Search This Blog

Tuesday, December 31, 2013

வரதரின் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று போற்றப்படும் நகரம் காஞ்சி புரம். அப்படிப்பட்ட காஞ்சியம்பதியை நினைக்கும்போதும் சொல்லும்போதும் நமக்குள் சட்டென்று மூன்று விஷயங்கள் சடசடவென விரிந்து நிற்கும். காஞ்சி என்றதும், சிவ காஞ்சியைக் குறிப்பிடும் வகையில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரும், சக்தியின் முக்கிய பீடமாகத் திகழும் ஸ்ரீகாமாட்சி அம்பாளும், விஷ்ணு காஞ்சியைப் பறைசாற்றும் வகையிலான ஸ்ரீவரதராஜரும் நினைவுக்கு வருவார்கள்.
அதிலும் வைஷ்ணவர்கள், 'காஞ்சி வரதா... காஞ்சி வரதா’ என்று கண்ணீர் வடிய பக்தி செலுத்துவார்கள். காஞ்சியில் பிரமாண்ட கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவரதராஜரை, தன்னையும் தன் சந்ததியினரையும் வாழ வைக்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்று கின்றனர் பக்தர்கள். நம் தாயார் எப்படி நமக்குத் தேவையானதை நாம் கேட்காமலே தந்து காப்பாற்றி வருவாளோ அதேபோல, நாம் கேட்காமலேயே நமக்குத் தேவையானதையெல்லாம் தந்து அருளும் கருணையுள்ளம் கொண்டவர் ஸ்ரீவரதர் எனச் சொல்லிச் சிலாகிக்கின்றனர்.
அதுமட்டுமா? தங்களுக்கு ஏற்படுகிற பிரச்னைகளையும், கவலை களையும் அவமானங்களையும் தயக்கமோ குழப்பமோ இல்லாமல் ஸ்ரீவரதரிடம் முறையிட்டு, 'இது உனக்கே நல்லாருக்கா? என்னைக் காப்பாத்திக் கரை சேக்கறது உன் கடமை இல்லியா?'' என்று நண்பனி டம் புலம்புவதுபோல், உரிமையுடன் கேட்பார்கள் பக்தர்கள்.
கடவுளை நண்பனாகப் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிகப்பெரிய ஈடுபாடும் அறிவும் வேண்டும். மனம் முழுவதும் இறை பக்தியும், புத்தி முழுவதிலும் நம்பிக்கையும் குடிகொண்டிருக்க வேண்டும். காஞ்சி யில் அருளும் பெருமாளை, ஸ்ரீவரதராஜரை வரதா வரதா என்று அழைத்துப் பரவசமாகிற பக்தர்கள் பலரும், அவரைத் தோழனாகப் பாவித்துதான் வணங்கிச் செல்கிறார்கள் என்பது தெரிகிறது.
அதேபோல், வைணவர்கள் மட்டுமின்றி, மக்கள் அனைவரும் வரதர் எப்போது திருவீதியுலா வருவார் என ஆவலாகக் காத்துக் கிடப்பார்கள். தவிர, வரதராஜ பெருமாளுக்கு ஒரு வருடத்தில் எந்த மாதத்தில், எந்த நட்சத்திர நாளில் விழா எடுப்பார்கள் என்பதையெல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள். அந்தந்த நாட்களில் ஸ்ரீவரதரைத் தரிசனம் செய்து பூரித்துப் போவார்கள்.
வேலூர் மாவட்டம், ஆரணிக்கு அருகில் வாழைப்பந்தல் என்றொரு கிராமம் உள்ளது. இந்த ஊரில், மெயின் ரோட்டுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்.  
காஞ்சி வரதருக்கு எப்போதெல்லாம் சிறப்பு பூஜைகளும் வழிபாடு களும் கோலாகலமாக நடை பெறுகிறதோ, அப்போதெல்லாம் இங்கே வாழைப்பந்தல் ஸ்ரீவரதராஜருக்கும் பூஜைகள் சிறப்புற நடைபெறும்.
ஐந்து நிலை ராஜகோபுரமும், பிரமாண்டமான நீளமான மதிலும் கொண்டு, ஒருகாலத்தில் கம்பீரத்துடன் நின்ற கோயில்தான் இது. ஆனால் இன்றைக்கு, எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்பதுபோல் நிற்கிற கோபுரம் நம்மைப் பதைபதைக்கச் செய்கிறது. அழகிய கோபுரத்தின் வழியே நுழைய முடியவில்லை. சுற்றுச் சுவருக்கு நடுவே சிறியதொரு பாதையில் சென்றுதான் ஸ்ரீவரதராஜரை தரிசிக்கவேண்டியுள்ளது.
காஞ்சி வரதரைப் போலவே, வாழைப்பந்தல் வரதரும் விழாவின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவாராம். இதைப் பார்க்க ஒருங்கிணைந்த தென்னாற்காடு மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரண்டு வருவார்களாம். ஆனால், வரதரின் வாகனங்கள் எல்லாமே இப்போது சிதைந்தும் பெயர்ந்தும், வண்ணங்களை இழந்து பரிதாப மாகக் காட்சி அளிக்கிறது.
கல் தீப ஸ்தம்பம், பிராகாரம், அதைச் சுற்றிலும் நந்தவனம் என அழகும் சக்தியும் நிறைந்த திருத்தலமாக இருந்திருக்கிறது இந்தக் கோயில். காலப்போக்கில் முள்ளும் புதருமாக மாறிப் போய், சந்நிதிகள் எல்லாம் களையிழந்துவிட்டதுதான் கண்ணீரை வரவழைக்கிறது.
கருவறையில், மூலவரும் உத்ஸவரும் திவ்விய தரிசனம் தருகின்றனர். ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். இவரை ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள்.
ஒருகாலத்தில், திருகூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு வாழைப்பந்தல் என்று இப்போது அழைக்கப்படும் தலத்தில் உள்ள ஸ்ரீவரதரின் ஆலயம், வழிபாட்டுக்கு உரிய அழகிய இடமாகத் திகழ வேண்டாமா? கஜேந்திரன் எனும் யானைக்கு மோட்சம் கிடைத்தது போல், இந்தக் கோயிலின் திருப்பணியில் நாமும் பங்கு பெற்று, மோட்ச கதியை அடையவேண்டாமா?
ஸ்ரீபெருந்தேவித் தாயாரும் ஸ்ரீஆண்டாளும் ஸ்ரீஅனுமனும் அருளும் ஒப்பற்ற இந்தக் கோயிலில் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, மடப்பள்ளி கட்டப்பட்டு, வரதருக்கு நைவேத்தியம் செய்யப் புளியோத ரையும், சர்க்கரைப் பொங்கலும், தயிர்சாதமும் அங்கே மணக்க மணக்கத் தயாராவதற்கு நாமும் நம்மால் ஆன கைங்கர்யத்தைச் செய்வதுதானே நம் கடமை? வாழைப்பந்தல் ஸ்ரீவரதராஜரின் வாகனங்கள் சரிசெய்யப்படுவதற்கும், மண்டபங்களும் கோபுரமும் மதிலும் பழையபடி பொலிவுறுவதற்கும் திருப்பணியில் கலந்து கொண்டால், நம் சந்ததியும் வாழையடி வாழையாய் வாழாதா?

காஞ்சியம்பதி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில், வருடம் முழுவதும் திருவாபரணத்துக்கும், ஸ்வாமியின் திருஅலங்காரத்துக்கும் ஒரு குறைவுமில்லை. ஆனால், அதே திருநாமத்துடன் காஞ்சிக்கு அருகில் உள்ள இந்தப் புராதனத் திருக்கோயிலும் காஞ்சிக் கோயிலைப்  போலவே கம்பீரம் காட்டி நிற்பதுதானே முறை!
பித்ருக்கள் சாபத்தில் இருந்து விமோசனத்தைத் தந்து, நல்ல நிம்மதி யான வாழ்க்கையையும் அருளச் செய்பவர் ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள். ஆயிரம் வருடப் பழைமையான ஆலயம் என்றும், ஆதி கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில் என்றும் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், நாம் தருகிற சிறு திருப்பணிக்கான காரியம் நமக்குப் பன்மடங்காக, வீர்யம் கொண்டதாக, நிம்மதியும் சந்தோஷமும் கொண்ட வாழ்க்கையைத் தந்து, நம்மையும் நம் வம்சத்தையும் வாழச் செய்யும் என்பது உறுதி!  
ஸ்ரீவரதா... ஸ்ரீவரதா... உன் கோயிலில், கும்பாபிஷேகம் எனும் வைபவம் நடைபெறும் நாள் வந்துவிட்டது ஸ்ரீவரதா!
படங்கள்: ச.வெங்கடேசன்
எங்கே இருக்கிறது?
வேலூர் மாவட்டத்தில் உள்ளது ஆரணி. பட்டுக்குப் பெயர் பெற்ற இந்த ஊரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது வாழைப்பந்தல் கிராமம். இங்கே, மெயின் ரோட்டுக்கு அருகிலேயே அற்புதமாக அமைந் துள்ளது ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில். ஆரணியில் இருந்து பஸ் வசதி குறைவுதான். ஆட்டோ வசதி உண்டு.

மகா பெரியவா!

கல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.
சத்தியம் என்றால், வாக்கும் மனசும் சுத்தமாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லி இருக்கிறார்கள்.
சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல; நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில்  சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக, சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே!


ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால், அதையாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ, அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

'தெய்வத்தின் குரல்’ நூலில் இருந்து....

அருள்வாக்கு - முதல் ஸ்தானம்!


‘ராமநாடகம்’ பாட்டைப் போட்டவர் அருணாசலக்கவிராயர். ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் கம்பராமாயணத்துக்கு அடுத்தபடியாக அவருடைய ‘ராமநாடகம்’தான் பிரஸித்தம்.
பிரஸித்தம் என்று புகழ் பெற்றிருப்பதில் இப்படி இரண்டாவது ஸ்தானம் என்றால், ஜனங்களின் வாயிலே புரண்டு வருகிறதிலேயோ அதற்கே கம்பராமாயணத்தை விடவும் முன் ஸ்தானம், முதல் ஸ்தானம். ஏனென்றால் கம்பராமாயணம் எல்லாப் பொதுமக்களுக்கும் புரியாததாகக் கால வித்தியாஸத்தால் ஆகி, இப்போது புலவர் மொழிக் காவியம் என்பதாக ஆகிவிட்டது.
அருணாசலக்கவிராயர் இரண்டே நூற்றாண்டு முன்னாடிதான் இருந்தவர் என்பதாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் பிறந்து எழுபது, எண்பது வயசு ஜீவித்தவர் (1711-1788) அவர். அதனாலும் அவர் பேச்சு மொழி, முக்கியமாக ராக, தாளங்கள் போட்டுப் பாடும்படியான கீர்த்தனங்களாக, மொத்தத்தில் ஸர்வ ஜனரஞ்ஜகமாக ஜனங்களின் வாய்ப் புழக்கத்துக்கு ஜாஸ்தியாக வந்துவிட்டது.
‘ராம நாடகம்’ என்பதாக அது இருப்பதும் ஸர்வ ஜன வசீகரத்துக்கு இன்னொரு காரணம். அதிலே ராமாயணக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டு போகும்போது கவி தன் வாய்மொழியாக மட்டும் அவசியமான அளவுக்கே விருத்தமாகவும் பாட்டாகவும் பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொல்வது, அதைவிட ஜாஸ்தியாக அதிலே வருகிற பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொல்வது என்று ரூபம் பண்ணியிருக்கிறதால் அது நாடகமாகவே நடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அதிலும் Opera என்கிற ஸங்கீத நாடகமாக மாத்திரமில்லாமல் நாட்டிய நாடகம், Dance-Drama என்று சொல்கிறார்களே அப்படி! அந்தப் பாட்டுக்களை நாட்டியத்துக்கு ஏற்ற மாதிரியே அவர் உசிதமான வார்த்தைகளையும் ரஸபாவங்களையும் கலந்து பண்ணியிருக்கிறார்.
இப்படியெல்லாம் அந்த நூல் இருப்பதால் பொது ஜனங்களிலிருந்து ஸங்கீத வித்வான்கள் வரை பல பேரும் பாடியும், கதாகாலகே்ஷபக்காரர்கள் கையாண்டும், ஸதிர்க் கச்சேரி ஸ்திரீகள் ஆடியும், நாட்டிய- நாடகமாக அப்படிப் பல பெண்டுகள் சேர்ந்து நடித்துக் காட்டியும் பல தினுஸிலே அது பரவிவிட்டது. கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் ‘ராம நாடகக் கீர்த்தனைகள்’ என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

சென்டிமென்ட் பொங்கல்?! - ஜில்லா, வீரம்


2014ல் தமிழ் சினிமா தன் ரூட்டை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மிஸ் பண்ண விஷயங்களை இனியும் மிஸ் பண்ணக்கூடாது என்ற நல்லெண்ணம் ஹீரோக்களுக்கும் இயக்குநர்களுக்கும்.
அதுவும் கடந்த சில ஆண்டுகளாக, அரைவேக்காட்டு நகைச்சுவை, டார்க் காமெடி, இரட்டை அர்த்த வசனங்கள் என்று ஒரே ரகளை செய்து கொண்டு இருந்தார்கள். இவை தாம் இன்றைய இளைஞர்களின் டேஸ்டு, அவர்களை தியேட்டருக்கு வரவழைத்து விட்டாலே போதும் என்பதே சினிமாக்காரர்களின் எண்ணம். அதன் உச்சம்தான் பல சினிமாக்களில் டாஸ்மாக் கொடிகட்டிப் பறந்தது. இதெல்லாம் எவ்வளவு நாளைக்குத் தாங்கும்?
முதலில் ஆதரவு தெரிவிப்பது போல் இருந்த இளைஞர்கள் இதையெல்லாம் இன்று ‘போர்’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதுதான் 2013 கடைசியில் கிடைத்த சினிமா பாடம்.
இதனால் இன்னொரு விஷயமும் மிஸ் ஆச்சு. பெண்கள் தியேட்டர் பக்கம் வருவதை முழுமையாகக் குறைத்துக்கொண்டு விட்டார்கள். மாஸ் ஹீரோ படங்களுக்குக்கூட லேடிஸ் கூட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது.
இதே நிலைதான் தெலுங்கிலும். அங்கே ஆக்ஷனும் அசட்டு நகைச்சுவையும் முன்பு கல்லா கட்டியது மாதிரி இப்போது கலெக்ஷன் ஆகவில்லை. ‘நான் ஈ’ மாதிரியான படங்களுக்கு வரவேற்பு கண்டு தெலுங்குத் தயாரிப்பாளர்கள் விழித்துக் கொண்டார்கள். அப்படியொரு படத்தை மீண்டும் மீண்டும் எடுக்க முடியாது அல்லவா? அதனால், எப்போதும் சக்ஸஸ் தரும் சென்டிமென்டைக் கையில் எடுத்துவிட்டார்கள். பவன் கல்யாண் ‘அத்தாரிக்கு தாரிது’ படம் பயங்கர ஹிட். குடும்ப சென்டிமென்ட் பிச்சிக் கொள்ளத் தொடங்கியது.
தமிழ் ஹீரோக்களும் அதே ரூட்டை இப்போது பிடித்துவிட்டார்கள். அஜித்தின் ‘வீரம்’, விஜயின் ‘ஜில்லா’ இரு படங்களும் இந்த (பழைய?) டிரெண்ட்டைப் பிடித்திருக்கின்றன.
கோட்சூட்டு, துப்பாக்கி, வெளிநாடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு அச்சு அசலாக கிராமத்தான் கேரக்டரில் தம்பிகள் மீது பாசம் காட்டும் வெள்ளந்தி மனிதராக அஜித் நடித்துள்ள படம் ‘வீரம்’. இதுவரை இப்படி உணர்ச்சிமிகுந்த வேடத்தில் அஜித் நடித்ததில்லை என யூனிட்டே பாராட்டுகிறது.
படம் முழுக்க வேட்டி, சட்டையுடன் ‘என்ன நான் சொல்றது’ என்ற டைலாக்கைப் பேசி, காலரைத் தூக்கிவிட்டு நடக்கும்போது தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும்" என்கிறார் படத்தின் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா.
எங்களின் 100வது படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும். அஜித்துக்கு ஒரு கதை தயார் செய்யுங்கள்" என்று நாகி ரெட்டி ஆபிஸிலிருந்து கேட்டார்கள். ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்துடன் ‘பாசமிகு அண்ணன் வேடம் அஜித்துக்கு’ என்றால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் சொன்ன கதைதான் ‘வீரம்’. அஜித் கதையைக் கேட்டு உள்வாங்கி நடித்தார். அவருக்காக 50 பஞ்ச் டயலாக் எழுதி வைத்திருந்தேன்.
எனக்காக பஞ்ச் டயலாக் எல்லாம் வேண்டாம். கதைப்படி நான் நடிக்கிறேன்" என்று நடித்துள்ளார். படத்தின் கிளைமேக்ஸ் நிச்சயம் எல்லோரையும் உருக வைத்துவிடும். அப்படி ஒரு சென்டிமென்ட் ஆக்ஷன் காட்சிகளுக்கு ரயில் சண்டையில் அஜித்சாரே டூப் போடாமல் நடித்து, ஆச்சர்யப்படுத்தி உள்ளார். படம் பார்த்தால் ‘தல’க்கு புதிய ஒரு மாஸ் கிடைக்கும்" என்றார்.
தமன்னா கிராமத்துக்கு வந்து ஆராய்ச்சி செய்யும் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். ‘திருமணமே வேண்டாம்’ என்று சொல்லும் அண்ணன் அஜித்தை தமன்னாவை வைத்து விதார்த், பாலா, முனிஸ் செய்யும் கலாட்டா செம காமெடி. முதல் பகுதியிலும் பின்பகுதியிலும் வில்லன்களுடன் ரயில் சண்டை என ஆக்ஷனில் கலக்கும் வேடத்தில் அவருக்கு உதவும் வேடத்தில் தமன்னா நடித்துள்ளார். தம்பிகளால் மனம் உடைந்து கலங்கும் அஜித்துக்கு தமன்னா ஆறுதல் கூறி அரவணைத்துத் தேற்றுபவராக நடித்துள்ளார்.


மதுரை ஜில்லாவுக்கு தாதாவான மோகன்லாலின் வளர்ப்பு மகன் போலிஸ் அதிகாரி விஜய். இவருக்கும் மோகன்லாலுக்கும் நடக்கும் யுத்தம்தான் கதைக்களம். இதில் அம்மா சென்டிமென்டுக்கு நீண்ட நாளைக்குப் பிறகு பூர்ணிமா ஜெயராம். தங்கை சென்டிமென்டுக்கு நிவேதிதா தாமஸ். பூர்ணிமா ஜெயராம், மோகன்லாலுக்கும் விஜய்க்கும் நடுவிலே சிக்கித் தவிக்கும் காட்சி பெண்களை ரொம்ப ஈர்க்குதாம்.
நலிந்த தயாரிப்பாளர்களுக்கு 5 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கும் விழாவில் விஜயிடம் ‘ஜில்லா’ பற்றிக் கேட்டபோது...
இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ரசிக்கும் படமாக இருக்கும். அரசியல் இருக்காது. குடும்பம், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ளது. மோகன்லால் உடன் நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது. ஆக்ஷன் காட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளேன்" என்றார்.
இப்படம் பற்றி இயக்குநர் ஆர்.டி.நேசன் கூறும்போது, படத்தின் முன்பாதியில் விஜய், ‘புரோட்டா’ சூரி, காஜல் அகர்வால் காமெடி மிகவும் பேசப்படும். பின் பாதியில் ஆர்.பே.கிஷோர், ரவி மரியா வில்லன்களுடன் விஜய், மோகன்லாலும் மோதும் சண்டைக் காட்சி மிகவும் பேசப்படும். இதுவரை விஜய் படத்தில் இல்லாத பிரம்மாண்டமும் சென்டிமென்டும் இப்படத்தில் இருக்கும்.
விஜய் ரசிகர்கள் என்னென்ன எதிர்பார்ப்பார்கள் என்பதைத் துல்லியமாகக் கணக்குப் போட்டு எல்லா அம்சமும் பொருத்தி எடுக்கப்பட்டுள்ளது பிளஸ்," என்றவரிடம் ‘ ஜில்லாவில் சென்டிமென்ட்டைக் கூட்ட, ரீ-ஷூட் போனீர்களாமே?’ என்றவுடன், ‘படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலை தீவிரமாக நடக்கிறது. படத்துக்காக ரீ-ஷூட் எடுக்கப்படுகிறது என்ற செய்தியில் துளியும் உண்மை இல்லை. அது வதந்தி" என்று நாசூக்காக மறுத்தார் இயக்குநர் நேசன்.
ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, தமிழ்ப் படங்களின் முக்கிய இரண்டு ஹீரோக்களும் குடும்ப சென்டிமென்டுக்குத் தாவியிருப்பது 2014ன் ஹைலைட்! குடும்பப் பெண்களும் இனி தியேட்டர் பக்கம் நெருங்கலாம்!

ஓ பக்கங்கள் - ஆம் ஆத்மியைப் பார்த்து மிரளும் பி.ஜே.பி. ஞாநி


தில்லியில் மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் அடுத்தடுத்து வென்று ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி கூடத் தன்னை வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பயப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் பி.ஜே.பி பேசுவதையும், செய்வதையும் பார்த்தால் அதுதான் ஆம் ஆத்மிக்கு அதிகம் நடுங்குவதாகத் தெரிகிறது.
தானாக முன்வந்து ஆதரவு அளிப்பதாகச் சொன்ன காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கடைசியில் ஒப்புக் கொண்டதை பி.ஜே.பி.யின் பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆம் ஆத்மி மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது என்கிறார்கள். முதலமைச்சர் கனவுடன் இருந்த பி.ஜே.பி. வேட்பாளர் ஹர்ஷ் வரதன், ஆட்சியை இழந்த ஷீலா தீட்சித்தை விடக் கோபமாகப் பேட்டிகள் அளிக்கிறார்.
அத்தனை பி.ஜே.பி.யினரும் ஆம் ஆத்மி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துவிட்டதே என்று புலம்பித் திட்டுகிறார்கள். இதைக் கூட்டணி என்று வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லி பொய்யை நிஜமாக்கப் பார்க்கிறார்கள். இது கூட்டணி அல்ல என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அறிவு நாணயம் இல்லாமல் அதைச் சொல்லி வருகிறார்கள்.
பி.ஜே.பி.யினரின் வாதத்தில் முக்கியமான அம்சம் என்ன என்று பார்ப்போம். ‘தில்லி மக்கள் தங்களுக்கும் ஆம் ஆத்மிக்கும் போட்ட வோட்டு எல்லாம் காங்கிரஸுக்கு எதிராக, காங்கிரசை அடியோடு அகற்றப் போட்ட வோட்டுதான்’ என்பது அவர்கள் வாதம். இது முழு உண்மையல்ல. ஆம் ஆத்மிக்கு விழுந்த வோட்டுக்களில் பி.ஜே.பி.க்கு எதிரான வோட்டும் கலந்தே இருப்பதாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் ஆம் ஆத்மிதான் இரு கட்சிகளையுமே எதிர்ப்பதாகத்தான் கூறிப் பிரசாரம் செய்தது.
இருந்தாலும் ஒரு வாதத்துக்காக அத்தனை வோட்டும் காங்கிரஸை எதிர்ப்பதற்கானது என்றே வைத்துக்கொள்வோம். அப்படிப் பார்த்தால், மக்கள் நிராகரித்த காங்கிரஸின் ஆதரவைக் கொண்டு ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது, நிராகரிக்கப்பட்ட காங்கிரஸுக்கு மறுபடியும் ஆட்சி மீது கட்டுப்பாடு செலுத்த பலம் கொடுப்பதாகிறதே என்பதுதான் பி.ஜே.பி.யின் கேள்வி.
இப்படி நடக்காமல் இருக்க பி.ஜே.பி. என்ன செய்திருக்க வேண்டும்? அதுதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். அதற்குத்தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆனால் போதுமான எண்ணிக்கை பலம் இல்லாததால் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று சொல்லி நழுவியது. அதற்குப் பதில் அது என்ன செய்திருக்க வேண்டும்? நம் இருவருக்கும் விழுந்த வோட்டு எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்புதானே? அதனால் நீங்கள் எங்களை வெளியிலிருந்து ஆதரிக்க முடியுமா என்று ஏன் ஆம் ஆத்மியைக் கேட்டிருக்கக்கூடாது? அப்படி வெளி ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம்.
அடுத்த வழி என்ன? ஆம் ஆத்மி ஆட்சியை அமையுங்கள். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்று பி.ஜே.பி. சொல்லியிருக்கலாமே. அப்படிச் செய்திருந்தால் காங்கிரஸுக்கு எந்தப் பிடிமானமும் கிட்டியிராதே. ஆனால் பி.ஜே.பி. என்ன செய்தது?
அருண் ஜெட்லிதான் முதன் முதலில் ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற யோசனையையே முன்வைத்தார்.
அது மட்டுமல்ல. அப்படிச் செய்யத் தயங்கிய ஆம் ஆத்மி கட்சியினரை ‘மக்கள் அளித்த பொறுப்பை ஏற்காமல் தட்டிக் கழித்து நழுவுபவர்கள்’ என்று கடுமையாகத் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருந்தார்கள். அந்த வாரங்களின் தினசரி டி.வி.
சேனல் பேட்டிகளை எடுத்துத் திரும்ப ஓட்டினால், இது தெளிவாகத் தெரியும். அதே ஆசாமிகள்தான் இப்போது ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவை ஏற்க முடிவு செய்த அடுத்த நிமிடத்திலிருந்து ‘இது மக்களுக்குத் துரோகம்’ என்றும் ‘இது கூட்டணி’ என்றும் அவதூறுப் பிரசாரம் செய்கிறார்கள்.
அதிக இடம் பெற்ற இவர்களும் ஆட்சி அமைக்க மாட்டார்கள். ஆட்சி அமைக்கும்படி இவர்களே தூண்டிய ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தால் அதையும் தவறு என்பார்கள். அப்படியானால் என்னதான் தில்லியில் நடக்க வேண்டும்? ஆம் ஆத்மி முதலில் சொன்னது போல இன்னொரு தேர்தலா? அதுதான் பி.ஜே.பி.யின் நிலை என்றால், ஏன் பி.ஜே.பி. அதை அறிவித்துவிட்டு தங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி ஏற்ற மறு நிமிடமே ராஜினாமா செய்துவிடுவார்கள் என்று அறிவித்து தேர்தலை நடத்த நிர்ப்பந்திக்கக்கூடாது?
அதையும் செய்ய பயம்தான். அதனால்தான் ஆம் ஆத்மி மீது அத்தனை கோபமும். ராகுல் காந்தி மட்டுமே எதிரியாக இருந்தால் பி.ஜே.பி.க்கு வசதி. முட்டாள், மடையன், உதவாக்கரை என்று ராகுலை வசைபாடி மோடி டயருக்குக் காற்றடிக்கலாம். ஆனால் அரவிந்த் கேஜரிவாலுக்கெதிராக அப்படி எதுவும் செய்தால் பருப்பு வேகாது.
ஏற்கெனவே பல மாநிலங்களில் பி.ஜே.பி.க்கு எந்தச் செல்வாக்கும் இல்லை; மோடிக்கு அங்கே அலை என்ன, சின்ன நீர்க்குமிழ் கூட இல்லை. மோடி அலையை மீடியா இயந்திரத்தைப் பயன்படுத்தி வீசச் செய்யும் மாநிலங்களிலும் தில்லியில் மோடி அலை இல்லாமற்போன செய்தி பரவும்போது மோடிக்கான ஈர்ப்பு கணிசமாகக் குறையவே செய்யும். இந்தக் கோபத்தில்தான் ஆம் ஆத்மி கட்சியையும் அரவிந்த் கேஜரிவாலையும் திட்டித் தீர்க்கிறார்கள். காங்கிரஸ் நூறாண்டுகளில் பல எதிர்ப்பு இயக்கங்களைக் கண்டு சமாளித்து அழித்து எதிர்நீச்சல் போட்ட கட்சி. அது நிதானமாகவே அழிவு நடவடிக்கைகளில் ஈடுபடும். இப்போது அதன் பலவீனத்தால் அதிகம் செய்ய முடியாவிட்டாலும் செய்யாமலும் இராது. பகையாளியை உறவாடிக் கெடுப்பதும் அரசியல் உத்திதான்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி நடந்துகொண்ட விதம் என்ன? பி.ஜே.பி. செயல்படும் முறை என்ன? ஆம் ஆத்மி காங்கிரஸுடன் எப்போதும் கூட்டணி அமைக்கவே இல்லை. ஊழலுக்குப் புகழ்பெற்ற அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுடனும் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு சுகம் கண்ட கட்சிகள் பி.ஜே.பி.யும் காங்கிரஸும்தான். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க யார் ஆதரவையும் கேட்கவே இல்லை. காங்கிரஸ் தானாகவேதான் முன்வந்து ஆதரவை அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சி தன் 18 கொள்கைகளைப் பற்றி இரு கட்சிகளின் கருத்து என்ன என்று இருவரையும்தான் கேட்டது. அதற்கு காங்கிரஸாவது பதில் அனுப்பியது. பி.ஜே.பி. பதிலே சொல்லவில்லை. அதன்பின்னரும் ஆம் ஆத்மி மக்களிடம் சென்று கருத்துக் கணிப்பு செய்த பின்னர்தான் ஆட்சி அமைக்க முன்வந்திருக்கிறது.
இந்தக் கருத்துக் கணிப்பையும் பி.ஜே.பி. கிண்டல் செய்தது. அதுதான் தில்லி மக்கள் முன்னரே கங்கிரஸை நிராகரித்து வோட்டுப் போட்டுவிட்டார்களே, திரும்ப எதற்குக் கருத்துக் கணிப்பு என்று. தனியே தாங்கள் மட்டுமாக ஆட்சி அமைப்போம் என்று சொல்லி ஆதரவு கேட்டுப் பிரசாரம் செய்த பின்னர் இப்போது வெளி ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வந்ததும் அதற்கு மக்கள் ஆதரவு உண்டா, இல்லையா என்று ஆம் ஆத்மி கேட்டது ஆரோக்கியமான நடவடிக்கையே ஆகும்.
இப்படி எதற்கெடுத்தாலும் கருத்துக் கணிப்பு கேட்பீர்களா, எல்லையில் சீனா ஆக்ரமித்தால் அத்துடன் யுத்தம் நடத்தலாமா என்று கருத்துக் கேட்டுக் கொண்டிருப்பீர்களா என்று ஒரு பி.ஜே.பி. பிரகஸ்பதி கேட்டார். கேட்கலாம். தப்பில்லை. யுத்தம் நடத்தி ஆட்சேதம், பொருட்சேதம் செய்வதைவிடப் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வுகாணுங்கள் என்று சொல்லும் உரிமை மக்களுக்கு எப்போதும் இருக்கிறது. ஆனால் அதை யாரும் மக்களிடம் வந்து கேட்பதுதான் இல்லை. ராஜபட்சே அரசுக்கு ஆயுத உதவி செய்யலாமா என்று இந்திய அரசு கருத்துக் கணிப்பு செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிப்பது நாட்டுக்கு நல்லது. அப்படிப்பட்ட நிலைகள் வர வேண்டும்.
முக்கியமான கொள்கைப் பிரச்னைகளிலும், புது நடவடிக்கைகளுக்கும் மக்கள் கருத்தைக் கேட்டு வோட்டெடுக்கும் ரெபரெண்டம் முறை ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சட்டப் பூர்வமாகவே உள்ளது. இந்தியாவிலும் அப்படி ஒரு சட்ட நிலைமை வரவேண்டும். ஆம் ஆத்மி கட்சி அரசியலில் இப்படி மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிப்பதன் அடையாளமாகவே இந்தக் கருத்துக் கணிப்பைப் பார்க்கலாம்.
இதுவரை ஆம் ஆத்மி கட்சி எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இந்திய அரசியலுக்குத் தேவையான ஆரோக்கியமான மாற்றங்கள்தான். பகிரங்கத்தன்மை, நேரடியாக மக்களுடன் உரையாடிக் கருத்துக் கேட்பது, அரசு நிர்வாக வீண் பந்தாக்களை (செக்யூரிட்டி, ரெட் லைட், சைரன்) ஒழிப்பது எல்லாம் இதரக் கட்சிகள் கற்க வேண்டிய பாடம்.
அடுத்த கட்டமாக ஆம் ஆத்மி கட்சி எப்படிப்பட்ட கட்சியாக மலரும் என்று இப்போது சொல்ல முடியாது. அசாம் கணபரீஷத் இயக்கமும் இளைஞர் இயக்கமாகத் தொடங்கி கேஜரிவால், சிசோடியா போல, மஹந்தா, புக்கான் தலைமையில் நடந்து கடைசியில் இரு தலைவர்களின் பிளவாலும் வேறு பல காரணங்களாலும் சிதைந்தது. கேஜரிவாலோ, ஆம் ஆத்மியினரோ இன்னும் நம் நாட்டின் பல முக்கிய பிரச்னைகளில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்று சொல்லவில்லை. ஊழல் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தொழில்வளர்ச்சியில் அரசு பங்கு, தனியார் பங்கு, கூட்டுப் பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், இட ஒதுக்கீடு, வெளியுறவுக் கொள்கை, இலங்கைத் தமிழர் நிலை இதுபோன்ற பல விஷயங்களில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியமானது. அவையெல்லாம் தெரியவரும் போதுதான் அதன் வளர்ச்சியோ தளர்ச்சியோ உறுதி செய்யப்படும்.

Monday, December 23, 2013

தமிழ் சினிமா 2013

2013ல் ஏறக்குறைய 150 திரைப்படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இதில் கடந்த பத்துப் பதினைந்து வருட மரபுப்படியே இந்த வருடமும் வழக்கம்போல 10% தயாரிப்பாளர்களின் முகம் மலர்ந்துள்ளது...
அலெக்ஸா, 7D, ரெட் எபிக் போன்ற டிஜிட்டல் கேமராக்களின் பயன்பாடு இந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிகம்.
இந்தியத் திரையுலகில் டிஜிட்டல் தொழில்நுட்ப படமாக்கலில் மிகச்சிறப்பான ஒளிப்பதிவுத் திறனுக்கான பாராட்டு ‘ஹரிதாஸ்’ படத்துக்காக நம் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவுக்குக் கிடைத்த விஷயம் வழக்கம்போலவே யாரும் கண்டுகொள்ளவில்லை. அதேபோலத்தான் ‘பரதேசி’ படத்துக்காக சர்வதேச விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியனும் அதிகம் கவனிக்கப்படவில்லை.
‘சூதுகவ்வும்’, ‘நேரம்’, ‘மூடர்கூடம்’, ‘விடியும் முன்’ போன்ற படங்கள் இந்த வருட ‘அட’ தெறிப்புகள் வரிசையில் இடம்பெற்றன..
‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீன், இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர். ஆனால் இது அவரின் சொந்தத் தயாரிப்பு. அந்தத் தைரியத்தைப் பாராட்டியாக வேண்டும். அதோடு தம் மாணவன் வளர்வதை ஊக்கப்படுத்தும் விதமாக அந்தப் படத்தை விநியோகம் செய்தார் இயக்குனர் பாண்டிராஜ்.
யாரிடமும் பணிபுரியாமல் தம் முதல் படத்தை எடுத்து வெற்றி பெறும் இயக்குனர்களின் எண்ணிக்கை சமீபமாக அதிகமாகி வருகிறது . அதில் ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ பட இயக்குனர்களும் சேர்த்தி... இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு கைபேசி கேமராவில் குறும்படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதால் திரைத்துறையிலும் இத்தகைய வரவுகள் தவிர்க்க இயலாத ஒன்று. கதைப்பின்னல்" பாட்டுகள்" சண்டைக்காட்சிகள்" போன்ற வழக்கமான விஷயங்களை விடுத்து, எந்தவிதப் புத்தி சிரமமும் இல்லாத எளிய வகை கதை சொல்லிகளாகவே இவர்கள் வந்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் அசைவுகளும் வசன யதார்த்தமுமே இவர்களின் பலம். இது வழக்கமான சினிமா பாணியிலிருந்து வேறுபடுவதால், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
வர்த்தகரீதியான நம்பிக்கை!
‘ராஜா ராணி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தேசிங்கு ராஜா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்கள் நம் கமர்ஷியல் மரபில் நின்று விளையாடி, பல உலக சினிமா ஆதங்க தமிழர்களின் வயிற்றெரிச்சலுடன் வசூலை வாரிக் குவித்தது.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் வர்த்தகரீதியான நம்பிக்கையைப் பெற்ற நடிகர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளனர். இதில் ஒரு ஓரமாக விமலும் சித்தார்த்தும் நிதானமாக வளர்ந்து வருவது தெரிகிறது.
‘மரியான்’, ‘நையாண்டி’ போன்ற படங்கள் தனுஷுக்குக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் ‘எதிர் நீச்சல்’ வெற்றி, ஒரு தயாரிப்பாளராக அவரளவில் வெற்றியே. சிம்பு இதில் எந்தச் சிரமத்தையும் நமக்குக் கொடுக்கவில்லை.
மணிரத்னம், அமீர், செல்வராகவன் போன்ற இயக்குநர்களின் படங்கள் பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்தபோது, இவங்களுக்கு என்ன ஆச்சு" என்ற முனகலுடன் பார்வையாளர்கள் தியேட்டரை விட்டு வெளியே வருவதிலிருந்தே, இவர்கள் எத்தகைய திறமைசாலிகளாகத் தம்மை நிரூபித்தார்கள் என்று தெரியும். அத்தகைய இயக்குநர்களின் படங்கள் ஏன் எதுவும்சொல்லுமளவுக்கு இல்லை என்னும் கேள்வி நம்மில் எழாமல் இல்லை. இப்படங்கள் சரியாக அமையாததற்குக் காரணங்கள் பல இருக்கும். ஆனால் அது பார்வையாளனுக்குத் தேவையில்லை. இவர்கள் தானே முன்பு பெரும் வெற்றியைத் தந்தவர்கள்.
இதை எந்த வகையில் எடுத்துக் கொள்வது? கற்பனை வறட்சி என்றா? காலமாற்றம் என்றா?
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,‘தங்க மீன்கள்’,‘பரதேசி’ போன்ற படங்கள் பத்திரிகைகளாலும் விமர்சகர்களாலும் இரண்டு வேறுவேறு எல்லைகளில் விமர்சனத்துக்குள்ளானது. ஆஹா ஓஹோ" என்று ஒருபுறம், ஐயோ அய்யயோ" என்று மற்றொரு புறம்.. ஆனால் விமர்சனங்களையும் தாண்டி ‘போட்ட முதலுக்கு’ நியாயம் செய்தது பாலாவின் பரதேசி...
சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் நிலவும் இன்னொரு முக்கிய சர்ச்சையான ‘தியேட்டர் அரசியல்’ இந்த வருடமும் இல்லாமல் இல்லை. படங்களை சரியான நேரத்தில் வெளியிட முடியாமை, தியேட்டர் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் என்று படம் எடுப்பதையும் தாண்டி, படம் எடுப்பதைவிட அதிக சிக்கலும் சிரமமும் படம் வெளியிடுவதில் இருந்ததைக் கண்கூடாக இந்த வருடம் காணமுடிந்தது. பல படங்கள் வெளியிடப்படாமல் தள்ளிப்போடப்பட்ட சம்பவங்கள் இந்த வருடமும் நடந்தது. கடைசி நேரத்தில் டிசம்பரில் மட்டும் 22 படங்கள் வெளியிட தியேட்டருக்காக அலைந்தன.
சர்ச்சைக்குள்ளான ‘விஸ்வரூபம்’,‘தலைவா’ போன்ற படங்கள் இந்த வருடத்தின் சினிமா அரசியல்" பகுதியில் இடம்பிடித்தன. இதுவும் நம் கலாசார மரபுகளில் ஒன்றே...

ஹிட்டான ரிங்டோன்!
பேருந்துகளிலும், ரயில்களிலும், ரிங்டோனிலும் கேட்கும் சத்தங்களின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது இந்த வருடம் ஊதா கலரு ரிப்பன்", காசு பணம் துட்டு மணி மணி" சுமாக்கிற சோமாரி ஜமாயக்கிராடா" "FY FY FY கலாய்ச்சி FY” போன்ற பாடல் வரிகளே மக்கள் மனத்தில் அதிகம் இடம்பிடித்தன என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.

கலைஞர்கள் இறப்பு அதிகம்!
டி.எம்.எஸ், பி.பி.எஸ், வாலி போன்ற மாபெரும் சகாப்தங்களின் மறைவும், மணிவண்ணன் என்னும் தமிழ் உணர்வு மிக்க கலைஞனின் இழப்பும் மஞ்சுளா விஜயகுமார், திடீர் கண்ணையா, மாஸ்டர் ஸ்ரீதர் போன்ற நடிகர்கள் இழப்பும் இந்த வருடசோகங்கள். ‘பாசவலை’, ‘நல்லவன் வாழ்வான்’ போன்ற படங்களில் நீங்கா இடம்பிடித்த பல பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஆத்மநாதன் மறைவு பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியாமல் போனது அதனினும் சோகம்.
பெரும்பாலும் ‘நான் என்ன நினைக்கிறேன்னா’ என்னும் அளவிலேயே இந்த வருட சினிமா விமர்சனங்கள் பத்திரிகைகளிலும் இணையத்திலும் தெரிந்தன. இதில் பாதிப்படம் பார்த்துவிட்டு ‘திரைக்கதைச் சிக்கல்கள்’ பற்றியெல்லாம் விரிவாக விளக்கிய காமெடிகளும் உண்டு... அவற்றை ‘சுயகருத்துக்கள்’ என்ற தலைப்பில் செய்வது உத்தமம். அதில் இந்தக் கட்டுரையையும் (பாயிண்ட்டுகள்) சேர்த்துக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

அரவிந்த் யுவராஜ்

Thursday, December 19, 2013

நெல்சன் மண்டேலா - கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்...

'ஆப்ரிக்க காந்தி’ எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா, சமீபத்தில் இந்த உலகைவிட்டு விடைபெற்றாலும், நம் நெஞ்சத்தில் நிலைத்துவிட்டார். அந்த அமைதிப் புறாவுக்கு நமது அஞ்சலி.

சிறுவயதில் கழுதை, மீது சவாரி செய்துகொண்டு இருந்தார் மண்டேலா. அப்போது கழுதை அவரைக் கீழே தள்ளிவிட்டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்தது. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து சிரித்தார்கள். ஒருவர் தோற்றால், மற்றவர்கள் எப்படிக் காயப்படுத்துவார்கள் என்பதை அப்போது உணர்ந்தார். நாம் அப்படி யாரையும் வருத்தப்படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்தார். அவரிடம் இருந்து நாம்         கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்...

வாழ்க்கையைக் கொண்டாடு! 

சிறுவயதில் தேனடை சேகரித்தல், மாடு மேய்க்கும்போது... சக நண்பர்களுடன்  குத்துச்சண்டை விளையாட்டு என வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார் மண்டேலா. அவரது 70-வது வயதில் நடைபெற்ற தேர்தலில் வென்றபோது,  ஜாலியாக ஒரு டான்ஸ் போட்டார்.

தோல்விக்குத் துவளாதே! 

மூன்று முறை வழக்கறிஞர் ஆக நடந்த தேர்வில் தோற்றார். பெரிதும் முயன்று, அட்டர்னி ஆனார். தோல்விகள் துரத்திய போதும் ஆப்ரிக்க பூர்வக் குடிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்கி, புகழ்பெற்றார்.

கற்றுக்கொண்டே இரு! 

தனிமைச் சிறையில் 27 ஆண்டுகள் இருந்த காலத்தில், அவரைப் பார்க்க வரும் மனைவி வின்னி மூலம் உலக நடப்புகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். ஷேக்ஸ்பியரின் எல்லா நூல்களையும், சர்ச்சிலின் உலகப் போர் நினைவலைகளையும் சிறையில் இருந்த சமயம் படித்து முடித்தார்.

ஊருக்கு உழைத்திடு! 

மேற்படிப்புப் படிக்க, தென் ஆப்ரிக்காவின் நகர்ப்புறம் நோக்கி வந்தார் மண்டேலா. அரசரின் மகனான அவர் மீதே எச்சில் துப்பினார்கள். கடைக்காரர்கள் பொருட்களைத் தர மறுத்தார்கள். நன்கு படித்திருந்தும் ஒரு முட்டாளைப் போல அவரை வெள்ளையர்கள் பார்த்தார்கள். இவற்றைத் 'தன்னுடைய சிக்கல்’ என்று எண்ணாமல், 'தன் சக மக்களின் சிக்கல்’ என்று எல்லாருக்காகவும் போராடினார்.

அன்பே அழகானது! 

ஜனாதிபதியாக இருந்தபோது மண்டேலா, உலகக் கோப்பை ரக்பி கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்வையிட வந்தார். பெரும்பான்மையினர் வெள்ளையின வீரர்கள். உற்சாகமாக தன் நாட்டின் அணியை ஊக்கப்படுத்தினார். கறுப்பின மக்கள் என்றால், வெள்ளையர்கள் இல்லாத அணியையே ஆதரிப்பார்கள் என்ற எண்ணத்தைத் தனது அன்பால் உடைத்தார். போட்டியைக் காண வந்திருந்த 60 ஆயிரம் மக்களும் எழுந்து நின்று அவரின் பெயரை உச்சரித்தார்கள்.

தன்னலத்தைத் தவிர்! 

வாய்ப்பு இருந்தும் ஜனாதிபதி பதவியை இன்னொரு முறை ஏற்காமல் கம்பீரமாக விலகினார். அவரது சொந்த மகன் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட, அந்த வலியைத் தாங்கிக்கொண்டு, எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார் மண்டேலா.

வலிகளை வெல்! 

50 வயதுக்கு மேலே வந்த காசநோய், இறுதி வரை மண்டேலாவுக்கு இருந்தது. சிறையில் இருந்தபோது, சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் வேலைபார்த்தது, கண் பார்வையைப் பாதித்தது. புற்றுநோயும் வாட்டியது. 'நான், கேன்சரால் வெல்லப் பட்டாலும் சொர்க்கம் சென்று, அங்கே நம் கட்சி அலுவலகத்தில் என் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்வேன்!' என்று சிரிப்புடன் சொன்னார்.

வெறுப்பை விடு! 

''எதிரிகளை வெல்ல ,அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்'' என்பார் மண்டேலா. அவர் விடுதலையானதும், நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. தொலைக்காட்சியில் தோன்றி, மக்களை அமைதிகாக்கச் செய்தார். அமைதியாகத் தேர்தலை நடத்தி, எல்லாருக்குமான அரசை அமைத்தார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! 

கறுப்பின மக்கள் அதிகமாக இருந்தபோதும் தனது அமைச்சரவையில் வெள்ளையர்கள், இஸ்லாமியர்கள், இந்தியர்கள், லிபரல்கள் என்று எல்லாரையும் இணைத்துக்கொண்டார். 'நான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தையும் எதிர்க்கிறேன்; கறுப்பின ஆதிக்கத்தையும் நிராகரிக்கிறேன்' என்று உறுதியாகச் சொன்னார்.

இன்று புதிதாகப் பிறந்தோம்! 

27 வருட சிறை வாழ்க்கைக்குப் பின் வெளியே வந்ததை எப்படிப் பார்த்தார் தெரியுமா அவர்? 'நான் சிறைக் கதவுகளைக் கடந்து, இறுதி முறையாக நடந்தேன். 70 வயதில் எல்லாம் புதிதாக தொடங்குவதாக உணர்கிறேன். என்னுடைய 10,000 நாட்கள் சிறைவாசம் முடிந்தது. இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்.'

பாரத ரத்னா 50

நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு இது 50-வது வருடம்!

வெண்கலத்தில், அரசமரத்தின் இலை வடிவமும் அதில் ஒரு பக்கம் பிளாட்டினத்தாலான சூரியனும் மறு பக்கம் சிங்கமும் பொறிக்கப்பட்டு, 'பாரத ரத்னா’ என்று பழங்கால தேவநகரி மொழியில் எழுதப்பட்டு இருக்கும். வெள்ளை ரிப்பனில் இணைக்கப்பட்ட இந்த விருது, ஜனாதிபதியால் அணிவிக்கப்படும்.

பாரத ரத்னா முதல் விருதைப் பெற்ற மூவர், சி.வி.ராமன், ராஜாஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

இந்தியர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று விதிமுறை கிடையாது. எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார் கான், நெல்சன் மண்டேலா ஆகியோர் பாரத ரத்னா விருதுபெற்ற வெளிநாட்டவர்கள்.

வெளிநாட்டில் பிறந்து, இந்தியப் பிரஜையான அன்னை தெரசா இந்த விருதைப் பெற்றார். பெண்களில் இந்த விருதைப் பெற்றவர்கள்... இந்திரா காந்தி, லதா மங்கேஷ்கர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர்.

இதுவரை 43 பேர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு உள்ளது.


திரும்ப பெறப்பட்ட விருது, நேதாஜிக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா மட்டுமே. இந்த விருதைப் பெற மறுத்தவர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத். தானே தேர்வுக் குழுவில் இருப்பதால், விருதை மறுத்துவிட்டார். எனினும் 1992-ம் வருடம், அவரின் மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்பட்டது.

1966-ம் வருடத்தில் இருந்துதான் மறைந்தவர்களுக்கும் விருது வழங்கலாம் என்ற விதிமுறை இணைக்கப்பட்டது. 12 பேர்களுக்கு இறந்த பின்னர் வழங்கப்பட்டது. உயிருடன் இருக்கும்போது விருது பெற்றவர்களில் மிக  மூத்தவர் டி.கே.கார்வே. தமது 100-வது வயதில் பெற்றார். இளம் வயதில் பெறுபவர், சச்சின் டெண்டுல்கர் (40 வயது). விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விதிமுறை கொண்டுவரப்பட்டது. முதல் விருதைப் பெறுகிறார் சச்சின்!

பாகிஸ்தானின் மிக உயரிய 'நிஷான் இ பாகிஸ்தான்’ விருது மற்றும் 'பாரத ரத்னா’ இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்.


உழைப்பு...ஆர்வம்...வெற்றி ! 


சிந்தாமணி நாகச ராமச்சந்திர ராவ், பாரத ரத்னா விருதைப் பெறும் மூன்றாவது அறிவியல் அறிஞர். இதற்கு முன்னர் சர்.சி.வி.ராமன், அப்துல் கலாம் ஆகியோர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் பிறந்த இவர், தன்னுடைய பட்டப்படிப்பை மைசூர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வை அமெரிக்காவின் புர்டூ பல்கலைக்கழகத்தில் செய்தார்.

நேருவின் அழைப்பில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த விஞ்ஞானிகளில்... ராமச்சந்திர ராவ் முக்கியமானவர். இந்தியாவின் முக்கிய அறிவியல் கல்வி அமைப்பான, இந்திய அறிவியல் கழகத்தில் பணிக்கு சேர்ந்தார்.

வேதியியல் துறைகளில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான ஆய்வகங்களை அமைத்து, எண்ணற்ற கண்டுபிடிப்புகள், பங்களிப்புகள் செய்தார். ஐ.ஐ.எஸ்.சி. இயக்குனராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.


உலோக ஆக்சைடுகளை எலெக்ட்ரான் அளவில் பிரிக்கும் முறைகளை உருவாக்கிய இவர், குறை கடத்தி மற்றும் 'கார்பன் நானோட்யூப்’களைப் பிரிக்க, எளிய முறையையும் உருவாக்கினார். இவரது கண்டுபிடிப்புகள்... ஆற்றல் பிரித்தல், பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்குதல், மருந்துகள் துல்லியமாக உடம்பில் இயங்குதல் ஆகியவற்றில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

சீன அரசின் மிக உயரிய அறிவியல் விருது தொடங்கி எண்ணற்ற அமைப்புகளின்  விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், விரைவில் நோபல் பரிசு பெறுவார் என்கிறார்கள்.

''குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் அறிவியல், மனப்பாடம் செய்யவே உதவுகிறது. அவர்களுக்கு அது உற்சாகம் தருவதாக இருக்க வேண்டும்'' என்று அழுத்திச் சொல்கிறார், 80 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கும் ராமச்சந்திர ராவ்.

ஒழுக்கம்...எளிமை...தன்னம்பிக்கை !

 சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் விளையாட்டு வீரர் இவர்.

24 ஆண்டுகளாக தேசத்தின் வெற்றிக் கனவுகளைச் சுமந்த சச்சின், பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து, இந்தியர்களை இணைக்கும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 100 சதங்கள், 200 டெஸ்ட் போட்டிகள் என்று நீளும் சாதனைகளை சச்சின் தன்னுடைய தலைக்கு ஏற்றிக்கொண்டதே இல்லை.

கடைசிப் போட்டியில் விளையாடி விடைபெறும் போது, 'இந்தியனாக இருப்பதற்குப் பெருமைப்படுங்கள். எதுவும் சாத்தியம் என்று நம்புங்கள்’ என்று இளைஞர்களிடம் நம்பிக்கை விதைத்தார். ''என் ஆசான் அச்ரேக்கர், நான் நன்றாக ஆடியதாக இந்த 30 ஆண்டுகளில் என்றுமே சொன்னது இல்லை. 

அப்படிச் சொன்னால், நான் 'இது போதும்’ எனத் திருப்தி அடைந்து தேங்கிவிடுவேனோ என்பதால், அவர் பாராட்டியதே இல்லை. இன்றைக்கு என்னுடைய கடைசிப் போட்டி. நான் நன்றாக ஆடினேன் என்று இன்றைக்குச் சொல்வீர்களா ஆசானே?' என்றும் அடக்கத்துடன் பேசினார்.


சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் அவரது ஆசிரியர் ராம்காந்த் அச்ரேக்கர் அவரை அலைபேசியில் அழைத்து, 'வெல்டன் மை பாய்!’ என்று சொன்னபோது, சச்சினின் கண்கள் கலங்கிப்போயின.

சச்சினின் எளிமைக்கு அவருடைய அம்மா முக்கியக் காரணம். சச்சின் கோடிகளில் சம்பாதித்தபோதும், அவர் தன்னுடைய அரசு வேலையைத் தொடர்ந்தார். சாதாரணமாக ரயிலில் பயணம் செய்தார். அந்த குணம் சச்சினுக்கும் தொற்றிக்கொண்டது. சச்சினின் இறுதிப் போட்டியை நேரில் பார்க்க வந்திருந்த தன் அம்மாவை நோக்கி, 'என் அன்னைக்கு இந்த பாரத ரத்னா விருது சமர்ப்பணம்'' என்று சொன்னார்.

ஒழுக்கம், எளிமை, இந்தியர்களால் எதிலும் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனப் பல விஷயங்களை நமக்குச் சொல்லும் சச்சினுக்கு 'பாரத ரத்னா’ விருது வழங்குவது மிகப் பொருத்தம்.

கூகுளின் மோட்டோ ஜி!

இணையதளத்தில் மட்டுமே கலக்கிக்கொண்டு இருந்த கூகுள், தற்போது மொபைல், டேப்லட் என அனைத்திலும் கால்பதிக்க ஆரம்பித்துள்ளது.  கூகுள் நிறுவனத்தின் மோட்டோ ஜி (Moto G) என்கிற மொபைல் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
 
மோட்டோரோலா நிறுவனத்தை கூகுள் வாங்கியபின் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் எந்த புதிய போனையும் வெளியிடவில்லை அந்த நிறுவனம். இந்தியாவில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிந்தது என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்க, வரும் ஜனவரியில் மோட்டோ ஜி என்ற புதிய போனை இந்தியாவில் வெளியிடுகிறது மோட்டோரோலா.
மோட்டோ ஜி என்ற மொபைலை சமீபத்தில் பிரேசிலில் வெளியிட்டது கூகுள். நம்மூரில் ஐனவரி முதல் விற்பனைக்கு வரும் என்றாலும், இதற்கான புக்கிங்குகள் ஆரம்பித்துவிட்டனவாம். அதற்கு காரணம், அதன் குறைந்த விலையும் அதில் உள்ள ஆப்ஷன்களும்தான்.4.5 இஞ்ச் நீளம் கொண்ட தொடுதிரை, இது ஐபோன் Snapdragon 400 SoC with a 1.2 GHz quad-core பிராசஸர் உள்ளது. இந்த பிராசஸர் மிகவும் வேகமாகச் செயல்படும் பிராசஸர்களில் ஒன்றாகும். டூயல் சிம், ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லிபீன் இயங்குதளம், எல்இடி ப்ளாஷ் உடன் 5 எம்பி பின் கேமரா, 1.3 எம்பி முன் கேமரா, 1நிஙி ரேம், 2070னீகிலீ பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற வசதிகளுடன் வருகிறது.

கூகுளின் வெளியீடு இது என்பதால் இந்த மொபைல் இந்தியாவில் வெற்றிபெறும் என்று நம்பலாம். இது அனைத்தையும்விட, இதில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓஎஸ் உடன் வெளிவருகிறது. இந்த மொபைல் 16 ஜிபி-க்கு இன்டர்நெட் மெமரியும் கொண்டு வெளிவர இருக்கிறது. இதன் விலை தோராயமாக ரூ.12 - 14 ஆயித்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
 

Friday, December 13, 2013

ஓ பக்கங்கள் - வோட்டுக்கு வேட்டு நோட்டா! ஞாநி


பழைய பாணியிலேயே இருந்து கொண்டிருக்கும் இந்திய அரசியலில் அண்மை சட்டமன்றத் தேர்தல்களில் நடந்திருக்கும் இரு புதுமைகள் மட்டுமே நம் கவனத்துக்குரியவை. ஒன்று நோட்டா. இன்னொன்று ஆம் ஆத்மி.

எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமையை ரகசியமாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் வழியாகவே பதிவு செய்யும் நோட்டா உரிமை இந்தத் தேர்தல்களில் தான் முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்டது. ‘நன் ஆஃப் தி அபவ்’ என்ற ஆங்கிலச் சொற்களின் சுருக்கமே நோட்டா. சுமார் பத்து வருடப் போராட்டத்துக்குப் பின்னர்தான் இது சாத்தியமாயிற்று. இந்தியாவில் அண்மை வருடங்களில் நடக்கும் ஒவ்வொரு தேர்தல் சீர்திருத்தமும் உச்ச நீதிமன்ற உத்தரவின் விளைவாகவே நடப்பது போலவே நோட்டாவும் நீதிமன்றத் தீர்ப்பினால்தான் செயலுக்கு வந்தது.

இதுவரை ‘49 ஓ’ என்ற பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்ட இந்த உரிமையைப் பயன்படுத்த வாக்குச்சீட்டில் வழி இருக்கவில்லை. வாக்குச் சாவடியில் பகிரங்கமாக எல்லா கட்சி ஏஜன்ட்டுகள் முன்னாலும் இதைச் சொல்லிக் கையெழுத்திட வேண்டியிருந்தது. பீ.யூ.சி.எல். எனப்படும் ‘மக்கள் சிவில் உரிமைக் கழகம்’ உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கின் முடிவிலேயே இது ரகசிய நோட்டாவாக மலர்ந்தது. வேட்பாளரின் சொத்துக் கணக்கைத் தெரிவிக்கவும் அரசியல் கட்சிகள் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே ஏற்றுக் கொண்டன. அதே நிலைதான் இதிலும் இருந்தது.

இந்த முறை நோட்டாவை எத்தனை வாக்காளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் நடந்த ஏற்காடு இடைத்தேர்தலில் மொத்தம் சுமார் 90 சதவிகித வாக்குப்பதிவு நடந்தது. இது வழக்கத்துக்கு மாறானது. நேரடிப் போட்டியில் இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் என்ன செய்தேனும் வாக்காளரை வோட்டுப்போட அழைத்து வருவதில் காட்டிய தீவிரமே இதற்குக் காரணம். இதற்கு ‘நோட்டு விநியோகம்’ செய்த திருமங்கலம் பார்முலா இங்கேயும் பின்பற்றப்பட்டது தான் காரணம் என்று ம.தி.மு.க. போன்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இங்கே மொத்தமாகப் பதிவான நோட்டா எண்ணிக்கை 4,431. அங்கே பல சுயேச்சைகள் வாங்கிய வாக்குகளை விட இது அதிகம்.

எனினும் ஏற்காடு தொகுதியில் யார் நோட்டாவைப் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்பது மர்மம் தான். இந்தத் தேர்தலில் பங்கேற்காத தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் ‘நோட்டாவைப் பயன்படுத்துங்கள்’ என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கவில்லை. பா.ம.க. தலைவர் ராமதாஸ் மட்டும் ‘தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளையும் ஆதரிக்க வேண்டாம்’ என்று சொல்லியிருந்தார். இந்த இரு கட்சிகளும் கடந்த முறை இந்தத் தொகுதியில் பெற்ற வாக்குகள் சுமாராக 35 ஆயிரம். அத்தனை பேரும் நோட்டாவுக்குப் போடவில்லை என்பது வெளிப்படை. அவரவர் விரும்பியபடி ஏதோ ஒரு வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றனர் என்பதும் தெரிகிறது.

ராஜஸ்தானிலும் மத்தியப்பிரதேசத்திலும் நோட்டாவைப் பயன்படுத்தியவர்கள் குறைவுதான். ராஜஸ்தானில் மொத்தம் பதிவான வாக்குகளில் 1.5 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 1.4 சதவிகிதமும் மட்டுமே நோட்டா வாக்குகள். நோட்டா குறைவாக விழுவதற்கான பல காரணங்களில் முதல் காரணம், ‘அதற்கென்று தனிப் பிரசார அமைப்போ, பலமோ இல்லை’ என்பதாகும். கட்சிகளின் வேட்பாளருக்குப் பிரசாரம் செய்ய அமைப்பும் பணமும் இருப்பது போல, நோட்டாவுக்குக் கிடையாது. அப்படி ஒன்று இருப்பதைத் தெரிந்து வைத்திருக்கக்கூடிய மக்கள் எண்ணிக்கையே குறைவுதான். எல்லா தொகுதிகளிலும் நோட்டா என்ற ஒரு வேட்பாளர் இருப்பதை யாரேனும் இயக்கரீதியாகப் பிரசாரம் செய்தால் மட்டுமே நோட்டாவுக்கு அதிக ஆதரவு கிடைக்க முடியும்.

சத்தீஸ்கர் மாநிலம் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அங்கே பழங்குடியினர் பகுதிகளில் இருக்கும் மாவோயிஸ்ட்டுகள் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தங்கள் வழக்கமான பிரசாரமாக வைத்திருப்பர். ஆனால் இந்த முறை தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் எதுவும் பெரிதாகச் செய்யப்படவில்லை. ‘வாக்குச் சாவடிகள் தாக்கப்படும்’ என்ற போலிஸ் தரப்பு எதிர்பார்ப்புகளும் பொய்யாகிவிட்டன. ஆனால் மிக அதிக அளவில் நோட்டா வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் 4.6 சதவிகிதம் நோட்டா வாக்குகள்.

பழங்குடி மக்கள் இருக்கும் தொகுதிகள் அனைத்திலும் சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 4,000 நோட்டா வாக்குகள் விழுந்துள்ளன. சித்திரகூட் தொகுதியில் பத்தாயிரம் நோட்டா வாக்குகள். கொண்டே காவ்ன் தொகுதியில் மாநில பி.ஜே.பி. அமைச்சர் லதா உசேண்டி காங்கிரஸ் வேட்பாளர் மோகனை விட 5,135 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்திருக்கிறார். இந்தத் தொகுதியில் நோட்டா பெற்ற வாக்குகள் 6,773.

நோட்டா வாக்குகள் மிகக் குறைவாக விழுந்திருக்கும் மாநிலம் தில்லி. மொத்தப் பதிவான வாக்குகளில் 0.63 சதவிகிதம் மட்டுமே நோட்டா. இதற்கு முக்கியக் காரணம், இங்கே புதிதாக வந்திருக்கும் ‘ஆம் ஆத்மி கட்சி’ என்றே சொல்லலாம். ‘காங்கிரசும் வேண்டாம், பி.ஜே.பி.யும் வேண்டாம்’ என்று கருதக் கூடியவர்களின் வோட்டுகள் ஆம் ஆத்மி கட்சிப் போட்டியில் இருந்திராவிட்டால், நோட்டாவுக்கே போயிருக்கக் கூடியவை. ஆனால் ஒரு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி களத்தில் வந்து விட்டதால், இங்கே நோட்டா அதிகம் பயன்படுத்தப்படவில்லை. தில்லி மாநிலத்தில் நோட்டாவை விட குறைவான வோட்டுகளைப் பெற்றது தே.மு.தி.க வேட்பாளர்கள்தான்.

நோட்டா மேலும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் ஒரு சக்தியாக மாறவேண்டுமானால் இரு விஷயங்கள் முக்கியமானவை. நோட்டாவை மக்களிடையே பிரசாரம் செய்து தெரியப்படுத்த இயக்கங்களும் அமைப்புகளும் பிரசார பலமும் இருக்க வேண்டும். இரண்டாவதாக நோட்டாவுக்குப் போடும் வோட்டை, தேர்தல் ஆணையம் செல்லாத வோட்டாகக் கணக்கிடுவதை நிறுத்த வேண்டும். வேட்பாளர்களை நிராகரிப்பது உரிமை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து நோட்டா வந்த பின்னர், அந்த உரிமையைச் செல்லாத வோட்டாகக் கருதுவது தவறானது. வேட்பாளர்களில் அதிக வோட்டு பெறுபவர் வெற்றி பெறும் வேட்பாளராகச் சொல்லப்படும்போது, அவரைவிட அதிகம் வோட்டு நோட்டாவுக்கு விழுந்தால், அந்த வேட்பாளரும் நிராகரிக்கப்பட்டவராகவே கருதப்பட வேண்டுமே தவிர வெற்றி பெற்றவராகமாட்டார். இப்படிச் சில திருத்தங்கள் இருந்தால் மட்டுமே நோட்டாவின் அசல் பலம் பயன்படும். முதல் இரு இடம்பெறும் வேட்பாளர்களுக்கிடையே உள்ள வோட்டு வித்தியாசத்தை விட அதிகமாக நோட்டாவுக்கு விழும்போது, இன்னும் சரியான வேட்பாளர் களை நிறுத்தியாக வேண்டிய அவசியத்தை கட்சிகள் உணர்வார்கள்.

மக்கள் பொதுவாக எல்லா கட்சிகளும் கோளாறாக இருந்தால்கூட மொத்தமாக நிராகரிக்க விரும்புவதில்லை. இருப்பதில் ஒருவரைத் தேர்வு செய்வது அலுப்பாக இருந்தாலும், அதையே செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் புதிதாக ஒரு மாற்று முன்வைக்கப்பட்டால், உற்சாகமாக ஆதரிக்கவும் முன்வருகிறார்கள் என்பதையே தில்லியில் ஆம் அத்மி கட்சியின் வெற்றி காட்டுகிறது.

காங்கிரசுடனும் பி.ஜே.பி.யுடனும் மக்களுக்கு இருக்கும் அலுப்பு மட்டுமே ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு முழு காரணமல்ல. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுடனும் அயர்வாக இருந்தாலும், புதிதாக வருகிற மாற்றுகள் சரியாகவும் நம்பிக்கைக்கு உகந்தனவாகவும் இல்லாதபோது பழைய கொள்ளிகளே மேல் என்ற மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒரு தேர்தலில் பங்கேற்று, அங்கே காங்கிரசுடனோ, பி.ஜே.பி.யுடனோ கூட்டணி வைக்கும் நிலைக்குச் சென்றால், அதுவும் மக்களிடையே செல்வாக்கை இழந்துவிடும். மாற்று என்றால் முழுமையான மாற்றாகத் தோன்றினால் மட்டுமே மக்கள் ஆதரிப்பார்கள்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி செய்திருக்கும் சாதனைக்கான பல காரணங்களில் பிரதானமானது, ‘அதன் தலைமை முதல் வேட்பாளர்கள் வரை’ புதியவர்கள் என்பதாகும். ஏற்கெனவே இருக்கும் அரசியல் கட்சிகளில் ஊறித் திளைத்து இன்னொரு வாய்ப்புக்காக இங்கே வரும் சந்தர்ப்பவாதிகளான பழைய முகங்கள் இதில் இல்லை என்பது மக்களால் முக்கியமாகக் கவனிக்கப்படும் அம்சங்களில் ஒன்று.

ஆம் ஆத்மி கட்சி தில்லியை அடுத்து இதர மாநிலங்களிலோ, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலோ இதே போல மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய புதிய இளம் நேர்மையான தலைவர்கள் தேவை. ‘இந்திய அரசியல் மத்தியில் கூட்டணி இல்லாமல் முடியாது’ என்ற கட்டத்துக்கு எப்போதோ வந்துவிட்டது. அப்படியானால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆம் ஆத்மியாருடன் கூட்டு சேர்வது என்பது முக்கியமான பிரச்னை. யாருடனும் கூட்டு சேராமல் ஒவ்வொரு மாநிலத்திலும் முற்றாகத் தனியாகவும் புதிதாகவும் மாற்று அரசியல் அமைப்பைக் கட்டி எழுப்புவது என்பது ஒரு தேர்தல் காலத்துக்குள் முடியும் செயலே அல்ல.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சியின் சமூக, பொருளாதார, உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள், திட்டங்கள் என்ன என்று எதுவும் தெளிவாக இன்னும் மக்கள் முன்வைக்கப்படவில்லை. இடஒதுக்கீடு, மொழிக் கொள்கை, பாகிஸ்தான், சீனா, இலங்கை தொடர்பான உறவுகள், மற்றும் அமெரிக்கா சார்பான பொருளாதாரக் கொள்கையா, சோஷலிசமா, விவசாயக் கொள்கை, அணுசக்தி, நலத்திட்டங்கள், இலவச திட்டங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் தெளிவான, வெளிப்படையான நிலைகளை அறிவிக்காமல் அடுத்தகட்ட அரசியல் கட்சியாக ஆம் ஆத்மி வளரவே முடியாது. இளைஞர்களின் அதிருப்தி, கோபம், மக்களின் விரக்தி ஆகியவற்றுக்கு வடிகாலாக மட்டுமே இப்போதைக்கு தில்லியில் அது உருவாகியிருக்கிறது.

ஆம் ஆத்மி வளராவிட்டாலும், அதன் வருகை இதர கட்சிகளுக்கு அளித்திருக்கும் எச்சரிக்கையினால் இதரக் கட்சிகள் கொஞ்சமேனும் சுயவிமர்சனமும் திருத்தங்களும் செய்தால் கூட இந்திய அரசியலுக்கும் மக்களுக்கும் லாபம்தான். இந்தச் சட்டமன்றத் தேர்தல்களில் நடந்திருக்கும் இரு புதுமைகளும்- நோட்டா, ஆம் ஆத்மி கட்சி - சரியான திசை நோக்கிய ஆக்கபூர்வமான வரவுகள்தான். ஆனால் முழுமையான தீர்வுகள் அல்ல.Wednesday, December 11, 2013

வாக்கிங்... - 'நட’ப்பது நன்மைக்கே!

 
''உடல் நலத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முதலில் கடைப்பிடிப்பது நடைப்பயிற்சிதான். அதிகாலையில் பயிற்சி செய்தால், அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். சர்க்கரைநோய், உடல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தவிர்க்கவும் முடியும். பலன்களை அள்ளித் தரும் இந்தப் பயிற்சிகளை, பலரும் கடமைக்காகச் செய்கின்றனர். 'டாக்டர், வாக்கிங் போகச் சொன்னார் போறேன். ஜாகிங் செய்யச் சொன்னார் செய்றேன்...’ இப்படிக் கடனே என்று செய்பவர்கள் பலர்.
 
'ஓடுவதால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல் முறையாக ஓடவில்லை என்றால் பாதிப்புகளும் வரும். ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு 'ரன்னர்ஸ் நீ’ (runners knee) என்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எடுத்த எடுப்பிலேயே மிகக் கடுமையாக ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இது ஏற்படுகிறது. இதனால், மூட்டில் உள்ள குருத்தெலும்பு தேய்ந்து வலி ஏற்படும். ஆரம்பத்தில் இந்த வலியை உணர முடியாது. மாடிப்படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போதும் இந்தப் பாதிப்பை உணரலாம். எனவே, அதிக ஆர்வத்தில் கால்களுக்கு அதிக பளுவைக் கொடுக்கக் கூடாது.
 
உடல் பயிற்சிக்காக ஓடுபவர்கள், ஓடும் விதத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஓடும் தூரத்தைப் பார்க்கக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடும்போது சோர்வு, வலி ஏற்படும். இதனால் பயிற்சியில் ஈடுபடுவதற்கான மனநிலை பாதிக்கப்படும்.
 
ஓடினால் வியாதிகள் ஓடும்!  
 
ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு உடலை சுய பரி¢சோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
 
இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதே போதுமானது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு ஓடுவது நல்லது.

நடைப்பயிற்சியில், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பருத்தி மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. இதனால் உடலின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

சிந்தடிக் ஆடைகளை அணிந்து ஓடுவதால் வியர்வை நம் உடலின் மேற்பரப்பில் தேங்கும். உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன், உடல் வெப்பமடைவதை இது தவிர்க்கும்.

சாலை ஓரத்தில் பயிற்சியில் ஈடுபடுபவர், ஒளிரும் தன்மைகொண்ட ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.
 
 
காலுக்குப் பொருத்தமான, எடை குறைந்த காலணிகளை அணிந்து பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. மிகவும் இறுக்கமான காலணி அணிந்துகொண்டு நடைப்பயிற்சி செய்வது வலியை ஏற்படுத்தும்.

புதிதாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இரண்டு நிமிடம் ஓட்டம், ஒரு நிமிடம் நடைப்பயிற்சி என்று மாற்றிமாற்றிச் செய்ய வேண்டும். இதனால், இதயத்துக்கு அதிக சிரமம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

'நட’ப்பது நன்மைக்கே!  

சரியான நிலையில் நடப்பது மிகவும் அவசியம். தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால், கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே, முதுகை வளைக்காமல், நடக்கும்போதும் ஓடும்போதும் நேராக இருங்கள். முதுகின் இயல்பான தன்மையைப்  பின்பற்றுங்கள்.

வயிற்றை உள்ளிழுத்தபடி பயிற்சியில் ஈடுபடுங்கள். கால்கள் நடப்பதற்கு ஏற்ப நம் உடலை பேலன்ஸ் செய்யும் வகையில் கைகள் அசைகின்றன. இதனால் வேகமாக நடக்கலாம். கைகள் அசைக்காமல் நடக்கும்போது, அது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, தாராளமாகக் கைகளை வீசி நடைபோடுங்கள்.

சம தளத்தில் பயிற்சியில் ஈடுபடுங்கள். கரடுமுரடான ஓடுதளத்தைத் தவிர்த்துவிடுங்கள்.  

ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்யாமல், அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சியை மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதேபோல முடிக்கும்போது வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பயிற்சியை முடியுங்கள்.
 

Tuesday, December 10, 2013

ஓ பக்கங்கள் - கூரை ஏறி வைகுண்டம்! ஞாநி


இதை நீங்கள் படிக்கும்போது, விஜய்காந்தின் தே.மு.தி.க.வுக்கு தில்லி சட்டமன்றத் தேர்தலில் டிபாசிட்டாவது கிடைத்ததா இல்லையா என்பது தெரிந்து போயிருக்கும். அல்லது போட்டியிட்ட ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தால் வேறு எந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பை அது கெடுத்தது என்று கூட ஆராயலாம். தப்பித் தவறிக் கூட ஏதேனும் ஒரு தொகுதியிலேனும் வெற்றியே பெற்றிருந்தது என்றால், அது அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அரசியலில் ஏற் படுத்தியிருக்கும் சலசலப்பை விட பெரிய சாதனையாக இருக்கும். நிச்சயம் அப்படி எல்லாம் எதுவும் நடந்துவிடப் போவதில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பாத தே.மு.தி.க தில்லி சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவது ஏன் என்ற கேள்வி முக்கியமானது. அங்கே மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 11 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. ஆட்சியைப் பிடிக்கும் ஆசையோ, நோக்கமோ நிச்சயம் இல்லை. இருந்தால் இன்னும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும். தில்லிவாழ் தமிழர்கள் நலனைப் பாதுகாப்பதற்காகவே போட்டியிடுவதாக விஜய்காந்த் சொல்லியிருக்கிறார்.

அவர் கட்சியின் கணக்குப்படி தில்லியில் 15 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் குடிசைப்பகுதிகளில் இருக்கிறார்கள். இன்னொரு கணிசமான பிரிவினர் நடுத்தர வகுப்பினர். தில்லி குடிசைப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் நலனில் அங்கே இருக்கும் எந்தப் பெரிய கட்சியும் அக்கறை காட்டவில்லை என்பதால் தங்கள் கட்சி களம் இறங்கியிருப்பதாக விஜய்காந்த் சொல்லியிருக்கிறார். பெங்களூரு, மும்பை நகரங்களில் வாழும் தமிழர்கள் நலனில் கூடத்தான் அங்கிருக்கும் பெரிய கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை. அங்கெல்லாம் சென்று போட்டியிடாத தே.மு.தி.க., தில்லிக்குச் சென்றது ஏன்? 

உண்மையில் விஜய்காந்தின் அரசியல் ரீதியான நோக்கம் என்னவாகத்தான் இருக்க முடியும்?

ஒரு கருத்தின்படி காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காகவே விஜய்காந்த் இதைச் செய்திருக்கிறார் என்று கருதலாம். கடும் விலைவாசி உயர்வினால் தில்லி காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி நிலவும் சூழலில் காங்கிரசுக்கு எதிரான வோட்டுகளைப் பிரியச் செய்வதுதான் காங்கிரசுக்கு லாபமாக இருக்க முடியும். ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சி இப்படி தனக்கு வரவேண்டிய காங்கிரஸ் எதிர்ப்பு வோட்டுகளைப் பிரிக்கிறது என்றுதான் பி.ஜே.பி. அதன் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. நடுத்தர வகுப்பு, புதிய இளம் வாக்காளர்கள் வோட்டுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓரளவு செல்லக்கூடும். ஒரு திரளாக இன்னும் கொஞ்சம் வாக்குகளைப் பிரிப்பது என்றால், அதை, மத, சாதி, மொழி அடிப்படையில்தான் திரட்டிப் பிரிக்க முடியும். தமிழர்கள் வோட்டுகளை, குறிப்பாக குடிசைத் தமிழர்கள் வோட்டுகளை விஜய்காந்தால் பிரித்துக் காட்ட முடிந்தால் அது காங்கிரசுக்கு லாபம்தான்.

இப்படி தம் செல்வாக்கை தில்லி தமிழர்களிடமே செய்து காட்டினால், அடுத்து மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தம்முடன் கூட்டணி அமைக்க முன்வரச் செய்யவும் அப்போது அதனிடம் பேரத்தில் அதிக இடங்கள் கேட்கவும் தோதாக இருக்கும் என்பது விஜய்காந்தின் கணக்கு என்பது இந்தப் பார்வை. ஏற்கெனவே அதற்கான ரகசியமான உடன்பாடு வந்துவிட்டதன் விளைவாகக் கூட இந்தப் போட்டியிடுதல் நிகழலாம்.தில்லியில் விஜய்காந்துக்கு அப்படி என்ன செல்வாக்கு இருக்க முடியும்? அங்கே குடியேறியிருக்கும் ஏழை, கீழ் நடுத்தர வகுப்புத் தமிழர்கள் பெருவாரியாக தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து சென்றவர்கள். அதனால் அவர்கள் மத்தியில் மதுரைக் காரனாகிய தமக்கு ஈர்ப்பு இருக்கலாம் என்று கருதியிருக்கலாம். இதை விட முக்கியமாக, தில்லியில் இருக்கும் தமிழர்கள் இதுவரை தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்று கட்சி வாரியாகப் பெருமளவில் பிரிக்கப்படவில்லை. அவர்கள் மத்தியில் பெரிய அளவில் நுழைய முயற்சிக்கும் முதல் தமிழகக் கட்சி தே.மு.தி.க.தான். 

ஆனால் கர்நாடகத்தில் இருக்கும் பெங்களூருவிலும், மகாராஷ்டிரத்தில் இருக்கும் மும்பையிலும், தி.மு.க., அ.இ.அ.தி. மு.க. கட்சிகள் பல வருடங்களாகவே தங்களுக்கு அமைப்புகளை நடத்தி வருகின்றன. அவ்வப்போது உள்ளாட்சித் தேர்தல்களிலும் சட்டமன்றத் தேர்தல்களிலும் கூடப் போட்டியிட்டு வருகின்றன. உள்ளூரின் பிரதானக் கட்சி ஏதேனும் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதே அங்கே அவற்றின் வழக்கம்.விஜய்காந்தின் கணக்கு அவருக்கு உதவுமா, காங்கிரசுக்கு உதவுமா, அல்லது யாருக்குமே உதவாத கணக்கா என்பது இதை நீங்கள் படிக்கும்போது தெரியவந்துவிடும். தொகுதிக்கு ஆயிரம் வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்திருந்தால் கூட, இதற்கு முன் தமிழகக் கட்சிகள் யாரும் இங்கே இதைக் கூட செய்து பார்த்ததில்லை என்ற சாதனை அவரால் முன்வைக்கப்படும்.இந்த விஷயத்தில் தே.மு.தி.க.வின் வியூகம், இப்போதைய தேர்தல் சூழல் இவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்கும் தொலைநோக்கிலான ஓர் முக்கிய அம்சத்தைப் பார்ப்போம். இந்தியாவுக்குள் பல்வேறு மாநிலங்களில் இன்று தமிழர்கள் சென்று வாழ்கிறார்கள். இதே போல தமிழகத்துக்குள் பிற மாநிலத்தினர் பலர் வந்து வசிக்கிறார்கள். இப்படிப் புலம் பெயர்ந்து வாழும் வாழ்க்கையில் அவர்களுடைய நலன்கள் குடிபெயர்ந்த இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பதுதான் கேள்வி.குடிபெயர்ந்த இடத்தில் தமிழர்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்று பார்த்தால், தாய்மொழிக் கல்விக்கான வாய்ப்பு, வேலை, குடியிருப்பு, மருத்துவம் முதலியவற்றில் பாரபட்சமற்ற சமவாய்ப்பு ஆகியவை என்று சொல்லலாம். இவை அனைத்தையும் அந்தந்த மாநில அரசின் வாயிலாகவே உறுதி செய்ய முடியும். கடந்த காலங்களில் பெங்களூருவிலும் மும்பையிலும், தில்லியிலும் உருவான பல தமிழர் சங்கங்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல் அதற்கு வெளியே பொது அமைப்பாக நின்றே இவற்றை பெற முயற்சித்து வந்திருக்கின்றன. உள்ளூர் மக்களுடன் ஒட்டாமல் வாழ்வதும் கூடாது என்று நம்மவருக்கு அறிவுறுத்தவும் இவை முயற்சித்திருக்கின்றன. பெங்களூரு தமிழ்ச் சங்கம் பல்லாண்டுகளாக அங்கே புதிதாகக் குடியேறும் தமிழர்களுக்குக் கன்னடம் கற்பிக்கும் வகுப்புகள் நடத்தி வருகிறது. (இப்போது தமிழும் கற்பிக்கும் வகுப்புகள் தேவைப்படலாம் என்பது இன்னொரு கதை.) ஆனால் இதில் பெரும்பாலான அமைப்புகள் (எல்லோரும் அல்ல) பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்வுகள், பண்டிகைத் திருவிழாக்கள், இலக்கிய நிகழ்ச்சிகள் முதலியவற்றை மட்டுமே நடத்தும் அமைப்புகளாகக் குறுகிப் போய்விட்டன. அன்றாட தமிழர் வாழ்வின் அவசியங்களுக்கு சமவாய்ப்பை உறுதி செய்யும் அம்சங்களில் கவனம் செலுத்தவில்லை. மெல்ல மெல்ல இவை தனி நபர்களின் விருப்புவெறுப்பு மட்டுமன்றி வர்க்க அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் கூடப் பிரிந்து சின்னச் சின்ன அமைப்புகளாகவும் ஆகிவிட்டன. தமிழகத்தில் கட்சிரீதியாகப் பிரிந்திருப்பதைப் போலவே புகலிடங்களிலும் பிரிந்திருப்பதை திராவிடக் கட்சிகள் ஏற்கெனவே செய்து வந்துள்ளன. (மும்பையில் தமிழர்களுக்கு எதிராக சிவசேனை தன் கொடூர முகத்தைக் காட்டிய காலத்தில் மட்டுமே வரதாபாய் போன்ற எதிர்வினைகள் உருவாகின.)இதன் விளைவாக இன்று தமிழர்கள் கணிசமாக வாழும் எந்த வேற்று மாநிலத்திலும் அங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக அரசிடம் நிர்வாகத்திடம் செல்வாக்குடன் பேசித் தீர்வுகளை உருவாக்கக் கூடிய ஒற்றைத் தமிழர் அமைப்பு எந்த நகரிலும் இல்லை. அதனால்தான் மும்பையிலோ தில்லியிலோ பெங்களூருவிலோ அரசு உதவியுடன் நடந்த தமிழ்ப் பள்ளிகள் குறைந்து கொண்டே வருகின்றன. இதற்கு ஒற்றை வலிமையான குரலாக ஒலிக்கும் முயற்சி ஏதும் அங்கெல்லாம் இல்லை. தனித்தனிக் குழுக்களின் முணுமுணுப்புகளோடு முடிந்துபோய் விடுகின்றன.

தமிழ்நாட்டுக்குள்ளேயே முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்னை, அணுஉலை எதிர்ப்பு போன்றவற்றுக்குக் கட்சி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர வேண்டிய அவசியம் இருந்தும் நடப்பதில்லை. இந்தப் பிரிவினையை சிறுபான்மையினராக தமிழர் இருக்கும் புகலிடங்களிலும் கட்சி, சாதி அடிப்படையில் நீட்டிப்பதால் அங்குள்ள தமிழருக்கு எந்த விமோசனமும் கிட்டாது. தமிழர்கள் கணிசமாக வாழும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருநகரிலும் சிதறிக் கிடக்கும் தமிழர் சங்கங்கள், அமைப்புகள் எல்லாம் தங்கள் தனி அடையாளங்களை அவ்வளவு எளிதில் விட்டுவிட்டு ஒருங்கிணையமாட்டார்கள். எனினும் பொது நோக்கங்களுக்காக வேனும் ஒற்றைக் கூட்டமைப்பாக செயல்படுவது அவசியமாகிறது. குறைந்தபட்சப் பொதுத்திட்ட அடிப்படையில் ஆங்காங்கே இப்படித் தமிழர் கூட்டமைப்புகள் பிற மாநிலங்களில் அமைந்தால், அவை தமிழகக் கட்சிகள் அமைப்புகளுக்கே வழிகாட்டியதாக இருக்கும்.

விஜய்காந்தின் தில்லி முயற்சி அவரது அரசியலுக்கே எந்த அளவு உதவும் என்பது சந்தேகம்தான். நிச்சயம் தில்லி தமிழர் நலனுக்கு உதவாது. அவரை அடுத்து பிற கட்சிகளும் அங்கே போய் தமிழரைப் பிரிக்கும் ஆபத்தே உள்ளது.


அருள்வாக்கு - கனவும் விளையாட்டும்!


நிஜமாக இல்லாததை ஒன்று, கனா என்று சொல்வோம்; அல்லது விளையாட்டு என்போம்.

எதுவோ ஒன்று நிஜமாக நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கிறோம். அது ஏமாற்றிவிட்டு ஓடிப்போய் விடுகிறது. ‘எல்லாம் கனவாப் போச்சு’ என்கிறோம். அந்தக் கனவான பொய் மாயமாகவே ஜகத்தைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.

விளையாட்டு என்பது நிஜமில்லாததுதான். ஏதோ சின்ன சோப்பை, பொம்மையை பெரிய அண்டான் குண்டான் மாதிரி வேஷம் கொடுத்து வைத்து, பாலப்பிராயத்துக் குழந்தைகள் அம்மா - அப்பா, தாத்தா - பாட்டி என்று தங்களுக்கு வேஷம் கொடுத்துக் கொண்டு பண்ணுவதுதான் விளையாட்டு. பெரியவர்கள் ‘ஸ்போர்ட்ஸ்’ என்று பண்ணும் விளையாட்டுகளும் வாழ்க்கையின் நிஜமான ப்ரச்னைகளுக்கு ஸம்பந்தப்படாமல், ஏதோ ஒரு பந்தை ஏதோ ஒரு goal-க்கு அடிக்க வேண்டும் என்று, காரணம் சொல்ல முடியாததான, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாததான காரியங்களாக இருக்கிறவை தானே? ‘எதற்காக மண்டையை உடைத்துக் கொண்டு ‘செஸ்’ காய்களைத் தள்ள வேண்டும்?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

விளையாட்டுக்குச் சொன்னேன்: நிஜம்னு நினைச்சுட்டியா?" என்று கேட்கிறோமே, அங்கே நன்றாகவே தெரிகிற தோல்வியோ, விளையாட்டு என்கிறது நிஜமில்லை என்று! ‘விளையாட்டே வினையாச்சு’ என்றும் சொல்கிறோம். வினைதான் நிஜமாகவே நடப்பது. அப்படியானால், விளையாட்டு நிஜமில்லை என்றும், எதனாலோ அப்படிப்பட்டதுகூட நிஜமாகிவிட்டது என்றும்தானே அர்த்தமாகிறது?

‘மாயக்கனா’ என்கிறாற் போலவே ‘மாய விளையாட்டு’ என்று சொல்கிறதையும் கவனிக்க வேண்டும்.

இரண்டும் ஒன்றுதான் என்று ஆகிவிட்ட தோல்லியோ?

அதிலே கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஸ்போர்ட்ஸ் - சச்சின் இருக்கை யாருக்கு ?

 
இந்திய அணி, பலவிதமான முன்னேற்பாடுகளுடன் தென் ஆப்பிரிக்கா என்கிற சிங்கத்தை அதன் குகைக்குள் சந்திக்கிறது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடர், ஒருநாள் போட்டிகள் எவற்றிலும் இந்திய அணி ஜெயித்தது கிடையாது. இன்றைய தேதியில், மிகவும் பலம் பொருந்திய அணியாக இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி எந்தவகையில் ஈடுகொடுக்கப்போகிறது? சச்சின் இல்லாத இந்திய டெஸ்ட் அணி எப்படி இருக்கப் போகிறது? இரு முக்கியமான வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தோற்றுப்போன இந்திய அணி தெ.ஆ.வில் விஸ்வரூபம் எடுக்குமா? இப்படிப் பல கேள்விகளுக்கு தெ.ஆ. தொடரில் விடை தெரியப் போகிறது.
 
இந்திய அணிக்கு 2013 கொண்டாட்டமான வருடம் (இதுவரை). கடந்த 11 மாதங்களில் 6 ஒருநாள் தொடர்/போட்டி களை வென்றுள்ளது. 30 ஒருநாள் ஆட்டங்களில் 8ல் மட்டுமே தோற்றிருக்கிறது. 2013ல், ஆடிய 6 டெஸ்டுகளிலும் வெற்றி. இந்தக் காலகட்டத்தில்தான் கோலி, ரோஹித் சர்மா, தவான், விஜய், அஸ்வின், ஜடேஜா, ஷமி, புவனேஷ்வர் குமார், ஓஜா போன்றவர்கள் தங்கள் திறமையை மேலும் மெருகேற்றி அணியின் வெற்றிகளுக்கு அடித்தளமாக இருந்தார்கள். ஒரு கேப்டனாக தோனிக்கு 2011-ஐ விடவும் 2013தான் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும். இந்திய அணி ஜொலிப்பு இப்படியென்றால் மறுபக்கம் தென் ஆப்பிரிக்கா பீமபலத்துடன் இருக்கிறது. தெ.ஆ. கடந்த ஏழு வருடங்களில் ஒரேயொரு டெஸ்ட் தொடரில் மட்டும் தோற்றிருக்கிறது. (2009ல் ஆஸி). கடந்த 11 வருடங்களில் தெ.ஆ.வில் நடந்த டெஸ்ட் தொடர்களிலும் ஒரேயொரு முறைதான் தோல்வி! இவ்வளவு வலுவான டெஸ்ட் அணியுடன் அதுவும் அவர்கள் சொந்த மண்ணில் மோதுவதென்பது மலையைக் கட்டி இழுப்பதற்குச் சமம். ஜெயித்து விட்டால் அதைவிடவும் சவாலான ஒன்று இனி இருக்க முடியாது.  

அடுத்த ஒருவருடம் வரை இந்திய அணிக்கு வெளிநாடுகளில்தான் அதிக ஜோலி. இந்த டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்கள், ஜனவரி-பிப்ரவரியில் நியூசிலாந்தில் 2 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்கள், ஜூலை- செப்டெம்பரில் இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்கள், ஒரு டி20. பிறகு டிசம்பர்-2015 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்டுகள், முத்தரப்பு ஒருநாள் போட்டி. பிறகு, அதே ஆஸ்திரேலியாவில் 2015 உலகக் கோப்பை. அதனால் அடுத்த ஒண்ணேகால் வருடம் இந்திய அணிக்குக் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. பி.சி.சி.ஐ. தென் ஆப்பிரிக்கா தொடருக்காக கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறது. முதலில் ஒருநாள் ஆட்டங்கள், பிறகு டெஸ்டுகள் என்று கால அட்டவணை மாறியது. அதேபோல, அங்குள்ள சூழலை வீரர்கள் எளிதில் புரிந்து கொள்ள டெஸ்ட் வீரர்களை முன்னதாகவே அனுப்புகிறது. இத்தனை ஏற்பாடுகள் செய்தபிறகு தொடரைச் சாதகமாக்கிக் கொள்வது, வீரர்களின் கையில்தான் இருக்கிறது.
 
இப்போதைய இந்திய டெஸ்ட் அணியில், தோனி, ஜாகீர் கான் தவிர மற்ற எல்லோரும் 30 வயதுக்குக் குறைவானவர்கள். அனுபவம் குறைந்தவர்கள். மேலும், சச்சின் ஆடிவந்த 4ம் இடம் யாருக்கு என்கிற முக்கியமான கேள்வியும் தோனியைத் துரத்திக் கொண்டிருக்கிறது. ரோஹித் சர்மா ஆடிய இரண்டு டெஸ்டுகளிலும் செஞ்சுரி அடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு முன்பே அணியில் தன்னை நிரூபித்தவர் விராத் கோலி. யாருக்கு சச்சினின் இருக்கை? ரோஹித் அடித்த இரண்டு செஞ்சுரிகளும் ஆறாவதாகக் களமிறங்கியபோது நிகழ்ந்ததால் அதை மாற்றவேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. ரோஹித் நான்காவதாக களம் இறங்கினால் அவருக்குப் பிறகு கோலி வருவதாக இருந்தால் ரோஹித்தால் இன்னும் நம்பிக்கையுடன் ஆடமுடியும் என்கிற கருத்தை முன்வைக்கிறார் டபிள்யூ.வி. ராமன். ஆனால் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே என்கிற வரிசைதான் தோனியின் விருப்பமாக இருக்கும். பௌலர்களில் அஸ்வின் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவார். ஆஸ்திரேலியாவில் மிகவும் சுமாராக பௌலிங் செய்த அஸ்வின், பிறகு தம் பங்களிப்பில் ஒரு குறையும் வைக்கவில்லை. இப்போது, ஆல்ரவுண்டர் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ம்ம்... பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Thursday, December 05, 2013

வால்ட் டிஸ்னி - 1901 டிசம்பர் 5 அன்று பிறந்தார்

வால்ட் டிஸ்னி


அமெரிக்காவில் 1901 டிசம்பர் 5 அன்று பிறந்தார் வால்ட் டிஸ்னி. புகழ்பெற்ற ஓவியர், கார்ட்டூன் படத்தயாரிப்பாளர், பொழுதுபோக்குப் பூங்கா நிறுவனராக மிகவும் புகழ்பெற்றார். சிறு வயதிலிருந்தே இயற்கைக் காட்சிகளையும் விலங்குகளையும் ஓவியமாக வரையும் விருப்பமே, பின்னாளில் உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்தியது. 16 வயதில் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு நுண்கலைப் பள்ளிகளில் ஓவியம் பயின்றார். 

1923ல் சகோதரர் ராய் டிஸ்னி மற்றும் உப் ஐவர்க்ஸ் ஆகியோருடன் இணைந்து கேலிச்சித்திர அசைவாக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். 1926-28 வரை யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ‘ஓஸ் வால்ட் தி ராபிட்’ எனும் கார்ட்டூன் தொடரைத் தயாரித்தார். 1928ல் இவர்கள் தயாரித்த ‘ஸ்டீம்போர்ட் வில்லி’ என்ற முதல் கார்ட்டூன் திரைப்படத்தில் ‘மிக்கி மௌஸ்’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தினார். ஐவர்க்ஸ் நகைச்சுவை ஓவியங்களை வரைய அவற்றுக்கு வால்ட் டிஸ்னி குரல் கொடுக்க, பேசும் முதல் கேலிச் சித்திரத் திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றது. 1950-60களில் வால்ட் டிஸ்னி நிறுவனம் ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்ததுடன் உலகமெங்கும் வரவேற்பையும் பெற்றது. 

1932ல் இவர் உருவாக்கிய ‘ஃப்ளவர் அண்ட் ட்ரீஸ்’ கார்ட்டூன் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது வாழ்நாளில் 59 ஆஸ்கர் விருதுக்கான நியமனங்களும், 26 ஆஸ்கர் விருதுகளும் பெற்றுள்ளார். 1955ல் கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘டிஸ்னி லேண்ட்’ என்ற மிகப்பெரிய பொழுதுபோக்குப் பூங்காவை நிறுவினார். 1971 ஃப்ளோரிடா மாகாணம் ஆர்லண்டோவில் ‘டிஸ்னி வேர்ல்ட்’ உருவாக்கப்பட்டது.
1966 டிசம்பர் 15, நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்தார் வால்ட் டிஸ்னி.