Search This Blog

Sunday, March 29, 2015

இணைய தளங்கள்!

கணினி கண்டுபிடிக்கப்பட்டபின் நாம் செய்கிற பல விஷயங்களை அந்த இயந்திரத்தைக் கொண்டு செய்ய முடியும் என்கிற நிலை உருவானது. அதுமட்டுமல்ல, நாம் எழுதி வைத்திருக்கும் பல விஷயங்களைப் பத்திரமாக வைத்துப் பாதுகாக்க கணினி மிகப் பெரிய அளவில் உதவியது. இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தினால், இந்தத் தகவல்கள் அழிந்துவிட்டால்..? இந்தக் கேள்விக்கு ஒரு தீர்வாக, நாம் எழுதி வைக்கும் அத்தனை விஷயங்களையும் இணையத்தில் வைத்துவிட்டால், யாராலும் அழிக்க முடியாது. வேண்டும் என்கிறபோது அந்தத் தகவலை நாம் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?
 இந்த ஒரு நோக்கத்தில்தான் இணையங்களை உருவாக்கும் முயற்சிகள் 1980-களுக்குப் பிறகு அரங்கேறத் தொடங்கின. கணினிகள் பிரபலமான காலத்தில் டிம் பெர்னர்ஸ் மற்றும் லீ ஆகியோர் இணையதளங்களுக்கான ஆராய்ச்சியைத் துவங்கினர். தங்களது பெர்சனல் தகவல்களை எந்த இடத்தில் இருந்தபடியும் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்கள் செய்த ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தது.

பத்து வருடங்கள் முடிவில் அவர்கள் ஹைப்பர் டெக்ஸ்ட் டிரான்ஸ்ஃபர் புரோட்டோகால் (HTTP) மூலம் இணையதளங்களை உருவாக்கினர். 1990-ம் ஆண்டு முதல்முறையாக இது இலவசமாகப் பயன்பாட்டுக்கு வந்தது. இதன்மூலம் மக்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், ஒரு தகவல் உடனடியாகப் பதிவேற்றப்படவும், அதனைத் தெரிந்துகொள்ளவும் உதவியாக இருந்தது.

இதே காலகட்டத்தில் தேடுதல் தளங்களும் உருவாக்கப்பட்டன. இணையதளங்கள் தரும் செய்தியை ஓர் இணையதளம் தேடி தரும் அளவுக்கு இணையதளங்கள் வேகமாக வளர்ந்தன. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் செய்திகளையும், தகவல்களையும் பெறலாம் என்பதையும், நமக்குத் தேவைப்படும் செய்தியை தெரிந்துகொள்ளக் காத்திருக்கத் தேவையில்லை என்பதையும் இந்த இணையதளங்கள் சாத்தியப்படுத்தின.

இணையங்களின் வளர்ச்சியினால் உலகக் கோப்பை காலிறுதியில் இந்திய அணியின் வெற்றியைப் பார்க்க தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை. நினைத்தபோது தெரிந்துகொள்ளலாம். ஒபாமா என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ள செய்தித்தாள்களுக்காக காத்திருக்காமல், உடனுக்குடன் இணையத்தில்  தெரிந்துகொள்ளாலாம். இந்த வாய்ப்புகள் இணைய தளம் இல்லாமல் சாத்தியம் இல்லை. ஒருவரை அப்டேட்டாக மாற்றியதில் இந்த இணையதளங்கள் இன்றியமையாதவை!

.ஸ்ரீராம்

சாம்சங் கேலக்ஸி s6

சில வருடங்களுக்கு முன்பு உச்சக்கட்டத்தில் இருந்த சாம்சங் நிறுவனம், சமீப காலமாக பலமான தொய்வைக் கண்டுவருகிறது. மிகுந்த சிரமத்துக்குப்பின், சாம்சங் நிறுவனம் தனது பழைய நிலையை அடையும் முயற்சியில் தனது புதிய ஸ்மார்ட் போனான  ‘சாம்சங் கேலக்ஸி எஸ்6’ ஸ்மார்ட் போனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.


இதன் இந்திய விலை ரூபாய் 48,500 என்று எதிர்பார்க்கலாம்.

இயங்குதளம்!

இது லேட்டஸ்ட் வெர்சனான லாலிபாப் 5.0.2 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. மேலும், சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேகமான ‘TouchWiz’ டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். முந்தைய TouchWiz டிசைனைவிட இது கச்சிதமாக இருக்கும் என்று சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தொழில்நுட்பம்!

இந்த ஸ்மார்ட் போன் Exynos 7420 சிப் செட்டைக் கொண்டு இயங்குகிறது. இந்த அதிநவீன சிப்செட்டில் Quad-core 1.5 GHz Cortex-A53 மற்றும் Quad-core 2.1 GHz Cortex-A57 பிராசஸர்கள் அடங்கும். மேலும், Mali-T760 என்ற பிரத்யேகமான கிராஃபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். இந்த ஸ்மார்ட் போன் 3GB ரேமைக் கொண்டு இயங்குகிறது.

டிஸ்ப்ளே!

இந்த ஸ்மார்ட் போன் அதிநவீன QHD Resolution 5.1 இன்ச் டச் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே Super  Amoled தொழில்நுட்பத்தைக் கொண்டு உள்ளது. 1440x2560 pixel 577 ppi கொண்டுள்ள இந்த டிஸ்ப்ளே வெளிச்சத் திலும் இருட்டிலும் சிறப்பாகச்  செயல்படும். பாதுகாப்புக்காக  ‘Corning Gorilla Glass 4’-யும் இதில் உள்ளது.

பேட்டரி!

இந்த ஸ்மார்ட் போன் ‘Non-removable’ 2550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது மற்ற நிறுவனங்களின் ‘Flag Ship’ ஸ்மார்ட் போன்களின் பேட்டரியைவிட திறன் மிகக் குறைவு. இந்த ஸ்மார்ட் போனின் அனைத்துக் கோணங்களில் சீராக உழைத்துள்ள சாம்சங் நிறுவனம் பேட்டரியில் மட்டும் பெரும் அளவில் சொதப்பியுள்ளது.Finger Print ஸ்கேனர், 4G, Wireless சார்ஜிங் ஆகிய வசதிகளுடன் வரும் இந்த ஸ்மார்ட் போன் தற்போது சிங்கிள் சிம் வசதியுடன் வருகிறது. சில பகுதிகளில் மட்டும் டூயல்-சிம் வசதியுடன் உள்ள மாடல் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசைன்!

இந்த போனின் டிசைன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. முந்தைய கேலக்ஸி எஸ் வகை ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டவை. ஆனால், இது ‘மெட்டல்’ மற்றும் கிளாஸைக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் டிசைனைக் கொண்டுள்ள இந்த  போனின் டிசைன், ஆப்பிள் மற்றும் ஹெச்டிசி ஆகிய ஸ்மார்ட் போன்களின் டிசைன்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அடர்த்தி 6.8 மி.மீ.

கேமரா!

16 MP  2988 x 5312 pixels பின்புற கேமரா மற்றும் 5MP முன்புற கேமராக்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் பின்புற கேமராவைக் கொண்டு 2160p வீடியோக்களை எடுக்க முடியும். மற்றும் முன்புற கேமராவைக் கொண்டு 1080p வீடியோகளை எடுக்க முடியும்.
ஸ்டோரேஜ்!


இந்த ஸ்மார்ட் போன் 32GB, 64GB, 128GB ஆகிய மூன்று இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதிகளுடன் வருகிறது. எஸ்டி கார்டு மூலம் இதன் ஸ்டோரேஜை விரிவுபடுத்த முடியாது. என்றாலும்,  ஒட்டுமொத்த அளவில் இது ஸ்மார்ட் போனின் செயல்திறனை அதிகரிக்கும்.

பிளஸ்:

டிசைன்   டிஸ்ப்ளே.
தொழில்நுட்பம்  கேமரா.

மைனஸ்:
பேட்டரி 
TouchWiz டிசைன்.
விலை.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

பல்பு! - உலகை மாற்றிய புதுமைகள்!

சூரிய ஒளியை வைத்து பகல் பொழுதை ஓட்டிய ஆதிமனிதன், இரவில் இருட்டுக்கு பயந்து மரப்பொந்துகளில் ஒளிந்துகொண்டான். இரவில் வெளிச்சம் இருந்தால் மட்டுமே தன்னால் எதையும் செய்ய முடியும் என்கிற கட்டாயத்தை உணர்ந்தான்.

ஆரம்பக் காலத்தில் தீயிலிருந்து கிளம்பும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி, இருட்டை விரட்டினான். பிறகு சிம்னி விளக்கை வைத்து சமாளித்தான். ஆனால், அறிவியல் வளர்ச்சி அடைந்த பின்புதான், மனிதன் தொழில்நுட்ப உதவியைத் தேடினான். இரவில் வெளிச்சம் தரும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டதன் விளைவுதான், ஒளிரும் பல்புகள் உருவாக காரணம்.


1802-ம் ஆண்டு முதல் முதலில் ஹம்ப்ரி டாவி என்பர்  ஒளிரும் பல்பு ஒன்றைக் கண்டறிந்தார். ஆனால் அது நீண்ட நேரம் உழைக்கிற மாதிரியில்லை. அதன்பின்னர் இருபது ஆராய்ச்சியாளர்கள் பல்பு குறித்த ஆராய்ச்சியில் இறங்கினர். ஒவ்வொருவரின் கண்டுபிடிப்பிலும் சில விஷயங்கள் முழுமையடையாமலே இருந்தது.

1879-ம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் கண்டிபிடித்த பல்புதான் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை வாங்கினார் எடிசன். அந்த பல்பு ஏறக்குறைய 1,200 மணி நேரம் ஒளிரக்கூடிய பல்பாக இருந்தது.

1880-க்கு பிறகு எடிசன் கம்பெனி வர்த்தக ரீதியில் பல்புகளைத் தயாரிக்கத் துவங்கியது. பின்னர் பல்புகள் காலத்துக்கு ஏற்றவாறு உருமாறத் துவங்கின. ஃப்ளோரசன்ட் பல்புகள், டங்க்ஸ்டன் இழை பல்புகள் துவங்கி, இன்று எல்இடி பல்புகள் வரை அனைத்தும் உருவாக அடிப்படை காரணமாக இருந்தது தாமஸ் ஆல்வா எடிசன் கண்டிபிடித்த பல்புதான்.

கம்பிகளின் வழியே மின்சாரம் பாய்ந்து ஒளியை உமிழ்ந்த காலம் மாறி, இன்று கையில் உள்ள செல்போனில் கம்பியில்லாமல் ஒளியை தரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. மேலும், சூரிய ஒளியை வாங்கி எரியும் சோலார் பல்புகளும் வந்துவிட்டன.

இன்றைக்கும்கூட மின்சாரம் தடைபட்டு, பல்புகள் செயல்படாமல் இருட்டில் தவிக்கும் மனிதர்கள், ஆதிகாலத்தில் மனிதன் பட்ட அவஸ்தையை உணரத் தவறுவதில்லை.

ச.ஸ்ரீராம்

Saturday, March 28, 2015

ஞானியும் ஜீவனும்


மாயை என்பது ஞானிக்குப் பூஜியம் (Zero) தான். ஆனால் ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்துக்கொண்டு பக்கத்தில் இந்த பூஜ்ஜியத்தைச் சேர்த்துக் கொள்கிறான். ஓர் இலக்கத்துக்குப் பக்கத்தில் வருகிற பூஜ்யம் அதைப் பத்து, இருபது, நூறு, ஆயிரம் என்று ஆக்குவது போல் இந்த அஞ்ஞானிக்கு மாயையே பலவாக விரிந்து சத்திய வஸ்துக்களாக — உலகமாகத் தோன்றுகிறது.

ஞானியே உள்ளது உள்ளபடி பார்க்கிறான். ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறது போல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. 

சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை, அது கசக்கும் என்று ஓடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான்.
‘உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம்’ ஒன்றே என்று ஞானி அறிவான். ‘நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு. நமக்குக் கருப்பு அவனுக்கு வெளுப்பு; நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு’ என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். 

பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைதான் நமக்கு வெளிச்சமாகத் தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மையைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். 

ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதன் அர்த்தம் இதுவே.

அப்துல்கலாம் சிந்தனைகள்


* ‘நம்பிக்கை’ நிறைந்த ஒருவர் யார் முன்பும் மண்டியிடுவதில்லை.

* ‘கேள்வி’ என்ற சாதனம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

* சிறிய விஷயங்களில் ‘சிந்தனை’யைச் செலவிட்டு நேரத்தை வீணாக்குவது குற்றம்.

* எவ்வளவு தூரம் நான் வந்தேன் என்பதைவிட இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்பதில் ‘கவனம்’ செலுத்துவது நல்லது.

* பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும் ஒரு ‘குறிப்பிட்ட காரியத்தை’ நிறைவேற்றுவதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டவை.

* நம் தேசத்தில் கலாசாரம், நாகரிகம், சமாதானம், ஜனநாயகம் எல்லாம் ‘ஒரு கயிற்றினால்’ பிணைக்கப்பட்டுள்ளன.

* பூ பூப்பது, பறவைகள் கூவுவது என எல்லாமே இறைவனின் ‘கட்டளை’கள்.

பொன்ஜி

Monday, March 16, 2015

நஞ்சை முறிக்கும் துளசி!


துளசியை ஒரு தெய்வீகச் சின்னமாக எண்ணி வழிபடுகிறோம். துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவக் குணங்களை கருத்தில் கொண்டுதான் தெய்வீகச் சின்னமாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

அரி, ராம துளசி, கிருஷ்ண துளசி என்றும் துளசி அழைக்கப்படுகிறது. துளசியில் நற்றுளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல்துளசி, நாய்த்துளசி, முள் துளசி எனப் பலவகை உண்டு. இதன் சுவை கார்ப்பு.

நற்துளசி: கபத்தைப் போக்கும். வயிற்றுவலி குணமாகும். தாகத்தைப் போக்கும். மந்தத்தை நீக்கும். சுவையின்மையைப் போக்கும்.

நாய்த்துளசி: கபத்தை நீக்கும். இருமல், சளி, ஜன்னி போன்றவற்றைப் போக்கவல்லது.

நிலத்துளசி: தாய்ப் பாலால் குழந்தைகளுக்கு வரும் மந்தத்தைப் போக்கும். கனச்சூடு நீக்கும். கபசுரம், பித்த சுரம், குளிர் சுரத்தைப் போக்கவல்லது.

கல்துளசி: இது கட்டி, வண்டுக்கடி, பூச்சிக்கடி போக்கும்.

முள்துளசி: வெட்டுப்புண், கபம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

செந்துளசி: விஷத்தை முறிக்கும். கபத்தைப் போக்கும். சைனஸைப் போக்கவல்லது.

கருந்துளசி: இருமல், இழைப்பு குணமாகும். செருமல் நீங்கும். வயிற்றுப் புழு நீங்கும். மார்புச் சளி குணமாகும்.

துளசியின் மருத்துவப் பலன்கள்: 

* அலர்ஜியினால் வரும் ஒவ்வாமையை நீக்குகிறது.
* நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
* இதன் இலை சுவாசப் பாதையில் உள்ள தொற்றுநோய்க் கிருமிகளை செயலிழக்கச் செய்கிறது.
* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
* வயிற்று வலியைப் போக்குகிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
* ஆஸ்த்துமாவிற்கு தீர்வாக உள்ளது.
* சுரத்தைப் போக்கும் சஞ்சீவி.
* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோயைப் போக்கும்.
* கொசுக்களை ஒழிக்க துளசி புகைச் சிறந்தது.

எப்படிப் பயன்படுத்துவது?

* துளசி இலையை நீர் சேர்த்துக் காய்ச்சி ஆவி பிடிக்கச் சுரம் நீங்கும்.
* மனச்சோர்வு நீங்க, தினமும் காலையில் 15 துளசி இலைகளை பருப்புடன் சேர்த்து மூன்று மாதம் அருந்த மனச்சோர்வு நீங்கி உடல், உள்ளம் பலம் அடையும்.
* துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகும்.
* துளசி வேரைப் பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும்.
* தேள் கடிக்கு துளசிச் சாறுடன் வேப்ப இலைச்சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.
* துளசிச் சாறு, இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து அதனுடன் மிளகுத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், நெஞ்சு சளி பிரச்னைகள் அகலும்.
 

ஒற்றுமையும் அன்பும்

இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை கோஷ்டி இருக்கிறது. இந்த கோஷ்டிக்காரர்களே வார வழிபாட்டையும் மற்ற பரோபகார காரியங்களையும் எடுத்து நடத்த வேண்டும். ச்ரத்தையாக உழைக்க கூடியவர்கள், பண விஷயத்தில் நாணயமாக இருக்கக் கூடியவர்கள், ‘இவர்கள் சுத்தமானவர்கள்’ என்று ஸமூஹத்துக்கு நம் பகமாக இருக்கிறவர்கள் ஒரு பத்து பேர் அங்கங்கே சேர்ந்துவிட்டால் போதும். ஊர் உலகத்தில் ஒரு குறைவில்லாமல் பொதுநலக் காரியங்கள் ஜாம்ஜாம் என்று நடந்துவிடும்.

பணியில் சேர்கிறவர்கள், பணியால் பயனடைகிறவர்கள் (Benefi-ciaries) இரண்டிலும் ‘ஜாதி’ என்ற அம்சமே இருக்கக் கூடாது. பணக்காரன் ஏழை, படித்தவன்-படிக்காதவன் எல்லோரும் ஒன்றுசேர்ந்து செய்கிற முறையில் இது ஒன்றிலாவது நேராகவோ, மறைமுகவோ ‘கம்யூனல் ரெப்ர ஸென்டேஷன்’ (ஜாதிவாரிப் பிரதிநிதித்வம்) இல்லாமல் காரியம் நடக்க வேண்டும்.

ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று ஆரம்பித்தால்தான் சண்டை ஜாஸ்தியாகிறது! ஆரியன்-திராவிடன் பேதமில்லை என்று சொல்லி ஸௌஜன்யத்தை உண்டாக்க வேண்டும் என்று நல்லெண்ணத்தோடு ஆரம்பித்தால் கூட, உடனே இதற்கு ஹிஸ்டாரிகலாக (சரித்திரபூர்வமாக), எத்னாலாஜிகலாக (இன-இயல்-ரீதியில்) ஆக்ஷேபணைகள் வந்து ஒரே வாதச் சண்டையாகிறது!

ஆனதால் வர்தத்தால் ஒற்றுமையை ஸ்தாபிக்க யத்தனம் செய்யமால், ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்றுகூட இல்லாமல், இப்படிப் பல பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.

தோனியின் தலைமை


இந்திய அணி ரஜினி போல. ரஜினி படத்தில் அவர் இடைவேளைக்கு சற்று முன்பாக ஆரம்பித்து உறவினர், நண்பர்கள், குட்டி வில்லன்கள், மெயின் வில்லன் என ஒவ்வொருவரிடமாக அடி வாங்கிக்கொண்டே வருவார். ஆனால், கிளைமேக்ஸில் மிக முக்கியமான கட்டத்தில் திரும்ப அடித்து சாகசங்கள் செய்து வென்றுவிடுவார்.

இந்தியா உலகக்கோப்பைக்கு சற்றுமுன்புவரை கிட்டத் தட்ட ஐ.சி.யு.வில் அட்மிட் ஆகிற நிலையில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆட்டம் கூட வெற்றி பெறாமல் ஆடி வந்தது. அதற்கு முன்பு இங்கிலாந்தில் துவண்டு டெஸ்ட் தொடரை இழந்தது.

உலகக்கோப்பைக்கு முன்பு இவ்வளவு நீளமான தொடர் தேவைதானா என நிபுணர்கள் வியந்தனர். தொடர் தோல்விகள் தாங்க முடியாதது போல் தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கும் அடுத்த தலைவரான கோலிக்கும் உள்மோதல் என பேசிக் கொண்டார்கள். அணியின் இயக்குநராக புதுப் பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி கோலியின் அணியைச் சேர்ந்தவர் என்றும், பிளட்சரின் அதிகாரத்தை குறைத்து, பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களை நீக்கினது தோனிக்கு அதிருப்தி அளித்தது என்றார்கள்.

இதுபோக தோனியின் காட்பாதரான ஸ்ரீனிவாசன் ஊழல் வழக்குகளில் மாட்டிக்கொண்டு அதிகாரபூர்வமாய் தன் நாற்காலியை இழந்தேவிட்டார். ஐ.பி.எல்.லில் தோனியின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் சூதாட்ட குற்றத்துக்கும் தோனிக்கும் எப்படி சம்பந்தமே இல்லாமல் இருக்க முடியும் என கேட்டார்கள்.

தோனியின் தலைமீது சனிபகவான் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். இதேபோன்ற ஒரு சூழல் சேம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சற்றுமுன் நிலவியபோது தோனி எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்காமல் அணியைத் திறமையாக அணிவகுத்து சிறப்பாக வழிநடத்தி தொடரை வென்றார். இப்போது சூடு உச்சத்தில் இருக்கும் போது அவர் மிக கூலாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நோக்கி இந்தியாவை அணிவகுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். உலகக்கோப்பையை வெல்ல சாத்தியம் கொண்ட அணியாக இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு வெகு பக்கத்தில் வந்திருக்கிறது.

எப்போதெல்லாம் பிரச்னைகள் அதிகமாகிறதோ அப்போதெல்லாம் தன் ஆட்டத்திறனை, தலைமைத்திறனை பலமடங்கு உயர்த்தி செயல்பட தோனிக்கு வருகிறது. கங்குலி இது போன்ற நிலைமையில் தொடர்ந்து தோல்விகளைத் தழுவி, அணியை கிரெக் சாப்பல் வசம் இழந்துவிட்டு அணியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். திராவிட்டும் சச்சினும் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் தோனி நெருக்கடி மிகும்போதுதான் மிகச்சிறப்பாக ஆடுகிறார். அவருக்கு நன்கு தெரியும். கிரிக்கெட்டுக்கு புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு சிறந்த பதிலை கிரிக்கெட்டுக்குள் இருந்தபடிதான் அளிக்க முடியும் என.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பொதுவாக ஒரு பெருந்தொடருக்கு மிக கறாராக அறிவியல்பூர்வமாக தயாராவார்கள். எப்படியும் உலகக்கோப்பைக்கு முன்பாக இரண்டு குட்டித்தொடர்களையாவது அபாரமாக வென்றுவிடுவார்கள். அனைத்து வீரர்களும் சிறந்த ஆட்டநிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அனைத்துத் திறன்களையும் சோதித்து, பயன்படுத்தி உச்சகட்டம் வரும்போது மிக லாகவமாய் முழு திறமையுடன் செயல்படலாம் என்பது அவ்வணிகளின் நம்பிக்கை. இறுதிபரீட்சைக்கு மாணவர்கள் தயாராவது போன்ற பாணி இது.

பத்தாம் வகுப்புக்கு இவ்வாறு தயாராகிற மாணவர்கள் இறுதித் தேர்வின்போது களைத்து பதற்றமாகி சொதப்பிவிடுவார்கள். ஆனால், மெதுவாக உழைத்து தயாராகி இறுதி சில மாதங்கள் முழு உழைப்பையும் செலுத்தி படிக்கிற மாணவர்கள் யாரும் எதிர்பாராமல் முதல் இடத்தை பிடித்துவிடுவர்கள். இப்போது உலகக் கோப்பையிலும் இதுதான் நடந்து வருகிறது.

அனைவருக்கும் செல்ல அணியான தென்னாப்பிரிக்கா வெறும் சப்பாணி அணிகளாக அதுவரை தோற்றமளித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் பரிதாபமாக லீக் போட்டிகளில் தோற்றது. ஆஸ்திரேலியா நியுசிலாந்திடம் தோற்றது. இரண்டு மாதங்களாக அனைத்து போட்டிகளிலும் தோற்றுவந்த இந்தியா இதுவரை அனைத்து லீக் போட்டிகளிலும் வென்று முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தியா முக்கியமான ஆட்டங்களில் முழு திறனையும் வெளிப்படுத்தினால் போதும் என நம்புகிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் தொடர்ச்சியாக நன்றாக ஆடினால்தான் முக்கியமான போட்டிகளில் வெல்ல முடியும் என நம்புகிறது. இவை இருவேறுபட்ட அணுகுமுறைகள். இப்போதைக்கு இந்திய அணுகுமுறைதான் வென்றிருக்கிறது.

இது இரண்டு கலாசாரங்கள் காலத்தை பார்க்கிற முறையில் உள்ள வேறுபாட்டையும் காட்டுகிறது. ஐரோப்பியர்கள் காலத்தை நேர்கோட்டாய் பார்க்கிறார்கள். கடந்த காலம் வளர்ந்து நிகழ்காலம் ஆகிறது. கடந்த காலம் நிகழ் காலத்தை தீர்மானிக்கிறது. இந்தியர்கள் காலத்தை சுழற்சியாய் பார்க்கிறோம். இதில் கடந்த காலம் நிகழ்காலம் எனும் வேறுபாடில்லை. ஒரே காலம்தான். நாம் தற்போது இருக்கிற, இயங்குகிற காலம்தான் முக்கியம். இந்த இந்திய மனப்பான்மையை தோனி நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதனால் அவர் வீரர்களைத் தேவையின்றி நெருக்கடிக்கு உள்ளாக்காமல் அவர்கள் போக்குக்கு இயங்க அனுமதிக்கிறார். அணிக்கு வளைந்து கொடுக்கிறார். இதனால் அணியும் அவருக்கு ஏற்றபடி வளைகிறது.

காலிறுதி, அரையிறுதி, இறுதி என மூன்றே போட்டிகள் தான். அவற்றை வென்றால் உலகமே நம் காலுக்குக் கீழ். கூட்டத்தோடு கூட்டமாய் ஓடி விரைகிற ரயிலில் தொத்தி ஏறி, ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்வில் யாரையோ முந்தி, அங்கே இங்கே பிடித்து வேலை வாங்கி, குழந்தை பெற்று, அதற்கு பள்ளிக்கூட சீட் வாங்கி, அதை பத்தாம் வகுப்புக்கு தயாராக்கி இவ்வளவு விஷயங்களை ஓடி முண்டியடித்து அடைந்து பழகுவதுதானே இந்திய வாழ்க்கை. ஓட்டத்தின் முடிவில் அந்தக் கடைசி நொடி, அப்போது எம்பி முன்பாய்வது தான் முக்கியம் என நன்கு உணர்ந் தவர்கள் அல்லவா நாம். காலம் என்பது அந்த நொடியில்தான் உயிர் வாழ்கிறது. இந்த இந்திய மனப்பான்மையை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர் என்பதால்தான் தோனி ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறார்.

ஆர்.அபிலாஷ்


Sunday, March 08, 2015

பண ஸ்பரிசம்


பொதுவாகவே பணத்தின் ‘டச்’ (ஸ்பரிசம்) வந்துவிட்டால் அதோடு ஒரு காரியத்தில் அநேகக் கெடுதல்களும் வந்துவிடும். பொதுத் தொண்டு செய்யப் புறப்படுகிறவர்கள் பணவிஷயத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நல்ல ஆதரவு திரவிய ஸஹாயமாகவும் நம் கார்யத்துக்குக் கிடைத்தால் கூட அதனால் Over - enthusiastic ஆகி (அதீத உத்ஸாஹம் அடைந்து), இப்போது இந்தியா கவர்மென்ட் செய்கிற மாதிரி ambitious planning (அதி ஆசைத் திட்டம்) போட்டு நிறைய பணம் ‘கலெக்ட்’ பண்ண ஆரம்பிக்கக் கூடாது. இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. இதனாலே பரோபகாரம் என்கிற அன்பு எண்ணத்தையும், அதில் அங்கமாகச் செய்கிற தேவாலய கைங்கர்யங்களின் பக்தி எண்ணத்தையுங்கூட ‘வசூல் எண்ணம்’ முழுங்கிவிடும்.

எப்போது பார்த்தாலும் ரசீது புஸ்தகமும் கையுமாக அலைவதும், ‘பேப்பர்காரர்களைப் பிடித்து அப்பீல் பண்ணலாமா, அட்வர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா?’ என்பதே சிந்தையாகத் தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும். நிறைய பணம் சேர்ந்து அதைக் கையாள வேண்டியிருக்கும் போது நாமே எப்படி மாறிப் போய்விடுவோமோ என்ற பயம் ஸதாவும் இருக்கணும்.

அதுவுமில்லாமல், ரொம்பவும் பணம் சேர்ந்தால் ஊரிலிருப்பவர்களுக்கும் அது ஸரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற ஸந்தேஹம் எழும்பும். இதோடுகூட, சற்றுமுன் சொன்ன மாதிரி, இஷ்டமில்லாதவனையும் நிர்ப்பந்தப்படுத்தி வாங்குவதும், இப்படி வாங்கி விட்டதால் அப்புறம் அவனிடம் பவ்யப்பட்டு நிற்பதும் நம் பணியையே அசுத்தம் செய்துவிடும். ஆனதால் எந்த நல்ல காரியமானாலும் ‘அதி’யாக அதைக் கொண்டுபோய் விடாமல் அவசியத்தோடு நிறுத்திக்கொண்டு, செட்டும் கட்டும் சிக்கனமுமாகவே அதற்கான வரவு செலவுகளை நிர்வஹிக்க வேண்டும்.

கால்குலேட்டர்கள்!

யாரிடமாவது குறிப்பிட்ட இரண்டு எண்களைச் சொல்லி, அவற்றைக் கூட்டச் சொன்னால், மனக்கணக்காகக் கூட்டி, சரியான விடையைச் சொல்லிவிடுவார்கள். ஆனால், ஆறு இலக்கங்கள் கொண்ட ஓர் எண்ணை, 4 இலக்கங்கள் கொண்ட இன்னொரு எண்ணால் பெருக்கச் சொன்னால், திக்குமுக்காடிப் போவார்கள். ஆனால், கையில் ஒரு கால்குலேட்டர் இருந்தால், அரை நொடியில் சரியான விடையைக் கண்டுபிடித்துவிட முடியும்.
 ஆதிகாலத்தில் நுட்பமான கணக்கு அளவுகளை எல்லா சமூகத்து மக்களும் வைத்திருந்தனர். தங்கத்தைக் குந்துமணிக் கணக்கில் அளப்பதில் இருந்து, சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையிலான நாழிகைக் கணக்குகள் வரை பல கணக்குகளை ஆச்சர்யப்படும் வகையில் கண்டுபிடித்து வைத்திருந்தனர். இந்தக் கணக்குகள் எல்லாமே பிற்காலத்தில் வழக்கொழியத் தொடங்கின. மனித உழைப்புக்கு மாற்றாக இயந்திரங்கள் தோன்றியபின்பு, கணக்குகளைப் போட மனிதன் கால்குலேட்டர்களைக் கண்டுபிடித்தான்.

இரண்டு பெரிய எண்களைக் கூட்டி, கழித்து, வகுப்பது தொடங்கி, வட்டி விகிதங்களைக் கண்டறிவது வரை பலவகையான கணக்குகளை கண்மூடித் திறப்பதற்குள் செய்துமுடிக்க கால்குலேட்டர்கள் பேருதவியாக இருக்கின்றன.


முதலில், பேட்டரியில் இயங்கும் கால்குலேட்டரை மனிதன் உருவாக்கினான். இன்றைக்கு சூரிய ஒளியில் இயங்கும் கால்குலேட்டர்கள்கூட வந்துவிட்டன. தனியொரு கருவியாக இருந்தாலும், இன்றைக்கு எல்லா செல்போனிலும் இடம்பெற்றுவிட்டன இந்த கால்குலேட்டர்கள்.

இன்று, கடன் வாங்கினால் எவ்வளவு இஎம்ஐ கட்ட வேண்டும் என்பது தொடங்கி, மாத குடும்ப பட்ஜெட் போடுவதுவரை, அனைத்தையுமே துல்லியமாகச் செய்துமுடிக்க அதிநவீன கால்குலேட்டர்கள் வந்துவிட்டன. மனிதன் இன்றைய காலவளர்ச்சிக்கேற்ப நிறைய யோசிக்கவேண்டி இருப்பதால், கணக்கு வழக்கு களை கணநேரத்தில் செய்துமுடிக்க இந்த கால்குலேட்டர் கள் அவசியம் என்றாகிவிட்டன.

இதனால் ஏற்பட்ட பாதகமான அம்சம் என்னவெனில், மனிதன் மனக்கணக்குப் போடும் பழக்கத்தை அறவே மறந்துவிட்டான். ஒரு சிறிய கணக்கைப் போடக்கூட கால்குலேட்டர் இருந்தால்தான் முடியும் என்கிற அளவுக்கு மனிதமூளை கால்குலேட்டருக்கு அடிமை யாகிக் கிடக்கிறது. என்றாலும், கால்குலேட்டர் என்கிற இயந்திரம் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், நம் வாழ்க்கையில் கணிசமான நேரம் கணக்குப் போடுவதிலேயே கழிந்திருக்கும்!


Wednesday, March 04, 2015

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்

விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள். மற்ற நாடுகளுக்காக விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?

குரிந்தர் சிங் சண்டு : 21 வயது இடதுகை வேகப்பந்து வீச்சாளரான குரிந்தர் சிங், ஆஸ்திரேலிய ஆண்கள் அணியில் இடம்பிடித்த முதல் இந்திய வம்சாவளி வீரர். இவருடைய அப்பா இக்பால் பஞ்சாப்பில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர். முதல்தரப் போட்டிகள், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட், ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பிடித்த இவர், இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி அணிக்காக ஆடியிருக்கிறார். 2015 ஜனவரியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி, இரண்டே இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கும் குரிந்தர் சிங் ‘எதிர்கால’ ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான பந்துவீச்சாளர். குரிந்தர் சிங்கின் சர்வதேச அறிமுகப்போட்டி இந்தியாவுக்கு எதிராக என்பது அடடே ஆச்சர்யக்குறி!


ஸ்வப்நில் பிரகாஷ் படேல் : விக்கெட் கீப்பரும், வலது கை ஆட்டக்காரருமான ஸ்வப்நில் பிரகாஷ் படேல் மஹாராஷ்டிராவில் பிறந்தவர். கத்துக்குட்டி அணியான ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார். பிரகாஷ் படேல் 2005, 06-ல் மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்தவர்... பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறி, அந்த நாட்டு உள்ளூர் போட்டிகள், மற்றும் 20/20 போட்டிகளில் களம் கண்டார். இதுவரை ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவருக்கு, பிப்ரவரி 2014-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டிதான் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி. இந்தப் போட்டியில் 99 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார் ஸ்வப்நில்!


கிருஷ்ண சந்திரன் : அக்மார்க் இந்திய வீரர். பாலக்காடு அருகேயுள்ள கொல்லங்கோடு இவருடைய சொந்த ஊர். சென்னை செயின்ட் ஜோன்ஸ் பள்ளியில் படித்தவர். தினேஷ் கார்த்தி, ராபின் உத்தப்பா, சாந்த் ஆகிய இந்திய வீரர்களுடன் இணைந்து உள்ளூர் போட்டிகள், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ்’ அணியில் இடம்பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சந்திரன், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கும் ‘ஆல்ரவுண்டர்’. இதுவரை 7 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர், ‘இந்தியாவைப் பொறுத்தவரை முதல்தரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தால் மட்டுமே அடுத்தடுத்த லெவலுக்குப் போக முடியும். தவிர, அங்கே அரசியலும் அதிகம். என்னோடு இருந்தவர்கள் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று போனபோது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறி இங்கே வாய்ப்பு பெற்று ஆடுகிறேன்’ என சமீபத்தில் ஃபீலிங் ஸ்டேட்டஸ் கொடுத்திருந்தது கவனிக்க வேண்டிய விஷயம்!


ரவி போபரா :  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்களில் ஒருவர். ஹரியானாவில் இருந்து இங்கிலாந்துக்குக் குடியேறியது ரவி போபராவின் குடும்பம். பிறகு இங்கிலாந்து பள்ளி கிரிக்கெட் போட்டிகள், முதல்தர கிரிக்கெட் போட்டிகள் என பல படிகளைக் கடந்து இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தவர். 2007-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 119 ஒருநாள் போட்டிகள், 13 டெஸ்ட் போட்டிகள், 38  20/20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீசுவதிலும் சிறப்பாகச் செயல்படும் ரவி போபரா, மூன்று வித சர்வதேசப் போட்டிகளிலும் சேர்த்து இதுவரை 4 சதம், 14 அரைசதம் உள்பட 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.

இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர், இங்கிலாந்து முன்னாள் வீரர் நாஸர் ஹுசைன், நியூசிலாந்து முன்னாள் வீரர் தீபக் படேல் மற்றும் கனடா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளில் இடம்பெற்ற பல கிரிக்கெட் வீரர்கள் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களே!

 - கே.ஜி.மணிகண்டன்

பெண்கள்

டாப் பணக்கார மாடல்!


ஜிசெல் புன்ட்சென் (Gisele bundchen) ... உலகின் டாப் பணக்கார மாடல். பொதுவாக, பிரேசில் பெண்கள் உலக மாடலிங் மேடைக்கு வருவார்கள், போவார்கள் அவ்வளவுதான். ஆனால், இவரின் வருகை, பிரேசில் மாடலிங் உலகில் மாற்றங்களை கொண்டு வந்தது என்றே கூறலாம். 90-களின் துவக்கத்தில் தன் மாடலிங் பயணத்தைத் தொடங்கிய ஜிசெல், 'உலகின் தலை சிறந்த மாடல்’ என்ற இடத்தை சமீப ஆண்டுகளாக யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை. 'உலகின் அதிக சம்பளம் வாங்கும் மாடல்’ என 2014-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இவரது பெயர், இப்போது வரை வேறொரு பெயரால் மாற்றப்படவில்லை. மாடல் உலக வரலாற்றிலேயே அதிகபட்சமாக 47 மில்லியன் டாலர்களை, சென்ற வருடம் அசால்டாக சம்பாதித்தவர். நடிகை, தயாரிப்பாளர், ஐ.நா அமைப்பின் சுற்றுச்சூழலுக்கான நல்லெண்ணத் தூதர் எனப் பன்முகங்களும் கொண்டவர். மாடர்ன் பெண்ணியம் மற்றும் இயற்கை அழகுக்காக கடந்த ஆண்டின் சிறந்த பெண்ணாக, சேனல் 5 தொலைக்காட்சி நிறுவனம், இந்த 34 வயதுப் பெண்ணைத் தேர்வு செய்திருக்கிறது!

பேனா பெண்!


இ.எல்.ஜேம்ஸ்... உலகின் அதீத மனதைரியப் பெண் என்றே கூறலாம். பெண்களில் 90 சதவிகிதம் பேர் 'செக்ஸ்’ என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்க யோசிக்கும் உலகில், அதையே தன் நாவலுக்கான கருவாகக்கொண்டு புரட்சி செய்தவர். 2011-ல் வெளியான '50 ஷேட்ஸ் ஆஃப் கிரே’ என்ற இந்த நாவல்தான், இங்கிலாந்து புத்தக வரலாற்றிலேயே விரைவாக விற்றுத் தீர்ந்த நாவல். நம்மூரில், ஆண்கள்கூட இந்தப் புத்தகத்தை படிப்பதை வெளியில் சொல்ல யோசிக்கும் மனப்போக்கு இருக்கும் நிலையில், ஒரு பெண்ணாக அதை எழுதியதுடன், இதுவரை மூன்று பாகங்களை வெளியிட்டுவிட்டார். '50 ஷேட்ஸ் ஆஃப் கிரே’ என்ற பெயரிலேயே இது ஹாலிவுட் படமாகவும் வெளியாகிவிட்டது. சென்ற வருடத்தின் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட டிரெய்லர், இப்படத்தினுடையதே! நம்மூரில் படத்துக்கு தடா போட்டுவிட்டார்கள். அந்த அளவுக்கு அந்தரங்கம் சொட்டும் நாவலை எழுதிய இ.எல்.ஜேம்ஸ்க்கு, வயது 51. இரு டீன்ஏஜ் மகன்கள் இருக்கிறார்கள்!

அரச குடும்பத்து அழகி!கேட் மிடில்டன்... இங்கிலாந்து அரண்மனையின் இளவரசி. மறைந்த இளவரசி டயானாவுக்கு மருமகள். வாழும் இளவரசிகளில் அழகியாகவும், சிறந்தவராகவும் அறியப்படும் கேட், 2001-ல் இளவரசர் வில்லியம் சார்லஸுடன் நட்பு கொண்டார். 2010-ல் திருமண நிச்சயம். 2011-ல் திருமணம். இப்போது இந்த இளம் மம்மியின் கைகளில் ஒன்றரை வயதுக் குட்டி இளவரசன் ஜார்ஜ். பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஃபேஷன் உலகின் தற்போதைய மாற்றங்களில் பெரும்பங்கு மிடில்டனுடையது. 'கேட் மிடில்டன் எஃபெக்ட்’ என, 2010-க்கு பிறகு ஆரம்பித்த இந்த டிரெண்ட், இப்போது வரை தொடர்கிறது. மிடில்டனின் ஆடை வடிவமைப்பும், அவரின் நாகரிக பாங்கும் பல நாடுகளின் அரச குடும்பப் பெண்களுக்கே ரோல் மாடலாக அமைந்திருக்கின்றன. மேலும் 'மிடில்டன் ஃபேஷன்’ என்ற பெயரில் உருவாகும் ஆடைகள், காஸ்மெட்டிக் அயிட்டங்கள் வருடந்தோறும் குறைந்தபட்சம் ஒரு பில்லியன் அளவில் வரவை அள்ளுகின்றன!

திரைப் படைப்பாளி!

வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்... ஜெனிஃபர் லீ. இந்த அமெரிக்கப் பெண், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர். படிப்பை முடித்துவிட்டு ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தில் ஆடியோ புத்தகம் மற்றும் டி.வி.டி கவர் டிசைன் பிரிவில் வேலை பார்த்தார். வால்ட் டிஸ்னியின் 'ரெக் இட் ரால்ஃப்’ படத்துக்கு முதன் முறையாக திரைக்கதை அமைத்தார். பிறகு, வால்ட் டிஸ்னி தயாரிப்பில் 'ஃப்ரோஸன்’ படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, இயக்கினார். சென்ற வருட ஆஸ்கர் விருதுப் பட்டியலில், இரண்டு விருதுகளைத் தட்டிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 43 வயதாகும் லீ, தற்போது 'ஃப்ரோஸன் ஃபீவர்’ என்ற தன் குறும்படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்!

ஷாலினி நியூட்டன்

மார்ச் மாதம் 8-ம் நாள் உலக மகளிர் தினம்

இன்று, உலகெங்கும் கொண்டாட்டமாக மாறியிருக்கும் இந்த மகளிர் தினம் உருவான தற்குப் பிந்தைய வரலாறு, போராட்டமயமானது!

1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி நடந்தபோது, பெண்களும் போராட்டக் களத்தில் நின்று சமத்துவ உரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், வாக்குரிமை, பெண்கள் இனி அடிமைகளாக நடத்தப்படக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினர். அதை நசுக்க நினைத்தார் மன்னர் லூயி ஃபிலிப். ஆனால், பெண்களின் போராட்ட வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், தோல்வியுற்றார். இதனால் மன்னர் பதவியையும் துறந்தார்.


இந்த வெற்றி, ஐரோப்பா முழுவதும் பெண் கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களின் தொடர் போராட்டங்களைப் பார்த்து, அந்நாடுகளின் அரசாங்கங்கள் ஆடிப்போயின. அதைத் தொடர்ந்து இத்தாலியப் பெண்கள், தங்களுக்கு வாக்குரிமை கோரிப் போராடினர். பிரான்ஸில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயி பிளாங், பெண்களின் போராட்ட உறுதியைப் பார்த்து, அவர்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் சேர்க்கவும், வாக்குரிமை அளிக்கவும் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒப்புக்கொண்டார். அது முதல், மார்ச் 8-ம் தேதியை 'பெண்கள் உரிமை தினமாக’ உலகம் முழுக்க உள்ள பெண்கள் கொண்டாடத் தொடங்கினர்.

இதற்கிடையே, பெண்களின் போராட்டம், உலகம் முழுக்கக் கிளர்ந்தபடி இருந்தது. 1908-ம் ஆண்டு அமெரிக்கப் பெண்கள், வாக்குரிமைக்காக நடத்திய போராட்டம், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டுக்கு அச்சம் கொடுத்தது. தொடர்ந்து நியூயார்க் நகரில், பஞ்சாலை பெண் தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைப்பது, வேலைக்கு ஏற்ற சூழல், வயது வந்த பெண்களுக்கு வாக்குரிமை போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, 1908-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாள், போராட்டங்கள் நடந்தன.

இந்த நேரத்தில்தான், மாதர் பொதுநல வாதியான இட்லாரா சிட்சின் என்பவர், மார்ச் 8-ம் தேதியை 'உலக மாதர் தினமா’க கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தினார். முதன் முதலாக, 1911-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாள் உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் 1950-ம் ஆண்டு முதல் இக்கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

Monday, March 02, 2015

OLA ஆட்டோஸ்

கால் டாக்ஸி சந்தை, இப்போது கால் செய்து அழைக்கும் டாக்ஸி சந்தையாக இல்லை. ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் வரவால், சில ‘டச்’களில் நச்சென்று நம்மைத் தேடிவருகிறது டாக்ஸி. இப்போது டாக்ஸி மார்க்கெட்டைத் தாண்டி, ஆட்டோ மார்க்கெட்டுக்குள் இறங்கியிருக்கின்றன கால் டாக்ஸி நிறுவனங்கள்.

பெங்களூரூ, சென்னை, புனே, டெல்லி ஆகிய நகரங்களில் சோதனை முறையில் கால் ஆட்டோ சேவையைத் துவக்கியிருக்கிறது Ola நிறுவனம். ஆனால், இதை கால் ஆட்டோ என்று சொல்ல முடியாது. காரணம், இதை ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம்தான் அழைக்க முடியும்.
 
எப்படி இருக்கிறது ola ஆட்டோ?

ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் என மூன்று பிளாட்ஃபார்ம்களிலும் Ola அப்ளிகேஷன் இருக்கிறது. அப்ளிகேஷனைத் திறந்து, முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர், உங்களுடைய இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் எடுத்துக்கொள்கிறது ஆப். இதில், செடான், மினி, ப்ரைம் ஆகியவற்றுடன் ‘ஆட்டோ’ ஆப்ஷனும் இருக்கிறது. உடனடியாகப் பயணிப்பதற்கு மட்டும்தான் ஆட்டோ ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க முடியும். ஒவ்வொரு வகையான வாகனமும் நமக்கு அருகே, எங்கெங்கு இருக்கின்றன என்பதையும் மேப்பில் காட்டுகிறது அப்ளிகேஷன். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை மேப்பில் செலெக்ட் செய்ய முடியாது. இடத்தை டைப் அடித்து உறுதிப்படுத்தியவுடன், 1 நிமிடம் வரை அருகில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் நம் பயணத்தை ஏற்றுக்கொள்கிறார்களா என சோதனை செய்கிறது.

முதலில் இந்த அப்ளிகேஷனை டெஸ்ட் செய்தோம். சென்னை அண்ணா சாலையில் இருந்து, சாந்தோமுக்குச் செல்ல ஸ்மார்ட்போனில்  டச் செய்தோம். உடனடியாக ஒரு ஆட்டோ டிரைவரின் பெயர், புகைப்படம், ஆட்டோ எண் நம் திரையில் வந்தது. மேலும், இவருடைய ஆட்டோ எங்கு இருக்கிறது என்பதையும் மேப்பில் பார்க்க முடிந்தது. அடுத்து வந்த எஸ்எம்எஸ்-ல் ஆட்டோ டிரைவரின் மொபைல் போன் எண்ணும் இருந்தது. அந்த எண்ணை அழைத்தோம்.
 

‘‘சார். Ola-ல ஆட்டோ புக் பண்ணினேன். இப்போ எங்க இருக்கீங்க?’’

‘‘க்ரீம்ஸ் ரோடு பக்கத்துல இருக்கேன் சார். நீங்க எங்க இருக்கீங்க?’’

‘‘ஸ்பென்ஸர் பக்கத்துல நிக்கிறேன் வாங்க!’’

பத்து நிமிடங்களில் வந்தது ஆட்டோ. அப்ளிகேஷனில் வந்த ஆட்டோ பதிவு எண் சரியாக இருந்தது. நம்மை ஏற்றிக்கொண்டு மீட்டர் செட் செய்தார். அவருடைய போனில் ‘பயணி ஏறிக்கொண்டாரா’ என்று அழகாக தமிழில் காட்டியது. ‘ஆம்’ என்ற பட்டனை அழுத்திவிட்டு அவரே தொடர்ந்தார்.

‘‘இந்த அப்ளிகேஷன்ல லேண்ட் மார்க் வசதி கிடையாது சார். நீங்க சாந்தோம் போறீங்கன்னு மட்டும்தான் செட் செய்ய முடியும். ஆனா, சாந்தோம் சர்ச்சுக்குப் போறீங்களா, வேற எங்கேயாவது போறீங்களான்னு எல்லாம் செட் செய்ய முடியாது. அட... இது பரவாயில்லை. நீங்க கரெக்ட்டா எங்க இருக்கீங்கன்னு நீங்க கால் பண்ணி, இல்ல நான் கால் பண்ணி தெரிஞ்சுக்கிட்டாதான் உண்டு’’ என்றார். சாந்தோம் வரவும், மீட்டர் சார்ஜ் ப்ளஸ் 10 ரூபாய் கூடுதலாக வாங்கிக்கொண்டார். இந்த கூடுதல் 10 ரூபாயை ‘கன்வீனியன்ஸ் சார்ஜ்’-ஆக கொடுக்க வேண்டும் என்கிறது Ola.

அடுத்து ola அப்ளிகேஷனில் சாந்தோம் to சைதாப்பேட்டை ரூட்டைப் போட்டோம். ஆட்டோ டிரைவரே லைனுக்கு வந்தார்.

இவரிடம் விசாரித்தோம். Ola ஆட்டோஸ்-ன் பிஸினஸ் மாடல், இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. ஆட்டோ டிரைவர்களுக்கு மாதத்துக்கு 6,000 ரூபாய் ola கொடுத்துவிடுகிறது. தவிர, ஒவ்வொரு சவாரிக்கும் 30 ரூபாய் தருகிறது Ola.‘‘ஆட்டோ ஸ்டாண்டுக்கு Ola ஏஜென்ட்டுகள் வந்து, Ola-ல் சேர்றீங்களான்னு கேட்டாங்க. என் லைசென்ஸ், ரேஷன் கார்டு, ஆட்டோ டாக்குமென்ட் எல்லாத்தையும் பார்த்துட்டு, சேர்ந்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. கால் டாக்ஸி மாதிரி ஆட்டோவுக்கு வெளியில, Ola-ன்னு எந்த அடையாளமும் ஸ்டிக்கரும் ஓட்டலை. இது டெஸ்டிங்தானாம்.

ஆட்டோல வந்ததுக்கு நீங்க மீட்டர் சார்ஜ் தர்றீங்க. கூடுதலாக 10 ரூபாயும் தர்றீங்க. எனக்கு ஒவ்வொரு சவாரிக்கும் Ola 30 ரூபா தர்றாங்க. மேல, மாசத்துக்கு 6,000 ரூபாய் தர்றாங்க. இது தவிர, ஒருநாளைக்கு 12 மணிநேரம் போனை ஆஃப் பண்ணாம Ola-வுக்கு சவாரி ஓட்டினா, 100 ரூபாய் தர்றாங்க.  ஆனால், Ola-வுக்கு யாருமே காசு கொடுக்கலியே சார். இன்னும் எத்தனை நாளைக்கு அவங்களால எங்களுக்குக் காசு கொடுத்துக்கிட்டு இருக்க முடியும்னு தெரியலை!” என்றார்.

‘‘Ola அப்ளிகேஷன் மூலமாக ஆட்டோ புக் செய்யும் வசதி, ஆட்டோ ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களிடையே இப்போது பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. சென்னை, பெங்களூரு, புனே, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் 30,000 ஆட்டோக்கள் Ola-ல் இணைந்துள்ளன. முன்பைவிட அதிகமாக வாடிக்கையாளர்கள் கிடைப்பதால், ஆட்டோ டிரைவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது’’ என்கிறது Ola நிறுவனம்.

ஆட்டோ டிரைவர்களுக்கும் வாடிக்கை-யாளர்களுக்கும் நன்மையளிப்பதாக இந்தத் திட்டம் இருந்தாலும், இன்னும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது அவசியம். 

ர.ராஜா ராமமூர்த்தி, படங்கள்: தி.ஹரிஹரன்

மைக்ரோசாஃப்ட் லூமியா

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில், லூமியாவுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டம் உருவாகிறது. ஸ்மார்ட்போன் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் பக்கம் சாய்வதை மைக்ரோசாஃப்ட் உணர்ந்திருப்பதை, இதன் விலைகளை வைத்தே புரிந்துகொள்ளலாம். லூமியா 532 டூயல் சிம் போன் - 6,499 ரூபாய்க்கும், லூமியா 435 போன் - 5,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்துள்ளன. லூமியா 532 போனில் 4 இன்ச் ஸ்க்ரீன், 5 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 0.3 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 800x480 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 1 GB RAM மெமரி, 8 GB ஸ்டோரேஜுடன், 1.2GHz டூயல்-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 200 புராசஸர் கொண்டுள்ளது. விண்டோஸ் போன் 8.1 ஆபரேட்டிங் சிஸ்டம், லூமியா டெனிம் அப்டேட்டுடன் போனின் உயிராக இயங்குகிறது. லூமியா 435 போனில், டூயல் சிம் மாடலை மட்டுமே இங்கு விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். 532 போன் போலவே, லூமியா டெனிம் அப்டேட்டுடன் விற்பனையாகிறது 435. இரண்டு போன்களின் மெமரி வசதி ஒன்றுதான். இதில் 2 மெகா பிக்ஸல் பின்பக்க கேமராதான் உள்ளது. இதுதான் இந்த இரண்டு போன்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசம். மேலும், இதில் லூமியா செல்ஃபி அப்ளிகேஷன் உண்டு. 532 மாடலில் இது இல்லை.
 
இந்தியாவில் internet.org

‘அனைவருக்கும் இன்டர்நெட்’ என்ற நோக்கத்துடன் இயங்கும் இன்டெர்நெட்.ஆர்க் அமைப்பு, ரிலையன்ஸ் உதவியுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஃபேஸ்புக் ஆரம்பித்துவைத்த internet.org அமைப்பும், ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தச் சேவையை ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் ஃபேஸ்புக், ட்விட்டர்,  தேடுதல் தளமான பிங் உள்பட 40 வலைதளங்களை இலவசமாக ப்ரவுஸ் செய்ய முடியும்.மைக்ரோசாஃப்ட்


 

க்ரியேடிவ் சவுண்ட்

சமீபத்தில் க்ரியேட்டிவ் நிறுவனம் தனது புதிய ஸ்பீக்கரான 'க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர்’ ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்பீக்கர் உலக அளவில் பல்வேறு சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

டிசைன் க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரின் டிசைன் எளிமையாகவும், கச்சிதமாகவும் அமைந்துள்ளது. இதன் டிசைன் மட்டுமே பிரத்யேகமாகச் சில விருதுகளைப் பெற்றுள்ளது. வெளிப்புறம் முழுவதும் அலுமினியத்தினால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்பீக்கர், 57*202*115 மி.மீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம், பின்புறம் மற்றும் அடிப்பாகம் முழுவதும் சிலிக்கானைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், ழிதிசி (Near Field Communication), 'ரோர்’ பட்டன் ஆகிவற்றில் LED லைட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த LED லைட் பட்டன்கள் ஒவ்வொரு செயல்பாட்டின் ON/OFF விவரத்தைக் குறிக்கும்.


அம்சங்கள் இந்த ஸ்பீக்கர் 3.5 SD ஆடியோ இன்புட் மூலம் செயல்படுகிறது. மைக்ரோ ‘bass கார்டு பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் அமைந்துள்ளது. இந்த ஸ்பீக்கர் இரண்டு 1.5 இன்ச் உயர் அதிர்வெண் இயக்கிகள், ஒரு 2.5 இன்ச் ‘bass’ ஒலிக்கான இயக்கி மற்றும் இரண்டு ரேடியேட்டர்களைப் பெற்றுள்ளது. இந்த ரேடியேட்டர்கள் '‘bass’ ஒலியை அதிகரிக்கவும், விரிவுபடுத்தவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இந்த ஸ்பீக்கரின் எடை 1.1 kgஆகும்.


செயல்பாடு இந்த க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரை ப்ளூடூத் மூலம் இணைப்பது மிகச் சுலபம். ஒருமுறை இணைத்துவிட்டால், பின்பு இந்த ஸ்பீக்கரே அடுத்தடுத்த முறைகளில் இணைக்கப்பட்ட கருவிகளை ப்ளூடூத் மூலம் கண்டுபிடித்து இணைத்துக்கொள்ளும். SD கார்டு தவிர, ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட்களை இணைத்தும் இந்த ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தலாம். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், SD கார்டு ஆகிய எந்தக் கருவிகளைப் பயன்படுத்தினாலும் இந்த க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரிலிருந்து வரும் ஒலியின் தரம் எந்தவித மாற்றமுமின்றி சிறப்பாகவே இருக்கிறது.


இதர சேவைகள் ப்ளூடூத் அல்லாமல், க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரை மைக்ரோ USB கேபிள் மூலமாகவும் கருவிகளோடு இணைக்கலாம். அப்படி இணைத்தால் ஒலியின் தரம் மேலும் சிறப்பாக அமையும். பேட்டரியின் பயன்பாடு சற்று குறையும்.

இந்த ஸ்பீக்கரில் பிரத்யேகமாக அமைந்துள்ள 'ரோர்’ சேவை, ஒலியின் அளவை சற்று அதிகப்படுத்தித் தருகிறது. மற்றும் 'Tera Bassசேவை குறைந்த அளவில் இருக்கும் ஒலியின் 'Bass’ திறனை அதிகரித்துத் தருகிறது. இந்த க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரை போனோடு இணைத்து ஸ்பீக்கர் அழைப்புகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இந்த ஸ்பீக்கரை போர்ட்டபிள் சார்ஜராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


பேட்டரி க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கர் 6000mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. க்ரியேட்டிவ் நிறுவனம் இந்த பேட்டரி எட்டு மணி நேரம் வரை உழைக்கும் என்று கூறுகிறது. ஆனால், தினசரி பயன்பாட்டுக்கு இந்த பேட்டரி ஏழு மணி நேரம் வரைதான் தாங்கும்.

பிளஸ்: 

டிசைன்
இதர சேவைகள்

மைனஸ்: 

விலை

க்ரியேட்டிவ் சவுண்ட் ப்ளாஸ்டர் ரோர் ஸ்பீக்கரின் இந்திய விலை ரூபாய் 15,999.
செ.கிஸோர் பிரசாத் கிரண்.

சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்!

2015-2016-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருமான வரி வரம்பை உயர்த்தவில்லை என்றாலும், சிற்சில வகையில் வரிச் சலுகைகளை வழங்கி நடுத்தர வர்க்கத்தினரிடம் சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி வரம்பில் ரூ.50,000, 80சி பிரிவு முதலீட்டில் ரூ.50,000, வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.50,000 என மொத்தம் ரூ.1.5 லட்சம் ரூபாய்க்கு சலுகை களை அறிவித்தார். அந்தவகையில் அடிப்படை வருமான வரம்பு ரூ.2.5 லட்சத்தி லிருந்து குறைந்தபட்சம் ரூ.3 லட்சமாகவா வது உயர்த்துவார் என மாதச் சம்பளக் காரர்கள் பெரிதாக எதிர்பார்த்தனர். ஆனால், வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது மாதச் சம்பளதாரர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்றாலும், பெண் குழந்தைகள் சேமிப்புத் திட்ட வருமானத்துக்கு வரிச் சலுகை, போக்குவரத்துப் படிக்கான சலுகை தொகை இருமடங்காக உயர்வு, புதிய பென்ஷன் திட்டத்தில் கூடுதல் சலுகை, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியச் சலுகை உயர்வு என சில வரிச் சலுகைகளை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:


பென்ஷன் முதலீட்டுக்கு கூடுதல் சலுகை!

80சிசிசி பிரிவின் கீழ் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களின் பென்ஷன் திட்டங் களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு ரூ.50,000 கூடுதலாக வரிச் சலுகை அளிக்கப்படும். அதாவது, முதலீட்டு வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

இதுதவிர, 80சிசிடி பிரிவின் கீழ் தேசிய பென்ஷன் சிஸ்டம் மூலம் செய்யப்படும் முதலீட்டில் கூடுதலாக ரூ.50,000-க்கு வரிச் சலுகை அளிக்கப்பட உள்ளது.

சொத்து வரி நீக்கம்!

ரூ.30 லட்சத்துக்குமேல் நிகர சொத்து மதிப்பு இருந்தால், அதற்கு சொத்து வரி, சொத்து மதிப்பில் 1% வரி வசூலிக்கப்பட்டது.

2013-14-ம் ஆண்டில் இந்த வரி வசூல் ரூ.1,008 கோடியாக இருந்தது. ஆனால், அதற்காக மத்திய அரசு செலவிட்ட தொகை அதைவிட அதிகம். அதனால் அந்த வரியானது நீக்கப்படும் என நிதி அமைச்சர்  அறிவித்துள்ளார்.

இதற்கு பதில், ரூ.1 கோடி ரூபாய்க்குமேல் ஆண்டு வருமானம் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு (சூப்பர் ரிச்) கூடுதலாக சர்சார்ஜ் 2% விதிக்கப்படுகிறது. இந்த 2% கூடுதல் சர்சார்ஜ் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9000 கோடி வருமானம் கிடைக்கும்.

குறிப்பு: இந்த 2% சர்சார்ஜ்-ஐ சேர்த்தால் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டுக்கு சம்பாதிக்கும் பெரும் பணக்காரர்கள் மொத்தம் 12% சர்சார்ஜ் கட்ட வேண்டும்.

ரியல் எஸ்டேட்!

* உள்நாட்டில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் குறைக்க மற்றும் கட்டுப்படுத்த நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பினாமி பரிமாற்றம் (தடுப்பு) மசோதா கொண்டு வரப்படும். இதன்மூலம் ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை அசூர வேகத்தில் வளரக் காரணம் கறுப்புப் பணம் இந்தத் துறையில் புகுந்ததுதான். இதனால்  மனைகளின் விலை ஏகத்துக்கும் உயர்ந்ததால், சாதாரண மக்கள் மனை வாங்க முடியவில்லை. 

* வெளிநாட்டில் சொத்து இருக்கும்  விவரங் களைக் குறிப்பிடவில்லை என்றால் 7 ஆண்டுகள் வரை  சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  மேலும், 300% அபராதம் விதிக்கப்படும்.

* அசையாச் சொத்து வாங்கும்போது ரூ.20,000க்கு மேற்பட்ட தொகையை ரொக்கப் பணப் பரிமாற்றம் செய்ய தடை விதிக்கும்விதமாக இந்திய வருமான வரிச் சட்டம் திருத்தப்பட இருக்கிறது.

* சொத்தை வாங்காமலே ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்  மற்றும் இன்ஃப்ரா இன்வென்ஸ்ட்மென்ட்ஸ் டிரஸ்ட்களுக்கு மூலதன ஆதாய வரிச் சலுகை அளிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

* சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டான 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள அனைவ ருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட இருக்கிறது.

செல்வ மகள் திட்டத்துக்கும் வரி இல்லை..!

* பெண் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும் செல்வ மகள் (சுகன்யா சம்ரிதி) திட்டத்தில் வட்டிக்கும் இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது ஆண்டுக்கு 9.1% வட்டி வருமானம் அளிக்கும் இந்தத் திட்டம், பிஎஃப் மற்றும் பிபிஎஃப்-ஐவிட கவர்ச்சிகரமானதாக மாறியிருக்கிறது.

மருத்துவச் சிகிச்சைக்கான செலவு (80 டிடி)!

வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக் கான மருத்துவச் செலவில் ரூ.50,000 வரை வருமான வரிச் சலுகை தற்போது இருக்கிறது. இதில் கூடுதலாக ரூ.25,000 மருத்துவச் செலவுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

உடல் ஊனமுற்ற வரிதாரர் (80யூ)!

வருமான வரி கட்டுபவர் ஊனமுற்ற வராக இருந்தால், ரூ.50,000 வரிச் சலுகை இருக்கிறது. இதில் கூடுதலாக ரூ.25,000 மருத்துவச் செலவுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் (80 டி)!

* மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கான வரிச் சலுகை ரூ.15,000-லிருந்து இருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* மூத்த குடிமக்களுக்கு இந்தச் சலுகை ரூ.20,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் அதிக மருத்துவமனைச் செலவை சமாளிக்க முடியும்.

* ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காத 80 வயதுக்கு மேற்பட்ட மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.30,000 வரையிலான மருத்துவச் செலவுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
 


ரயில்வே பட்ஜெட்

எதிர்வரும் 2015-2016-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. இந்த பட்ஜெட்டில் ரயில் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தாமல் விட்டதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் பெரிய சபாஷ் வாங்கி இருக்கிறார்.

ரயில்வே துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி ரூபாயும், முதல்கட்டமாக வருகிற நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் அமைச்சர். ரயில்வே துறையில் கட்டமைப்பு வசதிகள் பெருகுவதால், பிற துறைகள் வளர்ச்சி அடையும்.


ஏறக்குறைய 1,200 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கவும், 9,400 கி.மீ தூரத்துக்கு மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றவும், 96,182 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். சரக்குப் போக்குவரத்துக்காக தனியாக இரண்டு ரயில் பாதைகளை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறார். வரும் நிதியாண்டில் 6,608 கி.மீ தூரத்துக்கு மின்மயமாக்கவும் நிதி ஒதுக்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கா கவும், செளகரியமான பயணத்துக்காகவும் பல திட்டங்களை அறிவித்திருக்கிறார். முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை இணைய வசதி, பெண்கள் பாதுகாப்புக்கு சிசிடிவி கேமாராக்கள் வசதி, பயணிகளின் வசதிக்காக 67 விழுக்காடு கூடுதல் நிதி ஒதுக்கீடு, ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனித் துறை அமைப்பு, 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள் மற்றும் ஏற்கெனவே உள்ள 17,000 கழிப்பறைகள் சீரமைப்பு என சாதாரண மக்களுக்கு பல அறிவிப்புகளைச் செய்திருக்கிறார்.

ஆனால், சிற்சில விமர்சனங்கள் இந்த ரயில்வே பட்ஜெட்டில் எழாமல் இல்லை. புதிய ரயில்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லாதது எல்லோருக்குமே ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. அதிலும், தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவுதான். கடந்த ஆட்சியிலேயே 90 நாட்கள் வரை முன்பதிவு செய்யும்படி நடைமுறையைக் கொண்டுவரப்பட்டது. அதற்கு மக்களிடம் சரியான வரவேற்பு கிடைக்காததால், மீண்டும் 60 நாட்களுக்கே மாற்றினார்கள். இப்போது இதை 120 நாட்களுக்கு அதிகரித்து இருக்கிறார் அமைச்சர். இந்தமுறையாவது மக்களிடம் இதற்கு வரவேற்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

ஆகமொத்தத்தில், மோடி நினைக்கும் புல்லட் ரயில் வேகத்தில் இந்த பட்ஜெட் இல்லை என்றாலும், சாமானியர்களையும் ஏற்றிக்கொண்டு நிதானமான வேகத்தில் கிளம்பி இருக்கிறது. அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் (ஆண்டுகளில்) இந்த ரயிலின் வேகம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

செ.கார்த்திகேயன்

Sunday, March 01, 2015

பொய்யும் பயமும்!


ஒரு தப்புச் செய்தபோது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்துகொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்கத் தோன்றுகிறது. நியாயமாக, தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால், அந்தப் பிரார்த்தனையே சோப்பைப் போல் அந்தத் தப்பை அகற்றிவிடும். அப்படிச் செய்யாமல் தப்பை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் மூட வேண்டும் என்கிறபோது, பொய் சொல்ல வேண்டியதாகிறது.

அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல், மூடி மூடி வைத்தால் சீழ் பிடித்துச் சிரங்காகிவிடும். அது மாதிரி, தப்பை மூடியவுடன் அது பொய் என்ற சிரங்காக ஆகிவிடுகிறது. உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய்தான்.

எதனால் தப்பை மறைக்கப் பார்க்கிறோம்? ஒன்று, நம்மை மற்றவர் நல்லவன் என்றே நினைக்க வேண்டும் என்ற பொய் எண்ணத்தினால்; அல்லது இன்னொருத்தரிடம் பயத்தினால் மறைக்கப் பார்க்கிறோம். பொய் என்பது சிரங்கு என்றால் பயம் என்பது சொறி மாதிரி.

பெரியவர்களிடமெல்லாம் உங்களுக்கு நிறைந்த மரியாதையும் மதிப்பும் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் அர்த்தமில்லாத பயம்கூடாது. பயம் உள்ளத் தூய்மையைக் கெடுக்கிற அழுக்கு. தப்பு செய்தால் கூட, அதை உணர்ந்து, பணிவுடன் உள்ளபடி பெரியவர்களிடம் சொல்ல வேண்டுமே ஒழிய, பொய்யால் மூடி மறைக்கக்கூடாது. தப்பு செய்தது போதாது என்று, பொய்யும் சொன்னோம் என்பது வெளிப்பட்டு நமக்கு மேலும் அவமானம், கஷ்டம்தான் ஏற்படும்.

உள்ளபடி சொன்னால் பெரியவர்கள் மன்னித்து விடுவார்கள். மன்னிக்காமல் அவர்கள் தண்டித்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. ‘நாம் தப்பு செய்தோம்; அதனால் அதற்குரிய தண்டனையைப் பெறுகிறோம்’ என்று தைரியத்துடன் தண்டனையை ஏற்க வேண்டும். தைரியம், சத்தியம் இவை எல்லாம் மன அழுக்கைப் போக்குகிற சோப், சீயக்காய் மாதிரி.

தெரியுமா ?


1) ஆங்கில உயிரெழுத்துகள் a,e,i,o,u ஆகிய ஐந்தையும் தன் பெயரினுள் கொண்ட ஒரே நாடு, 'Mozambique'.

2)a b c d e f ஆகிய ஆறு எழுத்துகளும் கொண்ட சிறிய வார்த்தை 'Feedback'.

3) ஆங்கில டைப்ரைட்டிங் மிஷினைப் பயன்படுத்தும்போது, ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டக்கூடிய மிக நீளமான வார்த்தை 'Typewriter'

4) ஆங்கிலத்தில், One, Two, Three என்று எழுதும்போது Ninety Nine வரை ஒரு தடவைகூட a b c d எழுத்துகள் வரவே வராது.

ஆர். பிரசன்னா