Search This Blog

Saturday, August 31, 2013

ஓ பக்கம் - என்னை ஏமாற்றிய ஈபெல் கோபுரம்! ஞாநி


பாரீஸ் மியூசியத்தை லூவ்ரு என்று எழுதுகிறீர்களே, அதை லூவர் என்றோ லூவ்ரே என்றோ சொல்ல வேண்டாமா என்று ஒரு நண்பர் கேட்டார். பல மொழிகளுடன் இதுதான் சிக்கல். அவற்றில் எஸ், டி, ஜி எல்லாம் ஒலியில்லாமல் சைலன்டாக இருக்கும் என்பார்கள். பாரீஸுக்குப் போ என்று சுமார் 40 வருடம் முன்னால் ஜெயகாந்தன் எழுதியதைப் படித்துவிட்டு, பாரீஸ் போகும் ஆசையை ஒரு வழியாக இப்போது நிறைவேற்றிக் கொண்டு அங்கே போனால், அது பாரீஸ் இல்லையாம். பாரியாம். எஸ்சை உச்சரிக்கக்கூடாது என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்! பெயர்களை, மொழி இலக்கணத்துக் கேற்ப மாற்றி உச்சரிக்கலாம் என்ற விதிப்படி பாரீஸை நாம் பாரீஸாகவே வைத்துக் கொள்ளலாம்.

பாரீசில் இருந்த ஆறு நாட்களில் இரு தினங்களை லூவ்ருவில் கழித்தேன். மியூசியத்துக்கே ரெண்டு நாளா என்று சில நண்பர்கள் கேட்டார்கள். லூவ்ருக்கு ரெண்டு நாள். அப்புறம் ஆர்ஸீ, ஆர்மி, வெர்செல்ஸ் எல்லாம் வேறு. என் பயணத் திட்டத்தையே ஊருக்கு மூன்று நாள் என்று போடாமல் ஒரே ஊரில் ஒரு மாதம் என்று போட்டிருந்தால், லூவ்ரு போன்ற இடத்தில் 10 நாளாவது செலவிட முடியும்.அந்த அளவுக்கு அந்த மியூசியங்களில் நம் அறிவை வளர்க்கவும் உற்சாகப்படுத்தவும் விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நமக்குத் தரும் முறையை மேலைநாட்டினர் சிறப்பாக உருவாக்கி வடிவமைத்து நேர்த்திப்படுத்தி வைத்திருக்கிறார்கள். என் பயணத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு மியூசியத்துக்காவது செல்லாமல் நான் திரும்பவில்லை. இன்னும் பல மியூசியங்களைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் உண்டு.இந்தியாவில் ஒருபோதும் மியூசியத்துக்குப் போகவில்லையே என்ற வருத்தம் வந்ததே இல்லை. அங்கே நாம் போனாலே உன்னை யார் இங்கெல்லாம் வரச் சொன்னது என்ற தோரணையில்தான் ஊழியர்களின் உடல்மொழி இருக்கும். காட்சியகத்தில் காட்சியும் இருக்காது. விளக்கமும் இருக்காது. ஒட்டடையும் அழுக்கும்தான் இருக்கும். சென்னை எழும்பூர் மியூசியத்தில் ஆட்டோவை உள்ளே விடமாட்டார்கள். சினிமா, நாடகம், இசைக்கெல்லாம் விருப்பத்துடன் போவது போல மியூசியத்துக்கும் போகலாம் என்ற மனநிலையை மேலைநாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறார்கள். ஒவ்வொரு மியூசியத்திலும் ஒரு நல்ல புக் ஷாப் இருக்கிறது. வெறுமே சாவிக்கொத்து மாதிரி நினைவுப் பொருட் கள் விற்பது மட்டுமல்ல; தரமான நூல்கள் இருக்கின்றன. இம்ப்ரஷனிசம் என்பது ஓர் ஓவிய பாணி. அதை சிறுவர்களுக்கு எப்படி புரியும் விதத்தில் சொல்வது என்பதற்கு புத்தகம் வாங்கினேன். பள்ளிக் குழந்தைகள் அறிய வேண்டிய ஐரோப்பிய ஓவிய மேதைகள் பற்றி அருமையான இன்னொரு நூல். இப்படிப் பல விஷயங்கள் இந்தக் கடைகளில் உண்டு. 

இந்தப் பயணத்தில் நான் பார்த்த மிகப்பெரிய மியூசியம் லூவ்ரு.  

பிரெஞ்ச் மன்னன் இரண்டாம் பிலிப் 12ஆம் நூற்றாண்டில் கட்டிய கோட்டை அரண்மனையே லூவ்ரு. லூவ்ரு என்றால் பிரம்மாண்டம் என்று அர்த்தமாம். இந்த அரண்மனையையும் பின்னர் ஆர்மி மியூசியம் இருந்த அரண்மனை, வெர்சேல்ஸ் அரண்மனை எல்லாவற்றையும் பார்த்ததும் நம் நாட்டில் ராஜாக்கள், அரசர்களே இருந்ததில்லை என்றும் சின்னச் சின்னப் பண்ணையார், ஜமீன்தார், பாளையக்காரர்களையெல்லாம் நாம் அரசர்கள் என்று ஆக்கி வைத்திருக்கிறோமோ என்றும் சந்தேகம் வருகிறது.பதினாறாம் லூயி மன்னன் 1692ல் வெர்சேல் சுக்கு தன் குடியிருப்பை மாற்றிக் கொண்டபோது, லூவ்ருவில் இனி தன் கலைச்செல்வங்களை வைத்து அழகு பார்க்கலாம் என்று முடிவெடுத்தான். அது முதல் அந்த இடம் மன்னர்கள் போர்களில் கொள்ளையடித்தது, பரிசாகப் பெற்றது, ஆர்வத்தில் திரட்டியது எனப் பலவகை கலை, ஆவணப் பொருட்களின் களஞ்சியமாக இருந்து வருகிறது.நெப்போலியன் ஆட்சியில் லூவ்ரு நெப்போலியன் மியூசியம் என்று பெயர் மாற்றப்பட்டு விரிவுபடுத்தப் பட்டது. ஆனால் பொதுமக்கள் சென்று பார்க்கும் இடமாக இது மாறியது பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான். அதுவரை அரசருக்கு வேண்டியவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் போன்றோர் மட்டுமே பார்க்கும் இடமாக இது இருந்தது. புரட்சிக்குப் பின் வாரத்தில் மூன்று நாட்கள் மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். லூவ்ரு அரண்மனையிலேயே பல ஓவியர்கள், சிற்பிகள் குடியிருந்திருக்கிறார்கள்.இன்று உலகத்தின் பல்வேறு நாகரிகங்களின் வரலாற்று ரீதியிலான கலை ஆவணத் தொகுப்புகள் லூவ்ருவில் உள்ளன. ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் என்று இங்குள்ள பொருட்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி விட்டது. பரப்பளவு மட்டும் ஆறு லட்சம் சதுர அடி. மொத்தம் 2000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். பார்க்க வரும் பொது மக்கள் தரும் பணத்தில் மட்டுமாக இந்த மியூசியத்தைப் பராமரிக்க முடியாது. பிரெஞ்ச் அரசு மட்டுமே 62 சதவிகித செலவை ஈடுகட்டுகிறது. அதுவே சுமார் 18 கோடி டாலர்கள்! உலகப் புகழ் பெற்ற டாவின்சி கோட் படம் இந்த மியூசியத்தில் பல இடங்களில் படமாக்கப்பட்டது. அதில் கிடைத்த கட்டணம் மட்டுமே இரண்டரை கோடி டாலர்! டாவின்சி கோட் படத்தில் மியூசியத்தின் முகப்பில் இருக்கும் கண்ணாடி பிரமிடு முக்கிய இடம் பெறும். இந்த பிரமிடுதான் நுழைவாயில். இதுதான் லூவ்ருவின் மிக லேட்டஸ்ட் கட்டடம்; 1983ல்தான் கட்டினார்கள். இதில் நுழைந்துதான் லூவ்ருவின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல முடியும். இங்கே இன்னும் திறக்கப்படாத ஒரு சிலையின் தோற்றத்தையே ஒரு சிலையாக்கி இருக்கிறார்கள் !

லூவ்ருவில் இருக்கும் புகழ் பெற்ற ஓவியம் லியனர்டோ டாவின்சியின் மோனாலிசா. நேரில் பார்க்க அது ஒன்றும் அப்படி அபாரமாக இல்லை. ஆனால் மியூசியத்திலேயே இங்கேதான் கூட்டம் அதிகம்.  மியூசியத்தில் என்னைக் கவர்ந்த ஓவியங்கள் என்பவை புகைப்படக் கலை கண்டுபிடிக்கப்படும் முன்னர் தத்ரூபமாகத் தீட்டியிருக்கும் படங்கள்தான். சின்ன சைசிலிருந்து கட்டட சுவர் முழுக்க வியாபிக்கும் பிரம்மாண்டமானவை வரை உள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இரு உணர்ச்சிகள் எழுவதை சொல்லியே ஆகவேண்டும்.ஓவியம், சிற்பம் இரண்டு கலைகளிலும் இனி செய்ய ஏதுமில்லை என்றே படுகிறது. உச்சங்களையெல்லாம் அப்போதே செய்து முடித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். இந்திய தமிழ் ஓவிய சிற்பக் கலைப் படைப்புகள் அற்புதமாக இருந்தாலும், ஐரோப்பிய சாதனைகளை நெருங்கவில்லை என்றே சொல்லலாம். இருப்பதில் சிறந்த சோழர் கால பிரான்ஸ்களைக் கூடப் போற்றத் தெரியாத மட்டி சமூகம் நாம். ரோமானிய, கிரேக்க வரலாற்று சின்னங்கள், எகிப்து நாகரிக வரலாறு, மத்திய கிழக்கு நாகரிகம் இஸ்லாமிய கலை வரலாறு என்று பல பகுதி கலை வரலாறுகள் லூவ்ருவில் விரிவாக இருக்கின்றன. ஆனால் இந்தியக் கலை பற்றி எதுவும் இல்லை. லூவ்ருவின் இயக்குனர் இந்தியா வந்தபோது இதைப் பற்றி இந்திய அரசிடம் பேசியிருக்கிறார். மத்திய கிழக்கு பற்றிய லூவ்ரு முயற்சிகளுக்கு அங்குள்ள அரபு பணக்காரர்களும் அரசும் பெரும் தொகையை மான்யமாக லூவ்ருக்குத் தருகின்றனர். இந்தியா அப்படி எதுவும் செய்யவில்லை. தற்காலிக கண்காட்சி வைக்க தன் சிற்பங்களை அனுப்புவதோடு சரி.லூவ்ருவில் நான் பார்க்க முடியாத இன்னொரு வரலாறு கில்லட்டின் பற்றியதாகும். பிரெஞ்ச் புரட்சியின்போது மன்னர்கள், ராணிகள், பிரபுக்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட கில்லட்டின் எனும் வெட்டு இயந்திரத்தைப் பற்றி லூவ்ருவிலும் பாரீசில் நான் கண்ட இதர மியூசியங்களிலும் எதுவும் இல்லை.

பாரீசில் என்னை ஏமாற்றியது ஈபெல் கோபுரம்தான். டவர் அருமையான இஞ்சினீயரிங் வேலைப்பாடாக இருந்தாலும் அதன் கீழ் இருக்கும் சதுரம் அதன் கம்பீரத்துக்குப் பொருந்தாமல் இருந்தது. அழகுணர்வே இல்லை. டவரின் ஒரு கால் பகுதியில் ஒரு கையேந்திபவன்! லூவ்ருவில் பிரமிடை அழகாகப் பயன்படுத்தியது போல இங்கேயும் ஈபெல்லின் அடிப்பகுதி சதுரத்தை பயன்படுத்த தவறிவிட்டார்கள்.

ஈபெல் கோபுரத்துக்குச் செல்லும் முன்னர் பலரும் என்னை எச்சரித்தது பிக்பாக்கெட் ஆபத்து பற்றியாகும். அரசே பல இடங்களில் இதுபற்றி எச்சரிக்கிறது. லூவ்ருவிலும் எச்சரித்தார்கள். எனக்கு பிக்பாக்கெட்டுகளிடமிருந்து எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.ஆனால் இங்கே இது பெரிய பிரச்னையாக இருக்கத்தான் செய்கிறது. கடந்த ஏப்ரலில் லூவ்ருவின் 2000 ஊழியர்களும் பிக்பாக்கெட்டுகளால் தமக்கு இருக்கும் ஆபத்து குறித்து ஒரு நாள் வேலை நிறுத்தமே செய்திருக்கிறார்கள். ஜேப்படிக்காரர்கள் மியூசியத்தில் 30 பேர் வரை கும்பலாக நுழைவதாகவும் பிடிபட்டால் ஊழியர்களை மிரட்டுவதாகவும் புகார் சொல்லப்பட்டது.நான் பார்த்தவரையில் லட்சக்கணக்கான டூரிஸ்ட்டுகள் இதைப்பற்றி கவலைப்படாமல் மியூசியத்தை ஆழ்ந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வீரேந்திர ஷேவாக், யுவ்ராஜ் சிங், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் - இவர்களெல்லாம் நினைவிலிருக்கிறதா?

 
இந்திய கிரிக்கெட் அணிக்கு இது ஓர் அற்புதமான நேரம். அணித் தேர்விலும் ஆட்டத்தின் முடிவுகளிலும் இத்தனை பெரிய எழுச்சி இதுவரை ஏற்பட்டதில்லை. எங்குச் சென்றாலும் வெற்றி கிடைக்கிறது. இந்திய சீனியர் அணி என்றில்லாமல் இந்தியா ஏ, இந்திய ஜூனியர் அணிகளும் போட்டிகளை வென்றிருப்பது, இந்திய அணி மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை முன்னிறுத்துகிறது. இந்திய அணியில் புதிய திறமைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. பழைய வீரர்களின் ஞாபகமே வராதபடி, புதியவர்கள் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். எனில், மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய எண்ணுபவர்களுக்கு என்னதான் வழி?
 
‘உடல்தகுதியுள்ள வீரர்கள் யாராக இருந்தாலும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புண்டு. இளைஞர்கள் மட்டும்தான் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறுவது தவறு’ என்று சமீபத்தில் தோனி கூறியிருந்தார். இதை வைத்து இந்த ஜாம்பவான்களுக்கு மீண்டும் கதவு திறக்கும் என்று நம்பிக்கை கொள்ளலாமா?  அணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவோம் என்று நம்பிக்கையுடன் பேட்டி கொடுத்து வருகிறார்கள். யுவ்ராஜ் சிங்கும் ஜாகீர்கானும் பிரான்சுக்குச் சென்று, ரக்பி மற்றும் கால்பந்து விளையாட்டுப் பயிற்சியாளரிடம் உடல்தகுதியை மேம்படுத்தி இருக்கிறார்கள். கௌதம் கம்பீர், கவுண்டி கிரிக்கெட் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார். ஷேவாக், ஹர்பஜன் ஆகியோரும் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு, அடுத்த சவாலுக்குத் தயாராகிறார்கள். யுவ்ராஜ் சிங்குக்கு எத்தகைய வாய்ப்புகள் இருக்கின்றன? இந்திய ஒருநாள் அணியின் மிடில் ஆர்டரில் யுவ்ராஜ் சிங் நுழைய வாய்ப்புண்டு. இப்போதுள்ள தினேஷ் கார்த்திக்கின் இடம் இன்னமும் உறுதியாகவில்லை. யுவ்ராஜ் சிங் ஒரு நாள் அணிக்குள் நுழைவது தோனிக்கும் கூடுதலாக இன்னொரு ஸ்பின்னர் கிடைத்ததாக இருக்கும். ஜாகீர்கான் ஏற்கெனவே மறுபிரவேசம் கண்டவர். இது அடுத்தது. ஜாகீரால் டெஸ்ட் அணிக்குள் மட்டும் நுழைய வாய்ப்புண்டு. இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகிய மூவரும் டெஸ்ட் அணியில் நிலையான இடத்தைப் பிடிக்காததே காரணம். புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வினய் குமார், உனாட்கட், முஹமத் ஷமி ஆகிய ஆறு பேரும் இந்திய ஒருநாள் அணியின் வேகப்பந்து வீச்சு வளையத்துக்குள் இருக்கிறார்கள். இதனால் ஒருநாள் அணியில் ஜாகீரால் இடம்பிடிப்பது கடினமே. தவிரவும், இந்திய ஏ அணிக்காக தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாகப் பந்துவீசிய ஈஸ்வர் பாண்டேவுக்கும் வாப்பளிக்கவேண்டிய நிலைமை உருவாகியிருக்கிறது. 
 
ஹர்பஜன் சிங்?

தோனிக்கு அஸ்வின், ஜடேஜாவே போதும். தவி ரவும், மிஸ்ரா எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து நிரந்தரமான இடத்தைப் பிடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார். இவர்களைத் தாண்டிப் பார்த்தால், பிரக்யான் ஓஜா டெஸ்ட்டுக்கு மிகவும் பொருந்திவிட்டார். புதியவர்களில், ரசூல் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில், பஜ்ஜிக்கு எங்கே இடமிருக்கிறது? அடுத்த ஐ.பி.எல்.லுக்குப் பிறகுதான் ஹர்பஜனுக்கு விடிவுகாலம். இல்லையென்றால் சாம்பியன் லீக் மூலமாக ஏதாவது மாற்றம் வந்தால்தான் உண்டு.

ஷேவாக்?

டெஸ்ட் அணியில், ‘சச்சினின் ஓய்வுக்குப் பிறகு நான்காவதாகக் களம் இறங்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்று முதலிலேயே அந்த இடத்துக்குத் துண்டு போட்டு இருந்தார் ஷேவாக். ஆனால், அந்த இடத்தில் கோலியை நிரப்பவே தோனி விரும்புவார். ஷிகர் தவானின் மாபெரும் பாய்ச்சலால் ஷேவாக், கம்பீர் ஆகியோருக்குப் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முரளி விஜயும் டெஸ்ட் அணியில் நிரந்தரமான இடத்துக்கான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறார். ஒருநாள் ஆட்டங்களில் சிறப்பாக ஆடும் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியிலும் வாய்ப்பளிக்கப்பட்டால் ஷேவாக்கால் அடுத்த ஒருவருடத்துக்கு இந்திய அணிக்குள் நுழையவே முடியாது.

கம்பீர்?

யுவ்ராஜ் போல கம்பீரும் விரைவில் இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்புண்டு. தேர்வாளர்களுக்கு கம்பீர் மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. கம்பீரால் தொடக்க ஆட்டக்காரராகவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஆட முடியும் என்பதால். அதற்கு முன், அவர் தன்னை எப்படி நிரூபிக்கப் போகிறார்?  செப்டெம்பரில் சேலஞ்சர் டிராபி (மற்றும் சாம்பியன் லீக்), அக்டோபரில் துலீப் டிராபி, பிறகு, ரஞ்சிப் போட்டிகள். இந்த மூன்றிலும் சிறப்பாகப் பங்களித்தால் மட்டுமே இவர்களால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியும் என்கிற இக்கட்டான நிலைமை. ஆனால், இந்திய ஏ அணிக்குக்கூட இவர்கள் தேர்வு செய்யப்படாதது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய வெற்றிகளில் பங்காற்றிய வீரர்களுக்கு நிரந்தரமான வாய்ப்புகளை அளிக்கவும் இந்தியா ஏ மற்றும் இந்திய ஜூனியர் அணிகளில் தங்களை வெளிப்படுத்திய வீரர்களுக்குப் புதிய கதவுகளைத் திறக்கவும் தோனியும் தேர்வாளர்களும் விருப்பப்படுவார்கள். எனவே, தவிர்க்கவே முடியாத நிலைமை என்கிற சூழல் உருவானால் மட்டுமே இந்த ஐந்து பேரால் மீண்டும் இந்திய அணிக்குள் திரும்ப முடியும். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதுதான் கேள்வி!கடந்த ஜூனிலிருந்து இந்த ஜூன் வரைக்குமான தோனியின் வருமானம் 180 கோடி ரூபாய் என்று மதிப்பிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ். உலகப் புகழ்பெற்ற ரஃபல் நடால், உசைன் போல்ட் ஆகியோரை விடவும் அதிக வருமானம். சச்சினின் வருமானம் 125 கோடி ரூபா. சினிமா நட்சத்திரங்களை விடவும் விளையாட்டு வீரர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.தோனியே இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால் பி.சி.சி.ஐ. எத்தனை சம்பாதிக்க வேண்டும்? தோனி, சச்சினோடு ஒப்பிடும்போது பி.சி.சி.ஐ. என்கிற நிறுவனத்தின் லாபம் குறைவுதான். 2012-2013 ஆண்டில், பி.சி.சி.ஐ.யின் வருமானம், 950 கோடி ரூபாய். ஆனால் இதில் லாபம், 350 கோடி ரூபாய் மட்டும்.

 

Friday, August 23, 2013

பேட்மின்டன் - பி.வி.சிந்து


சீனர்களுக்கு நிச்சயம் இது பேரிடி. ஏற்கெனவே சாய்னா நேவால் கொடுக்கும் நெருக்கடிகள் போதாது என்று புதிதாக பி.வி. சிந்துவும் போட்டி வளையத்துக்குள் நுழைந்துவிட்டார். இனி இந்தியர்களைத் தாண்டித்தான் எந்தவொரு சீனரும் சர்வதேசப் பட்டத்தை வெல்ல முடியும்.

பேட்மின்டனில் இந்தியர்கள் எப்போதும் முத்திரை பதிப்பவர்கள்தான். பிரகாஷ் படுகோன், சையத் மோடி, கோபிசந்த், அபர்ணா பொபட் ஆகியோர் சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்றவர்கள். ஆனால், ஒரே சமயத்தில் அதுவும் சீனர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு இந்திய பேட்மின்டனின் வளர்ச்சி இருந்ததில்லை. ஆனால், கடந்த சில வருடங்களாக சாய்னா நேவால், காஷ்யப், ஜூவாலா குட்டா, அஸ்வினி என சர்வதேச அரங்கில், இந்திய வீரர்களின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது, பிரகாஷ் படுகோன் (1983), ஜூவாலா குட்டா - அஸ்வினி பொன்னப்பா (2011) ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பைப் போட்டியில் வெண்கலம் வென்று, புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் பி.வி. சிந்து. 

சிந்துவின் இந்த வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள். பெற்றோரின் ஊக்கம்தான் சிந்துவின் வளர்ச்சிக்கான முதல் அடித்தளம். அதிர்ஷ்டவசமாக சிந்துவின் பெற்றோர், தேசிய அளவில் கைப்பந்து வீரர்களாக ஆடியவர்கள். அதனால், சிந்து பேட்மின்டனில் ஆர்வம் கொண்டபோது, என்ன செய்தால் மகளின் திறமைகளை வெளிக் கொணரமுடியும் என்றுதான் சிந்தித்திருக்கிறார்கள். 2001ல், இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியை கோபிசந்த் வென்ற சமயத்தில், சிந்துவுக்கு பேட்மின்டன் மீது அதிக ஈடுபாடு வந்தது. உடனே, மகளைத் தகுந்த பயிற்சியாளர்களிடம் அனுப்பி உற்சாகப் படுத்தி இருக்கிறார்கள். செகந்தராபாத்தில் வசித்து வந்த சிந்து, பயிற்சி மையத்துக்குச் செல்வதற்காக மூன்று வருட காலம், தினமும் 120 கி.மீ. பயணிக்க வேண்டி இருந்தது (வீட்டிலிருந்து பயிற்சி மையத்துக்கு 30 கி.மீ. தினமும் இருமுறை). பிறகு, அகாடமியிலேயே கொஞ்ச காலம் தங்கினார். இந்தப் பிரச்னைகளெல்லாம் தீரவேண்டும் என்பதற்காக, அகாடமி அருகிலேயே ஒரு வீடு வாங்கினார் சிந்துவின் அப்பா. இப்போது அவர் தினமும் 40 கி.மீ. பயணித்து அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. ஒரு வீரர், விளையாட்டு அரங்கில் வேர்வை சிந்திச் சாதிப்பதற்கு முன்னால், அவருடைய பெற்றோர் நிறைய தியாகங்கள், இழப்புகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. பெற்றோரின் ஊக்கத்தோடு நல்ல குருவும் கிடைக்கும்போது எண்ணியது எல்லாம் ஈடேறுகிறது. இந்திய பேட்மின்டன் துறையில், கோபிசந்த் பயிற்சியாளரானது மிகப்பெரிய திருப்புமுனை. 2006ல் இந்திய அணியின் பயிற்சியாளராக கோபிசந்த் நியமிக்கப்பட்டார். 2010 காமன்வெல்த் கேம்ஸில், இந்திய வீரர்கள் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்கிற கோரிக்கையின்படி. கோபிசந்தும் அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு திறமையான வீரர்களை உருவாக்கினார். அவர்கள், காமன்வெல்த் கேம்ஸில் பதக்க மழை பொழிந்தார்கள். இரண்டு தங்கம் உள்பட 4 பதக்கங்கள் சுளையாகக் கிடைத்தன. பிறகு எங்குச் சென்றாலும் இந்திய பேட்மின்டன் வீரர்கள் முத்திரை பதிக்க ஆரம்பித்தார்கள்.தினமும் காலை 4.15 மணிக்கு ஆரம்பிக்கிறது கோபிசந்தின் பயிற்சிகள். முதல்முதலில் சிந்துவுக்குப் பயிற்சி அளித்துவிட்டு, பிறகு சாய்னா நேவால், காஷ்யப் என்று ஒரு நிமிடம் வீணாக்காமல் காலையிலிருந்தே உழைக்கிறார். சீனர்களின் கடுமையான பயிற்சிகளை நேரில் பார்த்ததால் அதே வழிமுறைகளை இந்திய வீரர்களுக்குக் கற்றுத் தருகிறார். இப்போது உலக சாம்பியனுக்கான போட்டியில் மூன்று இந்தியர்கள் காலிறுதிக்குச் செல்ல முடிந்ததென்றால் அது கோபிசந்தின் பயிற்சி முறைகளுக்குக் கிடைத்த அபார வெற்றி. சிந்து, 5 அடி 11 அங்குலம் உயரம் கொண்டவர். இவரது விசேஷப் பயிற்சிக்காக, கிறிஸ்டோபர் பால் என்கிற தனிப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார். இந்தியாவுக்கு ஒரு சாய்னா நேவால் மட்டும் போதாது என்று சிந்துவைப் படிப்படியாக மேலே கொண்டுவந்தார் கோபிசந்த். தினமும் காலை 4 மணிக்கு அகாடமிக்குள் நுழைகிற கோபிசந்த், வீடு திரும்ப இரவு ஏழு மணி ஆகிவிடும். இந்த அர்ப்பணிப்புதான் இன்று ஹைதராபாத்தை இந்திய பேட்மின்டனின் தலைநகராக மாற்றியிருக்கிறது. ஆந்திராவில் நிலவும் பேட்மின்டன் சூழலுக்கு நிகராக வேறு எந்த விளையாட்டையும் எந்த நகரையும் ஒப்பிடமுடியாது. ஆந்திராவில், இன்றைய தேதியில் 17,000 பேர் பெரிய கனவுகளுடன் பேட்மின்டன் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

18 வயது சிந்துவின் இந்த வெண்கல வெற்றி, திடீரென அதிர்ஷ்டத்தில் நிகழ்ந்தது கிடையாது. கடந்த ஒரு வருடத்தில் உலக சாம்பியன், ஒலிம்பிக்ஸ் பதக்க வீரர், ஆசியன் சாம்பியன் என மூன்று பெரிய வீரர்களை வென்று தன்னை நிரூபித்தார். சாய்னா, காஷ்யப் ஆகியோர் வெல்லமுடியாத உலகக்கோப்பைப் போட்டியில், அரையிறுதி வரை சென்று பதக்கம் வென்றது சாதாரண விஷயமல்ல. சிந்துவுக்கு இப்போது கிடைக்கும் வெளிச்சம், சாய்னாவுக்குத் தகுதி இறக்கமா என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஒற்றையர் பிரிவில் ஒரே சமயத்தில் சாய்னா, சிந்து என இரு உலகத் தரத்திலான வீரர்கள் இருப்பது இந்திய அணியின் பலமாகவே எண்ண வேண்டும். இந்த இரண்டு பேரைப் பார்த்து இன்னும் பலர் இந்த விளையாட்டில் ஆர்வம் செலுத்துவார்கள். ஒரு விஸ்வநாதன் ஆனந்தால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான செஸ் வீரர்கள் தோன்றியது போலவே சாய்னா, சிந்துவின் வெற்றிகள் வலிமையான பேட்மின்டன் தலைமுறையை உருவாக்கப்போகிறது.

மெகா பிக்சல் - ஸ்மார்ட்போன்


சிக்காகோ சன் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் இருபத்தெட்டு முழுநேர போட்டோகிராஃபர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இனி முழுநேர போட்டோகிராஃபர்களுக்குத் தேவையில்லை, ஐபோன் போட்டோகிராஃபர்களே போதும், அவர்கள் போட்டோக்களோடு வீடியோக்களும் எடுத்துத் தருவார்கள் என்று முடிவுசெய்துவிட்டது அந்நிறுவனம். ஸ்மார்ட்போன்களும் ஐபோன்களும் வந்தபின்னர் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்று. ஸ்மார்ட்போன் கேமராக்களின் அபாரத் தெளிவு, துல்லியம், ஒளி...என்று ஏராளமான காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன்களுக்கு முன்னால், கேமராவின் திறனைக் கூட்டுவதில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதன்முதலில், 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாம்சங் நிறுவனம் போனோடு சேர்ந்த கேமராவை அறிமுகப்படுத்தியது. 0.35 மெகாபிக்சல் தரம் கொண்ட அந்த கேமரா போனில், போன் தனியாகவும் கேமரா தனியாகவும் இருந்தது. ஆனால் இரண்டு ஒரே பெட்டியில் அடக்கப்பட்டிருந்தது, அவ்வளவுதான். ஆனால், 2002 நவம்பரில் அமெரிக்காவில் கேமரா போன் ஜுரம் ஆரம்பித்தது. சான்யோ எஸ்சிபி - 5300 என்ற மாடல் போன் அந்தக் காலத்திலேயே நானூறு டாலர் விலை கொண்டது. 0.3 மெகாபிக்சல்தான் அதன் கேமரா தரம். 2003 கடைசிக்குள் கேமரா போன் ஜுரம் அதிகமாக, உலகமெங்கும் கிட்டத்தட்ட எட்டு கோடி கேமரா போன்கள் விற்றுத்தீர்ந்தன.

அதன்பிறகு ஒவ்வொரு பெரிய நிறுவனமும் தங்கள் செல்போனில் கேமராவின் பிக்சல் அளவை உயர்த்திக்கொண்டே வந்தன. முதலில் மூன்று மெகாபிக்சல், அப்புறம் வந்த ஐந்து மெகாபிக்சல் கேமராக்கள் ஆச்சர்யத்தோடு பார்க்கப்பட்டன. நோக்கியா என்95 தான் இந்த வரிசையில் பெரிய கேமராவோடு வந்தது. அதன் பிறகு சட்டென ஸ்மார்ட்போன் அலை அடிக்க ஆரம்பித்தது. 2008ல் சாம்சங் ஐ8510 முதல் எட்டு மெகா பிக்சல் கேமராவோடு வர, அதே நிறுவனம் 2009ல் 12 மெகா பிக்சல் கொண்ட போனை வெளியிட்டது. 2010ல் சோனி எரிக்ஸன் 16 மெகா பிக்சலோடு கூடிய எஸ்006 போனை வெளியிட்டு அசத்தியது. ஸ்மார்ட் போன்கள் படையெடுப்பால், இந்தக் கேமரா போன் மோகம் கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது.

இது நடுவே ஹெச்.டி.சி.யும் எல்.ஜி. நிறுவனமும் 3டி போட்டோக்கள் எடுக்கும் கேமரா போன்களை 2011ல் வெளியிட்டன. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் போகவே, அமைதியாக 3டி கேமரா போன்கள் காணாமல் போயின. இதற்குள் ஐபோன்களில் இருக்கும் கேமராக்களின் மீது காதல் ஏற்பட்டுவிட்டது. சமீபத்தில் ஹெச்.டி.சி. நான்கு மெகாபிக்சல் கேமராவே போதும் என்று பேச ஆரம்பித்திருக்கிறது.ஆனால், நோக்கியாவோ இந்தப் போட்டியை விடுவதாக இல்லை. சோனி எஸ்பெரியா இசட் இன்னொரு பக்கம் 13 மெகா பிக்சல் கேமராவோடு வெளிவந்துவிட்டது. சாம்சங், 16 மெகாபிக்சல் கேமரா போனோடு வர, போட்டியை விடுமா நோக்கியா? நோக்கியா லூமியா 1020 என்ற அதன் சமீபத்திய மாடல், 41 மெகாபிக்சல் கேமராவோடு வந்திருக்கிறது. இது ஐபோன் 5 மாடல் எடுக்கும் போட்டோவோடு இன்னும் துல்லியமானது என்று சத்தியம் செய்கிறார்கள்.கேமரா போன்கள் வெறுமனே போட்டோ எடுப்பதற்கு மட்டும்தான் என்று நினைத்துவிட வேண்டாம். அதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் தான் ஆச்சர்யப்படுத்துகின்றன. பல ஸ்மார்ட் போன்களுக்கான கேமரா அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கடைகளில் பொருள்கள் வாங்கும்போது, பார்கோடுகளைப் படிக்க கேமரா போன் அப்ளிகேஷன் வந்திருக்கிறது. படங்களை எடுத்து அதை அப்படியே படித்து ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்க்கும் அப்ளிகேஷன்களும் வந்துவிட்டன. வங்கித் துறையில் கேமரா போன்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு சூப்பர். உங்கள் காசோலையை போன் கேமராவில் ஒளிப்படம் எடுத்து அதை அப்படியே வங்கிக்கணக்கில் சேர்க்க முடியுமாம். இதன் இன்னொரு தொடர்ச்சிதான், கட்டணங்களுக்கான பில்களைச் செலுத்துவதிலும் ஏற்பட்டிருக்கிறது.நீங்கள் செலுத்த வேண்டிய பில்லை அப்படியே போட்டோ பிடித்து, அதன் தகவல்களை உள்வாங்கிக் கொண்டு, நேரடியாக வங்கியில் இருந்து அதற்கு உண்டான தொகை உரிய நிறுவனத்துக்குக் கட்டிவிட முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் நேரே ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போய்தான் பில்லைக் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லாமல் போய்விட்டது. மொபைல் போன் கேமரா வளர்ச்சி இன்னும் தொடரும்.

ஆர்.வெங்கடேஷ்

அக்‌ஷய் வெங்கடேஷ் - ஒரு ராமானுஜம்!

 
உலகின் மிகச் சிறந்த கணித மேதைகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் அக்‌ஷய் வெங்கடேஷ். இவரது பெற்றோர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தையின் ஊர் கும்பகோணம், தாய் தஞ்சையைச் சேர்ந்தவர். புதுதில்லியில் 1981ல் பிறந்த அக்‌ஷய் ஆரம்பக் கல்வியை அங்கே தொடங்கி தந்தையின் பணிமாற்றத்தால் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் தொடர்ந்தார். அந்தச் சிறுவனுக்கு புதிய இடம், புதிய மொழி எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் முதல். ஆஸ்திரேலியப் பள்ளிகளில் இம்மாதிரி திறமையான மாணவர்களை ‘கிஃபட்டட் சில்ட்ரன்’ என்று அடையாளம் காணப்பட்டு விசேஷ பயிற்சிகள் தந்து ஊக்குவிப்பார்கள். அக்‌ஷய் அந்த வாய்ப்பின் மூலம் பயிற்சி பெற்று சர்வதேச ‘பிஸிக்ஸ் ஒலிம்பியார்ட்’டில் பங்கு பெற்று பதக்கம் பெற்றார் அப்போது அவருக்கு வயது பதினொன்று. 
 
ஒலிம்பியார்ட் என்பது உலக அளவில் ஒரு தில் மிகச் சிறந்த மாணவனைத் தேர்ந்தெடுக்கும் கடினமான போட்டி. முதலில் மாவட்ட அளவில், பின் அவர்களிலிருந்து மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் தேசத்தின் சார்பாக சர்வதேச அளவில் பங்குகொள்ளும் போட்டி. இதில் 1993 ஆம் ஆண்டு மூன்றாம் இடம்பெற்ற அக்‌ஷய், அடுத்த ஆண்டு பிஸிக்ஸில் முதலிடத்துக்காகப் போட்டியிடுவதற்குப் பதிலாக, கணித ஒலிம்பியார்ட்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்களும் ஊக்குவித்து உதவி செய்ய 1994ஆம் ஆண்டு சர்வதேச கணித ஒலிம்பியார்ட்டில் தங்கப் பதக்கம் வாங்கினார். தொடர்ந்து பள்ளியில் கிடைத்த புரொமோஷன்களினால் பள்ளி இறுதி ஆண்டை 13 வயதிலேயே முடித்து விசேஷ அனுமதிகள் மூலம் 14வது வயதிலேயே கல்லூரியில் கால் வைத்தார். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் இந்த வயதில் எவரும் இந்தச் சாதனையைச் செய்ததில்லை. நான்கு ஆண்டு கணித ஹானர்ஸ் படிப்பை இரண்டே ஆண்டில் முடித்து 17வது வயதில் அந்தப் பல்கலைக்கழகத்தின் முதன்மை மாணவராகவும் முதல் இளம் வயது ஹானர்ஸ் பட்டதாரியாகவும் வெளிவந்தார். 2002ல் தமது 21 ஆவது வயதில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்ற இவரை ‘மாஸாசுஸுஸ்ட் இன்ஸ்டிடியூட் அஃப் டெக்னாலாஜி’ பேராசிரியர் பணி தந்து அழைத்தது. மிகப்பெரிய கௌரவமான இதை ஏற்று தன் ஆசிரியப் பணியையும் ஆராய்ச்சிப் பணியையும் தொடர்ந்தார். கணிதத் துறையைச் சார்ந்தவர்களால் பல ஆண்டுகளாகச் செய்யப்படாத பல ஆராய்ச்சிகள் இவரால் குறுகிய காலத்தில் செய்து முடிக்கப்பட் டிருப்பதாகப் புகழாரம் சூட்டுகின்றனர்.
 
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 2008 ஆம் ஆண்டு சாஸ்த்ரா-ராமானுஜம் பரிசையும் பரிசு பணமாக 10,000 அமெரிக்க டாலர்களையும் மேதை ராமானுஜத்தின் ஊரான கும்பகோணத்தில் நடத்திய ஒரு சர்வதேசக் கணிதக் கருத்தரங்கில் இவருக்கு வழங்கியது. இந்தப் பரிசுக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது, ஐந்து பெரிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் மூத்த பேராசிரியர்கள்.
 
தற்போது அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் 32 வயதிலேயே மூத்த பேராசிரியராக அங்கீகரிக்கப்பட்டு ஆராய்ச்சியைத் தொடரும் அக்‌ஷய் இந்தியா வருவாரா? என்றால், 2015 வரை என் பயணங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டன, அதன்பின் பல்கலைக்கழகங்கள் அழைத்தால் வருவேன்," என்கிறார்.
 
ரமணன்

Thursday, August 22, 2013

அரசியலுக்கு வருவீங்களாண்ணா?

சினிமாவைப் பார்த்து சினம் கொள்வது 'தியாகபூமி’ காலத்துப் பழசு.

கல்கி கதை-வசனத்தில் உருவான 'தியாகபூமி’ வெளிவந்தபோது எதிர்ப்பு இல்லை. ஐந்து ஆண்டுகள் கழித்து (1944-ல்) மீண்டும் திரையிடப்பட்டபோது அன்றைய சென்னைக் காவல் துறை ஆணையர் 'படத்தை வெளியிடக் கூடாது’ என்று தடுத்தார். படத்தில் காங்கிரஸ் தொண்டர்களைக் காட்டுகிறார்கள்! என்று காரணம் சொன்னார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி, தனக்கு எதிரான படம் என்று 'தியாகபூமி’யை எதிர்த்தது. காட்சிகள் மாறி... காங்கிரஸ் அரசாங்கமே வந்த பின்னால், திராவிடர் இயக்கச் சார்ப்புத் திரைப்படங்கள் இதேபோன்ற சிக்கலைச் சந்தித்தன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்... அதே அஸ்திரத்தை அனைத்துக் கதாநாயகர்கள் மீதும் ஏவின.

அன்று 'தியாகபூமி’ படத்தைத் தடை செய்து விட்டார்கள் என்று தெரிந்ததும், இயக்குநர் கே.சுப்ரமணியம், 'கெயிட்டி’ தியேட்டருக்கு வந்தார். தியேட்டர் கதவுகளைத் திறந்துவிட்டார். 'எல்லோரும் இலவசமாகப் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனதாகச் செய்திகள் உண்டு. கே.சுப்ரமணியம் செய்தது மாதிரி இயக்குநர் விஜய்யோ, தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயினோ செய்ய முடியாது. மக்களுக் காக படத்தில் பாடுபடும் நடிகர் விஜயே இதற்குச் சம்மதிக்க மாட்டார். இது கோடிக்கணக்கான பணமும் அரசியல் அபிலாஷைகளும் கலந்த வர்த்தகம். இது ஜெயலலிதாவுக்கும் தெரியும் என்பதுதான் 'தலைவா’ தலைவலிக்குக் காரணம்!


இன்று, 'ஒரு படைப்பாளியாகப் பரிதவிக்கிறேன்’ என்று புலம்பும் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில்தான், 'காவலன்’ படத்துக்குச் சிக்கல் வந்து விஜய் புலம்ப ஆரம்பித்தார். அது, ஜெயலலிதாவை நோக்கி விஜயை நகர்த்திச் சென்றது. படம் ரிலீஸா னால் போதும் என்று நினைக்காமல், கருணாநிதி ஆட்சிக்கு எதிரான அஸ்திரங்களை அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடுத்தார். மகனை, ஊர் ஊராகப் பிரசாரத்துக்குக் கொண்டுபோய், இன்னொரு எம்.ஜி.ஆர். ஆக்க நினைத்தார். தன்னால் வளர்க்கப்பட்ட விஜயகாந்த், ஒரு கட்சித் தலைவராகும்போது, தனக்குப் பிறந்த மகன் தலைவனாக மாட்டானா என்று எஸ்.ஏ.சி. துடித்தார். ஆட்சி மாறியது. அம்மா வந்தார். இந்த வெற்றியில் பங்குபோட வந்தவர்களை ஒவ்வொருவராக வெட்டிவிட்டார். விஜயகாந்தும் விஜய்யும் அரசியல் கற்றுக்கொண்ட இடம் அதுதான். ராஜீவ் படுகொலையின் அனுதாப அலையில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகுகூட 'இதற்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று மதுரையில் வைத்துச் சொன்னவர் ஜெயலலிதா என்பதை விஜயகாந்த், விஜய் இருவருமே உணரவில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் தன்னுடைய தோளுக்கு மேல் குரோட்டன்கள் வளருவதை விரும்பாத தோட்டக்காரர்கள்.

'விஸ்வரூபம்’ படத்துக்கு வந்த எதிர்ப்பு வேறு; 'தலைவா’வுக்கு வந்த எதிர்ப்பு வேறு. 'விஸ்வரூபம்’ குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது என்று சொல்லி, அந்தச் சமூகத்தினர் 'குறிப்பிட்ட காட்சிகள், வசனங்களை நீக்கியே ஆக வேண்டும்’ என்று நின்றார்கள். தன்னுடைய சாதுர்யத்தின் மூலமாக கமல் இதனை வென்றார். ஆனால், 'தலைவா’ படத்தின் காட்சிகளில் அப்படி எந்தச் சிக்கலும் இல்லை.

'நம்ம ஊர் அரசியல்ல சேர எல்லாத் தகுதியும் உனக்கு இருக்கு’ - என்று சந்தானம் சொல்வதும்... 'தலைவன்கிறது நாம தேடிப் போற விஷயம் இல்லை. நம்மைத் தேடி வர்ற விஷயம். உன்னை அவங்களுக்குத் தலைவன் ஆகக் கூப்பிடுறாங்க’ - என்று ஒய்.ஜி.மகேந்திரா சொல்வதும்... மட்டும்தான் 'தலைவா’ படத்தின் அரசியல் வசனங்கள். இந்த வசனங்களை உச்சரிக்கும் இருவருமே காமெடியன்கள்.

நீதான் அடுத்த முதலமைச்சர். உனக்குத்தான் ஆளத் தகுதி இருக்கு. உன்னால்தான் இந்த ஆட்சியே அமைந்தது. இன்றைக்கு இருப்பவங்களுக்கு ஆளவே தெரியலே’ என்பது மாதிரியான சீரியஸான விமர்சனங்களோ, திமிர் பிடித்தப் பெண்ணை ரஜினி விமர்சித்ததை, ஜெயலலிதாவுக்குச் சொன்னதாக மாற்றி உள்நோக்கம் கற்பித்ததுபோலவோ இந்தப் படத்தில் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட காட்சிகள் வைப்பதற்கான துணிச்சல் விஜய்யிடம் இல்லை என்பதே உண்மை. நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஒன்றைக்கூட தடையை மீறி நடத்த முன்வராத 'தலைவா’வில் வேறு அரசியல் இல்லை.

'தலைவா ரிலீஸ் ஆகும் எல்லாத் தியேட்டர்களுக்கும் என்னுடைய ரசிகர்கள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். குண்டுகளை அவர்கள் தாக்கித் தகர்ப்பார்கள்’ என்று விஜய் அறிவித்திருந்தால், அதுதான் அரசியலாகி இருக்கும். அவர் தலைவராக முதல் அடி எடுத்துவைத்திருக்கக்கூடும்!

இப்போதைய பிரச்னை, விஜயின் அரசியல் தகுதி பற்றி அல்ல; இந்தத் தடைகளுக்குப் பின்னால் இருக்கும் தமிழக போலீஸின் தகுதியின்மை பற்றி!
'படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு வைப்போம்’ என்று சொன்ன அமைப்பு எது, அமைப்பாளர்கள் யார், அவர்கள் இதற்கு முன்னால் இத்தகையக் காரியங்களைச் செய்துள்ளார்களா, அவர்கள் எங்கே இயங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை இது வரை (ஆகஸ்ட் 19) தமிழகக் காவல் துறை கண்டுபிடிக்கவில்லை. 'வெடிகுண்டு மிரட்டல் வந்தது’ என்பதற்காக, தியேட்டர்காரர்கள் பயப்படலாம்; காவல் துறையுமா பயப்படுவது?

தமிழ்நாட்டில் உள்ள 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும் சக்தி உள்ள அமைப்பாக அது இருக்குமானால், இந்தியாவிலேயே அதுதான் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாக இருக்க முடியும். வெளி நாட்டைத் தளமாகக்கொண்டு செயல்படும் அமைப்புகள்கூட மும்பை மற்றும் கோவையில் வேறு வேறு சம்பவங்களாகத்தான் வன்முறையில் ஈடுபட்டன. இந்த அமைப்புக்கு தமிழ்நாட்டின் அத்தனை நகரங்களிலும் வெடிகுண்டு வைக்கும் பலம் இருக்கிறதென்றால், அந்தக் கடிதத்தைப் பார்த்து நடிகர் விஜயைவிட தமிழ்நாடு போலீஸுக்குத் தான் அதிக பயம் வந்திருக்க வேண்டும். அப்படி மிரட்டல் விடுத்தவர்களோடு தொடர்புடையதாக சந்தேகப்படும் எவரையும் இதுவரை விசாரணைக்குக்கூட போலீஸ் அழைத்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஓர் அநாமத்து கடிதத்துக்காக ஒரு படத்தை வெளியிட முடியாது என்றால், இதே போன்ற மிரட்டல் பள்ளிக்கூடங்களுக்கும் கோயில்களுக்கும் வந்தால் மொத்தமாகப் பூட்டிவிடுவார்களா என்ன? வெடிகுண்டு மிரட்டல் காரணமாகப் பயப்படும் திரையரங்க உரிமையாளர்களை அழைத்துப் பேசி தைரியம் கொடுத்திருக்க வேண்டியது, தமிழ்நாடு காவல் துறையின் கடமை. ஆனால், இவர்கள் பயந்து பம்மியதுதான் அரசியல் சந்தேகங்களை அதிகமாகக் கிளப்பியது.முந்தைய தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்தது. அதற்குக் காரணமானவர்கள் இன்றுவரை கைதாகவில்லை. அதன் விசாரணை அதிகாரி இப்போது எங்கே, என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பதே தெரியவில்லை.மதுரைக்கு ஸ்டாலின் வந்து இறங்கிய ஒரு நாள், அவர் மீது யாரோ கத்தி வீசிச் சென்றதாகச் சொல்லப்பட்டது. அதன் பிறகுதான் ஸ்டாலினுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. அந்தக் கத்திக்காரன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வரிசையில் போலீஸ், பதக்கங்களில் ஒன்றாக இந்தத் 'தலைவா’ மிரட்டலையும் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.

சட்டசபைக்கும் வராமல், மக்களுக்கான எந்தப் போராட்டமும் நடத்தாமல்... 'தான் உண்டு; பழைய பாட்டு உண்டு’ என்று இருந்த விஜயகாந்த் மீது, தினமும் ஒரு வழக்குப் போட்டு ஊர் ஊராகப் போகவைத்து... அவரது தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டி வருவதைப்போல, இப்போது விஜய்க்கும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது. 'தலைவா’ பிரச்னைக்குப் பிறகு, இனி அவர் தைரியமாக அரசியல் பேசலாம்; சவால் விடலாம்; சண்டைக்கு இழுக்கலாம். 'அவருக்கு இவ்வளவு டார்ச்சர் செய்தால், கட்சி ஆரம்பிக்காமல் என்ன செய்வார்?’ என்று அவரை பிடிக்காதவர்கள்கூட காரணம் கற்பிப்பார்கள். படப்பிடிப்பு தொடங்கும்போது இல்லாத லாஜிக், ரிலீஸ் ஆகும்போது விஜய்க்குக் கிடைத்துவிட்டது.

'வாங்கண்ணா... வணக்கங்கண்ணா...

வரப்போறீங்களாண்ணா?’

ப.திருமாவேலன்

சாம்பியன் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் சரிந்த கதை!

தலையில் அடிபட்டு, கற்ற வித்தையெல்லாம் மறந்தால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போதைய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிலைமை!    இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும்போது எப்படி ஒரு கூடுதல் பதற்றம் இருக்குமோ, அதேபோல ஆஸ்திரேலிய- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் ஆக்ரோஷமும் பரபரப்பும் கொடி கட்டிப் பறக்கும். ஆஷஸ் தொடரில் வெல்வது என்பது, அந்த இரு நாடுகளுக்கும் கௌரவப் பிரச்னை. பலகாலம் ஆஷஸ் தொடரில் ஆதிக்கம் செலுத்திவந்த ஆஸ்திரேலியா, இந்த வருடத் தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே இங்கிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் மண்டியிட்டு விழுந்துகிடக்கிறது. ஆஷஸ் தொடர் மட்டுமா? ஆஸ்திரேலியா கடைசியாக விளையாடிய எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில்கூட வெற்றிபெறவில்லை (ஒரு டெஸ்டில் டிரா). அனைத்திலும் அவமானகரமானத் தோல்வியடைந்திருக்கிறது! சாம்பியன் சரிந்தது ஏன்?
 
நம்பிக்கை இழந்த வீரர்கள்! 

ஆஸ்திரேலிய அணி, முன்பு எல்லாம் தோற்கக்கூடிய போட்டிகளில் இருந்துகூட மீண்டெழுந்து வெற்றியைத் தட்டிப் பறிக்கும். ஆனால், இப்போது வெற்றிபெறக்கூடிய போட்டியில்கூட தோல்வி அடைவது, அந்த அணி வீரர்களின் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. நான்காவது ஆஷஸ் டெஸ்ட்டில், '299 ரன்கள் வெற்றி இலக்கு; இன்னும் ஒன்றரை நாட்கள் மீதம் இருக்கிறது’ என்ற நிலையில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 101 ரன்களைக் குவித்தது. ஓப்பனிங் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக கிரிஸ் ரோஜரும் டேவிட் வார்னரும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், முதல் விக்கெட் இழப்புக்குப் பின் ஆஸ்திரேலியா ஒட்டு மொத்தமாக நிலைகுலைந்தது. தொடர்ந்து களமிறங்கிய  பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரோக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் குழம்பி, தோல்வி பயத்துடனே ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டனர். அடுத்த 104 ரன்களுக்குள், மீதமிருந்த ஒன்பது விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தார்கள். 'வெற்றிபெறுவோம்’ என்ற நம்பிக்கை, வீரர்களுக்குள் இல்லாமல் போனதே தொடர் தோல்விக்கான முதல் காரணம். 1980-களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் சராசரி 62 ரன்கள். 2000-களில் அது 64-க்கு உயர்ந்தது. ஆனால், 2013-ம் ஆண்டில் அது 28-க்கு இறங்கிவிட்டது. இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் போல் ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் 20/20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 'பிக்பேஷ் போட்டிகளால்தான் தகுதியான, நின்று விளையாடக்கூடிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களை உருவாக்க முடியவில்லை’ என்கிறார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகர்கள்.

 
மேட்ச் வின்னர்கள் இல்லை! 

வாஹ் பிரதர்ஸ், ஷேன் வார்ன், மெக்ராத், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பான்டிங், மேத்யூ ஹேடன், மைக்கேல் பெவன் என அணியின் ஒவ்வோர் உறுப்பினரும் மேட்ச் வின்னர்களாக இருந்த ஆஸ்திரேலிய அணியில், இன்று 'ஸ்டார் ப்ளேயர்’ என்று சொல்ல, யாருமே இல்லை. மைக்கேல் கிளார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் என இருக்கும் ஓரிருவரிடமும் டீம் ஸ்பிரிட் இல்லை. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அடுத்தடுத்து மேட்ச் வின்னர்களை அணியில் சேர்க்காமல்விட்டதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம். கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே, மெக்ராத்துக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பக்கூடிய சிறந்த ப்ளேயர்களை ஆஸ்திரேலிய அணி கண்டுபிடிக்கவே இல்லை!

தலைவன் எங்கே? 

மார்க் டெய்லர், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பான்டிங்... மூன்று முறை உலகக் கோப்பைகளைத் தொடர்ந்து வென்று, 15 ஆண்டு காலம் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா கோலோச்சிய காலத்தில், இவர்கள்தான் அணித் தலைவர்கள். டெய்லர், ஸ்டீவ் வாஹ் இருவருமே அமைதியாக, அதே சமயம் அணிக்குள் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தி வெற்றிகளைத் தேடித்தந்தவர்கள். பான்டிங், ஆக்ரோஷமான கேப்டன். எந்த நேரத்திலும் தோல்வி பயத்துக்கு இடம்கொடுக்காமல் வீரர்களை உற்சாகப்படுத்தி வெற்றிகளைக் குவித்தார். ஆனால், இப்போது கேப்டனாக இருக்கும் மைக்கேல் கிளார்க்கின் நிலைமை மிகமிகப் பரிதாபம். மிகத் திறமையான பேட்ஸ்மேனான அவரால் முழு அணியையும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கவைக்க முடியவில்லை. வார்னர் ஒருபக்கம், வாட்சன் ஒருபக்கம், பௌலர்கள் ஒருபக்கம் என, கப்பலை எல்லோரும் ஒவ்வொரு திசைக்கு இழுக்க, கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது அணி! 

சார்லஸ்
 

Wednesday, August 21, 2013

விளக்கு வைக்கும் நேரத்தில் (சாயங்காலத்தில்) தூங்கக் கூடாது என்பது ஏன்?

பகலும் இரவும் ஒன்றுசேரும் நேரத்துக்கு சந்த்யா காலம் (சேரும் நேரம்) எனப் பெயர். இரவு முடிந்து பகல் ஆரம்பமாகும் அதிகாலை நேரம் மற்றும் பகல் முடிந்து இரவு ஆரம்பமாகும் சாயங்கால நேரம் என்பதாக ஒரு நாளில் இரண்டு முறை சந்த்யா காலம் சம்பவிக்கிறது.

இந்த வேளையில், சூரிய மண்டலத்தில் இருக்கும் காயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளின் கூட்டு ஸ்வரூபமான சந்த்யா என்னும் தேவி (ஆகாசத்தில்) காட்சி தருகிறாள். அந்த சமயத்தில், இந்த தேவியை உபாசிக்க (வழிபட) வேண்டும். 

சூரிய ஒளியில் வழிபடும் இது - அருவ வழிபாடுமில்லை; உருவ வழிபாடுமில்லை. இதற்கு வடமொழியில் ‘சந்த்யோபாஸனை’ எனப் பெயர். ஆண், பெண் என (ஜாதிமத பேதமின்றி) அனைவரும் இந்த உபாசனையைச் செய்து பலனடையலாம். ஆகவே தான், வேதம் கற்ற அந்தணர்கள் இந்த காலங்களில் சந்த்யாவந்தனம் என்னும் கர்மாவைச் செய்து சூரியனுக்கு அர்க்யம் தந்து, காயத்ரீ மந்திரத்தை ஜபம் செய்கிறார்கள். 

மற்றவர்களும் இந்தக் காலத்தில் சூரியனை நோக்கி பிரார்த்தனை செய்து இரு கைகளிலும் சுத்தமான ஜலம் எடுத்து சூரியனை நோக்கி அர்க்யம் விட வேண்டும். இதனால் சந்த்யா தேவியின் அருள் கிட்டும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், மனச்சாந்தி முதலானவை கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

இவ்விதம் வழிபடாவிட்டாலும் பரவாயில்லை. அந்த தெய்வத்தை அவமதிக்கும் செயலையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதாவது சந்த்யா காலங்களில் - சாப்பிடுதல், காபி, டீ போன்ற பானம் அருந்துதல், படுக்கையில் படுத்துக் கொண்டிருத்தல், புதிய பாடம் கற்றுக் கொள்ளுதல், தூங்குதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இந்த வேளையில் காட்சிதரும் தெய்வத்தை வழிபடாமல் தூங்கிக் கொண்டிருந்தால், அந்த தெய்வத்தை நாம் அவமதித்ததாக ஆகும். தெய்வ அவமதிப்பு, நம்மிடமுள்ள செல்வத்தை அபகரித்துவிடும்.

சூர்யோதயே ச அச்தமயே ச ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம்
‘சூரிய உதயம், சூரிய அஸ்தமன காலங்களில் தூங்குபவர் யாராக இருந்தாலும், ஏன்! தேவேந்திரனாக இருந்தாலும் கூட, அந்த நபரை விட்டு (செல்வத்தைத் தரும்) மகாலட்சுமி விலகிச் சென்றுவிடுவாள்’
என்கிறது சாஸ்திரம். நோயுற்றவர்கள் எனில், படுக்கையில் சாய்வான முறையில் அமர்ந்து கொள்ளலாம்.

விக்ரம் சாராபாய் - நீல் ஆர்ம்ஸட்ராங்க் - அன்னை தெரெசா

விக்ரம் சாராபாய்

விஞ்ஞானி, தொழிலதிபர், கல்வியாளர், இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாய், 1919 ஆகஸ்ட் 12, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார். இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் செயிண்ட் ஜான் கல்லூரியில் இயற்கை விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தார். ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால் அவசரமாக இந்தியா திரும்ப வேண்டியதாயிற்று.

இந்தியாவுக்குத் திரும்பிய விக்ரம் சாராபாய் பெங்களூருவிலுள்ள இந்திய விஞ்ஞான நிலையத்தில் சேர்ந்தார். நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானி சர்சிவி ராமன் வழிகாட்டுதலில் மின்காந்த நுண்ணலைகளின் விளைவுகள் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். உலகப் போர் முடிந்த பிறகு மீண்டும் இங்கிலாந்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1947ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.  கேரளாவைச் சேர்ந்த பிரபல நாட்டியக் கலைஞர் மிருனாளினியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் மல்லிகா சாராபாயும் சிறந்த நடனக் கலைஞர். முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பிய விக்ரம் சாராபாய், 1947ல் அகமதாபாத்தில் இயற்பியல் அவுக் கூடத்தை நிறுவி தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதே ஆண்டு அகமதாபாத் ஜவுளி ஆலை ஆய்வுச் சங்கத்தை நிறுவி 1956 வரை அதன் ஆணையராகச் செயல்பட்டார். 1957ல் அகமதாபாத் மேலாண்மைச் சங்கம், சாராபாய் கெமிகல்ஸ், சாராபாய் எஞ்சினியரிங் எனப் பல தொழிற்சாலைகளை நிறுவினார். அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட ‘இந்திய மேலாண்மை நிலையம்’ இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற கல்வி நிலையங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 1962ல் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக் குழுவை நிறுவி அதன் தலைவராக விக்ரம் சாராபாயை நியமித்தார். முதல் திட்டமாக தும்பாய் நடுநிலைக் கோடு ராக்கெட் ஏவுதளம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டது. ராக்கெட், ஏவு வாகனம், ஆளில்லா உளவு விமானம், செயற்கைக்கோள் ஆகியவற்றின் வடிவமைப்பு, சோதனை மற்றும் ஏவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

1966ம் ஆண்டு பன்னாட்டு அணுவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வியன்னாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த போது ஆல்ஃப்ஸ் மலைத் தொடரில் விமானம் மோதி ஹோமி பாபா மரணமடைந்தார். ஹோமி பாபா இடத்தை நிரப்பவும் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவும் விக்ரம் சாராபாயை அழைத்தார் அப்போதைய பிரதமர் இந்திர காந்தி. இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் பொறுப்பையும் வழங்கினார். விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளின் தலைவர் பொறுப்புகளில் விக்ரம் சாராபாய் திறம்படச் செயலாற்றினார்.  பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை வழங்கி இந்திய அரசு அவரைப் பெருமைப்படுத்தியது. 1968ல் விண்வெளி ஆய்வு மற்றும் ஆக்கப்பூர்வ பயன்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970ல் வியன்னாவில் நடைபெற்ற பன்னாட்டு அணுசக்தி முகமையின் தலைவராகவும் அணுசக்தியின் ஆக்கப்பூர்வ பயன்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு மாநாட்டின் துணைத் தலைவராகவும் தேர்வானார். 1971 டிசம்பர் 30, திருவனந்தபுரத்திலுள்ள தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வையிடச் சென்றபோது, தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்யக் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளாததால் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது மர்மமாகவே போய்விட்டது. இறக்கும் போது அவரது வயது 52. திருவனந்தபுரத்திலுள்ள தும்பா ராக்கெட் ஏவுதள மையம் இவரது நினைவைப் போற்றும் வகையில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நீல் ஆர்ம்ஸட்ராங்க்


சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க். 1930 ஆகஸ்ட் 5 அமெரிக்காவில் பிறந்தார். 16 வயது மாணவராக இருக்கும் போதே பயிற்சி பைலட்டாக விண்வெளியில் பறந்தார். 1947ல் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து கொரியாவுக்கு எதிரான போரில் பங்கேற்றார். போர் விமானங்களைத் திறம்பட இயக்கியதைத் தொடர்ந்து 3 பதக்கங்களை வென்றார்.

1955ல் விமானப் பொறியியல் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து ஒகையோ லூயி ஆய்வு மையத்திலுள்ள விமானவியல் தேசிய ஆலோசனைக் குழுவில் இணைந்தார். ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் விமானங்களின் தரத்தைப் பரிசோதிக்கும் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார். விமான ஆய்வு மையத்தை விட்டு விலகி 1962ல் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியைப் பெறுவதற்காக நாசாவில் சேர்ந்தார். 1966ல் ஜெமினி-8 கட்டளை விமானி என்ற முறையில் ஆளில்லாத எஜினா உந்துகணையுடன் இவரும் டேவிட் ஸ்காட்டும் இணைந்து முதல் மனித விண்வெளித்தள அமைப்பு முயற்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.  1968ல் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அப்போலோ 11 விண்கலத்தில் கமாண்டராகப் பதவி உயர்வு பெற்றார். 1969 ஜூலை 16, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து அப்போலோ 11 ராக் கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. சந்திரனின் வட்டப் பாதையில் சுற்றும்போது ‘ஈகிள்’ கொலம்பியாவிலிருந்து பிரிந்தது. காலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க ஆர்ம்ஸ்ட்ராங்கையும் ஆல்ட்ரின்னையும் சுமந்து கொண்டு ஈகிள் நிலவின் மேற்பரப்பில் இறங்கியது. நியூயார்க் நேரப்படி இரவு 10.50 க்கு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தார். இதன் மூலம் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் என்று புகழ் பெற்று, வரலாற்றில் பதிவானார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நிலவில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளுக்காக கல்லையும் மண்ணையும் சேகரித்தார். ‘மனிதனுக்கு இது சிறிய காலடிதான். ஆனால் மனித இனத்துக்கு அசுரப் பாய்ச்சல்’ என்று தனது மகத்தான சாதனையைப் பகிர்ந்து கொண்டார் ஆம்ஸ்ட்ராங்.

அன்னை தெரெசா


நீலக்கரையுடன் கூடிய வெள்ளை நிறப் பருத்திச் சேலை, சுருக்கங்கள் நிறைந்த முகம், கருணை பொங்கும் விழிகள், நாடு, மதம், இனம், மொழி வேறுபாடற்றச் சேவை மனப்பாங்கு... இவையே அன்னை தெரெசாவின் அடையாளம். 1910 ஆகஸ்ட் 26 அன்று அல்பேனியாவில் பிறந்தார். இவரது இயற் பெயர் ஆக்னஸ் கொன்ஸா பொஜாஹ்யூ.  சின்ன வயதிலேயே ஆக்னஸுக்கு இறை பணியில் ஆர்வம் அதிகம் இருந்தது. 18வது வயதில் லொரெட்டோ மிஷினரியில் சேர்ந்தார். 1929ல் கொல்கத்தாவிலுள்ள லொரெட்டோ கிளையில் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியரானார் ஆக்னஸ். தனது பெயரை ‘தெரெசா’ என்று மாற்றிக் கொண் டார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியைச் செய்தார். 1944ல் தலைமை ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் ஆர்வமிருந்தாலும் சமூகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வசதியாக 1948ல் ஏழைகளுக்கான மிஷினரியைத் தொடங்கினார். 1950ல் ‘மிஷினரீஸ் ஆஃப் சாரிடி’ என்ற பெயருடன் சமூகப் பணியைத் தொடர வாட்டிகன் அனுமதி அளித்தது. நோயாளிகளுக்காக ‘நிர்மல் ஹ்ருதயம்’, தொழு நோயாளிகளுக்காக ‘சாந்தி நகர்’, ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள், குழந்தைகளுக்கான இல்லங்கள் என்று ஏராளமானவற்றை நடத்திவந்தார். 13 சகோதரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் 600க்கும் அதிகமான மிஷனரிகள் மூலம் பல்லாயிரக்கணக்கான கன்னியாஸ்திரிகள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். பத்மஸ்ரீ, மக்சஸே விருது, உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் ‘டாக்டர்’ பட்டங்கள், பாரதரத்னா மற்றும் உலகின் மிக உயரிய நோபல் பரிசு ஆகியவை அன்னை தெரெசாவைத் தேடி வந்தன.

பிறப்பால் அல்பேனியன், குடியுரிமையால் இந்தியன், உடலாலும் உள்ளத்தாலும் உலகத்திலுள்ள அனைத்து ஏழைகளுக்கும் சொந்தமானவள்’ என்ற தெரெசாவின் வாக்கு ஆத்மார்த்தமானது. பொதுத் தொண்டுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அன்னை தெரெசா 1997 செப்டெம்பர் 5 உயிர் நீத்தார்.

Sunday, August 18, 2013

இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு எது பெஸ்ட்?

முதலில் ஆன்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லதா அல்லது ஆஃப்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லதா?
 
எண்டோவ்மென்ட், யூலிப் போன்ற பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி அதிக பயன் தரக்கூடியது. குறைந்த பிரீமிய தொகையில் அதிக ஆயுள் கவரேஜ் கிடைப்பது டேர்ம் ப்ளானின் மிக முக்கிய பாசிட்டிவ் அம்சம்.

ஆனால், நம்மவர்கள் ஆயுள் காப்பீட்டை ஒரு முதலீடாகவே பார்ப்பதால், முதிர்வுத் தொகை எதுவும் கிடைக்காத டேர்ம் ப்ளானை அதிகம் விரும்புவதில்லை. இப்போது இந்த அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு டேர்ம் பாலிசிகளையும் எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள் பலர்.  

டேர்ம் பாலிசியை ஆன்லைனில் எடுக்கும்போது பிரீமியம் கணிசமாக குறையும் என்றாலும், சரியான பாலிசியைத் தேர்வு செய்கிறோமா என்கிற குழப்பமும் இருக்கவே செய்யும். எனவே, ஏஜென்ட்கள் மூலம் பாலிசி எடுப்பதிலும், ஆன்லைன் மூலம் பாலிசி எடுப்பதிலும் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வோம்.

:::::::::::::::::::ஏஜென்ட்கள் மூலம்..!:::::::::::::::::
சாதகம்!

இன்ஷூரன்ஸ் விஷயத்தில் ஏஜென்ட்களின் வழிகாட்டுதல் அவசியமானது. நம் வருமானம், வேலை/தொழிலின் தன்மையைப் பொறுத்து எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுத்துக்கொள்ளலாம் என்பதை ஏஜென்டிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியும். மேலும், பல காப்பீட்டுத் திட்டங்கள் இருப்பதால் கூடுதல் பலன் தரக்கூடிய வகையில் எந்த பாலிசி எடுப்பது என்பதை ஏஜென்டிடம் கேட்கலாம்.  

 பிரீமியம் கட்ட ஏஜென்ட் நினைவுபடுத்துவார். இதனால் பாலிசி காலாவதி ஆவது தவிர்க்கப்படும்.

 பாலிசி எடுக்கத் தேவையான ஆவணங்கள், தேவை எனில் மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுக்கு ஏஜென்ட் வழி காட்டுவார்.  

 பாலிசி க்ளைம் செய்யும்போது தேவையான ஆவணங்களைக் கேட்டு வாங்கி அவரே முன்நின்று அனைத்து வேலைகளையும் முடிப்பார். மேலும், எந்தெந்த காரணத்தினால் பாலிசி க்ளைம் கிடைப்பதில் தாமதம் ஆகும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால் க்ளைம் பெற்றுத் தருவதில் கவனமாக இருப்பார்.

பாதகம்!

சில காப்பீட்டு நிறுவனங்களில் குறிப்பிட்ட டேர்ம் ப்ளான்தான் நடைமுறையில் இருக்கும். அதில் பிரீமியம் அதிகமாக இருக்கும். அந்த பாலிசியையே ஏஜென்ட் பரிந்துரைத்தால் அதிக பிரீமியம் கட்டவேண்டியிருக்கும்.  உதாரணத்துக்கு, பாலிசி முதிர்வில் கட்டிய பிரீமியத்தைத் திரும்பக் கிடைக்கிற மாதிரியான டேர்ம் பாலிசிக்கு பிரீமியம் அதிகம்.

 ஏஜென்ட் வேறு வேலைக்கு மாறியிருந்தால் பாலிசி சேவை கிடைக்காமல் போகும்.

 பாலிசி விண்ணப்பத்தில் ஏஜென்ட் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டுவிடும் நடைமுறைதான் காணப்படுகிறது. இதனால், உடல்நலம் தொடர்பான சில விஷயங்கள் இடம்பெறாமல் போகலாம். இதனால் க்ளைமின்போது சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு.

:::::::::::::::::::::ஆன்லைன் மூலம்..!:::::::::::::::::::

சாதகம்!

 ஏஜென்ட் கமிஷன் இல்லாமல் பாலிசி விற்கப்படுவதால் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொண்ட பாலிசியை எடுக்கலாம். ஏஜென்ட்களிடம் எடுக்கும் பாலிசிக்கான பிரீமியத்தைவிட, ஆன்லைன் மூலம் எடுக்கும் காப்பீட்டின் பிரீமியம் 30 - 50% வரை குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு, 30 வயதுடைய ஒருவர் 50 லட்சம் ரூபாய்க்கு ஏஜென்ட் மூலம் டேர்ம் பாலிசி எடுக்கிறபோது ஆண்டுக்கு 14,000 ரூபாய் வரை பிரீமியம் செலுத்தவேண்டும். ஆனால், ஆன்லைன் மூலம் பாலிசி எடுத்தால் பிரீமியம் தொகை சுமார் ரூபாய் 7,000 மட்டுமே!

தேவைப்பட்டால் பாலிசி தொடர்பான விவரங்களைக் காப்பீடு வழங்கும் நிறுவனத்தின் கிளையில் நேரடியாக கேட்டுப் பெறலாம்.  

 தேவையான ஆவணங்கள், நடைமுறைகள், மருத்துவப் பரிசோதனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைகள் போன்ற விவரங்கள் ஆன்லைன் மூலமாகவும், காப்பீடு நிறுவனத்தின் கால்சென்டர் மூலமாகவும் பெறலாம்.  

 பல நிறுவனங்கள், ஒருவர் எவ்வளவு தொகைக்கு டேர்ம் ப்ளான் எடுக்கவேண்டும் என்பதைக் கணக்கிடும் கால்குலேட்டரை அதன் இணையதளத்திலே வைத்திருக்கின்றன. அதன் மூலம் பாலிசி தொகையை எளிதாக முடிவு செய்துகொள்ள முடியும்.

நமக்குப் பொருத்தமான பாலிசி எது, எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுக்கலாம் என்கிற விவரங்களை நாமே தீர்மானிக்கலாம்.  

  பாலிசி விண்ணப்பத்தை நாமே பூர்த்தி செய்வதால் உடல்நலம் தொடர்பான விஷயங்கள் எல்லாம் இடம் பெற்றுவிடும். இதனால், க்ளைம் சுலபமாக இருக்கும்.

பாதகம்!

 நமக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் திட்டம் எது என்பதை முடிவெடுப்பதில் சிக்கல் வரலாம்!

 ஏகப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து எதை தேர்வு செய்வது என்கிற குழப்பம் இருக்கும். காப்பீடு எடுக்க நினைக்கும் எல்லோரும் அதுகுறித்த விழிப்பு உணர்வு உள்ளவர்கள் என்று சொல்ல முடியாது.

 பாலிசிகள் குறித்து ஏற்படும் சந்தேகங்கள் விளக்கங்களுக்கு கால் சென்டரைத்தான் நம்பவேண்டும். சில நேரங்களில் மொழிப் பிரச்னையும் வரும்.

 ஆன்லைனில் இன்ஷூரன்ஸ் எடுக்க கணினி மற்றும் இணையதள அறிவு அவசியம். மேலும், இணையதளம் மூலமாக பணம் கட்டுவதற்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது ஆன்லைன் பேங்கிங் வசதி உங்களுக்கு இருப்பது அவசியம்.

 பாலிசியில் ஏதாவது பிரச்னை என்றால் அருகிலுள்ள கிளைக்கு சென்றுதான் சரிசெய்ய வேண்டும். ஆனால், ஆன்லைன் டேர்ம் ப்ளான் வழங்கும் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கிளை எல்லா ஊர்களிலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. இது தேவையற்ற அலைச்சலை தரும்.

ஆன்லைனில் பாலிசி எடுக்கிறோம் எனில், எப்போது பிரீமியம் கட்டவேண்டும் என்பதை நாம்தான் கவனிக்கவேண்டும். சில நிறுவனங்கள் பிரீமியம் கட்டுவதை நினைவூட்டி எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் அனுப்பினாலும், இதை கவனிக்காமல்விட்டால் பாலிசி முடிவுக்கு வரும்.  

 ஆன்லைன் மூலம் பாலிசி விற்பனை வந்து சில வருடங்களே ஆவதால் க்ளைம் நடைமுறைகள் எந்த அளவிற்கு பாலிசிதாரருக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.    

 க்ளைம் செய்வதற்கு தரும் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஒருவர் குறை இருந்தால், க்ளைம் பெறுவது தாமதம் ஆகலாம்.

பொதுவாக, ஏஜென்ட்கள் மூலம் எடுக்கப்படும் டேர்ம் ப்ளான்களின் சராசரி கவரேஜ் 18 முதல் 20 லட்சம் ரூபாயாக உள்ளது. இதுவே ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் டேர்ம் ப்ளான்களில் சராசரி கவரேஜ் 40 முதல் 50 லட்சம் ரூபாயாக உள்ளது. இதற்கு காரணம், சுயமாக முடிவு செய்து டேர்ம் ப்ளான் எடுப்பதால் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கிறது.
  

Saturday, August 17, 2013

காணாமல் போகும் நிலத்தடி நீர்...காப்பாற்ற என்ன வழி ?


தங்க முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்த கதைதான் நிலத்தடி நீரின் கதையும். தொலைக்காட்சிப் பெட்டி வந்த புதிதில் வீடுகள்தோறும் ஆன்டெனாக்கள் முளைத்து நின்றது போல... இன்று பூமிக்கு கீழே ஆழ்துளைக் கிணறுகளின் குழாய்கள், கோடிக்கால் பூதங்களாக நிற்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் ஆடம்பரத்துக்காகவும், அழகுக்காகவும் மட்டுமே ராட்சதக் குழாய்கள் மூலம் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

தூங்கும் சட்டங்கள்!  

சென்னையைப் பொருத்தவரை, மாநகரில் வாழும் மனிதர்களுக்கே ஒரு நாளைக்கு 147 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதுபோக, தனியார் நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகள், நட்சத்திர விடுதிகள், நீர் விளையாட்டு மையங்கள்... போன்றவை பல கோடி லிட்டர் தண்ணீரை, திருட்டுத்தனமாக ராட்சதக் குழாய்கள் மூலமாக உறிஞ்சியும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வந்தும் பயன்படுத்துகின்றன. நடைமுறையில் உள்ள 'சென்னை மாநகர நிலத்தடி நீர் ஒழுங்குபடுத்தும் சட்டம்-1988’-ன் படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வர்த்தக நோக்கத்தில் நிலத்தடி நீரை எடுக்க தடை உள்ளது. ஆனால், அதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. 

அதேபோல, தமிழக அரசு, நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்காக, 2003-ம் ஆண்டு 'தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மைச் சட்டம்’ இயற்றியது. ஆனால், அந்தச் சட்டம் தொடர்பான அரசாணை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், அது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், விவசாயத்துக்குப் பயன்படுத்தும் மின் மோட்டார்களுக்குப் பதிலாக, சூரிய ஒளி சக்தி மூலமாக இயங்கும் 2 ஆயிரம் மோட்டார்களை விவசாயிகளுக்குக் கொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார், முதல்வர். 

ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தடை வேண்டும்!  

கிராமங்கள்ல சின்ன சின்ன ஓடைகள் இருக்கும். மழைத்தண்ணி ஓடைகள் வழியா குளம், குட்டைக்கு வரும். அது நிறைஞ்ச பிறகு, ஏரி நிறையும். இப்படி சின்ன கிராமத்துலகூட நிறைய நீர்பிடிப்புப் பகுதிகள் இருந்துச்சு. காலப்போக்குல குடியிருப்புத் தேவைக்காக ஓடைகளையும், வரத்து வாய்க்கால்களையும் மூடி ஆக்கிரமிப்புச் செய்ய ஆரம்பிச்சாங்க. நீர்நிலைகளுக்கு தண்ணி வர்றது தடைபட்டுப் போச்சு. ஒரு காலத்துல சென்னையைச் சுத்தி 400 ஏரிகள் இருந்துச்சு. இன்னிக்கு அதுல 40 ஏரிகள்கூட உருப்படியா இல்லை. இப்படி நீர் நிலைகள் தூர்ந்து போனதால நிலத்தடி நீரும் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது. இது ஒருபக்கமிருக்க, புதுசு புதுசா 'போர்வெல்’ போட ஆரம்பிச்சதும் நிலத்தடி நீரைப் பாதிச்சிடுச்சு. இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் அதிக 'போர்வெல்’ இருக்குனு சொல்றாங்க. நிலத்தடி நீரை குழாய் போட்டு இஷ்டத்துக்கு உறிஞ்சுறவங்க, மழை நீரை நிலத்துக்குள்ள அனுப்ப எந்த முயற்சியும் எடுக்கறதில்லை. அதனால, ஆழ்துளைக் கிணறுகள் விஷயத்துல சில நடவடிக்கைகளை அரசாங்கம் போர்க்கால அடிப்படையில எடுக்கணும். அதாவது, எல்லா நிலங்கள்லயும் பண்ணைக்குட்டைகளைக் கட்டாயமாக்கணும். அதுல தேங்கற அதிகப்படியான நீரை, பூமிக்குள்ள அனுப்பறதுக்கான ஏற்பாடுகளையும் கட்டாயமாக்கணும்.

நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் அரசை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. சென்ற அ.தி.மு.க ஆட்சியின்போது மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய அதே ஜெயலலிதாதான், தற்போதும் முதல்வராக இருக்கிறார். 'புதிய வீடுகள் கட்டும்போது மழை நீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டாயம் அமைக்க வேண்டும்’ என்ற விதி இன்னமும் அமலில் உள்ளது. ஆனால், நாம் நடைமுறைப்படுத்துவதில்லை... அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. 'வெயிலின் அருமை நிழலில் தெரியும்’ என்பதுபோல் தண்ணீருக்காக குடங்களை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக அலையும் போதுதான் மழை நீர் சேமிப்பின் அவசியம் புரியும்.

மழை நீர்... உயிர் நீர்!  

வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ 5 ஆயிரம் ரூபாய் இருந்தால்போதும். ஆயுளுக்கும் தண்ணீர் பிரச்னை இருக்காது. ஓர் ஆண்டின் சராசரி மழையளவு 1,100 மில்லி மீட்டர் என்று வைத்துக் கொண்டால்... 100 சதுர மீட்டர் மொட்டை மாடி மூலமாக ஆண்டுக்கு 61 ஆயிரத்து 600 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்கிறது, பொதுப்பணித்துறையின் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார மையம். மினரல் வாட்டருக்கு மாதம்தோறும் செலவு செய்பவர்கள், ஒரே ஒரு முறை செலவு செய்து மழை நீர் சேமிப்பு அமைப்பை நிறுவி விட்டால், ஆண்டு முழுவதும் ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதுடன், நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.

வீடுகளில் மட்டும் மழை நீரை சேமித்தால் போதாது... விவசாய நிலங்களிலும் மழை நீரை அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

மகாபெரியவா சொன்ன கதைகள்!


உணவு உடம்பை மட்டுமல்ல; மனசையும் பாதிக்கும் என, இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. இப்படியான ஓர் உணவுச் சிக்கலில் சந்நியாசி ஒருவர் மாட்டிக்கொண்டு பரிதவித்த சம்பவத்தை இங்கே அழகான ஒரு கதையாகச் சொல்லி, இந்த உண்மையை நமக்கு எளிதாகப் புரியவைக்கிறார் மகா பெரியவா.

எங்கே... அவரின் வாய் வார்த்தையாலேயே அந்தக் கதையைக் கேட்போமா?
'ராஜா ஒருத்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் அடிக்கடி அரண்மனைக்குப் போய் உபதேசம் பண்ணிவிட்டு வருவார். அப்படி ஒருநாள் காலம்பற போனவர், நீண்டநேரம் அநேக விஷயங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்ததால் மத்தியானம் வந்துவிட்டது. ''இங்கேயே பி¬க்ஷ பண்ணிவிட்டுப் போகணும். ஆசார நியமத்தோடு, தனியாகப் பண்ணிப் போட ஏற்பாடு செய்கிறேன்'' என்று ராஜா ரொம்பவும் கேட்டுக்கொண்டான்.

அவனுடைய பிரார்த்தனையை மறுக்க முடியாமல் அவர் அரண்மனையிலேயே போஜனம் செய்தார். அப்போது நல்ல வெயில் வேளை! பஞ்சபக்ஷ்ய போஜனம் பண்ணினதில் அவருக்குக் களைப்பாக இருந்ததால், அங்கேயே கொஞ்ச நேரம் இளைப்பாறினார்.

அவர் சிரம பரிகாரம் பண்ணிக்கொண்ட அறையின் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு முத்துமாலை அவர் கண்ணில் பட்டது. அது ராஜாவுடையது. நல்ல வைராகியான அவருக்கு எதனாலோ அன்றைக்கு அந்த முத்தாரத்தைப் பார்த்தவுடன், அதை எடுத்து வைத்துக்கொண்டு விடவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பக்கத்தில் யாருமில்லாததால் சட்டென்று அதை எடுத்து, வஸ்திரத்துக்குள் ஒளித்து வைத்துக்கொண்டுவிட்டார். சாதாரண மனிதர்கள் பண்ணினாலே திருட்டு என்பது பாவம்; குற்றம். மகானாக, ராஜகுருவாக இருந்தவர் கொஞ்சங்கூட மனசை உறுத்தாமல் இப்படிப் பண்ணிவிட்டு, தாம்பாட்டுக்கு ஆஸ்ரமத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்.

அன்று ராத்திரி முழுக்க அவருக்கு சரியாகத் தூக்கமே இல்லை. மறுநாள் முழித்துக் கொள்கிறபோதே வயிற்றில் 'கடமுடா’ பண்ண ஆரம்பித்தது. பேதி பிடித்துக்கொண்டது. அஞ்சு தடவை, ஆறு தடவை 'போய்’ ரொம்ப பலஹீனமாய்விட்டது.

ஆனாலும், இப்படி உடம்பு ஆயாஸப்பட்டுப் போனாலும், பேதியானதிலிருந்தே அவருடைய மனஸுக்கு ஒரு தெளிவு ஏற்படத் தொடங்கியிருந்தது. முதல்நாள் உண்டான கெட்ட எண்ணமும், ஆசைகளும் கொஞ்சங் கொஞ்சமாக விலகிக்கொண்டே வந்தன. இப்போது இனிமேலே 'போவதற்கு’ எதுவுமே இல்லை என்கிற மாதிரி உடம்பு கிழித்த நாராக ஓய்ந்துபோன ஸ்திதியில், அவருடைய வழக்கமான உசந்த மனசே அவருக்குத் திரும்பிவிட்டது.

உடம்பு ஓய்ந்துபோன நிலையிலேயே முத்துமாலையை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார். ராஜாகிட்டே போய், அந்த ஹாரத்தைக் கொடுத்து, ''என்ன காரணமென்றே தெரியவில்லை. நேற்றைக்கு மத்தியானத்திலிருந்து என் புத்தி கெட்டுப்போய்க் கிடந்தது. அந்தக் கெட்ட ஆவேசத்தில் நான்தான் இந்த மஹாபாவத்தைப் பண்ணினது. திருடனை எப்படித் தண்டிக்க வேண்டுமோ அப்படி எனக்கு சி¬க்ஷ பண்ணு!' என்று ராஜாவிடம் சொன்னார்.ராஜா யோசித்தான். அப்புறம் சொன்னான்... ''நீங்களே  சொல்வதால் நீங்கள்தான் ஹாரத்தை எடுத்ததாக வைத்துக்கொள்ளப் பார்க்கிறேன். ஆனாலும், எந்தக் காரணத்துக்காக அது பண்ணப்பட்டது என்பதையும் ஆராய்ந்து, அதை ஒட்டியே ஒரே குற்றத்துக்கு வேறு வேறு சி¬க்ஷகளை நீதி சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. எப்படியாகப்பட்டவர், என்ன மாதிரியான சந்தர்ப்பத்தில், எந்தவிதமான நோக்கத்துக்காகக் குற்றம் செய்தார் என்று கவனித்தே தீர்ப்புச் செய்ய வேண்டும். (ஸர்க்கம் ஸ்டன்ஸ், மோட்டிவ் பார்த்தே சென்டென்ஸ் பண்ணவேண்டும் என்றுதானே இப்போதும் லா இருக்கிறது?) அதனாலே, மகானான தாங்கள் இப்படியரு கார்யம் பண்ணினீர்களென்றால், எந்தக் காரணத்தின் மேலே அப்படிப் பண்ணினீர்கள் என்று தெரிந்துகொள்ளாமல் தண்டிக்கிறதற்கில்லை' என்றான்.

அதற்கு அந்த குருவானவர், ''நேற்று நீ பிரியத்தின் பேரில் நிர்பந்தம் செய்ததால் நான் இங்கே சாப்பிட்டேன். அதற்கப்புறந்தான் இந்தப் பாப கார்யத்தில் என் புத்தி பிரவேசித்திருக்கிறது. நேற்றுச் சாப்பிட்ட அன்னம் வயிற்றில் இருந்தவரையில் மனசு கெட்டுப் போயிருந்தது. இன்றைக்கு தெய்வ ஸங்கல்பத்தால் அதிஸாரம் உண்டாகி, அது வெளியே போகப் போகக் கெட்ட எண்ணமும் வெளியேறியிருக்கிறது என்று தோன்றுகிறது. இதிலிருந்து, சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி ஆன தோஷத்தால்தான் குணதோஷம் ஏற்பட்டிருக்கிறது என்று அநுமானிக்கத் தோன்றுகிறது. அநுமானத்தை ஊர்ஜிதம் பண்ணிக் கொள்வதற்கு நீ வேண்டுமானால் நேற்று அன்னமாகப் பக்குவம் பண்ணின அரிசி முதலானதுகள் எங்கேயிருந்து வந்தன என்று விசாரணை பண்ணிப் பார்'' என்றார்.

அன்னம் என்பதில் ப்ரோட்டின், கார்போஹைட்ரேட், வைட்டமின் முதலியன மட்டும் இல்லை. அதைச் சமைத்தவர், தான்யமாகவும், பச்சைக் காய்கறியாகவும் அதை விலைக்கோ தானமாகவோ கொடுத்தவர், அதைப் பயிர் பண்ணியவர் ஆகியவர்களுடைய குணதோஷங்களும் அந்த அன்னத்தில் சூட்சுமமாக டெபாஸிட் ஆகி, சாப்பிடுகிறவனுக்குள் போகிறது. இவர்கள் தோஷமுடையவர்களாயிருந்தால் சாப்பிடுகிறவனையும் அந்தத் தோஷம் தொற்றிக்கொள்ளும். இதுதான் அன்னதோஷம் என்பது.ராஜா உடனே உக்ராண மணியக்காரனுக்குத் தாக்கீது அனுப்பினான். முதல்நாள் குருவுக்குச் சமைத்துப் போட்ட அரிசி எங்கேயிருந்து வந்தது என்று விசாரித்துத் தெரிவிக்கும்படி உத்தரவு போட்டான்.மணியக்காரன் பூரா விவரங்களையும் விசாரணை பண்ணித் தெரிவித்தான். என்ன தெரிவித்தானென்றால்... சிலநாள் முந்தி ஒரு பெரிய கொள்ளைக்காரன், கடைத் தெருவில் ஒரு பெரிய மளிகைக் கடையிலிருந்து ரொம்ப உசந்ததான ஸன்ன சம்பா மூட்டைகளைத் திருடி, அப்புறம் ராஜ சேவகர்களிடம் பிடிபட்டான். அவனோடு அரிசி மூட்டையும் கைப்பற்றப்பட்டது. அப்புறம், அவனுக்குச் சி¬க்ஷயும் விதிக்கப்பட்டது. ஆனாலும், உடைமைக்கு (அரிசிக்கு) சொந்தக்காரன் அதை ராஜாங்கத்திலிருந்து திரும்பி வாங்கிக் கொள்வதற்கான 'ட்யூ டேட்’ ஆகியும் எதனாலோ ஆஜராகவில்லை. அதனால், சட்டப்படி அந்த அரிசி அரண்மனைப் பண்டகசாலையில் சேர்க்கப்பட்டுவிட்டது. நேற்றுவரை பிரயோஜனப்படுத்தாத அந்த அரிசியைத்தான் முதன்முதலில் குருவுக்குச் சமைத்துப் போட்டார்களாம்.

திருட்டுச் சொத்தை ராஜ தர்மப்படி ராஜா ஸ்வீகரித்தாலும், அது மகானுடைய சாத்விக சந்நியாச தர்மத்துக்கு விரோதமானதால், அவரை 'அஃபெக்ட்’ பண்ணிவிட்டது. ஆனாலும், அவர் மனசறிந்து குற்றம் பண்ணாததாலும், அவருடைய பூர்வ சரித்திரம் சுத்தமானதாலும், பகவானே அப்புறம் அவருக்கு அதிஸாரம் உண்டாகுமாறு பண்ணி, அவருடைய உடம்பில் அந்த அன்ன ஸத்து ரத்தமாய்ச் சேராமல் வெளியேறும்படி செய்து, தோஷத்தைப் போக்கிவிட்டான்.இதிலே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சாப்பாட்டோடு சம்பந்தப்பட்டவர்களின் குணதோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன என்பதே!சுத்தமான ஆகாரம் என்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்தது. ஒன்று, ஆகாரமாக ஆகிற வஸ்துக்கள்- தானியம், காய்கறி முதலான பதார்த்தங்கள் சுத்தமானவையாக இருக்க வேண்டுமென்பது; அதாவது... வெங்காயம், முள்ளங்கி மாதிரி மனசைக் கெடுக்கிறவையாக அவை இருக்கப்படாது. இரண்டாவது, அந்த ஆகாரம் நம் இலையில் வந்து விழுகிற வரையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் சுத்தமாயிருக்க வேண்டும்!'

உங்கள் தட்டில் உணவா... விஷமா? - கோலா பானங்களின் கூட்டுப்பொருட்கள் பற்றிய அதிர்ச்சிகள்..

 
பெரு நாட்டில் இப்போது தோண்டியெடுக்கப்படும், சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய 'மம்மி’களில் கோகோ இலைகள் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கோலா பானங்களின் கூட்டுப்பொருட்கள் பற்றிய அதிர்ச்சிகள்..
 
இதன் மூலப்பொருட்களே கோகோ இலைகளும், கோலா கொட்டைகளும்தான். 3 பங்கு கோகோ இலைகளும், ஒரு பங்கு கோலா கொட்டைகளும் சேர்ந்த கலவைதான்... முதலில் அறிமுகமான கோகோ - கோலா பானம். இதில் கோகோ இலைகளின் குணங்கள் பற்றி முதலில் பார்ப்போம்.

கோகோ செடிகளின் பூர்விகம் தென் அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் சுமார் 4,000 கி.மீ.க்கு மேல் பரந்துகிடக்கும் ஆன்டீஸ் மலைத்தொடர். அங்கு விளையும் பல்வேறு அற்புதத் தாவரங்களில் கோகோ முக்கியமானது. பெரு, பொலீவியா, கொலம்பியா என்று அந்த மலை பரவியிருக்கும் நாடுகள்தான் கோகோ செடியின் வாசஸ்தலங்கள். பெரு நாட்டில் இப்போது தோண்டியெடுக்கப்படும், சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய 'மம்மி’களில் கோகோ இலைகள் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வரலாற்றுக் குறிப்புகளில், 'தெய்விக தாவரம்’ என்றே கோகோவை வர்ணிக்கிறார்கள்.

துளசி, வில்வம், வெற்றிலை போன்ற இலைகளுக்கு நாம் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவர்கள் கோகோவுக்குக் கொடுத்தார்கள். வெற்றிலைகளை பூஜை, மதச்சடங்கு, வீட்டு நிகழ்ச்சிகள் என்று உபயோகிப்பது... வெற்றிலை - பாக்கு - சுண்ணாம்பு, சமயத்தில் புகையிலை என்று வாயில் போட்டு சுவைப்பது என்று நம்மூரில் பயன்படுத்துகிறோம். அதேபோலத்தான் கோகோ இலைகளை பூஜைத்தட்டுகளிலும், விருந்துகளிலும், விழாக்களிலும் பயன்படுத்துவது... அந்த இலைகளை மடித்து, மரத்தூள், கடற்சிப்பி ஓடுகளின் பொடியாலான சுண்ணாம்புக் கலவையைச் சேர்த்து மென்று சுவைப்பது என்று அந்நாடுகளில் வழக்கமாக இருக்கிறது. இந்த 'கோகோ பீடா’, ஆயிரக்கணக்கான வருடங்களாக கோடிக்கணக்கான மக்களால் இன்றளவும் சுவைக்கப் படுகிறது.தேயிலையில் டீ தயாரிப்பது போல், கோகோ இலையிலும் டீ தயாரிப்பது அந்த நாடுகளில் சர்வ சாதாரணம். வைட்டமின் - ஏ, சுண்ணாம்புச் சத்து, ஃபாஸ்பரஸ், இரும்புச்சத்து, இன்னும் பல ஊட்டச்சத்துக்களும் கொண்ட கோகோ இலைகள்... அஜீரணம், சுவாசக்கோளாறு, மூளை - நரம்பு வியாதிகள், ஈரல் பிரச்னைகள், இதயக் கோளாறுகள், ஆண்மைக் குறைவு போன்ற பல்வேறு வியாதிகளுக்கும் அற்புத மருந்து என்கிறார்கள்.பெரு நாட்டை 16-ம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் கைப்பற்றிய பிறகு, கோகோவுக்கு கொஞ்சம் பிரச்னை கிளம்பியது. ஸ்பானிஷ் கிறிஸ்தவ கத்தோலிக்க சர்ச் குருமார்கள் கோகோவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். உள் நாட்டு மக்களால் தெய்விகச் செடியாகக் கருதப்பட்ட கோகோவை, சாத்தானின் தூதுவனாக அவர்கள் வர்ணித்தார்கள். என்றாலும், 19-ம் நூற்றாண்டில்... அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்களுக்கு மெள்ள கோகோ அறிமுகமாக... அதன் சுவையிலும் போதையிலும் அவர்கள் மயங்க, அதுதான் உலக அளவில் அது பரவுவதற்கு அடித்தளமிட்டது.இந்தச் சூழ்நிலையில்தான் இத்தாலியின் பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் மாண்டகேஸா, கோகோவில் உள்ள கோகெயின் என்கிற பொருள், 'மைகிரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலிக்கு நல்ல மருந்து என்று கண்டுபிடித்தார். ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்த டாக்டர் பெம்பர்டன், சோடாவில் கோலாவை கலந்து, 'கோகோ கோலா’வை கண்டுபிடித்தார். முதலில் வெளிவந்த கோகோ - கோலாவில் 8 மில்லி கிராம் கோகெயின் இருந்தது. முதலில், 'மூளை - நரம்பு டானிக்’ என்றுதான் இதை அறிமுகப்படுத்தினார்கள். அது ஓரளவு உண்மையும்கூட.ஒருகட்டத்துக்குப் பிறகு, கோகோ - கோலாவை வைத்து புது பிரச்னைகள் எழுந்தன. அமெரிக்காவில் அடிக்கடி நிகழ்ந்த 'கறுப்பு - வெள்ளை’ இனக் கலவரங்களுக்கு கோகோ - கோலாவின் கோகெயின் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. கோகெயினின் போதைத் தன்மையால் கறுப்பர்கள் இனவெறிக் கலவரங்களில் ஈடுபடுவதாகவும், வெள்ளையர் இன பெண் களை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் பிரச்னை கிளம்ப... அமெரிக்க அரசாங்கம் 1906-ல் கோகோவை தடைசெய்தது. கோகோ பயிர் செய்யப்படும் நாடுகளில்/காடுகளில் விமானம் மூலம் கோகோ செடிகள் மீது சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து அவற்றை அழித்து வருகிறது அமெரிக்க அரசாங்கம். அமெரிக்காவுக்குள் கோகோ இறக்குமதி, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடைபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால்... ஒரே ஒருவர் மட்டும் இதற்கு விதிவிலக்குப் பெற்றார். யார் அவர்? சாட்சாத் கோகோ  - கோலா நிறுவனம்தான்!

கோகோ - கோலாவில் இப்போது கோகோ சேர்ப்பதில்லை என்று அவர்கள் சத்தியம் செய்கிறார்கள். ஆனாலும், இன்றுவரை பெரு நாட்டில் இருந்து ஆண்டுதோறும் 100 மெட்ரிக் டன் கோகோ இலைகளை கோகோ - கோலா நிறுவனம் இறக்குமதி செய்கிறது. எதற்காம்? இந்த இலைகளை அமெரிக்காவில் உள்ள 'ஸ்டீபேன்’ என்கிற நிறுவனத்துக்கு அனுப்பி, அதில் உள்ள கோகெயினைப் பிரித்து எடுத்து, கோகெயின் இல்லாத கோகோ இலைகளை, வாசனைக்   காக கோகோ - கோலாவில் கலப்பதாக கூறுகிறார்கள்.சரி, பிரித்து எடுக்கப்படும் கோகெயின் எங்கே போகிறது? அமெரிக்காவின் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான 'மாலிங்கார்ட்’ கம்பெனிக்கு மருந்துகள் தயாரிப்பதற்கு விற்று விடுகிறார்கள். உலகில் உள்ள அத்தனை நாடுகளில் இருந்தும் (இந்தியா உட்பட) கஞ்சா, அபின் போன்ற அத்தனை போதைப் பொருட்களையும் விலைக்கு வாங்கி 'மருந்து’ தயாரிக்கும் தலைமைப் பீடம்தான் இந்தக் கம்பெனி (என்னுடைய 45 வருட மருத்துவத் தொழிலில் இதுவரை யாருக்கும் எந்த வியாதிக்கும் கோகெயின் சார்ந்த மருந்துகள் எதையும் நான் கொடுத்ததில்லை).வெற்றிலை போல், கோகோவை சாப்பிடும் சாதாரண மக்களை ஜெயிலில் அடைக்கும் அமெரிக்க அரசாங்கம்... இத்தனை கோடி மக்கள், கிட்டத்தட்ட போதைப் பழக்கம் போல குளிர்பானங்களைக் குடிக்க எப்படி துணை போகிறார்கள் என்பது ஆச்சர்யம்தான்.
 

Friday, August 16, 2013

ஸ்மார்ட் வாட்ச்!


ஜேம்ஸ்பாண்ட் படங்களில், கைக்கடிகாரங்களில் மைக்ரோபோன் வைத்துக் கொண்டு பேசுவது, அதிலிருந்தே சுடுவது போன்ற சாகசங்களை எல்லாம் பார்த்து வியந்திருப்போம். அதெல்லாம் சும்மா கற்பனை என்று நினைக்காதீர்கள். தொழில்நுட்பம் அந்தக் கற்பனைகளுக்கு உருவம் கொடுத்துக் கொண்டே வருகிறது.லேட்டஸ்ட், ஸ்மார்ட்வாட்ச். அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் என்றொரு புதிய வகை தோன்றியிருக்கிறது. செல்போன், ஐபேட், டேப்லட் போன்றவை கைகளில் வைத்து இயக்குபவை. இதையடுத்து, மனித உடலோடு இணைந்து செயல்படும் தொழில் நுட்பத்தையே வேரபிள் டெக்னாலஜி என்று அழைக்கிறார்கள். அதில் முதலில் வருவது கைக்கடிகாரம். இரண்டாவது மூக்குக் கண்ணாடி. கைக்கடிகாரத்தை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், தொழில்நுட்ப உருவேற்றலாம் என்று நிறுவனங்கள் யோசித்ததின் விளைவுதான் ஸ்மார்ட்வாட்ச். இது வெறுமனே நேரம் மட்டும் காட்டும் கடிகாரம் அல்ல. இதன் மூலம், விளையாடலாம், மொழி பெயர்ப்புகள் செய்யலாம், கணக்குகள் போடலாம். இன்னும் சிலவற்றில் கேமரா, தெர்மோ மீட்டர், காம்பஸ், ஜி.பி.எஸ்., மேப்புகள், ஸ்பீக்கர், மெமரி கார்ட் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. இதனை வயர்லெஸ் ஹெட்செட், மைக்ரோபோன், மோடம் போன்றவற்றோடும் பேசவைக்க முடியும்.அடுத்தகட்டமாக மொபைல் தொழில் நுட்பத்தோடு இன்னும் நெருக்கமாக எப்படி கடிகாரத்தை இணைக்க முடியும் என்று எழுந்த ஆய்வின் பலன், இந்த ஆண்டு பெரிய முன்னேற்றத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அதன் பெயர்தான் பெபிள் இபேப்பர் வாட்ச். ஐபோனோடும் ஆண்ட்ராய்டு போன்களோடும் சுலபமாக இணைக்கத்தக்க இந்த ஸ்மார்ட்வாட்ச் செய்யும் அற்புதங்கள்தான் இப்போது உலகெங்கும் பயனர்களிடையே பாப்புலராக இருக்கிறது.

பெபிள், ஐபோனோடும் ஆண்ட்ராய்ட் போனோடும் ப்ளூடூத் மூலம் தொடர்புகொள்ளும். உங்கள் போனில் மின்னஞ்சல் வந்தால், குறுஞ்செய்தி வந்தால், அலர்ட்டுகள் வந்தால், உடனடியாக அது உங்கள் பெபிள் கைக்கடிகாரத்தில் தெரியும். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு என்றே பெபிளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் அபாரம். ஜி.பி.எஸ். மூலம் வழிகாட்டும், வேகம் கணக்கிட்டுக் காட்டும், தொலைவைத் தெரிவிக்கும். இதையே ஓட்டப்பந்தய வீரர்களும் பயன்படுத்தலாம். கூடுதலாக இசையையும் கேட்கலாம்.கைக்கடிகாரம் உங்கள் போனோடு தொடர்பு கொண்டிருப்பதால், உங்களுக்கு விருப்பமான கைக்கடிகார டையலையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். எப்படி டெஸ்க்டாப் ஸ்கிரீனில் முகப்படங்களை மாற்றுகிறீர்களோ அப்படி கைக்கடிகார முகப்புகளையும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச், ஐம்பது மீட்டர் ஆழ தண்ணீருக்குள் இருந்தாலும் தண்ணீர் புகாதாம்.பெபிளுக்கு அடுத்த முன்னேற்றம் ஹாட் வாட்ச்கள். எப்படி பெபிள் மக்களிடம் இருந்து பணத்தைத் திரட்டி, தன் தொழில்நுட்பத்தை உருவாக்கியதோ, அதே போன்ற கிரவுட் ஃபண்டிங் மூலம் உருவாகியிருப்பதே ஹாட் வாட்ச்கள். இந்த ஸ்மார்ட் வாட்ச், ஒரு படி உயர்ந்தது. உங்கள் பாக்கெட்டில் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லையாம். இருபது முப்பது அடிகள் தள்ளியிருந்தாலும், ஸ்மார்ட்வாட்ச் வேலை செய்யும். முன்பிருந்த ஸ்மார்ட்வாட்ச்களில் குறுஞ்செய்திகளை, மின்னஞ்சல்களைப் படிக்க மட்டும்தான் முடியும். இதில் அதற்குப் பதிலெழுதவும் முடியும். போதாக் குறைக்கு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை கைக்கடிகாரத்தில் இருந்தே அப்டேட் செய்யலாம்.போனைத் தொடாமலேயே கைக்கடிகாரத்தை அருகில் வைத்துக் கொண்டே பேசும் வசதியும் இதில் உண்டு. நான்கு அழகழகான மாடல்கள் சந்தைக்கு வரவிருக்கின்றன. இப்போதே, எண்ணற்றோர் இதற்காக முன்பணம் கட்டிவிட்டுக் காத்திருக்கின்றனர்.

இதன் அடுத்தகட்டம்தான் சூப்பர். ஸ்மார்ட்வாட்ச் கோதாவில் ஆப்பிள் நிறுவனமும் சாம்சங் நிறுவனமும் கூட இறங்க இருக்கின்றன. அவர்கள் தயாரிக்கவிருக்கும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. கைக்கு அழகாக கடிகாரம் மட்டுமல்ல, கணினியையே பொதித்துத் தர தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துவிட்டன. பயனர்களுக்கு, புதிய அனுபவம் நிச்சயம்!

ஆர்.வெங்கடேஷ்

ஓ பக்கங்கள் - மியூசியத்துக்கு வயது 315 - ஞாநி

 
சென்னையிலிருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஒரு குன்றில் இருக்கும் அழகிய சிறு வீட்டில் ஜன்னல் வழியே புல்வெளியில் மேயும் குதிரைகளைப் பார்த்தபடி சில்லென்ற காற்றில் நனைந்து கொண்டு இதை எழுதுகிறேன். பிரான்சில் லியோன் நகருக்கு அருகே செயின்ட் எடியொன் என்ற கிராமத்தில் நண்பர் வீடு இது. சென்னையை விட்டு வந்து 14 நாட்கள் ஆகின்றன. திரும்பி வர இன்னும் 31 நாட்கள் ஆகும். அந்த நாட்களில் ரோம், வெனிஸ், வியன்னா, பெர்லின், ஆம்ஸ்டர்டேம், பிரஸ்ஸெல்ஸ், லூவன், லண்டன், ஆக்ஸ்போர்ட்... என்றெல்லாம் சுற்றிவிட்டு வர திட்டம். இவ்வளவு நீண்ட காலம் நான் வெளிநாடுகளில் இருந்தது இல்லை. இந்த முறையும் ஒரு பத்தே நாட்கள் மட்டுமே வெளிநாடு போய் வரலாமென்று சிதம்பரம் நண்பர் பழநி அழைத்தார். நான் அதை 45 நாட்கள் பயணமாக மாற்றிவிட்டேன்.
 
பழநி தன் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் போதெல்லாம் நெருக்கமான ஓரிரு குடும்ப நண்பர்களையும் அழைப்பது வழக்கம். அப்படி அவருடன் ஊட்டி, எர்ணாகுளம், பாலி தீவுகளுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். பிரான்சின் பாரிசுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் போகலாம் என்று அவர் இம்முறை அழைத்தபோது, ஐரோப்பா பற்றிய என் கனவுப் பயணம் விரிவடைந்தது.நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நண்பர் அருள் என்னை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அந்த 15 நாள் பயண முடிவில் அடுத்து ஐரோப்பாவுக்கு செல்லவேண்டும் என்ற ஆவலே அதிகரித்தது. நீண்ட வரலாறு எதுவும் இல்லாத அமெரிக்கா தன் சின்ன வரலாற்றையே பிரம்மாண்டப்படுத்திக் கொண்டாடுவதைக் கண்டபோது நெடிய வரலாறு உடைய ஐரோப்பாவைக் காணும் ஆவல் அதிகமாயிற்று.ரோம், வெனிசுக்கெல்லாம் அடுத்த வருடம் செல்வோம் என்றார் பழநி. கடந்த சில வருடங்களாக என் உடல் சர்க்கரை, ரத்த அழுத்த நோயால் கடுமையாகச் சிதைக்கப்பட்டுவரும் நிலையில் செய்ய விரும்பும் எதையும் உடனே செய்ய முடியுமானால் அதை நிச்சயம் தள்ளிப் போடுவது இல்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். எனவே பத்து நாட்களில் பழநி குடும்பத்தினர் இந்தியா திரும்பியதும் நான் மட்டும் தனியே தொடர்ந்து ஐரோப்பாவில் சுற்றுவதென்று தீர்மானித்தேன். எனக்குச் சொந்தமான கொஞ்சம் நிலத்தை விற்று கணிசமான பணம் கிடைத்ததும் அதை இப்படி நான் விரும்பும் விஷயங்களுக்குச் செலவு செய்து தீர்ப்பது என்ற என் திட்டம் அவ்வளவு சீக்கிரம் நடப்பதாகத் தெரியவில்லை. அதுவரை பயணத் திட்டங்களைத் தள்ளிப் போடவும் விருப்பமில்லை. எனவே செலவுகளுக்கு உள்ளூரில் கடன் வாங்குவது, வெளிநாடுகளில் உதவி கோருவது என்று முடிவு செய்தேன். ஃபேஸ்புக்கில் அறிவிப்பு செய்ததும் பல நாடுகளில் இருந்து நண்பர்கள் அவரவர் ஊர்களில் நான் தங்கும் ஏற்பாடுகளையும் சாப்பாட்டுச் செலவுகளையும் சந்திக்க முன்வருவதாகத் தெரிவித்தார்கள். எந்த ஊரிலிருந்தெல்லாம் இப்படி அன்பான ஆதரவு அழைப்பு வந்ததோ அங்கெல்லாம் செல்லும் விதத்தில் பயண திட்டம் போட்டேன். அது ஐரோப்பாவைத் தாண்டி யு.கே. வரையில் போய்விட்டது. அழைப்பு இருந்தும் மியூனிக், போர்ச்சுகல் என்று சில ஊர்களைச் சேர்க்க இயலவில்லை.
 
என்னை தங்கள் விருந்தினராக அழைத்த இந்த அன்பர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் நான் இதுவரை சந்தித்திராதவர்கள். என் எழுத்தின் வழியே மட்டுமே என்னை அறிந்தவர்கள். எந்த ஊரி லும் எந்தச் சங்கமும் அமைப்பும் என்னை அழைக்கவில்லை. அழைப்பவர் எல்லாரும் தனி நபர்கள். இந்தப் பயணத்தில் என் நோக்கமும் கூட்டங்களில் பேசுவதல்ல. மனிதர்களைச் சந்திப்பதும் கலாசாரங்களுடன் உறவாடுவதும் அதன் ஊடே மானுடத்தின் பொதுப்புள்ளி என்ன என்று தேடுவதும்தான்!  நான்காண்டுகள் முன்னர் அமெரிக்கா சென்ற போது அங்கே இருக்கும் இந்தியர்கள் ஏன் அங்கேயே இருக்க விரும்புகிறார்கள் என்பதையும் சிலர் ஏன் திரும்பிவிட விரும்புகிறார்கள் என்பதையும் ஆர்வமாக விசாரித்தேன். இப்போது என் மனநிலை அதிலெல்லாம் ஈடுபாட்டுடன் இல்லை. எங்கே மன நிம்மதியுடன் வாழ முடிகிறதோ அங்கே வாழ்வதே சரி என்றே தோன்றுகிறது. தேசபக்தி என்பதை விட மனித நேயமும் மனித மகிழ்ச்சியும் பெரியவை. இப்போது எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. வேறொரு சமூகத்தில் சாத்தியமாகிற நல்ல விஷயங்கள் எல்லாம் ஏன் என் சமுகத்திலும் சாத்தியமாக முடியாமல் இருக்கிறது என்ற தேடல் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு கலாசாரத்திலும் வாழ்க்கை முறையிலும் இதைச் சாத்தியப்படுத்தும் அம்சங்களைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். ஒரு கலாசாரத்தை, அதன் வரலாற்றைப் புரிந்து கொள்ள நிகழ்கால அடையாளங்கள் எப்போதும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டே இருக்கின்றன. கடந்த கால ஆவணங்களாக மியூசியங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு மியூசியத்துக்குக் கூடப் போக நான் ஆசைப்பட்டதே இல்லை. இப்போது வெளிநாடுகளில் எத்தனை மியூசியத்தைப் பார்க்க முடியுமோ அனைத்தையும் பார்க்க ஆசையாக இருக்கிறது. பாமர மொழியில் சென்னையில் மியூசியத்தை செத்த காலேஜ் என்பார்கள். நிஜமாகவே செத்த காலேஜ்தான். ஒரு மியூசியம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான ஏராளமான உதாரணங்கள் இந்தியாவில் இருக்கின்றன. வெளிநாடுகளில் அவை உயிர்ப்புடன் வாழும் காலேஜ்களாக இருக்கின்றன. மியூசியத்தில் நுழைவதற்கு சினிமா தியேட்டரை விட நீண்ட கியூ இருப்பதை இங்கே பார்க்கலாம். 
 
பழநியின் மகளும் என் நண்பருமான அகிலா பாரிஸ் நகரில் எந்த மியூசியத்துக்கெல்லாம் நாங்கள் செல்லவேண்டும் என்று முன்கூட்டியே திட்டம் தீட்டியிருந்தார். ஒரு குடும்பம் நினைத்தால் தன் குழந்தையை என்னவெல்லாம் ஆக்கலாம் என்பதற்கு அகிலா ஓர் உதாரணம். நகை வணிகத்தில் தலைமுறைகளாக ஊறிய அவர் குடும்பத்தில் எந்த தலைமுறையிலும் இசை நடனக் கலைஞர்கள் இருந்ததில்லை. ஆனால் பெற்றோர் பழநி, ஜோதிமணியின் கலை ரசனை சிறு வயது முதல் அகிலாவை இசையிலும் நடனத்திலும் ஈடுபடுத்தி இன்று முழு நேரக் கலைஞராகக்கி இருக்கிறது. மகளுக்காக அம்மாவும் சேர்ந்து இசையும் நடனமும் கற்றுக்கொண்டார்! அப்பாவின் தமிழ்த் தேசிய அரசியல் ஈடுபாடு, மகளை ஒரு சொல் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் உரையாடப் பழக்கியிருக்கிறது.மியூசியத்துக்கு நடந்து போய் வரும் வசதிக்கேற்ற தங்கும் விடுதியை அகிலா தேடிக் கண்டுபிடித்து பாரிசில் ஏற்பாடு செய்திருந்தார். அதனால் அடுத்தடுத்து இரு தினங்கள் நாங்கள் லூவ்ரு மியூசியத்துக்குச் செல்ல முடிந்தது. இருதினங்கள் போதாது. இரு மாதங்கள் தேவை! உலகிலேயே மிக அதிகமான மக்கள் சென்று காணும் மியூசியம் லூவ்ரு. 
மியூசியம் என்பது பழைய விஷயங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம். ஆனால் மியூசியமே பழையது என்றால் எப்படி இருக்கும்? லூவ்ரு மியூசியத்தின் வயது சுமார் 315 வருடங்கள்!

(தொடரும்)

Sunday, August 11, 2013

மணலிலிருந்து மின்சாரம் - ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX)

 
உலகின் பெருகிவரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மணலில் இருந்து மின்சக்தி பிறந்திருக்கிறது. அதைவிட மகிழ்ச்சி தருவது அதைக் கண்டுபிடித்திருப்பவர் ஓர் இந்தியர்; குறிப்பாக தமிழர்.
 
உலகின் எந்தக் கண்டத்திலும், கடற்கரைகளில் எளிதாகக் கிடைக்கும் மணல்தான் இதன் மூலப் பொருள். இதில் ஜிர்கானியம் ஆக்ஸைட் என்கிற வேதிப் பொருளைப் பிரித்து மின்சக்தியைத் தரும் ஃப்யூல் செல்லைத் தயாரிக்கலாம் என்பதை 1980ல் ஆர்தர் நான்ஸ்ட் என்பவர் கண்டுபிடித்திருந்தார். ஆனால் அதைத் தயாரிக்க பிளாட்டினம் போன்ற விலையுர்ந்த, எளிதில் கிடைக்காத பொருள்கள் தேவைபட்டதால் அது பிரபலம் ஆகவில்லை. இப்போது அதே முறையில் அதிகச் செலவில்லாமல் ‘ஃப்யூல் செல்லை’ உருவாக்கும் ஒரு முறையை பத்து ஆண்டுகள் கடின ஆராய்ச்சிக்குப் பின்னர் கண்டுபிடித்திருக்கிறார் ஆர்.கே. ஸ்ரீதர்.

நெல்லை மாவட்டத்துக்காரான ஸ்ரீதர் சென்னைப் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் (ஹானர்ஸ்)கையும், அணுசக்தி துறையில் மேற்படிப்பையும் முடித்தப் பின் தொடர்ந்து அமெரிக்க இல்லினாஸ் பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அரிசோனா பல்கலைகழகத்தில் விண்வெளி தொழில் நுட்பத் துறைத் தலைவராகப் பணியாற்றியபோது நாஸாவின் பல திட்டங்களுக்கு ஆலோசகர். நாஸாவின் செவ்வாய் பயணத்திட்டத்துக்கான மின் சக்தியை, ஃப்யூல் செல் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். ஆராய்ச்சி காலத்தில் அமெரிக்க அரசு சார்ந்த மற்றும் பல தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் திறம்படப் பணியாற்றியவர்.
 
‘பவுடரிலிருந்து பவர்’என்ற திட்டத்தின் மூலம் இவர் இதை மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க விரும்பினார். ஆனால் இவரது ஆராய்ச்சியைத் தொடர சோதனை உற்பத்திக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்பட்டது. ஆராய்ச்சியின் விபரம் அறிந்த கெலினர் பெர்கின்ஸ்ர் என்பவரின் நிறுவனம் (venture capitalist) பல மில்லியன் டாலர்கள் முதலீடாகத் தந்து ஸ்ரீதரின் தலைமையில் ஒரு தனி நிறுவனத்தை 2001 இல் தொடங்கியது. இந்த கெலினர்தான் ‘கூகிள்’, ‘ஈபே’ போன்ற நிறுவனங்களுக்கு முதலீடு தந்து தொடங்கியது. உற்பத்தித் தொடங்கியதும் தங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கோகோகோலா, பாங்க் ஆப் அமெரிக்கா, வால்மார்ட்... போன்ற பெரிய நிறுவனங்கள் அதிகளவில் பணம் தந்து இத்திட்டத்துக்கு உதவி இருக்கின்றன.  

பிளாப்பிகள் போல் இருக்கும் சதுர வடிவ அட்டைகளை அடுக்கி இணைத்து கறுப்பு வண்ணத்தில் ஒரு செங்கல் கட்டி வடிவத்தில் இருக்கும் ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX) தான் இவர்களது கண்டுபிடிப்பு. இது ஒரு வீட்டுக்கு ஒரு வருடத்துக்கான மின்சாரத்தைத் தரும். இதுபோல பல செங்கல்களை இணைத்து தேவைகளுக்கு ஏற்ப பெரிய பாக்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு ‘புளும்சர்வர்’என்று பெயரிட்டு இருக்கிறார். ஒரு பெரிய பிரிட்ஜின் சைஸிலில் இருக்கும் சர்வர் தரும் மின்சாரம் ஒரு சின்னத் தொழிற்சாலைக்குப் போதும். 
 
மின்சக்தியைச் சேமிப்பதோடு சுற்றுச் சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்ற தாகத்தில் எழுந்த முயற்சியின் வெற்றி இது" என்று சொல்லும் ஸ்ரீதரை ஃபார்ட்யூன் (Fortune)பத்திரிகை நாளைய உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தொலை நோக்குள்ள ஐந்து பேரில் ஒருவராகப் பட்டியல் இட்டிருக்கிறது .

ரமணன்

Tuesday, August 06, 2013

ஆடி அமாவாசை!

ம் மனத்துள் இருக்கிற கவலைகளையெல்லாம் போக்கி, மகிழ்ச்சியைத் தரக்கூடிய அற்புதமான மாதம்- ஆடி மாதம்! 'ஆடிப் பாடிக் கொண்டாடுதல்’ என நாம் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்தானே... அதேபோல, இந்த ஒரு வருடம் முழுவதும் முழுமையான இன்பத்துடனும் நிம்மதியுடனும் அமைவதற்கு, ஆடி மாதத்தில் நாம் செய்கிற பூஜைகளும் விரதங்களும் ஆணிவேராக, அஸ்திவாரமாக இருக்கும் என்றால், அது மிகையில்லை.
 
காலையில் இருந்து கடுமையாக உழைத்து, மாலையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தாருடன் குதூகலித்து, மறுபடியும் மறுநாள் எழுந்து வேலைக்குச் செல்வதுதான், மனித வாழ்வின் அன்றாட நடைமுறை. மாலை வேளையில் குடும்பத்தாருடன் பொழுதைக் கழிப்பதும், சின்னச் சின்ன வீட்டு வேலைகளைச் செய்வதும், அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்வதுமே, மறுநாள் உழைப்பதற்கான உடல் தெம்பையும் மனோதிடத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.அதுபோல, தேவர்களுக்கு மாலைப் பொழுதாக விளங்கக்கூடிய இந்த ஆடி மாதம் துவங்கி ஆறு மாதங்கள் வரையிலான காலத்தில், பண்டிகைகளும் விரதங்களும் நிறைந்திருக்கின்றன. அதை அனுஷ்டிப்பவர்களுக்குச் சகல சௌபாக்கியங்களும் தேடி வரும்.
 
ஆடி மாதப் பிறப்பை, தட்சிணாயன புண்ய காலம் என்று போற்றுவார்கள். நவக்கிரகங்களின் நாயகரான சூரிய பகவான், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குச் செல்கிறார். ஆடிப் பிறப்பின் மகத்தான நாள் இது. ஆடி மாதம் என்பது, பித்ருகாரகனான சூரிய பகவான், மாத்ருகாரகனான சந்திரனின் வீட்டில் அமர்கிற நன்னாள்.

சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாளையே அமாவாசை தினம் என்கிறோம். அந்த அமாவாசை நாள், முன்னோர்களுக்குக் கடன் அளிப்பதற்கும் தெய்வ வழிபாட்டுக்கும் சிறந்ததொரு தினமாக எப்படித் திகழ்கிறதோ, அதேபோல ஆடி மாதமானது மிக அற்புதமான, புனிதமான மாதமாகவும், முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுகிற மாதமாகவும் திகழ்கிறது. குறிப்பாக, ஆடி மாதத்தின் அமாவாசை தினம், மிகவும் புண்ணியம் வாய்ந்த நன்னாள்.

இந்த நாளில், அதிகாலையில் எழுந்து, அவரவர் வழக்கப்படி காலைப் பொழுதின் வழிபாடுகளையெல்லாம் செய்துவிட்டு, முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுதல் சிறப்பு. ராமேஸ்வரம், கங்கை, காவிரி, பவானி கூடுதுறை முதலான நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள், புண்ணிய நதிகளுக்குச் சென்று நீராடி, புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபட்டால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறலாம். 'அடடா! அப்படி நதிகள் எதுவும் எங்கள் ஊரிலோ ஊருக்கு அருகிலோ இல்லையே..?’ என்று எவரும் வருந்தத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே, முன்னோர்களை நினைத்துத் தர்ப்பணம் செய்யலாம்; தவறே இல்லை.


இன்னொரு விஷயம்... மற்ற மாதங்க ளிலும் மாதந்தோறும் அமாவாசை தினம் உண்டு என்பது நமக்குத் தெரியும். அதுபோன்ற அமாவாசை நாட்களில், பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களுக்கு உரிய கடனைச் செய்யாதவர்கள், கலங்கத் தேவையில்லை. இந்த ஆடி மாத நாளில், அமாவாசை தினத்தில் தவறாமல் நாம் செய்யும் முன்னோர்களுக்கான காரியங்களால் சகல சௌபாக்கியங்களும் நம் இல்லங்களில் பெருகும் என்பது உறுதி.

எப்பாடு பட்டேனும் மிகுந்த நம்பிக்கையுடனும் தூய்மையுடனும் தர்ப்பணத்தைச் செய்யுங்கள். இந்த உடலானது கடவுளாலும் தாய்- தந்தையாலும் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. நம் உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் பலமாக அடிபட்டிருந்தால், நம்மால் எந்தவொரு செயலையும் செவ்வனே செய்யமுடியாது. அப்படியிருக்க, இந்த உடலே இல்லாது போனால், நம் கர்மவினைகளை எவ்விதம் போக்கிக் கொள்வது என்று சிந்தியுங்கள். ஆக, கடவுளாலும் பெற்றோர்களாலும் நமக்குக் கிடைத்த இந்தப் பிறவிக்கு நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது அவசியமல்லவா?

தொலைதூரத்தில் ஒருவர் இருந்தாலும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசமுடிகிறது, இன்றைக்கு. அதேபோல், ரிஷி பெருமக்களால் வழங்கப்பட்டுள்ள இந்தக் கிரியைகளால், நம்மால் நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. நம் முன்னோர்களுக்கான கடனைச் செய்து அவர்களைத் திருப்திப்படுத்தினால், நமக்கு மட்டுமின்றி நம் சந்ததியினருக்கும் மிகப் பெரிய நன்மைகளும் பலமும் கிடைக்கும் என்பது உறுதி.


அதேபோல், பித்ருக்களுக்குக் கடன் அளிப்பது போலான காரியங்களில், தர்ப் பணம் செய்து வைக்கிற புரோகிதருக்கு தாம்பாளம் ஒன்றில் அரிசி, பயத்தம்பருப்பு, வெல்லம், வாழைக்காய், வெற்றிலை- பாக்கு, தட்சணை என நம்மால் இயன்றதை வழங்கி, அவர்களை நமஸ்கரிக்க வேண்டும். நம் முன்னோர்களின் பிரதிநிதிகளாக நம் வீட்டுக்கு வந்திருக்கும் அவர்களைத் திருப்திப்படுத்தினால், நம் பித்ருக்கள் மகிழ்வர் என்கின்றன சாஸ்திர நூல்கள்.
ஆடி அமாவாசை எனப்படும் புனித நாளில், அலுவலக வேலை இருந்தாலும், அரை நாளேனும் விடுமுறை எடுத்துக்கொண்டு, ஆற அமர பித்ருக்களுக்கான வழிபாட்டில் இறங்குங்கள். முழு ஈடுபாட்டுடன் பித்ருக்கடனை நிறைவேற்றுங்கள்.

இந்த முறை ஆடி அமாவாசை, செவ்வாய்க்கிழமை நாளில் வருகிறது. இது குடும்பத்தில் கூடுதல் சிறப்பையும் மேன்மையையும் தரும் என்கிறார்கள் பெரியோர். செவ்வாய்க்கிழமை மாலையில், ஸ்ரீபராசக்தியை, ஸ்ரீகாளியை வழிபடுவது தெய்விக ஆற்றலை அதிகரிக்கும். பௌமாவாஸ்யாம் என்று போற்றக்கூடிய இந்த செவ்வாய்க்கிழமையும் அமாவாசையும் வருகிற இந்த ஆடி மாதத்தில் வீட்டில் இருந்துகொண்டோ அல்லது அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டபடியோ 'ஓம் காள்யை நம:’ என 108 முறை சொல்வது மிக மிக நல்லது. அது, உங்களைத் தெளிவாக்கி, குடும்பத்தில் ஒற்றுமையையும் உத்தியோகத்தில் உயர்வையும் சமூகத்தில் அந்தஸ்தையும் தரும்.

பக்தர்களாகிய குழந்தைகளுக்குத் தேவியானவள் அருளக் காத்திருக்கும் அற்புதத் தருணம், இந்த நாள். எனவே, பித்ருக்களையும் தேவியையும் ஆராதிக்க மறந்துவிடாதீர்கள்.பராசக்தியே மாரியாகவும், பிடாரியாகவும், பச்சையம்மனாகவும், இன்னும் பல திருக் கோலங்களில் நம்மை வழிநடத்தி, பக்கத் துணையாக நிற்கிறாள். ''சமயபுரத்து மாரியம்மா, சஞ்சலங்கள் தீரும் அம்மா!'' என்றோ, அல்லது தங்களுக்கு எப்படி அவளிடம் பிரார்த்திக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்படிச் சொல்லி மனதார வேண்டுங்கள். சிவப்பு நிற மலர்களாலும், கூழ் போன்ற நைவேத்தியங்களாலும் குளிர்ந்து போய்விடுவாள் அவள்.வெற்றியைத் தருகிற விஜய வருடத்தில், முன்னோர்களுக்கு உகந்த ஆடி அமாவாசையானது, அம்பிகைக்கு உரிய செவ்வாய்க் கிழமையில் வருவது நம் பாக்கியம். இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வழிபடுங்கள்; வளம் பெறுவீர்கள்!ஆடிக்கிருத்திகை (31.7.2013, புதன், ஆடி 15), முருகப் பெருமானை வழிபட மிகச் சிறந்த நாள். ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை நட்சத்திரம், போற்றுதலுக்கு உரியது. சூரியன், சந்திரனின் ராசியில் அமர்ந்திருப்பதாலும், சிவசக்தியின் மைந்தனான கந்தகுமாரனை கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் ஆறு நக்ஷத்திரங்களின் கூட்டான கிருத்திகை நட்சத்திரமும், கடக ராசியில் குரு பகவான் உச்சம் பெற்று இருப்பதாலும், ஆடிக்கிருத்திகை எனும் அற்புத நாளில், முருகக் கடவுளை கண் குளிரத் தரிசித்து, மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.  

சூரனை சம்ஹாரம் செய்ய உதித்த குழந்தை குமரக் கடவுள். தந்தைக்கு உபதேசம் செய்தவர். படைப்புத் தொழிலைச் செய்து வரும் பிரம்மனுக்குப் பிரணவத்தின் பொருளை உணர்த்தியவர். இவரை வழிபட, நமக்கு அறிவு வளரும். குழந்தை வரம் வேண்டுவோர், இந்த நாளில் விரதமிருந்து வேண்டினால், விரைவில் பிள்ளை வரம் பெறலாம். குழந்தையைப் பெற்றவர்கள் அவர்களை நல்லவர்களாக வளர்ப்பதற்கும் முருகன் துணை நிற்பார்.

அன்று காலை முதல் மாலை வரை அன்னத்தைத் தவிர்த்து, பழங்கள் அல்லது மிதமான உணவை உட்கொள்ளுங்கள். கந்தனுக்குப் பிடித்த திருப்புகழ், கந்தர் சஷ்டி கவசம் போன்ற துதிகளைப் பக்தியுடன் சொல்லி வழிபடுங்கள். வேண்டுவதையெல்லாம் தந்தருள்வான் வேலவன்.

ஆடி அற்புதங்கள்! 
 
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம், குத்தகை, காணிக்கை மூலம் வரும் நெல்லை அளந்து வரவு-செலவு கணக்கைத் தாயாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தக் கோயிலின் முதல் தர்மகர்த்தாவாகப் பெரியாழ்வார் தொடங்கிய இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத் திருவிழாவில் ஒன்பது நாட்கள் உத்ஸவம் நடக்கும். உயரமான தேரில் ஒன்பது சக்கரங்கள், ஒன்பது கட்டுகள், ஒன்பது வடங்கள் என எல்லாமே 9 என்ற எண்ணிக்கையில் வருவதாக அமைந்திருக்கும்.

ஆடிமாத ஏகாதசியன்று பண்டரிபுரம் விட்டல் மந்திரிலிருந்து ஸ்ரீஞானேஸ்வரரின் பாதுகைகளைச் சுமந்துகொண்டு பல்லக்கு பவனி வருவது வழக்கம். மேலும் தேஹுவில் இருந்து ஸ்ரீதுக்காராம் பல்லக்கும், வேறு பல இடங்களிலிருந்து பல்லக்குகளும் பண்டரிபுரத்தில் பவனி வருவது பரவசமாக இருக்கும்.