Search This Blog

Sunday, October 31, 2010

அங்காடித்தெரு.

சினிமா இரண்டு வகை படும். புதிதாக  படம் எடுக்கிறேன் என்று முயற்சி  செய்து  நம்மை சோதிப்பது. இரண்டாவது, நம் வாழ்க்கையும், நம்மை சுற்றியுள்ளவ்ர்களின் வாழ்க்கையை பார்த்தாலே நிறைய கதைகள் கொட்டி கிடக்கிறது என்று அதனை சாதரணமாக விட்டு விடாமல் அதனை திரைப்படமாக எடுப்பது. உ.த : காதல், நாடோடிகள்......... அப்படி வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட கதை தான் அங்காடித்தெரு.

இந்த படத்தை பார்க்க ஆவலை தூண்டிய விஷயங்கள்,

1  படத்தின் பாடல்கள்.
2 இந்த படத்தின் டைரக்டர் எங்கள் மண்ணின் மைந்தன். இவர் குடுத்த ஆல்பம் படத்திற்கே கட் அவுட் வாய்த்த ஊர். அதிலும் குறிபாக வெயில் படத்தின் முதல் காட்சியில் தியேட்டரில் எம் மக்கள் நிற்க குட இடம் இல்லாமல் தரையில் நின்று மற்றும் உட்கார்த்து படம் பார்த்தது... இன்னும் என்னால் அந்த நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை. 

ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ஒரு வணிக நிறுவனத்தை குறித்துதான் இயங்குனரின் பார்வை விரிந்திருக்கிறது. லேபர் சட்டங்களை வேஸ்ட் பேப்பர் போல கிழித்தெறியும் அதன் அதிகார பார்வையில், கண்கூசி நெளிகிற எத்தனையோ தொழிலாளர்களின் துயரத்தை சொல்ல, அவர்களை விடவும் கடுமையாக உழைத்திருக்கிறார்.

படம் சென்னை இல் தொடங்குகிறது. நள்ளிரவு. பஸ் ஸ்டாண்டில் கால்களால் உரசிக் கொள்ளும் காதலர்களாக காண்பிக்கப்படுகிறார்கள் மகேஷம், அஞ்சலியும்( ஒரு அருமையான பாட்டுடன் ). அந்த சமயம் ஒரு சிறு விபத்து நடக்கிறது. இடையில் நடப்பது என்ன? 

கிராமத்திலிருந்து கொண்டுவரப்படும் இத்தகைய தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்று கொண்டே வேலை பார்க்கிறார்கள். மதிய உணவுக்காக ஓடோடி செல்லும் அவர்கள் திரும்பி வர தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் கட். படத்தில் நிறைய கேரக்டர். ஆனால், அனைவரும் தம் தம் பத்திரங்களை அருமையாக செய்து உள்ளார்கள்.

நாயகன் புதுமுகமாம். ஆனால் மிக அருமையான நடிப்பு. படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டே நாயகி அஞ்சலிதான். கனி யாக வாழ்ந்திருக்கிறார். சின்ன சின்ன பாடி லேங்குவேஜில், கலக்குகிறார்.  கிளைமாக்ஸ் காட்சியில் அவளின் கண் மொழியும் க்ளாஸ்.

ஐயோ, படத்தின் கிளைமாக்ஸ் இல் நெஞ்சு பதறுகிறது... (பருத்திவீரன் படம் போல வித்தியாசமான கிளைமாக்ஸ்). அதனை இங்கு கூறினால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும்.

இந்த படத்தை பார்க்க வேணடிய காரணம்,

1 . செளந்திர பாண்டி – ராணியின் கதாபாத்திரங்கல். 

தட்டிக் கழிக்க முடியாத குடும்ப பொறுப்புகளும், வறுமையும், வேலையின்மை குறித்த அச்சமும் செளந்திரபாண்டியை இயலாமையின் உச்சத்தினுக்கு நகர்த்திவிட்டிருக்கிறது. தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டால் இருவருக்குமே வேலை போய்விடும், குடும்பம் தெருவிற்கு வந்துவிடும் என்கிற பலவீனம் பலரின் முன் தன் காதலை ஒத்துக் கொள்ள அவனை மறுக்க வைக்கிறது. இரண்டு வருடங்களாய் பின்னால் அலைந்த ஆண் காதலிப்பதாய் உருகிய காதலன் பொதுவில் தன்னை வேசி யென்றும் தன்னை அவன் காதலிக்கவே இல்லையென்றும் சொன்ன அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாது ராணி மாடி கண்ணாடி சன்னலை உடைத்துக் கொண்டு தரைக்குப் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். வேலை, காதலி வாழ்க்கை என சகலமும் இழந்து பைத்தியமாகும் செளந்திரபாண்டி ஆண்களுக்கு ஆத்மார்த்தமாகவும். காதலுக்காக உயிர் நீத்த ராணி பெண்களுக்கான ஆதர்சமாகவும் மாறிப்போகிறார்கள்.

2. கனியின் பதிமூன்று வயது தங்கை - அவள் பணிபுரியும் வீடு - சடங்காதல் -தீட்டு என கொல்லையில் நாய்கள் கட்டும் இடத்தில் தங்க வைத்தல் – இந்தாடி அம்பது ரூபா என்பதை உதறிவிட்டுப் போதல் - சடங்கான பெண்ணை கூட்டிக்கொண்டு எங்கே போவதெனத் தெரியாமல் நடுத்தெருவில் கதறுதல் – தீட்டு மனுசங்களுக்குதான் சாமிக்கு இல்ல என மனித நேயமிக்க மனிதர்கள் சிலர் அரவணைத்துக் கொள்ளுதல். 

3. வளர்ச்சிக் குன்றிய மனிதருக்கு பிறக்கும் குழந்தை அவரைப் போலவே இருக்கிறதென மகிழும் முன்னாள் பாலியல் தொழிலாளித் தாய்.

* எட்டு வருடங்களாய் பனிரெண்டு மணி நேரங்கள் நின்றபடியே வேலை பார்த்ததில் இரண்டு கால்களும் முழுதாய் வெரிக்கோசு நோய் தாக்கி அதே ரங்கநாதன் தெருவில் மடியும் நடுத்தர வயதுக்காரர்.

*முப்பது வருடங்களாய் மனிதர்களை மட்டும் நம்பி ரங்கநாதன் தெருவில் கடைபோட்ட கண் தெரியாத முதியவர்.

* பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் நகராட்சிக் கக்கூஸை ஆக்ரமித்து செல்வந்தனாகும் நடுத்தர வயதுக்காரர்.

* பழைய சட்டைகளை துவைத்து புதிதாக லேபிள் ஒட்டி பேக்கிங் செய்து பத்து ரூபாய்க்கு விற்கும் இளைஞர்.

* வெளியூரில் அண்ணன் வேலை செய்யும் கடையின் பெயர் போட்ட பையை தயக்கத்தோடு கேட்டு வாங்கி குதூகலிக்கும் சிறுமி..

அங்காடித் தெரு - வாழ்வின் பிரதிபலிப்பு.

Saturday, October 30, 2010

ரவிச்சந்திரன் அஷ்வின் - 'கேரம் பால்'!

விச்சந்திரன் அஷ்வின்... அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் இந்திய
கிரிக்கெட் அணிக்குக் கிடைத்துஇருக்கும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர்! வெங்கட்ராகவனுக்கு அடுத்து, தமிழகத்தில் இருந்து ஒரு ஸ்பின்னர். முரளிதரனுக்கு 'தூஸ்ரா'போல ரவிச்சந்திரனுக்கு 'கேரம் பால்'! 

"கேப்டன் டோனியே, 'மிகவும் திறமையான ஸ்பின்னர். சவால்களை விரும்பி ஏற்றுக்கொள்பவர்!' என்று உங்களைப் புகழ்கிறாரே?"

"எப்போதுமே ஸ்பின்னர்கள் பந்து வீச வரும்போது, எதிர் அணியின் பேட்ஸ்மேன்கள் அடிச்சு ஆடி ரன் ரேட்டை அதிகரிக்க முயற்சி பண்ணுவாங்க. அதனால், நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எப்போதும் சவாலான சூழ்நிலையில்தான் பந்து வீச நேரும். சிக்ஸர், பவுண்டரின்னு பறக்குதேன்னு கவலைப்படாமல், முழுக் கவனத்தோடு பந்து வீசினால்... நிச்சயம் விக்கெட் தெறிக்கும். சாம்பியன்ஸ் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் விக்டோரியா அணிக்கும் இடையிலான போட்டி டை ஆகி சூப்பர் ஓவர் ஸ்டேஜ். ரெண்டு அணிகளும் தலா ஒரு ஓவர் வீசணும். அதில் யார் அதிக ரன் ஸ்கோர் பண்றாங்களோ... அவங்க வின்னர். 'சூப்பர் ஓவர்... யார் பந்து வீசப்போறீங்க?'ன்னு டோனி கேட்டார். சீனியர், சூப்பர் சீனியர்களே 'நான் பௌல் பண்றேன்'னு கை தூக்கலை. ஆனா, நான் தைரியமா கை தூக்கினேன். அந்த ஓவர்ல மட்டும் மூணு சிக்ஸர் பறந்துச்சு. தோத்துட்டோம். ஆனாலும், சவாலை எதிர்கொள்ளும் என் துணிச்சலில் இம்ப்ரெஸ் ஆகித்தான் அடுத்தடுத்த போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் டோனி. ஆறு போட்டிகளில் 13 விக்கெட், 'கோல்டன் விக்கெட்' விருது, சூப்பர் ஓவரில் எப்படி பௌல் பண்ணக் கூடாதுங்கிற அனுபவம், டோனியோட 'குட் புக்'ல என் பெயர். இவ்வளவு நல்ல விஷயங்களை, அந்த சவாலை எதிர்கொள்ளப் பயந்து இருந்தா... நான் இழந்திருப்பேன்!"

"இலங்கைக்கு எதிரா பவுண்டரி, சிக்ஸர்னு பேட்டிங்கிலும் கலக்குனீங்களே... எப்படி?"
 
"ஓப்பனிங் பேட்ஸ்மேனாகத்தான் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சேன். அப்புறம் அப்படியே ஃபாஸ்ட் பௌலிங் ட்ரை பண்ணேன். என் பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம்தான் என்னை சுழற்பந்து பக்கம் சுழற்றினார். அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பேட்டிங்கையும் ஒரு கை பார்க்க வேண்டியதுதான்!"

"ட்வென்ட்டி:20 கிரிக்கெட்டில் சுழற்பந்துக்கு எதிர்காலம் இருக்கும்னு நினைக்குறீங்களா?"

"நிச்சயமா இருக்கும்! ட்வென்ட்டி:20 கிரிக்கெட் ரெக்கார்டில், சுழற்பந்து வீச்சாளர்கள்தான் அதிக விக்கெட் வீழ்த்தி இருப்பாங்க. அதிகமா அடி வாங்கினாலும்... அதிக விக்கெட்டுகளைச் சாய்க்குறதும் ஸ்பின்னர்ஸ்தான்!" 

"அது என்ன கேரம் பால்?"

"சென்னை தி.நகர் சோமசுந்தரம் கிரவுண்டுக்குப் போனீங்கன்னா, அங்க நிறையப் பசங்க ஜஸ்ட் லைக் தட் கேரம் பால் போட்டு விளையாடுவாங்க. கட்டை விரலையும் நடுவிரலையும் பயன்படுத்தி, கேரம்போர்டுல ஸ்ட்ரைக்கர் அடிக்கிற மாதிரி, வேகமா பந்தை ரிலீஸ் பண்றதுக்குப் பெயர்தான் கேரம் பால். டென்னிஸ் பால்ல சுலபமா கேரம் பால் போடலாம். ஆனா, கிரிக்கெட் பால்ல கொஞ்சம் கஷ்டம். ரொம்பவே பயிற்சி வேணும். இலங்கை அணியின் அஜெந்தா மெண்டிஸும் இந்த ஸ்டைலில் பௌல் பண்ணுவார்!"

"உயரமாக இருப்பது ஸ்பின் பௌலிங்குக்கு உதவியா இருக்குமா?"

"கிரிக்கெட்ல உயரமாக இருப்பது எல்லா விதங்களிலும் நல்லது. உயரமாக இருப்பதால், பந்தை நல்லா பவுன்ஸ் பண்ணவைக்கலாம். யார்க்கர், லெக் பிரேக்லாம் ரொம்பக் கச்சிதமா பௌல் பண்ணலாம்!"

"உங்க குடும்பம்பத்தி சொல்லுங்க?"

"ரொம்பவே மிடில் கிளாஸ் குடும்பம். அப்பா ரவிச்சந்திரன் கிரிக்கெட் ப்ளேயர் ஆகணும்னு ஆசைப்பட்டவர். ஆனால், பெரிய அளவில் முத்திரை பதிக்க முடியலை. அவர் விட்ட இடத்தை நான் பிடிக்கணும்னு என்னை கிரிக் கெட்டர் ஆக்கிட்டார். அப்பாவுக்கு ரயில்வே வேலை. அம்மா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாங்க. என் தாத்தா அவரோட சைக்கிள்ல என்னை கோச்சிங் அழைச்சுட்டுப் போவார். ரொம்ப சந்தோஷமான குடும்பம்!" 
 
"உங்க லட்சியம்?"
"இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்கணும். அதில் என் பங்கும் அதிகமா இருக்கணும்!"

Friday, October 29, 2010

'விண்ணைத் தாண்டி வருவாயா'

ஒரு காதல் படம் என்பது, பாடல்களிலும் , 'ஐ லவ் யு' சொல்வதிலும் மட்டும் இல்லை. அப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், காதல் ததும்பி வழியவேண்டும். படத்தின் ஒவ்வொரு அணுவிலும், நமது வாழ்வில் நாம் அனுபவித்த காதல் நிமிடங்களை நமது உள்ளத்தின் அடியாழத்திலிருந்து தோண்டியெடுத்து, மூளையில் ஒரு மாற்றத்தைப் புரிய வேண்டும். படம் பார்த்து முடிகையில் , நமது இழந்த அல்லது தற்போதைய காதலின் சிறந்த நிமிடங்கள், கண்களில் பெருகி வழிய வேண்டும். இன்னும் நிறைய உணர்ச்சிகளின் கலவையாய் நாம் மாறிவிட வேண்டும். இவையெல்லாமும் எனக்கு நடந்த ஒரு படமே 'விண்ணைத் தாண்டி வருவாயா'. சிம்புவின் கை விதை மற்றும் பஞ்ச் டயலாக் இல்லை, த்ரிஷா உதடு சுளிக்கும் நடிப்பு இல்லை.


உனக்கு 22 வயது எனக்கு 23 வயது...
உனக்கு சினிமா எடுப்பது லட்சியம் எனக்கு சினிமா பார்ப்பதே பாவம்...
நீ இந்து பையன்... நான் கிருஸ்துவ பெண்
என்றெல்லாம் த்ரிஷா ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அத்தனைக்கும் சிம்புவின் பதில், ஐ லவ் யூ என்பதாக இருக்கிறது!

அத்தகைய குழப்பங்களில் அறிவுரை (!) கூறி காதலை வளர்க்கிறார் கேமராமேன் நண்பர். இப்படியாக ஜெஸ்ஸியின் மேல் கிரேஸியாய் அலைகிறான் கார்த்திக். ஜெஸ்ஸி தன்னைத் தம்பியென சொல்லும் தருணத்தில் பயந்து போய் “I am in Love with you" என்கிறார் ஹீரோ..


த்ரிஷா பத்து நாட்கள் விடுமுறைக்கு ஆலப்பே போயிருப்பதாக சொல்கிறாள் தங்கை... “அவனவன் காதலியைத் தேடி அமெரிக்காவுக்கே போறான். ஆலப்பே தானே” என ஆலப்பேக்குக் கேமராமேன் நண்பருடன் பயணமாகிறான் கார்த்திக். நான்கு நாட்கள் தேடி ஜெஸ்ஸியை சந்திக்கிறான். காதலை சொன்னதற்கான மன்னிப்புக் கேட்பதற்காக வந்ததாக சொல்லி, நட்பாகக் கைகோர்க்கின்றனர் இருவரும். சென்னை திரும்பியதும் மீண்டும் தடுமாற்றம் கொஞ்சம் பயம் என படம் மெதுவாக செல்கிறது. வழக்கமான தமிழ் சினிமா முடிச்சுகளுடன் படம் நகர்கிறது. துணை இயக்குனராக முயற்சிக்கும் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பிற்காக கோவா செல்கிறார். அங்கு மீண்டும் சிறிய குழப்பம் அதை சார்ந்த முடிவான இறுதிக் காட்சிகளில் எதிர்பாராத,ஏங்க வைக்கும் திருப்பம். ( DVD இல்லை தியேட்டர்ல போயி பாருங்க.)‘உன் கண்ணாலேயே என்னை யாரும் பார்க்கலை போல இருக்கு’ என்பது போன்ற வசனங்களில் கௌதம் மேனனின் பேனாவில் காதல் வழிகிறது.படத்தில் பாடல்களும்,பின்னணி இசையும் ஹீரோ சிம்புவையும்,கதாநாயகி த்ரிஷாவையும் பின் தள்ளி விடுகின்றன.மன்னிப்பாயா தான் படத்தின் பாடல்களின் ஹைலைட்.உருகவைக்கிறது. ஆனாலும் வி.தா.வ பல காட்சிகள் நகரும் தன்மை மணிரத்தினத்தின் படம் பார்க்கும் உணர்வைத் தருவது நெருடலாக இருக்கிறது..'விண்ணைத் தாண்டி வருவாயா' - Lovable Movie


Wednesday, October 27, 2010

கே.ஆர். ஸ்ரீதர் - Blue Box

 Blue Box  - K.R. Sridhar
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?


திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,


அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.


இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.


கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.


சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.


ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.

இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.


இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

 ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆக்டோபஸ் "பால்' மரணம்

உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, ஜெர்மனி விளையாடிய போட்டிகளின் முடிவுகளை துல்லியமாக ஆரூடம் கூறி, ரசிகர்களின் அன்பைப் பெற்ற, ஆக்டோபஸ் "பால்' நேற்று மரணம் அடைந்தது.

ஜெர்மனி கடல் வாழ் உயிரின அருங்காட்சியகத்தில் இருந்து வந்தது "பால்' என்ற ஆக்டோபஸ். இது கடந்த 2008 ஜனவரியில் இங்கிலாந்தில் பிறந்தது. இதை வைத்து கால்பந்து போட்டிகளின் முடிவுகளை முன்னதாகவே கணித்து வந்தனர். அதாவது போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளின் தேசிய கோடியுடன், இதற்கான உணவும் அடங்கிய இரண்டு பெட்டிகள், பெரிய பிளாஸ்டிக் பெட்டிக்குள் வைக்கப்படும். ஆக்டோபஸ் எந்த பெட்டியின் மீது அமருகின்றதோ, அந்த அணி போட்டியில் வெல்லும் என நம்பினர்.துல்லியமான கணிப்பு: கடந்த பிபா உலக கோப்பை தொடரில், பால் ஆக்டோபஸ் கணித்த முடிவுகள் 100 சதவீதம் சரியாக இருந்தது. இத்தொடரில் ஜெர்மனி அணியின் அனைத்து முடிவுகளும் ஆக்டோபசின் கணிப்புபடி சரியாக இருந்தது. பைனலில் ஸ்பெயின் கோப்பை வெல்லும் என்று சொன்னதும், அப்படியே நடந்தது. இதையடுத்து ஸ்பெயினில் இதற்கு ஆதரவு பெருகியது. இதை எப்படியும் ஸ்பெயினுக்கு கொண்டு செல்ல நூற்றுக்கும் அதிகமானோர் முயற்சித்தனர். ஆனால் ஜெர்மனி மறுத்துவிட்டது. கடந்த 2008ல் நடந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரின் போது, ஜெர்மனி விளையாடிய அனைத்து போட்டிகளின் முடிவையும், பால் முன்னதாகவே சரியாக கணித்தது. ஆனால் குரோஷியாவுக்கு எதிரான லீக் மற்றும் பைனலில் ஸ்பெயினுக்கு எதிராக ஜெர்மனி வெல்லும் என கணித்தது பொய்யானது.உலக கோப்பை தொடருக்குப் பின் கடந்த ஜூலை 12 முதல், இதுபோல ஆரூடம் சொல்வதில் இருந்து, பால் ஓய்வுபெற்று விட்டதாக இதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர் .

இதனிடையே பால் ஆக்டோபஸ், நேற்று மரணம் அடைந்தது. இதுகுறித்து ஜெர்மனியின் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தின் மானேஜர் ஸ்டெபான் பார்வொல் கூறுகையில்,"" பால் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. நேற்று முன்தினம் இரவு நன்றாக இருந்தது. பின் நேற்று காலையில் பார்த்த போது இறந்து கிடந்தது. தூங்கிக் கொண்டிருந்த போது, பால் இயற்கை மரணம் அடைந்துள்ளது. இதை எங்கு அடக்கம் செய்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை,'' என்றார். 


Tuesday, October 26, 2010

எந்திரன் உன் அல்டிமேட் படமா..? இல்லை.. -- உண்மையை சொல்கிறார் ரஜினி

டைரக்டர்கள் யூனியன் சார்பாக நடந்த விழாவில் ரஜினியை கே.பாலசந்தர் பேட்டி எடுத்ததுதான் ஹைலைட். வேதனை என்னவென்றால் இந்த பேட்டி எடுக்கப்படும் போது இரவு பதினொரு மணியை தாண்டியிருந்தது. பலரும் வீட்டுக்கு கிளம்பியிருந்தார்கள். விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றாலும், அதற்கு முன் இந்த கேள்வியும் பதிலும் உலகம் முழுக்க பரவிவிட்டதுதான் ஆச்சர்யம். 

திரும்பவும் சிவாஜிராவாக மாற முடியுமா உன்னால்..?
இப்பவே அப்படித்தான் இருக்கேன்..

புகழ் உச்சிக்குப் போனாலும் இதனால உன்னோட பிரைவசி போயிருச்சேன்னு உனக்கு வருத்தம் உண்டா..?
இருக்கு.

உன்னோட புகழால பிரைவஸியைவிட வேற எதையாவது இழந்துட்டியா..?
இப்ப சூழ்நிலைக் கைதி மாதிரிதான் இருக்கேன்.

உன்னோட வாழ்க்கைக் கதையை நீயே எழுதுவியா..?
ஆட்டோ பயோகிராபின்னா நிச்சயம் நிறைய உண்மைகளை எழுதணும்.. வேணும்ணா உங்ககிட்ட சொல்லி எழுதுவேன்..

உண்மையை எழுதறதால உனக்கு பயமா இருக்கா..?
ஜாஸ்தியா இருக்கு..

உன்னை இந்த அளவுக்குப் புகழ் உச்சில கொண்டு போய் வைச்சிருக்கிற இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு நீ என்ன செய்யப் போற..?
பெருமைப்படற அளவுக்கு அவங்களுக்கு ஏதாவது செய்யணும். நிச்சயம் செய்வேன்.

நிறைய சினிமாக்களைப் பார்க்கும்போது இதை நாம பண்ணியிருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைச்சிருப்பியே.. அது மாதிரியான படங்கள் எது..?
நிறைய படங்கள்.. பெயர் வேண்டாமே..

நீ ஒன் மேன் ஆர்மி மாதிரி. நீயே ஒரு படம் டைரக்ட் செஞ்சா என்ன..?
அது ஒரு பெரிய பொறுப்பு. என்னால செய்ய முடியுமான்னு தெரியலை.. யோசிக்கணும்.. இப்போதைக்கு முடியாதுன்னுதான் நினைக்கிறேன்.

ஒருவேளை அப்படி நீ படம் எடுத்தா என்னை அஸிஸ்டெண்ட்டா சேர்த்துக்குவியா..?
சிரிப்பு

நீ இதுவரைக்கும் மொத்தமா எத்தனை படத்துல நடிச்சிருக்க..?
௧௫௪

50 வருஷம் கழிச்சு உன்னோட படத்துல எந்தப் படத்தை ரீமேக் செய்யலாம்னு நினைக்கிற..?
ராகவேந்திரா.. பாட்சா, எந்திரன்..

இதுல என் படத்தை ஏன் சொல்ல மாட்டேன்ற..?
சிரிப்பு..

அமிதாப்பச்சன் செஞ்ச 'சீனி கம்' மாதிரி கதையம்சம் உள்ள படத்துல நடிப்பியா..?
அது மாதிரி நமக்கு செட்டாகாது. கமலுக்குத்தான்..

தேசிய விருது வாங்கலையேன்னு உனக்கு இப்பவும் வருத்தம் இருக்கா? இல்லியா..?
இருக்கு.. அது மாதிரி நல்ல கதையோட டைரக்டர்ஸ் அமையலை.. இனிமே நீங்க பண்ணினாத்தான்..

நான் உன்னை வைச்சு இனிமே படமே பண்ண முடியாதுப்பா. நீ எங்கயோ போயிட்ட.. சரி அதை விடு. என்னோட நாடகத்துல நடிப்பியா..?
கண்டிப்பா..
என்னோட மேஜர் சந்திரகாந்த் நாடகத்தைத் திருப்பிப் போடப் போறேன். ஏப்ரல்-15 வைச்சுக்கலாமா? ரெண்டு நாள் மட்டும் டேட் கொடு. போதும்..
சரி..

கமல் என்னை நடிக்க வைச்சு டைரக்ட் பண்றேன்னு சொல்றாரு. ஆனா நீ ஏன் அது மாதிரி சொல்ல மாட்டேன்ற..?
செஞ்சா சொல்றேன்..

ரஜினிகாந்த்ன்னு உனக்கு என்னிக்கு பேர் வைச்சேன்னு ஞாபகம் இருக்கா..?
ஹோலிப் பண்டிகை அன்னிக்கு..
அப்போவெல்லாம் ஒவ்வொரு வருஷமும் ஹோலிப் பண்டிகைக்கும் இந்தப் பேர் வைச்சதை ஞாபகம் வைச்சிருந்து என்னைப் பார்க்க வருவ.. கொஞ்ச வருஷம் வந்துக்கிட்டிருந்த.. அப்புறம் வர்றதில்லை.. மறந்துட்டியேப்பா..
இனிமேல் நடக்காது. கண்டிப்பா வருவேன்.

ஆனா, எனக்கு ஹோலிப் பண்டிகைன்னாலே உன் ஞாபகம்தான் வரும்.. ஓகே..
என் படத்துல நடிக்கும்போது ஏண்டா, இவன்கிட்ட மாட்டிக்கிட்டோம்ன்னு என்னிக்காவது நினைச்சிருக்கியா..?
நிறைய தடவை..

நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணினதே 5 படம்தான் இருக்கும். அதுக்குள்ளயே நிறைய தடவை யோசிச்சுட்டியா..?
சிரிப்பு
உனக்கு ஞாபகம் இருக்கா.. 'தில்லுமுல்லு' படத்துல நடிக்க உன்னைக் கூப்பிட்டப்போ “உன்னால காமெடி செய்ய முடியும். தைரியமா செய்”யுன்னு நான்தான் அழுத்தி, அழுத்திச் சொன்னேன்.
ஆமாமாம்..

நீதான் ரொம்ப பயந்த.. ஏன்னா மீசையை எடுக்கணுமேன்னு..!?
சிரிப்பு

'அவர்கள்' ஷூட்டிங் சமயத்துல உன்னை கண்டபடி திட்டிட்டேன். கோச்சுக்கிட்டு வெளில போயிட்டேன். நீ மறக்கலியே..?
இல்லை..

பஸ் கண்டக்டரா இருக்கும்போது யாரையாவது லவ் பண்ணியிருக்கியா..?
அப்புறமா சொல்றேன்..

எந்திரன் உன் அல்டிமேட் படமா..?
இல்லை..

நான் எந்திரன் படத்தை 2 தடவை பார்த்தேன். உனக்காகத்தான்.. நீ என் படத்தை என்னிக்காச்சும் 2 தடவை பார்த்திருக்கியா..?
நிறைய பார்த்திருக்கேன்.. 

எந்திரன் படத்தை முடிச்சிட்ட..? மகளுக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சிட்ட.. இப்ப உன்னோட அடுத்தக் கவலை என்ன..?
எதைப் பத்தியும் நினைக்கலை..

இப்போ என்கிட்ட என்ன எதிர்பார்க்குற..?
இந்தக் கேள்வி பதில் எப்போ முடியும்..?

உனக்குப் புடிச்ச சூப்பர் ஸ்டார்.. எந்தத் துறையில வேண்டுமானாலும் இருக்கலாம்..
சிங்கப்பூர் முன்னாள் பிரைம் மினிஸ்டர் லீ க்வான் யூ..

கவிதை எழுத ஆசை இருக்கா உனக்கு?
இருக்கு.

அதற்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா..?
இல்லை.

இவர் போல் இல்லையேன்னு நீ யாரையாவது பார்த்து நினைச்சிருக்கியா..?
நிறைய பேர்..

வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப்பட்டிருக்கியா?
இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப்பட்டிருக்கிறேன்.

உனக்குச் சின்னச் சின்ன ஆசைகள் உண்டா..?
உண்டு..

இப்பவும் சிகரெட் பிடிப்பியா..?
நிறைய..

விடுறா.. நீ விட்டீன்னா நாட்ல நிறைய பேர் விட்ருவாங்க. உனக்கே தெரியும் நான் பாக்கெட், பாக்கெட்டா எத்தனை ஊதியிருக்கேன்னு. நானும் ஒரு நாள் விட்டேன். நீயும் விட்ரு என்ன..?
ட்ரை பண்றேன்..

உனக்குப் பிடித்த தமிழ் இயக்குநர் யார்?
மகேந்திரன்..

உனக்குப் பிடித்த புத்தகம் எது?
பொன்னியின் செல்வன்..

குடும்பத்தோடு நீ சென்று வந்த பிக்னிக் ஸ்பாட்..?
லண்டன்..

நீ மட்டும் தனியா போயிட்டு வந்த இடம்.. இமயமலையைத் தவிர..?
நேபாளம்..
அதுவே கிட்டத்தட்ட இமயமலைதான்.. சரி விடு.. 

உனக்குப் பிடித்த உணவு எது?
சிக்கன்.
யார்கிட்ட சொல்றான் பாருங்க. என்கிட்ட.. ஏதாவது வெஜ் அயிட்டம் சொன்னீன்னா நான் அதை பாலோ பண்ணலாம்னு நினைச்சேன்.. 

உன்னோட பெஸ்ட் பிரெண்டு யாரு..?
ராவ்பகதூர்..

ஏற்கெனவே சொல்லியிருக்க.. சரி.. உன்னோட பேவரிட்டான வண்டி..
ஜாவா மோட்டார் பைக்..

நீ இப்பவும் நினைச்சுப் பார்த்து சந்தோஷப்படுற நாள்..?
கே.பி. ஸார் என்னை அவர் படத்துல புக் செஞ்ச நாள்..

நீ இப்பவும் நினைச்சு துக்கப்படுற நாள்..?
எங்கப்பா செத்த நாள்..

நீ மறக்காம வைச்சிருக்கிறது..?
முள்ளும் மலரும் படம் பார்த்துட்டு நீங்க எனக்கு எழுதின லெட்டர்..

உன்னை ரொம்ப அவமதிப்பு செஞ்ச விஷயம்..?
வேண்டாமே..

உன்கிட்டயே உனக்குப் பிடிக்காதது..?
என்கிட்ட எனக்குப் பிடிக்காதது எது..?(யோசனை)

என்கிட்ட உனக்குப் பிடிக்காதது எது..?
உங்க கோபம்..

சரி.. என்கிட்ட மட்டுமாச்சும் ரகசியமா சொல்லு.. அரசியலுக்கு நீ வருவியா? மாட்டியா..?
மேலே கைகளைத் தூக்கிக் காண்பித்தார்.

இப்ப நீ ஏதாவது சொல்றதா இருந்தா சொல்லிக்க..!
நோ கமெண்ட்ஸ்..


Monday, October 25, 2010

சென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணி ..

சென்னை சர்வதேச விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணி இவ்வாண்டு செட்பம்பர் மாதம் முடிய 58 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்தை ரூ.1808 கோடி செலவில் மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கும் திட்டத்திற்கு 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. 

இந்தப் பணிகளில் இவ்வாண்டு செப்டம்பர் முடிய 58 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது. 

இத்திட்டமானது 67,700 சதுர மீட்டர் பரப்பில் புதிய உள்நாட்டு முனைய கட்டிடம் கட்டுதல், 59,300 சதுர மீட்டர் பரப்பில் தற்போதைய அண்ணா சர்வதேச முனையத்தை விரிவுபடுத்துதல், அடையாறு ஆற்றின் குறுக்கே 1032 மீட்டர்களுக்கு செகண்டரி ஓடுபாதையை விரிவாக்குதல், இணையான டாக்சி-பாதையை கட்டுதல் மற்றும் 10 நிறுத்தும் இடங்களை அமைத்தல் ஆகிய பணிகளைக் கொண்டதாகும். 

ரூ.1273 கோடி செலவில் முனையக் கட்டிடத்தை கட்டும் முக்கிய பணியானது 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. இந்தப் பணியை செய்து முடிப்பதற்கான உத்தேச காலம் அடுத்த ஆண்டு மே மாதம் ஆகும். டாக்கி பாதை விரிவாக்கம் மற்றும் நிறுத்தும் இடங்களைக் கட்டுகின்ற பணிகளை முடிப்பதற்கான உத்தேச காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆகும்.

இந்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டதும் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் 90 லட்சத்தில் இருந்து 2.30 கோடியாக அதிகரிக்கும்.
முனையக் கட்டிடமானது நகரம் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், நடைபாலங்கள், அடுக்குமாடி கொண்ட கார் நிறுத்தும் இடங்கள் போன்ற அதிநவீன வசதிகளுடன் நவீன வடிவமைப்பு கொண்டதாக இருக்கும். இந்த புதிய முனையக் கட்டிடத்திற்கு மெட்ரோ ரயில் சேவை இணைப்பும் இருக்கும். இந்த திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.2015 கோடியாக மாற்றப்பட்டுள்ளது.


சர்வதேச வெல்டிங் நிறுவன தலைவராக முதன் முறையாக இந்திய விஞ்ஞானி தேர்வு
 
 சர்வதேச வெல்டிங் நிறுவனத்தின் (International Institute of Welding - IIW) தலைவராக முதன் முறையாக ஓர் இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரும், விஞ்ஞானியுமான டாக்டர் பல்தேவ் ராஜ், சர்வதேச வெல்டிங் நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், அடுத்த ஆண்டு முதல் 2014 வரை இந்தப் பதவியில் இருப்பார். 

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச வெல்டிங் நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தில் டாக்டர் பல்தேவ் ராஜ் தேர்வு செய்யப்பட்டார். 

சர்வதேச வெல்டிங் நிறுவனத்தில் இந்தியாவையும் சேர்த்து 55 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த நிறுவனம் 1948-ல் பிரான்சில் துவக்கப்பட்டது. 

வெல்டிங் துறையில் நவீன தொழில்நுட்பத்தை கண்டறிவது, உருவாக்குவது, மேம்படுத்துவது, பிற நாடுகளுக்கு அளிப்பது ஆகிய நோக்கங்களுக்காக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. 

வெல்டிங் தொழில் துறையில் பாதுகாப்பான சிறந்த செய்முறைகளை மதிப்பிடுவது மற்றும் பரிந்துரைக்கும் பணியையும் இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. 

வெல்டிங் துறையில் சர்வதேச அளவில் நிபுணராக விளங்கும் டாக்டர் பல்தேவ் ராஜ் இப்புதிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இந்திய வெல்டிங் துறையின் செயல் திறனுக்கு ஓர் அங்கீகாரமாகும். 

அடுத்த ஆண்டு ஜூலையில் சர்வதேச வெல்டிங் நிறுவனத்தின் 64-வது, வருடாந்திர கூட்டம் முதன் முறையாக இந்தியாவில், சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் டாக்டர் பல்தேவ் ராஜ் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். 

உலக டெஸ்ட் லெவன் அணியில் சச்சின்!
 
உலக டெஸ்ட் லெவன் அணியில் இந்தியாவிலிருந்து சச்சின் டெண்டுல்கர் மட்டும் இடம்பெற்றுள்ளார். 

இஎஸ்பிஎன் - கிரிக்இன்போ வலைத்தளம் ஆகச் சிறந்த வீரர்கள் அடங்கிய உலக டெஸ்ட் லெவன் அணியின் பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. 

இந்த அணியில் இந்தியாவிலிருந்து சச்சின் டெண்டுல்கர் மட்டும் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் வெஸ்ட்இண்டீசை சேர்ந்த 3 வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். 

பிராட்மேன், கேரி சோபர்ஸ் மற்றும்ஷேன் வார்னே ஆகிய 3 வீரர்கள் இந்த அணியில் கட்டாயம் இடம்பெற வேண்டிய வீரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சமகால கிரிக்கெட் வீரர்களில் சச்சின் மற்றும் வார்னே தவிர கில்கிறிஸ்ட், அக்ரம் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 

அணியின் விவரம் வருமாறு:
ஜேக் ஹாப்ஸ், லின் ஹட்டன், பிராட்மேன், டெண்டுல்கர், ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், கில்கிறிஸ்ட், மார்ஷல், வார்னே, அக்ரம், டென்னிஸ் லில்லி.
 

 

Sunday, October 24, 2010

ஆர்.ஜி!

 ர்.ஜி! - ராகுலை நெருக்கமாக நண்பர்கள் வட்டாரம் அழைப்பது இப்படித்தான்! 

'எங்கள் கட்சியின் எதிர் காலமே இந்த இளைஞனை நம்பித்தான் இருக்கிறது' என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால், ராகுல் வெட்கப்பட்டுச் சிரிக்கிறார். "என்னை இளைஞன் என்று சொல்லாதீர்கள். இந்தியாவின் மக்கள் தொகையை வயது அடிப்படையில் கணக்கிட்டால், நான் வயதானவன். எனக்கு 40 வயது ஆகிறது" என்று மறைக்காமல் சொல்லும் உண்மை விளம்பியாகவும் இருக்கிறார்.

"நீங்கள் பிரதமராக முடியுமா?" என்று கேட்டால், "வருங்காலத்தைப்பற்றி யாரால் என்ன சொல்ல முடியும்?" என்பது ராகுலின் சமாளிப்பு. "பிரதமராக ஆவது உங்களது தலைவிதியாக இருந்தால்..." என்று தொடர்ந்தால், "தலைவிதியில் எனக்கு நம்பிக்கை இல்லை. தலைவிதி என்பது பழமைவாதிகளின் கூற்று. கடின உழைப்பில்தான் எனக்கு நம் பிக்கை உள்ளது" எனத் தீர்க்கமான பதில்!

அது உண்மைதான். மாதத்தில் மூன்று வாரங்கள், இந்தியாவின் ஏதாவது ஓர் ஊரில் புழுதி படிந்த மக்களுடனோ அல்லது மாணவர் கூட்டத்துடனோ உரையாடிக்கொண்டே இருக்கிறார் ராகுல் காந்தி. "பரந்து விரிந்த இந்த தேசத்தின் எந்தப் பகுதியையும் பார்க்காமல், நான் எப்படி இந்த நாட்டுக்காகப் பாடுபடுவதாகச் சொல்ல முடியும்?"- என்பது ராகுலின் விளக்கம். மகாத்மா காந்தியின் எழுத்துக்களில் இருந்துதான் ராகுல் இந்த வழியைத் தேர்ந்து 
எடுத்தாராம்.


"தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த காந்தி, தனது குருவான கோபாலகிருஷ்ண கோகலேவைச் சந்தித்தார். 'நீ இந்தியாவை முதலில் சுற்றிப் பார். அதற்குப் பிறகு, தீவிர அரசியலில் இறங்கு' என்றாராம் கோகலே. காந்தி அதன் பிறகுதான் இந்தியாவை வலம் வர ஆரம்பித்தாராம். இதையே, தனது பாணியாகவும் எடுத்துக்கொண்டார் ராகுல். சோனியா தனது மகனைப் பார்க்கக்கூட பல நாட்கள் காத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு சுற்றுப்பயணத்திலேயே இருக்கும் ராகுலுக்கு, தங்கை பிரியங்கா என்றால் பாசம் அதிகம். அநேகமாக, தினமும் பிரியங்காவுடன் போனில் பேசுவதைப் பழக்கமாக வைத்து இருக்கிறார். "எனது சகோதரியைவிட எனக்கு நெருக்கமானவர் யாரும் இல்லை" என்று சொல்லும் அளவு பந்தம்.

ராகுல் காந்தியின் பயணங்கள் அனைத்தும் கடைசி நிமிடங்கள் வரை ரகசியமாக வைக்கப்படுகின்றன. மூன்று நாட்களுக்கு முன்னதாகத்தான் விளம்பரமே செய்ய வேண்டும் என்பது இவர் கட்டளை. இந்தப் பயணங்களை, எண் 12, துக்ளக் லேன் சாலையில் உள்ள ராகுலின் அலுவலகத்தில்தான் திட்டமிடுகிறார்கள். இங்குதான் ராகுலின் ப்ரைம் டீம் என்று சொல்லப்படும் ஒரு டஜன் ஆட்கள் இருக்கிறார்கள். பவன் ஜிதேந்திர சின்கா, பங்கஜ் சங்கர், ஜித்தின் பிரசாதா, மீனாட்சி நடராஜன் ஆகியவர்கள் இதில் முக்கியமானவர்கள். இந்திய அரசியல் வரலாறு, இயற்கை வளம் முதல் இன்றைய வறட்சி நிலைமை வரை அத்தனை தகவல்களையும் முழுமையாகத் தொகுத்துவைத்திருக்கும் இவர்கள்தான், ராகுலுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். தனக்குத் தெரிய வரும் ஒரு வரிச் செய்தியைப்பற்றிய முழு விவரங்களையும் இவர்களிடம் இருந்து கேட்டுப் பெறுகிறார் ராகுல். 

"இந்தியாவைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது ராகுலின் ஒரு வரிக் கொள்கை. அதற்கு, இந்திய அரசியல் தூய்மை பெற வேண்டும். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தூய்மை பெற வேண்டும். இந்த அடிப்படையில் இளைஞர் காங்கிரஸை ராகுல் கையில் எடுத்திருக்கிறார். அவரால் உருவாக்கப்படும் இந்த இளைஞர்கள்தான் அடுத்த 15 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் கட்சியை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள். இன்று ராகுலால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களது கையில் கட்சி சென்றால், நிர்வாகம் தூய்மையாகவே இருக்கும். அதை நோக்கியதாக இருக்கிறது ராகுலின் பயணங்கள்" 

தனக்கு வசதியானவரைத் தலைவராக நியமித்துக்கொள்வதுதான் காங்கிரஸின் நூற்றாண்டு கால வழக்கம். ராகுல் வந்ததும் முதலில் மாற்றியது இதைத்தான். "யாரையும் டெல்லியில் இருந்து நியமிக்க மாட்டோம். அப்பா கட்சியில் இருக்கிறார் என்பதற்காக, வாரிசுக்கு பதவியை வாரிக் கொடுக்கவும் மாட்டோம்" என்று ராகுல் அறிவித்தபோது, மூத்த காங்கிரஸ் தலைவர்கள்கூட, 'இது முடியாத காரியம், ஒன்றிரண்டு மாநிலங்களில் நடக்கும். அதற்குப் பிறகு அவ்வளவுதான்' என்றே நினைத்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்தியாவின் பாதி மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸுக்கு உறுப்பினர் கார்டு கொடுத்து, அதில் பாதி இடங்களுக்குத் தேர்தலும் நடத்தி, கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் வந்துவிட்டனர். "போலியான உறுப்பினர்கள் வந்துவிடக் கூடாது" என்று கட்டளையிட்ட ராகுல், அனைத்து உறுப்பினர்களது புகைப்படங்களையும் வாங்கினார். இதுவரை உறுப்பினரான 50 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் படங்களும், முகவரிகளும் அவரது டேட்டாவில் இருக்கின்றன. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முறைகேடுகள் செய்தவர்களை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பது ராகுலின் உத்தரவு. "சொந்தக் கட்சியில் ஒரு பதவியைப் பிடிக்கவே இவ்வளவு முறைகேடுகள் செய்தால், பணத்தைக் கையாளும் அதிகாரம் வாய்ந்த அரசுப் பதவிகளை அடைய இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?" என்று கேட்கிறாராம் ராகுல். 

பதவியைப் பிடித்தவர்களுக்கு, ஜவஹர்லால் நேரு தலைமைத் தகுதிக்கான பயிற்சி நிறுவனப் பொறுப்பாளர் ஜெயராமனை வைத்து பயிற்சி தரப்படுகிறது. தலைமைக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் முறைகள் சொல்லித் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சியின் கடைசி அரை மணி நேரம் மட்டும் ராகுல் வருகிறார். "தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். இனி, எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைக்காதீர்கள். சரியாக வேலை செய்யாதவர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுப்போம்" என்கிறார். கட்சி எல்லைகளைத் தாண்டி ராகுல் கவனிக்கப்படுவதற்கு ஒரே காரணம், தனது மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்கிறார் என்பதுதான். 

"எனக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அவர்கள், மக்களைக் கொல்கிறார்கள். மற்றபடி எங்களுக்குள் மாற்றுக் கருத்துக்கள் இல்லை" என்று ஒரிஸ்ஸாவில் உட்கார்ந்துகொண்டு சொன்னார். 

மும்பையில் மராட்டியர்கள் தவிர, மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்று சிவசேனா சொன்னபோது, 'அப்படியானால் மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடியது மற்ற மாநில இந்திய வீரர்களும் தானே? இந்தியர்கள் அனைவருக்கும் இந்தியா சொந்தம்' என்று சொல்லிவிட்டு, அந்தக் கொந்தளிப்பான சமயத்தில் மும்பைக்குப் போய் பாதுகாப்பற்ற நிலையில், மின்சார ரயிலில் பயணமும் செய்தார்.
"இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இஸ்லாமிய அமைப்பான சிமிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்றபோது, பாரதிய ஜனதாவுக்குத் தேள் கொட்டியதுபோல் ஆனது. 

"பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷை உருவாக்கியது எங்கள் குடும்பத்தின் சாதனை" என்று சொன்னதைக் கேட்டு, பாகிஸ்தான் பகீரென ஆனது. 

நம் ஊர் உதாரணமாக சொல்ல வேண்டுமானால், 'ரஜினி காங்கிரஸில் இணைவாரா?' என்ற கேள்விக்கு, 'அவர் என்ன கிரிமினலா? இதில் யாரும் இணையலாம்' என்றார்.

'நடிகர் விஜய் இளைஞர் காங்கிரஸில் இணையும் வயதைத் தாண்டிவிட்டார்' என்று கிண்டல் அடித்ததும் ராகுல்தான். பக்குவம் இல்லாத பேச்சு என்று பெரியவர்கள் கிண்டலடித்தாலும், இளைஞர்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது.

ஆர்.ஜி-யின் வளர்ச்சியும் அதில்தான் இருக்கிறது!

Friday, October 22, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?


அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள்

 நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
 
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.இன்

 
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்