Search This Blog

Sunday, September 28, 2014

செல்போன் விற்பனை... ஆன்லைன் Vs ரீடெயில்

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை  மதியம் 2 மணி அளவில் இந்தியா முழுக்க பல இளைஞர்களும் பரபரப்பாக இருந்தார்கள். காரணம், சீனாவின் ஆப்பிள் என்றழைக்கப்படும் ஷியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் செல்போன்-ஆன ரெட்மீ 1எஸ் என்கிற போனை ஃப்ளிப்கார்ட் மூலம் அன்று புக்கிங்   தொடங்கியது.

சில லட்சம் எண்ணிக்கையில் விற்பனைக்கு வந்த போனை வாங்க பல லட்சம் பேர் கம்ப்யூட்டர் முன்பு பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். மிகச் சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கிய ‘புக்கிங்’ அடுத்த சில நொடிகளிலேயே முடிந்தது. இந்த சில நொடிகளில் போனை புக் செய்ய முடியாதவர்கள் அடுத்து எப்போது புக்கிங் அறிவிப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள்.

புத்தம் புதிதாக சந்தைக்கு வரும் செல்போன்களை இன்றைய இளைஞர் கள் வாங்கத் துடிப்பதை  ஆன்லைன் நிறுவனங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. இனி எந்த போனையும் தொட்டுப் பார்த்து வாங்கத் தேவையில்லை. நல்ல பிராண்ட் நிறுவனங்கள் வெளியிடும் செல்போன் கள் நன்றாகவே இருக்கும் என எல்லோரும் நினைப்பதால், பலரும் ஆன்லைனிலேயே வாங்க விரும்பு கின்றனர்.

தவிர, கடைகளைவிட 10% விலையும் குறைவாகக் கிடைப்பது, வீடு தேடி பொருள் வந்துவிடுவது ஆகிய காரணங்களினாலும் பலரும் ஆன்லைன் மூலம் வாங்குவதையே விரும்புகின்றனர்.  இதனால் கடைகளில் செல்போன் விற்பனை 12 - 14% குறைந்துள்ளதாம்.
 
இத்தனை நாட்களாக ஆன்லைன் நிறுவனங்களின் நடவடிக்கைகளை  பொறுமையாகப் பார்த்துவந்த நேரடி விற்பனை நிறுவனங்கள், இப்போது அதற்கு எதிராக களம் இறங்கி இருக்கின்றன. முதல் முயற்சியாக, செல்போன்களை நேரடியாக விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.
 
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்கிற மாதிரி நேரடி விற்பனைக்  கடைகளுக்கும், ஆன்லைன் நிறுவனங்களுக்கும் நடக்கும் போட்டி யில், அதிக சலுகைகளை யார் அள்ளித் தருகிறார்களோ, அவர்களின் பக்கமே வாடிக்கையாளர்கள் நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மோட்டோரோலா ஹின்ட்!

சமீபத்தில் மோட்டோரோலா, மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் (இந்த இரண்டுமே 2nd Gen) ஆகிய இரு ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இது தவிர, ‘ஹின்ட்’ என்ற ‘Wireless Earbud’ கருவியையும் வெளியிட்டுள்ளது.

பார்ப்பதற்கு சிறியதாகவும் கவர்ச்சிகரமா கவும் தோன்றும் இந்த ‘ஹின்ட்’, ப்ளூ-டூத் மூலம் செயல்படுகிறது. இதை ஸ்மார்ட் போன் ப்ளூ-டூத்-வுடன் இணைத்துவிடலாம். இணைத்தபின் தொலைபேசி அழைப்பு களைப் பெறுவது, குறுந்தகவல் அனுப்புவது, மின் அஞ்சல் அனுப்புவது,  அலாரம் செட் செய்வது, கூகுள் மேப்பில் வழிகளைக் கேட்டறிவது போன்ற அனைத்து செயல்களையும் ஸ்மார்ட் போனைத் தொடாமலே, இருந்த இடத்தில் இருந்தபடி நம் வேலைகளை செய்து கொண்டே அனைத்து செயல் களையும் இதன் மூலம் செய்ய லாம்.


ஒரு நபரிடம் உரையாடுவது போல் ஹின்ட் கருவிக்குத் தெரிந்த கமான்ட்களைக் கொண்டு தேவையான செயல் களை உச்சரிப்பதன் மூலமே செய்துவிடலாம். இதற்கு 150 அடி சுற்றுவட்டாரத்தில் உங்கள் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். 100 மணி நேரம் ஸ்டாண்ட்-பை டைமுடன் வரும் இந்த ‘ஹின்ட்’ ஒரு சார்ஜர் கேஸோடு வருகிறது. இதைப் பயன்படுத்தாத நேரத்தில் இந்த சார்ஜர் கேஸில் பொருத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம். சுமார் 10 மணி நேரம் இந்த சார்ஜ் இருக்கும்.

மேலும், மிஸ்டு கால், மெசேஜ், இ-மெயில் போன்றவை வந்தால் ஒரு சிறிய அலெர்ட் ஒலியும் இந்தக்  கருவியில் கேட்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மெசேஜ், இ-மெயில் அல்லது மிஸ்டு கால் வந்துள்ளது என்பதை போனை பார்க்காமலே தெரிந்துகொள்ளலாம். $149.99 என்கிற விலையில் தற்போது விற்பனையாகிவரும் இந்த ‘மோட்டோரோலா ஹின்ட்’ ஸ்மார்ட் போன்’ உலகத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கிஸோர் பிரசாத் கிரண்

‘மேக் இன் இந்தியா’

‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்!) என்கிற புதிய கருத்தாக்கத்தை முன்வைத்து, உலக அளவில் நம் நாட்டை ஒரு பெரிய உற்பத்திக் கேந்திரமாக ஆக்கி, அதன்மூலம் வேலைவாய்ப்பை பெருக்கி, பொருளாதார வளர்ச்சியைக் காண வைக்கும் முயற்சியை வெற்றிகரமாக விதைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம், நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்காதபோது, இந்த அரசாங்கமாவது உற்பத்தித் துறையில் முத்திரை பதிக்க முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.
உற்பத்தித் துறையை வளர்த்தெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை வெகுவாக உயர்த்த முடியும் என்பதை கடந்த அறுபது ஆண்டுகளில் நாம் உணரத் தவறினோம். ஐம்பதுகளில் ஜப்பான் செய்ததை, எழுபதுகளில் தென் கொரியாவும் சிங்கப்பூரும் செய்ததை, எண்பதுகளில் சீனா செய்ததைத்தான் இன்றைக்கு நாம் செய்ய நினைக்கிறோம். இனியாவது சேவைத் துறையை மட்டும் வளர்த்தால் போதும் என்று நினைக்காமல், உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தினால் தான் வேலைவாய்ப்புகள் பெருகும்.

கேட்பதற்கு சிறப்பாக இருக்கும் இந்த கருத்தாக்கத்தை நடைமுறையில் செயல்படுத்த அடிப்படையான பல மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும். தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தருவதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். புதிய மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கி, தடையில்லா மின்சாரம் தருவதுடன், சாலை, தண்ணீர், கட்டுமான வசதிகளையும் தந்தால்தான், புதிதாக பலரும் தொழில் தொடங்க முன்வருவார்கள்.

தொழிற்சாலைகளைத் தொடங்கத் தேவையான நிலங்களை கையகப்படுத்து வதிலும் பெரும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர, திறமையான தொழிலாளர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு தொழிலாளர் தொடர்பான பல சட்டங்கள் இன்றைய தேவைக்கேற்ப மாற்றம் காணப்பட வேண்டும். தொழில் தொடங்கத் தேவையான நிதியையும் பெரிய அளவில் உருவாக்கியாக வேண்டும்.

இது தொடர்பாக மத்திய அரசு செய்ய நினைக்கும் ஒவ்வொரு செயலை யும் மாநில அரசின் உதவியோடு நிறைவேற்ற வேண்டும். எல்லா மாநிலங்களும் ஒன்று கூடி செயல்பட்டால்தான், உலக உற்பத்திக் கேந்திர மாக இந்தியா மாறும். பிரதமர் மோடி இதை எப்படி செய்யப்போகிறார்?

Tuesday, September 23, 2014

பெண் இயக்குநர்கள்!

உலக சினிமாவில் பெண்களின் பங்களிப்பு தனித்துவமானது. இந்த வகையில் மனதை வசீகரிக்கும், சிந்தனையைக் கீறிப்பார்க்கும் உன்னத சினிமாக்களை இயக்கிய பெண் இயக்குநர்கள் சிலரைப் பற்றிய சினி மினி அறிமுகம் இங்கே!

சமீரா மக்மல்பஃப்

'உலக சினிமா’ என்று கொண்டாடப்படும் ஈரானிய சினிமாவின் மிகமுக்கிய இயக்குநரான மோஹ்சென் மக்மல்பஃப்பின் மகள், சமீரா. 8 வயதில் அப்பாவின் புகழ்பெற்ற படமான 'தி சைக்ளிஸ்ட்’ல் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த இவர், 17-வது வயதில் 'தி ஆப்பிள்’ என்ற படத்தை இயக்கினார். ஈரானில் தன் பெற்றோர்களால் 11 வருடங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, பின்பு பக்கத்து வீட்டினர் உதவியால் மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளைப் பற்றிய கதை இது. 'கேன்ஸ்’ திரைப்பட விழாவில் உலகின் இளம் இயக்குநர் இயக்கிய படம் என்கிற பிரிவில் 98-ம் ஆண்டில் இந்தப் படம் தேர்வானது.


இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான உலகத்திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அருமையான துவக்கத்தை சமீராவுக்கு 'ஆப்பிள்’ தர, 'பிளாக் போர்ட்ஸ்’, 'செப்டம்பர் 11’, 'அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்நூன்’, 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ என பெண் கல்வியையும், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் களமாகக்கொண்ட படங்களாகத் தொடர்ந்து இயக்கினார். இப்போது 34 வயதாகும் சமீரா, 2007-ல் ஆப்கானிஸ்தானுக்கே போய் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கும் குண்டுவீச்சுக்கும் இடையே 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ படத்தை இயக்கினார். இப்போது, அடுத்த படத்துக்காக நீண்ட இடைவெளிவிட்டுக் காத்திருக்கிறார் சமீரா.

தீபா மேத்தா

பிறப்பால் இந்தியரான தீபா, இப்போது கனடாவில் குடியுரிமை பெற்று டொராண்டோ நகரில் வசிக்கிறார். பஞ்சபூதங்களில் முக்கியமான நீர், நிலம், நெருப்பு போன்றவற்றை மையமாக வைத்து 'ட்ரையாலஜி’ எனப்படும் மூன்று வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சினிமாக்களை இயக்கியதால் உலகின் கவனத்தை ஈர்த்தவர். சமூகம் பேசத் தயங்கும் விஷயங்களைக் கதைக்களமாக அமைத்து சினிமாக்களை உருவாக்குவது தீபா மேத்தாவின் பிரத்யேக ஸ்டைல். 'ஃபயர்’ படம் சர்சைக்குரிய விஷயமாகக் கருதப்படும் பெண் ஓரினச்சேர்க்கை விஷயத்தை தைரியமாகப் பேசியது. 'வாட்டர்’ திரைப்படம் பாப்ஸி சித்வா என்பவர் எழுதிய 'வாட்டர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இளம்வயதில் விதவையான ஒரு பெண்ணை, முதிய விதவைகள் வாழும் இல்லத்தில் வாழ்நாள் முழுக்க வசிக்கவைக்க முனையும் சமூகத்தைப் பற்றி காட்டமாகப் பேசியது. கலாசார காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு மிரட்டல்கள்கூட விடப்பட்டன. ஆனாலும், படம் உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்தது. 1998-ல் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பட்டது, இவரின் 'எர்த்’ படம். 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் இந்த எர்த்!


மீரா நாயர்
பத்மபூஷண் விருதுபெற்ற நம் இந்திய பெண் இயக்குநர், மீரா. மும்பை மாநகரின் அழுக்குப் பக்கங்களை படையல் வைத்தது இவர் இயக்கிய முதல் படம் 'சலாம் பாம்பே’. மும்பையில் வாழும் சாலையோர சிறுவர்களைப் பற்றிய இப்படம் உலகத்திரைப்பட விழாக்களில் இந்தியாவின் மீது கவனம் விழ காரணமாக அமைந்தது. 'காமசூத்ரா: ஏ டேல் ஆஃப் லவ்’, 'மான்சூன் வெட்டிங்’, 'அமீலியா’, 'நேம்சேக்’, 'வானிட்டி ஃபேர்’ போன்ற முக்கியப் படங்களை இயக்கிய இவர், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

கேத்ரின் பிகலோ
2008-ல் வெளியான, காத்ரின் இயக்கிய 'தி ஹர்ட் லாக்கர்’ படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதோடு சேர்த்து உலகம் முழுவதும் 42 உயரிய விருதுகளைக் குவித்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், 2008-ல் இந்தப் படத்துக்கு போட்டியாக இறுதிச் சுற்றுவரை நாமினேட் செய்யப்பட்டது, 'அவதார்’. இதில் விசேஷம்... 'அவதார்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், இவருடைய முன்னாள் கணவர். அகில உலக ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டிய 'அவதார்’ படத்துக்கே ஆஸ்கர் என ஆரூடங்கள் சொன்னபோது, அமெரிக்க பாம்ப் ஸ்குவாடு, ஈராக்கில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அழித்தொழிக்கும் சம்பவங்களின் கோவையான 'தி ஹர்ட் லாக்கர்’ படம், வித்தியாசமான திரைக்கதை உத்தியால், பணியில் இருக்கும் வீரர்களின் நுண்ணுணர்வை எடுத்துச் சொல்லி, ஆஸ்கரை வென்றது.

2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம் தொடங்கி, பாகிஸ்தானின் அபோடாபாத்தில் மே 2, 2011-ல் ஒசாமா பின்லேடனை சுற்றிவளைத்து சுடப்பட்டது வரை அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறையின் பணிகளை கேண்டிட் கேமரா பாணியில் விவரித்திருந்தது இவருடைய இன்னொரு படமான 'ஜீரோ டார்க் தர்ட்டி’. கற்பனைக்கு எட்டாத உழைப்போடு இவர் உருவாக்கியது இப்படம். ஆனால், நாட்டின் மிகமுக்கியமான ரகசிய தகவல்களைப் படத்துக்காக எப்படியோ திருடிவிட்டனர் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சில மாதங்கள் முன்புவரை இவரை விசாரணை வளையத்தில் வைத்திருந்து, அண்மையில்தான் விடுவித்தது. அந்த அளவுக்கு தத்ரூபமாக பின்லேடன் வேட்டையை படமாக்கி இருந்தார் கேத்ரின்.


சோஃபியா கப்போலா

'தி காட் ஃபாதர்’ படத்தை இயக்கிய, பிரபல அமெரிக்க சினிமா இயக்குநர் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலாவின் செல்ல மகள். 43 வயதாகும் சோஃபியாவின் இரண்டாவது படமான 'லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன்’, 2003-ல் ரிலீஸ் ஆகி பலத்த வரவேற்பைப் பெற்றது. டோக்கியோ நகரில் எதேச்சையாக சந்தித்துக்கொள்ளும் வயதான நடிகருக்கும், இளம் கல்லூரி மாணவிக்கும் இடையே நிகழும் ரொமான்ஸ்தான் படத்தின் கதை. வசூலை வாரிக்குவித்த இப்படம், ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை பிரிவில் நாமினேட் செய்யப்பட்டது. முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ஒரு பெண் இயக்குநர் பெயர் நாமினேட் செய்யப்பட்டது இந்தப் படத்துக்காகத்தான். இயக்கத்துக்கான விருது கிடைக்காவிட்டாலும், 'சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே’ பிரிவில் விருதை வாங்கி, தலைமுறை பெருமையைக் காப்பாற்றினார் சோஃபியா. ஆம்... தாத்தா கார்மைன் கப்போலா, அப்பா ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலா என குடும்பமாய் வாங்கிய ஆஸ் கர் பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்டார்.

பெண்களின் பார்வையில் இன்னும் அழகாகவும், ஆழமாகவும் விரிகிறது திரை!

ஆர்.சரண்

கிண்டில்!

கிண்டில்! 

செய்தித்தாள்கள் தொடங்கி, புத்தகங்கள் வரை இளைய தலைமுறையின் சாய்ஸ்... இ-பேப்பர்தான். இதைத் தனக்கான வாய்ப்பாக்கிக் கொண்டுவிட்ட 'அமேசான்’ நிறுவனம், 'கிண்டில் பேப்பர்வொயிட்' (Kindle Paperwhite) எனும் சாதனத்தை வெளியிட்டுள்ளது. இ-புத்தகங்களைப் படிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள இதன் மூலமாக, 1,100 இ-புத்தகங்களை சேமித்துப் படிக்கலாம். ஆன்லைனில் உள்ள 30 ஆயிரம் இலவச இ-புத்தகங்கள் உள்ளிட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான கட்டண இ-புத்தகங்களையும் டவுன்லோடு செய்து படிக்கலாம். செல்போன் போலவே சார்ஜ் செய்து, அதிக பட்சம் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இது 6,000 ரூபாய் முதல் கிடைக்கும்.


Redmi Note!
செல்போன் மற்றும் நோட் பேடுகளால் கவரப்பட்டு, எந்த மாடலை வாங்கு வது, எதை விடுவது என்று யோசிப்பதற்குள், அவற்றைவிட கூடுதல் சிறப்பு மற்றும் வசதிகளு டன் அடுத்த மாடல் வந்து நம் கவனத்தை ஈர்க்கிறது. இந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'Xiaomi Redmi Note’  பலருக்கும் பிடித்துப் போய் பில் போட வைத்துவிட்டது. இரண்டு சிம் கார்டு, எடை (199கிராம்), 8 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை எக்ஸ்டர்னல் மெமரி, வய்ஃபை, 13 மெகாபிக்ஸல் கேமரா, 5 மெகாபிக்ஸல் முன்புற கேமரா, ஆண்ட்ராய்டு ஓ.எஸ் என்று அடங்கிக் கிடக்கும் ஆச்சர்யங்கள் பலப்பல! இதன் விலை 9,999 தொடங்கி, 14,499 வரை.! 

இனி எந்நாளும் 'குட் நைட்’!
தாம்பத்யம் திருப்திகரமாக அமையாமல் போக, பதற்றம் (anxiety), பயம் (fear) மற்றும் அறியாமை (ignorance) ஆகியவைதான் முதன்மைக் காரணங்கள். இதில் அறியாமையைக் களைவதற்கான வழிகளை தரமானதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அழகாக வலியுறுத்துகிறது இந்தப் புத்தகம்.
புத்தகத்திலிருந்து சில வரிகள்...

முகேஷ் - சரண்யாவுக்கு முதல் நாள்தான் திருமணம். அன்று அவர்களின் தலை மேல் விழுந்த அட்சதைகளின் எண்ணிக்கையைவிட, இன்று அதிகாலையில் மணமகனை நோக்கித் தெறித்த வார்த்தைகள் அதிகம். திருமணம் ஆன அன்றே அவர்களுக்கு முதல் இரவு. வாலிபமும் வளமையும் சேர்ந்து எத்தனை தடவை கியர் போட்டாலும் முகேஷால் சரண்யாவை திருப்திப்படுத்தவே முடியவில்லை. ஒரு பெண்ணை முதல் இரவில் திருப்திப்படுத்தத் தெரியாதவனுக்கு இந்த சமூகம் தருகிற பெயர் 'ஆண்மைஇல்லாதவன்’. இதற்கெல்லாம் தீர்வு வழக்கறிஞரும் மருத்துவரும் மட்டும்தானா?


ரைஸ் பக்கெட் சேலஞ்ச்!
பக்கெட் சேலஞ்ச் வரிசையில், ஊடக வியலாளர் மஞ்சுலதா உருவாக்கி இருக்கும் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' செம ஹிட். 'ஏழைகளுக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தர வேண்டும். புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்ய வேண்டும்' என்பதுதான் சேலஞ்ச்.

தன் பகுதியில் வசிக்கும் சிலருக்கு அரிசியைக் கொடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பினார் மஞ்சு. அவரின் நண்பர்களும் இதைத் தொடர, 10 நாட்களுக்குள்ளாகவே 5 லட்சத்துக்கும் அதிகமான வர்களைச் சென்று சேர்ந்தது. இந்தியா முழுக்க பிரபலமாகியிருக்கும் இந்த ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மூலமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை 25,000 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

இதற்காக, மஞ்சுவுக்கு, 'ஐகாங்கோ' (iCONGO) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பும், ஐ.நா-வும் இணைந்து கர்மவீர் விருதை வழங்கவிருக்கின்றன. 2015 மார்ச் 23-ல் டெல்லியில் நடைபெறும் விழா வில் இந்த விருது வழங்கப்படும்.

'வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்... தவிர்ப்பது எப்படி?

மூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்னைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் 'வாட்ஸ்ஆப்' எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்னைகள் பல. 'வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே... இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்... இதோ பதில் விரிவாக!

என்னென்ன ஆபத்துகள்?

தெரிந்தவரோ, தெரியாதவரோ... உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்... அவர்களால் உங்கள் 'வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் 'வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

எப்படித் தவிர்க்கலாம்?

பிரச்னைகளைத் தவிர்க்க, 'வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது,  பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், 'லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். 'ப்ளாக்' (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்... போயே போச்!
தெரிந்தவர்களோடு மட்டும் 'வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.

ஆபத்துதவி ஆப்ஸ்!

ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதி லிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான 'நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


நீங்கள் ஏதாவது பிரச்னையில் மாட்டிக்கொண்டால், 'ஆபத்துதவி'யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அப்போது இருப்பது இன்டர்நெட் வசதி இல்லாத இடமாக இருந்தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்துவிடும்.

பின்குறிப்பு:  

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.zayaninfotech.security

ச.ஸ்ரீராம்

Sunday, September 21, 2014

அருள்வாக்கு - எல்லா உலகுகளையும் ஆண்டு அநுபவிப்பவர்


பூராதி புவந போக்த்ரே :‘பூ’ என்றால் பூமி. ‘பூராதி’ - பூமி முதலிய; ‘புவந’ - உலகங்கள். கணக்கில்லாத லோகங்களைப் பதிநாலு லோகம் என்றும், அதில் கீழ் லோகங்கள் ஏழு போக பூமியிலிருந்து ஏழு லோகம் என்றும் Classify பண்ணி, மேலும் சுருக்கமாக பூர்-புவஸ்-ஸுவர் லோகம் என்று மூன்றாகச் சொல்வது வழக்கம்.

பூலோகம் அடி. புவர் லோகம் நடு. ஸுவர் லோகம் உச்சி. மூன்றையும் சேர்த்து ‘வ்யாஹ்ருதி’கள் என்பதாக ஓம்காரத்துடன் சேர்த்துச் சொல்வது வேத ஸம்ப்ரதாயம். நாம் வைதிகமாகப் பண்ணும் கர்மமோ, ஜபமோ, த்யானமோ எதுவானாலும் ஸமஸ்த லோகங்களுக்கும் அதனால் நல்லது ஏற்பட வேண்டும் என்ற உசந்த அபிப்ராயத்தில் அப்படிச் சொல்வது.

மறுபடியும் காயத்ரி வந்து விடுகிறது! காயத்ரி ஆரம்பத்திலும் வ்யாஹ்ருதிகளைச் சேர்த்திருக்கிறது. முன்னேயே ‘பூஸுராதி’ என்ற இடத்தில் ‘பூ’வை (தீக்ஷிதர்) கொண்டு வந்தார். அப்புறம் ‘வாஸவாதி ஸகல தேவ’ர்களைச் சொன்னபோது அவர்களுடைய வாஸ ஸ்தானமான ஸுவர் லோகத்தை Understood ஆக, உள்ளுறை பொருளாகக் குறிப்பிட்டார். இப்போது கீர்த்தனம் முடிகிற ஸமயத்தில் ‘பூராதி புவநம்’ என்று அத்தனை லோகங்களையும் சொல்கிறார்.

பூராதி புவநங்களில் நடக்கும் ஸகல காரியமும் ஒரு பராசக்தியின் லீலா அநுபவத்திற்குத்தானே? அந்த மஹா சக்தியாக இருந்து கொண்டு ப்ரபஞ்சங்கள் எல்லாவற்றையும் ஆண்டு அநுபவித்துக் கொண்டிருக்கும் ‘போக்தா’ ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியே என்கிறார். ‘பூராதி புவந போக்த்ரே’.

ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க்

சிறு வயதில் ஒருவரைப் பார்த்து நீ என்னவாக ஆசைப்படுகிறாய் என்றால், நான் டாக்டர் ஆவேன், இன்ஜினீயர் ஆவேன் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு சினிமா பிடிக்கும். நான் சினிமா எடுக்கப் போகிறேன் என்று சொன்னால், ஆச்சர்யமாகத்தானே பார்ப்பார்கள். அந்த ஆச்சர்யத்தை நிஜமாக்கிக் காட்டியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இதற்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.

1946–ம் ஆண்டு ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க் அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் பிறந்தார். சிறுவயதில் ஸ்பீல்பெர்க்கின் பெற்றோர் அவருக்குப் பரிசாக அளித்த உடைந்த ஸ்டில் கேமராதான் இவரது சினிமா ஆர்வத்துக்கு வித்திட்டது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே எட்டு சிறிய குறும்படங்களை எடுத்து அசத்தியவர். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாடகக் கல்லூரிக்குப் படிக்க விண்ணப்பித்த ஸ்பீல்பெர்க்கின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மனம் தளராமல் கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே படிப்பு பிடிக்காமல் அங்கிருந்தும் வெளியேறினார்.


சினிமா பற்றி படிக்கவே முடியாத இவன் எங்கே சினிமா எடுக்கப் போகிறான் என்று எல்லோரும் இளக்காரம் பேசினார்கள். ஆனால், ஸ்பீல்பெர்க் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், யுனிவர்சல் ஸ்டுடியோவில் சம்பளம் வாங்காத எடிட்டிங் துறை மாணவராகச் சேர்ந்தார். அதுவும் அந்த வேலையில் விடுமுறை என்பதே கிடையாது. கல்லூரியில் சொல்லித்தரப்படும் தியரியைவிட யுனிவர்சல் ஸ்டுடியோவில் அவர் பிராக்டிகலாக செய்து தெரிந்துகொண்டது ஏராளம்.

தான் பணிபுரிந்த யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக 25 நிமிடம் ஓடக்கூடிய ஆம்ப்ளின் என்கிற குறும்படத்தை இயக்கினார். இதில் ஓர் இளைஞன் ஒரு பெண்ணோடு பாலைவனத்தைக் கடப்பதை வசனமே இல்லாமல் சொல்லியிருந்தார். இதுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அவரது முதல் கமர்ஷியல் சினிமாவான டூயல், உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்து அவர் எடுத்த ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஜுராஸிக் பார்க் போன்ற படங்கள் வசூல் சாதனை புரிந்தது. அவர் எடுத்த ஸ்ண்ட்லர் லிஸ்ட் அவருக்கு ஆஸ்கார் விருதை வாங்கித் தந்தது.

இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் இயக்குநராக இருக்கும் ஸ்பீல்பெர்க் நமக்குச் சொல்லும் ஒரே பாடம்:  போராடினால்தான் லட்சியம் நிறைவேறும்!

ஆண்ட்ராய்டு ஒன்!

கடந்த ஜூன் மாதம் கூகுள் நிறுவனம் ‘Google I/O’ மாநாட்டில் ‘ஆண்ட்ராய்ட் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்தது. சிறந்த தொழில்நுட்பத்துடன் இயங்கும் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களைத் தயாரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்படி, ‘ஆண்ட்ராய்ட் ஒன்’ ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில்தான் முதலில் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படியே கடந்த வாரம் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியானது.

முதல்கட்டமாக இந்த ஸ்மார்ட் போனை ‘ஸ்பைஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்பைஸ் ஆண்ட்ராய்ட் ஒன் ட்ரீம் UNO (Spice Android One Dream UNO) என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் போன், 4.5 இன்ச் ‘LCD Capacitive’ டிஸ்ப்ளேயுடன் வருகிறது.

 

1.3 GHz ‘Quad Core’ ப்ராஸஸர் மற்றும் 1GB ரேம் வசதியோடு வரும் இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்ட் கிட்-கேட் 4.4.4 இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும், பிரத்யேகமான ‘Mali-400 MP’ என்ற கேமிங் ப்ராஸஸரும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். 5 மெகா பிக்ஸல் பின்புற கேமரா, 2 மெகா பிக்ஸல் முன்புற கேமரா வசதியோடு வரும் இந்த ஸ்மார்ட் போனால் முழுநீள HD வீடியோவை ரெக்கார்டு செய்ய முடியும்.

4 GB இன்டர்னல் மெமரியுடன் வரும் இந்த ஸ்மார்ட் போனை 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் போனின் 1700 mAh ‘Li-Polymer’ பேட்டரி, 2G நெட்வொர்க்கில் 17 மணி நேரமும் 3G நெட்வொர்க்கில் 10 மணி நேரமும் நீடித்திருக்கும்.

Wi-Fi, ப்ளூ-டூத், இரட்டை சிம் வசதிகளோடு வரும் இந்த ஸ்மார்ட் போன் 10GB ஸ்பைஸ்   Cloud Storage, 15 GB google storage வசதியுடன் இலவசமாக வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட் போன் ‘Flipkart’ மற்றும் ‘snapdeal.com’ இணையச் சந்தையில் ரூபாய் 6,299 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. விரைவில், மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் நிறுவனங்களின் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட் போன்களும்  இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Friday, September 19, 2014

வாய்ப் புண்


உலகத்தில் ஐந்தில் ஒருவர் வாய்ப் புண்ணால் அவதிப்படுகிறார் என்கிறது புள்ளிவிவரம். aphthous stomatitis என மருத்துவரீதியாகக் குறிக்கப்படும் வாய்ப் புண் பற்றிய சந்தேகங்களுக்குப் பதில் காண்போமா?

வாய்ப்புண் ஏற்படக் காரணம் என்ன?

வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் உள்ள திசுத் தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படந்தைத்தான் வாய்ப்புண் என்கிறோம். உதடு, நாக்கு, கன்னங்களின் உட்புறம் மற்றும் தொண்டைப் பகுதியில் வாய்ப்புண் வரலாம். இதனால், ஏற்படும் வலி காரணமாக பேசவோ, உணவு உட்கொள்ளவோ சிரமமாக இ்ருக்கும்.

பித்தம் அதிகரித்தால், வாய்ப்புண் வரும் என்கிறது சித்த மருத்துவம். ஜீரணக் கோளாறு, உடல் சூடு, மன அழுத்தம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி, பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற உயிர்ச்சத்துக் குறைவு, உணவு மற்றும் மருந்துகள் ஒவ்வாமை, புகை, மதுப்பழக்கம், ஹார்மோன் மாறுபாடு, பற்கள் மற்றும் வாய் சுத்தமின்மை, ஹெர்ப்பெஸ் (Herpes) வைரஸ் மற்றும் பாரம்பரியம் காரணமாகவும் வாய்ப்புண் வரலாம். வாய்ப்புண்கள் 7 முதல் 10 நாட்களில் குணமாகிவிடும். நீண்ட நாட்கள் ஆறாத புண்கள், புற்றுநோயாகவும் மாறலாம்.

வாய்ப்புண் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

  மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  உடல் குளிர்ச்சியாக இருக்க, அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.  
  பற்கள் மற்றும் வாயினை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
  மன அழுத்தம் ஏற்படாதவாறு தியானம் மற்றும் யோகா் பயிற்சி செய்ய வேண்டும்.

வாய்ப்புண் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
  நெல்லி இலைகளை வேகவைத்த நீரில் அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்ப்புண் ஆறும்.    
  கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய் கொப்பளிக்க புண் ஆறும். இதனை உள்ளுக்கும் சாப்பிட்டு வரலாம்.
  மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கலாம். முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.
  பாலில் சிறிது தேன் கலந்து அருந்த, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
  வாய்ப்புண் மீது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவிவர, நல்ல பலன் கிடைக்கும்.  
  மாசிக்காயை பாலில் அரைத்து தேனில் குழைத்துத் தடவலாம்.  
  பச்சரிசி, பயத்தம் பருப்பு, 1 ஸ்பூன் வெந்தயம், உரித்த 1 முழுப்
 பூண்டு இவற்றை குக்கரில் வைத்து வெந்தவுடன், கெட்டியான தேங்காய்ப் பால் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.
  மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரையை தேங்காய் சேர்த்து பொரியலாகச் செய்து சாப்பிடலாம்.  
  மணத்தக்காளிக் கீரை, வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்துச்சாறாகக் குடிக்க வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் வாயுத் தொல்லையும் நீங்கும்.
  ஒரு துண்டு கடுக்காயை வாயில் அடக்கிவைத்திருக்க, வாய்ப்புண் ஆறும்.
  காலையில் வெறும் வயிற்றில் சிறுதுண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும். மஞ்சள் தூளை தேனில் குழைத்துப் புண்ணின் மீதும் தடவலாம்.
  துளசி இலையினை வாயிலிட்டு வாய்ப்புண் பகுதியில் படும்படி மென்று, மென்றதை விழுங்கிவிட வேண்டும்.
  புதினா இலைச்சாறு தடவினால், எரிச்சல், வலி குணமாகும்.
  துவர்ப்புத்தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு நல்லது. இதனை வேகவைத்து சூப் செய்து குடிக்கலாம்.
  நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும்.


காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?

காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது  விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்  வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?
 
உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
 
தண்ணீர் 

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.

தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.

 
வெந்தயத் தண்ணீர்   
 
சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்தும் இதுதான். வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில்  ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது. வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை. 

அருகம்புல் சாறு   
 
அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

வெள்ளைப்பூசணி  சாறு 
 
வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.

 
இஞ்சிச் சாறு இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
 
நீராகாரம்
காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ்  என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய்ச் சாறு
தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.

இளநீர்
இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.

எலுமிச்சைச் சாறு
பல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர்் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.  இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்!

ச்சை முட்டை
ஒல்லியாக இருப்பவர்கள், 'ஜிம்’ பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டைதான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது 8 மணி நேரமாவது ஆகும். இதனால், நம் வயிற்றில் உள்ள உள்ளுறு குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற நுண்சத்துகளை உறிஞ்ச முடிவது இல்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் முட்டையில் உள்ள புரதமும் (வெள்ளைப்பகுதி) மஞ்சள் கருவும், காலையில் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது வாயுத்தொல்லை ஏற்பட்டு, நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுத்திவிடும். எனவே, வேகவைத்த முட்டையாக இருந்தாலும் காலை மற்றும் மதிய உணவின்போது மட்டுமே சாப்பிட வேண்டும். 


 டாக்டர்.வேலாயுதம்

 
மனநோய்க்கு என்ன மருந்து?

 
உடம்புக்கு நோய் வந்தால் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், மனசுக்கு நோய் வந்தால் என்ன செய்வது? அதற்கும் அற்புதமான மருந்து உண்டு என்கிறார் சுவாமி சின்மயானந்தா.
 
முதலில் மனநோய் வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அகங்காரம் என்ற விஷக்கிருமிதான் பெரும்பாலான, மாசுபட்ட மனங்களுக்குக் காரணமாக அமைகிறது. இந்த அகங்காரம் மனசின் மீது மட்டுமில்லாமல், அறிவு, ஆரோக்கியத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி உடல் நலத்தையும் கெடுக்கிறது. இந்தக் கிருமியை அழிக்க மனசை மாசு என்னும் பிணியிலிருந்து காக்க வைத்தியம் உண்டு. அருமையான மருந்தும் உண்டு. என்ன மருந்து அது?
 
விசுவாசம்-11 கிராம், ஒழுங்கு-10 கிராம், நேர்மை- 8 கிராம், உறுதி - 9 கிராம், முயற்சி -7 கிராம், அன்பு உதவும் மனப்பாங்கு- 6 மி.லிட்டர், சுத்தம்-3 மி.லிட்டர் என்ற அளவில் இந்த குணாதிசய மருந்துகளை அறிவு என்னும் பாட்டிலில் போட்டு ஒன்றாகக் குலுக்குங்கள். இந்த மருந்தை உட்கொண்ட பிறகு மன அடக்கம் என்ற மூடியைப் போட்டு, பாட்டிலை இறுக மூடி விடுங்கள். இதனுடன் வேறு சில குறிப்புகளையும் நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
 
*‘அவதூறு’ வம்பைச் சிறிதும் ருசிக்க விரும்பாதீர்கள். அந்த ஆசை வரும் போது ‘ஓம்’ என்ற ஜபத்தை அதிகமாகப் பருகுங்கள்.
* மிருக இச்சை, காம உணர்வு போன்ற பாதைகளில் செல்லாதீர்கள்.
* தியானத்தில் ஓய்வெடுங்கள். ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளுங்கள்.
* தினமும் ஒரு வேளை ‘உபநிஷத்’ என்னும் ‘சூப்’பைப் பருகுங்கள்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு நாளும் மூன்று முறை இரண்டு பத்தி ‘பகவத் கீதை’யைப் பருகுங்கள். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். அப்புறமும் மனநோய் அறிகுறி தொடர்ந்து இருக்குமானால் இந்த மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் - என்று மனநோய்க்கு இந்த மருத்துவச் சிகிச்சையை அளித்தவர்- சுவாமி சின்மயானந்தா அவர்களே!

ஆர். சந்திரிகா,
 

Thursday, September 18, 2014

அலசியா மொன்டானா - 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் அது. முன்னணி வீராங்கனைகள் பலர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பெண்ணைவிட மற்றொரு பெண்ணைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் அதிசயித்தனர். காரணம், அந்தப் பெண் ஓடியது, தனது எட்டு மாதக் கர்ப்பத்தோடு!

அந்தப் பெண், அலசியா மொன்டானா.  அமெரிக்காவின் அதிவேகப் பெண்மணி.

அலசியாவுக்கும் தடகள ஓட்டத்துக்கும் அமெரிக்காவில் ஒரே அர்த்தம்தான். நான்கு வருடங்களில் 800 தேசியப் பதக்கங்கள் பெற்றவர். தெற்கு கலிபோர்னியாவில் 1986-ம் ஆண்டு பிறந்த அலசியா, பள்ளிப் படிப்புக்காக கென்யான் பள்ளியில் சேர்ந்தார். அங்கு நடந்த போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். ஒன்று, இரண்டு பரிசுகள் வெல்ல ஆரம்பித்ததும், தடகளத்தின்மீதான காதல் அரும்ப ஆரம்பித்தது. சுவாசப் பயிற்சி மற்றும் கட்டுக்கோப்பான உடற்பயிற்சி என இரண்டிலும் சரியாக இருந்தால் மட்டுமே பிரகாசிக்கக்கூடிய 800 மீட்டர் தொடர் ஓட்டத்தை, அலசியா சின்ன வயதிலேயே தேர்ந்தெடுத்தார்.  


2007-ம் ஆண்டு அமெரிக்கத் தடகள வீராங்கனைகளுக்கான போட்டியில் கலந்துகொண்டு தங்கம் தட்டியபோது, அமெரிக்கா எங்கும் பிரபலம் ஆனார். அமெரிக்கத் தேசியச் சாதனையான 1:57:34 விநாடிகளில் 800 மீட்டர் தூரத்தைக் கடந்து, 2010-ம் ஆண்டு உலகப் பிரபலம் ஆனார்.

2008-ம் ஆண்டு பயிற்சியின்போது கீழே விழுந்ததில் அலசியாவுக்குக் கால்களில் கடும் பாதிப்பு. நிற்கவே முடியாத நிலைமை. இனி போட்டிகளில் எப்படிக் கலந்துகொள்வார் என எல்லோருக்கும் சந்தேகம். அலசியா, ஸ்டேடியத்துக்குச் சக்கர நாற்காலியில் வந்தார். ''நான் இதை ஓர் அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்!'' என்று அவர் அறிவித்தபோது, அமெரிக்காவே உணர்ச்சிவசப்பட்டது. அடுத்த தேசியப் போட்டியிலேயே மீண்டும் தங்கம் வென்று காட்டியபோது, அத்தனை பேரும் அண்ணாந்து பார்த்தார்கள். அலசியாவின் தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்று... அவர் தலையில் சூடும் டெய்சி பூ. எந்தவொரு போட்டியில் அலசியா பங்கேற்றாலும், தலையில் நிச்சயம் பெரிய சைஸ் டெய்சி பூ ஒன்றைச் சூடியிருப்பார். இதனால் அமெரிக்கர்கள் அவரைச் செல்லமாக  'பறக்கும் பூ’ என்றே கூப்பிடுகிறார்கள்.

அலசியா 2011-ம் ஆண்டு லூயிஸ் என்பவரை மணம் முடித்தார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றுவந்தாலும், கடந்த ஜூன் மாதம் வயிற்றில் குழந்தையோடு ஓடிய அந்த 800 மீட்டர் ஓட்டம், அலசியாவை உலகப் பிரபலம் ஆக்கிவிட்டது. ''வயிற்றில் குழந்தையுடன் போட்டியில் பங்கேற்றது, நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல.. என் பயிற்சியாளர் மற்றும் கணவர் இருவரும் நம்பிக்கையுடன் எனக்கு அனுமதி கொடுத்தார்கள். கருவில் இருக்கும் எட்டு மாதக் குழந்தையோடு ஓடியதைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அதற்கு நான் எடுத்த பயிற்சிகள்தான் காரணம். சரியான உடற்பயிற்சியின் மூலம் எனக்கும், என் குழந்தைக்கும் எந்தப் பாதிப்பும் வராத அளவுக்கு உடலைப் பார்த்துக்கொண்டேன். அதனால், என்னால் இதைச் சாதிக்க முடிந்தது. மற்ற தாய்மார்களும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் அவர்களும் கர்ப்பக் காலத்தில் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்!' என அலசியா மெசேஜ் சொல்ல, இப்போது அமெரிக்க ஜிம்களில் கர்ப்பிணிகளின் கூட்டம். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி குழந்தையை ஆரோக்கியமாகப் பிரசவித்துவிட்டார் அலசியா. தன் குழந்தையின் படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர, உலகமே சந்தோஷமாக வாழ்த்தியது. நீங்கள் இந்தச் செய்தியைப் படிக்கும் சமயம், அந்தப் பறக்கும் பூ, அமெரிக்காவின் ஏதேனும் ஒரு களத்தில் 2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் ரியோ ஒலிம்பிக்கிற்கான பயிற்சிகளில் வியர்வையைச் சிந்திக்கொண்டிருக்கும்!


Wednesday, September 17, 2014

நவராத்திரி - 9 நாட்கள்

Tuesday, September 16, 2014

நவராத்திரி விரத பலன்...

அகில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன் மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்கடாட்சம் அற்புதமான காலம்தான் நவராத்திரி.  

நவராத்திரி விரத காலம்...

ஸ்ரீமத் தேவிபாகவத புராணத்தில், ஸ்ரீவியாச முனிவரிடம் நவராத்திரி காலத்தின் மகத்துவத்தையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் விபரங்களையும் கேட்கிறான் ஜனமஜேயன் (நவராத்ரே து ஸம்ப்ராப்தே கிம் கர்தவ்யம் த்விஜோத்தம...). அதற்கு வியாச மகரிஷி, 'நவராத்திரி இரண்டு வகை. ஒன்று வஸந்த ருதுக் காலத்தில் (சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் வஸந்த நவராத்திரி. மற்றொன்று சரத் காலத்தில் (புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் சரத் நவராத்திரி’ என்று விளக்குகிறார்.

இவை இரண்டும் எமதருமனின் இரண்டு கோரைப் பற்கள் போன்றவை என்பதால், இந்தக் காலங்களில் அனைத்து பிராணிகளுக்கும் தீயவை ஏற்பட வாய்ப்பு உண்டு. நோய்கள், இயற்கை சீற்றங்கள், மனக் குழப்பங்கள் போன்றவையும் ஏற்படலாம். ஆகவே இந்த காலங்களில் புத்திமான்களும், நல்லதையே விரும்புபவர்களும் சண்டிதேவியை ஆராதனம் செய்ய வேண்டும் என்று வியாசர் கூறுகிறார்.


'கலௌ சண்டி விநாயகௌ’ என்ற வாக்கின்படி இந்தக் கலி காலத்தில், நமது இன்னல்கள் யாவற்றையும் விலக்கி நன்மை களைப் பெற்றிட விநாயகர் வழிபாடும், சண்டிகையின் வழிபாடும் நமக்கு உதவும் என்பது முன்னோர் வாக்கு.

அருள் தரும் நவராத்திரி!

'நவ’ எனில் ஒன்பது; 'ராத்ரீ’ எனில் இரவு. ஆக 'நவ ராத்ரீ’ (நவ ராத்திரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள். 'நவ’ எனில் 'புதுமையான’ என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதுமட்டுமா? நவகிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த நவராத்திரி காலங்களில் அனைவரும் அம்பிகையை வழிபடுதல் வேண்டும்.
அவள்தானே உலகுக்கெல்லாம் மூல கரு ('விச்வஸ்ய பீஜம்’). அவளை வழிபடுவதால், நம் உலகம் என்றில்லை; இந்த பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகும் என்பது நிச்சயம்.


விரத நியதிகள்...
ஆச்வின மாதம் அதாவது, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் துவக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்கிறது ஸ்கந்த புராணம்.

நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது.

புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும். நவராத்திரிக்கு  முதல் நாள், அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.

பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.

பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்குத் தயாராக வேண்டும். (இயன்ற வரையில் தகுந்த அந்தணர்களை வரவழைத்து, வழிபாடுகள் நடத்தி வைக்கச் சொல்வது சிறப்பு).

பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்குசக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.


அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு, மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் துவங்க வேண்டும்.

''தாயே... உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப் போகிறேன். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்'' என்று மனதார வேண்டிக்கொண்டு
பூஜிக்க வேண்டும். பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். 9 நாட்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.

9 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.

விரிவான பூஜை இயலாதெனில்...

சரி... இந்த விரதத்தை சந்தனம், புஷ்பம், தூபதீபம், நைவேத்தியம் கூடிய உபசாரங்களுடன் தான் ஆராதிக்க வேண்டுமா? இதுபோன்று செய்ய முடியாதவர்களும் இந்த விரதத்தில் பங்குகொள்ள ஏதேனும் வழி உண்டா?

இதற்கு  மிக அருமையாக பதில் சொல்கிறது பவிஷ்ய புராணம். 'இதுபோன்ற உபசாரங்கள் இல்லை என்றாலும், பூவும் நீரும் அளித்தாலே போதும்; அதுவும் இல்லையென்றாலும் உண்மையான பக்தியுடன், 'அம்மா என்னைக் காப்பாற்று’ என்று சக்தியைச் சரணடைந்தாலே போதும்; நாம் கேட்டதை மட்டுமின்றி, நமக்கு நன்மையானவை அனைத்தையும் அளிக்க எல்லாம் வல்ல அன்னை காத்துக் கொண்டிருக்கிறாள்’ என்கிறது அந்த புராணம்.

உலகில் உயர்ந்த தெய்வம் தாய்தானே! அந்த தாய் என்ற தெய்வத்துக்கு எல்லாம் மூலமான தாயை (''யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:'') வணங்கித் தொழுதல் நமது கடமை அல்லவா!

நவராத்திரி விரத பலன்...

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.

தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.
படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.

நவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை... குமாரி முதலாக 9 வடிவங்களாக பாவித்து வழிபடுவதும் உண்டு. பி.சந்திரமெளலி

Monday, September 15, 2014

ஏர்செல்-மேக்ஸி - மாறன் சகோதரர்கள்

 
ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு, சன் தொலைக்காட்சி வசதிக்காகத் தங்கள் வீட்டில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகத்தை நடத்தியது போன்ற விவகாரங்களில் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவரும் கலாநிதி - தயாநிதிமாறன் சகோதரர்களுக்கு மற்றொரு தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது. சமீபத்தில் கல் (Kal) கேபிள்ஸ் நிறுவன வழக்கில் நீதியரசர் ராமசுப்பிரமணியம் கொடுத்த தீர்ப்பு. தொடர் சோதனைகள் காரணமாக சகோதரர்கள் கடந்த 25 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பிய சன் குழும சாம்ராஜ்யம் சடசடவென சரிந்து விடுமோ என்ற சந்தேகம் தொழில்- வர்த்தக வட்டாரங்களில் படபடக்கிறது.
 
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 33 தொலைக்காட்சிகள், பல்வேறு இந்திய மொழிகளில் 45 பண்பலை வானொலி நிலையங்கள், மூன்று தினசரிகள், சன் டி.டி.ஹெச், 53 விமானங்களை இயக்கும் ஸ்பைஸ் ஜெட், சன் பிலிம்ஸ், சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணி, ஆறு வாரப் பத்திரிகைகள் என்று கட்டியாளும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 16,000 கோடி என்று அரசுக்குக் கணக்கு காட்டப்பட்டாலும், உண்மையான சொத்து மதிப்பு 40,000 கோடிக்கும் மேல் என்கிறது தொழில் வட்டாரம்.  

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமரும்போதும் மத்திய அரசில் தி.மு.க. செல்வாக்கு கொடிகட்டி பறந்தபோதும் சன் குழுமம் விரைவுப் பாதையில் வளர்ச்சியைக் கண்டது. அதிலும் தயாநிதி மாறன் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த காலம் சன் குழுமத்தின் பொற்காலம் என்று கூடச் சொல்லலாம். அரசியல் ஆதரவும், அரசின் ஆதரவும் ஒருங்கே பெற்று உயர்நிலையை அடைந்த இந்தக் குழுமம், இன்று இவையிரண்டும் இல்லாத நிலையில் சரிவைச் சந்தித்து நிற்கிறது. 
 
முதலில் தொடங்கிய ‘பூமாலை’ வீடியோ பத்திரிகை சரியாகப் போகவில்லை. அதன்பின் சில காலம் அமைதியாக இருந்த சகோதரர்கள் 1993-ல் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கியதுதான் சன் தொலைக்காட்சி. 1996ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர, சன் தொலைக்காட்சியின் பிரசார பங்களிப்பும் முக்கிய காரணம். அதன்பின் சன் தொலைக்காட்சி வீறுநடை போட்டது. பிறகு சுமங்கலி கேபிள் நிறுவனம் உருவானது. அதுவரை கேபிள் டி.வி. தொழிலில் முக்கிய இடத்தில் இருந்த ஹாத்வே நிறுவனம் அதிகார துஷ்பிரயோகத்தால் விரட்டப்பட்டது. இந்தச் சூழலில்தான் தந்தை முரசொலி மாறன் மறைந்தார். குடும்பத்தின் அரசியல் வாரிசாக தயாநிதிமாறன் நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறக்கப்பட்டார்.  மத்திய சென்னையில் வென்ற மாறன் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சராக்கப்பட்டார். தில்லியில் தி.மு.க.வின் பிரதிநிதியாகவே வலம் வந்தார் தயாநிதி. அவருக்கு இந்தி தெரிந்திருப்பதை ஒரு தகுதியாகச் சொன்னார் கருணாநிதி. அந்தச் சமயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக செல்போனின் பயன்பாடு வேகமாக உயர்ந்து கொண்டிருந்தது. செல்போன் நிறுவனங்கள், தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வந்தன. சிவசங்கரன் என்பவரால் தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்த ஏர்செல் நிறுவனமும், 14 தொலைத்தொடர்பு வட்டங்களில் தமது சேவையைத் தொடங்க உரிமம் கோரியது. ஆனால் இங்கேதான் தயாநிதி தமது ஆட்டத்தைத் தொடங்கியதாகச் சொல்கிறது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப் பத்திரிகை. மலேசியாவில் செயல்படும் மேக்ஸிஸ் குழுமத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்றுவிட வேண்டும் என்று சிவசங்கரன் மிரட்டப்பட்டார். விளைவு ஏர்செல்லின் 74 சதவிகிதப் பங்குகள் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு, நிறுவனம் கைமாறியது. உடனே, செல்போன் உரிமங்கள் ஏர்செல்லுக்குக் கொடுக்கப்பட்டன. மேக்ஸிஸ் நிறுவனத்துக்குச் செய்த உதவிக்குப் பிரதிபலனாக அந்த நிறுவனம், சன் டி.டி.ஹெச். நிறுவனத்தில் 599 கோடியை முதலீடு செய்ததாகவும் சொல்கிறது குற்றப் பத்திரிகை.
 
சுப்பிரமணியம் சுவாமி மற்றும் மீடியாக்களின் தொடர் முயற்சி காரணமாக 2011ல் ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் முதல்தகவல் அறிக்கையை சி.பி.ஐ. பதிவு செய்தது. தயாநிதி பதவி விலகினார். இந்தக் காலகட்டத்தில் மாறன் சகோதரர்களின் போட்ஹவுஸ் மாளிகையில் சன் தொலைக்காட்சியின் மேம்பாட்டுக்காக பி.எஸ்.என்.எல். 323 லைன்கள் கொண்ட அதி நவீன தொலைபேசி இணைப்பும் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குத் தொலைத்தொடர்பு உயரதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்கள். தொலைத்தொடர்பு ஊழியர் சங்கங்கள் இந்த விவகாரத்தை முழுமையாக வெளியே கொண்டு வந்தன.  ஆடிட்டர் குருமூர்த்தி மீடியாவில் ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டியது மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு போனார். மாறன் சகோதரர்கள் நடத்திய இந்தத் தொலைபேசி இணைப்பகத்தால் அரசுக்கு 440 கோடி நஷ்டமாம். சி.பி.ஐ. இந்த விவகாரத்திலும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறது. எந்த நேரத்திலும் குற்றப் பத்திரிகை பதிவாகலாம். தயாநிதி மாறன் அதிகாரத்தில் இருந்தபோது ரத்தன் டாடாவையும் மிரட்டி அவரது நிறுவனத்தின் பங்குகளை சன் குழுமத்துக்குக் கேட்டதாகவும் செய்திகள் அடிபட்டன.2011ல் ஏர்செல் - மேக்ஸில் நிறுவன விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும் சி.பி.ஐ. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காரணம் ஐ.மு. அரசு இருந்ததுதான். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சி.பி.ஐ. இந்த விஷயத்தில் ஆலோசனை கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரை அணுகியது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்று தலைமை வழக்கறிஞர் சொல்லிவிடவே நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது சி.பி.ஐ. மேக்ஸிஸ் நிறுவனம் இயங்கும் மலேசியாவில் முழு விசாரணை நடக்கவில்லை; எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது" என்ற தயாநிதி மாறனால் போடப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்த போதுதான் மத்திய அரசு கல் கேபிள் நிறுவனத்தின் உரிமத்தை ‘பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற காரணத்தைச் சொல்லி ரத்து செய்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் போனார் கலாநிதி. மத்திய அரசின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தாலும் நீதியரசர் தெரிவித்த ஒரு கருத்து சன் குழுமத்தைக் கலக்கியிருக்கிறது. 
 
‘பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கேபிள் நிறுவன உரிமம் ரத்து என்றால், தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் இந்த வரையறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த இரு அமைப்புகளுக்கும் வெவ்வேறு பாதுகாப்பு வரையறைகள் இருக்க முடியாது. பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே’ என்று சொல்லியிருக்கிறார் நீதியரசர். இந்த அடிப்படையில் சன் தொலைக்காட்சிகளுக்கும் உரிமம் ரத்தாகும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.நஷ்டத்தில் ஓடும் சன் குழுமத்தின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கும் ஆபத்து வந்துகொண்டிருக்கிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகள் கலாநிதி குடும்பத்திடம் இருக்கின்றன. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஊழியர்களிடம் வசூல் செய்த வருமான வரியை அரசுக்குச் செலுத்தவில்லை. தவிர அந்த நிறுவனத்தை கலாநிதி வாங்கியதே அலைக்கற்றை ஊழல் பணத்தில்தான். இது தொடர்பாக முழு விசாரணை தேவை.

ஞான விளக்கு!

லோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும் தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும் போது மஹான்கள் அவர்களை ரக்ஷிக்க உபதேசம் பண்ணுகிறார்கள். அந்த உபதேசம் விளக்கெண்ணெயாகத்தான் தோன்றும். ஆனால், அதுதான் உண்மையில் விளக்கும் எண்ணெய். ‘பல் விளக்குவது’, ‘பாத்திரம் விளக்குவது’ என்று ஸாதாரண ஜனங்கள் சொல்லுவதில் நிரம்ப அர்த்தம் இருக்கிறது.

ஒன்றிலே இருக்கிற அழுக்கைத் தேய்த்துப் போக்கிவிட்டால் அது சுத்தமாகி, விளக்கம் பெற்றுவிடுகிறது என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். வயிற்றில் இருக்கிற அழுக்குகளை அலசிப் போக்கி சுத்தமாக்கி வைப்பதே விளக்கெண்ணெய். மஹான்களின் உபதேசம் மனஸில் உள்ள அழுக்குகளைத் தேய்த்து அலம்பி விளக்கி வைத்து ஞான விளக்கை ஏற்றி வைப்பது.

கொட்டையூர் என்று சொன்னேனே, அது ரொம்பவும் பூர்வ காலத்தில் ஊராகவே இல்லாமல் ஆமணக்கங்காடாகத்தான் இருந்ததாம். ஏதோ ஒரு ஸந்தர்ப்பத்தில் அங்கே ஒரு கொட்டைமுத்துச் செடியின் கீழ் பரமேச்வரன் லிங்கமாக ஆவிர்பவித்தார். அப்புறம் காடு ஊராயிற்று. புண்ய ஸ்தலமாயிற்று. ஆமணக்கின் கீழ் இருந்து ஸ்வாமி வந்ததால் அதற்கு கொட்டையூர் என்றே பெயர் ஏற்பட்டது. இப்போதும் அங்கே ஸ்தல விருக்ஷம் ஆமணக்குத்தான்.

இந்த ஊரில்தான் அந்த ஓகு பஹபூ காலமாகத் தபஸ் பண்ணிக் கொண்டிருந்தார். அதனால் ’கொட்டையூர்க்காரர் என்றே அர்த்தம் தருகிற ’ஏரண்டகர்’என்ற பெயரை அவருக்கு ஜனங்கள் வைத்து விட்டார்கள். பிற்காலத்தில் அந்த பெயர் அவருக்கு இன்னொரு விதத்திலும் பொருந்தி விட்டது. ஆமணக்கு எப்படி தன்னையே பிழிந்துகொண்டு எண்ணெயாகி ஜனங்களுக்கு உபகரிக்கிறதோ அப்படித் தன்னையே லோகோபகாரமாக இந்த ஏரண்டக ரிஷியும் தியாகம் செய்துகொண்டார். அந்தக் கதையைச் சொல்லத்தான் ஆரம்பித்தேன். உயிர்த் தியாகிகள், Martyrs என்று ஏதேதோ சொல்கிறார்களே, அந்தத் தத்வம் ஸமீப காலத்து தேசபக்தியில்தான் தோன்றியதென்றில்லை; ததீசியிலிருந்து எத்தனையோ மஹரிஷிகள் கூட ஆதியிலிருந்து ஜனஸமூகத்தின் கே்ஷமத்துக்காக உயிரையே கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் காட்ட நினைத்துத்தான் ஏரண்டகர் கதை ஆரம்பித்தேன்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

என்ன பயன்? - ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்

அரசு   மானியம்  பெறுகிறவர்களில் பலருக்கு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இல்லை. இதனால்  அந்த மானியம் மக்களுக்குப் போய்ச் சேராமலே இருக்கிறது. எனவே, 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துத் தரும் ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தால் என்ன  பயன்?
 
பிரதமர் துவக்கி வைத்த அனைவருக் கும் நிதிச் சேவை திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத வர்கள் வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியும். இதில் ரூபே டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதனுடன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடும் இலவசமாகக் கிடைக்கும். மேலும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படுகிறது. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால் இந்தத் தொகை கிடைக்கும்.
 
இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது. அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதற்குமேல் இருப்பு வைத்தால், அந்த நபரின் வங்கிக் கணக்கு வழக்கமான வங்கிக் கணக்காக மாறிவிடும்.

 

அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர் களுக்கு கேஒய்சி (உங்கள் வாடிக்கை யாளர்களை புரிந்து கொள்ளுங்கள்) விதிமுறைகள் எளிமைப்படுத்தப் பட்டுள்ளன. அதாவது, ஆதார் அட்டை மட்டும் இருந்தாலே கணக்கு துவங்க முடியும். அதேபோல வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிராம நிர்வாக அதிகாரி யிடம் வாங்கிய சான்று என எதாவது ஒரு சான்று தந்து  வங்கிக் கணக்கு துவங்க முடியும்.இந்தக் கணக்கில் ஃபிளெக்ஸி ஆர்டி துவங்கலாம். வைப்பு நிதி, பண பரிமாற்றம் ஆகியவற்றை செய்துகொள்ள முடியும். ஆனால், ஒரு நாளைக்கு அதிக பட்சம் ரூ.10 ஆயிரத்துக்கு மட்டும்தான் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வங்கிக் கணக்கில் அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் ரூ.5 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட்-ஆக (ஓ.டி) கடன் பெற முடியும்.

ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க முடியாது. ஆனால், வேலை காரணமாக இடம் மாறும்போது, அங்குள்ள சேமிப்புக் கணக்கு இருந்தால், அதை இந்த ஊருக்கு மாற்றிக்கொள்ள லாம். அது முடியவில்லையெனில், தற்போது வசிக்கும் முகவரியை அடிப்படையாக வைத்து, இந்தக் கணக்கைத் துவங்கலாம். ஆனால், இப்போது இருக்கும் ஊரில் சேமிப்புக் கணக்கு இருக்கக்கூடாது