Search This Blog

Wednesday, July 31, 2013

காணாமல் போகும் நிலத்தடி நீர்... காப்பாற்ற என்ன வழி?

அது, 1917-ம் ஆண்டு... 'ராஜாஜி’ என அழைக்கப்பட்ட சி. ராஜகோபாலச்சாரியார், சேலம் நகரத் தந்தை (நகராட்சித் தலைவர்) பதவியில் இருந்த காலகட்டம். நகர மக்களுக்கு, மேட்டூரில் இருந்து குழாய் மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு... அதற்கென விழா நடந்தது. அப்போது பேசிய ராஜாஜி, ''தண்ணீர் தங்கம் போன்றது... அதை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன் ராஜாஜி சொன்னதை இன்று வரையும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாததுதான் பெரும்சோகம்.
 
மனிதனின் அதீத ஆசையால், நதிகளில் மணல் முற்றுப்பெற்று, ஆறுகளில் நீர் அற்றுவிட்ட நிலையில், மிகப்பெரிய அபாயத்தை மனித சமுதாயம் எதிர்கொள்ளப் போகிறது. அதலபாதளத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலத்தடி நீர்; நிலத்துக்குள் ஊடுருவும் கடல் நீர்; கழிவுநீர் கால்வாய்களாக மாற்றப்பட்டுவிட்ட ஆறுகள், வாய்க்கால்கள்; கழிவுநீர்த் தேக்கமாக மறுவடிவம் பெற்றுவரும் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்... என ஒட்டுமொத்த நீராதாரங்களின் நிலையும் கேள்விக்குறியாகி நிற்கிறது. இதன் காரணமாக உயிரினங்கள் அனைத்தும்... அணு அயுதங்களைவிட மோசமானதொரு தாக்குதலை எந்நேரமும் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது. இவை அனைத்துக்கும் அடிப்படை... தொலைநோக்குப் பார்வையில்லாமல் நீராதாரங்களைச் சிதைத்தது/சிதைத்துக் கொண்டிருப்பதுதான்.
 
'நிலத்தடி நீர் என்பது நாளைய சந்ததியினருக்குச் சொந்தமானது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப்புரிதல் அரசுக்கும் வேண்டும். குளம், குட்டை, ஆறு, ஏரி போன்ற நீராதாரங்களை முறையாகப் பராமரிக்காமல் விட்டதன் பலன், தற்போது தெரியத் தொடங்கியுள்ளது. வாட்டி வதைக்கும் வெப்பத்துக்கும், மழை பொய்த்துப் போவதற்கும், நிலத்தடி நீருக்கும் தொடர்புண்டு. பல்வேறு சூழலியல் மாற்றங்களுக்கு நிலத்தடி நீர் குறைவும் ஒரு காரணம்.
 

தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் அளவுக்கு தமிழ்நாடு பாலைவனம் அல்ல. 'காவிரி, தென்பெண்ணை, பாலாறு - தமிழ்கண்டதோர் வைகை, பொருணைநதி என மேவிய ஆறுபல ஓட திருமேனி செழித்த தமிழ்நாடு’ என்று பாரதி பாடிய வளம் எங்கே போனது..?

குறிஞ்சி, முல்லை, மருதம் முதலான நிலவகை முறை நிலவிய அந்தக் காலங்களிலும் பருவமழை தவறி... விளைச்சலின்றி பஞ்சம் ஏற்பட்டது உண்டு. ஆனால், 'தாகம் தீர்க்க தண்ணீர் இல்லை’ என யாரும் தவித்தது இல்லை. 'பஞ்சம் முற்றியதால் நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டாள்’ என்றபோதும்கூட நீர் நிறைந்த கிணறுகள் எங்கும் இருந்ததாகவே வரலாற்றுக் கதைகள் பதிவு செய்திருக்கின்றன.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகை ஊட்டிக் காக்கும்’ என்பது மாறி, ஆறுகளின் ஊற்றுகளும் அடங்கி விட்டன. காவிரி உட்பட, தமிழக ஆறுகள் யாவற்றிலும் சீமைக்கருவேல் மிகுந்து வருகின்றன. நிலம், காடு, மலை, கடலோரம் என்றில்லாமல் 500, 1,000, 1500 அடிகள் என பூமியை சல்லடைக் கண்களாகத் துளைத்து, அடியில் இருந்த நீரையும் மின் மோட்டார்களைக் கொண்டு வெளியேற்றி, கபளீகரம் செய்து விட்ட மனிதர்களின் அறியாமையும், சுயநலம் மேலோங்கிய, தொலைநோக்கற்ற ஆட்சி நிர்வாகங்களின் மெத்தனமுமே இன்றைய நிலைக்குக் காரணம்.

மனதை உறைய வைக்கும் வரலாறு காணாத பெருவெள்ள உயிர்ச்சேதம் ஒருபுறம்! தாகம் தீர்க்க தண்ணீரைத் தேடி அலைகின்ற நிலை மறுபுறம்! யாவற்றுக்கும் கண்மூடித்தனமான சுற்றுப்புறச்சூழல் கேடுகள்தான் காரணம். இந்நிலையில், நிலத்தடி நீரைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமல்ல... நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம் நாம்?
 

Tuesday, July 30, 2013

உங்கள் தட்டில் உணவா... விஷமா? (கோலா)

கோலா பானங்களில் சீனிக்குப் பதிலாகச் சேர்க்கப்படும் சோளச் சர்க்கரை பற்றி சென்ற அத்தியாயத்தில் விவாதித்தோம். இதன் பாதிப்பை தற்போது உலகளவில் உணர ஆரம்பித்துவிட்டார்கள். நம் நாட்டில் சர்க்கரை நோய் அதிகமாவதற்கு வெள்ளை அரிசி முக்கியக் காரணம் என்றால், அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வரும் சர்க்கரை நோய்க்கு கோலாவின் சோளச் சர்க்கரையே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். சர்க்கரை நோய் தவிர, உடல் பருமன், பல் சொத்தை, கவுட் (Gout) என்கிற மூட்டுவலி நோய், சிறுநீரக பிரச்னைகள், குடல்புற்றுநோய் போன்ற வியாதிகளும் இதனால் ஏற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.
 
அடுத்து, கோலா பானங்களில் இடம்பெறும் இன்னொரு பொருள்... ஃபாஸ்போரிக் அமிலம். குளிர்பானங்களின் 'சுரீர்’ சுவைக்காக இது சேர்க்கப்படுகிறது. ஏற்கெனவே கார்பன் டை ஆக்ஸைடு கலப்பதால் அமிலமாக உள்ள கோலாவில், ஃபாஸ்போரிக் அமிலமும் சற்று சிட்ரிக் அமிலமும் சேர்ந்து கொள்வதால், அமிலத்தன்மை மிகவும் அதிகரிக்கிறது. இந்த கூடுதல் அமிலத் தன்மைதான் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. பல் சொத்தை, குடல் புண் தவிர, எலும்புகளில் உள்ள கால்சியம் என்ற சுண்ணாம்புக் கலவையை சிறிது சிறிதாகக் கரைக்கிறது. இதனால் எலும்புகள் பலவீனமாகி (Osteoporosis) எளிதில் உடைந்துவிடுகின்றன.
 
தற்போது உலகளவில் பெருகிவரும் இந்த எலும்புச் சிதைவு நோய், வயதானவர்களையும் பெண்களையும் தவிர, இளம் வயதினரையும் பாதிக்க ஆரம்பித்திருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இப்போது எல்லா ஊர்களிலும் அதிகரித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்தானே!குளிர்பானங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படும் ஃபாஸ்போரிக் அமிலம்போல, வேறு சில பொருட்கள் அதன் 'டிரேட்மார்க்’ நிறத்துக்கும், சில பொருட்கள் குளிர்பானம் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கும் (preservative) சேர்க்கப்படுகின்றன. முதலில் 'கேராமல்’ பற்றிப் பார்ப்போம். ஐஸ்கிரீம் போன்ற பண்டங்களில் கேராமல் இருப்பது உங்களுக்குத் தெரியும். ஒரிஜினல் கேராமல், சீனிப்பாகினை சுண்டக் காய்ச்சிய பின் கிடைக்கும் பிரவுன் நிறப் பொருள். இது அப்படியன்றும் கெடுதல் இல்லை. ஆனால், நாம்தான் எந்தப் பொருளையும் இயற்கையாக இருக்கவிடுவதில்லையே? சும்மா கிடந்த சீனிப்பாகில்... அமோனியா, சல்ஃபைட் என வேதிப்பொருட்களைக் கலந்து, அதிக வெப்பத்திலும் அதிக அழுத்தத்திலும் காய்ச்சி, அதன் முடிவில் கிடைக்கும் அழகான பிரவுன் பாகுதான், இப்போது கிடைக்கும் கேராமல். இதில்தான் இருக்கிறது பிரச்னை.இப்படி காய்ச்சும்போது, எம்.ஐ. என்றழைக்கப்படும் இரண்டு புதிய வேதிப்பொருட்கள் உருவாகின்றன. 2 - மீதைல்இமிடஸால் (2 - Methylimidazole) மற்றும் 4 - மீதைல்இமிடஸால் (4 - Methylimidazole) ஆகிய பொருட்கள்தான் அவை. இவற்றில், கோலா பானங்களில் சேரும் பொருள் 4 எம்.ஐ. இந்த 4 எம்.ஐ, உடற்செல் கருவில் உள்ள டி.என்.ஏ-வை பாதிப்பதாக பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதனால் நுரையீரல், ஈரல், தைராய்டு போன்ற உறுப்புகளில் புற்றுநோயைத் தூண்டுவதாகவும், ரத்தப் புற்றுநோய் (Leukemia)  வருவதற்கு வாய்ப்பு உண்டு என்றும், மலட்டுத் தன்மையும், ஆண்மைக் குறைவும் ஏற்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
 
உணவுப் பண்டங்களில் 4 எம்.ஐ என்பதன் அளவானது, 29 மைக்ரோ கிராம் என்கிற எடைக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பது சட்டம். ஆனால், கோலா பானங்களில் 140 மைக்ரோ கிராம் 4 எம்.ஐ இருப்பதால், கலிஃபோர்னியாவில் அதை தடை செய்துவிட்டார்கள். கோலா நிறுவனங்கள் கொஞ்சம் இறங்கி வந்து, பிரவுன் கலர் கெட்டுப்போகாமல் - அதேநேரம் புற்றுத்தன்மையில்லாத கேராமல் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன.

கவர்ச்சியான கலர் வேண்டும் என் பதற்காக இன்றைய உணவுப் பண்டங்களில் தவறாமல் சேர்க்கப்படும் 9 வகையான 'அனுமதிக்கப்பட்ட’ நிறங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். இவற்றில் 3 நிறங்கள்தான் பெரும்பாலும் உபயோகத்தில் உள்ளன. சிவப்பு - 40(Red Dye 40), மஞ்சள் - 5 (Yellow 5) மற்றும் மஞ்சள் - 6 (Yellow 6). இவை சேராத உணவுப் பண்டங்கள் இன்று மார்க்கெட்டில் இல்லை. பலவகையான குளிர்பானங்களிலும், ஐஸ்கிரீம், சாக்லேட், மிட்டாய்கள், சாஸ், ஜாம், ரொட்டி முதலிய பேக்கரி பதார்த்தங்கள் அனைத்திலும் இவை உண்டு. சிவப்பாகவோ அல்லது மஞ்சளாகவோ இருக்க வேண்டுமென்பதில்லை - இரண்டும் கலந்த தங்க நிறத்திலோ, பிரவுன் நிறத்திலோ இருக்கலாம். சரி, இவற்றால் என்ன கெடுதல்?

இன்றைய குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் புதிய நோய் ஏ.டி.ஹெச்.டி (ADHD - Attention Deficit Hyperactivity Disorder). அதாவது, 'கவனக் குறைவு - அதீத உடல் இயக்க நோய்’. பள்ளிக்குச் செல்லும் சுமார் 5 முதல் 10 சதவிகிதம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தக் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். புத்தகத்தை எதிரில் வைத்துக்கொண்டு கனவுலகில் மிதப்பார்கள். ஆனால், மக்கு அல்ல - பல விஷயங்களில் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். உடல் அளவில் அளவுக்கு மீறிய சுறுசுறுப்பும் ஓட்டமுமாக (Hyperkinetic)  இருப்பார்கள். திடீர் திடீரென கோபதாபங்களுக்கு உட்பட்டு, முரட்டுத்தனமான காரியங்களைச் செய்வார்கள். பள்ளியில் ஆசிரியைதான் இதை முதலில் கண்டுபிடித்து பெற்றோருக்குத் தெரிவிப்பார். பெற்றோர்கள் இதை ஒரு வியாதி என்றே நம்ப மறுப்பார்கள். மேற்கொண்டு, 'என் புள்ள ஒரு ஹைபர்’ என்று சொல்வதை இப்போது சில பெற்றோர் பெருமையாகவும் நினைக்கின்றனர். ஆனால், குழந்தைகளைப் பாதிக்கும் மனநல நோய்களில் இதுதான் முக்கியமானது.

பெருகி வரும் இந்தப் புதிய நோயின் மூலக்காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியான உண்மை கிடைத்தது. குழந்தைகள் இப்போதெல்லாம் பாலை உட்கொள்ளுவதற்குப் பதிலாக, கோலா போன்ற குளிர்பானங்களையே அதிகம் விரும்பிப் பருகுகிறார்கள். அதனால் உணவில் கிடைக்க வேண்டிய கால்சியம் ஊட்டச்சத்து குறைந்து, சோளச்சர்க்கரை, கேராமல், ரெட் டை - 4 போன்ற வேதிப்பொருட்களின் தூண்டுதலால் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதே அந்தச் செய்தி. இதோடு கலர் கலரான மிட்டாய்களும் சேர்ந்துகொள்ளும்போது கேட்கவே வேண்டாம். இந்த வியாதிக்கு 'ரிட்டாலின்’ என்கிற மருந்து இருந்தாலும், குளிர்பானங்களையும் இனிப்புப் பண்டங்களையும் விலக்கினாலே, அதிவிரைவில் அற்புத நிவாரணம் கிடைப்பதாகப் பெற்றோர்கள் பலரும் கூறுவதை இப்போது காண முடிகிறது.

அடுத்து - சோடியம் பென்ஸோயேட். கோலா பானம் கெட்டுப் போகாமலும், பூஞ்சைக்காளான் படியாமலும் பாதுகாப்பதற்காகச் சேர்க்கப்படும் சோடியம் பென்ஸோயேட், நாளாக ஆக, காலாவதி தேதிக்கு முன்னதாகவே பென்ஸாயிக் அமிலமாக மாறிவிடுகிறது. இதில் உள்ள பென்ஸீன் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. ஆப்பிள், பெர்ரீஸ், பிளம்ஸ் போன்ற பழங்களில் சிறிதளவு பென்ஸீன் இயற்கையாகவே உண்டு. நாம் குடிக்கும் தண்ணீரில்கூட சிறிதளவு இருக்கும். குடிதண்ணீரில் பென்ஸீன் அளவு 5 ppb என்கிற அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், கோலா பானங்களில் 539 ppb என்று அமெரிக்க பரிசோதனைக் கூடங்கள் தெரிவிக்கின்றன.

பென்ஸீன் மனித உடலில் ஈரலைத் தாக்கி 'சிர்ரோசிஸ்’ என்ற வியாதியையும், மூளையைத் தாக்கி 'பார்க்கின்ஸன்’ என்ற வியாதியையும், வேறு சில புற்றுநோய்களையும் உண்டாக்க முடியும். வழக்கம்போல் இந்தக் கருத்துக்களை மறுத்த குளிர்பான நிறுவனங்கள், தற்போது மாற்று பாதுகாப்புப் பொருளை உற்பத்தி செய்வதாக உறுதியளித்திருக்கின்றன.

புரோமின் கலந்த தாவர எண்ணெய், குளிர்பானங்களில் ஸ்திரத் தன்மை கெடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படுகிறது. இதில் உள்ள 'புரோமின்’ மூளையைத் தாக்கி, ஸ்கிட்ஸோஃப்ரேனியா போன்ற மனநல வியாதிகளையும், தூக்கக் கோளாறுகளையும் உண்டாக்க முடியும் என்று உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பல நாடுகள் இதற்குத் தடையும் விதித்தன. ஆனாலும் பல குளிர்பானங்களில் இது இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

மலைப்பாக இருக்கிறதா? கொஞ்சம் பொறுங்கள்... கோகோ இலைகளைப் பற்றியும், கோலா கொட்டைகளைப் பற்றியும் அடுத்த இதழில் பேசிய பிறகு, உங்கள் வீட்டின் ஃப்ரிட்ஜில் நிரந்தரமாக குடி வைக்கும் குளிர்பானங்கள் பற்றி நல்லதொரு முடிவுக்கு வரலாம்!

 

Monday, July 29, 2013

திவாலான அமெரிக்க நகரம்!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் மிகப்பெரிய நகரம் டெட்ராட். 1960களிலும் 1970களிலும் அமெரிக்காவின் இரண்டாவது பணக்கார நகரம் இது. உலக கார்களின் தலைநகரமும்கூட. ஆனால், டெட்ராடை திவாலான நகரமாக அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் மனு செய்திருக்கிறார் அம்மாநில கவர்னர் ரிக் ஸ்னைடெர்.

இந்த நகரத்தில் இருந்த முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸுக்கு நிதிப்பிரச்னை வந்தபோது அமெரிக்க அரசு உதவியது. அன்றைய அரசு, ‘எது ஜெனரல் மோட்டார்ஸுக்கு நல்லதோ அது அமெரிக்காவுக்கும் நல்லது’ என்றது. அந்தளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பலம் சேர்த்த இந்நகரம் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. வாழும் மனிதர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தில் இருந்து எழுபதாயிரமாகக் குறைந்திருக்கிறது. எழுபத்தெட்டாயிரம் தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன.டெட்ராடை, திவால் நகரமாக மாநில கவர்னர் அறிவிக்க வேண்டியதன் காரணம், நகர நிர்வாகத்தின் கடன் சுமை 1800 கோடி டாலர் அளவுக்கு மூழ்கி இருப்பதுதான். அமெரிக்க அரசியலமைப்பில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மிக வலிமையானவை. பெரிய தொழில் நகரங்களில் வசூலிக்கப்படும் வரிகளிலிருந்தே அந்த நகரச் செலவுகள், மக்களின் சமூகப் பாதுகாப்பு, நலிந்தோர், சீனியர் சிட்டிசன் ஓய்வு ஊதியம்... போன்றவற்றை உள்ளாட்சி நிர்வாகம் செய்யும். தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இன்று டெட்ராட் நகருக்கு வரிவருமானம் இல்லை. எனவே, நிர்வாகத்தால் சம்பளம், ஓய்வு ஊதியம் எதுவும் கொடுக்க முடியவில்லை. அவ்வகையில் கொடுக்க வேண்டியது மட்டுமே 900 கோடி டாலர். மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்துகளை விற்க வேண்டுமானால் அந்த மாநகரம் திவால் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்கச் சட்டம். அரசின் சொத்துகளை விற்று மேற்கண்ட செலவினங்களைச் சமாளிக்க அனுமதிக்க வேண்டும் என மனு செய்திருந்தார் கவர்னர். அதில் ஒரு டாலருக்கு ஒரு சென்ட் வீதம் கடன்காரர்களுக்கு (நூறில் ஒரு பங்கு) திருப்பியளிக்க வேண்டும் என்பது ஹைலைட் குறிப்பு. ஆனால், மிச்சிகன் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்மேரி, ‘இந்த மனு சட்ட விரோதமானது. இது ஓய்வூதியர்களை மிரட்டும் நடவடிக்கை’ என்று சொல்லி மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டார். மாநில நிர்வாகம், மேல் கோர்ட்டுக்கு முறையீடு செய்திருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் ஒரு மாநிலம் இப்படிக் கேட்பது இது தான் முதல்முறை.

ஏன் தொழிற்சாலைகள் மூடப்பட்டன? 

காரணம், 1994லும் 2004லும் அமெரிக்க அரசு வெளியிட்ட புதிய தொழிற்கொள்கைகள். அந்தக் கொள்கை வட-அமெரிக்காவில் இயங்கும் எந்தத் தொழில் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை அண்டை நாடுகளில் தயாரித்து, அமெரிக்கத் தயாரிப்பு என்று சொல்லி உலகெங்கும் விற்கலாம் என்றது. மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கிளைகளைத் தொடங்கின. காரணம், அங்கு தயாரிப்புச் செலவுகள் மிகக் குறைவு. மெல்ல முழு உற்பத்தியை அங்கே மாற்றின. இதை அரசாங்கம் தடுக்கவில்லை. இன்று அமெரிக்காவில் ஓடும் கார்களில் எழுபது சதவிகிதம் மெக்ஸிக்கோவில் தயாராகி ரயிலில் அமெரிக்காவுக்கு வந்தவை என்கிறது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை. 

‘நகரத்தின் நிதிப் பிரச்னையைப் புரிந்து கொண்டு மக்கள், நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். சிக்கல்கள் சரியானவுடன் டெட்ராட் நகரை மீண்டும் எழுப்ப அரசு முடிந்தளவு உதவி செய்யும்’ என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று.

ஆதித்யா

மில்கா சிங் - பாஹ் மில்கா பாஹ்’

 
காமன்வெல்த் போட்டி தனிநபர் தடகளப் பிரிவில் இந்தியா சார்பாக தங்கம் வென்ற ஒரே வீரர் மில்கா சிங். இன்று அவருடைய வாழ்க்கை, ‘பாஹ் மில்கா பாஹ்’, என்கிற பெயரில் இந்தியில் படமாகி இருக்கிறது. 
 
இன்றைய பாகிஸ்தானின் கோவிந்த்புராவில் 1935இல் பிறந்தார் மில்கா சிங். இளம் வயதில் கால் கடுக்க தினமும் 20 கி.மீ. நடந்து சென்று கல்வி பயின்றதுதான் அவர் தடகள வீரராக மாறியதற்கு ஆரம்பப் புள்ளி. இவரது 15 வயதில், இந்தியப் பிரிவினைக் கலவரத்தில், மில்கா சிங்கின் கண் முன்னாலேயே அவருடைய பெற்றோர்கள், சகோதரர்கள் மூன்று பேரையும் இழந்தபோது செய்வதறியாமல் தவித்துப் போனார்.  உயிருக்கு அஞ்சி, காட்டு வழியே ஓடி, ஒரு ரயில் நிலையம் வழியாக தில்லியில் உள்ள தம் சகோதரியிடம் அடைக்கலம் ஆனார். பிறகு, அவருடைய சகோதரரின் உதவியால் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் மிகக்குறைந்த நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுக்கு அடுத்த கட்டப் பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் ஒருவராக வந்து, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஒன்றில் ஜெயித்தபோதுதான் தம் திறமையை அறிந்தார் மில்கா. 1956 ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட மில்கா சிங், 400 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்கிய அமெரிக்க வீரர் சார்லஸ் ஜென்கின்ஸ், என்னென்ன பயிற்சிகள் எடுக்கிறார் என்பதை அறிந்து கொண்டு, அடுத்த இரண்டு வருடங்களில் அவரது டைமிங்கை ஜெயித்தார். பிறகு, உலகளவில் முதல் எட்டு சிறந்த தடகள வீரர்களில் ஒருவரானார். ஆனால், 1960 ஒலிம்பிக்ஸில் அவர் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டதுதான் பெரிய சோகம். 
 
1960ல் பாகிஸ்தானில் ஓர் ஓட்டப் பந்தயத்துக்கு அழைப்பு வந்தபோது பழைய நினைவுகளால் அங்குச் செல்ல மறுத்தார் மில்கா சிங். ஆனால், அப்போதைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளினால் பாகிஸ்தானுக்குச் சென்றார். ஏழாயிரம் பேர் கூடிய மைதானத்தில், பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக்கைத் தோற்கடித்தார். பரிசளிப்பு விழாவில், ‘நீங்கள் இன்று ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்’ என்று மில்காவைப் பாராட்டினார் ஜெனரல் அயூப் கான். அங்குதான் அவருக்கு ‘ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)’ என்கிற பட்டம் அளிக்கப்பட்டது.  மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு, ‘ரேஸ் ஆஃப் மை லைஃப்’ என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதை அறிந்த பல இந்தி தயாரிப்பாளர்கள் மில்கா சிங்கிடம், படத்துக்கான அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி வரைக்கும் தரத் தயார். ஆனால்,‘ரங் தே பசந்தி’ படத்தை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுக்கு இவ்வாப்பை அளித்து, படத்துக்கான உரிமையாக ஒரு ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டார் மில்கா சிங். இப்போது, படத்தின் லாபத்தில் கிடைக்கும் 15 சதவிகிதத்தை மில்கா சிங் தொண்டு நிறுவனத்துக்குத் தர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. படத்தில் மில்கா சிங்காவாக நடித்துள்ளார் ஃபர்ஹான் அக்தர். இதுவரை ஒலிம்பிக்ஸின் இறுதிப் போட்டிக்கு, குறைந்த இந்தியர்களே தகுதி பெற்றிருக்கிறார்கள். காரணம், கடின உழைப்பு இல்லை. கடுமையான பயிற்சிகளால் நான் பலமுறை சுயநினைவை இழந்துள்ளேன். தொடர்ந்து ஐந்து, ஆறு மணி நேரம் ஓடும்போது என் சிறுநீரிலிருந்து ரத்தம் வந்திருக்கிறது. பயிற்சியாளர்களை ஒப்பந்த அடிப்படையில்தான் பணியில் அமர்த்த வேண்டும். ஒரு வீரரின் டைமிங்கில் முன்னேற்றம் தெரியாவிட்டால் உடனே அவரின் பயிற்சியாளரை நீக்கவேண்டும். கடின உழைப்புதான் அத்லெடிக்ஸில் நல்ல முடிவுகளைக் கொடுக்கும். 
 
ஒரு உசைன் போல்ட்டினால் ஜமைக்கா புகழ் பெறும் போது அந்த நிலை ஏன் இந்தியாவுக்கு இல்லை? இன்னொரு மில்கா சிங், பி.டி. உஷா ஏன் உருவாகவில்லை?" என்று கேள்வி கேட்கும் மில்கா சிங்குக்கு வயது எழுபத்து எட்டு!

Thursday, July 25, 2013

ஜெயலலிதா ஃபார்முலாவாக ஜெயிக்கும் ஃபார் முலாவா?

தனித்த பயணத்துக்குத் தயாராகி விட்டார் ஜெயலலிதா!
 
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டி யிடுவது என்ற தனது முடிவில்  உறுதியாக நிலைகொண்டுவிட்டார் ஜெயலலிதா!

''நாம் யாரையும் சார்ந்திருக்க முடியாது. வேறு எத்தனையோ கட்சிகள் அப்படி இருக் கலாம். அவர்கள் தேசியக் கட்சியைச்சார்ந்து இருக்கலாம். சில பெண்கள் இளம் வயதில் அப்பாவைச் சார்ந்திருப்பார்கள். வளர்ந்ததும்  கணவனைச் சார்ந்திருப்பார்கள். வயதானதும் பிள்ளைகளைச் சார்ந்திருப்பார்கள். என்னைப் போன்ற பெண்களும் உள்ளனர். நான் யாரையும் சார்ந்து இல்லை. நல்லது, கெட்டதை நானே முடிவு செய்து கொள்கிறேன்.  

தேசிய அரசியலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகள் உள்ளன. சில கட்சி கள்காங்கிரஸோடும் சில கட்சிகள் பாரதிய ஜனதாவோடும் கூட்டு சேர்கின்றன. ஆனால், அ.தி.மு.க. தனித்தே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. நம் எதிர்காலத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நாம், வரும் தேர் தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸைச் சார்ந் திருக்க முடியாது. தமிழகத்தின் உரிமையைப் பெற 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்தி யில் அதிகாரத்தை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்'' - இப்படி அ.தி.மு.க. பொதுக் குழுவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா பேசினார். இப்படி தைரியமாகச் சொல்லி விட்டாரே தவிர, அறிவிப்புக்குப்பிறகுதான் அவருக்குத் தயக்கம் அதிகம் ஏற்பட்டது.


ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பைப் பார்த்து அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவர் கருணாநிதி. அந்தக் காலகட்டத்தில் அவருடன் காங்கிரஸ் நெருக்கமாக இருந்தது. கருணாநிதியை விஜய காந்தும் நெருங்கிக்கொண்டிருந்தார். தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய மூன்றும் இணைந் தால், அது பலமான கூட்டணியாக அமையும், தனித்து நிற்கும் ஜெயலலிதாவை வீழ்த்தலாம் என்பது அவரது நினைப்பாக இருந்தது. இந்த நிலையில், 'நாம் தப்புக்கணக்கு போட்டு விட் டோமோ’ என்று கூட ஜெயலலிதா நினைத்தார். அதனால்தான் மதுவிலக்கு நடைப்பயணத்தில்  இருந்த வைகோவை, வலிய வழி மறித்து எதுவுமே தெரியாதவராக, 'எதுக்காக நடைப் பயணம்?’ என்று கேட்டார். 'மீண்டும் ஜெயலலிதா கூட்டணி அமைக்கலாம்’  என்று ஒருபுறம் பேச்சு கிளம்பிய நிலையில், மறுபுறம்  கருணாநிதியும் பலவீனம் அடைய ஆரம்பித்தார்.

ஈழத் தமிழர் பிரச்னை, தி.மு.க-வுக் கும் காங்கிரஸுக்குமான ஐக்கியத்தைக் குலைத்தது. நேரம் கெட்ட நேரத்தில் காங்கிர ஸைக் கழற்றிவிட்டு, டெசோவுக்கு உயிரூட்ட வேண்டிய நிலைக்கு கருணாநிதி தள்ளப்பட் டார். விஜயகாந்துடன் மட்டும் அணி சேர லாம் என்று கருணாநிதி நினைத்திருந்தார். மாநிலங்களவைத் தேர்தலில் விஜயகாந்த் தனது மச்சானை எம்.பி. ஆக்கத் துடிக்க, கருணாநிதி தனது மகளை எம்.பி. ஆக்க நினைக்க... அங்கும் நேரடியாக மோதும் சூழல். இதனை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதியுடன் மீண்டும் ஒட்டிக்கொண்டது. 'நாங்கள் கூட்டணி சேரவில்லை’ என்று இப்போதைக்கு கருணாநிதி சமாளித்தாலும், அவருக்கு வேறு வழியே இல்லை, காங்கிரஸு டன் சேர்வதைத் தவிர!இப்படிப்பட்ட நிலையில் தனது ஐந்தாவது வேட்பாளரை வெற்றி பெறவைக்க வாய்ப்பு இல்லாமல் போனதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த இடத்தைக் கொடுத்து,  அவர் களது நன்மதிப்பை ஜெயலலிதா வாங்கிக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததைவைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்களை தனது அணியில் ஜெயலலிதா சேர்த்துக் கொள்வார் என்று சிலர் நினைக்கிறார்கள்.''இல்லை. அவர்களோடு நட்பு பாராட்ட மட்டுமே ஜெயலலிதா நினைக்கிறார். தேர்தல் கூட்டணி வைக்க மாட்டார். தேர்தலுக்குப் பிறகு நடக்க இருக்கும் அரசியல் காய் நகர்த்தல்களுக்கு கம்யூனிஸ்ட்கள் பயன்படுவார்கள் என்பதற் காகத்தான் ஒரு ராஜ்யசபாவை டி.ராஜாவுக்கு விட்டுக்கொடுத்தார்'' என்று சொல்லப்படுகிறது. வைகோவை நடைப் பயணத்தில் வலியப்போய் பார்த்தவர் ஜெயலலிதா. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது சம்பந்தமாக வைகோ விடுத்த ஓர் அறிக்கைக்கு வேளாண் துறை அமைச்சர் தாமோதரர் விட்ட அறிக்கையில், வைகோவை மிகக் கடுமையாக விமர்சித்தார். பொதுவாக அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அறிக்கைவிடும் அதிகாரம் எல்லாம் வழங்கப்படவில்லை. அதுவும் இன்னொரு கட்சித் தலைவருக்கு எதிராக, அதுவும் கூட்டணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் வைகோவுக்கு எதிராக தாமோதரன் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றால், ஜெயலலிதா அதன் மூலமாக ஏதோ சொல்ல விரும்புகிறார் என்று அர்த்தம். மேலும், அவரது அணியுடன் கைகோத்து நின்ற மனிதநேய மக்கள் கட்சியும் புதிய தமிழகமும் கனிமொழியை ஆதரிக்கும் வாய்ப்பாக தி.மு.க. பக்கம் தாவியது பற்றிய எந்த வருத்தமும் ஜெயலலிதாவின்செயல்பாட்டில் இல்லை. அவரே வழியனுப்பியதுபோல நடந்துகொண்டார். மொத்தத்தில், 'யாரும் இல்லாமல், தனித்துப் போட்டி!’ என்ற இறுதி முடிவை அவர் எடுத்துவிட்டுத்தான் இப்படிச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா இரண்டு முடிவுகளை எடுத்து வைத்திருந்தார். ஒன்று தேசிய அளவில் அமையும் பாரதிய ஜனதா அணியில் சேர்வது அல்லது கம்யூனிஸ்ட்கள் அமைக்கும் மாற்று அணியில் பங்கேற்பது. பாரதிய ஜனதா அணியில் சேர்ந்தால், தமிழகத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க வேண்டிவரும். மேலும், அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் மிகவும் சொற்பம். கம்யூனிஸ்ட்கள் நம்மோடு சேர்ந்தால் கூடுதல் பிரசார பலம் கிடைக்குமே தவிர, மற்றபடி அவர்கள்தான் இரண்டு தொகுதிகளில் நம்மால் ஜெயிப்பார்கள் என்பது ஜெயலலிதாவின் எண் ணம். 'தனித்து நிற்பதன் மூலமாக அ.தி.முக-வுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதையாவது நாம் தெரிந்துகொள்ளலாமே?’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. கடந்த இரண்டு வாரங்களாக அவருடைய எண்ணவோட்டம் இப்படித்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்.அதனால்தான் கொடநாடு சென்ற ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டார். 40 தொகுதிகளுக்குமான அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பதை இறுதிப்படுத்தத் தொடங்கி விட்டார். இந்த முறை வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர் மீது எந்தப் புகாரும் எழக் கூடாது என்று நினைக்கிறார். மாவட்டச் செய லாளர்கள் மீது இதுவரை வந்த புகார்களை அமைச்சர் கே.பி. முனுசாமியும், அமைச்சர்கள் மீதான புகார்களை அமைச்சர் நத்தம் விஸ்வ நாதனும், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பற்றிய புகார்களை அமைச்சர் வைத்தியலிங்கமும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. இந்த மூவரையும் கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம். இவர்கள் அ.தி.மு.க. பிரமுகர்களில் மிகச் சரி யான ஆட்களை அடையாளம் காட்டுவார்கள் என்றும், அந்தப் பட்டியலை வைத்து வேட்பாளரை ஜெயலலிதா முடிவுசெய்வாராம். ஜெயலலிதா தயாரிக்கும் வேட்பாளர்கள் பற்றி அதன் பிறகு உளவுத் துறையும் விசாரிக்குமாம். இத்தனை அக்னிப் பரீட்சைகளையும் தாண்டி வருபவரைத்தான் தேர்தல் களத்தில் நிறுத்த வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம்!  

'கருணாநிதி கஜானாவை காலியாக வைத்துச் சென்றார். அந்த நிலைமையிலேயே நம்மால் இவ்வளவு சாதனை செய்ய முடிந்துள்ளது. இந்தச் சாதனைகளைப் பிரசாரம் செய்ய வேண்டும். நல்ல வேட்பாளரை நிறுத்த வேண்டும். மற்றபடி வேறு யார் தயவும் தேவை இல்லை’ என்பதை எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஃபார்முலாவாக ஜெயலலிதா நம்புகிறார். ஆனால், இது ஜெயிக்கும் ஃபார் முலாவா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.

மேலும், அதிகப்படியான எம்.பி-க் கள் பெற வேண்டும் என்பதைவிட, பிரதமர்  ஆசையும் கடைக்கோடியில் இருப்பதால், கயிற்றின் மீது நடக்கும் சாகசத்துக்குத் தயாராகிவிட்டார் ஜெயலலிதா!  

ப.திருமாவேலன்

Wednesday, July 24, 2013

என்ன செய்தார் எம்.பி.? - விருதுநகர்

''வைகோவைப் போல் எனக்குப் பேசத் தெரியாது. ஆனால், செயல்படத் தெரியும். மக்கள் பணிகளில் அக்கறை காட்டு​வேன்; செயல்​படுவேன்'' - தேர்தல் பிரசாரத்தின்​போது காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்க தாகூர் பேசியது இது. விருதுநகர் தொகுதியின் எம்.பி-யான பின்னர், சொன்னதுபோல செயல்பட்டாரா?
 
இவரது தாத்தா மாணிக்க அம்பலம், பாரம்பரிய காங்கிரஸ்காரர். திருகோஷ்​டியூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரான கவிஞர் கண்ணதாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர். தேசியகீதம் பாடிய ரவீந்திரநாத் தாகூர் மீது கொண்ட பற்று காரணமாக, தாத்தா பெயருடன் தாகூரைச் சேர்ந்து இவருக்கு மாணிக்க தாகூர் என்று பெயரிட்டனர். இப்போது மாணிக்கம் தாகூர் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.
 
மாணவர் காங்கிரஸ் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவருக்கு, ராகுல் காந்தி​யுடனும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு​தான் விருதுநகரில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்தது. தாத்தாவோ கண்ணதாசனை வீழ்த்த... பேரனோ வைகோவை வென்று நாடாளு​மன்றத்துக்குள் நுழைந்தார்.

காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு நெருக்க​மான மாணிக்கம் தாகூர், அதனைப் பயன்படுத்தி தொகுதி மக்களுக்கு செய்துகொடுத்தது என்ன?


ஒரு மாவட்ட தலைநகருக்கான எந்தவித அறிகுறி​யும் இல்லாமல், விருதுபட்டியாகவே காட்சியளிக்கிறது விருதுநகர். மழை பெய்தால் சகதி, வெயில் அடித்தால் புழுதி, ரோடெல்லாம் குழிகள், மாதத்துக்கு இரண்டு முறைதான் குடிநீர், குறுகலான சந்துகள் என எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரிய அளவில் முயற்சிகளை மாணிக்கம் தாகூர் எடுத்ததாகத் தெரியவில்லை.

ராமமூர்த்தி சாலை ரயில்வே கேட், மக்களுக்குத் தீராத தலைவலி. அந்த ரயில்வே கேட்டை கடந்துதான் அரசு மருத்துவமனை, போஸ்ட் ஆபீஸ் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும். பரபரப்​பான காலை நேரத்தில் இந்த ரயில்வே கேட் மூடப்​படுவதால், அந்த ஏரியாவில் தினமும் கடும் போக்கு​வரத்து நெரிசல். அங்கு மேம்பாலம் அமைக்க வேண்​டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ''அந்தப் பாலம் அமைந்தால் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தியேட்டர் மற்றும் வீடு பாதிக்கப்படும். தனது தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த​வர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்பதாலேயே, மேம்​பாலத்தைக் கொண்டுவருவதில் எம்.பி. ஆர்வம் காட்டவில்லை. அதற்குப் பதிலாக சுரங்கப் பாதை அமைக்கலாம் என்று சொல்கிறார். அதை மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனவே  மக்களின் அவஸ்தை தொடர்கிறது''.

சிவகாசி டு ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரத்திலும், சிவகாசி டு விருதுநகர் சாலையில் திருத்தங்கல்லிலும் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆய்வுப் பணிகள் நடந்ததே ஒழிய பாலம் வந்தபாடில்லை. விருதுநகர் - மானாமதுரை இடையே 67 கிலோ தூரத்துக்கு மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில்பாதை ஆக்கும் பணிகள் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்துமுடிந்து, ரயில் விடப்பட்டதை அவரது சாதனையாக சொல்கின்றனர். 

சிவகாசி, முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு 40 பேர் இறந்தபோது, அந்த விஷயத்தை மத்திய அரசு வரை கொண்டுசென்று தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் நிவாரண நிதி பெற்றுதந்தார். இது தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்திருந்தாலும், அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் பட்டாசு ஆலை அதிபர்கள் மாணிக்கம் தாகூர் மீது கடுப்பில்தான் இருக்கின்றனர். ''மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அடிக்கடி ரெய்டு நடத்தி விதிமுறைகளை மீறிய ஆலைகளை சீல் வைக்கின்றனர். மாணிக்கம் தாகூர் தலையிட்டு அதி​காரிகளிடம் பேசினால், இந்தக் கெடுபிடிகள் குறையும் என்று நினைக்கின்றனர். ரெய்டு விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று எம்.பி. உறுதியாக இருப்பதால், இந்தக் கடுப்பு'' என்கிறார்கள் சிவகாசி வட்டாரத்தில். கோடிகள் புழங்கும் சிவகாசியும் உள்கட்டமைப்பு வசதிகளில் மோசமாகவே இருக்கிறது. தரமான சாலைகள், மேம்பாலங்கள், பாதாளச் சாக்கடைத் திட்டம் எதுவும் சிவகாசியில் இல்லை.
தொகுதியில் கைத்தறி நெசவாளர்கள் கணிசமான அளவு இருக்கின்றனர். அருப்புக்​கோட்டைக்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அழைத்துவந்து கைத்தறி பெருங்குழுமம் ஆரம்பித்துவைத்தார். அதோடு சரி... அது செயல்படவே இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்​டத்தை ஆய்வுசெய்வதையே தனது முழு நேரப் பணியாக வைத்திருக்கிறார். கிராமங்கள் தோறும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பணிகள் நடக்கும் இடத்துக்கு விசிட் அடிக்கிறார். இது மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார். அந்தத் திட்டத்தின் பெயரை சரியாக சொல்லும் நபர்​களுக்கு 100 ரூபாய் அன்பளிப்பு தருகிறார். மதிய உணவுக்கு ஏற்பாடுசெய்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார். இதனால் கிராம மக்கள் மத்தியில் இவருக்கு 100 ரூபாய் எம்.பி. என்றே பெயர்.

திருமங்கலம் பகுதியில் அவருக்கு எதிராக நிறையவே குற்றச்சாட்டு குரல்கள் கேட்கின்றன. ''திருமங்கலம் டு மதுரை விமான நிலையம் இடையே ரயில்வே கேட் குறுக்கிடுகிறது. இங்கே மேம்பாலம் கட்டித்தருகிறேன் என்று சொன்​னவர், கண்டுகொள்ளவில்லை. திருமங்கலத்தில் இருந்து சொற்ப கிலோ மீட்டர் தூரத்திலேயே டோல்கேட் இருக்கிறது. அங்கு உள்ளூர் வாகனங்களுக்கும் பணம் வசூலித்ததால், பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னையை மாணிக்கம் தாகூர் கண்டுகொள்ளவில்லை. பழைய எம்.பி-யான சித்தன்தான் அதற்காக வரிந்துகட்டிக்கொண்டு போராடி, உள்ளூர் வாகனங்களுக்குக் கட்டண விலக்குப் பெற்றுத்​தந்தார்'' என்கின்றனர்.


திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் எந்த எக்ஸ்பிரஸ் ரயிலும் நிற்பது இல்லை. போஸ்ட் ஆபீஸுக்கு இடம் ஒதுக்கியும், கட்டடம் இல்லை. சாலைகள் அகலப்படுத்தப்பட்டபோது நிழற்குடைகள் நீக்கப்பட்டன. அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிழற்குடைகளைக் கட்டித் தந்திருக்கலாம். அதைச் செய்யவில்லைடெல்லியில் இருக்கும் எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனையை தொகுதிக்கு கொண்டு வருவேன் என்பது அவர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதி. அதற்காக திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. பின்னர் டெண்டர் நிலையிலேயே கைவிடப்பட்டது.

மாணிக்கம் தாகூர் செய்த சாதனைகள் என்ன?

''தீப்பெட்டித் தொழிலாளர்களுக்காகப் பொது பயன்​பாட்டு மையத்தை தொகுதியில் ஐந்து இடங்களில் திறந்துவைத்திருக்கிறார். சீனப் பட்டாசு இறக்குமதிக்குத் தடை பெற்றுத் தந்தார். தொகுதியில் சாலைகளை மேம்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 200 கோடி ரூபாய் பெற்றுத்தந்துள்ளார். ஏழை வியாபாரிகள் தொழில் நிமித்தம் ரயிலில் பயணம்செய்ய சலுகைக் கட்டண அட்டை 4,000 நபர்களுக்குப் பெற்றுத்தந்தார். நகரங்களில் குடிசைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு மத்திய அரசின் திட்டம் மூலம் 50 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தந்தார்.

மதுரை டு ராமேஸ்வரம் நான்கு வழி சாலைத் திட்டத்தின் மூலம் விரகனூர், புளியகுளம், சிலைமான் பகுதி மக்களின் வீடு பாதிக்கும் நிலை இருந்தது. எம்.பி-யின் முயற்சியால் சிலைமானுக்குப் புறவழிச் சாலை ஏற்படுத்தி திட்டத்தை மாற்றியதன் மூலம் 600 குடும்பங்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டது. விருதுநகர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்குக் கல்விக்கடன் பெற்றுதந்துள்ளார்.

இவர் மீண்டும் விருதுநகரில் போட்டியிட்டால், காங்கிரஸுக்கு எதிரான மக்களின் மனநிலைதான் அவரது வெற்றிக்குத் தடையாக இருக்கும்!
 

Tuesday, July 23, 2013

நெல்சன் மண்டேலா !

அந்தச் சிறுவனை எல்லாரும் 'ரோலிலாலா’ என்று அழைத்தார்கள். கறுப்பின மொழியான க்சோஸா மொழியில் ரோலிலாலா என்றால், நிறையத் தொல்லைகொடுப்பவன் என்று அர்த்தம்.
 
ஆப்பிரிக்க மோராரோ இனக் குழுவின் கறுப்பின மண்டேலா பிரிவில் பிறந்த அவன், நான்கு வயதில் ஆடு, மாடுகள் மேய்த்தபடி வெள்ளை எஜமானர்களுக்கு பல தொல்லைகளைக்கொடுத்தான். வெள்ளையர் பெயர்களைத் தெரிந்துகொண்டு, தான் வளர்த்த நாய்களுக்கு அந்தப் பெயர்களைச் சூட்டி, ஊரையே மிரளவைத்தான்.
அந்தக் காலத்தில் தென் ஆப்பிரிக்க கறுப்பினக் குழந்தைகள் பள்ளிக்கூடம் போக முடியாது. எந்த சுதந்திரமும் கிடையாது. அந்தச் சிறுவனின் அம்மா பெயர் நோசாக்கேனி ஃபானி. அவர், சர்ச் ஒன்றில் வேலைபார்த்தார். மிஸ் மிடின்கேன் என்பவர் அந்த சர்ச்சில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தினார். அம்மா உடன் சென்ற அந்தச் சிறுவன், அந்தப் பள்ளிக்கூடத்தில் வெள்ளைக்காரப் பையன்கள் படிப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்து, தானும் நன்றாக எழுதவும் சத்தமாகப் படிக்கவும் கற்றான்.

 

இதைப் பார்த்துப் பெரிதும் ஆச்சர்யப்பட்ட மிடின்கேன், அந்தச் சிறுவனுக்கு 'நெல்சன்’ என்று பெயர் சூட்டினார். அந்தப் பகுதியில் கறுப்பினக் குழந்தைகளில் முதலில் பெயர் சூட்டப்பட்டதே நெல்சனுக்குதான். பே... மூ... என்றுதான் அதுவரை கறுப்புக் குழந்தைகள் அழைக்கப்பட்டனர். நெல்சன் தனது நண்பர்களுக்குத் தானே பெயர் வைக்கத் தொடங்கினான்.நெல்சனின் தந்தை பெயர் கால்டா. அவர், இனக் குழுவின் பிரதிநிதியாக இருந்தார். வெள்ளை நீதிபதி ஒருவருக்கும் அவருக்கும் ஒரு பிரச்னையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்சன் நடந்த சம்பவங்களை உற்றுநோக்கினான். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்ததால், நீதிபதி தனது தந்தைக்கு நேர்மையற்ற தீர்ப்புக் கூறியதை அறிந்துகொண்டான். ஏதேதோ புத்தகங்களை மேற்கோள்காட்டி தனது தந்தையை அவர் குழப்பியதையும் கண்டான். அதன்பின், புத்தகங்களை எப்படியோ கண்டடைந்து வாசிப்பதை வாழ்வாக்கிக்கொள்ளத் தீர்மானித்தான் அந்த ஒன்பது வயதுப் போராளி.

விரைவிலேயே அவன் தனது தந்தையை இழந்தான். அந்த நிகழ்ச்சி, வெள்ளையர் சர்வாதிகாரத்துக்கு எதிரான போருக்கான விதையை நெல்சன் உள்ளத்தில் விதைத்தது. ஆங்கிலம், க்சோஸா மொழிகளைக் கற்றான்.ஆப்பிரிக்க வரலாற்றை விரும்பிப் படித்தான். உலகெங்கிலும் நடந்த சுதந்திரப் போராட்ட வரலாறுகளை வாசித்தான். உள்ளூர் நண்பர்களை ஒன்றுகூட்டி, எழுதப் படிக்கக் கற்பித்தான். அப்போது அவனுக்கு 10. ஓரிரு வருடங்களில் அவனைப் பற்றிய செய்திகள் கறுப்பின மக்களிடையே தீயாகப் பரவியது.அவனால் எழுத்தறிவு கண்ட தோழர்கள், போராட்டங்களில் இறங்கினார்கள். தந்தைக்கு தவறான தீர்ப்பு அளித்த அதே நீதிபதி முன் நிறுத்தப்பட்டான் நெல்சன்.  அவனுடைய வாதத்தைக் கேட்டு அசந்துபோன அந்த வெள்ளைக்கார நீதிபதி, ''உன்னை எங்காவது அனுப்பிவிட வேண்டும். எங்கே போக விரும்புகிறாய்?'' எனக் கேட்டார்.

'இந்தியா செல்வேன். அங்கே காந்தியோடு இணைந்து வெள்ளையரை எதிர்ப்பேன்'' எனத் தனது 11 வயதில் முழங்கினான் அந்தச் சிறுவன்.

பிற்காலத்தில் தனது கறுப்பின விடுதலைக்காக 29 ஆண்டுகள் சிறையிலிருந்தபடி போராடி, இனம் விடுதலை பெற்றபோது, தனது நாட்டின் முதல் அதிபராகவும் பொறுப்பேற்று நெல்சன் மண்டேலாவாக வரலாறு படைத்தார்.

மகா பெரியவா சொன்ன கதைகள்!

 
ஒரு குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள உறவு மிக மிக அக்கறையானது, பரிசுத்தமானது என்பதையும் தாண்டி, புனிதமானதும்கூட! அந்தக் காலத்தில் குருகுலவாசம் இருந்தது. அதாவது, குருவின் ஆஸ்ரமத்துக்கோ, இல்லத்துக்கோ போய்தான் அங்கே குருவுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து, மாணாக்கர்கள் அனைவரும் கல்வி கற்றார்கள். ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுத் தேர்ந்தார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, இறை அவதாரங்களும்கூட குருகுலவாசம் செய்துதான் குருவிடம்தான் கல்வி கற்றார்கள்.
 
அந்த வகையில், ஸ்ரீகிருஷ்ணரும் ஸாந்தீபனி என்கிற குருவிடம் கல்வி கற்றார். தான் இறை அவதாரம் என்பதைக் காரணம் காட்டி, அவர் மற்ற பிள்ளைகளிடம் இருந்து வேறுபட்டு நடந்துகொள்ளவில்லை. குருகுலத்தில் எல்லோரும் சமம் என்கிற நியதியே பின்பற்றப்பட்டு வந்தது. ஸ்ரீகிருஷ்ணரும் அதைத்தான் பின்பற்றினார்.அப்படிப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரின் குருகுலவாச அனுபவம் பற்றியும், குருவானவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பற்றியும் தனது திவ்ய வாக்கால் இங்கே விளக்குகிறார், மகா பெரியவர். இதைப் படிக்கிறபோது, இந்நாளைய ஆசிரியர்களைப் பற்றி நாளேடுகளில் நாம் படிக்கிற செய்திகள் கவலையையும் பெருமூச்சையும்தான் வெளிப்படுத்துவதாக உள்ளன.ம்முடைய சாஸ்த்ர, புராணங்களிலிருந்து அன்புடைமையில், அருளுடைமையில் அந்நாள் ஆசார்யர்கள் ஆதர்ச புருஷர்களாக இருந்திருப்பது தெரிகிறது. குரு சிஷ்யர்களுக்கு இடையே பரஸ்பர ப்ரியம் போகவே கூடாது என்றுதான் பாடம் ஆரம்பிக்கும்போதே மந்த்ர பூர்வமாக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். 'குரு- சிஷ்யர்களான நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்...’ என்பது பாட ஆரம்பத்திலும், முடிவிலும் வருகிற உபநிஷத் பிரார்த்தனை.அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பதற்கு அப்படியே ரூபகமாக அந்த ஆசார்யர்கள் இருந்திருக் கிறார்கள். கண்டிப்புச் செய்யவேண்டிய இடத்தில் எப்படி நிர்தாக்ஷண்யமாகக் கண்டித்தார்களோ, அப்படியே அன்பைக் கொட்ட வேண்டிய ஸமயத்தில் கொட்டினார்கள். பாகவதத்தைப் பார்த்தால் போதும்; இரண்டும் தெரியும். பகவானே குசேலரிடம் தாங்களிருவரும் சேர்ந்து குருகுலவாசம் செய்த நாட்களைப் பற்றி ஞாபகப்படுத்துகிறார்.
 
கம்ஸ வதமான பின், பகவானுக்கும் பலராமருக்கும் உபநயனமாகி, அவர்கள் ஸாந்தீபனி என்கிற பிராமணரிடம் குருகுல வாஸம் செய்கிறார்கள். ஸர்வ வித்யைகளும் அவனிடமிருந்துதான் என்றாலும், லோகத்துக்கு குரு பக்தியை உதாரணம் காட்டவே பகவானும் இப்படி ஓர் ஆசார்யனிடம் போய்ப் படித்தான் என்று பாகவதம் சொல்கிறது. ஆனாலும், பகவானுக்கு அவதார கார்யங்கள் நிறையக் காத்துக் கொண்டிருந்ததால், பன்னிரண்டு வருஷம் வித்யாப்யாஸம் செய்வது என்று வைத்துக்கொள்ளாமல், தன் திவ்ய சக்தியையும் கொஞ்சம் கைக்கொண்டு, ஒரு நாளுக்கு ஒரு சாஸ்த்ரம் வீதம் அறுபத்து நாலே நாளில் அத்தனை சாஸ்த்ரமும் கற்றுக்கொண்டு விடுகிறார் (பலராமரும்தான். அவரும் அவதாரம்தானே?).இதிலிருந்தே கிருஷ்ணருடைய தெய்வீக ப்ரபாவத்தை குரு ஸாந்தீபனி தெரிந்துகொண்டு விடுகிறார். அதனால், பிற்பாடு சி¬க்ஷ பூர்த்தியாகி, ''என்ன தக்ஷணை தரணும்?'' என்று பகவான் கேட்டபோது, ரொம்ப நாள் முந்தி ஸமுத்ரம் அடித்துக்கொண்டு போய்விட்ட தன்னுடைய பிள்ளையை யமாலயத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்து தரவேண்டும்; அதுதான் தமக்கு வேண்டிய தக்ஷணை என்கிறார். பகவானும் அப்படியே பண்ணுகிறார். அது இப்போது நமக்கு விஷயமில்லை.பின்னே எது விஷயம் என்றால், இப்படி தெய்வ சக்தி பொருந்தியவராக கிருஷ்ணரை அவருடைய ஆசார்யர் தெரிந்து கொண்டிருந்த போதிலும், 'சிஷ்யப்பிள்ளை என்று வந்த ஒருத்தனை ஆசார்யர் நன்றாக வேலை வாங்கி, பணியினாலும் பணிவினாலும் கட்டுப்படுத்தி சுத்தி செய்வார்’ என்று லோகத்துக்குக் காட்டவே, அவர் இந்த சிஷ்ய வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிந்துகொண்டார். எனவே, வேலை வாங்குவதை இவர் விஷயத்திலும் விட்டுவிடக் கூடாது என்று இருந்திருக்கிறார்.அருமையிலும் அருமையான குழந்தை கிருஷ்ணன். அதே நேரத்தில் அறிதற்கரியவராக இருந்த பகவான், குருவின் ஆக்ஞைப்படி காட்டுக்குப் போய் விறகு வெட்டிக்கொண்டு வந்துகூடக் கைங்கர்யம் பண்ணியிருக்கிறார். அந்த நாட்களில் ஒன்றைப் பற்றித்தான், அப்போது தம் 'க்ளாஸ் மேட்’டாக இருந்த குசேலரிடம் நீண்ட காலத்துக்குப் பின்னால் பகவான் நினைவுபடுத்துகிறார்.
 
கிருஷ்ணரும் குசேலரும் ஒருநாள் இப்படி விறகுக்காக அடர்ந்த காட்டுக்குப் போனபோது நன்றாக இருட்டிவிட்டது. அதோடு பேய் மழையும் பிடித்துக்கொண்டுவிட்டது. மேடு, பள்ளம் தெரியாமல் ஒரே பிரளயமாயிற்று. திக்கு திசை புரியாமல் கும்மிருட்டு வேறு. நரலீலையிலே பகவான் நிஜமாகவே தமக்குத் திக்கு திசை புரியாத மாதிரிதான் நடித்தார். ''நானும் நீங்களும் பயந்துண்டு, துக்கப்பட்டுண்டு ஒத்தர் கையை ஒத்தர் கோத்துண்டு, ராத்ரியெல்லாம் சுத்திசுத்தி வந்தோமே! ஞாபகமிருக்கோல்லியோ?'' என்று அவரே குசேலரைக் கேட்கிறார். குருவின் வேலை வாங்கும் கண்டிப்பால் வந்தது இதுஇனிமேல் குருவின் அன்பையும் பாசத்தையும் பகவான் வாய் வார்த்தையாகத் தெரிந்து கொள்கிறோம்.''குழந்தைகளைக் காணோமேன்னு அங்கலாய்ச்சுண்டு குருநாதரும் நம்மைத் தேடிண்டு வந்து, ஸ¨ர்யோதய ஸமயத்தில் கண்டுபிடிச்சாரே! 'ஐயோ பாவம்! எனக்காக எத்தனைக் கஷ்டப்பட்டுட்டேள்?’ என்று நம்மிடம் எப்படி உருகிப் போயிட்டார்? அதற்குப் பரிஹாரமாக நமக்கு எப்படி மனஸார அநுக்ரஹம் பண்ணி, 'உங்களுடைய நல்ல நினைப்பெல்லாம் பூர்த்தியாகட்டும். நீங்க படிச்ச வேதம் எந்நாளும் பூர்ண சக்தியோடு உங்களை ரக்ஷிச்சுண்டு இருக்கட்டும்’ என்றெல்லாம் வரம் கொடுத்தாரே!'' என்று ஞாபகப்படுத்துகிறார்.மொத்தத்தில் குரு என்பவர், வித்யா ஸம்பத்து மட்டுமில்லாமல் குண ஸம்பத்து, அநுஷ்டான ஸம்பத்து, ஆத்ம ஸம்பத்து எல்லாம் ஒருங்கே கூடியவராக இருந்தார்.
 
இப்படி அவர் இருக்கும்படியாகச் செய்தது அந்தப் பழைய நாளின் குருகுல முறையே தான். சிஷ்யர்கள் ஒரு குருவின் ஆதரவில் அவருடைய க்ருஹத்திலேயே இருந்து படிப்பது என்கிற கல்விமுறையில் குரு- சிஷ்யன் ஆகிய இருவருமே சுத்தர்களாகத்தான் இருந்தாக வேண்டுமென்றிருந்தது. அந்த முறையே அவர்களை அப்படி சுத்தர்களாக உருவாக்கவும் செய்தது. சிஷ்யர்கள் கூடவே வஸித்தும் அன்பு, மரியாதைகள் செலுத்த வேண்டுமென்றால் குரு நல்லொழுக்கமுள்ளவராகவும், அநுக்ரஹ சக்தி பெற்றவராகவும் இருந்தால்தானே முடியும்?
 
அதேபோல், புத்தி மட்டத்திலும்கூட சிஷ்யன் கூடவே இருந்து, 'பரிப்ரச்நம்’ என்று பகவான் சொன்னபடி அவரைக் குடைந்து குடைந்து கேள்வி கேட்கிறானென்றால், அப்போது அவர், தான் போதிக்கிற சாஸ்த்ரத்தில் நல்ல ஆழ்ந்த அறிவை உண்டாக்கிக்கொண்டேயாக வேண்டியிருந்திருக்கிறது.'

Sunday, July 21, 2013

உணவு பாதுகாப்பு சட்டம் - ஒரு அலசல்

ஆளுக்கு 5 கிலோ அரிசி... அல்லது வேறு தானியம்... மலிவு விலையில் கிலோ 2 ரூபாய் அல்லது 3 ரூபாய்க்கு 65 சதவிகித இந்திய மக்களுக்கு தரவேண்டும் என்று அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது காங்கிரஸ் அரசாங்கம். இந்த அதிசயத் திட்டத்துக்கு 'உணவு பாதுகாப்பு சட்டம்’ என்று பெயர் சூட்டி விழா எடுக்கிறது மத்திய அரசாங்கம்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு களுக்குப் பிறகும், 65 சதவிகித மக்கள் மாதம் 5 கிலோ உணவு பொருட்கள்கூட வாங்கமுடியாத  நிலையில் வைத்திருக்கிறோமே என்று வருத்தப்படுவதற்கு பதிலாக, வறுமையை, பசிப்பிணியை மூலதனமாக்கி, ஓட்டு வங்கியைப் பெருக்கி... மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்காக அலைந்து திரிந்து அறிமுகம் செய்த திட்டம்தான் இந்த உணவு பாதுகாப்பு சட்டம். மொத்தமுள்ள 120 கோடி பேரில் சுமார் 80 கோடி பேர் சாப்பிடுவதற்குகூட வழியில்லாமல் இருக்கிறார்கள் என்றால், நாம் செய்திருப்பது கின்னஸ் சாதனைதான் போங்கள்...

பல்வேறு மாநில அரசுகள், இலவசமாக அரிசி வழங்கவே செய்கின்றன. அந்த இலவசத்திற்கு, இப்போது சட்ட அங்கீகாரம் தந்திருக்கிறது மத்திய அரசாங்கம். உணவு பாதுகாப்பு என்றால் என்ன?

தேவையான உணவு, தேவையானபோது, தேவையான அளவில், சிரமம் இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும். அதை வாங்கும் சக்தி மக்களுக்கு இயல்பாகவே இருக்கவேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு என்பது உலக அரங்கில் ஒப்பிட்டால் அதிகமில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தோனேஷியாவில் ஒரு கிலோ அரிசி 2 டாலர். இந்தியாவில் அரை டாலருக்கும் ஒரு டாலருக்கும்தானே விற்கிறது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் முடங்கினால், எப்படி பொருளாதாரம் வளரும்? ஆக, எல்லாச் சூழலிலும், நிலைத்து நீடிக்க நிரந்தர உணவு உற்பத்திதானே, உணவு பாதுகாப்பாக இருக்க முடியும்; இருக்கவும் வேண்டும்?

ஆனால், புரட்சிகரமான இந்த உணவு பாதுகாப்பு சட்டத்தில், உணவு உற்பத்தி பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. உற்பத்தியை உறுதி செய்யாமல் உணவு பாதுகாப்பு எப்படி சாத்தியம்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இந்த சட்டியில் ஆயிரம் ஓட்டை அல்லவா இருக்கிறது. சட்டி நிறைவது எப்போது, வயிறு நிறைவது எப்போது?நமது நாட்டின் உணவுத் தேவையில் 70 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்வது சிறு விவசாயிகள்தான். ஆகவே, அரசு என்ன செய்யவேண்டும்? சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, ஊக்கம் தந்து,  மேலே சொன்ன நாடுகளைப்போல மானியம் தந்து உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியைக் கூட்டி வறுமையை ஒழிக்க இந்த சட்டத்தின் மூலம் வழி கண்டிருக்கவேண்டும். மாறாக, இந்த சட்டம் பிச்சைப் பாத்திரத்தை தூக்கி கையில் தந்துவிட்டு, வறுமையை விரட்டும் திட்டம் என்று கும்மாளம் போடுகிறது. அதேசமயம், நாள் ஒன்றுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான சிறுகுறு விவசாயிகளை கிராமங்களைவிட்டு விரட்டி அடிக்கிறது.

மேலும், விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், காடு கழனிகள் காங்கிரீட் காடுகளாகவும், மாறுகின்றன. நெல் நட்ட வயலில், கல்லு நட்டு காசு பண்ணுகின்றனர் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள். அனைத்து கறுப்புப் பணமும் அங்குதான் பதுக்கப்படுகிறது. விளைநிலங்கள் விவசாயிகளைவிட்டு வேகமாக வெளியேறுகிறது. இது நல்லதுக்கு இல்லை. இதைத் தடுப்பது பற்றி இந்த சட்டத்தில் ஒன்றுமில்லை. ஆறுகள், மனித கழிவுகளை சுமக்கும் சாக்கடைகளாக மாறிவிட்டன. திருப்பூர் சாயப்பட்டறை ரசாயனக் கழிவுகள், நொய்யல் வழியாக காவிரியில் கலந்து, தஞ்சை நெற்களஞ்சியத்தில்கூட விஷத்தைக் கக்குகிறது. அதேபோல் ஆம்பூர், வாணியம்பாடியில் உற்பத்தியாகும் விஷக்கழிவுகள் பாலாற்றை நாறடிக்கின்றன; நீரும் விஷமாகிவிட்டது. அளவுக்கு அதிகமான ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டதால், மண் புண்ணாகிக் கிடக்கிறது. நீரும் விஷம், நிலமும் விஷம்... அப்புறம் விளைவது மட்டும் எப்படி சொக்கத் தங்கமாக இருக்கும்?

 

இன்று உணவுக்கு செலவழிப்பதைவிட மருத்துவத்துக்குச் செலவழிப்பதே அதிகம். இந்தியாவில் 50 சதவிகித பெண்களுக்கு ரத்த சோகை, 47 சதவிகித குழந்தைகளுக்கு ஊட்டசத்துக் குறைபாடு உள்ளது என்று ஐ.நா. எச்சரிக்கிறது. கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், இது ஒரு தேசிய அவமானம் என்று சொல்லியதோடு நிறுத்திக்கொண்டார் பிரதமர் சிங். இந்த குறைபாடுகளை களைய ஒரு நடவடிக்கையும் எடுக்காதவர்கள், இன்று திடீரென ஞானோதயம் பிறந்துபோல ஆடுகிறார்கள்!  விரைவில் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டம் கூடவிருக்கிறது. அங்கு விவாதத்திற்கு பிறகு இந்த சட்டம் கொண்டுவந்து இருக்கலாம். நிறைகுறைகள் சரி செய்யப்பட்டிருக்கும். சட்டம் முழுவடிவம் பெற்றிருக்கும். அதற்குள் ஏன் இந்த அவசரம்? கூடிய விரைவில் நடக்கப் போகும் தேர்தலில் வாக்கு வங்கி பெருக்க நினைக்கும் திட்டம்தான்.  

ஐந்து கிலோ அரிசியில் வறுமை நீங்கப்போவதும் இல்லை. வயிற்றுப் பசி ஆறப்போவதும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி இளைஞர்கள் திடகாத்திரமாக வளர்ந்து ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை அள்ளிக்கொண்டு வரப்போவதும் இல்லை. வருடா வருடம் நான்கைந்து லட்சம் கோடி புரளுவதால், இன்னுமொரு உலகளாவிய ஊழலுக்கு வேண்டுமானால் இந்தச் சட்டம் உதவும்.

இப்போது கொள்முதல் செய்யப்படும், ஐந்தாறு கோடி டன் உணவு தானியங்களையே, ஒழுங்காக பாதுகாக்க அரசினால் முடியவில்லை. மழையில் நனைந்து, புழுத்து, முளைத்து, எலி பாதி... பெருச்சாளி பாதி என விரயமாகிறது. இந்த பிரச்னையை சரி செய்ய இதுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுத்து முடித்த மாதிரி தெரியவில்லை. 'எலி தின்கிற தானியங்களை ஏழைகளுக்காவது இலவசமாக கொடுங்கள். பாவம் மக்கள் பசியாறட்டும்’ என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், பிரதமர் சிங்கோ, இலவசம், மானியம் இரண்டும்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒழித்துக்கட்டும் இரண்டு முக்கிய காரணிகள் என்று சொல்லி, விவசாயிகள் பயன்படுத்தி வந்த உர மானியத்தை எடுத்தார். பூசல் மானியத்தைத் தூக்கினார். வீட்டில் பெண்கள் பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் மானியத்தைத் தடுத்தார்.ஆனாலும் என்ன ஆனது? ஏற்றுமதி இறங்கி வருகிறது. இறக்குமதி எகிறி வருகிறது. வர்த்தகப் பற்றாக்குறை விரிந்துகொண்டே போகிறது. இந்த இக்கட்டான நிலையில்1.25 லட்சம் கோடி மானியம் என்பது சாத்தியமா? இதுவும் பொய் கணக்குதான். 3 லட்சம் கோடி தேவை. ஆளுக்கு 5 கிலோ. 80 கோடி மக்களுக்கு 4 கோடி டன் ஒரு மாதத்திற்கு, ஆக வருஷத்திற்கு 48 கோடி டன். சற்று ஏறக்குறைய 50 கோடி டன் கொள்முதல் செய்யவேண்டும். உணவு தானியங்கள் வாங்கி,  விநியோகம் செய்ய 2 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். நாடு இன்று இருக்கும் நிலையில் இது நடக்கிற காரியமா...?

ஆக, உற்பத்திக்கும் வழி வகுக்காமல், செலவுக்கும் வழி தெரியாமல், வாக்குச்சீட்டு ஒன்றை மனதில்கொண்டு போடப்பட்ட இந்தச் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டமல்ல, உணவு உற்பத்தி ஒழிப்புத் திட்டம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பசுமை நம்பி

மோட்டார் இன்ஷூரன்ஸ்

மழையில் நனைந்தபடி டூவீலரை ஓட்டிச் செல்வது மனசுக்கு சந்தோஷமாக இருந்தாலும், அந்த நேரத்தில் பத்திரமாக வாகனத்தை ஓட்டிச் செல்வது ரிஸ்க்-ஆன விஷயம். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்த இடத்தில் பள்ளம் இருக்கும் என்று தெரியாது. எவ்வளவு கவனமாக வாகனத்தை ஓட்டினாலும், ஏதாவது பிரச்னை வந்து வாகனத்துக்கு அதிக செலவு வைத்து விடும். இப்படி திடீரென வரும் செலவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
 
எந்தவிதமான வாகனமாக இருந்தாலும் கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும்.  இன்ஷூரன்ஸ் எடுக்கும்போதே சில நூறு ரூபாயைக் கூடுதலாக பிரீமியம் செலுத்தி, அதிக பாதுகாப்பு பெறலாம். இதற்கு பாலிசி எடுக்கும் நிறுவனத்தில் என்னென்ன கூடுதல் கவரேஜ் உள்ளன என்பதை விசாரித்து அதன்பிறகு பாலிசி எடுப்பது நல்லது. மழைக் காலத்தில் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன என்பதைச் சொல்கிறேன்.

ஒருங்கிணைந்த காப்பீடு: வாகனத்திற்கு இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களில் சிலர், சட்டப்படியாக எடுக்கவேண்டிய மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் எடுக்கிறார்கள். விபத்து ஏற்படும்போது எப்படியும் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்தவரை வாகனம் மற்றும் மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் ஒருங்கிணைந்த காப்பீட்டைத் தேர்வு செய்வது நல்லது.


இன்ஜின் கவர்: மழைக் காலம் வந்துவிட்டாலே நகரங்களில் பெரும்பாலான சாலைகள் தண்ணீரால் நிரம்பிவிடுகின்றன. தண்ணீரில் வாகனத்தை ஓட்டும்போது பல நேரங்களில் இன்ஜினில் தண்ணீர் புகுந்துவிட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் வாகனம் தண்ணீரில் திடீரென நின்றுவிடவும் வாய்ப்புண்டு. வாகனத்தின் இன்ஜினை ஆன் செய்ய முயற்சிக்கும்போது இன்ஜின்  பழுதாகவும் வாய்ப்புண்டு. சாதாரணமாக எடுத்து வைத்திருக்கும் பாலிசியில் இதற்கு க்ளைம் கிடைக்காது. இன்ஜின் கவர் பாலிசியைக் கூடுதல் பிரீமியம் செலுத்தி எடுத்திருந்தால் க்ளைம் பெறலாம்.

ஜீரோ தேய்மான கவரேஜ்: இந்தக் கூடுதல் கவரேஜ் மூலம் வாகனத்தில் விபத்தின்போது ஏற்படும் பாகங்களின் சேதத்திற்கு க்ளைம் பெறமுடியும். அதாவது, வாகனத்தை வாங்கி சில ஆண்டுகள் கழித்து ஏதாவது முக்கியமான பாகத்தில் சேதம் ஏற்பட்டால், அந்த சேதத்திற்கான க்ளைம் தொகையை அப்போதைய மதிப்பிற்குதான் க்ளைம் செய்ய முடியும். இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்து வைத்திருந்தால் புதிய பாகத்திற்கான தொகையை க்ளைம் செய்ய முடியும். வாகனத்தில் தேய்மானம் என்பது வேகமாக இருக்கும். முக்கிய பாகத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டால், அந்த பாகத்தை மாற்றவேண்டி இருக்கும். அப்போது தேய்மானம் போக பாகத்தின் மதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் புதிய பாகத்தை வாங்கி மாற்றிக்கொள்ள முழுத் தொகையையும் தருவதுதான் ஜீரோ தேய்மான கவரேஜ். 
 
ரிட்டர்ன் டு இன்வாய்ஸ்: ஏதாவது மரத்தடியில் வாகனத்தை நிறுத்தும்போது அந்த மரம் வாகனத்தின் மீது விழுந்து, வாகனம் முழுவதுமாக சேதம் அடைவது. அல்லது கீழ்தளத்தில் வாகனத்தை நிறுத்தி வைக்கும்போது மழை நீர் வாகனத்தில் புகுந்து வாகனம் முழுவதும் சேதம் அடைவது மற்றும் வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்வது, வாகனத் திருட்டு போன்ற சமயங்களில் இந்த ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கூடுதல் கவரேஜ் கைதரும்.
 
பொதுவாக, ஒவ்வொரு வருடமும் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கும்போது அதன் தேய்மானம் கழித்த மதிப்பிற்குதான் கவரேஜ் கிடைக்கும். ஆனால், இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்தால், புதிய வாகனம் வாங்குவதற்கு தேவைப்படும் முழுத் தொகையை க்ளைம் செய்ய முடியும்.  இன்றையச் சூழ்நிலையில் வாகனம் இல்லாத வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.  எனவே, சில நூறு ரூபாய் பிரீமியத்தில் பல ஆயிரங்களைப் பாதுகாப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
 

Saturday, July 20, 2013

ஆடி அமாவாசை - பித்ரு பூஜை!


தை அமாவாசை, ஆடி அமாவாசை இரண்டுமே பித்ருக்களைப் பூஜிக்கும் முக்கிய நாட்களாகக் கருதப்படுகின்றன. என்ன காரணம்? சூரியனின் வட திசைப் பயணமான உத்தராயணம் தை மாதம் ஆரம்பமாகிறது. தென்திசைப் பயணமான தட்சிணாயனம் ஆடி மாதம் தொடங்குகிறது. அதனால்தான், ஆடி மற்றும் தை மாத அமாவாசைகள் விசேஷமானதாக விளங்குகின்றன. இந்த இரண்டு தினங்களும் பித்ருக்களின் ஆசியை நமக்குப் பெற்றுத்தரும் அருமையான தினங்கள். ஏன்? தெரிந்தோ தெரியாமலோ, வாழ்வில் நம்மை அறியாது பல பாவங்களுக்கு நாம் உட்படுகிறோம். பல பிறவிகளில் செய்த பாவங்களும் இப்பிறவியில் நம்மை நிம்மதியின்றி தவிக்க விடுகின்றன. ஆழமாகச் சிந்தித்தால், நமது தவறுகள் நமக்குப் புரியும்.

வயதான பெற்றோர்களை சரிவர பராமரிக்காமல் அவர்களை முதியோர் இல்லம் அனுப்புவது... நகரத்தின் பழக்கங்கள் அவர்களுக்குப் பிடிக்காது என்று கூறி, கிராமத்தில் பெற்றோரை தனியே வைக்கிறார்கள்... பெற்றவர்களை ஷிப்டு முறை போல அடுத்த மகளிடம் அல்லது மகனிடம் அனுப்புவது... என்ன வேதனை அந்தப் பெற்றோர்களுக்கு! பெற்றோரை உதாசீனப்படுத்திவிட்டு பிறருக்கு கல்விச் செலவுக்கு உதவுகிறேன்... கோயிலில் அன்னதானம் செய்கிறேன் என்பதால், நம் பாவம் நீங்கி புண்ணியம் பெருகிவிடாது. இவை அனைத்தும், இப்பிறவியில் நடைமுறை வாழ்வில் தினமும் நடப்பதை நாமே பார்க்கிறோம். இவற்றின் விளைவுதான், நமக்கு ஏற்படுகின்ற காரணமில்லாத பிரச்னைகள்.

இவற்றுக்குப் பரிகாரமே பித்ருக்களை பூஜிப்பதும், குலதெய்வத்தை ஆராதனை செய்வதும்தான் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

குடும்பத்தில் ஓர் ஆண் வாரிசு தோன்றியதும், ஆனந்தப்பட்டு தன்னுடைய பித்ரு கடமைகளைச் செய்து தங்களைக் கரையேற்றுவான் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்காகவே ஏற்பட்டது பித்ரு தர்ப்பண பூஜை. தேவலோக மூலிகையான தர்ப்பையைக் கொண்டு, எள் வைத்து ஜாதி, மத, பேதமின்றி தர்ப்பணம் செய்து மூதாதையரை மகிழ்விக்க வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியக் கடமையாகும்.

திருவண்ணாமலையில் சிவபெருமான் வல்லாள மகாராஜாவுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வருடந்தோறும் விழாவாகவே நடைபெற்று வருகிறது. குடந்தையில் சாரங்க பாணிப் பெருமாள் தன் பக்தனுக்கு திதி கொடுக்கிறார். திலதர்ப்பணபுரியில் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தர்ப்பணமளிக்கிறார்.

செங்கல்பட்டுக்கு அருகில் நென்மேலி என்ற இடத்தில் உள்ள பெருமாளுக்கு ‘சிராத்த சம்ரட்சணப் பெருமாள்’ என்ற திருநாமம். தினமும் கோயில் குளக்கரையில் பெருமாள் எழுந்தருளி மூதாதையருக்கு சிராத்தம் கொடுக்கிறார்.

கொடுமுடி, பவானி, திருப்புட்குழி, ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். ‘கூடுதுறை’ எனப்படும் ஆறுகள், கடல்கள் சங்கமமாகும் கரையோரங்களில் திரளாக மக்கள் கூடி அன்று பூஜை செய்வது வழக்கம்.

முண்டம், தண்டம், பிண்டம் என்றே முறையாக பித்ருபூஜை செய்யும் வழக்கமும் உண்டு. முண்டம் என்பது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் பித்ருக்களைப் பூஜித்து, முடி களைந்து நீராடி அட்சய வடத்தின் வேர்ப்பாகத்தைத் தரிசிப்பது. ‘தண்டம்’ என்பது, காசி சென்று ‘பஞ்சநதி சிராத்தம்’ செய்து, இறந்த முன்னோர்களைப் பூஜித்து கங்கையில் நீராடி ஸ்ரீவிசுவநாதர், அன்னபூரணி, கால பைரவர் ஆகியோரை தரிசித்து தண்டம் சமர்ப்பிப்பதாகும். இங்கு அட்சய வடத்தின் மத்திம பாகத்தைத் தரிசிக்க வேண்டும். அடுத்து ‘பிண்டம்’ கொடுப்பது! கயையில் அட்சய வடத்தின் நுனி பாகத்தைத் தரிசித்து, பித்ருக்களிடம் பூஜை செய்தது திருப்தி தானா? குறைகளை மன்னிக்கவும் என வேண்டி, ஆல மரத்தடியில் நின்று வழிபட்டு வர வேண்டும்.

இவ்வாறு முறைப்படி பூஜை செய்து பித்ருக்களைத் திருப்திபடுத்துவதால் அவர்கள் நம்மை மனம் குளிர ஆசிர்வதிக்கின்றனர். அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த நற்பலன்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்து போன்று நம்மிடம் திரும்பி வந்து சேரும். தெய்வத்தன்மை பொருந்திய பித்ருக்கள் கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற புண்ணிய நதிகளின் அருகில் அன்று காத்து இருப்பதால் அலகாபாத், காசி, கயை என சிரமம் பார்க்காமல் தை, ஆடி அமாவாசைகளில் சென்று பித்ருக்களைக் கரைசேர்க்கும் பூஜையைச் செய்வது குடும்பத்துக்கு மிகவும் புண்ணியம் சேர்க்கும்.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில், சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீசுந்தரமகாலிங்கர். ஆடி அமாவாசை நாளில், சிறியவர் பெரியவர் என்கிற பேதமில்லாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் இவரை தரிசிக்க குழுமுகிறார்கள். சரிவர அமைக்கப்படாத மலைப்பாதை என்றாலும், தயங்காமல் ஏழு கி.மீ. மலையேறுகிறார்கள். அந்த நாளில், ஸ்ரீசுந்தர மகாலிங்கரை வழிபட்டு, தங்கள் பித்ருக்களின் நன்மைக்காக வழிபடுகிறார்கள். முடிந்தவர்கள் சதுரகிரி சென்று, அங்கே அந்த சமயத்தில் குழுமுகின்ற சாதுக்களுக்கு அன்ன மளிப்பதும் பெரும் புண்ணியம்.அப்படிச் செல்ல இயலாதவர்கள் தனுஷ் கோடி, கும்பகோணம் சக்கரப் படித்துறை, திருவிடைமருதூர், திரு வள்ளூர் வீரராகவ சுவாமி கோயில், கேரளத்திலுள்ள திருவல்லம் போன்ற புண்ணிய கே்ஷத்ரங்களின் படித்துறையில் பித்ருபூஜை செய்து வரலாம். பித்ரு தர்ப்பணம் முடிந்ததும் பசுவுக்கு கீரை, பழம் அளிப்பது, ஊன முற்றோர், நோயாளிகள் மற்றும் வறுமையில் பசியால் வாடுவோரைத் தேடிப்போய் அன்னமளித்து வஸ்த்ர தானம் செய்வது, பூஜையின் முழுப் பயனையும் பெற உதவும். எதுவும் செய்ய இயலாதவர்கள், இந்நாளில் காகத்துக்கு ஒரு பிடி அன்னம் வைத்துவிட்டு பிறகு உண்ணுவது மிகவும் நல்லது.

பாசுபத சித்தாந்தம்

 
முக்திநிலை அடைவதில், ஒரு புதிய பாதையைக் காட்டும் விதமாக அறிமுகமாகிய இந்த சித்தாந்தம், குஜராத் மாநிலம் கார்வான் என்ற இடத்திலிருந்து கிளம்பி இந்தியாவெங்கும் பரவியது.
 
கார்வானில், ஒரு பிரம்மச்சாரி இளைஞன் தீயில் எரிந்து சாம்பலான நிலையில் மீண்டும் உயிர்பெற்று எழுகிறான். சிவபெருமானே மீண்டும் வந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். அந்த இளைஞனால் உருவாக்கப்படுகிறது புதிய சித்தாந்தம். இந்த சித்தாந்தத்தைக் கடைபிடிப்பவர்கள் நிர்வாணமாக உடலெங்கும் விபூதி பூசிக்கொண்டு சுடுகாட்டில் கடும் தவமிருப்பார்கள். தமிழ்நாட்டில் இந்த சித்தாந்தத்தைப் பரப்ப வந்தவர்கள் தங்கிய இடங்களுக்கு காரோணம் என்று பெயர் வந்தது.  தமிழ்நாட்டில் மூன்று காரோணங்கள் உண்டு. கச்சி காரோணம், குடந்தை காரோணம் மற்றும் நாகை காரோணம். முன் காலத்தில் எந்த ஒரு சித்தாந்தமும் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமானால் காஞ்சி, குடந்தையில் இருந்த சமய அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் குஜராத்திலிருந்து காஞ்சிக்கு இந்த சித்தாந்தம் வந்திருக்கலாம் என்கிறார்கள். தேவாரத்தில் பல இடங்களில் காரோணம் என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.ஆனால், காலப்போக்கில் காரோணம் என்பது காயா ரோகணம் என்று மருவியது. இதை காயம்+ ஆரோகணம் என்று பிரித்துப் பார்த்தார்கள். காயம் என்பது உடல். ஆரோகணம் என்றால், ஏற்றி அல்லது உயர்த்தி வைத்தல். இந்தப் பின்னணியில்தான் காஞ்சியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் காயாரோகணேஸ்வரர். இந்தப் பெருமான் வேகவதி ஆற்றங்கரையில் சுடு காட்டின் ஓரத்தில் கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் வரலாறு சித்தாந்தத்தின் அடிப்படையில் இருந்தாலும், புராண வரலாற்றையும் சொல்கிறது காஞ்சி புராணம். திருமாலும், பிரம்மனும் ஒருங்கே அழிய நேரும் சமயத்தில் ஈசன் அவ்விருவரையும் ஒடுக்கி அவர்களுடைய திருமேனியை தன் தேகத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார். இந்தச் செயலே காயாரோகணம் எனப்படுகிறது என்கிறது காஞ்சி புராணம். தம்முள் அவர்களை ஒடுக்கிக் கொண்ட ஈசன் ஆனந்த நடனம் ஆடியதால், ‘காரோணம்’ என்ற பெயர் பெற்றதாம் இத்தலம். இங்கே திருமகள், ஈசனை வழிபட்டு அச்சுதனை தன் நாயகனாகப் பெற்றாள்.
 
சீதள கமலப் பொகுட்டனை கிழத்தி
செஞ்சுடை பிரானை வில்வத்தால்
கோதற வழிபட் டச்சுதன் தனக்கு
கொழுநனாய்ப் பெற்றனள் அங்கண்
என்கிறது காஞ்சிப் புராணம். இந்தத் தலத்தில் தான் எமன் ஈசனை வழிபட்டு தென்திசைக்கு அதிபதியாகும் பேறு பெற்றானாம்.

இந்தக் கோயிலின் அம்பாள் கமலாம்பிகை. விநாயகப் பெருமான், வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான், மகாலட்சுமி, சூரியன், பைரவர் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயில் கிழக்கு பார்த்தவண்ணம் இருந்தாலும், கருவறை நுழைவாயில் தெற்கு பார்த்த வண்ணமும் மூலவர் அமைந்துள்ள வாயில் கிழக்கு பார்த்த வண்ணமும் உள்ளன. இது குருபகவான் (பிரகஸ்பதி) தலமாகவும் போற்றப்படுகிறது.

இந்தக் கோயிலின் திருக்குளம், தாயார் குளம் என்றழைக்கப்படுகிறது. இந்தக் குளக்கரையில் பித்ருக்களுக்கு கர்மா செய்தால், அவர்கள் முக்தி அடைவார்கள் என்கிறது காஞ்சி புராணம். இந்த புண்ணிய தீர்த்தம் மாசுபட்டுக் கிடப்பது வருத்தமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பல சிறப்புகளைத் தாங்கிய இந்தக் கோயிலின் திருப்பணி சமீபத்தில் முடிந்து கும்பாபிஷேகமும் நடந்திருப்பதால், கோயில் புதுப்பொலிவுடன் இருக்கிறது. மிகவும் பழமையான இந்தக் கோயிலின் கல்வெட்டுகள் காலப்போக்கில் அழிவைச் சந்தித்துவிட்டன.

குருவருள் பெற...

இந்தலத்தில் குருபகவான் (பிரகஸ்பதி) தனிச் சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். குரு பரிகார ஸ்தலமாகவும் இருப்பதால், வியாழக்கிழமையில் கணிசமாக மக்கள் வருகிறார்கள். குரு பகவான் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு அவருடைய பேரருளுக்குப் பாத்திரமாகி, சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று தேவர்களுக்கு ஆசானாகும் பேறு பெற்றார் என்கிறது காஞ்சி புராணம்.

எப்படிப் போவது?

காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். பேருந்து வசதி கிடையாது. ஆட்டோக்களில்தான் செல்ல வேண்டும். கோயில் அமைந்துள்ள தாயார் குளம், சாலையிலிருந்து சற்று தள்ளி அமைந்திருக்கிறது.

ப்ரியன்

 

மகா பெரியவா - மனஸ் என்பது என்ன?


இந்த்ரியங்களை ஏவாமல் மனசாக எதையோ நினைத்து அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்னும்போதுகூட அது எதையோதான் நினைக்க வேண்டியிருக்கிறதே தவிர தன்னையே நினைத்து அதை அனுபவித்து நிறைவு பெற முடியவில்லை. மனசு கதை கற்பிக்கிறது. கவிதை புனைகிறது என்றாலும் அது வேறே பாத்ரங்கள், இயற்கைக் காட்சிகள், ரஸனங்கள் ஆகியவற்றைக் குறித்தனவாகத்தான் இருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால் சுகமும் துக்கமுமான லகே்ஷாபலக்ஷம் இந்த்ரியானுபவங்களிலும் அந்த சுக துக்காதிகளை உண்மையாக அனுபவிப்பது மனசுதானென்றாலும், இதில் ஒன்றைக்கூட அது தன்னிடமிருந்தே பெற முடியாமல் வெளி வஸ்துக்களைக் குறித்தனவாகத்தான் பெற முடிகிறது.

தனியாகத் தன்னை இன்னவென்று பார்த்துக் கொள்ள முயற்சி பண்ணினால் மனசுக்குத் ‘தான்’ என்றே ஒன்று இல்லை என்றுதான் தெரியும். தன்னுயை சம்பந்தமுடையதாக, தனக்கு சந்தோஷம், தனக்குத் துக்கம், தனக்குப் பிடித்தது, தனக்குப் பிடிக்காதது, தனக்குத் தோன்றுகிற எண்ணம், தனக்குக் கிடைக்கிற அனுபவம் என்றெல்லாம் அனேகமிருப்பது மட்டுமே தெரிகிறது. அதனாலேயே இது எதுவும் அதன் தானான நிஜ ஸ்வரூபமில்லை என்று தெரிகிறது. இவை மனசுடன் சம்பந்தமுடையவை. சம்பந்தமுடையவை மட்டுமே என்பதாலேயே இவையே மனசில்லை என்றாகிவிடுகிறது. ராமன் என்ற ஒருத்தனின் சம்பந்தம் கொண்டவைகளாக ராமனுக்கு வீடு இருக்கிறது. ராமனுக்கு நிலம் இருக்கிறது. ராமனுக்குப் பத்னி, புத்ரர் இருக்கிறார்கள், ராமனுக்கு புத்தி இருக்கிறது. ராமனுக்குப் பதவி இருக்கிறது என்றால் அந்த வீடு, நிலம், பத்னி, புத்ரர், புத்தி, பதவி எல்லாம் வேறு. அவன் வேறுதானே? இவையெல்லாம் இல்லாமலும் ராமன் என்று ஒருத்தன் இருக்க முடிகிறதுபோல, மனசு எதன் சம்பந்தமுமில்லாமல் இருக்க முடிகிறதா என்று பார்த்தால் அப்படி முடியவேயில்லை. மனசு என்றால் அது எதையாவது நினைக்காமல் அனுபவிக்காமல் இருக்க முடிவதேயில்லை.

தனியாகத் தானாக அதைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஆகையால் மனசை ஒருமுகப்படுத்தி தன்னிலேயே நிறுத்துவது என்பது வாஸ்தவத்தில், தனி ஸ்வரூபமே இல்லாத மனசில் நிறுத்துவதாக இல்லாமல், எந்த வெளி சம்பந்தமும் இல்லாமல் இந்த மனசின் சம்பந்தமும்கூட இல்லாமல் தன்னில் தானேயாய் நிறைந்திருக்கும் நிஜ நாமான ஆத்மாவில் நிற்பதுதான். மனோதீதமான ஆத்மாவை மனசால் அனுபவிக்க முடியாது. ஆத்மாவை ஆத்மாவாலேயேதான் ஆத்மா ஒன்றால் மட்டுமேதான், அனுபவிக்க முடியும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


Wednesday, July 17, 2013

ஓ பக்கங்கள் காதல் செய்யின் சாதலா? ஞாநி


இளவரசன் - திவ்யா காதல் விடலைக் காதல்தான் என்றும் சிறுவர் திருமணம்தான் என்றும் சொல்லப்படுகிறதே?

என்னைப் பொறுத்தமட்டில் 21 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குப் போய் சுயசார்புடன் இருக்கும் வேளையில் மலரும் காதலையே உடல்-மன முதிர்ச்சியுடைய காதலாகக் கருதுவேன்.

அப்படியானால் இளவரசன் திவ்யா காதல்?

இருவரும் 18 வயதைக் கடந்தவர்கள். இளவரசனும் திவ்யாவும் வேறு பல இளம் வயதினரைப் போல இதை டைம் பாஸாகக் கருதாமல், தொடர்ந்து இதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான அம்சம். இளவரசன்-திவ்யா இணைவை சாதி அமைப்புகள் எதிர்த்ததற்குக் காரணம் காதலோ வயதோ அல்ல. சாதி வேறுபாடு மட்டும்தான்.

எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லமுடியும்?

இளவரசனும் திவ்யாவும் பெற்றோர் கருத்தை மீறி திருமணம் செய்து கொண்ட பின்னரும் திவ்யாவின் தந்தை உணர்ச்சிவசப்பட்டு உடனே தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. பல மாதங்களுக்குப் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டது அவர் மீது ஏற்பட்ட சமூக நிர்பந்தத்துக்குப் பின்னர்தான் என்பது கவனிக்கத்தக்கது. தலித் காலனிகள் சூறையாடப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இளவரசன், திவ்யா தம் வீட்டை விட்டு ஓடிப்போன உடனே நடக்கவில்லை. பல மாதங்களுக்குப் பின்னர் திவ்யாவின் தந்தை மீது சமூக அழுத்தம் ஏற்பட்டு அவர் தற்கொலையையொட்டியே வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. இளவரசன், திவ்யா இருவரின் குடும்பத்தினருக்குள்ளே மட்டுமான இந்த விஷயம், வெளி மனிதர்களின் சாதி சார்ந்த தலையீட்டுக்குப் பின்னரே சமூக வன்முறையாக மாறியிருக்கிறது. திவ்யாவின் தாயார் சார்பில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதே பல மாதங்களுக்குப் பின் என்பதைக் கவனிக்க வேண்டும்.

நீதிமன்றம் என்ன செய்திருக்க முடியும்?

ஆட்கொணர்வு மனு நீதிமன்றம் முன்னர் வந்ததும் நீதிமன்றத்தில் திவ்யா தாமாகவே ஆஜரானார். அவர் இளவரசனால், ஏமாற்றி அழைத்துச் செல்லப் பட்டதாகவோ, கடத்தப்பட்டதாகவோ திவ்யா நீதிபதியிடம் தெரிவிக்கவில்லை. தாமே விரும்பிச் சென்றதாகவே தெரிவித்தார். அதாவது நீதிபதி முன்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார் என்றே அர்த்தம். தமக்கு இளவரசனும் வேண்டும், தாயும் வேண்டும் என்பதே திவ்யாவின் நிலையாக இருந்தது. இந்தச் சூழலில் வெளியார் நிர்பந்தம் எதுவும் திவ்யா மீது விழாமல் தொடர்ந்து விசாரிக்க வசதியாக நீதிபதி, திவ்யாவைக் காப்பகத்தில் தங்கவைக்க உத்தர விட்டிருக்க வேண்டும். ஆனால் தாயுடன் செல்ல அனுமதித்தார். அடுத்த முறை தாயுடன் வந்தபோது திவ்யா, இளவரசனுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை எனினும் தொடர்ந்து தாயுடனே இருக்கப் போவதாகச் சொன்னார்.

இதன் பின்னர்தான் இளவரசனின் மர்மமான மரணம் நிகழ்ந்தது. நீதிமன்றம் முதற்கட்டத்திலேயே திவ்யாவைக் காப்பகத்துக்கு அனுப்பிவிட்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் கவுன்ஸ்லிங்குக்கு அனுப்பியிருந்தால் இளவரசனின் மர்ம மரணம் நிகழ்ந்திருக்காது.

இளவரசனின் மரண மர்மம்? தற்கொலைக் கடிதம் வெளியாகியிருக்கிறதே?

அந்தக் கடிதம் இளவரசன் எழுதியதா என்று இன்னமும் அறிவியல் ஆய்வு முடிவு வரவில்லை. ரயில் பாதை அருகே இளவரசன் உடல் விழுந்து கிடந்த விதம், ரயிலில் அடிபட்டு விழும் உடல் தோற்றத்தில் இல்லை. உடலைப் பார்த்ததுமே இது ரயிலில் அடிபட்டது போல இல்லையே என்று பல ரயிலடிபட்ட உடல்களைப் பார்த்த எனக்குத் தோன்றும் சந்தேகம், இன்னும் அனுபவமிக்க போலீசுக்கு ஏன் தோன்றவில்லை என்றும், உடல் கிடந்த இடத்துக்கு உடனடியாக ஏன் மோப்ப நாய்களை இட்டுச் செல்லவில்லை என்பதும் புதிர்.

உடல் கண்டெடுக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன் வரை இளவரசன் செய்ததாகச் சொல்லப்படும் செயல்கள் எதுவும் நான்கு பக்கக் கடிதம் எழுதிவைத்து விட்டுத் தற்கொலை செய்யக்கூடிய மனநிலையில் இருப்பவர் செயல்களாகத் தெரியவில்லை. நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடர்பவரின் செயல்களாகவே உள்ளன.

இளவரசன் தற்கொலை செய்வதற்கான சூழல் இருந்ததே?

ஆம். திவ்யா இப்போதைக்கு தன்னுடன் திரும்ப வந்து சேரும் வாய்ப்பு குறைவு என்ற சூழல் இருந்தது. ஆனால் எத்தனை நாளானாலும் திவ்யாவுக்காகக் காத்திருப்பதற்கான மனநிலையில் இளவரசன் இருந்ததாகவே அவருடன் பேசிய பல பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே என்றைக்காவது இருவரும் இணைவோம் என்ற நம்பிக்கையே அவருக்கு அதிகம் இருந்திருக்கும் நிலையில் தற்கொலையை விட கொலைக்கான வாய்ப்பே அதிகம். என்றாவது இருவரும் திரும்பச் சேர்ந்துவிடக் கூடும் என்று சாதி வெறியர்கள் கருதிய நிலையில் உண்மையில் இளவரசன் மட்டுமல்ல, திவ்யாவின் உயிருக்கும் ஆபத்து தான்.

இதற்கெல்லாம் யார் பொறுப்பு?

நாம் எல்லாரும்தான். சாதி வெறியைத் தூண்டும் விதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சி பிரமுகர் காடுவெட்டி குரு போன்றோர் தொடர்ந்து பொது மேடைகளில் பேசி வந்திருப்பது, பல்வேறு சாதி அமைப்புகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி கலப்புத் திருமணத்துக்கு எதிராக பகிரங்க மிரட்டலை ஒலித்தது இவற்றையெல்லாம் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசும் தாமதித்தே நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் பலவற்றின் தலைவர்கள் இன்றளவும் இந்தப் பிரச்னை பற்றி வாயைத் திறக்கவில்லை.

சாதி மீறி திருமணம் செய்து கொண்டு துயரத்தை அனுபவிக்கும் முதல் ஜோடியல்ல இளவரசன் - திவ்யா. மனித உரிமை ஆர்வலர் எழுத்தாளர் ச.பாலமுருகன் சொல்லும் இந்தச் செய்திகளைப் படியுங்கள்:

2003 ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகில் உள்ள புதுகோரைப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் சாதியினை சார்ந்த இளைஞன் முருகேசன். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். கிராமத்தில் சொந்தமான விவசாய நிலங்கள் என பிறரைச் சாராது வாழும் பொருளாதார நிலை கொண்ட குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். அவர் அக்கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதி பெண்ணான கண்ணகியினைக் காதலித்தார். இருவரும் 2003 மே மாதம் ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். முருகேசனுக்கு திருப்பூரில் வேலை கிடைத்ததும் கண்ணகியினை அழைத்துச் சென்றுவிட்டார். கண்ணகியின் தகப்பனார் கிராம பஞ்சாயத்து தலைவர். தனது சாதிய சக்திகளால் இரவோடு இரவாக முருகேசனின் தகப்பனார், சித்தப்பா, தம்பி என அவரின் சொந்தக்காரர்களைக் கடத்தி முருகேசன், கண்ணகி உள்ள இடம் குறித்துக் கேட்டு சித்திரவதை செய்தனர். இறுதியில் முருகேசனின் சித்தப்பா மூலம் இருவரையும் கிராமத்தில் சமாதானம் பேசுவதற்காக வரவழைக்கப்படுகின்றனர். அதனை நம்பி ஊருக்கு வந்தார்கள் காதலர்கள். ஆனால் ஊரின் நடுவில் ஒட்டுமொத்த கிராமமுமே வேடிக்கை பார்க்க கண்ணகிக்கும், முருகேசனுக்கும் வாயில் பூச்சி மருந்து விஷம் வலுக்கட்டாயமாகப் புகட்டப்பட்டது, காதிலும் அந்த விஷம் ஊற்றப்பட்டது. அவர்கள் துடிதுடித்துச் செத்த பின்பு இருவரின் உடலும் கிராமச் சுடுகாட்டில் எரிக்கப்பட்டன. 

கடந்த 2007-ல் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மறவநத்தம் கிராமத்தைச் சார்ந்த சின்னசாமியின் மகள் சுதா, கொங்கு வேளாளர் சாதியினைச் சார்ந்தவர். இவர் திருச்செங்கோட்டில் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது தம்முடன் படித்த ஈரோடு அரச்சலூரைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரைக் காதலித்தார். தமிழ்ச்செல்வன் முதலியார் சாதி. படிப்பு முடிந்த பின்னர் காதலர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். தமது தந்தையால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த சுதா, தமது கணவனை அழைத்துக் கொண்டு வட இந்தியா சென்றுவிடுகின்றார். இருவரும் அங்கு பணியில் இருக்கின்றனர். சில மாதங்கள் கழித்து தமது மகள் வட இந்தியாவில் இருப்பதையும், அவர் அந்தச் சமயம் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்த சின்னசாமி தமது மகளை ஏற்றுக்கொள்வதாகவும், அவளுக்கு வளைகாப்பு நடத்த விரும்புவதாகவும் தகவல்களைக் கொடுத்து தமது ஊருக்கு வரும்படி அழைக்கின்றார். இந்த வார்த்தைகளை நம்பி மறவநத் தம் வந்தபோது இருவரையும் வரவேற்ற சுதாவின் தந்தையும், சகோதரன் சங்கர் என்பவரும், அடுத்த சில நொடியில் இருவரும் சேர்ந்து இரும்பு பைப்பால் தாக்கி சுதாவைக் கொலை செய்துவிட்டனர்.

பழனியில் ஆசிரியர் பட்டயப் படிப்பில் படித்த பன்னாரி என்பவரும் திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டையினைச் சேர்ந்த பிரியாவும் காதலித்து வந்தனர். பன்னாரி, பள்ளர். பிரியா, கள்ளர் . இருவரும் திருமணம் செய்துகொண்டு உடுமலைப்பேட்டை மடத்துகுளத்தில் உள்ள பன்னாரியின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்கள் கழித்து அவர்கள் வீட்டுக்கு வந்த பிரியாவின் தந்தை மற்றும் இரண்டு உறவுக்காரர்கள் பிரியாவுடன் பேச வந்ததாகக் கூறிவிட்டு, வீட்டில் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு பிரியாவைக் கொலை செய்து விட்டனர்."

இதுதான் தமிழ்நாடு. இதுதான் தமிழ்ச் சமுதாயம்.

இதை மாற்றவே முடியாதா?

இளவரசன் - திவ்யா பிரச்னை ஊடகங்களின் உதவியாலும், சாதிவெறி அமைப்புகளின் பங்களிப்பாலும் பொது கவனத்துக்கு வந்திருப்பதை நாம் நம் சமூகம் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு. எல்லா வன்னியரும் சாதி வெறியர் அல்ல. இதுதான் எல்லா சாதிகளிலும் உண்மை. எல்லா சாதிகளிலும் சாதி வெறியர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஒவ்வொரு சாதியினரும் தம் சாதியில் இருக்கும் சாதி வெறியரைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் அரசியல் கட்சியிலோ, இயக்கங்களிலோ இருந்து கொண்டு அதிகாரம் செய்வதற்குப் பயப்படாமல் எதிர்க்க வேண்டும்.

இந்திய அரசியல் சட்டப்படி எந்தச் சாதியினரும் எந்த மதத்தினரும் எந்த மொழியினரும் வேற்று சாதி, மத, மொழியினரைத் திருமணம் செய்ய பூரண உரிமை இருக்கிறது. இதைத் தடுப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. என் சாதியினர் மட்டுமே என்னுடன் திருமண உறவு கொள்ளலாம் என்று விதிப்பது கூட அரசியல் சட்டத்தின்படி சாதி, மத அடிப்படையில் எந்தப் பாரபட்சமும் காட்டக்கூடாது என்ற விதிக்கு விரோதமானதுதான். பல கட்டங்களில்தான் நாம் சாதியை ஒழிக்கமுடியும். சாதி உணர்வைத் தணிக்க முடியும். முதல் கட்டமாக எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும், இணையதளங்களும் மேட்ரிமோனியலில் சாதி விவரங்களை வெளியிடமாட்டோம் என்ற நிலையை எடுக்க வேண்டும் என்று நான் கோருவேன். இடஒதுக்கீட்டுக்காக சான்றிதழில் சாதியைக் குறிப்பிடுவதைத் தவிர, வேறு எந்த விதத் திலும் என் சாதிப் பழக்க வழக்கங்களை நான் மேன்மையாகக் கருதிப் பின்பற்றமாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி பூணவேண்டும். அரசியலில் சாதியைச் சொல்லிக் கொண்டு வருவோரை நிராகரிக்க வேண்டும். இப்படி இன்னும் பல படிகளை நாம் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளாக, இளவரசன், முருகேசன், கண்ணகி, தமிழ்ச்செல்வன், சுதா, பன்னாரி, பிரியா ஆகியோரின் உடல்கள் கிடக்கின்றன என்பது தான் சோகமான நிஜம்.


 


அருள்வாக்கு - ஆத்மா ஆத்மா!


சந்தோஷமாக இருப்பதாகச் சொல்வது மனசின் அனுபவங்களை வைத்துத்தான். ஆனால், சந்தோஷ அனுபவம் பெறுகிற இந்த மனசுதான் நாமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? எதெதையோ தெரிந்து கொள்வதிலும் எதெதையோ ஆராய்ச்சி பண்ணி உண்மைகளைக் கண்டுபிடிப்பதிலும்தான் மனுஷ்ய ஜீவனின் பெருமையே இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறோம். அணுவிலிருந்து galaxy வரையிலும் எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றின் உண்மைகளை தினந்தினமும் தெரிந்துகொண்டு கர்வப்படுகிறோம். இப்படித் தெரிந்து கொள்கிற நாம் வாஸ்தவத்தில் யார் என்று ஆராய்ச்சி பண்ணித் தெரிந்துகொள்ள வேண்டாமா? தன்னுடைய சத்யமான ஸ்திதியையே தெரிந்துகொள்ளாமல் மற்றவற்றைத் தெரிந்துகொண்டு ‘சயன்ஸால் சத்யங்களைத் தெரிந்து கொள்கிறோமாக்கும்!’ என்று மார்தட்டிக் கொள்வது பரிகாசத்துக்கு இடமானதல்லவா? சத்ய சத்யமானதைத் தெரிந்து கொள்ள வேண்டும், அறிகின்ற அறிவை அறிய வேண்டும் என்றால் ஆத்ம சாஸ்திரத்தை அப்பியசிக்க வேண்டும்.

ஆத்ம சாஸ்திரங்களை இப்போதே தீவிரமாக அப்பியசிப் பதற்கில்லாத பெரும்பாலாருங்கூட, மெய்யான ஆத்மாவை அடியோடு மறந்து பொய்யான மனசுக்காகவே சதாவும் பாடுபட்டுக் கொண்டிருப்பதாக இருக்கப்படாது. அப்படி இருந்தால் நாம் ஏமாளி என்று ஆகிவிடும். அதனால்தான், எப்படிப்பட்டவராயிருந்தாலும், தினம் ஒரு அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷமாவது, ‘நம்முடைய காரியம், எண்ணம், லோகம் முதலான சகலமும் பொய்யாகப் போய் விடும் ஒரு பெரிய சாந்த பதம் ஆத்மா ஆத்மா என்று இருக்கிறது’ என்பதாக நினைப்பூட்டிக் கொண்டு, அந்த அஞ்சு பத்து நிமிஷம் சாந்தமாக உட்கார்ந்திருக்க வேண்டும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்ஓ பக்கங்கள் மூன்றாவது அணி எங்கே? ஞாநி

இந்திய, தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் சமயங்களில் எல்லாம் அடிபடும் ஒரு தலைப்பு - மூன்றாவது அணி! முதல் இரண்டு அணிகள் எவை என்பதில் இன்று யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தில்லி அரசியலென்றால், அவை காங்கிரஸ், பி.ஜே.பி.! தமிழக அரசியலென்றால், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.! ஆனால் இவைதான் முதல் இரு அணிகள் என்ற நிலை ஏற்பட்டது எழுபதுகளுக்குப் பிறகுதான்! இந்த வரலாற்றைப் புரிந்து கொண்டால்தான் இனி மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உண்டா இல்லையா என்பதையே ஆராயமுடியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நடந்த முதல் பொதுத் தேர்தலின்போது தில்லியிலும் தமிழ்நாட்டிலும் இருந்த இரு பிரதான கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். மற்றது இரண்டு இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிதான். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு படவில்லை. தில்லியில் நேருவின் காங்கிரஸ் 364 எம்.பி.களைப் பெற்றது. கம்யூனிஸ்டுகள் அடுத்த இடத்தில் 16 எம்.பி.களுடன் இருந்தனர். ஹைதராபாத்தில் கம்யூனிஸ்டுகளின் இயக்கமாக இருந்த மக்கள் ஜனநாயக முன்னணி தனிக் கட்சியாகப் போட்டியிட்டு 7 எம்.பி.களைப் பெற்றது. ஜெயப் பிரகாஷ் நாராயணனின் சோஷலிஸ்ட் கட்சி 12 இடமும் கிருபளானியின் கிசான் மஸ்தூர் பிரஜா (உழவன் உழைப்பாளி குடிமக்கள்) கட்சி 9 இடங்களும் பெற் றன. பின்னர் சோஷலிஸ்ட் கட்சியும் கிசான் பிரஜாவும் இணைந்து பிரஜா சோஷலிஸ்ட் கட்சியாயிற்று.

இன்றைய பி.ஜே.பி.யின் முன்னோடியான ஜன சங்கம் அந்த முதல் தேர்தலில் பெற்றது வெறும் மூன்று எம்.பி. இடங்கள்தான். அதன் தோழமை அமைப்பான இந்து மகாசபா பெற்றது நான்கு. இன்னொரு இந்துத்துவ அமைப்பான ராமராஜ்ய பரீஷத் பெற்றது மூன்று. ஒரிசாவில் பழைய மகாராஜாக்களின் கட்சியான கணதந்திர பரீஷத் ஏழு எம்.பி. இடங்களைப் பிடித்தது.


அதே தேர்தலில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை ராஜதானியில்,பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கி விலகியதும், தேய்ந்துபோய்விட்ட ஜஸ்டிஸ் கட்சி போட்டியிட்டும் ஒரு இடம் கூடப் பெறவில்லை. முதல் தேர்தலில் தி.மு.க. தில்லிக்கும் போட்டியிடவில்லை; மாநில சட்டசபைக்கும் போட்டியிடவில்லை.

சென்னை ராஜதானியில் சட்டமன்றத் தேர்தலிலும் முதல் இடத்தில் காங்கிரசும் (164 எம்.எல்.ஏ.க்கள்) இரண்டாம் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியுமே (62) இருந்தன. பெரியார், கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார். தி.மு.க. போட்டியிடாத போதும் (பா.ம.க.வின் முன்னோடிகளான) வன்னியர் சாதிக் கட்சிகளை ஆதரித்தது! அவை 25 இடங்களைப் பெற்றன! பின்னர் காங்கிரஸ் அணிக்குப் போய்விட்டன. ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் ஜெயப்பிரகாசரின் சோஷலிஸ்ட் கட்சி 35 எம்.எல்.ஏ.க்களையும் கிருபளானியின் கிசான் பிரஜா கட்சி 13 எம்.எல்.ஏ.க்களையும் என்.ஜி. ரங்காவின் லோக் கட்சி 15 எம்.எல்.ஏ.க்களையும் அடைந்தன. இவையெல்லாம் சென்னை ராஜதானிக்குள் அப்போது இருந்த ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம், கேரளப் பகுதிகளில் செல்வாக்குடன் இருந்தவை. தமிழ்நாட்டில் அல்ல.

இப்படி முதல் தேர்தல் நடந்த 1952ல் காங்கிரசுக்கு அடுத்த அணியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. வளர்ந்து 1957ல் அடுத்த தேர்தலில் போட்டியிட்டதுமே பலத்த அடிவாங்கிவிட்டது. தி.மு.க.வுக்கு 13. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெறும் நான்கு சீட்! இந்தச் சரிவுக்கு முக்கியமான இன்னொரு காரணம் இந்தத் தேர்தலின்போது சென்னை ராஜதானி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதாகும். கம்யூனிஸ்டுகளுக்கு தமிழ்நாட்டை விட ஆந்திரம், கேரளம், ஒரிசா பகுதிகளிலேயே அதிக செல்வாக்கு இருந்தது. அடுத்து வந்த 1962 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தும் கூட கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்தது இரண்டு எம்.எல்.ஏ.தான். தி.மு.கவுக்கு 50! தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்ற ஈ.வி.கே. சம்பத்தின் கட்சி போட்டியிட்ட 9 இடத்திலும் தோற்றது. காங்கிரஸ் 139 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சியாயிற்று.

1967 தேர்தலின்போது கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு இரு கட்சிகளாகியிருந்தது. அதில் மார்க்சிஸ்ட் கட்சி, வலதுசாரியான ராஜாஜியின் சுதந்திரா கட்சி சகிதம் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. சுதந்திராவுக்கு 20 இடங்களும் மார்க்சிஸ்ட்டுக்கு 11 இடங்களும் கிடைத்தன. யாருடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு எம்.எல்.ஏ.க்களை பெற்றது.

இப்படியாக 1952ல் இரண்டாம் நிலையில் இருந்த இடதுசாரிகள் 1967ல் சென்னையில் அந்த இடத்தை இழந்து அடிமட்டத்துக்குப் போய் விட்டார்கள். தில்லியில் அவ்வளவு மோசமில்லை. தொடர்ந்து 20 முதல் 40 வரை இடங்களைப் பெற்றுப் பெரும்பாலும் இரண்டாம் இடத்திலேயே இருந்து வந்தனர். 1967 தேர்தலில் காங்கிரஸ் பலவீனமடைந்த போதும் கூட ஆட்சியைப் பிடித்தது. கம்யூனிஸ்டு கட்சி இரண்டாகப் பிளவுபட்டும் கூட இரு பிரிவுகளுமாகச் சேர்ந்து 42 இடங்களை வென்றன. ஜனசங்கம், சோஷலிஸ்ட்டுகள், சுதந்திரா போன்றோர் எல்லாம் அடுத்த நிலையிலேயே பலவீனமாக இருந்தனர்.


பலமான நிலையில் காங்கிரஸ், அடுத்து பல இடங்கள் தள்ளியிருந்தாலும் இரண்டாம் இடத்தில் இடதுசாரிகள் என்று 1967 வரை தில்லியில் இருந்த நிலை எழுபதுகளில் மாறத் தொடங்கியது. முக்கியமான காரணம் இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சியை 1969ல் பிளவுபடுத்தியதுதான். பிளவுபட்ட காங்கிரசின் ஓர் அணி இந்திரா தலைமையில் சோஷலிசம் பேசிற்று. ராஜ மான்ய ஒழிப்பு, வங்கி தேசியமயம் எல்லாம் செய்யப்பட்டன. இன்னொரு அணி வலதுசாரி பழமைவாதம் பேசிற்று.

சோஷலிஸ்டுகளில் கொஞ்சம் பேர் இந்திராவுடன் சேர்ந்தார்கள். இடதுசாரிகள் அவ்வப்போது இந்திராவை ஆதரிப்பது, எதிர்ப்பது என்று மாறி மாறி நிலை எடுத்தார்கள். ஜனசங்கம் போன்ற வலதுசாரி மத வாத அமைப்பும், சுதந்திரா போன்ற வலதுசாரி மதச்சார்பற்ற அமைப்பும் சோஷலிஸ்டுகளில் ஜனநாயகத்தை முக்கியமாகக் கருதியவர்களும் இந்திராவை எதிர்த்த காங்கிரசின் அணியுடன் கலக்க ஆரம்பித்தார்கள். 1970 முதல் 1980 வரை பத்தாண்டுகள் தில்லி அரசியலில் இந்த மிக்சிங் நடந்தபடி இருந்தது. இதில் கடைசியில் பயனடைந்தவர்கள் இந்துத்துவவாதிகளான ஜனசங்கிகள்/ஆர்.எஸ்.எஸ்.தான்.

சென்னை அரசியல் இன்னும் விசித்திரமாயிற்று. 1967ல்தான் ஆட்சியிலிருந்து அகற்றிய காங்கிரசுடனே தி.மு.க. 1971ல் நான்கே வருடங்களில் கூட்டு சேர்ந்தது. காரணம் இப்போது இரண்டு காங்கிரஸ் கட்சிகள் வந்துவிட்டன. ஒன்று இந்திரா. இன்னொன்று காமராஜ். தமிழ்நாட்டில் தம் தலைமைக்குச் சவால் காமராஜிடமிருந்துதான் வரமுடியும் என்று தெளிவாக உணர்ந்திருந்த கலைஞர் கருணாநிதி, இந்திராவைப் பயன்படுத்தி காமராஜைப் பலவீனப்படுத்தினார். தி.மு.க.வுக்கு எதிராக காமராஜர் உருவாக்கிய எதிர்ப்பலையெல்லாம், அனைத்திந்திய அளவில் அவர் சார்ந்திருந்த பிற்போக்கான சக்திகளினால் வீணாயிற்று.

அப்போது இந்திரா மட்டும் காமராஜரைத் தம்முடன் இருக்கும்படி செய்திருந்தால், தமிழக அரசியல் மாறிப் போயிருக்கும். அனைத்திந்திய அரசியலும்தான். ஆனால் அது நிகழவில்லை. 1971 தேர்தல் வெற்றி, வங்கதேச உருவாக்கப் போர் வெற்றி எல்லாம் முடிந்ததும், இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்யவும், ஊழலைத் தடுக்கவும் இந்திராவிடம் எந்தத் திட்டமும் இல்லை. இதில் உண்டான அதிருப்தி வட மாநிலங்களில் மாணவர் இயக்கமாக உருவாகி, சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் மக்கள் இயக்கமாக மாறியது. ஜனசங்கம் முதல் லோகியாவாதிகள் வரை ஓரணியில் திரண்டனர்.

தமிழ்நாட்டில் காமராஜரை இந்திரா அலை மூலம் வீழ்த்திய கலைஞர், இந்திராவைத் தேர்தல் தொகுதி உடன்பாட்டின் மூலம் வீழ்த்தியிருந்தார். 1971 சட்ட மன்றத் தேர்தலை விட மக்களவைத் தேர்தலையே தன் அதிகாரத்துக்கு முக்கியமென இந்திரா கருதியிருந்த பலவீனத்தைப் பயன்படுத்தி கலைஞர், தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்குப் போட்டியிட ஒரு சீட் கூட தராமல் தொகுதி உடன்பாடு செய்தார். 1967ல் ஆட்சியை இழந்தபோது கூட 40 சதவிகித வாக்கு பெற்றிருந்த காங்கிரஸ் சட்ட சபைக்குள் நுழையவே முடியாமல் போயிற்று.


கலைஞரின் இந்த அரசியல் சூழ்ச்சியை காங்கிரசுக்குள் இருந்த சோஷலிஸ்டுகளும் காங்கிரஸை வெளியிலிருந்து ஆதரித்த சில கம்யூனிஸ்டுகளும் முன்னதாகவே புரிந்து கொண்டு விட்டனர். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கட்சிக்குள்ளும் வெளியிலும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளும் கலைஞர் கருணாநிதியையும் அவரது தி.மு.க.வையும் பலவீனப்படுத்தாமல் காங்கிரஸோ இடதுசாரிகளோ திரும்ப மேலெழ முடியாது என்பது இவர்களுக்கு நன்றாக உறைத்தது. எனவே கட்சிக்குள் தமக்குப் போட்டியாளரான எம்.ஜி.ஆரைப் பலவீனப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்த கலைஞரை அதே எம்.ஜி.ஆரைக் கொண்டே வீழ்த்துவது என்று எதிர் வியூகம் வகுக்கப் பட்டது.

ஆனால் காங்கிரஸ் சோஷலிஸ்டுகள்- கம்யூனிஸ்டுகளின் இந்த முயற்சி பஸ்மாசுரன் கதை மாதிரி ஆகிவிட்டது. தி.மு.க.வின் முதன்மை இடத்துக்குக் காங்கிரசும் வரமுடியவில்லை. தன் பழைய இரண்டாம் இடத்துக்கு இடதுசாரிகளும் வரமுடியவில்லை. முதல் இரண்டு இடங்களும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டுக்கும்தான். இதில் யாரேனும் ஒருவரை நம்பித்தான் தாங்கள் இருக்க முடியும் என்ற நிலைக்கு காங்கிரசும் இடதுசாரிகளும் தள்ளப்பட்டுவிட்டார்கள். எழுபதுகளின் இறுதியிலிருந்து இதுதான் தமிழகச் சூழல். இதில் மூன்றாம் அணி என்றால், அது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. அல்லாத இன்னொன்றாகவே இருக்க முடியும். அதற்கான முயற்சிகள் என்ன ஆயின; இனி அதெல்லாம் சாத்தியமா என்று பின்னர் பார்ப்போம்.

தில்லி அரசியல் காங்கிரஸ்-இடதுசாரிகள் என்று அறுபதுகளில் இருந்த நிலையை ஜே.பி. இயக்கமும் அதைச் சமாளிக்க இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலையும் மாற்றியமைத்தன. இந்துத்துவர்கள் முதல் வலதுசாரிகள், சோஷலிஸ்டுகள் வரை சங்கமித்து உருவாக்கிய ஜனதா கட்சி காங்கிரசுக்கான மாற்று இரண்டாம் அணியாகத் தோற்றமளித்தது. ஆனால் அதை உருவாக்கி அதில் ஊடுருவி அதைப் பயன்படுத்தி, தங்களையே முதன்மைப்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்த ஜனசங்கிகள், இரண்டே வருடங்களில் ஜனதாவைப் பலவீனமாக்கி, பாரதிய ஜனதா கட்சியாக இன்னொரு அவதாரம் எடுத்தனர்.

எண்பதுகளில் இருந்து தில்லி அரசியலைப் பொறுத்தமட்டில் முதல் அணி காங்கிரஸ், இரண்டாம் அணி பி.ஜே.பி. என்ற நிலை இப்படித்தான் தொடங்கியது. இப்போது அங்கேயும் இவையல்லாத மூன்றாம் அணி சாத்தியமா, இதற்கு முன் இரண்டாம் நிலையில் இருந்த இடதுசாரிகளும் சோஷலிஸ்டுகளும் புத்துயிர்ப்பு பெறுவார்களா என்பதைப் பின்னர் பார்ப்போம்.

தமிழகத்தில் மூன்றாம் அணி என்பது என்ன? தில்லியில் மூன்றாம் அணி என்பது என்ன? தொண்ணூறுகளில் உருவாகியிருக்கும் பல கட்சிக் கூட்டணி அரசியலில் மூன்றாம் அணி என்பது சாத்தியம்தானா, இல்லவே இல்லையா?

ஜோதிபாசு ஒரு சகாப்தம்!

'ஜோதிதா’ என்று இளைய தலைவர்களும் ஜோதி பாபு என்று லட்சோப லட்சம் தோழர்களும் அழைத்துக் கொண்டாடிய ஜோதிபாசுவுக்கு இது நூற்றாண்டு தொடக்க விழா.
 
ஜோதிபாசு என்ற பெயரைச் சொன்னாலே, அச்சம் அல்லது பெருமிதம் கொள்பவர்கள்தான் உண்டு. இன்று தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு அவரது பெயரிடப்பட்டு உலாவருவதைப் பார்க்கலாம். டெலிபோன் டைரக்டரியைப் புரட்டினால், சென்னையில் மட்டும் தொலைபேசி வைத்துள்ள ஜோதிபாசுகள் 10-க்கும் மேல். இன்னும் மதுரை, தஞ்சை, கோவை என்று புரட்டிப் பார்த்தால், அவரது பெயர் ஏராளமானோருக்கு  உண்டு. தவிர, டெலிபோன் வசதி இல்லாத ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகளின் வீட்டில் பல ஜோதிபாசுகள் இருக்கின்றனர்.
 
 
 அவரது பெயரைச் சொன்னதற்கு அரசே நடுங்கிய சம்பவம் தமிழகத் திலேயே நடந்தது. ஒருமுறை, அரசு ஊழியரின் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கத் தலைவர், ''இப்படித் தொடர்ந்து தொழிலாளிகளை தமிழக அரசு நசுக்கி னால், எங்களைப் பாதுகாக்க வங்க முதல்வர் ஜோதிபாசு இருக்கிறார்'' என்று சொன்னார். உடனே, பயந்துபோன தமிழக அரசு, அந்தத் தொழிற்சங்கத் தலைவருக்கு மெமோ கொடுத்தது. 'இரு மாநிலங்களுக்கு இடையே பகையை மூட்டப் பார்க்கிறார். சங்கத் தலைவர் பேசியது ராஜதுரோகக் குற்றம்’ என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்தளவுக்கு அச்சுறுத்தும் மனிதராக அவர் கருதப்பட்டார்.
 
1967-ல் முதல்முறையாக நான் ஜோதிபாசுவைப் பார்க்க நேர்ந்தது. தி.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் மாபெரும் பொதுக்கூட்டம். காங்கிரஸுக்கு எதிராக அப்போது தி.மு.க. - மார்க்சிஸ்ட் - சுதந்திரா கூட்டணி அமைந்து இருந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி யில் போட்டியிடுகிறார். ஜோதிபாசு அந்தக் கூட்டத்தில் பேசுகிறார் என்றதும், ஏராளமான கூட்டம். அந்தக் கால கட்டத்திலேயே தமிழகம் அறிந்த மனிதராக ஜோதிபாசு இருந்தார்.
 
தமிழகத்தில் உள்ள தோழர்களுக்கு ஜோதிபாசு என்றாலே ஒரு தனி மரியாதை உண்டு. அதற்குக் காரணம் அவருடைய பல குணநலன்கள். முதல்வராக இல்லாதபோது, சென்னைக்கு வரும்போதெல்லாம் எம்.எல்.ஏ. விடுதியில்தான் தங்குவார். அவரது சூட்கேஸில் மூன்று செட் துணிகளே இருக்கும். பொதுக்கூட்டத்துக்குப் போய்விட்டு வந்த பிறகு, அறையில் தனது துணிகளை அவரே சோப்பு போட்டுத் துவைப்பார். உணவு உண்ணவும் சாதாரண ஹோட்டல்களுக்கே வந்து எங்களுடன் உணவருந்துவார்.
 
ஒருமுறை பாட்னா ரயில் நிலையத்தில் அவர் வந்திறங்கியபோது ஒருவன் அவரைத் துப்பாக்கியால் சுட்டான். குண்டு குறிதவறி அவரது பக்கத்தில் இருந்த ஒரு எல்.ஐ.சி. தோழர் மீது பாய்ந்தது. அந்த சமயம் எதற்கும் அஞ்சாமல் பதற்றம் அடையாமல் இருந்தார் ஜோதிபாசு. அவர் ஓடி ஒளியவில்லை. 'அவனைப் பிடியுங்கள்’ என்று அந்த மனிதனைப் பார்த்து கையைக் காட்டினார். அத்தகைய சூழ்நிலையில் இப்படிப்பட்ட துணிச்சல் வெகு சிலருக்கே உண்டு. இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஆதரித்தபோதும், காங்கிரஸ் இல்லாத முதலமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய ஜோதிபாசு, 'இலங்கையில் இந்தியாவின் தலையீடு தோல்வி அடைந்தது’ என்று கூறத் தயங்கவில்லை.
 
இன்று பல கட்சியினர் அடுத்த பிரதமர் தங்கள் தலைவர்தான் என்று பேசியும் ஃப்ளெக்ஸ் போர்டு வைத்தும் வருகிறார்கள். நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய பலம் இருந்தும், பிரதமர் பதவி தன்னைத் தேடி வந்தும், கட்சியின் உத்தரவுப்படி, அந்தப் பதவி தனக்கு வேண்டாம் என்று நிராகரித்தார் ஜோதிபாசு. பின்னர், கட்சியின் முடிவு ஒரு வரலாற்றுப் பிழை என்று கூறவும் அவர் தயங்கவில்லை.

இன்று பல தலைவர்கள் எவ்வளவு வயதானாலும் கட்சியிலும் பதவியிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். பல கட்சிகளில் இளைஞர் அணித் தலைவர்கள்  60 வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பதவியில் இருக்கும்போது தனது வயதைக் கருதி இனிமேல் பொலிட் பீரோ உறுப்பினராக இருக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து அந்தப் பதவியில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டவர் ஜோதிபாசு.

இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சார்பில் 'மாநில சுயாட்சி’ பற்றி பேச அழைத்தபோது, உடனே கலந்துகொள்ள சம்மதித்தார். மைலாப்பூரில் மிக விமரிசையாக அந்தக் கூட்டம் நடை பெற்றது. அப்போது அவர் மேற்கு வங்க முதல்வராக இருந்தபோதும், தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட கௌரவங்களைத் தவிர்த்தார்.

அவர் இறுதி வரை ஒரு நாத்திகராகவே இருந்தார். மதுரையில் 9-வது 'கட்சி காங்கிரஸ்’ நடக்கும்போது அவரது மனைவி கமலா பாசுவும் மகன் சந்தன் பாசுவும் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்ல விரும்பியபோது... வர மறுத்ததோடு, அவர்களையும் கடிந்துகொண்டதை நேரில் பார்த்தவன் நான். அவர் இறந்த பிறகும் அவரது உடல் இடுகாடு/சுடுகாடு எடுத்துச் செல்லப்படாமல், அவரது விருப்பத்துக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. கடைசி வரை அவர் தனது கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.

கட்சி முடிவுகளுக்கு உட்பட்டு பாரதப் பிரதமராக ஜோதிபாசு ஆகாவிட்டாலும், அவர் மக்கள் மனதில் பாரதத்தின் ரத்னமாக ஒளிர்கிறார். பாரத ரத்னா விருது இதுவரை அவருக்கு வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது. அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த ஆண்டிலேயே, அவருக்கு 'பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு வழங்கி, விருதுக்கான கௌரவத்தை உயர்த்திக்கொள்வது நல்லது.
 

Tuesday, July 16, 2013

குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புகள்

ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்காக மலை உச்சியில் இருந்து ஹீரோ குதிப்பார், கட்டடங்களைத் தாண்டுவார், வேகமாக வரும் ரயிலை சர்வ சாதாரணமாக கடப்பார். அனைவரையும் ஈர்க்கிறது இப்படி ஒரு விளம்பரம். ஒரு குளிர்பானம்கூட வாங்க முடியாமலா இப்படி ஓடுகிறார் என்று நினைக்கத் தோன்றாமல், தாகம் எடுத்தால், நேராக கார்பனேட்டட் கோலா பானங்கள் பருகத்தான் செல்கின்றோம். குளிர்பானங்கள் குடிக்காதீர்கள் என்றால், 'நான் 'டயட்’ கூல் டிரிங்தான் குடிக்கிறேன்’ என்று சமாதானப்படுத்திக்கொள்கிறோம்.  சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானத்தில் என்ன சேர்க்கப்படுகிறது, இதைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று அறிவோம் .

'குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். இத்தகைய சோடா, டயட் குளிர்பானங்கள் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு, எலும்பு அடர்த்தியின்மை என்று ஏராளமான பிரச்னைகள் வரும் வாய்ப்பு அதிகம். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்களுக்கு அதிக அளவில் கலோரி அளவை அதிகரிப்பதில் 'ஜங்க்’ புட்களைத் தாண்டி எனர்ஜி டிரிங்ஸ் முன்னணியில் இருக்கிறது.'' 

 

குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.

குளிர்பானத்தில் கலக்கப்படும் காஃபினே தொடர்ந்து இந்த பானத்தை அருந்தத் தூண்டுதலாக (அடிக்ஷன்) உள்ளது. 'டயட்’ குளிர்பானத்தில் ஆஸ்பர்டேம் (Aspartame) என்ற வேதிப்பொருள் சர்க்கரைக்குப் பதிலான இனிப்புச் சுவை தருவதற்காகச் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் மூளையில் கட்டி, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும் பதற்றம், மன அழுத்தம், சோர்வு, தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நரம்பியல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சில நிறுவனங்கள் ஆஸ்பர்டேமுக்கு பதில் வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

எனவே, குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பானங்களைக் குடிப்பதற்குப் பதில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே போதும். நீராகாரம், நீர் மோர் என உடலுக்கு வலு சேர்க்கும் பானங்களைப் பருகலாம். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். பழங்களை கடித்துச் சாப்பிடும்போது, அதன் முழுப் பலனும் கிடைக்கும்.
 
குளிர்பானம் அருந்தும்போது உடலில் உள்ள உறுப்புகள் ஏற்படும் பாதிப்புகள் :
 
உடல் பருமன்
 
அமெரிக்காவில் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தினமும் குளிர்பானம் குடித்த 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உடல் பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் குளிர்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவிகிதம் பேர் ஒன்றரை ஆண்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டனர்.

சர்க்கரை அதிகம் உள்ள பானத்தைக் குடிப்பதால் உடல் பருமன் ஏற்படும். ஆனால், டயட் சோடா குடித்தாலும் எடை கிலோ கணக்கில் உயரும் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மை. குளிர்பானம் குடிக்கும்போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இந்த அளவுக்கு அதிசயமாக, சர்க்கரையானது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்துவைக்கிறது. இப்படி, படிப்படியாக உடல் எடை அதிகரித்து உடல் பருமன் என்ற நிலை ஏற்படுகிறது. கொழுப்பு உடலில்  படிவதுடன், கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகளுக்குள்ளும் படிந்து பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
 
இதயம் மற்றும் சர்க்கரை நோய்

குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு.


அதிலும் டயட் சோடா அருந்துபவர்களுக்கு 61 சதவிகிதமாக உள்ளது. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 80 சதவிகிதமாக இருக்கிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயானது இதய நோய்க்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப். இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் இந்த சிரப்பானது உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைப் பாதித்து, இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

பற்கள் / எலும்புகள்

குழந்தைகளின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும், பெரியவர்களுக்கு எலும்பு மற்றும் பல் வலுவாக இருக்கவும் கால்சியம் தேவை. ஒரு நாளைக்கு போதுமான அளவு கால்சியமும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கிடைக்கும் சிறிதளவு கால்சியத்தையும் குளிர்பானங்களில் உள்ள ரசாயனங்கள் வெளியேற்றிவிடுவதால், குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சர்க்கரை மற்றும் குளிர்பானத்தில் உள்ள அமிலங்கள், பல்லில் உள்ள எனாமலை மிக விரைவாகத் தாக்குகின்றன. இதனால் எளிதில் பற்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பற்சிதைவானது பல்லின் வேர் வரை செல்லும்போது பல்லின் ஆயுள் குறையும். குளிர்பானங்களில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், எலும்பில் உள்ள கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களைச் சிதைத்து வெளியேற்றும். இதனால், எலும்பின் அடர்த்தியைக் குறைத்து ஆஸ்டியோபொரோசிஸ் வருவதற்கு வழிவகுக்கும்.

சிறுநீரகம்

தினமும் குளிர்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பை இரு மடங்கு அதிகப்படுத்துவதாக ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் ஆய்வு கூறுகிறது. குளிர்பானத்தில் உள்ள, பாஸ்பாரிக் அமிலத்தை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் மேற்கொள்கிறது. இது சிறுநீரகத்தில் கல் உருவாகவும், இதர சிறுநீரகப் பிரச்னைகள் உருவாகவும் காரணமாக இருக்கிறது.பெட் பாட்டிலும் பாதிப்புதான்!குளிர்பானங்கள் வரும் பெட் பாட்டில்களில், பிஸ்பினால் ஏ என்ற ரசாயனப்பூச்சு இருக்கும். இது இதய நோயில் தொடங்கி, உடல் பருமன், இனப்பெருக்க மண்டலம் என உடலின் பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கும். கோலா வகை பானங்களில் நிறத்துக்காக சேர்க்கப்படும் செயற்கை காரமெல், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.