Search This Blog

Tuesday, June 30, 2015

விஜய் டி.வி.யிலிருந்து விலகலா?

 
தமது பேச்சுத் திறமையால் உலக முழுவதும் தமக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் விஜய் டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி. என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்பத்தில் சினிமா, சின்னத்திரை சிறு வேடங்களில் நடித்து ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி மூலமாக இந்த உயரத்தை எட்டியவர். தற்போது விஜய் டி.வி.க்கும் இவருக்குமான உறவுக்கு முற்றுப்புள்ளி வந்திருக்கிறது. விஜய் டி.வி. நிர்வாகம் டி.டியை கழற்றி விட்டதா? அல்லது அவரே கழன்று கொண்டாரா? எதுதான் உண்மை? 
 
டி.டி. ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் என்றால் அவர் பேசுவதுதான் அதிகம். வந்திருக்கும் வி.ஐ.பி. பேசுவது வெகு குறைவு. சமீபத்தில் விஜய் அவார்ட்ஸ் விழாவில் கோபிநாத்துடன் சேர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஒரு கட்டத்தில் அவர் என்ன பேசுகிறார் என்று யாருக்குமே புரியவில்லை. இதனை அப்படியே மேடையில் போட்டு உடைத்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.  

சௌந்தர்யா ரஜினிகாந்த் சார்பாக விருது வாங்க மேடை ஏறிய கே.எஸ்.ரவிக்குமாரிடம், டி.டி. பேச்சு கொடுக்க, “மைக் இருந்தால் பேசுவது சத்தமாக கேட்கும். ஆனால் மைக் இருந்தாலும் கத்துவது டி.டியாக மட்டுமே இருக்க முடியும்” என விஜய் டி.வியில் அதிகாரிகள் முன்னிலையில் டி.டி. பற்றி கடுப்பாகப் பேசினார். இதனால் டி.டி மீதுள்ள எண்ணம் மாறியது. உடனே அதிகாரிகள் அவரை அழைத்து கண்டிக்க தமது டுவிட்டரில் இனி நான் தேவையில்லாமல் பேச மாட்டேன் என மன்னிப்பு கேட்டார் டி.டி.
 
மேலும் சமீபத்தில் பேட்டிக்காக வந்த வி.ஐ.பி. ஒருவரைக் கேள்வி கேட்டு சரமாரியாகப் போட்டுத் தாக்க அவர் விஜய் டி.வி. நிர்வாகத்திடம் இதுபற்றி புகார் தெரிவித்தாராம். இதனால் விஜய் டி.வி நிர்வாகத்தின் குட்புக்கில் இடம்பிடித்த டி.டி. நிலை மாறியது. டி.டி.யின் கணவர் ஸ்ரீகாந்தும் விஜய் டி.வி.யுடன் இணக்கமாக நடந்துகொள்ள அறிவுறுத்தினாராம். விஜய் டி.வி. நிர்வாகம் சமீபமாக தனக்கு போதிய ஒத் துழைப்பு அளிக்காத காரணத்தால், நாம் கழன்று கொள்வது பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும் என முடிவுக்கு வந்து அவராக வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.  

தற்போது கர்ப்பமாக இருக்கும் டி.டி. வீட்டில் ஓய்வெடுத்தபடியே நகைக்கடை மற்றும் அழகு நிலைய விளம்பரங்களில் தோன்றினால் போதும். எதற்கு தேவையற்ற பிரச்னை என்று நினைப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போதைக்கு டி.டி.யின் பேச்சு மழைக்கு ஒரு விடுமுறை! 
 
 

மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது!


மூன்று வயஸாவது பெரியவனாக இருப்பவனுக்குத்தான் பூமியில் விழுந்து நமஸ்காரம், மற்றவர்களுக்கு வேறே தினுஸில் ‘விஷ்’ பண்ணுவது என்பார்கள். முன்னேயே சொன்னாற்போல, விநயம் ரொம்பக் குறைந்து வருகிற இந்நாளில் நமஸ்காரப் பழக்கத்தை எவ்வளவு வ்ருத்தி செய்து கொடுத்தாலும் நல்லதுதான் என்பதால் குறைந்த பக்ஷம் மூன்று வயஸு ஜாஸ்தி இருக்கணும் என்பதைப் பார்க்கலாம். நம்மைவிடப் பெரியவர்களாக உள்ள எல்லாருக்குமே நமஸ்காரம் பண்ணிவிடலாமென்று தோன்றுகிறது.

கண்டிப்பான சாஸ்த்ர விதிப்படியேகூட நம்மைவிட வயஸில் சின்னவர்களாகவுள்ள சில பேருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டுமென்று இருக்கிறது. உதாரணமாக, மன்னி வயஸில் சின்னவளாகவே இருந்தாலுங்கூட ஸ்தானத்தால் தாயார் மாதிரி என்பதால் நமஸ்காரம் பண்ணவேண்டும். அதே மாதிரிதான் குரு பத்னியும் ஒருவேளை நம்மைவிட வயஸு குறைவானாலும் நமஸ்கரிக்கணும். பொதுவாகவே கூட, நம்மைவிட வயஸில் பெரிய எவருடைய பத்னியும் அவரில் பாதி என்பதாலும், தம்பதி ஸமேதர்களாக நம்ஸ்கரிப்பது விசேஷம் என்பதாலும் அந்த ஸ்த்ரீகளுடைய வயஸைப் பார்க்காமல் விழுந்து நமஸ்கரிக்கணும்.

வித்யையில் பெரியவர், குணத்தில் பெரியவர், அநுபூதிமானாக இருப்பவர், பக்த ச்ரேஷ்டர்கள், ஞானிகள், ஸந்நி யாஸிகள், ஆத்ம ஸம்பந்தமான, தர்ம ஸம்பந்தமான ஸ்தாபனங்களில் ஆசார்ய ஸ்தானத்தி லுள்ளவர்கள் அதாவது பணம், பதவி, அந்தஸ்துகளால் இல்லாமல் வேறே விதங்களில் பெரியவர்களாக உள்ள எல்லோருக்குமே இந்த மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது. நம்மைவிட வயஸில் சின்ன வர்களானாலும் நமஸ்கரிக்கணும். குரு புத்ரனையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளணும்.

நிறைய பேரின் காலில் போய் விழ விழ அஹங்காரம் குறைந்து கொண்டே வரும் என்பதுதான் பொதுக் கொள்கை.

Tuesday, June 23, 2015

ஆனந்த ஸ்வரூபம்!


மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கைவிட்டுப் போகக் கூடும். நமக்கு அன்னியமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்தத்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கெடுக்கிற பிரயத்தனம்தான்.

மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள்தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதுதான். இவன் உள்ளூர ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமானபடியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது.

மநுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத் தேடிப் போகிறவர்கள் உண்டா? ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அநுபவிக் காமல், வெளியே ஆனந்தத் தைத் தேடித்துரத்திக் கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள். தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்.

ஷியோமி எம்ஐ LED

ஷியோமி எம்ஐ LED:(Xiaomi Mi LED)


இது ஒரு USB லைட்.

லேப்டாப்பின் USB போர்டு அல்லது பவர் பேங்க் மூலம் இதைப் பயன்படுத்தலாம்.

நைட் லைட், லேப்டாப் லைட், இரவு நேரங்களில் புக் லைட் என இதன் பயன்கள் ஏராளம்.

நீலம் மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

பிளஸ்: விலை.  தரம்.

மைனஸ்: இரண்டு கலர்களில்தான் கிடைக்கும்.

விலை: ரூ.199

சாம்சங் கேலக்ஸி டேப் இ: (Samsung Galaxy Tab E)


டிஸ்ப்ளே – 9.60 இன்ச்.

பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.

முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.

பிராசஸர் – 1.3 GHz Quad Core.

ரேம் – 1.5 GB.

பேட்டரி – 5000 mAh.

இயங்குதளம் – ஆண்ட்ராய்டு கிட்-கேட் 4.4

இன்டர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.

SD கார்டு – 128 GB வரை.

பிளஸ்:  பேட்டரி, டிசைன்.

மைனஸ்:  சிம் கார்டு வசதி இல்லை.

விலை: ரூ.14,500

ஜப்ரா ஸ்போர்ட் பல்ஸ்: (Jabra Sport Pulse)பிட்னெஸ் ப்ளூ-டூத் ஹெட் போன்.

ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor) கொண்டுள்ளது.

Dolby Audio தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

பிளஸ்: துல்லியமான இதயத் துடிப்பு சென்ஸார்,  டிசைன்.

மைனஸ்:  விலை.

விலை: ரூ.15,990

பியோ எக்ஸ்3 செகண்ட் ஜெனரேஷன் (Fiio X3 Second Generation):

எளிதில் தூக்கி செல்லக்கூடிய ஆடியோ பிளேயர்.

இன்டர்னல் ஸ்டோரேஜ் கிடையாது. 128GB வரை SD கார்டு பயன்படுத்தலாம்.

2600 mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது.

2 இன்ச் டிஸ்ப்ளே.

பிளஸ்:  டிசைன் மற்றும் தரம்.

ஏறக்குறைய எல்லா ஃபார்மேட்களும் சப்போர்ட் ஆகின்றன.

மைனஸ்:  விலை.  பேட்டரி.

விலை: ரூ.14,999

நிக்கான் 1 வி3 கேமரா (Nikon 1 V3):


1 இன்ச் CMOS சென்ஸார்.

18.4 மெகா பிக்ஸல்.

Burst மோடில் வேகமாகச் செயல்படக்கூடிய தொழில்நுட்பம்.

WiFi வசதி.

பிளஸ்:  வேகமான செயல்பாடு.
கச்சிதமான பரிமாணங்கள்.

மைனஸ்:  விலை, குறைந்த வெளிச்சத்தில் சுமாராகவே செயல்படுகிறது.

விலை: ரூ.43,950

ஸ்மார்ட் பாக்கெட் ஆப்: (Smart Pocket App)
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, லாயல்டி கார்டு ஆகிய வற்றின் விவரங்களைச் சேமித்து வைத்துக்கொள்ளும்.

Balance மற்றும் பாயின்ட்ஸ்களை இந்த ஆப்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பிராண்டட் பொருட்களின் ஆஃபர் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்களில் இந்த அப்ளிகேஷன் இலவசமாகவே கிடைக்கிறது.

பிளஸ்:  எளிய டிசைன்.

மைனஸ்:  பாதுகாப்பின்மை.
செ.கிஸோர் பிரசாத் கிரண்

Monday, June 08, 2015

ஐ.பி.எல் துளிகள்

சூப்பர் ஓவர் மேட்ச்
 
போட்டியின்போது மோதிய இரு அணிகளும் சமமாக ஸ்கோர் எடுத்திருந்தால், வெற்றி பெற்ற அணியை முடிவு செய்ய, ஒவ்வோர் அணிக்கும் தலா ஓர் ஓவர் பாட்டிங் மற்றும் பௌலிங் செய்ய அனுமதிக்கப்படும். அந்த ஓவரின் இறுதியில் அதிக ஸ்கோர் பெற்ற அணி அந்த மேட்சில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இப்படி வெற்றியைத் தீர்மானிக்க அனுமதிக்கப்படும் ஓவரை ‘சூப்பர் ஓவர்’ என்பார்கள். இத்தகைய நிகழ்வு எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும். IPL T20 மேட்ச் 18ன் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதியபோது, இரு அணிகளும் 191 ரன்களை எடுத்து மேட்ச் டை (tie) ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் அனுமதிக்கப்பட்டு கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி மேட்சை வென்றது.


இந்திய கேப்டனின் இளம் வாரிசு
 
இந்திய அணியின் சமீபத்திய ஆஸ்திரேலியா டூரின்போது இந்திய கேப்டன் தோனிக்கு ஜிவா (ZIVA) என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்தியா சென்று குழந்தையைப் பார்த்து வர அனுமதி கிடைத்தும் அதை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்திய அணி ஒரு முறைகூட வெற்றியை இழக்காமல், அரை இறுதி ஆட்டம் வரை வருவதற்கு உறு துணையாக இருந்தார் தோனி. அவரின் பொறுப்பான செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

தற்போது பெங்களூர் அணியை, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றிகொண்டபோது, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது மகளை அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு ஆசையோடு அழைத்து வந்த காட்சி மனதுக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது.
 
விபத்துக்குப் பின் விளையாடியவர்
 
25 நவம்பர் 2014 அன்று ஃபில் ஹ்யூஸ் என்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர், சிட்னியில் நடந்த ஷெஃப்ஃபீல்ட் ஷீல்ட் மேட்சில் சீன் அப்போட் என்ற அதே நாட்டு வீரர் வீசிய பௌன்சர் பந்தை எதிர்கொண்டார். தலையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். பந்து வீசிய சீன் அப்பாட் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு, மனநல ஆலோசனை பெற்றுவந்தார் நீண்ட நாட்களுக்குப் பின் அவர் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் அணிக்காகப் பந்து வீசினார். 
 
பரிசுத் தொகையை விட அதிக சம்பளம்
 
PLT20 8 வது போட்டி தொடரின் இறுதியில் வெற்றி பெறும் அணி மொத்தத்துக்கும் சேர்ந்து பரிசுத் தொகை 15 கோடி. ஆனால் டெல்லி டேர் டெவில்ஸ் அணி வீரர் யுவராஜ் சிங்குக்குக்கு சம்பளமாக வழங்கப்படும் தொகை மட்டும் 16 கோடியாகும். இதுவரை நடந்த மேட்ச்களில் தொடர்ந்து குறைந்த ரன்களில் அவர் அவுட் ஆகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. 
 
 

தள்ளாடும் இன்ஜினியரிங்!

இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருப்பதும் அதிக அளவில் பொறியியலாளர்களை உருவாக்கிக்கொண்டிருப்பதும் தமிழ்நாடுதான். எப்படியாவது தங்கள் வாரிசுகள் பி.இ. படித்து ஒரு நல்ல வேலையில் சேரவேண்டும் என்பது பல தமிழ்க் குடும்பங்களின் கனவு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவரும் புள்ளிவிவரங்கள் தரும் தகவல்கள் பி.இ. படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இல்லையோ என்ற அச்சத்தை எழுப்புகிறது.

கடந்த சில ஆண்டுகளைவிட இந்தாண்டில் +2வில் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். பள்ளிகள் பெருமிதத்திலும் பெற்றோர்களும் சந்தோஷத்தில் பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்தனர். தமிழகமே பெருமைப்பட்டது. 

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு வந்திருக்கும் விண்ணப்பங்கள் பெருமளவில் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இருபது சதவிகிதம் குறைவு. 2014ஆம் ஆண்டே அதற்கு முந்தைய ஆண்டைவிட பத்து சதவிகிதம் குறைந்திருந்தது. கடந்தாண்டு விற்பனையான விண்ணப்பங்கள் 2 லட்சத்து 12 ஆயிரம். மனுச் செய்தவர்கள் 1 லட்சத்து 70 ஆயிரம். நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் 1 லட்சம். இந்த ஆண்டு (2015) விண்ணப்பங்கள் விற்பனை 1 லட்சத்து 90 ஆயிரமாகக் குறைந்தது. மனுச் செய்திருப்பவர்கள் 1 லட்சத்து 45 ஆயிரம் மட்டுமே. மனுச்செய்தவர்களில் பலர் கலந்தாய்வில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கலந்தாய்வுக்குப் பின் காலியாக இருக்கப் போகும் இன்ஜினியரிங் சீட்டுகள் 1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்கலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு. 

பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லூரி வளாகங்களைப் பிரம்மாண்டமாக உருவாக்கி பல லட்சங்களில் நன்கொடை பெற்று சீட்டுகளை ஒதுக்கிய கல்லூரிகள் இன்று அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்திலேயே மாணவர்களைச் சேர்க்கத் தயாராகக் காத்திருக்கின்றன. ஆனால், மாணவர்கள் சேருவதில்லை

ஏன் இந்த நிலைமை?

நல்ல மதிப்பெண்கள் இருந்து, கலந்தாய்வில் அரசுகோட்டாவில் இடம் கிடைத்தாலும், மாணவர்கள் கணிப்பில் அந்தக் கல்லூரி, நல்ல கல்லூரி இல்லையென்றால் அதில் சேர விரும்புவதில்லை. பொறியியல் கல்வியில் உயர்ந்த தரம், கேம்பஸ் தேர்வில் பங்கேற்க வரும் நல்ல நிறுவனங்கள் போன்றவற்றினால் மட்டுமே ஒரு பொறியியல் கல்லூரியின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 

அதனால்தான் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள் கூட, நன்கொடை கொடுத்து நிர்வாக கோட்டாவில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் சேர விரும்புகின்றனர். படிப்புக்குப் பின் நல்ல வேலை என்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்களின் கட்-ஆஃப் மார்க்குக்கு கலந்தாய்வில் முதல் தரமான கல்லூரிகளில் அரசுகோட்டாவில் இடம் கிடைக்காது என்பதை கணித்தபின் கலந்தாய்வில் பங்கேற்பது அவசியமில்லை என விட்டு விடுகின்றனர். 

அதாவது எப்படியாவது பி.இ. படித்தாக வேண்டும் என்ற நிலையிலிருந்து நல்ல தரமான கல்விக்கும் வேலைக்கும் வாய்ப்புள்ள கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் பொறியியல் படிப்பே வேண்டாம் என மாணவர்கள் ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

தமிழகத்தில் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களின் தகுதி, உள்கட்டுமானம், இதர வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில் தரப்பட்டியலும் இடப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவர்கள் இதைத் தவிர பல்வேறு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பவை 30 கல்லூரிகளே. இதற்கு அடுத்த கட்டமாக இரண்டாம் நிலையில் 15 கல்லூரிகள். இவற்றில் சேரத்தான் மாணவர்கள் விரும்புகிறார்கள். 

கடந்த மூன்று ஆண்டுகளில் அக்கல்லூரிகளில் படித்தவர்களுக்குக் கிடைத்த வேலைவாய்ப்பை வைத்து இப்பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள். அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் சமூக, நட்பு ஊடகங்கள் வழியாக இந்தப் பட்டியல் பகிரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தின் கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மற்றொரு மாற்றம் அகில இந்திய அளவில் நடைபெறும் பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் முந்தைய ஆண்டுகளைப்போல பெருமளவில் பிரகாசிக்கவில்லை என்பதுதான். பிளஸ் டூவுக்குப்பின், தமிழகத்துக்கு வெளியே அகில இந்திய அளவில் பொறியியல் படிக்க வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள பல நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. அதில் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க JEE என்ற நுழைவுத்தேர்வு மிக முக்கியமானது. 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் தேறிய 1.5 லட்சம் பேர் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள்.  

இந்தத் தேர்வில் தேர்வுபெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு பெற்ற மாணவர்கள் நான்காயிரம் மட்டுமே. ஆந்திரத்தில் 32 ஆயிரம், கர்நாடகத்தில் இதைவிட அதிகம். 

தமிழ்நாட்டில் ஐந்துவிதமான சிலபஸ்கள் இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தது, தன்னாட்சிப் பெற்றவை, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிப் பெற்றவை, தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என பலவகைக் கல்லூரிகள் வெவ்வேறு சிலபஸ்களுடன் இயங்குகின்றன. இதனால் தரம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. இந்த வேறுபாடுகளைக் களைய மத்திய அரசின் கல்வித்துறை முயற்சிகள் எடுத்து NPTEL(National Programme on Technology Enhanced learning) என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது. ஆனால் பல கல்லூரிகள் அந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பல கல்லூரிகளுக்கு இந்தத் திட் டம் பற்றித் தெரியுமா என்பதே சந்தேகமாயிருக்கிறது.  

மேலும் பல கல்லூரிகளில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. வேறு வேலை கிடைக்காததால் ஆசிரியரானவர்களே அதிகம். இவர்கள் பள்ளிகளில் இறுதித்தேர்வுக்கு மாணவர்களைத் தயாரிப்பது போலவே கல்லூரியிலும் செய்கிறார்கள். அதனால் நமது மாணவர்கள் தேர்வுகளில் பாசானாலும் நிறுவனம் எதிர்நோக்கும் திறன்கள் இல்லாமல், வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். அதைப் பார்க்கும் கிராமப்புற இளைஞர்கள் பி.இ.யைப் படிக்கத் தயங்குகிறார்கள்.”

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள் 552.
ஆண்டுக்கு சராசரியாக வெளிவரும் பொறியாளர்கள் 1.7 லட்சம்.
காம்ப்ஸ் இண்டர்வியூவில் வேலை பெறுபவர்கள் 32 ஆயிரம் பேர்கள்.
வேலையில்லாமல் காத்திருப்போர் 68 ஆயிரம் பேர்கள்.ஜீவசக்தி


லோக வாழ்க்கை என்பது நன்றாக நடப்பதற்கு அறிவுத் துறைகள் என்றே - அதாவது ஆத்ம ஸம்பந்தமில்லாமல் இருக்கப்பட்டவையாகவே - இருக்கிறவையும் தேவைப்படத்தான் செய்கிறது. வாழ்க்கைக்கு நேரே ப்ரயோஜனப்படுவதாகத் தெரியாவிட்டாலும் அல்லது மனஸுக்கு ஒரு நிறைவைக் கொடுத்து, அதனால் ஸந்தோஷம் ஏற்படுத்துவதாகவும் அநேகத் துறைகள் இருக்கின்றன- ஸங்கீதம், சில்ப - சித்ரம், சரித்ரம், பாஷா சாஸ்திரம் இப்படி அநேகம். திருட்டும், சூதாட்டமும் மாதிரியில்லாமல், தனிப்பட நல்லது, கெட்டது என்று இல்லாமல் நாம் எப்படி ப்ரயோஜனப்படுத் திக்கொள்கிறோமோ அதனாலேயே நல்லதோ கெட்டதோ விளைவிப்பதாகவுள்ள ஸயன்ஸ் ஸப்ஜெக்ட்கள் தற்போது தினந்தோறும் பெருகி வருகின்றன. இன்றைய வாழ்க்கைக்கு - பௌதிகமாக, மெடீரியலாக த்ருப்தி தருகிற வாழ்க்கை மட்டுமில்லை, அறிவுக்கும் மனஸுக்கும் ஸந்தோஷம் தந்து வாழ்க்கையையே உத்ஸாகப் படுத்துகிறவற்றையும் சேர்த்தே சொல்கிறேன், அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு - இந்த வித்யைகள் எல்லாமே வேண்டித்தான் இருக்கின்றன. நாகரிக ஸமுதாயங்கள் ஏற்பட்ட நாளிலிருந்தே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.

நம் தேசத்தில் இந்த அறிவு வித்யைகளைக் கற்பிக்கிறவர்களும் உத்தம ஹ்ருதயமுள்ள யோக்யர்களாக, நல்ல சீலமுள்ள வர்களாக இருந்து வந்தார்கள். திருட்டு, சூதாட்டம் மாதிரியான கெடுதலான வித்யைகளைக் கற்றுக் கொடுக்கிறவர்களைத் தவிர, மற்ற ஆசாரியர்கள், ஆசிரியர்களெல்லாம் நல்ல morals-ம் அதாவது நன்னெறியும், அத்தனை நெறிக்கும் ஆதாரமான தெய்வபக்தியும் கற்றுக் கொடுக்கவும் செய்தார்கள். அதனால், அவர்களிடம் கற்றுக் கொண்டவர்கள், பக்தி விச்வாஸம் வைக்க வேண்டிய குருமார் களாகவே அவர்களுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் பலதுறை பாடத்தால் மூளை வளர்ச்சி பெறுகிறதோ? பாடமான நீதிபோதனை, பக்தி போதனை முதலியவற்றுக்கு ஜீவசக்தி ஊட்டிய அவர்களுடைய வாழ்க்கை உதாரணத்தாலும், பெர்ஸனல் ரேடியேஷனாலும் ஹ்ருதய வளர்ச்சியும் பெற்றார்கள்.

அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும்.
 
‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 - 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.

யார் இணையலாம்? 

18  வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும். 

பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.

எப்படி இணைவது?

எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்? 

நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க அட்டவணை!)

முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?

ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.  நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில்   வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.


எப்போது பணம் எடுக்கப்படும்?

நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த  மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?

வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.

 பணம் கட்டாவிட்டால்..? 

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்  படுவார்கள்.

யார் நிர்வகிக்கிறார்கள்?

இந்தத் திட்டத்தை வருங்கால வைப்பு நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85%  அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

என்ன உறுதி?

நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு  கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே  வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.

எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார்  அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ  சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.

60 வயதுக்குப் பின் இறந்தால்...?

இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.

அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும்  (Lumpsum) வழங்கப்படும்.

உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு  61 - 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.

சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார்.  (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
 
நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?

இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.

வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.

தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது'' என்றார் கணேசன்.

மு.சா.கெளதமன்
 
 
 

டீவி 2 (teewe 2)

ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்களில் உள்ள வீடியோக்களை டிவிகளில் ப்ளே செய்ய HDMI கேபிள்கள்தான் பெரும்பாலான நேரங்களில் பயன்படுகின்றன. ஆனால், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் HDMI போர்டுகள் இருப்பதில்லை. இந்த சிரமத்தை போக்கவே ‘Streaming’ கருவிகளை பயன்படுத்துகிறோம். வெளிநாட்டில் தயாரான பல்வேறு ‘Streaming’ கருவிகள் இருந்தாலும், போன்/லேப்டாப்பின் ‘Local Storage’ ஃபைல்களை பயன்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்து வருகின்றன. அந்த சிரமங்களை இந்திய தயாரிப்பான டீவி 2 கருவி தற்போது சரிசெய்துள்ளது.


டிசைன்!

டீவி 1 கருவிக்கும் டீவி 2 கருவிக்கும் டிசைனில் பல வித்தியாசங்களை காணலாம். டீவி 1 சற்று பருமனாக இருக்கும். ஆனால் டீவி 2, டீவி 1-ன் 70% அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெல்லியதாகவும் கச்சிதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள டீவி 2, கூகுள் நிறுவனத்தின் ‘Chromecast’ கருவியைவிட அளவில் சிறியது என்பது சிறப்பம்சம். பென்-டிரைவ் போல காட்சியளிக்கும் இந்த கருவி உயர் ரக பிளாஸ்டிக்கைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு!

டீவி 2 டாங்குளை டிவியின் HDMI போர்டில் இணைத்துக் கொள்ளலாம். இந்த கருவிக்கு தேவையான மின்சாரத்தை அதில் அமைந்துள்ள micro USB போர்டு மூலம் தரவேண்டும். டீவி 2  டாங்குளை டிவியில் இணைத்த பிறகு, டீவி அப்ளிகேஷனை தேவையான கேட்ஜெட்டில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்பு டீவி 2 மற்றும் கேட்ஜெட்டை ஒரு WiFi நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும். ஒரு ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்தினால் டீவி 2-வை பயன்படுத்துவது மிக சுலபம்.


சேவைகள்!

டீவி 2-வை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்திலும் சுலபமாக பயன்படுத்தலாம். மேலும், லேப்டாப்புடனும் பயன்படுத்தலாம். யூடியூப் வீடியோ, முகநூல் போட்டோக்கள், மியூசிக், வீடியோ, திரைப்படங்கள் டவுன்லோடு ஆகிய அனைத்து சேவைகளையும் டீவி 2 வாடிக்கையாளர்களுக்கு தருகிறது. மேலும், ஒரே டீவி டாங்குலுடன் பல கேட்ஜெட்டுகளை இணைத்து எந்தவித சிரமமுமின்றி பயன்படுத்தலாம்.

டீவி க்ரோம் எக்ஸ்டன்ஷன்! (Teewe Chrome Extension)

டீவி 2-வின் மற்றொரு சிறப்பம்சம் இது. வாடிக்கையாளர்கள் தங்களது கூகுள் க்ரோம் ப்ரௌஸரில் ‘Teewe Chrome Extension’-யை டவுன்லோடு செய்துகொள்ளலாம். இதை பயன்படுத்தி ப்ரௌஸரில் உள்ள அனைத்தையும் ‘Screen Mirror’ என்ற சேவை மூலம் டிவியில் பார்க்கலாம்.

விலை:  ஆன்லைனில் விற்கப்படும் இந்த கேட்ஜெட்டின் விலை ரூபாய் 2,399.

பிளஸ்:  சேவைகள்   டிசைன்.

மைனஸ்:  கேம்ஸ் விளையாட பயன்படுத்த முடியாது.