Search This Blog

Friday, October 25, 2013

இலக்கியத்துக்கான நோபல் பரிசு


சென்ற வாரம் இலக்கியத்துக்கான நோபல் பரிசை கனடா நாட்டைச் சேர்ந்த 82 வயதுப் பெண்மணி ஆலிஸ் மன்ரோ வாங்கியுள்ளார். அவரை நோபல் பரிசுக் குழு ‘நவீன கால மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது. 

1931-இல் கனடாவில் ஒரு பள்ளி ஆசிரியைக்கும், விவசாயிக்கும் மகளாக ஆலிஸ் பிறந்தார். திருமணமானதால் 1951இல் படிப்பை பாதியில் நிறுத்தினார். ஆனால் புத்தகத்தின் மீது ஆர்வமுள்ள இவரும், இவர் கணவரும் இணைந்து ஒரு புத்தகக் கடையை தொடங்கியுள்ளனர். புத்தகத்தின் மீது தீராக்காதல் கொண்ட ஆலிஸ் தமது 37வது வயதில்தான் முதல் சிறுகதைத் தொகுப்பை (டேன்ஸ் ஆஃப் த ஹேப்பி ஷேட்ஸ்) வெளியிட்டிருக்கிறார். இவரின் மற்றுமொரு சிறப்பம்சம் இவர்தான் நோபல் பரிசு வென்ற ஒரே கனடா எழுத்தாளர்! 

இது தவிர, 1993க்குப் பிறகு அமெரிக்க எழுத்தாளர்கள் யாரும் நோபல் பரிசு வாங்கவில்லை. நமது அண்டை தேசத்துப் பெண்மணி வாங்கியுள்ளதால் அமெரிக்க மக்களும் குஷியாக உள்ளனர். ஆனால் இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் இனி நான் எழுதப் போவதில்லை என்று சமீபத்தில் ஆலிஸ் பேட்டி கொடுத்துள்ளார். இவரின் குறிப்பிடத்தக்க பதிப்புகள் - Dance of the Happy Shades, The moons of Jupiter, Runaway, Open Secrets.ஹிலாரி கிளிண்டன் அடுத்த அதிபராக வரவேண்டும் என்று பலர் அமெரிக்காவில் ஆசைப்படுகின்றனர். இதற்கு வெள்ளோட்டமாக ஹாலிவுட்டில் அம்மணியைப் பற்றி ‘ரோதம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஆனால் இப்படம் பெரும்பாலும் அவரின் இளமைக் காலத்தை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது.

ஹிட்லர் பெண் போராளிகளை மட்டுமே கொண்ட நாஸி படை ஒன்றை உருவாக்கி இருந்தார் என்றும், அது வரலாற்றின் உட்சிக்கல்களால் மறைக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. ஆண் வீரர்களைப் போன்றே இந்தப் பெண்களும் யுத்தக்களத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மன் இராணுவம் சுமார் 5 இலட்சம் பெண் போர் வீரர்களைப் பயிற்சி அளித்து உருவாக்கியது. ‘ஹிட்லரின் ஃப்யூரிஸ்’ என்ற புத்தகம் இதுபற்றி விரிவாகக் கூறுகிறது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலிஸ் கை ப்லாஷ் என்பவர்தான் திரைப்பட வரலாற்றிலேயே முதல் பெண் திரைப்பட இயக்குனர் ஆவார். 1873இல் பாரிஸின் புறநகரில் பிறந்தவர். ‘த காபேஜ் ஃபேரி - அந்த முட்டைகோஸ் தேவதை’ என்ற அர்த்தம் கொண்ட திரைப்படமே அவரது முதல் படைப்பாகும். தமது 23வது வயதில் 1896இல் வெளியிட்டார். சுமார் 1000 திரைப் படங்களில் தம் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். 1910-ல் நியூயார்க்குக்குக் குடிபெயர்ந்தார். ஸ்டுடியோ ஒன்றை நிறுவி அதனை நிர்வகித்து வந்த முதல் பெண்ணும் இவரே ஆவார். அமெரிக்கக் கருப்பினர்களை மட்டும் கொண்டு ஒரு முழுநீளத் திரைப்படம் எடுத்த பெருமையும் இவரையே சேரும். பெரும்பாலும் ஆண்களால் ஆதிக்கம் செய்யப்பட்ட அந்தக் கால ஹாலிவுட் திரைத்துறையில் பெண் என்பதால் இவர் புகழ் பெருமளவில் வெளிவரவில்லை என்பது பலரின் ஆதங்கம். இவரது பங்களிப்புப் பற்றி ஒருசிலர் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். திரைப்படத்தில் ‘கதை சொல்லித்தனம்’ தான் இவரின் சிறப்பம்சம். அதை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் இவரும் ஒருவராவார்.

வங்கிகளை இணைப்பாரா?

 
உலகின் பழைமையான முக்கியமான வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கிக்கு 206 வயதாகிறது. இந்தியாவின் வங்கிச் சேமிப்புகளில் 22 சதவிகிதமும் வங்கிக் கடன்களில் 23 சதவிகிதமும் இதனுடையது. 15000 கிளைகள், 3 இலட்சம் பணியாளர்கள் 160 வெளிநாட்டுக் கிளைகள் என்று உலகின் எந்த வங்கிக்கும் இல்லாத பல பெருமைகள் கொண்ட இந்த வங்கியின் தலைவராகப் பதவி ஏற்றிருப்பவர் ஒரு பெண். அருந்ததி பட்டாச்சார்யா.
 
நமது பொதுத்துறை நிதிநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் பதவியை சில ஆண்டுகளாகப் பெண்கள் வகித்து வருகிறார்கள். ஆனால், பாரத ஸ்டேட் வங்கிக்கு இந்திய அரசில், உலக வங்கிகள் அரங்கில் இருக்கும் முக்கியமான இடத்தினால் இந்தத் தலைமைப் பதவி தனிச் சிறப்பு பெறுகிறது. ஸ்டேட் வங்கி அதன் வரலாற்றில் பல திருப்புமுனைகளைச் சந்தித்த ஒரு நிறுவனம். ரிசர்வ் வங்கியிடமிருந்த அதன் பங்குகளை மத்திய அரசு தன்வசம் எடுத்து கொண்டது அதில் மிக முக்கியமானது. இதன் பின்னர் இதன் தலைவர்கள் நிதி அமைச்சகம் அமைக்கும் ஒரு கமிட்டியினால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஸ்டேட் வங்கியின் ஜாம்பவான்களான 4 தலைமை ஜெனரல் மானேஜர்களுக்கிடையேயான கடும் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். பதவிக்காலம் 3 ஆண்டுகளாக இருக்கும் இந்தப் பதவிக்கு இன்னும் இரண்டே ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம் இருக்கும் இவருக்கு பதவி நீட்டிப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இவர் திறமையைச் சுட்டிகாட்டும் அளவுகோல்.பாரத ஸ்டேட் வங்கி வெறும் வங்கித்தொழில் மட்டும் செய்யாமல் நிதி நிறுவனங்களின் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து கொண்டுவரும் ஒரு வங்கி. அவற்றில் சில பகுதிகளான எஸ்.பி.ஐ. பொது காப்பீடு, செக்யூரிட்டிஸ், புதிய துணை நிறுவனங்களை உருவாக்குவது போன்ற சவாலான பணிகளில் இவர் பங்களிப்பு கணிசமானது. உலக அளவில் வங்கியின் பலதரப்பட்ட புதிய பணிகளில் இத்தகைய அனுபவம் பெற்ற பெண் அதிகாரிகள் மிகச் சிலரே; இந்த வாய்ப்புகளினால் ஃபார்ச்யூன் 500 என்ற உலகளவில் பட்டியலிடப்படும் நிறுவனங்களில் இடம் பெற்றிருக்கும் ஒரே பெண் தலைமை அதிகாரியும் இவரே.அமெரிக்கக் கிளைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய போது இவர் செய்த நிர்வாகச் சீர்த்திருத்தங்கள் அங்கு இயங்கும் பல வெளிநாட்டு வங்கிகளின் கவனத்தை ஈர்த்தவை.பொதுவாக பெண் அதிகாரிகள் பெண் ஊழியர்களிடையே பாப்புலராக இருக்க மாட்டார்கள். அருந்ததி அதிலும் மாறுபட்டவராக இருக்கிறார். நமது வங்கித் துறையில் திருமணம், குடும்பம், குழந்தைகள், கணவரின் பணி போன்ற வகைகளினால் பணியைத் தொடர முடியாமல், வேலையை ராஜினாமா செய்தவர்கள் பலர். தகுதியும், திறமையும், நீண்டகால அனுபவமும் பெற்ற இவர்களின் ராஜினாமாவால் வங்கிக்கும் இழப்பு. இதைத் தவிர்க்க இவர் எஸ்.பி.ஐ. கேப்டல் மார்க்கெட் நிறுவனத்தில் கொண்டுவந்த திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதன்படி பெண் பணியாளர்கள் 6 ஆண்டுக் காலம் இடைக்கால ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் பணியில் தொடரலாம். இது இப்போது வங்கியில் தொடரும் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
 
லாபம் குறைந்து, சந்தையில் பங்குகளின் மதிப்பு விழுந்திருக்கும் ஸ்டேட் வங்கியை நிமிர்த்த இவர் செய்யப்போவதை காண முதலீட்டாளர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். ஸ்டேட் வங்கியின் 7 துணை வங்கிகளையும் ஒன்றாக இணைப்பது மத்திய நிதி அமைச்சகத்தின் திட்டம். தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகளினால் இதை முழுவதுமாகச் செயலாக்க முடியவில்லை. இவர் இதை எப்படிச் செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க இந்திய வங்கித் துறையினர் காத்திருக்கின்றனர்.  

ரமணன்

Wednesday, October 23, 2013

புக்கர் பரிசு -எலேனார்

அறிவியல் பார்வை, முற்போக்கு, நாகரிகம்... என்றெல்லாம் கதை அளக்கும் இங்கிலாந்து இலக்கிய ஆர்வலர்களுக்கு மந்திர தந்திரக் கதைகளின் மீதான மயக்கமும் எப்போதும் இருக்கும்.அதுதான் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசிலும் எதிரொலித்து இருக்கிறது. 'மேன் புக்கர் பரிசு’க்காக இந்த ஆண்டு 'தி லூமினரீஸ்’ என்ற ஒரு நாவலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 'விக்டோரியா காலத்து எழுத்து நடையில் இந்த மர்ம நாவல் எழுதப்பட்டிருக்கிறது’ என்று கொண்டாடப்படும் இந்த நாவல், 19-ம் நூற்றாண்டின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. 

வால்டர் மோடி (மூடி) என்ற பேராசைக்காரன் ஒருவன், குறுக்கு வழியில் பணக்காரனாக,  தங்கச் சுரங்கத்தைத் தேடி நியூஸிலாந்து நாட்டுக்கு வருவதாக இந்த நாவல் ஆரம்பிக்கிறது. ஜோசியத்தோடு பின்னிப் பிணைந்து எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில், 12 ராசிகளை நினைவுபடுத்துவதுபோல மொத்தம் 12 அத்தியாயங்கள். பௌர்ணமி நிலவு தேய்ந்து அமாவாசையாக மறைவதை நினைவுபடுத்துவதைப்போல இந்த நாவலின் பக்கங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, முதல் அத்தியாயத்தில் இருப்பது 358 பக்கங்கள் என்றால், இரண்டாவது அத்தியாயத்தில் அதில் பாதி அளவுதான். ஒவ்வொரு அத்தியாயமும் இப்படியே தேய்வதால், கடைசி அத்தியாயத்தில் வெறும் இரண்டு பக்கங்கள்தான்.
சரி, பாத்திரப் படைப்பு?

கதையில் ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரங்​களுக்கும் அதனதன் ராசிப்படிதான் நல்லதும் கெட்டதும் நடக்கின்றன. அந்த ஊரில், மர்மமான முறையில் ஏற்படும் மரணங்களைப் பற்றியும் காணாமல்போகும் நபர்களைப் பற்றியும், இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றியும் ஆராய்வதாக நகரும் இந்த மர்மக் கதையில் ஆவிகளுக்கும் மாந்திரீகத்துக்கும் பஞ்சமே இல்லை.

இதுதவிர, இந்தக் கதையை இங்கிலாந்து நாட்டவர் கொண்டாட இன்னொரு காரணமும் உண்டு. இதை எழுதிய எலேனார் கேட்டன் என்ற நியூஸி​லாந்து நாட்டுப் பெண்ணுக்கு 28 வயதுதான் ஆகிறது. இந்தப் பெண்ணுக்கு இதுதான் இரண்டாவது நாவல். ஒரு பெண்ணுக்கு இந்தப் பரிசு கிடைத்தது மட்டும் பெரிய விஷயம் அல்ல. இந்த ஆண்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 13 நாவல்களில், ஏழு நாவல்கள் பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. அடுத்ததாக, இந்தப் பரிசின் தன்மையே அடுத்த ஆண்டிலிருந்து மாறப்போகிறது. இந்த புக்கர் பரிசு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, அதாவது 1969-ம் ஆண்டில் இருந்து, இங்கிலாந்து மற்றும் அதன் காலனி ஆதிக்கத்தில் இருந்த நாட்டவர்கள் (காமன்வெல்த் நாடுகள்) எழுதும் நாவல்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. ஆனால், அடுத்த ஆண்டில் இருந்து உலகத்தின் எந்த நாட்டில் எழுதப்படும் ஆங்கில நாவலுக்கும் இந்தப் பரிசு வழங்கப்படப்போவதால்... புக்கர் பரிசை இதன் ஒரிஜினல் சட்டதிட்டப்படி வென்ற கடைசி எழுத்தாளர் என்ற பெருமையும் எலேனார் கேட்டனுக்கு கிடைத்திருக்கிறது.

புக்கர் பரிசு அறிவிக்கப்​படுவதற்கு முன்பு வரை நியூசிலாந்து நாட்டில் இந்த நாவல் வெறும் 6,000 பிரதிகள்தான் விற்பனையாகி இருந்தது. புக்கர் பரிசால் இந்த நாவலின் விற்பனை எத்தனை மடங்கு உயரப்போகிறது என்பது போக போகத்தான் தெரியும்.

- பி.ஆரோக்கியவேல்

Sunday, October 20, 2013

கார்ப்பரேட் விவசாயம் - ஜேக் ஹின்மேன் (Jack Heinemann).

''மரபணு மாற்று விதைகள்தான், எதிர்கால மனித இனத்துக்கு முழுமையாகச் சோறிடும். அதை விட்டால், நமக்கு வேறு வழியே இல்லை. அதை எதிர்ப்பவர்கள், முட்டாள்கள்'' -இப்படி அமெரிக்காவின் ஊதுகுழலாக உளறிக் கொட்டியபடியே இருக்கிறார்... பாரம்பரியம் மிக்க பாரத கண்டத்தின் வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார். இதற்கு, எப்போதும் தன் ஆசிகளை அள்ளி வழங்கியபடியே இருக்கிறார்... அமெரிக்காவின் நட்டுவாங்கத்துக்கு ஏற்ப, நடனமாடிக் கொண்டிருக்கும் நம் பிரதமர் மன்மோகன் சிங். அமெரிக்க தயாரிப்பான மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக, கொஞ்சம்போல எதிர்ப்புக் காட்டிய காரணத்தால், சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அதிலிருந்து வேறு துறைக்கு விரட்டி அடிக்கப்பட்டதே இதற்கு சரியான சாட்சி!
 
இப்படி அமெரிக்காவின் அடிவருடிகளாக மாறி, இங்கிருக்கும் சில விஞ்ஞானிகளும்... பல அரசியல்வாதிகளும் அந்த அடாவடி மரபணு மாற்றுத் தொழில்நுடபத்துக்கு வால் பிடித்தபடியே இருக்கும் சூழலில்... அத்தனை பேருக்கும் 'சம்மட்டி அடி' கொடுப்பதுபோல.. தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு, இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் தன்னம்பிக்கை வெள்ளத்தைப் பாய்ச்சியிருக்கிறார்... நியூசிலாந்து நாட்டின் பேராசிரியர் ஜேக் ஹின்மேன் (Jack Heinemann).
 
''உலக உணவுத் தேவையை உள்ளூர் விதைகளில் உருவான தானியங்கள் மட்டும்தான் எப்போதும் தீர்த்து வைக்க முடியும். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளை மட்டுமே நம்பி நடைபெறும் கார்ப்பரேட் கம்பெனி விவசாயம், மனிதர்களின் உடல் நலனுக்கு கெடுதலைத்தான் செய்து கொண்டிருக்கிறது. மரபணு மாற்று விதைகளின் பிதாமகன்களான அமெரிக்க கம்பெனி விவசாய முறையில், ஆண்டுக்காண்டு ரசாயன உரத்துக்கான செலவு கூடுகிறது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளின் பயன்பாடும் அதிகரித்து, ஒட்டுமொத்தத்தில் செலவு அதிகரிப்பதுடன், உணவுப் பொருட்களில் விஷத்தன்மையும் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், விளைச்சல் திறன் மட்டும் ஒரே இடத்தில் உட்கார்ந்து விட்டது. மாறாக, ஐரோப்பாவில், பாரம்பரிய விதைகளைக் கொண்டு, இயற்கை முறையில் செய்து வரும் விவசாயத்தில், செலவு குறைந்து, விளைச்சல் பெருகி வருகிறது'' என்று நியூசிலாந்து நாட்டில், கேன்டர்பரி (Canterbury) பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம்  நடைபெற்ற ஆய்வரங்க மாநாட்டில்,  தன்னுடைய ஆய்வு முடிவுகளை எடுத்து வைத்திருக்கிறார் ஜேக் ஹின்மேன்.

ஜேக், தன்னுடைய ஆய்வில் கண்டறிந்த விஷயங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறது.... 'நிலைத்த, நீடித்த வேளாண்மைக்கான அகில உலக இதழ்' (International Journal of Agricultural Sustainability).
 
'புதிய உயிரியல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பின் மூலாதாரத்தை அழித்துவிடும் என்பதுதான் உண்மை. உதாரணமாக... 1949-ம் ஆண்டு, சீனாவில் 10 ஆயிரம் கோதுமை ரகங்கள் இருந்தன. 1970-ம் ஆண்டு 1,000 ரகங்கள் மட்டுமே மிஞ்சின. கடந்த நூற்றாண்டில் இருந்த முட்டைகோஸ் ரகங்களில் 95%; மக்காச்சோளத்தில் 91%; துவரையில் 94%; தக்காளியில் 81% ரகங்கள் அழிந்து விட்டன. இதெல்லாம், புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட பரிதாப நிலை.

விதை, விவசாயிகளின் சொத்து. ஆனால், மரபணுமாற்றுத் தொழில்நுட்ப விதைகள் வந்த பிறகு, விதைகள் தனியுடமை ஆகிவிட்டன. இது விவசாயிகளை விதைச் சேமிப்பிலிருந்து விரட்டியடித்து விட்டது. உலக உணவு உற்பத்திக் கொள்கை, பசியைப் போக்குவதாக இருக்க வேண்டும். ஆனால், அது தற்போது லாப நோக்கம் கொண்ட கொள்கையாக மாறி, அதில் வணிக வெறி புகுந்து விட்டது. இதனால், தனிப்பயிர் (Monoculture) விவசாயம் என்பதே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. அதாவது, ஒரேமாதிரியான பயிரையே பெரும்பாலான விவசாயிகளும் விளைவிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். ஆனால், ஏழை, பணக்காரன் என்று இல்லாமல், எல்லா தரப்பினரையும், எல்லா நாட்டினரையும் பல் பயிர் கலப்பு விவசாயம்தான் (Bio-diversity) காப்பாற்றும். பாரம்பரிய இயற்கை விவசாயம்தான் நிலைத்து நின்று நீடித்த விளைச்சலைக் கொடுக்கும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்' என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல தன் ஆய்வு மூலம் புரிய வைத்திருக்கிறார் ஜேக்.

ஜேக் மற்றும் அவருடைய குழுவின் ஆய்வறிக்கை, செப்டம்பர் 2013-ல் நடைபெற்ற ஐ.நா. வணிக மேம்பாட்டு கருத்தரங்கில் (United Nation Conference on Trade and development) முன் வைக்கப்பட்டு கவலையோடு விவாதிக்கப்பட்டுள்ளது.

பிறக்கப்போகும் குழந்தையின் கண்கள், முடி இவற்றையெல்லாம்கூட விரும்பிய நிறத்திலும், வடிவத்திலும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலமாக மாற்றியமைத்துக் கொள்ளும் அளவுக்கு 'அழிவியல் போதை'யில் வெறி கொண்டு அலையும் அமெரிக்காவுக்கு... இதெல்லாம் உறைக்குமா என்ன?

கம்பெனிகளின் இயந்திர விவசாயம், விவசாயிகளை அழிக்கிறது என்பதற்காக ஆதாரம் தேடி அலைய வேண்டியது இல்லை... இந்தியாவே சாட்சி. 1970-களில் பெரிதாகப் பேசப்பட்ட 'பசுமைப் புரட்சி' தோற்றுப்போய், விவசாயிகளைக் கடனில் தள்ளியது. தற்கொலைக்கு விரட்டுகிறது. அழிவிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல், ஆட்சியாளர்கள் இன்று இரண்டாம் பசுமைப் புரட்சியை (GMO) கையில் எடுத்துள்ளனர். பசுமைப் புரட்சியின் முதல் களமான பஞ்சாப், புற்றுநோய்களின் பிறப்பிடமாகி விட்டது இன்று. ஐந்து நதிகள் பாய்ந்த பஞ்சாப்பில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. நிலம், நீர் அனைத்தும் நஞ்சாகி விட்டது. மண் மலடாகி விட்டது. இதுதான் அந்த மாநிலத்துக்கு பசுமைப் புரட்சி கொடுத்த பரிசு.

 
ஆட்சியாளர்களே... அதிகார வர்க்கங்களே... அமெரிக்கா என்பது பெரு வியாபாரிகள் நிறைந்த நாடு. அவர்கள் ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள், உணவுகள் என்று தங்களின் கண்டுபிடிப்புகளையும், உற்பத்தியையும் உலகம் பூராவும் கூவிக் கூவி விற்கத்தான் பார்ப்பார்கள். வியாபாரி, அதைத்தானே செய்ய முடியும். அதற்காக, உலக நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பதுபோலவும்... அந்தந்த நாடுகளின் விவசாயத்தின் மீது ஆர்வம் இருப்பது போலவும்... நடிக்கத்தான் செய்வார்கள். இதுவும் ஒரு வகை விளம்பர யுக்தியே! விளம்பரத்தைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், ஆராய்ந்து பார்க்காமல், அந்த விளம்பரம் முழுக்க முழுக்க உண்மை என்று நம்பி, அதன் பிடியில் வீழ்வதுதான் ஆபத்து. இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.... நம் ஆட்சியாளர்கள். ஓட்டுப்போட்டு உட்கார வைத்த ஒரே காரணத்துக்காக... நாட்டின் விவசாயத்தையும், மக்களையும் அமெரிக்க நிறுவனங்களிடம் அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உணவு என்பது தொழிலாக மாற்றப்பட்டு, கார்ப்பரேட் உணவுத் தொழிற்சாலைகள் பெருகிவிட்ட நிலையில், இதன் எதிர்விளைவாக, எதிர்காலத்தில் உணவுத் தேவைக்காக... நாம் ஒவ்வொருவரும் கம்பெனிகளின் காலடியில் விழுவது ஒன்றுதான் வழி என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நிலைமை இப்படியே நீடித்தால்... இந்த உலகத்தை அந்த ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது!

தூரன் நம்பி 

 

Friday, October 18, 2013

ஜ்வாலா கட்டா - 13 முறை நேஷனல் சாம்பியன் - பேட்மிண்டன்காமன்வெல்த் கேம்ஸில் தங்கம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் பிரிவில் இரண்டு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர், 13 முறை நேஷனல் சாம்பியன் என பல சாதனைகளுக்கு உரியவர், ஜ்வாலா கட்டா. ஆனால், சாதனைகளுக்காகப் பேசப்பட்டதை விடவும் சர்ச்சைகளால்தான் அதிகம் செய்திகளில் இடம்பெறுகிறார். இப்போது, வாழ்நாள் தடை தொடர்பான ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். 

சமீபத்தில் நடந்த இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டியில் (ஐ.பி.எல்.), தில்லி அணி சார்பாக விளையாடினார் ஜ்வாலா. ஒரு ஆட்டத்தில், பெங்களூரு பீட்ஸ் அணி வீரர் ஹூயுன் காயம் அடைந்ததால், அவருக்குப் பதிலாக டென்மார்க் வீரர் ஜான் ஜோர்ஜென்சென் கடைசி நேரத்தில் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லி ஸ்மாஷர்ஸ் அணியின் கேப்டனான ஜ்வாலா, அந்த ஆட்டத்தைப் புறக்கணிக்கும்படி தம் அணி வீரர்களை வற்புறுத்தினார். பிறகு, சுமூகம் ஆகி (பெங்களூரு அணி, டென்மார்க் வீரரை ஆட்டத்திலிருந்து நீக்கியது.) 30 நிமிடங்கள் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. ஐ.பி.எல். முடிந்தவுடன், இதுபற்றி இந்திய பேட்மிண்டன் சங்கம் விசாரணை நடத்தியது. ஜ்வாலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  புறக்கணிப்பு செய்வது என்கிற முடிவை தில்லி அணியின் நிர்வாகம்தான் எடுத்தது. இதில் என் தனிப்பட்ட முடிவு எதுவுமில்லை" என்று பதிலளித்திருந்தார் ஜ்வாலா. இதைத் தொடர்ந்து, ஜ்வாலாவுக்கு ஆயுள் காலத் தடை விதிக்க வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு சிபாரிசு செய்திருக்கிறது. அதை அமல்படுத்த இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் அமைத்துள்ள மூன்று பேர் கொண்ட கமிட்டி முடிவு செய்ய இருக்கிறது. அதுவரை ஜ்வாலா சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. ஜ்வாலாவுக்கும் பேட்மிண்டன் சங்கத்துக்குமிடையே நடப்பது இது முதல் சர்ச்சையல்ல. ஐ.பி.எல். போட்டி ஆரம்பிக்கும் முன்பே வழக்கம் போல ஜ்வாலாவுக்கும் போட்டி அமைப்பாளர்களுக்கு மிடையே பூசல் உருவானது. பெண்கள் இரட்டையர் ஆட்டங்களுக்கு அதிக ஆதரவு இல்லையென்று கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜ்வாலா மற்றும் அஸ்வினி ஆகிய இரட்டையர் வீரர்களின் மதிப்பு குறைந்தது. அடிப்படை ஏலத் தொகைரூ. 29 லட்சமாக இருந்த நிலையில், ஏலத்தில் ஜ்வாலாவுக்கு ரூ. 18 லட்சம்தான் கிடைத்தது. என்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று ஜ்வாலா கொதித்தெழுந்தார். இவருக்கும் பேட்மிண்டன் சங்கத்துமிடையே உள்ள விரிசலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் ஒருமுறை மாட்டிக் கொண்டார்.சில வருடங்களுக்கு முன்பு, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுடன் பலமாகக் கிசுகிசுக்கப்பட்டார் ஜ்வாலா. இவர் ஆடிய ஆட்டங்களுக்கு அசார் வருகை தந்ததால் காதல் செய்திகள் வலம் வந்தன. அதே சமயத்தில், தன் கணவரும் பேட்மிண்டன் வீரருமான சேதன் ஆனந்த்தை விவாகரத்து செய்திருந்தார் ஜ்வாலா. இதனால் அசார் - ஜ்வாலா கிசுகிசு உண்மையே என்று பலரும் நம்பினார்கள். ஆனால், இதற்கும் பேட்மிண்டன் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தினார் ஜ்வாலா. அசார், இந்திய பேட்மிண்டன் அமைப்பின் தலைவராக முடிவு செய்தார். இதை ஏற்றுக்கொள்ளாத பேட்மிண்டன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர், எங்களிருவரைப் பற்றியும் கதைகட்ட ஆரம்பித்தார்கள். எனக்காகத்தான் அவர் அமைப்புக்குள் நுழைகிறார் என்றார்கள். அசாருக்கு என் தந்தை வயது. புரளியைக் கிளப்பியவர்கள் யாராவது ஓர் இளம் நடிகருடன் என்னை இணைத்துப் பேசியிருக்கலாம். இந்த சர்ச்சையால் என் கணவரும் மிகவும் வேதனைப்பட்டார். அவரை நான் விவாகரத்து செய்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தியது" என்றார். 

சக பேட்மிண்டன் வீராங்கனை பிரஜ்க்தா, பிரபல பயிற்சியாளர் கோபிசந்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தபோது அவருக்கு ஆதரவாகக் கிளம்பிய ஒரே வீராங்கனை, ஜ்வாலாதான். அதனால், இப்போதைய ஆயுள்காலத் தடைப் பிரச்னையில், ஜ்வாலாவுக்கு உதவ மறுத்துவிட்டார் கோபிசந்த். நான் போதை மருந்து உட்கொள்ளவில்லை. மேட்ச் ஃபிக்ஸிங் செய்யவில்லை. யாரையும் கொலை செய்யவில்லை. எனக்கு பேட்மிண்டன் மட்டுமே விளையாடத் தெரியும். எனக்கு அரசியல் செய்யத் தெரியாது. என்னை ஏன் பேட்மிண்டன் சங்கத்தில் எதிரி போல நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. சரியான நபர்கள் சங்கத்தில் இருந்திருந்தால் என் விமரிசனங்களைப் பெரிதுபடுத்தியிருக்க மாட்டார்கள். சர்வதேச அளவில் பல சாதனைகளைச் செய்திருக்கிறேன். அதை விட்டுவிட்டு என் பேச்சுகளை ஏன் எதிர்மறையாக எண்ணுகிறார்கள்? நீதிமன்றம்வரை சென்று விளையாட அனுமதி கேட்கும் அளவுக்கு என்னைத் தள்ளி விட்டார்கள். ஆனால், என்னைப் பற்றிய சர்ச்சையால் இப்போது எல்லோரும் பேட்மிண்டன் சங்கத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்" என்கிற ஜ்வாலா, தன் மீதான ஆயுள்காலத் தடையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் விசாரணை முடியும் வரை, ஜ்வாலா கட்டாவை சர்வதேசப் போட்டிகளில் விளையாட உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், பேட்மிண்டன் சங்கத்தின் முடிவால், சீனா ஓபன் உள்பட பல சர்வதேசப் போட்டியில் ஜ்வாலா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஜ்வாலா செய்தது தவறாக இருந்தாலும் அதற்கு அபராதத் தொகை விதிப்பது மட்டுமே சரியான தண்டனையாக இருக்க முடியும். வாழ்நாள் தடை என்பதெல்லாம் பழைய பகையை மனத்தில் வைத்துக் கொண்டு எடுக்கப்படும் முடிவாகவே இருக்கிறது. வீரர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களுடைய குறைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதற்காகவும் தான் விளையாட்டு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். சங்கங்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனால், கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ், தடகளம் என எந்த விளையாட்டுகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், நிர்வாகிகள்தான் விளையாட்டுத் துறையின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ளதுபோல விளையாட்டு நிர்வாகிகள் - வீரர்களின் திறமை, பங்களிப்பு ஆகியவற்றில் அக்கறை செலுத்தினால் மட்டுமே இதுபோன்ற தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்க்க முடியும்.

காமன்வெல்த்! - என்ன செய்யும் காங்கிரஸ்

 
ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, தெலங்கானா என்று பல தலைவலிகளில் சிக்கித் தவித்து பரிதவித்துக் கொண்டு இருக்கும் காங்கிரசுக்கும் மேலும் ஒரு சிக்கலாய் வந்துசேர்ந்து இருக்கிறது காமன்வெல்த் மாநாடு. நவம்பர் 14ஆம் தேதி கொழும்புவில் தொடங்கவிருக்கும் இம்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று உண்ணா விரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தில் அன்றாட நிகழ்வாகிவிட்ட நிலையில் அடுத்த சில நாள்களில் இன்னமும் பலமான குரல்கள் காங்கிரஸைத் தாக்க இருக்கின்றன. என்ன செய்யும் காங்கிரஸ்?
 
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஒருகாலத்தில் அடிமையாக இருந்த நாடுகள் ஒன்றுகூடி தங்கள் பொது நன்மைக்காக அமைத்துக் கொண்டதுதான் காமன்வெல்த் அமைப்பு. பல்வேறு நாடுகளில் நிலவும் பிரச்னைகள், பொருளாதார நெருக்கடிகள், நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் போன்ற பல அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் ஒரு தளமாக இருப்பதுதான் காமன்வெல்த் அமைப்பு.மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோதச் செயல்கள் ஆகியவற்றைக் கண்டித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தாத உறுப்பு நாடுகளை, அமைப்பைவிட்டே நீக்கவும் செய்யும் இந்த அமைப்பு. தற்சமயம் இந்த அமைப்பில் 54 நாடுகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சிறிய, மிகச்சிறிய நாடுகள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அமைப்பு கூடுகிறது. இதுவரை 21 முறை கூடியிருக்கிறது. இதில் ஒரே முறைதான் இந்தியாவில் கூடியிருக்கிறது.இலங்கையில் முதன்முறையாக காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கொழும்புவில் அமர்க்களமாக நடந்து வருகின்றன. எந்த நாட்டில் நடக்கிறதோ அந்த நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருப்பார். இங்கேதான் பிரச்னை தலைதூக்குகிறது.
 
போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களுக்காக ஐ.நா.வின் மனித உரிமை ஆணைய விசாரணையைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது இலங்கை. காமன்வெல்த் அமைப்புக்கு ராஜபட்சே தலைவராக வந்துவிட்டால், அவருக்கு இயல்பாகவே ஒரு பாதுகாப்புக் கவசம் (இம்யூனிட்டி) கிடைத்துவிடும். காமன்வெல்த் அமைப்பில் இருக்கும் நாடுகள் ராஜபட்சேவை இக்கட்டில் இருந்து காப்பாற்றவே முயலும். அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு இந்தியாவும் தள்ளப்படக் கூடாது. மாநாட்டில் இந்தியா பங்கேற்காமல் இருந்தால் போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சே அரசுக்கு ஒரு எச்சரிக்கை விடுவது போல இருக்கும். முள்ளிவாய்க்கால் இன அழிப்பை கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்ததாக இந்தியா மீது ஏற்கெனவே பழி இருக்கிறது. மேலும் மேலும் ஈழத்தமிழர்களுக்கு விரோதமான செயல்களில் மத்திய அரசு இறங்கக்கூடாது. உண்மையில் பார்க்கப் போனால், இந்த மாநாட்டை நடத்தும் தகுதி இலங்கைக்குக் கிடையாது. எங்கு மனித உரிமை மீறல்களும் சர்வாதிகாரப் போக்கும் தலைதூக்குகிறதோ அங்கு மாநாடு நடத்தக் கூடாது என்று காமன்வெல்த் அமைப்பின் விதிகளே சொல்லுகின்றன. இனவெறி குற்றத்துக்காக தென்னாப்பிரிக்காவை இந்த அமைப்பில் இருந்து முன்பு நீக்கி வைத்திருந்தார்கள். குற்றவாளிக்கூண்டில் நிற்கும் ராஜபட்சேவை காமன்வெல்த் நாடுகளின் தலைவராக்கும் கொடுமைக்கு இந்தியாவும் ஒரு சாட்சியாக இருக்கக்கூடாது. ‘சிங்கள அரசின் அராஜக இன அழிப்பைக் கண்டிக்கும் விதமாக மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை’என்று கனடா பிரதமர் அறிவித்திருக்கிறார். கனடாவுக்கு இருக்கும் அக்கறை கூட இந்தியாவுக்கு இல்லாவிட்டால் தமிழர்களின் உணர்வை மத்திய அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதுதானே பொருள்? வரும் மார்ச் மாதத்துக்குள் போர்க்குற்றங்களுக்காக ஐ.நா. மனித உரிமை அமைப்பில் ராஜபட்சே பதில் சொல்ல வேண்டும். அதிலிருந்து அவரை தப்புவிக்கும் விதமான எந்த நடவடிக்கைக்கும் இந்தியா உதவியாக இருந்து விடக் கூடாது. அந்த அடிப்படையில், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
 
இந்தியா பங்கேற்காவிட்டாலும் மாநாடு நடக்கத்தான் போகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் தான் இவ்வாறு குரல் கொடுக்கிறார்களே தவிர, இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள், இந்தியா மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். இலைகள் வெறுமனே இருந்தால்கூட காற்று அவற்றை சும்மா இருக்கவிடாது என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் தேவையில்லாமல் இந்தப் பிரச்னையில் சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள்.பிரதமர் மட்டும் மாநாட்டைத் தவிர்க்கும் வாய்ப்பு இருக்கிறது. 
 
இங்கே எல்லாமே அரசியல்தான்.

Thursday, October 17, 2013

தெலங்கானா - அலறும் ஆந்திரா

'சமைக்கியாந்திரா... ஜெய் சமைக்கியாந்திரா’ என்ற கோஷங்களால் அதிர்ந்து கிடக்கிறது தெலுங்கு தேசம். எல்லாவற்றிலும் காரம் கூடுதலாகச் சேர்க்கும் ஆந்திர வாசிகள் போராட்டத்திலும் அந்தக் காரம் இன்னும் தூக்கல்! ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது’ என்று தெருவில் இறங்கியுள்ள மக்களின் போராட்டங்களால், காவல் துறையின் கண்ணீர்புகைக் குண்டுகளால், தடியடி, கல்வீச்சு, தீ வைப்புச் சம்பவங்களால் பெரும் ரணகளமாக மாறி இருக்கிறது ஆந்திரா. 'தெலங்கானா’ என தனி மாநிலம் அமைக்க வேண்டும்’ என்று இன்னொரு பகுதியினர் போராடியபோதும் இப்படித்தான் இருந்தது. 'வேண்டும்’, 'வேண்டாம்’ என்று ஆந்திரா மாநிலமே இரண்டுபட்டுக் கிடக்கிறது.1969-ம் ஆண்டில்தான் தெலங்கானா கோரிக்கை எழுந்தது. அந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் மட்டும் மாணவர்கள், இளைஞர்கள் என சுமார் 370 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.2006-ம் ஆண்டு உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தெலங்கானா போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கியதும் ஆந்திரா அலறத் தொடங்கியது. போராட்டத்தின் தீவிரம் உணர்ந்த மத்திய அரசு, தனித் தெலங்கானாவை அமைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது. இப்போது ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று தெலங்கானா தவிர்த்த மற்ற பகுதி மக்கள் போராடுகின்றனர். 'ஹைதராபாத் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடுமோ?’ என்ற பதற்றம் பரவிக்கிடக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு பறிபோய்விடும் என்ற பதற்றத்தில் மாணவர்களும், தங்களின் தொழில் முதலீடுகளுக்கு பங்கம் வந்து விடுமோ என்ற கவலையில் முதலாளிகளும் கொந்தளிக்கிறார்கள்.

எரியும் நெருப்பில் பெட்ரோல் குண்டு போட்ட கதையாக 'தெலங்கானா அமைந்ததும் ஆந்திராவில் இருந்து வந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள், தெலங்கானாவை விட்டு காலி செய்துவிட வேண்டும்!’ என்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் அறிக்கை ஒன்றை வெளியிட, அரசு ஊழியர்களும் பொங்கிவிட்டார்கள். அவர்களுக்கு ஆதரவாக மின்வாரிய ஊழியர்கள், 'பவர்கட்’ போராட்டத்தில் ஈடுபட ஐந்து நாட்களாக இருளில் மூழ்கிக்கிடந்தது ஆந்திரா. மருத்துவமனைகள், மின்சார ரயில்... என எதுவும் இயங்கவில்லை.விஜயன்நகரம்தான் ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தது. அந்தப் பகுதி முழுவதும், சுமார் ஐந்து நாட்கள் 144 தடை உத்தரவின் கீழ் இருந்தது. அந்தப் பகுதியில் உள்ள ஆந்திர காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவரும், விஜயன்நகர எம்.எல்.ஏ-வுமான 'போட்சா சத்திய நாராயணா’வின் வீடு மற்றும் கல்லூரிகள் தாக்கப்பட்டன. ஒரு வங்கியும், சீக்கியர்களின் குருத்துவாராவும் எரிக்கப்பட்டன. இறுதியில் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, தற்போது நிலைமை ஓரளவுக்குச் சீரடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், போராட்டங்கள் ஓயவில்லை.
தெலங்கானா முன்கதைச் சுருக்கம்

இந்தியாவை வெள்ளையர்கள் நேரடியாக ஆட்சி செய்ததுபோல், ஹைதராபாத்தை ஆட்சி செய்யவில்லை. ஹைதராபாத் சமஸ்தானம், நிஜாம் மன்னர்களின் நேரடி நிர்வாகத்தில்தான் இருந்தது. நிஜாம் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹைதராபாத்தும் அதையட்டிய ரங்கா ரெட்டி, வாரங்கால், மகபூப் நகர், கம்மம், அதிலாபாத், கரீம் நகர், நல்கொட்டா, மெதக் பகுதிகள்தான் தெலங்கானா. இந்தப் பகுதிகளைத் தவிர்த்து, தெலுங்கு பேசும் மக்கள் உள்ள மற்ற பகுதிதான் ஆந்திரா. இது, வெள்ளையர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால், ஆந்திர மக்கள் கல்வி, தொழில், கட்டமைப்பு, மொழி, பண்பாடு போன்றவற்றில் முன்னேற்றம் கண்டனர். ஆனால், 500 ஆண்டுகளாக நிஜாம்களின் கட்டுப்பாட்டில் அடக்குமுறை ஆட்சியில் இருந்த தெலங்கானா மக்களுக்கு, அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

இதனால், நிஜாம் மன்னர்களுக்கு எதிராக தெலுங்கானா மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாக, நிஜாம் மன்னரும் அவருடைய ராசாக்கர் படைகளும் கதிகலங்கிப்போனார்கள். அந்த நேரத்தில், சமஸ்தானங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நேருவும் வல்லபாய் படேலும், படைகளை அனுப்பி ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டனர். அப்படி இணைக்கப்பட்ட மாநிலம்தான் 'ஹைதராபாத்’. 1956-ம் ஆண்டு வரை ஹைதராபாத்தை தலைநகராகக்கொண்டு தெலங்கானா தனி மாநிலமாகவும், கர்னூலைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரா தனி மாநிலமாகவும்தான் இருந்தன. 'தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து 'ஆந்திரா’ என்ற ஒரே மாநிலமாக உருவாக்க வேண்டும்’ என்ற கோரிக்கை தெலுங்கு மக்களிடம் பரவலாக எழுந்தது. அதனுடன், சென்னையை இணைக்கக் கோரி பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டார். 'ஒரே மொழி பேசும் மக்களுக்கு இரண்டு மாநிலங்கள் தேவையற்றது’ என்று கூறி, தெலங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்பட்டு ஒரே மாநிலமாக ஆனது. 'ஒரே மொழி பேசும் ஒரே மாநில மக்கள்’ என்ற அடையாளத்துடன் ஆந்திர மக்கள் அறியப்பட்டாலும், உள்ளுக்குள் பிளவு இருந்துகொண்டேதான் இருந்தது.

முல்க்கி என்றால் என்ன?
முல்க்கி’ என்பது உருதுச் சொல். இந்தச் சொல்லுக்கான அர்த்தம், உள்ளூர்வாசி. தமிழகத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதுபோல், அங்கு உள்ளூர்வாசி (தெலங்கானாவாசி) வெளியூர்வாசி (ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்) என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுதான் முல்க்கி சட்டம். நிஜாம் மன்னர்கள் காலத்தில் பழக்கத்தில் இருந்த இந்தச் சட்டத்தின்படி, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் 'முல்க்கி’க்குத்தான் முதல் இடம். ஒருவர் முல்க்கி அந்தஸ்தைப் பெற, உள்ளூரில் (ஹைதராபாத்தில்) 15 வருடங்கள் வசித்திருக்க வேண்டும் என்று இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, முல்க்கி சட்டம் தெலங்கானாவில் இல்லை. ஆனால், தெலங்கானாவும் ஆந்திராவும் இணைந்து ஒரே மாநிலமாக உருவானபோது, தெலங்கானா மக்கள் 'முல்க்கி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று கேட்டனர். அதன்படி தெலங்கானாவுக்கு முல்க்கி சட்டம் கொண்டுவரப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகாரத்தில் தொடர்ந்து இருந்ததால், அவர்கள் 'முல்க்கி’க்கான காலக்கெடுவை குறைத்து ஏழு ஆண்டுகள் ஆக்கினர். தற்போது அதை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கும் முயற்சி நடக்கிறது. இதைப் பயன்படுத்தி, ஆந்திராவில் இருந்து ஹைதராபாத்தில் குடியேறுபவர்கள், ஏழு ஆண்டுகளில் முல்க்கி அந்தஸ்தை பெற்று, வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளைப் பறித்துக்கொள்கின்றனர் என்பது தெலங்கானா பகுதி மக்களின் குற்றச்சாட்டு. அதை நிரூபிப்பதுபோல், 45 ஆயிரம் முல்க்கிப் பணியிடங்களை ஆந்திர மாநிலத்தவர் ஆக்கிரமித்து இருந்தனர். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, மேல்முறையீடு வரை சென்று போராட வேண்டி இருந்தது. வழக்கில் வெற்றி கிடைத்தாலும், இந்த ஆக்கிரமிப்பு ஓயவில்லை.

கவனிக்கப்படாத ஜென்டில்மேன்

1956-ம் ஆண்டு ஒன்றுபட்ட ஆந்திரா உருவானபோது, ஆந்திர முதலமைச்சர் கோபால் ரெட்டியும், தெலங்கானா முதலமைச்சர் ராமகிருஷ்ண ராவும் உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டனர். இதை ஜென்டில்மேன் அக்ரிமென்ட் என்று கூறுகின்றனர். இதன்படி, தெலுங்கானாப் பகுதிகளின் முன்னேற்றங்களைக் கண்காணிக்க மண்டல நிலைக்குழு ஒன்றை ஏற்படுத்துவது. அந்த நிலைக் குழுவின் உறுப்பினர்களாக தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்க்கி சட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். மாநிலத்தின் மொத்த வரவு செலவுகளை மக்கள் தொகை அடிப்படையில் இரு பகுதிகளும் பிரித்துக்கொள்ளவேண்டும். ஒரு பகுதியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருந்தால், மற்றொரு பகுதியைச் சேர்ந்தவர் துணை முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 சாரங்கள் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டன. ஆனால் 1956-க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலைக்குழுவின் அதிகாரம் பறிக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

கதாநாயகன்  வில்லன்

தெலங்கானா குறித்தும் தெலங்கானா மக்கள் குறித்தும் ஆந்திர மக்களுக்கு எப்போதும் சில கருத்துகள் உள்ளன. சாதாரண பொதுஜனத்தில் இருந்து இந்தக் கருத்துருவாக்கம், அரசியல், சினிமா, அன்றாட வாழ்க்கை முறை வரை அனைத்திலும் நீடிக்கிறது.தெலங்கானாக்காரர்கள் பேசுவது தெலுங்கு மொழியே கிடையாது. தெலங்கானாக்காரர்கள் சோம்பேறிகள், குற்றவாளிகள், முட்டாள்கள் என்பது போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகள். தெலுங்குத் திரைப்படங்களை சற்று கவனித்தாலே இந்தச் சித்திரிப்புகள் தெளிவாக விளங்கும். தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக இருப்பவர் ஆந்திராவைச் சேர்ந்தவராகவும், வில்லன்கள் குற்றவாளிகள் தெலங்கானாப் பகுதி ஆட்களாகவும் காண்பிக்கப்படுவர்.Wednesday, October 16, 2013

அமரத்துவம் தந்த ஆதிசங்கரர் - மகாபெரியவா சொன்ன கதைகள்!

அகராதி, நிகண்டு என்றெல்லாம் சொல்லுகிறார்களல்லவா? ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு 'அமரகோசம்’ என்று பெயர். 'அமரம்’ என்று சுருக்கிச் சொல்வார்கள். அதைப் பற்றியும், அதை எழுதினவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். இதில் பல ரசமான விஷயங்கள் இருப்பதால்தான் சொல்கிறேன். இதில் நம் பகவத்பாதாளின் பெருமை, மதங்களில் ஒன்றுக் கொன்று இருக்கப்பட்ட உறவுகளின் போக்கு எல்லாம் வெளியாவதால் சொல்கிறேன்.

இந்த அகராதிக்குப் பேர் 'அமரகோசம்’ என்றேன். 'கோசம்’ என்றால், 'பொக்கிஷம்’ என்று அர்த்தம். சப்தக் கூட்டங்கள், சொற்களின் சமூகம் பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகத்துக்குக் 'கோசம்’ என்று பெயர் வந்தது. இம்மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் பல கோசங்கள் (அகராதிகள்) இருந்தாலும், ரொம்பவும் பிரசித்தமானது 'அமரகோசம்’தான்.

அமரசிம்மன் என்பவனால் செய்யப்பட்டதால், அதற்கு 'அமர கோசம்’ என்று பெயர்.

அமரசிம்மன் மகா புத்திமான். இந்த நிகண்டுவைப் பார்த்தால், அறிவில் அவனுக்கு ஈடு உண்டா என்று பிர மிப்பு உண்டாகும். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அர்த்தம் சொல்கிறான். அமரசிம்மன் ஹிந்து அல்ல; ஜைனன்.

இந்த அமரசிம்மன் ஒருமுறை ஆசார்யாளிடம் வாதப்போருக்கு வந்தபோது, ''நான் ஒரு திரைக்குப் பின்னாலிருந்துதான் உம் கேள்விகளுக்குப் பதில் சொல் வேன்'' என்றான்.

ஆசார்யாளும் இதில் உள்ள ரகசியத்தை ஆராய்ச்சி செய்து பார்க்காமல் ஒப்புக் கொண்டார்.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்கும் அமரசிம்மனுக்கும் வாதப் போர் ஆரம்பித்தது.
அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக்கொண்டு, அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆசார்யாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அத்தனைக்கும் அமரசிம்மன் பளிச் பளிச்சென்று பதில் சொன்னான்.

அவன் என்னதான் மகா புத்திமானாக இருந்தாலும்கூட, இத்தனை சாமர்த்தியமாக எப்படிப் பிரதிவசனம் கொடுக்கிறான் என்று ஆசார்யாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. க்ஷண காலம் யோசித்தார். உடனே பரமேசுவர அவதாரமும், ஸர்வக்ஞருமான அவருக்கு ரகசியம் புரிந்துவிட்டது.

அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னது அமர சிம்மனே இல்லை! ஸாக்ஷ£த் சரஸ்வதிதேவியே அவன் மாதிரி பேசியிருக்கிறாள் என்று தெரிந்தது. இவன் அவளை ரொம்ப நாளாக உபாஸித்திருக்கிறான். நியாயமாகப் பார்த்தால், இவன் அப்படிச் செய்திருக்கவேகூடாது. ஏனென்றால், இவனுடைய ஜைன மதம் ஒரு கடவுளைப் பற்றியே சொல்லவில்லை; அதைப் பல ரூபத்தில், ஸரஸ்வதி மாதிரி பல தெய்வ வடிவங்களில், ஆராதிப்பதை ஜைன தத்துவம் ஒப்புக்கொள்ளாது. அப்படியிருந்தும், இவன் ஜைன மதத்துக்கு ஆதரவாகப் புஸ்தகம் எழுதுவதற்கே ஸரஸ்வதியின் அநுக்கிரகம் வேண்டுமென்று கருதி, அவளை உபாஸனை பண்ணியிருக்கிறான். உள்ளன்று வைத்துப் புறமொன்றாக இருந்திருக்கிறான்.

இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வேங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக்கொள்கிறார்கள்; மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், 'வீட்டில் இப்படி அபிப்ராயம்; சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி(feeling)க்கு மதிப்பு (Respect) கொடுத்தேன்’ என்று ஜம்பமாகச் சொல்லிக் கொள்வார்கள்.

இந்த ரீதியில்தான், ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத் தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமர சிம்மன், அவை நன்றாக அமையவேண்டும் என்று ஹிந்து மதத்தின் வாக்குத் தேவதையையே உபாஸனை செய்தான். ஒருவன் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் - அது நல்லதாகத்தான் இருக்கட்டும், கெட்டதாகத்தான் இருக்கட்டும், அதிலே பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்குண்டான பலனை பகவான் தரத்தான் செய்கிறான். அப்படியே இவனுடைய உபாஸனையின் சிரத்தையை மதித்து இவனுக்கும் ஸரஸ்வதி அநுக்கிரகம் செய்துவிட்டாள்.

எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும்- அது நல்லதாக இருக்கட்டும், கெட்டதாக இருக்கட்டும்... அதில் ஒருவன் பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்கான பலனை பகவான் நிச்சயம் தருவார். அப்படியே, அமரசிம்மனுக்கும் ஸ்ரீசரஸ்வதியின் அருள் கிடைத்தது என்று பார்த்தோம். சரி, அதற்குப் பிறகு என்ன நடந்தது?

இதோ, மகாபெரியவாளே விவரிக்கிறார்...

''திரைக்கு இந்தப்புறம் ஸரஸ்வதி தேவியை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவிட்டு உட்கார்ந்திருக்கிறான் அமரசிம்மன். தான் எத்தனை புத்திசாலியானாலும், ஆசார்யாள் எதிரில் சூரியனுக்கு முன் பிடித்த மெழுகுவத்தி மாதிரி ஆகிவிடுவோம் என்பது இவனுக்குத் தெரியும். அதனால், முன்னமேயே வாக் தேவியைத் தஞ்சம் புகுந்திருந் தான். இவனுடைய உபாஸனைக்கு இன்னும் கொஞ்ச காலம் பலன் தந்துதான் ஆகவேண்டும் என்று அவளும் கட்டுப்பட்டிருந்தாள்.

எனவே, ''என்னை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவைத்துச் சுற்றிலும் திரை போட்டுக்கொண்டு, அதற்குள் நீ இரு. சங்கரர் வெளியிலிருந்து கேள்வி கேட்கட்டும். உனக்காக நானே பதில் சொல்கிறேன்'' என்று வாக்குத் தந்தாள் வாக் தேவி.

அந்தப்படிதான் இப்போது நடந்தது. அதை ஆசார்யாளும், துளி மனஸைச் செலுத்தியவுடனே கண்டுபிடித்துவிட்டார்.

உடனே அவர், ''அம்மா! உன் காரியம்தானா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆரா திக்கிற பழக்கத்தையே தொலைத்துவிடவேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே நீ இப்படி அநுக்கிரகம் செய்யலாமா? அவனுடைய உபாஸனா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், அவன் இத்தனை புஸ்தகங்கள் எழுதியுமா அது தீரவில்லை? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப்பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகம் செய்துவிட்டாயே! அவனுக்குச் செய்யவேண்டியதற்கு அதிகமாகச் செய்வது நியாயமா?'' என்று ஸரஸ்வதியைக் கேட்டார்.

அவருடைய கணக்கு சரியாகத்தான் இருந்தது. அமரசிம்மனுடைய உபாஸனைக்குப் பிரதிபலன் தந்து தீர்த்தாயிற்று என்று ஸரஸ்வதி தெரிந்துகொண்டாள். உடனே, கடத்திலிருந்து அந்தர்த்யானமாகி விட்டாள். திரை அறுந்து விழுந்தது. அப்புறம், அமரசிம்மனால் ஆசார்யாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆசார்யாளிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டான்.

அதற்கப்புறம், அவனுக்கு தான் எழுதிய புஸ்தகங்கள் எல்லாம் ஏன் இனிமேலும் லோகத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அத்வைத பரமாக ஆசார்யாள் எவ்வளவு எழுதியிருந்தாரோ, அவ்வளவு இவனும் ஜைன சம்பந்தமாக எழுதியிருந்தான். இப்போது தன் சித்தாந்தம் தோற்றுப் போனதாக ஒப்புக்கொண்டபின், இந்தப் புஸ்தகங்களை மற்றவர்களுக்காக விட்டுவைப்பது சரியாகாது என்று நினைத்தான்.

எதற்குச் சொல்லவந்தேன் என்றால், அடிப் படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். இப்போது அமர சிம்மனுக்குத் தப்பென நிரூபணமாகிவிட்ட தன் சித்தாந்தங்கள் லோகத்தில் இருக்கவேண்டி யதில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. எனவே, பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான்.

இதை ஆசார்யாள் கேள்விப்பட்டார். ஆனால் துளிக்கூடச் சந்தோஷப்பட வில்லை. மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார்.

'அடடா, என்ன காரியம் செய்துகொண்டு இருக்கிறாய்? லோகம் என்று இருந்தால், நானா தினுசான அபிப்பிராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்பிராயங்கள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்து சர்ச்சை பண்ணுவதுதான், பல நிலைகளில் இருக்கிற ஜனங்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும். நீ எந்த மதஸ்தனாகத்தான் இருந்து விட்டுப் போ..! ஆனாலும், நீ மகாபுத்திமான்! நான் உன்னைக் கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை, புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்துச் சொல்லமுடியுமோ அத்தனை நன்றாகச் செய்து புஸ்தகங்கள் எழுதியிருக்கிறாய். உண்மையில் பரமதத்வம், இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; உன் புத்தியளவில் நீ இந்தச் சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிறாயோ, அதிலேயே ஒரு அழகு, புத்தியின் பிரகாசம் இருக்கிறது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா?'' என்று ஆசார்யாள் அவனிடம் சொல்லி, அவன் கையைப் பிடித்து, அவன் கடைசி கடைசியாக அக்னியில் போட இருந்த புஸ்தகத்தைப் போட வொட்டாமல் தடுத்தார்.

அப்போது, அவன் கையில் இருந்துதான் 'அமரகோசம்’. ஆசார்யாள் தடுத்திருக்கா விட்டால் அதுவும் 'ஸ்வாஹா’வாகியிருக்கும்.  துரதிருஷ்டவசமாக, சமய சம்பந்தமான அவனுடைய புஸ்தகங்கள் எல்லாம் போயே போய்விட்டன. அகராதி, நிகண்டு மட்டுமே நம் ஆசார்யாளின் கருணையால் பிழைத்தது. 'அமரம்’ என்ற பெயருக்கேற்றபடி அதை மட்டும் அவர் அழியாமல் அமரமாக்கிவிட்டார்.
மகா பெரியவா சொன்ன கதைகள்!

சிலர் இருக்கிறார்கள்; தாங்கள் நினைப்பதுதான் சரியாக இருக்கும் என்று அவர்களாகவே கணக்குப் போட்டு, அதிலிருந்து துளியும் நழுவாது செயல்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும்; மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

எனக்குத் தெரிந்த ஒருத்தர் அடிக்கடி வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே இருப்பார். பேசிக்கொண்டிருக்கும்போதே இடம், பொருள், ஏவல் பார்க்காமல் 'புளிச்'சென்று பக்கத்திலேயே துப்பிவிடுவார். குறிப்பாக, ரயில் நிலைய கட்டடத் தூண்கள் பக்கம் நடந்துபோனால், அவருக்குள் அந்த நேரத்தில் என்னமோ பண்ணும்போல; ஏற்கெனவே போதை வஸ்துக்களை வாயிலே மணிக்கணக்கில் போட்டுக் குதப்பி புளிச்சென்று துப்பி, அங்கே சிவப்பு பெயிண்ட் போன்று கறையைப் பலர் படியவிட்ட இடத்தில்... இவரும் வாயிலே போட்டு மென்ற வெற்றிலையைப் 'புளிச்'சென்று துப்புவார். அவரது இப்படியான செயலை எத்தனையோ முறை நான் சுட்டிக்காட்டித் தடுக்க முயன்று, அதிலே தோற்றுப்போனதுதான் மிச்சம்!

ஒருநாள், அவருக்கு வெற்றிலை மடித்துத் தரும் துரதிருஷ்டம் எனக்கு வாய்த்துவிட்டது. அப்போதுதான் அந்த 'ஐடியா’ என் மூளைக்குள் பளிச்சிட, வெற்றிலையை மடித்து, அதற்குள் பாக்கு வைப்பதற்குப் பதிலாக குட்டியான இரு கருங்கற்களை வைத்துக் கொடுத்துவிட்டேன். அதை வாயிலே போட்டு நறுக்கென்று நண்பர் கடிக்க... படக்கென்று ஒரு சத்தம். பாக்குக்குப் பதிலாக நான் வைத்த கல், ஏற்கெனவே ஆட்டம் கண்டுகொண்டிருந்த அவரது சொத்தைப் பல்லைப் பதம் பார்த்துவிட, அக்கணமே அது கழன்று வந்துவிட்டது.

இந்தச் சம்பவத்தால் நண்பர் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க... ''நல்ல விஷயம்தானே நடந்திருக்கு! டாக்டர்கிட்ட போய் பல்லை பிடுங்கணும்னு பல நாளா என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க. இப்போ தானாவே பல் கழன்று வந்திடுச்சு. டாக்டர் செலவு மிச்சம்!'' என்று நான் சொல்லிச் சமாளிக்க, அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வெற்றிலையை வாயில் போட்டுக் குதப்பும் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார் நண்பர்.

இப்படித்தான், கடமை மறந்து கண்டபடி ஆட்சி செய்த ஒரு நாட்டின் மன்னனை கவிஞர் ஒருவர் மனம் திருந்த வைத்த வித்தியாசமான கதையை இங்கே அழகாகச் சொல்கிறார் மகா பெரியவா.


'ஷாஹஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, 'குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியா- குழந்தையாத்தான் இருந்தார்.

ஷாஹஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.

அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது 'குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார். மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே... மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே... அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை 'சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு 'அந்யாப தேசம்’ என்று பெயர். இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.

அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு 'மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!
'மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. 'பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு 'மஹிஷன்’ என்று பேரில்லை. 'மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து 'மஹீசன்’ 'மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.
குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் 'சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது 'ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.

அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்... அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு 'ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் 'உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் 'பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே 'தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.
அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.

''மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது... சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான- உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக் யத்தின் பலன்தான்!'' என்று ஒரு ஸ்லோகம்.

இன்னொன்றில், 'எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே! 'எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர் களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!'' என்கிறார்.

இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு - அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே... அதனால், மனஸிலே நன்றாகத் தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.

ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.

அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் 'ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் 'மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.

'ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், 'ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிற வனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.

ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.'
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

மகா பெரியவா சொன்ன கதைகள்! பாரதத்தில்... இருவர்!

எந்த ஒன்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பெரும்பாலும், அனைவருமே ஒரு பக்கத்தையே பார்ப்போம். மறுபக்கத்தைப் பார்க்கமாட்டோம். நமக்கு நன்றாகவே தெரிந்த துரோணர், குசேலர் என்னும் இருவரின் கதைகளையும் இங்கே தன் பாணியில் சொல்லி, அவற்றின் மறுபக்கத்தை அலசி ஆராய்ந்து அறிவுறுத்துகிறார் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள். 

துரோணரும், இளவரசனான துருபதனும் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது துருபதன் தன் நண்பனான துரோணரிடம், ''நான் அரசனானால் உனக்குப் பாதி ராஜ்ஜியம் தருவேன்'' எனச் சொல்லியிருந்தான். எங்கே... சொன்னபடி நடந்துகொண்டானா துருபதன்? அதுபற்றி காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகளே இங்கே மனம் திறக்கிறார். 

'பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், 'நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், 'இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணிவிடுகிறான்.

இதிலே, அவனுக்கு எதிரடி தர வேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார். இந்த மானபங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னி யிலிருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான்.

பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது, 'நம்மைப் பூர்வத்தில் ஜயித்துச் சிறைப் பிடித்தவனாச்சே இந்த அர்ஜுனன்?’ என்று த்ருபதன் நினைக்காமல், ஸந்தோஷமாகவே கன்யாதானம் பண்ணுகிறான். காரணம், முன்னே தன்னோடு சண்டை போட்டு அவன் ஜயித்தபோது அவன் காட்டிய வீரபௌருஷத்தில், இவனுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயமே உண்டாயிருந் தது. அதனால் இவன் அவனிடம் ஆத்திரப் படாமல், அவனைத் தூண்டிவிட்டுத் தம்முடைய க்ஷ£த்ரத்தைத் தீர்த்துக்கொண்ட த்ரோணரிடமே வன்மம் கொண்டான்.

கடைசியில் பாரத யுத்தத்தில், இதே அர்ஜுனன் ஆசார்யரான அந்த த்ரோணரோடேயே சண்டை போட வேண்டியதாகிறது. அவருடைய யுத்த ஸாமர்த்யத்துக்கு ஈடுகொடுப்பது ரொம்பக் கஷ்டமானபோது, பொறுப்பை பகவான் (க்ருஷ்ணர்) தன் தலையில் போட்டுக் கொண்டு, அவருக்கு ரொம்பவும் ப்ரியமான ஏக புத்ரன் அச்வத்தாமன் செத்துப் போய்விட்டான் என்று, ஸத்ய ஸந்தரான தர்மபுத்ரரைச் சொல்ல வைத்தது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

அச்வத்தாமன் என்ற யானையை நிஜமாகவே அப்போது ஹதம் பண்ணி, ''அச்வத்தாம: ஹத: குஞ்ஜர:'' என்று தர்மபுத்ரரைச் சொல்ல வைத்து, ''குஞ்ஜர'' (யானை) என்று அவர் முடிக்கிற ஸமயத்தில், பாஞ்ச ஜன்யத்தைப் பெரிசாக ஊதி, அந்த வார்த்தை த்ரோணர் காதில் விழாதபடி அமுக்கிவிட்டாரென்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனே, த்ரோணர் மனஸ் உடைந்து போய் அப்படியே ஆயுதங்களைப் போட்டு விட்டு உட்கார்ந்து விட்டார். அந்த ஸமயம் பார்த்து த்ருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து அவரைக் கொன்றுவிடுகிறான். அவன் பண்ணியதைப் பார்த்துப் பாண்டவ ஸைன்யத்தினர் உள்பட எல்லாரும் 'தகாத கார்யம் நடக்கிறதே’ என்று விக்கித்துப்போய் அருவருப்பு அடைந்ததாக பாரதம் சொல்கிறது.

இன்னொரு கதையோ இதற்கு நேர்மாறாக, மனஸுக்கு ரொம்பவும் ஹிதமாகப் போகிறது. க்ருஷ்ண பரமாத்மாவின் ஸஹபாடியான குசேலர், த்ரோணர் மாதிரியே தாரித்ரிய ஸ்திதியில் க்ருஷ்ணரிடம் போகிறார். பகவான் அவரை உதாஸீனப் படுத்தாதது மட்டுமில்லை; அவருக்குப் பரம பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய பர்யங்கத்திலேயே (கட்டிலிலேயே) அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மிணியைக் கொண்டு அவருக்குச் சாமரம்போட வைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார்.

தன் மாயாவித்தனத்தின்படியே அவரை தாரித்ரிய நிவ்ருத்தி பற்றி எதுவும் சொல்லவொட்டாமல் பண்ணி, ஊருக்குத் திரும்ப அனுப்பிவிடுகிறார். அங்கே அவர் போய்ச் சேர்வதற்குள் கனகவர்ஷமாகப் பெய்து, 'இது நம் அகந்தானா?’ என்று அவர் ஆச்சர்யப்படுமாறு செய்கிறார்.

இந்த வ்ருத்தாந்தம் இவ்வளவு நன்றாகப் போக, த்ரோணர் ஸமாசாரம் ஏன் அப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று த்வேஷமாகவும், அநீதியாகவும், அஸயத்மாகவும் மனஸை உறுத்துகிறாற் போல் போகிறது என்று யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது...

குசேலர் எத்தனை தாரித்ரியமாகட்டும், நஷ்டம் ஆகட்டும், ப்ராம்மண தர்மத்தை விடப்படாது என்று வாழ்ந்து, எளிமையுடனும் நல்ல அன்புள்ளத்துடனும் ஸாது ச்ரேஷ்டராக இருந்திருக்கிறார். அதுவே அவருக்கு இத்தனை மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

த்ரோணரும் மஹா பெரியவர்தான் என்றாலும், ப்ராம்மண தர்மப்படி தநுர்வேதம் சொல்லிக் கொடுப் பதோடு நிற்காமல், அதை மீறி இவரே கையிலே ஆயுதத்தை எடுத்து யுத்தம் செய்ததால்தான் எல்லாம் கோளாறாகப் போயிருந்திருக்கிறது.

த்ருபதனோடு இவரே சண்டையில் இறங்காமல் அர்ஜுனனைத்தான் தூண்டிவிட்டார் என்றாலும்கூட, தன்னை த்ருபதன் ஏதோ சொல்லிவிட்டானென்று ப்ராம்மணராகப்பட்ட அவர் இத்தனை மானாவமான மும் க்ஷ£த்ரமும் பாராட்டிப் பழிவாங்க நினைத்ததே ஸரியில்லைதான்.

ஆரம்பத்திலிருந்தே அவர் ஆயுத அப்யாஸத்தில் அளவுக்கு மீறி மனஸைச் செலுத்தி அப்பாவிடம் மாத்திரமல்லாமல், பரசுராமரிடம் அஸ்த்ர சி¬க்ஷ கற்றுக்கொண்டதிலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக ஸ்வதர்மத்துக்கு ஹானி ஏற்பட்டிருக்கிறது. இப்படிச் செய்தால் தனக்கும் கஷ்டம், பிறத்தியாருக்கும் கஷ்டம் என்கிற மாதிரியே பிற்பாடு அவர் கதை போயிருக் கிறது. நியாயமில்லாத துர்யோதனன் கட்சியில் அவர் யுத்தம் பண்ணும்படி ஏற்பட்டது. இது அவருக்கே எத்தனை வேதனையாயிருந்திருக்கும்?

யுத்த பூமியிலானால், அர்ஜுனன் போடுகிற அம்பை விடக் கூராகத் துளைக்கும் வார்த்தையம்புகளை பீமஸேனன் அவர்மேல் வீசி, அவர் பிராம்மண தர்மத்தை முறைப்படி நடத்தாதற்காக ரொம்பவும் நிந்தித்திருக்கிறான். வாயைத் திறக்காமல் அவர் அதையும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படியாக இருந்திருக்கிறது.

ப்ராம்மணன் ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால், மாளாத அகௌரவம்தான் என்ற இரண்டு உண்மைகளையே குசேலர், த்ரோணர் கதைகள் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன!'

மகாபெரியவா சொன்ன கதைகள் - கட்டுக்கதை

கண்கூடாக நேரில் பார்க்கும் சில விஷயங்களையே உண்மை என்று எளிதில் நம்பிவிடாமல், ஆயிரம் கேள்விகள் கேட்பதுதான் மனித மனத்தின் இயல்பு. அப்படியிருக்க, புராணங்கள் சொல்வதை கேள்வி கேட்காமல் ஏற்குமா என்ன? அதெப்படி ஒருத்தனுக்கு பத்து தலைகள் இருக்க முடியும்? ஆயிரம் தலை பாம்பு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை! எல்லாம் 

கட்டுக்கதை... இப்படி, விமர்சனங்கள் எழுப்புமே தவிர, புராணங்களும் ஞானநூல்களும் சூட்சுமமாக உணர்த்தும் உண்மையை உணர்ந்துகொள்ளாது.
மகாபெரியவாளுக்கும் இப்படி ஓர் அனுபவம் நேர்ந்தது! அதுபற்றி அவரே கூறுகிறார்...

புராணத்தில் காச்யபருக்கு கத்ரு என்ற பத்தினி இருந்தாள்; அவளுக்குப் பாம்புகள் குழந்தையாகப் பிறந்தன என்று பார்த்தால், உடனே இதெல்லாம் ஒரே அஸம்பாவிதம் என்று தள்ளிவிடுகிறோம். ஆனால், போன வருஷம் (1958) பேப்பரி லேயே (செய்தித்தாள்) வந்ததை ரொம்பப் பேர் பார்த்திருப்பீர்கள். 'ஒரு மார்வாடிப் பெண்ணுக்குப் பாம்பு பிறந்தது’ என்று அந்த 'ந்யூஸ்’ இருந்தது. அதைப் பார்த்தபோதுதான் எனக்கே இந்த மாதிரி இன்னொரு விஷயம் உறுதிப்பட்டது.


நான் ஸ்வாமிகளாக ஆகிறதற்கு முந்தி ஒரு குடும்பத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த வீட்டில் பிறந்த பெண்களும் சரி, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்படுகிற பெண்களும் சரி... தாழம்பூ வைத்துக் கொள்ளமாட்டார்கள். பின்னாளில் நான் ஸ்வாமிகளான அப்புறம், அவர்களிடம் ஏனென்று கேட்டபோது, அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கதையென்றால் இட்டுக் கட்டினது இல்லை.

''பத்துப் பதினைந்து தலைமுறை களுக்கு முன்னாடி எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குப் பாம்பு குழந்தையாகப் பிறந்துவிட்டது. இதை வெளியில் சொல்லிக்கொள்ள வெட்கம். ஆனாலும், வீட்டோடு வளர்த்து வந்தார்கள். பாம்புக்குப் பால் போட்டி (புகட்டி) குழந்தை மாதிரியே வளர்த்தார்கள். அதுவும் யாரையும் ஹிம்சை பண்ணாமல், தன்பாட்டுக்கு வீட்டோடு விளையாடிக்கொண்டிருந்ததாம்.

இந்த விசித்திரக் குழந்தையை எங்கேயும் எடுத்துக்கொண்டு போக முடியவில்லை, விட்டுவிட்டும் போக முடியவில்லை என்பதால், அம்மாக்காரி ரொம்ப அவசியமானால் ஒழிய எங்கேயும் வெளியே போகவே மாட்டாள். 'கல்லானாலும் கணவன்’ என்கிற மாதிரி 'பாம்பானாலும் குழந்தை’தானே? அந்த வாத்ஸல்யம்!

ஆனால், ரொம்பவும் நெருங்கின பந்துக்களின் கல்யாணமொன்று வந்தபோது, அவளால் போகாமல் இருக்கமுடியவில்லை. 

அப்போது, வீட்டில் வயசான கிழவி ஒருத்தி இருந்தாள் (அவள் அந்தப் பாம்புக் குழந்தையின் பாட்டியா என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் தூர பந்துக்களில்கூட நாதியற்றவர்களை வைத்துப் பராமரிக்கிற நல்ல பழக்கம் இருந்து வந்தது.

இப்போதுதான் தாயார்- தகப்பனாரோடேயே சேர்ந்து இல்லாமல் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று நவீன நாகரிகத்தில் பறக்கிறார்கள். முன்னெல்லாம் அவிபக்த குடும்பம்தான் (joint family); அதிலே யாராவது ஒரு அத்தை, பாட்டி, ஒன்றுவிட்ட சின்ன தாத்தா என்று வைத்துக்கொண்டு ரக்ஷிப்பார்கள். இந்த கதை நடந்த அகத்திலும் ஒரு கிழவி இருந்தாள்). அவளுக்குக் கண் தெரியாது. அந்தக் கிழவியின் பாதுகாப்பில் பாம்புக் குழந்தையை விட்டுவிட்டு, அதன் தாயார் வெளியூருக்குப் போனாள்.

பாம்புக்கு விசேஷமாக என்ன செய்ய வேண்டும்? குளிப்பாட்ட வேண்டுமா? தலை வார வேண்டுமா? சட்டை போட வேண்டுமா? இல்லாவிட்டால், தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமா? இதெல்லாம் இல்லை. வேளாவேளைக்கு அதற்குப் பால் விட்டால் மட்டும் போதும். அதனால் அம்மாக்காரி அந்தக் கிழவியிடம், 'காய்ச்சின பாலை, கை நிதானத்திலேயே கல்லுரலைத் தடவிப் பார்த்து, அதன் குழியிலே விட்டுவைத்துவிடுங்கள். நேரத்தில் குழந்தை (பாம்பு) வந்து அதைக் குடித்துவிடும்’ என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போனாள். அந்தப் பாம்பை இப்படிப் பழக்கியிருந்திருப்பாள் போலிருக்கிறது,
கிழவியும் அப்படியே செய்தாள். பாம்பும் தாயார் சொன்னபடியே வந்து குடித்துவிட்டுப் போயிற்று. அப்புறம், ஒரு வேளை நாழி தப்பிப் போயிற்று. கிழவி அசந்து போய்விட்டாளோ என்னவோ? கல்லுரலில் பார்த்த பாம்புக்குப் பாலில்லை. அது ரொம்ப ஸாது. கொஞ்ச நேரம் காத்துப் பார்த்தது. அப்புறம் அதுவும் அசந்து போய், அந்தக் கல்லுரல் குழியிலேயே சுருட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு விட்டது.

கிழவி அதற்கப்புறம்தான், கொதிக்கக் கொதிக்கப் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு கல்லுரலுக்கு வந்தாள். அதிலே பாம்புக்குட்டி படுத்துக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரியவில்லை. வழக்கம் போலவே கொதிக்கக் கொதிக்க இருந்த பாலை அப்படியே ஒரு நிதானத்தில் குழிக்குள்ளே விட்டுவிட்டாள். பாம்பின் மேலேயேதான் விட்டுவிட்டாள். பாவம்! அந்தக் குட்டிப் பாம்பு அப்படியே துடிதுடித்துச் செத்துப்போய்விட்டது.

அங்கே ஊருக்குப் போயிருந்த அம்மாக் காரிக்கு ஸொப்பனமாச்சு! ஸொப்பனத்திலே அந்தப் பாம்புக்குட்டி வந்து, 'நான் செத்துப் போய்விட்டேன். நீ போய் என்னை எடுத்துத் தாழங் காட்டிலே தஹனம் பண்ணிவிடு! இனிமேல், உங்கள் அகத்தில் பிறக்கிற பெண்களும், வாழ்க்கைப்படுகிற பெண்களும் தாழம்பூ வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று சொல்லிற்று (தாழம் புதர்தான் பாம்புக்கு ரொம்பப் ப்ரீதி!). அதிலிருந்து எங்கள் குடும்பத்துல யாரும் தாழம்பூ வைத்துக் கொள்வதில்லை'' என்று அந்த அகத்துப் பெண்கள் சொன்னார்கள்.

இந்தக் கதையைப் பற்றி எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது, இப்படிக்கூட நடந்திருக்குமா என்று. அப்புறம் போன வருஷம், ஒரு பெண்ணுக்குப் பாம்பு பிறந்த நியூஸைப் பார்த்த பின், இதைப் பற்றி ஸந்தேஹப்பட வேண்டாம் என்று மேலும் உறுதியாயிற்று.

உங்களுக்குப் புராண நம்பிக்கை போதவில்லை என்று நான் கண்டிப்பது தப்புதான். எனக்கே ஐதிஹ்யமாக ஒரு குடும்பத்தில் சொன்னதில் நம்பிக்கை போதாமல், நியூஸ் பேப்பரில் வந்த நியூசைக் கொண்டுதானே ஐதிஹ்யத்தை கன்ஃபர்ம் செய்து கொள்ள வேண்டியிருந்தது?

இதுதான் இப்போது நாம் இருக்கிற ஸ்திதி! பேப்பரில் வந்து விட்டால் எத்தனை நம்பத் தகாததானாலும், பொய் என்று தோன்றவில்லை. ஆனால், புராணம் என்றாலே கட்டுக் கதை என்று அலக்ஷ்யம்!

Sunday, October 13, 2013

கேரியர் வார்ஃபேர் - வேலையில் ஜெயிக்க ...

வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல்தானே தவிக்கிறோம்; தெரிந்தால் ஜமாய்த்துவிடுவோமே என்றுதானே நினைக்கிறீர்கள்! கேரியர் வார்ஃபேர் என்கிற இந்தப் புத்தகத்தைப் படித்தால், உங்கள் பாஸை உங்களை நோக்கி நிச்சயம் திரும்பிப்பார்க்க வைப்பீர்கள்.  

வெற்றிச் செருக்கு எதுவுமில்லாமல், அலங்காரமற்ற, அனுபவப்பூர்வமான யோசனைகளுடன் பிராக்டிக்கலாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் உங்களுக்கு சொல்லும் முதல் விஷயம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் உங்களை மதிப்பீடு செய்பவர்களின் பார்வையிலேயே நீங்கள் பார்த்துச் செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பிராண்டை நீங்கள் வளர்த்துக்கொள்வதன் மூலம் ஆபீஸ் வேலையில் ஜெயிக்க, நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் விலாவாரியாகப் பட்டியல்போட்டுச் சொல்லி இருக்கிறார்.   

'ஸாரி’ சொல்லாதீர்கள்!

அலுவலகப் பணியில் வெற்றி பெற 'ஸாரி’ சொல்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள். 'ஸாரி சார், நாளைக்குத் தருகிறேன்’, 'ஸாரி சார், இன்றைக்கும் முடியவில்லை’, 'ஸாரி சார், அடுத்தமுறை சரி பண்றேன்’ என்று நீங்கள் சொல்லும் ஒவ்வொரு 'ஸாரி’யும் நீங்கள் என்ன மாதிரியான நபர் என்பதை உங்கள் அலுவலகம் முடிவு செய்ய தோதுவானதாக இருக்கிறது. அதனால் குறைந்த அளவு 'ஸாரி’ சொல்லுங்கள்.

 

மாத்தி யோசியுங்க!

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பணிகள் சிறப்பாக நடக்க ஏதாவது ஒன்று குறையும். அது என்ன என்று ஆராய்ந்து கண்டுபிடித்து அதை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், அது மேலிடம் மதிக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கவேண்டும் என்கிறார். அப்படி ஒரு விஷயம் ரொம்ப கஷ்டமான செயலாகவல்லவா இருக்கும் என்பீர்கள். அது இல்லவேயில்லை என்று சொல்லும் ஆசிரியர், அலுவலகத்தில் பெயரெடுக்க மிகவும் சவாலான மற்றும் பாப்புலரான வேலைகளைச் செய்ய நிறையபேர் போட்டி போடுவார்கள். நீங்கள் இதற்கு மாற்று யோசனையாக யாருமே சிந்திக்காத, ஆனால் மிகவும் எளிமையான கட்டாயம் தேவையானது எது என்று பாருங்கள். பல விஷயங்கள் உங்கள் கண்ணுக்கு முன்னால் வரும். அவற்றை வரிந்துகட்டிக்கொண்டு எடுத்துப்போட்டு சிரத்தையுடன் செய்யுங்கள். வளர்ச்சி எப்படி வருகிறது என்று பாருங்கள்.

மாங்குமாங்கென்று உழையுங்கள்!

சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்தவுடன் உங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப்போவது அலுவலகத்தில் பவர்ஃபுல்லான மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதுதான் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான வழிகளையும் சொல்லியுள்ளார். பவர்ஃபுல்லான மனிதர்கள் கண்ணில்படுவதற்கு நிறைய பணம் சம்பாதித்துத் தரும் ஏரியாவிற்கு வேலையை மாற்றிக்கொண்டு (சேலஞ்ச் தான்!) மாங்குமாங்கென்று உழைப்பதும் ஓர் உத்திதான் என்கிறார் ஆசிரியர். இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணிச்சலான வாக்குறுதிகளைச் செய்து அவற்றை நிறைவேற்றியும் காண்பி யுங்கள். உங்கள் பிராண்ட் வேல்யூ எப்படி எகிறுகிறதென்று பாருங்கள் என்கிறார்.

தலைவனாகுங்கள்!

ஒத்தை ஆளாக என்னதான் தலைகீழாக நின்றாலும் ஓர் அளவுக்கு மேல் சாதனை ஏதும் செய்ய முடியாது. அதனால் நல்லதொரு லீடராக மாறுவதற்கான முயற்சிகளை ஆரம்பத் திலிருந்தே எடுங்கள். அப்போதுதான், நீங்கள் நாளடைவில் மற்றவர்களிடமிருந்து வெற்றிகரமாக வேலைவாங்கி உங்கள் புகழை நிலைநாட்ட முடியும் என்கிறார் ஆசிரியர்.

அது எப்படிங்க லீடராகிறது என்கின்றீர்களா? மூன்றே விஷயம்தான் முக்கியம் என்கிறார் ஆசிரியர். தியரியை விட்டுவிட்டு பிராக்டிக் கலாக நடந்துகொள்ளுங்கள் (ஆபீஸ் பத்து மணிக்கு என்றால், முதல் நாள் இரவு 11 மணிக்கு வீட்டுக்குச் சென்றவரை அடுத்தநாள் காலை 9.59-க்கே சீட்டில் இருக்கவேண்டும் என்று கட்டாயம் செய்யாதீர்கள்). உங்களுக்கு எது தெரியாது என்று தெரிந்துகொள்ளுங்கள். சுற்றி இருப்பவர்களிடம் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். இந்த மூன்றும் உங்களை நிச்சயமாக லீடராக்கும் என்கிறார்.  

பாஸைப் புரிந்துகொள்ளுங்கள்!

அடுத்தபடியாக, இளம்வயதில் நீங்கள் கம்பெனிக்காக உழைத்துக் கொட்டுவீர்கள். உங்கள் உயரதிகாரி ஏசி-ரூமில் உட்கார்ந்துகொண்டு இன்சென்டிவ் வாங்குவார். அவரும் உங்களைப் போல் எங்காவது உழைத்துக் கொட்டி விட்டுதான் இப்போது மேலே உட்கார்ந்திருக்கிறார் என்ற நிதர்சன உண்மையைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். இந்த நிலை குறித்து புலம்பாதீர்கள் என்று சொல்லும் ஆசிரியர், உங்களுடைய பாஸ் ஒரு முட்டாளாக இருந்தா லும் உங்கள் வேலை எப்படி சிறப்பாக இருக்கிறது என்பதை டாப்-மேனேஜ்மென்ட் பார்க்க அவரைத்தான் உபயோகிக்கும். அவர் முட்டாளாக இருந்தாலும் அவரிடத்தில் இருக்கும் பவர் நிஜமானது. எனவே, அவரை கவனமாகக் கையாளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

பாஸுக்கு வேண்டிய மூன்று!

பாஸின் அன்பைப் பெற என்னசெய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் என்றால், ஓர் அலுவலகத்தில் வேலை ரீதியாக உங்களிடமிருந்து பாஸிற்கு என்னென்ன விஷயங்கள் வேண்டும் என்று மூன்று விஷயங்களைப் பட்டியலிடுகிறார். ஒன்று, உங்களுடைய நன்றி விசுவாசம். இரண்டு, நீங்கள் தரும் உருப்படியான அட்வைஸ். மூன்று, அவருடைய மதிப்பை நீங்கள் கூட்டும் வகையில் நடப்பது. இந்த மூன்றையும் சரிவரச் செய்யத் தவறினால் தேறுவது கடினம் என்று சொல்லும் ஆசிரியர், இந்த மூன்றாவது காரணத்தால்தான் ஒரு முட்டாள் பாஸைக்கூட நீங்கள் மற்றவரிடத்தில் முட்டாள் என்று விமர்சிக்கக்கூடாது என்கிறார்.

பாஸ் பற்றி புகார் வேண்டாமே!

முட்டாள்களிடம் நிஜமான அதிகார ஆயுதம் இருக்கிறதே! எனவே பாஸைப் பற்றி அவரின் பாஸிடம் புகார் சொல்லாதீர் கள் (அவராகக் கேட்டால் தவிர - அப்போதும் ரொம்பவும் யோசனைக்கப்புறம் சொல்வதைப்போல் சொல்லவேண்டும்) என்று சொல்லும் ஆசிரியர், அது நீங்கள் நன்றி விசுவாசம் இல்லாத ஆளென்ற தோற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்று சொல்கிறார். மிக மிக முக்கியமாக பாஸின் திறமைக்கு மெருகேற்றுவது உங்களுடைய கடமை என்பதை மனதில் வையுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், பாஸை மட்டம் தட்டி உங்கள் திறமையை வெளிக்காண்பிக்கும் நிகழ்வுகள் எதையுமே தப்பித்தவறிக்கூட நடத்திவிடாதீர்கள் என்கிறார்.

மூன்றுவிதமான மனிதர்கள்!

அண்டிப்பிழைப்பவர்கள், எப்போதும் எதிர்க்கருத்து சொல்பவர்கள், நடுநிலை யாளர்கள் என்ற மூன்றே விதமான மனிதர்களே அலுவலகத்தில் இருப்பார்கள் என்று சொல்லும் ஆசிரியர், அண்டிப்பிழைக்கின்றவனை ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் பாஸிற்கு பிடிக்காமல் போகும் என்று சொல்கிறார். எதிர்க்கருத்து பாஸிற்கு அவ்வப்போது தேவைப்பட்டாலும் அவரால் பெரிதும் ரசிக்கப்பட்டாலும்கூட எதிர்க்கருத்து நபர் என்ற கவர்ச்சிகரமான பாதாளத்தில் விழுந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார். நல்ல சமயோசிதமான யோசனைகளைச் சொல்லும் நடுநிலையாளர் என்ற நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பது மட்டுமே உங்களை எப்போதும் சமமான மற்றும் சரியான பாதையில் எடுத்துச் செல்லும் என்கிறார் ஆசிரியர்.

பலனை எதிர்பாருங்கள்!

எல்லா பாஸும் உங்களை உபயோகித்து ஆதாயம் தேடவே முயல்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனாலும், வெளிப்படையாகத் தெரியாமல் உங்கள் பாஸை உபயோகித்து நீங்கள் முன்னேறிக்கொள்வதில்தான் உங்களுடைய திறமையே இருக்கிறது என்கிறார் ஆசிரியர். உங்கள் பாஸிடம் நீங்கள் இரண்டே விஷயங் களை எதிர்பார்க்க வேண்டும். ஒன்று, உங்கள் மீது அவர் வைக்கும் நம்பிக்கை. இரண்டு, உங்கள் வேலைக்கு அவர் தரும் மரியாதை மற்றும் பலன் இந்த இரண்டையும் தாண்டி அவருக்கும் உங்களுக்கும் வேறு எந்த இணைப்புப்பாலமும் இருக்க வாய்ப்பே இல்லை என்று அட்வைஸ் செய்கிறார்.
பாஸை மட்டும் நம்பாதீர்கள்!

பாஸ் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையே உங்களை அட, இவன் கொஞ்சம் வேலை பார்ப்பான்போல என டாப்-மேனேஜ்மென்ட் கண்ணில் படவைக்கும் என்று சொல்லும் ஆசிரியர், ஆரம்பகால வேலையில் பணத்தை விட அனுபவம் பெறுவதே முக்கியம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் என நறுக்கென்ற உண்மையைச் சொல்கிறார். 'பாஸ், எனக்கு தகப்பன் மாதிரி’ என்கிற உடான்ஸெல்லாம் வேண்டாம். ஏனென்றால் உங்கள் பெற்றோர்கள் உங்கள் வளர்ச்சிக்காக தியாகம் பலவற்றைச் செய்வார்கள். உங்கள் பாஸ் நிச்சயம் அதில் ஒரு துளிகூடச் செய்ய மாட்டார் என்கிறார். உங்கள் பாஸ் உங்களுக்குச் செய்யும் நல்லது எல்லாமே அவருடைய பிராண்டை வளர்க்கக் கொஞ்சமாவது உதவுவதாக இருக்குமே தவிர, தன்னலமற்ற தியாகமாக இருக்க வாய்ப்பேயில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்கிறார் ஆசிரியர்.

கடைசியாக..!

இருக்கும் வேலையில் உங்களால் புதிதாய் ஒன்றும் கற்றுக்கொள்ளவும் முடியவில்லை, அலுவலகத்தில் உங்கள் பிராண்டை பில்ட் செய்யவும் முடியவில்லை என்றால் உடனடி யாக அந்த வேலையிலிருந்து கிளம்பவும் என்று அலாரம் அடிக்கின்றார் ஆசிரியர்.

நம்மில் பெரும்பாலானோருக்கு வேலையில் வெற்றியே வாழ்வின் வெற்றி. அதனால் அனைவருமே படிக்கவேண்டிய சரியான புத்தகம் இது.

Friday, October 11, 2013

சுஜாதாவின் கற்பனையில் பிறந்த ‘எந்திரன்’


எழுத்தாளர் சுஜாதாவின் கற்பனையில் பிறந்த, இயக்குனர் ஷங்கரின் கைவண்ணத்தில் எழுந்த ‘எந்திரன்’ படத்தில் வந்த ‘சிட்டி’யை நினைவிருக்கிறதா? அந்த ‘சிந்திக்கும் எந்திரனை’ நிஜமாகவே உருவாக்கியிருக்கிறார் ஒரு விஞ்ஞானி. அவர்தான் ஜெகன்நாதன் சாரங்கபாணி. தமிழ்நாட்டுக்காரர். அமெரிக்க மிஸ்சோரி பல்கலைக்கழகத்தில் நீண்ட நாட்களாக ஆராய்ச்சிப் பணியிலிருப்பவர். ரோபோக்களை வடிவமைப்பதிலும், அதை மேம்படுத்துவதிலும் உலகின் பல இடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அந்த ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பது இவர்தான். சொன்னதைச் செய்வது ரோபோ. ஆனால் அது சொல்லாமலேயே ‘மனிதனைப் போல தன்னிச்சையாகச் சிந்தித்து செயல்பட வைக்கமுடியுமா?’ என்பது தான் இவரது ஆராய்ச்சி. நீண்ட காலத் தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் இவரது தலைமையிலான குழுவினர் உருவாக்கியிருக்கிறார்கள் ரோபோக்களுக்கான மூளையை. மனித மூளையில் இருக்கும் கட்டுப்பாட்டுக் கேந்திரத்தைப்போல வடிவமைக்கப்பட்ட ஒரு ‘குட்டி கம்ப்யூட்டர் மூளை’ பொருத்தப்பட்ட ரோபோ மனிதனைப் போலவே சிந்தித்து, தேவையானதைப் புரிந்து கொண்டு வேலைகளைச் செய்யும். இவரது தலைமையில் இயங்கும் 14 ‘ரோபோடிக்ஸ்’ விஞ்ஞானிகளின் குழுதான் இதைச் சாதித்திருக்கிறது. இந்த வகை ரோபோக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளையும் இலக்குகளையும் சொல்லி விட்டால் அதைப் புரிந்து கொண்டு தேவையானதைச் செய்து கொள்ளும். 

ரோபோக்களின் இந்த அலசும், சிந்திக்கும் திறன்களைப் படிப்படியாக உயர்த்துவதற்கான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜெகன்நாதன், வரும் காலங்களில் ரோபோக்களால் மனிதனைப் போலச் சிரிக்க முடியும், கோபப்பட முடியும், செயற்கையாக அமைக்கப்பட்ட ‘ஃபைபர் முக’த்தில் உணர்வுகளைக் கூடக் காட்டமுடியும்" என்கிறார். சொல்லாதவற்றையும் புரிந்து கொண்டு செயலாற்றும் ரோபோக்களை உருவாக்குவதுதான் எங்கள் ஆராய்ச்சியின் இலக்கு" என்று சொல்லும் ஜெகன்நாதன் சாரங்கபாணி அமெரிக்கவாழ் தமிழர். முதல் டாக்டரேட் பெற்றவுடனேயே முழுநேர ஆராய்ச்சிப் பணிகளை விரும்பி ஏற்ற இவர் கம்ப்யூட்டர் சயின்ஸை தொடர்ந்து ‘ரோபோடிக்ஸ்’ஸில் ஆர்வம் அதிகமாகி புதிய படைப்புகளை உருவாக்கி அதற்கான காப்புரிமைகள் பெற ஆரம்பித்தார். இப்படி இதுவரை இவர் பெற்றிருப்பது 20 காப்புரிமைகள். போயிங் போன்ற பல பெரிய நிறுவனங்களிலும், அமெரிக்க ராணுவத் துறையிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. 109 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருப்பதே மிகப்பெரிய கௌவரமாகக் கருதப்படுவதால் உலகின் பல நாடுகளின் ஆராய்ச்சி மாணவர்கள் இவரிடம் சேரக் காத்திருக்கின்றனர். ‘இந்தத் துறையில் சாதிக்க இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன, வாருங்கள்’ என ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறார். 

ரமணன்

அருள்வாக்கு - வாக்கின் சக்தி!


தமிழ்நாட்டில் எத்தனையோ மகாகவிகள், பக்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பாடியது முக்கியமாகப் பெரியவர்களுக்குத்தான். அவ்வையாருக்கு அவர்களைவிட கவிதா சக்தியோ, பக்தியோ குறைச்சல் இல்லை. அவள் ரொம்பப் பெரியவள்; ஞானி; யோக சாஸ்திரத்தில் கரை கண்டவள். ஆனாலும், அவள் குழந்தைகளை நல்லவர்களாக்க வேண்டும் என்பதில் முக்கியமாகக் கவனம் வைத்து, அவர்களுக்கு நல்ல குணங்களையும், ஒழுக்கத்தையும், நீதியையும், தெய்வ பக்தியையும் போதனை செய்து பாடினாள்.

பேரக் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமே என்று கரிசனத்தோடு ஒரு பாட்டி நல்லது சொல்வது மாதிரி அவ்வைப் பாட்டி அத்தனை தமிழ்க் குழந்தைகளுக்கும் உபதேசம் செய்தாள். அவளுடைய அன்பின் விசேஷத்தால் அவளுக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆன பிறகு, இப்போதும் நாம் குழந்தையாகப் படிக்க ஆரம்பிக்கிறபோதே, அவளுடைய ‘ஆத்திசூடி’தான் முதலில் வருகிறது.இத்தனை ஆயிரம் வருஷங்களாக அவளுடைய வார்த்தை எப்படி அழியாமல் தொடர்ந்து வருகிறது என்றால் அதற்குக் காரணம் அவளுடைய வாக்கின் சக்திதான். பரமசத்தியமான ஒன்றை, நிறைந்த அன்போடு சொல்லிவிட்டால், அப்படிப்பட்ட சொல் ஆயிரம் காலமானாலும் அழியாமல் நிற்கிறது. அவ்வை இப்படி அன்போடு உண்மைகளை உபதேசித்தாள். நம்மில் கம்பர், புகழேந்தி, இளங்கோ போன்ற கவிகளைப் படிக்காதவர்கள் இருக்கலாம். ஆனால், அவ்வை வாக்கு ஒன்றாவது தெரியாதவர் இருக்க முடியாது.அவ்வையாருக்கு இத்தனை வாக்கு சக்தி எங்கேயிருந்து வந்தது? வாக்குச் சக்தி மட்டும் இல்லை; அவளுக்கு ரொம்பவும் தேக சக்தியும் இருந்திருக்கிறது. அதனால்தான் ‘ஐயோ, தமிழ்க் குழந்தை ஒன்றுக்குக் கூட நம் வாக்கு கிடைக்காமல் போகக் கூடாதே! ஒவ்வொரு குழந்தைக்கும் நாம் இந்த உபதேசங்களைக் கொடுக்க வேண்டுமே!’ என்ற பரிவோடு அந்தப் பாட்டி ஒரு கிராமம் மிச்சம் இல்லாமல் ஓடி ஓடிப் போய், குழந்தைகளைத் தேடித் தேடி அவர்களுக்குத் தன் நூல்களைப் பரிந்து பரிந்து போதித்தாள்.

விடைபெறும் சிங்கங்கள்! - சச்சின், டிராவிட்...


இனி, சச்சின், டிராவிட் ஆகிய இருவரையும் மைதானத்தில் வண்ண உடைகளில் பார்க்க முடியாது. அனைத்து விதமான லிமிடட் ஓவர் மேட்சுகளிலிருந்தும் இருவரும் விடைபெற்று விட்டார்கள். எத்தனை எத்தனை மறக்க முடியாத ஆட்டங்கள்! அக்தரை துவம்சம் செய்த சச்சின், டொனால்டின் பந்தை சிக்ஸருக்குத் தள்ளிய டிராவிட்... கடகடவென்று பழைய மேட்சுகள் ஞாபகத்துக்கு வருகின்றன! காலம் தான் எத்தனை வேகமாக நம் கண்முன்னே சென்றுகொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் சச்சின் தொடர்ந்து டி20 மேட்சுகளில் ஆடிக் கொண்டி ருந்தார். மும்பை அணி ரசிகர்களுக்காகவும் மும்பை அணிக்குப் பங்களிக்க வேண்டிய பொறுப்புக்காகவும் அவர் உடனே விலகவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி, ஐ.பி.எல். மற்றும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்ற பிறகு இப்போது முழு மனத்துடன் விடை பெற்றிருக்கிறார். சச்சினின் கடைசி ஐ.பி.எல்.  

சாம்பியன் லீக், உலகக்கோப்பை ஆகிய போட்டிகளில் அவர் ஆடிய அணியே வென்றிருக்கிறது. அதே போல அவர் கடைசியாக ஆடிய ஒரு நாள், டி20 (ஒரே மேட்ச்) மற்றும் கடைசி ஐ.பி.எல். சாம்பியன் லீக் ஆட்டங்களும். ஆனால், ஆரம்பம் இத்தனை எளிமையாக இருக்கவில்லை. சச்சின் ஆடிய முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் அவர் ஒரு ரன்கூட எடுக்கவில்லை. இரண்டிலும் இந்திய அணி தோற்றது. ஒரு நாள் ஆட்டத்தில், சச்சினுக்கு முதல் செஞ்சுரி அடிக்க 78 ஆட்டங்கள் தேவைப்பட்டன. அப்படியாவது நிம்மதியாக இருக்க முடிந்ததா? அடுத்த மூன்று மேட்சுகளிலும் பூஜ்ஜியம். 99 செஞ்சுரிகளை அடித்துவிட்டு நூறாவது செஞ்சுரிக்கு ஒரு வருடமாகத் தவித்தார். ஐ.பி. எல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது மும்பை நிறைய தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், இப்போது ஒரே வருடத்தில் மும்பை (ரோஹித் சர்மா தலைமையில்), ஐ.பி.எல். மற்றும் சாம்பியன் லீக் சாம்பியன். பல சவால்களைச் சந்தித்த கிரிக்கெட் வாழ்க்கையில், கடைசியில் வெற்றிகளை மட்டுமே சுவைத்திருக்கிறார் சச்சின்.

டி20யில் ஆரம்பித்ததுதான் சச்சினின் வாழ்க்கை. சச்சின் ஆடிய முதல் ஒரு நாள் தொடரில் அவரை ஆட வைப்பதாகவே இல்லை.பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் ரத்தானதால் 20 ஓவர் கண்காட்சி ஆட்டம் நடத்தப்பட்டு, அதில் சச்சின் சேர்க்கப்பட்டார். அப்துல் காதிர் பந்தில் தொடர்ந்து மூன்று சிக்ஸர் அடித்து கவனத்தை ஈர்த்தார். (அந்த ஓவரில் 6, 0, 4, 6 6 6.) ஐ.பி.எல். போன்ற டி20 ஆட்டங்களில் மறக்கமுடியாத ஆட்டங்களை அதிகம் நிகழ்த்தாமல் போனாலும், அதனால் என்ன, சச்சின் ஆடுகிறார் என்பதற்காகவே ரசிகர்கள் அவர் சென்ற மைதானங்களையெல் லாம் நிரப்பினார்கள். இதனா லேயே சச்சினும் இந்தியாவுக்காக ஆடுகிற மேட்சுகளில்கூட சில சமயம் ஏதாவதொரு காரணம் சொல்லி (மகனுக்குப் பள்ளி விடுமுறை) விலகியிருக்கிறார். ஆனால், காயம் தவிர மற்ற எந்தக் காரணங்களுக் காகவும் மும்பைக்காக ஆடுவதை விடவில்லை.மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் ஆடுவதைப் பார்க்க முடியும். டிராவிட்? தன் கடைசி மேட்சில்கூட எல்லோரையும் முதலில் அனுப்பிவிட்டு பிறகு களம் இறங்கினார். அணிக்காக எதையும் செய்வதில் டிராவிடுக்கு மிஞ்சி இன்னொருவரைப் பார்க்க முடியாது. ‘கிரிக்கெட் அறிவில் மட்டுமல்ல, தான் வாழும் உலகைப் பற்றி அவ்வளவு அறிவு அவருக்கு’ என்கிறார் சஞ்ச மஞ்ச்ரேக்கர். ‘அணி’ என்கிற வார்த்தையின் மகத்துவம் அறிந்தவர் டிராவிட். அணிக்காக அவர் செய்யாத தியாகங்கள் இல்லை. சச்சினைப் போலவே டிராவிடும் ஒரே ஒரு சர்வ தேச டி20 மேட்சில் ஆடியிருக்கிறார். 2007 டி20 உலகக் கோப்பையின் வெற்றியால் இந்திய அணிக்கு டிராவிட்டின் தேவை இல்லாமல் இருந்தது. ஆனால், 2011 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டிராவிட் மட்டும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். செஞ்சுரி மேல் செஞ்சுரி அடித்தார். அதனால் நீண்டநாள் கழித்து, ஒரு நாள் மற்றும் டி20 மேட்சுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஒரு மேட்சில் தன்னைப் பற்றி மற்றவர்கள் எவ்வளவு தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்தார். சமிட் படேல் பந்தில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து இது கனவா என்று பார்த்த அத்தனை பேரையும் அசரடித்தார். சச்சினைப் போலவே டிராவிடும் ஒரு நாள் போட்டிகளில் ஆரம்பத்தில் மிகச் சுமாராகவே ஆடியிருக்கிறார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அணியின் பொறுப்புகளைத் தன் மேல் சுமந்து கொண்டார். கீப்பிங்கில் முறையான அனுபவம் இல்லாமல் போனாலும், அணிக்கு ஏழு பேட்ஸ் மேன்கள் அவசியம் என்பதற்காக 73 மேட்சுகளில், (உலகக்கோப்பை உள்பட) விக்கெட் கீப்பராகவும் இருந்திருக்கிறார். கீப்பராக இருந்த சமயங்களில் பேட்டிங்கில் இன்னும் வெளுத்துக் கட்டினார். சூழ்நிலைகள் சரியில்லாமல், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் முன்பு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஐ.பி.எல்.லில் மூன்று ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதை அறிந்து துவண்டு விட்டார். அதே சமயம் அவர்களைக் காப்பாற்றவும் முயலவில்லை. பொதுவாக, தன்னுடைய கௌரவத்தை முன்னிறுத்தி டிராவிட் எந்த சர்ச்சையும் செய்ததில்லை. ஒரு நாள், டெஸ்ட் இரண்டிலும், அணி எந்த இடத்தில் ஆடச் சொல்லியதோ அங்கு சத்தமில்லாமல் ஆடுவார். ஒரு நாள் போட்டிக்குப் பொருத்தமில்லாதவர் என்கிற விமர்சனத்தைக் கடந்து ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்கள் அடித்தார். பெவனை விடவும் இரண்டு முறை அதிகமாக மேன் அஃப் தி மேட்ச் வாங்கியவர். டிராவிட் கேப்டனாக இருந்த சமயத்தில்தான் இந்திய அணி தொடர்ந்து 17 முறை வெற்றிகரமாக சேஸிங் செய்து உலக சாதனை செய்தது. 


பொதுவாக, இந்தியாவில் நடக்கும் மேட்சுகளில் பேட்ஸ்மேன் அவுட் ஆனால் ரசிகர்கள் அமைதியாகி விடுவார்கள். ஆனால், டிராவிட் அவுட் ஆனால் மட்டும் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அடுத்து வரப்போவது சச்சின் அல்லவா! டிராவிட் ஏதாவது சாதனை செய்தால் கூடவே இன்னொரு வீரரும் சாதித்து, டிராவிடைப் பின்னுக்குத் தள்ளி விடுவார் (சிறந்த உதாரணம் 2001 கொல்கத்தா டெஸ்ட்). பல சமயங்களில் டிராவிடின் சாதனைகளை சச்சினின் சாதனைகள் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றன. அதுபோல, டிராவிடின் கடைசி கிரிக்கெட் மேட்சும், அது சச்சினின் கடைசி லிமிடட் ஓவர் மேட்ச் என்பதால் வழக்கம்போல அதிகக் கவனத்தை சச்சினுக்கு வழங்கிவிட்டது.டெஸ்டோ, ஒரு நாள் ஆட்டமோ, டிராவிட் களத்தில் இருந்தால் உடனே விக்கெட் விழாது என்கிற நம்பிக்கையைக் கொடுத்ததுதான் டிராவிடின் முக்கியமான சாதனை. சச்சின் களத்தில் இருந்தால் போதும், எப்படிப்பட்ட நெருக்கடியிலிருந்தும் அணியை மீட்டு விடலாம் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தவர் சச்சின். இந்த நம்பிக்கைகளைத்தான் அடுத்தத் தலைமுறை வீரர்கள் உருவாக்க வேண்டும்.

ச.ந.கண்ணன்

ஓ பக்கங்கள் - சர்ச்சைகள் ஓயாத டயானா! ஞாநி

 
பாரிஸில் ஈஃபல் டவருக்கருகே ஸீன் நதிக்கு மறுபுறம் ஒரு சுரங்கப் பாதை இருக்கிறது. இதில் நடந்த கார் விபத்தில்தான் பிரிட்டிஷ் இளவரசி டயானா மரணமடைந்தார். டயானா இறந்த இடத்துக்கு மேலே கைப்பிடிச் சுவரில் டயானா அபிமானிகள் விதவிதமான அஞ்சலிக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்கள். 
 
டயானாவும் அவரது புது சிநேகிதர் டூடி ஃபாயிதும் வந்த காரை பரபரப்புச் செய்திகளுக்காக அலையும் புகைப்படக்காரர்கள் துரத்தி வந்தபோது, விபத்து ஏற்பட்டது. டயானா வந்த கார் டிரைவர் மது வேறு குடித்திருந்தார். புகைப்படக்காரர்கள் கார்கள் நெருங்க விடாமல் வேகமாகச் செல்ல அவர் முயன்றபோது விபத்து ஏற்பட்டது. டிரைவர், டயானா, ஃபாயிது மூவரும் இறந்தார்கள். இது விபத்து இல்லை, கொலைச் சதி என்றே இன்று வரை ஃபாயிதின் தந்தையும் மிகப் பெரிய ஹரோட் கடைகளின் உரிமையாளருமான முகமது அல் ஃபாயிது சொல்லி வருகிறார். எகிப்து நாட்டு முஸ்லிமான தங்கள் குடும்பத்துடன் டயானா மண உறவு கொண்டுவிடக் கூடாது என் பதற்காக பிரிட்டிஷ் உளவுப் பிரிவினர் இந்தக் கொலைகளைச் செய்ததாக அவர் சொல்கிறார்.
 
டயானா இறந்த சுரங்கப்பாதை அருகே ஒரு தங்கத்தாலான ‘விடுதலைச் சுடர் சிலை’ இருக்கிறது. இதையே டயானாவுக்கான நினைவுச் சின்னம் என்று பல டூரிஸ்ட்டுகள் கருதுகிறார்கள். டூரிஸ்ட் கைடுகளும் இதை டயானா மெமோரியல் என்று குறிப்பிடுகிறார்கள். டயானா இறந்தது 1997ல் இந்தச் சிலை நிறுவப்பட்டது 1989ல்!
 
இந்த விடுதலைச் சுடர் என்பது அமெரிக்காவில் இருக்கும் லிபர்டி சிலைப் பெண்ணின் கையில் இருக்கும் சுடர் மாதிரி. இந்தச் சிலை வைக்கப்படக் காரணமாக இருந்தது ஒரு பத்திரிகை. இன்டர் நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் என்ற ஏடு பிரான்சி லிருந்து வெளியாகும் ஆங்கில ஏடு. 1987ல் இது நூற்றாண்டைக் கொண்டாடியபோது பிரான்சுக்கு நன்றி தெரிவிக்க இந்தச் சிலை அதன் வாசகர்களின் நன்கொடையால் உருவாக்கப்பட்டது. 1997ல் டயானா இறந்ததும் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள் மலர் வளையங்கள், பூச்செண்டுகளையெல்லாம் இந்தச் சிலைக்குக் கீழே வைத்ததில் இது டயானாவின் நினைவுச்சின்னம் ஆக்கப்பட்டு விட்டது. உண்மையில் டயானாவுக்கென்றே இரு நினைவுச் சின்னங்களை எழுப்பியிருப்பவர் இறந்த டயானா சிநேகிதர் ஃபாயிதின் தந்தை முகமது ஃபாயிதுதான். தன் ஹரோட் கடைகளில் இந்த நினைவுச் சின்னங்களை அவர் வைத்திருக்கிறார். ஒன்று டயானா கடைசியாகப் பயன்படுத்திய மதுக்கோப்பை. இன்னொன்று டயானாவும் ஃபாயிதும் கைகோர்த்து நடனமாடும் சிலை. பின்னர் நான் லண்டன் சென்றபோது அங்கே பக்கிங்ஹாம் அரண்மனையில் டயானாவுக்கு ஏதாவது நினைவுச் சின்னம் இருக்கிறதா என்று தேடி னேன். பெரிதாக ஏதும் இல்லை. அரண்மனைக்குச் செல்லும் வழியில் நடைபாதையில் ஒரு வட்டத்தகடு பதித்திருப்பதை மட்டுமே பார்க்க முடிந்தது. அதில் ‘இளவரசி டயானா நினைவு நடை’ என்று பொறிக்கப்பட்டு பல கால்களில் மிதிபட்டு கொஞ்சம் உடைந்தும் போயிருக்கிறது.  இப்போது பாரிசில் டயானா இறந்த இடத்தில் இன்னொரு சர்ச்சை நடக்கிறது. டயானா என்ற பெயரில் வெளிவர இருக்கும் புதிய படத்துக்கான விளம்பரப் பலகைகளை இந்தச் சுரங்கப் பாதையருகே வைத்திருக்கிறார்கள். இது டயானாவை இழிவுபடுத்துவதாகும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. டயானா இறந்து 16 வருடங்களான பின்னரும் அவரையொட்டிய சர்ச்சைகள் ஓய்வதில்லை.
 
பாரீசில் நான் சென்ற இன்னொரு இடம் ஒரு ரயில்வே ஸ்டேஷன். இப்படிச் சொன்னால் விசித்திரமாகத்தான் இருக்கிறது. பாரீஸ் முதல் ஐரோப்பாவில் நான் சென்ற எல்லா ஊர்களிலும், விதவிதமான ரயில்வே ஸ்டேஷன்கள் இருக்கின்றன. சுரங்க ரயில், மெட்ரோ ரயில், அண்டர் கிரவுண்ட், டிராம் என்று பல வகை ரயில்கள் நிலையங்கள். நான் குறிப்பிடும் பாரீஸ் ஸ்டேஷன், ரயிலே இல்லாத ரயில்வே ஸ்டேஷன்.  இந்த ரயில் நிலையம் பாரீசில்ஸீன் நதியின் இன்னொரு கரையில் இருக்கும் ஆர்சே வீதியின் பிரம்மாண்டமான கட்டடம். முதலாம் நெப்போலியன் இங்கேதான் தம் வெளியுறவுத் துறைக்கென்று ஓர் அரண்மனையை நிர்மாணித்தான். அது பின்னாளில் எரிக்கப்பட்டு சிதிலமாயிற்று. அங்கே வேறென்ன கட்டலாம் என்று திட்டங்கள் வகுக்கப்பட்டன. கடைசியில் சுமார் 115 வருடங்களுக்கு முன்னால் இதைக் கட்ட ஆரம்பித்தார்கள். 1900ல் பாரீசில் நடக்க இருந்த எக்ஸ்போ கண்காட்சிக்குள் தயாராக வேண்டுமென்ற திட்டப்படி இந்த ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. எக்ஸ்போ கண்காட்சியில் பல உலக நாடுகள் பங்கேற்றன. அதைவிட முக்கியம் அதில் வைக்கப்பட்ட பல விஷயங்கள் இன்று சர்வசாதாரண விஷயங்களாக நடைமுறைக்கு வந்துவிட்டன என்பது தான். நகரும் படிக்கட்டு, பேசும் படம், டீசல் எஞ்சின் போன்றவை இந்த எக்ஸ்போவில்தான் அறிமுகமாகின. எக்ஸ்போவுக்குச் செய்த செலவுக்கு வருமானம் கம்மி. எக்ஸ்போ முடியும் சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதி (அமெரிக்காவில்) கொலை செய்யப்பட்டு விட்டதால் துக்கம் அனுசரிக்க தற்காலிகமாகச் சில தினங்கள் மூடிவைத்து பின் திறக்கப்பட்டது. பார்வையாளர் எண்ணிக்கை மிகக் குறைவு. எக்ஸ்போவில் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் பெரும் நஷ்டம். இதன் பின்னர் பாரீசில் சர்வதேசக் கண்காட்சிகள் நடத்தும் ஆர்வமே போய்விட்டது.
 
இதற்காகக் கட்டப்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டும் 1900 முதல் 39 வருடங்கள் நன்றாக இயங்கியது. ஆனால் அதன்பின் அந்த ரயில் நிலையம் போதாமல் போய்விட்டது. நடைமேடை யின் நீளத்தைவிட நீளமான புது ரயில்கள் வந்து விட்டன. எனவே 1939ல் இந்த நிலையத்தை மூடிவிட்டார்கள். 1970 வரை இது செயல்படவில்லை. இதையொட்டிக் கட்டிய ஓட்டல் மட்டும் செயல் பட்டது. இதை இடித்து இங்கேயும் பெரிய ஓட்டலாக்கிவிடலாம் என்று நினைத்தபோது புராதனச் சின்னங்களின் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்த்தன. 1878ல் கட்டப்பட்ட ஒரு உணவுப் பொருட்கள் மார்க்கெட்டை 1972ல் இடித்ததும் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியது. அந்த அலையில் இந்த ரயில் நிலையம் இடிபடாமல் தப்பிற்று.  

இதைக் கலைப் பொருட்களுக்கான மியூசியமாக ஆக்கிவிடலாம் என்ற யோசனை ஏற்கப்பட்டது. ஏற்கெனவே லூவ்ரு மியூசியம் ஒரு காலகட்டத்தை பிரதிபலிக்கிறது. மாடர்ன் ஆர்ட் மியூசியம் தற்காலத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே லூவ்ருவுக்கும் மாடர்ன் ஆர்ட் மியூசியத்துக்குமிடைப்பட்ட காலக் கலை வரலாற்றுக்கான மியூசியமாக ஆர்சே மியூசியத்தை உருவாக்கத் திட்டமிட்டார் கள். இங்கே 1845 முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தின் ஓவியம், சிற்பக் கலைப் படைப்புகளைப் பார்க்கலாம். ரயில் நிலையக் கட்டட அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும் செய்து மியூசியத்தை அமைத்தார்கள். உள்ளே நுழைந்ததும் இருபுறமும் டிக்கட் கவுன்டர், புக் ஷாப். பின்னர் நீண்ட பிளாட்பாரங்கள்; அவற்றின் இருபுறமும் தனித்தனி கூடங்கள். மாடியறைகளும் கூடங்களும் கூட உண்டு.நான் இந்த மியூசியத்துக்குச் சென்ற அன்றைய தினம் இலவச அனுமதி நாள். மாதத்தில் ஒரு ஞாயிறன்று இலவச அனுமதி என்பது பல மியூசியங்களில் இருக்கும் நடைமுறை. கட்டணம் இருக்கும் போதே மியூசியங்களில் பெரும் கூட்டம் இருப்பது வழக்கம். அன்றைய தினம் பின்னிப் பின்னி வளைந்து வரிசையில் நின்ற கூட்டத்தைப் பார்த்தால் நம் ஊரில் இலவச வேட்டி சேலை, டி.வி., மிக்ஸி வழங்கலில் மட்டுமே அத்தகைய கூட்டத்தைப் பார்க்க முடியும் என்பதை யோசித்துப் பார்த்தேன்.