Search This Blog

Monday, March 28, 2016

சிறுதானியம்... பெரும் பலன்கள்!

ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.

தினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

சோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.
கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

வரகு - உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.

ரெட்மி நோட் 3 (Redmi Note 3)

குறைந்த விலை, சிறந்த தொழில்நுட்பம் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள ஷியோமி நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட் போனான ரெட்மி நோட் 3-ஐ சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்களுக்கு பலத்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனாக இருந்தாலும் டிசைனில் எந்தவித குறையுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த போன் சரிபாதி அளவு மெட்டலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ‘Matte’ பினிஷும் அடங்கும்.
 

1.4 GHz ஹெக்ஸா-கோர் Qualcomm Snapdragon 605 SoC பிராசஸர் கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட் போன் இரண்டு மாடல்களில் வருகின்றன. 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி. மற்றொன்று, 3ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி .


மேலும், 32 ஜிபி வரை மைக்ரோ SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். 5.50 இன்ச் 1080x1920 பிக்ஸல் 403 PPI டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 4050 எம்ஏஹெச் (mAh) பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது.  ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போனில் ஷியோமி நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதள டிசைனான MIUI 7 இந்த ஸ்மார்ட் போனிலும் அடங்கும். டூயல் சிம் எல்டிஇ (LTE) வசதி கொண்டுள்ள இந்த ரெட்மி நோட் 3, ஐந்து விரல் ரேகைகள் வரை ஸ்டோர் செய்துகொள்ளும் ‘Finger Print’ சென்சார், 16 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவை கொண்டுள்ளது.

விலை:

2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.9,999

3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.11,999

பிளஸ்:

டிசைன்
டிஸ்ப்ளே
தொழில்நுட்பம்
பேட்டரி

மைனஸ்:


NFC வசதி கிடையாது 32 ஜிபி வரைதான் SD கார்டு மூலம் மெமரியை விரிவுபடுத்த முடியும்

சுமாரான கேமரா

செ.கிஸோர் பிரசாத் கிரண் 

இன்ஃபோகஸ் II - 50EA800 LED டிவி

இன்ஃபோகஸ் II - 50EA800 LED டிவி

அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஃபோகஸ் நிறுவனம், அலுவலக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் புரஜெக்டர் தயாரிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இறங்கிய இந்த நிறுவனம் தற்போது டிவி தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த LED டிவி, 50 இன்ச் Full HD 1920x1080 பிக்ஸல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ரூ.34,999 என்ற விலையில் விற்கப்படும் இந்த டிவி, மற்ற ப்ராண்ட் 50 இன்ச் LED டிவிக்களைவிட விலை குறைவாக இருந்தாலும் சாதாரண தோற்றத்தையே கொண்டுள்ளது. 


இதன் டிசைனில் பெரிதாக கவனம் செலுத்தப்படவில்லை. ஓரத்தில் மெல்லிய தோற்றத்தையும் நடுவில் சற்று பருமனாகவும் தோற்றமளிக்கும் இந்த டிவியின் மொத்த எடை 12 கிலோ.

டிவியின் பட்டன்கள் அனைத்தும் கீழே வலப்பக்கத்தில் அமைந்துள்ளன. இன்புட் போர்ட்கள் மற்றும் பிற போர்ட்கள் அனைத்தும் பின்புறத்தில் அமைந்துள்ளன.இந்த டிவியை சுவரிலும் மாட்டலாம்; ஸ்டாண்ட் மூலமும் நிறுத்தி பயன்படுத்தலாம்.

ஒரு USB போர்ட், இரண்டு HDMI போர்ட் இன்புட்,  component & composite ஆடியோ வீடியோ இன்ஸ், Antenna சாக்கெட், VGA போர்ட் வித் PC ஆடியோ இன் மற்றும் 3.5 மி.மீ ஸ்டீரியோ ஆடியோ அவுட்புட் ஆகிய போர்ட்கள் இந்த டிவியில் அடங்கும்.

High-end டிவிகளில் உள்ள செயல்பாடுகள் இந்த டிவியில் இல்லா விட்டாலும், தினசரி பயன்பாட்டுக்கு தேவையான அத்தனை செயல்பாடு களும் இந்த டிவியில் கச்சிதமாக அமைந்துள்ளது.

விலை - ரூ.34,999.

பிளஸ்:

டிஸ்ப்ளேவின் தரம்.
எளிதாக டிவியை பயன்படுத்தலாம்.

மைனஸ்:

ஒலியின் வெளிப்பாடு சில சமயங்களில் சுமாராக அமைகிறது.

சாம்சங் கேலக்ஸி Samsung Galaxy A5

பிரீமியம் ஸ்மார்ட் போனின் தரத்தை பட்ஜெட் விலையில் விற்பதே சாம்சங் கேலக்ஸி ‘A’ வரிசை ஸ்மார்ட் போன்களின் நோக்கமாகும்.

முழுக்க முழுக்க மெட்டல் மற்றும் கண்ணாடி கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், பார்க்க மிக ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது. முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் ‘curved’ கொரில்லா க்ளாசை கொண்டுள்ளது. 5.2 இன்ச் full-HD சூப்பர் Amoled 1080x1920 பிக்ஸல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை ஹோம் பட்டனோடு கொண்டுள்ளது.

டூயல் சிம் 4G LTE  ஸ்மார்ட் போனான இந்த A5, சாம்சங் நிறுவனத்தின் 1.6 GHz Exynos 7580 SoC அக்டோ-கோர் பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது.

2 ஜிபி ரேமைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.

டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூ-டூத் 4.1, என்.எஃப்டி.சி., எஃப்.எம். ரேடியோ, USB OTG ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்  இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதள டிசைன் மாற்றங்களான TouchWiz டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.

13 மெகா பிக்ஸல் பின்புற கேமரா வெளிச்சத்தில் சிறப்பாக செயல்படு கிறது. இதனுள் இருக்கும் 2900 mAh பேட்டரி   1.5 நாட்கள் வரை நீடிக்கும்.
விலை - ரூ. 28,500.

பிளஸ்:

டிசைன், 
தரம்,
பேட்டரி.

மைனஸ்:

விலை.
Notification LED கிடையாது.
கேமராவின் Focus ஸ்பீட் மெதுவாக இருக்கிறது

செ.கிஸோர் பிரசாத் கிரண்

மோடியின் பார்வை நடுத்தர மக்கள் மீது படுமா?

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம், இந்தியா முழுக்க உள்ள நடுத்தர வர்க்கத்து மக்கள்தான். காங்கிரஸ் ஆட்சியில் ஏகத்துக்கும் அதிகரித்த விலைவாசி உயர்வுடன், கணக்கு வழக்கில்லாமல் நடந்த ஊழல்களால் மனம் வெறுத்துப் போனார்கள். காங்கிரஸை ஒழித்துவிட்டு, மோடியைக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், ஆட்சி மாறியதால் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை மாறிவிடவில்லை. மோடியின் இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெரிய அளவில் உயராமல் இருந்திருக்கலாம். சில பொருட்களின் விலை குறையக்கூட செய்திருக்கலாம். எனினும், கல்வி மற்றும் மருத்துவத்துக்காக செய்ய வேண்டிய செலவுகள் அனைத்துமே தாறுமாறாக ஏறியிருப்பது மனதை வருத்தும் நிஜம்.

இன்றைக்கு சென்னை போன்ற பெரிய நகரங்களை ஒட்டி இருக்கிற சில பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புக்கான கட்டணமே ரூ.1 லட்சத்துக்கு மேல். சாதாரண பள்ளிகளில்கூட ரூ40,000 கட்டணம் வசூலிக்கிறார்கள். எல்.கே.ஜி.க்கே இப்படி எனில், கல்லூரிப் படிப்பை சொல்ல வேண்டியதில்லை. கலைக் கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பை படித்து முடிக்க வேண்டுமெனில், குறைந்தது ரூ.4 லட்சமாவது செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதுவே பொறியியல் கல்லூரி எனில், 6 முதல் 8 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. 20 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் ‘மேனேஜ்மென்ட் கோட்டா’வில் சீட் வாங்க ரூ.10 லட்சம் நன்கொடையாக கட்ட வேண்டியிருக்கிறது.  


கல்விக்கு இப்படி எனில், மருத்துவத்துக்கு ஆகும் செலவு அதிர  வைக்கிறது. ஹார்ட் அட்டாக் என்று அறுவை சிகிச்சை செய்து 3.50 லட்சம் ரூபாய் பில் போட்டால், எந்த நடுத்தர வர்க்கத்து மனிதனால் கட்ட முடியும்? அறுவை சிகிச்சைகூட வேண்டாம், சாதாரண நோய்களுக்கு தொடர்ந்து சாப்பிடும் மருந்துகளே மாதத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறதே! எதிர்காலத்துக்கென எதுவும் சேர்த்து வைக்காத சாதாரண மனிதர்கள் இந்தச் செலவுகளை எப்படித்தான் சமாளிப்பார்கள்?

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். இவர்களின் சிக்கலைத் தீர்க்க பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நடுத்தர மக்கள் மலை போல நம்பியிருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைக்கிறார். மோடியின் ஆட்சி இப்படியே இருக்குமெனில், விரைவில் நடக்கவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலிலும் மக்களின் ஆதரவை பா.ஜ.க. பெற முடியாது என்பது நிச்சயம்!

- ஆசிரியர்.