Search This Blog

Tuesday, November 29, 2011

டேம்- 999' (DAM 999)


தமிழக-கேரளா மாநிலங்களுக்கு இடையில் தீர்க்கப்படாதப் பிரச்னையாக கனன்று கொண்டிருக்கும் முல்லை- பெரியாறு அணை விவகாரம், அவ்வப்போது ஏதாவது ஒரு ரூபத்தில் பரபரப்பாகிவிடும். தற்போது, 'டேம்- 999' (DAM  999) என்கிற திரைப்பட வடிவில் பூதம் கிளம்பிவிட்டது.கேரளப் பகுதியில் அணை கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பதால், அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தரப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் இருக்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இதை ஏற்க மறுத்து, உரிய அளவுக்கு அணையில் தண்ணீரை தேக்க மறுத்து வருகிறது கேரளா. பழைய அணையை உடைத்துவிட்டால், தமிழகத்துடனான ஒப்பந்தம் காலாவதியாகிவிடும் என்று கணக்குப் போட்டு, 'அணை பலகீனமாக இருக்கிறது. அதை உடைத்துவிட்டு புதிய அணை கட்டப் போகிறோம்' என தொடர்ந்து பிரச்னை எழுப்பி வருகிறது. விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, 'அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும்கூட, அதை ஏற்க மறுத்து அடம் பிடித்து வருகிறது கேரளா.

இந்நிலையில்தான்... முல்லை-பெரியாறு அணை விஷயத்தைப் பின்னணியாகக் கொண்டு, அணை உடைவது போலவும், வெள்ளத்தில் சிக்கி ஏராளமான மக்கள் இறப்பது போலவும் பீதியூட்டும் காட்சிகளோடு 'டேம்-999’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது... தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த படத்தின் இயக்குநரான சோஹன்ராய், ''இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, முல்லை- பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசும் சம்மதிக்கும்'’ என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பது... விஷயத்தை மேலும் சிக்கலாக்கி வருகிறது! 

ஏன் ?

கேரளாவைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இப்படி ஏதாவது செய்து முல்லை-பெரியாறு அணையை உடைத்து, புதிய அணை கட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் உணர்வு... தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் முதல்வர்கள், மக்கள் பிரதிநிதிகள் யாருக்குமே இல்லை. கேரள மாநிலத்தில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து மக்கள் பிரநிதிகளும் ஒரே குரலில் பிரச்னைகளை எதிரொலிக்கிறார்கள். ஒன்றாகக் கைகோத்து பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் இருந்து முன்னாள் முதல்வரோ... இந்நாள் முதல்வரோ... மக்கள் பிரதிநிதிகளோ... இதுவரை யாருமே இப்பிரச்னை தொடர்பாக பிரதமரைச் சந்தித்து பேசவில்லை.  மார்க்சிஸ்ட் கட்சியின் அச்சுதானந்தன் கடந்த காலத்தில் முதல்வராக இருந்தபோது, அணை உடைந்து மக்கள் பலியாவது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ஒரு சி.டி-யை கேரளா அரசின் இணையதளத்தில் வெளியிட வைத்தார். கேரள மக்களிடமும் அது வினியோகிக்கப்பட்டது. இப்போது டேம்-999 படத்தை இயக்கியிருக்கும் சோஹன்ராய்தான் அந்தப் படத்தையும் எடுத்திருந்தார். அப்போதே தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், அரபு நாடுகளில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த பணக்காரர்களின் உதவியுடன் 'டேம்-999’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். 999 என்பது... முல்லை-பெரியாறு அணை கட்டப்பட்டபோது, கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே எழுதப்பட்ட 999 வருட ஒப்பந்தத்தைக் குறிக்கும் எண். இதிலிருந்தே இந்தப் படத்தின் நோக்கம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.


வெள்ளச் சேதத்தைத் தவிர்க்க சில யோசனைகள்..!


தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய வடகிழக்குப் பருவமழை, மிகப் பெரிய பாதிப்பை ஆங்காங்கே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. குறிப்பாக... டெல்டா மாவட்டங்கள், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி மிகப் பெரிய மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது.கடந்த பல ஆண்டுகளாகவே... மழை, வெள்ள பாதிப்பு... அதையட்டிய நிவாரணங்கள் என்றே காலம் ஓடிக் கொண்டிருக்கிறது! அதன் தொடர்விளைவாக, 'வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு... தடுப்பு அணை கட்ட 100 கோடி ஒதுக்கீடு! தூர் வார 300 கோடி ஒதுக்கீடு' என்று படாடோப அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, கோடிகளும் கரைக்கப்படுகின்றன. ஆனால், 'நிரந்தரத் தீர்வு' என்பதுதான் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

முன்பெல்லாம் இப்போது பெய்வதைவிட அதிகளவு மழை பெய்தது. அந்த சமயங்களில் விவசாய நிலங்களும் அதிகம். ஆனாலும், பாதிப்புகள் வந்ததில்லை. அதற்கான காரணம், மன்னராட்சி காலங்களில் கடைபிடிக்கப்பட்ட சிறந்த நீர் நிர்வாக முறைகள்தான். ஏரி, குளங்களில் குறிப்பிட்ட கொள்ளளவைத் தாண்டி நீர் மட்டம் உயரும்போது... வெளியேற வசதியாக மறுகால் அமைப்புகள் இருந்தன. மறுகால் வழியாக வெளியேறும் தண்ணீர், ஆறு, கடல் என கலந்துவிடும். தற்போது மறுகால் பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அதனால்தான் குளங்கள், ஏரிகளில் உடைப்பு ஏற்படுகிறது. கொஞ்சம் பெரிய மழை பெய்தாலும், நம்மால் சமாளிக்க முடிவதில்லை.பொதுப்பணித்துறை விதிகளின்படி, நீர் வரும் வாய்க்காலின் இரு கரைகளிலும் வாகனங்கள் போகும் அளவுக்கு இட வசதி (பாதை) இருக்க வேண்டும். வாய்க்காலில் உடைப்பு, விரிசல் ஏற்பட்டால் இந்த இடைவெளி மூலமாகத்தான் சீரமைக்க வேண்டிய பொருட்களை எடுத்துச் செல்வார்கள். விவசாயிகளும் இந்தப் பாதைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது வாய்க்காலின் கரைகள்கூட பட்டா நிலங்களாக மாறியிருக்கின்றன. அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் மின் இணைப்புகள்கூட கொடுக்கப்பட்டிருப்பதுதான் வேதனை.முந்தையக் காலங்களில் நீர் வரத்து வாய்க்கால்கள், வடிகால்கள் போன்றவற்றை முறையாகப் பராமரித்தார்கள். அதில் நாம் தற்போது கோட்டை விட்டிருப்பதுதான் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம்.


வருவாய்த் துறை பதிவேட்டின்படி தமிழகத்தில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நீர் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பத்தாயிரத்துக்கும் குறைவான நீர் ஆதாரங்கள்தான் பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றன. சென்னையைச் சுற்றி மட்டும் 240 ஏரி மற்றும் குளங்கள் இருப்பதாக பதிவேட்டில் உள்ளது. ஆனால், 40 நீர்நிலைகளைத்தான் பார்க்க முடியும்.குளம், மடை, கால்வாய், ஆறு போன்றவற்றின் உறுதித்தன்மையைத் தொடர்ந்து கவனித்து வருவதற்காக, 'லஷ்கர்’ என்கிற பதவி பொதுப்பணித்துறையில் முன்பு இருந்தது. தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் கவனித்து, பிரச்னைகள் இருந்தால் உடனே உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வார் லஷ்கர். அதன் மூலம் பல விஷயங்கள் சரி செய்யப்பட்டு வந்தன. அந்தப் பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, புதிய ஆட்கள் நியமிக்கப்படவே இல்லை.இப்படி முன்னோர்கள் கடைபிடித்த பழைய முறைகள் பலவும் மறைந்துபோனதன் விளைவுதான்... பேரிடர்களுக்குக் காரணமாக இருக்கிறது. அவற்றையெல்லாம் மீண்டும் கையில் எடுத்தால் மட்டும்தான், இனி வரும்காலங்களில் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். அதை விடுத்து ஒவ்வொரு ஆண்டும் மழைக்குப் பிறகு வெறுமனே நிவாரணம் கொடுப்பதில் அர்த்தமேயில்ல.


விகடன் 

கற்றது கையளவே..! கற்பதற்கு எவ்வளவு இருக்கிறது!

 
கற்பதற்குத்தான் எவ்வளவு இருக்கிறது இந்த உலகில் என்று நான் அடிக்கடி ஆச்சரியப் பட்டுக்கொண்டு இருக்கிறேன்.சில நாட்களுக்கு முன், இணையத்தில் ஒரு கதை படித்தேன். அதைக் கதை என்பதைவிட, வாழ்க்கைச் சம்பவம் ஒன்றின் வர்ணனை என்பது சரியாக இருக்கும்.  நீங்களும் அதைப் படித்து மகிழுங்கள்.
 
த்துவப் பேராசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அவர். கடவுளிடம் விஞ்ஞானத்துக்கு உள்ள பிரச்னை பற்றி, மாணவர்களிடம் பேசுகிறார் அவர். தனது மாணவர்களில் ஒருவரை எழுப்பி, ''உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?'' என்று கேட்கிறார். ''நிச்சயமாக, சார்!'' என்கிறார் மாணவர். உரையாடல் தொடர்கிறது...
'கடவுள் நல்லவரா?''
 
''நிச்சயமாக!''

''கடவுள் எல்லாம் வல்லவரா?''

''ஆமாம்.''

''என் சகோதரர் புற்றுநோயால் இறந்துபோனார். இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அவர். தன்னை இந்த நோயிலிருந்து மீட்கும்படி அவர் கடவுளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். ஆனாலும், கடவுள் அவரைக் கைவிட்டுவிட்டார். நோய்வாய்ப்பட்டு இருக்கும் மற்றவர்களுக்கு நாமே ஓடிச் சென்று உதவ முயல்வோம். ஆனால், கடவுள் உதவவில்லை. பிறகு எப்படி, கடவுள் நல்லவர் என்று சொல்கிறீர்கள்?''

மாணவர் இதற்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பேராசிரியர் விடவில்லை. ''சரி, இதற்குப் பதில் சொல்லுங்கள்; இந்த உலகில் தீங்கானவைகளும் இருக்கிறதுதானே?''

''ஆமாம்!''

''நோய்கள், ஒழுக்கக் கேடுகள், வெறுப்பு, அருவருப்பு... இன்னும் மோசமான விஷயங்கள் எத்தனை இருக்கிறது உலகில்? இவற்றையெல்லாம் உருவாக்கியது உங்கள் கடவுள்தானே?''

இந்தக் கேள்விகளுக்கும் மாணவரிடம் பதில்கள் இல்லை.

''நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகத்தை கவனித்து, அதை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு நமக்கு ஐந்து வகையான உணர்வுகள் உள்ளன என்று
விஞ்ஞானம் சொல்கிறது. சொல்லுங்கள்... கடவுளை நீங்கள் உங்கள் கண்ணால் பார்த்திருக்கிறீர்களா?''

''இல்லை, சார்!''

''சரி, உங்கள் கடவுள் பேசியாவது கேட்டிருக்கிறீர்களா?''

''இல்லை, சார்!''

''கடவுளின் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? தொட்டு உணர்ந்திருக்கிறீர்களா?''

''இல்லை, சார்!''

''அப்படியிருந்தும், கடவுள் இருக்கிறார் என்று இன்னமும் நம்புகிறீர்கள்..?''

''ஆமாம், சார்!''

''அனுபவ சோதனைகள் மற்றும் நிரூபண முறைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, கடவுள் என்று ஒருவர் இல்லை என்கிறது விஞ்ஞானம். இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

''எதுவும் சொல்லவில்லை, சார்! என்னிடம் கடவுள் மீதான நம்பிக்கை மட்டுமே உள்ளது.''

''நம்பிக்கை... அதுதான் விஞ்ஞானத்துக்குள்ள பிரச்னை.''

இப்போது மாணவர், ''சார், நான் தங்களைச் சில கேள்விகள் கேட்கலாமா?'' என்கிறார். தொடர்ந்து... ''வெப்பம் என்று ஒரு விஷயம் உள்ளதா, சார்?''
''ஆமாம்.''

''குளிர்ச்சி என்றும் ஒரு விஷயம் உள்ளதா?''

''ஆமாம். உள்ளது!''

''இல்லை, சார்! அப்படி எதுவும் இல்லை'' என்று மாணவர் சொல்ல, அந்த வகுப்பறையே அமைதியில் ஆழ்கிறது.


''சார், நிறைய வெப்பம் இருக்க முடியும்; அதிக வெப்பம், மிக அதிக வெப்பம், மெகா வெப்பம், சாதாரண வெப்பம், குறைவான வெப்பம் அல்லது வெப்பமின்மை எல்லாம் இருக்க முடியும். ஆனால், குளிர்ச்சி என்கிற விஷயமே இல்லை. வெப்பம் குறைந்து கொண்டே வந்து, மைனஸ் 458 டிகிரி வரை கூடச் செல்ல முடியும். ஆனால், அதற்குப் பிறகு நம்மால் போகமுடியாது. வெப்பமின்மையைக் குறிக்கத்தான் குளிர்ச்சி என்கிற வார்த்தையை நாம் பயன்படுத்து கிறோம். குளிர்ச்சியை நம்மால் அளவிட முடியாது. வெப்பம் என்பது ஒரு சக்தி. குளிர்ச்சி என்பது வெப்பத்துக்கு எதி ரானது இல்லை. இயற்பியல் கோட்பாட்டின்படி, குளிர்ச்சி என்று நாம் எதைக் கருதுகிறோமோ, அது உண்மையில் வெப்பமின்மை தான்!''

வகுப்பறையில் மூச்சுவிடும் சத்தம்கூடக் கேட்கும் அளவுக்கு மிக அமைதி.
''சார், இருள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இருள் என்று ஏதாவது இருக்கிறதா?''

''ஆமாம். இருள் இல்லையென்றால் இரவு என்பது இல்லையே?''

''மீண்டும் தவறு செய்கிறீர்கள், சார்! குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம், பளீரிடும் வெளிச்சம் எல்லாம் உண்டு. ஆனால், தொடர்ந்து உங்களுக்கு எந்த வொரு வெளிச்சமும் கிடைக்கவில்லை என்றால், அதையே இருட்டு என்று சொல்கிறீர்கள். உண்மையில், இருள் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருந்தால், இருட்டை இன்னும் அதிக இருட்டாக உங்களால் செய்ய முடியும், இல்லையா சார்?''

''சரி, இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?''

''உங்கள் தத்துவரீதியான வாதங்கள் எல்லாம் குறைபாடானவை என்கிறேன்!''
''குறைபாடானவையா? எப்படி என்று விளக்க முடியுமா?''

''உங்கள் வாதங்கள் எல்லாம் இரட்டைத்தன்மை கொண்டவையாக உள்ளன. வாழ்க்கை - மரணம், நல்ல கடவுள் - கெட்ட கடவுள் என வாதிடுகிறீர்கள். வரையறுக்கப் பட்ட ஒன்றாக, நம்மால் அளவிடக்கூடிய ஒன்றாக கடவுள் என்பதைப் பார்க்கிறீர்கள். சிந்தனை என்பதைக் கூட விஞ்ஞானத்தால் இன்னும் சரியாக விளக்கமுடியவில்லை. விஞ்ஞானத்தில் மின் சக்தி, காந்த சக்தி எல்லாம் இருக்கிறது. ஆனால், இரண்டையும் யாரும் பார்த்ததில்லை. அவை பற்றி முழுமையாக யாரும் அறிந்ததில்லை.

வாழ்க்கைக்கு எதிரான விஷயமாக மரணத்தைப் பார்ப்பதே அர்த்தமில்லாதது. மரணம் என்கின்ற ஒரு ஸ்தூல விஷயமே இல்லை. அது வாழ்க்கைக்கு எதிரானது அல்ல;

வாழ்க்கையின்மை என்பதுதான் அது. சரி சார், இதைச் சொல்லுங்கள்... குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று மாணவர் களுக்கு நீங்கள் பாடம் போதிக்கிறீர்கள் அல்லவா?''

''இயற்கையின் பரிணாம வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது, அது சரிதானே?''

''இயற்கைப் பரிணாம வளர்ச்சி என்ன என்பதை நீங்கள் உங்கள் கண்களால் பார்த்திருக்கிறீர்களா? இல்லைதானே? பரிணாம வளர்ச்சி நிகழ்வதை யாருமே ஒருபோதும் கவனித்திருக்கவில்லை; இது தொடர்ந்து நடை பெறும் ஒரு விஷயம் என்பதையும் யாராலும் நிரூபிக்க முடியாது. அப்படியிருக்க, நீங்கள் உங்கள் அபிப்ராயத்தைத்தான் கற்றுக் கொடுக்கிறீர்கள், இல்லையா சார்? நீங்கள் விஞ்ஞானி இல்லை; வெறுமே அறிவுரை கூறுபவர். அவ்வளவுதானே?''

வகுப்பில் பெருத்த ஆரவாரம்!

அடுத்து.... ''நமது பேராசிரியருடைய மூளையை யாராவது பார்த்திருக்கிறீர்களா?'' என்று மாணவர் கேட்க, சிரிப்பொலியால் வகுப்பறையே அதிர்ந்தது. ''அல்லது, அவர் மூளையின் சத்தத்தை இங்கே உங்களில் யாராவது கேட்டிருக் கிறீர்களா, அதைத் தொட்டு உணர்ந்திருக்கிறீர்களா அல்லது அதன் வாசனையையாவது அறிந்ததுண்டா? யாருமே அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஆக, சார் சொன்னது போல், அனுபவத்தால் வரையறுக்கப்பட்ட, நிரூபண முறைகளின்படி பார்த்தால், இவருக்கு மூளை இல்லை என்கிறது விஞ்ஞானம். ஆக, மூளை இல்லாத உங்களின் உரைகளை நாங்கள் எப்படி நம்ப முடியும், சார்?''

அறை முழுக்க நிசப்தம்! பேராசிரியர் அந்த மாணவரை உற்றுப் பார்த்தார். அவர் முகத்தில் இனம்புரியாத உணர்ச்சி.

''நான் நிகழ்த்துகிற உரைகளை நம்பிக்கையின் பேரில் நீங்கள் ஏற்க வேண்டும் என்று கருது கிறேன்.''

''அதேதான் சார், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இணைப்பு அதுதான். நம்பிக்கை! அதுதான் எல்லாவற்றையும் செலுத்திக்கொண்டு இருக்கிறது; உயிர்ப்புடன் வைத்திருக்கிறது'' என்று முடிக்கிறார் மாணவர்.

வகுப்பில் பலத்த கை தட்டல்!

சண்முக சுந்தரம்
சேர்மன்
South India CA association


விகடன்
Monday, November 28, 2011

பெயர்க் காரணம்


கடப்பைக் கல்

கடப்பை பகுதியில் இயற்கையாகப் பலகை வடிவில் கல் கிடைத்ததால் இதுக்குக் கடப்பைக் கல் என்று பெயர் வந்தது.  

பென்சிலின் 

பென்சிலின் என்பது மருந்து. இது ஜீனல் பென்சிலியம் என்ற காளான் வகையிலிருந்து தயாரிக்கப்படுவதால் பென்சிலின் என்று பெயர் வந்தது.

‘லவ் ஆல்’

டென்னிஸ் விளையாட்டில் 0 என்பதைக் குறிக்க ‘லவ்’ என்று சொல்வார்கள். பிரெஞ்சு மொழியில் ‘லஃப்’ என்றால் முட்டை என்று பொருள். முட்டை வடிவில் உள்ள பூஜ்ஜியத்தைக் குறிக்க ‘லஃப்’ என்று அழைத்து வந்தனர். பின்னர் அதுவே லவ் என்றாகிவிட்டது.
காக்கி

அடர்த்தியான பழுப்பு நிறத்தை காக்கி என்று குறிப்பிடுகிறோம். இந்தச் சொல் உருது மொழியிலிருந்து வந்தது. அந்த மொழியில் காக்கி என்றால் ‘புழுதியடைந்த’ என்று பொருள். காக்கி வண்ணத்திலிருந்த பொருளைக் கண்ட உருதுக்காரர்கள் ‘காக்கி’ என்று அழைக்க, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் அது பரவிவிட்டது.

ரோபோட்

செக் நாட்டு எழுத்தாளர் கரேல்சி சேபல் 1923-ல் ‘ரோசம்ஸ் யுனிவர்சல் ரோபோட்ஸ்’ என்ற நாடகத்தை எழுதினார். அதில் வரும் விஞ்ஞானி ஒருவர் மனிதனைப் போல் வேலைகளைச் செய்யும் இயந்திர மனிதனை உருவாக்கினார். செக் மொழியில் ‘ரோபோடா’ என்றால் வேலை செய்பவன் என்று பொருள். இதிலிருந்துதான் ‘ரோபோட்’ என்ற ஆங்கிலச் சொல் உருவானது.  

பொது அறிவு

என்சைக்ளோபீடியா என்பது கிரேக்க மொழிச் சொல். என்சைக்ளோபீடியா என்றால் கிரேக்க மொழியில் பொது அறிவு என்று பொருள். 16-ம் நூற்றாண்டு முதல் ஆங்கிலேயர்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 1751-ம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா வெளியானது.

அழகான தவளைகள்!

அமேசான் மழைக்காடுகளில் பல வண்ணத் தவளைகள் வசிக்கின்றன. ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், கறுப்பு என்று ஆழ்ந்த நிறங்களில் கண்களைக் கவரக்கூடிய வகையில் காணப்படுகின்றன. இவை பார்க்க அழகாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானவை. இந்தத் தவளைகளின் முதுகில் ஏராளமான நச்சுப் பைகள் உள்ளன. அருகில் சென்றால் நச்சைப் பீய்ச்சி அடித்துவிடும். அமேசானில் வாழும் பழங்குடி மக்கள் இந்த நச்சில் அம்பைத் தேய்த்து, வேட்டையாடுகிறார்கள்.

 நாற்றமடிக்கும் பறவை

அமேசான் காடுகளில் வாழ்கிறது நாற்றமடிக்கும் பறவை (Stinky Bird). இந்தப் பறவைக்கு அருகில் எந்த விலங்கும் செல்ல முடியாது. அவ்வளவு நாற்றம் அடிக்கும். இதன் மூலம் எதிரிகளிடமிருந்து சுலபமாகத் தப்பி விடுகிறது. எப்பொழுதும் தனியாகவே வாழும். இலைகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும். 

5 வித்தியாசங்களைக் கண்டுபிடி!


 இரண்டு படத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடித்து கூறுங்கள்  

Saturday, November 26, 2011

சைரஸ் மிஸ்ட்ரி - டாடா குழுமத்தின் அடுத்த வாரிசு!


சைரஸ் மிஸ்ட்ரிக்கு சூப்பர் சனிப் பெயர்ச்சி! 71 பில்லியன் டாலர்கள் சொத்துள்ள இந்தியாவின் மதிப்புமிகுந்த டாடா குழுமத்தின் அடுத்த வாரிசு சைரஸ். ரத்தன் டாடா ரிடையர் ஆகும் முடிவை வெளியிட்டதில் இருந்து, டாடா குழுமத்துக்கு அடுத்த தலைவரைத் தேடும் இமாலயப் பணியை ஐந்து பேர் கொண்ட குழு, கடந்த பதினைந்து மாதங்களாகச் செய்து வந்தது. இதுவரை டாடா குடும்பத்துக்குள்ளேயும் வெளியேயும் பதினான்கு பேர்களை இக்குழு இன்டர்வியூ செய்தது. ஆனால், எதுவும் சரியாக வரவில்லை.ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடாவே அடுத்த தலைவராக வரவாய்ப்புண்டு என்று ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. அதேபோல் பெப்சி கோவின் இந்திரா நூயி, இந்துஸ்தான் லீவரின் முன்னாள் தலைவர் கேகி டாடிசேத் ஆகியோர் பெயர்களும் வலம் வந்தன. ஒருவகையில், இவர்களெல்லாம் தேர்வாகாது போனதற்கு ரத்தன் டாடாவின் எதிர்பார்ப்பே காரணம்.நாற்பதுகளில் இருப்பவராக, இளையவராக, திறமையானவராக இருக்க வேண்டும் என்றே ரத்தன் விரும்பினார். சைரஸ் இதற்குப் பொருத்தமாக அமைந்தார். மேலும், சைரஸ், வேற்று நபரும் அல்ல. டாடா குழுமத்தில் அதிகபட்சமாக 18 சதவிகிதம் பங்குகளை வைத்திருக்கும், பலோன்ஜி ஷப்பூர்ஜியின் இளைய மகன். பலோன்ஜி, 2005 வரை, டாடா குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஓய்வு பெற்றதும், சைரஸ் டாடா குழுமத்தின் ஒரு டைரக்டர் ஆனார்.


அப்போதிலிருந்து, சைரஸை, ரத்தன் டாடா கவனித்து வந்திருக்கிறார். டாடா என்று பெயரில்லையே தவிர, சைரஸும் ரத்தன் டாடாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்; பார்ஸி இனத்தைச் சேர்ந்தவரும் கூட.  சைரஸும் லேசுபட்டவர் அல்ல. தமது அப்பா பலோன்ஜியின் மிகப் பெரிய எஸ்.பி. குழுமத்தின் தலைவராக இருந்து கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்தவர். ரத்தனைப் போல் கோஃப் விளையாட்டிலும் ஏராளமான புத்தகங்கள் வாசிப்பதிலும் ஆர்வமுடையவர். குரல் உயர்த்தாதவர். இரண்டு மகன்கள். 2012 டிசம்பரில் ரத்தன் ரிடையர் ஆவார். அடுத்த பன்னிரெண்டு மாதங்களும், சைரஸ், ரத்தனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, மொத்த டாடா சாம்ராஜ்ஜியமும் சைரஸ் கையில். பாதுகாப்பான நம்பிக்கையானவரின் தோள்களில்!

கொலைவெறிப் பாட்டு ஏன் ஹிட்டானது - ஓ பக்கங்கள், ஞாநி

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டச் செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடாமல் எட்டாம் பக்கம், பத்தாம் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிற ஓர் ஆங்கிலச் செய்தித்தாள், முதல் பக்கத்தில் ‘கொலைவெறி’ சினிமாப் பாடல் சூப்பர் ஹிட்டான செய்தியை நான்கு காலம் தலைப்பிட்டு வெளியிடுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி?கமர்ஷியல் சினிமாக்காரர்கள் எப்போதும் மிகையான பப்ளிசிட்டியில் ஈடுபடுவது வழக்கம். அது அவர்களுக்கு ‘தொழில் தர்மம்’. இருபது லட்ச ரூபாயில் ஒரு செட் நிர்மாணித்தால், மூன்று கோடி செலவிட்டதாகச் சொல்வார்கள். நடிக்கும் பாத்திரத்துக்காக நடிகர் தம்மை என்னென்னவோ விதத்தில் வருத்திக் கொண்டதாகச் சொல்வார்கள். அசல் வருத்தம் 10 சதவிகிதம் என்றால், பப்ளிசிட்டி வருத்தம் 150 சதவிகிதமாக இருக்கும். சினிமாக்காரர்கள் பப்ளிசிட்டி செய்ய வேறு எதுவும் இல்லாவிட்டால், குறைந்த பட்சம், ஒரு நடிகரோ நடிகையோ அண்ணாசாலையில் நடந்து போகிற காட்சியைப் படம் பிடித்ததைக்கூட, ‘கொளுத்தும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நடித்த ஜிகினாஸ்ரீ மருத்துவமனையில் கொப்புளங்களுடன் அனுமதி’ என்று பரபரப்பாக்குவார்கள். 

அந்த வரிசையில் படத்துக்கான முன்னோட்ட பப்ளிசிடியாகத்தான் ‘ஒய் திஸ் கொலை வெறி’ பாட்டு வந்திருக்கிறது. ரஜினிகாந்த் தொடர்புள்ள எதையும் செய்தியாக்கி விற்பனை செய்வதில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கும் கொலைவெறிக்கு இது சரியான தீனி. படத்தின் டைரக்டர்: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. நாயகன்: மருமகன் தனுஷ். ஜோடி: கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி. சிறந்த நடிகர் விருது வாங்கிவிட்ட தனுஷ் அடுத்து சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ஆங்கிலப் பாடலாசிரியர். தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் இடம் பெறும் ஆங்கிலப் பாட்டுகளை எழுதுபவரான ராண்டார் கையின் இடத்தை தனுஷ் பிடிக்கக் கூடும். கொலைவெறிப் பாட்டு ஏன் ஹிட்டானது? அதில் அப்படி என்னதான் இருக்கிறது? 

இன்றைக்கு ஃபேஸ்புக் போன்ற சமூகத் தொடர்புக்கான இணையதளங்களில் ஒரு பாட்டோ, ஒரு பொருளோ, ஒரு விஷயமோ ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை. சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொய்க் கணக்குகளை ஆயிரக்கணக்கில் வைத்திருக்கின்றன. இவையெல்லாம் இளம் ஆண்கள், பெண்கள் பெயரில் உலவுகின்றன. இவற்றில் ‘லேட்டஸ்ட் மாடல் ...... ஷூவை பார்த்தியா? அருண் போட்டுக்கிட்டு வந்தான். ஆவ்சம்(Awesome) என்று அகல்யா, ஷோபாவுக்கு ஸ்டேட்டஸ் போடுவாள். இதை ஐநூறு பேர் லைக் பண்ணுவார்கள். அருண், அகல்யா, ஷோபா லைக் பண்ணும் ஐநூறு பேர்களும் கற்பனைப் பாத்திரங்கள். ஃபேஸ் புக்கில் நிஜம் போல உலவுபவர்கள். ஷூ கம்பெனியால் உலவ விடப்பட்டவர்கள். புது ஷூ செய்தி போதுமான அளவு பரப்பப்பட்ட பின்னர்தான் கம்பெனி ஷூவை மார்க்கெட்டுக்கே அனுப்பும்!இந்த மாதிரி நவீன டெக்னாலஜி சார்ந்த வணிக சாமர்த்தியங்களை, தமிழ் வணிக சினிமா அடைந்துவிட்டதா என்று தெரியவில்லை. அதை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பது நிச்சயம். கொலைவெறிப் பாட்டு நாடெங்கும் இளைஞர்களின் தேசிய கீதமாக ஆகிவிட்டதாகச் செய்திகள் பரப்பப்படுகின்றன. சென்னையில் அது தமிழ்ப் படத்தில் இருக்கும் ஆங்கிலப் பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. வடக்கே ஹிந்தி வானொலி சேனல்களில் ஒலிபரப்பப்படும் முதல் ‘தமிழ்’ பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. பாடல் கேட்கும் இளம் மனங்களில் இடம்பிடிக்க அடிப்படைக் காரணம் கால் தட்டவைக்கும் தாள கதியும் எளிமையான வடிவமும்தான். திரும்பப் பாடிப் பார்க்க வசதியான பாட்டு. உண்மையில் பாட்டு என்றே சொல்ல முடியாது. தாளத்துக்கேற்ப பேசுதல்தான். உச்சாடனம், ஓதுதல் என்பதன் பல்வேறு வடிவங்களாக ராப், ரெகெ போன்றவை உருவாகி வந்திருப்பதன் இன்னொரு தொடர்ச்சி இது. 

பாடலின் விஷயம்தான் நம் ஆழ்ந்த கவனத்துக்குரியது. கல்யாணப்பரிசு காலத்திலிருந்து சினிமாவில் இருக்கும் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருத்தன்’ தீம்தான். ஆனால் அறுபது வருட முந்தைய தமிழ்க் காளைக்கும் இன்று தனுஷ் மூலம் சித்திரிக்கப்படும் தமிழ்க் காளைக்கும் கடுமையான வேறுபாடு இருக்கிறது.  இன்று தனுஷ் காட்டும் இளைஞன் விடலையாக, பொறுக்கியாக, ஒரு சமூகப் புல்லுருவியாக இருக்கிறான். ‘ஆடுகளம்’ படத்தில் தனுஷ் ஏற்ற பாத்திரம் அவன் குடும்பத்துக்கு எந்தவிதத்திலும் பயன்படாத ஒரு மனிதன் பற்றியது. விதவைத்தாய் வறுமையில் புலம்பிக்கொண்டே இருக்கிறாள். அவள் பேசினாலே, “ஸ்பீக்கரை ஆஃப் பண்ணு,” என்று விடலை மொழியில் வாயை மூடச் சொல்லுகிறான். தொடர்ந்து பேசும் தாயிடம் வாயை மூடாவிட்டால், “கொன்னே போடுவேன்” என்று கர்ஜிக்கிறான். செவத்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் துரத்தித் துரத்தி மிரட்டி மிரட்டிக் காதலிக்க வைக்கிறான். முப்பது நாற்பது வயதைக் கடந்தவர்களுக்குத்தான் இந்தப் படத்தின் சேவல் சண்டை பண்பாட்டு அடையாளம். தனுஷ் என்ற கதாநாயகனுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் 14 முதல் 20 வரையிலான எண்ணற்ற இளைஞர்களுக்கு, பொறுக்கித்தனமும் பெண் சீண்டலும்தான் படத்தின் செய்தி.குடும்பப் படமாக, அதாவது குடும்பத்தோடு சென்று கண்டுகளிக்க ஏற்றவையாக, சென்ற வருடம் பாராட்டப்பட்ட இன்னொரு படம் களவாணி. விமல் நாயகனாக நடித்த இந்தப் படத்தின் நாயகப் பாத்திரம் இன்னொரு பொறுக்கி. துபாயிலிருந்து அப்பா அனுப்பும் பணத்தை அம்மாவிடமிருந்து ஏமாற்றிப் பிடிங்கிக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வந்து பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் சைக்கிளைத் தடுத்துப் பிடித்துத் தம்மைக் காதலிக்கும்படி மிரட்டுபவன். இந்தப் படமும் விமலுக்கு பதில் தனுஷ் நடித்திருக்கக்கூடிய ஒரு படம்தான்.இரு படங்களிலும் பொறுக்கிக் கதாநாயகர்களால் காதலிக்கும்படி மிரட்டப்பட்ட நாயகிகள்; அடுத்த கட்டத்தில் தாமே மனமுவந்து காதலிக்கிறார்கள். இதுதான் விடலை மனங்களுக்குக் களிப்பூட்டும் செய்தி. 

இந்த வரிசையில்தான் ‘கொலைவெறி’ பாடலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. செவத்த பெண் ஏமாற்றிவிட்டாள். கறுத்த பையன் புலம்புகிறான். வெள்ளை நிலா, கறுப்பு வானத்தில் இருப்பது போல, நாம் இருக்க முடியாதா என்று ஏங்குகிறான்.தன் காதலை ஏற்காதவளை, கொலை வெறி பிடித்தவள் என்று வர்ணிக்கிறான். கொலைவெறிப் பாடல் வந்திருக்கும் அதே சமயத்தில் வெளியாகியிருக்கும் இன்னொரு தனுஷ் பாடிய பாடல், ‘என் காதல் அது கண்ணீருல...’ இதில் பிரபலமான வரிகள்: அடிடா அவளை, உதைடா அவளை என்பவைதான். எதற்கு அடிக்க வேண்டும்? உதைக்க வேண்டும்? இவனைக் காதலிக்க அவள் மறுத்துவிட்டதற்குத்தான். விடலை மனங்களுக்கு இன்னொரு செய்தி. உனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க வேண்டாம். அவள் எதற்கு இருக்க வேண்டும்? அடி உதை கொல்லு... தமிழ் நாட்டில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றுவது தொடர்ந்து நடக்கும் கொடுமையான வன்முறை. 

இரு பாடல்களிலும் குடிப்பதும்; போதையும் இந்தச் சோகத்துக்கு மருந்தாக ஆறுதலாகச் சொல்லப்படுகிறது. இருபதாயிரம் கோடி ரூபாய் விற்பனையை நோக்கித் தமிழக அரசின் மது வியாபாரம் படுவேகமாக ‘வளர்ந்து’ கொண்டிருக்கும் நிலையில், ப்ளஸ் டூவிலேயே போதை அடிமைகள் உருவாகிக் கொண்டிருப்பதைப் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.எந்தச் சமூகத்திலும் விடலைகள் இருப்பார்கள். பொறுக்கிகள் இருப்பார்கள். அவர்களை மன முதிர்ச்சியும் பக்குவமும் உடையவர்களாக ஆக்கவே கல்வியும், கலைகளும் ஒரு சமூகத்தால் பயன்படுத்தப்படும். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துவதை நியாயப்படுத்துவதை கதாநாயகர் பாத்திரங்களாக்கிக் கொண்டாடுவதை ரசிப்பதைச் செய்யும் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் வளரிளம் பருவத்தில் இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்குப் பதில் கொலைவெறியை அதிகரிப்பதையே கொலை வெறிப் பாடல் கலாசாரம் செய்கிறது. ஆண்-பெண் உறவு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதே விடலைப் பருவத்தில் புரியாத சிக்கலாகப் பலருக்கு இருக்கிறது. செவத்த பெண்ணுக்காக ஏங்கும் கறுத்த பையன் என்ற பிம்பம் இருவருக்கும் ஆபத்தானது. செவப்பும் கறுப்பும் உடல் நிறமும் பிரதான விஷயங்களே அல்ல. மனம்தான் முக்கியம், அறிவுதான் முக்கியம், அன்புதான் முக்கியம் என்ற பார்வைக்குப் பதில், உடல் சார்ந்து மட்டுமே இவை இளம் மனத்தைத் தூண்டுகின்றன. நம் சமூகத்தின் நிறவெறியின் இன்னொரு வடிவமே கொலைவெறிப் பாட்டு. இப்படிப்பட்ட பாடல்கள் ஹிட் ஆவது பற்றி வியாபாரிகள் மகிழ்ச்சியடையலாம். எதிர்காலத் தமிழகம் பற்றிச் சிந்திக்கும் ஒருவரும் மகிழ்ச்சியடையமுடியாது. பொறுக்கியாக நடிக்கும் தனுஷோ, நடிக்கவைக்கும் ஐஸ்வர்யா, வெற்றிமாறன்களோ தங்கள் அன்றாட நிஜ வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் உடையவர்களாக வாழ்வதினால் தான் அவர்களால் ‘தொழிலை’ ஒழுங்காகச் செய்யமுடிகிறது. ஆனால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்கள் தமிழகத்தின் பள்ளிகளிலும், தெருக்களிலும் ஏராளமான இளம் மனங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அலைக் கழிப்பிலிருந்து வழிநடத்த நம்மிடம் முறையான கவுன்சிலிங் அமைப்புகள் எதுவும் இல்லை. வழிகாட்டக் கூடிய ஊடகங்களே அவர்களைத் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்பதுதான் அரசு முதல் படைப்பாளிகள் வரை தாரக மந்திரமாகிவிட்டது.

இந்த வார சந்தேகம்:

அண்ணா ஹசாரேவின் மெழுகுச்சிலையை ஒருவர் தத்ரூபமாக உருவாக்கிய செய்தியில் அசலும் நகலும் அருகருகே சிரித்தபடி இருக்கும் படம் பார்த்தேன். இப்படி ஒரு சிலை உருவாக்க, அந்தப் பிரபலம் தன் அளவுகளையும் புகைப்படங்களையும் தர வேண்டும். ஒரு ‘காந்தியவாதி’ இப்படி சுயமோகத்தில் தனி நபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் செயலுக்குத் துணை போனது எப்படி ?  

இந்த வாரக் கண்டனம்: 


முல்லைப்பெரியாறு அணை பற்றிப் பொய்யான பீதியைத் தூண்டும்விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தை எதிர்த்து ம.தி.மு.க.வினரும் இதர தமிழ் தேசியர்களும் ஸ்டூடியோவுக்குள் சென்று படச் சுருள்களை நாசமாக்கி நிகழ்த்திய வன்முறைக்கு இ.வா.கண்டனம். அணை உடைந்துவிடும் என்ற கருத்து தவறானது என்றால், அதற்கு எதிர்ப் பிரசாரம் செய்வதே முறை. கருத்து சொல்பவருக்கு எதிரான வன்முறை ஆபத்தானது. கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்று பிரசாரம் செய்யக் கூடாது என்று அரசு நம் மீது வன்முறையைப் பிரயோகித்தால் அதை ஒப்புக்கொள்வோமா? 


Friday, November 25, 2011

உமர் அப்துல்லா Vs இந்திய ராணுவம்


முதலில் காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்ற பாதுகாப்பை விலக்குங்கள் 
அதன்பிறகு ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கலாம்.


சுய அழிவு என்பது ஒரு வகையான நிலை. அதற்கு எதிர்நிலை சுய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகும். காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாதான் பின்னிய வலையிலேயே சிக்கிக் கொண்டு விட்டார். அவருக்குத் தெரிந்த தப்பிக்கும் வழி, இந்திய ராணுவத்தின் மீது பழி சுமத்துவது மட்டுமே. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீர்த்துப் போக வைப்பது தான் தனது அரசியல் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உமர் அப்துல்லா கருதுகிறார். அவரிடம் நிர்வாகத்தை நடத்திச் செல்லுகின்ற அளவுக்கு சாமர்த்தியமோ அல்லது விவேகமோ இருப்பதாகத் தெரியவில்லை. அரசு செயலிழந்து விட்டது. இதற்கான பழியை ராணுவத்தின் தலையில் அவர் தூக்கிப் போடுகிறார்.
 
கடந்த ஓராண்டு காலத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக அப்பாவி குடிமகன் யாரும் பலியானதில்லை. பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளிலிருந்து பாய்ந்த குண்டுகள்தான் அப்பாவிகளின் உயிரைக் குடித்துள்ளன. ஆனால் இந்த அம்சத்தை அனைவரும் ஓரங்கட்டி விடுகிறார்கள். இதைப்பற்றி யாரும் வாய் திறப்பதே இல்லை. மாறாக, ராணுவத்தினர் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். இது ஏன்?இந்த கேள்விக்குப் பின்னால் அழுத்தமான, ஆழமான பரிமாணங்கள் உள்ளன. பிரிவினைவாதிகளும் பயங்கர வாதிகளும், உள்ளூர் போலீஸாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்?பிரிவினை வாதிகள் ஒருபுறம், அரசியல்வாதிகள் மறுபுறம் என இருமுனைத் தாக்குதலில் சிக்கி நமது ராணுவம் தத்தளிக்கிறது. முதலில் முக்கிய பிரமுகர்களுக்கு அளித்துள்ள பாதுகாப்பை வாபஸ் பெறுக:
 
 
ராணுவ சிறப்பு அதிகாரச் சட்ட த்தை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அது தொடர்பான சர்ச்சையும் தீவிரமடைந்து வருகிறது. ராணுவத்தினரை எங்கே பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் இதில் அனாவசியமாக குறுக்கிடக் கூடாது. ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங் ஜிஓசி 15 கார்ப்ஸ் ஜெனரல் ஹஸ்னைன் ஆகியோர் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். எல்லை தாண்டிய ஊடுருவல் முடிவுக்குவராத நிலையில் ராணுவத்தை வாபஸ் பெறுவது சரியல்ல என்பது அவர்களது கருத்தாகும். ஆனால் அரசியல்வாதிகள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவர்களில் யாரும், முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை குறைக்கவேண்டும் என்று கூறத் தயாராக இல்லை. காஷ்மீர் போலீஸில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் 40 முதல் 50 சதவீதத்தினர் முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீர் டிஜிபி அலுவலகம், காஷ்மீர் சட்டசபை, அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் குடியிருப்புப் பகுதி ஆகியவை உச்ச பாதுகாப்புடன் கூடிய அரண்களாக உள்ளன. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நீங்கிவிட்டால், இந்த 40,000 முதல் 50,000 வரையிலான போலீஸாரை வேறு பணிக்கு திருப்பமுடியும் எல்லா அரசியல்வாதிகளும் பாதுகாப்பின்றி உலா வர முடியும் அதன்பிறகு தான் ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்குவது குறித்து முடிவு எடுக்கமுடியும்.
 
பாகிஸ்தானில் ஜிஹாதி தொழிற்சாலைகள்:
 
 
பயங்கரவாதம் காஷ்மீரில் நெடுங்காலமாக உள்ளது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சி காலத்திலும் பயங்கரவாதம் உக்கிரமாக இருந்தது. அப்போது 6,500 முதல் 7,500 வரையிலான எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் இருந்தார்கள். இவர்களை சமாளிக்க ராணுவத்தை அனுப்பாவிட்டால் காஷ்மீர் கைநழுவிப் போய்விடும் என்பதை வி.பி.சிங் உணர்ந்தார். இதையடுத்து, எல்லைப்பகுதியை பாதுகாக்கவும் பயங்கரவாதியை முறியடிக்கவும் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆண்டுதோறும் 3000 முதல் 4000 வரை புதிது புதிதாக பயங்கரவாதிகள் ஊடுருவத் தொடங்கினார்கள். நமது ராணுவ வீரர்கள் இதை முறியடிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டார்கள். இந்த பணியில் சுமார் 5500 ராணுவ வீரர்கள் பலியாக நேரிட்டது. ராணுவத்தால் காக்கப்பட்டுவரும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே ஊடுருவலே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டோம் ஆனால் வங்காள தேசம், நேபாளம் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் ராணுவத்தினரின் நேரடிப் பாதுகாப்பு இல்லை. பாகிஸ்தானில் இப்போது கூட ஜிஹாதி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள்.மனித உரிமை ஆர்வலர்களுக்கு அரசு போதுமான அவகாசம் கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் ராணுவத்தினரை தாக்குவதிலேயே குறியாக உள்ளார்கள். அவர்கள் வக்கிரமான சிந்தனையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக நேர்மையான, மதிநுட்பம் வாய்ந்த ராணுவ அதிகாரிகள் பலர், அற்பத்தனமான கேள்விகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். தனியார் தொலைக்காட்சி சேனல்கள் காளான்கள் போல பெருகியுள்ளன. இவையும் மனித உரிமைகள் என்ற பெயரில் ராணுவத்தினருக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. ராணுவத்தினரை காயப்படுத்தி வருகின்றன. ராணுவத்தினர் எவ்வளவு காயமடைந்தாலும் சரி, துன்பமடைந்தாலும் சரி அதைப் பற்றி யெல்லாம்  இந்த சேனல்களுக்கு கவலை கிடையாது, ஆனால் யாரேனும் ஒரு பயங்கரவாதி பலியாகிவிட்டால், இந்த ஊடக உலக மனித உரிமை ஆர்வலர்கள் அதை விசுவரூபப்படுத்தாமல் விட மாட்டார்கள். பல முக்கியமான தேசிய செய்திப் பத்திரிகைகளும், பயங்கரவாதிகளின் ஊதுகுழல்களைப் போல செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பயங்கரவாதிகளின் நிலைப்பாடுதான் முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
 
ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் ஏன் வேண்டும்?
 
 
”ஏ ஃப் எஸ் பி ஏ” (AFSPA) எனப்படும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் –1958, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதிகளின் கொட்டம் அதிகமாக இருந்த போது அவர்களை ஒடுக்குவதற்காக இது கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதிகள் வன்முறை நிகழ்வுகளில் ஈடுபட்டுவிட்டு மாயமாகி விடுவார்கள். அவர்களை ராணுவத்தினர் துரிதமாகவும் துணிச்சலாகவும் ஒடுக்க இந்த சட்டம் இன்றியமையாதது. உயர் அதிகாரிகளிடமிருந்து ஆணை வரட்டும் என்று காத்திருந்தால் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், ராணுவ அதிகாரிகளுக்கு, வீரர்களுக்கு பாதுகாப்பு தேவை. அவர்களுக்கு நூறு சதவீத பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அவர்கள்  மீது வழக்குத் தொடரலாம். ஆனால் அதற்கு மத்திய அரசிடமிருந்து முன் கூட்டியே அனுமதி பெறவேண்டும். ராணுவ வீரர்கள் சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை மிகவும் அபூர்வமானவை.
 
ராணுவம், ராணுவமாகவே செயல்படமுடியும்:
 
ஒரு குறிப்பிட்ட பகுதி, கலவரப் பகுதி என பிரகடனப்படுத்தப்பட்டால்தான் அங்கு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை பிரயோகிக்க முடியும். ராணுவத்தினர் எப்போது பார்த்தாலும் பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படி நினைத்துக் கொண்டிருப்பது ராணுவத்தினரின் பணியுமல்ல. ஆனால் துரதிஷ்டவசமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிகழ்வுகள் தொடந்து கொண்டிருக்கின்றன. இந்த கிளர்ச்சிகளை மாநிலப் போலீஸாராலும் மத்திய போலீஸாராலும் ஒடுக்க முடியவில்லை. இதனால்தான் பயங்கரவாதிகளை ஒடுக்கும்பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பயங்கரவாத ஒழிப்பில் ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டாம் என்ற தேசிய தலைமை முடிவு எடுத்தால், அது குறித்து ராணுவத்தினருக்கு எந்த ஆட்சேபமும் இருக்கப் போவதில்லை. ராணுவத்தினர் தங்களது வழக்கமான பணிகளைத் தொடர்வார்கள். பயங்கரவாத ஒழிப்பில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும் போது அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்கப்படுவது இன்றியமையாதது. இவ்வாறுதான் இயல்பு நிலை முழுமையாக திரும்ப வழிவகை செய்ய வேண்டும், இதற்கு அரசியல் தலைவர்கள் ஆவன செய்யவேண்டும். அதிகாரிகள் நிர்வாகத்தைச் செம்மைப் படுத்த வேண்டும் என்று ராணுவ வீரர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவை யாவும் நடந்து முடிந்து விட்டால் ராணுவம் எப்படி செயல்படுமோ அப்படி இயங்கும்.ராணுவ வீரர்கள் அதிக பணிச்சுமையால் திணறுகிறார்கள். பயங்கரவாத ஒழிப்பில் இடைவிடாமல் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அவர்கள் மாதக் கணக்கில், வருட கணக்கில் தங்கள் குடும்பத்தினரை பிரிந்திருக்கிறாகள். பதுங்கு குழிகளிலும், தற்காலிக கூடாரங்களிலும் காலத்தைக் கழித்து வருகிறார்கள். எப்போது கண்ணி வெடி வெடிக்குமோ, கைஎறி குண்டு வீசப்படுமோ என்ற அச்சம் நிறைந்த சூழ்நிலையில் அவர்கள் காலத்தை கழித்து வருகிறார்கள்.ராணுவ வீரர்களுக்கு இருந்து வந்த தனித் தன்மை, மதிப்பு மரியாதை படிப்படியாக குறைந்து விட்டது. ராணுவ அதிகாரிகள் பலர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியே வந்துவிடுகிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர நாட்டமே இல்லை. அவர்கள் கார்ப்பரேட் துறைகளில் பணிபுரியவே விரும்புகிறார்கள். இந்திய ராணுவத்தின் தனித்தன்மை, புகழ், மாட்சி ஆகியவை காப்பாற்றப்படவேண்டும். போர்முனையில் சாகசம் நிகழ்த்திய ராணுவ வீரன், தற்கொலைப் படையின் குண்டுக்கு பலியாகி உயிர் துறப்பதைப் போல வேறு எதுவும் சோகமானது இல்லை. ராணுவ வீரர்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஆற்றலுடன் விளங்கினால் தான் பொது மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.
 
தயவு செய்து ராணுவத்தினரை அலைக்கழிக்காதீர்கள். அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
 
ராணுவ சிறப்பதிகாரச் சட்டம் கொடூரமானது அல்ல, அதை விலக்காதீர்கள்
 
உமர் அப்துல்லாவுக்கு ராணுவம் கடிதம்:
 
ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வற்புறுத்தி வருகிறார். இந்நிலையில், ராணுவ உயர் அதிகாரிகள் இச் சட்டத்தை வாபஸ் பெறாதீர்கள் என்று வற்புறுத்தி அவருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதன் சாராம்சம் வருமாறு:
 
பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ, பிரிவினை வாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் தங்களது ஆதாயத்துக்காக ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று சில அமைப்புகளை ஏவி விட்டுக் கொண்டிருக்கின்றன.சில பகுதிகளில் அமைதி பூரணமாகவும் குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவிலும் உள்ளது என்றால் அதற்கு ராணுவ வீரர்களின் அயராத பணிதான் காரணம். எனவே ராணுவ வீரர்களை தொடர்ந்து செயல்பட அனுமதியுங்கள்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 2500 பயங்கரவாதிகள் உள்ளனர். நம் நாட்டை ஒட்டியுள்ள மற்ற பாகிஸ்தான் பகுதியிலும் கணிசமான எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 400 பயங்கரவாதிகள் உள்ளனர். 20,000 பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் 42 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பின்னணியில், ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமா?சில அமைப்புகள் தொடர்ந்து பிரிவினை வாதத்துக்கு ஊக்கமளித்து வருகின்றன. ராணுவ சிறப்பு அதிகார சட்டம் கொடூரமானது அல்ல. இதைப் பயன்படுத்த சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் மனித உரிமை மீறலுக்கு இடமில்லை.ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஓரளவுக்கு வாபஸ் பெறலாம் என்பது ராணுவத்தினரின் செயல்பாட்டுக்கும் ராணுவ வீரர்களின் மனோ திடத்துக்கும் உகந்தது அல்ல. எல்லைப் பாதுகாப்புக்கும் இது உகந்தது அல்ல. எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற முயற்சி செய்வது தேச நலனுக்கு உகந்த தல்ல.   
 
ப்ரீகேடியர். ஹேமந்த் மகாஜன்
 

 

Thursday, November 24, 2011

‘தேங்க்ஸ் கிவ்விங் டே!’

‘தேங்க்ஸ் கிவ்விங் டே!’ என்பது அமெரிக்காவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 4வது வார வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.அமெரிக்காவில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் கடுங் குளிர் நிலவும். ஒரு சமயம் அமெரிக்காவுக்கு வந்த யாத்திரீகர்கள் இந்தக் கடுங்குளிரில் சிக்கி, பலவித நோய்களுக்கு ஆளாயினர். கடுங்குளிரிலிருந்து தங்களைக் காக்கும்படி ஆண்டவனிடத்தில் வேண்டவே, ஆண்டவனும் அவர்களைக் கடுங்குளிரிலிருந்து காப்பாற்றினார் என்பது வரலாறு. படிப்படியாகக் குளிர் குறைந்து மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பினர். கடுங்குளிரிலிருந்து தங்களைக் காத்த, ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக அமெரிக்காவில் இப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் குளிர் ஆரம்பிக்கும் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் வான்கோழியைப் பயன்படுத்தி பல வகையான உணவு வகைகளைத் தயாரித்து விருந்து உண்டு மகிழ்வர். இதுவே இப்பண்டிகையின் முக்கிய அம்சம். நம்ம ஊரில் கடைகளில் ஆடித் தள்ளுபடியில் பல பொருள்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்குப் போடுவது போல், அமெரிக்காவில் ‘தாங்க்ஸ் கிவ்விங் டே’,க்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அன்று ஏழை முதல் பணக்காரர் வரை வாங்கிப் பயனடையக் கூடிய வகையில் எல்லா மால்களிலும் தரமான, அழகான ஆடைகளும், வீட்டுப் பொருள்களும், அழகு சாதனங்களும் குறைந்த விலைக்கு விற்பனைக்குப் போடுவார்கள்.  அந்தச் சமயத்தில் வியாபாரிகள் லாபத்தைக் குறிக்க கறுப்பு நிறத்தையும், நஷ்டத்தைக் குறிக்க சிவப்பு நிறத்தையும் பயன்படுத்துவர். வெள்ளிக் கிழமையான அத்தினத்தில் விற்பனைக்குப் போடும் பொருள்களின் மூலம் அதிக லாபத்தை எதிர்பார்த்து அந்த வெள்ளிக் கிழமையை Black Friday என்று அழைக்கின்றனர்.

எப்படி இருந்த மதுர இப்படி ஆயிடுச்சு!

 
'ஆலவாய்’ மதுரை 'ஆக்கிரமிப்பு’ மதுரையான கதை எல்லோருக்கும் தெரியும். இப்போது 'அமைதி’ மதுரையாக ஆகிவிட்டதா என்று அறியவே அலைந்தேன்!
 
தகர்ந்தது ஃப்ளெக்ஸ் கோட்டை
 
மதுரை என்றாலே நினைவுக்கு வருகிற டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் கோட்டை இப்போது தகர்ந்திருக்கிறது. அஞ்சா நெஞ்சரே, ஆற்றல் அரசரே, இமயத்தின் இமயமே, தென்னகமே, தென்னாடுடைய சிவனே, எங்களின் ஹிட்லரே என்று வரைமுறை இல்லாமல் வாழ்த்துகிற விளம்பரங்களை அறவே காணவில்லை. அ, ஆ... எழுதிப் பழக வேண்டிய ஆட்கள் எல்லாம், 100 அடி அகலத்தில் 'அ’னாவைப் பற்றி கவிதை பாடியிருந்த ஃப்ளெக்ஸ் இம்சையில் இருந்து மதுரை மக்களுக்கு முதல் விடுதலை கிடைத்திருக்கிறது. குறிப்பாக, அழகிரி வீட்டுக்குச் செல்லும் பாதை, காஷ்மீர் பார்டர் போல இருந்த நிலைமை மாறிவிட்டது. அண்ணனின் பிறந்த நாள் ஜனவரியில் வருகிறது என்றால், ஆகஸ்ட் மாதமே ஃப்ளெக்ஸ் வைப்பவர்கள் இது வரையில் சின்ன போஸ்டர்கூட ஒட்டவில்லை.  அழகிரி வீட்டுப் பக்கம் இருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காணாமல் போய்விட்டன. ஆனால், மதுரை அ.தி.மு.க-வில் வெளியில் தெரியும் அளவுக்கு மூன்று கோஷ்டிகள் இருக்கின்றன. அமைச்சர் செல்லூர் ராஜு கோஷ்டி அடக்கி வாசித்தாலும்கூட, மற்ற இரு கோஷ்டிகளும் தி.மு.க. பாணியில் கட்டுப்பாடு இல்லாமல் ஃப்ளெக்ஸ்களை வைத்துக்கொண்டு இருக்கின்றன!
 
அந்த மூன்று பேருக்கு நன்றி!
 
தி.மு.க. ஆட்சியின் கடைசி மூன்று ஆண்டுகளில் மதுரைக்கு வாய்த்த உயர் அதிகாரிகள் மிகத் திறமையானவர்கள்.  யாருக்கு? யாருக்கோ! கைப்பாவை கலெக்டர், கண்டுகொள்ளாத கமிஷனர், பிரச்னை என்றால் எஸ்கேப் எஸ்.பி. ஆகியோரைத் தேர்தல் நேரத்தில் மாற்றிய எலெக்ஷன் கமிஷன்... கலெக்டர் சகாயம், போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ரா கர்க் என்று சக்திமிக்க படையை மதுரைக்கு அனுப்பியது. தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரிகளைப் பழக்க தோஷத்தில் தூக்கியடிக்காமல் இருக்கிற ஒரு விஷயத்துக்காகவே ஜெயலலிதாவைப் பாராட்டலாம்!மதுரைக்குப் புதிதாக வருபவர்கள் பளிச்சென்று ஒரு மாற்றத்தைப் பார்க்கலாம் மாட்டுத்தாவணியில். தி.மு.க. காலத்தில் பெயரின் பொருளுக்கு ஏற்றபடி, மாட்டுச் சந்தை போலத்தான் இருந்தது மாட்டுத்தாவணி. உட்கார இடம் கிடையாது. நடைபாதைகளிலும் கடைகள். வியாபாரிகள் போர்வையில் ரௌடிகள். சொன்னதுதான் விலை... வைத்ததுதான் சட்டம். தவறுதலாகக் கை பட்டுப் பழம் உருண்டால்கூடச் சரமாரியாக விழும் உதை. திடீர் திடீரென வெடித்துப் பீதி கிளப்பும் கியாஸ் சிலிண்டர். தொடர் தீ விபத்து. தப்பித்து ஓட வழி இல்லாமல் சந்துபொந்துகளிலும் எண்ணெய் கொதிக்கும் வடை சட்டிகள்.ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்ற தென்னகத்தின் மிகப் பெரிய பேருந்து நிலையத்தின் இந்த நிலையைக் கண்டு அதிர்ந்தார் சகாயம். 'பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளையும் குறைகளையும் ஏழு நாட்களுக் குள் சரிசெய்யாவிட்டால், தமிழ்நாடு மோட்டார் வாகன விதி எண் 245(1)ன்படி பஸ் நிலைய நிர்வாகத்தினை மாநகராட்சியிடம் இருந்து அரசே எடுத்துக்கொள்ளும்!’ என்று அவர் எச்சரிக்க, வருவாய்த் துறை, காவல் துறை, மாநகராட்சி என்ற முப்படைத் தாக்குதலில் தூள்தூளாகின ஆக்கிரமிப்புகள். ஆச்சர்யம்... ஆக்கிரமிப்புகளை அகற்ற அகற்ற... மாட்டுத்தாவணியில் மாயமாகி இருந்த பயணிகள் காத்திருக்கும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, காவல் நிலையம், தபால் நிலையம், சுகாதார மையம் போன்றவை எல்லாம் கடைகளுக்குள் இருந்து வெளிப்பட்டன!
 
சி.டி. கடைகள் ஒழிப்பு!
 
 
திருட்டு சி.டி-க்களின் தலைநகரமான மதுரையில், பாண்டி பஜாரில் 70 சி.டி. கடைகள், மீனாட்சி பஜாரில் 20 கடைகள் பரபரப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருந் தன. தவிர, பிரதான சாலைகள் அனைத்தி லும் டீக்கடைகள் போலவும், ஒவ்வொரு தெரு முனையிலும் ஆவின் பால் பூத் போலவும் சி.டி. கடைகள் சக்கைப் போடு போட்டுக்கொண்டு இருந்தன. அதற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார் கமிஷனர் கண்ணப்பன். புதுப் பட,ஆபாசப் பட சி.டி-க்களை அள்ளி வந்து அழித்த தோடு, அதனை விற்பவர்கள் மீது கடுமை யான நடவடிக்கைகள் எடுத்தார். இப்போது பாண்டி பஜார், மீனாட்சி பஜார் உட்பட மாநகரில் ஒரு இடத்தில்கூட சி.டி. கடைகள் இல்லை. அத்தனையும் செல்போன் கடைகளாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் தமிழகத்துக்கே திருட்டு சி.டி. சப்ளை செய்த வளமான நகரான மதுரை, இப்போது 10 வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களைக்கூட 60-க்கு வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குப் போய்விட்டது!   
 
''சார், புதுப் படம், ஆபாசப் படம் விக்க மாட்டோம் சார். பிற மொழிப் படங்களை மட்டுமாவது விற்க அனுமதி கொடுக்கக் கூடாதா?'' என்று கெஞ்சிய பாண்டி பஜார் வியாபாரிகளிடம், ''முதல்ல, உங்களுக்கு டி.வி.டி. போட்டுக் கொடுக் கிறவங்களோட பட்டியலைக் கொடுங்க. அப்புறமா அனுமதி கொடுக்கிறதைப் பத்தி யோசிப்போம்!'' என்று விரட்டி அடித்து விட்டார் கமிஷனர். தமிழகத்திலேயே திருட்டு சி.டி. ஒழிக்கப்பட்ட மாநகரம் மதுரைதான் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்!
 
25 கோடி நிலங்கள் மீட்பு!
 
நில அபகரிப்பு தொடர்பாக மாவட்டக் குற்றப் பிரிவுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் வரையில் வந்த மொத்தப் புகார்களின் எண்ணிக்கை 221. எடுத்ததும் எஃப்.ஐ.ஆர். போடாமல், உண்மையான புகார்தானா என்று விசாரித்து, 111 மனுக் களை நிராகரித்த எஸ்.பி., எஞ்சிய 110 புகார்கள் மீது மட்டும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவைத்தார். விசாரணையின்போதே, 'எதற்கு வம்பு?’ என்று சமாதானமாகப் போய்விட்டவர்களின் எண்ணிக்கை 28. இதேபோல, 'செஞ்சது தப்புதான்’ என்று ஒப்புக்கொண்டு, பலர் அந்த சொத்துக்களை உரியவரிடமே வழங்கிவிட்டார்கள். இப்படி மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு மட்டும் 25 கோடி. இடத்தைத் தர மறுத்து வீம்பு செய்த 50 பேர், இப்போது கம்பிக்குள். எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கின் இந்த அதிரடியால், புறநகர்ப் பகுதியில் போலி பட்டா போட்டு நிலம் விற்பவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், புதிதாக நிலம் வாங்குபவர் கள், ஏற்கெனவே வாங்கிப்போட்டவர் களும் பயம் இல்லாமல் இருக்கிறார்கள்!
 
மாறிய கரை வேட்டிகள்!
 
கலெக்டர் அலுவலகமும், காவல் நிலை யங்களும் முன்பு ஆளும் கட்சியினரின் சொர்க்கபுரியாக இருந்தன. டூ வீலர் திருடர்களை மீட்கக்கூட கரை வேட்டிகள் வந்தன. இப்போது, அந்த நிலை இல்லை. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கோ, எஸ்.பி., கமிஷனர் ஆபீஸுக்கோ போவதற்குப் பதறுகிறார்கள் அ.தி.மு.க-வினர்.ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிம வளத் துறை அலுவலகத் துக்கு இப்போதும் கரை வேட்டிகள் படைஎடுக்கின்றனமுன்பு சென்ட்ரல் மார்க்கெட் முழுவதையும் தி.மு.க. புள்ளிகள், கவுன்சிலர்களின் பினாமிகள் மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தார்கள். கடையை உள்வாடகைக்குவிட்டு ராஜபோகமாக வாழ்ந்தவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டு, இப்போது அதே வேலையை அ.தி.மு.க-வினர் செய்கிறார்கள். கிராமத்துப் பெரியவர்களுக்கு ஓ.ஏ.பி. வாங்கிக்கொடுப்பது போன்ற வேலைகளுக்குக்கூட தி.மு.க. கரை வேட்டிகள் சிபாரிசுக்காக கலெக்டர் ஆபீஸ் பக்கம் வர, அ.தி.மு.க. கரை வேட்டிகள் கமிஷன் பெரிய தொகை என்றால் மட்டுமே ஆஜர் கொடுக்கிறார்கள்!
 
நடுரோட்டில் கொலைகள்!
 
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மதுரையில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது கசப்பான உண்மை. 'தா.கிருட்டிணன் கொலை, தினகரன் அலுவலகம் எரிப்பு போன்றவை மதுரையில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக வெளியுலகத் துக்குக் காட்டியது. ஆறடி உயர காம்பவுண்ட் சுவர், உள்ளே அல்சேஷன் நாய், அதற்குள் கேட் போட்ட வீடு என்று கருவறைக்குள் இருக்கும் கடவுள் போல வாழும் மேல்தட்டு மக்கள் டி.வி. சேனலைப் பார்த்துவிட்டு அடித்த 'கமென்ட்’தான் அது. ஆனால், அன்றைய தினம் மதுரை வீதிகளில் எந்தப் பதற்றமும் இல்லை. தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டபோது, அது கருணாநிதியின் குடும்பச் சண்டை என்றும், தா.கிருட்டிணன் கொல்லப்பட்ட போது, அது தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னை என்றும் பேசிக்கொண்டார்களே ஒழியே, மதுரையில் யாரும் பதற்றப்படவில்லை.ஆனால், இந்த ஆட்சியில் 6 மாதங்களுக்குள் 15-க்கும் அதிகமானோர் பட்டப்பகலில், நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். போக்குவரத்துப் பாதிப்பு, பதறி ஓடும் பெண்கள், கடை அடைப்பு, ஒரு வாரத்துக்கு அந்த வழியாகப் பள்ளி செல்லத் தயங்கும் குழந்தைகள் என்று சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப் பது இந்த ஆட்சியில்தான்!'' என்கிறார் ஒரு பொது நல ஆர்வலர்.  மதுரையின் டிராஃபிக் பிரச்னை மாற்றம் இன்றித் தொடர்கிறது. இங்கே பல விபத்துக்களை ஏற்படுத்தி வரும் ஷேர் ஆட்டோக்களை ஒழிக்க போலீஸ் தயங்குகிறது. ''தி.மு.க. ஆட்சியில் குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு எல்லாம், ஆட்டோ பெர்மிட் கொடுத்துவிட்டார் கள். இப்போது, தவறு செய்யும் ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தால், அவர்கள் பழையபடி தொழிலுக்குத் திரும்பிவிடுவார்கள். ஏற்கெனவே குற்றம் அதிகம் நடக்கிறது. இவர்கள் வந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்'' என்கிறார் ஓர் உயர் அதிகாரி.
 
மற்றபடி, மதுரை சில விஷயங்களில் மாறி இருக்கிறது... பல விஷயங்களில் 'அ’னா லேபிள் இல்லாமல் காரியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்!    
 
விகடன்  

Wednesday, November 23, 2011

தொண்டு நிறுவனங்கள் (NGO) - பணம் சம்பாதிக்கும் வழி

சமீப காலம் வரை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGO) என்றால் இந்திய சாலைகளில் பயன்பட ஜப்பானிலோ கொரியாவிலோ செய்யப்படும் “விளையாட்டுக் கார்கள்” என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். எதையும் உருப்படியாக செய்யாமல் பணம் பண்ணும் விஷயத்தில் மட்டும் நம்மில் சிலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர்.அந்நிய அமைப்புகளிடம் தொடர்பு வைத்து இருப்பவர்கள் இதில் குறிப்பாக வல்லவர்களாக உள்ளனர். இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இதே வகைதான் என்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது. டெல்லியில் வேலை இல்லாமல் இருப்பவர்கள் அந்த நகரில் நிறைய உள்ளனர். இவர்களில் பெரும் பகுதியினர் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சார்ந்து கொண்டு நிறைய நன்றாக சம்பாதிக்கின்றனர். உங்களுக்கு தேவை எல்லாம் ஒரு கணிப்பொறி, நகல் எடுக்கும் கருவி, போர்ட் பௌண்டேஷன் போன்ற அந்நிய ஸ்தாபனத் தொடர்புகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பயண ஏஜண்டுகளின் தொடர்புகள் ஆகியவைதான். அத்தகைய ஹோட்டல்களில் நீங்கள் அந்நிய தூதரக ஆட்களை உபசரிக்கலாம். அல்லது அவர்களால் நீங்கள் உபசரிக்கப் படலாம். அத்தகைய அந்நிய தூதரக ஆட்கள் பணப் பெட்டிகள் நிரம்பியவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு பணத்தை வாரி விட அவர்கள் ஆவலாக இருப்பார்கள். பிற இடங்களைக் காட்டிலும் இந்தியாவில் “அமெரிக்க டாலர்” வெகு தூரம் போகிறது. போர்ட் பௌண்டேஷன், ஒக்ஸ்போம் போன்ற அந்நிய அமைப்புகளிடம் டாலர்கள் நிரம்பி வழிகின்றன. உங்களுக்குத் தேவை எல்லாம் “சரியான தொடர்புகள்” கொண்டு இருப்பதுதான். 

சென்ற வருடத்தில் மட்டும் அண்ணா ஹசாரேவின் குழுவைச் சார்ந்த ஒருவர் 40 முறை வெளி நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். நீங்களும் நானும் 40 வருடங்களில் ஒரே முறைதான் வெளி நாடு செல்ல முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தஆள் பயண செலவுகளாக மட்டும் 40 லட்சங்கள் பெற்றுள்ளார். பிற செலவுகளாக எத்தனை ஆயிரம் டாலர்கள் இவர் பெற்றுள்ளார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். நீங்களும் நானும் பயணம் செய்வது கட்டை வண்டி வகுப்பில். அதுவும் தள்ளுபடி சலுகையில் இந்த ஆள் பயணம் செய்து விட்டு மிகுதியாக வந்த தொகையை தனது கணக்கில் வரவு வைத்துக் கொண்டு விட்டார். இந்த சம்பந்தப்பட்ட ஆள், ஏகப்பட்ட லாபத்தை பார்த்து அதை தனது கணக்கில் வரவு வைத்துக் கொண்டு விட்டார். அதுவும் எந்த வரியும் இல்லாமல் இதற்கெல்லாம் கைமாறாக அந்த நபர் என்ன செய்து இருப்பார்? இந்தியவை இழித்தும் பழித்தும் அயல் நாடுகளில் வசை பாடி இருப்பார். அதற்காகத்தானே அந்நிய ஸ்தாபனங்களும் பணமும் டாலர்களும் கொடுக்கின்றன. இந்த நபர் சில வாசனை திரவியங்களையும், கம்பளி ஆடைகளையும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து இருப்பார். கூடவே மறுபடியும் அயல் நாடுகளுக்கு செல்வதற்கான அழைப்பிதழ்களையும் தன்னுடன் எடுத்து வந்திருப்பார். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி இவை எல்லாம் சுலபமாக பணம் சம்பாதிக்கும் வழிகளாக ஆகி விட்டன.
இதே குழுவை சேர்ந்த இன்னொரு உறுப்பினர் போர்ட் பௌண்டேஷனில் இருந்து 2 ௦௦௦௦௦௦௦கோடி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. நீங்களும் நானும் நம்முடைய ஆயுள் காலத்தில் இந்த தொகையை கண்ணால் கூட காண இயலாது, சம்பாதிக்கவும் முடியாது. நாம் பெயர் கூட கேள்விப்படாத இந்த ஆளுக்கு இவ்வளவு பெரிய தொகையை அந்த ஸ்தாபனம் கொடுத்துள்ளதற்கு ஏதோ வலுவான காரணங்கள் நிச்சயம் இருக்கும். இவ்வளவு அளவு தொகையை அதிருஷ்டவசமாக பெற அந்த நபர் செய்தது என்ன? அவர் ஏதாவது மிக அதிகமாக விற்பனை ஆகும் ஏதாவது ஒரு புத்தகம் எழுதினரா?அல்லது நோபெல் பரிசு வாங்க ஏதாவது பரிசோதனை சாலையில் ஆய்வு செய்தாரா? அவரோ, அவளோ அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. அவர் வெறுமனே அந்த பேரும் தொகையை தன்னுடைய சட்டைப் பையில் போட்டுக் கொண்டு, ஊழலை எதிர்த்துப் போராட திரும்பி வந்துவிட்டார்.இந்த கேள்விகளை எல்லாம் நான் எழுப்புவதற்கு காரணம் உள்ளது. இந்த அரசு சாராத தொண்டு நிறுவங்கள் என்ன செய்கின்றன என்பது எனக்குப் புரியவில்லை. ஏதோ செய்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் என்ன செய்கிறார்கள் என்பதுதான் தெரிய வில்லை? இல்லை என்றால் போர்ட் பௌண்டேஷன் போன்ற ஸ்தாபனத்திடம் இருந்து இவ்வளவு பெரிய தொகைகளை, வசூல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?அவர்கள் செய்திகளை திரட்டுகிறார்கள் என்றால், அவை மிகவும் ரகசியமான செய்திகளாக இருக்கும். அந்நிய ஸ்தாபனங்கள் அத்தகைய ரகசிய செய்திகளை தாங்களாகவே நாம் நாட்டில் இருந்து கொண்டு சேகரிக்க இயலாது. அந்நிய ஸ்தாபனங்களால் பண உதவி பெற்று வருகின்ற “ஆராய்ச்சி ” “கொள்கை” நிறுவனங்கள் டெல்லி முழுவதும் நிரம்பி உள்ளன இவைகள் அமைச்சர்களின் அலுவகங்களில் இருந்து செய்திகளை சேகரம் செய்கின்றன.அதுதான் இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் முக்கிய பணி. பிறகு அந்த செய்திகளுக்கு வடிவம் கொடுத்து அவைகள் எல்லாம் ஏதோ “பெரிய ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கப் பட்டவை மாதிரி”அந்நிய ஸ்தாபனங்களுக்கு பெரிய தொகைகளுக்கு விற்று விடுகின்றனர். இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்காக அந்நிய அமைப்புகளிடம் இருந்து பெரும் தொகைகளை வைத்து சந்திரனையே விலைக்கு வாங்கி விடலாம்.அவ்வளவு கறந்து விடுகிறார்கள்.
இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும், எராளமான அந்நிய ஸ்தாபனங்கள் வேலை செய்து வருகின்றன. அவைகள் எவ்வாறு இயங்குகின்றன, அவைகள் என்ன செய்கின்றன என்பதைப் பற்றி நமக்கெல்லாம் ஒன்றும் தெரியாது. நகரின் இதயம் போன்ற மையப் பகுதிகளில் அவைகளுக்கு பிரம்மாண்டமான அலுவலங்கள் உள்ளன. அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ள வர்களை, இந்த அந்நிய ஸ்தாபனங்கள் வேலைக்கு வைத்துள்ளன. இந்த அந்நிய ஸ்தாபனங் களுக்கு தங்கள் நாட்டு  “பாதுகாப்பு அமைப்புகளுடனும்” வலுவான தொடர்பு உள்ளது. ஏன் என்றால் எந்த அந்நிய அமைப்பும் அந்நியர்களும் அந்நிய பத்த்ரிக்கையளர்கள் உள்பட தங்களுடைய நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிறகே, நம்நாட்டில் பணி செய்ய முடியும். எல்லா அந்நிய பத்திரிக்கையாளர்களும், அந்நிய ஸ்தாபனங்களும் போர்ட் பௌண்டேஷன் உட்பட தங்கள் நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் அனுமதிக்குப் பிறகே இந்தியாவுக்கு வந்து பணி செய்கின்றனர்.எனவே எல்லா அந்நிய அமைப்புகளுக்கும் அவர்கள் நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்பும், நெருக்கமும் இருப்பது வெளிப்படையான ரகசியமாகும். வெளி நாடுகளில் பணி செய்யும் இந்திய பத்திரிக்கையாளகளும், இந்திய அமைப்புகளும் கூட நம்முடைய பாதுகாப்பு அமைப்புகளால் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிறகே அங்கு சென்று பணியாற்ற இயலும்.முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் “கலாச்சார விஷயங்களுக்கான காங்கிரஸ்” என்னும் ஒரு அமைப்பு இருந்தது. உலகம் முழுவதும் அது பரவி செயல்பாடுகள் செய்து வந்தது. அதில் மிகவும் புகழ் பெற்ற ஆட்கள் இருந்தனர்.பெற்றந்த் ரஸ்ஸல் போன்ற மனிதர்கள் அதில் இடம் பெற்று இருந்தனர்.பின்னாளில் அமெரிக்காவுக்கு எதிராக ரஸ்ஸல் திரும்பிய பிறகு ரஸ்ஸல் அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டார்.
டில்லியின் ஹைலி சாலையில் இந்த காங்கிரசுக்கு அலுவலகம் இருந்தது.சாப்ரு கட்டிடத்திற்கு அருகில் இந்த காங்கிரஸின் அலுவலகம் அமைந்து இருந்தது. காங்கிரஸின் ஆசிய தலைமை அலுவலகம் என்று அது வர்ணிக்கப்பட்டது. மும்பையை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் இந்த கலாச்சார விஷயங்களுக்கான காங்கிரஸ் பிரிவின் தலைவராக அங்கு இருந்தார்.ஹைலி சாலையில் இருந்த இந்த “கலாச்சாரங்களுக்கான காங்கிரஸ் அமைப்பு” அடிக்கடி கூட்டங்களை நடத்தும். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறர் கலந்து கொள்வார்கள். எங்கேயாவது ஓசியில் சாராயம் கிடைக்கிறது என்றால், அங்கு ஓடும் ரகத்தை சேர்ந்த கும்பல்களும் அத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். இந்த காங்கிரஸ் கம்யூனிச எதிர்ப்பை அடிப்படையாகக்  கொண்டது. என் கவுண்டர் என்னும் பெயரில் அது ஒரு மாதந்திர பத்திரிக்கையை நடத்தி வந்தது.அதன் விலை ஒரு ரூபாய்தான். அந்த பத்திரிக்கை மிகவும் போற்றத்தக்க வகையில் நடத்தப்பட்டு வந்தது. ஸ்டீபன் ஸ்பென்டர் என்னும் ஆள் பத்திரிக்கையை நடத்தி வந்தார். இந்த ஆள்தான் லண்டனில் ஜார்ஜ் ஆர்வேல் என்னும் புகழ் பெற்ற நபரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.இந்த காங்கிரஸ், ஐரோப்பா மற்றும் இதர இடங்களிலும் கருத்துரையாடல்களை நடத்தியது. அதற்கு இந்திய எழுத்தாளர்களும், “அறிவு ஜீவிகளும்” வரவேற்கப்பட்டனர். இதில் எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை. ஆனால் பிறகுதான் இந்த அமைப்பு “அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏவால் உருவாக்கப்பட்டது என்பது தெரிந்தது. பனிப்போரின் உச்சக் கட்டத்தில் இந்த அமைப்புக்கு முழுக்க முழுக்க பணம் கொடுத்தது சி.ஐ.ஏ.தான். இது எங்களுக்கு எல்லாம் பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் டெல்லியில் இருந்த பலரும் இம்மாதிரி சந்தேகத்தை ஏற்க்கனவே கொண்டு இருந்தனர். இந்த விஷயம் வெளியில் தெரிந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் அந்த டெல்லி அலுவலகத்தை மூடி விட்டனர்..அதன் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு இருந்த ஆள் கல்தா கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்த அமைப்பின் நடவடிக்கைகளும் முற்றிலும் முடங்கிப்போயின. பெற்றந்த் ரஸ்ஸல் மற்றும் இதரர்கள் இந்த அமைப்பில் இருந்து ராஜினாமா செய்தனர்.அவர்கள் அதன் பிறகு இந்த அமைப்பு குறித்து பெரும் கூச்சலை எழுப்பினர். ஆனால் இதெல்லாம் சி.ஐ.எ. வையோ அல்லது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிபோரையோ, எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அரசு சாரா தொண்டு நிறுவனங்களை இயக்குவது யார் என்பது நமக்கு தெரியாது. இதைத்தான் இந்த கட்டுரை தெளிவாக சொல்கிறது.அரசு சாரா தொண்டு நிறுவனங்களை நடத்துபவர்கள் அந்நிய நாடுகளிடம் இருந்து எராளமான பணத்தை பெறுகின்றனர். அதே அந்நிய நாடுகளின் நலன்களுக்காகவும் தான் அவர்கள் வேலையும் செய்து கொண்டு இருக்கின்றனர்.சில பயங்கரவாத அமைப்புகளுக்காகக் கூட அவர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் மேற்பரப்பில் அவர்கள் சுத்த சுயம் பிரகாசிகளாக,ஏழைகளுக்கு தொண்டு செய்பவர்கள் போல் காட்சி அளிக்கலாம். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய கணக்கு வழக்குகளை மூடி மறைக் கின்றனர்.சில ஆயிரம் டாலர்களுக்காக அவர்கள் தங்களுடைய விசுவாசத்தையும் அந்த அந்நிய நாடுகளிடம் விற்று விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
போர்ட் பௌண்டேஷன் ஒரே ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்துக்கு இரண்டு கோடி ரூபாய்கள் ஒரு பித்தலாட்டமான திட்டத்திற்காக கொடுக்க முடியும் என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.அந்த தொண்டு நிறுவனம் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.ஆனால்,அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக தெரிந்து கொள்ளும் வரை, அந்த நிறுவனத்தின் மீது எனக்கு எந்த மதிப்பும் மரியாதையும் இருக்காது. வெளி நாடுகளில் 40 கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கெடுக்கும் ஒரு நபர் பிழைப்புக்கு என்ன செய்வார் என்பது தெரிய வேண்டும் அல்லவா?அம்மாதிரி நபர் இந்த பிரச்சனை பற்றியோ அந்த பிரச்சனை பற்றியோ கருத்து சொன்னால் நாமும் அதை நம்ப வேண்டுமா? இம்மாதிரி ஆட்களில் சிலருக்கு அந்நிய உளவு நிறுவனங்களுடன் நிச்சயம் தொடர்பு இருக்கும்.அவர்கள் நமக்கு ஒன்றுமே தெரியாத சில  நிறுவனங்களுக்காக உளவு பார்த்துக் கொண்டு இருக்கலாம். அவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளில் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்பதை விட இந்த விஷயம்தான் எனக்கு மிகவும் கவலையைக் கொடுக்கிறது.இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் யாருக்காக வேலை செய்து கொண்டு உள்ளார்கள் என்பது அரசுக்கு தெரியுமா? அரசுக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும். விஷயம் நம் கையை விட்டு மீறிப் போவதற்கு முன்பாக நமது அரசு இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.   
(நன்றி;ஆர்கனைசர் வார இதழ் 12-11-2011)
ஆங்கிலத்தில்:டாக்டர் ஜெய் துபாஷி 
தமிழாக்கம்: லா.ரோஹிணி

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

 
கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.
 
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கிரீன் டீயின் நன்மைகள் :
 
1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
5. இதய நோய் வராமல் தடுக்கிறது.
6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
15. பருக்கள் வராமல் தடுக்கிறது.
15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
 
நன்றி - மணிகண்டன்  ராஜகோபால் 

போக்குவரத்து துறை லாபம் அடையுமா? - ''இப்போது கிடைத்திருப்பது ஆக்ஸிஜன் மட்டும்தான்!''

 
''கடன் சுமையால் மூழ்கிக்கொண்டு இருக்கும் போக்குவரத்துக் கழகங்களைக் காப்பாற்றவே பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறேன்'' என்கிறார் முதல்வர். ஆனால், ''கட்டண உயர்வு, ஆபத்தில் இருக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கும் முதலுதவி சிகிச்சைதான். போக்குவரத்துக் கழகங்களை இந்த நடவடிக்கையால் எல்லாம் காப்பாற்ற முடியாது'' என்று திகில் கிளப்புகிறார்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர்! ''பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும், அல்லது போக்குவரத்துக் கழகங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லா​விட்​டால், அவை திவாலாகிவிடும்'' - கடந்த 10 மாதங்களுக்கு முன்பே, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஜூ.வி. மூலமாக இப்படி எச்சரிக்கை மணி அடித்தனர்.
 
''எட்டுக் கோட்டங்கள், 23 மண்டலங்கள், சுமார் 206 டெப்போக்களைக்கொண்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினமும் சுமார் 20 ஆயிரம் பேருந்துகளை இயக்குகின்றன. இதன்  மூலம் தினமும் சுமார் 2 கோடி பேருக்கு சேவை அளித்து நாள் ஒன்றுக்கு சுமார் 22 கோடியை வருவாய் ஈட்டுகிறது. இதற்கு முன் 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில்தான் கடைசியாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த 10 வருடங்களில் இதுவரை எத்தனையோ முறை டீசல் விலை உயர்த்தப்பட்டபோதும், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. லிட்டருக்கு ஒரு ரூபாய் டீசல் விலை உயர்ந்தாலே, போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் 20 லட்சம் நஷ்டம் ஏற்படும். அப்படியானால், 10 வருடங்களில் இழப்பு எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். போக்குவரத்துக் கழகங்கள் எவ்வளவுதான் நஷ்டத்தைச் சந்தித்தாலும், அரசுக்கு சேர வேண்டிய வரிகளை மட்டும் பைசா பாக்கி இல்லாமல் வசூலித்துவிடுகிறார்கள். ஆனால், அரசிடம் இருந்து போக்குவரத்துக் கழகங்களுக்கு வரவேண்டிய கட்டணங்கள் மட்டும் ஒழுங்காக வரவில்லை. இலவச பஸ் பாஸ் திட்டங்களின் மூலமாக அரசிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் 240 கோடி வரவேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு 150 கோடி மட்டுமே கொடுத்தார்கள். டீசல் சப்ளை செய்ததற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சுமார் 15 கோடி வரை கடன். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் பெரும் பகுதியை வங்கிகளில் அட​மானம் வைத்திருக்கிறார்கள். 206 டெப்போக்களுமே இப்போது அடமானத்தில்தான் இருக்கின்றன. மேற்கொண்டும் சிக்கலைச் சமாளிக்க சில இடங்களில் பஸ் ரூட்களையும் அடமானம்வைத்த அவலங்களும் நடந்திருக்கிறது. 
 
 
இந்தக் கடன்களுக்கான வட்டியையே கட்ட முடியாமல் திண்டாடுகிறார்கள். சில இடங்களில் இந்த வட்டியைக் கட்டுவதற்கு, புதிதாய் கடன் வாங்குகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக போக்கு​வரத்துக் கழக ஊழியர்களின் பி.எஃப். பணத்தை பி.எஃப். அலுவலகத்தில் செலுத்தாமல், அதையும் வேறு எதற்கோ பயன்படுத்தினார்கள். கடந்த ஆறு மாதங்களாக, தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட இன்​ஷூரன்ஸ் பிரிமியத்தையும் கட்டாமல் செலவழித்துவிட்டனர். சில மாதங்களாக தொழிலாளர்களின் பென்ஷனுக்காகப் பிடிக்கப்பட்ட பணமும் பென்ஷன் டிரஸ்ட்டுக்கு போய் சேரவில்லையாம். நஷ்டஈடு வழக்குகளில் கோர்ட்டால் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை மீட்பதற்கே சுமார் 100 கோடி தேவைப்படும்'' என்று அடுக்கியவர்கள் தொடர்ந்து, ''பேருந்துக் கட்டணங்களை உயர்த்தாமல் இருந்திருந்தால், இன்னும் ஆறே மாதங்களில் உதிரிப் பாகங்கள் வாங்கக்கூட பணம் இல்லாமல் ஆங்காங்கே பேருந்துகள் பிரேக்டவுன் ஆகி நின்றிருக்கும். தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை வந்து, போராட்டங்கள் வெடித்திருக்கும். ஆனால், இந்தக் கட்டண உயர்வும் போக்குவரத்துக் கழகங்களை ஆபத்தில் இருந்து முழுமையாகக் காப்பாற்றாது. இப்போது 70 சதவிகிதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தி இருந்தாலும், வருமானம் என்னவோ 50 சதவிகிதம்தான் கூடி இருக்கிறது. இதைவைத்து அத்தியாவசியத் தேவைகளை ஓரளவுக்கு சமாளிக்கலாமே தவிர, 6,150 கோடி கடன் சுமையைக் குறைக்கவோ, அதற்காக வட்டி கட்டவோ முடியாது. போக்குவரத்துக் கட்டணங்களை இன்னும் ஒரு மடங்கு கூட்டினால், பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஆனால், அது மக்களை வெகுவாகப் பாதிக்கும். எனவே இந்தக் கடனை அரசே வழங்கிவிட்டு, போக்குவரத்துக் கழகங்களை அரசுடமையாக்க வேண்டும். இல்லாவிட்டால், போக்குவரத்துக் கழகங்​களை எந்தக் காலத்திலும் காப்பாற்ற​வே முடியாது'' என்று அழுத்தமாக சொன்​னார்கள்.
 
தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, ''பேருந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்துக் கழகங்கள் காப்பாற்றப்படும்'' என்றார். ஆனால், ''திவாலாகும் நிலையில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை காப்பாற்றவே பேருந்து கட்டணங்களை உயர்த்தினேன்'' என்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.  
 
விகடன் 

Tuesday, November 22, 2011

சமையல் கேஸ் தட்டுப்பாடு...சுலபமாக சமாளிக்கும் சூத்திரங்கள் !

 
'சிலிண்டர் தட்டுப்பாடு'... சமீப நாட்களாக நம் தினசரி பிரச்னையாகி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சிலிண்டர் கிடைக்காமலிருப்பது... கிடைப்பதற்கு அநியாயத்துக்கு தாமதம் ஆவது... என்பது போன்ற காரணங்களால், கிச்சன் சுமையும், டென்ஷனும் கூடிப்போக, 'என்னதான் செய்றது..?’ என்று விரக்தியில் இருக்கிறார்கள் மக்கள்.
 
''ஏன் இந்த தட்டுப்பாடு?''  
 
''கேஸ் நிரப்பும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழையும் ஒரு காரணம்". 
 
தீர்வு :
 
''விலை உயர்வு, தட்டுப்பாடு என்பதற்காக மட்டுமல்ல... ஒரு காலத்தில் இந்த சமையல் கேஸே இல்லாமல் போகப் போகிறது. ஆம்... சமையல் கேஸ், பெட்ரோலியம், டீசல் போன்ற எரிபொருள்கள்... வற்றிப் போகக்கூடிய சக்திகள்தான். சமீப ஆண்டுகளில் இவற்றை அதிக அளவு  மக்கள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால், டிமாண்ட் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லா எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு உண்டாகலாம். எரிபொருட்களுக்கான மானியத்தை நிறுத்தும் முயற்சியில் இருக்கிறது மத்திய அரசு. அப்படி வரும்போது ஒரு சிலிண்டர் விலை 700 ரூபாயைத் தாண்டக்கூடும். எனவே, எதிர்வரும் காலத்தில் சமையலுக்கு முழுக்க முழுக்க எல்.பி.ஜி. கேஸை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்று வழிமுறைகளைத் தேடிக்கொள்வதும் கற்றுக்கொள்வதும் காலத்தின் அவசியம்".
 
 
''உங்கள் வீட்டில் மிச்சப்படும் காய்கறி மற்றும் உணவுக்கழிவிலிருந்தே எரிவாயு உற்பத்தியை செய்துவிட முடியும். அதற்காகவே 'சக்தி சுரபி' எனும் எரிவாயு  இருக்கிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று... இடம் விட்டு, இடம் பெயர்ந்து எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சக்தி சுரபி. இது பிளாஸ்டிக் கலனால் ஆனது. மற்றொன்று நிலையானது. இது சிமென்ட் கட்டுமானத்தால் ஆனது. கழிவுகளை உள்ளே செலுத்தும் குழாய், ஜீரணிப்பான், வாயுகொள்கலன், தண்ணீர் வெளியேறும் பாதை, உரம் வெளியே வரும் பாதை... இத்தனையும் சேர்ந்ததுதான் சக்தி சுரபி. வேண்டாம் என நாம் வீசி எரியும் சமையலறைக் கழிவுகள் மட்டுமே இதற்குத் தீனி. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கலன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கனமீட்டர் வாயுவை உற்பத்தி செய்யலாம். ஒரு நாளைக்கு ஐந்து கிலோ கழிவுகள் (காய்கறி மற்றும் உணவு) தேவைப்படும். இதுவே நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கும். இந்த கலனை நகர்ப்புறத்தில் உள்ளவர்களும் தாராளமாக அமைத்துக் கொள்ள முடியும்.
 
 
மாநகரம் அல்லாத பிற நகரங்கள் மற்றும் கிராமங்களில் கால்நடை வளர்ப்பது சாத்தியமானதுதான். அப்படி வளர்ப்பவர்களுக்கு சாண எரிவாயு கலன் ஒரு வரப்பிரசாதம். வீட்டில் இரண்டு மாடு வளர்ப்பவர்கள்கூட துணிந்து எல்.பி.ஜி. கேஸுக்கு குட்பை சொல்லிவிடலாம். அல்லது அக்கம்பக்கம் யாராவது மாடு வளர்த் தால் கூட சாணத்தை வாங்கிக் கொள்ளலாம். தினமும் 25 கிலோ சாணத்தை கலனுக்குள் செலுத்தினால், ஒரு கன மீட்டர் வாயு உற்பத்தி யாகிவிடும். இது நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்துக்கு ஒரு நாளுக்குப் போதுமானதாக இருக்கும். இதற்கு அரசு மானியமும் இருக்கிறது.
 
விறகு அடுப்பு
 
''இதைக் கேட்டதுமே... 'ஐயையோ... விறகு அடுப்பை ஊதி ஊதியே உயிரு போயிடுமே' என்று கலங்க ஆரம்பித்து விடாதீர்கள்.இன்னும் கிராமங்களில் விறகுதான் பிரதான எரிபொருள். அவர்களுக்காகவே டிசைன் செய்யப்பட்ட அடுப்புகள் இவை. 'சிங்கிள் பாட்’ என்றழைக்கப்படும் ஒற்றை அடுப்பு, 'டபுள் பாட்’ எனப்படும் இரட்டை அடுப்பு, 'பயோ கேஸ் ஸ்டவ்’ எனப்படும் வெப்ப எரிவாயு அடுப்பு என மூன்று வகை அடுப்பு உள்ளன. விறகு, நம் பாரம்பரிய அடுப்புகளில் எரியும்போது 7 சதவிகித எரிசக்திதான் கிடைக்கும். அதுவே இந்த வகை அடுப்பு களில் 25 சதவிகித எரிசக்தி கிடைப்பதுபோல் டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், புகையும் அதிகம் உண்டாகாமல் இருப்பதால், இதற்கு அதிக வரவேற்பு உண்டு. குறிப்பாக, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பெரிய அளவில் கைகொடுக்கும்''
 
 நன்றி 
 
- வாசுதேவ், மைய செயலாளர்,
  விவேகானந்தா கேந்திரா 
  கன்னியாகுமரி
 
- பேராசிரியர் டாக்டர் வெங்கடாசலம்
   'பயோ எனர்ஜி’ துறைத் தலைவர்
    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்  
 
மற்றும்
 
விகடன்