Search This Blog

Sunday, November 23, 2014

திரிவேணி சங்கமம்!

இன்றைய கண்டுபிடிப்புகளால் உலகியல் சுக சாதனங்கள் கணக்கின்றிப் பெருகிக்கொண்டே போவதில், எத்தனை பெற்றாலும் திருப்தி பெறாமல் மேன்மேலும் அதே தேட்டத்தில் ஓடி, சாந்த வாழ்வு என்னவென்றே அறியாதவர்களாக இருக்கிறோம். ‘சுவரை வைத்தே சித்திரம்’ என்றபடி உடல்நலனை ஓம்பத்தான் வேண்டுமாயினும், ‘சித்திரம் தீட்டவே இச்சுவர், உள்ளத்தின் உயர்வான உயிரின் நிறைவே அச்சித்திரம்’ என் பதையும் நாம் மறவாது பொன்னேபோல் மனத்தில் பொதிந்து கொள்ள வேண்டும். 

மீண்டும் மீண்டும் நலிவும் அழுக்கும் உறும் உலகியல் சுவரைக் கெட்டிப்படுத்துவதும் அழகுபடுத்துவதுமான ஓயா முயற்சியிலேயே ஈடுபட்டு, அதோடு சேர்ந்துவரும் போட்டி - பொறாமைப் போராட்டத்தில் அமைதியிழந்து, மேன்மேலும் தேவை தேவையெனும் குறைவாழ்வில் வாணாளை வீணாளாக்குவதோடு முடிந்து விட்டோமாயின், நாம் ஆறறிவு பெற்றும் அறியாதாராகவே முடிந்த பரிதாபமாகத்தான் ஆகும். 

குறைவாழ்வை நிறைவாழ்வாகவும், போராட்டப் பொறாமையை அன்பு வழியில் நின்று பெரும் அமைதியாகவும், வந்து வந்து மறையும் தாற்காலிக இன்பத்தை நிரந்தர ஆனந்தமாகவும் மாற்றும் உள்ளத்தின் உயர்வு என்ற சித்திரத்தைச் சுவரின் மீது தீட்டிக் கொள்வதற்கு உபாயம் காண்பதே நாம் செய்ய வேண்டுவது.

உள்ளவுயர்வை நல்கவல்ல அந்த உபாயம் நல்லொழுக்கமாம் தர்மமும், தெய்வ பக்தியும், ஆத்ம சிந்தனையும் திரிவேணியாகக் கலக்க வேண்டும்.

கேட்ஜெட் : பிசினஸ் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்!

தற்போதைய பரபரப்பான தொழில்நுட்ப உலகத்தில் எந்த நேரத்திலும் அலுவலக வேலைகளைச் செய்ய நேரலாம். ஆனால், எல்லா சமயத்திலும் டெஸ்க் டாப், லேப்டாப் போன்றவைகளை உடன் வைத்துக்கொண்டே இருக்க முடியாது. இவற்றுக்கு மாற்றாக தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்திருக்கும் ஸ்மார்ட் போனை வைத்து அனைத்து விஷயங்களையும் செய்யும்விதமாக சில அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அந்த அப்ளிகேஷன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்...
 
கூகுள் டாக்ஸ் (Google Docs)

இந்த ஆப்ஸைக் கொண்டு Spread sheet-களை பிரவுஸ் செய்யலாம். மேலும், எடிட்டும் செய்யலாம். இதுபோன்ற பல ஆபீஸ் ஆப்ஸ்கள் இருந்தாலும், இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளையும் சிறந்த சேவையையும் அளிக்கிறது. கிராப்ஸ், சார்ட்ஸ், டேபிள்கள் போன்ற அனைத்தையும் இந்த குயிக் ஆபீஸ் ஆப்ஸ் மூலம் எளிதாக உங்கள் ஆபீஸ் பைல்களில் பொருத்திக்கொள்ளலாம்.

கூகுள் டிரைவ் (Google Drive)

இது ஒரு Cloud storage ஆப்ஸ். ஆபீ ஸில் பயன்படுத்தும் ஃபைல்களை உங்கள் கூகுள் டிரைவ் அக்கவுன்ட்டில் சேமித்துவைத்துவிட்டால், உங்களது கூகுள் அக்கவுன்ட்டைக் கொண்டு அந்த ஃபைல்களை வேறொரு ஸ்மார்ட் போன், டேப்லெட், டெஸ்க் டாப், லேப்டாப்பிலோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேம் ஸ்கேனர் (Cam Scanner)
இதுதான் தற்போதைய டிரென்டிங் ஆப்ஸ். உங்கள் ஸ்மார்ட் போன் கேமராவை ஒரு ஸ்கேனர் போல செயல்படுத்தும் தன்மை உடையது. ஒரு பேப்பரை ஸ்மார்ட் போன் கேமரா மூலம் போட்டோ எடுத்தால், இந்த ஆப்ஸ் அந்த பேப்பரை ஸ்கேன் செய்ததுபோல எடிட் செய்து விடும். இது தவிர, வேறு பல சிறப்பம்சங்களும் இந்த ஆப்ஸில் அடங்கும்.

எவர் நோட் (Ever Note)
இந்த ஆப்ஸ் மூலம் உங்களது வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளலாம். மேலும், எந்த நேரத்திலும் நோட்ஸ் எடுக்கலாம். நோட்ஸை எழுத்து வடிவத்திலோ, ஒலி வடிவத்திலோ அல்லது வரைந்தோ சுலபமாக வாடிக்கையாளர்கள் எடுக்கலாம். மேலும், போட்டோக்களையும் இணைத்துக்கொள்ளலாம். எவர் நோட்டும் ஒரு ‘Cloud Storage’ அப்ளிகேஷனாகும்.

ஸ்கொயர் ரெஜிஸ்டர் (Square Register)

இது ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்த பிரத்யேகமான அப்ளிகேஷனாகும். இதற்கு ஒரு ஏடிஎம் கார்டு ‘Dongle’யை உங்களது ஸ்மார்ட் போனுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் ஏடிஎம் கார்டுகளை ஸ்வைப் செய்துகொள்ளலாம். அல்லது சாதாரணமாக இ-பேங்கிங் முறையிலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

க்ளவ்டு பிரின்ட் (Cloud Print)

இதுதான் ஆண்ட்ராய்டு உலகத்தின் புதுவரவு. இந்த ஆப்ஸை வைத்துக் கொண்டு உங்கள் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட்டில் உள்ள ஃபைல்களை உடனுக்குடன் பிரின்ட் செய்துவிடலாம். இதற்கு உங்களது பிரின்டர் ஒரு ‘e-printer’ஆக இருக்க வேண்டும்.

குயிக் புக்ஸ் (Quick Books)

இது பிரத்யேகமான ஒரு பிசினஸ் அப்ளிகேஷன். இதை குயிக் புக்ஸ் டெஸ்க் டாப் வெர்ஷனோடு ஸ்மார்ட் போன் / டேப்லெட் களுக்கு இலவசமாகப் பெறலாம். இந்தப் புதுமையான பிசினஸ் ஆப்ஸ் உங்களது நிதிக் கணக்குகளையும் வரவு, செலவுகளையும் கையாள கட்சிதமாக உதவும்.

லோக்கஸ் (Locqus)

இது உங்களது ஊழியர்களுக்கான ஒரு அப்ளிகேஷன். அதாவது, எந்த ஊழியருக்கு என்ன வேலை, பொதுவான, மீட்டிங் போன்றவற்றை இந்த அப்ளிகேஷனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும், எந்த நேரத்திலும் ஓர் ஊழியர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும் ‘Geolocator’ மூலம் இந்த அப்ளிகேஷன் சொல்லிவிடும்.

குறைந்த விலை செல்போன்கள்: நம்பி வாங்கலாமா?

தொழில்நுட்ப  மாறுதலுக்கு ஏற்றவாறு செல்போன்களும் தினம் தினம் மாறி வருகின்றன. லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் அமைந்த இந்த செல்போன்களை குறைந்த விலை யில் வாங்க வேண்டும் என்பதே இன்றைய வாடிக்கையாளர்களின் மனநிலையாக உள்ளது. இதனைப் புரிந்துகொண்ட செல்போன் நிறுவனங்கள் குறைந்த விலையில் செல்போன்களை வழங்கத் துவங்கிவிட்டன. ஸ்மார்ட் போன் என்றாலே 10,000 ரூபாய்க்குமேல் இருக்கும் என்கிற நிலை மாறி, ரூ.1,500 ரூபாய்க்கும் அதற்குக் கீழேயும்கூட கிடைக்கும் என்கிற நிலை வந்துவிட்டது.

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைக்கும்போது, அதிக விலை தந்து ஏன் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பலர். விலை குறைந்த ஸ்மார்ட் போன்களை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

1.சிறப்பம்சங்களைக் கவனியுங்கள்!

குறைந்த விலை செல்போன்களை வாங்கும்போது அந்த போனை ஆன்லைன் மற்றும் ரீடெயில் கடைகளில் காட்சிக்கு வைத்திருப்பார்கள். அந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை முதலில் சரியாக புரிந்துகொள்ளுங்கள். தவிர, அது இரண்டாம் தர அல்லது போலி பாகங் களைக் கொண்டு உருவாக்கப்பட்டி ருக்கலாம். உதாரணமாக, ரூ.10,000 செலவழித்து வாங்கும் செல்போனில் 2ஜிபி அளவுக்கு  மெமரி இருக்கும். ரூ.3,000-ல் வாங்கப்படும் செல்போனிலும் அதே அளவு மெமரி இருக்கும். ஆனால், குறைந்த தரத்தில் அதனை தயாரித்ததன் மூலம் விலை ஈடுகட்டப்பட்டிருக்கும். அது தெரியாமல் அந்த செல்போனை வாங்கினால், அது குறுகிய காலத்துக்கே பயனளிக்கும்.


2.பிராண்டுகளைத் தேர்ந்தெடுங்கள்!

சில நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் செல்போன்களில் எல்லா வசதிகளும் கிடைப்பதாக விளம்பரப் படுத்துவார்கள். ஆனால், அந்த செல்போனை தயாரித்த நிறுவனத்தின் பெயர் முன்பின் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். அதுபோன்ற நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டு, நன்கு தெரிந்த பிராண்டுகளை மட்டுமே தேர்வு செய்வது நல்லது. பிராண்டுகள் பலரது சாய்ஸாக இருப்பதால், அவை நன்கு உழைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

3.உத்தரவாதம் இல்லாமல் வாங்காதீர்கள்!

இன்றைக்கு எலெக்ட்ரானிக் சாதனங்கள் தரம் குறைந்த மூலப்பொருட் களால் தயாரிக்கப்படுவதும், கள்ளச் சந்தையில் விற்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதும் அதிகரித் துள்ளது. இதுமாதிரி தயாரிக்கப்படும் செல்போன்களுக்கு எந்த உத்தரவாதமும் தரப்படுவதில்லை. உத்தரவாதம் இல்லாத பொருளை வாங்கி, நீங்கள் உங்கள் பணத்தை வீணடிப்பதைவிட, பணம் கொஞ்சம் அதிகமாகச் செலவானாலும், உத்தரவாதம் உள்ள, நல்ல, தரமான பொருளையே வாங்குவது புத்திசாலித்தனம். உத்தரவாதம் உள்ள செல்போன்கள் பழுதானால்கூட அதற்கென இருக்கும் சர்வீஸ் சென்டர் மூலம் சரிசெய்துகொள்ள முடியும். நீங்களும் வருடத்துக்கு இரண்டு, மூன்று செல்போன் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்காது.

4.ரிவியூகளைக் கவனியுங்கள்!

குறைந்த விலை செல்போனைத்தான் வாங்கப்போகிறீர்கள் எனில், முதலில் அந்த செல்போனின் பயன்பாடு எப்படி உள்ளது என்பதைக் கவனியுங்கள். அதனை ஏற்கெனவே பயன்படுத்தும் நண்பரோ அல்லது உறவினரிடமோ கருத்துக்களைக் கேளுங்கள். பின்னர் அதுகுறித்த ரிவியூகளை அந்த நிறுவனத்தின் தளத்திலோ அல்லது அதனை விற்கும் இ-காமர்ஸ் தளத்திலோ படிக்காமல், சமூக வலைதளங்களில் படியுங்கள். அந்த செல்போனை பயன்படுத்தியவர்கள் அதை விளக்கமாக விமர்சனம் செய்திருப்பார்கள். இதைவைத்து அந்த செல்போனை வாங்கலாமா, வேண்டாமா என முடிவு செய்யலாம்.

5.தரம் மற்றும் விலையை ஒப்பிடுங்கள்!

அனைத்தும் தரமாக உள்ளது. ஆனால், குறைந்த விலை என்று சொன்னால், எப்படி இது சாத்தியம் என நீங்களே ஆராய்ந்து பாருங்கள். தரம் இல்லை எனில், அதைத் தவிர்த்துவிடுங்கள். அல்லது இன்னும் விலையைக் குறைக்க முடியுமா என்று பாருங்கள்.


குறைந்த விலை என்பதை மட்டுமே மனதில் கொள்ளாமல், தரமான பொருளா என்று பார்த்து வாங்குங்கள்!


சூடாகும் செல்போன்கள்!

குறைந்த விலையில் செல்போன்களை விற்ற ஒரு நிறுவனம், செல்போனை மட்டும் விற்காமல், அதனை வாங்கிப் பயன்படுத்துகிறவர்களின் தகவல்களையும் சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. அது மட்டுமின்றி, செல்போன் சார்ஜ் செய்யும்போது சூடாகிறது. அடிக்கடி ஹேங்கும் ஆகிவிடுகிறது என்ற புகார்கள் இந்தக் குறைந்த விலை செல்போன்கள் மீது சொல்லப்படுகின்றன. இந்தக் குறைந்த விலை செல்போன்களை வாங்கி, காதில் சூடு போட்டுக் கொள்ளாமல் இருப்பதே நல்லது!

ச.ஸ்ரீராம்

Friday, November 14, 2014

அண்ணாமலையார் தீபம்!

கார்த்திகை மாதத்து பௌர்ணமி பெரும்பாலும் கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும். அந்நாளே கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்படுகிறது. சில தருணங்களில் பௌர்ணமியும் கார்த்திகையும் முன்னும் பின்னுமாக வருவது உண்டு.

திருவண்ணாமலையில், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர திருநாளிலேயே தீபவிழா கொண்டாடப்படுகிறது. அதன் சுற்று வட்டார ஊர்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. மற்றைய தலங்களில், குறிப்பாகக் கடலோரம் அமைந்த தலங்களில் பௌர்ணமியன்றே தீப விழா கொண்டாடப்படுகிறது.

இப்படி முன்னும் பின்னுமாக வரும்போது, கிருத்திகை நட்சத்திர நாள் தீபவிழாவை அண்ணாமலையார் தீபம் என்றும், பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படுவதை சர்வாலய தீபம் என்றும் அழைக்கின்றனர்.


கார்த்திகை தீபத் திருநாளில், மாலை 6 மணிக்குச் சரியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். அதேநேரம், கீழே ஆலயத்தில் கொடி மரத்துக்கு முன் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, அவர்களுக்கு மகா தீபாராதனை நடைபெறும். அப்போது, சிறு விமானத்தில் (வாகனத்தில்) எழுந்தருளும் அர்த்தநாரீஸ்வரர்... சுற்றிலும் தீவட்டிகள் ஒளி வீச, திருநடனம் (முக்தி நடனம்) புரிவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆலயத்தின் உள்ளே இருந்து வரும் பெருமான் விரைவாக வந்து ஒருசில நிமிடங்கள் மட்டுமே திருநடனம் புரிந்துவிட்டு, உடனடியாக உள்ளே சென்றுவிடுகிறார்.

இதை தரிசிக்கும் அன்பர்களின் இருபத்தோரு தலைமுறைகளும் முக்தியை அடைகின்றன என்றும், உலக வாழ்வில் மேன்மை மிக்க இன்பங்களை அடைந்து சுகமாக வாழ்வர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வருடம், நவம்பர் 26ம் தேதியன்று திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மகாதீபம். அன்று அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அருணை சிகரத்தின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை சோமவாரம்

சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதமும் ஒன்று. சந்திரனுக்குரிய நாளான திங்கட் கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனுடைய ஒரு கலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் பெற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் தாக்காதிருக்கவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர்.

கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தியடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும்.

Thursday, November 13, 2014

ஷர்மிளா!

ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக்காரர்களை நாம் பார்த்திருப்போம். சிலர் ஒருவார காலம்கூட உண்ணா விரதம் இருந்து பெரும் பரபரப்பை உருவாக்குவார்கள். ஆனால், ஒரு பெண் 14 வருடங்களாக உண்ணா விரதம் இருக்கிறார். அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க அரசாங்கமே தலைகீழாக நின்று முயற்சி எடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்தான் இரோம் சானு ஷர்மிளா.

1942-ம் ஆண்டு மணிப்பூரின் இம்பால் பகுதியில் பிறந்தார் ஷர்மிளா. சிறுவயதிலிருந்தே சமூகச் சிந்தனையோடும், சமுதாயம் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர், 2000-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் மலோம் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பேரை ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றதைப் பார்த்தார். மனித உரிமைப் போராளியான ஷர்மிளா இதனைக் கடுமையாக எதிர்த்தார். ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

ராணுவம் அவரை கைது செய்தது. அப்போதும் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. ஆனால், அவர் இறந்துவிடுவாரோ என்கிற பயத்தில் ராணுவம் அவரை விடுதலை செய்தது. அதன்பிறகும் அவர்  உண்ணாவிரதத்தை கைவிட்டபாடில்லை. உண்ணாவிரதம் தற்கொலைக்கான முயற்சி. எனவே, ஷர்மிளாவை சாப்பிட வைக்கும்படி உறவினர்களை மிரட்டத் தொடங்கியது அரசு. ஆனாலும் ஷர்மிளாவோ தன் கோரிக்கையைக் கைவிடவில்லை.

உடல் உபாதைகளினால் அவரது ஒவ்வொரு உறுப்பும் வலுவிழந்தது. இப்போது அவரது மூக்கின் வழியே திரவ உணவு மட்டும் செலுத்தப்படுகிறது.

14 ஆண்டுகளாகத் தொடரும் இந்த உண்ணாவிரதத்தைப் பார்த்த மணிப்பூர் மக்கள், அரசியலுக்கு வாருங்கள். உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று அழைத்தனர். ‘நான் வடகிழக்கு மக்களுக்காகப் போராடும் போராளி, அரசியல்வாதி அல்ல’ என்று கூறி மறுத்துவிட்டார்.

ஷர்மிளாவின் உண்ணாவிரதம் கடந்த வாரத்தில் 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. என் உயிர் போனாலும்  பரவாயில்லை. என்றாவது ஒருநாள் என் பகுதி மக்களின் நிலை மாறும்’ என்கிற விடாமுயற்சியில் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. ஷர்மிளாவின் விடா முயற்சி நம்மிடமும் இருந்தால், நம் வாழ்க்கையில் அடைய முடியாததே கிடையாது!

ஹெச்டிசி-ன் புதிய கேமரா!

இன்றைக்கு  ஸ்மார்ட்போன்களில் கேமராக்களின் பங்கு முக்கிய இடம் வகிக்கக்கூடியதாக மாறியிருக்கின்றது. ஆனால், கேமராக்களின் பங்கை வேறு ஓர் எல்லைக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஹெச்டிசி நிறுவனம் தனது புதிய கேமராவான, ஹெச்டிசி ரீ (HTC Re)  என்கிற கேமராவை வெளியிட்டுள்ளது.

புகைப்படங்களை எளிதாகவும் விரைவாகவும் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய ரக கேட்ஜெட்டை பற்றிப் பார்ப்போம்.


டிசைன்!

ஒரு சிறிய ‘பைப்’ அல்லது ‘ஏர்-இன்ஹேலர்’ போல காட்சியளிக்கும் இந்த கேமராவை கையில் பிடித்து எளிதாக பயன்படுத்த முடியும்.  இந்த கேமரா இரண்டு பட்டன்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் இருக்கும் பெரிய பட்டன் போட்டோ எடுக்க உதவுகிறது. இதே பட்டனை சிறிது நேரம் அழுத்தினால் ஒரு ‘beep’ சத்தத்துக்குப்  பிறகு வீடியோ ‘mode’ இயங்கத் தொடங்கும்.

முன்புறத்தில் இருக்கும் பட்டன் ஸ்லோமோஷன் வீடியோக்களை எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமராவில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும்  எளிமையாகப் பயன்படுத்துகிற மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளது இதன் முக்கியமான பிளஸ் எனலாம்.

மொபைல் ஆப்ஸ்!

இந்த கேமராவின் பிரத்யேகமான ஆப்ஸ், ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளத்திலும் கிடைக்கிறது. அதை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து, இந்த கேமராவோடு ப்ளூ-டூத் அல்லது ‘WiFi Direct’ உதவியுடன் இணைத்துவிடலாம்.

இந்த அப்ளிகேஷன் உதவியோடு இந்த கேமராவில் எடுத்த படங்களை உடனுக்குடன் ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்.


பேட்டரி!
இந்த கேமரா 820mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. இது குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் வரை படங்களை எடுக்க உதவும்.

ஆனால், வீடியோக்களை எடுக்கும் போது இந்த நேரம் சற்றுக் குறையலாம். அதனாலே இந்த கேமராவின் மைனஸாக பேட்டரி அமையலாம்.


ஸ்டோரேஜ்!

இந்த கேமரா 8GB இன்டர்னல் மெமரியுடன் வருகிறது. மேலும், 128 GB எஸ்டி (SD) கார்டு மூலம் விரிவுபடுத்திக்கொள்ளலாம். ஆகையால், வாடிக்கையாளர்கள் அளவு பற்றிய கவலை இல்லாமல்  படங்களையோ, வீடியோக்களையோ எடுக்கலாம். எஸ்டி கார்டை பொருத்தும் இடம் இந்த  கேமராவின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது.


கேமரா!

ஹெச்டிசி ரீ கேமரா, 16 மெகா பிக்ஸலைக் கொண்டது. சோனியின் ‘Exmor RS tech’ சென்சாரும் இந்த கேமராவில் அடங்கும். இந்த அதிநவீன தொழில்நுட்ப கேமரா 146 டிகிரி வரை போட்டோ அல்லது வீடியோக்களை எடுக்கும் திறனைப் பெற்றுள்ளது. ஹெச்டிசி ரீ கேமரா இந்தியாவில் ரூபாய் 9,990-க்கு Snapdeal.com-ல் பிரத்யேகமாக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

கே்ஷமத்தை உத்தேசித்துதான்!

 
நம்முடைய சாஸ்த்ரங்களைத் தந்திருக்கிற பெரியவர்கள், நம் அறிவுக்குப் புரியவே முடியாததும், ஸ்வய ப்ரயத்னத்தால் அநுபவத்திற்கு வரவே முடியாததுமான ஆத்ம லோக ஸத்யங்களைக் கண்டறிந்து அநுபவித்து அவற்றை நாமும் அடைய வேண்டும் என்ற பரம கிருபையிலேயே சாஸ்திர விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். 
 
அப்படிப்பட்டவர்கள் ‘சுத்து, சுத்திக்கோ, அதுகளை வலமாப் பண்ணு, மெதுவாப் பண்ணு’ என்று சொல்கிறார்களென்றால் அதெல்லாம் நம் கே்ஷமத்தை உத்தேசித்துத்தான். ஏதொன்று அவர்கள் சொன்னாலும் அர்த்தத்தோடு சொன்னதுதான். வேறே காரணம், எக்ஸ்ப்ளனேஷன் தேடவே வேண்டாம். புத்தி சும்மாயிருக்காமல் கேள்வி கேட்கிறதே என்றுதான் காரணத்தைத் தேடி எக்ஸ்ப்ளென் என்று பண்ணுவதெல்லாம்.

அவர்கள் சொன்னது அர்த்தத்தோடுதான்; அது ஜீவர்களுடைய கே்ஷமத்திற்காகத்தான் என்பதற்கு Proof வேண்டுமென்றால், பெரிய Proof அவர்கள் சொன்னபடியே பக்தி விச்வாஸத்தோடு பண்ணியதாலேயே அநாதி காலமாக, வேறே எந்த தேசத்திலும் இல்லாத அளவுக்கு, இங்கே தலைமுறைதோறும் எல்லா ஜனங்களுமே பொதுவாக சாந்தர்களாகவும் நல்லவர்களாகவும் இருந்து வந்திருப்பதும், அவர்களில் எத்தனையோ பேர் மஹான்களாகவே அநுக்ரஹம் பண்ணிக்கொண்டு இருந்ததும்தான். கேள்வி கேட்க ஆரம்பித்த நாளாக ஏற்பட்டிருக்கிற துர்த்தசையை ப்ரத்யக்ஷமாகவே பார்க்கிறோம்.
 

Tuesday, November 04, 2014

கறுப்புப் பணம் சர்ச்சை?


கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்போர் பட்டியலை மத்திய அரசு வெளியிடத் தொடங்கியிருக்கிறது. பிரதீப் பர்மன், சீமன் லால்லோடியா, ராதா சதீஷ் டிம்லோ பெயர் வெளிவந்துள்ளன. பெரிய மீன்கள் பெயர்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிட்ஸர்லாண்ட் நாட்டு வங்கிகளில் மட்டும் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு சுமார் 84 லட்சம் கோடி ரூபாய். இப்படிச் சொன்னவர்கள் எந்த அடிப்படையில், எந்த அளவுகோலில் இவ்வளவு பெரிய தொகையைச் சொன்னார்கள் என்பது தெரியாது. ஆனால் இந்த மாதிரி ஒரு செய்தி இந்தியாவின் ஊடகங்களில் வெளியானவுடன், சுவிட்ஸர்லாண்ட் வங்கிகளின் சங்கம் இந்தத் தொகையின் அளவை மறுத்து ஒரு அறிக்கை விட்டது. தங்கள் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு சுமார் 12000 கோடி ரூபாய்தான் (அமெரிக்க டாலர் மதிப்பில் 2 பில்லியன் டாலர்).

2012-ல் இந்தத் தொகையின் அளவு 30 லட்சம் கோடி ரூபாய் என்று அப்போதைய சி.பி.ஐ.யின் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மே 2012-ல் அப்போதைய மத்திய அரசு (மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்) ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின் சாராம்சம்: அன்னிய நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் சுமார் 15 ஆயிரம் கோடிதான். இது மொத்தமும் கறுப்புப் பணம் என்று சொல்ல முடியாது. ரிஸர்வ் வங்கியின் அங்கீகாரத்துடன் வெளிநாட்டு வங்கிகளில் நம் நாட்டு ஏற்றுமதியாளர்கள் வைத்திருக்கும் பணமும் இதில் அடங்கும்." இப்போது மத்தியில் பதவியில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு அதன் தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் பதவிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணம் பூராவையும் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று சூளூரைத்தார்கள். அப்படி பணம் ஒன்றும் வரவில்லை. இப்போதைக்கு ஒருசில பெயர்கள் மட்டுமே வந்துள்ளன.

சில பொருளாதார நிபுணர்களின் அபிப்ராயப்படி வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தக் கறுப்புப் பணம் சுமார் 20,000 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்பது. இதற்கு அவர்கள் சொல்லும் முக்கியக் காரணம் வெளிநாட்டு வங்ககளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் பெரும் பகுதி திரும்ப இந்தியாவுக்கு வந்துவிட்டது. அந்தப் பணம் பங்குச் சந்தையிலும், வீட்டு மனைகளிலும் மற்றும் அடுக்கு மாடி கட்டடங்களிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது" என்பதுதான். இந்த மாதிரி பல அபிப்ராயங்கள் அவ்வப்போது வெளியாவதால், மக்களின் சந்தேகத்தைப் போக்க எல்லா விவரங்களும் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

வி.கோபாலன்

‘ஆன்லைன் ஷாப்பிங்’ - ‘இ காமர்ஸ்’


உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருப்பது ‘இ காமர்ஸ்’ என்று அறிமுகமாகி இன்று ‘ஆன்லைன் ஷாப்பிங்’ என்ற விஷயம்தான். இந்தத் துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டில் மட்டும் 300 சதவிகிதத்துக்கு மேல். வரும் ஆண்டுகளில் இன்னும் வேகமாக வளரும் எனக் கணித்திருக்கிறார்கள்.

அபரிமிதமான அன்னிய முதலீடுகளால் உலகின் பொருளாதார தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் சீனாவில் இந்த வர்த்தகம் இருக்கிறது. இதில் முன்னணி நிறுவனமான அலிபாபா நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டுச் சந்தையில் பங்குகளை வெளியிட அனுமதி பெற்று நியுயார்க் பங்குச் சந்தையில் தனது டாலர் பங்குகளை கடந்த மாதம் வெளியிட்டது. 

IPOˆவின் (முதலில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலை) தொடக்க விலையாக 40 டாலர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்தது. மார்க்கெட் தொடங்கிய சில நிமிடங்களில் ஜிவ்வென்று விலை ஏறி 93.8 டாலர்களில் நாளின் விற்பனை முடிந்தது. மொத்தம் விற்ற பங்குகளின் மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். இது பங்கு மார்க்கெட்டில் ஒரு உலக சாதனை. இதுவரை எந்த கம்பெனியின் பங்கும் இந்த வேகத்தில் உயர்ந்ததில்லை. விற்றதில்லை. 

இதன் மூலம் அலிபாபா நிறுவனத்தின் நிகர மதிப்பு ஒரே நாளில் 231 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. அதன் நிறுவனர் ஜாக் மாவின் பங்குகளின் மதிப்பு 26.5 பில்லியன் டாலர்கள். (ஒரு பில்லியன் என்பது 100 கோடிகள்). இந்தப் பங்கு வெளியீடு மூலம் ஜாக் மா ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திலிருக்கும் முகேஷ் அம்பானியையும், இரண்டாவது இடத்திலிருக்கும் சீனாவின் லீஷா கீ என்ற தொழிலதிபரையும் ஒரே பாய்ச்சலில் தாண்டி ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்துக்கு வந்துவிட்டார். 

ஒரு சீன நிறுவனம் முதன்முதலில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் இறங்கும் போது எப்படி இத்தகைய வரவேற்பு என்பதை உலகப் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராயத் தொடங்கிவிட்டன. 

உலகில் அதிகமான இன்டர்நெட் இணைப்புகள் கொண்ட சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தி அதை மிக வேகமாக வளர்த்து பல சாதனைகளைப் படைத்தவர்கள் இந்த அலிபாபாதான். 40க்கும்மேற்பட்டபொருட்களை 140க்கும்மேற்பட்ட நாடுகளில் விற்கிறார்கள். நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் இவர்கள் தளத்தைப் பார்வையிடுகிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங்கில் சில புதிய முறைகளை அறிமுகப்படுத்தியவர்கள். இன்டர்நெட்டில் பொருளைப் பார்த்து பணம் செலுத்தியபின் உங்கள் பகுதியிலிருக்கும் கடையில் அதைப் பெறலாம். இதன் விலை கடையில் வாங்குவதைவிட குறைவாக இருக்கும் (சில பொருட்கள் 50 சதவிகிதம் விலை குறைவு). 

கடையில் பொருளைப் பார்த்தபின் பிடிக்காவிட்டால் பணம் வாபஸ். விழாக் காலங்களில் கடைக்கே போக வேண்டாம். கல்லூரி, பள்ளி, அலுவலகக் கட்டடங்களில் கொட்டிக் குவித்து வைக்கிறார்கள். வீட்டுக்குப் போகும்போது பொருளை எடுத்துச் செல்லலாம். இப்படி பல புதிய ஐடியாக்களுடன் இப்போது இவர்கள் சீனாவின் கிராமங்களை குறிவைத்திருக்கிறார்கள். 

‘அடுத்த இரண்டாண்டில் 1000 நகரங்களில் 10,000 கிராமங்களிலும் எங்களது பொருள் வழங்கும் சென்டர்கள் (கடைகள் இல்லை) தொடக்கப்படும்’ என அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் ஷாப்பிங்கில் உலகின் முதல் நிறுவனமாக உயரும் என்கிறது ஒரு கணிப்பு. அமேசான், இபே போன்ற ஆன்லைன் நிறுவனங்களைவிட இவர்கள் மலிவான விலைக்குப் பொருட்களைத் தருவதுதான் இத்தனை வளர்ச்சிக்கு காரணம் என்பதும் ஒரு கணிப்பு.

இந்திய மார்க்கெட்டின் மதிப்பை உணர்ந்திருக்கும் இவர்கள் விரைவில் இந்தியாவுக்கு வரப்போகிறார்கள்.

உசரமான பாவம்! ஒரு மனோபாவத்தை வெளிப்படுத்துவதற்காகச் செய்கிற சரீர க்ரியையே தலைமுறை தலைமுறையாகப் பலபேர் அப்படிப் பண்ணுகிறபோது மரத்தில் வஜ்ரம் பாய்கிற மாதிரி ஒரு உள்பலத்தைப் பெற்று விடுகிறது. அப்புறம் இந்த க்ரியையே அந்த மனோபாவத்தை பலப்படுத்தி விருத்தி செய்து கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. அடிப்படையில் அந்த மனோபாவத்தை நாம் நினைத்து அந்த க்ரியையைச் செய்தால், க்ரியையே நினைப்பை ஆழப்படுத்தி பாவத்தை வளர்த்துக் கொடுக்கும். அப்படி இந்த ஸாஷ்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரங்கள் விநய ஸம்பத்து என்ற உசந்த (சிரித்து) தாழ்மையாலேயே உசரமான பாவத்தை போஷித்துக் கொடுக்க உதவியாயிருக்கின்றன.


ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Sunday, November 02, 2014

எரிக் வெய்ஹன்மேயர்!

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம்தான் உலகின் மிகப் பெரிய சிகரம் என்பது அனைவருக்கும் தெரியும். சாகசம் செய்ய நினைப்பவர்கள் இதன் உச்சியை அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். 

அப்படிநினைப்பவர்களுக்கு எரிக் வெய்ஹன் மேயர் ஓர் உதாரணம். பலர் சாதனை செய்திருந்தாலும் எரிக்கின் சாதனை பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில், எரிக் பார்வையற்றவர். இந்தச் சாதனையைச் செய்ய அவர் சந்தித்த சவால்கள் ஏராளம்.

எரிக் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் பகுதியில் 1968-ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதில் இருந்தே சுறுசுறுப்பாகவும், துணிச்சலான காரியங்களையும் செய்யும் எரிக், தனது 13-வது வயதில் ரெட்டினோசிஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வையை இழந்தார். இதனால்  தன்னம்பிக்கையை இழந்து எதிலும் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியே இருப்பார் என எல்லோரும் நினைத்தபோது, நம்ப முடியாதச் செயல்களை  திறமையாகச் செய்யத் துவங்கினார்.


குத்துச்சண்டையில் சிறப்பாக பயிற்சி பெற்ற எரிக், அமெரிக்காவின் தேசிய அணிக்காக பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார். 1993-ல் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்த எரிக், பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றத் துவங்கினார். இதற்கிடையில் மலையேறுதல் மற்றும் காடுகளுக்குள் பயணித்தல் போன்ற செயல்களை துணிச்சலாகச் செய்து வந்தார். அமெரிக்காவின் மவுன்ட் மெக்கென்லி, தென் ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ ஆகிய மலைகளில் ஏறிய அனுபவம் அவருக்கு இருந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதை தன் லட்சியமாக உணர்ந்தார்.


எரிக்கின் இந்த ஆசை நிறைவேறுமா என பலரும் சந்தேகத்துடன் பார்த்தனர். ஆனால், மற்றவர்களின் அபிப்ராயங்களைப் பற்றி சற்றும் கவலைப்படாத எரிக், தனது 14 பேர் கொண்ட குழுவோடு பயணிக்கத் துவங்கினார். வழியெங்கும் சரியான குழுக் கூட்டங்கள், நிதானமான திட்டமிடல் என அனைத்தையும் சரியாகச் செய்து தனது லட்சிய இலக்கான எவரெஸ்ட் சிகரத்தை மே 25, 2001 அன்று அடைந்தார். இவர்தான் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பார்வையற்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.

இது எனக்கு வராது, என்னால் இதைச் செய்ய முடியாது எனக் கூறி, ஒரு வேலையை தள்ளிப்போடும் அனைவருக்கும் எரிக் வெய்ஹன்மேயரின் சாதனை ஒரு பாடம்.

கேட்ஜெட் : லெனோவா யோகா 2

டிஸ்ப்ளே:


இந்த டேப்லெட், முழு ஹெச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த 8 இன்ச் IPS டிஸ்ப்ளே ஒரே நேரத்தில் பத்து விரல்களை சென்ஸ் செய்யும் விதத்தில் அதிநவீன தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. 1920x1200 பிக்ஸல் ரெஸல்யூஷன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான மற்றும் கூர்மையான டிஸ்ப்ளேயாக அமையும்.

வடிவமைப்பு:

கவர்ச்சியான லெனோவா யோகா 2 டேப்லெட், ஒரு மெட்டாலிக் லுக்கை கொண்டது. சில இடங்களில் மெட்டலால் செய்யப்பட்டாலும், சிறிது பிளாஸ்டிக்கும் இந்த டேப்லெட்டின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, எந்தக் குறையும் இல்லை. அனைத்தும் பிளஸ்தான். மேலும், ‘கிக்-ஸ்டாண்ட்’ என்ற துணைக் கருவியை டேப்லேட்டின் பின்புறத்தில் காணலாம். இது டேப்லேட்டை பல ஆங்கிள்களில் பயன்படுத்த உபயோகமாக இருக்கும். தவிர, இந்த கிக்-ஸ்டாண்ட் மூலம் டேப்லெட்டை தொங்கவிட்டும் பயன்படுத்தலாம்.


சேமிப்பு:

3G மற்றும் 4G வசதியோடு வரும் இந்த லெனோவா யோகா 2 டேப்லெட், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு இயங்குதளமான 4.4 கிட்கேட் தளத்தைக் கொண்டு இயங்குகிறது. ‘Dolby Audio’ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ள இந்த டேப்லெட், 16GB இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. 64GB வரை SD மூலம் விரிவுபடுத்தியும் கொள்ளலாம். லெனோவா யோகா 2 டேப்லெட், ‘Flipkart’ இணையதளத்தில் ரூபாய் 20,990 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.


கேமரா:

8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும் 1.6 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் கொண்டுள்ள இந்த யோகா 2 டேப்லெட், f2.2 ‘wide aperture’ லென்ஸ்களைக் கொண்டுள்ளது. இந்த லென்ஸ் அதிகத் தொழில் நுட்ப ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், சில டேப்லெட் களிலும் தற்போது பயன்படுத்தப்படுவது சிறப்பம்சம்.


பிராசஸர்:

தற்சமயம் பலரும் குவால்காம் பிராசஸர்களையே பயன்படுத்தினாலும், லெனோவா யோகா 2 டேப்லெட் ‘இன்டெல்’ நிறுவனத்தின் பிராசஸரையே பயன்படுத்துகிறது. 1.86GHz குவாட்-கோர் பிராசஸரான இது சாதாரணமான டேப்லேட்களைவிட நிச்சயமாக வேகமாக இயங்கும். இந்த வேகத்துக்கு பேட்டரி எந்த அளவுக்கு ஈடுகொடுக்கும் என்கிற கேள்வியும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


பேட்டரி:

6400 mAh லித்தியம்-ஐயான் பேட்டரியைக் கொண்டுள்ள யோகா 2 டேப்லெட்டானது, சாதாரண டேப்லெட்களைவிட சக்திவாய்ந்தது. கிட்டத்தட்ட 18 மணி நேரம் வரை உழைக்கும் என்று லெனோவா நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஒரு நாள் (8 மணி நேரம்) சராசரி கேமிங், பிரெளஸிங் மற்றும் பயன் பாட்டுக்கு இந்த பேட்டரி போதுமானதாக இருக்கும் என்று நம்பலாம்.