவாக சிக்ஸர்கள் அடிக்கமுடியுமா? இதிலுள்ள பெரிய வினோதம் என்ன தெரியுமா? 2011 ஐ.பி.எல். ஏலத்தில் கெலை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை. ஏலத்தில் கெலை இரண்டே கால் கோடிக்குக்கூட வாங்க யாருமில்லாத நிலையில், டெரிக் நானஸ் காயத்தில் அடிபட்டபோது, டக்கென்று கெலைத் தம் பக்கம் இழுத்துக்கொண்டது பெங்களூரு.  கிட்டத்தட்ட காய்கறிக் கடையில் கொத்தமல்லி, கருவேப்பிலையை இலவசமாக வாங்குவதுபோல வெறும் 3 கோடி ரூபாய்க்கு கெலை வாங்கியது பெங்களூரு. (மும்பை, தினேஷ் கார்த்திக்குக்கு 11 கோடியும், பெங்களூரு, சோரூப் திவாரிக்கு 8.80 கோடியையும் அளித்ததோடு கெலின் ஏலத்தொகையை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்). கெல், இந்தத் தொகைக்கு ஒப்புக்கொள்ளாமல் ஏலத்துக்குச் சென்றிருந்தால் நிச்சயம் 11 கோடிவரை சம்பாதித்து டை பிரேக்கர் வழியாக வேறொரு அணிக்குப் போயிருக்கமுடியும். ஆனால், பெங்களூரு அணிக்கு விசுவாசமாக இருந்துவிட்டார் கெல். 

அஜிங்க்யா ரெஹானே:

ஓபனிங் பேட்ஸ்மேன்களில் சச்சின், ஷேவாக்குக்குப் பிறகு யார் என்பதற்கு விடை கிடைத்துவிட்டது. கம்பீருக்குத் தோள் கொடுக்கத் தயாராகிவிட்டார் அஜிங்க்யா ரெஹானே. ஆஸ்திரேலியா முத்தரப்புப் போட்டியில் ரெஹானாவுக்கு இடம் கிடைக்காதபோது எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால், அவமானத்தையே உரமாகக் கொண்டு ஐ.பி.எல்.-லில் ஜமாத்துவிட்டார். கோலி, ரைனா, ரோஹித் சர்மா, ரெஹானே என்றொரு எதிர்கால வரிசை உருவாகிவிட்டது. இவர் ஏற்கெனவே இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டாலும் நிரந்தரமான ஓர் இடம் இல்லை. இந்த ஐ.பி.எல்., ரெஹானேவின் முழுத் திறமையும் காண்பித்து, புதிய தலைமுறையின் அடையாளமாக மாற்றியிருக்கிறது.

மார்னே மார்கல்:

ஓர் அற்புதமான ஓவரால் ஆட்டத்தின் போக்கையே மாற்றமுடியும் என்பதை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நிரூபித்தார் மார்கல். இரண்டு ஓவருக்கு 15 ரன்கள் தேவை என்கிற நிலையில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து தில்லியின் வெற்றிக்கு வழிசெய்து கொடுத்தார் மார்கல். தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டீன், பிலாண்டருக்கு மத்தியில் கவனம் பெறாத மார்கல், இந்த ஐ.பி.எல்.-லை தன்வசமாக்கிக் கொண்டார். எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷன் போல எக்கச்சக்க வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ள தில்லி அணியில் மார்கல் தான் பெரிய அண்ணன். இளம் இந்திய வீரர்களுக்கு பல ஆலோசனைகள் சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறார் மார்கல். ஐ.பி.எல்.-ன் மகத்துவங்களில் இதுவும் ஒன்று. ஐ.பி.எல். இல்லாவிட்டால் மார்கல், இந்திய அணி வீரர்களுக்கு வித்தைகள் சொல்லிக்கொடுப்பதெல்லாம் சாத்தியமாகுமா?

நரைன்:

இந்த வருட ஐ.பி.எல்., மேற்கு இந்தியத் தீவு அணி வீரர்களுக்கானது. கெல், நரைன், பொலார்ட், ப்ராவோ, கூப்பர் என்று எல்லாமே.இ.வீரர்களும் ஜொலித்தார்கள். இத்தனை பேர்களில், நரைன் சென்ற வருட சேம்பியன் லீக்கிலேயே அதிரடியாகப் பேசப்பட்டவர். இவர் பந்தை யாராலும் தொடக்கூட முடியவில்லை. எந்தப் பயிற்சியாளரிடம் இத்தனை வித்தைகளைக் கற்றார் என்று தெரியவில்லை. ஆனால் நரைன், கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய அத்தனை தகுதிகளும் உள்ளவராக இருக்கிறார். 

ஒவ்வொரு வருட ஐ.பி.எல்.-லும் ஓர் இந்திய வீரருக்குத் திருப்புமுனையாக அமையும். தேசிய அணியில் இடம்பிடிக்க இதுவே முக்கிய காரணமாக அமைந்துவிடும். முதல் ஐ.பி.எல்.-லில் யூசுப் பதான், இரண்டாவது ஐ.பி.எல்.-லில் நெஹ்ரா , மூன்றாவது ஐ.பி.எல்.-லில் அஸ்வின், நான்காவது ஐ.பி.எல்.-லில் ராகுல் சர்மா என பல வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைவதற்கான கதவைத் திறந்தது, ஐ.பி.எல். இந்த வருடம் ரெஹானே தவிர சிகார் தவான், மந்தீப் சிங், பர்விந்தர் அவானா, டிண்டா போன்றோர் கவனம் பெற்றிருக்கிறார்கள்.   
 

Saturday, May 26, 2012

எனது இந்தியா! (விஜய நகரின் எழுச்சி !) - எஸ். ராமகிருஷ்ணன்....


கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து 56 கி.மீ. தூரத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் சிதைந்துபோன கலைக்கூடம்போல இருக்கும் ஹம்பி நகரம்தான், ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய விஜய நகரம்! வெற்றியின் நகரம் என்று புகழ்ந்து சொல்லப்படும் விஜய நகரம், கி.பி. 1336-ல் உருவாக்கப்பட்டது. பாரீஸ் நகரைவிட, இரண்டு மடங்கு பெரியது. உலகின் மிகப் பெரிய நகரங்களில் இரண்டாவது நகரமாகக் கருதப்பட்டது. விஜயநகரில் ஐந்து லட்சம் மக்கள் வசித்தனர் என்று, வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இன்று மிச்சம் இருப்பது அதன் சிதைந்துபோன இடிபாடுகள் மட்டும்தான். கோயில்கள், கல் மண்டபங்கள், கலைக்கூடங்கள் என்று, நகரின் மத்தியப் பகுதியில் சிதைவுகளை காணலாம். அந்தப் பகுதியின் பெயர்தான் ஹம்பி.ஹம்பி என்பது, கன்னடப் பெயரான ஹம்பேயில் இருந்து உருவானது. இது, துங்கபத்திரை ஆற்றின் பழைய பெயரான பம்பா என்பதில் இருந்து உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும் என்​கின்றனர். இந்த நகரை விஜயநகர அரசர்களின் குல​தெய்​வமான விருபாக்ஷரின் பெயரைத் தழுவி விருபாக்ஷபுரம் என்றும் அழைக்​கின்றனர்.இஸ்லாமிய மன்னர்கள், தெற்குப் பகுதியில் படை எடுத்து வந்த​போது, அவர்களை எதிர்ப்பதற்காக,குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்தனர். அப்படி உருவாக்கப்பட்டதே விஜய நகரப் பேரரசு.

தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிற​மொழி பேசும் ஆட்சியாளர்களிடம் முதன் முதலில் கைமாறியது விஜயநகரப் பேரரசின் உருவாக்கத்​தால்தான். முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கர் ஆகிய இருவரும், தங்களது குருநாதர் வித்​யாரண்யரின் வழிகாட்டுதல்படி கி.பி. 1336-ல் விஜயநகரப் பேரரசை நிறுவினர். இந்தப் பேரரசு உருவாக்கப்பட்டது குறித்து நிறையக் கருத்துக்கள் நிலவுகின்றன.'புக்கரும் ஹரிஹரரும் வாரங்கல் அரசரின் படைத் தளபதிகளாக இருந்தனர். முகமது பின் துக்ளக்​கோடு நடந்த சண்டையில் தோற்று, இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அங்​கிருந்து, டில்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டு இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுமாறு கட்டாயப்​படுத்தப்பட்டனர். அதற்கு ஒப்புக்கொள்ளாத இருவரும், தப்பி வந்து தங்களது குரு வித்யாரண்யர் வழிகாட்டுதலில் விஜய நகரப் பேரரசை நிறுவினர்’ என்று ஒரு கருத்து நிலவுகிறது.'காகதீய அரசில் போர்ப் பணியாற்றிய ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இருவரும், தங்களது குருவான சிருங்கேரி அரசபீடத்தைச் சேர்ந்த வித்யாரண்யரை, துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ஆனைக்குந்தி என்ற மலை அடிவாரத்தில் சந்தித்தனர். இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினர். சிறு படைகளை இணைத்து புதிய அரசை உருவாக்கலாம் என்ற யோசனையை வித்யாரண்யர் கூறி இருக்கிறார். அதன்படி உருவாக்கப்பட்டதே விஜயநகரப் பேரரசு’ என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இது எதுவுமே உண்மை இல்லை. ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருமே கர்நாடகத்தின் ஹொய்சால வம்சாவழி வந்தவர்கள் என்றும் ஒரு சாரர் அடித்துச் சொல்கின்றனர்.கி.பி. 1331-ல் தமது 36-வது வயதில் வித்யாரண்யர் சிருங்கேரி மடத்து பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது இயற்பெயர் மாதவர். கன்னட பிராமணரான இவர், விஜய நகரத்தைச் சேர்ந்த ராய வம்சத்துக்குக் குலகுருவாக இருந்தார். சர்வமத சங்கிரகம் என்ற நூலை இவர் எழுதி இருக்கிறார். சங்கமர், துளுவர், சாளுவர் மற்றும் ஆரவீட்டார் ஆகிய நான்கு குலத்தினர், விஜய நகரத்தை ஆட்சி செய்து இருக்கின்றனர். சாளுவர் மற்றும் ஆரவீட்டார் ஆகியோருக்கு தாய்மொழி தெலுங்கு. சங்கமர் மற்றும் துளுவர் ஆகிய இருவரும், கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள்.விஜயநகரப் பேரரசை நிறுவிய முதலாம் ஹரிஹரர், குருபா இனத்தைச் சேர்ந்தவர். இவர், சங்கம மரபைத் தொடங்கிய பாவன சங்கமரின் மூத்த மகன். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவது ஆகும். இவரது ஆட்சியின்போது, ஹொய்சாலப் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இவருடைய தம்பிகளில் ஒருவர்தான் புக்காராயன் எனும் புக்கர்.தனது சகோதரன் ஹரிஹரருடன் இணைந்து, விஜயநகரப் பேரரசை நிறுவியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஹரிஹரரின் மறைவுக்குப் பின், புக்காராயன் அரசன் ஆனார். புக்கரின் 21 ஆண்டு கால ஆட்சியில்தான், நாட்டின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. தென்னிந்திய அரசுகளைத் தோற்கடித்து, அந்தப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.


1360-ல் ஆற்காட்டுச் சம்புவராயரும், கொண்டவிடு ரெட்டிகளும், புக்காராயனிடம் தோற்றனர். 1371-ல் மதுரையில் இருந்த சுல்தானைத் தோற்கடித்து, பேரரசின் எல்லைகளை தெற்கே ராமேஸ்வரம் வரை விரிவுபடுத்தினார் புக்கர். இவர் காலத்தில்தான், பேரரசின் புகழ்பெற்ற தலைநகரமாக விஜய நகரம் மாறியது. 40 கி.மீ.(அவர் தூரத்தை லீக் என்ற அள வீட்டில் குறித்திருக்கிறார்) அளவு பெரியதாக இந்த நகரம் இருந்தது என்கிறார், பெர்னாவோ நுனிஸ் என்ற போத்துக்கீசியப் பயணி. இவர் ஒரு குதிரை வணிகர். இன்று உள்ள ஹம்பி, அதன் அருகில் உள் கமலாபுரா கிராமம், அங்கிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள ஹோஸ்பெட் ஆகியவையும் விஜய நகருக்குள் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார்.1420-ம் ஆண்டு இந்த நகரைப் பார்வையிட வந்த நிகோல கோண்டி என்ற இத்தாலியப் பயணி, இந்த நகரம் 60 மைல் சுற்றளவுகொண்டது என்று வியந்து கூறி இருக்கிறார். அதுபோலவே, 1522-ல் விஜயநகரத்துக்கு வந்த போர்த்துக்கீசிய யாத்ரீகர் பயாஸ், இது ரோம் நகரைப்போல அழகான பூந்தோட்டங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  துங்கபத்திரை ஆற்றின் அழகும், அதை ஒட்டி அமைக்கப்பட்ட மாடமாளிகைகளும் கண்ணைக் கவருகின்றன. 2892 கி.மீ. நீளமுள்ள கடற்கரைகொண்டது விஜய நகரம் என்று பாராட்டி இருக்கிறார்.14-ம் நூற்றாண்டில் தொடங்கி 200 ஆண்டு களுக்கும் மேலாக இந்த நகரம் புகழ்பெற்று விளங்கி இருக்கிறது. விஜய நகரப் பேரரசில் கிராம எல்லைகளைக் குறிக்க திரிசூல அடை யாளம் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நடப்பட்டன. அந்தக் கற்களை, பிற்காலத்தில் சிறுதெய்வமாக மக்கள் வழிபடத் தொடங்கினர் என்கிறார் பர்போசா. விஜயநகர ஆட்சியின்போது கோட்டைச் சுவருடன் உள்ள சிறிய நகரங்கள் பல உருவாக்கப்பட்டு இருந்தன. நகரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மனிதர்கள் வசித்தனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார் ரஷ்யப் பயணி நிக்கிதின்.விஜய நகரப் பேரரசின் படைப் பிரிவில் 24,000 குதிரைகளும், ஒரு லட்சம் வீரர்களும் இருந்தனர். ஒரு படை வீரனுக்கு மாதச் சம்பளம் ஐந்து வராகன். படைப் பிரிவின் தலைமை அதிகாரிக்கு ஆண்டுக்கு 47,000 வராகன். மெய்க்காப்பாளருக்கு ஆண்டுக்கு 600 முதல் 1,000 வராகன் வழங்கப்பட்டது.


விஜய நகர அரண்மனையில் மல்யுத்தம் புகழ்பெற்று விளங்கியது. அங்கே, ஆயிரம் மல்லர்கள் இருந்தனர். அரசனின் அனுமதியோடு வரையறை செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி இவர்கள் மற்போர் செய்வது வழக்கம். புக்கரின் மகனான குமார கம்பணன் காலத்தில், துருக்கி சுல்தானின்  தளபதியாகஇருந்த அலாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை நகரம் கவனிப்பு இல்லாமல் இருந்தது. 1371-ல் குமார கம்பணன்,  மதுரை மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார். குமார கம்பணரின் மனைவி கங்கம்மா தேவி எழுதிய 'மதுரா விஜயம்’ என்ற சம்ஸ்கிருதக் காவியம் இந்த நிகழ்ச்சியை விரிவாக வர்ணிக்கிறது. அதன் பிறகு விஜய நகரத்துக்கு, மதுரை கப்பம் கட்டியது.இந்தக் காலகட்டத்தில், தெலுங்கர்களும் கன்னடர்களும் அலுவலர்களாகவும் போர் வீரர்​களா​கவும் வணிகர்களாகவும். கூலி ஆட்களாகவும் தமிழ்​நாட்டில் குடியேறினர்.விஜய நகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் நிர்வாக முறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. சோழர் காலத்தில் மண்டலம், கோட்டம்,  நாடு, ஊர் என்று பிரிக்கப்பட்டு இருந்தன. விஜய நகர ஆட்சிக் காலத்தில், ராஜ்யம், கோஷ்டம், சீமை, ஸ்தலம் எனப் பிரிக்கப்பட்டன. இவற்றில், நாடு என்பதே சீமை என அழைக்கப்பட்டது. இன்றும்கூட, உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களை நாட்டுச் சரக்கு என்றும் வெளியூர்ப் பொருட்களை சீமைச் சரக்கு என்றும் கூறுகின்றனர். அதன் காரணமாகவே, வெள்ளைக்காரர்களை சீமைக்காரர் என்று அழைத்தனர். வெள்ளைக்காரன் விற்பனை செய்த பொருட்கள் சீமைத் துணி, சீமைச் சாராயம், சீமைச் சரக்கு என அழைக்கப்பட்டன.தமிழகத்தில் பிற்கால சோழர் காலம் தொட்டு கிராமத் தன்னாட்சி முறை நடைமுறையில் இருந்தது. வரி வாங்கவும், கோயில் குளங்களைப் பராமரிக்கவும் பஞ்ச காலத்தில் வரி தள்ளுபடி செய்யவும், கோயில் நிலங்கள், பொதுச் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வகிக்கவும் பாசன வசதி, சந்தை, தானிய சேமிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை தானே திட்டமிட்டு வகுத்துக்கொண்டு உள்ளுர் வருவாயை உரு​வாக்கிக்கொள்ளும் உரிமை கிராமத்துக்கு இருந்தது.

விகடன் 

Friday, May 25, 2012

ஐ.பி.எல் - சர்ச்சைகளும் கேள்விகளும்

முதல் சர்ச்சை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக 5 வீரர்கள் சஸ்பெண்ட் செயப்பட்டுள்ளனர். டி.பி.சுதீந்தர் (டெக்கான் சார்ஜர்ஸ்), மோனீஷ் மிஸ்ரா (புணே வாரியர்ஸ்), அமீத் யாதவ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ஸ்ரீவஸ்தவா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), அபிநவ் பாலி ஆகியோர். இண்டியன் டி.வி. என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சூதாட்டம் தொடர்பாக ரகசிய நடவடிக்கையொன்றில் ஈடுபட்டது. எப்படி பாகிஸ்தான் வீரர்களை ஆசை வார்த்தைகள் சொல்லி தி நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்ற இங்கிலாந்து பத்திரிகை மடக்கியதோ அதுபோல கிரிக்கெட் வீரர்களிடம் நோ பால், வைட்களை வீச வேண்டுமென்று கூறி அவர்களைச் சிக்கவைத்துவிட்டது இண்டியன் டி.வி. ஐ.பி.எல். கிரிக்கெட், ரஞ்சிக் கோப்பை, உள்ளூர்ப் போட்டி என எந்த ஆட்டத்தில் வேண்டுமானாலும் நீங்கள் சொன்னபடி செயல்படத் தயாராக இருப்பதாக வீரர்கள் ஒப்புக் கொண்டதோடு, இந்திய கிரிக்கெட்டில் பெண்களை வைத்தும் காரியங்கள் சாதிக்கப்படுகின்றன என்றும் பேசியிருப்பதாக அறியப்படுகிறது. மேலும், ஐ.பி.எல்.லில் ஏலத் தொகையை விடவும் அதிகத் தொகை, கறுப்புப் பணமாக வீரர்களுக்கு வழங்கப்படுவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது. இளம் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில், எல்லாமே நேர்மையாக நடக்கும் என்று நம்ப முடியாது. குறிப்பாக, ஐ.பி.எல். வந்த பிறகு இந்திய கிரிக்கெட் பல சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறது. இதிலுள்ள ஒரு பிரச்னை, இதுபோன்ற முறைகேடுகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு இல்லாததுதான். வீரர்களின் தவறுக்குத் துணை போகும் கிரிக்கெட் நிர்வாகிகள், ஐ.பி.எல். அணிகளுக்குத் தண்டனைகள் அளிக்கப்படுவதில்லை. இதே பிரச்னைகள் அடுத்த வருடம் தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஸ்ரீனிவாசனும் ராஜிவ் சுக்லாவும் என்ன செய்யப்போகிறார்கள்?

2வது சர்ச்சை: மும்பையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா வென்றது. ஆட்டம் முடிந்தபின் மைதானத்துக்கு வந்த ஷாருக்கான், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார் என்று குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஐந்து ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொண்டனர். சுமார் 20 முதல் 25 பாதுகாப்பு அதிகாரிகள் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். இதனால் நான் கோபமடைந்தேன்" என்று தம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளார் ஷாருக்கான். இவர் செயலில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. ஷாருக் மைதானத்துக்குள் நுழைந்து தீவிரவாதச் செயலில் எதுவும் ஈடுபடப் போவதில்லை. மும்பை வாரியம், ஷாருக்கானுக்குத் தரவேண்டிய மரியாதையை நிச்சயம் அளித்திருக்க வேண்டும். மேலும், இந்தப் பிரச்னையை நான்கு சுவருக்குள் முடித்திருக்கலாம். ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியமேயில்லை. அதை விடக் கொடுமை, ஐந்தாண்டு தண்டனை. ஷாருக் செய்ததுதான் தவறு என்றால் அபராதம் விதித்திருக்கலாம். எதற்காக இவ்வளவு தூரம் கொண்டு போய் பகைமையை வளர்த்திருக்கவேண்டும்?

3வது சர்ச்சை: பெங்களூருவிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஐ.பி.எல். வீரர் லூக் போமெர்ஸ்பாச், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றியைக் கொண்டாடியபோது, அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார், பிரச்னைகளை ஏற்படுத்தினாரென்று அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமில்லையென்றாலும் ஐ.பி.எல்.லில் நடக்கும் உயர்ரக விருந்துகளால் ஏற்படும் விளைவுகளை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச கிரிக்கெட் மேட்சுகளின்போதும், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டதுண்டு. கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஏராளமான பணமும் புகழும் அவர்களை இந்நிலைக்குத் தள்ளிவிடுகிறது. கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவது என்பது புராதன விஷயமாகி விட்டது. சச்சின், திராவிட் போன்று பண்பான கிரிக்கெட் வீரர்களை இக்காலத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.உலகக்கோப்பைக்கு உள்ள ஓர் அந்தஸ்து ஐ.பி. எல்.க்குக் கிடைத்திருக்கிறது. பணமும் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகமாகும்போது பி.சி.சி.ஐ. மிகக் கவனத்துடன் நடக்க வேண்டியிருக்கிறது. ராணுவ ஒழுங்கு இல்லாவிட்டால் இதுபோன்ற பிரச்னைகளால் ஐ.பி.எல். சின்னாபின்னமாகிப் போகவும் வாய்ப்பிருக்கிறது. ரசிகர்களுக்கு ஐ.பி.எல். மேட்சுகளே எல்லாவிதமான பரபரப்புகளையும் அளித்துவிடுகின்றன. அதைத் தாண்டிய பரபரப்பும், சர்ச்சையும் ஐ.பி.எல்.க்கு அநாவசியம். வெளிப்படையான, கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவந்தால் மட்டுமே ஐ.பி.எல். நூறாண்டு வாழும். இல்லாவிட்டால் கண்முன்னே சரிந்துபோகக்கூடிய அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.

கேர்ள் ஃப்ரெண்டுக்காக அடித்த சிக்ஸர்

செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடிக்கும் அளவுக்கு ஏராளமான சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டாலும் இந்த வருட ஐ.பி.எல். சூப்பர் டூப்பர் ஹிட். ரசிகர்கள் அள்ளிக்கொண்டார்கள். இந்தமுறை அதிக மேட்சுகள் நடந்தாலும் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் சோர்வே ஏற்படவில்லை. காரணம், மிகவும் பரபரப்பாக, கடைசி ஓவர் வரை சென்றன பல மேட்சுகள்.

ஆரம்பத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், ஃப்ளே ஆஃப்-க்குத் தகுதி பெறாது என்று சி.எஸ்.கே. அணியிலேயே பலருக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. கடைசி மேட்சில், பஞ்சாப்புடன் தோற்றவுடன் தோனியும் ரைனாவும் அவரவர் ஊருக்குச் சென்று விட்டார்கள். சென்னை அணி வீரர்களும் ஹோட்டலில் தங்காமல் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். சென்ற ஞாயிறன்று, பெங்களூருவை டெக்கான் தோற்கடித்தவுடன்தான் நிலைமை மாறிப்போனது. 

இந்த ஐ.பி.எல்.லில்தான் அணியின் நலனுக்காக கேப்டன் பதவியை சிலர் விட்டுக்கொடுத்தார்கள். முக்கியமாக பெங்களூரு அணியில், முரளி தரனுக்காக அணியிலிருந்து விலகினார் வெட்டோரி. சங்ககரா, கங்குலி, கில்கிறிஸ்ட் ஆகியோரும் சில மேட்சுகள் ஆடாமல் இருந்தார்கள். ஐ.பி.எல்.-லில் எல்லா மேட்சுகளிலும் ஆடிய பெருமையைத் தொடர்ந்து ரைனா தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஐந்து முறை ஃப்ளே ஆஃப்-க்குச் சென்ற ஒரே அணி, சென்னை மட்டுமே. ஆனாலும், சென்னை அணியில் உள்ள பல பலவீனங்கள் இன்னமும் செப்பனிடப்படாமலேயே இருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாகியும் இன்னமும் சென்னை அணியால் உருப்படியான ஓர் இந்திய வேகப்பந்து வீச்சாளரைத் தேடிக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பெங்களூரு அணியில் 3 இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் இடம்பெறும்போது சென்னையின் நிலைமை தொடர்ந்து பரிதாப நிலையிலேயே இருக்கிறது. மேலும், மிகவும் சுமாரான ஸ்பின்னரான ஜகாதியை வைத்துக் கொண்டே இத்தனை நாளும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்பின்னருக்குமா நாட்டில் தட்டுப்பாடு?

சென்ற வருடம் வார்னே விடைபெற்றார். இந்த வருடம் கில்கிறிஸ்ட் டாட்டா காண்பித்து விட்டார். கிரிக்கெட்டில் ஐ.பி.எல். ஓய்வு என்று புதிதாக ஒன்று உருவாகியிருக்கிறது. 

மலிங்கா பந்தில் பவுண்டரி அடிப்பதே கடினம். இந்த நிலையில் மனோஜ் திவாரி ஒரு சிக்ஸர் அடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். பேட்டி எடுத்தபோதுதான் தெரிந்தது, இந்த சிக்ஸருக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்று. என்னால் மலிங்காவின் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்கவே முடியாது என்று என் கேர்ள் ஃப்ரெண்ட் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்காக அடித்த சிக்ஸர்தான் இது," என்றார் திவாரி.

பஞ்சாப் அணியைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா தனி முத்திரையைப் பதித்துள்ளார். தில்லி மாநிலத்தைச் சேர்ந்த அவானா ஏற்கெனவே ரஞ்சி ஆட்டங்கள் மூலமாக கவனத்தை ஈர்த்தவர். இப்போது ஐ.பி.எல். லிலும் தம்மை நிரூபித்திருக்கிறார். ஸ்பின்னர்களில் மேற்கு இந்தியத் தீவினைச் சேர்ந்த நரைன் மிகப் பெரிய புரட்சியையே உருவாக்கிவிட்டார். வார்னேவுக்குப் பிறகு அதிரடி மனோபாவம் கொண்ட ஒரு ஸ்பின்னராக இருக்கிறார் நரைன். இவ்வளவு துல்லியமாக ஒரு ஸ்பின்னரால் பந்துவீசமுடியுமா! என்று ஒவ்வொரு மேட்சிலும் ஆச்சர்யப்படுத்தினார். 

ஆட்டோமொபைல் - என்ன எங்கே எப்படி படிக்கலாம்?


'என் பையனைப் பத்திக் கவலையில்லீங்க... இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிக்கிறான். கேம்பஸ்ல செலக்ட் ஆகி ஏதாவதொரு சாஃப்ட்வேர் கம்பெனியில சேர்ந்து, கை நிறைய சம்பாதிப்பான். சரி, உங்க பையன் எந்த குரூப்?’ ஏதோ லெதர் டெக்னாலஜியாம்!’ - இதுதான் அந்த அப்பாவித் தந்தையின் பதில். எந்த இன்ஜினீயரிங் கோர்ஸ் படித்தாலும், அது சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்குத்தான் எனும் எண்ணம் நம் எல்லாருக்கும் வந்துவிட்டது. ''உலகின் எந்த நாட்டுக்குப் போனாலும், அங்கு ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர், தன்னை ஐ.ஐ.டி மாணவர் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்வார். தமிழகத்தின் மிகச் சிறந்த மாணவர்கள் கூட, அதிகபட்சமாக அண்ணா பல்கலைக் கழகத்துக்குள்ளேயே, தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொள்கின்றனர். உலகின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஐ..ஐ.டி பற்றிய விழிப்பு உணர்வு இங்கு மிக மிகக் குறைவு. இதனால், நஷ்டம் நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும்தான்!

உலகின் அத்தனை முன்னணி நிறுவனங்களும் இங்கே கடை பரப்பி வைத்து காத்திருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்களைத் தவிர எலெக்ட்ரிக்கல், மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக்கல் அண்டு கம்யூனிகேஷன், கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன'.

IIT  (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி)

ஐ.ஐ.டி சென்னை, மும்பை, டெல்லி, காரக்பூர் (கொல்கத்தா) உட்பட ஏழு இடங்களில் உள்ளது. மேலும், புதிதாக ஒன்பது இடங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. பி.இ / பி.டெக் / பி.ஆர்க் என ஆரம்பித்து போஸ்ட் டாக்ட்ரேட் வரையில், தொழில்நுட்பம் சம்பந்தமான அத்தனை படிப்புகளுக்கும் மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி.IIT - JEE, JMET, GATE  என படிப்புகளுக்கு ஏற்றவாறு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும். ஐ.ஐ.டி என்பது ஒரு இரும்புக்கோட்டை என்ற மாயை பலரது மனதில் பதிந்துவிட்டது. ஐ.ஐ.டியில் சேர்வது அவ்வளவு கடினமான காரியமும் அல்ல. அதே சமயம், சுலபமான விஷயமும் அல்ல! குறைந்தபட்சம் எட்டாவது படிக்கும் போதிலிருந்தே தங்களை மாணவர்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மாணவர்கள் அனைவருக்கும் ஐ.ஐ.டி பற்றி ஒரு புரிதல் வரும்போது, தமிழகத்தின் வளர்ச்சியில் ஆச்சரியத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

CIPET  (சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் அண்டு டெக்னாலஜி)

சிப்பெட், இந்தியாவில் பதினைந்து இடங்களில் உள்ள கல்வி நிறுவனம். சென்னையில் இருப்பதுகூட, நம்மில் பலருக்குத் தெரியாது. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இந்த நிறுவனம், மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறையின் கீழ் வருகிறது. இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக் தான் பரம்பொருள். ஆட்டோமொபைல் துறையிலும் பிளாஸ்டிக்கின் தேவை இன்றியமையாதது. டிப்ளமோ, போஸ்ட் டிப்ளமோ, பி.ஜி. டிப்ளமோ, யு.ஜி. பி.ஜி. பி.எச்டி. என பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் 'அ முதல் ஃ வரை’ கற்றுத் தரும் நிறுவனம் இது.இதைத் தவிர்த்து, குறுகிய கால சான்றிதழ் படிப்புகளும், அப்கிரேடேஷன் படிப்புகளும் இங்கு ஏராளமாக உள்ளன. இன்ஜினீயரிங் பின்புலம் இல்லாதவர்கள்கூட பி.எஸ்சி கெமிஸ்டிரி டிகிரி முடித்திருந்தால், அதற்கேற்ற படிப்புகளில் இங்கு சேர முடியும். பி.எஸ்சி முடித்தவர்களுக்கு 'பிஜி டிப்ளமோ இன் பிளாஸ்டிக் பிராஸசிங் அண்டு டெஸ்டிங்’ (PGD-PPT)  என்ற ஒன்றரை வருடப் படிப்பு இருக்கிறது.

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்ஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு 'போஸ்ட் டிப்ளமோ இன் பிளாஸ்டிங் மோல்டு டிசைன்’ என்ற ஒன்றரை வருடப் படிப்பை உருவாக்கியுள்ளனர். இதைத் தவிர, 'டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்டு டெக்னாலஜி’ (DPMT),'டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி’ (DPT) போன்ற படிப்புகளும் உள்ளன. யிணிணி JEE (Joint Entrance Exam) நுழைவுத் தேர்வு எழுதியே இக்கல்லூரியில் சேர முடியும். ஜூன் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பங்கள் தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.cipet.gov.in என்ற வலைதளத்தைப் பார்வையிடவும்.

CITD (சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டூல் டிசைனிங்)

டூலிங் என்ற துறை பற்றி இங்கு விபரமறிந்தவர்கள் மிகச் சொற்பம். ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஸ்பூன், டம்ளரில் இருந்து கார் பானெட் வரை டூலிங்தான் எல்லாமே. இது டையிங் (Dyeing)  மோல்டிங் (Moulding)  என்றும் அழைக்கப்படும். டூலிங் படித்தவர்களுக்கு உலகம் முழுவதிலும் மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள CITD இந்த டூல் டிசைனிங் படிப்புக்கான ஒரு முக்கிய நிறுவனம்.மூன்று வாரம் முதல் இரண்டு மாதம் வரையிலான காலத்தில் கற்றுத் தரக்கூடிய, இருபத்தைந்து குறுகிய கால படிப்புகளையும் இவர்கள் வழங்குகின்றனர். CAD / CAM, ஆட்டோமேஷன், VLSI - Very Large Scale Integration, Microcontrollers  எனப் பல தளங்களில் இந்த படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. பி.இ. /பி.டெக் மாணவர்களும், டிப்ளமோ மாணவர்களும் இதில் சேரலாம். ஏப்ரல் முதல் ஜூலை வரை, டிசம்பரில் இருந்து ஜனவரி வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு புது பேட்ச் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கான கல்விக் கட்டணம் ரூ.3,500 முதல் 10,500 வரை. தேர்ந்தெடுக்கும் கோர்ஸுக்கு ஏற்ப மாறுபடும்.இனி வரும் காலங்களில் வெறும் பி.இ பட்டம் மட்டும் உதவாது. இது மாதிரியான சிறப்புக் கல்விதான் மற்றவரிடம் இருந்து உங்களை முன்னிலைப்படுத்தும். மேலும் விபரங்களுக்கு www.citdindia.org  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

NTTF (நெட்டூர் டெக்னிக்கல் டிரெய்னிங் ஃபவுண்டேசன்)

என்.டி.டி.எஃப் வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல, இது தொழிற்சாலையும்கூட! இந்தியாவில் உள்ள பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட, தங்கள் வேலைகளை இவர்களிடம்தான் அவுட்சோர்ஸ் முறையில் அளிக்கின்றனர். அங்கே தயாரிப்பு வேலைகளைச் செய்வதெல்லாம் இதன் மாணவர்களே! அவர்களின் அந்த அனுபவம், படிப்பு முடிந்ததும் அவர்களுக்கு கை மேல் வேலையைக் கொண்டு வந்து சேர்க்கும். இந்தியா முழுவதும் பத்தொன்பது மையங்களில் செயல்படும் இந்நிறுவனம், தமிழகத்தில் வேலூர், தூத்துக்குடி மற்றும் கோவையில் உள்ளன.இங்கு டிப்ளமா, போஸ்ட் டிப்ளமோ, பி.ஜி. டிப்ளமோ, பிஜி தவிர்த்து, சான்றிதழ் படிப்புகளும், குறுகிய காலப் படிப்புகளும், தொலை தூரப் படிப்புகளும் உள்ளன.பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான படிப்புகளும் இங்கு உண்டு. பள்ளித் தேர்வு மதிப்பெண்களுடன் NTTF நடத்தும் தனி நுழைவுத் தேர்விலும் தேர்ச்சியடைய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.nttftrg.com  என்ற வலைதள முகவரியில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். டிசைன் சம்பந்தமான படிப்புகளுக்கு இந்தியாவில் அதிகமான அளவில் கல்லூரிகள் இல்லாதது வருத்தப்படக்கூடிய விஷயம். அப்படியிருக்கும் ஒரு சில கல்லூரிகளில்கூட ஆட்டோமொபைல் டிசைன் படிப்பு கிடையாது. இன்டஸ்ட்ரியல் டிசைன் கோர்ஸ்கள் தான் உள்ளன. டிசைன் படிப்புகளுக்கும் ஐ.ஐ.டிதான் பெஸ்ட். M.Des (Master of Design)  படிக்க (CEED-Common Entrance Exam for Design)  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதுகலை படிப்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் உண்டு.

NID (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்)

ஆமதாபாத்தில் உள்ள இது ஒரு மிக முக்கியமான நிறுவனம். ப்ளஸ் டூ மாணவர்களுக்கு நான்கரை வருட டிப்ளமோ படிப்பும், டிகிரி முடித்தவர்களுக்கு பி.ஜி டிப்ளமோவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் எந்தப் பல்கலைக் கழகத்தோடும் சேராத ஒரு தன்னாட்சி அமைப்பு. அதனாலேயே இங்கு பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) மட்டும் கொடுக்கப்படுகிறது.ஜி.டி.பி.டி. (GDPD - Graduate Diploma Programme in Design)பி.ஜி.டி.பி.டி.(PGDPD- Post graduate diploma in Design) இன்டஸ்ட்ரியஸ் டிசைன், கம்யூனிகேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் என பல பிரிவுகளில் இந்த டிப்ளமோ வழங்கப்படுகிறது. இந்த வருட சேர்க்கைக்கான காலம் முடிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் அக்டோபரிலேயே சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பமாகிவிடும். மேலும் விபரங்களுக்கு ஷ்ஷ்ஷ்.ஸீவீபீ.மீபீu என்ற வலைதளத்தைக் காணவும்.ஐ.ஐ.டி. என்.ஐ.டி. தவிர்த்து டிசைனிங் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு வெளிநாடு செல்வது புத்திசாலித்தனமான செயல். ஐரோப்பாவில் சில நாடுகளிலும், கனடாவிலும் கல்லூரிகள் அதிகம். ஆனால், மக்கள் தொகை குறைவு. எனவே, திறமையான மாணவர்களை முழுவதுமாக ஸ்பான்ஸர் செய்து படிக்க வைக்க பல கல்லூரிகள் உள்ளன.  


விகடன்  

Thursday, May 24, 2012

ஒலிம்பிக்-ஒரு தலைமுறைக்கான உத்வேகம்!

மிரட்டும் லண்டன்!


மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரம் என்பது லண்டனுக்குக் கிடைக்கவிருக்கும் கௌரவம்.  மெக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள் கூடும் இடமாக லண்டன் ஒலிம்பிக் சாதனை படைக்கும் என்பது ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்பார்ப்பு. 'ஒரு தலைமுறைக்கே உத்வேகம் கொடு’ (Inspire a Generation) - இதுதான் லண்டன் ஒலிம்பிக்கின் பஞ்ச் வாசகம்! 2005-ம் ஆண்டு '2012 ஒலிம்பிக் போட்டிகள்’ நடத்துவதற்கு லண்டன் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே, லண்டனின் பாதாள ரயில்களில் குண்டுகள் வெடித்தன. அதிர்ந்துபோன  இங்கிலாந்து அரசு ஒலிம்பிக் பாதுகாப்புச் செலவுகளுக்கு மட்டுமே பல்லாயிரம் கோடிகளைச் செலவழித்துவருகிறது.ஒலிம்பிக் பார்வையாளர்களைக் கூடுதலாக ஈர்க்க, உலக அதிசய ஈஃபிள் கோபுரம்போலவே லண்டனில் ஒரு வித்தியாசமான கோபுரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். 376 அடி உயரத்தில் சுருள் வடிவத்தில் அமைந்திருக்கும் இதற்கு 'ஒலிம்பிக் கோபுரம்’ என்றே பெயர். இந்திய ஓவியர் அனீஷ் கபூர் வடிவமைத்திருக்கிறார். 455 வளைவான சுருள் படிக்கட்டுகளுடன் இருக்கும் இந்தக் கோபுரத் துக்கு உள்ளே உணவகங்கள் உண்டு. மைதானங்களின் அருகி லேயே இருக்கும் இந்தக் கோபுரங்களில் ஏறி ஒலிம்பிக் போட்டி களை ரசித்தபடியே உணவருந்தலாம்.  

ஒலிம்பிக் போட்டிகளின் பிரமாண்ட தொடக்க விழா மற்றும் இறுதி விழா நிகழ்ச்சிகளை அரங்கேற்றும் பொறுப்பு 'ஸ்லம் டாக் மில்லியனர்’ பட இயக்குநர் டேனி பாய்ல் தலைமையிலான குழுவினரின் பொறுப்பு. ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ டேனியல் க்ரேய்க் நடிக்கும் ஐந்து நிமிட ஸ்டேஜ் ஷோ, ஷேக்ஸ்பியரின் 'தி டெம்பஸ்ட்’ நாடகத்தை மையமாகக்கொண்டு இசை நிகழ்ச்சிகள், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட உலகின் பிரபல இசைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் என கலர்ஃபுல் மேளாவாக நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க 100 கோடிப் பேர் கண்டு ரசிப்பார்கள் என்பது தற்போதைய கணக்கு. தொடக்க விழாவுக்கான ஒரு டிக்கெட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 1.7 லட்சம் ரூபாய்!லண்டனின் 200 பழமையான பாரம்பரியமிக்க கட்டடங்களை இடித்து வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டுக் கிராமத்தை அமைத்திருக்கிறார்கள். மைதானங்களை அதிகபட்சம் 20 நிமிடங்களில் வீரர்களை அடைந்துவிடும் வசதிக்காகவே பாரம்பரியக் கட்டடங்களைக்கூடத் தியாகம் செய்திருக்கிறது லண்டன்!விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பத்திரிகை யாளர்கள் என ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமாக லண்டனுக்குள் வரும் எவரும் இங்கிலாந்து குடிமக்களை 'கரெக்ட்’ செய்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற உத்தரவாதம் பெற்ற பிறகே, விசா கொடுத்திருக்கிறது இங்கிலாந்து அரசு. இதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டிகளுக்கு வந்த பலரும் காதல் வலையில் சிக்கியோ அல்லது விரித்தோ இங்கிலாந்தின் மருமகன்/மருமகள் ஆக நிரந்தரக் குடியுரிமை பெற்று மக்கள் தொகையை ஏகமாக அதிகரித்துவிட்டார்கள் என்பதால்தான் இந்த உஷார் உத்தரவாத நடவடிக்கை!1928 முதல் ஒலிம்பிக் போட்டிகளின் ஸ்பான்சராக இருக்கும் கோக் நிறுவனம் 2012 ஒலிம்பிக்கில் 2.30 கோடி பாட்டில்கள், டின்களை விற்பனை செய்யத் திட்டமிட்டு இருக்கிறது. ஒலிம்பிக் மைதானத்தில் பணிபுரியும் ஒரு கோக் நிறுவன ஊழியர் தினமும் 100 கேஸ் பாட்டில்களைச் சுமந்து செல்ல வேண்டியிருக்குமாம்.

விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகே அமைந்திருக்கும் வீடுகளின் மொட்டை மாடிகளில் ஏவுகணைகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் லண்டனை வளைய வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு 500 அடிக்கும் ஒரு காவல் நிலையம், கழிப்பறைகளைத் தவிர மற்ற அனைத்து இடங் களிலும் ரகசியக் கண்காணிப்பு கேமரா என உச்சகட்ட உதறலில் இருக் கிறது லண்டன் பாதுகாப்புப் படை!

இந்த ஒலிம்பிக்கின் உயர்வெளிச்சத் துளிகள்...


2008 ஒலிம்பிக்கில் அமெரிக்கா 110 பதக்கங்களுடன் முதல் இடம் பிடிக்க, ஒலிம்பிக்கை நடத்திய சீனா 100 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்தது. ரஷ்யா மூன்றாம் இடம். இங்கிலாந்துக்கு நான்காவது இடம். இம் முறை போட்டிகள் லண்டனில் நடப்பதால்,  அமெரிக்காவுக்கு இங்கிலாந்து கடும் நெருக்கடி கொடுக்கலாம்!

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வேட்டையாடிய அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் இந்த முறையும் செம ஃபார்மில் இருக்கிறார். ஒலிம்பிக் பந்தயங்களில் மட்டுமே இது வரை 16 பதக்கங்களை வென்றிருக்கும் ஃபெல்ப்ஸ், லண்டன் ஒலிம்பிக்கில் 3 பதக்கங்கள் வென்றாலே, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்றவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்!

100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் ஒலிம்பிக் சாதனை படைத்திருப்பவரும், உலக சாம்பியனுமான உசேன் போல்ட் தான் லண்டன் ஒலிம்பிக்கின் மாஸ் ஹீரோ. இவர் பங்கேற்கும் தடகளப் போட்டிகளைக் காணத்தான் லட்சக்கணக்கான மக்களால் லண்டன் களைகட்டும் என்கிறார்கள். 100 மீட்டரை 9.58 விநாடிகளிலும், 200 மீட்டரை 19.19 விநாடிகளிலும் கடந்து சாதனை படைத்த உசேன், இந்த ஒலிம்பிக்கில் 100, 200 மீட்டர்களை தலா 9.54, 19.00 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைப்பேன் என்கிறார்!மலேசியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை நுர் சுர்யானி டெய்பி எட்டு மாதக் கர்ப்பிணியாகப் போட்டியில் கலந்துகொள்வார். ''15 நிமிடங்கள்தான் போட்டி நடக்கும். அப்போ மட்டும் வயித்துக்குள் ஆடாம, அசையாம இருக்கணும்னு பாப்பாகிட்ட சொல்லியிருக்கேன்!'' என்கிறார் நுர் சுர்யானி வயிற்றை மென்மையாகத் தடவிக்கொடுத்துக்கொண்டே. ஜப்பானின் வில் வித்தை வீரர் ஹிரோஷிதான் இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் மிக மூத்த வீரர். அவருக்கு வயது 70. இந்த ஒலிம்பிக்கிலேயே மிகவும் உயரம் குறைந்த பெண்ணாகக் கலந்துகொள்ளும் சீனாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லி லுவின் உயரம் 1.36 மீட்டர். இவர் 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்பது கூடுதல் தகவல்!  

நம்பிக்கை இந்தியர்கள்!


கிருஷ்ண பூனியா, வட்டு எறிதல்:  2010 டெல்லி காமென் வெல்த் போட்டியில் வட்டு எறிதலில் தங்கம் வென்றவர். உலக சாம்பியன் ஆஸ்திரேலிய வீராங்கனை டேனி சாமுவேல்ஸுக்கே சவால்விட்ட கிருஷ்ண பூனியா, கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் தீவிரப் பயிற்சியில் இருக்கிறார். 'தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் என் மூலம் கிடைக்கும்!’ என்பது கிருஷ்ண பூனியாவின் சபதம்.

சாய்னா நெய்வால், பேட்மிட்டன்: 13 முறை உலக சாம்பியனான சீனாவின் ஸியாங் குவாபோ, 'சாய்னா தான் சீன வீராங்கனைகளுக்கு ஒரே அச்சுறுத்தல்!’ என்று சொல்லியிருப்பது அந்த இந்தியாவின் பதக்க நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது!

மேரி கோம், குத்துச் சண்டை: முதல்முறையாக ஒலிம்பிக்கில் இணைந்திருக்கும் பெண்கள் குத்துச்சண்டையில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு!

'சுட்டேபுடுவோம்’ கேங்க்: துப்பாக்கி சுடுதல் பிரிவில் மொத்தம் 11 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் வேட்டையில் இருக்கிறார்கள். 2008 ஒலிம்பிக்கில் பதக்கம் தட்டிய  அபினவ் பிந்த்ரா, ககன் நரங், ரஞ்சன் சிங் சோதி, மனவ்ஜித் சிங் சோதி என ஆண்கள் பிரிவிலும் ஹீனா, அன்னு ராஜ் என பெண்கள் பிரிவிலும் வலுவான ப்ளேயர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் பதக்கம் உத்தரவாதம்!

விஜேந்தர் சிங், குத்துச்சண்டை: 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர், டெல்லி காமென் வெல்த் போட்டியில் அரையிறுதியிலேயே  தோல்வியடைந்தார். கடும் விமர்சனத்துக்கு உள்ளான விஜேந்தர், அதன் பிறகு தனது பயிற்சி நேரத்தை நாளன்றுக்கு 10 மணி நேரமாக அதிகரித்தார். கஜகஸ்தான் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் வென்று கடைசித் தருணத்தில் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.  

தீபிகா குமாரி, வில்வித்தை: கடந்த மாதம் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று உலகின் நம்பன் ஒன் வீராங்கனையாக உயர்ந்துஇருக்கும் தீபிகா குமாரி, நிச்சயம் தங்கம் தட்டுவார் என்பது பாசிட்டிவ் எதிர்பார்ப்பு!


விகடன்  
  

Wednesday, May 23, 2012

எனது இந்தியா! (டெல்லி !) - எஸ். ராமகிருஷ்ணன்....


க்ராவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை இடம் மாற்றிய ஷாஜகானால்தான் நகரம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. ஷாஜகா​னாபாத் என்ற புதிய நகரை உருவாக்கினார் ஷாஜகான். அவரது மகள் சாந்தினி சௌக் பகுதியை வடிவமைத்தார். இவரால்தான் அஜ்மீர் கேட், டெல்லி கேட், காஷ்மீரி கேட், துருக்மான் கேட் என நான்கு பெரிய நுழைவாயில்கள் டெல்லியில் கட்டப்பட்டன. செங்கோட்டையைக் கட்டியதும் ஷாஜகானே. 254 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்தக் கோட்டையை 1638-ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1648-ல் கட்டி முடித்தார். இந்தக் கோட்டைக்குள் அரசரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மட்டுமே வசித்தனர். பகதூர் ஷா காலம் வரை டெல்லி செங்கோட்டை, அரசாள்பவர்களின் அடையாளமாக இருந்தது. 1857-ம் ஆண்டில் சிப்பாய் புரட்சியின்போது, பிரிட்டிஷ் ராணுவத்தால் இந்தக் கோட்டை ஆக்கிரமிக்கப்பட்டு, ராணுவத் தலைமை இடமாக மாற்றப்பட்டது. இங்குதான் பகதூர் ஷா விசாரணை செய்யப்பட்டார். மேலும், இங்கே செயல்பட்ட ராணுவ நீதிமன்றத்தில், இந்திய தேசிய ராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு 1945-ம் ஆண்டு நவம்பர் மாதம் தூக்கில் இடப்பட்டனர்.பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கல்கத்தா​வைத்தான் தலைநகரமாக வைத்து இருந்தனர். 1905-ல் கர்சன் பிரபு காலத்​தில், வங்காளத்தை இரண்டாகப் பிரித்​தாளும் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதையட்டி, கல்கத்தாவில் ஏற்பட்ட கலவரம் நிரந்தரமான ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. அப்போதுதான், தலைநகரை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உருவானது. அதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தனர். 1911-ம் ஆண்டு, ஐந்தாம் ஜார்ஜ் மன்னராகப் பதவி ஏற்றதை முன்னிட்டு, மாபெரும் தர்பார்  டெல்லியில் நடந்தது. இதில், இந்தியா முழுவதும் இருந்து மகாராஜாக்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள் என, ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஒரு லட்சம் பார்வையாளர்கள், மன்னர் முடிசூட்டும் நிகழ்ச்சியைக் காண்பதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மன்னரின் இந்த தர்பார் நிகழ்ச்சியை முழுமையாகப் படம்பிடிக்க இரண்டு படப்பிடிப்புக் குழுக்களும் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தன.

7 லட்சத்து 67,000 பவுண்ட் செலவில் நடந்த டெல்லி தர்பாரின் ஆடம்பரத்தைக் கண்டு, இங்கிலாந்தே வியந்துபோனது. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாட்டில் இருந்து நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சென்று இருக்கிறார். இவர், சிறந்த கவிஞர் மட்டுமல்ல தேர்ந்த ஓவியரும்கூட. சிறந்த ஓவியர் என்பதற்காக, இந்த தர்பரில் மன்னரிடம் பரிசு பெற்றுத் திரும்பினார். இந்த முடிசூட்டு விழாவில், 1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதியன்று, பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ், டெல்லியைத் தலைநகராக்கும் அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். அப்போது இருந்த டெல்லி தங்களின் நிர்வாக வசதிகளுக்கு உகந்ததாக இருக்காது என்று கருதிய பிரிட்டிஷ் அரசு, புதிய நகரை உருவாக்க முனைந்தது. அப்படி உருவாக்கப்பட்டதே புதுடெல்லி. இதற்காக, 130 மில்லியன் பவுண்ட் பணம் ஒதுக்கப்பட்டது. புதிய நகரை யாரைக்கொண்டு வடிவமைப்பது என்பதைப் பற்றிய ஆலோசனை நடந்தபோது, முதலில் பரிசீலனை செய்யப்பட்டவர் கட்டடக் கலை நிபுணர் ஹென்றி வாகன் லான்செஸ்டர். இவர், டெல்லியைப் புதிய வடிவில் மாற்றம் செய்வதற்கான மாதிரி வரைபடங்களையும் திட்டங்களையும் முன்னதாகவே வைத்திருந்தார். ஆனால், இங்கிலாந்தில் இருந்து கட்டடக் கலைஞர் எட்வின் லுட்யன்ஸ் வரவழைக்கப்பட்டார். இவர், அதற்கு முன் எந்த நகரத்தையும் வடிவமைத்தது இல்லை. ஆனால், பிரபலமான வணிகர்கள் மற்றும் பிரபுக்களின் மாளிகைகளை வடிவமைத்து இருக்கிறார். சில பண்ணை வீடுகள், அலங்காரக் கூடங்கள் அவரது தனித்துவமான வடிவமைப்பில் பெயர் பெற்று இருந்தன.அவரை புது டெல்லி நகர நிர்மாண வடிவமைப்​பாளராக நியமனம் செய்ததற்கு முக்கியக் காரணம் இருந்தது. வைஸ்ராய் லிட்டன் பிரபுவின் ஒரே மகள் எமிலி, எட்வின் லுட்யன்ஸின் மனைவி. ஆகவே, தனது ஆளுகைக்குள் இருந்த டெல்லியை வடிவமைப்பது தனது மருமகனாகவே இருக்கட்டும் என்று, லிட்டன் பிரபு முடிவு செய்தார். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. நகர நிர்மாணக் குழு உருவாக்கப்பட்டது. ஜார்ஜ் ஸ்வின்டென் என்பவர், அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். லுட்யன்ஸ் மற்றும் அவரது குழுவினர், நகரை வடிவமைப்பு செய்யும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 1912-ம் ஆண்டு, டெல்லிக்கு வந்த லுட்யன்ஸ், தனது நண்பரும் தென் ஆப்பிரிக்காவில் பல ஆண்டு காலம் கட்டட வடிவமைப்புக் கலைஞராகப் பணியாற்றியவருமான ஹெர்பர்ட் பேக்கரை, இந்தப் பணியில் தன்னோடு இணைத்துக்கொள்ள விரும்பினார். அதையும் பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், நகர நிர்மாணப் பணி ஆரம்பித்த பிறகு, இருவருக்கும் இடையே கருத்துமோதல்கள் ஏற்பட்டன. லுட்யன்ஸின் வடிவமைப்பு மோசமானது என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார் பேக்கர். ஆகவே, எந்தக் கட்டடத்தை யார் வடிவமைப்பது என்று, அவர்களுக்குள் பேசி முடிவு செய்துகொண்டு வேலை செய்தனர்.இன்று உள்ள ஜனாதிபதி மாளிகை அன்று வைஸ்ராய் ஹவுஸாக இருந்தது. 'ரைசினா பிந்த்’ என்ற சீக்கியக் கிராமமாக இருந்த 'ரைசினா குன்று’ பகுதியில் 'ராஷ்டிரபதி பவன்’ அமைக்கப்பட்டது. அதை, லுட்யன்ஸ் வடிவமைத்தார். மொகலாய மற்றும் பௌத்தக் கட்டடக் கலைகளின் ஒருங்கிணைந்த வடிவமாக அதை உருவாக்கினார். அந்த வடிவமைப்பு பொருத்தமானது இல்லை என்று கோபமாக ஒரு கடிதம் எழுதினார் பேக்கர். தனது பணி முடியும் வரை தலையிட வேண்டாம் என்று சூடாகப் பதில் அனுப்பினார் லுட்யன்ஸ். இவ்வளவு மனவேறுபாடுகள் இருந்தும், புது டெல்லியை நிர்மாணிக்க லுட்யன்ஸ் தன்னை ஏன் அழைத்தார் என்பது பேக்கருக்குக் கடைசி வரை புதிராகவே இருந்தது.புது டெல்லியை உருவாக்கு​கிற வேலை முழு வேகத்தில் தொடங்கியது. தினமும் 20,000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். புதிதாக 64 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சாலை அமைக்கப்​பட்டது. இங்கிலாந்​தில் உள்ள வீதி அமைப்புகளைப் போலவே புது டெல்லியிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.

ராபர்ட் ரஸ்ஸல் என்ற இன்ஜினீயர், கனாட் பிளேஸ், தீன்மூர்த்தி பவன், நேஷனல் ஸ்டேடியம் மற்றும் அரசாங்கக் குடியிருப்புகளைக் கட்டினார். மான்டேகு தாமஸ் என்பவர், செகரெட்டரியேட் கட்டடங்களைக் கட்டினார். வடக்கு மற்றும் தெற்கு பிளாக் கட்டடங்களை பேக்கர் கட்டினார்.  நிகோலஸ் ப்ளும் ஃபீல்டு, வால்டர் ஸ்கைஸ் ஜார்ஜ், ஹென்றி மெட் ஆகியோரும் இந்தப் பணியில் லுட்யன்ஸ் உடன் வேலை செய்தனர். சாலையோரம் எந்த மரக்கன்று நட வேண்டும், அதை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டவர் பி.எச்.கிளட்டர் பக். இதற்காக அவர், 72 விதமான மரங்களைத் தேர்வு செய்து, லுட்யன்ஸுக்கு அனுப்பிவைத்தார். இந்த மரங்கள் முழுமையாக வளருவதற்கு 10 ஆண்டுகள் ஆகும் என்பதால், அது வரை மரங்களைப் பராமரிக்கத் தேவையான ஏற்பாடுகளை உரிய முறையில் செய்ய வேண்டும் என்று லுட்யன்ஸ் கேட்டுக்கொண்டார்.அதுபோலவே, பூங்கா, அலங்காரச் செடிகள் மற்றும் கொடிகளை உருவாக்கும் பொறுப்பை, தோட்டக் கலைத் துறை இயக்குனரான முஸ்டோ ஏற்று இருந்தார். ஜனாதிபதி மாளிகையின் மொகல் தோட்டத்தை உருவாக்குவதில் ஜெரூட் ஜெகில் மற்றும் வால்டர் ஸ்கை ஜார்ஜ் ஆகிய இருவரும் முக்கியப் பணியாற்றினர். இதற்காக, ஆக்ரா, லாகூர் மற்றும் காஷ்மீரில் உள்ள மலர்த் தோட்டங்களைப் பார்வையிட்டு வந்தனர். ஸ்வின்டன் ஜேக்கப் கட்டட உள்அலங்காரங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.நகரக் கட்டுமானப் பணி, சுஜான் சிங் மற்றும் அவரது மகன் ஷோபா சிங் ஆகியோரிடம் ஒப்படைக்கப்​பட்டது. இந்தியா கேட் மற்றும் சவுத் பிளாக் கட்டடப் பணிகள், ஷேக் ஹரூன் அல் ரசீத் என்ற ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டது. புது டெல்லியின் முக்கியக் கான்ட்ராக்டராக சுஜான் சிங் நியமிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின்போது முக்கி​யப் பணிகளுக்குக் கான்ட்ராக்டராக இருந்தவர்.ஹென்றி வாகன் என்பவரை இந்தக் கட்டுமானப் பணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய சிலர், ஆலோசனைக் குழுவில் அவரை நியமித்தனர். ஆனால், லுட்யன்ஸ் அவரை நிராகரித்துவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த ஹென்றி வாகன், ஜனாதிபதி மாளிகைக்கு நிகராக ஒரு பெரிய அரண்மனையை நானும் கட்டிக் காட்டுகிறேன் என்று சவால்விட்டார். அப்படி அவர் உருவாக்கியதே ஜெய்ப்பூரில் உள்ள உமைத் பவன். 300 அறைகளுக்கு மேல்கொண்ட இந்த பிரம்மாண்ட அரண்மனை இப்போது, நட்சத்திர ஓட்டலாக இருக்கிறது. எட்வின் லுட்யன்ஸ், வைஸ்ராய் வீட்டைக் கட்டும்போது அது இங்கிலாந்தின் சர்வ வல்லமை மிக்க ஆட்சியின் அடையாளச் சின்னம் போல இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே அதை ரசினா குன்றின் மீது கட்டத் திட்டமிட்டார். அது ஒரு சீக்கியக் கிராமமாக இருந்தது. அங்கு வசித்தவர்கள் டெல்லியின் புறநகருக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 340 அறைகளும் 227 தூண்களும் இரண்டு கிலோ மீட்டருக்கும் அதிகமான காரிடாரும்கொண்ட இந்த வைஸ்ராய் ஹவுஸ் 330 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது.வைஸ்ராய் ஹவுஸ் முழுவதையும் தாஜ்மகால் போலவே வெள்ளைக் கற்களைக்கொண்டே கட்ட வேண்டும் என்று, லுட்யன்ஸ் முதலில் முடிவு செய்து இருந்தார். ஆனால், நினைவுச் சின்னம் அமைப்பதற்கே வெள்ளைக் கற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று, பலர் கூறியதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. சிவப்பு நிறக் கற்களால் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.

1912-ல் தொடங்கப்பட்ட நகரக் கட்டுமானம், 1931-ல் முடிவடைந்தது. டெல்லியை வடிவமைத்த லுட்யன்ஸின் மனைவி எமிலி, புகழ்பெற்ற தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளால் கவரப்பட்டார். எமிலியின் மகள் மேரி லுட்யன்ஸ்தான், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.புது டெல்லியை உருவாக்கும் காலத்தில் லுட்யன்ஸுக்கும் இந்தியக் கட்டுமானப் பணியாளர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. கறுப்பர்கள், முட்டாள்கள், உதவாக்கரைகள் என்று இந்தியர்களை அவமதித்தார் லுட்யன்ஸ் என்றும் கூறுகிறார்கள்.  டெல்லி நகரை, தான் வடிவமைத்தபோதும் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் லார்ட் ஹார்டிஞ்ச். அவரது இடைவிடாத ஊக்கமும் ஆலோசனைகளுமே நகரை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது என்று, லுட்யன்ஸ் கூறியிருக்கிறார். இன்றும் நாம் பழைய டெல்லிக்குள் சுற்றும்போது, கடந்த காலத்தின் சுவடுகளாக இடிந்த கோட்டைகள், கல்லறைகள், குறுகலான வீதிகள், கடைகளைப் பார்க்கலாம். புது டெல்லியோ, பிரிட்டிஷ் ஆட்சி முடிவுற்ற போதும் அவர்களின் அழியாத நினைவுகளுடன் கம்பீரமாக இன்றும் அப்படியே இருக்கிறது. இந்தியாவின் வேறு எந்த நகருக்கும் இப்படியான இரட்டை வாழ்க்கை கிடையாது. நகர நாகரிகத்தைப் பொறுத்தவரை, உலகின் முன்னோடி நாடு இந்தியா என்பதற்கு இந்த இரண்டு நகரங்களே சாட்சியமாகத் திகழ்கின்றன.

விகடன்  

அருள் மழை ----------- 59


செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்த அதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை. அது என்னவென்றால்..........     

"
பெரியவாளோட அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களை எல்லாம் கூடியவரைக்கும் விடாமப் பண்ணிண்டு இருக்கோம். ஆனா.........இந்த ஊர்ல, பூஜை, ஸ்ராத்தம், தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க, வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே! ஒரே ஒர்த்தர்தான் இருந்தார்.......அவருக்கும் பண்ணி வெக்கும்போது அவர் சொல்ற மந்த்ரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை........அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா........இந்தக் காலத்து பசங்களாச்சே! அதான்......பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகளா பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்" என்று ப்ரார்த்தனை பண்ணினார்கள்.

"
ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு.........." என்று அவர் ஆரம்பித்தபோது, ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு postman வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி, "PIN ..ன்னு போட்டிருக்கே.....அதோட அர்த்தம் தெரியுமா?"
ரொம்ப சாதாரண கேள்விதான். ஆனால் அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டுவந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.
"POSTAL INDEX NUMBER " என்று தானே அதற்கு விளக்கமும் குடுத்தார். சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து " நீங்கள்ளாம் நெறைய படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா.........ஆனா, சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே........அவ்வளவு ஏன்? PINCODE ன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாம இருக்கலாம். ஆனா..........PINCODE ன்னு போட்டிருக்கற எடத்ல சரியான நம்பரை எழுதிட்டா........அது சரியா போய்சேர வேண்டிய எடத்துக்கு போறா மாதிரி.........பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ....அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும்! அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம். அதுனால, இப்போ இருக்கற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ! ஒரு கொறைவும் வராது!" கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.
அதிகாரிகள் விக்கித்துப் போனார்கள்! ஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத PIN னை வைத்தே, எப்பேர்பட்ட பெரிய சந்தேஹத்தை போக்கிவிட்டார்