Search This Blog

Tuesday, July 29, 2014

பழங்கள் பலன்கள்

 பழத்தைக் கொண்டாடியவர்கள் நம் 'பழ’ந்தமிழர்கள். 'முத்தமிழே...முக்கனியே...’ என கொஞ்சிப்பேசியவர்கள் நாம். இன்றைய பீட்சா, பர்கர் யுகத்தில் பழங்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதையே, நம் சந்ததியினர் பலர் மறந்துவிட்டார்கள். உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தருபவை கனிகள்.
பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது.

கோடையின் வெப்பத்தைத் தணிக்கத் தர்ப்பூசணி, கிரிணி என அந்தஅந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது. நம் ஊரில் கிடைக்கக்கூடிய சில முக்கியமான பழங்கள், அவற்றின் பலன்கள், எடுத்துக்கொள்ளும் முறைகள், தவிர்க்க வேண்டியவை பற்றி மூத்த டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி பட்டியலிடுகிறார். பலம் தரும் பழங்களை நம் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்வோம்.

ஒரு நாளைக்கு ஐந்து கப் அளவுக்கு காய்கறி- பழங்கள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


ஒருவரின் வயது, பாலினம் மற்றும் அவரது உடல் உழைப்பைப் பொருத்து பழங்கள் எடுத்துக்கொள்ளும் அளவு வேறுபடும். பொதுவாக எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்று அட்டவணையில் தெரிவித்துள்ளோம். இருப்பினும் அவரவர் கலோரி தேவையைப் பொறுத்து இதற்கு மேலும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

மாம்பழம் 

 

முக்கனிகளில் முதன்மையானது. பழங்களின் அரசன். மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச் சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலிபீனாலிக் ஃபிளவனாய்ட் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளன. இதுதவிர, வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியவை நிறையவே உள்ளன.

100 கிராம் மாம்பழத்தில், 765 இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. இது ஒரு நாளைக்குத் தேவையான அளவில் 25 சதவிகிதம். வைட்டமின் ஏ, பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம்.

வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது.


மாம்பழத்தில் உள்ள சிலவகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கும்.

மாம்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாமிரம் உள்ளதால், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து நிறைந்தது. எனவே, பெண்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

பலா

ஆற்றல், நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழம் இது. 100 கிராம் பலாப் பழத்தில், 95 கலோரிகளே உள்ளது. இது மிகவும் எளிதில் செரிமானத்தைக் கொடுக்கும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. குறைந்த அளவில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் பி உள்ளிட்ட ஃபிளவனாய்ட் உள்ளதால், பார்வைத் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இயற்கையான முறையில் கிடைக்கும் இந்த வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின்கள், நுரையீரல் மற்றும் சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.

பலாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. 100 கிராம் பலாப்பழத்தில், ஒருநாளுக்குத் தேவையான வைட்டமின் சி-யில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் உள்ளது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான பி5, நியாசின், ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம் போன்றவை இதில் அதிக அளவில் உள்ளன.

தாது உப்புக்களில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

வாழை
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. வாழையில் உள்ள 'ஃபரக்டோஸ்’ போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான உடனடி எனர்ஜி கிடைக்கும். உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்குத் தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.  

இதில் உள்ள வைட்டமின் பி6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும். இதயப் ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.


தாது உப்புக்களைப் பொருத்தவரையில், தாமிரம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை  குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

100 கிராம் வாழைப் பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றைச் செய்கிறது. பொட்டாசியம் சத்து அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதயத் துடிப்பைப் பாதிக்கச் செய்யும். எனவே, இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்வது அவசியம்.

மாதுளை

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித்தருவதால், மாதுளம் பழத்தை 'சூப்பர் ஃபுரூட்ஸ்’ என்று அழைக்கிறோம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் கொழுப்பைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும், இந்தப் பழத்தைத் தாரளமாகப் பரிந்துரைக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கிரானடின் பி (Granatin B) உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும் திசுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதால், தோலில் சுருக்கம், கருவளையம் போன்ற சரும பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

கொலஸ்ட்ரால் கொஞ்சமும் இல்லாத பழம். 100 கிராம் மாதுளை 83 கலோரியைத் தருகிறது. 4 கிராம் நார்ச்சத்து இதில் இருப்பதால், நல்ல செரிமானத்துக்கும், செரிமான மண்டல இயக்கத்துக்கும் மிகவும் நல்லது.


வைட்டமின் சி சத்தும் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.  தொடர்ந்து இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு, ப்ராஸ்டேட் புற்றுநோய், ப்ராஸ்டேட் பெரிதாகுதல், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறையும். மேலும் இதில் ஃபோலிக் அமிலம் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுப்போக்கு, நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.

கொய்யா

குறைந்த விலையில் கிடைப்பதால், 'ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தும். இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்க்கப்பட்டு, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.

100 கிராம் கொய்யாவில் 228 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது ஒரு நாள் தேவையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். அதிக அளவில் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய் கிருமித் தொற்று, சில வகையான புற்றுநோய்த் தாக்குதலில் இருந்து உடலைக் காக்கிறது. மேலும் ரத்தக் குழாய்கள், எலும்பு, தோல், உடல் உள் உறுப்புக்கள் போன்ற உறுப்புக்களின் அடிப்படைக் கட்டமைப்பு புரதமான கொலாஜன் சேர்க்கைக்கு அவசியமாக இருக்கிறது.


வைட்டமின் சி-யைத் தவிர வைட்டமின் ஏ-வும் இதில் நிறைவாக இருப்பதால், கண், தோல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. வாழைப் பழத்தைப்போலவே இதிலும் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. பொட்டாசியமானது செல்களின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்கும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் மிகவும் அவசியம்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு மிகவும் பாதுகாப்பான உணவு. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக செயல் இழப்பு, இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அன்னாசிப் பழம்

தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாசிப் பழம் உலகம் முழுக்கப் பரவ கப்பல் மாலுமிகள் ஒரு மிகப் பெரிய காரணம். அவர்கள் எங்கு பயணத்தை மேற்கொண்டாலும் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஸ்கார்வி நோயைத் தவிர்ப்பதற்காக, அன்னாசிப்பழத்தை எடுத்துச்செல்வது வழக்கம். இதில் இருந்தே இந்தப் பழத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.

உடலுக்குத் தேவையான சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைவாகவே உள்ளன. திசுக்கள் வீக்கம் அடைவதைத் தடுக்கிறது. புற்றுநோயை எதிர்க்கும் ரசாயனப் பொருட்கள் உள்ளன. அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது எலும்பு தொடர்பான பிரச்னைகள், செரிமானக் குறைவு, குடலில் புழு தொந்தரவு போன்றவை வராமல் தடுக்கும்.


மாங்கனீஸ் தாதுப்பொருள் இருப்பதால், எலும்பு உறுதித்தன்மைக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். வைட்டமின் சி நிறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். குமட்டல், வாந்தியைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மார்னிங் சிக்னஸ் நேரத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிறு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். செரிமானத் திறன் அதிகரிக்கும்.

குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற தொந்தரவு ஏற்படலாம். சிலருக்கு அன்னாசிப்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால், அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள்  தவிர்ப்பது நல்லது.

பொட்டாசியம் அளவு குறைவு என்பதால் சிறுநீரக செயலிழப்பு பிரச்னை உள்ளவர்கள் இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

ஆப்பிள்

நம் ஊரில் விளையக்கூடிய பழம் இல்லை என்றாலும் நம் வாழ்வில் இடம்பெறும் பழங்களுள் ஒன்றாகவே மாறிவிட்டது ஆப்பிள். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவந்தால், டாக்டரிடம் செல்லவேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள்.

சுவை தரும் ஆப்பிள் பழத்தில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இது மனிதனின் இயல்பான வளர்ச்சி, ஆரோக்கியமான வாழ்வுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். 100 கிராம் பழத்தில் 50 கலோரியே உள்ளது. நுரையீரல் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். பித்தப்பை கல்லைக் கரைத்து வெளியேற்றும். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்பைக் குறைத்து ஆரோக்கியம் தரும்.


உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, மிகச் சிறந்த உணவாக ஆப்பிள் கருதப்படுகிறது. சர்க்கரை நோய், மெட்டபாலிக் சிண்ட்ரோம், இதய நோய்கள், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை வராமல் தடுக்கவும் ஆப்பிள் உதவுகிறது.  

ஆப்பிள் கொட்டையில் சிறிதளவு நச்சுத் தன்மை இருப்பதால், கொட்டையை அகற்றிவிட்டு சாப்பிடவேண்டும்.  இதனால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமையைத் தடுக்கலாம்.  

குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவருக்கும் ஏற்றது.

பப்பாளிப் பழம் 


பப்பாளி, வைட்டமின் ஏ- சத்துக்கு மிகப் பெரிய ஆதாரமாக விளங்குகிறது. 100 கிராம் பழத்தில் 1094 இ.யு. வைட்டமின் ஏ உள்ளது. பார்வை மற்றும் ஆரோக்கியமான சருமத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 போன்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிக அளவில் உள்ளன. மிககுறைவான அளவிலேயே சர்க்கரை உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பப்பாளியில் உள்ள பாப்பின் என்ற ரசாயனம் கர்ப்பத்தில் உள்ள சிசுவைப் பாதிக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது நல்லது என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலத்தில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி எடுத்துக்கொள்வது நல்லது.

இதன் நிறைவான ஊட்டச்சத்துக்கள், செரிமானத்துக்கு உதவும் திறன், மருத்துவ குணநலன்கள் காரணமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடவேண்டிய பழம். கண் முதல் முடி வரை உடலின் அனைத்துப் பகுதிக்கும் தேவையான சத்துக்களை அள்ளித் தரும் பழம் இது.

பப்பாளிப் பழத்தின் மென்மையான சதைப்பகுதியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதனால் வயிறு செரிமானத்துக்கு உதவி, மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.

இதில், வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதில் உள்ள ரசாயனங்கள் நுரையீல், வாய் புற்றுநோய்க்கான வாய்ப்பைப் பெருமளவில் குறைக்கின்றன.

திராட்சை 

திராட்சையைப் 'பழங்களின் அரசி’ என்கின்றனர். பச்சை/வெள்ளை, சிவப்பு/பர்பிள், கருப்பு/கருநீலம் எனப் பல நிறங்களில் கிடைக்கிறது.

இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்னைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு. மேலும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும்.

திராட்சையில் உள்ள ஒரு வகையான ரசாயனப் பொருள் குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயில் இருந்தும், இதய ரத்தக் குழாய் நோய்களில் இருந்தும், நரம்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்தும், வைரல் - பூஞ்சை நோய்த்தொற்றில் இருந்தும் நம்மைக் காக்கும் தன்மைகொண்டது. இந்த ரசாயனப் பொருள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, ரத்த குழாய்களைத் தளர்வுறச் செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

யூரிக் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும் தன்மை திராட்சைக்கு உண்டு என்பதால், சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படுகிறது.

வைட்டமின் சி, ஏ, கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் ஓரளவுக்கு உள்ளன. தாமிரம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயுப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆரஞ்சு
 
வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதியை பூர்வீகமாகக்கொண்டது. முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் இந்தியாவில் இருந்து ஒரு ஆரஞ்சு பழக் கன்றை எடுத்துக்கொண்டுபோய் தங்கள் நாட்டில் நட்டு, விளைவித்தனர். இதன் பிறகு 1518-ல் கிரிஸ்டோபர் கொலம்பஸ் மூலம் இது அமெரிக்காவுக்குப் பரவியது. தற்போது உலக அளவில் பயன்படுத்தப்படும் பழங்களில் ஒன்றாக ஆரஞ்சும் விளங்குகிறது.
 
கலோரி குறைவான இந்தப் பழத்தில் கொழுப்புச் சத்து இல்லை. ஆனால், நார்ச்சத்து பெக்டின் என்ற ரசாயனம் அதிக அளவில் உள்ளது. இந்த பெக்டின் குடலில் நச்சுக்கள் சேருவதைத் தவிர்த்து குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் ஆரஞ்சுப்பழம், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
 
மற்ற சிட்ரஸ் பழங்களைப்போல் இதிலும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒரு நாள் தேவையில் 90 சதவிகித வைட்டமின் சி-யை இந்தப் பழம் தருகிறது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் இணைந்து சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது.
 
தோல் மற்றும் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய இதுபோன்ற வைட்டமின்களை எடுத்துக்கொள்ளும்போது, அது நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

தாது உப்புக்களைப் பொருத்தவரை பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆரஞ்சுப் பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

சப்போட்டா

 

மாம்பழம், வாழையைப் போலவே அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பழம் சப்போட்டா. இதில் சர்க்கரை மிக எளிய வடிவத்தில் இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும்.

100 கிராம் சப்போட்டாவில் 83 கலோரிகள் உள்ளன. அதேபோல் நார்ச்சத்தும் இதில் அதிக அளவு இருப்பதால், மலச்சிக்கலைப் போக்கி, குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. டேனின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நிறைவாக உள்ளது. இது அமிலங்களை நீர்த்துப்போகச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் செல்களில் வீக்கம், வைரஸ் - பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. வயிற்றுப்போக்கு, ரத்தக் கசிவுவைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

ஓரளவுக்கு வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், கர்ப்பிணிகள் இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளான குமட்டல் வாந்தியைத் தடுக்கும். பாலூட்டும் பெண்களும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

தர்பூசணி

கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளிர்ச்சிதரும் தர்பூசணியைத் தேடிச் செல்கிறோம். தாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி.

தர்பூசணியில் 95.7% நீர்ச்சத்து இருப்பதால், உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்வு அளிக்கிறது. மேலும் இதயத்தைக் குளிரச் செய்து ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பைப் போக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.இதில் மிகமிகக் குறைந்த அளவிலேயே கலோரி உள்ளது.

வைட்டமின் ஏ சத்து இதில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் ஏ அளவில் 19 சதவிகிதம் உள்ளது. வயிறு, மார்பகம், ப்ராஸ்டேட், நுரையீரல், கணையப் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள லைகோபீன் (Lycopene) என்ற வேதிப்பொருள் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள சிட்ருலைன் (Citrulline) என்ற வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

சிறுநீரைப் பெருக்கி நீர்க்கடுப்பு, சிறுநீர் பாதை நோய்த் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஆஸ்துமா, சளிப் பிரச்னை உள்ளவர்கள் தர்பூசணிச் சாறை லேசாக சூடு செய்து குடிக்கலாம். அனைவருக்கும் ஏற்ற பழம் இது.

சாத்துக்குடி
நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது கையோடு வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்குத்தான் முதல் இடம். அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது சாத்துக்குடி.

செரிமான மண்டலத்தைத் தூண்டக்கூடிய ஃபிளவனாய்ட், சாத்துக்குடியில் அதிக அளவில் உள்ளது. இதனால் வயிறு மற்றும் செரிமானக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மலமிளக்கியாக மட்டுமல்லாது வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்கலாம்.

இதில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. சாத்துக்குடியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். இதில் உள்ள லெமனாய்ட்ஸ் என்ற ரசாயனம் பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
 
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. வெதுவெதுப்பான நீரில் சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் எடை குறையும். மேலும் கொழுப்பைக் குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இதில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இருப்பினும், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
இதில் உள்ள வைட்டமின் சி சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்துக்கு இயற்கைப் பொலிவை தருகிறது. இதனால் தோல் சுருக்கம் உள்ளிட்ட சருமப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களைச் சாப்பிடுவது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், பக்கவாதம், சில வகையான புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

 பழங்களில் பொட்டாஷியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

 வயிறு நிரம்பிய உணர்வைத் தந்தாலும் இதில் கலோரி மிகமிகக் குறைவாகவே உள்ளது. மேலும் கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை. இதனால் பழம் சாப்பிட்டால் பருமன் கவலை இல்லை.

 பருக்கள் வருவதைத் தடுக்க நினைப்பவர்கள், வைட்டமின் ஏ சத்து நிறைந்த காய்கறி- பழங்களை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

 வைட்டமின் சி உள்ள காய்கறி- பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இதனைச் சூடுபடுத்தும்போது வைட்டமின் சி குறைந்துவிடும் அல்லது அழிந்துவிடும்.

 சூரிய வெளிச்சம், காற்று கூட வைட்டமின் சி-க்கு எதிராக செயல்படக்கூடியவை. எனவே, வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்களை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது.

கீரையும் சத்துக்களும்!


ஆரோக்கிய உணவில் முதலிடம் வகிப்பது கீரைதான். இதை உணவில் தினமும் சேர்த்து வந்தால் நோய் நொடி அண்டாது. ஒவ்வொரு கீரைக்கும் உள்ள சத்துக்களை காண்போம்.

முருங்கைக் கீரை - விட்டமின் ஏ,பி,சி, கணிசமான அளவு இரும்புச் சத்து உள்ளது. செரிமானம் குறைந்த குழந்தைகள், இதய நோயாளிகள் இரவில் சாப்பிடக் கூடாது. கண் பார்வையைத் தெளிவாக்கும் குணம் கொண்டது. தாது பலம் பெருகும்.

வெந்தயக் கீரை- இரும்புச் சத்து, விட்டமின் ஏ,சுண்ணாம்பு சத்து கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும் மூல வியாதிக்காரர்களுக்கும் நீரிழிவு நோயாளிக்கும் ஏற்றது. சூட்டைத் தணித்து உடலுக்கு வலுவூட்டும்.

அகத்திக் கீரை- விட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்பு சத்து கொண்டது. வாய் மற்றும் வயிற்றில் புண் உள்ளர்வர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடனடி நிவாரணம் கிடைக்கும். மற்ற மருந்துகள் சாப்பிடும் போது இதைச் சாப்பிடக் கூடாது. வயதானவர்கள் சூப் பதத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

மணத்தக்காளி- விட்டமின் பி12, மற்றும் ஏரி போப்வின் கொண்டது. வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு நல்லது, உடல் சூட்டைக் குறைக்கும். காயத்தை ஆற்றும். வயிற்றில் பூச்சிகள் உருவாகாமல் தடுக்கும்.

வல்லாரை- செரடோனியம் கொண்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது செய்து தர வேண்டும். மூளைக்கு வலுவூட்டி நினைவாற்றலைப் பெருக்கும் தன்மை கொண்டது.

புதினா- இரும்பு, சுண்ணாம்பு சத்து, விட்டமின்சி, விட்டமின் டி கொண்டது, ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. மூல நோய், தொண்டையில் ரணம். குடல் புண் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது. பசியையும் நாக்கின் ருசியையும் தூண்டக் கூடியது. செரிமானத்துக்கு உதவும்.

கொத்துமல்லி- விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் சி கொண்டது. எல்லோருக்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். நாவின் ருசியைத் தூண்டும்.

முளைக்கீரை- தாது உப்புகள் மற்றும் விட்டமின் ஏ கொண்டது. உடல் தளர்ச்சியைப் போக்கும். சதைப் பிடிப்பு இல்லாதவர்கள் அடிக்கடி சாப்பிடலாம். ஆஸ்துமா நோயாளிகள். தலையில் நீர் கோத்து இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

சந்திரா

மேரிகோம் - பாக்ஸர் பிரியங்கா!

மனைவி, அம்மா என எதிலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமலேயே... குத்துச்சண்டைப் போட்டிகளில் அசத்தல் வெற்றிகளைக் கண்டு, உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் மேரிகோம். இதற்காக தன் சொந்த வாழ்க்கையில் இவர் சந்தித்த வலிகள் ஏராளம். வலிகள் நிறைந்த இவருடைய வாழ்க்கை, 'மேரிகோம்' என்ற பெயரில் ஹிந்தி திரைப்படமாக, செப்டம்பர் 5-ம் தேதியன்று வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியான மூன்று நாட்களுக்குள், 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் 'யூடியூப்’பில் ரசித்திருக்கிறார்கள். சஞ்ஜய் லீலா பன்சாலி தயாரித்துள்ள இப்படத்தை, ஓமங் குமார் இயக்கியிருக்கிறார்.


மேரிகோம் வேடத்தில் நடிப்பதற்காக... கிட்டத்தட்ட உடல் மற்றும் மனதளவில் மேரிகோமாகவே மாறியிருக்கிறார், நடிகை பிரியங்கா சோப்ரா. இதற்காக பிரியங்கா எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு உண்மையாகவே சல்யூட் வைக்கலாம். மேரிகோமின் வீட்டிலேயே தங்கி, அவரிடம் நிறைய ஆலோசித்து, அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு படத்தில் அதே உணர்ச்சியுடன் நடித்திருப்பதை டிரெய்லரிலேயே புரிந்துகொள்ள முடிகிறது. படத்தில் பாக்ஸராக வரும் பிரியங்கா, இதற்காக தன் முகத்தில் நிஜமாகவே வெட்டுக் காயத்தைப் பார்த்திருக்கிறார்.

'தமிழன்' படத்தில் 'உள்ளத்தைக் கிள்ளாதே' பாடலில் இடுப்பை நளினமாக அசைத்து சாதுவாக நடித்த பிரியங்காவா இது!


Sunday, July 27, 2014

மதுரம்... மதுரம்!

ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்துதான் காயும், பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும் போது நறுமணத்தையும் பழமாக இருக்கும் போது மதுரமான சுவையையும் நமக்குத் தருக்கின்றன. இந்த பழம் மதுரம் ஆவதற்கு முன்பு எப்படி இருந்தது? பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும் இருந்து அதன் பின்னரே மதுரமாகிறது. மதுரம் என்பது தான் சாந்தம். சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் போய்விடுகிறது. பழத்தில் மதுரம் நிரம்பிய உடனே கீழே விழுந்து விடுகிறது. அது போல் இதயத்தில் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லாப் பற்றும் போய்விடும். புளிப்பு இருக்கும் வரை பற்றும் இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காம்பிலும் காயிலும் ஜலம் வரும். அதாவது மரமும் காயும் மரத்திலிருந்து விடுபட விரும்பவில்லை. ஆனால் நிறைந்த மதுரமாக ஆகிவிட்டால் தானாகவே பற்றுப் போய்விடும். பழம் தானே விழுந்து விடும்.
 
படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் மதுரமான ஒவ்வொருவரும் இப்படியே ஆனந்தமாக சம்சார விருட்சத்திலிருந்து விடுபட்டு இருப்பார்கள். பழமாக ஆவதற்கு முன் எப்படிப் புளிப்பும் துவர்ப்பும் வேண்டியிருக்கின்றதோ, அது போல் காமம், வேகம், துடிப்பு எல்லாமும் வேண்டியவைதான் போலிருக்கிறது. புளிப்பு இருக்க வேண்டிய சமயத்தில் புளிக்க வேண்டும். துவர்ப்பு இருக்க வேண்டிய சமயத்தில் துவர்க்க வேண்டும். ஆனாலும், அந்தந்த நிலையோடு நிற்காமல், பிஞ்சு அனவரதமும் பழமாகிக் கொண்டே இருப்பது போல் நாமும் மதுரமான அன்பை நினைத்துக் கொண்டே இருந்தால், மோக்ஷத்தை வெளியில் தேட வேண்டாம். எந்தக் காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ -அப்படி இருந்தால் தானாக மோக்ஷம் என்கிற மதுரநிலை வந்து விடும்.

(காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அருளுரையிலிருந்து..)
 

அருள்வாக்கு - மூளையும் இதயமும்


மூளைக்குத் தெரிகிறது வேறே; அதற்கும் ஆதாரமான உயிருக்குத் தெரிகிறது வேறே. கோட்டான் கண்ணுக்கு வஸ்துக்கள் ராத்திரியில்தான் தெரிகிறது. பகலில் அதற்கு எதுவும் தெரிவதில்லை. மநுஷக் கண்ணுக்குப் பகலில்தான் தெரிகிறது. ராத்திரியில் தெரிவதில்லை. மூளைக்கு அநுபவம் தெரிவதில்லை. அதற்குத் தர்க்கத்தையொட்டி விசாரிக்கிற அறிவு வாதம்தான் தெரியும். அநுபவம் தெரிகிற ஹ்ரு தயத்துக்கு அறிவு வாதம் தெரிவதில்லை. ஜீவனின் ஸார ஸத்யமான உயிரைத்தான் ஹ்ருதயம் என்பது. ஆனாலும் ஹ்ருதயம் லேசில் திறந்து கொள்வதில்லை. எதனாலோ மநுஷ்யர்களுக்கு மூளைப் பெருமையையே பெரிசாக வைத்திருக்கிறது. அதனால் எதுவுமே முதலில் புத்தியில், மூளையில் உறைத்தாக வேண்டியிருக்கிறது. 

ஹ்ருதயமே அநுபவிக்கவேண்டிய ஆத்யாத்மிக விஷயங்களைக் கூட மூளை ஸரியாயிருக்குமா, இருக்காதா என்று எடை போட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறது. ஸரியாயிருப்பதாக அது முடிவு பண்ணினால் அதற்கப்புறமே, இப்படி நாம் அறிவினால் முடிவு பண்ணினது போதாது. இதனால் அந்த விஷயத்தின் லக்ஷ்ய மான ப்ரயோஜனம் நமக்குக் கிடைத்துவிட வில்லை. உதாரணமாக, ஆத்மா ஸச்சிதாநந்த ஸ்வரூபமாகத்தான் இருக்க வேண்டுமென்று இத்தனை வேதாந்த புஸ்தகங்களைப் படித்து, குரு உபதேசங்களைக் கேட்டு புத்தியினால் புரிந்துகொண்டபோதிலும் நமக்கும் ஸத்தும் தெரியலை, சித்தும் தெரியலை, ஆனந்தமும் தெரியலை. அசடு மாதிரி துக்கப்பட்டுக் கொண்டுதான் கிடக்கிறோம்.  

அதனால் புத்திக்குள் போனதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை ஹ்ருதயத்துக்குள் இறக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். மூளை, தான் பண்ண வேண்டியதையெல்லாம் பண்ணியும் ஸாரமான ப்ரயோஜனத்தை அடைய முடியாமல் களைத்து விழுந்த அப்புறம் தான் ஹ்ருதயத்தைத் திறந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் பிறக்கிறது. இது மநுஷ்ய ஜீவனுக்குத் தன்னுடைய மூளை விசேஷத்தினால் உண்டான விபரீதமான பலன்!

அவ்வளவாக புத்தி போதாமலிருக்கிற எளிய ஜீவன்களைவிட புத்திமான்களுக்குத்தான் இதன் கஷ்டம் ஜாஸ்தியாக ஏற்படுகிறது. அவர்கள் (எளிய ஜீவர்கள்) புத்தியால் குடையாமல், ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ’புத்திசாலி’ களான நாம்தான் திண்டாடுகிறோம். ஏதோ சில ஸமயத்தில் நமக்கும் ‘இதையெல்லாம் நம்முடைய மூளையால் எடை போட்டுத் தீர்மானம் பண்ணிவிட முடியாது’ என்று தோன்றுகிறது. எல்லாம் நம்முடைய மூளையின் ஜூரிஸ்டிக்ஷனுக்குள் (ஆணையெல்லைக்குள்) வந்து விட முடியுமா என்று தோன்றுகிறது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

27 கோடி லைக்ஸ்!

பெண் என்பவள், அன்பின் வடிவம். ஆனால், இந்த உலகில் அவளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அளவே இல்லை! இதையும் ஒரு பாடல் மூலமாகவே எடுத்துச் சொல்லி, இதுவரையிலும் 27 கோடிக்கும் அதிகமானோரை ஈர்த்திருக்கிறார் ரிஹான்னா. இவர், பெண் பாப் பாடகிகள் வரிசையில், முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் உலகப் பிரபலம். தானே நடித்து, இவர் பாடும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. 2003-ல் தன்னுடைய இசைப் பயணத்தை ஆரம்பித்த ரிஹான்னா, இதுவரை விருதுகளை வெல்வதிலும் சாதித்துக்கொண்டிருக்கிறார்!

'பில்போர்ட்' (Billboard) இசைப்பத்திரிகை அறிவித்த 100 சிறந்த பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ரிஹான்னாவுக்கு, உலகம் முழுக்க  கோடிக்கணக்கான ரசிகர்கள். இதுவரையில், 7 கிராமி விருதுகள், 8 அமெரிக்க இசை விருதுகள், 22 பில்போர்ட் விருதுகள், 2 பிரிட் விருதுகள் எனக் குவித்திருக்கிறார். இந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் 'ஐகான்' (Icon) இசை விருதும் கிடைத்துள்ளது. இவருடைய ஆல்பங்கள், இது வரையிலும் 3 கோடிக்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளன.

துடிப்பாகவும் இளமையாகவும் இருக்கும் 26 வயது ரிஹான்னா, பாடிய Man Down என்ற பாடல்தான், யூடியூப் மூலமாக 27 கோடிக்கும் அதிகமானோரை தொட்டிருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைவருடனும் துள்ளித்திரிந்து அன்பை வெளிப்படுத்தி வாழ்பவள் அந்தப் பெண். அவளை ஓர் ஆண் வல்லுறவுக்கு இரையாக்க, அவனை பழி வாங்குகிறாள். இதில் தத்ரூபமாக நடித்துப் பாடியிருப்பார் ரிஹான்னா.

 

மென்மையான பெண்களை, தவறான ஆண்கள் எப்படி ஆக்ரோஷமானவர்களாக மாற்றுகிறார்கள் என்பதை, நுணுக்கமான காட்சிகளால் நடித்து, பாடி அதிர்வலைகளைக் கூட்டியிருக்கும் ரிஹான்னாவுக்கு சல்யூட் வைக்கலாம்.

இந்தப் பாடலை நீங்களும் பார்க்க...


உங்களில் யார் 'கணித’ ராமானுஜன்?

'தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றார் வள்ளுவப் பெருந்தகை. அப்படிப் புகழுடன் தோன்றவேண்டுமானால், அதற்குக் கல்வியறிவு மிகவும் அவசியம். ஒருவர் கல்வியறிவு பெற்றவராகத் திகழவேண்டுமானால், புதனின் பரிபூரண அனுக்கிரகம் வேண்டும்.
 
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரிடமுமே ஏதேனும் ஓர் ஆற்றல் நிறைந்திருக்கிறது. சிலருக்குக் கவி பாடும் திறன், சிலருக்கு ஓவியம் வரைவதில் திறமை, சிலருக்குக் கணிதத்தில் நிபுணத்துவம், சிலருக்கு எழுத்தாற்றல், சிலரிடம் பேச்சாற்றல், இன்னும் சிலருக்குக் கற்பிக்கும் திறமை என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான திறமை இருப்பதை நாம் காணலாம். இவ்வாறான திறமைகளுக்கு, ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் அமைந்திருப்பது அவசியம். புகழ், பெருமை, அரசியல் செல்வாக்கு, பாரம்பரியப் பெருமை... இவை அனைத்தையும் அருள்பவர் புதன் பகவான்.
 
ஆத்மகாரகன் என்று சொல்லப்படும் சூரியனுடன் சேர்ந்து புதன் அமர்ந்திருத்தல் பெரும் யோகமாகும். கிரக மார்க்கத்தில் பிரதட்சணமாய் வலம் வரும் புதன், தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் வீட்டைப் பார்வையிடுவார். புதன் தன் காலம் முழுவதும் பலன் தருபவர். அதேபோல், அடுத்த ராசிக்குள் பிரவேசிப்பதற்கு ஏழு நாள்களுக்கு முன்பே பலன் தருபவர்.

புதன், ஒருவரின் ஜாதகத்தில் தனித்துக் காணப்பட்டாலோ, அல்லது பாப கிரகங்களின் சேர்க்கை பெற்று காணப்பட்டாலோ, அவரால் ஜாதகருக்குப் பெரிய அளவில் பலன்களை அளிக்கமுடியாது. சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் மட்டுமே அவரால் நற்பலன்களை வழங்கமுடியும்.

 

புதன் சூரியனுடன் இணைந்து இருப்பது புதாதித்ய யோகம் எனப்படும். இது மிகவும் விசேஷமான யோகமாகும். இந்தச் சேர்க்கையானது மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி போன்ற இடங்களில் அமைந்திருப்பின், குறிப்பிடத்தக்க நற்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார். நவரசங்களின் நாயகன் புதன். புதன் மிதுனத்தில் ஆட்சியாகவும், கன்னியில் ஆட்சி மற்றும் உச்சமாகவும் இருப்பார். தன்னுடைய சொந்த ராசியிலேயே உச்சம் பெறும் ஒரே கிரகம் புதன் மட்டுமே! இவ்வாறாக, புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற ஜாதகர், தான் இருக்கும் இடத்தில் முதன்மை பெற்றுத் திகழ்வார்.

பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்று பத்ரயோகம் என்பதாகும். லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில், அதாவது 1, 4, 7, 10-ல் புதன் இருப்பதே பத்ரயோகம். இந்த யோகம் அமையப்பெற்ற ஜாதகர், கம்பீரத் தோற்றமும் பேச்சாற்றலும் கொண்டவராக இருப்பார்.

புதனும் சூரியனும் லக்னத்தில் சேர்ந்திருப்பின், அந்த ஜாதகர் வசீகரத் தோற்றம் பெற்றிருப்பதுடன், ஜோதிடத் துறையில் புகழ்பெற்று விளங்குவார். அத்துடன் இத்தகைய  ஜாதக அமைப்பு கொண்ட அன்பர்கள், கணிதத்தில் ராமானுஜன் போல் சிறந்து விளங்குவர்.

புதன்- சூரியன் இரண்டாம் பாவத்தில் சேர்ந்திருப்பின், கவிதை, காவியங்கள் படைத்துப் புகழ் பெறுவார். மூன்றாம் இடத்தில் புதன்- சூரியன் இணைந்து காணப்பட்டால், ஜாதகர் பத்திரிகைத் துறையில் பல அரிய சாதனைகள் செய்து, புகழுடன் விளங்குவார். புதன்- சூரியன் நான்காம் இடத்தில் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பார். ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்தச் சேர்க்கையானது பக்தி மார்க்கத்தில் ஜாதகரை ஈடுபடுத்தி, புகழ்பெறச் செய்யும். புதன்- சூரியன் 6-ம் இடத்தில் சேர்ந்து காணப்பட்டால், அந்த ஜாதகர் எவரிடமும் கைகட்டி வேலை செய்ய விரும்பாமல், சொந்தத் தொழில் செய்து, வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார். 7-ம் இடத்தில் புதாதித்ய யோகம் பெற்ற ஜாதகருக்கு உறவுமுறையில்தான் வாழ்க்கைத்துணை அமையும். ஆயுள் ஸ்தானமான 8-ம் இடத்தில் புதன்- சூரியன் இணைந்து காணப்பட்டால், அந்த ஜாதகர் மற்றவர் மனத்தை எளிதில் புரிந்துகொண்டு செயல்படும் திறமையும், தன் காரியத்தை எப்படியும் முடித்துக்கொள்ளும் ஆற்றலும் கொண்டிருப்பார். பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் புதன்- சூரியன் சேர்க்கை இருப்பின், அயல்நாடு சென்று பணம் சம்பாதிப்பார். 10-ம் இடத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து காணப்பட்டால், நடிப்பு, எழுத்துத் துறைகளில் புகழுடன் விளங்குவார். லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து காணப்படும் ஜாதகர் அரசியலில் பிரபலமாகத் திகழ்வதுடன், சம்பாதித்த பணத்தைச் சேமிப்பதில் அக்கறையாக இருப்பார். புதன்- சூரியன் 12-ம் இடத்தில் அமைந்திருப்பின், அந்த ஜாதகருக்குப் பெரும்பாலும் இரவு நேரப் பணியே அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் புதன் பகையோ நீசமோ பெற்றிருப்பின், அதற்காக ஜாதகர் வருத்தப்படத் தேவையில்லை. உரிய பரிகாரங்களைச் செய்துகொள்வதன் மூலம் நன்மை பெறலாம்.

புதனின் அதிதேவதையான மஹாவிஷ்ணுவையும், ஸ்ரீ ஹயக்கிரீவரையும் புதன்கிழமைதோறும் வழிபடுவதுடன், நவகிரகங்களில் புதன் பகவானை வழிபடுவதும் நலம் தரும்.
 

ஸியோமி எம்.ஐ.3

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் என்கிற தாரக மந்திரத்தை வைத்து பெரும் நிறுவனங்களுக்கு போட்டி தர வந்திருக்கிறது ‘ஸியோமி’ (Xiaomi) என்னும் சீன நிறுவனம். இது சீனாவின் ‘ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. காரணம், ‘ஆப்பிள்’ போல தனது ஸ்மார்ட் போன்களில் சிறந்த தரத்தையும் தோற்றத்தை யும் தருவதனால் சீனர்கள் இப்படி பெருமையாக அழைக்கிறார்கள். ஆனால், ஒரு ஆப்பிள் போனின் விலையில் குறைந்தபட்சம் நான்கு ஸியோமி ஸ்மார்ட் போன்களை வாங்கிவிடலாம்.

இப்படிப்பட்ட ஸியோமி நிறுவனம் தனது மார்க்கெட்டை இந்தியாவில் தொடங்க இருக்கிறது. முதல்கட்டமாக தனது ‘எம்ஐ3’ என்கிற ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவைத் தொடங்கி இருக்கிறது. இந்த போன் 5 இன்ச் அகலமான 1080X1920 பிக்ஸல் 441 ppi என்னும் மிகத் துல்லியமான HD டிஸ்ப்ளேயைக் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் போன் குவால்காம்
(Qualcomm) MSM8274AB Snapdragon 800 Quad-core 2.3GHz Krait 400 பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது.


மேலும், ‘Adreno 330’ என்ற கிராஃபிக்ஸ் பிராசஸரைக் கொண்டுள்ள இந்த போன், 2GB ரேமைக் கொண்டு இயங்குகிறது. 16GB இன்டர்னல் மெமரி வசதியோடு, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘MIUI’ வெர்ஷன் 5-யைக் கொண்டு இயங்குகிறது. ‘MIUI’ என்பது ஸியோமி நிறுவனத்தின் பிரத்யேக ஓஎஸ் ஆகும்.


 
ரூபாய் 13,999 விலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போன், 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவை LED ப்ளாஷ் வசதியோடு பெற்றுள்ளது. இந்த கேமரா மூலம் முழுநீள HD வீடியோவை ரிக்கார்டு செய்யலாம். தவிர, 2.0 மெகாபிக்ஸல் முன்புற கேமராவையும் பெற்றுள்ளது.
3G, GPRS/EDGE, WiFi, ப்ளூடூத் போன்ற அடிப்படை வசதிகளோடு வரும் ஸியோமி எம்ஐ3, 3050mAh மிகச் சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. 25 மணிநேரம் வரை டாக்டைம் மற்றும் 500 மணி நேரம் வரை ஸ்டாண்ட்-பையைத் தரும். இந்த போன் மூலம் 21 மணி நேரம் 3G நெட்வொர்க் மூலம் பிரவுஸிங் செய்யலாம்.

தற்போதே ஒரு லட்சம் முன்பதிவுகளைத் தொட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் பல சலசலப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Monday, July 21, 2014

பட்ஜெட் 2014 வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகைகள்

மத்திய பட்ஜெட்டில் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் அறிவிப்புகள் இல்லை என்றாலும், நடுத்தர மக்களுக்கு வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகைகள் நிறையவே இருக்கின்றன.

அடிப்படை வருமானவரி வரம்பு, வீட்டுக் கடன் வட்டி, வருமான வரிவிலக்கு முதலீடு போன்றவற்றில் தலா ரூ.50,000 சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.5000 முதல் அதிகபட்சமாக ரூ.15,000 வரியில் மிச்சமாகும்.

மேலும், கடந்த ஆண்டு 5 லட்ச ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.2000 வரித் தள்ளுபடிஇந்த ஆண்டும் தொடரும். இதெல்லாம் மாதச் சம்பளக்காரர்களுக்கு சந்தோஷமான செய்தியே.

  எதில் முதலீடு செய்யலாம்?
அதிகரித்து வழங்கப்பட்டிருக்கும் 50,000 ரூபாய் எதில் லாபகரமாக முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.

ஏற்கெனவே 80சி பிரிவு முதலீட்டு வரம்பான 1 லட்சம் ரூபாயைத் தாண்டி, வருமான வரி கட்டிக் கொண்டிருப்பவர் களுக்கு அரசின் இந்தச் சலுகை நிச்சயம் லாபகரமாக இருக்கும். இந்த ஆண்டில் உங்களின் வருமானம் அதிகரிக்காது. கடந்த ஆண்டு வரி எதுவும் கட்டவில்லை என்கிறபோது, அரசின் புதிய சலுகையால் பலன் எதுவும் இல்லை. நடப்பு ஆண்டில் உங்களின் வருமான அதிகரிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கூடுதல் வரிச் சலுகை ரூ.50,000க்கான முதலீட்டை மேற்கொள்ளவும்.  நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்து, அதற்கான திரும்பச் செலுத்தும் அசலில் 80சி பிரிவில் வரிச் சலுகை பெற்றுவருகிறீர்கள் என்றால், நடப்பு ஆண்டில் கூடுதலாக 50,000 ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும். அப்படி வாய்ப்பு இருப்பவர்கள் அதனை முதலில் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

இப்படி கழிக்க வழியில்லை என்கிற நிலையில் முதலீட்டை தேர்வு செய்யும் போது, இந்தத் தொகை உங்களுக்கு எவ்வளவு நாட்கள் கழித்து தேவை, உங்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், பங்குச் சந்தையைப் புரிந்து கொண்டிருக்கும் அளவு போன்றவற்றின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்ளவும்.

   விபிஎஃப் 

சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகையுடன் விபிஎஃப்ல் முதலீடு செய்வதன் மூலம் 50,000 ரூபாய் வரிச் சலுகையை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விபிஎஃப் என்பது அதிகபட்சம் சம்பளத்தில் பிடிக்கப் படும் பிஎஃப் தொகை அளவுக்கு இருக்கும். பிஎஃப்க்கு உள்ள  8.5% வட்டி இதற்கும் அளிக்கப்படும். வட்டிக்கும் வரி கிடையாது என்பது கூடுதல் லாபம்.

ஒருவர் 50,000 ரூபாயை (மாதம் சுமார் ரூ.4,165) விபிஎஃப்ல் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அவர் மொத்தம் 7.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார். இது வட்டியுடன் 15 லட்சம் ரூபாயை தாண்டி இருக்கும்.

   பிபிஎஃப் 

தற்போதைய நிலை யில் பிஎஃப்ஐவிட பிபிஎஃப்க்கு அதிக வட்டி (8.7%) கிடைக்கிறது. மேலும், பட்ஜெட்டில் பிபிஎஃப் முதலீட்டு வரம்பு ரூ.1.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதால், இதனை முதலீட்டுகாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இந்த முதலீடு 15 ஆண்டுகளுக்கானது என்பதை மனத்தில் கொண்டு முதலீட்டை ஆரம்பிக்கவும். இடையில் தேவைப்பட்டால் கடன் வாங்கிக்கொள்ள முடியும்.  சம்பளத்தில் பிஎஃப் பிடிக்காமல் இருப்பவர்கள் அல்லது குறைவாக பிடிக்கப்படு பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் இதில் முதலீட்டை அதிகரித்து வருமான வரியை மிச்சப்படுத்தலாம்.

இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது. விபிஎஃப் போலவே, இதில் முதலீட்டை மேற்கொண்டால் 15 ஆண்டுகள் கழித்து ரூ.15.36 லட்சம் கிடைக்கும்.  

  இஎல்எஸ்எஸ் 

அடுத்துவரும் ஆண்டுகளில் பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுவதால், பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இஎல்எஸ்எஸ்ல் முதலீட்டை அதிகரிப்பது லாபகரமாக இருக்கும். இந்த முதலீடு மூலம் கிடைக்கும் டிவிடெண்ட்டுக்கு வரி கிடையாது. மேலும், குரோத் ஆப்ஷனை தேர்வு செய்திருக்கும்பட்சத்தில் மூன்றாண்டு கழித்து யூனிட்களை விற்று லாபம் பார்க்கும்போது, அந்த லாபத்துக்கு வரி கிடையாது. இதில் குறைந்தபட்சம் எஸ்ஐபி மூலம் ரூ.500 கூட முதலீடு செய்ய முடியும்.

ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர்கள் இதில் முதலீட்டை மேற்கொள்ளலாம். கடந்த 3 , 5 ஆண்டுகளில் டாப் ஃபண்டுகள் ஏறக்குறைய 20% வருமானத்தைத் தந்திருக்கின்றன.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்! 

60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள், இதில் முதலீடு செய்யப்படும் முதலீட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும். தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 9.2% வட்டி கிடைக்கும். ஐந்தாண்டு லாகின் காலம் இருக்கிறது. வட்டி வருமானத்துக்கு வரி கட்டவேண்டி இருக்கும்.  
  
   என்பிஎஸ் 

ஓய்வூதியம் வேண்டும் என்று நினைக்கிறவர்கள், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். இதில் ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீடு 6,000 ரூபாய். இதிலிருந்து முதலீட்டை பணி ஓய்வுக்குப் பிறகுதான் எடுத்துக்கொள்ள முடியும். முதலீடு ஒருவரின் வயதுக்கேற்ப ஈக்விட்டி, கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும் என்பதால் நீண்ட காலத்தில் ரிஸ்க் குறைந்து நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

  வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் 

ஐந்தாண்டுகள் முதிர்வை கொண்ட வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீட்டை அதிகமாக் குவதன் மூலமும் வரிச் சலுகை பெற முடியும். ஐந்தாண்டு முதலீட்டுக் காலத்தைக் கொண்ட இதற்கு 8.75  9% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.25  0.5% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டில் ரிஸ்க் இல்லை. அதேநேரத்தில் வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். இது அவரவரின் வருமான வரம்புக்கேற்ப 10%, 20%, 30% என இருக்கும். அதிக வருமான வரம்பில் இருப்பவர்கள் அதிக வரி கட்ட வேண்டி இருக்கும் என்பதால் அவர்கள் இந்த முதலீட்டை தவிர்ப்பது நல்லது.

லைஃப்  இன்ஷூரன்ஸ்  பாலிசிகள் ஆயுள் காப்பீடு பாலிசிகளில் (யூலிப் மற்றும் எண்டோவ் மென்ட் பாலிசிகள்), வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்வது லாபகரமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஐஆர்டிஏன் புதிய விதிமுறைப்படி, யூலிப் பாலிசிகள் மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகளில் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அதிகரிக்கப் பட்டுள்ளதால் 56% வருமானம் கிடைத்தாலே பெரிய விஷயம்.  

ரிஸ்கை பரவலாக்க நினைப்பவர்கள், கூடுதலாகத் தரப்பட்டிருக்கும் 50,000 ரூபாய்க்கான முதலீட்டை விபிஎஃப், இஎல்எஸ்எஸ், என்பிஎஸ், பேங்க் எஃப்டி போன்றவற்றில் பிரித்து மேற்கொள்ளலாம்.

வீட்டுக் கடன் வட்டியில் சலுகை 

குடியிருக்கும் வீட்டை வீட்டுக் கடனில் வாங்கி யிருந்தால் திரும்பச் செலுத்தும் வட்டியில் அளிக்கப்படும் சலுகை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையால் யாருக்கு லாபம் என்று பார்ப்போம்.

சென்னை, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற நகரங்களை யொட்டி இருக்கும் புறநகரங்களில் ரூ.25  40 லட்சம் ரூபாய்க்குள் வீடு வாங்குபவர்களுக்கு இதனால் லாபகரமாக இருக்கும்.

இந்தச் சலுகையை முதல் ஆண்டில் முழுமையாகப் பெற, ஒருவர் குறைந்தது ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி இருப்பது அவசியம்.

அதாவது, ஒருவர் ரூ.20 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும்விதமாக 10.50% வட்டியில் வாங்கியிருந்தால், முதல் ஆண்டில் வட்டிக்கு மட்டும் செல்லும் தொகை ரூ.2,01,520. அந்த வகையில் ரூ.2 லட்சம் வட்டிக்கான வரிச் சலுகையை முழுமையாக பெற முடியும்.

அடுத்துவரும் ஆண்டுகளில் வட்டிக்குச் செல்லும் தொகை குறையும்போது, இந்தச் சலுகையை முழுமையாகப் பெற முடியாமல் போகும்.

அதுவே, கடன் தொகை ரூ.25 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என்கிறபோது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இந்தச் சலுகையைத் தொடர்ந்து பெற முடியும்.
மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கும் அதேநேரத்தில், அவர்களின் முதலீட்டின் வருமானத்தை பாதிக்கும் சில மாற்றங் களும் செய்யப்பட்டிருக்கின்றன.

கடன் ஃபண்டுகளுக்கு மூலதன ஆதாய சலுகை குறைப்பு 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கடன் ஃபண்டு களின் யூனிட்களை ஓராண்டுக்குமேல் வைத்திருந்து விற்றால், அது நீண்ட கால முதலீடாகவும் அதற்கு 10 சதவிகிதம் அல்லது பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20 சதவிகிதம், இதில் எது குறைவோ அதை வரியாகக் கட்டினால் போதும் என்று இருந்தது.  
இப்போது இது மாற்றப்பட்டுள்ளது நீண்ட காலம் என்பது  36 மாதங்களாகவும், பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்ட வேண்டும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த  பட்ஜெட் அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (எஃப்எம்பி) திட்டங்கள்தான். இந்த முதலீட்டில், 366 நாட்களுக்கு மேற்பட்ட முதிர்வுக்கு இரண்டு ஆண்டுகளின் பணவீக்க விகித சரிக்கட்டலை மேற்கொண்டு, அதன்பிறகு 20% வரி கட்டினால் போதும் என்று இருந்தது. இப்போது மூன்று ஆண்டுகள் முதிர்வுக்கு மட்டுமே நீண்ட கால மூலதன ஆதாயம் அனுமதிக்கப்படுகிறது.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை விட  எஃப்எம்பி வருமானம் அதிகமாக கிடைக்கவே பெரும் பணக்காரர்கள், அதில் அதிகமாக  முதலீட்டை மேற்கொண்ட னர். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை மொத்தம் ரூ.9.74 லட்சம் கோடியை நிர்வகித்து வருகிறது. இதில் ரூ.6.95 லட்சம் கோடி கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள். அதாவது, சுமார் 70% கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாக இருக்கின்றன.

கடன் சார்ந்த ஃபண்ட் முதலீட்டில் சுமார் ரூ. 2 லட்சம் கோடி எஃப்எம்பி முதலீடு ஆகும். இந்த முதலீட்டுக்கு வரிச் சலுகை குறையும்போது இந்த முதலீடு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டாக மாறும். அந்தத் தொகையைக் கொண்டு வங்கிகள் தாராளமாக கடன் வழங்கும் என்பது நிதி அமைச்சரின் திட்டம். அப்போது பொருளாதாரம் வளரும் என்பது அவரின் கணிப்பு.


எஃப்எம்பி திட்டத்தில் முன்போல் வரிச் சலுகை இல்லை என்பதால் ஓரிரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், அண்மைக்காலத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டிய தொகையை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளித்துள்ளதாக தகவல்.

 இனி இவற்றை பின்பற்றவேண்டியது நீங்கள்தான்!

எல்ஜி ஜி3


எல்ஜி ஜி3 என்கிற ஸ்மார்ட்  போனை அறிமுகப் படுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம். இது ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டு இயங்குகிறது. இன்டர்னல் மெமரி 16ஜிபி போன் ரூ.46,990 விலையிலும், 32ஜிபி போன் ரூ.49,990 விலையிலும் இந்திய மார்க்கெட்டில்  ஜூலை 25-ம் தேதி கிடைக்கும் எனவும், இதற்கான ஆர்டரை ஜூலை 21 முதல்  ஆன்லைனில் ஆரம்பிக்கலாம் என்றும் எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 5.5 இன்ச் அகலமான 1440x2560 பிக்ஸல் QuadHD டிஸ்ப்ளே 534 ppi  என்னும் மிகத் துல்லியமான டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இதனால் உலகத்தின் மிகத் துல்லியமான டிஸ்ப்ளேவை கொண்ட போன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த போன், இரண்டு வகையான ரேமை கொண்டு இயங்குகிறது. அதாவது, 16ஜிபி மொபைல் 2ஜிபி ரேம் வசதியோடு வரும். 32ஜிபி மொபைல் போன் 3ஜிபி ரேம் வசதியோடு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். 16ஜிபி, 32ஜிபி இன்டர்னல் மெமரி வசதியோடு வரும் இந்த போனை எஸ்டி கார்டு மூலம் 128ஜிபி வரை விரிவுபடுத்தலாம்.

ந்த போனில் உள்ள 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவை எல்இடி பிளாஷ் வசதியோடு பெற்றுள்ளது. மற்றும் 2.1 மெகாபிக்ஸல் முன்புற கேமராவையும் பெற்றுள்ளது. இந்த இரு கேமரா மூலமும் முழு நீள ஹெச்டி வீடியோவை ரெக்கார்டு செய்யலாம். இந்த கேமரா சக்திவாய்ந்த லேசர் ஆட்டோஃபோகஸைக்  கொண்டுள்ளது.

3G, GPRS/EDGE, WiFi, ப்ளூடூத் போன்ற வசதிகளோடு வரும்  இந்த போன் 4ஜி தொழில்நுட்பத்தைக்  கொண்டுள்ளது. 3000mAh பேட்டரியைக் கொண்டு இயங்கும் இந்த  போன் மற்ற ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் சிறந்த பேட்டரி சேமிப்பை தரும் என்கிறது எல்ஜி நிறுவனம். 

லேட்டஸ்ட் தொழில்நுட்பம், பவர்புல் பேட்டரி, துல்லியமான டிஸ்ப்ளே, சீரான டிசைன் என பல சிறப்புகளைக்கொண்ட இந்த போன்  வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது!

கால்பந்தாட்ட வீரர் நெய்மர்


எத்தனை சாதனைகளைச் செய்தாலும் அதற்குப்பின்னால் பல சோதனைகளும்  இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர்.

1992ல் பிரேசிலில் உள்ள சா பாலோவில் பிறந்தார் நெய்மர். அப்பா கால்பந்தாட்ட வீரர் என்பதால், மகனுக்கும் இயல்பாகவே  கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் வந்தது. தனது ஏழாவது வயதில்  போட்டியில் கலந்துகொண்டு ஆடும் வாய்ப்பைப் பெற்றார். அதன்பின் பிரேசிலின் திறமைமிக்க இளம் கால்பந்தாட்ட வீரராக உருவானார்.

நெய்மரது திறமை ஐரோப்பிய கால்பந்தாட்ட லீக்குகள் வரை எட்டியது. 14 வயதில் லீக் அணிகளில் சேர்ந்த இவர், 17வது வயதில் ஐரோப்பிய கால்பந்தாட்ட லீக்கில் சிறந்த வீரருக்கான விருதை ஆரம்பத் தொடரிலேயே வென்றார்.


2011ல் நடைபெற்ற கோப்பா அமெரிக்கத் தொடரில் பிரேசில் அணி தோற்றது. அனைத்து ஊடகங்களும் பிரேசிலின் தோல்விக்குக் காரணம் காட்டியது நெய்மரைதான். இந்த விமர்சனத்தைக் கேட்டு நெய்மர் மனம் தளர்ந்துவிடவில்லை. அடுத்தடுத்த தொடரில் அசத்த ஆரம்பித்தார். 2013ல் பிரேசில் அணி கன்பெடரேஷன் கோப்பையை வென்றதன் மூலம் ஊடகங்களின் வாயை அடைத்தார் நெய்மர். 2014ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்திய பிரேசிலின் நட்சத்திர நாயகன் நெய்மர்தான். அதற்கு ஏற்றாற்போல் முதல் ஆட்டத்தில் பிரேசில் வீரர்கள் சேம் சைடு கோல் அடிக்க, தோல்வியின் பிடியில் இருந்த பிரேசிலை, அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து வெற்றி பெறவைத்தார்.

காலிறுதி போட்டியில் முதுகெலும்பு உடைந்து வெளியேறினார். அரையிறுதியில் அவர் இல்லாத குறையைப் போக்க, பிரேசில் அணிவகுப்பில் அவரது முகம் பதித்த டீஷர்ட்டை வீரர்களும், அவரது முகம் பதித்த முகமூடியை ரசிகர்களும் அணிந்து நெய்மரை நெகிழவைத்தனர். ஆனாலும், நெய்மர் இருந்த காலிறுதி ஆட்டம் வரை மட்டும்தான் பிரேசிலால் ஜெயிக்க முடிந்தது. அவர் இல்லாத  அரையிறுதியிலும், மூன்றாவது இடத்துக்கான போட்டியிலும் தோல்வி அடைந்தது.

தோல்விக்குக் காரணம் என்று தன்னை இகழ்ந்தவர் களையே, அவர் இல்லாததுதான்  தோல்விக்குக் காரணம் என்று கூறவைத்த நெய்மர், ஒரு நல்ல ரோ(கோ)ல் மாடல்தான்!

Saturday, July 19, 2014

அருள்வாக்கு - அன்பு என்பது என்ன?


அன்பு என்பது என்ன? ஒரே பரமாத்மாதான் எல்லா உயிர்களுமாக ஆகியிருக்கிறது. பல உயிர்களாகும்போது ஒன்றையன்று வேறுபடுத்தி வைத்து மாய ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறது. இதிலேயே எதிர் டைரக்ஷனில், ரொம்பவும் உத்தமமான அம்சமாக, வேறுபட்டவற்றை ஒன்றாக ஐக்யப்பட வைக்கவும் பரமாத்மா அநுக்ரஹித்திருக்கிற forceதான் அன்பு. பொதுவாக மற்றவரிடமிருந்து நமக்கு ஒன்றைப் பெற்று லாபமடைவதாகவே மநுஷ்ய மனப்பான்மை இருக்கும். அதற்கு எதிர் மருந்தாக நம்மை இன்னொருவருக்குக் கொடுத்து அதில் நிறைவு பெறச் செய்வது அன்பு. ஆசைக்கும் அன்புக்கும் இதுதான் வித்யாஸம்: நாம் ஒன்றிடம் ஆசையாயிருக்கிறோமென்றால் நமக்கு அதனிடமிருந்து ஸந்தோஷம் தேடிக் கொள்கிறோம்; அன்பாயிருக்கும்போது நம்மால் அதற்கு ஸந்தோஷம் உண்டாக்குகிறோம். ஆசை என்பது வாங்கல்; 
 
அன்பு - கொடுக்கல். ‘நமக்கு’ ஸந்தோஷம் என்பது அந்த உயிரிடம் ரூப ஸம்பத்து, குண ஸம்பத்து- திரவிய ஸம்பத்து கூடத்தான் - இவை அல்லது இந்த மாதிரி வேறு எதை நாம் அதனிடமிருந்து பெற்றால் நமக்கு ஸந்தோஷம் உண்டாகுமோ அவை இருந்தால் தான் ஏற்படும். இவற்றுக்காகவே அதனிடம் நமக்கு உண்டாகிற பற்றுதான் ஆசை. தப்பாக அதை அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
 
அன்பு என்பது அந்தஃகரணம் உசந்த நிலையில் உள்ளபோது உண்டாவது. அப்போது மனஸும் புத்தியும் அஹங்காரத்திற்குள்ளே இழுக்கப்பட்டு, அந்தஃகரணம் ஹ்ருதயத்திற்கு இடம் மாறி அங்கேயிருந்து வேலை செய்யும். அம்பாள் அன்பு மயமானவளாகையால் அவளுடைய ஸ்ருஷ்டியிலே ரொம்பவும் க்ரூரமான ஜீவராசிகளுக்குங் கூட ஒவ்வொரு ஸமயத்திலாவது அன்பு உண்டாகுமாறு அநுக்ரஹித்திருக்கிறாள். ஸாதனையால் மனஸும் புத்தியும் பண்பட்டவர்களுக்கோ எப்போதுமே அன்பு சுரக்கக்கூடிய நிலைவாய்க்கிறது. அந்த கரணத்தின் பெர்மனென்ட் ஸ்தானமாகவே அப்போது ஹ்ருதயம் ஆகிவிடும்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Sunday, July 13, 2014

இ-ஃபைலிங் - வரிக் கணக்கு தாக்கல்:

ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்யவேண்டியது கட்டாயம்.

இ-ஃபைலிங் செய்ய ஆரம்பிக்கும்முன், பான் கார்டு, ஃபார்ம் 16 (கம்பெனி வழங்கியது), ஃபார்ம் 16 ஏ (சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்காக டிடிஎஸ் பிடித்துக் கட்டப்பட்ட விவரம்), வங்கிக் கணக்குகளின் மொத்த பரிமாற்ற விவரம், மூலதன ஆதாய விவரம், வீட்டு வாடகை வருமானம், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்கள் போன்றவற்றைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

இ-ஃபைலிங் செய்ய இந்திய வருமான வரித் துறையின் இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/ க்கு சென்று பான் எண் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் லாகின் செய்து உள்ளே சென்றுவிடலாம். சரியான படிவத்தைத் தேர்வு செய்து, வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

டவுன்லோடு செய்த படிவத்தில் விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து அப்லோடு செய்ய வேண்டும். உங்களின் டிஜிட்டல் கையெழுத்தை இ-ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக ஐடிஆர் V  படிவம் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்றால் ஐடிஆர் V படிவத்தை பிரின்ட் எடுத்து கையெழுத்துப்போட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு சாதாரண தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அக்னாலெட்ஜ்மென்ட் இல்லாமல் இணைத்து அனுப்ப வேண்டும்.

Income Tax Department - CPC
Post Bag No.1, Electronic City Post Office,
Bengaluru, Karnataka - 560 100
e-Filing: 1800 4250 0025
+91-80-26500025

ஆன்லைனில் இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது, டிஜிட்டல் கையெழுத்து பயன்படுத்தவில்லை என்றால் இந்தப் படிவத்தை பெங்களூரில் உள்ள சிஇசி அலுவலகத்துக்கு 120 நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இது பெங்களூரு அலுவலகத்துக்குச் சென்று சேராத வரையில் நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தது கணக்கில் வராது.

இந்த இ-ஃபைலிங் செய்ய சுமார் 25 நிமிடங்களே ஆகும். தவிர, இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்ட் விரைவில் கிடைக்கும். மேலும், ஆடிட்டர்கள் மூலமும் இ-ஃபைலிங் செய்ய முடியும். இந்த வேலையை செய்துதர பல இணையதளங்கள் இருக்கின்றன.

 

அவை கட்டணமாக சுமார் 250 ரூபாய் தொடங்கி குறிப்பிட்ட தொகை வரை வாங்குகின்றன. மொத்தமாக ஒரு நிறுவனத்தில் உள்ள அனைவரும் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தக் கட்டணத்தில் சலுகை அளிக்கிறார்கள்.இவர்களிடம் உங்களின் படிவம் 16 கொடுத்தால் போதும். அவர்கள் உங்கள் சார்பாக இ-ஃபைலிங் செய்துவிடுவார்கள். பெங்களூரில் உள்ள மத்திய பரிசீலனை மையத்துக்கு (சி.பி.சி) ஐ.டி.ஆர். V கூட அவர்களே அனுப்பிவைத்துவிடுவார்கள்.

தடைக்கல்லும் படிக்கல்லே - ஆல்ட்ரின்!

உலகம் எப்போதும் முதலில்  வருபவரையே ஞாபகத்தில் வைத்திருக்கும். இரண்டாவதாக வருபவரை எளிதில் மறந்துவிடும். என்றாலும், சாதித்த விஷயத்தில் கிஞ்சித்தும் குறையாதவர்களாகவே அவர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சாதனை மனிதர்தான் ஆல்ட்ரின்.

930-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் பிறந்தார் ஆல்ட்ரின். படிப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய ஆல்ட்ரினுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசை. ஆனால், அவரது அப்பா அவரை பொறியியல் படிப்பில் சேர்த்துவிட்டார். பொறியியல் படித்து முடித்துவிட்டு, விமானப் படையில் சேர்ந்தார். கொரிய போரில் தனியாக விமானத்தில் பறந்து எதிரி விமானங்களைத் தூள்தூளாக்கினார்.


அதன்பின் நாசாவில் சேர்ந்த ஆல்ட்ரின்,  விண்வெளிக்குச் செல்லும் பயணக் குழுவில் பல மாத சோதனைக்குப் பின் தேர்வு செய்யப்பட்டார். 1966-ம் ஆண்டில் 5 மணிநேரம் விண்வெளியில் நடந்தார் ஆல்ட்ரின். விண்வெளியில் ஒரு மனிதர் நடந்த அதிகபட்ச தூரமாக அப்போது அது கருதப்பட்டது.

பின்னர் அப்போலோ 2 விண்கலத்தில் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் செல்லும் வீரராகத் தேர்வானார்.  ஆல்ட்ரின்தான் முதலில் நிலவில் கால்வைத்து இறங்குவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது ஆடையில் ஏற்பட்ட பழுது காரணமாக இரண்டாவது நபராக நிலவில் கால் வைத்தார். ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்வைத்த அடுத்த சில நொடிகளில் ஆல்ட்ரினும் கால் வைத்துவிட்டாலும், உலகம் ஆம்ஸ்ட்ராங்கை நினைவில் வைத்துக்கொண்ட அளவுக்கு ஆல்ட்ரினை வைத்துக்கொள்ளவில்லை.

இதனால் ஆல்ட்ரின் மனமுடைந்து போனாலும், சாதனையாளன் என்றும் முடங்கிப்போக மாட்டான் என்று அதிலிருந்து மீண்டு வந்தார். ரிட்டர்ன் டு எர்த் என்ற சுயசரிதை மூலமும், பல சுயமுன்னேற்ற நூல்கள் மூலமும் சோம்பிக்கிடந்த அமெரிக்க இளைஞர்களை புதிய சாதனை படைக்கத் தட்டியெழுப்பினார்.

நீங்கள் முதலாவதாக வருகிறீர்களோ, மூன்றாவதாக வருகிறீர்களோ, சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆல்ட்ரின் வாழ்க்கை நிச்சயம் ஆல் இஸ் வெல் சொல்லும்!

நிதி அமைச்சர்!

முதல் பட்ஜெட்டிலேயே நடுத்தர மக்களின் மனம் குளிர வைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. மாதச் சம்பளக்காரர்களின் வரி வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தி சந்தோஷப்பட வைத்திருக்கிறார். வீட்டுக் கடன் வட்டிக்கான சலுகையில் 50 ஆயிரம் ரூபாயும், 80சி முதலீட்டு வரம்பில் 50 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி மகிழ்ச்சியைக் கூட்டியிருக்கிறார். இதனால் நடுத்தர மக்களிடம் இன்னும் கொஞ்சம் பணம் புழங்கும். சேமிப்பு பெருகவும், முதலீடு அதிகரிக்கவும் இதனால் வழிபிறக்கும்.

இன்ஷூரன்ஸ் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் அந்நிய முதலீடு 49 சதவிகிதமாக உயர்த்தியிருப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறார். சிறு தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்கக் கடன் வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் கோடியில் நிதித் தொகுப்பு அமைத்திருப்பதன் மூலம் இன்னும் பல ஆயிரம் தொழிலதிபர்கள் உருவாவார்கள். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக நெடுஞ்சாலை, துறைமுகம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, விவசாய மேம்பாட்டுக்காக பல திட்டங்கள், நாடு முழுக்க ஆங்காங்கே புதிய கல்வி நிலையங்கள், குறைந்த விலையில் வீடு, குடிநீர் வசதி என தன்னால் முடிந்த அளவுக்கு நிதியைத் தந்திருக்கிறார்.

பட்ஜெட்டை மேம்போக்காகப் பார்த்தால் பல விஷயங்கள் பாராட்டும்படி இருந்தாலும், பொருளாதாரத்தை அதிவேக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. நிதித் துறை உள்பட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டுவருவார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிருக்கிறது.
 

கழுத்தை நெரிக்கும் மானியத்தைக் குறைக்க  எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதை அதிகப்படுத்தி இருக்கிறார். திருமணத்துக்கு  மொய் எழுதுவதுபோல, பல திட்டங்களுக்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார். ஆனால், மோடியின் மனம் கவர்ந்த திட்டங்களுக்கு மட்டும் அதிக நிதியை தந்திருக்கிறார். நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவிகிதத்தில் வைத்திருக்க, வரி வசூலிப்பு 17.7% அதிகரிக்கும் என சொல்லியிருப்பது, இன்றைய பொருளாதாரச் சூழலில் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே!முப்பது ஆண்டுகளுக்குப்பின், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த மோடி அரசு, தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டது. இந்த பட்ஜெட் வரவிருக்கும் முக்கிய மாநிலத் தேர்தல்களை கருத்தில்கொண்டு போடப்பட்ட பட்ஜெட் மாதிரி தோன்றுகிறது. கடந்த ஆண்டுகளில் இதேபோல செயல்பட்ட காங்கிரஸ் அரசுக்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன வித்தியாசம்?