Search This Blog

Monday, March 31, 2014

புது நிதியாண்டு

ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. புது நிதியாண்டில் நுழையப் போகிறோம். கடந்த ஆண்டில் நாம் செய்த தவறுகள் என்னென்ன? இந்த ஆண்டு நாம் செய்யவேண்டியது என்னென்ன என்று திட்டமிடும் காலம் இது.

கடந்த வருடம் முழுக்க, டாக்ஸை மிச்சப்படுத்தவேண்டுமே என்று அடித்துப்பிடித்து முதலீடு/இன்ஷூரன்ஸ் செய்தவர்கள் ரிலாக்ஸாகும் நேரம் இது. இந்தப் புது வருடத்திலாவது முதலில் இருந்தே நிதானமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்; அதிகப்படியான லாபத்தை அள்ளவேண்டும்; கடைசி நேரப் போராட்டமே வேண்டாம் என்று யோசிக்கிறீர்களா? குட், நல்ல மாற்றத்துக்கான அறிகுறி இது.

புது வருடம் ஆரம்பிக்கும்போது எல்லா கம்பெனிகளும் ஒரு திட்டத்தைப்போடும். அடுத்த ஆண்டு அடையவேண்டிய இலக்கு என்ன, இதற்குச் செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன, எவ்வளவு செலவாகும் என்று ஊழியர்களிடம் கேட்டு ஒரு திட்டம்போடும். நம் சொந்த வாழ்க்கைக்கும் ஏறக்குறைய இப்படித் திட்டமிடுவதுதான் நல்லது.

பணத்தைக் கையாளுவதில் எல்லோரும் செய்யும் பெரிய தவறு என்ன தெரியுமா? திட்டமிடாமல், யோசிக் காமல் சட்டென்று செலவு செய்வது தான். அப்படியே பட்ஜெட் என்ற ஒரு கணக்குபோட்டு வைத்திருந்தாலும்கூட, பட்ஜெட்டில் கணக்கிடப்படாத‌ ஒன்றுக்காக, 'இது நம் பட்ஜெட்டில் இல்லையே’ என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் செலவு செய்துவிடுவது.

யோசித்துப்பாருங்கள்! வீடு கட்டவேண்டும் என்கிற நீண்டநாள் கனவு உங்களுக்குக் கைகூடி வருகிறது. உங்கள் கனவு வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கொத்தனாரிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லி, எப்படி கட்டுவீர்கள் என்று ஒரு பிளான் போட்டுக் காட்ட முடியுமா எனக் கேட்கிறீர்கள். 'நீங்க சொன்னதெல்லாம் என் மனசுல இருக்கு. கவலையேபடாதீங்க. கச்சிதமா கட்டிக்குடுத்துடுறேன்'' எனக் கொத்தனார் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அவரிடம் வீடு கட்டும் வேலையைத் தருவீர்களா? நிச்சயம் தரமாட்டீர்கள். அவ்வளவு ஏன், ஒரு கைதேர்ந்த இன்ஜினீயரை வைத்து பிளான் போட்டு, வீடு கட்டும் போதே சில இடங்களில் இடிக்கிறதே! இப்படியிருக்க, வீட்டுக் கணக்கை மட்டும் வெறும் மனக்கணக்காக வைத்துச் செலவு செய்தால், அது சரிவருமா?

நம் வீட்டு நிதி நிர்வாகம்கூட நம் வீடு கட்டுகிறமாதிரிதான். சரியாகத் திட்டம்போட்டுப் படிப்படியாகக் கட்டினால்தான் ஒவ்வொரு கட்டமும் சிறப்பாக அமையும். ஆனால், நடப்பது என்ன? 'எல்லாம் என் மைண்டுல இருக்குது. எனக்குத் தெரியாததா என்னென்ன செலவு இருக்குன்னு, இதை எழுதிவேறப் பார்க்கணுமா? டைம் வேஸ்ட்’ என்று ஒதுக்கிவிடுகிறோம்.

திட்டம்போட்டு செலவு செய்யாமல், ஒவ்வொருநாளும் வரும் செலவுகளை அப்போதைக்கப்போது சமாளித்துக்கொண்டே போனால், ரிட்டையர்டாகி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, சரியாக பிளான் போடாமல் கட்டப்பட்ட வீடுபோல, அரைகுறையாக, பணம் கிடைக்கும்போதெல்லாம் கட்டப்பட்ட வீடுபோல நம் வாழ்க்கை அலங்கோலமாக இருக்கும்.

ஆனால், உங்கள் குடும்ப பட்ஜெட்டை கொஞ்சம் பிளான் செய்துகொள்வதன்மூலம் உங்கள் வாழ்க்கையை மிக அழகானதாக்கிக் கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா? இதோ உங்கள் புது நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் டிப்ஸ்:


பட்ஜெட் போடுவது கஷ்டப்பட அல்ல!  

பட்ஜெட் போடுவது ஈஸி இல்லை. அது குழப்பும் விஷயம். நேரம் பிடிக்கும். மூளையைக் கசக்கவேண்டும். அதைச் செய்வது வேஸ்ட். செலவு அதுபாட்டுக்கு வந்துகொண்டுதான் இருக்கும். சமாளிக்கவேண்டியதுதான்’ என்றே பலரும் நினைக்கிறார்கள்.

முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டியது, பட்ஜெட் என்பது உங்களைக் கட்டுப்படுத்துவதற்கோ, கஷ்டப்படுத்துவதற்கோ அல்ல! உங்களுக்குச் சுதந்திரம் தருவதற்குதான்! பட்ஜெட் என்பது உங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்க அல்ல, இன்னும் சிம்பிளாக்கத்தான்! வரவு, செலவு சட்டென்று புரிந்துவிட்டால் பயப்படாமல் ஃப்ரீயாகச் செயல்படலாம். தைரியமாக ஒவ்வொரு அடியாகவைக்கலாம் உங்கள் இலக்குகளை நோக்கி!

செலவு பற்றித் தெளிவு வேண்டும்! 

இதற்கு குறைந்தது ஒருமாதமேனும் செலவுக் கணக்கு எழுதிப்பார்த்தால்தான் செலவுகள் பற்றிய விவரங்களைத் துல்லியமாகப் படிக்க முடியும். உதாரணத்துக்கு, கணவர் அரிசி, பருப்பு வாங்கி வருகிறார் எனில் ஒருமாதத்துக்கு எத்தனை கிலோ அரிசி, பருப்பு செலவாகிறது என்று மனைவிக்குச் சொல்லமுடியாமல் போகலாம். காஸ் சிலிண்டர் எத்தனை நாளைக்கு வருகிறது என்று மனைவிக்குத் தெரியும். கணவருக்குக் குத்துமதிப்பாகத் தெரியலாம். அதனால் எந்தச் செலவையும் எழுதிப்பார்த்தால்தான் நமக்கு பல உண்மைகள் வெட்டவெளிச்சமாகும். கட்டாயம் சில மாதங்களுக்கு எழுதிப்பார்த்துவிட்டு பட்ஜெட் போட்டால், அட்டகாசமாக பட்ஜெட் தயாரித்துவிடலாம்.

இலக்குகள் பற்றித் தெரிய வேண்டும்! 

செலவுகள் பற்றித் தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நாம் அடையவேண்டிய இலக்குகளையும் தெரிந்துவைத்திருப்பது. வீடு கட்டுவது/வாங்குவது, குழந்தை களின் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கட்டணம், திருமணம் என்று நீண்டகால இலக்குகள், துணிமணி, பண்டிகைச் செலவு போன்ற குறைந்த கால இலக்குகள் அவற்றுக்கான உத்தேச செலவுகள் ஆகியவற்றை எழுதிவையுங்கள்.



ஒருவர் போடுவது பட்ஜெட் அல்ல! 

கணவர் மட்டும் போடும் பட்ஜெட் அல்லது மனைவி மட்டும் போடும் திட்டம் என்றுமே வெற்றி பெற்றதில்லை. இருவரும் இணைந்து கலந்துபேசி போடும் திட்டமே வெற்றி பெறும். வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் சேர்த்துகொண்டு பட்ஜெட் போடுங்கள். தேவை, மாத கடைசியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஹாயாக ஒரு மணி நேரம்தான். முதல்முறைதான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். போகப்போக வெறும் அரை மணியிலேயே அமர்க்களமாக பட்ஜெட் போட்டுவிடலாம்.

என்னதான் சொல்லுங்கள், பட்ஜெட் போடுவது கஷ்டமான வேலைதான் என்று நினைக்கிறீர்களா? அந்த வேலையை ஈஸியாகச் செய்துமுடிக்க மூன்று வழிகளைச் சொல்கிறேன், ஃபாலோ செய்துபாருங்கள்!

1. பட்ஜெட் போடுவதே 'முதல் வேலை’! 

பட்ஜெட் போட்டுப்பார்த்து அதன்படி செலவு செய்வேன் என்று முதலில் முடிவெடுங்கள்! வரவு என்ன, செலவு என்ன என்று ஒரு கணக்கு எழுத்தில் இருந்தால், பல விஷயங்கள் சட்டென்று தெரியவரும். இதற்காக சில மணி நேரம் செலவிடுவது ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. 'நம் அப்பா, தாத்தா காலத்தில் எல்லாம் பட்ஜெட் போட்டார்களா என்ன? அவங்களெல்லாம் கெட்டா போயிட்டாங்க? நல்லா வாழலையா?' என்று கேட்கிறீர்களா? அந்தக் காலத்தில் பணவீக்கம் இவ்வளவு இல்லை. விவசாயம் தழைத்த காலம் அது. நெல்மூட்டைகள் அடுக்கப்பட்ட வீடுகள்தான் அந்தக் காலத்தில் அதிகம்.

ஆனால், இந்தக் காலத்தில்? ரூ.500 எடுத்துக்கொண்டு கடைக்குப்போனால் பை நிறைய வாங்க முடியாது; கைநிறையத்தான் வாங்க முடியும். காலத்துக்கேற்ப மாறிக்கொள்வதே புத்திசாலித்தனம்.

இப்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பட்ஜெட் போட்டு வாழாவிட்டால் ரேஸில் பின்தங்கிவிடுவோம். அதுகூடப் பரவாயில்லை. எல்லாரும் நன்றாக வாழ்வதைப் பார்த்து மனதுக்குள் ஏங்குவோம். ஆகவே, பட்ஜெட் போட யோசிக்காதீர்கள். ஆக்ஷனில் இறங்கி, அதை முதல்வேலையாக்கிக் கொள்ளுங்கள்!

2. செலவு கணக்கை உடனடியாக எழுதுங்கள்! 

நோட்புத்தகமோ, கம்ப்யூட்டரோ செல்போனோ ஏதாவது ஒன்றில் உங்கள் செலவுகளை எழுதிவைக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். கைக்காசு எங்கே போகிறது என்று தெளிவாகத் தெரிந்தால்தான் பட்ஜெட் போடுவது வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்!

3. ஆட்டோ டெபிட் அவசியம்! 

நீங்கள் ரெகுலராகக் கட்டவேண்டிய தொகைகளான வீட்டுக் கடன், வண்டிக் கடன் கிரெடிட் கார்டு கட்டணங்கள், ஊருக்கு அனுப்பவேண்டிய பணம், போன் பில் ஆகியவற்றைக்கூட ஆட்டோமேட்டிக்காகக் கட்டுமாறு உங்கள் வங்கிக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் தந்துவிடலாம். இதனால் உரிய நேரத்தில் நீங்கள் செலுத்தவேண்டிய பணம்போய்ச் சேர்ந்துவிடும். இதனால் மனஉளைச்சல் மிச்சம், லேட் பேமன்ட் பெனால்டி மிச்சம் எனப் பல நன்மை கிடைக்கும்!

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து, பட்ஜெட் போட்டுப்பாருங்கள். இந்த நிதியாண்டின் இறுதியில் கணிசமான பணத்தை மிச்சம்பிடித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

தண்மதி திருவேங்கடம், இயக்குநர், யங்புல்ஸ் எஜுகேஷன், மும்பை. 





நரேந்திர மோடி: காத்திருக்கும் சில சவால்கள்!

மானியச் சுமை! 

எந்த ஒரு பொருளாதாரத்திலும் மானியம் என்பது கட்டாயம் தேவை. அப்போதுதான் சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் தொடர்ந்து அதை செய்ய முடியும். எனினும்,  இந்த மானியம் அளவுக்கு மிஞ்சி செல்லும்போது, அரசாங்கத்துக்கு அது ஒரு பெரிய சுமையாக மாறிவிடுகிறது.

உதாரணமாக, மக்களுக்கு மானிய விலையில் எரிபொருளை தருவதற்காக மத்திய அரசாங்கம் செலவு செய்யும் தொகை ஆண்டொன்றுக்கு 85,000 கோடி ரூபாய்; 2004-05-ல் 76,096 கோடி ரூபாயாக இருந்த விவசாய மானியம், 2010-2011-ல் 1,42,254 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதுபோக, உணவு பாதுகாப்புத் திட்டத்துக்காக வழங்கப்படும் மானியம் 75,000 கோடி ரூபாய் என மானியச் செலவு மட்டுமே ஓர் ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய்க்குமேல் செல்கிறது.


அரசின் இந்த மானியச் சுமையைக் குறைக்க வேண்டுமெனில், எதற்கு எவ்வளவு மானியம் தந்தால்போதும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு கண்டுபிடிக்கும் முறையை மோடி உருவாக்க வேண்டும். இன்றைக்கு விவசாயத்துக்கு தரப்படும் மானியமானது பணக்கார விவசாயிகளுக்கும், செயற்கை உரங்களைத் தயாரிக்கும் உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்குமே அதிகம் செல்கிறது.  டீசல் போன்ற எரிபொருட்களுக்குத் தரப்படும் மானியத்தினால், சாதாரண மக்கள் அடையும் நன்மையைவிட, அவற்றை அதிகம் பயன்படுத்தும் செல்வந்தர்களே நிறைய நன்மை பெறுகின்றனர்.

இந்த மானியத் தொகையைக் குறைத்தால், மக்களின் ஆதரவை மோடி இழக்கவேண்டியிருக்கும். குறைக்கவில்லை எனில், அரசு அந்தப் பாரத்தைச் சுமக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் மோடி என்ன செய்யப் போகிறார்?    

பல்வேறு சீர்திருத்தங்கள்! 

நம் பொருளாதாரம் 2000-க்குப் பிறகு அதிவேகமாக வளரக் காரணம், 1991-க்குப்பின் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களே! ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் எந்தச் சீர்திருத்தங்களும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.

தொழில் துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதன் மூலம் அந்நிய முதலீட்டை பெருமளவில் பெற முடியும். தொழிலாளர் பிரச்னையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம் இன்னும் அதிக நிறுவனங்களை தொழில் தொடங்கவைக்க முடியும். இன்ஷூரன்ஸ் துறையில், நிதித் துறையில், ரீடெயில் துறையில் எனப் பல துறைகளில் முக்கியமான பல சீர்திருத்தங்கள் கிடப்பிலேயே இருப்பதால், பொருளாதாரம் வளர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.  

இந்தச் சீர்திருத்தங்களை கொண்டுவர மோடி கடுமையான எதிர்ப்பை சந்திக்கவேண்டியிருக்கும். இந்த எதிர்ப்பை மோடி எப்படி சமாளிக்கப் போகிறார்?

ஊழல்! 

காங்கிரஸ் ஆட்சியின் முதல்பாதியில் பொருளாதார வளர்ச்சியானது ஓரளவுக்கு இருந்தாலும், அந்த ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட முக்கிய காரணம், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நடந்த பல ஊழல்கள்தான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்து, அதுகுறித்த வழக்கு இன்றளவும் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்து, இதுகுறித்து சிபிஐ இன்றும் விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரே அடிபட்டது பெரிய அதிர்ச்சி. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல், ஆதர்ஷ் வீடு கட்டித் தரும் திட்டத்தில் ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் எனக் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான ஊழல் தகவல்களே இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்படச் செய்தது.

எனினும், மோடி ஆட்சிக்கு வந்தால், இந்த ஊழல் பூதத்தை எப்படி ஒழித்துக்கட்டப் போகிறார் என்பது முக்கியமான விஷயம். காரணம், காங்கிரஸில் சில ஊழல்வாதிகள் இருப்பதுபோல, பா.ஜ.க.வில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. லோக் ஆயுக்தாவின் குற்றச்சாட்டுக்கு உள்ளான எடியூரப்பா பா.ஜ.க.வில்தான் இருக்கிறார். பெல்லாரியில் இரும்புத் தாதுவினை இஷ்டத்துக்கு வாரி விற்ற ரெட்டி சகோதரர்களுக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. குஜராத்தில்கூட லோக் ஆயுக்தா இதுவரை சரியாகச் செயல்படவில்லை என்கிற புகாரும் உண்டு. ஆக, ஊழல் என்கிற ஓட்டையை சரிசெய்யாதவரை வளர்ச்சி என்கிற கப்பல் மூழ்கவே செய்யும். ஆனால், இந்த ஊழல் ஓட்டையை அடைக்க மோடி என்ன செய்யப் போகிறார்?  

உள்கட்டமைப்பு!  

சாலை வசதிகள் தொடங்கி, மின்சக்தி உற்பத்தி செய்வதுவரை உள்கட்டமைப்பு என்கிற தலைப்பில் வரும் விஷயங்கள் பலப்பல. பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காண வேண்டுமெனில், உள்கட்டமைப்புக்குத் தேவையான அடிப்படை வேலைகளை நாம் செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் எந்தவகையிலும் வளர்ச்சி பெறவில்லை. போதிய நிதி வசதி இல்லை, சாலை அமைப்பதற்கான இடத்தைப் பெறுவதில் சிக்கல் எனப் பல பிரச்னைகளில் சரியான முடிவு எடுக்காததினால், கெட்ட பெயரையே சம்பாதித்து இருக்கிறது காங்கிரஸ். மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது, துறைமுகங்களைக் கட்டுவது, அணை கட்டுவது போன்ற பல விஷயங்களை அதிக அளவில் செய்வதற்கான பணம் நம்மிடம் இல்லை.செய்வதற்கான பணம் நம்மிடம் இல்லை.

என்றாலும், குஜராத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் வளர்ந்திருப்பதாகச் சொல்லப்படுவதால், இந்தியா முழுக்கவும் வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கு  மோடி நடவடிக்கை எடுப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், இதைச் செய்து முடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

வேலைவாய்ப்பு!  

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த கடந்த பத்து ஆண்டுகளில், குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மிகவும் குறைந்துள்ளதாகத் திட்ட கமிஷன் புள்ளிவிவரங்களே சொல்கின்றன. நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2010, 2011-ம் ஆண்டு களில் வேலைவாய்ப்பின்மை 10.2% உயர்ந்துள்ளது. 2001 முதல் 2005 வரையில் 1.20 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டது. ஆனால், 2005 - 2010-ல் உருவாக்கப்பட்ட வேலை வெறும் 60 லட்சம் மட்டுமே. (பார்க்க 31-ம் பக்கத்தில் உள்ள அட்டவனை!) இதுபோதாது என்று 2012 - 2017 வரையிலான காலத்தில் புதிதாக 6.30 கோடிபேரும் இன்னும் 15 ஆண்டுகளில் 18.3 கோடிபேரும் புதிதாக வேலைவாய்ப்பைத் தேடி வரப்போகிறார்களாம். இத்தனை பேருக்கும் வேலை தருகிற புதிய திட்டங்களைத் தீட்டினால் மட்டுமே, இந்தியா வல்லரசாக மாறும் வாய்ப்பு உருவாகும். ஆனால், இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பது மோடியின் முன் உள்ள இன்னொரு பெரிய சவால்! 

இந்தச் சவால்களையெல்லாம் மோடி எப்படி சந்திக்கப்போகிறார் என்பதில்தான் அவரது  எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமும் இருக்கிறது!

ஏ.ஆர்.குமார் 

 



Saturday, March 29, 2014

விமான பயண டிப்ஸ்


யார் முதலில் பயணச் சீட்டுகளை வாங்குகிறார்களோ? அவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்கி, பல்வேறு அடுக்குகளில், குறைந்த கட்டணத்தில், விமான டிக்கெட்டுகளை வழங்குகிறார்கள். முதலில் டிக்கெட்டுகளை வாங்கும் பயணியர் தாமதமாக டிக்கெட் வாங்குபவர்களை விட குறைவாகவே கட்டணம் செலுத்துவார்கள். 

விமான நிலையத்தில் விமான நிறுவனத்தின் முகப்பை (counter) எப்படி அடைய வேண்டும் என்பது ஒருவருக்கு முன்பே தெரிந்திருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அங்கு சென்று தம் வருகையை தெரிவிப்பது எளிதாக இருக்கும். ஆகவே, டிக்கெட்டை வாங்கும்பொழுது கூட, நீங்கள் நிறைய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

வருகையைப் பதிவு செய்ய வேண்டிய நேரம். முனையம் - (Terminal) உள்நாட்டு முனையமா அல்லது பன்னாட்டு முனையமா? முனைய எண் Terminal number - இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பெரும்பாலான உலகப் புகழ் பெற்ற விமான நிலையங்களில் பல டெரிமினல்கள் உள்ளன. இரண்டு விமானங்களுக்கு இடையிலான இணைப்பிற்கான குறைந்தபட்ச நேரம், உங்களுடைய பேக்கேஜ்களை எங்கு பெற்றுக் கொள்வது குடிநுழைவு / குடியேற்றம், சுங்க நடவடிக்கைகளை எங்கு முடிக்க வேண்டும், போன்ற விவரங்களை முன்கூட்டியே விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பின்வரும் ஆவணங்கள் உங்களிடத்தில் இருக்கின்றனவா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். பாஸ்போர்ட் அல்லது கூடுதல் பாஸ்போர்ட்டுகள், விசா, தேவை என்றால் டிரான்ஸிட் விசா, பணச்சீட்டு, ஆதரவாளரிடமிருந்து (sponsor) வந்த அழைப்புக் கடிதம், விசாவின் நகல், உரிய அமைப்பிட மிருந்து பெற்ற ஒரு செல்லுபடியாகக் கூடிய மருத்தவச் சான்றிதழும் (தேவைப்பட்டால்) பயணக் காப்பீடும் மற்றும் தங்கும் ஹோட்டல் உறுதி செய்யப்பட்ட ரசீது, தரவாளருடைய தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை குடிநுழைவு பரிசோதனைக்காக தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சகப் பயணியின் பேக்கேஜையோ, பாக்கெட்டுகளையோ சிறிது நேரம்கூட பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கக் கூடாது. அப்படி ஒரு பேக்கேஜ் உங்களிடம் இருந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள். தடை செய்யப்பட்ட சில பொருட்களை வைத்திருப்பது சில நாடுகளின் சட்டப்படி மரண தண்டனைக்கு கூட ஆளாக நேரிடும். மாட்டிக்கொள்ளாதீர்கள்!

உங்களுடைய ஒவ்வொரு பேக்கேஜ்களையும் உங்களுடைய செல்போனை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வது மற்றொரு யோசனையாகும். இதை அமெரிக்க போக்குவரத்துத் துறை தீவிரமாகக் கடைப்பிடிக்கிறது.  

முதலில் விமான நிலைய பொறுப்பு அலுவலரிடம் உங்களுடைய பாஸ்போர்ட், விசா, போர்டிங் கார்டை காண்பிக்கவும். அவை சரிபார்க்கப்பட்டு அனைத்தும் சரியாக இருக்கிறது என்று அந்த அலுவலர் முடிவு செய்த பிறகு உங்களுடைய பாஸ்போர்டிலும் போர்டிங் பாஸிலும் ஒரு முத்திரையிட்டு ஒப்பம் அளித்து உங்கள் பயணத்திற்கு அனுமதி அளிப்பார். அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் பேக்கேஜ் எடுத்துச் செல்வது உங்களுக்கும் விமான நிறுவனத்திற்கும் உதவுவதாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் விமானம் பாதுகாப்பாக பறக்கவும் அதிகமான பேக்கேஜிற்கு கூடுதல் கட்டணம் செலுத்தாமல் உங்களுடைய பணத்தையும் சேமிக்கவும் செய்யலாம்.ஒரு பயணி அவருடைய பயணத் தேதியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டு வேறொரு தேதியில் விமான டிக்கெட் கேட்கும் பொழுது சாதாரணமாக, அதே வகுப்பில் பயணம் செய்வதற்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் ஒரு சிறிய கட்டணம் மட்டும் இருக்கும். இல்லையெனில் அந்த தேதியில் கிடைக்கும் உயர் வகுப்பில் பயணம் செய்வதற்கு உரிய கட்டண வேறுபாட்டை ஒருவர் செலுத்த வேண்டியிருக்கும்.எல்லா விமானங்களிலும் பாதுகாப்பு தகவல்கள் அடங்கிய அட்டை இருக்கும். தயவு செய்து அந்த அட்டையை கவனமுடன் படித்து நெருக்கடியான காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் புரிந்து கொள்ளுங்கள்.சீட் பெல்ட்டை இணைப்பதற்கு அதில் உள்ள மெட்டல் கிளிப்பை லாக்குகள் நுழைக்கவும். கிளிக் என்ற ஒரு சத்தத்துடன் அது பூட்டிக்கொள்ளும். விமானம் மேலெழும்பும் போது, நிலையற்று இருக்கும் போது, அல்லது தரையிறங்கும் போது சீட் பெல்ட்டை இறுக்கமாக்கிக் கொள்ள வேண்டும். விமானம் மேலெழும்பி நிலையாக பறக்கும் நிலைக்கு வந்தவுடன், நீங்கள் உட்கார்ந்து இருக்கும் போது சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுங்கள். ஆனால் வசதிக்காக சற்று தளர்வாக்கிக் கொள்ளலாம்.

அனைத்து விமானங்களிலுமே புகைப்பதற்கு அனுமதி கிடையாது. இருந்தாலும், சில பயணிகள் சிகரெட்டை ஒளித்து வைத்துக் கொண்டு வந்து புகைப்பார்கள். ஆக்சிஜன் முகமூடி கீழிறக்கப்பட்டு ஆக்சிஜன் பாய்ந்து கொண்டிருக்கும் போது அனைத்து பயணிகளும் அவர்களிடம் சிகரெட் இருந்தால் அவை அணைக்கப்பட்டு விட்டனவா? என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.உங்களுடைய விமானப் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வைட்டமின் சி-ஐ சாப்பிடவும். உங்களுடைய வீட்டில் உள்ள கிருமிகளை விட விமானத்தின் உள்ளே இருக்கும். காற்றில் அதிக கிருமிகள் சுற்றிக் கொண்டிருக்கும். உங்களுடைய பயணத்தை உடல்நலமில்லாமல் துன்பகரமானதாக மாற்றிக் கொள்ளாதீர்கள்.அசிட்டைல்சாலிசிலிக் ஆசிட்(ASA) (ஆஸ்பிரின் என்ற பெயரும் இதற்கு உண்டு) மாத்திரையை நீண்ட தொலைவு விமானப் பயணம் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னும், விமானப் பயண நாளன்றும் அதன்பிறகு மூன்று நாட்களுக்கும் எடுத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நகராமல் அமர்ந்து இருக்கும் பொழுது கால்களில், இரத்தம் கட்டிக் கொள்ளும். ஏ.எஸ்.ஏ. இரத்தத்தை இளகச் செய்து இரத்தம் கட்டிக் கொள்வதைக் குறைக்கும்.கால்களை குறுக்கே கட்டிக் கொண்டு உட்காருவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதில் நீங்கள் எடுத்துச் செல்லும் லக்கேஜ்களின் மேல் உங்கள் கால்களை வைத்து கொஞ்சம் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள்.உங்கள் சுவாச பாதைகள் மற்றும் காதுகளை ஒரு இரத்த சேர்க்கை நீக்கும் மருந்தின் (decongestant) மூலமாக விமானப் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். இது உங்கள் சைனஸ்கள் மற்றும் காதுகாளில் உள்ள மென் படலங்களைச் சுருங்கச் செய்யும்.பயணத்தின் போது உங்களுடைய காலணிகளை கழற்றுவதைத் தவிர்க்கவும். குறைந்த காற்றழுத்தம் காரணமாக உங்களுடைய பாதங்கள் வீங்கிப் போகலாம். நீங்கள் மறுபடியும் காலணியை போடுவதற்கு முயற்சி செய்யும் போது நீங்கள் அசௌகரியமாக உணரலாம்.

டாய்லட் சீட்டுகள், இருக்கையின் பின்புறங்கள், கை வைத்துக் கொள்ளும் தடுப்புகள், குறிப்பாக ட்ரே டேபிள்கள் ஆகியவற்றில் தொற்றிக் கொள்ளும் கிருமிகள் இருக்கும் என்பதால் இவைகளைத் தொடுவதை தவிர்க்க வேண்டும் என்று பயண சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக உங்கள் பையில் கைகளை தூய்மையாக்கும் சானிடைஸர் வைத்துக் கொள்ளுங்கள்.நோய்வாய்ப்பட்டு நடமாட இயலாமல் இருக்கும் பயணிகள் பயணம் செய்யும் பொழுது. அவர்களுடைய பயணம் வசதியாக இருப்பதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் முன்னரே செய்து அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்த பயணிகள் உடல் ஊனமுற்றவர்கள் அல்லது நரம்பியல் குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டிய மருத்துவ நிலையில் இருப்பவர்கள் அல்லது விமானத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் உதவி தேவைப்படுபவர்கள் ஆகிய வகையினர்களாக பிரிக்கப்படுவார்கள். 

நடமாட இயலாத பயணிகள் கழிவறை மற்றும் இருக்கை வரிசையில் முதல் இருக்கையிலும் வசதியாக அமர வைக்கப்படுவர். கமான்டர் மற்றும் விமான சிப்பந்திகளுக்கு நடமாட இயலாத இந்தப் பயணிகளுக்கு விமானத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக மருத்துவ குறிப்புகள் உள்பட்ட அனைத்து விவரங்களும் அளிக்கப்படும்.விசா நீண்ட காலத்திற்கு வழங்கப்பட்டு இருந்தாலும் கூட, விசா செல்லுபடியாகும் காலமும் பாஸ்போர்ட் செல்லு படியாகும் காலமும் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருக்குமாறு பார்த்துக் கொள்வது பயணியின் பொறுப்பாகும். ஒவ்வொரு நாட்டிலும் விசா வழங்கும் அதிகாரிகளால் பயணியின் பயண நோக்கம் மற்றும் அவருடைய தகுதிகளை ஆராய்ந்து அவர் அந்த நாட்டினுள் நுழைவதற்காக விசா வழங்கப்படும். விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை சரிபார்த்துக் கொள்வது அனைத்து பயணிகளுடைய கடமையாகும்.பயணிகள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை அடைவதற்காக மற்றொரு நாட்டின் வழியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், (அமெரிக்காவிற்கு சென்றடைய லண்டனில் இறங்கி மற்றொரு விமானம் மாறிச் செல்வது போன்று) அவ்வாறு செல்வதற்கான டிரான்சிட் விசா பெற வேண்டுமா? என்று அறிந்து கொள்வது அவசியமாகும். டிரான்சிட் விசா பெற வேண்டுமானால் புறப்படுவதற்கு முன்னதாக அதைப் பெற வேண்டும். ஒரு சில நாடுகள் பயணிகள், தங்களுடைய நாட்டின் நகரத்திற்கு வந்ததும் விசாவைப் பெற்றுக் கொள்ளும் வசதியை அளித்தாலும், (Visa on entry) இந்தியாவை விட்டு புறப்படும் முன் விசாவைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது. ஒவ்வொரு விமான நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர் சேவை திட்டங்களைப் பற்றி அவர்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும். அதை பார்த்து விமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். பயணச் சீட்டுகள் முகவர்கள் (travel agents) அல்லது விமான நிறுவனத்தால் வழங்கப்பட்டாலும் கூட, டிக்கெட்டில் பெயர், பதவி, பயணத் தேதி, புறப்படும் இடம், சென்று அடையும் இடம் ஆகியவை சரியாக இருக்கின்றதா? என்று சரிபார்த்துக் கொள்ளும் பொறுப்பு பயணிகளுடையதாகும்.

பெரும்பாலான விமான நிறுவனங்கள் இணையதள பயணச்சீட்டுகளை வழங்குகின்றன. இந்த பயணச்சீட்டுகள் சாதாரணமாக கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்யப்பட்ட காகிதமாகவே தோன்றும். இருந்தாலும் அதில் பயணியின் விவரங்கள், விமானத்தின் எண், பயணத்தேதி, புறப்படும் இடம், சென்றடையும் இடம், பயண வகுப்பு, டிக்கெட் வழங்கப்பட்ட தேதி, வழங்கப்பட்ட இடம், பேக்கேஜ் அலவன்ஸ் ஆகிய விவரங்கள் இருக்கும்.  நீங்கள் பயணச்சீட்டை பெற்றவுடன் அதில் உள்ள பி.என்.ஆர். என்ற பயணச் சீட்டு எண், டிக்கெட்டில் உள்ள பெயர், விமான எண், பயணத் தேதி, புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் ஆகியவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது, அசல் பயணச்சீட்டு தொலைந்து விட்டால் நகல் பயணச்சீட்டை பெறுவதற்கு உதவியாக இருக்கும். பி.என்.ஆர். எண்ணை குறிப்பிட்டு எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் பயணச் சீட்டின் நகலை பெற்றுக் கொள்ளலாம். பயணச் சீட்டின் நகல் இல்லாமல் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தினுள் செல்ல உரிமை கோர முடியாது.விமான நிறுவனத்தினால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும் காகிதம் பயணச் சீட்டு தொலைந்து போய்விட்டால் பயணி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்புகாரின் நகலை பயண முகவர் அல்லது விமான நிறுவனத்திடம் கொடுத்து மாற்று பயணச்சீட்டு நகலைப் பெறலாம்.ஒருவர் அவருடைய டிக்கெட்டை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு பிரதியை அவருடைய ஈமெயிலுக்குள் அனுப்பி சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தன்னுடைய டிக்கெட் விவரங்களை மொபைல் ஃபோனிலும் காட்டலாம். பிரிண்டில் தேவையில்லை என்பதாலும் தேவையில்லாமல் காகிதத்தை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதாலும் இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது.விமானப் பயணத்திற்கான முன்னேற்பாடுகள், நாட்டுக்கு நாடு வேறுபடும். தனிப்பட்ட விருப்பத்தில் உங்கள் பயணத்தைப் படிப்படியாக திட்டமிட வேண்டும். நீங்கள் சென்றடையப் போகும் வெளி நாட்டில் நீங்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்னைகளை முன் கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்.(Embarkation) என்பது நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்காக விமானத்தில் ஏறும் இடமாகும்.(Disembarkation) என்பது உங்கள் பயணம் முடிவடைந்து மற்றொரு நாட்டில் நீங்கள் விமானத்தை விட்டு வெளியே வரும் இடமாகும்.

உங்கள் பாஸ்போர்ட் குறைந்தது ஆறு மாதங்கள் செல்லத்தகுந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட அமைப்பிடமிருந்து குடியேற்ற அனுமதி Emigration clearance தேவை.இந்திய பாஸ்போர்ட்டுகள் இந்திய குடிமக்களின் பன்னாட்டுப் பயணத்திற்காக வழங்கப்படுவை. நாடு முழுவதும் 37 இடங்களிலும், வெளிநாடுகளில் 162 இடங்களிலும் இந்திய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.நீங்கள் விசா உள்ள சரியான பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்கிறீர்களா? என்று உறுதி செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு துணை பாஸ்போர்ட் (Supplementary passport) வழங்கப்பட்டிருந்தால். அதற்கு முந்தைய அனைத்துப் பாஸ்போர்ட்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.இந்திய பாஸ்போர்ட்டுகள் அடர் நீலம்/கருப்பு உறையுடன் இந்தியாவின் தேசிய சின்னத்தை முகப்பு உறையின் மையத்தில் கொண்டிருக்கும். சின்னத்திற்கு கீழே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் Republic of India என்று பொறிக்கப்பட்டிருக்கும். சாதாரண பாஸ்போர்ட்டுகள் 36 பக்கங்களையும் அடிக்கடி பயணம் செய்பவர்களின் பாஸ்போர்ட்டுகள் 60 பக்கங்களையும் கொண்டிருக்கும்.இந்திய பாஸ்போர்ட்டுகள் அதற்குரிய நபரின் அடையாளத்திற்கான தகவல்கள் பாஸ்போர்ட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க அட்டை முடியும் வரை இருக்கும். இந்தப் பக்கங்களில் உள்ள தகவல்களை மாறுதல்/திருத்தம் செய்ய இயலாத வகையில் இந்தப் பக்கங்கள் மென் தகடினால் உறையிடப் பட்டிருக்கும்.உங்களுக்கு பாஸ்போர்ட் இல்லையென்றால், நீங்கள் ஒரு பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்க விரும்பினால் www.passport.gov.in என்ற இணைய தளத்தில் நுழைந்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த பாஸ்போர்ட் அலுவலகத்திலும், மாவட்ட பாஸ்போர்ட் மையத்திலும்/விரைவு அஞ்சல் மையத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டிய பிரமாணப் பத்திரங்கள் (affidavits) மற்றும் இணைப்புகள், பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பத்தின் நிலையை அறியவும், விரைவு பாஸ்போர்ட்டிக்கு (Tatkal Passport) விண்ணப்பிக்கவும் பாஸ்போர்ட்டுகள் அப்பாயிண்ட்மெண்ட் தேதியில் இருந்து 3லிருந்து 7 வேலை நாட்களுக்குள் வழங்கப்படுவதாக உறுதி அளிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் இணையதளத்தில் உள்ளன.பாஸ்போர்ட் தொலைந்து போனால் புகார் தெரிவிக்க மற்றும் ஒரு மாற்று பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான விவரமும் இணையதளத்தில் இருக்கும்.விசா என்பது ஒரு நபர் ஒரு நாட்டினுள் நுழைவதற்காக அனுமதி பெற்றிருப்பதை காட்டும் ஒரு அனுமதி ஆவணமாகும். பெரும்பாலும் இது விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டில் பதிக்கப்படும் ஒரு முத்திரையாகவே இருக்கிறது. விசாவில் உள்ள பெயரும் பாஸ்போர்ட்டில் உள்ள பெயரும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒன்றாக இருக்க வேண்டும். அதைப் போலவே பாஸ்போர்ட்டின் எண், பிறந்த தேதி ஆகியவை விசாவுடன் ஒத்திருக்க வேண்டும்.ஒரு பயணியின் உடல் நிலையானது அல்லது மருத்துவ நிலையானது, மற்ற பயணிகளின், அவர்களது உடமைகளின், அல்லது விமானப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தாலோ, ஸ்ட்ரெச்சர் அல்லது இன்குபேட்டரில் ஒரு பயணி பிரயாணம் செய்ய நேரிட்டாலோ, அவருக்கு உதவுவதற்காக ஒரு உதவியாளரை அழைத்து வர வேண்டும். இந்த உதவியாளர்கள் அவர்கள் விமானத்தில் ஏறவும் இறங்கவும், விமானம் பறந்து கொண்டிருக்கும் போதும் மற்றும் அவசரக்கால வெளியேற்றங்களின் போதும் உதவும் பொறுப்பு உண்டு. இந்த உதவியாளர்கள் இல்லை எனில் மேற்கண்ட நபர்களை விமானத்தில் அனுமதிக்க மறுக்கலாம்.பயண முடிவில், விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கு உதவுவதற்காக ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவார். அவர் பேக்கேஜ் சேகரிக்கும் கூடம் வரை அல்லது மற்றொரு விமானம் மாறி மற்றொரு இடத்திற்கும் மேற்கொண்டு பயணம் செய்வதாக இருந்தால் அந்த விமானம் வரை உடன் வந்து உதவுவார். சக்கர நாற்காலிகள் தேவைப்படும் பயணிகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக அவர்களுடைய போர்டிங் கார்டுடன் ஒரு சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும்.தொற்றுநோய் மற்றும் பரவக்கூடியது என்று நம்பப்படுகிற எந்த நோய் இருந்தாலும் பிற பயணிகளின் வசதியையும் நலனையும் பாதிக்கும் உடல் நிலை அல்லது அசாதாரணமான நடவடிக்கைகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு சில நோய்கள் மற்றும் இயக்கமின்மை போன்றவைற்றுக்கு மருத்துவத் துறையின் அனுமதி தேவை.தொடர்ந்து ஆக்சிஜன் தேவைப்படும் பயணிகள், நீண்ட தொலைவு செல்லும், இடையில் எங்கும் நிற்காத விமானங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். பயண காலம் முழுமைக்கும் போதுமான ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது. விமானங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களே இருக்கும்.

ஸ்ட்ரெச்சர் வசதிக்கான கோரிக்கை முன் கூட்டியே செய்யப்பட வேண்டும். இந்த வசதி, இடவசதியைப் பொருத்தே வழங்கப்படும். பிற விமான நிறுவனங்களுடன் பயண மாற்று வசதி இருக்கும் பொழுது, அந்த விமானத்துடன் முன்பே ஏற்பாடுகள் செய்து கொள்வது அவசியமாகும். இதில் சிறப்பு உணவு, மருந்துகள், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் மற்றும் பிற தேவைகள் ஆகியவற்றையும் உறுதி செய்து கொள்வது அவசியமாகும். எக்கானமி வகுப்பில் ஒரே ஒரு ஸ்ட்ரெச்சர் மட்டும்தான் அனுமதிக்கப்படும். முதல் வகுப்பு மற்றும் உயர் வகுப்புகளுக்கு ஸ்ட்ரெச்சரை எடுத்துச் செல்லக் கூடாது.  உடல் நலமில்லாத நிரந்தர ஊனம் உள்ள பயணிகள் அதாவது எதிர்காலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்ற நிலையில் உள்ள பயணிகள் இந்த மருத்துவத் தகவல் படிவத்தை ஒவ்வொரு முறையும் ஏர் இந்தியா விமானத்தைப் பயன்படுத்தி பயணம் செய்யும் போது நிரப்பத் தேவையில்லை. இத்தகையவர்கள் மும்பையிலுள்ள மருத்துவ சேவைகள் துறையிடம் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கான மருத்துவ அட்டை (Frequent Travellers' Medical Card)வழங்கக் கோரி விண்ணப்பிக்கலாம். இந்த மருத்துவ அட்டை பெறுவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.பொருத்தமான உதவியாளர் இல்லாமல் மனநிலை சரியில்லாத பயணிகளை விமான பயணத்திற்கு அனுமதிப்பதில்லை. பயிற்சி பெற்ற உதவியாளர் இத்தகைய பயணிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் சான்றிதழோடு ஊசி மூலம் செலுத்தக்கூடிய மயக்க மருந்துடன் வரவேண்டும். இந்த மருந்து பயணம் தொடங்குவதற்கு முன்னரோ அல்லது பயணத்தின் போதோ உதவியாளரால் பயணிக்கு அளிக்கப்படலாம்.பார்வையில்லாதவர்களுக்கு வழிகாட்டுவதற்காக பயிற்சி பெற்ற ஒரு நாய் பயணியுடன் வருவதற்கு அனுமதி உண்டு. ஆனால், மற்றொரு நாட்டில் நுழைவதற்கு அல்லது மற்றொரு நாட்டில் இறங்கி விமானம் மாறுவதற்காக அனுமதி தேவைப்படும் நாடுகளின் முறையான அனுமதியைப் பெற்றிருக்காவிடில் அவற்றை பயணியுடன் அழைத்துச் செல்வதற்கு அனுமதிக்கப் படாது.

அமித் மிஸ்ராவின் விஸ்வரூபம்


கிரிக்கெட்டின் அற்புதமான காட்சிகளில் ஒன்று, லெக்ஸ்பின் பௌலிங்கைக் கண்டுகளிப்பது. கூக்லி, டாப்ஸ்பின், ஃப்ளிப்பர், ஸ்லைடர் என்று ஒரு லெக்ஸ்பின்னரால்தான் ஒவ்வொரு பந்திலும் அசத்த முடியும். சமீபகாலமாக, அமித் மிஸ்ராவின் பந்துவீச்சு அப்படியொரு சாகசத்தை வெளிப்படுத்தி வருகிறது. பல நாடுகள் கலந்துகொள்ளும் ஓர் உலகப்போட்டியில் சரியான முறையில் தன்னை நிரூபித்திருக்கிறார் மிஸ்ரா. இனி அவர் பெஞ்சில் அமர்ந்து துவண்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

2003ல், இந்திய அணிக்குள் நுழைந்த மிஸ்ரா, இதுவரை 23 ஒருநாள் ஆட்டங்களே ஆடியிருக்கிறார். டெஸ்ட்டிலும் இதே நிலைமைதான் (13 டெஸ்டுகள்). கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மிஸ்ராவால் ரஞ்சிப் போட்டியில் மட்டுமே ஆட முடிந்தது. கும்ப்ளே ஓய்வு பெற்று, ஹர்பஜன் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் மிஸ்ராவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. அஸ்வினும், ஜடேஜாவும் அமர்க்களமாக இந்திய அணியின் தூண்களாக மாறினார்கள். வயது வேறு 30ஐக் கடந்து விட்டது. ஆனால், மிஸ்ரா சலனப்படவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் தன்னை நிரூபிக்க ஆரம்பித்தார். ஐ.பி.எல்.-லை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஐ.பி.எல்.-லில் மூன்று முறை ஹாட்ரிக் எடுத்து, மிஸ்ராவுக்கு ஏன் இந்திய அணியில் இடமளிக்கப்படவில்லை என்கிற கேள்வியை உருவாக்கினார். சென்ற வருடம் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சென்றபோது, ஒருவழியாக நேரம், காலம், அதிர்ஷ்டக் காற்று எல்லாம் மிஸ்ரா பக்கம் திரும்பியது. இப்போது மிஸ்ரா இல்லாமல் 50 ஓவர், டி20 மேட்சுகளில் இந்தியாவால் களமிறங்க முடியாது என்கிற நிலைமை உருவாகிவிட்டது.

பங்களாதேஷில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடுத்தடுத்து மேன் ஆஃப் தி மேட்ச் பட்டங்கள் வாங்கியதால் மற்ற அணிகள் அஜ்மல், நரைனுக்குச் சமமாக மிஸ்ராவை மதிக்கத் தொடங்கியிருக்கின்றன. மிஸ்ராவின் இந்தத் தாக்கத்தால் சில மாற்றங்கள் உண்டாகப்போகின்றன. ஏற்கெனவே ஜடேஜாவிடம் டெஸ்ட் இடத்தை இழந்துவிட்ட அஸ்வின் இன்னும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். மிஸ்ராவின் எழுச்சியால் ஹர்பஜன் இனி மீண்டு வர முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் டெஸ்ட் மேட்ச் நடக்கும்போது ஓஜாவின் வாய்ப்பையும் மிஸ்ரா தட்டிப்பறிக்கலாம். திறமையை நீண்டநாள் ஒளித்து வைக்க முடியாது என்பதற்கு மிஸ்ராவே சிறந்த சாட்சி.

 

அருள்வாக்கு - தவறான உபாயங்களுக்குத் தடை

 
உண்மைகளையே உரிமையாக்கித் தரத்தான் தர்மம். தர்மத்தை அமல் செய்யத்தான் சட்டம். எனவே சட்டபூர்வமாக மதச் சுதந்திர உரிமை அளிக்க அரசாங்கம் முற்படுகையில், 1. சுய விருப்பம் ஒன்றின் மீதேயும், 2. ஒரு மதத்தின் கொள்கை, நடைமுறைப் பயிற்சி ஆகியவற்றில் மட்டுமே அச்சுயவிருப்பம் இருக்கும் போதும்தான் மதமாற்றம் நடைபெறுகிறது என்ற உறுதிப்பாட்டை உண்டாக்குவதற்கு உதவியாகவும் ஒரு சட்டவிதி இயற்றுதல் அவசியமாகிறது. மத சம்பந்தமேயில்லாத உபாயங்களால் மதமாற்றம் செய்வதைத் தடுக்கும் பொருட்டே இவ்வுறுதிப்பாடு அவசியமாகிறது.
 
மதப் பிரசாரம் என்பது ஒரு மதத்திலுள்ளோருக்கே அதனை நன்கு பிரகாசப்படுத்திப் பற்றுதலை வளர்த்துக் கொடுக்கும் நோக்கத்திற்காக இன்றி, பிற மதத்தினரையும் அதற்கு மாற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தால் துஷ்பிரசாரமேயாகும். துஷ்பிரசாரம் என்பது பொய்மையே, சட்டப்படி குற்றமே. குற்றத்திற்கு இடமளிக்காமல் தண்டனை விதிக்கவே சட்டம். எனவே பிரசாரம் என்பதன் மூலம் பிற மதத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தில் சேருமாறு அழைப்பு விடுவதை, மதமாற்றப் பிரசாரம் செய்வதை, அரசியல் நிர்ணயச் சட்டம் தண்டனைக்குரிய குற்றமாக்குதல் வேண்டும்.
 
மதச் சுதந்திரத்தின்படி பிரசாரவுரிமை அளிக்கப்பட்டுள்ளதே என இதற்கு ஆட்சேபணை செய்வது நிற்காது. ஏனெனில் மதப்பிரசாரம் என்பது அம்மதத்தின் கொள்கை முதலான மதாம்சங்களுக்கு விளக்கமாகவே மட்டும் முடிந்து, அதனாலேயே பிற மதத்தினரும் தானாகக் கவரப்பட்டு அதைத் தழுவுவதற்குத் தான் மதச் சுதந்திரம் இடமளிக்கு மேயொழிய, தமது கொள்கைகளை விளக்கி அதனால் பிறரை அம்மதத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதற்கல்ல.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

Tuesday, March 25, 2014

நரேந்திர மோடி - பிரச்னைக்கு என்ன தீர்வு காணப் போகிறார் ?

தேர்தல் கணிப்புகள் அப்படியே நடந்துவிடக்கூடியவை அல்ல என்றாலும் கடந்த இரண்டு மாதங்களில் வெளியான பல கணிப்புகள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொல்கின்றன. பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனியாக (அல்லது சில கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்) ஆட்சி அமைத்தால், நரேந்திர மோடியே பிரதமராக பதவியேற்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் அவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

நூறு புதிய நகரங்களை உருவாக்குவேன்; இந்தியாவின் நான்கு திசைகளையும் புல்லட் ரயில் மூலம் இணைப்பேன்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிலையங்களை தொடங்குவேன் என பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார் மோடி. இதை எல்லாம் அவர் செய்வாரோ, இல்லையோ... அவர் பிரதமரானால், குஜராத் மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்ததுபோல, இந்தியப் பொருளாதாரத்தையும் அதிவேகத்தில் முன்னேற்றம் காண வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் நிறையவே இருக்கிறது.

மக்களின் இந்த எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேற்றிவிடக்கூடியதுதானா? உலகப் பொருளாதாரம் என்கிற சிக்கலான வலையில் சிக்கியிருக்கும் நம்மால் தனித்து செயல்பட்டு, அதிவேக வளர்ச்சி காண்பது சாத்தியமா? இன்றைய காங்கிரஸ் ஆட்சி, அடுத்துவரும் ஆட்சிக்கு பல பொருளாதாரப் பிரச்னைகளை உருவாக்கிவிட்டுச் செல்லும்போது, அதிலிருந்து மீண்டு, வேகமான வளர்ச்சியை நாடு அடைய வைக்க முடியுமா? என்கிற கேள்விகள் முக்கியமானவை. மோடி பிரதமரானால் பொருளாதார ரீதியில் சந்தித்தாக வேண்டிய சவால்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.


1. ஜி.டி.பி. வளர்ச்சி! 

ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிதான் ஜிடிபி வளர்ச்சியாகும். விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை ஆகிய முப்பெரும் துறைகளின் மொத்த உற்பத்தி மதிப்பே ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த மூன்று துறைகளிலும் உள்ள முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?

நம் விவசாயத் துறையில் மிகப் பெரிய பிரச்னை, நீராதாரம். மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்கும் நீராதாரத்தை விடுவித்து, விவசாயத்துக்குத் தட்டுப்பாடு இல்லாமல் நீர் கிடைக்கச் செய்வதற்கான திட்டங்களை மோடி தீட்ட வேண்டும். குஜராத்தில் நர்மதா அணை கட்டியதுபோல, இந்தியா முழுக்க பல பெரிய அணைகளைக் கட்ட வேண்டும். இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். தவிர, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து மிகப் பெரிய எதிர்ப்பும் கிளம்பும். நீராதாரப் பிரச்னைக்கு முதலில் முடிவு கண்டால் மட்டுமே, விவசாயம் தொடர்பான அடுத்தடுத்த பிரச்னைகளுக்கு மோடியால் தீர்வு கண்டு, குஜராத்தில் 10 சதவிகிதத்துக்கு  மேல் விவசாய வளர்ச்சி கண்டதுபோல, இந்திய அளவிலும் காண முடியும்.

அடுத்து, தொழில் துறை. 2006-07-ல் தொழில் துறையின் வளர்ச்சி கடந்த 15 ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு 12.17 சதவிகிதமாக இருந்தது. இதுவே 2012-13-ல் 0.96 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது இன்னும் குறைந்து, 2013-14-ல் 0.65 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைக்கு தொழில் துறையின் முக்கியமான பிரச்னைகள் பல. போதிய முதலீடு இல்லை; வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், கடன் வாங்க முடியவில்லை; ஏற்றுமதி ஆர்டர் அதிகம் இல்லாத இந்த சமயத்தில், உள்ளூரிலும் பொருட்களுக்கான தேவை குறைவாக இருப்பது; மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால், விலையும் அதிகமாக இருக்கிறது. போதிய அளவு மின்சாரம் கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தொழில் கொள்கையில் ஆயிரம் ஓட்டை.

மேலும், சிசிஐ \கடந்த 15 மாதங்களில் மொத்தம் 83 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களில், வெறும் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சொல்லி இருக்கிறது. நிலுவையில் உள்ள திட்டங்களில் 25% மட்டுமே மத்திய அரசின் கட்டுபாட்டுக்குள் வருகிறது. மீதமுள்ளவை சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி, தேவை போன்ற காரணங்களால் தாமதமாகி வருகின்றன.  நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அந்நிய முதலீடுகள் நம் நாட்டுக்குள் வராததும் முக்கிய காரணம்.

இந்தப் பிரச்னைகள் எல்லாமே ஓரிரு ஆண்டுகளில் சரிசெய்துவிடக்கூடியவை அல்ல. இவற்றை எல்லாம் சரிசெய்தால் மட்டுமே மோடியால், தொழில்துறை வளர்ச்சியில் சாதிக்க முடியும்.

மூன்றாவதாக, சேவைத் துறை. 2005-லிருந்து 2011 வரை சுமார் 10 சதவிகித வளர்ச்சி அடைந்த சேவைத் துறை, 2012-13-ல் 6.96 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. சேவைத் துறையில் முக்கிய பங்களிப்பது, ஐ.டி நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் வளர்ச்சியானது வெளிநாட்டுப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மத்திய அரசாங்கமானது ஐ.டி. துறை நிறுவனங்களுக்கு ஓரளவுக்கு மட்டுமே உதவ முடியும். தவிர, இந்தத் துறையின் வளர்ச்சி தற்போது ஓரளவு நன்றாகவே இருக்கிறது. எனவே, மத்திய அரசினால் இந்தத் துறைக்கு எந்த வகையில் இன்னும் உதவ முடியும் என்பது முக்கியமான கேள்வி!இந்த மூன்று விஷயங்களிலும் உள்ள முட்டுக்கட்டைகளுக்கு மோடி எப்படி முடிவு காணப்போகிறார் என்பது அவர் முன் இருக்கும் மிகப் பெரிய சவால்!

2. நடப்புக் கணக்கு பற்றாக்குறை!
ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான், இந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை. நம் ஏற்றுமதி 1000 கோடி ரூபாய்;  இறக்குமதி 500 கோடி ரூபாய் எனில், நம்மிடம் 500 கோடி ரூபாய் மீதமிருக்கும். இது பாசிட்டிவ்-ஆன விஷயம். ஆனால், நம் பிரச்னையோ ஏற்றுமதி குறைவாகவும் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதே. இதனால், நம்மிடம் இருக்கும் வெளிநாட்டுப் பணமான டாலரையும் யூரோவையும் விற்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் விளைவாக நமது ரூபாயின் மதிப்பு சரிகிறது. வெளிநாடுகளில் இருந்து அதிக விலை தந்து பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை கணிசமாக குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  


எக்கச்சக்கமான வெளிநாட்டு முதலீடு நம் நாட்டுக்குள் வந்ததாலும், நம் ஏற்றுமதி இறக்குமதியைவிட அதிகமாக இருந்ததாலும், 2000-04 வரையிலான நான்கு ஆண்டுகளில் நம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை சுமார் 2.3% வரை ப்ளஸ்-ல் இருந்தது. 2006 முதல் சரியத் தொடங்கிய இது, 2013-ல் 4.6 சதவிகிதத்துக்கு மேல் சென்று, நமது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கடையாக மாறி, நந்திபோல நடுவில் வந்து நிற்கிறது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறையை நாம் கணிசமாகக் குறைக்க வேண்டுமெனில் ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும். இறக்குமதியைக் குறைக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வெளிநாடுகளில் தேவை குறைவாக இருப்பதால், ஏற்றுமதியை ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

சரி, இறக்குமதியையாவது குறைக்கலாம் என்றால், அதுவும் முடியாது என்பதே நிதர்சனம். காரணம், நம் இறக்குமதியில் பெரும்பங்கு வகிப்பது தங்கமும் கச்சா எண்ணெயும். தங்கத்தின் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டிருப்பதால், அதன் இறக்குமதி தற்போது குறிப்பிட்டுச் சொல்கிற அளவு குறைந்திருக்கிறது. எனினும், இந்த வரிகள் நீக்கப்பட்டால் மீண்டும் தங்க இறக்குமதி  கணிசமாக அதிகரிக்கும்.  

 அதேபோல, கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்யவில்லை எனில், இங்கு எந்த வண்டியும் ஓடாது. வண்டிகள் ஓடவில்லையெனில், பொருளாதாரம் முன்னேறாது. எனவே, நடப்புக் கணக்கு பற்றாக்குறை பிரச்னைக்கு மோடி எப்படி தீர்வுகாணப் போகிறார் என்பது இரண்டாவது பெரிய சவால்!  

3. பணவீக்கம்! 

விலைவாசி உயர்வைத்தான் பொருளாதார பாஷையில் பணவீக்கம் என்கிறோம். இந்த பணவீக்கம் என்பது சாப்பாட்டில் சேர்க்கும் உப்பு மாதிரி. சாப்பாட்டில் உப்பு இருந்தால்தான் உணவு சுவைக்கும். பணவீக்கம் ஓரளவுக்கு இருந்தால்தான், பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். இதனால் அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றின் விலை அபரிமிதமாக உயராமல் இருக்கும்.  

ஆனால், சாப்பாட்டில் உப்பானது அளவுக்கு மிஞ்சி இருந்தால், அதை சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிற மாதிரி, பணவீக்கம் அளவுக்கு மிஞ்சி இருந்தால், மக்களால் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படும். அப்படியே வாங்க வேண்டும் எனில், கையில் இருக்கும் காசையெல்லாம் தரவேண்டிய நிலை உருவாகும். இதனால் மக்களின் சேமிப்பு குறையும். சேமிப்பு குறைந்தால், கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். கடனைத் திரும்பத் தரமுடியவில்லை எனில், பொருளாதாரம் திவாலாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தைத் தாண்டிச் சென்று, நம்மை எல்லாம் பயமுறுத்திய நுகர்வோர் பணவீக்க குறியீடு (சிறிமி), 2013 பிப்ரவரியில் 8.79 சதவிகிதத்தை அடைந்து, 2014 பிப்ரவரியில் 8.10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்த பணவீக்கத்தை சுமார் 5 சதவிகிதத்துக்குள் மோடி கொண்டுவந்தால் மட்டுமே மக்களின் சேமிப்பைப் பெருக்கி, மிகப்பெரிய வளர்ச்சியைக் காண வைக்க முடியும்.

பணவீக்கத்தினைக் குறைக்க பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யவேண்டும். மக்களின் வருமானத்தைப் பெருக்க வேண்டும். முக்கியமாக, கச்சா எண்ணெயின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த மூன்று முக்கியமான விஷயங்களில் முதலிரண்டு விஷயங்களைச் செய்வதற்கே மோடி மிகவும் கஷ்டப்பட வேண்டும். (கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவது மோடியின் கையில்  இல்லை. அதை உற்பத்தி செய்யும் நாடுகளே அதன் விலையை நிர்ணயம் செய்யும்!) இந்த மூன்று விஷயங்களிலும் காங்கிரஸ் அரசாங்கம் உருப்படியாக எதுவும் செய்யத் தவறியதால்தான் இப்போது மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது. அந்த நிலை தனக்கு வராமல் பார்த்துக்கொள்வது மோடியின் முன்பு இருக்கும் மூன்றாவது பெரிய சவால்! 

4. வட்டி விகிதம்! 

பணவீக்கத்தை ஒரு அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது, அதைச் செய்ய வேண்டிய வேலையை  ரிசர்வ் வங்கி எடுத்துக்கொள்கிறது. வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி முயற்சி செய்கிறது. கடனுக்கான வட்டியை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்கி செலவு செய்வதைத் தடுத்து, பொருட்களின் விலை உயராமல்  பார்த்துக் கொள்கிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி அதிகமாக இருப்பதால், மக்களிடம் இருக்கும் பணம், வங்கி லாக்கருக்குள் முடங்குகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் தொழில் முதலீட்டுக்குத் தேவையான பணம் கிடைக்காமல் திண்டாடுகின்றன. கடனுக்கான வட்டியையும் ரிசர்வ் வங்கி உயர்த்திவிடுவதால், தொழில் நிறுவனங்களால் அதிக வட்டியில் கடன் வாங்க முடிவதில்லை. அப்படியே வாங்கினாலும் கிடைக்கும் லாபமெல்லாம் வட்டி கட்டுவதற்கே சரியாகப் போய்விடுகிறது.

நம் நாட்டில் உள்ள நடைமுறையின்படி, கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்படியோ அல்லது குறைக்கும்படியோ மத்திய அரசாங்கமானது ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக  கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கும் மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவுக்கும் இடையே நடந்த பனிப்போர் எல்லோருக்கும் தெரியும். இப்போதிருக்கும் கவர்னர் ரகுராம் ராஜனும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்பவர் அல்ல. எனவே, இந்த பிரச்னைக்கு மோடி எப்படி தீர்வுகாணப் போகிறார் என்பது அவர்முன் உள்ள நான்காவது பெரிய சவால்.  


உள்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான தட்டுப்பாடு கடுமையாக இருக்கும்போது, வெளிநாடுகளில் இருந்து முதலீட்டினைப் பெறவேண்டிய கட்டாயம் ஒரு அரசாங்கத்துக்கு ஏற்படுகிறது. 1991-ல் தாராளமயமாக்கல் அறிமுகமானபிறகு ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டுக்குள்வரும் அந்நிய  முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இதே காலகட்டத்தில் சீனா பெற்ற அந்நிய முதலீட்டுடன் ஒப்பிட்டால், பத்தில் இரண்டு பங்கு அளவுகூட நம்மால் அந்நிய முதலீட்டைப் பெற முடியவில்லை.

மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நிய முதலீட்டை குஜராத்தில் கொண்டுவந்து குவித்ததுபோல, இந்திய அளவிலும் குவித்தால் மட்டுமே தொழில்துறை அதிவேகமாக வளர்ச்சி காணத் தொடங்கும். ஆனால், அந்நிய முதலீடு நம் நாட்டுக்குள் வந்து குவிய வேண்டும் எனில், நமது தொழில் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஒரு மாநில அளவில் இந்த மாற்றங்களை எளிதாகச் செய்துவிட முடியும். ஆனால், அதையே இந்திய அளவில் செய்யும்போது, பல பிரச்னைகள் வரும்.

உதாரணமாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால், வணிகர்களின் வெறுப்புக்கு மோடி ஆளாக வேண்டியிருக்கும். இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு காணப் போகிறார் என்பது மோடி முன் உள்ள ஐந்தாவது சவால்!






சொல்வதைச் செய்யும் கூகுள் நவ்!

 
''பக்கத்தில் புத்தகக் கடை எங்கே இருக்கிறது?'', ''சிங்கப்பூர் - சென்னை விமானம் ஆன் டைமுக்கு வருகிறதா?'' இதுமாதிரி எத்தனை கேள்விகள் கேட்டாலும் சரி, அடுத்த நிமிடம் அதற்கான பதிலை சொல்லி அசத்தி வருகின்றன 'கூகுள் நவ்’, 'சிபி’ என்கிற இரண்டு அப்ளிகேஷன்கள். 'வாய்ஸ் அசிஸ்டென்ட்’ என்று சொல்லப்படுகிற இந்த இரண்டு அப்ளிகேஷன்கள் உங்கள் போனில் இருந்தால்போதும், உங்கள் போனுடன் பேசியே எல்லாத் தகவல்களையும் வாங்கிவிட முடியும்.
 
மழைக்காலத்தில் ஆபீஸுக்குக் குடை கொண்டுபோகவேண்டுமா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் நீங்கள் இருந்தால், 'இன்றைக்கு எனக்குக் குடை தேவைப்படுமா?' என்று இந்த ஆப்ஸிடம் ஆங்கிலத்தில் கேட்டால்போதும். 'மேகமூட்டமாக இருப்பதால், மழை வர வாய்ப்பு அதிகம்' என்று சொல்லும்.  அவசியமில்லை எனில், ''தேவையில்லை'' என்று பதில் சொல்லிவிடும்.
 
'சிபி’யைப் போலத்தான் கூகுள் நவ் செயல்படுகிறது. உதாரணத்துக்கு, ''இந்தப் பகுதியில் எங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது?' என்று கேட்டால், உடனே கூகுள் மேப் திறந்து அருகில் இருக்கும் அத்தனை பெட்ரோல் பங்குகளையும் காட்டும். ஏதாவது ஒரு பெட்ரோல் பங்கை தேர்வு செய்தால், அந்த பெட்ரோல் பங்கை அடைய நேரம், வழிப்பாதை என அனைத்தையும் சில நொடிகளில் காட்டிவிடும். காரோட்டிச் செல்கிறவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயன்படும்.  

இந்த இரண்டு அப்ளிகேஷன்களையும் பயன்படுத்த நெட் அல்லது வைஃபை அவசியம். ஆப்பிளில் 'சிபி’ ஆப்ஸைவிட 'கூகுள் நவ்’ வேகத்தில் படுசுட்டி. ஆனால், உரையாட 'சிபி’ சுலபமாக இருக்கும். 'சிபி’ ஆப்ஸ் ஆப்பிளின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஆனால், 'கூகுள் நவ்’ எல்லோருக்கும் பொதுவானது.

செ.கிஸோர் பிரசாத் கிரண் 
 

Monday, March 24, 2014

ஆனந்த் - கர்நாடக கிரிக்கெட் -சானியா மிர்சா - சோயிப் மாலிக் - ராகுல் டிராவிட்


விஸ்வநாதன் ஆனந்தின் கதை முடிந்துவிட்டது என்றார்கள். ஜூரிச் மற்றும் லண்டன் கிளாசிக் போட்டிகளில் அவர் தோற்றபோது இதன் பாதிப்பால் கேண்டி டேட்ஸ் போட்டியில் கலந்துகொள்ளவே மாட்டார் என்றும் எழுதினார்கள். இது கார்சலனின் யுகம், ஆனந்துகளுக்கு வேலையில்லை என்று குட்டினார்கள். ஆனால் ஒரே ஒரு ஆட்டத்தில் ஆனந்த் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்திவிட்டார். 

இப்போது நடந்து கொண்டிருக்கும் கேண்டிடேட்ஸ் போட்டியின் (இதில் வெற்றி பெறுபவர் கார்ல்சனுடன் உலக சாம்பியனுக்கான போட்டியில் மோதுவார்.) முதல் ஆட்டத்தில், முன்னணி வீரர் ஆரோனியனை நுட்பமான காய் நகர்த்தல்களால் வென்று, அத்தனை பேர் வாயையும் அடைத்துவிட்டார் ஆனந்த். ‘போட்டியை யார் வெல்வார்?’ என்று செஸ் உலகம் எண்ணிக் கொண்டிருக்கிறதோ அவரையே முதல் ஆட்டத்தில் ஆனந்த் வென்றது பெரிய இன்ப அதிர்ச்சி.  

வாழ்நாள் முழுக்க நினைவிலிருக்கும் ஆட்டம். ‘ஆனந்த் என்றால் ஆனந்த்தான்’ என்று ஆனந்த் வென்ற விதத்தை செஸ் நிபுணர்களும் செஸ் வீரர்களும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனந்த் இந்தப் போட்டியை வெல்கிறாரா, இல்லையா என்று தெரியாது. ஆனால், தம்மால் இந்தத் தலைமுறை செஸ் வீரர்களோடு ஈடுகொடுத்து ஆடமுடியும் என்பதை அந்த ஒரு ஆட்டத்தில் நிரூபித்துவிட்டார். 

கர்நாடக கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்திய அளவில் மிகச்சிறந்த கிரிக்கெட் அணி என்றால் அது கர்நாடகம்தான். இந்த வருட ரஞ்சிப் போட்டியை வென்ற கர்நாடக அணி, இதர உள்ளூர் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக ஆடிவருகிறது. சர்வதேச ஆட்டங்கள் நடத்தும் அளவுக்கு மிகச்சிறந்த மைதானங்களும் கர்நாடகாவில் உருவாகிவிட்டன. பெங்களூருவில் மட்டுமில்லாமல் இதர நகரங்களிலும் சர்வதேசத் தரத்திற்குரிய மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்ற வருடம் மேற்கு இந்திய அணியின் ஏ தொடர் முழுக்க கர்நாடகாவில் நடைபெற்றது. பெங்களூரு, மைசூர், ஹூப்ளி என முழுத் தொடரும் கர்நாடகாவில் மட்டுமே நடந்தது. இந்தச் சிறப்பு வேறு எந்த மாநிலத்திலாவது இருக்குமா என்று தெரியவில்லை. இப்படி, கர்நாடகாவின் கிரிக்கெட் வளர்ச்சி ஊரே மெச்சும்படி உள்ளது. (ஐ.பி.எல்.லிலும் பெங்களூரு சிறந்த அணிகளில் ஒன்று.) இந்திய கிரிக்கெட்டின் மையமாக இருக்கும் சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், கர்நாடகாவின் பாதையில் செல்லுமா என்கிற கேள்வியும் எழுகிறது.  

தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர வேறு எங்காவது முக்கியமான கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முடியுமா என்றால் சந்தேகம்தான். கிரிக்கெட் நிர்வாகம், கிரிக்கெட் அணி என எல்லாவற்றிலும் கர்நாடகா தரத்தை உறுதிப்படுத்தியிருந்த போதும் இந்திய அணியில் அவர்களுடைய பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. டி20 உலகக்கோப்பை, ஆசியக் கோப்பை, நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இடம்பிடித்த வீரர்களில் பின்னி மட்டுமே கர்நாடக வீரர். டெஸ்ட் அணியில் ஒருவர்கூட கிடையாது. ராஜஸ்தான் அணி தொடர்ந்து இரண்டு முறை ரஞ்சிக் கோப்பையை வென்றபோதும் (2011, 2012) அந்த அணியிலிருந்து ஒருவர்கூட இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போனது விந்தையிலும் விந்தை. அந்த துரதிர்ஷ்டம் கர்நாடகாவுக்கும் வாய்க்கக்கூடாது.

இரண்டு பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டால் அதற்கென்று சில சாதக பாதங்கள் இருக்கும். இதுவரை சாதகமான விஷயங்களையே சந்தித்துக் கொண்டிருந்த சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதிக்கு இப்போது பாதகத்தைச் சந்திக்க வேண்டிய நேரம். ஒரு டென்னிஸ் தொடர்பான இணையதளத்தில் ‘சானியா மிர்சாவும் சோயிப் மாலிக்கும் பிரிந்துவிட்டார்கள்’ என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள். பல மாதங்களாக இருவரும் இணைந்து வெளியே வராததால், மீடியா முன் காட்சி தராததால், ‘ஓஹோ அப்போ பிரிந்துவிட்டார்களா?’ என்று அபத்தமாக தோன்றிய கற்பனையின் விளைவு இது. நல்லவேளையாக உடனடியாக இருதரப்பினரிடமிருந்தும் இதற்கு மறுப்பு வந்ததால் மேலும் வதந்தி பரவாமல் பொசுங்கிப் போனது. ‘இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பதால் சேர்ந்து வாழ நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகப் பிரிந்துவிட்டார்கள் என்று எழுதுவது அபத்தம்’ என்று சோயிப் குடும்பத்தினர் பேட்டி கொடுக்கிறார்கள்.

சானியாவின் தந்தை, ‘இருவரும் யு.எஸ். ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் போட்டிகளில் ஒன்றாக வந்ததை டி.வி.யில், செய்தித்தாள்களில் எல்லோரும் பார்த்திருப்பீர்களே, பிறகு எப்படி இப்படியொரு ஆதாரமில்லாத செய்தியை வெளியிடுகிறார்கள்?’ என்று கோபமாகப் பேசுகிறார். பாவம், இருவரையும் வாழவிடுங்கள்!  இந்திய கிரிக்கெட்டில் மிகக் குறைவான சர்ச்சைகளைச் சந்தித்தவர் ராகுல் டிராவிட். பழகுவதிலும் நடத்தையிலும் ஜென்டில்மேன் என்று பெயர் எடுத்தவர். ‘டங்கன் ஃபிளட்சர் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க வேண்டாம். இந்திய அணி மோசமாக ஆடுவதற்கு அவரும் ஒரு காரணம், ராகுல் டிராவிடை இந்திய அணியின் பயிற்சியாளராக்கவேண்டும்’ என்று திடீரென கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்கு டிராவிட் மௌனமாக இருந்திராமல் தம் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் தகுதியானவன் என்று நினைத்து கவாஸ்கர் என்னைப் பரிந்துரை செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பயிற்சியாளர் பொறுப்புக்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும். ஆண்டுக்கு ஏறக்குறைய 11 மாதங்கள் இந்திய அணியோடு இருக்க வேண்டியிருக்கும். நான் இப்போதுதான் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். இப்போது எனக்கு நேரம் இல்லை என்பதால், கவாஸ்கரின் யோசனையை மறுக்க வேண்டிய நிலைமையில் உள்ளேன்" என்கிறார் டிராவிட். டங்கன் ஃபிளட்சர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்று பி.சி.சி.ஐ.யும் சொல்லிவிட்டதால் அடுத்த 2015 உலகக்கோப்பை வரை ப்ளட்சரே நீடிப்பார் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

ச.ந.கண்ணன்

நடுவானில் மாயமான விமானம்!

 
மலேசியாவில் இருந்து பீஜிங் புறப்பட்ட அந்த மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம், மனித சமுதாயத்தின் அத்தனை புத்திசாலித்தனத்தையும் கேள்விக்குள்ளாக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்கள். மார்ச் 8ஆம் தேதி, 239 பயணிகளோடு புறப்பட்ட எம்.ஹெச். 370 விமானம், அடுத்த சில மணி நேரங்களில் காணாமல் போனது. பன்னிரெண்டு நாள்களாக 26 நாடுகளின் ஒட்டுமொத்த தேடலுக்குப் பின்னரும் ஒரு துரும்பு தகவலும் கிடைக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய சவால்.
 
153 சீனர்கள் பயணம் செய்த அந்த விமானத்தைப் பற்றி மலேசியா சரியான தகவல்களைத் தரவில்லை, பொறுப்போடு நடந்துகொள்ளவில்லை என்று சீனப் பத்திரிகைகளும் வலைப்பதிவாளர்களும் குமுறித் தள்ளுகிறார்கள். அந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் இருவர் பயணம் செய்தனர், அவர்களால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று ஒரு கதை சொல்லப்பட்டது. முதன்மை விமானியான சஹாரி அஹமது ஷாவும் துணை விமானியான ஃபரீக் அப்துல் ஹமீதும் ஏதேனும் சதித் திட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால், உருப்படியான முன்னேற்றம் ஏற்படவில்லை.
 
விமானத்தின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டன, அதனால் இது நிச்சயம் கடத்தலாக இருக்கவே வாய்ப்புண்டு" என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவிக்க, சந்தேகத்தின் ஊசி பல திசைகளில் திரும்பிக்கொண்டு இருக்கிறது. தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் அந்த விமானத்தில் 7 மணி நேரம் வரை பறக்கப் போதுமான எரிபொருள் இருந்தது என்பது ஏராளமான சாத்தியங்களை வழங்குகிறது.
 
கடைசியாக அது பறந்த இடத்தில் இருந்து, தெற்குப் புறமாகத் திரும்பி ஆஸ்திரேலியா பக்கம் போயிருக்கலாம் என்பது ஒரு ஊகம். வடக்குப் பக்கம் திரும்பி, இந்தியா, பாகிஸ்தான் தலைமேல் பறந்து மேலே மத்திய ஆசிய நாடுகளில் தரையிறங்கி இருக்கலாம் என்பது மற்றொரு ஊகம். ஆனால், எந்த ஊகமும் உறுதியாகவில்லை. விமானம் கடத்தப்பட்டு இருந்தால், இத்தனை நாட்களுக்குள் அதைச் செய்த ஏதேனும் ஒரு அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டு, டிமாண்டுகளை வைத்திருக்க வாய்ப்புண்டு. அப்படி எதுவும் நடைபெறவில்லை. அதேபோல், அவ்விமானம் ஏதேனும் ஒரு விமான நிலையத்தில்தான் தரையிறங்கியிருக்க வேண்டும். அப்படி தரையிறங்கிய விவரம் எந்த விமான நிலையத்திலும் பதிவாகவில்லை என்பது இன்னும் சிக்கலைக் கூட்டிக்கொண்டே இருக்கிறது. தரையிறங்கவில்லையா, அல்லது தரையிறங்கியதைச் சொல்ல மறுக்கிறார்களா?
 
மலேசிய விமானத்துக்கு என்னதான் ஆகியிருக்க முடியும்?
 
இணையம் முழுக்க சுவாரசியமான த்ரில்லர் கதை ரேஞ்சுக்கு ஏராளமான ஊகங்கள் புழங்குகின்றன. அந்தமான் தீவுகளில் 570 தீவுகள் உள்ளன, ஆனால், 36 தீவுகளில் மட்டுமே மக்கள் புழக்கம் உண்டு. அதனால், அங்கே ஏதேனும் ஒரு தீவில் மணலில் தரையிறங்கியிருக்கலாம் என்பது ஒரு ஊகம். அதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் முழுமையாக வாய்ப்பில்லாமல் இல்லை என்று அடித்துப் பேசுகிறவர்களும் உண்டு. இன்னொரு ஊகம், விமானம் கஜகஸ்தானில் தரையிறங்கி இருக்கலாம் என்பது. பரந்த பாலைவனத்தில் விமானம் தரையிறங்குவதில் சிரமமில்லை என்று வாதாடுகிறவர்கள் இருக்கிறார்கள்.
 
விமானம் தெற்குப் பக்கம் திரும்பியிருந்தால், விரிந்த இந்தியப் பெருங்கடல், அதன் பின்னர் வரும் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதி. மக்கள் அதிகம் வாழாத இப்பகுதியில் இறங்குவது சுலபம் என்பது இன்னொரு ஊகம். இவ்விமானத்தில் 153 பேர் சீனர்கள் என்பதால், சீனாவில் உள்ள ஏதேனும் பிரிவினை அமைப்பு, இதைக் கடத்தியிருக்க வாய்ப்புண்டு. அவர்கள் அவ்விமானத்தை, சீனாவில் உள்ள மிகப்பெரிய பாலைவனமான தக்லமக்கானில் தரையிறக்கியிருக்கலாம் என்பது இணையத்தில் புழங்கும் மற்றொரு ஊகம்.  

ஒசாமாவையே ஒளித்துவைத்த நாடு என்பதால், பாகிஸ்தான் மீதும் சந்தேகம் எழாமலில்லை. அதன் வடபகுதியில் எங்கேனும் விமானத்தை ஒளித்து வைத்திருக்கலாம் என்பது ஒரு ஊகம். ஆனால், பாகிஸ்தான் விமானத்துறையைச் சேர்ந்தவர்கள் இதை மறுத்துவிட்டார்கள்.
 
ஊகங்களிலேயே மிக மிக சுவாரசியமானது என்றால், அது இரண்டுதான். போயிங் 777 விமானம், மற்றொரு விமானத்தின் நிழலில் பதுங்கிக் கொண்டு காணாமல் போயிருக்கலாம் என்று ஒரு செம கற்பனை ஓடுகிறது. மலேசிய விமானம் கிளம்பிய அதே நேரத்தில்தான் மற்றொரு சிங்கப்பூர் விமானமும் கிளம்பியதாம். அதனால், மலேசிய விமானம், சிங்கப்பூர் விமானத்தின் கீழே அதன் நிழலில் பறந்து சென்றிருந்தால், எந்த ரேடாரிலும் அது தெரிய வாய்ப்பில்லையாம். ஒரு கட்டம் வரை அப்படிப் பறந்துவிட்டு, பின்னர் வேறொரு ரூட்டை எடுத்து, கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகியவற்றுக்குப் போயிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
 
இன்னொரு கற்பனை, வேற்றுகிரகவாசிகள் பற்றியது. வானத்தில் இருந்து வந்த வேற்றுகிரகவாசிகள், அப்படியே தங்களின் மிகப்பெரிய விமானம் தாங்கி விண்கலத்தில், போயிங் 777ஐ லபக்கிக்கொண்டு வேற்றுகிரகத்துக்குப் பறந்துவிட்டார்களாம்!
 
மலேசிய விமானத்தை வைத்து இணையத்தில் ஏமாற்றல்களும் பெருகிக்கொண்டு இருக்கின்றன. கர்நாடகத்தைச் சேர்ந்த போலி சாமியார் ஒருவர் விமானத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக விட்ட புருடா, பயங்கர காமெடி. அதேபோல், இதோ விமானம் தரையிறங்கிய படம், வீடியோ என்று போலி சுட்டிகளும் வளையவந்து கொண்டே இருக்கின்றன. அதைச் சொடுக்கினால், உங்கள் கணினியில் வைரஸ்கள் தொற்றிக்கொள்வது உறுதி.
 
அமெரிக்காதான் இந்த விமானம் காணாமல் போனதில் அதிகம் பயந்து போயிருக்கிறது. ரேடார்கள், சாட்டி லைடுகள் ஆகியவற்றின் பார்வையில் இருந்து தப்பித்து, ஒரு விமானத்தைக் கடத்த முடியும் என்பதற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கலாம். வருங்காலத்தில் இதேபோன்று செயல்பட்டு, மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த தீவிரவாதிகள் முனையலாம் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கருதுகிறார்கள்" என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் சொல்கிறது.
 
விமானம் பற்றி மர்மம் நீடிக்கும்வரை, புதுப்புது கதைகளும் ஊகங்களும் பயங்களும் அதிகரிக்கப் போவது உறுதி.

துளசி

வலைக்கு (www) வெள்ளி விழா!

இந்த மாதத்துடன் ‘இணைய வலை’ (www) வெள்ளி விழா கொண்டாடுகிறது, தெரியுமா? மார்ச் மாதம் 1989-ல்தான் முதன் முதலில் ‘வையவிரிவு வலை’ என்ற 'WWW' குழந்தை பிறந்தது. இதைக் கணினி உலகில் செல்லமாக ‘டப் டப் டப்’ என்று கூறுவர் (டபிள்யூவின் சுருக்கம் டப்). சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் உலக நடப்பை செய்தித்தாளில், தொலைக்காட்சியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்று உலகின் எந்த மூலையில் நடக்கும் செய்தியானாலும் அடுத்த விநாடியே நம் கண்முன் வந்து விடுகிறது. 

‘உலகமே ஒரு நாடக மேடை’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னதை நிரூபித்துக் காட்டியது WWW என்றால் அது மிகையாகாது. நாடக மேடையில் நடக்கும் விஷயம் நேரடியாகக் காண்பவர் கண்களுக்கு விருந்தாவது போல், உலக அரங்கில் நடந்தேறும் விஷயங்கள், மக்களின் அனுபவங்கள் அனைத்தும் வலையின் உபயத்தால் நம் கண்முன்னே!இன்று உலக மக்கள் தொகையில் 40% பேர் இணையத்தால் இணைக்கப்பட்டுள்ளனர். அதாவது சுமார் 300 கோடி மக்கள். இணைய வர்த்தகத்தின் மதிப்பு பல லட்ச கோடிகளாகும். வளர்ந்த நாடுகளின் ஜி.டி.பி.யில் (உள்நாட்டு மொத்த உற்பத்தி) 21% இணையத்தின் பங்களிப்பாகும். இணைய வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை வைத்துப் பார்க்கையில் இன்றைய தேதியில் இணைய உலகின் ராஜா என்றால் அது அமெரிக்காதான். இணைய வருமானத்தில் 30% அமெரிக்காவின் தயவினாலேயே கிடைக்கிறது. 1989-ல் சர் டிம் பெர்னர்ஸ்-லீ என்பவர்தான் வலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். பிரவுசர் எனப்படும் இணைய உலாவி ஒன்றை இவரே 1990-ல் எழுதி முடித்தார். 1993இல் இவர் வேலை செய்த நிறுவனம் CERN தான், அதிகாரப்பூர்வமாக WWW என்ற தொழில்நுட்பத்தை உலகுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது. இணையத்தில் மீயுரை (http) கோப்புகளை அணுகுவதற்கான ஒரு கட்டமைப்பே இந்த WWW. CERN‡ நிறுவனத்தில் வேலை பார்த்த பொழுது, ஆராய்ச்சியாளர்கள் படித்த விஷயங்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு நெறிமுறையை உருவாக்கி தம் நிறுவனத்திடம் சொன்னார். அவருடைய கருத்தாக்கம் எல்லோருக்கும் பிடித்துப் போகவே, அவருடன் ஐந்தாறு பேர் சேர்ந்து வலையை உருவாக்கினர்.

"Info.cern.ch" தான் முதன் முதலில் உருவான இணையதளம். இத்தளத்தில் உள்ள "http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html" என்ற பக்கம்தான் முதல் வலைபக்கம். வலை என்றால் என்ன, அதை எவ்வாறு உபயோகிக்க வேண்டும், அதை உருவாக்கிய குழு என்று பல சுவாரஸ்யமான தகவல்கள் இங்கு உள்ளன.  WWWவைப் பொறுத்தவரை அது எந்த மொழியானாலும், எந்த மென்பொருளானாலும், எந்தக் கருவியானாலும் வேலை செய்யும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று மகாகவி கூறியது போல், இதன் துணை கொண்டு யாருடைய உத்தரவும் இன்றி எந்தக் கருத்தை யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் இணையத்தில் சொல்ல முடியும். ஆம், நாம் அனைவரும் ‘இணைய உலகின் மன்னர்’.சர் டிம் பெர்னர்ஸ் - லீ 1955இல் லண்டனில் பிறந்தவர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் இயற்பியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். இங்கிலாந்து பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, இவர் தற்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இணையம் சம்பந்தமான ஆராய்ச்சியில் உதவி வருகிறார். ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் மிகவும் சக்தி வாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக டைம் இதழால் தேர்வு செய்யப்பட்டவர். நல்ல பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.இத்தருணத்தில் www.webat25.org என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். www மற்றும் இணைய உலகு சந்திக்கும் சவால்கள், அதன் எதிர்காலம், மீதமுள்ள 400 கோடி மக்களை எவ்வாறு இணையத்துக்கு அழைத்து வருவது, வலையின் உபயோகங்கள் இப்படிப் பலதரப்பட்ட விஷயங்களை விவாதிக்க மேற்கண்ட வலைதளத்துக்கு விஜயம் செய்யவும்.

தி.சு.பா.

அருள்வாக்கு - படிப்பும் குற்றமும்!

பொதுவாக லோகம் முழுக்கப் படிப்புமுறை இருக்கும் நிலையில் எங்கே படிப்பு ஜாஸ்தியோ அந்த ஊரில், அந்த நாட்டில்தான் குற்றமும் ஜாஸ்தி நடக்கிறதென்று தெரியும். ஹைஸ்கூல், டிகிரி தரும் காலேஜ், டாக்டரேட் தருகிற உயர்ந்த ஸென்டர்கள் என்று ஒன்றுக்குமேல் ஒன்றாக வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளில்தான் குற்றங்களும் வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். எழுத்தறிவில்லாத காட்டுக்குடிகளும் மலைவாஸிகளும் உள்ள இடங்களில்தான் போலீஸுக்கு ரொம்பவும் வேலை குறைச்சல், வக்கீல்களுக்குத் தேவை இல்லை என்று தெரியும்.
 
படிப்பு ஜாஸ்தியாக ஆக நூதன நூதனமாக ஏமாற்று வித்தைகள் செய்கிற ஸாமர்த்யங்களும் வளர்கின்றன. தொழில்கள் நடத்துகிறவர்களும் அரசியல்வாதிகளும் செய்கிற பேற்று மாற்று, எங்கே போனாலும் ரஹஸ்யத்தில் நடக்கும் லஞ்சம் முதலான அநேகக் குற்றங்கள் இந்த ஸாமர்த்தியத்தில் கோர்ட் வரை வராமலே போகின்றன. அதனால் போர்டு போட்டாலும்கூட அதில் கால்வாசிக் குற்றங்களைத்தான் காட்ட முடியும்! முக்கால்வாசிக் குற்றங்கள் நீதி ஸ்தலத்துக்கும், போலீஸுக்கும் வராமலே போயிருக்கும். படிப்பினால் புத்தி ஸாமர்த்யம் அதிகரிப்பதில் ஸிவில் குற்றங்கள் மாத்ரம்தான் அதிகரித்திருக்கின்றன என்றில்லை. பெரிதான பாங்குக் கொள்ளை, ஒரு மந்த்ரி ஸபையையே சுட்டுக் கொன்றுவிடுவது, கோஷ்டி கோஷ்டியாகத் தகாத கார்யத்துக்காகப் பெண்களைக் கடத்திப் போவது மாதிரி க்ரிமினல் குற்றங்களும், ராஜாங்கத்தையே வெறும் பௌதிக பலத்தால் புரட்டிவிடும் ‘கூ’(Coup) முதலியனவும், படிப்பு ஸாமர்த்யத்தாலேயே நன்றாக ஜோடித்துத் திட்டம் போட்டு நடத்தப்படுகின்றன. இதெல்லாம் போக நேராகவே அடிதடி, பிஸ்டலைக் காட்டுவது, சுடுவது முதலானவையும் படிப்பாளிகள் உள்ள நாடுகளில் ஏறிக்கொண்டே போகின்றன. யூனிவர்ஸிட்டி லெக்சரர்கள்கூட ஸெனட்டில் நடக்கும் மீட்டிங்குகளில் கல்லெறிவது, நாற்காலிகளைத் தூக்கி அடித்துக் கொள்வது என்று போகிற அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.
 
படிக்கத் தெரியாத ஆதிவாஸிகள் குடும்பச் சண்டை, கோஷ்டிச் சண்டை என்று எப்போதாவது ஒருத்தர் தலையை ஒருத்தர் சீவிக்கொள்வதாயிருக்கலாம். அது ஏதோ ஆத்திர, க்ஷாத்திரத்தில் ஒரு வேகம் வந்த ஸமயத்தில் செய்வதாகத்தான் இருக்கும். மற்றபடி இத்தனை தினுஸு தினுஸான குற்றங்கள் அவர்களுக்குத் தெரியாது. ஃபோர்ஜரியில் ஆரம்பித்து ப்ளான் போட்டு செய்யப்படும் ஏமாற்றுக் குற்றங்களும், Organised- ஆகச் செய்யப்படும் திருட்டுப் புரட்டுகளும் படிக்கத் தெரியாத பழங்குடி மக்களுக்குத் தெரியாது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 
 
 

Thursday, March 20, 2014

மச்சங்களும் பலன்களும்

மச்சங்களின் நிறங்களும், பலன்களும் 

மச்சம் அழுத்தமான கறுப்பு நிறத்தில் இருந்தால், வாழ்க்கை எப்போதுமே உன்னத நிலையில் இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் பிறக்கும்போதே நிம்மதியான சூழ்நிலையில் பிறப்பார்கள். கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருந்தால், சிறிது அமைதியற்ற நிலையில் வாழ்க்கை கழியும். வருமானம் நிரந்தரமாக இராது.

மச்சம் சாம்பல் நிறமாக இருப்பின், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை பெற்றுத் திகழ்வார்கள். வருமானம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நிச்சயமான நிரந்தரமான வருமானம் இருக்கும்.

பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், மகான்களாக, கல்விமானாக, விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்கள்.

வெண்மை நிற மச்சம் இருப்பின் பலசாலிகளாகவும், துணிச்சல் மிக்கவராகவும், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுபவர்களாகவும் இருப்பார்கள். சற்று நீல நிறமான மச்சத்தைப் பெற்றோர், பழைமை விரும்பிகளாக இருப்பார்கள். வணிகத்துறையில் ஆர்வம் இருக்கும்.

குங்கும நிறமாக மச்சம் அமைந்திருந்தால், இவர்கள் உல்லாசப் பிரியர்கள். தந்திரமான நுண்ணறிவுடன் திகழ்வர். மஞ்சள் நிறமாக அமைந்திருக்குமானால் மிகவும் கலகலப்பான இயல்பு கொண்டவர்களாக, எல்லோரிடத்திலும் நட்புடன் பழகுவார்கள்.

மச்சம் இருக்கும் இடமும் பலன்களும் 

நெற்றி மச்சம்:
நெற்றியில் மச்சம் அமைவது விசேஷமான நிலை. ஞானத்துக்கான அம்சம். விருப்பம்போல் வாழ்க்கை அமையும். கணவனின்/மனைவியின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

கண்களில் மச்சம்:
வலது கண் புருவத்தில் மச்சம் அமைந்திருப்பின் அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். 30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் கொடுக்கும். இவர்கள் காதல் திருமணம் செய்துகொள்வார்கள் என்பது விதிமுறை.

இடது கண்ணில் மச்சம் உடையவர்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்கள். பிறருக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள்.


மூக்கில் மச்சம்: 

இவர்கள் முன்கோபிகள்; சிடுசிடு சுபாவமிக்கவர்கள். மனைவி மக்களிடம் ஒருவித கெடுபிடியுடன் இருப்பார்கள். பெண்களுக்கு மூக்கு நுனியில் மச்சம் இருந்தால், சேவா மனப்பான்மை பெற்றிருப்பார்கள். அணிமணிகளில் விருப்பம் இருக்காது. திருமண விருப்பம்கூட இல்லாமல் சந்நியாசிபோல இருப்பார்கள்.

உதடுகளில் மச்சம்: 

உதடுகளில் உள்ள மச்சம் பெருஞ்செல்வத்தைக் குறிக்கும். தாராள பணப்புழக்கம் இருக்கும். சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிட்டும். கல்வியில் உயர்ந்த நிலையை எளிதில் அடைவார்கள். கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை போன்ற ஏதாவது ஒன்றில் பெரும்புகழை இவர்கள் எய்தக்கூடும். கட்டுப்பாடில்லாமல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இவர்களிடம் இருக்கும்.

முகவாயில் மச்சம்: 

நல்ல அம்சமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். ஜோதிடம், வைத்தியம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். குடும்பவாழ்வு திருப்திகரமாக இருக்கும்.

செவிகளில் மச்சம்: 

வலது செவியில் மச்சம் அமைந்திருப்பது, ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். பலவிதமான தொழில்களில் நல்ல பயிற்சியும், தேர்ச்சியும் இருக்கும். பெற்றோரிடமும் மனைவியிடமும் அதிக பாசம் இருக்கும்.

இடது பக்க செவியில் மச்சம் இருப்பது, ஆண்களுக்கு நல்ல பலனை அதிகம் தருவதில்லை. பெண்களுக்குச் சிறந்த பலனைத் தரும். பணி எதுவாயினும் முயற்சியுடன் வெற்றியடைவார்கள். பிற்பகுதி வாழ்க்கை இவர்கள் விரும்பியவாறு அமையும்.

நாக்கில் மச்சம்: 

அறிஞர்கள், மேதைகள், ஆராய்ச்சியாளர் கள், விஞ்ஞானிகள், மகான்கள் போன்றோருக்குத்தான் நாக்கில் மச்சம் இருக்கும். இவர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனியவர்களாக இருப்பார்கள். குழந்தை உள்ளம் படைத்தவர்கள்.

கழுத்தில் மச்சம்: 

கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள் அகன்ற முகமும், திரண்ட உருவ அமைப்பும், திடகாத்திரமும், நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள். யாருக்கும் அஞ்சாதவர்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இவர்களுக்குப் பொறாமை குணம் கிடையாது.

முதுகில் மச்சம்: 

முதுகின் வலப்புறம் மச்சம் இருந்தால் பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இயங்குவர். வலப்புறம் மச்சம் உடைய பெண்கள், வேலை செய்து சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.

முதுகின் இடப்புறம் மச்சம் இருந்தால் இளமைப் பருவத்தில் மந்த நிலை ஏற்படும். கல்வி கற்பதில் இடையூறு, முயற்சிகளில் தோல்வி ஏற்படும்.

மார்பில் மச்சம்: 

பொதுவாக மார்பில் மச்சம் உடையவர்கள் இளமையில் பெரும் துன்பங்களை அனுபவித்து, பிற்கால வாழ்வில் நல்ல சுகத்தை அடைவர். மனத்தில் என்ன நினைக்கிறார்களோ அதை வெளிப்படையாக வாய் திறந்து சொல்லுவார்கள். வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் ஏற்பட்டாலும், அதைப் பிறர் அறியாவண்ணம் சகித்துக்கொள்வார்கள். சிற்பம், மரவேலை போன்ற ஏதாவது ஒரு கலையில் சிறந்து விளங்குவார்கள்.

இடுப்பில் மச்சம்: 

வலப் பக்க இடுப்பில் மச்சம் இருப்பின் நேர்மையாளர்கள்; அளவுக்கு அதிகமாகப் பேசமாட்டார்கள். தங்களுடன் நெருங்கிப் பழகுபவர்களிடத்தில் அளவுகடந்து அன்பு செலுத்துவார்கள். இதேபோல், மற்றவர்களால் அன்பு செலுத்தப்படும்போது மனமுருகி அடிமையாகிவிடுவார்கள்.

இடப்பக்கம் மச்சம் இருப்பின், திடமான உள்ளம், கடுமையாக உழைக்கும் இயல்பைப் பெற்றிருப்பர். இவர்கள் பிறந்த இடத்தை விட்டு வெளி இடத்தில் வாழ்வை அமைத்துக்கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணலாம். கள்ளம் கபடமற்றவர்கள். ஆனால், எதையும் நிதானித்துச் செய்யும் பொறுமை இல்லாததால், காரியம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு.

தொடைகளில் மச்சம்: 

பொதுவாக, தொடைகளில் மச்சம் ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். வலது தொடையில் மச்சம் உடைய ஆண்கள் மனஉறுதி படைத்தவர்கள். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிப்பார்கள். இவர்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். பிறர் எண்ணங்களைக் கண்டறியும் சக்தி படைத்தவர்கள். இவர்களை யாருமே ஏமாற்ற முடியாது. இவர்களை யாராலும் புரிந்துகொள்ள இயலாது. கல்விப் பயிற்சியில் அக்கறையும் ஆர்வமும் காட்டமாட்டார்கள். இவர்களிடம் நேருக்கு நேர் உரையாடினால், ஜன்ம விரோதியாக இருந்தாலும் அவர் இவரிடம் சரணடைய வேண்டியதுதான்.

உள்ளங்கையில் மச்சம்: 

ஆண்களுக்கு வலது கையில் மச்சம் இருப்பது மிகவும் உயர்ந்த அம்சமாகும். வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர் சகல சாஸ்திரங்களிலும் வல்லவர்களாக இருப்பார் என்பது விதி. குறிப்பாக கணித சாஸ்திரம், நீதி இயல், பொறியியல் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர்கள். சிறுகச் சிறுக முன்னேறி உன்னதமான நிலையை அடைவார்கள்.

கை விரல்களில் மச்சம்:
கைவிரல்களில் அமையும் மச்சங்களுக்கு ஏறத்தாழ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான பலன்கள்தான். கட்டைவிரலில் மச்சம் இருந்தால், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பர். ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால், தலைமைப்பொறுப்பு வகிப்பவர்களாக இருப்பர். ஆட்சி அதிகாரம் செய்யக்கூடிய அம்சம் பெற்றவர்களாக இருப்பர். தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.

நடுவிரலில் மச்சம் இருப்பின், கலை உள்ளம் படைத்தவர்களாக இருப்பர். குறிப்பாக வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள், நடனம், நாடகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

மோதிர விரலில் மச்சம் அமைந்திருப்பின், அழகான தோற்றமும் அளவான உடல் அமைப்பும் அமைந்திருப்பது இயற்கை. எதையும் கூர்மையாக விளங்கிக்கொள்ளும் இயல்பு உண்டு. எதிர்ப்புகளை இவர்கள் முறியடிப்பார்கள்.

சுண்டு விரலில் மச்சம் இருந்தால், சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள் என்பது சாஸ்திர விதி. கல்வித் துறையில் இவர்களுக்கு மிகவும் உயர்ந்த தகுதி அமையும். எதிலும் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது இவர்களின் குணம். தனியார் பதவியில் உயர்நிலையில் இருப்பார்கள். அரசியல் துறையில் பேச்சாளராக இருத்தல், வழக்கறிஞராகப் பேரும் புகழும் அடைதல். இடது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால், விகாரமான தோற்றத்தைப் பெற்று இருப்பார்கள்; பிடிவாத குணம் இருக்கும்.

மச்சங்களின் வடிவ லட்சணமும் பலன்களும்: 

மச்சம் உடலின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மிகச் சிறிய புள்ளி வடிவில் இருப்பின், அவர்களின் இயல்பு மர்மம் நிறைந்ததாக இருக்கும். யாருடனும் தாராளமாகக் கலந்து பழகமாட்டார்கள். தனிமையாக ஒதுங்கியிருப்பார்கள். அவர்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அவர் உயர்ந்த சிந்தனைவாதியாகவோ, அல்லது சமுதாயத்துக்குத் தொல்லை தரக்கூடிய குற்ற மனப்பான்மை உடைய நபராகவோ இருப்பார். வாழ்நாள் முழுவதும் பணப் பற்றாக்குறை இருக்கும்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு, மிளகின் அளவைவிட சற்று பெரிதான அளவில் மச்சம் அமைந்திருக்கும். ஏதாவது ஒரு வகையில் மகான்கள், அறிஞர்கள், மேதைகளாகத் திகழ்வார்கள். சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டார்கள்.

கொட்டைப் பாக்கு அளவு மச்சமிருப்பின் புரட்சிகரமான சாதனைகள் ஆற்றும் தீவிரவாதிகள். பிறருடைய கண்டிப்பும் எதிர்ப்பும் இவர்களுடைய லட்சிய நோக்கு என்ற தீபத்தைப் பிரகாசமாக எரியவிடும் எண்ணெயாக அமையும்.

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள் 

Tuesday, March 18, 2014

இன்ஷூரன்ஸ்:புதிய விதிமுறைகள் யாருக்கு பயன்?

இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ தெரிவித் திருந்தது. இதன் விளைவாக இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப்பிறகு வெளியான புதிய விதிமுறைகளுடன்  ஏறக்குறைய 500 புதிய பாலிசிகள் சந்தைக்கு வந்துள்ளது.

கூடுதல் கவரேஜ்!
''டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை எந்தப் புதிய மாற்றமும் செய்யப்படவில்லை. லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்தான் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது ஐ.ஆர்.டி.ஏ. இதிலும் குறிப்பாக, எண்டோவ்மென்ட் பாலிசிகளில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. இதன்படி, ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு வெளியான பாலிசிகளில் இன்ஷூரன்ஸ் எடுத்த பாலிசி தாரருக்கு அதிக அளவிலான கவரேஜ் இருக்கும். அதேநேரத்தில், முதலீட்டுப் பகுதி குறைவாக இருக்கும். இன்ஷூரன்ஸ் என்பதே பாதுகாப்புக்காகத்தான் என்பதால், கவரேஜ் அதிகமாக இருக்குமாறு பாலிசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


மேலும், ரெகுலர் பிரீமியம் செலுத்தும் பாலிசிகளில் 45 வயதுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஆண்டு பிரீமியத் தொகையில் 10 மடங்கு கவரேஜ் கிடைக்கும் வகையிலும், 45 வயதுக்கு அதிகமானவர்களுக்கு 7 மடங்கு கவரேஜ் தொகை கிடைக்கும் வகையிலும் பாலிசிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

சரண்டர் மதிப்பு உயர்வு!

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மறுசீரமைப்பு செய்தபிறகு வெளியான பாலிசிகளில் சரண்டர் மதிப்பு அதிகமாக இருக்கும். அதாவது, சரண்டர் செய்யும் காலத்தைப் பொறுத்துச் செலுத்திய பிரீமியத்தில் குறைந்தபட்சம் 30-லிருந்து அதிகபட்சம் 90% வரை சரண்டர் மதிப்பு கிடைக்கும்.

10 வருட பாலிசிகளை  மூன்று வருடம் பிரீமியம் செலுத்தினால்தான் சரண்டர் செய்ய முடியும் என்பதைத் தற்போது 2 வருடமாகக் குறைத்துள்ளார்கள். அதேசமயம் 10 வருடங்களுக்குமேல் உள்ள பாலிசிகளை 3 வருடம் பிரீமியம் கட்டியிருந்தால் மட்டுமே சரண்டர் செய்ய முடியும். மேலும், சரண்டர் மதிப்பில் முதல் பிரீமியம் கழிக்கப்பட மாட்டாது.  பாலிசி எடுத்து 4-7 ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்யப் பட்டால் செலுத்திய பிரீமியத்தில் 50 சதவிகிதமும், கடைசி 1-2 ஆண்டு களுக்குள்  சரண்டர் செய்தால் 90% வரையிலும் பணம் திரும்பக் கிடைக்கும்.

இறப்பு பலன் அதிகம்!
புதிய விதிமுறைகளின்படி, பாலிசி முதிர்வடைவதற்கு முன்பே பாலிசிதாரர் இறக்க நேரிட்டால் கிடைக்கும் கவரேஜ் தொகையின் அளவையும் ஐ.ஆர்.டி.ஏ அதிகரித் துள்ளது. அதாவது, சிங்கிள் பிரீமியம் செலுத்தும் பாலிசியில் பாலிசிதாரர் 45 வயதுக்குக் கீழ் இருந்தால் செலுத்திய பிரீமியத்தில் 125 சதவிகிதமும், 45 வயதுக்கு மேல் இருந்தால் 110 சதவிகிதமும் குறைந்தபட்ச கவரேஜ் தொகையாகக் கிடைக்கும்.

வகைபடுத்தப்பட்ட பாலிசிகள்!
இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் பாலிசிகள் வகைபடுத்தப்பட்டுள்ளன. அதாவது, நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் பாலிசிகளை நான்லிங்க்டு வேரியபிள் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் (Nonlinked Variable Insurance Products) என்றும், வருமானம் மாறிக்கொண்டே இருக்கும் பாலிசிகளை வேரியபிள் லிங்க்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகள் (Variable Linked Insurance Products) என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.



இறப்பு விகித அட்டவணை!

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர் களுக்கான பிரீமியம் என்பது இறப்பு விகித அட்டவணையின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப் படும். இப்போது மருத்துவ வளர்ச்சி யின் விளைவாக, சராசரி இறப்பு வயது அதிகரித்துள்ளது. ஆனால், எல்.ஐ.சி மிகவும் பழைய இறப்பு விகித அட்டவணையைப் பயன்படுத்தி வந்தது. இதனால் அந்த பாலிசியின் பிரீமியமும் அதிகமாக இருந்தது. தற்போது புதிய இறப்பு விகித அட்டவணையை எல்.ஐ.சி பின்பற்ற தொடங்கியுள்ளதால், எல்.ஐ.சி நிறுவனம் வழங்கும் பாலிசிகளின் பிரீமியம் குறைய வாய்ப்புள்ளது''.


சரியான வருமானம்!

பாலிசி மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை 6-10 சதவிகிதமாக இருக்கும் என இன்ஷூரன்ஸ் பாலிசி விளம்பரங் களில் சொல்லப்படுகின்றன. இந்த வருமானம் நிச்சயம் கிடைக்குமா என்றால் அது சந்தேகம்தான். எனவே, வருமானம் பற்றிச் சொல்லப்படும் அனுமானங்கள் சரியாக இருக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ சொல்லியுள்ளது. பாலிசிகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 4-8 சத விகிதத்தில் கிடைக்கும் வருமான அட்டவணைகளை மட்டுமே விளம்பரங்களில், பாலிசி விளக்க ரசீதுகளில் பிரசுரிக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ வலியுறுத்தியுள்ளது.

குறுகிய கால பாலிசிகள்!

இதுவரை குறைந்தபட்சம் 10 ஆண்டு களுக்கான எண்டோவ்மென்ட் பாலிசிகளே நடைமுறையில் இருந்தன. இப்போது 5 ஆண்டுகளுக்கான எண்டோவ்மென்ட் பாலிசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.  

சேவை வரி!

பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரீமியத்துக்கான சேவை வரியை 2013 வரை எல்.ஐ.சி.யே செலுத்தி வந்தது. பாலிசியில் கிடைக்கும் போனஸ் தொகையில் அந்தச் சேவை வரி கழித்துக்கொள்ளப்பட்டது. இனிமேல் சேவை வரி பாலிசிதாரர்தான் செலுத்தவேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ தெரிவித்துள்ளது. இதனால் பாலிசியின் பிரீமியம் அதிகரிக்கும். அதேநேரத்தில் போனஸ் தொகை அதிகமாக கிடைக்கும். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே சேவை வரியை பாலிசிதாரர்களிடம்தான் வசூலித்து வந்தது. பாலிசி எடுத்த முதல் வருடம் 3.09 சதவிகிதமும், அடுத்த வருடங்களில் 1.545 சதவிகிதமும் சேவை வரி இருக்கும்.

ஏஜென்ட் கமிஷன்..!

ஐந்து ஆண்டு பாலிசிக்கு முதல் வருடம் பிரீமியம் செலுத்தும்போது ஏஜென்டுக்கு 15 %கமிஷன் கிடைக்கும். அதேநேரத்தில் 10 வருடகால பாலிசி களுக்கு அதிகபட்சமாக 30 சத விகிதமும், 12 வருடத்துக்கு மேற்பட்ட பாலிசிகளுக்கு 35 சதவிகிதமும் கமிஷன் கிடைக்கும். இதுவே 2, 3-வது வருடங்களுக்கு 7.5 சதவிகிதமும், அதற்குப்பின் 5 சதவிகிதமும் கமிஷன் கிடைக்கும்.  இதனால் பாலிசி கட்டணங்கள் குறையும்''
 

வீட்டுக் கடன்: கட்டாயம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

இன்றைக்குச் சொத்து வாங்குபவர்களில் பெரும்பாலானோர், வீட்டுக் கடன் மூலமாகவே வாங்குகிறார்கள். வீட்டுக் கடனுக்குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். இல்லையெனில் சொந்த வீட்டில் சோகமாக வசிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். வீட்டுக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம் .

1. மார்ஜின் மணி! 

தனி வீடோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்போ, எதை வாங்குவதாக இருந்தாலும் மொத்த தொகைக்கும் கடன் தரமாட்டார்கள். சுமார் 20 சதவிகித தொகையை வீடு வாங்குபவர் தன் கையில் இருந்துதான் போடவேண்டி இருக்கும். சிலர் இந்த மார்ஜின் தொகைக்கு பெர்சனல் லோன் வாங்குகிறார்கள். இதனால்,  வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ, பெர்சனல் லோன் இஎம்ஐ என அதிகத் தொகை சம்பளத்திலிருந்து போகும். அந்த வகையில் பணச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

இதைத் தவிர்க்க இந்த மார்ஜின் தொகையை முன்னரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் அல்லது கடன் தொகையைக் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். மனை வாங்கி வீடு கட்டினால் இப்போது சிறிய வீடாகக் கட்டிக்கொண்டு, பிற்பாடு அந்த வீட்டை விரிவாக்கம் செய்யலாம். வீட்டுக் கடன் மாத தவணை கைக்குக் கிடைக்கும் சம்பளத்தில் 40-45 சதவிகிதத்தைத் தாண்டாதவாறு இருத்தல் அவசியம்.

2. கடன் வாங்கும் வங்கி / நிறுவனம் தேர்வு! 

இன்றைக்குப் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள், தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் எனப்  பல வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குகிறது.  

அரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் வாங்க, நீங்கள் அவர்களைத் தேடி போகவேண்டி இருக்கும். தனியார் என்றால் உங்களின் வீடு தேடி வந்து கடனுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிடுவார்கள்.பொதுவாக, தனியார் வங்கிகள் / தனியார் வீட்டு வசதி நிறுவனங்களை விடப் பொதுத்துறை வங்கிகள் / பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங் களில் கடனுக்கான வட்டி சுமார் 1% குறைவாக இருக்கும்.

வீட்டுக் கடன் என்பது ஒரு முறை செய்யப்படும் விஷயம் என்பதால் வங்கி அமைந்திருக்கும் இடத்துக்கான தொலைவை பார்க்க வேண்டியதில்லை. வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிதான் நம் வீடு அல்லது அலுவலகத்தின் அருகில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு இது தேவை இல்லை.இ.சி.எஸ், முன்தேதியிட்ட காசோலைகளைத் தருவதன் மூலம் தூரம் ஒரு சுமையாக இருக்காது. வசதி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்துத் தூரமாக இருக்கும் வங்கி / நிறுவனத்தையும் தேர்வு செய்து வீட்டுக் கடன் வாங்கலாம்.

3. வீட்டுக் கடனுக்கான ஒப்புதல்! 

வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளையா அல்லது அதன் மத்திய பரிசீலனை மையமா (சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) என்பதைக் கவனிப்பது முக்கியம். கிளை அலுவலகமே கடன் வழங்கிவிடும் என்றால் விரைவாகக் கடன் கிடைத்துவிடும்.வங்கிகளின் மத்திய பரிசீலனை மையத்தில் வீட்டுக் 
கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்தக்
கூட்டத்தில் உங்களுக்குக் கடன் கிடைக்க அதிகநாள் ஆகக்கூடும். எனவே, வங்கிக் கிளைகளே கடனுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து கடன் வாங்குவது நல்லது.

4. கட்டணங்கள் முக்கியம்! 

வீட்டுக் கடன் வாங்கும்போது பரிசீலனைக் கட்டணம், ஆவணக் கட்டணம் என வங்கிகள்/வீட்டு வசதி நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவிகிதக் கட்டணத்தை வசூலிக்கும். இவை தவிர, பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீனியன் எனத் தனியாகக் கட்டணம் வாங்கும் வங்கிகளும் இருக்கின்றன. சில வங்கிகளில், முதலில் வாங்கப்படும் பரிசீலனைக் கட்டணத்திலே இந்த வேலையும் அடங்கிவிடும். அந்த வகையில், மொத்தமாகக் கட்டணங்கள் எல்லாவற்றையும் கூட்டி, எந்த வங்கியில் குறைவாக இருக்கிறதோ, அதில் கடன் வாங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

5. கான்ட்ராக்டரின் தரம்! 

நீங்கள் வீடு வாங்கப்போகும் புரமோட்டர்/ பிளான்/ கான்ட்ராக்டரின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை அறிந்து அதன்பிறகு தேர்வு செய்வது நல்லது. இல்லை எனில் சொன்ன நேரத்தில் உங்களுக்கு வீட்டை முடித்துச் சாவியைத் தருவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் வீடு வாங்கப்போகும் புரமோட்டர் அல்லது உங்களுக்கு வீடு கட்டித் தரப்போகிற பில்டரை பற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.

6. கடனுக்கான காசோலை!
மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, வீட்டுக் கடனுக்கான கடன் காசோலையை புரமோட்டர்/பில்டர்/கான்ட்ராக்டருக்கு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் தரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுதான் தரவேண்டும் என்பதை ஆரம்பத்திலே தெரிவித்துவிட வேண்டும். இல்லையெனில் பில்டரோ / கான்ட்ராக்டரோ வீட்டு வேலையைச் சரிவர முடிக்காமல் உங்களுக்குத் தெரியாமலேயே பணத்தை வாங்கிச் சென்றுவிடுவார். எனவே, ஜாக்கிரதை!

7. வட்டி விகிதம்! 

வீட்டுக் கடனை பொறுத்தவரை யில், நிலையான (ஃபிக்ஸட்) வட்டி, மாறுபடும் (ஃப்ளோட்) வட்டி என இருவிதமாக வட்டி விகிதம் இருக்கின்றது. நிலையான வட்டி என்பது முதலில்வரும் 3 - 5 வருடங் களுக்கு மட்டும்தான். அதன்பிறகு அப்போதுள்ள நிலையான வட்டி அல்லது ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது கடன் சந்தை வட்டி விகித மாற்றத்துக்கு ஏற்ப ஏறும், இறங்கும்.  நிலையான மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு இடையே சுமார் 1.52% வித்தியாசம் இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். பொதுவாக, கடனுக்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நிலை நிலவினால், ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

மேலும், நீங்கள் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக இருந்தால், சிபில் ரேட்டிங்கில் அதிக ஸ்கோர்கள் இருந்தால் வட்டியில் பேரம் பேசி குறைக்க முடியும். வட்டியை கவனிக்கும் அதே நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு இஎம்ஐ என்பதையும் கவனியுங்கள். கடனுக்கான வட்டியை, கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறை, ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறை என இரண்டுமுறை இருக்கின்றன. கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறையில் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். அந்த வகையில் எந்த வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இஎம்ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள்.

8. கடனைத் திரும்பக் கட்டும் காலம்! 

வாங்கிய கடனை குறைந்த ஆண்டு களில் 5 - 10 ஆண்டுகளில் கட்டினால், மாத தவணை அதிகமாக இருக்கும். இதுவே அதிக ஆண்டுகளில் 15-20 ஆண்டுகளில் கட்டினால் மாத தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆண்டுகளில் கட்டினால் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்கு போகும் தொகை அதிகமாக இருக்கும். இவற்றை அலசி ஆராய்ந்து உங்களால் கட்டக்கூடிய தொகையை இஎம்ஐ-ஆகக் கேட்டுப் பெறுங்கள். பிற்பாடு சம்பளம் உயர்ந்தபிறகு அதிகத்  தொகையைக் கட்டுவதன் மூலம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.

9. கடன் தொகை வழங்கும் நிலை..
 வீடு கட்டுவது என்றால் அஸ்திவாரம், பிளிந்த், நிலை, ரூப் எனப் பலவாறாகப் பிரித்து வீட்டைக் கட்ட கடன் தொகையை  வழங்கும். சில வங்கிகளில் வங்கி மேலாளர்களே வீட்டைப் பார்த்து கடன் தொகையை வழங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையில் வீட்டு வேலை தடைபடாது.சில வங்கிகளில் இன்ஜினீயர்கள் வந்து பார்த்து சர்ட்டிஃபிகேட் தந்தால் தான் அடுத்தநிலைக் கடனைத் தருவார்கள். அப்போது காலதாமதம் ஏற்படக்கூடும். இதுபோன்ற வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தை வங்கி மேலாளரிடம் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

0. மாரடோரியம் பீரியடு! 
 
வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவது எனில் கட்டுமானம் முடிய எப்படியும் 18 மாதம் ஆகிவிடும். இந்தக் காலகட்டத்தில் மொத்த வீட்டுக் கடன், 3 அல்லது 4 பிரிவாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி சேர்ந்திருக்கும். இதனை 'ப்ரீ இஎம்ஐ’ என்பார்கள். இந்த வட்டியை மாதாமாதம் கட்டி வருவது நல்லது.இல்லையெனில் இந்த வட்டியையும் வீட்டுக் கடனாக மாற்றிவிடுவார்கள். நீங்கள் கூடுதல் இஎம்ஐ கட்ட வேண்டிவரும்''.

வீட்டுக் கடன் வாங்கப் போகிறவர்கள் இந்த 10 விஷயங் களையும் கவனிக்கலாமே!

- பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் உதவிப் பொதுமேலாளரும் வீட்டுக் கடன் ஆலோசகருமான ஆர்.கணேசன்.