Search This Blog

Tuesday, April 29, 2014

ஸ்ரீராமாநுஜ விஜயம்

றக்குறைய 940 வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில், ஸ்ரீகேசவசோமயாஜி-காந்திமதி தம்பதிக்குத் திருக்குமரனாக அவதரித்தார் ஸ்ரீராமாநுஜர். இந்தத் தெய்விகக் குழந்தையை இளையாழ்வார் என்று நாமரகணம் செய்து அழைத்தனர் பெற்றோர்.

உரிய காலத்தில் யாதவப் பிரகாசரின் குருகுலத்தில் மாணாக்கனாகச் சேர்ந்த இளையாழ்வார், சிறிது பயிற்சிக்குப் பிறகு தமது குருவே கண்டு வியந்து பொறாமை கொள்ளக் கூடிய விதத்தில் ஞான ஒளி வீசத் தேர்ச்சி பெற்றார். பொறாமைத் தீ பற்றியெரிந்தபோது, யாதவப் பிரகாசருக்கு இளையாழ்வாரை ஒழித்து விடுவதைத் தவிர, வேறு வழி தோன்றவில்லை. நயவஞ்சகமாகக் காசி யாத்திரைக்குத் திட்டம் போட்டு, விந்திய மலைச்சாரலில் இளையாழ்வாரை விண்ணுலகுக்கு அனுப்ப வழிவகைகளையும் வகுத்து விட்டார். ஆனால் இளையாழ்வார் பக்கம் தெய்வானுக்கிரகம் பூரணமாக இருந்தது.

பரந்தாமனும் தேவியும் விந்தியமலைச்சாரலுக்கு வேடவ தம்பதியாக வந்து, இளையாழ்வாரை அழைத்துக்கொண்டு போய், காஞ்சிக்கு அருகில் உள்ள ஒரு சோலையில் விட்டுவிட்டு மறைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னரே இளையாழ்வாரின் காஞ்சிபுர வாசம் ஆரம்பமாகியது.


காஞ்சியில் வரதராஜப் பெருமாளின் பரம பக்தனாக இருந்து சேவை செய்து வந்தபோது ஆளவந்தாரைச் சந்திக்கும் பாக்கியம் இளையாழ்வாருக்குக் கிடைத்தது.

இருவரும் நேரில் உரையாடவில்லை. ஆனால் இருவர் மனமும் ஒன்றோடொன்று பிணைந்தது. இதற்கு அடையாளமாகவே, தமது இறுதிக் காலத்தில் ஆளவந்தார் இளையாழ்வார் சிந்தனையிலேயே இருந்து, தமது சீடர்களை அனுப்பி, அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரும்படிப் பணித்தார்.
இளையாழ்வார் விரைந்து சென்ற சமயம் ஆளவந்தார் பரகதி அடைந்துவிடவே, அவர் மனத்திலிருந்த அபிலாஷைகளை ஊகித்து உணர்ந்து கொண்டு, அவர் விட்டுச் சென்ற புனித காரியங்களை இளையாழ்வார் தாமே மேற்கொண்டார்.

அப்போது வைஷ்ணவப் பிரசாரம் தமிழகத்தில் தீவிரமாயிருந்தது. ஆழ்வாராதிகளின் திவ்யப் பிரபந்தம் தமிழ் வேதம் எனக் கருதப்பட்டது. பண்டிதர்களும், பரம பக்த சிகாமணிகளும் வைஷ்ணவம் நாட்டில் பரவ வேண்டி அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார்கள். இளையாழ்வாரின் திருவுள்ளத்திலும் அந்தக் காற்று வீசத் தொடங்கியது.

மகாபூர்ணா என்ற பெரிய நம்பி இளையாழ்வாருக்குப் பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்து அவரை வைஷ்ணவராக்கினார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இளையாழ்வாரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது. கிரஹஸ்தாசிரமத்தைத் துறந்து சந்நியாசாச்ரமத்தை மேற்கொண்டு, ஸ்ரீராமாநுஜர் என்ற திவ்ய நாமத்தோடு ஸ்ரீரங்கம் சென்று, ஆளவந்தாரின் கடைசிக் கால விருப்பங்களை நிறைவேற்றுவதில் தமது காலத்தின் பெரும் பாகத்தைச் செலவழித்தார்.

சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞான பண்டிதர்களை ஒன்று திரட்டி, வேத, உபநிஷத்துக்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் சம்வாதம் செய்து ஆராய்ச்சிகள் நடத்தினார். தாமே சிலவற்றிற்கு பாஷ்யங்களும் செய்தருளினார். பிரும்ம சூத்திரத்திற்கும் கீதைக்கும் அவர் செய்த பாஷ்யங்கள் பிரசித்தமாயுள்ளன.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்ரீராமாநுஜ நூற்றந்தாதி திருவரங்கத்து அமுதனார் என்ற ஒரு சிஷ்யரால் உருவாக்கப்பட்டு, ஸ்ரீ ராமாநுஜர் முன்னிலையில் அரங்கேற்றப் பெற்று, அவர் ஆக்ஞையையொட்டி நாலாயிரப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டது.

இவ்வாறெல்லாம் விரிவான முறையில் விசிஷ்டாத்வைத பிரசாரத்தைச் செய்து பக்தகோடிகளின் எண்ணிக்கையை பெருக்கி வந்த ஸ்ரீராமாநுஜரின் ஸ்ரீரங்கவாசம் திடீரென்று முற்றுப் பெற்று, மைசூர் மேல் கோட்டையில் ஆரம்பமாகி, அங்கே சுமார் இருபது வருஷ காலம் ஓடியது. திருநாராயணபுரத்தில் கோயில் கொண்ட விக்கிரக வடிவான 'சம்பத் குமாரன்’ அந்த சமயம் முஸ்லிம் மன்னன் ஒருவனுடைய அரண்மனையில் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்து எடுத்துவந்து, யதாஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீராமாநுஜர்.

மீண்டும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமாநுஜரின் வாழ்க்கை தொடர்ந்தது. நூற்று இருபது வயது வரை வாழ்ந்து, வைஷ்ணவ சம்பிரதாயம் நீடித்து வளர வேண்டியதற்கான சிறந்த ஏற்பாடுகளைச் செய்த பிறகு, தமது சிஷ்யன் பராசரரிடம் தமது பொறுப்புக்களைக் கொடுத்துவிட்டு திவ்ய சமாதியடைந்தார்.

ஸ்ரீராமாநுஜரின் ஜீவிய காலத்திலேயே அவரது விக்கிரகங்களும் சிலைகளும் சிஷ்யர்களால் தயாரிக்கப்பெற்று பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவற்றில் ஸ்ரீரங்கம்- 'தானான திருமேனி’, மேல்கோட்டை- 'தானுகந்த திருமேனி’, ஸ்ரீபெரும்புதூர் - 'தமர் உகந்த திருமேனி’ ஆகிய மூன்று விக்கிரகங்களையும் ஸ்ரீராமாநுஜரே தழுவி, தமது ஆசிகளோடு அளித்தார்.


 1957 விகடன் தீபாவளி மலரில் இருந்து

Monday, April 28, 2014

தங்க நகைச் சீட்டு லாபமா?

தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்கம் வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்ததாகத் தெரியவில்லை. எப்படியாவது அடுத்த வருஷத்துக்குள் இரண்டு வளையல் அல்லது ஒரு செயினையாவது வாங்கிவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள் நம் வீட்டில் உள்ள பெண்கள். ஆனால், தங்கத்தின் விலை இப்போது அதிகமாக இருப்பதால், மொத்தமாக பணம் தந்து வாங்கக்கூடிய நிலையில் பலரும் இல்லை. மக்களின் இந்த  நிலையை சரியாக புரிந்துகொண்ட நகைக் கடைகள் நகைச் சீட்டு போன்ற எளிய திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களை தங்கள் பக்கம் சுண்டி இழுக்கின்றன.
 
இன்றைய நிலையில் சிறிய, பெரிய நகைக் கடைகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா கடைகளும் நகைச் சீட்டுகளை நடத்தி வருகின்றன. இந்த நகைச் சீட்டு திட்டங்களோடு கவர்ச்சிகரமான இலவசங்களையும் அளித்து வருகின்றன.

ரொக்கமாக பணம் தந்து தங்கநகை வாங்க முடியாதவர்களுக்கு இந்த சீட்டு திட்டங்களே பெரும் வரப்பிரசாதமாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் செலுத்துவதன் மூலம் குறைந்தளவு வருமானம் உள்ளவர்களும் இந்த நகைச் சீட்டுத் திட்டங்கள் மூலம் சில பவுன் நகைகளையாவது வாங்க முடிகிறது.  

நகைச் சீட்டு கட்டுவதில் இப்படி பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும், இதில் சேர்ந்து நகை வாங்குவதால் லாபமா அல்லது நஷ்டமா என்கிற கேள்வியை யாரும் கேட்பதே இல்லை.

நகைச் சீட்டில் சேரும்போது என்னென்ன விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.

 
இன்றைக்கு பலவிதமான நகைச் சீட்டுத் திட்டங்களை நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் நம்முடைய பட்ஜெட்டுக்குத் தோதான அளவில் பணத்தைக் கட்டி, ஆண்டு முடிவில் தங்கநகை பெறலாம் என்பது ஒருவகை. இப்படி வாங்கும் நகைக்கு செய்கூலி, சேதாரம் பெரும்பாலும் கிடையாது. சில கடைகளில் 1 சதவிகிதம் வாட் வரியையும் தள்ளுபடி செய்கிறார்கள். சில கடைகளில் நீங்கள் செலுத்தும் ஒரு மாத தவணை தொகைக்கு இணையான மாத தவணை தொகையைப் போனஸாக வழங்குகிறார்கள். செலுத்திய தொகையோடு போனஸ் தொகையும்  சேர்த்து தங்கநகை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்தத் திட்டத்தில் செய்கூலி சேதாரம் உண்டு.
 
சில கடைகளில் குலுக்கல் திட்டமும் வைத்திருக்கிறார்கள். சில கடைகள் கடந்த ஆண்டு திடீரென தங்கம் விலை இறங்கியபோது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தன. மாதாமாதம் கட்டிய தொகைக்கு ஈடான தங்கம், கிராம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சீட்டு முதிர்வின்போது மொத்தம் சேர்ந்துள்ள கிராம் அளவுக்கு தங்க நகையை சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் அல்லது கட்டிய மொத்த தொகைக்கு சேதாரத்துடன் தங்க நகை (முதிர்வு தேதி விலையில்) வாங்கிக்கொள்ளலாம்.

இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் 15 மாத கால அளவில் இருக்கும். அதேபோல, இடையில் பணம் செலுத்துவதை நிறுத்தினால் செலுத்திய தொகையின் மதிப்புக்கு தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். இப்படி வாங்கும் நகைக்கு செய்கூலி சேதாரம் இருக்கும். பணமாக வாங்க முடியாது. சீட்டு முதிர்வு அடையும்போது குறிப்பிட்ட சதவிகிதம் வரைதான் சேதாரத்தில் கழிவு இருக்கும். அதற்குமேல் சேதாரம் உள்ள நகையை வாங்கும்போது, வித்தியாசப்படும் சேதாரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். அதாவது, நீங்கள் 25 சதவிகிதம் சேதாரம் உள்ள நகையைத் தேர்வு செய்து வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், சீட்டில் அதிகபட்சம் 18 சதவிகிதம் சேதாரத்துக்கு பணம் வாங்கமாட்டார்கள். மீதமுள்ள 7 சதவிகித சேதாரத்துக்கு நீங்கள் கட்டாயம் பணம் செலுத்த வேண்டும். நீங்கள் தங்க காயின் அல்லது சேதாரம் குறைந்த நகைகளை வாங்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

 
நகைச் சீட்டு திட்டத்தில் மாதந்தோறும் கட்டும் தொகைக்கு தங்கமாக வரவு வைக்கப்படும் திட்டத்துக்கும் (சேதாரம் கிடையாது என்றால்) வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் செய்வதற்கும் ஒப்பீடு செய்யப்பட்ட அட்டவணை முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சேதாரக் கழிவுடன் கூடிய 15 மாத சீட்டு திட்டத்தில் கடந்த 2012 டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து 2014 பிப்ரவரி 1 மாதம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் தங்க நகைச் சீட்டு.

கட்டியிருக்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், உங்கள் பெயரில் சுமார் 10.32 கிராம் தங்கம் சேர்த்திருக்கும் (மாதம் முதல் தேதி விலைப்படி). முதிர்வின்போது 10.32 கிராமின் மதிப்பு (10.32X2800) 28,896 ரூபாய் ஆகும்.

நீங்கள் நகைச் சீட்டில் மொத்தமாகச் செலுத்திய தொகை 30 ஆயிரம் ஆகும். நீங்கள் சீட்டு முதிர்வின்போது 18 சதவிகிதம் சேதாரம் உள்ள நகை வாங்கினீர்கள் எனில் (28,896X18/100) 5201 ரூபாய் ஆகும். ஆக (28896+ 5201) 34,097 மதிப்புள்ள நகையை 30,000 கட்டி வாங்கியிருப்பீர்கள். ஆக 30 ஆயிரம் ரூபாய்க்கு 4,097 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். அதுவும் அவர்கள் கொடுக்கும் அதிகபட்ச சேதாரக் கழிவில் நகை வாங்கினால்தான் கூடுதல் லாபம் கிடைக்கும். அதே குறைந்த அளவு சேதாரம் உள்ள நகையை வாங்கினால் லாபம் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

அதே பணத்தை மாதம் 2 ஆயிரம் வீதம் ஆர்.டி.யில் போட்டால், 15 மாதங்களுக்குபின் 9 சதவிகித வட்டி என்றால் 31,851 ரூபாய் சேர்ந்திருக்கும். இடையில் எடுத்தால் 4 சதவிகித வட்டியாவது கிடைக்கும். இதுவே, தங்க நகைச் சீட்டில் இடையில் நிறுத்தினால் எந்த சலுகையும் கிடைக்காது. அதாவது, 5 மாதம் சீட்டு கட்டியபிறகு இடையில் நிறுத்தினால் உங்களுக்கு (5X2000) 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கான நகை மட்டுமே கிடைக்கும். இதற்கு சேதாரமும் உண்டு. எனவே நகை கட்டாயம் தேவை என்பவர்களும், மொத்தமாக பணத்தைக் கொடுத்து நகை வாங்க முடியாதவர்களுக்கு நகைச் சேமிப்பு திட்டங்கள் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடையின் பாரம்பரியத்தையும் நம்பகத்தன்மையையும் கணக்கில்கொள்வது அவசியம்.  

 
 இரா.ரூபாவதி

கறுப்புப்பணம் மீட்பு: நிஜத்தில் சாத்தியமா?

''நாங்கள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 100 நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கறுப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம். அந்தப் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம்'' என்று சொல்லி யிருக்கிறார் பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங். இந்த அறிவிப்பை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும், இது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது முக்கியமான விஷயம்.
 
வெளிநாடுகளில் கறுப்புப்பணம் பதுக்கிவைத்திருப்போர் பட்டியலில் சீனா மற்றும் மெக்சிகோ நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா எட்டாம் இடத்தில் உள்ளது. பலவகையில் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பெரும்பான்மை கறுப்புப்பணம் வங்கிகளிலும், வரிச் சொர்க்கம் (Tax Heaven)என்று கூறப்படும் நாடுகளிலும் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் பெரும்பான்மை பணம் பின்நாட்களில் வரும் அரசியல் மற்றும் வியாபாரத் தேவையை மனத்தில்கொண்டு தேக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.இத்தகைய கறுப்புப்பணம் அரசியல்வாதிகள் மற்றும் சில பெரும் தொழிலதிபர்களது லஞ்சம் மற்றும் ஊழல் வகையைச் சேர்ந்தது என்பதால் இந்தப் பணத்தை மீட்டுக்கொண்டுவருவோம் என்று யாராவது சொன்னாலே, மக்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
 
இரண்டு சாத்தியங்கள்! 

இந்தப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவது இரண்டுவிதங்களில் சாத்தியம். ஒன்று, கறுப்புப் பணத்தைத் தீவிர அரசாங்க நடவடிக்கை மூலம் பிறநாடுகளுடன் உள்ள ரகசிய ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அதற்கான முயற்சிகளைச் செய்து அதை மீட்பது. இதன்படி, அரசாங்கம் மற்ற நாடுகளுக்கிடையே உள்ள இருநாட்டு ஒப்பந்தங்களின்படி, தகவல் பெறும் உரிமையை நிலைநாட்டி போதிய தகவல்களைப் பெற்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கறுப்புப்பணத்தை நமது நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவருவது. இந்தக் குற்றத்துக்குண்டானவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி அதற்கான தண்டனையைப் பெற வைப்பது.
 
இரண்டாவது, கொண்டு சென்றவர் தாமாகவே முன்வந்து இந்தியாவுக்குள் மீண்டும் கொண்டுவர திட்டங்களை அறிவிப்பது. இதன்படி, இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் மூன்றுமுறைக்குக் குறையாமல் 'தாமாக முன்வந்து வரி செலுத்தும்’ திட்டங்களை (Voluntary Disclosure of Income Scheme (VDIS) வருமான வரித்துறை அறிமுகம் செய்தது.
 
டைசியாக 1997-ல் அறிமுகம் செய்த திட்டத்தில் சுமார் 3,50,000 வரிதாரர்கள் சுமார் ரூ.7,800 கோடி கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்து அதற்கான வரியைச் செலுத்தினர். ஆனால், இவை அனைத்தும் உள்நாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர அறிவிக்கப்பட்ட திட்டங்கள். வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தைக் கொண்டுவர இதுவரை எந்த வகையிலும் முயற்சி செய்தபாடில்லை.
 
ஆனால், பல வெளிநாடுகள் இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டுள்ளன. வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களை அறிவித்து வரி மற்றும் அபராதம் செலுத்தி சிறைத் தண்டனையிலிருந்து விடுபடும் திட்டத்தை முதன்முதலில் அறிவித்தது ஜெர்மனிதான். அதன்பின் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல், கிரீஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்து கறுப்புப்பணத்தைத் தமது நாட்டுக்குக் கொண்டுவரும்படி செய்துள்ளன.
 
அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவியேற்றபின் 2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் OVDI (Offshore Voluntary Disclosure Initiative) ñŸÁ‹ OVDP (Offshore Voluntary Disclosure Programme) என்னும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்தப் பொதுமன்னிப்புத் திட்டத்தில்(Amnesty) அமெரிக்கக் குடிமக்கள் சுமார் 33,000 பேர் 5 பில்லியன் டாலர் அளவுக்கு வரி மற்றும் அபராதத்தைச் செலுத்தியுள்ளனர். இந்தத் திட்டத்தை மூன்றாவது முறையாக கடந்த ஆண்டும் அமெரிக்க அரசாங்கம் அறிமுகம் செய்ததைப் பார்க்கும்போது இதன் முக்கியத்துவமும் வெற்றியின் அளவும் புரிகிறது.வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இத்தகைய பொது மன்னிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி அடைந்திருக்கும்நிலையில், இந்தியாவும் இந்த முயற்சி குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட கறுப்புப்பணம் இந்திய மண்ணுக்குள் வர வாய்ப்பாக இருக்கும்.இவர்களைத் தண்டனையிலிருந்து மன்னிப்பது நேர்மையாக வரி செலுத்துவோரை நிச்சயம் ஏளனப் படுத்துவதாக இருக்கும். ஆனால், தண்டிக்கும் விஷயத்தில் நாம் உறுதியாக இருந்தால், கறுப்புப்பணம் நம் நாட்டுக்குள் வராமலே போய்விடும். அந்நிய செலாவணி தொடர்பான சொத்துகள் இந்தியாவுக்குள் வரி மற்றும் அபராதத்தோடு வர வாய்ப்பு இருக்குமானால் அதைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.இந்திய வரிதாரர்கள் வெளிநாட்டில் உள்ள சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருமானம் குறித்து விவரம் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது ஒரு நல்ல முயற்சியே.
 
இனி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நூறு நாட்களில் கறுப்புப்பணம் மீட்டுக் கொண்டு வரப்படும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. என்றாலும், அதற்கான முனைப்பு இருப்பது வரவேற்கத்தக்கது. இது வெறும் தேர்தல் பேச்சாக மட்டும் இல்லாமல், சீரிய முயற்சியின் மூலம் கறுப்புப்பணத்தின் ஒரு பகுதியாவது இந்தியாவுக்கு வரும்பட்சத்தில் மின் உற்பத்தி, கட்டமைப்பு (Infrastructure), சுகாதாரம், கல்வி போன்ற முக்கியத் திட்டங்களுக்கு வெகுவாகப் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

அட்சயதிருதியை அன்று ஒரு கிராம் நகையாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் நம்மவர்கள். அப்படி  நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன 
 
1. ஹால்மார்க் நகைகள்! 

நீங்கள் வாங்கும் நகைகள் ஹால் மார்க் முத்திரை கொண்ட நகைகளா என்று பார்த்து வாங்குவது அவசியம். நம்பர் 1 நகை, தரம் நிறைந்தது என விளம்பரத்தில் சொல்லப்பட்டாலும் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் தான் தரமானவை. அதிலும் ஐந்து முத்திரை (முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண்) உள்ள ஹால்மார்க் நகைகளே தரமானவை. இதை பலரும் கவனிக்காமல் மூன்று முத்திரை கொண்ட ஹால்மார்க் நகைகளை வாங்கிவிடுகின்றனர். மேலும், வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை உண்டு.

2.கல் நகைகள்!
தங்க நகைகளை வாங்கும்போது கல் வைத்த நகைகளை வாங்கு கிறீர்கள் எனில், அவை எத்தனை கிராம் உள்ளன, அதற்கான விலை எவ்வளவு, மொத்த விலையில் கற்கள் போக தங்கத்தின் விலை சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். பிற்காலத்தில் அந்த நகைகளை தந்து புது நகை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ கல் நகைகளுக்கு மதிப்பு குறைத்தே கணக்கிடப்படும். ஆகவே, கல் நகைகளை வாங்கும்போது கவனத்தோடு இருக்கவேண்டியது அவசியம்.

3. டிசைன்! 

சிலர் நகை வாங்கவேண்டும் என்றதுமே நல்ல டிசைனாக இருக்க வேண்டும் என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி டிசைன் நகைகளை வாங்கும்போது அதற்கு சேதாரம் அதிகமாகும், அப்போது அதற்கான சேதாரம் எவ்வளவு, அது நகையின் டிசைனுக்கு தகுந்த சேதாரம்தானா என்று பார்த்து அதற்குபின் வாங்குங்கள். பார்க்க நன்றாக உள்ளது என நீங்கள் வாங்கும் சிறிய அளவிலான நகைகளின் ஆயுள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். மேலும், நீங்கள் ஏதாவது ஒரு நகையை அட்சயதிருதியை அன்று வாங்க வேண்டுமே என்ற காரணத்துக்காக 2 கிராமுக்கு கீழ் நகை வாங்கும்போது தரம் குறைந்த நகைகளை வாங்கும் வாய்ப்பு அதிகம். அதனால், நகை வாங்கும்போது இரண்டு கிராமுக்கு மேல் உள்ள நகையாகப் பார்த்து வாங்குவது நல்லது.


4.தரம்! 
 
நகை வாங்கும்போது சரியான தரத்தில் நகைகளை வாங்குவது முக்கியம். அதோடு ஒவ்வொரு நகை வாங்கும்போதும் அதற்கு என்ன தரக் குறியீடு எனப் பார்த்து வாங்க வேண்டும். தங்கம் என்றால் 916 நகைகள், வைர நகைகள் வாங்கும்போது தரச் சான்றிதழ் பார்த்து வாங்கவேண்டும். குறிப்பாக, வைரம் வாங்கும்போது கட்டாயம் தரச் சான்றிதழை கேட்டு பெற வேண்டும்.

5.சேதாரம்! 

சேதாரம் என்கிற விஷயம் கடைக்கு கடை மாறுபடும். நீங்கள் எந்த நகை வாங்குவதாக இருந்தாலும் சேதாரம் எவ்வளவு என்பதை நன்கு விசாரித்து அறிந்தபிறகே வாங்குங்கள். இதில் குழப்பமான பல கணக்குகள் இருப்பதால், உஷாராக இருப்பது அவசியம்!

அட்சயதிருதியை அன்று தங்க நகை வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்கள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளலாமே!

 

Friday, April 25, 2014

அட்சய திருதியை


காம்யக வனத்தை ஒட்டிய கங்கை நதிக்கரை. சலசலத்து ஓடும் அக்கங்கை நதி அன்று ஒலியெழுப்பாமல் தமது மௌனப் பயணத்தைத் தொடர்ந்தது. அன்றைய பொழுதை புலர வைக்க, ஆதவனின் ஒளிக்கதிர்களும் ஏனோ யோசித்தன. மலர்ந்து மணம் வீசக் காத்திருந்த மலர்களும், விடியலை உணர்த்த எத்தனித்திருந்த பறவையினங்களும் தமது கடமையை மறந்து, தத்தமது கூட்டுக்குள் முடங்கிக் கிடந்தன. கௌரவர் சபையில் இழைக்கப்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் - தருமர் தவிர, திரௌபதி உட்பட பாண்டவர் அனைவரும் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். நாடாள வேண்டிய பாண்டவர்களின் 12 ஆண்டு கால வனவாசத்தை எண்ணி அந்த நதிக்கரைச் சூழலே அமைதி பூண்டிருந்தது.

மௌனம் கலைந்த தருமபுத்திரர் தம்முடன் கானகம் வந்த அந்தணர்களை நோக்கி, அந்தணப் பெருமக்களே, இனியும் நீங்கள் எம்முடன் வர வேண்டாம். நாடு திரும்புங்கள். ஏனெனில் வனத்தில் உங்களை உபசரித்து, கவனிக்க நாங்கள் இயலாதவர்களாக இருக்கிறோம்" என்று கூறினார்.

எங்களைக் குறித்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. எங்கள் தேவைகளை நாங்களே கவனித்துக் கொள்கிறோம்" என்று அவர்கள் கூறினர். 

அவ்வுரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் புரோகிதரான தௌமியர், தரும புத்திரரின் மனத் துயரைப் போக்க எண்ணி, யுதிஷ்டிரனே, அனைத்து உயிர்களுக்கும் சூரியனே ஆதாரம். அவனே அனைத்து உயிர்களையும் காப்பவன். அவனின்றி உலக இயக்கமில்லை. அதனால் நாள்தோறும் அவனுக்குரிய துதிகளைச் சொல்லி சூரியனை தியானித்து வா. அதனால் பலவித நன்மைகளைப் பெறலாம்" எனக் கூறினார்.

தருமபுத்திரரும் சூரிய பகவானை எண்ணி தூய மொழிகளால் துதி செய்து தியானித்தார். தரும புத் திரரின் வழிபாட்டில் மகிழ்ந்த பகலவன், தரும புத்திரனே, நான் கொடுக்கும் இந்த அட்சய பாத்திரத்தைப் பெற்றுக்கொள். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் நீ உணவைப் பெறலாம். ஆனால் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் இதிலிருந்து உணவைப் பெற முடியும்" என்று கூறியதோடு, பதினான்கு ஆண்டுகள் கழித்து பாண்டவர்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற ஆசி கூறியும், அட்சய பாத்திரத்தை தரும புத்திரனின் கைகளில் கொடுத்தும் மறைந்தான்.

அட்சயம் என்றால் ‘குறையாதது’, ‘மேலும் வளர்வது’ என்று பொருள். தமக்குக் கிடைத்த அட்சய பாத்திரத்தை தௌமியரிடம் காட்டி ஆசி பெற்ற யுதிஷ்டிரன், திரௌபதி மூலமாக தம்முடன் வந்த அனைவரின் பசியாற்றி, தாமும் பசியாறினான். 

சூரிய பகவானிடமிருந்து தருமபுத்திரர் அட்சய பாத்திரம் பெற்ற தினம் அட்சய திருதியை நன்னாள்.

சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் அட்சய திருதியை. அன்று அதிகாலை நீராடி ஹரியின் நாமங்களைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இந்நாளில் வேத பாராயணம், ஜபம், தியானம் செய்வதால் குறையாத இறையருள் கிடைக்கும். திருத்தல தரிசனம், புனித நதி நீராடல், தான தர்மங்கள் செய்தல், புதிய சுப காரியங்களைத் தொடங்குதல் நலம் சேர்க்கும். 

கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை நாள் சுவர்ண கௌரி விரதமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் அன்று கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து, பூஜித்து வழிபடுகிறார்கள். இதனால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.

பிரம்மதேவன் உலகைப் படைத்ததும், கிருத யுகம் பிறந்ததும் அட்சய திருதியை நாளில்தான் என்கிறது புராணம். வறியவன் குசேலனை, ஸ்ரீ கிருஷ்ண பகவான் குபேரனாக்கியதும் இந்நாளே.  பொதுவாக, விஜயதசமி நாளில்தான் குழந்தைகளுக்கு ‘அட்சராப்பியாசம்’ எனப்படும் கற்பித்தல் சடங்கைச் செய்கிறோம். அதை அட்சய திருதியை நாளில் செய்ய, குழந்தைகளின் கல்வி அறிவு வற்றாத ஜீவ நதியாய் பெருகும் என்கிறார்கள் பெரியோர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் நல்லது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், தானம் வழங்கச் சிறந்த நாள் இது. இந்த நாளில் வழங்கப்படும் தானம், பல மடங்கு வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. ‘கொடுத்தால் குறையாதது’ என்று கல்வியைத்தான் சொல்வார்கள். மாறாக, அட்சய திருதியை நாளில் தானம் வழங்கினால், அது மேலும் வளர்ச்சியைத் தரும் என்பது அனுபவ உண்மை!

அட்சய திருதியை துளிகள்...

ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூரில் அருள்பவர் ‘வைத்த மாநிதி பெருமாள்.’ இவர் குபேரனுக்கு செல்வம் அளந்த ‘மரக்கால்’ (படி) என்ற அளவைப் பாத்திரத்தை தலைக்கு அடியில் வைத்து சயனித்திருக்கிறார். 

இவரை அட்சய திருதியை நாளில் வணங்க, செல்வ வளம் கொழிக்கும்.

காசியில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, பார்வதிதேவி, அன்னபூரணியாக சிவபெருமானின் பிட்சை பாத்திரத்தில் உணவு இட்ட நாள் அட்சய திருதியை. இத்தினத்தில் அன்ன பூரணியை வழிபட்டால் உணவுக்குப் பஞ்சம் ஏற்படாது.
அட்சய திருதியை அன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலய முக்கூடல் தீர்த்தத்தில் நீராடினால் எல்லா பாவமும் விலகும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 14 பெருமாள் கோயில் உற்சவர்களும் கருட வாகனத்தில் புறப்பட்டு வந்து, பெரிய தெருவில் காட்சி தருவது அட்சய திருதியை அன்று மட்டும்தான்.

அட்சய திருதியை அன்று மரக்காலில் முனை உடையாத அரிசியை வைத்து வழிபட, குபேர சம்பத்து கிடைக்கும் என்பது ஐதீகம்.


 எம். கோதண்டபாணி


அர்த்தநாரீஸ்வரர்


நல்ல வெயில்... சோர்வாக நடந்து வந்து கொண்டிருந்தாள் கர்ப்பிணியான அந்த செட்டிப் பெண்! தாகம் அவளை வருத்தியது.சோலைகளும், பயிர்ப் பச்சைகளும் நிறைந்திருந்தபோதும் எங்கும் தண்ணீரைக் காண முடியவில்லை. தாகமும், களைப்பும் வாட்ட, அப்படியே மயக்கமானாள். அங்குக் கோயில் கொண்டிருந்த ஈசன், அவள் தாகத்தைத் தீர்க்க எண்ணினார். அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். தாகம் நீங்கி புத்துணர்வு பெற்றாள் அப்பெண். அந்தப் பெருமான் ‘குலைவணங்கி நாதர்’. தலம், வடகுரங்காடுதுறை.

இனி, ஆலயத்துள் நுழைவோம். ஐந்துநிலை கோபுரம். உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் நவக்கிரக சன்னிதி. அடுத்து அம்மன் சன்னிதி. அதன் எதிரில், சிவனை நோக்கிய நந்தியம்பெருமான். மேலே, ஈசனின் கயிலாயக் காட்சி கண்களுக்கு விருந்து! ஈசன் சன்னிதியின் வலப்பக்கம் ஐயனின் பிள்ளைகளான துவார விநாயகர், ஆறுமுகன், பூர்ணா புஷ்கலா சமேத அய்யனாரை வணங்குகிறோம்.  

கர்ப்பக்கிரகத்தில் சற்று குட்டையான பாணத்துடன் அழகுறக் காட்சி தருகிறார் தயாநிதீஸ்வரர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டுமின்றி, தன்னை வணங்கிய ஒரு சிட்டுக் குருவிக்கும்கூட அருள் செய்த இவ்விறைவன் ‘சிட்டுலிங்கேஸ்வரர்’ என்றும் போற்றப்படுகிறார். ஆலய விமானத்தில் கர்ப்பிணிக்கு இறைவன் அருளிய காட்சியும், சிட்டுக்குருவி, வாலி மற்றும் அனுமன் பூஜித்த காட்சிகளும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன!

ஹனுமன் வழிபட்ட ஐந்து சிவாலயங்களில் இதுவும் ஒன்று. கர்ப்பக்கிரகத்துக்கு முன்புள்ள மண்டபத்தில் ஹனுமன் இப்பெருமானை பூஜிக்கும் காட்சி அமைந்துள்ளது. இந்த ஹனுமனிடம் வேண்டிக் கொண்டு ஒரு மட்டைத் தேங்காயைக் கட்ட வேண்டும். காரியம் நடந்ததும் அந்தக் காயை அவிழ்த்துவிட்டு, ஹனுமனுக்கு வடைமாலை சாத்தி, தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டும்.

சுற்றுப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி எட்டு சீடர்களுடன் மோன நிலையில் காட்சி தருகிறார். குருபலம் வேண்டுவோர் இச்சன்னிதியில் வேண்டிக்கொண்டால் உடன் நிறைவேறும். படிப்பு, நல்ல வேலை வேண்டுவோர் இங்கு வழிபட்டு பலன் பெறலாம்.

கோஷ்டத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர். சிவனும், சக்தியும் இணைந்து, முறுவல் பூத்த முகத்துடன்... அய்யன் வலக்கையில் மழுவும், அம்மையின் இடக்கையில் மலரும் ஏந்தி நளினத்துடன் காட்சி தருகின்றனர். இவரை வணங்குவோரின் இல்லறம், நல்லறமாக விளங்கும். மன வேற்றுமை, விவாகரத்து இவற்றைப் போக்கி கணவன் - மனைவியை இணைத்து வைக்கிறார் இந்தப் பெருமான்.

இதற்கென பிரத்யேக பூஜை முறை உண்டு. அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை, ரோகிணி நட்சத்திரம், மாத சிவராத்திரி நாட்களில் ஒரு வெள்ளை நிற ரவிக்கை துணியையும், ஒரு மஞ்சள் நிற ரவிக்கை துணியையும் இணைத்துத் தைத்து சமர்ப்பிக்க வேண்டும். அர்த்தநாரீஸ்வரருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம், அர்ச்சனை செய்து, எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்தால், பிரிவு நீங்கி இருவரும் மனமொத்து வாழ்வர். இது கண்கூடாகப் பலர் வாழ்விலும் நடந்துள்ளதாக பக்தர்கள் அனுபவம்.

ஆலயத்தைச் சுற்றி வரும்போது, வள்ளி, தெய்வானை சமேத முருகன், கயிலாய லிங்கம், கஜலக்ஷ்மி, அஷ்டபுஜங்களுடன் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை என தரிசிக்கிறோம். ஐந்து வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து ராகு காலத்தில் இந்த துர்கைக்கு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்ற, தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். பெண்கள் தாலி பாக்கியம் பெறுவர். 

இங்கு அமைந்துள்ள நடராஜர் சபை கல்லினால் ஆனது. சனி பகவான் இங்கு திருநள்ளாறு போன்று தனியாகக் காட்சி தருகிறார். அவருக்கு எதிரில் கஜலக்ஷ்மி சன்னிதி இருப்பதால் பொங்கு சனியாகவும் போற்றப்படுகிறார். தவிர, காலபைரவர், சூரியன், நாகர், அப்பர், நாவுக்கரசர், சுந்தரர், செட்டிப்பெண்ணின் சிலை ஆகியவையும் உள்ளன.

வெளியில் வந்ததும் இடப்பக்கம் ஜடாமகுட நாயகியின் சன்னிதி. உயர்ந்த ஜடைகளால் ஆன கொண்டை அணிந்தவளாதலால் ஜடாமகுட நாயகி, அழகு சடைமுடியம்மை என்று திருநாமம். சன்னிதிக்கு வலப்புறம் வெளியில் கரம் பின்னமான அம்பிகை சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்மனின் கை பின்னமாகியதால் அந்தச் சிலையை அப்புறப்படுத்திவிட்டு, வேறு புதிய சிலை நிறுவப்பட்டதாகவும், அச்சமயம் அம்மன் ஒருவர் கனவில் வந்து தன்னையும் பூஜிக்கும்படி கூறியதால் பின்னப்பட்ட சிலைக்கும் வழிபாடு நடக்கிறது. உயர்ந்த கொண்டையுடன் நான்கு கரங்கள் கொண்டு, கீழிரண்டு கரங்கள் அபய, வரத ஹஸ்தங்களாகக் கொண்டு அழகு தேவதையாகக் காட்சி தரும் அம்மன் கண்களின் தீட்சண்யமும், கருணா கடாட்சமும் நம்மை நகர விடாமல் செய்கிறது.

பல்லாண்டுகட்கு முன் ஒரு சித்தர் மஹா மேருவை மண்ணால் பிரதிஷ்டை செய்து பூஜித்த புனிதமான தலம் இது. சத்ரபதி சிவாஜி பரம்பரையினர் மிக சிரத்தையுடனும், பக்தியுடனும் வழிபட அவர்களுக்கு ஓர் ஆண் சந்ததியை வாரிசாகத் தந்தவள் இந்த தேவி. இதற்காக, பௌர்ணமி நாட்களில் செய்யப்படும் முளைப்பயிறு பிரார்த்தனையினால் பயன் பெற்றோர் பலர். பௌர்ணமி அன்று மாலை நேரத்தில் முளை வந்த பச்சைப் பயிறை அம்மன் வயிற்றில் கட்டி, 5,7,9 என்ற ஒற்றைப்படை கணக்கில் மஞ்சளை திருமாங்கல்யக் கயிற்றில் கட்டி அம்மனுக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். மறுநாள் காலை ஆலயத்துக்குச் சென்று அம்மன் மடியிலிருந்து எடுத்து அர்ச்சகர் கொடுக்கும் முளைப்பயிறைத் தானும் சாப்பிட்டு, மற்றவருக்கும் விநியோகம் செய்ய வேண்டும். மஞ்சளை தினமும் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

இதுபோன்று ஐந்து பௌர்ணமிகள் தொடர்ந்து செய்ய, விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். கடைசி பௌர்ணமி அன்று நேரில் வந்து பிரார்த்தனையை பூர்த்தி செய்து, அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனையோடு சர்க்கரைப் பொங்கல் நிவேதனமும் செய்ய வேண்டும். இந்தப் பிரார்த்தனை மஞ்சளை தேய்த்துக் குளித்தால் மிக விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.  

தல விருட்சம் தென்னை. விவசாயிகள் நெல் நாற்றுகளையும், தென்னம் பிள்ளைகளையும் சன்னிதியில் வைத்து வழிபட்டு அதிக மகசூல் பெறுகின்றனர். ஆனி பௌர்ணமியில் ‘முப்பழ விழா’, ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல் சாற்று விழா, பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோத்சவமாக பங்குனி உத்திரத் திருவிழா, நவராத்திரி... என்று வருடம் முழுவதும் உத்சவங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி, தை வெள்ளிகளில் அம்மனின் அலங்காரம் காணக் கண்கொள்ளாக் காட்சி!


ராதா

தயிர்

 
பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர்தான் மிகவும் சிறந்தது. நம் குடலுக்கு தேவையான எண்ணெய்ப் பசையைத் தந்து வயிற்றுள்ள வாயுவைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தாது.
 
மற்ற மிருகங்களின் பாலிலிருந்து உண்டாகும் தயிர், பொதுவாக ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எருமையின் தயிர் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். எளிதில் செரிக்காது. அதிகம் சாப்பிட சளித் தொல்லை ஏற்படுத்தும். வயிற்றில் செரிக்காமல் கிடந்தால் புளித்துப் போய் ரத்தத்தைக் கெடுத்து விடும்.

புளிப்பு தலை காட்டத் தொடங்கிய நிலையில் தயிரைச் சாப்பிட்டால் பசியைத் தூண்டும். பசி மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆனால், தயிர் மிக அதிகமாகப் புளித்து விட்டால் ரத்தக் கொதிப்பு, பித்தவாயு, வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதல்ல. மேலும் நன்றாகப் புளித்த தயிர் பற்களில் கூச்சம், குரல் கம்முதல், உடல் எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

தயிரை மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு, துணியிலுள்ள உள்ள கெட்டியான பகுதியுடன். சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்துத் தயாரிப்பதற்கு ஸ்ரீகண்ட் என்று பெயர். ருசியான சத்துள்ள உணவு இது. உடல் புஷ்டி, பருமன் தரக்கூடியது. உடலின் உஷ்ண வறட்சியைக் குறைக்கும். அதிகம் சாப்பிட்டால் சளித் தொல்லை ஏற்படலாம். பசும் பாலிலிருந்து கிடைக்கும் தயிரைவிட எருமை தயிரே இதற்கு ஏற்றது.

தயிரைச் சுட வைத்து சூடாகச் சாப்பிடக்கூடாது. இரவில் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிட கூடாது. சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல. மண் சட்டியிலிட்டு தோய்த்துத் தயாரிக்கப்படும் தயிர் மிகவும் சிறந்தது. பாலைக் கடைந்து வெண்ணெய் நீக்கிய பிறகு பாலைக் காய்ச்சி, தயிர் தயாரித்து சாப்பிடுவது பசியின்மையும் வயிற்றுப் போக்கும் உள்ளவர்களுக்கு நல்லது.

தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் உள்ளதைப் பார்த்திருக்கலாம் அந்த தண்ணீர் புளிப்பும், இனிப்பும் துவர்ப்பும் கலந்த ஒரு மிகச் சிறந்த பானம். அந்தத் தண்ணீரை மட்டும் சுமார் கால் கப் முதல் அரை கப் வரை காலை- மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு இவற்றுக்கு ஏற்றது.

பாலில் புரை குத்திய பின் நன்கு உறையாமல், பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும் தயிரை சாப்பிடக் கூடாது. அது வயிற்றில் வேகமாக புளிக்கத் தொடங்கி பசியைக் குறைத்து நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் வாபுண் முதலியவற்றை உண்டாக்கும்.

தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன் வெல்லம் சேர்த்து சாப்பிட நல்ல உடல் புஷ்டியைத் தரும். ஆண்களுக்கு விந்துவை அதிகப்படுத்தி போக சக்தியை உண்டாக்கும். அதிக அளவு சாப்பிட்டால் பசி மந்தமாகிவிடும்.

பகலில் ஓடி ஆடி வேலை செய்வதால் உடலிலுள்ள இறுக்கமான கபம் தளர்ந்து விடும். இரவில் குளிர்ச்சியான தன்மையில், தயிரைச் சாப்பிட்டால் அதன் பிசுபிசுப்புத் தன்மையால் தளர்ந்த கபத்துடன் சேர்த்து நுரையீரலில் இறுகி, சீரணக் குறைவு தோன்றக்கூடும். அதனால் தான் தயிரை இரவில் தவிர்க்க வேண்டும். இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிடும் போது சோகை, காமாலை, சரும நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை உண்டாகக் கூடும். இரவு தயிர் மட்டும் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.

- பி.சந்திரா பத்மநாபன்,


 

Monday, April 21, 2014

ஸ்மார்ட்போன் வாங்க - 10 விஷயங்கள்!

ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. 5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் பலரும் அதை எளிதில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், ஸ்மார்ட்போனை நமக்கு உதவுகிற மாதிரி பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். தினப்படி வேலைகள் முதல் அலுவலகம் தொடர்பான சில வேலைகளைக்கூட இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் செய்துவிட முடியும்.

நவீன வாழ்க்கையின் இன்றியமையாத கருவியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் . அவை இனி...


விலை! 

ஸ்மார்ட்போன் வாங்கச் செல்லும்முன், முதலில் போனுக்காகச் செலவிடும் தொகையை பட்ஜெட் போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் பட்ஜெட் குறைவுதான் எனில், அதற்குத் தகுந்தமாதிரியான ஸ்மார்ட்போனைத் தேர்வுசெய்யலாம். பட்ஜெட் போடாமல் மொபைல் ஸ்டோர்களுக்குச் செல்லும்போது நம் செலவு அதிகமாகவே நிறைய வாய்ப்பிருக்கிறது. வெறும் விலையோடு நின்றுவிடாமல் அதுகுறித்த டெக்னிக்கல் விஷயங்கள் பற்றியும் ஆராய்வது முக்கியம். இதற்கு மொபைல் ரெவியூகளைப் படிப்பது அவசியம்.

நினைவகம் (Memory)!

தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள மனிதனுக்கு மூளை எந்தளவு முக்கியமோ, அதுபோல ஸ்மார்ட்போன்களுக்கு நினைவகங்கள் முக்கியம். ஸ்மார்ட்போன்கள் என்பவை கணினிபோலவே, ரேம் மற்றும் உள்நினைவகங்களுடனேயே (RAM, Internal Memory) வருகின்றன. எனவே, உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்கவேண்டும்.

ஸ்மார்ட்போனில் இருக்கும் ரேம் குறைந்தபட்சம் 512 எம்.பி. இருந்தால் நல்லது. உள்நினைவகம் குறைந்தபட்சம் 150-200 எம்.பி. இருப்பது அவசியம். எக்ஸ்டர்னல் நினைவகத்துக்கான வேலையை மெமரி கார்டே செய்துவிடும். அது 32 ஜிபியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

பிராசஸர் (Processor)!

உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இதுதான். குறைந்தபட்சம் பிராசஸர் ஸ்பீடு 800 விலீக்ஷ் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

பேட்டரி (Battery)!

பேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பதுதான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியா 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பேட்டரி லித்தியம் அயனாக (Li-Ion) இருக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 1500 mAh கொண்ட போனை தேர்வு செய்தால்தான் ஒருநாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும். எனவே, உங்கள் பயன்பாடுகளைப் பொறுத்து பேட்டரியைத் தேர்வு செய்யுங்கள்.

இணையம் - இணைப்புத்தன்மை!

நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் 3ஜி ஏற்றுக்கொள்ளும் தன்மை உள்ளதுதானா என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம். அதேபோல, Bluetooth, Wi-Fi, GPS, USB  வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். புளூடூத் வெர்ஷன் குறைந்தபட்சம் 2.1 இடிஆர்-ஆக இருப்பது நல்லது. இணைய பிரவுஸரானது ஹெச்டிஎம்எல் (HTML) வசதியுடன் வரும்.

அளவு!

ஸ்மார்ட்போனின் அளவு என்பது அவரவர்களின் விருப்பம்தான். இருப்பினும் பெரிதாக வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அதைக் கையில் பிடிப்பது, பாக்கெட்களில் வைப்பதில் சிரமம் வரும்.கேமரா!

எந்தவகையான ஸ்மார்ட்போனை வாங்குவதாக இருந்தாலும், அது எத்தனை மெகா ஃபிக்ஸல் கேமரா என்று முடிவு செய்துகொண்டு வாங்கவேண்டும். அதோடு உங்களுக்கு ஃப்ளாஷ் முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால், இரவில் படம் எடுக்கும்போது உங்களுக்கு சிரமம் ஏற்படும். இதில் வீடியோ ரெக்கார்டு செய்வதையும் கவனித்து வாங்கவும். 5 எம்பி கொண்ட கேமரா என்றால் அதன் மூலம் 700 ஃபிக்ஸல் அளவுக்கு வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம். வீடியோ கால் செய்யவேண்டும் என்கிறவர்கள் ஃப்ரென்ட் கேமரா வசதியுடன் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது.

எடை மற்றும் அளவு!

ஒரு போன் வாங்கும்போது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை முக்கியம். இதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, எடைதான். எடை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

டிஸ்ப்ளே (Display)!

டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், Capacitive டச் ஸ்க்ரீன் உள்ள போன் வாங்கவேண்டும். உங்கள் தேவையைப் பொறுத்து ஸ்க்ரீன் சைஸை தேர்வுசெய்துகொள்ளலாம். அதோடு நீங்கள் வாங்கும் போன் மல்டி டச் சப்போர்ட் செய்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

இயங்குதளம் (Operating System)!

எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஓர் இயங்குதளத்தில்தான் (OS) இயங்கும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன் என மூன்று பிரபலமான இயங்குதளங்கள் உள்ளன. உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இதில் ஏதேனும் ஒன்று உள்ள போனை வாங்கலாம்.


குறித்து தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா


Saturday, April 19, 2014

ஹார்ட்ப்ளீட் - இதனால் என்னென்ன பாதிப்புகள்?

 
இதுதான் கடந்த சில நாட்களாக இணையத்தைப் பயமுறுத்தும் புதிய குறைபாடு, பக். இணையத்தின் பயன்பாடு பெருகிவரும் வேளையில் திடீரென்று ஒரு புது குறைபாடு தெரியவந்திருக்கிறது. அதுவும் மிகவும் பாதுகாப்பு என்று கருதப்பட்ட செக்யூரிட்டி அமைப்பிலேயே இந்த ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
 
நீங்கள் ஆன்லைனில் பொருள்கள் வாங்கினாலோ, இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தினாலோ, மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தினாலோ, உடனடியாக உங்கள் பிரவுசர்களின் ஓரத்தில் பூட்டு போன்ற லோகோ தெரியவரும். அதாவது நீங்கள் பாதுகாப்பான முறையிலேயே இணையச் சேவைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கிறீர்கள், உங்களுக்கும் நீங்கள் தொடர்புகொள்ளும் வங்கிக்கும் இடையே இருக்கும் தொடர்பு மிகவும் பத்திரமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி அது.இத்தகைய பாதுகாப்பை வழங்க, ஓப்பன் எஸ்.எஸ்.எல். என்ற மென்பொருள்தான் பின்னணியில் இயங்கும். பொதுவாக ஓப்பன் எஸ்.எஸ்.எல். இணையத்தின் பல்வேறு பாதுகாப்பான தொடர்புகளுக்கான இணைப்பாக, உறுதிப்படுத்தலாக இருந்து வருகிறது. அதில்தான் இப்போது குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
 
அதனுள் உருவாகியிருக்கும் குறைபாட்டின் பெயர் ‘இதயத்தில் கசியும் ரத்தம்’ - ஹார்ட்ப்ளீட். இதனால் என்னென்ன பாதிப்புகள்? முதலில் நீங்கள் பாதுகாப்பு என்று கருதிய எதுவும் பாதுகாப்பு இல்லை. வங்கியின் பாஸ்வேர்ட், இமெயில் பாஸ்வேர்ட், இன்னபிற இணைய சேவைகளின் பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள் ஆகியவற்றை இணையத் திருடர்கள் சுலபமாகக் கவர்ந்துவிட முடியும். 

இந்தக் குறைபாடு 2012ல் இருந்தே இருப்பதாகவும் இதற்குள் பல்வேறு முக்கிய சேவைகள், வலைத்தளங்கள் ஆகியவற்றில் ரத்தம் கசிந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ப்ரூஸ் ஷீனர் என்ற இணையப் பாதுகாப்பு வல்லுனர் இதைப் ‘பேரழிவு’ என்று சித்திரிக்கிறார். அத்துடன், இதன் பாதிப்பை ஒன்றில் இருந்து பத்துக்குள் மதிப்பிடச் சொன்னால், அதைவிட அதிகம், ‘இதன் பாதிப்பு பதினொன்று’ என்று பீதியைக் கிளப்புகிறார்.உடனே சென்ற வாரம் முழுவதும் ‘உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றுங்கள்’, இணையம் பக்கமே போகாதீர்கள் என்றெல்லாம் ஆயிரம் அட்வைஸ்கள் கொட்டின. உண்மையில், இது பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரமல்ல. கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.கூகுளும் யாஹூவும் இன்னபிற தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தக் குறைபாட்டை ஏற்கெனவே சரிசெய்துவிட்டனவாம். சரிசெய்வது சுலபம்தான் என்கிறார்கள். ஆனால், இன்னும் சரிசெய்யாத பல இணைய சேவைகள் இருக்கின்றன. ஆனால், ஏற்கெனவே இதனால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால் அதைச் சரிசெய்வது எப்படி என்பது தான் இப்போது கேள்வி. உதாரணமாக, இணையத் திருடர்கள் இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தி, ஷாப்பிங் வலைத்தளங்கள், வங்கித் தொடர்புகளில் இருந்து பயனர்களின் பெயர்கள், பாஸ்வேர்ட்டுகளைத் திருடியிருந்தால், அதன் பாதிப்புகள் இனிமேல்தான் தெரியவரும். அல்லது ஏற்கெனவே பல திருட்டுக்களுக்கான காரணங்கள் இனிமேல் விளங்கும். ஹார்ட்ப்ளீட் குறைபாடு ஏற்படுவதற்குக் காரணமானவர் என்று ராபின் செக்கல்மேன் என்பவரைச் சொல்கிறார்கள். இவர், ஓப்பன் எஸ்.எஸ்.எல்.லில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நீக்குபவர். அப்படி அவர் நீங்குவதற்கான புரோகிராமை எழுதும்போது, இந்தக் குறைபாடு, அவர் கண்ணிலும் படாமல் தப்பிவிட்டிருக்கலாம். இதை நான் வேண்டுமென்றே நுழைக்கவில்லை, என்னை அறியாமல் நடந்துவிட்டிருக்கலாம்," என்பதே இவரது வாதம்.
 
இக்குறைபாடு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதால், அமெரிக்க உளவு ஏஜன்சிகள் இதன் பயனை அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல்வேறு உலக அளவிலான நிறுவனங்களின் ரகசியத் தகவல்களை இக்குறைபாட்டின் மூலம், அவர்கள் கவர்ந்திருக்கலாம் என்பதை செக்கல்மேன் மறுக்கவில்லை. மேலும் எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்காவின் அரசு ரகசியங்களை வெளியிட்டார் அல்லவா? அதுவும் இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தியே செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறவர்களும் உண்டு.
 
இதுபோன்ற கான்ஸ்பிரசி தியரிகள் ஒருபக்கம் இருக்கட்டும், பயனர்களான நாம் என்ன செய்ய வேண்டும்?
 
இப்போதைக்கு இணையத்தில் வங்கிச் சேவைகள், பொருள்கள் வாங்குவது ஆகியவற்றைக் கொஞ்சம் ஒத்திப் போடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறார்கள் நிபுணர்கள். அடுத்த சில வாரங்களுக்குள் இணையச் சேவை நிறுவனங்கள் தாங்கள் ஹார்ட்ப்ளீட் குறைபாட்டைக் களைந்து விட்டோம் என்று அறிவிக்கத் தொடங்கும். அப்போது நீங்கள் உங்கள் கடவுச் சொல்லை மாற்றிக்கொள்வது பாதுகாப்பானது.

ஆர்.வெங்கடேஷ்

அருள்வாக்கு - மூட்டைத் தூக்கி யார்?


உங்கள் வீடு ஒரு குடும்பம். இதற்கு அப்பாவும் அம்மாவும் தலைவர்கள். உங்கள் குடும்பத்துக்கு நடுவில் பள்ளிக்கூடம் என்கிற ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களுடன் படிக்கிறவர்களெல்லாம் உங்கள் குடும்பத்தில் உடன் வாழ்கிற சகோதரர்கள் மாதிரி. இந்தப் பள்ளிக் குடும்பத்தின் தலைவர் உபாத்தியாயர் ‘வாத்தியார்’ என்கிற ஆசிரியர். அவரையும் ஓர் அப்பா அம்மாவாக நீங்கள் மதித்து வணங்க வேண்டும்.

பள்ளிக் காலத்தில் உங்கள் கடமை படிப்பது ஒன்றுதான். உங்களுடைய கவனம் முழுவதும் படிப்பதிலேயே இருக்க வேண்டும். மற்ற விஷயங்களிலெல்லாம் நீங்கள் ஈடுபட இது சமயம் அல்ல. வேறு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்கூட அவற்றையும் நீங்கள் படிப்பு முடிந்த பின்தான் கவனித்து ஈடுபடலாம். ‘இப்போதே எனக்கு அவற்றில் ஈடுபடச் சிறிது சக்தியும், புத்தியும் இருக்கிறதே; எனவே உலகத்துக்கு நல்லது செய்கிற அந்தச் சமாசாரங்களில் இப்போதே பிரவேசிப்பேன்’ என்று போகக்கூடாது.

சின்ன வயசில் உங்கள் உள்ளத்துக்குப் போதிய சக்தி ஏற்படுகிற முன்பே, படிப்பு தவிர மற்ற விஷயங்களை மேற்கொண்டால், உள்ளத்துக்கு வியாதிதான் உண்டாகும்.

ஏற்கெனவே நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டை தூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செகிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக் கள் செதோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புகளின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக் கூடத்துக்குப் போகிறோம். அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந் தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும்.

இதற்குப் படிப்பு மட்டும் போதாது. பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட குணங்கள் ஓடிப் போகும். தா, தந்தை, ஆசிரியர், தெவம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


 

ஐ.பி.எல். வண்ண வண்ணக் கனவுகள்!

 
டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்த அடுத்த பத்தாவது நாள், ஐ.பி.எல். ஆரம்பிப்பது ஒருவகையில் நல்லதுதான். இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மிக மோசமாகத் தோற்றுப்போனதால் உண்டான கோபம், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் மறக்கடிக்க ஐ.பி.எல். லால் மட்டுமே முடியும்.
 
தோனிக்கு டி20 இறுதிப் போட்டிகள் தொடர்ந்து ஏமாற்றத்தைக் கொடுத்து வருகின்றன. 2012, 2013 ஐ.பி.எல். இறுதிப் போட்டிகளில் சி.எஸ்.கே. தோற்றுப் போனது. இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தோனிக்கு இன்னொரு தோல்வி. ஆனால், கடந்த 6 ஐ.பி.எல்.களிலும் அரையிறுதி/ஃப்ளே ஆஃப்புக்கு தகுதி பெற்ற ஒரே அணி சி.எஸ்.கே.தான். கடைசி இரண்டு இடங்களில் இதுவரை எல்லா அணிகளும் ஒரு முறையாவது இடம்பிடித்திருக்கின்றன. சி.எஸ்.கே. இதுவரை அப்படியொரு சங்கடத்தை ரசிகர்களுக்கு அளிக்கவில்லை.  டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லாமல் போனதற்கு எல்லோரும் கைநீட்டுவது யுவ்ராஜ் சிங்கை மட்டும்தான். கோபத்தில் ரசிகர்கள் யுவ்ராஜ் வீட்டில் கற்கள் எறிந்தெல்லாம் கலாட்டா செய்திருக்கிறார்கள். 2007, 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்குப் பக்கபலமாக இருந்தவர் யுவ்ராஜ். பங்களாதேஷில் யுவ்ராஜ்சிங்குக்கு டைமிங்கே வரவில்லை. அவரை 11வது ஓவரில் அனுப்பியது தோனியின் தவறு. ரைனாவுக்கும் ஜடேஜாவுக்கும் பேட்டிங்கே கிடைக்காதது அவலம். இந்த நிலையில், எல்லோருடைய கவனமும் ஆர்.சி.பி.க்குத் திரும்பியிருக்கிறது. யுவ்ராஜுக்கு 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியிருக்கிறார் மல்லையா. ஐ.பி.எல்.லிலும் தம் திறமையை நிரூபிக்காவிட்டால் யுவ்ராஜின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். 
 
புதிய ஏலத்துக்குப் பிறகு சி.எஸ்.கே., ஆர்.சி.பி., மும்பை போன்ற அணிகள்தான் இன்னும் கூடுதல் பலத்துடன் உள்ளன. மும்பையில் சச்சின் இல்லாவிட்டாலும் ஹஸ்ஸி, ஆண்டர்சனின் வரவு இன்னும் அசைக்க முடியாத சக்தியாக மும்பையை மாற்றியுள்ளது. இதுதான் சச்சின் இல்லாமல் நடைபெறப் போகும் முதல் ஐ.பி.எல். சச்சின், டிராவிட், கில் கிறிஸ்ட் ஆகியோர் சென்ற வருடம் ஐ.பி.எல். லிலிருந்து ஓய்வு பெற்றார்கள். சச்சின் ஆடும் மைதானங்களெல்லாம் சச்சினுக்காக நிறைந்தன. சச்சினுக்காக மும்பையை ஆதரித்தவர்கள் பலர். அதேபோல டிராவிட் இல்லாதது ராஜஸ்தானுக்கும் பெரிய இழப்பு. மேட்ச் ஃபிக்ஸிங்கினால் அதிகம் பாதிக்கப்பட்ட ராஜஸ்தானுக்கு டிராவிடின் பக்குவம், அணியை மெல்ல அதன் பாதிப்பிலிருந்து வெளியேற்றியது. இந்த ஏழாவது ஐ.பி.எல்.லில் தில்லி, பஞ்சாப் அணிகள் புதுச்சட்டை அணிந்துள்ளன. பழைய வீரர்களைக் கழற்றி விட்டு புதிய வீரர்களுடன் ஐ.பி.எல்.லில் கலந்து கொள்கின்றன. சென்ற ஐ.பி.எல்.லில் ராஜஸ்தான், ஹைதரபாத் அணிகள் பல ஆச்சரியங்களைக் கொடுத்தன. அதே போல தில்லி, பஞ்சாப் அணிகள் என்ன செய்யப்போகின்றன என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  

இந்த முறை மெக்குலம், டுப்ளெஸ்ஸி, ஸ்மித் (மே.இ.) போன்ற டி20 சிறப்பு ஆட்டக்காரர்கள் சென்னையின் ஆரம்ப ஓவர்களில் நிலவும் ஒருவித ஆமைத் தனத்தைப் போக்குவார்கள் என்று நம்பலாம். கடந்த இரண்டு வருடங்களாக ஒரு வாய்ப்பும் கிடைக்காத பாபா அபரஜீத்தை நம்பி பத்ரிநாத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது சி.எஸ்.கே. 19 வயது சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் முத்திரை பேட்ஸ் மேன் ஆகி, பேர் புகழ் அடைந்துவிட்டார். பாபா சிறந்த ஆல்ரவுண்டர். அட்டகாசமான ஃபீல்டர். சாம்சன் போல பாபாவும் ஐ.பி.எல்.லால் பலனடைய வேண்டிய நேரமிது.
 
மெக்குலம், டுப்ளெஸ்ஸி, ஸ்மித், ப்ராவோ, சாமுவேல் பத்ரி, ஹில்பனாஸ் என இந்த ஆறு அட்டகாசமான வெளிநாட்டு வீரர்களிலிருந்து 4 பேரைத் தேர்ந்தெடுப்பது தோனிக்குப் பெரிய தலைவலியைக் கொடுக்கும். பங்களாதேஷில் கலக்கிய மே.இ. ஸ்பின்னரான சாமுவேல் பத்ரியை தக்காளி விலைக்கு (30 லட்சம் ரூபாய்) ஏலத்தில் எடுத்தது பெரிய ஆச்சர்யம்.
 
ஐ.பி.எல்.லில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிகாவை விடவும் மேற்கு இந்திய அணி வீரர்களுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். கெல், பொலார்ட், ப்ராவோ, நரைன், சாமி, ஸ்மித் என மே.இ டி20 நட்சத்திரங்கள் ஐ.பி.எல். முழுக்க வியாபித்திருக்கிறார்கள். அசராமல் அடிக்கும் சிக்ஸர்கள், சிலிர்ப்பூட்டும் ஃபீல்டிங், எந்தத் தருணத்திலும் அசாத்திய துணிச்சலுடன் செயல்படுவது என ஐ.பி.எல். லுக்குப் புது வண்ணம் கொடுப்பவர்கள் மே.இ. வீரர்கள்தான். இவர்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த அணியும் அடுத்த கட்டத்துக்கு நகர்வது சிரமம்.
 
பாகிஸ்தான் வீரர்கள் இந்த ஐ.பி.எல்.லிலும் சேர்க்கப்படவில்லை. டி20 உலகக் கோப்பையை வென்றாலும் இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல்.லில் அதிகம் இல்லை. பெராரா (பஞ்சாப்), முரளிதரன் (ஆர்.சி.பி.), மலிங்கா (மும்பை) ஆகிய இலங்கை வீரர்கள் மட்டுமே ஐ.பி.எல்.லில் ஆடப் போகிறார்கள். (சங்ககரா ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை, மேத்யூஸ், ஜெயவர்தனே, தில்ஷன் ஆகியோரை ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை.) இந்த வருடமும் இரண்டு ப்ளே ஆஃப் மேட்சுகள் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்ற வருடம், தமிழக அரசு இலங்கை வீரர்களுக்குத் தடைபோட்டதால் சென் னைக்கு ஒதுக்கப்பட்ட ஃப்ளே ஆஃப் மேட்சுகள், தில்லிக்கு இடம் மாறின. இந்த முறை தமிழக அரசு எடுக்கும் முடிவில்தான் ப்ளே ஆஃப் மேட்சுகள் சென்னையில் நடக்குமா இல்லையா என்று தெரியவரும். (சி.எஸ்.கே.வின் இரண்டு மேட்சுகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.)
 
ஷேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், யுவ்ராஜ் சிங், யூசுப் பதான், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், ராகுல் சர்மா, புஜாரா, வினய் குமார், இஷாந்த் சர்மா, ஓஜா, டிண்டா என்று பெரிய பட்டியலே இருக்கிறது. இவர்களெல்லாம் மீண்டும் இந்திய அணியின் ஒருநாள் அணியில் இடம்பிடித்து 2015 உலகக் கோப்பையில் பங்குபெற வேண்டுமென்றால் இந்த ஐ.பி.எல்.தான் நுழைவுச் சீட்டு.
 
இந்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டால் பிறகு மீண்டுமொரு சந்தர்ப்பம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதே போல சஞ்சு சாம்சன், பாபா அபரஜீத், விஜய் ஜோல், ரிஷி தவான், கரன் ஷர்மா போன்ற புதிய வீரர்களுக்கு இந்த ஐ.பி.எல். புதிய வாசலைத் திறந்துவிட வேண்டும். ஒருபக்கம் ஐ.பி.எல்.லால் வீரர்கள் கோடிகளில் புரண்டாலும் சிலருக்கு ஐ.பி.எல்.தான் மிஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு. அஸ்வின், யூசுப் பதான், ஷேன் வட்சன், ஷேன் மார்ஷ் போன்றவர்கள் ஐ.பி.எல். லைப் புதையலாக மாற்றியவர்கள். இந்த வருடம் ஐ.பி.எல்.லை யார் யார் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள், இந்த வாய்ப்பையும் யார் நழுவ விடப் போகிறார்கள் என்பதுதான் ஐ.பி.எல்.லின் பெரிய சுவாரசியங்கள்.
 
ச.ந.கண்ணன்

Thursday, April 17, 2014

வாக்களிப்பது எப்படி?

'ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ... கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை...

வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

அடையாள அட்டை! 

18 வயது பூர்த்தி அடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்கு அளிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியம். ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. அதைவிட முக்கியம், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். சில காரணங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடியின் காரணமாக வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் போகலாம். அப்படி இருப்பின் நீங்கள் வாக்களிக்க முடியாது. அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது, ஆனால் வாக்காளர் அட்டை உங்களிடம் இல்லை என்றால், உங்களால் வேறு ஆதாரங்களைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும். இடம் பெயர்ந்து இன்னொரு தொகுதிக்குப் போய், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் பழைய வாக்காளர் அட்டையை ஆவணமாகக் காட்டலாம்.

வாக்காளர் சீட்டு! 
 
'எங்கே வாக்களிப்பது?’ என்ற விவரத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே வீடு தேடி வந்து தேர்தல் பணியாளர்கள் தருவார்கள். இந்த வாக்காளர் சீட்டில் உங்களின் பெயர், புகைப்படம், வாக்குச்சாவடியின் முகவரி... போன்ற விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டை அரசியல் கட்சியினரும் தருவார்கள். வாக்காளர் அடையாள அட்டையோ அல்லது வாக்காளர் சீட்டோ அல்லது அரசியல் கட்சிகள் தரும் 'டோர் ஸ்லிப்’போ... ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். இந்த மூன்றும் உங்களிடம் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் நிச்சயம் வாக்களிக்க முடியும். உங்கள் புகைப்படத்துடன் கூடிய அரசு ஆவணங்களான பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்க முடியும்.

தேர்தல் அலுவலர்களால் விநியோகிக்கப்படாத வாக்காளர் சீட்டுகள், தேர்தல் தினத்தில் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சீட்டுகளை வழங்குவதற்காக வாக்குச்சாவடியிலேயே உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் அங்கே சென்று பெற்றுக்கொள்ளலாம். தவிர, நமக்கு ஏற்படுகிற சந்தேகங்களையும் அங்கே நிவர்த்தி செய்வார்கள்.

எங்கே வாக்குச்சாவடி? 

மக்கள் அதிக தூரம் அலைய அவசியம் இல்லாமல், முடிந்தவரை அருகில் உள்ள இடங்களில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள்தான் வாக்களிப்பார்கள் என்பதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஇருக்காது. கடந்த தேர்தலைவிட இப்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது என்பதை எஸ்.எம்.எஸ். மூலமும் தேடலாம். epic என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, சிறு இடைவெளிவிட்டு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவுசெய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உங்கள் வாக்குச்சாவடி குறித்த விவரம் பதிலாக வந்து விழும். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்களிக்கலாம்.

மின்னணு இயந்திரம்!

கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஐந்து மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட், தேர்தல் அதிகாரி முன்பு இருக்கும். பேலட் யூனிட் வாக்காளர்கள் வாக்களிப்ப தற்கான மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட் பகுதியில் இருக்கும் பட்டனை தேர்தல் அலுவலர் அழுத்திய பிறகுதான் பேலட் யூனிட்டில் உங்கள் வாக்கைப் பதிவுசெய்ய முடியும்.


வாக்குச்சாவடி நடைமுறைகள்! 

வாக்குச்சாவடிக்குள் நீங்கள் நுழைந்ததும் முதலில் அலுவலரிடம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையையோ, வாக்காளர் சீட்டையோ அல்லது பூத் சிலிப்பையோ காண்பிக்க வேண்டும். இவை இல்லாதபட்சத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்த ஆவணங்களில் ஒன்றைக் காட்டலாம். அந்த அலுவலர் தன்னிடம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்ப்பார். பெயரையும் பதிவு எண்ணையும் உரக்கப் படித்துவிட்டு, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மீது ஒரு கோடு போடுவார். உங்கள் பெயரைச் சொல்லும்போது அங்கே அமர்ந்திருக்கும் கட்சிகளின் ஏஜென்ட்கள், தங்கள் வசம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் அதைச் சரிபார்த்துக்கொள்வார்கள்.

இந்தச் சரிபார்த்தல் முடிந்த பிறகுதான் நீங்கள் இரண்டாவது அலுவலரிடம் செல்ல முடியும். இரண்டாவது அலுவலர் உங்கள் இடது கை ஆள்காட்டி விரலின் மீது மையை அடையாளமாக இடுவார். அதோடு அவரிடம் இருக்கும் படிவத்தில் உங்கள் வாக்கு எண்ணை எழுதி அதில் உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொள்வார். கையெழுத்து போட முடியாதவர்களிடம் இடது கை கட்டைவிரல் ரேகையைப் பதிவு செய்வார். உங்களிடம் சீட்டு ஒன்றை வழங்குவார். அதை எடுத்துக்கொண்டு மூன்றாவது அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அதைப் பெற்றுக்கொண்டு தன் முன்பு இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'பேலட்’ என ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பட்டனை அழுத்துவார். அதன் பிறகு நீங்கள் ஓட்டு போடும் மறைவிடத்துக்குச் செல்லவேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட்டில் வரிசையாக வேட்பாளரின் பெயர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் சின்னத்துக்கு எதிராக உள்ள நீல நிற பட்டனை அழுத்தவேண்டும். உடனே அந்த வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள சிவப்பு நிற விளக்கு எரியும். அதோடு 'பீப்’ என்ற ஒலியும் கேட்கும். அதுதான் உங்கள் வாக்கு பதிவானதற்கான அறிகுறி. ஒலி எழுப்பிய உடனேயே மூன்றாவது தேர்தல் அலுவலரின் முன்பு இருக்கும் கட்டுப்பாட்டு கருவியில் எரிந்துகொண்டிருக்கும் 'பிஸி’ விளக்கு அணைந்துவிடும்.

பார்வைத்திறனற்ற வாக்காளர்கள், துணைக்கு ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்லலாம். மற்ற யாரும் வாக்களிக்கும் இடத்துக்கு கூடுதல் நபர்களை அழைத்துச் செல்ல முடியாது. அதேபோல வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது.

உங்கள் வாக்குகளை இன்னொருவர் போட்டுவிட்டால்..?  

காலையிலேயே சென்று வாக்களித்துவிடுவது நல்லது. பிற்பகலில் சென்றால், உங்கள் வாக்கை வேறு யாராவது பதிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை அப்படி உங்கள் வாக்கை வேறு யாரோ போட்டுவிட்டாலும், ஒரு வாக்காளராக உங்களது உரிமையை நிலைநாட்ட முடியும். 'நான் இந்த வாக்குச்சாவடியின் வாக்காளர்தான்’ என்பதற்கான ஆவணத்தை வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் காட்ட வேண்டும். அந்த அதிகாரி உங்களிடம் கேள்விகள் கேட்டு சான்றுகளைச் சரிபார்ப்பார். ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவர் கருதினால், உங்களுக்கு 'ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு’ தருவார். அது அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டு. அதில் பழைய முறைப்படி முத்திரை குத்தி வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களித்த வாக்கு சீட்டை மடித்து ஓர் உறையில் போட்டு தேர்தல் அதிகாரி சீல் வைத்துவிடுவார். வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு வித்தியாசம் நூலிழையில் இருந்தால், இந்த ஆய்வுக்குரிய வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’! 

'எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை’ என்பதைத் தெரிவிக்கும் வசதி, இதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இல்லை. 49(O) என்ற பிரிவின் கீழ் அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும். இது ரகசியமானது இல்லை என்பதால் கணிசமானோர் இந்தப் பிரிவின் கீழ் வாக்களிக்கத் தயாராக இருந்தும், இதைப் பயன்படுத்த அஞ்சினார்கள். இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டு விட்டது. இப்போது இதன் பெயர் நோட்டா (NOTA - None Of The Above). வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இந்த 'நோட்டா’ பட்டன் இருக்கும். NOTA என்று ஆங்கிலத்திலும், 'மேற்காணும் நபர்களில் எவரும் இல்லை’ என்று தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்.  

உறுதிச் சீட்டு! 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அச்சிடும் கருவி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். வாக்களித்து முடித்த உடனேயே அதில் இருந்து ஒரு சிறிய துண்டுச்சீட்டு வெளியில் வரும். அதில் வரிசை எண், நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவை இருக்கும். அதுதான் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதற்கான ஆதாரம். அதன் பிறகு அந்த ரசீது இயந்திரத்துக்குள் மறுபடியும் சென்றுவிடும். ஆனால், இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மத்திய சென்னை தொகுதியில் மட்டுமே இந்தத் தேர்தலில் அறிமுகம் ஆகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் உங்கள் விரல் முனையில்! சுமார் 120 கோடிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் பிரமாண்டமான ஜனநாயக நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆளுமைகளை நாம் தேர்வு செய்கிறோம். அந்தப் பணியின் நேர்மை கருதி வாக்களிக்கும் முன்பு நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஏனெனில், இந்தியா நடைபோட வேண்டிய திசையை நம் விரல்கள்தான் தீர்மானிக்கும்!

எம்.பரக்கத் அலி
விகடன் 


Wednesday, April 16, 2014

ஜோதிடத்தில் மருத்துவம்!

நவீன காலத்தில் பலவிதமான அறிவியல் இயந்திரங்களின் உதவியோடு நோய்களைப் பற்றி அறிந்து மருத்துவம் செய்கிறார்கள்.  ஆனால், இப்படியான எந்தவித வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் நம் ரிஷிகள் தவம் எனும் சீரிய சக்தியால் நவ கோள்களையும் சாட்சியாக்கி, மனிதனுக்கு உண்டாகும் நோய் முதலான அத்தனை பாதிப்புகளையும், அவற்றை குணமாக்குவதற்கான கால நேரத்தையும், வழிமுறைகளையும் மிகத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பது வியப்புக்கு உரியது.

மருத்துவ சிகிச்சையோடு தொடர்புடைய பல்வேறு விதமான ஜோதிடத் தகவல்கள் நமது பழைமையான நூல்களில் உள்ளன. நம் முன்னோரால் காலங்காலமாக கவனித்து, ஆராய்ந்து அறிந்து பதிவு செய்யப்பட்ட அந்தத் தகவல்களில் சிலவற்றை நாமும் அறிவோம்.நோய் அறிய ஜோதிடக் கூறுகள்...
1. பாவத்தில் உள்ள கிரகம்
2. பாவாதிபதி
3. பாவத்தைப் பார்க்கும் பிற கிரகங்கள்
4. பாவாதிபதியைப் பார்க்கும் பிற கிரகங்கள்
5. 6-ம் பாவத்தின் இயற்கை காரகர்களாகிய சனி மற்றும் செவ்வாயின் நிலை.
6. லக்னத்தின் பலம் மற்றும் பலவீனம்
7. லக்னாதிபதியின் பலம் மற்றும் பலவீனம்
8. லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு இருபுறமும் அசுபர் இருக்கும் பாவகர்த்தரி யோகம் ஏற்பட்டு இருத்தல்
9. சந்திரன் நிலை
10. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் அசுபர்
சிகிச்சையை ஆரம்பித்தல்...
நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட ஒருவர் தனது சிகிச்சையை ஆரம்பிக்க ஏற்ற நட்சத்திரங்கள்: அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய 16 நட்சத்திரங்கள்.

சாதாரண காய்ச்சல் போன்ற உபாதைகள் பூரம், பூராடம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திர நாட்களில் வந்தால் மட்டும் சிகிச்சை தேவை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

வகிரகங்கள் குறிப்பிடும் நோய்கள்:
சூரியன்: கண் நோய்கள், காய்ச்சல், இதய நோய், படபடப்பு, தோல் நோய்கள், எலும்பு நோய்கள், எலும்பு முறிதல், பித்தம் தொடர்பானவை, தலை வழுக்கை விழுதல்.
சந்திரன்: இதய நோய், நுரையீரல் நோய், வயிற்றுப்போக்கு, வாந்தியெடுத்தல், ரத்தநோய், உடலில் கட்டிகள், புற்றுநோய், தூக்கமின்மை, மனநோய், காசநோய், கருப்பை தொடர்பான நோய்கள் மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள்.
செவ்வாய்: மார்பகத்தில் ஏற்படும் நோய்கள், ரத்தம் தொடர்பான நோய்கள், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வலிப்புநோய், பித்தம் தொடர்பான நோய்கள், சூட்டுப் புண்கள்.
புதன்: அனைத்துவிதமான மனநோய்கள்
குரு: மண்ணீரல், ஈரல், சிறுநீரகம், காது தொடர்பான நோய்கள், மஞ்சள்காமாலை, கட்டிகள், சிறுநீரில் உப்பு, மூலம், நீரிழிவு.
சுக்கிரன்: நீரிழிவு, முகம் தொடர்பான நோய்கள், கண் நோய்கள், சிறுநீரக நோய்கள், ரத்தசோகை, பித்தம் தொடர்பான நோய்கள், வெள்ளைப்படுதல் எனும் பெண்கள் தொடர்பான நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள்.
சனி: மூட்டுவலி, பாரிசவாதம், காலில் ஏற்படும் நோய்கள், வயிற்று நோய், மன நோய், தசை வலி, வழுக்கை, நரம்பு தொடர்பான நோய்கள்.
ராகு: புற்று நோய், தோல் நோய், அம்மை, தொழுநோய், ஆஸ்துமா, மண்ணீரல் வீங்கிப்போதல், புழுக்களால் வரும் நோய்கள், அலர்ஜி தொடர்பான நோய்கள், நரம்புகள் தொடர்பான நோய்கள்.
கேது: மன நோய், வயிற்று நோய், கட்டிகள், குறைந்த ரத்த அழுத்தம், புழுக்களால் வரும் நோய்கள், ஆந்த்ராக்ஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள்.
பஞ்சாங்க நுணுக்கமும், சிகிச்சையும் ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி ஆகியவற்றுடன் திருவாதிரையோ, ஆயில்யமோ, மக நட்சத்திரமோ சேர்ந்துள்ள நாளில் உடல் நலம் குன்றினால், தொடர் சிகிச்சை அவசியம் தேவை.
அதேபோன்று, கீழ்க்காணும் அமைப்புள்ள நாட்களிலும் உடல் நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவ சிகிச்சை அவசியப்படும்.
செவ்வாய் - நவமி - கேட்டை, சுவாதி, பரணி
சனிக்கிழமை - சதுர்த்தசி - பூரம், பூராடம், பூரட்டாதி
மேலும், ஒருவரது ஜன்ம நட்சத்திரம் அல்லது அந்த நட்சத்திரத்துக்கு 3, 5, 7 -வது நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களிலும் நோய் ஏற்பட்டால், துன்பம் மிகும்.
சிகிச்சைக்கு ஏற்ற நாளும் நட்சத்திரமும்
திங்கள் - அஸ்தம்
புதன் - அஸ்வினி
வியாழன் - சித்திரை
வெள்ளி - புனர்பூசம்
இந்தக் கிழமைகள் அல்லது நட்சத்திர நாட்கள் சிகிச்சை செய்ய உகந்தவை ஆகும்.

மேலும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் தங்களது சுயவர்க்கங்களில் இருப்பதும், சர ராசி, உதய லக்னம் அல்லது நவாம்சமாக இருப்பதும் சிறப்பு.
டைஃபாய்ட் போன்ற காய்ச்சலில் பாதிக்கப்பட்டோர் ஞாயிறு அன்று நவமி, சதுர்த்தி, சதுர்த்தசி ஆகிய திதிகள் வரும் நாளில் சிகிச்சை ஆரம்பிக்கலாம். ஆனால், அன்றைய நடப்பு நட்சத்திரம் பரணி, திருவாதிரை, விசாகமாக இருக்கக் கூடாது.

உக்ர யோகம் உள்ள நாட்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் நோய் நிச்சயம் குணமாகும்.

உக்ர யோகம் காணும் முறை எப்படி தெரியுமா? கீழ்க்காணும் நட்சத்திரங்கள்- திதிகள் இணையும் நாள் உக்ரயோகம் கூடிய தினமாகும்.

நட்சத்திரம் திதி
1. ரோகிணி திருதியை, நவமி
2. உத்திரம் சதுர்த்தி
3. திருவோணம் பஞ்சமி
4. மிருகசீரிடம் சஷ்டி
5. ரேவதி சப்தமி
6. கிருத்திகை நவமி
7. பூசம் தசமி
8. அனுஷம் துவாதசி,திருதியை
9. கிருத்திகை, மகம் திரயோதசி
அறுவை சிகிச்சை செய்ய உகந்த நாட்கள்

வளர்பிறை காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது நன்று. அமாவாசை நாளில் அறுவை சிகிச்சை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஜாதகரின் பிறந்த ராசியில் சந்திரன் இருக்கும் நாளில் அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

செவ்வாய், சனிக்கிழமைகள் நன்று. செவ்வாய் வலுவாக இருப்பதும், 8-ம் இட சுத்தமும் முக்கியம்.

சதுர்த்தி திதி, திருவாதிரை நட்சத்திர இணைவும், கேட்டை நட்சத்திரம் நவமியுடன் இருப்பதும், ஆயில்யம் அல்லது மூலம் திரயோதசியுடன் இருப்பதும் நன்று.

ஆக, 'நோய் நாடி நோய் முதல் நாடி...’ எனும் திருவள்ளுவரின் அறிவுரைப்படி செயல்படுவதுடன், உரிய காலத்தையும் கருத்தில் கொண்டு சிகிச்சை மேற்கொண்டால், நோயிலிருந்து விடுபட முடியும்.

பிணிகளும் நட்சத்திரங்களும்...
பிணிகள் எந்தெந்த நட்சத்திர நாள்களில் உண்டாகின்றன என்பதைக் கொண்டு... அந்தப் பிணிகள் குணமாகுமா? அது குணமாவதற்கு எத்தனை காலம் பிடிக்கும் எனப் போன்ற கணிப்புகளையும் ஜோதிட சாஸ்திரம் விவரிக்கிறது.
அஸ்வினி: 25 நாள்களில் குணமாகும்.
கார்த்திகை: 5 அல்லது 7 நாள்களில் குணமாகும். இல்லையெனில் 21 அல்லது 27 நாட்களுக்குள் குணமாகிவிடும்.
ரோகிணி: 8 அல்லது 11 நாள்களில் குணமாகும்.
மிருகசீரிடம்: 6 அல்லது 9 நாள்களில் குணமாகும்.
புனர்பூசம்: 13, 15 அல்லது 27 நாள்களில் குணமாகும்.
பூசம்: 3 அல்லது 7 நாள்களில் குணமாகும்.
பூரம்: 7 நாள்களில் குணமாகும்.
உத்திரம்: 8, 9 அல்லது 21 நாள்களில் குணமாகும்.
அஸ்தம்: 7 அல்லது 20-ம் நாளில் குணம்.
சித்திரை: 8 அல்லது 27-ம் நாளில் குணம்.
சுவாதி: 10 அல்லது 45 நாளில் குணமாகும்.
மூலம்: 10 அல்லது 27 நாள்களில் குணமாகும்.
பூராடம்: 6 அல்லது 9 நாள்களில் குணமாகும். அல்லது 8-9 மாதங்கள் ஆகலாம்.
திருவோணம்: 8 நாள்களில் குணமாக வாய்ப்பு உண்டு. எனினும் முழுமையாக பிணியிலிருந்து விடுபட ஒருவருட காலம் பிடிக்கும்.
சதயம்: 13 நாள்களில் குணமாகும்.
உத்திரட்டாதி: 14 நாள்களில் குணம் ஆகும். அல்லது பல வருடங்கள் அந்தப் பிணியால் துன்பம் அடைய நேரிடும்.
ரேவதி: 8, 14 அல்லது 27 நாள்களில் குணமாகும்.

எனினும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பிணிகள் தொடங்கிய சரியான நட்சத்திர நாளை அறிந்தால்தான்,  மேற்சொன்ன பலன்களை கணிக்கமுடியும். ஆயில்யம், பரணி, கேட்டை, பூரட்டாதி, விசாகம், மகம், திருவாதிரை, அனுஷம் ஆகிய எட்டு நட்சத்திர காலத்தில் தோன்றும் பிணியானது உடலை  மிகவும் வருத்தும். இவற்றுள் சில நட்சத்திர தினங்களில் உருவாகும் நோய் மரணத்தையும் ஏற்படுத்தலாம் என்றும் குறிப்புகள் உண்டு. எனினும், மரணத்தையும் வெல்லும் சக்தி பிரார்த்தனைக்கு உண்டே! ஆகவே, உரிய பிரார்த்தனை பரிகாரங்களால் துன்பத்தில் இருந்து விடுபடலாம்.
Tuesday, April 15, 2014

புதிய மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன ?

நம் நாடு வளர்ச்சி காண வேண்டும் - அடுத்த சில வாரங்களில் அமையப்போகும் புதிய மத்திய அரசிடம்  மக்கள் எதிர்பார்ப்பது இதுவாகவே இருக்கிறது. ஆனால், அடுத்துவரும் பிரதமர் யாராக இருந்தாலும், நாட்டின் வளர்ச்சியை மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிதாக உயர்த்திவிட முடியாது. அப்படி உயர்த்துவதற்கு பல விஷயங்கள் தடையாக இருக்கிறது. இதில் முக்கிய தடையாக இருப்பது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு. அடுத்துவரும் அரசாங்கமானது இந்த விஷயத்தில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே நம் நாடு வேகமான வளர்ச்சி காணும். என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்?


தொழில் துறை! 

ஒரு நாட்டின் வளர்ச்சி பிரமாதமாக இருக்க வேண்டும் எனில், தொழில் துறை நல்ல வளர்ச்சி காண வேண்டும். நம் நாட்டில்  தொழிற்சாலை தொடங்கத் தேவையான நிலத்தை மாநில அரசாங்கம்தான் தரவேண்டும். மத்திய அரசாங்கம் நிலம் எதையும் வைத்துக் கொள்வதில்லை என்பதால், அந்த வேலையை அது செய்ய முடியாது. இதற்கு அருமையான உதாரணம், மேற்கு வங்காளத்தில் சிங்கூரில் டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை அமைக்க முற்பட்டபோது ஏற்பட்ட எதிர்ப்பு.


தொழிற்சாலைக்குத் தேவையான இடத்தை ஒதுக்கித் தருவதில் அரசியல் காரணங்கள் தவிர, வேறு சில நியாயமான காரணங்களும் மாநில அரசாங்கங்களுக்கு இருக்கலாம். நிலங்களின் விலை மிக அதிகமாக வளர்ந்திருப்பதை இதற்கொரு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் நில ஆர்ஜித சட்டம் சில ஆண்டுகளுக்குமுன் கொண்டுவரப்பட்டது.

ஆனால், இந்த ஒரு சட்டத்தினால் மட்டுமே அந்தப் பிரச்னையை தீர்த்துவிட முடியாது. தொழில் துறைக்குத் தேவையான நிலத்தைத் தருவதில் தொடங்கி, அதற்குத் தேவையான பல்வேறு அனுமதிகளை வழங்குவது வரை உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டால் மட்டுமே தொழில் துறை வேகமான வளர்ச்சி காணும்.

ஜிஎஸ்டி! 

பொருட்கள் மற்றும் சேவைக்கு வரி விதிக்கும் முறையான ஜிஎஸ்டி-யை மத்திய அரசாங்கம் கொண்டுவருவதை சில மாநில அரசாங்கங்கள் எதிர்க்கின்றன. காரணம், இந்த வரி விதிப்புமுறை நடைமுறைக்கு வந்தால், விற்பனை வரி, மாநில கலால் வரி போன்ற சில முக்கிய வரிகள் காலாவதியாகிவிடும். இந்த வரிகள் மூலமாகத்தான் மாநில அரசாங்கங்களுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை மாநில அரசாங்கங்கள் இழக்கும்பட்சத்தில் அதற்கான இழப்பீட்டை மத்திய அரசாங்கமானது எப்படி தரப் போகிறது என்பது முக்கியமான கேள்வி.

எனினும், மத்திய அரசினால் இந்த ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவராமல் இருக்க முடியாது. இந்த வரியைக் கொண்டுவருவதன் மூலமே இந்தியா முழுக்க எல்லாப் பொருட்களுக்கும் ஒரேமாதிரியாக விலை நிர்ணயம் செய்ய முடியும்.

ஜிஎஸ்டி-யைக் கொண்டுவருவதன் மூலம் மாநில அரசாங்கங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பு பிரச்னையில் சரியானதொரு தீர்வை கூடிய சீக்கிரத்தில் கண்டால் மட்டுமே பொருளாதார மேம்பாட்டுக்கான வழிபிறக்கும்.

விவசாயத் துறை!  

நம் நாட்டில் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் இருக்கிறது. அதனால்தான் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது, நியாய விலை கடைகளுக்குத் தேவையான பொருட்களை மானிய விலையில் தருவது என்கிற முக்கிய விஷயங்களை மத்திய அரசாங்கம் செய்கிறது.

ஆனால், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிற வேலையை மாநில அரசாங்கங்கள்தான் செய்ய வேண்டும். உதாரணமாக, விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைத் தர வேண்டியது மாநில அரசாங்கம்தான்.

நீர்வளம் மாநில அரசாங்கங்களில் கீழ் வருவதால், ஒரு மாநிலம் பக்கத்தில் உள்ள இன்னொரு மாநிலத்துடன் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் பல்வேறு சிக்கல் இருப்பதை காவிரிப் பிரச்னை மூலமும், முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னை மூலமும் நாம் நேரடியாக அனுபவித்து வருகிறோம்.

நீர்வளம், உரங்களுக்கான மானியம் என்பது போன்ற விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் மத்திய-மாநில அரசாங்கங்கள் நல்லிணக்கத்தோடு செயல்பட்டால் மட்டுமே விவசாயத் துறையில் இந்தியா முழுக்க பெரிய அளவில் வளர்ச்சி காண முடியும்.

அரசு செலவினங்கள்! 
 
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் என மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது. இந்தத் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கித்தருவதோடு மத்திய அரசாங்கத்தின் வேலை முடிந்துவிடுகிறது. இந்தத் திட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசாங்கங்களின் வேலைதான்.

உதாரணமாக, பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசாங்கம் தந்தாலும், அது எந்த பள்ளியையும் நடத்துவதில்லை. (கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகள் நாடு முழுக்க வேலை பார்க்கும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான்!)

மத்திய அரசின் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. உதாரணமாக, ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களை   நடைமுறைப் படுத்துவதால், தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்துக் கும் தேவையான வேலையாட்கள் கிடைப்பது குறைகிறது. சம்பளத்தை அதிகமாக தந்து வேலையாட்களை வேலைக்கு கொண்டுவர வேண்டி யிருக்கிறது. இதனால் உற்பத்திச் செலவு கூடுகிறது. பொருட்களின் விலை அதிகரிக்கிறது.

இது ஒருபக்கமிருக்க, சில மாநில அரசாங்கங்கள் அரசியல் காரணமாகவும் மத்திய அரசின் நலத் திட்டங்களை சரியாக அமல்படுத்து வதில்லை. இதனாலும் மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு சரியாகப் போய்ச் சேருவதில்லை.

அரசின் செலவினங்கள் மக்களுக்கு சரியாக போய்ச் சேர, மத்திய - மாநில அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கல்வியறிவும் ஆரோக்கியமும் பெருகி, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி காணும்.

அந்நிய நேரடி முதலீடு! 
 
அந்நிய நேரடி முதலீடு பங்குச் சந்தையிலும் சில தொழில் துறைகளிலும் வருவதில் பிரச்னை இல்லை. காரணம், இவை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளில் வரும்போது, பிரச்னை வருகிறது.

உதாரணமாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாமா,வேண்டாமா என்பது பற்றி ஒவ்வொரு மாநில அரசும் ஒவ்வொருவிதமான முடிவை எடுக்கிறது. ஒரே பிராண்டு  விற்பனையில் மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஏற்கெனவே அனுமதி தந்து அதை சட்டமாக ஆக்கியிருந்தாலும், மாநில அரசாங்கம் விரும்பினால் மட்டுமே அதை அமல்படுத்த முடியும். இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசாங்கங்களுக்கு இடையே இருவேறு நிலைப்பாடு இருப்பதால் அந்நிய நேரடி முதலீடு வருவதற்கு வாய்ப்பே இல்லை. 

வேகமான பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் மிகச் சில விஷயங்களை பற்றி மட்டுமே நான் சொல்லி இருக்கிறேன். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது'' என்று விரிவாக பேசி முடித்தார் பேராசிரியர் சீனுவாசன்.

அடுத்த பிரதமர் யாராக இருந்தாலும், அவர் மேற்சொன்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டுமே வேகமான பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும்.

ஸ்மார்ட்போன் - போலி ஆப்ஸ்கள்!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதில் பதிந்து வைத்திருக்கின்றனர்.  மின்னஞ்சல் முகவரியில் இருந்து வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை அத்தனை விஷயங்களும் இதில் அடங்கும். இந்தத் தேவைக்கெல்லாம் ஸ்மார்ட் போனில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்களைத்தான்.
 
சாதாரணமாக கேமில் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்களைத் தரும் ஆப்ஸ்கள் வரை பல ஆப்ஸ்கள்  ஆஃப் மார்க்கெட்டில் இலவசமாகவும், சிறிய கட்டணத்துடனும் கிடைக்கின்றன. இவையெல்லாம் பாதுகாப்பானவை தானா, இதில் உள்ள போலிகளை எப்படி கண்டுபிடிப்பது, போலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன??
 
ஸ்மார்ட் போன்களின் விலையும் குறைந்துவருவதால் அதன் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ஆனால், அதன் மீதான விழிப்பு உணர்வு இருக்கிறதா என்றால், இல்லை.ஸ்மார்ட் போன்கள் கணினியைப் பின்னுக்குத் தள்ளி அது செய்யும் வேலைகளில் பெரும்பாலானவைகளைத் தானே செய்கின்றன. இந்தநிலையில் மோசடி கும்பல்களின் பார்வை கணினி களிடமிருந்து ஸ்மார்ட் போன்களின் பக்கம் இப்போது திரும்பி இருக்கிறது.
 
இதற்கோர் உதாரணம், சில ஆண்டுகளுக்குமுன், கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மார்க்கெட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்களில் டிராய்டுட்ரீம் (DroidDream) என்னும் டிரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் உள்ள அப்ளிகேஷன்களை இயக்கியவுடன், போனில் அதன் உரிமையாளர் அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் கையாளும் வசதியை இந்த வைரஸ் பெற்றுவிடுகிறது.

இதன்மூலம் மேலும் பல வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்களை எளிதாக டவுண்லோடு செய்கிறது. இந்த வைரஸ் குறித்து அறிந்த கூகுள் நிறுவனம், தன் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆய்வு செய்து, இந்த வைரஸ் இருந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் நீக்கியது.

சீனாவில், இந்தவகையான வைரஸ்கள், ஆன்லைன் அமைப்புகள் வழியே மொபைல் போன்களில் பரவியது கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தன.  அந்தச் சமயத்தில் வைரஸ் எதிர்ப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் பயனாளர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தது. 'மொபைல் போனுக்கான ஆப்ஸ்களை டவுண்லோடு செய்யும் போது அது  பாதுகாப்பானதுதானா என்று கண்டறியுங்கள்’ என்பதே அந்த கோரிக்கை.

உத்தரவாதம் இல்லை! 

நீங்கள் எந்த ஆப்ஸை எதிலிருந்து டவுண்லோடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அவை பாதுகாப்பானதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ஆண்ட்ராய்டு போனில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஒரு அப்ளிகேஷனை கூகுள் பிளேயில் இருந்து டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது. கூகுள் பிளே அல்லாத வேறு தளங்களின் மூலம் டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

டிசேபிள் செய்வது அவசியம்! 

கூகுள் பிளேயில் இருந்து நீங்கள் டவுண்லோடு செய்யும் ஆப்ஸ்களின்  பாதுகாப்பு கூகுள் பிளேயால் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு வேறு தளங்களில் இருந்து டவுண்லோடு செய்யப்படும் அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்ய விரும்பவில்லை எனில், Settings > Security / Settings > Applications பகுதியில் Unknown sources என்பதை டிசேபிள் செய்திருக்க வேண்டும்.

ரிவியூ  படியுங்கள்! 

கூகுள் பிளேயிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் டவுண்லோடு செய்துகொள்ளலாமா எனில், அது பாதுகாப்பானதல்ல. சில சமயங்களில் புதிய அப்ளிகேஷன் ஒன்றை டவுண்லோடு செய்வது நம் பாதுகாப்புக்குப் பிரச்னையாக அமையலாம். எனவே, அதிகமாக டவுண்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷனை தேர்வு செய்வது புத்திசாலித்தனம். அதோடு ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனை  பயன்படுத்தும்முன் அதை பயன்படுத்தி யவர்களின் கருத்தை கூகுள் பிளேயில் படிப்பதும் அவசியம்.

நிறுவனத்தின் பெயரை கவனி! 

முக்கியமானதொரு ஆப்ஸை டவுண்லோடு செய்யவேண்டும் எனில், அது குறிப்பிட்ட நிறுவனம்தான் வெளியிட்டுள்ளதா என்பதை அறிந்துகொண்டு டவுண்லோடு செய்வது நல்லது. ஆப்ஸ்களின்  பெயருக்கு கீழே அதை வெளியிட்ட நிறுவனத்தின் பெயரும் இருக்கும். நிறுவனத்தின் பெயரை இணையத்தில் தேடுவதன் மூலம் அதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் அப்ளிகேஷன்களின் கீழே அந்த நிறுவனத்தின் முழுப்பெயர் இருக்கும்.

படிக்காமல் அனுமதி தரக்கூடாது!  

அப்ளிகேஷன் ஒன்றினை டவுண்லோடு செய்வது என்று முடிவு செய்தபின் நீங்கள் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், ''permissions'' எல்லா அப்ளிகேஷன்களும் இதைக் கேட்கும். இணையத்தை எப்போது அக்சஸ் செய்யவேண்டும் என்று அனுமதி கேட்டபின், அந்தஅப்ளிகேஷன் இணையம் சார்ந்த சேவையைத் தரும் அல்லது உங்களுக்கு நிறைய விளம்பரங் களைக் காட்டும். இதேபோல, நீங்கள் இருக்கும் இடம், போன் கால்/மெசேஜ் போன்றவற்றைச் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், சோஷியல் நெட்வொர்க் நண்பர்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போட்டோ எடுக்கும் பெர்மிஷன் என்று பல செயல்களைச் செய்ய உங்களிடம் அனுமதி கேட்கப்படும்.

இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, 'போன்கால்/மெசேஜ் போன்றவற்றை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன்'. ஏனெனில், எல்லா அப்ளிகேஷன்களும் அக்சஸ் செய்யும்பட்சத்தில் உங்கள் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும். எனவே, குறிப்பிட்ட அப்ளிகேஷன் எந்த மாதிரியான பெர்மிஷன்களைக் கேட்கிறது, அது நிஜமாகவே தேவையானதுதானா என்று தெரிந்துகொள்வது பாதுகாப்பானது.

அப்டேட் கவனம்! 

ஆரம்பத்தில் சில பெர்மிஷன்களை மட்டும் கேட்டுவிட்டு, நீங்கள் ஆப்ஸ்களை அப்டேட் செய்யும்போது புதிய பெர்மிஷன்களைக் கேட்கும் அப்ளிகேஷன்களும் உள்ளன. எனவே, அப்டேட் செய்யும்போதும் இதைக் கவனிப்பது அவசியம். சில கூடுதலான சாமர்த்தியங்களுடன் தற்போதைய ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன. இருந்தாலும், எந்த நேரமும் ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் நமக்குத் துணை இருக்காது. பல நேரங்களில் நம் சமயோசிதப் புத்திசாலித்தனம்தான், இத்தகைய தீய விளைவுகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும்.

- பி.கே.ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் - பிரபு கிருஷ்ணா.

ஆப்ஸ் வைரஸ்கள் உஷார்! 

இன்றைய நிலையில் தகவல் திருடுபவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகத் திகழ்கின்றன வைரஸ்கள். ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலான வைரஸ்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுகின்றன. ஸ்மார்ட்போன் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கும் அப்ளிகேஷன் களைப் போலியாகத் தயாரிக்கும் மோசடி கும்பல், அதைக் குறிவைத்து      தாக்குவதுபோலவே வைரஸ்களையும் உற்பத்தி செய்து உலாவவிடுகிறது. இந்தவகை வைரஸ்கள், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனிநபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது.

தகவல் திருடன்! 

ஒரிஜினல் குறியீடுகள் கொண்ட ஆப்ஸ்களாக இருந்தால் அது உட்புகுந்த வைரஸால் பாதிக்கப்படுவதில்லை. போலியான அப்ளிகேஷன்களாக இருந்து அதைப் பயனாளர்,  ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்தும்போது,  கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகள் மூலம் தகவல்கள் திருடப்படுகின்றன. இ-மெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.

இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள ஃபைல்கள் அதே பெயரில், புதிய ஃபைல்களைப் பதிக்கிறது. இதனால் எந்தச் சோதனைக்கும் முதலில் உள்ள ஒரிஜினல் ஃபைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு ஃபைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது. அதுமட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது.

வரும்முன் காப்பது! 

அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கையற்ற இணையதளங்களுக்கான இணைப்பை அவசரப்பட்டு கிளிக் செய்துவிடக் கூடாது. நம்பகத்தன்மையான மொபைல் ஆன்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதையும் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோடு செய்யக்கூடாது. முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்தபின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்லோடு செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற மிகவும் நம்பகத்தன்மையான ஆஃப் மார்க்கெட்டில் மட்டுமே தேவையான அப்ளிகேஷன்களையே பயன்படுத் தினால், உங்கள் தனிப்பட்ட தகவல் களுக்கு எந்த பங்கமும் வராது!