Search This Blog

Sunday, June 22, 2014

அருள்வாக்கு - யார் நல்ல வாய் உடையவர்?


முகம் என்பது முழு மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் அதிலே உள்ள வாய்க்கும் பேர். ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக பேர் கிடையாது. அத்தனை பேர்களையும் சொல்கிறதாகவும், பேச்சுக்கே கருவியாகவும் இருக்கிற வாய்க்குத் தனிப்பேர் இல்லாமல் முகம் என்றேதான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது. 

வேடிக்கையாக, தமிழிலே வாய்க்கு வாய் என்று பேர் இருந்தாலும் முகத்துக்குப் பேரே இல்லை. முகம் என்பது ஸமஸ்கிருத வார்த்தை. மூஞ்சி என்பது பேச்சு வழக்கிலே மட்டுமுள்ள கொச்சைதான். இலக்கண - இலக்கிய வார்த்தை இல்லை. அதனாலே, அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருத கடிகையில் படிக்கும் வித்தியார்த்திகளும், தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பரஸ்பரம் பரிஹாஸம் பண்ணிக் கொள்வார்களாம். இவன் அவனை முகம் இல்லாதவன் என்பானாம். அவன் இவனை வாய் இல்லாதவன் என்று திருப்புவானாம்.  

பரிஹாஸமென்றாலும் இந்த நாள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் பாஷா த்வேஷத்தில் ஏசிக்கொண்டார்களென்று அர்த்தமில்லை. Good & humoured banter என்கிறார்களே, அப்படி நல்லெண்ணத்தோடு சேர்ந்த ஹாஸ்ய உணர்ச்சியில் ஸ்வாதீன மாகக் கேலி பண்ணிக் கொள்வார்கள்.

முகம் என்றாலே வாய் என்று சொல்ல வந்தேன். ஸுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு ஸுமுகர் என்று பேர் உண்டு. ஸுமுகர் என்றால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் ஸுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மஹா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது. அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு.  

21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தனுக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுஸு புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ரஸாள புஷ்பம் போடணும் என்று இருக்கிறது. ரஸாளம் (ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். யார் லோகத்தை முதலில் சுற்றிக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு என்று நாரதர்\ கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக்கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்!

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

உலகக் கோப்பை கால்பந்து


வழக்கமாய் உலகக் கோப்பையின் முதல் வாரம் சோம்பல் முறிக்கும் வாரமாய் அமையும். கிரிக்கெட் போலன்றி, கால்பந்தாட்டக்காரர்கள் நாட்டுக்கு விளையாடுவதை விட, அவரவர் கிளப்புக்கு விளையாடுவதே அதிகம். ஒரு அணியில் இருப்பவர்கள் சேர்ந்து ஆடியதை விட, ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடியதே அதிகமாக இருக்கும். 

இந்த உலகக் கோப்பையில் கோல்களின் எண்ணிக்கை முதல் ரவுண்டிலேயே கணிசமான அளவில் உள்ளது. முதல் 14 ஆட்டங்களில் 13 ஆட்டங்கள் டிராவின்றி அமைந்துள்ளன. அதிலும் பெரிய அணிகள் மோதும்போது கோல் மாரி பொழிந்ததென்றே சொல்லலாம். முதல் ஆட்டம் பிரேசிலுக்கும் க்ரோயேஷியாவுக்கும் இடையில் நடந்தது.

இவ்வாண்டு சாம்பியன்ஷிப்பை வெல்லக் கூடிய வாய்ப்பு பிரேசிலுக்கு அதிகமுள்ளதாகக் கருதப்பட்ட நிலையில் அந்த அணியின் ஆட்டம் அத்தனை சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக உலகின் தலைசிறந்த தற்காப்பு வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், பல நேரங்களில் எதிர் அணியின் தாக்குதலை பிரேசில் ஆட்டக்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தின் முதல் கோல், ரியல் மாட்ரிடின் லெஃப்ட் பேக் (Left back) மார்செலோவின் செல்ஃப் கோலாக அமைந்தது. அதிர்ஷ்டமும், ரெஃப்ரீயின் கருணையும், நெமார் மற்றும் ஆஸ்கரின் சிறப்பான ஆட்டமுமே கடைசியில் பிரேசிலை கரை சேர்த்தன.சென்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய நெதர்லாந்துடன் இம்முறை முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் மோதியது. ஸ்பெயினின் வழக்கமான Possession game முதல் அரை மணி நேரத்துக்கு ஆட்டத்தை அதன் கட்டுக்குள் வைத்திருந்தது. பெனல்டி ஏரியாவில் கோஸ்டாவை நெதர்லாந்து வீரர் தடுக்கிவிட, சாபி அலோன்ஸோ (Xabi Alonso) 1-0 என்று ஸ்பெயினை முன்னிலைப்படுத்தினார்.ஆட்டத்தின் முதல் பகுதியின் முடிவில் டாலி ப்ளைண்டின் கிராஸை, ஒரு துல்லியமான டைவின் மூலம் தலையால் கோல்கீப்பரின் தலைக்கு மேல் பந்தை செலுத்தி வான் பெர்ஸி ஆட்டத்தை சமன் செய்தபோது ஆட்டம் திசை திரும்பியது. அந்த கோலின் தருணமும், செயலாக்கப்பட்ட விதமும் நெதர்லாந்தை தட்டி எழுப்பின.ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் முதலில் இருந்தே அதிரடியாய் நெதர்லாந்து தொடங்கி, ஸ்பெயினை திக்குமுக்காடச் செய்தது. ரோபனும், வான் பெர்சியும் தலா இரண்டு கோல் அடித்தனர். 

சென்ற உலகக் கோப்பை முழுவதும், கோல்கீப் பர் கஸியாசை தாண்டி ஐந்து கோல்களே சென்றன. இந்த முறை முதல் ஆட்டத்திலேயே ஐந்து கோல்களைப் பறிகொடுத்து பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமே. ஸ்பெயின் இருக்கும் பிரிவில் இன்னொரு அணியான சிலேவின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, ஸ்பெயின் அடுத்த இரு ஆட்டங்களில் வென்றாலன்றி இரண்டாவது சுற்றுக்குச் செல்வதே சிரமம்தான்.

சென்ற முறை அரை இறுதிவரை சென்ற உருகுவேயின் நிலைமையும் ஸ்பெயினைப் போலத்தான். ஃபோர்லான், கவானி போன்ற நட்சத்திரங்கள் இருக்கும் உருகுவேயின் முதல் ஆட்டத்தில் சௌரேஸ் ஆடாதது பலவீனமாய் அமைந்தது. முதல் கோலை உருகுவே அடித்தபோதும், அடுத்தடுத்து மூன்று கோல்கள் பதற்றமின்றி அடித்து கோஸ்டாரிகா வென்றது. இந்தப் பிரிவின் மற்ற இரு அணிகளான இங்கிலாந்தும், இத்தாலியும் மோதிய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நிறைய அனுபவம் உள்ள பிர்லோவின் டம்மி (அடிப்பது போல் ஏமாற்றி பந்தை தன் அணியின் வேறொருவருக்கு அனுப்பி வைப்பது) மூலம் இத்தாலி முன்னிலை பெற்றது. இங்கிலாந்து ஸ்டரிட்ஜின்கோல் மூலம் சமன் செய்தாலும், வென் ரூனி கிடைத்த நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டார். மரியோ பாலோடெல்லியின் ஹெட்டர், ஆட்டத்தை இத்தாலிக்கு வென்று கொடுத்தது. இந்தப் பிரிவில் இனிவரும் ஆட்டங்கள் பல வாழ்வா சாவா வகை என்பதால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமையும்.உலகெங்கிலும், குறிப்பாக இந்தியர்களிடையிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கும் அர்ஜென்டினாவின் தொடக்கமும் எதிர்பார்த்த அளவு அமையவில்லை. தலைசிறந்த ஸ்டிரைக்கர்கள் கொண்ட அணி வழக்கமான 4-3-3 ஃபார்மேஷனாக இல்லாது 5-3-2 ஃபார்மேஷனில் போஸ்னியாவை எதிர்த்துக் களமிறங்கியது. கோல் அடிப்பதற்கான பளு மெஸ்ஸியின் மேல் அதிகமாய் இருக்க, அவர் ஆட்டம் சொபிக்கவில்லை. இரண்டாம் பகுதியில் ஹிகுவென் நுழைந்து 4-3-3 ஃபார்மேஷனாக ஆனதும்தான் பழைய மெஸ்ஸி தென்படத் தொடங்கினார். அவருடைய டிரேட்மார்க் நகர்த்தல் மூலம் தன் முதல் கோலை அடித்து ஆட்டத்தை அர்ஜென்டினா வெல்ல உதவினார். இரண்டாம் சுற்றுக்கு அர்ஜென்டினா நிச்சயம் தகுதி பெற்றுவிடும் என்றபோதும், இவ்வகையில் ஆடினால் சாம்பியனாவது கடினம். விரைவில் அணியின் வலிமைக்கேற்ற சூழல்களை அவர்கள் வகுத்துக் கொள்ளுதல் அவசியம்.முதல் ரவுண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய ஆட்டம் ஜெர்மனிக்கும் போர்ச்சுகலுக்கும் இடையே நடைபெற்றது. நட்சத்திர ஆட்டக்காரர்களை நம்பாமல் சேர்ந்து ஆடுவதில் கவனம் செலுத்தும் ஜெர்மனி ஒருபுறம், ஒற்றை ஆளா ஆட்டத்தைத் திருப்பிப் போடும் கிரிஸ்டியானோ ரொனால்டு, அவ ருக்கு உதவியாய் இருக்க மற்ற ஆட்டக்காரர்கள் என்று வியூகம் அமைத்துக் கொள்ளும் போர்ச்சுகல் மறுபுறம்.

ஷ்வான்ஸ்டைகர், பொடோல்ஸ்கி போன்ற ஆட்டக்காரர்கள் இல்லாமல் களமிறங்கினாலும் கூட ஜெர்மன் அணியின் வலு கணிசமானதாகத் தோன்றியது. போட்டிக்கு முன் ஏற்பட்ட காயம் முழுவதாகக் குணமாகிவிட்டதாக ரொனால்டோ கூறினாலும் அவர் ஆட்டத்தைப் பார்க்கும்போது அந்தக் கூற்றின் நம்பகத்தன்மை குறைகிறது. ஜெர்மனியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் மூலம் எழுந்த அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் பாதியிலேயே மூன்று கோல்களைக் கொடுத்துத் தவித்தது போர்ச்சுகல். போதாக்குறைக்கு தேவையே இல்லாமல் ரியல் மாட்ரிடுக்கு ஆடும் பெப்பே சண்டையில் இறங்கி ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். போன உலகக் கோப்பையில் ஐந்து கோல்கள் அடித்து கோல்டன் பூட் வென்ற தாமஸ் மூல்லர் இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் அடித்து இவ்வாண்டும் பட்டத்தை வெல்லும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளார்.

ஃபிக்ஸட் ரேட், ஃப்ளோட்டிங் ரேட்... எது பெஸ்ட்?

வீட்டுக் கடன் வாங்கும்போது, அதற்கான வட்டி எவ்வளவு என்பதை ஒரு வங்கிக்கு பல வங்கிகளில் விசாரித்துதான் வாங்குவோம். ஏனெனில், கடனுக்கான வட்டிவிகிதம் 0.5% குறைவாக இருந்தால்கூட, நீண்ட காலத்தில் சில லட்சம் ரூபாய்  மிச்சமாகும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகித  சதவிகிதத்தைக் கவனிக்கும் அதேநேரத்தில், அது மாறுபடும் வட்டி விகிதமா, நிலையான வட்டி விகிதமா என்பதையும் பார்ப்பது அவசியம். இந்த இரண்டில் எந்த வட்டி விகிதம் சிறப்பாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மாறும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் ரேட்), ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது கடனுக்கான வட்டி உயர்த்தப்படும். இதேபோல், வட்டி விகிதம் குறைக்கப் படும்போது கடனுக்கான வட்டி குறையும்.

நிலையான வட்டி விகிதம் (ஃபிக்ஸட் ரேட்) என்பது கடன் வாங்கும் தேதியில் எந்த வட்டி விகிதம் இருக்கிறதோ, அது அப்படியே சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதாவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினாலும், குறைத்தாலும் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதம் குறிப்பிட்ட காலத்துக்கு அப்படியே இருக்கும்.வீட்டுக் கடன் போன்ற பெரிய கடனை வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வாங்குவோம். இதை வாங்குவதற்குமுன், எந்தவிதமான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது. ஒருமுறை சரியாக முடிவெடுத்துவிட்டால், பிற்பாடு அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை அல்லவா!

ஃப்ராங்க்ளின் - தடைக்கல்லும் படிக்கல்லே

ஏதாவது ஒரு சின்ன விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டாலே போதும், அதை நான்தான் கண்டுபிடித்தேன் என காப்பி ரைட் வாங்கும் காலமிது. ஆனால், தான் கண்டுபிடித்த எதற்கும் காப்புரிமை வேண்டாம்; அவையெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேரட்டும் என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தவர்தான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். இத்தனை நல்ல உள்ளம் கொண்ட இவரது வாழ்க்கை, சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது.

1706-ம் ஆண்டு பாஸ்டன் நகரில் பிறந்த இவரது தந்தை மெழுகுவத்தி மற்றும் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்தார். இவருக்கு மொத்தம் 17 குழந்தைகள். அதில் 15-வது குழந்தைதான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். சிறுவயதிலிருந்தே குடும்பச் சூழ்நிலையால் வறுமையில் வாடிய ஃப்ராங்க்ளினால் ஓர் ஆண்டுக்குமேல், படிப்பை தொடர முடியவில்லை. அதனால் தன் தந்தையோடு இணைந்து மெழுகுவத்தித் தயாரிக்கும் தொழிலை செய்யத் தொடங்கினார்.

 

இதற்குபின், தன் அண்ணனின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்து பெண்களுக்கான உரிமைகளைப் பற்றிப் புனைப்பெயரில் புரட்சிகரமாக எழுதினார். அதற்காக இவரது அண்ணன் சிறை வைக்கப்பட்டதால் குடும்பத்தினர் ஃப்ராங்க்ளினை வெறுத்து ஒதுக்கினர். வீட்டைவிட்டு வெளியேறி தனியாகப் பத்திரிகை நடத்தத் தொடங்கினார் ஃப்ராங்க்ளின். பத்திரிகையில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

ஒருநாள் மழையில் நனைந்தபடி பட்டம் விட்டுக்கொண்டிருக்கும்போது, அதன் மூலம் மின்சாரம் கடத்தப்படுவதை உணர்ந்தார். இதன் மூலம் பெரிய கட்டடங்கள் இடிமூலம் தாக்கப்படுவதைத் தடுக்கலாம் என்று இடிதாங்கியைக் கண்டுபிடித்தார்.

அதுமட்டுமின்றி மின்சாரம் தொடர்பான கண்டுபிடிப்புகளைச் செய்தார். இவர் கண்டுபிடித்த எதற்கும் காப்புரிமை கோரவில்லை. அவையெல்லாம் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதனாலேயே அவர் கண்டுபிடித்த விஷயங்களைத் தனது சொத்தாக அவர் நினைக்கவில்லை.

மக்களின் உரிமை பற்றிப் பத்திரிகையில் எழுதியதற்காக நிந்திக்கப்பட்டார். ஆனால், பிற்காலத்தில் அவரது உருவம் அமெரிக்க டாலரில் இடம்பெறுகிற அளவுக்கு உயர்ந்தார். உண்மையாக உழைப்பவர்கள் இன்று துன்பம் அனுபவித்தாலும், வரலாற்றில் இடம் பெறுவார்கள் என்பதற்கு ஃப்ராங்க்ளினின் வாழ்க்கை ஓர் அற்புதமான உதாரணம்!

Tuesday, June 17, 2014

'லெட்ஸ் மூவ்’ - மிஷேல் ஒபாமா

 'லெட்ஸ் மூவ்’ - அமெரிக்க ஜனாதி பதியின் மனைவி மிஷேல் ஒபாமா தொடங்கியிருக்கும் இயக்கம் இது!

எதற்காக?!

 'சர்க்கரைத் தண்ணீரான கோக், பெப்ஸி போன்றவற்றைக் குடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.

 கொழுப்பும் புரதமும் மிகுந்த பீட்ஸா, பர்கர் வேண்டாம். அதற்குப் பதிலாக கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.

 டி.வி-யே கதி என்று பழியாகக் கிடக்காமல், விளையாட்டுத் திடலுக்கு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுங்கள்.

பள்ளிக்கு காரில் போய் இறங்காமல், நடந்தே சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’.


- இந்த நான்கு செய்திகளை அமெரிக்க குழந்தைகளின் மனதில் பதியவைக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக மிஷேல் முன்னெடுத்து வரும் இயக்கம்தான், 'லெட்ஸ் மூவ்’! இந்த இயக்கத்தைப் பிரபலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தபோதும், இவரின் முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை. இந்த இயக்கமே கடும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது இப்போது!

அமெரிக்கப் பெற்றோர்கள், பொருள் தேடுவதிலேயே பிஸியாகிவிட்டதால்... வீட்டில் சமைத்த உணவைக் குழந்தைகள் சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. மூன்று வேளையும் நொறுக்குத்தீனியையே அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். தண்ணீர் குடிப்பதையே முழுக்க மறந்துவிட்டு, சர்க்கரைத் தண்ணீரான குளிர்பானங்களை மட்டுமே குடிக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் அதிக கொழுப்பு, கலோரிகளால், அமெரிக்காவில் மூன்று குழந்தையில் ஒரு குழந்தை, குண்டு (ஒபிசிட்டி நோய்) குழந்தையாக இருக்கிறது. இன்னொருபுறம் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலரும் டி.வி., கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவற்றுக்கு அடிமையாகி, நாளன்றுக்கு ஏழரை மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். '2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் மூன்றுக்கு ஒரு குழந்தை டயபடீஸ், ரத்த அழுத்தம், கேன்ஸர், ஆஸ்துமா, இதய நோய்... போன்றவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது' என்று அமெரிக்க மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். இதெல்லாம்தான்.... 'லெட்ஸ் மூவ்’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்க வைத்தது.

'குழந்தைகள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவும், ஓடியாடி விளையாடவும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்; ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்; அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்; சுற்றுப்புற சமுதாயம் என்ன செய்யவேண்டும்?’ - இது எல்லாவற்றையும் ஓர் அட்டவணையாகத் தீட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் மிஷேல். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏன் இப்படி என்று ஆராய்ந்தபோது, வீட்டில் அப்பா, அம்மாக்கள் சத்தான உணவுகளைப் பற்றி என்னதான் எடுத்துச் சொன்னாலும், பள்ளிக்கூட வளாகத்திலேயே கோக், கேஎஃப்சி, மெக்டொனல்ட்ஸ் போன்ற விளம்பரங்கள் இருப்பதும், பள்ளிக்கூட கேன்டீன்களிலேயே சிப்ஸ், பர்கர், ஹாட் டாக், கோக் போன்றவை விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி, பள்ளிக்கூடத்தில் துரித உணவுகளுக்கான விளம்பரங்களைத் தடை செய்யவும், பள்ளியில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார் மிஷேல்.

பிள்ளைகளைத் துருப்பிடிக்க வைக்கும் துரித உணவுகளுக்கு எதிராக மிஷேல் தொடுத்திருக்கும் யுத்தம் நான்கு ஆண்டுகளை கடக்கும் நிலையில்... இதனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் தற்போது கொடுக்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளைக் குழந்தைகள் வீண் செய்கிறார்கள். பர்கரும் கோக்கும் பள்ளியில் கிடைக்காவிட்டால் என்ன, பள்ளிக்கு வெளியில் சென்று சாப்பிடத்தான் செய்கிறார்கள். அதனால் 'மிஷேல் பரிந்துரைக்கும் தீர்வானது நடைமுறைக்கு சரிப்பட்டு வரவில்லை’ என்று சொல்லி... துரித உணவுகளை மீண்டும் கல்விக்கூடங்களுக்குள் கொண்டு வர துரித உணவகங்கள் மறைமுக யுத்தத்தில் இறங்கியுள்ளன.

'பர்கர், பீட்ஸா பற்றி இப்போது இவ்வளவு பேசும் மிஷேலே முன்பெல்லாம் இதுபோன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது மட்டுமல்லாது, தன் மகள்களுக்கும் கொடுப்பார். அவருக்கு உணவு விஷயத்தில் ஞானோதயம் பிறந்துவிட்டது என்பதற்காக நாட்டில் இருக்கும் அத்தனை பேர் மீதும் அதைத் திணிப்பது சரியல்ல. நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதெல்லாம் டூ மச்’ என்கிற ரீதியில் தனிமனித சுதந்திரத்தை முன் வைத்தும் துரித உணவகங்கள் கத்துகின்றன.

துரித உணவு என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம். இதன் மீது மிஸ்டர் ஒபாமாவே கைவைத்தாலும், பண ருசி கண்ட தொழில்முதலைகள் சும்மா இருக்க மாட்டார்கள்தான். ஆனாலும், 'துரித உணவகங்களின் சூழ்ச்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று போராடும் அமெரிக்க அம்மா மிஷேலின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்' என்பதுதான் எதிர்கால சந்ததியினர் மீது அக்கறைகொண்ட நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை!

தென்மேற்குப் பருவமழை

சில ஆண்டுகளாக போதுமான மழையில்லாத நிலையில், 'இந்த ஆண்டு எப்படி இருக்குமோ?’ என்கிற கவலைக்குரிய கேள்வி, விவசாயிகளின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. இக்கேள்விக்கான பதிலாக... இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பற்றிய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், ''தமிழ்நாடு, மழை மறைவு மாநிலமாக இருந்தாலும்... தென்மேற்குப் பருவமழைக் காலத்தில்தான் (ஜூன்-செப்டம்பர் வரை) ஓர் ஆண்டில் பெறக்கூடிய மொத்த மழையளவில், 32 சதவிகித அளவு மழையைப் பெறுகிறது. இந்தப் பருவத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழை பெறுகின்றன.

 
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல்பகுதியில் மேற்பரப்பு நீரில் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றைக் கொண்டு, ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து பெறப்பட்ட 'மழை மனிதன்’ எனும் கணினிக் கட்டமைப்பைப் (Australian Rainman international V.4.2)  பயன்படுத்தி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலமாக... சென்னை, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கமாகக் கிடைக்கும் மழையைவிட 10% கூடுதலாகவோ அல்லது குறைவாகவோதான் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. 

அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வழக்கமாகக் கிடைக்கும் சராசரி மழை அளவைக் காட்டிலும், 10% முதல் 20% குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் வழக்கமாகப் பெய்யும் சராசரி மழை அளவைக் காட்டிலும் 20% குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

Saturday, June 14, 2014

அருள்வாக்கு - ராஜ விசுவாசம்

இப்போதெல்லாம் குடியரசு யுகத்தில் ஒருத்தரைத் தலைவர் என்று ஸ்தோத்திரம் பண்ணி ஊரையெல்லாம் இரண்டு படுத்துகிற மாதிரி டெமான்ஸ்டரேஷன்கள் பண்ணிவிட்டு, கொஞ்ச காலமானால் அவரை எவரும் சீந்தாமல் தூக்கிப் போடுகிற மாதிரி இல்லை, ராஜ விஸ்வாசம் என்பது. அது நின்று நிலைத்து ஹ்ருதயபூர்வமாக இருந்து வந்த விஷயம். ராஜாக்களும் இந்த விஸ்வாசத்தைப் பெறுவதற்குப் பாத்திரர்களாகவே ரொம்பவும் ஒழுக்கத்தோடு குடிஜனங்களைத் தம் பெற்ற குழந்தைகளைப் போலப் பரிபாலனம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அதிகாரம் வந்து, அந்த ருசியில் கண்டது காணாதது போல் ஒழுங்கு தப்பிப் போகிற மாதிரி இல்லை, பாரம்பரிய ராஜயாதிகாரம் என்பது. 

திடீர் அதிகாரம் வந்தால்கூட பாரம்பரியப் பண்பு அவர்கள் தலைதெறிக்கப் போகாமலே கட்டுப்படுத்தும். புராணங்களைப் பார்த்தால் வேனனையும் அஸமஞ்ஜனையும் பல் எங்கேயாவது நூற்றிலே ஒரு ராஜாவோ ராஜகுமாரனோ முறை தப்பிப் போனால் அப்போது ஜனங்களே அதனைத் தொலைத்து முழுகியிருக்கிறார்கள். மொத்தத்தில் ‘யதா ராஜா ததா ப்ரஜா’. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி’ என்ற மாதிரி, அப்போது இரண்டு பக்கத்திலும் தர்மத்துக்குப் பயந்தவர்களாக இருந்தார்கள்.  

சட்டம் என்று வெறும் ராஜாங்கரீதியில் போடுகிறபோது, முதலில் அதைப் பண்ணுகிறவர்கள் சரியாகயிருக்கிறார்களா என்ற கேள்வி வருகிறது. இந்தச் சட்டங்களுக்கெல்லாம் மேலான த்ரிலோக ராஜாவான பரமேச்வரனின் சட்டமான தர்மசாஸ்திரத்துக்கு அடங்கியே ஆளுகிறவர்கள், ஆளப்படுகிறவர்கள் ஆகிய இருவரும் இருந்தால்தான் லோகம் நன்றாயிருக்கும். பூர்வகாலங்களில் ஆளப்படுகிறவர்களுக்கும் ஆளுகிறவர்களே இப்படி தர்மத்துக்கு அடங்கியிருந்து வழி காட்டியிருக்கிறார்கள். இதனால்தான் ஜனங்களுக்கு ஸ்வபாவமாக, ரஜவிஸ்வாசம் என்ற ஆழ்ந்த, நிஜமான பற்று இருந்து வந்திருக்கின்றது.

இவர்கள் தன் ஜனங்கள்’ என்ற பாந்தவ்யம் ராஜாவுக்கும், ‘இவன் நம் ராஜா’ என்ற அன்பு ஜனங்களுக்கும் இருந்து வந்தது. 

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


ஃப்ரெஞ்ச் ஓபன் - நடால் & மரிய ஷரபோவா


1990களில் நடந்த ஃப்ரெஞ்ச் ஓபன் பந்தயங்களை எடுத்துப் பார்த்தோமெனில், பெரும்பாலும் மற்ற கிராண்ட் ஸ்லாம்களில் கோலோச்சியவர்கள் தோற்கும் களமாகவே ரோலாண்ட் கேரோஸ் மைதானம் விளங்கியதை உணர முடியும். ஆண்ட்ரே கோமேஸ், மைக்கேல் சாங், செர்ஜி ப்ருகேரா போன்ற பெயர்கள் டென்னிஸ் வரலாற்றில் நிரந்தர இடம் பிடிக்க ஃப்ரெஞ்ச் ஓபனின் களிமண் தளமே காரணம். இந்நிலை 2005ல் நடந்த சாம்பியன்ஷிப்புக்குப் பின் மாறியது. ரஃபேல் நடால் தமது பத்தொன்பதாவது வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியைப் பெற்றார். அடுத்த ஒன்பது ஆண்டுகளில் எட்டு சாம்பியன்ஷிப் பட்டங்கள்.
நடால் ஒவ்வொரு முறை உடல் சம்பந்தப்பட்ட பிரச்னையால் டென்னிஸ் விளையாடுவதைத் தாற்காலிகமாக நிறுத்தும்போதும், இனி அவ்வளவுதான். இதிலிருந்து மீண்டுவருவது இயலாத காரியம்," என்ற எண்ணம் எழாமல் இருப்பதில்லை. ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பின் முதுகுப் பிரச்னையால் ஓய்வுக்குச் சென்ற நடால், ஃப்ரெஞ்ச் ஓபனுக்கு முன்னால் ஆடிய ஆட்டங்களைப் பார்த்தபோது இந்த வருடம் பாரிஸ் ஒரு புதிய சாம்பியனைப் பார்க்கக்கூடும் என்று தோன்றியது.  

ஆனால் அரை இறுதியில் ஆண்டி முர்ரேயை தம்மை எது தாக்கியது என்று உணர்வதற்கு முன்பே நேர் செட்களில் நடாலிடம் வீழ்ந்தார். அப்போது இந்த வருடமும் நடால்தான் வெல்வார் என்று தோன்றியது. அவர் இறுதி ஆட்டத்தில் எதிர்த்து விளையாடியது ஜோகோவிச்சை என்று தெளிவானதும் முன் தோன்றிய எண்ணம் சற்றே வலுவிழந்தது.2013ன் பிற்பகுதியில் இருந்து நடால் உலகின் நம்பர் 1-ஆக இருந்தாலும் நோவாக் ஜோகோவிச்சிடம் பல முறை தோற்க நேரிட்டது. குறிப்பாக நடாலின் பலம் முழுவதும் வெளிப்படும் களிமண் தளங்களிலும் ஜோகோவிச் மோண்டி கார்லோ ஓபனையும், இத்தாலியன் ஓபனையும் நடாலை வீழ்த்தி வென்றிருந்தார்.ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றிருந்தாலும் கெரியர் ஸ்லாமை வென்றுள்ள ஒரு சிலரின் பட்டியலில் சேர ஜோகோவிச்சிக்கு ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டம் தேவை. எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று முழு மூச்சில் முதல் பட்டத்தை நோக்கிச் சென்ற ஜோகோவிச்சின் தாக்குதலை ஏற்கெனவே எட்டு முறை வென்றிருந்த நடாலால் தாக்குப்பிடிக்க முடியுமா? ரோலாண்ட் கேரோஸில் தொடர்ந்து 34 ஆட்டங்களை வென்றிருந்த நடாலின் சாதனைத் தொடரை ஜோகோவிச் தடுக்க இயலுமா? ஒருமுறைகூட விம்பிள் டனை வெல்லாத இவான் லெண்டில், பயிற்சியாளராக மாறி முர்ரேயை விம்பிள்டன் பட்டம் பெற உதவியதைப் போல, ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றிராத போரிஸ் பெக்கர் தம்மிடம் பயிற்சிபெறும் ஜோகோவிச் பட்டம் பெற உதவுவாரா? என்று டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
முதல் செட்டில் நடாலின் சில ஃபோர்ஹேண்ட் தவறுகள் மூலம் ஜோகோவிச் சுலபமாக வென்றார். இரண்டாவது செட்டில் ஆட்டம் சூடு பிடிக்க, அரங்கின் உஷ்ணமும் ஏறத் தொடங்கியது. பேஸ்லைனின் பின்னால் இருந்தபடி இருவரும் மாறி மாறி கிரவுண்ட் ஸ்ட்ரோக்குகளைப் பரிமாறிக் கொண்டனர்.  நடால் முதலில் ப்ரேக் செய்து முன்னிலை பெற்றாலும் அதனைத் தக்கவைக்கத் தவறிய கணம் ஜோகோ விச்சின் கனவுகளைச் சாத்தியமாக்கியிருக்கக் கூடிய கணம். ஜோகோவிச்சின் ஆட்டம் மேம்படும் என்று எதிர்பார்க்கையில் நடந்தது தலைகீழாக இருந்தது. நடாலின் டாப்ஸ்பின் ஃபோர்ஹாண்ட் அரங்கின் மூலைகளைத் துல்லியமாகத் துளைக்கத் தொடங்கியது. இருவரின் ஆட்டமும் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் இருந்தது என்ற போதும், ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் ஜோகோவிச் சற்றே தடுமாறினார். இரண்டாவது செட் நடாலுக்குச் சென்றது. முன்றாவது செட்டில் நடாலின் ஆட்டம் எந்தளவுக்கு உயர்ந்ததோ அதே அளவுக்கு ஜோகோவிச்சின் ஆட்டம் வீழ்ந்தது. குறிப்பாக ப்ரேக் பாயிண்டின்போது ஒரு எளிய வாலியை (volley) நெட்டில் அடித்தபோதே ஜோகோ விச்சின் கனவுகள் கலைந்துவிட்டன. மூன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சாம்பியன்ஷிப் பாயிண்டைப் பெற்ற நடாலை மேலும் காத்திருக்கச் செய்யாமல் ஜோகோவிச் டபுள் ஃபால்ட் செய்தார். இதுவரை ஃப்ரெஞ்ச் ஓபன் அரங்கில் ஆடிய 67 ஆட்டங்களில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்திருக்கும் நடாலின் சாதனை முறிக்கப்படுவது சந்தேகமே.
பெண்கள் பிரிவில் மரிய ஷரபோவாவுக்கு இன்னொரு கிராண்ட் ஸ்லாம். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் எந்த ஒரு கணத்திலும் தோல்வியின் முன் சரணடைய மறுத்த பிடிவாதமே எனலாம். சாம்பியன் ஷிப்பில் அவர் ஆடிய கடைசி நன்கு ஆட்டங்களும் மூன்றாவது செட் வரை சென்றது. இறுதிப் போட்டிக்கு முன்னால் ஒரு செட்டில்கூட தோற்காத சிமொனா ஹலேப் வழக்கமான giant killer-களைப் போல இறுதி ஆட்டத்தில் வலுவிழந்து விடவில்லை. 

2001க்குப் பிறகு மூன்றாவது செட்வரை சென்ற முதல் ஃப்ரெஞ்ச் ஓபன் ஆட்டம் இது தான். 2004-ல் ஷரபோவா விம்பிள்டன் பட்டம் வென்றபோது டென்னிஸ் உலகில் ஒரு பெரிய சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாடலிங் பக்கம் கவனமும், தொடர்ந்து ஆட்டத்தைக் குலைத்த காயங்களும் அவரை அதிகம் ஜெயிக்கவிடவில்லை. இது அவருக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு. இந்த வெற்றியை அடிக்கல்லாகக் கொண்டு வரலாற்றில் அவர் திறமைக்குரிய இடத்தை பிடிப்பாரா?14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கும் நடால், 17 பட்டங்களை வென்று முன்னால் இருக்கும் ஃபெடரரின் ரெக்கார்டை வெல்வாரா? குறிப்பாக எழுச்சி குறைவாக இருப்பதனால் கால் முட்டிகளின் மேல் அழுத்தம் அதிகம் கொடுக்கும் புல்தரை மைதானமான விம்பிள்டனின் நடாலின் ஆட்டம் எப்படி இருக்கும்? உடலை வருத்தும் களிமண் தரை சீஸன் முடிந்துவிட்ட நிலையில் நடாலின் நிலை என்ன?இந்த ஆண்டும் பட்டம் வென்றாலும் நடாலின் பழைய வேகமும் துல்லியமும் சற்றே குறைந்திருப்பதாகவே தோன்றிய நிலையில், வருங்காலம் எப்படியிருக்கும் - இப்படி கேள்விகள் பல இருந்தாலும் அவற்றுக்கான தருணம் இதுவல்ல.

Friday, June 13, 2014

ஹோண்டா ஆக்டிவா 125

 63,500(உத்தேச விலை)

டிஸைன் - இன்ஜினீயரிங் 

ஹோண்டா ஆக்டிவா-125 பார்க்க ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், இது ஒரு ஆக்டிவா பிராண்டு ஸ்கூட்டர் என்பதை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதால், பாரம்பரிய ஆக்டிவா ஸ்டைலிங்கை அதிகம் குறைக்காமல் இருக்கிறது ஹோண்டா. பைலட் லேம்ப் கொண்ட ஹாலோஜன் ஹெட்லைட், ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரின் முன் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஷட்டர் டைப் சாவித் துவாரம் கொடுக்கப்பட்டுள்ள ஆக்டிவா 125-ல், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஓட்டும்போது எளிதாகப் படிக்கும் வகையில் இருக்கிறது. ஸ்பீடோ மீட்டர் அனலாக்தான். டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூல் கேஜ் போன்றவை காட்டப்படுகின்றன. மற்ற ஹோண்டா ஸ்கூட்டர்களைப் போலவே ஆக்டிவா 125 மாடலிலும் சுவிட்ச்சுகள் தரமாக இயங்குகின்றன. கைப்பிடி க்ரிப் சூப்பர்!

ஆனால், ஒரு ஸ்கூட்டருக்கு முக்கியமான அம்சமான ரியர் பிரேக் லாக் கிளாம்ப்-ஐ, இதன் டாப் வேரியன்ட்டில் தராமல் விட்டுவிட்டது ஹோண்டா. சீட்டுக்குக் கீழே நல்ல இடவசதி உள்ளது. ஆனால், ஸ்கூட்டரின் முன் பக்கமும் கொஞ்சம் இட வசதி ஏற்படுத்தித் தந்திருக்கலாம். பின் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, சாதாரண ஆக்டிவா போலத்தான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் தரமும், கட்டுமானமும் நன்றாக இருக்கிறது.

இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பெர்ஃபாமென்ஸ் 

இதுதான் இந்தியாவில் ஹோண்டாவின் முதல் 125 சிசி ஸ்கூட்டர். என்றாலும், இன்ஜின் சத்தம் என்னவோ பழைய ஆக்டிவாவைப் போலத்தான் இருக்கிறது. மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரியுடன் பட்டன் ஸ்டார்ட் இருந்தாலும், அவசரத்துக்காக கிக் லீவரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா 125-ல் இருப்பது 124.9 சிசி, 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின். சாதாரண ஆக்டிவாவைவிட 0.6 bhp அதிகமாக, அதாவது 8.6 bhp சக்தியை 6,500 ஆர்பிம்-ல் அளிக்கிறது. ஆனால், இந்த சக்தி பழைய ஆக்டிவாவை விட 1,000 ஆர்பிஎம் கூடுதலாகவே வெளிப்படுகிறது. அதிகபட்சமாக 1 kgm டார்க்கை 5,500 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. கார்புரேட்டர் மூலம்தான் இன்ஜின் எரிபொருளை எடுத்துக் கொள்கிறது.

ஆக்டிவா 125-ல் விஸ்கஸ் (Viscous) டைப் ஏர் ஃபில்டர் உள்ளது. எல்லா ஸ்கூட்டர்களிலும் உள்ள சிவிடி டிரான்ஸ்மிஷன்தான் இதிலும். சக்தி அபரிமிதமாக வெளியாகாமல், குறைந்த ஆர்பிஎம்-ல் இருந்தே சீரான, ஸ்மூத்தான பவர் டெலிவரி இருக்கிறது. குறைந்த ஆர்பிஎம்-ல் திராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருப்பதால், நகர டிராஃபிக்கில் எளிதாக ஓவர்டேக் செய்து ஓட்ட முடிகிறது. 0 - 60 கி.மீ வேகத்தை 9.29 விநாடிகளில் அடைகிறது ஆக்டிவா 125. டாப் ஸ்பீடு மணிக்கு 88 கி.மீ. மணிக்கு 80 கி.மீ வேகங்களில் ஸ்மூத்தாக க்ரூஸ் செய்யவும் முடிகிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை 

ஆக்டிவா 125-ன் இருக்கை அகலமாக, நீளமாக, அமர்வதற்கு சொகுசாக இருக்கிறது. ஹேண்டில்பாரை முழுவதுமாக வளைத்தாலும் முழங்காலில் இடிக்கவில்லை. 5 ஸ்போக் அலாய் வீல்கள் பார்க்க உயர்தரமான உணர்வை அளிக்கின்றன. இதுவரை ஆக்டிவா மாடல்களில் எல்லாரும் கேட்ட டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனை 125 மாடலில் பொருத்தியிருக்கிறது ஹோண்டா. பின் பக்கம் ஒரு ஷாக் அப்ஸார்பர் இருக்கிறது. மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில், பழைய ஆக்டிவா கொஞ்சம் தூக்கிப்போடும். ஆனால், ஆக்டிவா 125 மாடலில் இந்தப் பிரச்னை இல்லை.

பிரேக்ஸ் விஷயத்திலும் சொன்னதைக் கேட்கிறது ஆக்டிவா 125. முன் பக்கம் 190 மீமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. ஹோண்டாவின் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் இதில் உண்டு. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும்போது, முழுமையாக நிற்க 16.65 மீட்டர் தூரத்தை எடுத்துக்கொண்டது. இதன் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ், இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர்களிலேயே சிறந்தது எனலாம்.

மைலேஜ் 

ஹோண்டா ஆக்டிவா 125, நகருக்குள் லிட்டருக்கு 44.1 கி.மீ, நெடுஞ்சாலையில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்தால், லிட்டருக்கு 47.3 கி.மீ மைலேஜ் அளிக்கிறது.


 

ஹோண்டா ஆக்டிவா 125, ஒரு நல்ல ஆல்ரவுண்டர். ஒரு சாதாரண ஸ்கூட்டர் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சிறந்த பெர்ஃபாமென்ஸும், அதிக மைலேஜும் உத்திரவாதம். கட்டுமானத் தரமும் நன்றாக இருக்கிறது. ஓட்டுதல் மற்றும் கையாளுமையைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. இதில் அமர்ந்து ஓட்டினால், வேறு ஸ்கூட்டர்களை ஓட்டவே பிடிக்காது. ஹோண்டா ஆக்டிவா 125தான் இப்போது இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்!
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+

அன்றாடப் பயன்பாட்டுக்கான கம்யூட்டர் பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ், 'ஸ்டார்’ என்னும் பைக்கை அறிமுகப்படுத்தி சுமார் 10 ஆண்டுகள் ஆகின்றன. டிவிஎஸ்-ன் 'பிரட் வின்னர்’ பைக்கான இதில், தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்வது வாடிக்கை. இப்போது 2014-ம் ஆண்டு ஸ்பெஷலாக, முக்கியமான சில மாற்றங்களுடன் 'ஸ்டார் சிட்டி ப்ளஸ்’ என்று அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ்.
 
ப்படி இருக்கிறது புதிய பைக்?
 
 
 
 
டிஸைன் 

டிஸைனைப் பொறுத்தவரை புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸில் எந்த ப்ளஸ்ஸும் இல்லை என்றே சொல்லலாம். ஏற்கெனவே பார்த்துப் பழகிய ஸ்டார் சிட்டி பைக் போலவே இருக்கிறது புதிய சிட்டி ப்ளஸ்.

புதிய பைக்கில் அலாய் வீல்களை ஸ்டாண்டர்டு ஆக்கியிருப்பதோடு, அலாய் வீல், இன்ஜின் உட்பட பைக்கின் அடிப்பகுதிகளுக்குக் கறுப்பு வண்ணம் பூசியிருக்கிறார்கள். 

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் பளிச்சென இருக்கிறது.  வெண்ணிற பின்னணியில் ஸ்பீடோ மீட்டர் தெளிவாகப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இண்டிகேட்டர் டிஜிட்டல் மீட்டராகக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டிவிஎஸ்-ன் முத்திரையான எக்கனாமி மோட் - பவர் மோட் இண்டிகேட்டர்களும் உள்ளன. ஹெட்லைட், அதன்மீது வைக்கப்பட்டுள்ள வைஸர், பைக்கின் இயல்புக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. டெயில் லைட் தனித்தன்மையுடன் இருக்கிறது. கைப்பிடிகளும் லீவர்களும் சுவிட்சுகளும் பெயின்ட் குவாலிட்டியும் தரமாக இருக்கின்றன. சைடு பேனலில் இருக்கும் 'ஸ்டார் சிட்டி ப்ளஸ்’ லோகோவும் அதன் மேல்பக்கம் உள்ள ஏர் வென்ட் டிஸைனும் ஈர்க்கின்றன. தையல் வேலைப்பாடுகளுடன் இருக்கும் சீட், இருவர் தாராளமாக உட்காரும் வசதியுடன் இருக்கிறது.

செல்ஃப் / கிக் ஸ்டார்ட்டர் வசதியுடன் இருக்கும் ஸ்டார் சிட்டி ப்ளஸ், சீட்டில் அமர்ந்து ஹேண்டில்களைப் பிடித்து ஓட்ட நன்றாக இருக்கிறது. கிராப் ரெயில், பில்லியன் ரைடர் ஏறி இறங்கும்போது இடைஞ்சலாக இல்லை என்பதுடன் வசதியாக இருக்கிறது. பின்பக்கக் கண்ணாடிகளைப் பொறுத்தவரை சிறப்பாக இல்லை என்றாலும் ஓகே.  

இன்ஜின் 

இன்ஜினைப் பொறுத்தவரை அதே 'எக்கோ த்ரஸ்ட் சீரிஸ்’ 109.7 சிசி, 4 ஸ்ட்ரோக், ட்வின் வால்வ், ஏர் கூல்டு இன்ஜின்தான். ஆனால், இது பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்பது ஓட்டும்போது தெரிகிறது. ''மைலேஜுக்காக ஃப்ரிக்ஷனைக் குறைக்கும் வகையில் ராக்கர் ஆர்ம் ரோலர் பேரிங், மாலிகோட் (Molycoat) பிஸ்டன், சைலன்ட் கேம் செயின் என மேம்படுத்தி இருக்கிறோம். அதேபோல், அதிகக் காற்று உள்ளே வரும் வகையில், ஏர் ஃபில்ட்டரை மேம்படுத்தியதுடன் சிறந்த கம்பஷன் அளிப்பதற்காக, ஸ்பார்க் ப்ளக்கையும் ட்யூன் செய்திருக்கிறோம்'' என்றது டிவிஎஸ் தொழில்நுட்பக் குழு. இந்த மாற்றங்கள் பைக்கின் சைலன்ஸர் வரை தொடர்கிறது என்பது ஸ்டார்ட் செய்ததும் புரிந்தது. ஸ்டார் சிட்டிக்கே உரிய இன்ஜின் சத்தம், இப்போது ஒரே சீராக ஒலிக்கிறது. அதனால், ஸ்மூத் ஃபீலிங் கிடைக்கிறது. அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்-ல் 8.18 bhp சக்தி, 5,000 ஆர்பிஎம்-ல் 0.88 டார்க்கையும் அளிக்கிறது புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ்.

பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை ஸ்டார் சிட்டி ப்ளஸ், சுமார்தான். இதன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடனுக்குடன் சக்தியை மாற்றினாலும் வேகம் என்று சொல்ல முடியாது. ஆனால், திராட்டில் ரெஸ்பான்ஸைப் பொறுத்தவரை அருமை. டிவிஎஸ்-ன் சின்ன டெஸ்ட் டிராக்கில், புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகம் வரை ஓட்ட முடிகிறது. கியர்பாக்ஸ், கிளட்ச் செயல்பாடு ஸ்மூத்தாகவே இருக்கிறது.

 

பெரியவா கிரஹம்!

தலைப்பைக் கண்டதும் வியப்பு மேலிடுகிறதா? ஆனால், இது உண்மை! சேலத்தில், தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி, அதில் பல ரூபங்களில் தோற்ற மளித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார், மகா பெரியவா!  

சுவாரஸ்யமான அந்தப் புனித நிகழ்வைத் தெரிந்துகொள்வோமா?

பெரியவாளின் பரம பக்தரான ராஜகோபால், இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்த நேரம் அது.  அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளைதான், காஞ்சி மகானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.

ராஜகோபால் தம்பதி, காஞ்சி மகானிடம் பக்தி கொண்டு இருந்தார் களே தவிர, அவ்வளவு நெருக்கம் இல்லை. பிரதோஷம் மாமா ஒரு தடவை இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், மகானைப் பற்றி விவரமாக உபதேசித்த பின்புதான், இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற பக்தி தோன்றியது.
உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருந்த ராஜகோபால், சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப்பெற்றார். சேலத்துக்குத் தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தைப் பெரியவாளிடம் ராஜகோபால் சொன்னபோது, ''சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார் பெரியவா.

 

''சென்னையில் பூர்வீக சொத்து இருக்கிறது'' என்று ராஜகோபால் சொல்ல... ''சேலத்தில் வீடு இருக்கிறதா என்றுதான் கேட்டேன்'' என்றார் மகான் அழுத்தம்திருத்தமாக.

''இல்லை!'' என்று மெல்லிய குரலில் பதில் சொன்ன ராஜகோபாலின் மனத்தில் அப்போதே ஓர் எண்ணம் ஓடியது... சேலத்தில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று!

சேலத்தில், அவர் உமா நகரில் குடியிருந்தார். அதுவரை சேலத்தில் வீடு வாங்க நினைக்காதவர், மகானின் கேள்வியால் வீடு வாங்கும் உறுதிகொண்டார். எங்கெங்கோ தேடி, கடைசியில் ஒரு நண்பர் மூலமாக, ரகுராம் காலனியில் ஒரு வக்கீலின் வீட்டைப் பார்த்துப் பேசி முடித்தார். அதை வாங்கும்பொருட்டு சென்னை வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.

அதன்பின், காரியங்கள் அசுர வேகத்தில் நடக்க, ஒரு நல்ல நாளில் வீட்டை வாங்கி, தன் மனைவி கீதாவின் பேரில் ரிஜிஸ்தரும் செய்துவிட்டார் ராஜகோபால்.

''சொந்த வீடு இருக்கிறதா?'' என்று மகான் கேட்டதை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவருக்கு. வீட்டுப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு, தன் மனைவியுடன் காஞ்சிக்குச் சென்ற ராஜகோபால், மகானின் முன்னால் போய் நின்றார்.

இதற்கு முன் நடந்த சம்பவத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.

வீட்டைப் பார்த்துப் பேசி முடித்ததுமே, நேராக காஞ்சிக்குப் போன ராஜகோபால், மகானிடம் பவ்வியமாக, ''ஒரு வீட்டை சேலத்தில் பார்த்திருக்கிறேன்'' என்றார்.

மகானின் அடுத்த கேள்வி, ராஜகோபாலை வியப்பில் ஆழ்த்தியது... ''வடக்குப் பார்த்த வீடுதானே? வாங்கிடு!''

வீடு எப்படி இருக்கிறது, எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்கிற விவரம் எதையும் மகானிடம் சொல்லவே இல்லை ராஜகோபால். ஆனால், அந்த மகான் கேட்டார்... ''வடக்குப் பார்த்த வீடுதானே?'
'
அவரது அடுத்த கேள்வி: ''என்ன விலை சொல்றான்?''

ராஜகோபால் சொன்னார். 

''அவன் இன்னமும் குறைச்சுக் கொடுப்பான். வாங்கிடு!'' என்று ஆசி வழங்கினார் மகான்.

மகான் சொன்னபடியே, வீட்டின் சொந்தக் காரர் அதன் விலையில் மேலும் 10 ஆயிரம் ரூபாய் குறைத்துத் தர முன்வந்தார். வீடும் கைமாறியது.

இதோ... ராஜகோபால் தம்பதி, மகானுக்கு முன்னே  நிற்கிறார்கள். ஒரு தட்டில் பழம், தேங்காய், பூவுடன், பத்திரத்தை அவர் முன் வைக்கிறார்கள். தட்டைக் கையில் எடுத்து மகானிடம் நீட்டும்போது, தன்னை அறியாமல் ராஜகோபால் சொல்கிறார்...

''மகா பெரியவா அனுக்ரஹத்தில், மகா பெரியவா கிரஹம் வாங்கப்பட்டு இருக்கிறது!''  

'தங்கள் வீடு’ என்று அவர் சொல்ல வில்லை. 'பெரியவா கிரஹம்’ என்று தன்னிச்சையாக அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.

மகான் ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்து, ராஜகோபால் தம்பதியைப் பார்த்தார். பிறகு, சிறிய டார்ச் வெளிச்சத்தில் பத்திரம் பூராவையும் படித்தார். அதன்பின் கேட்டார்... ''எனக்கே எனக்கா?''

''பெரியவா அனுக்ரஹம்'' என்றார் ராஜ கோபால். பத்திரத்தை மகான் உடனே திருப்பித் தரவில்லை. சற்றுநேரம் கழித்து, அந்தத் தம்பதியை தன் அருகில் அழைத்து, பத்திரத்தின் மீது தாமரை இதழும் வில்வமும் வைத்துத் தந்தார்.

வீட்டின் சாவியைக் கையில் எடுத்த மகா பெரியவா, சாவியை ராஜகோபாலின் கையில் தந்து, ''சாவியை அவகிட்டே கொடு! அவதானே வீட்டுக்காரி'' என்றார் புன்னகை புரிந்தபடி.

உண்மைதான்! வீட்டுக்காரி என்னும் சொல் மனைவி என்கிற அர்த்தத்தில் மட்டுமல்ல... வீட்டைத் தன் மனைவியின் பேரில்தானே பதிவு செய்திருந்தார் ராஜகோபால்! எனவே, வீட்டுக்கு உரிமையாளர் என்கிற அர்த்தமும் அதில் உள்ளடங்கியிருந்தது.

அடுத்தபடியாக பெரியவா சொன்ன விஷயம் யாரும் எதிர்பார்க்காதது.

''உனக்கும் உன் குழந்தைகளுக்கும் சௌகர் யமாக மேலே வீட்டைக் கட்டிக் கொள்; கீழே நான் இருக்கேன்!''

இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! ராஜ கோபால் கொஞ்சம் ஆடித்தான் போனார். 'பெரியவாளை கீழே விட்டுவிட்டு, மேலே போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது!’ என்று கவலை வந்தது.

மகானுக்கு அவரது எண்ண ஓட்டம் புரியாதா?

''நான் எல்லா இடத்திலும் இருப்பேன்'' என்பதைப்போல கையைத் தூக்கி ஆசி வழங்கினார்.

''எத்தனையோ பேர் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவா உன் வீட்டை எடுத்துக்கொண்டது, உன் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையே காட்டுகிறது!'' என்ற பிரதோஷம் மாமா, அந்தத் தம்பதிக்கு தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அனுப்பினார்.

இதுதான் சேலம் காந்தி ரோடு, ரகுராம் காலனியில் உள்ள மகா பெரியவா கிரஹத்தின் வரலாறு.

இந்தக் கிரஹம் இப்போது ஏராளமான பக்தர்கள் ஒரே சமயம் வந்து தரிசனம் செய்யவும், உணவருந்தவும் வசதியாக, மிகவும் விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புனிதமான கோயிலாகக் கருதப்படும் இந்தக் கிரஹத்தில்,  பிரதோஷ நாள்களில் வரும் கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல் திணறிப் போகிறார்களாம்!

மகா பெரியவா இங்கே பல உருவங்களில் காட்சி தருகிறார். ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் விக்கிரக வடிவில் இருக்க, கயிலாசபதியும் நந்தியும் இங்கே கொலுவிருக்கிறார்கள்.

புதிதாக 4 அடி உயரமுள்ள ஆஞ்சநேயரும் இங்கு காட்சி தருகிறார். சுமங்கலி பூஜையும் இங்கே நடைபெறுகிறது. அவ்வப்போது ராமபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.

மகானின் பல்வேறு உருவப் படங்கள் இங்கே ஒரே இடத்தில் காணக் கிடைப்பது மிகவும் சிறப்பு! காலையும் மாலையும் கற்பூர தீபாராதனை நடக்கும்.

சேலத்தில் உள்ள மகா பெரியவா கிரஹம் ஒரு புண்ணிய ஸ்தலம். அவசியம் ஒருமுறை அந்த கிரஹத்துக்கு விஜயம் செய்து, காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!

ஜய ஜய சங்கர!

சமுதாயத்தில், ஒரு ஸ்திரத்தன்மை இருந்தால் தான், நிச்சிந்தையான நிம்மதியான தத்துவம், கலை, அறிவு நூல்கள் வளர்ந்தோங்க முடியும்.நாம் இந்த தேசத்தில் பயம் இல்லாத பிரஜைகளாகத் தலையை நிமிர்த்தி நடக்கவேண்டுமானால், பிறரைத் தீமையிலிருந்து காக்கும் சூத்ர தர்மத்தை விருத்தி செய்ய வேண்டும்.

மனசு எதைத் தீவிரமாக இடைவிடாமல் நினைக்கிறதோ, அதுவாகவே மாறிவிடுகிறது.

நன்றி: காஞ்சி ஸ்ரீசங்கர மடம்

ஜெர்மன் மொழி - பயிற்சி வகுப்புகள் சென்னையில்

'ஆங்கிலம் கற்றுக்கொண்டால் மட்டுமே உலகில் எந்த மூலைக்கும் சென்று சமாளிக்கலாம்' என்கிற நினைப்பு... நியாயமானதாக இருக்கலாம். அதேசமயம், படிப்பு, வியாபாரம் என்று அனைத்துத் துறைகளிலும் தங்கள் தாய்மொழி வழியில் மட்டுமே இன்றும் இயங்கக்கூடிய நாடுகள் இங்கே அதிகம் என்பதை மறந்துவிட வேண்டாம். ஜெர்மனி, அரபு நாடுகள், ஃபிரான்ஸ், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகளைப் பட்டியலிட முடியும். இங்கெல்லாம் பணி நிமித்தம் செல்ல நேர்ந்தால், அந்தந்த மொழியைக் கற்க வேண்டியது அவசியம் என்பதால், இப்போது அந்த பயிற்சி வகுப்புகள் சென்னையில் பெருகியுள்ளன. அவற்றில் முதன்மையான மொழிகளின் விவரங்கள் இங்கே...

ஜெர்மன்: ''ஜெர்மன் மொழியில் ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2 என மொத்தம் ஆறு நிலைகள் உள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரையிலும் ஒரு செட் வகுப்புகள், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என்ற கணக்கில், ஒரு நிலைக்கு ஆறு வாரங்கள் ஆகும். சனி, ஞாயிறு செட் வகுப்புகள் என்றால், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என நான்கு மாதங்கள் நடக்கும். ஞாயிறு மட்டும் நடக்கும் வகுப்புகளில், ஒரு நிலைக்கு ஆறு மாதங்கள் எடுக்கும். வார நாட்களில் நடைபெறும் வகுப்புகளுக்கு 14 ஆயிரம் ரூபாயும், வார இறுதி நாட்கள் வகுப்புகளுக்கு 16 ஆயிரம் ரூபாயும் ஒரு நிலைக்கான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 17 வயது நிரம்பியவர்கள் இதைக் கற்கலாம்.


அராபிக்: சென்னை தி.நகரில் உள்ள 'அராபிக் இன்ஸ்டிடியூட்’ நான்கு வருடங்களாக அராபிக் மொழியைக் கற்றுத்தருகிறார்கள். ஒரே வருடத்தில் மொழியை எழுத, படிக்க, புரிந்துகொள்ள முடியும். மொத்தம் மூன்று நிலைகள் உள்ளன. நிலை ஒன்றுக்கு 60 மணி நேரம், நிலை இரண்டுக்கு 80 மணி நேரம், நிலை மூன்றுக்கு 120 மணி நேரம் ஆகிறது. ஒரு நிலைக்கு 7,000 ரூபாய் கட்டணம். திடீரென்று வேலைக்குச் செல்பவர்களுக்கென குறுகியகால வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதில் 50 மணி நேரத்திலேயே பேச, சரியாக உச்சரிக்கக் கற்றுத்தரப்படுகிறது. இதற்கான கட்டணம், ஒரு மணி நேரத்துக்கு 200 ரூபாய். குழந்தைகளுக்கென தனிவகுப்புகளும் உண்டு. எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்படுவது, அரபு மொழியின் சிறப்பு.

ஸ்பானிஷ்: அடையாறிலும், பெசன்ட் நகரிலும் உள்ள 'இன்ஸ்டிடியூட்டோ ஹிஸ்பேனியா’ பயிற்சி மையத்தில் ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. பேசிக், இன்டர்மீடியட், டிப்ளோமா என்று 8 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன வகுப்புகள். பேசிக் லெவலுக்கு 70 மணி நேரம், 2 - 5 நிலைகளுக்கு 60 மணி நேரம், 6 - 7 நிலைகளுக்கு 50 மணி நேரம், 8-ம் நிலைக்கு 50 மணி நேரம் என்று வகுப்புகள் நடக்கும். இந்த 8-ம் நிலை, இலக்கிய நிலை எனப்படும். 1 - 7 நிலைகள் ஒவ்வொன்றுக்கும் 10,700 ரூபாயும், 8-ம் நிலைக்கு 11,000 ரூபாயும் கட்டணம். பள்ளி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனத்தினர் என்று பலதரப்பினரும் வரும் இந்த மையத்தில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்களே வகுப்பெடுக்கின்றனர்.

ஜாப்பனீஸ்: அமைந்தகரையில் உள்ள 'அயோட்ஸ் டொசோக்கி’ பயிற்சி மையம், ஜப்பானிய மொழியை பேச (ஸ்போக்கன்) மற்றும் எழுதப் படிக்க (ஸ்கிரிப்ட்) கற்றுத் தருகிறது. ஞாயிறு மட்டுமே வகுப்புகள். ஸ்கிரிப்டில் N5, N4, N3, N2, N1 என ஐந்து நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கும் ஒரு வருடம் ஆகும். விரைவு வகுப்புகளும் உண்டு. ஸ்போக்கன் வகுப்புகள் தொலைத்தொடர்பு முறையிலும் வழங்கப்படுகிறது. ரூபாய் 4,750-க்கு டி.டி அனுப்பினால் புக் மற்றும் சி.டி அனுப்பி வைக்கப்படும். N5 நிலைக்கு 150 மணி நேரம் வகுப்பு. கட்டணம் - 6,250 ரூபாய்; N4 நிலைக்கு 150 மணி நேர வகுப்பு. கட்டணம் - 7,250 ரூபாய்; N3 நிலைக்கு 150 மணி நேர வகுப்பு. கட்டணம் - 9,500 ரூபாய். N2 நிலைக்கு 200 மணி நேர வகுப்பு. கட்டணம் - 13,500 ரூபாய்; N1 நிலைக்கு 300 மணி நேர வகுப்பு. கட்டணம் - 16,500 ரூபாய்.

ஃபிரெஞ்ச்: அடையாறு மற்றும் அண்ணா நகரில் கடந்த 13 வருடங்களாக இயங்கிவரும் 'இன்ஏவேர்ட்' (INaWORD) நிறுவனத்தில் பல ஐரோப்பிய மொழிகளும், சைனீஸ், ஜாப்பனீஸ் உள்ளிட்ட மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஃபிரெஞ்ச் உட்பட அனைத்து ஐரோப்பிய மொழிகளும் சி.இ.எஃப்.ஆர்.எல் (Common European Framework of Refrence for Languagees) தரத்தைக் கொண்டது. ஃபிரெஞ்ச் மொழி, ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2 என ஆறு நிலைகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. ஏ நிலை பேசிக், பி நிலை இன்டர்மீடியட், சி நிலை அட்வான்ஸ்ட் என்கின்றனர். ஏ நிலைகள் இரண்டிரண்டு துணை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ1.1 மற்றும் ஏ1.2 நிலைகள் ஒவ்வொன்றுக்கும் 50 மணி நேர வகுப்பு. கட்டணம் - 6,450 ரூபாய்; ஏ2.1க்கு 50 மணி நேர வகுப்பு. கட்டணம் - 6,950 ரூபாய்; ஏ2.2-க்கு 50 மணி நேரம். கட்டணம் - 7,250 ரூபாய்; பி1-க்கு 120 மணி நேர வகுப்பு. கட்டணம் - 19,500 ரூபாய்; பி2-க்கு 150 மணி நேர வகுப்பு. கட்டணம் - 26,000 ரூபாய். இந்த நான்கு நிலைகளிலும் பேச, எழுத, படிக்க, புரிந்துகொள்ள கற்றுக் கொடுக்கப்படும். வார நாள் வகுப்புகள், வார இறுதி நாள் வகுப்புகள் உண்டு. ஃபிரெஞ்ச், உலகில் அதிகம் பேசப்படும் மொழி. ரெனால்ட் நிஸான், செயின்ட் கொபெயின் போன்ற நிறுவனங்கள் ஃப்ரெஞ்சை முதன்மையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூல் அட்மிஷன் - சமச்சீர் கல்வி

''சமச்சீர் கல்வி (மெட்ரிக்குலேஷன், ஸ்டேட்போர்டு, ஆங்கிலோ இண்டியன்... என பல கல்வி முறைகள் நம் மாநிலத்தில் சொல்லப்பட்டாலும், இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, சமச்சீர் கல்வியாக மாற்றப்பட்டுவிட்டது), சி.பி.எஸ்.இ (CBSE- Central Board of Secondary Education), ஐ.சி.எஸ்.இ (ICSE- Indian Certificate of secondary Education), இன்டர்நேஷனல் பள்ளிகள் (International Schools), மான்டிசோரி பள்ளிகள் (Montessori Schools), சுதந்திரப் பள்ளிகள் (Independant Schools ), டிஸ்கூலிங் (Deschooling) என்று பலவகை பாட முறைகளிலான பள்ளிகளுடன், வேறு சில பாடமுறைகளிலான பள்ளிகளும் இங்கே இருக்கின்றன.
 
கல்வி முறை எதுவாக இருந்தாலும்... பாடம் குறித்துப் படிக்கின்ற வார்த்தை ஒன்றுதான். ஆனால், கற்பிக்கும் முறையும், பாடத்தின் விரிவாக்கமும்தான் மாறுபடுகின்றன. உதாரணத்துக்கு, 'தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எங்கு உள்ளது?' என்றால், அதற்கு நேரடியாக பதில் அளிப்பதே சமச்சீர் கல்வி முறையாக இருக்கிறது. இதுவே மற்ற கல்வி முறைகளில், வரைபடங்களுடன் அந்த களஞ்சியத்தைப் பற்றிய கடந்தகால, தற்கால தகவல்கள், செய்முறை தகவல்கள் என்று பலவித தகவல்களும் கூடுதலாக இருக்கும்.
 
சி.பி.எஸ்.இ பள்ளிகள்: இந்தியக் கல்வி முறையில் இயங்கக்கூடிய பள்ளிகள் இவை. பாடங்கள் விரிவானதாக இருக்கும். பெரும்பாலும் ஆய்வுகளைச் செய்யும் வகையிலான பாடங்கள் இருக்கும். புராஜெக்ட் எனப்படும் திட்டப்பணிகளும் இவற்றில் அதிக அளவில் இருக்கும். மாணவர்கள் வெறுமனே படம் பார்த்து பாடத்தைப் படிக்காமல், செயல்முறையாகவும் படிப்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை மனதில் ஏற்றிக்கொள்ளாமல், விஷயங்களை உள்வாங்கி படிப்பதாக இருக்கும். 'குடை' என்றால், படமாக மட்டுமே சமச்சீர் கல்வி முறையில் இருக்கும். சி.பி.எஸ்.இ முறையில் குடையை பேப்பர் உள்ளிட்ட பொருட்களால் செய்தே காட்டுவார்கள். மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலான கல்வி இது.


ஐ.சி.எஸ்.இ பள்ளிகள்: கிட்டத்தட்ட சி.பி.எஸ்.இ போன்றதே இந்தக் கல்விமுறையும். என்றாலும், இங்கே செயல்வழிக்கற்றல் என்பது மேலும் விரிவாக இருக்கும். உதாரணத்துக்குக் குடையை பேப்பர் உள்ளிட்ட பொருட்களில் செய்துகாட்டுவதோடு... அதற்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

சுதந்திர பள்ளிகள்: மேம்படுத்தப்பட்ட கல்வியை அளிப்பதாக இயங்கி வருபவை, இந்தப் பள்ளிகள். தி ஸ்கூல், ஈஷா கேம்பஸ் (The School, Isha Campus) போன்ற பள்ளிகள், இவற்றில் அடக்கம். இந்தப் பள்ளிகள், வழக்கமான கல்வி முறையில் இல்லாமல் தங்களுக்கென தனித்தனி பாடமுறைகளை வகுத்துக்கொண்டு, அதை செயல்படுத்தி வருகின்றன. உதாரணத்துக்கு தி ஸ்கூல் என்பது ஐ.ஜி.சி.எஸ்.இ எனும் ஆக்ஸ்போர்டு கல்வி முறையில் இயங்குகிறது. பெரும்பாலும் இந்தப் பள்ளிகள் ஐ.சி.எஸ்.இ கல்வி முறையிலே செயல்படுவதாக தெரிகிறது. இந்தப் பள்ளிகளின் சிறப்பம்சம், ஒரு மாணவன், ஒரு வகுப்பில் தோல்வி அடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுகிறான். அங்கிருந்தபடியே தோல்வியடைந்த முந்தைய வகுப்பு பாடத்தைப் படித்து தேர்ச்சி பெறலாம். முழுக்க முழுக்க வாழ்வியல் சார்ந்த நடைமுறைக் கல்வியாகவும் இது இருக்கும்.

 
இன்டர்நேஷனல் பள்ளிகள்: இந்த சர்வதேசப் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தையே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. கூடுதலாக இசை, நடனம், நீச்சல், ஸ்கேட்டிங் உள்ளிட்ட பலவித பயிற்சிகளும் வழங்கப்படும். ஏ.சி வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டு, சாட்டிலைட் மூலமாக வெளிநாட்டு ஆசிரியர்கள் பாடம் எடுப்பது முதலான தொழில்நுட்பங்கள் இந்த வகைப் பள்ளிகளின் சிறப்பம்சங்கள். பாடம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கே மாணவர்களை அழைத்துச் செல்லும் 'ஃபீல்டு ட்ரிப்’களும் நடத்தப்படுகின்றன.  இங்கே மாண வர்கள் உணவு மற்றும் உடை ஆகியவையும் வெளிநாட்டு கலாசாரத்துக்கு இணையானதாகவே இருக்கும்.
 
மான்டிசோரி பள்ளிகள்: மரியா மான்டிசோரி என்பவர் கண்டுபிடித்த இந்த வெளிநாட்டுக் கல்வி முறையின் சிறப்பம்சமே, ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர் என்பதுதான். அதேநேரத்தில், ஒரு மாணவன், ஒரே வகுப்பை மூன்று வருடங்கள் (இரண்டரை வயது முதல் ஐந்தரை வயது வரை) படிக்க வேண்டும். பல்வேறு வயதுள்ள மாணவர்கள் ஒரே வகுப்பில் படிப்பதால், அவர்களிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், உதவும் மனப்பான்மையும் வளர்கின்றன. கூடுதலாக இன்னொரு சிறப்பும் இந்தப் பள்ளிகளுக்கு உண்டு. அதாவது, ஒரு வகுப்பின் பாடதிட்டத்தில் சந்தேகம் இருந்தால், அந்த மாணவன் மீண்டும் முந்தைய வகுப்புக்குச் சென்று, அங்கே அமர்ந்து, சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டு வரலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதைக்கு இந்த பள்ளிகள் துவக்கப் பள்ளிகள் அளவில் மட்டுமே செயல்படுகின்றன. அதிலும், பல மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் வகையில்தான் இருக்கின்றன. அதன்பிறகு, வழக்கமான பள்ளிகளில் சேர்ந்துதான் படிக்க வேண்டும்.
 
டிஸ்கூலிங்: 'ஒரு குழந்தை வேலைக்கு சென்று கல்லை சுமப்பதும், பள்ளிக்கு சென்று புத்தகத்தை சுமப்பதும் ஒன்றுதான்' என்றும், 'பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களுக்கு இணையானவர்கள்' என்றும் கருதுபவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே பாடம் கற்பிக்கும் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த முறையிலான கல்வியை, இந்தியாவில் வெகுசிலர் மட்டுமே பின்பற்றுகிறார்கள். இந்தக் கல்வி முறையைப் பொறுத்தவரை பெற்றோரிடமோ அல்லது தன் வீட்டுக்கு வந்து பாடம் எடுக்கும் ஆசிரியரிடமோ அல்லது 'ஆன்லைன்’ மூலமாகவோ மாணவன் பாடம் பயில்கிறான். அல்லது தனக்குத் தோதான நேரத்தில், தனக்குப் பிடித்த இடங்களுக்கு சென்று பயில்கிறான்.

உயர்கல்வி, வேலை வாய்ப்பு போன்ற எண்ணங்கள் இருந்தால், தனித்தேர்வர்களாக 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம்.
 

Thursday, June 12, 2014

ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேரில் என்ன ஸ்பெஷல்?கடந்த காலத்தில் ஐபோன், ஐபேட் என தொழில்நுட்ப சாதனங்களில் கவனம் செலுத்திய ஆப்பிள், இந்த ஆண்டு சாஃப்ட்வேர் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துவதாக அறிவித்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் விரைவில் வெளிவர இருக்கும் ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேர்.

ஆண்ட்ராய்ட்டில் இருந்து சிலவற்றையும், ஆண்ட்ராய்டை மிஞ்சும் சில தொழில்நுட்பங்களையும் புதிதாக இணைத்து ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கிறது ஆப்பிள்.

நோட்டிஃபிகேஷன்: தற்போதைய ஆப்பிள் ஐஓஎஸ்-படி நீங்கள் போனில் எதாவது படித்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வருகிறது என்றால், நீங்கள் அந்த நோட்டிஃபிகேஷனை அழுத்தி மெசேஜுக்கு சென்றுதான் ரிப்ளை செய்ய முடியும். நீங்கள் மீண்டும் மேனுவலாக பழைய அப்ளிகேஷனுக்கு வரவேண்டும். இனி அந்தத் தொல்லை இல்லை. நேரடியாகவே நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் நோட்டிஃபிகேஷன் வரும்போதே அங்கேயே ரிப்ளை அனுப்பிவிட்டு நீங்கள் வேலையைத் தொடர முடியும். ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் வழியாகவே நண்பர்களின் கமென்ட்டுக்கோ, படத்துக்கோ லைக் பட்டனையும் தட்ட முடியும்.

கீ போர்டு: இப்போது ஆப்பிள் கீபோர்டைத் தவிர வேறு கீ-போர்டை ஐபோன், ஐபேடுகளில் பயன்படுத்த முடியாது. இனி நீங்கள் விரும்பும் கீபேடை ஐட்யூன்ஸில் டவுண்லோடு செய்து உங்கள் போன்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹோம் குரூப்: இந்த வசதி மூலம், உங்கள் வீட்டில் மூன்று ஐபோன்கள் இருந்தால் மூன்றையும் ஒன்றாக ஒரே அக்கவுன்ட்டில் இணைத்துகொள்ள முடியும். ஒரு கணக்கு மூலம் வாங்கிய அப்ளிகேஷனை உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற ஐபோன், ஐபேடுகளுடன் இலவசமாகவே டவுண்லோடு செய்துகொள்ளவும் முடியும்.

ஐமெசேஜ்: புதிய ஐஓஎஸ் 8 மென்பொருளில் ஆப்பிள் சாதனங்களுக்குள் மெசேஜ், படங்கள், வீடியோ அனுப்பவதற்கான வசதியான ஐமெசேஜில் புதிய பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் அப்ளிகேஷனைவிட மிக வேகமாக சில மைக்ரோ விநாடிகளில் போட்டோ மற்றும் வாய்ஸ் ஃபைல்களை இதன் மூலம் அனுப்ப முடியும் என்கிறது ஆப்பிள். புதிய ஐஓஎஸ் 8-ல் 3டி கேம்ஸும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

கேமரா: கேமராவில் பல புதிய அப்ளிகேஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது செல்ஃபிகளின் காலம் என்பதால், கேமரா டைமர் வசதியை அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள். இதன்படி நீங்கள் செல்ஃபிகளை எடுக்க டைம் செட் செய்துவிட்டு கூலாக நின்றால் போதும். அது 10-15 விநாடிகள் கழித்து க்ளிக் அடிக்கும்.


ஃபேஸ்டைம்: ஃபேஸ்டைம் அப்ளிகேஷனில் வீடியோ மூலம் பேசும்போது, கால் வெயிட்டிங் வசதியை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்.

ஐஓஎஸ் 8, செப்டம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் னால், இந்தப் புதிய சாஃப்ட்வேர் ஐபோன் 3, ஐபோன் 4 பயன்படுத்துபவர்களுக்குக் கிடைக்காது. 4எஸ், 5, 5சி மற்றும் 5எஸ் போன்களில் மட்டுமே ஐஒஎஸ் 8 இயங்கும்!
 
3டி போனுடன் வருகிறதா அமேஸான்?

அமேஸான் நிறுவனம் ரகசியமாக 3டி போன்  தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது என்பது டெக் உலகின் கிசுகிசு. அமேஸான் சமீபத்தில் யு-டியூபில் வெளியிட்டிருக்கும் டீஸர் வீடியோதான் எல்லா யூகங்களுக்கும் காரணம்.
டீஸர் வீடியோ லிங்க்: www.youtube.com/watch?v=erUZQ9GK0sE
 

ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்!

ஜே.பி.எல். மைக்ரோ ஒயர்லெஸ்
விலை: 2,590


மொபைல் போன்களுடன் இணைத்துக்கொள்ளும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்ஸ்தான் இப்போது டிரெண்ட் ஹிட். வெளியூர் அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும்போது இந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர் மூலம் பார்ட்டி மூடு கொண்டுவந்துவிடலாம். 3,000 ரூபாய்க்குள் நிறைய போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் ஜே.பி.எல் நிறுவனத்தின் மைக்ரோ ஒயர்லெஸ் ஸ்பீக்கர் மிகத் துல்லியமான ஒலித் தரத்துடன் இருக்கிறது. புளூடூத் கனெக்ட்டிவிட்டி. ஆனால், ஐந்து மணி நேரம் மட்டுமே பேட்டரி தாங்குகிறது என்பது மட்டுமே மைனஸ்!

அவசிய ஆப்!
 
ஐபோன், ஐபேட், மேக் புக் உள்ளிட்ட ஆப்பிள் ஆசாமிகளுக்கு செமத்தியான அப்ளிகேஷன் இந்த 'ஃபைன்ட் மை ஐபோன்’ ஆப். உங்கள் போனோ, ஐபேடோ தொலைந்துவிட்டால் அதில் இருக்கும் பர்சனல் வீடியோக்கள், புகைப்படங்கள் தவறாகக் கையாளப்பட்டுவிடுமோ எனப் பதற்றப்பட வேண்டியது இல்லை. இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் சாதனம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். போன் எந்த இடத்தில் இருந்தாலும், நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோ, கான்டாக்ட்ஸ் போன்றவற்றை அழிக்கவும் முடியும். இந்த அப்ளிகேஷனை ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்துவிட்டு, ஐக்ளவுடுடன் இணைத்துவிட்டால் போதும். பயம் உதறி நிம்மதியாக இருக்கலாம்!


மார்க்கெட் ஹிட்!
மொபைல் மார்க்கெட்டில் டாக் ஆஃப் தி டவுன்-   மோட்டோரோலாவின் மோட்டோ இ. விலை குறைவு, வசதிகள் அதிகம் என்பதே இதன் ஹிட்டுக்குக் காரணம். 1 ஜிபி ரேம், 4.3 இன்ச் டச் ஸ்கிரீன், ஹெச்டி டிஸ்ப்ளே, கிட்காட் 4.4 ஆண்ட்ராய்டு வெர்ஷன், 5 மெகா பிக்சல் கேமரா என இந்த விலைக்கு அசாத்திய வசதிகள்கொண்ட மொபைல். கொரில்லா கிளாஸ் என்பதால், அவ்வளவு சீக்கிரம் கீறல்கள் விழாது. 32 ஜிபி வரையிலான மெமரி கார்டு. அதோடு இரண்டு சிம் கார்டுகளைப் பொருத்திக்கொள்ளலாம். முன்பக்க கேமரா இல்லை, குறிப்பிட்ட வலைதளத்தில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது என்பதே இதன் மிகச் சில குறைகள்!

சைபர் கிரிமினல்கள் உங்கள் கணினியை ஹேக் செய்வது போலவே, மொபைலையும் ஹேக் செய்ய முடியும். நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய அதிஅவசிய பாது காப்பு வழிமுறைகள் இங்கே...

உங்கள் போனை எப்போதுமே பாஸ்கோடு கொடுத்து லாக் செய்து வைத்திருங்கள்.

வைஃபை இலவசமாகக் கிடைக்கிறதே என்பதற்காக ஷாப்பிங் மால், காபி கிளப் என எங்கே சென்றாலும் அதன் மூலம் போன் பேங்கிங், நெட் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்த வேண்டாம். அதன் மூலம்தான் உங்கள் போனை ஹேக் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன!

உங்கள் போனில் உள்ள தகவல்களை ஐக்ளவுட் அல்லது கூகுள் டிரைவ் மூலமோ அல்லது கம்ப்யூட்டரிலோ பேக்-அப் எடுத்து வைத்துகொள்ளுங்கள். இதனால் போன் காணமல்போனாலும் தகவல்கள் பத்திரமாக இருக்கும். அதே சமயம் ரிமோட் ஆக்சஸ் மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்கவும் முடியும்!

ஆப்பிள், ஆண்ட்ராய்டு, நோக்கியா என இயங்கு மென்பொருளைப் பொறுத்து அவர்களே சாஃப்ட்வேர் அப்டேட்களை அனுப்புவர்கள். அதைத் தவறாமல் அப்டேட் செய்தாலே வைரஸ் பிரச்னைகள் வராது.


Monday, June 09, 2014

உண்மைக்காகப் போராடிய டார்வின்!

உலகமே நம்பும் ஒரு விஷயத்தைத் தவறு என்று சொல்ல நிறைய தைரியம் வேண்டும். அந்த தைரியம்  டார்வினுக்கு இருந்தது. அந்த தைரியத்தில்தான், குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்கிற உண்மையைச் சொன்னார். தான் கண்டுபிடித்த இந்த உண்மையை உலகம் ஏற்றுக்கொள்ள அவர் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.  

இங்கிலாந்தில் பிறந்த  டார்வின், தன் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லாமல், விலங்குகளையும், பூச்சிகளையும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார். இதைக் கண்ட அவரது அப்பா, 'நீ இப்படி பூச்சிகளையும் விலங்குகளையும் வளர்த்தால்,  எப்படி உருப்படுவாய்?’ என்று திட்டினார். இதனால் மருத்துவம் படிக்கப்போனார் டார்வின்.ஆனால், அங்கு நடக்கும் அறுவை சிகிச்சைகள், மருந்து பாட்டில்கள், நோயாளிகளின் அவஸ்தை அவரைப் பயமுறுத்தின. மேற்கொண்டு மருத்துவம் படிக்காமல், இயற்கையியல் வல்லுநர் படிப்புக்கு மாறினார்.தென் அமெரிக்காவின் கனிமவளங்களைக் காணச்சென்ற அவர், ஐந்தாண்டுகள் உலகைச் சுற்றிப் பார்த்தார். இயற்கையின் பல மாற்றங்களை உற்றுநோக்கினார். பல விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தவர், அவை குறிப்பிட்ட சில உயிரினங்களின் எலும்புகளோடு பொருந்திப்போவதைக் கண்டார். இதற்கான காரணத்தைத் தேடிய போது, ஒருசில விலங்கிலிருந்து பலவகை  விலங்குகள்  உருமாறி வந்திருப்பதைக் கண்டார். இதுபோல, மனிதனும் குரங்கி லிருந்து  பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்கிற உண்மையை அறிவியல்பூர்வமாக எடுத்துச் சொல்ல, அவர் பல ஆண்டு  ஆராய்ச்சி செய்யவேண்டியிருந்தது.  
  
 

என்றாலும், இந்த உண்மையை உலகம் உடனே ஒப்புக்கொள்ள வில்லை. மத அமைப்புகள் டார்வினின் கருத்தைக் கடுமையாக எதிர்த்தன. என்றாலும், அவர் தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. உண்மையே ஜெயிக்கும் என்றார். 'உலகத்தைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ, அன்றைக்கே நான் இறந்துபோவேன்' என்று கூறினார்.டார்வின் இறந்து பல ஆண்டுகள் கழித்து, அவரது கண்டுபிடிப்பு உண்மை என எல்லாரும் ஏற்றுக் கொண்டனர். நீங்கள் சொல்வது உண்மை எனில், உலகம் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நீங்கள் அதில் உறுதியாக இருங்கள். அப்படி இருந்தால், நீங்களும் டார்வின் ஆவீர்கள்!

காலை உணவு கட்டாயம்!


பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், நேரமில்லை எனும் காரணம் காட்டி பல மாணவர்கள் காலை உணவைச் சாப்பிடுவதே இல்லை. இது ஆரோக்கியக் கேடுகளுக்கு வழி வகுக்கிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. 

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளி விடுகிறோம். இதனால் உடலில் சக்தி குறைகிறது. இந்தச் சக்தியைப் பெறுவதற்குக் காலையில் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். காலையில் நாம் சாப்பிடும் உணவுதான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.  

காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு விரைவிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் காலை வகுப்புகளில் அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை. தூக்கம், சோர்வு தலைவலி வருகிறது. அவை கற்றல் திறனைப் பாதிக்கிறது. இவர்கள் மதிய உணவுக்கு முன்பாக வரும் இடைவேளை நேரத்தில் பசி காரணமாக ஏதாவது ஒரு நொறுக்குத் தீனியை வயிறு நிறையச் சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மதிய உணவு சாப்பிடுவதும் குறைந்து போகிறது. நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதால் உடற்பருமன் வருகிறது. இதன் விளைவால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது. 

மேலும், தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இரைப்பையில் சுரக்கிற அமிலச் சுரப்பு இரைப்பைத் திசுக்களை அரித்துப் புண்ணாக்கி விடுகிறது. இது பசியைக் குறைத்து விடுகிறது. செரிமானக் கோளாறு தொல்லை தருகிறது. எனவே இவர்களால் அடுத்த வேளை உணவையும் சரியாகச் சாப்பிடமுடிவதில்லை. இது ஊட்டச்சத்துக் குறைபாட்டை இன்னமும் அதிகரிக்கச் செய்கிறது. இது உடல் வளர்ச்சியைப் பாதிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது. இவர்கள் உடலளவிலும் மன அளவிலும் பலவீனமாக இருக்கிறார்கள். இதனால் பொறுமை குறைந்து கோபம், எரிச்சல் அதிகமாக வருகிறது.

காலை உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து கலந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த காலை உணவு மந்த நிலையைஉருவாக்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வழக்கமான அரிசியில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை, சாதம் என்று ஒரே வகை உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக பல மாற்று உணவுகளைச் சாப்பிடும் வழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்.  

உதாரணமாக கேழ்வரகு இட்லியுடன், நிலக்கடலை சட்னி, ஒரு வாழைப்பழம், கார்ன்ஃபிளேக்ஸ் கலந்த பால் சாப்பிடலாம். வேக வைத்த காய்கறிகள் சேர்த்த கோதுமை ரவா உப்புமாவுடன் வேகவைத்த முட்டை சாப்பிடலாம். சப்பாத்தியுடன் தேன் கலந்த ஓட்ஸ் 100 மி.லி. அரை ஆப்பிள் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும்போது ஆரோக்கியத்துக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்துவிடும். அரிசி தோசை ஒருநாள் என்றால் சம்பா தோசை ஒருநாள் சாப்பிடலாம். காலை உணவில் ஒரு பழம் அவசியம் இருக்க வேண்டும். சாமை, வரகு, தினை, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது.

காலை உணவைச் சரியாகச் சாப்பிடும் குழந்தைகள் நல்ல உடல் நலனுடனும் ஊக்கத்துடனும் செயல்படுகிறார்கள் என்பதும் இவர்களுக்குச் சிந்திக்கும் திறன் அதிகமாக உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

அருள்வாக்கு - நாமும் கூத்தர்கள்


ஆண்டாள் ‘திருப்பாவை’யில் ‘தூமலர் தூவித் தொழுது வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்க’ என்று பாடியிருக்கிறாள்.

மனோ-வாக்-காயங்கள் என்ற த்ரிகரணங்களையும் பகவத்பரமாக்க வேண்டும் என்பதைத்தான் ஆர்டரை மாற்றி காயம்-வாக்-மனஸ் என்று இங்கே சொல்லியிருக்கிறாள். ‘வாயினால் பாடி’, ‘மனத்தினால் சிந்திக்க’ என்பதில் வாய், மனஸ் Plain -ஆகவே தெரிகிறது. அப்படியானால் ‘தூமலர் தூவித் தொழுது’ என்கிறது காயத்தை பகவ தர்ப்பணமாக்குவதே என்றும் ஆகிறது. அப்பர் சொன்ன ‘பூக் கையால் அட்டி’தான் ‘தூமலர் தூவி’; ‘தொழுது’ என்பது நமஸ்காரம். விழுந்து பண்ணுவதாகவே இருக்கலாம். அல்லது புஷ்பாஞ்ஜலியாகத் தூமலர் தூவிய கையாலேயே கும்பிடுவதாகவும் இருக்கலாம். ‘கைகாள் கூப்பித் தொழீர்’ என்று அப்பர் கைக்கே தொழும் க்ரியையைச் சொன்ன மாதிரியே ஆண்டாளும் சொன்னதாயிருக்கலாம்.

‘ஆக்கையாற் பயனென்?’ என்ற அப்பர் பாடலில் வரும் ப்ரதக்ஷிணம் ஆக்கையின் அடிப்பாகமாகவுள்ள பாதத்தால் பண்ணுவது. மத்ய பாகத்திலுள்ள கையால் அர்ச்சனை, புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை பண்ண வேண்டும்.

‘போற்றி என்னாத’ - ஆக்கையின் முடி பாகத்திலுள்ள வாயால் ஈச்வரனைப் போற்றி ஸ்தோத்ராதிகள் சொல்ல வேண்டும்.

உச்சி ஸ்தானம் தலை -அதைச் சொல்லித்தான் பாட்டே ஆரம்பித்தார். ‘தலையே நீ வணங்காய்!’ என்று.

‘தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா சய போற்றி போற்றி’ யென்றும் ‘ஜய ஜய சங்கர’ என்று இன்றைக்கு நாமெல்லோரும் கோஷிக் கிறதைத்தான் அன்றைக்கே ‘சங்கரா சய போற்றி போற்றி’ என்று சொல்லியிருக்கிறார். சொல்லிக் கொண்டே போனால் ஒரு ஆனந்த வெறியே பிறக்கிறதோல்லியோ, அதைத்தான் ‘கூத்துமாடி’ என்கிறார். அவனும் கூத்தன், அவனுடைய பக்தியிலே நாமும் கூத்தர்கள்.

தலையால் வணங்குவதற்காகச் சொன்னேன்.

தலையால் வணக்கம், கையால் அர்ச்சனை, வாயால் ஸ்தோத்ரம் என்று இருந்தால் அதுவே ஆக்கையின் பயன் என்று இங்கே சொல்கிறார்.

இன்னொன்றும் பார்க்கிறோம்; தலை, கை, கால் மூன்றுமே நமஸ்கார உறுப்புகளாக இருக்கின்றன. தலையைச் சாய்த்து நமஸ்காரம்; கையைக் கூப்பி நமஸ்காரம்; காலை மண்டி போட்டு நமஸ்காரம்.

பாதம் என்பது காலின் முடிவில் இருப்பது; Leg-ன் முடிவிலுள்ள Foot.ஹஸ்தம் என்பது புஜத்தின் முடிவில் இருப்பது; Arm-ன் முடிவிலுள்ள Hand. ஒரு மநுஷ்ய சரீரத்திலே Extremities என்று சொல்லும் சிறிய பாகங்கள் தான் இவை. வலம் வருவதும், பூ அட்டுவதும் இந்தச் சின்ன பாகங்கள்தான்.


ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

மிரள வைப்பாரா மெஸ்ஸி?

 
இது உலகக்கோப்பை நேரம். கால்பந்துப் பிரியர்களின் கொண்டாட்டமான தருணம். ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை. 32 நாடுகள். மொத்தம் 64 மேட்சுகள். அகிலமே உலகக்கோப்பைப் போட்டியின் வசம் இருக்கப்போகிறது.
 
1978க்குப் பிறகு தென் அமெரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பை இது. பிரேஸிலில் நடக்கும் இரண்டாம் உலகக்கோப்பை போட்டி. இதுவரை ஐந்து முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது பிரேஸில் (இத்தாலி-4, ஜெர்மனி-3, அர்ஜெண்டினா, உருகுவே -2). தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயின், நெ.1 இடத் தில் இருக்கிறது. பிரேஸில், 4ம் இடத்தில் (இந்தியா 147ம் இடத்தில்!).
 
2011 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடந்தது எப்படி ஒரு பொருத்தமோ, அப்படியொரு பொருத்தம், கால்பந்து உலகக்கோப்பை போட்டி, பிரேஸிலில் நடப்பது. மகத்தான கால்பந்து வீரர்களையும் தன்னிகரற்ற கால்பந்து ரசிகர்களையும் கொண்டது பிரேஸில். பலமான வீரர்களும் திறமையான பயிற்சியாளர்களும் அவர்கள் வசம் இருப்பதால் பிரேஸிலை வீழ்த்த எந்த ஓர் அணியும் கடுமையாகப் போராட வேண்டிய நிலைமைதான் எப்போதும். உலகக்கோப்பை போட்டியால் பிரேஸிலுக்கு மகத்தான மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அந்த நாட்டு மக்கள். சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் பிரமிப்பு ஏற்படுகிறது.  

இந்தப் போட்டிக்காக பிரேஸில் கிட்டத்தட்ட 83 ஆயிரம் கோடி ரூபாயைச் (14 பில்லியன்) செலவழித்துள்ளது. 12 ஸ்டேடியங்கள், விமான நிலையம், சாலைகள் புதுப்பித்தல் என பணம் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் எப்படியும் பிரேஸிலுக்கு 60 லட்சம் சுற்றுலாவாசிகளின் வருகை இருக்கும் என்று நம்புகிறது பிரேஸில் அரசு. இந்தப் போட்டியினால் பிரேஸிலுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவுள்ளது. 2010ல் தென் ஆப்பிரிக்கா சம்பாதித்ததை விடவும் 10 மடங்கு அதிகமிது. பிரேஸில் ரசிகர்கள் கால்பந்து மேட்சுகள், பீர்களுக்கு மட்டுமல்ல சூதாட்டத்துக்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிப்பார்கள். இப்போட்டியின் சூதாட்ட வருமானம், எப்படியும் 1800 கோடி ரூபாயைத் தாண்டும் என்று நம்பப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 207 கோடி ரூபாய் பரிசுத்தொகை. இறுதிப் போட்டி டிக்கெட்டின் விலை - 58,000 ரூபாய். 
 
உலகக் கோப்பையில் சாகசம் செய்த வீரர்கள் வரலாற்றில் இடம்பிடிப்பார்கள். கால்பந்து ஆட்டத்தின் பிதாமகனான பீலே ஆடிய நான்கு உலகக் கோப்பை போட்டிகளில் பிரேஸில் மூன்று முறை வென்றுள்ளது. 1986 உலகக் கோப்பையில் மரடோனா, ஒற்றை ஆளாக இங்கிலாந்து வீரர்களை கடந்து அடித்த கோலை யாரால் மறக்கமுடியும்? 1998லும் 2002லும் பிரேஸிலின் ரொனால்டோ அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார். 2010ல், ஜெர்மனியின் தாமஸ் முல்லர் இரண்டு விருதுகளைப் பெற்றார். இந்தமுறை கவனத்தை ஈர்க்கப்போகிறவர் யார் என்று உலகம் முழுக்க விவாதம் நடந்து வருகிறது.  

மரடோனாவின் வாரிசாக முடிசூட்டப்பட்ட மெஸ்ஸி, சென்றமுறை ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். மிகச்சிறந்த வீரர் என்றால் பீலே, மரடோனா போல தங்கள் அணி உலகக்கோப்பை வெல்ல ஒரு சூத்திரதாரியாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மெஸ்ஸி மிகவும் பலவீனமாக இருக்கிறார். பார்சிலோனா கிளப்புக்காக ஆடுகிற மெஸ்ஸி அசைக்கமுடியாத சக்தியாக இருந்தாலும் உலகக்கோப்பைப் போட்டியில் தன் நாட்டுக்காக அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை" என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மரடோனாவால் 1986ல் அர்ஜெண்டினா உலக சாம்பியன் ஆனபிறகு மீண்டும் உலக்கோப்பையை அர்ஜெண்டினாவால் வெல்ல முடியவில்லை. இந்தப் போட்டியில், அர்ஜெண்டினாவை உலக சாம்பியனாக்கி, தன்னையும் நிரூபித்துக் காட்டவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார், மெஸ்ஸி. 
 
கால்பந்தில் எப்போதும் சாம்பியன்கள் ஐரோப்பியர்களும் தென் அமெரிக்கர்களும்தான். ஈரோ 2008 கோப்பையை ஸ்பெயின் வென்றபிறகு, ஸ்பெயின் வளர்ச்சி கிடுகிடுவென எகிறிவிட்டது. 2010 உலகக் கோப்பையையும் வென்று இந்தப் போட்டியையும் ஒரு கை பார்க்கத் தயாராக இருக்கிறது, ஸ்பெயின். இதுவரை தென் அமெரிக்காவில் நடந்த போட்டியில் ஐரோப்பிய அணி ஜெயித்தது இல்லை. இதை உடைக்கவேண்டும் என்று விரும்புகிறது ஜெர்மனி.
 
க்ரூப் ஆஃப் டெத் என்கிற கஷ்டமான அணியில் (ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா) ஜெர்மனி உள்ளதால் அதன் ஆட்டங்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றன. 1990ல், நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவை குட்டி ஆப்பிரிக்க நாடான கேமரூனும் 2002ல் நடப்பு சாம்பியனான பிரான்சை செனகல் வென்றதும், அதே போட்டியில் தென் கொரியா அரையிறுதிக்கு நுழைந்ததும் சமீப கால உலகக்கோப்பைப் போட்டியில் நடந்த சில ஆச்சரியங்கள். சென்றமுறை ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் நடந்த நாக் அவுட் போட்டியில், பந்து கோட்டைத் தாண்டிச் சென்ற பிறகும் இங்கிலாந்துக்குச் சாதகமாக கோல் வழங்கப்படவில்லை. அந்த மேட்சில் இங்கிலாந்து தோற்றுப்போனது.  

இதில் உண்டான சர்ச்சையைத் தொடர்ந்து சர்வதேச கால்பந்து சங்கம், கோல் லைன் டெக்னாலஜியை முதல் முறையாக உலகக்கோப்பையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் இனிமேல் சர்ச்சைகள் குறையும் என்று நம்பலாம்.
 
பெரும்பாலும் இந்தியர்கள் இந்தப் போட்டியைப் பார்க்க வேண்டுமென்றால் இரவு கண்விழிக்க வேண்டியிருக்கும். ஜூன் 12ம் தேதி பிரேஸிலும் குரோஸியாவும் ஆடுகிற முதல் ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30க்கு நடக்கிறது. பல மேட்சுகள் நள்ளிரவு 12.30க்கும் அதிகாலை 3.30க்கும் நடக்கின்றன. நல்ல வேளையாக இரவு 9.30க்கும் பல மேட்சுகள் உண்டு. இறுதிப் போட்டி இரவு 12.30 மணிக்கு.
 
1958, 1962ல் பிரேஸில் தொடர்ந்து இரண்டுமுறை உலக சாம்பியன் ஆனபிறகு வேறு எந்த அணியும் அடுத்தடுத்து ஜெயிக்கவில்லை. ஸ்பெயின் இந்த முறையும் ஜெயித்து புதிய சாதனை படைக்குமா அல்லது பிரேஸில், ஜெர்மனி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் ஒன்று உலக சாம்பியனாகும் வாய்ப்புள்ளதா? ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.

Monday, June 02, 2014

சச்சின் - பின்னி பன்சால் - ஃப்ளிப்கார்ட்

இ- காமர்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங் களுக்கு இணையாகப் போட்டிபோடும் அளவுக்கு ஃப்ளிப்கார்ட் எனும் இந்திய நிறுவனத்தை இரண்டு இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர். அதோடு, சமீபத்தில் மைந்த்ரா டாட்காம் என்னும் இணையதளத்தை சுமார் 2,000 கோடி ரூபாய் தந்து வாங்கி, இந்திய இ-காமர்ஸ் துறையின் மிகப் பெரிய வர்த்தகத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

சண்டிகரில் பிறந்த சச்சின் பன்சால், டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்றவர். அவரது ஐஐடி நண்பரான பின்னி பன்சாலுடன் இணைந்துதான் ஃப்ளிப்கார்ட் என்னும் ஆன்லைன் இணையதளத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சச்சினும் பின்னியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தாலும், ஐஐடியில் இணையும்வரை ஒருவரையொருவர் அறியாமலே இருந்தனர். பட்டம் பெற்றபிறகு இருவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு அமேசானில் கிடைத்த வேலை மூலம் மீண்டும் இணைந்தனர். இதன்பிறகுதான் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணம் அவர்களுக்கு வந்தது. இருவரும் ஆளுக்கு தலா 2 லட்சம் ரூபாய்  முதலீடு செய்தனர். ஃப்ளிப்கார்ட் மூலம் புத்தகங்களை விற்கத் தொடங்கினர்.

2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தைப் படிப்படியாக உயர்த்திய இருவரும், 2015-ல்  பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றுவோம் என்று கூறியபோது, அதெல்லாம் சாத்தியமே இல்லை என்றார்கள் பலர்.  ஆனால், இன்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது.

எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடங்கி ஆபரணப் பொருட்கள் வரை அனைத்தையும் விற்கும் இ-காமர்ஸ் இணையதளமாக ஃப்ளிப்கார்ட்டை மாற்றியிருக்கிறார்கள் இந்த இரு இளைஞர்கள்.

2015-ல் செய்ய நினைத்ததை 2014-லேயே செய்துகாட்டிய இந்த இளைஞர்கள் சாதனை மனிதர்கள்தான்!

டெட் டாக்ஸ் - இலவச வீடியோ பொக்கிஷம்

' 'பள்ளிக்கூடங்கள் நமது படைப்பாற்றலை எப்படிக் கொல்கிறது?'
''உடல்மொழி நம்மை சிறந்த மனிதராக உருவாக்குமா?'
''புள்ளிவிவரங்கள் பிசினஸின் வளர்ச்சிக்கு எப்படி உதவும்?'' 

இதுபோன்ற சுவாரஸ்யமான  கேள்விகளுக்கு தெள்ளத் தெளிவாக, அதேநேரத்தில் 18 நிமிடங்களில் ரத்தினச் சுருக்கமாக அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த பிரபலமானவர்கள் தரும் பதில் தெளிவாக வீடியோ காட்சிகளாக பொதிந்து கிடக்கிறது டெட் டாக்ஸ் (TED TALKS) என்கிற இணையதளத்தில். நம் வீட்டில் உட்கார்ந்தபடியே இந்த இணையதளத்தின் மூலம் உலகத்தில்   அதி அற்புதமான அறிவைப் பெறலாம். 

டெட் டாக்ஸ் என்றால்..? 

1984-ம் ஆண்டு ரிச்சர்ட் சால் வுர்மன் (Richard Saul Wurman) என்பவர் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்புப் பற்றிய கருத்துகளையும், யோசனைகளையும் பரப்பும் நோக்கில் TED (Technology Entertainment Design - Ideas Worth Spreading) என்கிற அமைப்பை உருவாக்கினார். 2001-ம் ஆண்டு கிரிஸ் ஆண்டர்ஸன் (Chris Anderson) என்பவர் நடத்திவந்த சாப்லிங் பவுண்டேஷன் (Sapling  Foundation), வுர்மானிடமிருந்து 'டெட் டாக்ஸை’ வாங்கி  இன்றுவரை சிறப்பாக நடத்தி வருகிறது. சமீபத்தில் இதன் 30-வது பிறந்தநாள் கனடாவில் உள்ள வான்கூவரில் கொண்டாடப்பட்டது.

 

ஆரம்பத்தில் அறிவியல், வணிகம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் பற்றிய பேச்சுகள் இதில் இடம்பெற்றன. பல துறைகளைச் சேர்ந்த ஜாம்பவான்கள் சன்மானம் எதுவும் வாங்காமல் தங்களது கருத்து களையும், யோசனைகளையும் 18 நிமிடத்துக்குள் (சில பேச்சுகள் இதற்கு விதிவிலக்கு) அனைவருக்கும் புரியும்படி எளிமையாக, தெளிவாக பேசியிருக் கிறார்கள். இன்றும் பேசிவருகிறார்கள்.

'பிக் பேங்க்’ (Big Bang) கோட்பாடு முதல் இன்றைய இன்டர்நெட் வரையிலான அறிவியல் மகத்துவங்கள் இந்த டெட் டாக்ஸில் இருக்கிறது. ஏறக்குறைய 1,700-க்கும் மேற்பட்ட பேச்சுகளின் வீடியோ இந்த இணையதளத்தில் உள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியவர்களில் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா, ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், மால்கம் கிளாட்வெல், டான் அரிலே, லாரி பேஜ், அல் கோர், இந்தியாவைச் சேர்ந்த சசி தரூர், கிரண்பேடி, முருகானந்தம், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

கே.எஃப்.சி!

அசைவ உணவுப் பிரியர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது சிக்கனைத்தான். இன்றைக்கு பெருநகரங்களில் வசிக்கும் பலருக்கும் சிக்கன் என்றதுமே கே.எஃப்.சி.தான் ஞாபகத்துக்கு வருகிறது. தனித்துவம் மிக்கச் சுவையினால் உலகம் முழுக்க உள்ள அசைவப் பிரியர்களின் மனத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கிறது கே.எஃப்.சி. இந்த வெற்றிக்குப் பின்னால் கொலோனல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ் சந்தித்த போராட்டங்கள் பலப்பல.

கொலோனல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ், 1890-ம் ஆண்டு அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிறந்தார். தனது ஆறாவது வயதிலேயே அவரது தந்தை இறந்ததால், தனது தம்பியையும், தங்கையையும் வளர்க்கும் பொறுப்பும், குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் சாண்டர்ஸுக்கு வந்தது. தனது உறவினரின் பண்ணையில் விவசாயம் செய்தார். பின்னர் அமெரிக்க ராணுவத்தில் டிரைவராக சிலமாதம் வேலை பார்த்தார்.

16 வயதில், ரயிலில் கரி அள்ளிப்போடும் வேலை என நிரந்தரமாக எந்த வேலையிலும் சாண்டர்ஸினால் இருக்க முடியவில்லை.

 

என்றாலும், பகுதி நேரமாகச் சட்டம் படித்தார். ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ்மேன் வேலைக்குச் சேர்ந்தார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை என்பதால், அந்த வேலையையும் விட்டுவிட்டார். கடைசியில், ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்தின் சர்வீஸ் ஸ்டேஷனை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில நாட்களில் அதற்கும் வந்தது சோதனை. கம்பெனி நஷ்டத்தில் சென்றதால் அதனையும் மூடும் நிலை உருவானது.

ஆனால், சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளவர்களுக்கு பொரித்த சிக்கனை விற்று வந்தார் சாண்டர்ஸ். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கென்டகி ஃப்ரைடு சிக்கன் என்று தனது தயாரிப்புக்கு பெயர் வைத்தார். இதன்பிறகு கே.எஃப்.சி. அமெரிக்கா முழுக்க பரவி, அடுத்த நாடுகளுக்கும்  செல்ல ஆரம்பித்தது.

சாண்டர்ஸின் பல்வேறு முயற்சிகளில் வெற்றிகரமாக இருந்தது கே.எஃப்.சி மட்டுமே. அடுத்தடுத்து தோல்விகள் தம்மைத் துரத்தி வந்தபோதும், தனக்கான வாய்ப்பை பெறும்வரை நம்பிக்கையோடு மனம்தளராமல் காத்திருந்தார் சாண்டர்ஸ். தொடர் தோல்விகளால் துவண்டுபோகிறவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தால், சாண்டர்ஸ் போல நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!