Search This Blog

Tuesday, November 26, 2013

எழுமின்... விழிமின்!

ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம்... பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களுக்கு அதிபதி!

திடீரென, வியாபாரத்துக்காக அவர் செய்த முறைதவறிய சில விஷயங்கள் கசிந்து, பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகி, அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார். சமூகத்தின் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை மனநோயாளி ஆக்கியது.

பரிதாபத்துக்கு உரிய அந்த நிலையில்... அவரது நண்பர் ஒருவர், தனது இல்லத்துக்கு வந்திருக்கும் இந்து மதத் துறவியைக் காண வரும்படி அழைத்தார். இவரோ மறுத்துவிட்டார்.அந்தத் துறவி வேறு யாருமல்ல; நமது சுவாமிஜிதான்! அவரைப் பார்ப்பதென்றால், அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனால், ராக்ஃபெல்லருக்கு அதற்கான நேரம் வாய்த்தது என்றே சொல்ல வேண்டும். முதலில் மறுத்தவர், பிறகு என்ன நினைத்தாரோ... தன் நண்பருக்குக்கூடத் தகவல் சொல்லாமல், அவரது வீட்டுக்கு வந்தார். திடும் என்று சுவாமிஜி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தார்.

உள்ளே சுவாமிஜி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். நம்மையெல்லாம் போல அவர் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை. தலையைக் கவிழ்த்தவண்ணம் அப்படியே படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் நிச்சயம் வியந்திருப்பார்.

 

அதுமட்டுமல்ல... ராக்ஃபெல்லரைப் பற்றி அவருக்கு மட்டுமே தெரிந்த, மற்ற யாருக்குமே தெரியாத அவருடைய வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் கூறிய சுவாமிஜி, அவரிடம் இருக்கும் பணம் கடவுள் கொடுத்தது என்றும், அதை மக்களுக்கான சேவைகளுக்குச் செலவு செய்வதற்காகவே கடவுள் கொடுத்திருக்கிறார் என்றும் கூறி, ஆண்டவன் அளித்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மற்றவர்கள் தன்னிடம் சொல்வதற்கு அஞ்சும் விஷயங்களை, சுவாமிஜி தன்னிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதில் அதிர்ந்துபோன ராக்ஃபெல்லர், சட்டென அறையை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்.ஒரு வாரத்துக்குப் பின், மீண்டும் பழைய மாதிரியே விருட்டென சுவாமிஜியின் அறைக்குள் நுழைந்த ராக்ஃபெல்லர், ஒரு காகிதத்தை சுவாமிஜி முன் வீசி எறிந்தார். அப்போதும் சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ''அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எனக்கு நன்றி கூறுவீர்கள்'' என்றார் ராக்ஃபெல்லர்.அவர் அளித்த நன்கொடைகளின் விவரங்கள் அந்தக் காகிதத்தில் இருந்தன. அதைப் பார்த்த சுவாமிஜி, ''நல்லது! இப்போது நீங்கள் கொஞ்சம் திருப்தி அடைந்திருப்பீர்களே! இதற்கெல்லாம் நீங்கள்தான் எனக்கு நன்றி கூறவேண்டும்'' என்றார்.சுவாமிஜியுடனான இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பின்னர், கஞ்சனான ராக்ஃபெல்லர் பெரும் கொடையாளியாகி, மனித குலத்துக்குப் பெரும் நன்மைகள் விளையக் காரணமானார். 'பென்ஸிலின்’ மருந்தைக் கண்டுபிடிக்கப் பணத்தை அள்ளி வழங்கியதும் அவர்தான்.

தனக்கென்று சேர்த்து வைத்தபோது அடையாத மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், திருப்தியையும் பிறருக்கெனக் கொடுத்தபோது அடைந்த ராக்ஃபெல்லர், புத்துயிர் பெற்று ஆரோக்கிய மனிதராகி, 93 வயது வரை வாழ்ந்தார்.நமது சுவாமிஜின் அன்பினாலும் கருணையினாலும் ஆட்கொள்ளப்பட்ட மனிதர், இன்று மனித குலம் நன்றியோடு நினைக்கும் மாமனிதராக மாறினார் என்பதை எண்ணும்போது, சுவாமிஜியின் பெருமை விண்ணையெட்டி நிற்பது புரிகிறதல்லவா?!

அழாதே... அழகு குறையும்..!

 
அழுகையைப் பற்றி நம்ம ஞானிகள் நிறைய சொல்லியிருக்காங்க... கண்ணீர் ஊற்றால் உடல் நனைய அழுது இறைவனைப் போற்றுதல் வேண்டும் என்று வள்ளலார் கூறுவார். மாணிக்கவாசகரும் இறையருளை ‘அழுதால் பெறலாமே’ என்று கூறுவார். திருமங்கை ஆழ்வார் மட்டும் சளைத்தவரா? ‘உடம்பெலாம் கண்ண நீர் சோர நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம்’ என்பார். நிலையான இறை அருளைப் பெற அழுவது முறை. ஆனால், அழியும் பொருளைப் பெறவும் அதேபோல அழுவது எப்படி முறையாகும். பெண்கள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இந்த அழுகை. கணவன் போடும் தும்மலில் தொடங்கி கடையில் வாங்கும் கம்மல் வரை அழுது அழுது சாதிக்கும் அருங்குணம் பெண்கள் குணம் என்று குற்றம்சாட்டுவார்கள் ஆண்கள்.
 
வள்ளுவன் கண்ட பெண்கள் முதல் வலைத்தளம் கண்ட பெண்கள் வரை அழுகின்ற இந்நிலையில் மாற்றம் எதுவும் பெரிதாக நிகழ்ந்து விடவில்லை.  சமீபத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அழுகைப் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டனர். இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மட்டும் தனிக்குழுவாகப் பிரித்து பரிசோதனை செய்தனர். அந்தக் குழுவில் மொத்தம் 60 பெண்கள் இருந்தனர்.
 
பெண்கள் அமர்ந்திருந்த தனி அறையில் மிகவும் மோசமான அழுகைக் காட்சிகள் கொண்ட திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் அரைமணி நேரம் படம் ஓடியது. இதனால் பெண்களுக்குக் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள் படம் பார்த்து கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரைச் சோதனைக் குழாயில் சேகரித்தனர். கண்ணீர் வராத பெண்களுக்காக மற்றொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரைத் தயார் செய்தனர்.பின்னர் கண்ணீர் வடித்த பெண்களின் முகத்தில் உண்மையான கண்ணீரையும், கண்ணீர் வராத பெண்களின் முகத்தில் உப்பு நீரையும் பேஷியல் செய்வதுபோல் பூசினர். இப்போது யாருக்கு உண்மையான கண்ணீர், யாருக்குப் பொய்யான கண்ணீர் என்பது ஆய்வாளர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. இந்நிலையில் வெளியே இருந்த ஆண்கள் சிலரை உள்ளே அழைத்து அந்தப் பெண்களின் அருகில் சென்று பேசச் செய்தார்கள். அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களைத் துல்லியமாகப் பதிவு செய்தனர். கூடவே காதல் உணர்வைத் தோற்றுவிக்கும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருவரின் உடலில் எந்தளவு சுரக்கிறது என்பதையும் ஆய்வு செய்தனராம். ஆய்வின் முடிவில் அழுவதால் ஹார்மோன்களில் மோசமான மாற்றம் ஏற்பட்டு பெண்களின் அழகு குறையும் என்று தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
 
ஆதிரா முல்லை

Saturday, November 23, 2013

அருள்வாக்கு - ஸெக்யூலரிஸம்

சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை ‘ஸெக்யூலரிஸம்’ என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது. இந்த ‘ஸெக்யூலரிஸம்’ என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.இது சரியான கருத்தல்ல என எடுத்துக்காட்டி, ‘ஸெக்யூலரிஸம்’ என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது. தற்போது எண்ணுவதுபோல் அது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மதத் தொடர்பே அற்று இருப்பதல்ல. மாறாக அது, அரசாங்கமானது எந்த ஒரு மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே என்பதுதான் சரியான பொருள்.ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி சம பாவத்துடன் ஆதரித்து, அவையாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘ஸெக்யூலரிஸம்’ ஆகும்.பிரஜைகளின் உடல்நலத்துக்கும், உலகியல் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் வழிவகைகள் காண்பதான விவசாயம், பொருளாதாரம், உலகியலை மையப்படுத்திய கல்வி, சுகாதாரம், உள்நாட்டு வெளிநாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றை அபிவிருத்தி செய்வது ஓர் அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு என்பது உண்மையாயினும், அதோடு பொறுப்பு முற்றிலும் முடிந்து விட்டதாகக் கருதுவதற்கில்லை. உடலைவிட முக்கியம் உள்ளமேயன்றோ? பிரஜைகளின் அந்த உள்ளமாம் உயிரை அபிவிருத்தி செய்வதை ஓர் அரசாங்கம் புறக்கணிக்க முடியுமா? உள்ளவுயர்வு பெறாத மக்கட்கூட்டம் வாழும் நாடு நாடாகுமா? ‘உயர்ந்தோர் மாட்டே உலகு’ என்பதன்றோ ஆன்றோர் - சான்றோர் அறிவுரை? எனவே, ஒரு நாட்டின் பரிபாலனத்துக்குப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம், நாடு நாடாக இருக்க வேண்டுமாயின், மக்களின் உள்ளத்தை உயர்த்தவும் நிச்சயமாக உதவி புரியத்தான் வேண்டும்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - பாரத் ரத்னா படும் பாடு! ஞாநி

 
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 24 வருட ஆட்டத்துக்குப் பிறகு ஓய்வெடுக்க முடிவு செய்ததும் அவருக்குப் பாரத் ரத்னா என்ற இந்திய அரசின் உயரிய விருதை அரசு அறிவித்திருக்கிறது. கூடவே சி.என்.ஆர்.ராவ் என்கிற மக்கள் யாரும் அறிய வாய்ப்பில்லாத ஒரு மூத்த விஞ்ஞானிக்கும் விருதை அறிவித்துள்ளது.சச்சின் நல்லவர்தான். ஆனால் சம்பளம் வாங்கிக்கொண்டுதானே ஆடினார். அவருக்கு எதற்கு விருது என்று ஐக்கிய ஜனதா தளப் பிரமுகர் ஒருவர் கேட்டிருக்கிறார். சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்த்தவர்களுக்கு விருது தரக் கூடாது என்றால் விஞ்ஞானியும் தகுதி இழந்துவிடுவார். அவர் மட்டுமல்ல, இதற்கு முன்பு பாரத் ரத்னா விருது வாங்கியவர்களில் எம்.ஜி.ஆர், எம்.எஸ் போன்ற ஒரு சிலரைத் தவிர, விருது பெற்ற பல குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரும் சம்பளம் வாங்கிக்கொண்டு பணியாற்றியவர்கள்தான்.தேசத்தின் மிக உயரிய இந்த விருது எந்த அடிப்படையில் யாருக்குத் தரப்படுகிறது என்பதற்குத் தெளிவான, துல்லியமான வரையறைகள் இல்லை. நாட்டுக்கு ஆற்றிய மிக உச்சமான தொண்டுக்கு (for the highest degrees of national service) என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. தொண்டு எந்தத் துறையிலும் இருக்கலாம். கலை, இலக்கிய, அறிவியல் துறைகள் மட்டுமன்றி எந்தப் பொதுத் தொண்டின் அங்கீகாரமுமாகவும் தரப்படலாம் என்று இருந்த வரையறையை எந்தத் துறையிலும் மனித முயற்சியின் உச்சமான சாதனைக்கு என்று அண்மையில் திருத்தினார்கள். கோயில் பிரசாதமாக சுண்டல் விநியோகிப்பது போல இந்த உயரிய விருதைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு வருடத்தில் மூன்று பேருக்கு மேல் விருது கொடுக்கப்படக் கூடாது என்ற விதியும் போடப்பட்டிருக்கிறது. யாருக்கு விருது தரலாம் என்று தேர்வு செய்வது யார்? ஒரே ஒருத்தர் கையில்தான் அதிகாரம் இருக்கிறது. பிரதமர், குடியரசுத் தலைவரிடம் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வளவுதான்.இந்த விதியைப் படித்துவிட்டு இதுவரை பாரத் ரத்னா விருது தரப்பட்டோர் பட்டியலைப் பரிசீலித்தால் நிச்சயம் வருத்தமாக இருக்கிறது. தங்களுடன் பதவியில் இருக்கிற சகாவுக்கே விருது கொடுத்துக் கொள்வது என்ற நடைமுறையைப் பலமுறை பிரதமரும் குடியரசுத் தலைவரும் பின்பற்றி இருக்கிறார்கள். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1954ல் துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் போதே அவருக்கு பாரத் ரத்னா விருதை அன்றைய பிரதமர் நேருவும் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தும் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து ஜாகீர் உசேன் துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் போதே அவருக்கு பாரத் ரத்னா விருது தரப்படுகிறது. கோவிந்த் வல்லப் பந்த் நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும்போதே அவருக்கு 1957ல் பாரத் ரத்னா கிடைக்கிறது. (இவர்தான் ஹிந்தியை ஆட்சிமொழியாக்கியவர்.)
 
குடியரசுத் தலைவராக இருப்பவருக்கே அவர் தரும் விருதைத் தரமுடியாது என்பதால், ராஜேந்திர பிரசாத் 1962ல் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே அவருக்கு பாரத் ரத்னா அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் என்னால் ஜீரணிக்கவே முடியாமல் இருக்கும் தகவல் நான் மிகவும் மதிக்கும் ஜவாஹர்லால் நேருவைப் பற்றியதுதான். அவருக்கு 1955ல் பாரத் ரத்னா அளிக்கப்படுகிறது. அப்போது அவர்தான் பிரதமர். அப்படியானால், தனக்கு விருது தரும்படி தானே குடியரசுத் தலைவருக்கு அவர் பரிந்துரை செய்தாரா? பின்னாளில் அவர் மகள் இந்திரா காந்திக்கு 1971ல் பாரத் ரத்னா விருது தரப்பட்டது. அப்போது இந்திராவேதான் பிரதமர்!  இப்போது சச்சினுக்கு விருது அறிவிக்கப்பட்ட உடன் எழுந்த இன்னொரு சர்ச்சை, சச்சினை விட முக்கியமானவரான இந்திய ஹாக்கியின் தந்தை தியான்சந்துக்கு தராமல் சச்சினுக்குக் கொடுக்கலாமா என்பதாகும். தியான்சந்த் சாதனையாளர்தான். ஒலிம்பிக்கில் ஹாக்கியில் 1928,1932,1936 ஆகிய மூன்று வருடங்களும் தங்கம் வென்றவர். ஆனால் அவரது சாதனை சுதந்திர இந்தியாவுடன் எந்தச் சம்பந்தமும் இல்லாதது. விடுதலைக்கு முந்தைய காலகட்டம் அது. தவிர, அவர் அந்தச் சமயத்திலும் விடுதலை வரையிலும் கூட, பிரிட்டிஷ் ராணுவத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனவே அவரை பாரத ரத்னாவாகக் கருத நியாயமில்லை.எந்த அடிப்படையில் பாரத் ரத்னாவுக்கு ஒருவரை பரிசீலிப்பது என்பது நிச்சயம் குழப்பமானதாகவே இருக்கிறது. வாஜ்பாயி பாரத் ரத்னாவுக்கு உரியவர் என்றால் அதற்கு என்ன காரணம்? பொக்ரானில் இரண்டாம் முறை அணுகுண்டு வெடித்த சாதனைக்கா? அதற்காகத்தான் ஏற்கெனவே கலாமுக்குக் கொடுத்தாகிவிட்டதே! அரசியல் ரீதியாக என்றால் அத்வானி உரியவர் இல்லையா? எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கலாம் என்றால் ஏன் கருணாநிதிக்குக் கொடுக்கக்கூடாது ? லதா மங்கேஷ்கருக்குத் தரலாம் என்றால் ஏன் பி.சுசீலாவுக்கும் தரக் கூடாது ? மராத்திய லதா ஹிந்தியில் பாடி இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்திய மாதிரி தானே, தெலுங்கு சுசீலா தமிழில் பாடி வலுவூட்டியிருக்கிறார்? பீம்சேன் ஜோஷிக்கு உண்டு. பாலமுரளிக்குக் கிடையாதா? பிஸ்மில்லாகானுக்கு உண்டு. ராஜரத்தினம் பிள்ளைக்குக் கிடையாதா? இந்தக் கேள்விகளுக்கு முடிவே கிடையாது.
 
பாரத் ரத்னா சர்ச்சைகளுக்கு இரண்டே தீர்வுகள்தான் உள்ளன. ஒன்று எல்லா அரசு விருதுகளையும் முடிவு செய்ய சுயேச்சையான அறிஞர் குழு ஒன்றை ஏற்படுத்தலாம். பத்மஸ்ரீ, பத்மபூஷண், விபூஷன் எல்லாவற்றையும் இதன் கீழ் கொண்டு வந்துவிடலாம். அரசியல், நிர்வாகம் ஆகியவற்றின் செல்வாக்கு இல்லாமல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம், இந்தக் குழுவுக்கும் தேர்தல் ஆணையம் போல, கணக்குத் தணிக்கை அதிகாரிப் போல இருக்க வேண்டும். இது நடக்கும் வாய்ப்பு மிகக் குறைவுதான்.எனவே இரண்டாவது தீர்வே மேலானது. இனி இந்த விருதுகள் கிடையாது என்று அறிவித்துவிடலாம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிறபோது எல்லோரும் இந்நாட்டு பாரத் ரத்னாக்கள்தானே.

Monday, November 18, 2013

தலையைப் பாதுகாப்பது எப்படி? - டாக்டர் கு.கணேசன்

 
மனித உடலின் சிகரமாகத் திகழ்கிறது தலை. மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில்தான் உள்ளது. மனிதனை இயக்கும் மூளையும் அதில்தான் உள்ளது. உடல் உறுப்புகளிலேயே தலையாய உறுப்பு மூளை. நம் உடலின் ஒவ்வோர் அசைவையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது மூளை. மூளைதான் நமது உயிர். மூளையின் செயல்பாடு நின்ற பிறகு மற்ற உறுப்புகள் செயல்பட்டாலும் பலனில்லை. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வது தலையில் இருக்கும் மண்டை ஓடுதான். 
 
தலையின் முன்பகுதியில் முக எலும்புகளும் அதன் மேற்புறமும் பின்புறமும் ‘கிரேனியம்’ என்று சொல்லப் படும் கபாலமும் உள்ளன. தலை எலும்புகள் மொத்தம் 22. இவற்றில் முக எலும்புகள் 14. இந்தத் தலை எலும்புகளைத் தாங்குபவை கழுத்து எலும்புகள். உடலின் மற்ற பாகங்களின் தோலோடு ஒப்பிடும்போது, தலையில் இருக்கும் தோல் சிறிது வித்தியாசமானது. ‘ஸ்கால்ப்’ என்று சொல்லப்படும் தலைத் தோலின் கீழ் தசை எதுவும் இல்லை. இதனால் தலையில் லேசாக அடிபட்டால்கூட காயம் பலமாக ஏற்பட்டுவிடலாம். தலையில் ஆறு ரத்தக்குழாய்கள் உள்ளன. இதனால் தலையில் அடிபடும்போது அதிக அளவில் ரத்தம் இழப்பதற்கு வாய்ப்புண்டு.  தலைக்கு ஆபத்து வருவது பெரும்பாலும் சாலை வாகன விபத்துகளால்தான். அடுத்து, நாம் விளையாடும் போது, நடை தவறி கீழே தரையில் விழும்போது, அடிதடி சண்டை போடும்போது, துப்பாக்கிச்சூடு என்று பல வழிகளில் தலையில் காயங்கள் உண்டாகின்றன. தலையில் காயம் ஏற்படும்போது தோல் கிழியும். கபால எலும்பு உடையும். கபால எலும்புக்கும் மூளைக்கும் நடுவில் இருக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்து போகும். மூளை அதிர்ந்து போகும். மூளைத் திசுக்களும் கிழிபடலாம். மூளைக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் வெடித்து மூளையின் உள்ளேயே ரத்தம் உறையலாம். கண் பார்வை பறி போகலாம். காதுச் சவ்வு கிழிந்து காது கேட்காமல் போகலாம். இப்படிப் பல ஆபத்துகள் நெருங்கலாம். ஆகவே, தலைக்காயத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.தலைக்காயங்கள் இரண்டு வகைப்படும். 1. மூடிய காயங்கள். 2. திறந்த காயங்கள். மூடிய காயங்களில் ரத்த ஒழுக்கு இருக்காது. தோலுக்கு அடியில் ரத்தம் உறைந்து வீங்கியிருக்கும். இதனை ‘ரத்தக்கட்டு’ என்று சொல்வார்கள். திறந்த காயங்களில் ரத்தம் வெளியேறும். தோல் மட்டும் சிதைந்திருந்தால் ‘சிராய்ப்பு’ என்கிறோம். இதில் ரத்தம் லேசாகவே கசியும். தோல் கிழிந்திருந்தால் அது ‘வெட்டுக்காயம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ரத்தம் குபுகுபுவென்று நிறைய வெளியேறும். பல நேரங்களில் பார்ப்பதற்குத் தலைக்காயம் லேசாக இருக்கும். ஆனால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். கடுமையான தலைக்காயத்தின் அறிகுறிகள் இவை: காயம் பட்ட தலையில் குழி இருக்கும் அல்லது வீக்கம் இருக்கும். காதுக்குப் பின்புறம் வீக்கம் காணப்படும். காது மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறலாம். அல்லது நிறமற்ற திரவம் கசியலாம். கண்ணில் ரத்தக்கசிவு காணப்படலாம். முகம் வீங்கலாம். கிறுகிறுப்பு வரும். வாந்தி வரக்கூடும். சுயநினைவில் மாற்றம் இருக்கலாம். சிலர் பிரமை பிடித்ததுபோல இருப்பார்கள். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்.
 
கபால எலும்பு முறிந்திருந்தால் அல்லது மூளைத் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வடியும். கண்கள் முன்பக்கமாகத் தள்ளப்படலாம். காதுக்குப் பின்புறம் கடுமையான வீக்கம் உண்டாகும். அடிபட்டவருக்கு மயக்கம் உண்டாகும். வலிப்பு வரலாம். சமயங்களில் தலையில் அடிபடும்போது மூளை மட்டும் கபாலத்துக்குள் அதிர்ந்து அசைந்திருக்கும். இதனாலும் மயக்கம் வரலாம்.  தலைக்காயம் எதுவாக இருந்தாலும் உடனடியாக முதலுதவி செய்யப்பட வேண்டும். பஞ்சை ஈரப்படுத்திக் கொண்டு அல்லது சுத்தமான பருத்தித் துணி கொண்டு காயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்.டெட்டால் இருந்தால் அதைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். ‘ஆன்டிபயாடிக்’ களிம்பு கைவசமிருந் தால், அதைக் காயத்தில் தடவி, சுத்தமான துணியால் தலையைச் சுற்றி அழுத்தமாகக் கட்டுப் போட வேண்டும். தலைக்காயத்திலிருந்து வெளியேறும் ரத்தக்கசிவை நிறுத்துவதுதான் முதலுதவியின் முக்கிய நோக்கம் என்பதால் பஞ்சு, துணி, பாண்டேஜ் எதுவும் கிடைக்காதபோது, முதலுதவி செய்பவர் தன் உள்ளங் கையால் தலைக்காயத்தின் மீது சுமார் 10 நிமிடங்களுக்கு அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாலே ரத்தம் கசிவது நின்று விடும். அதற்குள் துணி, கைக்குட்டை என்று ஏதாவது வைத்துக் கட்டுப் போட்டு விடலாம். காயத்திலிருந்து ரத்தம் கடுமையாக வெளியேறினால் கழுத்தைச் சுற்றி தாடையோடு ஒரு கட்டுப் போடலாம். கபால எலும்பில் முறிவு உள்ளது என்பது தெரிந்தால் தலையையும் கழுத்தையும் அசைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தலையில் காயம் பட்டவருக்குக் கழுத்து எலும்பிலும் முறிவு உண்டாகியிருக்கலாம். அப்போது கழுத்தை அசைத்தால் கழுத்தில் எலும்பு முறிவு அதிகப்பட்டுவிடும். அல்லது கபாலத்தின் உள்ளே ஏற்கெனவே ஏற்பட்டுள்ள ரத்தக்கசிவு அதிகப்பட்டுவிடும். இதைத் தவிர்க்க தலையில் அடிபட்டவரை சமதளத்தில் மல்லாந்து படுக்க வைக்க வேண்டும். அந்த நபர் சுவாசிக்கச் சிரமப்பட்டாலோ, சுயநினைவை இழந்திருந்தாலோ செயற்கை சுவாசம் மற்றும் இதய மசாஜ் தரப்பட வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எந்த ஒரு விபத்து நடந்தாலும் முதல் ஒரு மணி நேரம் என்பதை ‘பொன்னான நேரம்’ என்கிறோம். அதற்குள் அவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிருக்கு ஆபத்து வருவது குறையும். ஆகவே, அடிபட்டவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அல்லது ஒரு வாகனம் மூலம் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
 
பாதுகாப்பான பயணம்தான் தலைக்குப் பாதுகாப்பு தரும். குறிப்பாக, இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம். வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.சாலை விதிகளை மீறக்கூடாது. மித வேகம் நல்லது. அதிவேகம் ஆபத்தானது. செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது பாதுகாப்பு ‘சீட் பெல்ட்’ அணிந்து கொள்ள வேண்டும். பயணம் செய்யும் வாகனங்களில் குழந்தைகளை அமரச் செய்ய வேண்டும்; நிற்க வைக்கக்கூடாது. பெண்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது துப்பட்டாவை முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும். சைக்கிள் பயணம் என்றால், அதன் சுழலும் செயின் முழுவதும் மூடும்படியான உலோகக் கவசமுள்ள சைக்கிளில் பயணிப்பது நல்லது.

அன்னாசி


பதினைந்தாம் நூற்றாண்டில் கடல் வழியே உலகைச் சுற்றி வந்த கொலம்பஸ், தான் கண்டுபிடித்த ‘புது’ உலகத்திலிருந்து எதையெதையோ ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். அவற்றில் ஒரு விசேஷமான பழம்.கொலம்பஸுக்கு அந்தப் பழம் பிடித்திருக்க வேண்டும். தன்னுடைய நாட்டு மக்களுக்கு அதனை அறிமுகப்படுத்த விரும்பினார். அதற்காக ஏற்றுமதி செய்தார். ஆனால், நீண்ட கப்பல் பயணத்தில் அந்தப் பழங்கள் எல்லாம் அழுகிவிட்டன. கொலம்பஸ் நொந்துபோனார்.நல்லவேளையாக, ஒரே ஒரு பழம் மட்டும் அழுகாமல் தப்பியிருந்தது. அதைத் தன்னுடைய அரசர் ஃபெர்டினாண்ட்க்கும் அரசி இசபெல்லாவுக்கும் பரிசாகக் கொடுத்தார் கொலம்பஸ்.அந்தப் பழத்தின் தலையில் கிரீடம்போல இலைகள் முளைத்திருந்தன. சொரசொரப்பான தேகம். தொட்டுப் பார்த்தால் கெட்டியாக இருந்தது, முகர்ந்து பார்த்தால் ஆளை மயக்கியது.வாசனையிலேயே அசந்துபோன அரசர், அந்தப் பழத்தை வெட்டிச் சாப்பிட்டார். ஆஹா! நான் இதுவரை இப்படி ஒரு பழத்தைச் சாப்பிட்டதில்லையே" என்று கிறங்கிவிட்டார்.உடனடியாக இந்தப் பழத்தை நம் நாடு முழுவதும் விளைவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இனிமேல் தினம் நான் இதைச் சாப்பிடவேண்டும்!"

அரசர் நினைத்ததுபோல அது அத்தனை சுலபம் இல்லை. அந்தப் பழம் சில குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில், மண் வகைகளில்தான் விளையும். அன்றைய ஐரோப்பாவுக்கும் அதற்கும் ஒத்துப்போகவில்லை.அதனால் என்ன? மன்னர் நினைத்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் அதைத் தருவிக்கலாமே?அன்று தொடங்கி, அந்தப் பழம் அரசர்களின் விருப்பமான விஷயமாகிவிட்டது. எவ்வளவு செலவானாலும் சரி, அந்தப் பழம் எங்கே விளைகிறதோ அங்கிருந்தே நேரடியாக இறக்குமதி செய்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.அபூர்வமாக மட்டுமே கிடைக்கும் அந்தப் பழத்தை அவர்கள் ‘அரசர்களின் பழம்’ (Fruit of the kings)என்று செல்லமாக அழைத்தார்கள்.இன்றைக்கு, அந்த அருமையான பழம் உலகம் முழுவதும் கிடைக்கிறது. மன்னர்கள் மட்டுமல்ல, நம்மைப் போன்ற மக்களும் வாங்கிச் சாப்பிடலாம்.ஆகவே, ‘அரசர்களின் பழம்’ என்ற பெயரைத் திருப்பிப்போட்டு, அதனைப் ‘பழங்களின் அரசன்’ (King of fruits) என்று மாற்றிவிட்டார்கள். ‘பைனாப்பிள்’ என்று ஆங்கிலத்திலும், ‘அன்னாசி’ என்று தமிழிலும் அழைக்கப்படும் சுவையான பழம் தான் அது!கடைக்குச் செல்கிறீர்கள். அன்னாசிப் பழம் ஒன்றைக் கையில் எடுக்கிறீர்கள். கடைக்காரரிடம் இந்தப் பழம் என்ன விலை?" என்று விசாரிக்கிறீர்கள்.உண்மையில் உங்கள் கேள்வியே தவறு. அது ‘பழம்’ அல்ல, ‘பழங்கள்’! 

ஆமாம், நாம் ஒரு பழமாக நினைக்கும் அன்னாசிக்குள் பல பழங்கள் ஒருங்கிணைந்து கூட்டணி சேர்ந்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் "Multiple Fruit' என்று அழைக்கிறார்கள்.சந்தேகமாக இருக்கிறதா? ஓர் அன்னாசிப் பழத்தைக் குறுக்கே நறுக்கிப் பாருங்கள், மையத்தில் ஒரு தண்டு தெரியும், அதைச் சுற்றிச் சிறு கண் போன்ற பகுதிகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒரு பழம். மொத்தமாகச் சேர்ந்து சொரசொரப்பான வெளித்தோலுடன் வளர்கின்றன!பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் அன்னாசிப் பழங்கள் அதிகபட்சம் ஓரிரு கிலோ எடைதான் இருக்கும். ஆனால், விவசாயிகள் அவற்றைப் பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், அவை மிகப் பெரியதாக வளர்ந்து எட்டு, ஒன்பது கிலோ எடைவரை செல்லக்கூடும்.அன்னாசி புதர் போன்ற சிறு செடிகளில் விளைகிறது. பொதுவாக மலைச் சரிவுகளில்தான் அன்னாசி நன்றாகச் செழித்து வளரும். மலையோரக் கிராமங்கள் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் இதனைப் பயிரிடுகிறார்கள்.தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்க அன்னாசியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.‘பைனாப்பிள்’ என்ற ஆங்கிலச் சொல்லை, பைன் + ஆப்பிள் என்று பிரிக்க வேண்டும். இந்தப் பழத்தை மேலோட்டமாகப் பார்த்தால் பைன் மரக் கூம்பைப் போல் சொரசொரப்பாக இருக்கும், ஆனால் வெட்டிச் சாப்பிட்டால் ஆப்பிளைப்போல ருசிக்கும் என்பதால் அப்படிப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.இதனைத் தமிழில் ‘அன்னாசி’ என்று அழைக்கிறோம். உண்மையில் இது போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்து வந்த பெயர். செந்தாழை, பிருத்தி, அன்ன தாழை போன்ற மாற்றுப் பெயர்களிலும் இதனை அழைப்பது உண்டு.இந்தச் செடியின் தாவரவியல் பெயர் ‘அனனாஸ்’. இதற்கு ‘மிக நல்ல பழம்’ என்று அர்த்தம்.அன்னாசிப் பழத்தைத் தோல் சீவித் துண்டாக்கி அப்படியே சாப்பிடலாம். பல நாடுகளில் இதன்மீது உப்பு, காரப்பொடியைத் தூவி அப்படியே சாப்பிடுவார்கள். அப்படியே குச்சியில் குத்தி எடுத்து ஐஸ்க்ரீம்போலச் சுவைக்கிறவர்கள் உண்டு. இதேபோல, அன்னாசிப் பழரசமும் மிகச் சுவையானது. இந்தப் பழத்திலிருந்து ஜாம் தயாரிக்கிறார்கள், ஜெல்லி தயாரிக்கிறார்கள், கேக் போன்ற இனிப்புகளின் மீது அலங்காரமாக நறுக்கி வைக்கிறார்கள்!

பிட்ஸாவில் பொதுவாகக் காரமான சமாசாரங்கள், காய்கறிகள்தான் சேர்க்கப்படும். ஆனால் அன்னாசிக்கு மட்டும் அங்கே விதிவிலக்கு, இனிப்பான அன்னாசிப் பழத்துண்டுகளைத் தூவிய பிட்ஸா உலகம் முழுக்கப் பிரபலம்.இவை தவிர, அன்னாசிப் பழத்தைச் சமைத்துச் சாப்பிடுகிற பழக்கமும் இருக்கிறது. குறிப்பாக, அன்னாசி அல்வா பலருக்குப் பிடித்த இனிப்பு வகை. அன்னாசிப் பழத்தில் ரசம், பச்சடி, சாலட் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். கேசரியில் இதனைத் துண்டாக்கிச் சேர்ப்பது தனி சுவையைத் தரும்.அன்னாசியில் பெரும்பகுதி தண்ணீர்தான். ஆகவே, இதை நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பும், ஆனால் தொப்பை போடாது.பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் ஆகியவை இதில் ஏராளமாக உண்டு. வைட்டமின் இயும் அதிகமாக இருக்கிறது.அன்னாசிப் பழத்துக்கு மருத்துவ குணங்களும் நிறைய உண்டு. உடலில் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தும், பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.ஜலதோஷம், சுவாசப் பிரச்னைகளுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. வயிற்றில் புழுக்கள் இருந்தால் அவற்றை நீக்கிக் குணப்படுத்தும். வியர்வை, சிறுநீர் சுரப்பில் இருக்கக்கூடிய கோளாறுகளை அகற்றும். உடலில் காயம்படும்போது ரத்தம் அதிகம் வெளியேறாமல் காக்கும்.‘பைனா’வை நேரடியாகவோ, அல்லது, பட்டு, பாலியெஸ்டருடன் சேர்த்தோ நெசவு செய்யலாம். இதிலிருந்து சில விசேஷமான ஆடைகளைச் செய்கிறார்கள். மேஜை விரிப்பு, பைகள், பாய்கள் போன்றவற்றையும் தயாரிக்கிறார்கள்.அன்னாசியை நறுக்கும்போது நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற தோல், இலைகள் போன்றவற்றுக்கும் பயன் இருக்கிறது. வினிகர் உற்பத்தியிலும், வேறு சில பானங்களைத் தயாரிக்கும்போதும் இவற்றைச் சேர்க்கிறார்கள், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் கொடுக்கிறார்கள்.

என்.சொக்கன்

படேல் ஒரு மதவாதியா?


அமெரிக்காவிலிருக்கும் சுதந்திர தேவியின் சிலையை விடவும் பிரமாண்டமாக சர்தார் படேலுக்கு ஒரு சிலையை நிறுவத் திட்டமிட்டு வருகிறது குஜராத் அரசு. அதன் ஆரம்ப விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அதே மேடையில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசும்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவை மறைமுகமாகத் தாக்கினார்.

சர்தார் வல்லபாய் படேல் முதல் இந்தியப் பிரதமராக வரவில்லையே என்று ஒவ்வொரு இந்தியரும் இன்றும் வருந்துகின்றனர். அவர் அன்று மட்டும் பிரதமராகியிருந்தால், இன்று நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்" என்ற அவரது பேச்சு நேருவின் கொள்கைகளினால் தான் மதவாதம் வளர்ந்தது என்ற தொனியில் இருந்தது.  பிரதமர் மன்மோகன்சிங் பேசும் போது, படேல் உண்மையான மதச்சார்பற்றவர். வல்லபபாய் படேல் இருந்த கட்சியில் நான் இப்போது இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்" என்று கூறிப் பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து அத்வானி, முழுமையான மதவாதி என படேலை வர்ணித்தவர் நேரு" என்றும், படேலை மதவாதி என்று கூறியவர்கள், இப்போது அவரை மதச்சார்பற்றவர் என்றும், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் காங்கிரஸ் காரர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்" என்று தன் ‘பிளாக்’கில் தாக்கியிருக்கிறார்.

உண்மையில் அதுதான் நேருவின் கருத்தா? படேல் மதவாதியா? படேலின் செயலராக இருந்த எம்.கே.கே நாயர் ஐ.ஏ.எஸ். தமது "The story of an era told without ill will" என்ற தம் புத்தகத்தில் அன்று நடந்ததைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பக்கங்களிலிருந்து, சுதந்திரம் அடைந்தபோது இந்தியா முழுவதும் தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களை இந்தியப் பேரரசுடன் இணைக்கும் முயற்சியில் உள்துறை அமைச்சராக இருந்த படேல் ஈடுபட்டார். ஐதராபாத் நிஜாம் தமது சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் சேர்க்க விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக, பாகிஸ்தானுக்குத் தமது தூதரை அனுப்பினார். பாகிஸ்தானுக்குப் பெருமளவில் பணமும் அளித்தார். நிஜாமின் ஆதரவாளர்களும் அவரது படையினரும் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். அப்போது நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், ஐதராபாத்தில் நடந்த சம்பவங்களை விளக்கிய படேல், அங்கு ராணுவத்தை அனுப்பி அதை இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

வழக்கமாக அமைதியாக, கண்ணியமாகப் பேசக்கூடிய பிரதமர் நேரு, இதனால், கோபமடைந்து படேலைப் பார்த்து, நீங்கள் ஒரு முழுமையான மதவாதி. உங்கள் பரிந்துரையை ஏற்கமாட்டேன்" என்று சத்தமாகப் பேசினார். அதைக் கேட்டு படேல் அமைதியாக இருந்தாலும் அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இந்த விஷயம் அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் கவனத்துக்குச் சென்றது. அவர் நேருவையும், படேலையும் ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.  அப்போது ‘ஐதராபாத்தில் கன்னியாஸ்திரிகள் சிலரை நிஜாமின் படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இங்கிலாந்து தூதரிடமிருந்து ராஜாஜிக்குக் கடிதம் வந்ததைக் காட்டினார். அதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு அழுத நேரு, இனி ஒருகணம் கூட தாமதிக்கக் கூடாது. அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்" என்றார். சொந்த நாட்டிலேயே ராணுவத்தால் ஒரு இனம் தாக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில், உணர்ச்சி வேகத்தில் நேரு சொன்ன வார்த்தைகள் அவை. ராஜாஜி தந்த அறிவுரையில் உண்மை நிலையை உணர்ந்து உடனடியாக மாற்றிக் கொண்ட கருத்து அது.நம் அரசியல்வாதிகள் தலைவர்களின் வார்த்தைகளைத் தங்கள் வசதிக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை எப்போதுதான் மாறுமோ?

ரமணன்

ஆனந்த் - கார்ல்சன்

 
ஆனந்த் - கார்ல்சன் இடையேயான உலக சாம்பியன்ஷிப் போட்டியினால் இந்திய செஸ் வளர்ச்சியின் மீதான கவனம் அதிகமாகியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நல்ல செய்தி. FIDE rated players என்று சொல்லப்படுகின்ற அதிகப் புள்ளிகள் கொண்ட வீரர்களில் இந்தியாவும் பிரான்ஸும் இப்போது சமநிலையில், முதலிடத்தில் உள்ளன. இந்தியாவின் முதல் FIDE rated player, விஸ்வநாதன் ஆனந்த் அல்ல. மேனுவல் ஆரோன் (FIDE பட்டியலில் வர ஆயிரம் புள்ளிகள் இருந்தாகவேண்டும்.) இந்தியாவின் முதல் இன்டர்நேஷனல் மாஸ்டர் இவர்தான். ஆனந்தின் வரவுக்குப் பிறகு இந்திய செஸ் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. அதுவும் கடந்த பத்து வருடங்களில் பலமடங்கு அதிகமாகியிருக்கிறது. இந்தியாவில் இப்போது 34 கிரான்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு, குஜராத் பள்ளிகளில் செஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு எந்த நாடுகளை விடவும் இந்தியாவில்தான் அதிகமாக நபர்கள் செஸ் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரான்சு, கடந்த 10 வருடங்களாக முதலிடத்தில் இருக்கிறது. எப்படியும் அடுத்த மார்ச், ஏப்ரலில் பிரான்சைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை டி.வி.யில் லைவாகப் பார்ப்பது புதிய அனுபவம், அதுவும் கமென்ட்ரியோடு. கமென்டேட்டர்களில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருப்பவர், சூசன் போல்கர். ஹங்கேரி, புதாபெஸ்டைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வாழ்கிறார். பிரபல செஸ் வீராங்கனை ஜுடித் போல் கரின் சகோதரி. சூசன், பெண்களில் முதல் கிரான்ட் மாஸ்டர் என்கிற பெருமையை உடையவர். ஆண்கள் கோலோச்சிக் கொண்டிருந்த செஸ் விளையாட்டில் ஆளுமை செலுத்திய முதல் வீராங்கனை. உலகில் எங்கு செஸ் போட்டிகள் நடந்தாலும் அதைப் பற்றிய விவரங்களைத் தம் இணையதளத்தில் வெளியிடுகிறார். அடிக்கடி செஸ் தொடர்பான போட்டிகளை வாசகர்களுக்கு வைப்பார். சூசன், 1990களில் ஆனந்துடன் பல போட்டிகளில் ஆடியிருக்கிறார்.  

அப்போது ஆனந்த் பரபரப்பாக ஆடுவார். எவ்வளவு பெரிய கிரான்ட் மாஸ்டராக இருந்தாலும் அரை மணி நேரத்தில் தோற்கடித்து விடுவார். அவர் மூளை கம்ப்யூட்டர் போலச் செயல்படும்" என்கிறார். 
 
சரி, யார் அடுத்த உலக சாம்பியன்? ஆனந்தை லேசில் நினைக்க முடியாது. இது மாதிரியான போட்டிகளில் அவர் மிகவும் கடினமாக ஆடுவார். ஆனால், கார்ல்சன் அடுத்த ராஜாவாகத் தயாராக இருக்கிறாரா என்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்கிறார்.
 
ச.ந.கண்ணன்

அருள்வாக்கு - மனோபாவம் அவசியம்

சிஷ்யன் பண்ணுகிற பாபம் குருவையே போய்ச் சேருகிறது. இவனுக்கு வெறும் படிப்பை மட்டும் சொல்லித் தராமல் இவனை ஒழுக்கமுள்ளவனாக்கவும் அவர் பொறுப்பு எடுத்துக் கொள்கிறார். எடுத்துக் கொண்ட பொறுப்பைச் சரியாக நிறைவேற்றாவிட்டால், அதற்குத் தண்டனை உண்டு. சிஷ்யனை அவர் யோக்கியனாக்க முடியவில்லை, அவன் ஒரு பாபம் செய்கிறான் என்றால், அந்தப் பாபம் சிஷ்யனைத் தாக்காது. அவனைச் சீர்த்திருத்தத் தவறிய குருவையே சென்றடையும்.
 
இப்போது ஸ்கௌட் காம்ப் (சாரணர் முகாம்) என்று குழந்தைகளை ஒரு மாஸம், அரை மாஸம் வெளியூருக்கு அனுப்புகிறீர்கள் அல்லவா? இதையே கொஞ்சம் விஸ்தரித்து ஒரு ஆசார்யனிடத்தில் ஒரு வருஷமாவது கூட வசித்து பிக்ஷாசர்யம் பண்ணி வரும்படியாக ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொல்கிறேன். இதனால் அநேக நல்ல பழக்கங்கள், கட்டுப்பாடுகள் உண்டாகும்; குரு பக்தி என்பதன் த்வாரா (வழியாக) இத்தனையும் ஏற்படும்.
 
குழந்தைகளைத் தங்களோடு வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கப் பிரியப்படுகிற குருமார்களையும் அவர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைக்கக்கூடிய பெற்றோர்களையும் சமூக உணர்ச்சியின் மூலம்தான் உண்டாக்க வேண்டும். இந்த ஸஹாயத்தைச் செய்யும்படியாக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். படிப்பு முடிந்த பின் தக்ஷிணை தர முடியாத ஏழைக் குடும்பத்தினருக்காகவும் மற்றவர்கள் தரவேண்டும். அநேகமாக இப்படிப்பட்ட வசதியில்லாதவர்கள்தான் குழந்தைகளைக் குருகுலவாஸத்துக்கு அனுப்பக்கூடியவர்கள். அவர்களுக்கான ஸஹாயத்தை அங்கங்கே பத்துப்பேர் சேர்ந்து பண்ணினாலும் போதும். தனியாகப் பெரிய ஸ்தாபனம் என்று ஏற்படுத்தக்கூட வேண்டும். ஸ்தாபனம் கூடவே கூடாது என்று சொல்வதாக அர்த்தமில்லை. ஆனால் அப்படிப் பெரிய ஸ்கேலில் நடப்பதற்காக நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கிறேன். இப்போது நம்மளவில் சாத்யமான அளவுக்கு ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறேன். நாம் ஒவ்வொருவரும் சொந்த அக்கறை (Personal interest) காட்டி, தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்பதே முக்கியம். இந்த மனோபாவம் வருவதுதான் அவசியம்.  

எனவே நாம் இதில் முயற்சி எடுக்க வேண்டும். யார் வருவார்கள் என்று முயற்சி பண்ணாமலே இருந்துவிடக் கூடாது. மனப்பூர்வமாக முயற்சி பண்ணினால் பத்துப் பேராவது பலன் அடையாமல் போக மாட்டார்கள்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Sunday, November 17, 2013

நவ.17 திருக்கார்த்திகை

 
காலத்தாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப்பெரிது என்பார் திருவள்ளுவர். 
 
சிறிய நன்றிக்கே இவ்வளவு மகத்துவம் என்றால், நம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் மீது, நாம் நன்றி கொள்ள வேண்டும் என்பதற்கு, முருகப்பெருமானின் பிறப்பு ஒரு உதாரணம். அவர் தாயின் சம்பந்தமின்றி அவதரித்தவர்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் அந்த பொறிகள் விழுந்து, ஆறு குழந்தைகளாக மாறின. அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க, ஆறு பெண்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், 'கார்த்திகை பெண்கள்' எனப்பட்டனர். பிள்ளைகளுக்கு பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். இந்த நன்றிக்கடனுக்காக, அவர்கள் ஆறுபேரையும் ஒரே நட்சத்திரமாக மாற்றி, வானமண்டலத்தில் இடம் பெற செய்தார் சிவன். அதுவே கார்த்திகை நட்சத்திரம்.
 
முருகன் பிறந்தது விசாக நட்சத்திரத்தில். ஆனால், தன் பிறந்த நாளைக் கூட அவர் வருடம் ஒருமுறை தான் கொண்டாடுவார் (வைகாசி விசாகம்). ஆனால், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெண்களுக்குரிய, எல்லா கார்த்திகை நட்சத்திர நாட்களிலும், அந்த தேவியரையும் நினைத்து, தன்னையும் வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக வரம் அளித்தார். இதனால் தான் இன்றும், 'கார்த்திகை விரதம்' பிரபலமாக இருக்கிறது. இந்த சம்பவத்தின் மூலம், தங்களை வளர்த்து ஆளாக்கியவர்களை மறவாத உள்ளம் வேண்டும் என்ற நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். கார்த்திகை விரதம் துவங்குபவர்கள் திருக்கார்த்திகையில் துவங்கி, ஒரு வருடம் தொடர்ந்து அனுஷ்டித்தால் நினைத்தது நிறைவேறும்.
 
வளர்த்தவர்களைத் தான் என்றில்லை, நமக்கு ஒருவர் சிறு உதவி செய்தாலும், அதைப் பெரிதாகக் கருதி, நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என்பதை கார்த்திகை திருநாள் நமக்கு உணர்த்துகிறது.
 
முருகன் ஒளி வடிவாகப் பிறந்தவர். அந்த ஒளியை உருவாக்கியவர் சிவபெருமான். இதனால், தந்தைக்கு திருவண்ணாமலையிலும், மகனுக்கு திருப்பரங்குன்றம் மலையிலும் தீபம் ஏற்றுவர். இன்னும் சிறு சிறு மலை முருகன் கோவில்களிலும் கூட கார்த்திகை தீபம் ஏற்றுவதுண்டு.சிவன் பெருஞ்சுடராக விளங்குகிறார். அவர் நெற்றியில் இருந்து சிறு சிறு குழந்தைகள் உருவாயின. அதுபோல, திருவண்ணாமலை தீபம் என்னும் பெருஞ்சுடரில் இருந்து, நம் வீட்டு சிறு அகல்களில், குட்டிக் குழந்தைகளாக ஒளி வீசுகிறது. முருகன் சிவாம்சம் கொண்டவர். அதாவது, சிவனும், முருகனும் நம் வீட்டு தீபங்களில் ஒளி வீசுகின்றனர் எனலாம்.முருகப்பெருமானை தீபத்திற்கு ஒப்பிடுகிறார் அருணகிரிநாதர். 'தீபமங்களஜோதீ நமோநம...' என்று திருப்புகழில் அவர் பாடுகிறார். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்த போது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக, அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட, கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும்.விளக்கொளி இல்லாவிட்டால் வீடு இருண்டு விடும். அதுபோல மனதில் ஒளி இல்லாவிட்டால், உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும். கார்த்திகை திருநாளில் வீடு நிறைய தீபம் ஏற்றுவது மட்டுமல்ல, நம் மனதிலும் நற்குணங்களாகிய தீபங்களை ஏற்றுவோம்.

தி.செல்லப்பா

Friday, November 15, 2013

ஓ பக்கங்கள் - ஒரு டிராஜெடி பற்றிய காமெடி! ஞாநி

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசிலிருந்து யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரி தமிழக சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாகத் தீர்மானம் நிறைவேறச் செய்திருக்கிறார் ஜெயலலிதா.

‘இந்தியா கலந்துகொள்ளும். பிரதமர் தான் செல்லமாட்டார். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்வார்’ என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்த பின்னர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் அவசர அவசரமாக இரண்டாம்முறை இதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார் ஜெ. இதற்கு ஏதாவது அர்த்தம், பயன், விளைவு இருக்கமுடியுமா என்று பார்த்தால், ஒன்றும் கிடையாது. 

குர்ஷித் போய்விட்டார். சட்டமன்றத் தீர்மானத்துக்கு ஒரு மரியாதையும் இல்லை.  ஒரு வாதத்துக்காக, ‘குர்ஷித்தையும் போகவேண்டாம் என்று பிரதமர் நிறுத்திவைத்து தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு மரியாதை செலுத்தியிருந்தால்...?’ என்று கற்பனை செய்வோம். அப்போதும் அதன் விளைவு என்ன? ஒன்றும் கிடையாது. இந்தியா கலந்து கொள்ளவில்லை என்பதால் காமன்வெல்த் மாநாடு ரத்து செய்யப்பட்டிராது. அடுத்த இரு வருடங்களுக்கு இலங்கைதான் காமன்வெல்த்தின் தலைமையில் இருக்கும். ராஜபட்சேதான் காமன்வெல்த் தலைவராக இருப்பார். இந்தியா கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் இதுதான் யதார்த்த நிலைமை. ராஜபட்சேதான் அடுத்த இரு வருட காமன்வெல்த் தலைவர். அந்த காமன்வெல்த்தின் கூட்டங்களிலே இலங்கை மீதான மனித உரிமை மீறல், போர்க் குற்றங்களுக்கான கண்டனங்களோ, விசாரணையோ நடக்கும் வாய்ப்பே இல்லை. காமன்வெல்த்தில் இந்தியா பேசினாலும் பேசாவிட்டாலும், அது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வை வளமாக்கவோ, 13 வது திருத்தத்தைக் கொண்டு வந்து அரசியல் சம உரிமைகளைத் தரவோ, இலங்கையின் போர்க்குற்றவாளிகளை உலக நீதிமன்றத்தில் நிற்கவைத்து விசாரிக்கவோ துளியும் உதவப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்பு அல்ல காமன்வெல்த். இது ஒரு முன்னாள் அடிமைகளும் ஆண்டானும் சேர்ந்து இப்போது சமமாகிவிட்டோம் என்று நம்பிக்கொண்டு ஒன்றாக விருந்து சாப்பிட்டு மகிழும் ‘க்ளப்’ மட்டும்தான். தமிழ்நாட்டில் நேற்று முளைத்த தமிழகப் பிரிவினைக் கனவுடைய சிறு குழு முதல், இலங்கைப் பிரச்னையைச் சமாளிப்பதில் பழம் தின்று கொட்டை போட்டவர்களான கருணாநிதி, ஜெயலலிதா வரை எல்லோருக்கும் இதுதான் யதார்த்தம் என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்தப் பிரச்னையை எழுப்பி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி கிடைத்த லாபத்தை அடையலாம் என்பதே வெவ்வேறு கட்சிகளின் கணக்கு.சட்டமன்றத்தில் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன் இருமுறை தீர்மானம் நிறைவேற்றுகிற முதலமைச்சர் நியாயமாகச் செய்திருக்க வேண்டியது என்ன? அத்தனை கட்சிகளின் பிரதிநிதிகளையும் தம்முடன் அழைத்துக் கொண்டு தில்லிக்குப் போய் நேருக்கு நேர் பிரதமரைச் சந்தித்து, ‘காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்றுங்கள், வேறு நாட்டில் நடந்தால் மட்டுமே மாநாட்டுக்கு வருவேன் என்று சொல்லுங்கள்,’ என்றெல்லாம் சொல்லியிருக்க வேண்டும். நேரில் சொன்னால் நடந்துவிடுமா என்று வாதிடலாம். தீர்மானம் போட்டால் மட்டும் நடக்கிறதா என்ன? நேருக்கு நேர் போய் பிரச்னையைப் பேசும்போது, இருதரப்பும் ஒரு மையப் புள்ளியில் சந்திக்க வேண்டிய கட்டாயமேனும் ஏற்படும்.இலங்கை அரசை உலக அரங்கில் தனிமைப்படுத்தி, பிறநாட்டு அரசுகள் உதவியுடன் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனையும் மக்களுக்குப் பரிகாரமும் பெற்றுத் தர, தனிமைப்படுத்தும் உத்திகளில் ஒன்றுதான் காமன்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை என்று வாதிடலாம். 

ஆனால் அதை எப்போது செய்திருக்க வேண்டும்? 2011லேயே அடுத்த மாநாடு இலங்கையில் என்பதும் அதையொட்டி அடுத்த தலைவர் இலங்கை என்பதும் அறிவிக்கப்பட்டுவிட்ட விஷயங்கள். அப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையம் முன்பு இலங்கையை நிறுத்தக் காட்டிய முனைப்புக்குச் சமமான முனைப்புடன் யாரும் காமன்வெல்த் முடிவை எதிர்க்கவில்லை.அடுத்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று வற்புறுத்தும்படி இந்தியப் பிரதமரை தமிழகக் கட்சிகள் அப்போது நிர்ப்பந்திக்கவில்லை. காரணம் உடனடியாகத் தேர்தல் வாய்ப்பு அப்போது இல்லை. இப்போது தேர்தலை மனத்தில் வைத்து மட்டுமே எல்லாம் நடக்கிறதே தவிர, ஈழத் தமிழரைக் கருதியே அல்ல.ஒப்புக்குத் தீர்மானம் நிறைவேற்றுகிறோம் என்று தெரிந்தே எல்லோரும் நாடகமாடுகிறார்கள். தீர்மானம் போட்டால் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையுள்ள விஷயங்களில் நிச்சயம் தீர்மானம் போடமாட்டார்கள். கூடங்குளம் அணு உலையையே எடுத்துக் கொள்வோம். இரண்டு வருடங்களாக மக்கள் போராட்டம் நடக்கிறது. சுமார் ஒரு வருடத்துக்கு மேல் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்கள். இன்று வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் ஒரு விலங்கு இறந்த செய்தி கேட்டதும் முதலமைச்சர் அங்கே சென்று இதர மிருகங்களின் நிலையைப் பார்வையிடுகிறார். ஆனால் கூடங்குளத்துக்கு ஒருமுறை கூடப் போய் மக்களைப் பார்த்ததில்லை. ‘இன்னும் 15 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கிவிடுவோம்’ என்று இரண்டு வருடம் வாதா வாங்கிக் கடைசியில் தொடங்கிவிட்டோம் என்று மத்திய அரசு அறிவித்த மின் உற்பத்தி ஏன் ஒரு சில வாரம் கூட நீடிக்கவில்லை? அணு உலையில் என்ன நடக்கிறது என்று மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடியுமா? முடியாது. நிழல் யுத்தம் நடத்துவது பாதுகாப்பானது. நிஜ சண்டைகள் போட்டால், சி.பி.ஐ.யும் வழக்குகளும்தான் வரும். இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாகச் சில மாதங்களாக அரசியல் கட்சிகளும் சில அமைப்புகளும் எழுப்பிய நவரச சுவை நிரம்பிய நாடகத்தின் உச்சகட்ட காமெடிக் காட்சிதான் தமிழக சட்டமன்றத்தின் ‘வரலாற்று சிறப்பு’ மிக்க தீர்மானம்.

Friday, November 08, 2013

அருள்வாக்கு - குரு!

 
சாந்தமும் விநயமும் இருந்த வரையில் வளர்ந்தது. இப்போது சாந்தத்தைக் கெடுத்து சலனத்தைக் கொடுத்துத் தடுமாற வைக்க எத்தனை உண்டோ அத்தனை சினிமாவும் கதைப் புஸ்தகங்களும், ஸ்கூலில் படிக்கிற நாளிலேயே வந்து சேர்ந்து விடுகிறது. காமம் புகுந்து விகாரப்படுத்தாத பிரம்மசரியம் என்பது படிக்கிறவனுக்கு இல்லை. சாந்தத்தைக் கெடுத்துச் சலனத்தைப் பெரிதாகக் கொடுக்கிற இன்னொரு சத்ரு குரோதம். அதைத்தான் பள்ளிக்கூட நாளிலிருந்தே இன்றைய அரசியல் கட்சிகள் பசங்களுக்கு ஊட்டி வருகிறது. சாந்தம் போய், விநயம் போய் அகம்பாவமும் கர்வமும் வந்தபின், அவற்றோடு கூட உண்மையான வித்யையும் போய் விட்டது.
 
பையன் வீட்டிலேயே ட்யூஷன் கற்றுக் கொண்டால் பையன் யஜமான், வாத்தியார் சேவகன் என்றே அர்த்தம். ஹாஸ்டலிலும், காலேஜிலும்கூடத் ‘தன் யஜமான்’ என்பதால் தான் ஸ்டிரைக் பண்ணுகிறான். வார்டனையும் ப்ரொபஸரையும் அடிக்கப் போகிறான். ஏனென்றால் இங்கெல்லாமும் முதலில் பையனிடம் கையை நீட்டிப் பணத்தை வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். குருகுலத்திலோ கடைசியாகத்தான் தக்ஷிணை. இம்மாதிரி விஷயங்களில் நம் பூர்விகர்களின் ஸைகாலஜி - நுட்பம் ஆச்சரியமாயிருக்கிறது! பல வருஷம் அவரோடு சேர்ந்து அன்பாகப் பழகினபின் சிஷ்யனுக்கே எதைத் தருவோம், எதைத்தான் தரக் கூடாது?" என்று நன்றியும் ஆர்வமுமாக இருக்கும். இம்மாதிரி சந்தர்ப்பத்தில் இந்திராணியின் குண்டலத்தைக் கொண்டு வா! நாகரத்தினத்தைக் கொண்டு வா!" என்று கேட்ட குருமாரும் உண்டு. ஆனால் இப்படிக் கேட்டவர்கள் அபூர்வமே. சிஷ்யனால் இம்மாதிரி அஸாத்யத்தையும் சாதிக்க முடிகிறது என்று காட்டி அவனைப் பெருமைப்படுத்தவே இவர்கள் இப்படிக் கேட்பார்கள். பொதுவில் எந்த குருவும் துராசை பிடித்து எதுவும் கேட்கமாட்டார். அல்ப சந்தோஷியாக எதிலும் திருப்திப்பட்டு விடுவார்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

விராத் கோலி - ரோஹித் சர்மா


உங்களுடைய 100 சதங்கள் சாதனை, யாரால் முறியடிக்கப்படும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு சச்சின் அளித்த பதில் : ‘என் சாதனையை விராத் கோலி, ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது.’ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் இல்லையே என்று ஒரு நிமிடமாவது யோசித்தீர்களா? ஒருநாள் போட்டியில், சச்சின் இல்லாத குறையை கோலி, ரோஹித் போன்ற இளம் வீரர்கள்தான் தீர்த்து வைக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு இவ்விருவரின் பங்களிப்பு மிக அவசியமாக இருக்கிறது. 2008ம் வருடம், விராத் கோலிக்குப் பல கதவுகளைத் திறந்தது. அவர் தலைமையிலான U19 அணி உலகக் கோப்பையை வென்றது. அந்த வருடம்தான் இலங்கைத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் தொடரில் ஓரளவு சிறப்பாகவே ஆடினார். நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது. ஆனால் அடுத்த தொடர்களில் இடம் பெறவில்லை. ஒரு வருடம் இந்திய அணியில் கோலி இல்லை. கம்பீருக்கு காயம் ஏற்பட்டபோது மீண்டும் அணிக்குள் நுழைந்தார். பிறகு, கோலியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐ.பி.எல்., கோலியின் திறமையைக் கொண்டுவந்த மாதிரி அவருடைய ஆக்ரோஷமான பக்கத்தையும் காண்பித்தது. இளமைத் துடிப்பு, கோபம், பொறுப்பற்றத்தன்மை போன்றவற்றால் திறமை வீணாகிவிடுமோ என்று பலரும் பயந்தார்கள். ‘கிரிக்கெட்டை விடவும் தான் பெரிய ஆள் என்று கோலி நினைத்துக் கொண்டிருக்கிறார்,’ என்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜென்னிங்ஸ் ஒருமுறை சொன்னது கோலியிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. விமர்சனங்களைப் பக்குவமாகக் கையாண்டார். ‘நான் செய்தது தவறுதான். திருந்திவிட்டேன்’ என்று பேட்டி கொடுத்தார். நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக ஆடி ரோஹித் சர்மாவை முந்திக்கொண்டு 2011 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார். இறுதி ஆட்டத்தில் சச்சினும் ஷேவாக்கும் முதலிலேயே அவுட் ஆனபின்பு, கம்பீருடன் ஜோடி சேர்ந்த கோலி, மேலும் விக்கெட்டுகள் இழக்காமல் பார்த்துக் கொண்டது, இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மிக மோசமாக டெஸ்டுகளில் தோற்றபோது, செஞ்சுரி அடித்த ஒரே பேட்ஸ்மேன், கோலி. 

சிபி முத்தரப்புத் தொடரில் அடித்த செஞ்சுரிகளால் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தார். தமக்கு முன்னால் ஆடவந்த ரைனா, ரோஹித் சர்மாவை கடந்து சென்றது இந்தத் தருணத்தில்தான். இலங்கையுடனான 3 ஒருநாள் ஆட்டங்களில் தொடர்ந்து செஞ்சுரிகள் அடித்தார். (அந்தச் சமயத்தில் 5 ஆட்டங்களில் 4 செஞ்சுரிகள் அடித்தார்.) இப்போது ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில், அதிரடியாக அடித்த 2 செஞ்சுரிகளும் கோலியை உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிவிட்டது. ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் கோலிதான் நெ.1.சச்சினின் டெஸ்ட் சாதனைகளை இங்கிலாந்தின் குக் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கோலியால் சச்சினின் ஒருநாள் செஞ்சுரி சாதனைகளைத் தாண்ட வாய்ப்புண்டு’ என்று மதிப்பிடுகிறார் கவாஸ்கர். ‘சச்சின் ஓய்வு பெறுகிறார் என்று ஆஸ்திரேலியர்கள் சந்தோஷப்பட வேண்டாம். அவருடைய வாரிசான கோலி அந்த இடத்தை நிரப்பிவிட்டார். சமீபத்திய இரண்டு செஞ்சுரிகளும் ஷார்ஜா செஞ்சுரிகளுக்குச் சமம்’ என்கிறார் ஐயன் சாப்பல். இது கோலியின் காலம்.

தோனிக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டனாகப் போகிறார் கோலி. துணைத்தலைவர் பதவிக்கு ஷேவாக், கம்பீர், ரைனா போன்றோர் நியமிக்கப்பட்டபோது அவர்கள் தோனிக்கு மாற்றாக இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றவில்லை. ஆனால், கோலிக்கு ஒரு கேப்டனாக நிறைய அனுபவங்கள் உண்டு. ஏற்கெனவே U19 அணி, ஐ.பி.எல்., ரஞ்சி அணிகளுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். இந்தியக் கிரிக்கெட்டில் கோலியை விடவும் நம்பிக்கை அளிக்கிற ஒரு கிரிக்கெட்டர் இல்லை.கடந்த ஆறேழு வருடங்களில், கொடுக்கப்பட்ட எல்லா வாய்ப்புகளையும் வீணடித்து, ஆனால் தொடர்ந்து அணியில் நீடித்தபோது, ரோஹித் சர்மாவால் எரிச்சலடையாத இந்திய ரசிகரே இல்லை என்று சொல்லலாம். ரோஹித் சர்மாவை என்ன செய்வது என்று பி.சி.சி.ஐ.யும் நீண்ட நாளாகக் கையைப் பிசைந்து கொண்டிருந்தது. வாய்ப்பு அளிக்கப்படும் போதெல்லாம் வீணடித்து விடுவார். ஆனால், அவ்வப்போது சிறிய அணிகளுடனும் ஐ.பி.எல்.லிலும் நன்றாக ஆடி தம் இருப்பை உறுதி செய்துகொள்வார். சாம்பியன்ஸ் டிராபி வரை இப்படித்தான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை கழிந்தது. சாம்பியன்ஸ் டிராபியில் முதலில் விஜயும் தவானும்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுவதாகத் திட்டம். இதை தோனியும் உறுதி செய்திருந்தார். ஆனால் விஜயின் கெட்ட நேரம், பயிற்சி ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. இதனால் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்டார். ஆச்சர்யமாக, முதன்முறையாக மிகப்பெரிய போட்டியில், மிகப்பெரிய அணிகளுடன் பிரமாதமாக ஆடினார். ரோஹித்தும் தவானும் அருமையான தொடக்கம் கொடுத்து இந்தியா பல மேட்சுகள் ஜெயிக்கக் காரணமாக இருந்தார்கள். இறுதியில், இத்தனை நாட்களாகத் தம்மைச் சகித்துக் கொண்டவர்களுக்காக ரோஹித் அளித்த பரிசுதான், இரட்டைச் சதம். ரோஹித் சர்மாவை ரசிகர்கள்தான் வெறுத்தார்கள். ஆனால், கிரிக்கெட் வட்டாரங்களில், ரோஹித் சர்மா என்றாலே வாயைப் பிளப்பார்கள். ஸ்டைலான ஸ்டிரோக்குகள், தொழில்நுட்பரீதியில் சரியாக ஆடுவது, எவ்வளவு மெதுவாக ஆடினாலும் பிறகு ஸ்டிரைக் ரேட்டைச் சரிசெய்துகொள்வது போன்ற பலங்கள் ரோஹித்துக்கு ஆதரவாக இருக்கின்றன. ரோஹித்தின் வெற்றியில் அதிகம் சந்தோஷப்படுகிறார் கோலி. ‘இந்திய அணியில் உள்ள இளைஞர்களிலேயே மிகவும் திறமையானவர் ரோஹித் சர்மாதான். பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றியதால் சரியாகத் தன் திறமையை வெளிப்படுத்தமுடியாமல் இருந்தார். இப்போது தொடர்ந்து ஓபனராக ஆடுவதால், தன் திறமையைச் சரியாகப் பயன்படுத்துகிறார்’ என்கிறார். 

தம் சாதனைகளை ரோஹித் சர்மா முறியடிப்பார் என்று சச்சின் சொன்னபோது பலருக்கும் அது வேடிக்கையாக இருந்தது. ஆனால் இன்று மூன்றாவது இந்தியராக ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்து, சச்சினின் ஒருநாள் ஸ்கோரையும் தாண்டிச் சென்றிருக்கிறார்.

சச்சினை மயக்கிய தீவிர ரசிகர்!


ஆளைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். இவர் ஒரு வெறித்தனமான சச்சின் ரசிகர் என்று. மொட்டைத் தலையில் இந்தியக் கொடி வரையப்பட்டிருக்கும். மேல்சட்டை அணியாமல் இடுப்புவரை முன்னும் பின்னும் மூவர்ணத்தால் பெயின்ட் செய்யப்பட்டு, ‘டெண்டுல்கர் 10’ என்று எழுதப்பட்டிருக்கும். மூக்கில் அசோகச் சக்கரம். மீசையில்கூட மூவர்ணம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இந்த அடையாளங்களோடு சச்சினின் தீவிர ரசிகராகப் பிரபலமாகியிருக்கிறார் பீகாரின் முசாஃபர்புர் நகரைச் சேர்ந்த சுதிர் குமார் சௌத்ரி. 

மேட்ச் நடக்கும் சமயங்களில், இந்திய வீரர்கள் ஃபோர், சிக்ஸர் அடித்தால், சுதிர் கொடியை ஆட்டிக் கொண்டும் சங்கை ஊதிக்கொண்டும் தோன்றும் காட்சிகளை டி.வி.யில் பார்க்காதவர்களே இருக்க முடியாது. இந்தியா மேட்சில் தோற்றுவிட்டால் வருத்தமாகிவிடுவார். அந்த நாளில் எதுவும் சாப்பிட மாட்டார்.  நவம்பர் 2003 முதல் இந்தியா ஆடிய சர்வதேச மேட்சுகள், ஐ.பி.எல். என எல்லாம் சேர்த்து இதுவரை 300 மேட்சுகளுக்குமேல் (206 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்டுகள், 70 டி20 மேட்சுகள்) நேரில் பார்த்திருக்கிறார். 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, டிரெஸ்ஸிங் ரூமுக்கு சுதிரை அழைத்து உலகக் கோப்பையை அவரிடம் வழங்கிய சச்சின், போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இந்தக் கவனிப்பில் திக்குமுக்காடிப் போனார் சுதிர். கொல்கத்தாவில் மேட்ச் நடந்தால் கங்குலியின் வீட்டில்தான் சைக்கிளை பார்க்கிங் செய்வார். சச்சின் மேட்ச் டிக்கெட்டுகளைத் தருவதன் நன்றிக்கடனாக இவர் ஒவ்வொரு வருடமும் சச்சினுக்கு 1000 லிச்சிப் பழங்களைத் தருகிறார். சென்னை மெரினா கடற்கரையில் விற்கும் சங்குகளையும் அவ்வப்போது தருவது வழக்கம். சச்சினுக்காக இரண்டுமுறை மைதானத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறார். ஒருமுறை சச்சினின் காலைத் தொட்டு வணங்க முயற்சி செய்தபோது சச்சின் அதைத் தடுத்து, சுதிரைப் பிடிக்கவந்த காவலர்களிடம், ‘அவரை அடிக்க வேண்டாம். அவரே போய்விடுவார்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஹைதராபாத் மேட்ச் ஒன்றிலும் இதேபோல நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை சுதிரை ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்று பழுக்க அடித்திருக்கிறார்கள். 33 வயது சுதிருக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு எதிலும் நாட்டம் கிடையாது. சுதிர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக வேண்டாம். நான் இந்தியா முழுக்கச் சுற்றுபவன். கிரிக்கெட்தான் என் வாழ்க்கைத் துணை" என்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சுஷ்ருத் ஜெயின், இந்திய கிரிக்கெட் பற்றிய ஒரு ஆவணப் படம் எடுக்கிறார். அதில் சுதிரைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தில்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், சுதிர் பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகிறார். ‘எனக்கும் சச்சினுக்குமான உறவு, கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது. சச்சின் ஓய்வுக்குப் பிறகும் என்னை நீங்கள் மேட்சுகளில் பார்க்கமுடியும். ‘மிஸ் யூ டெண்டுல்கர்’ என்று என் உடலில் எழுதப்பட்டிருக்கும்," என்கிறார் சுதிர். 

ச.ந.கண்ணன்

மெட்ரோ ரயில் சென்னைக்கு சாபவிமோசனமா?

 
சென்னை மெட்ரோ ரயில் கனவு விரைவில் நனவாகப் போகிறது. ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டத்துக்கு தயாராகிவிட்டன; கோயம்பேடு முதல் ஏர்போர்ட் வரையான ரயில் பாதையும் கிட்டத்தட்ட தயார். சென்னையின் முகத்தையே மாற்றப் போகிறது மெட்ரோ. மெட்ரோ ரயிலில் அப்படி என்னென்ன வசதிகள் இருக்கும்?
 
மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்திலும் நகரும் படிக்கட்டுகள் உண்டு. மின் தூக்கிகள் உண்டு. சுரங்க ரயில் நிலையங்கள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.ரயில் பெட்டிகள் அனைத்தும் எவர்சில்வரால் செய்யப்பட்டவை. எனவே துருப்பிடிக்காதவை. எல்லாப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டவை. எந்த ஸ்டேஷன் மாஸ்டரும் வண்ணக் கொடிகளையும், விசிலையும் வைத்துக் கொண்டு வேலை செய்யமாட்டார். ரயில் பெட்டிகளுக்குத் தானியங்கிக் கதவுகள். அடுத்தது எந்த ரயில் நிலையம் நெருங்குகிறது என்பதை ரயில் பெட்டிக்குள்ளேயே உள்ள மின்னணுத் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதியும் உண்டு. சக்கர நாற்காலிகளை நிறுத்தி வைக்க ரயில் பெட்டிகளில் தனி இடம் உண்டு.ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு எளிதாகச் செல்லமுடியும். இதனால் ஒரு பெட்டியில் கூட்ட நெரிசல், ஒரு பெட்டியில் மிகக் குறைவான பயணிகள் என்ற நிலை தவிர்க்கப்படும்.எல்லாவற்றையும்விட இனிப்பான செய்தி காலையும், மாலையும் (Peak Hours) மூன்று நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பதுதான். நான்கு பெட்டிகளைக் கொண்ட ஒரு மெட்ரோ ரயில் தொடரில் சுமார் 1275 பேர் பயணம் செய்யலாம். பிற்காலத்தில் ஆறு பெட்டிகள் கொண்ட தொடராக இது மாற்றப்படுமாம். முதல் கட்டத்தில் 45 கி.மீ. நீளமுள்ள இரண்டு மெட்ரோ ரயில் வழித் தடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 
 
முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை கொண்டது. ரயில் பாதையின் மொத்த நீளம் 23 கிலோமீட்டர். இதில் மொத்தம் 16 ரயில் நிலையங்கள். இவற்றில் 10 சுரங்கப் பாதையில் உள்ளவை.  இரண்டாவது வழித்தடம் சென்ட்ரலிலிருந்து செயின்ட் தாமஸ் மௌன்ட் வரை கொண்டது. ரயில் பாதையின் மொத்த நீளம் 22 கிலோமீட்டர். இதிலும் மொத்தம் 16 ரயில் நிலையங்கள். இவற்றில் ஒன்பது சுரங்கப் பாதையில் அமைக்கப்படுகின்றன. மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சியாகச் செயல்படும் இந்தத் திட்டத்துக்கான அடிப் படைச் செலவுத் தொகை ரூபாய் 14,600 கோடி. இந்த முதலீட்டில் 60 சதவிகிதம் கடனாகப் பெறப்படுகிறது. இந்தக் கடனை மெட்ரோ ரயில் நிறுவனம் திருப்பிச் செலுத்த வேண்டும். மீதமுள்ள முதலீட்டில் 20 சதவிகிதம் மத்திய அரசும், 20 சதவிகிதம் தமிழக அரசும் அளிக்கின்றன.
 
 

Wednesday, November 06, 2013

மேரி க்யூரி - சர் சி. வி. ராமன் - அமர்த்தியா சென்


மரியா ஸ்லொடஸ்கா 1867, நவம்பர் 7 அன்று போலந்து தலைநகர் வார்சாவில் பிறந்தார். இவரது செல்லப் பெயர் மான்யா. போலந்து அப்போது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்ததால் அனைத்துப் பாடங்களும் ரஷ்ய மொழியிலேயே கற்பிக்கப்பட்டன. மேலும் பெண்களை உயர்கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. மரியாவுக்கு இயற்பியல் விஞ்ஞானியாக விருப்பம். எனவே 1891ல் போலந்தை விட்டு வெளியேறி, தனது சகோதரி மருத்துவராகப் பணியாற்றும் பாரிஸுக்குச் சென்றார். பெயரை ‘மேரி’ என்று மாற்றிக் கொண்டார். 

சோர்போன் பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் கணிதமும் கற்றுத் தேர்ந்தார். 1894ல் பிரெஞ்ச் வேதியியல் விஞ்ஞானி பியரி க்யூரியைச் சந்தித்தார். ஆய்வுப் பணிகளில் இருவரின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருந்ததால் வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்து, திருமணம் செய்து கொண்டனர். 

தம்பதியாகக் கதிரியக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வுகளின் முடிவில் உலோகம் பிட்ஸ்பிளெண்ட் மற்றும் தோரியம் ஆகியவையும் யுரேனியத்தைப் போலவே ஊடுகதிர்களை வெளிப்படுத்தும் என்று கண்டறிந்தனர். 1898ல் கூட்டுப் பொருட்களான பொலேனியம் மற்றும் ரேடியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். எக்ஸ்ரே கருவியில் இந்தக் கதிர்வீச்சுகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுகளுக்காக 1903ல் மேரி க்யூரி, பியரி க்யூரி, ஹென்றி பெக்வேரெல் மூவருக்கும் கூட்டாக ‘நோபல்’ பரிசு வழங்கப்பட்டது. 1906ம் ஆண்டு பியரி க்யூரி மறைவைத் தொடர்ந்து சோர்போன் பல்கலைக்கழகத்தில் அவர் வகித்த பதவியை ஏற்றுக்கொண்டார். 1911ல் பொலேனியம் மற்றும் ரேடியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தமைக்காக இரண்டாவது முறையாக ‘நோபல்’பரிசு பெற்றார். 


1914 ல் முதல் உலகப் போர் வெடித்தது. போரில் காயம்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க இவர் கண்டுபிடித்த ரேடியம் பெருமளவு பயன்படுத்தப்பட்டது. ரேடியம் ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் உடல் நிலை மோசமாகி 1934 ஜூலை 4ல் மரணமடைந்தார் மேரி. தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஏழைகளுக்குப் பயன்படவேண்டும் என்பதற்காக அவற்றைக் காப்புரிமை செய்ய மறுத்துவிட்டார் மேரி. அவரது மகள் ஐரினும் நோபல் பரிசு பெற்றவர்!

திருச்சி அருகே திருவானைக்காவலில் 1888, நவம்பர் 7 அன்று சந்திரசேகர ஐயர் - பார்வதி அம்மாளுக்குப் பிறந்தார் ராமன். சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டங்களுடன் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். அதே கல்லூரியில் முதுநிலைப் பட்டத்தையும் பெற்றார். இயற்பியல் ஆர்வலராக இருந்தாலும் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. 

கொல்கத்தாவில் நிதித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே ஒலி/ஒளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். பத்து ஆண்டுகள் கழித்து 1917ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக வேலை கிடைத்தது. ஒளிச்சிதறல் தொடர்பான இவரது கண்டுபிடிப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்தன. இவரைக் கௌரவிக்கும் வகையில் பிரிட்டிஷ் அரசு 1929ல் ‘சர்’ பட்டம் அளித்தது.

ஐரோப்பிய நாட்டில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கப்பலில் சென்று கொண்டிருந்தபோது கடல் நீரும் வானமும் ஏன் நீல நிறமாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க, தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டார். ஒரு பொருளின் மீது ஒளிபட்டு, அது பல திசைகளில் சிதறுவதே ஒளிச்சிதறல். காற்றிலுள்ள தூசுகள் மற்றும் ஒளியின் ஒழுங்கற்ற பிரதிபலிப்பே ஒளிச்சிதறல். ஒளி ஓர் ஊடகத்தின் வழியாகச் செல்லும்போது ஒளிச்சிதறலுக்கு உள்ளாகிறது. பெரும்பான்மையான ஒளி அதே அலை நீளத்துடன் இருந்தாலும் மிகச்சிறிய பகுதியின் அலை நீளம் மாறிவிடுகிறது. இவருடைய ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்புக்காக 1930ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. சூரிய ஒளியிலுள்ள ஏழு வண்ணங்களுள் நீலநிறம் மட்டுமே அதிக ஒளிச் சிதறலுக்கு உள்ளாவதால் அதுவே பிரதிபலிக்கப்படுகிறது. எனவேதான் கடல் நீரும் வானமும் நீல நிறமாக உள்ளன. 

1934ல் பெங்களூரு அறிவியல் நிலையத் தலைவராகப் பொறுப்பேற்று, 1948 வரை பணியாற்றி ஒய்வு பெற்றார். பிப்ரவரி 28 ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதால் அதை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினமாகக்’ கொண்டாடப்பட்டு வருகிறது. 

1954ல் இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியது. 1957ல் ‘லெனின் அமைதிப் பரிசு’ வழங்கப்பட்டது. இயற்பியல் துறை தொடர்பாக இவர் எழுதிக் குவித்த ஆய்வறிக்கைகளின் எண்ணிக்கை 475. 1970 நவம்பர் 21, தனது 82வது வயதில் பெங்களூருவில் மறைந்தார்.
அசுதோஷ் சென் மற்றும் அமிதா சென் தம்பதிக்கு 1933, நவம்பர் 3 அன்று, மேற்கு வங்கம் சாந்திநிகேதனில் பிறந்தவர் அமர்த்தியா சென். 

அமர்த்தியா சென் மூதாதையர் சொந்த ஊர் இன்றைய பங்களாதேஷ் தலைநகர் டாக்கா. அமர்த்தியா சென் தனது ஆரம்பக் கல்வியை ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வபாரதி பள்ளியில் படித்தார். பின்னர் கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், தத்துவம் துறைகளில் மேற்படிப்புகளை நிறைவு செய்தார். இந்தியா திரும்பிய பிறகு கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவும் பொருளாதாரக் கல்வித்துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வளவு இளம் வயதில் ஒருவர் நியமிக்கப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. 

1963, தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1970ல், அவரது முதல் புத்தகம் ‘கலெக்டிவ் சாஸ் அண்ட் சோஷியல் வெல்ஃபேர்’ என்ற படைப்பை வெளியிட்டார். 1971ல் மனைவியின் உடல்நிலை மோசமானதால், டெல்லியை விட்டு, லண்டனுக்குச் சென்றார். அவரது மனைவியின் மறைவைத் தொடர்ந்து 1972ல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் 1977வரையும் அதன் பிறகு ஆக்ஸ் ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் வேலை செய்தார். ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள நட்ஃபீல்ட் கல்லூரியின் முதல் பொருளியல் பேராசிரியர் இவரே. 1986 வரை அங்கு பணிபுரிந்த பின்னர், அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

1981ல் இவர் எழுதிய ‘பாவர்ட்டி அண்ட் ஃபேமின் (வறுமை மற்றும் பஞ்சம்), ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தில் வெளியிடப்பட்ட ‘ஹ்யூமன் டெவலப்மென்ட் ரிப் போர்ட்’ (மனித அபிவிருத்தி அறிக்கை) ஆகிய கட்டுரைகள் பிரசித்தம். 1990ல் தி நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸில், தனது சர்ச்சைக்குரிய கட்டுரைகளில் ஒன்றான ‘மோர் தேன் எ ஹன்ட்ரெட் மில்லியன் வுமன் ஆர் மிஸ்ஸிங்’ கட்டுரையை வெளியிட்டார். அமர்த்தியா சென் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்ட், ஹார்வர்ட் உட்பட உலகின் 90க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்குக் கௌரவப் பட்டங்களை வழங்கி உள்ளன. 1998ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. 1999ல் இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்தது. 

தலையைப் பாதுகாப்பது எப்படி? - நலம் காப்போம்

 
மனித உடலின் சிகரமாகத் திகழ்கிறது தலை. மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில்தான் உள்ளது. மனிதனை இயக்கும் மூளையும் அதில்தான் உள்ளது. உடல் உறுப்புகளிலேயே தலையாய உறுப்பு மூளை. நம் உடலின் ஒவ்வோர் அசைவையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது மூளை. மூளைதான் நமது உயிர். மூளையின் செயல்பாடு நின்ற பிறகு மற்ற உறுப்புகள் செயல்பட்டாலும் பலனில்லை. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வது தலையில் இருக்கும் மண்டை ஓடுதான். 
 
தலையின் முன்பகுதியில் முக எலும்புகளும் அதன் மேற்புறமும் பின்புறமும் ‘கிரேனியம்’ என்று சொல்லப் படும் கபாலமும் உள்ளன. தலை எலும்புகள் மொத்தம் 22. இவற்றில் முக எலும்புகள் 14. இந்தத் தலை எலும்புகளைத் தாங்குபவை கழுத்து எலும்புகள். உடலின் மற்ற பாகங்களின் தோலோடு ஒப்பிடும்போது, தலையில் இருக்கும் தோல் சிறிது வித்தியாசமானது. ‘ஸ்கால்ப்’ என்று சொல்லப்படும் தலைத் தோலின் கீழ் தசை எதுவும் இல்லை. இதனால் தலையில் லேசாக அடிபட்டால்கூட காயம் பலமாக ஏற்பட்டுவிடலாம். தலையில் ஆறு ரத்தக்குழாய்கள் உள்ளன. இதனால் தலையில் அடிபடும்போது அதிக அளவில் ரத்தம் இழப்பதற்கு வாய்ப்புண்டு.  

தலைக்கு ஆபத்து வருவது பெரும்பாலும் சாலை வாகன விபத்துகளால்தான். அடுத்து, நாம் விளையாடும் போது, நடை தவறி கீழே தரையில் விழும்போது, அடிதடி சண்டை போடும்போது, துப்பாக்கிச்சூடு என்று பல வழிகளில் தலையில் காயங்கள் உண்டாகின்றன. தலையில் காயம் ஏற்படும்போது தோல் கிழியும். கபால எலும்பு உடையும். கபால எலும்புக்கும் மூளைக்கும் நடுவில் இருக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்து போகும். மூளை அதிர்ந்து போகும். மூளைத் திசுக்களும் கிழிபடலாம். மூளைக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் வெடித்து மூளையின் உள்ளேயே ரத்தம் உறையலாம். கண் பார்வை பறி போகலாம். காதுச் சவ்வு கிழிந்து காது கேட்காமல் போகலாம். இப்படிப் பல ஆபத்துகள் நெருங்கலாம். ஆகவே, தலைக்காயத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.தலைக்காயங்கள் இரண்டு வகைப்படும். 1. மூடிய காயங்கள். 2. திறந்த காயங்கள். மூடிய காயங்களில் ரத்த ஒழுக்கு இருக்காது. தோலுக்கு அடியில் ரத்தம் உறைந்து வீங்கியிருக்கும். இதனை ‘ரத்தக்கட்டு’ என்று சொல்வார்கள். திறந்த காயங்களில் ரத்தம் வெளியேறும். தோல் மட்டும் சிதைந்திருந்தால் ‘சிராய்ப்பு’ என்கிறோம். இதில் ரத்தம் லேசாகவே கசியும். தோல் கிழிந்திருந்தால் அது ‘வெட்டுக்காயம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ரத்தம் குபுகுபுவென்று நிறைய வெளியேறும். 
 
பல நேரங்களில் பார்ப்பதற்குத் தலைக்காயம் லேசாக இருக்கும். ஆனால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். கடுமையான தலைக்காயத்தின் அறிகுறிகள் இவை: காயம் பட்ட தலையில் குழி இருக்கும் அல்லது வீக்கம் இருக்கும். காதுக்குப் பின்புறம் வீக்கம் காணப்படும். காது மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறலாம். அல்லது நிறமற்ற திரவம் கசியலாம். கண்ணில் ரத்தக்கசிவு காணப்படலாம். முகம் வீங்கலாம். கிறுகிறுப்பு வரும். வாந்தி வரக்கூடும். சுயநினைவில் மாற்றம் இருக்கலாம். சிலர் பிரமை பிடித்ததுபோல இருப்பார்கள். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்.கபால எலும்பு முறிந்திருந்தால் அல்லது மூளைத் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் வடியும். கண்கள் முன்பக்கமாகத் தள்ளப்படலாம். காதுக்குப் பின்புறம் கடுமையான வீக்கம் உண்டாகும். அடிபட்டவருக்கு மயக்கம் உண்டாகும். வலிப்பு வரலாம். சமயங்களில் தலையில் அடிபடும்போது மூளை மட்டும் கபாலத்துக்குள் அதிர்ந்து அசைந்திருக்கும். இதனாலும் மயக்கம் வரலாம். தலைக்காயம் எதுவாக இருந்தாலும் உடனடியாக முதலுதவி செய்யப்பட வேண்டும். பஞ்சை ஈரப்படுத்திக் கொண்டு அல்லது சுத்தமான பருத்தித் துணி கொண்டு காயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்.டெட்டால் இருந்தால் அதைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். ‘ஆன்டிபயாடிக்’ களிம்பு கைவசமிருந் தால், அதைக் காயத்தில் தடவி, சுத்தமான துணியால் தலையைச் சுற்றி அழுத்தமாகக் கட்டுப் போட வேண்டும். தலைக்காயத்திலிருந்து வெளியேறும் ரத்தக்கசிவை நிறுத்துவதுதான் முதலுதவியின் முக்கிய நோக்கம் என்பதால் பஞ்சு, துணி, பாண்டேஜ் எதுவும் கிடைக்காதபோது, முதலுதவி செய்பவர் தன் உள்ளங் கையால் தலைக்காயத்தின் மீது சுமார் 10 நிமிடங்களுக்கு அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாலே ரத்தம் கசிவது நின்று விடும். அதற்குள் துணி, கைக்குட்டை என்று ஏதாவது வைத்துக் கட்டுப் போட்டு விடலாம். காயத்திலிருந்து ரத்தம் கடுமையாக வெளியேறினால் கழுத்தைச் சுற்றி தாடையோடு ஒரு கட்டுப் போடலாம். 
 
கபால எலும்பில் முறிவு உள்ளது என்பது தெரிந்தால் தலையையும் கழுத்தையும் அசைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தலையில் காயம் பட்டவருக்குக் கழுத்து எலும்பிலும் முறிவு உண்டாகியிருக்கலாம். அப்போது கழுத்தை அசைத்தால் கழுத்தில் எலும்பு முறிவு அதிகப்பட்டுவிடும். அல்லது கபாலத்தின் உள்ளே ஏற்கெனவே ஏற்பட்டுள்ள ரத்தக்கசிவு அதிகப்பட்டுவிடும். இதைத் தவிர்க்க தலையில் அடிபட்டவரை சமதளத்தில் மல்லாந்து படுக்க வைக்க வேண்டும். அந்த நபர் சுவாசிக்கச் சிரமப்பட்டாலோ, சுயநினைவை இழந்திருந்தாலோ செயற்கை சுவாசம் மற்றும் இதய மசாஜ் தரப்பட வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எந்த ஒரு விபத்து நடந்தாலும் முதல் ஒரு மணி நேரம் என்பதை ‘பொன்னான நேரம்’ என்கிறோம். அதற்குள் அவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிருக்கு ஆபத்து வருவது குறையும். ஆகவே, அடிபட்டவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அல்லது ஒரு வாகனம் மூலம் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.பாதுகாப்பான பயணம்தான் தலைக்குப் பாதுகாப்பு தரும். குறிப்பாக, இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம். வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.
 
சாலை விதிகளை மீறக்கூடாது. மித வேகம் நல்லது. அதிவேகம் ஆபத்தானது. செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது பாதுகாப்பு ‘சீட் பெல்ட்’ அணிந்து கொள்ள வேண்டும். பயணம் செய்யும் வாகனங்களில் குழந்தைகளை அமரச் செய்ய வேண்டும்; நிற்க வைக்கக்கூடாது. பெண்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது துப்பட்டாவை முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும். சைக்கிள் பயணம் என்றால், அதன் சுழலும் செயின் முழுவதும் மூடும்படியான உலோகக் கவசமுள்ள சைக்கிளில் பயணிப்பது நல்லது.

Tuesday, November 05, 2013

பால்... குடிக்கலாமா? கூடாதா?

பால் பற்றி சர்ச்சைக்குரிய பல விஷயங்கள், உலகெங்கும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
 
முதலில் 'பால் சைவமா... அசைவமா?’ என்றொரு கேள்வி இருக்கிறது. 'சைவம்' என்றுதானே எல்லோரும் குடித்து வருகிறோம். காசநோய் பாதிப்புடன் என்னிடம் வந்த ஒருவருடனான இந்த உரையாடலைப் படித்துவிட்டு, அதை முடிவு செய்யுங்கள்.

''நன்றாக எலும்பு, ஈரல், மீன், முட்டை எல்லாம் சாப்பிடுங்கள்.''
''இல்லை டாக்டர், நான் சைவம்.''

''அப்படியானால் பால் நிறைய உபயோகியுங்கள்.''

''இப்போதுதானே டாக்டர் சொன்னேன்.... நான் சுத்த சைவமென்று.'’

'அதனால் என்ன... பால் சைவம்தானே.’

''என்ன சார், பால் எங்கே கிடைக்கிறது... தென்னை மரத்திலா, பனை மரத்திலா... பசுவில்தானே! அது எப்படி சைவமாகும்?''


- இப்படி கோபத்துடன் அவர் சொன்ன பிறகுதான், 'பால் அசைவ உணவு’ என்கிற உண்மையை உணர ஆரம்பித்தேன்.

'பால் குடிப்பது இயற்கைக்கு முரணானது’ என்கிற கருத்தும் தற்போது மெள்ள பரவி வருகிறது. இது, நம்நாட்டு சமூக ஆர்வலர்களோ, சித்த மருத்துவர்களோ மட்டும் கூறும் கருத்தல்ல. அயல்நாடுகளைச் சேர்ந்த பிரபல மருத்துவர்கள், விஞ்ஞானிகள்கூட இப்படித்தான் சொல்கிறார்கள்.

'பால்' என்பது குழந்தைக்காகத் தாய் சுரக்கும் அற்புத உணவு. இளம் உயிருக்கேற்ற ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்புச் சத்துக்களும் நிறைந்த உணவு அது. ஒவ்வொரு பாலூட்டும் விலங்குக்கும் இது பொருந்தும். ஒரு காலகட்டம் வரை இது கட்டாயத் தேவை. பிறகு, அவை வளர்ந்து சுயமாக உணவு தேடி உண்ண ஆரம்பித்தவுடன், பால் சுரப்பது நின்றுவிடும். அதன் பிறகு, எந்த ஜீவராசிக்கும் பால் தேவையே இல்லை. மனிதனைத் தவிர, வேறு எந்த உயிரினமும் குழந்தைப் பருவத்துக்குப் பிறகு பாலைத் தேடுவதில்லை. மனிதன் மட்டும் வாழ்நாள் முழுவதும் பாலுக்காக அலைகிறான். அதுவும் மற்றொரு ஜீவராசியின் பாலுக்கு! மாடு, ஆடு, ஒட்டகம், கழுதை எதையும் அவன் விடவில்லை!

நம்நாட்டு மருத்துவ நூல்கள், பாலை நல்ல மருந்தாகத்தான் சித்திரிக்கின்றன. 'குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்றுதான் கூறுகின்றன. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், 'அது உண்மை’ என்பது புரியும். 

ஆனால், மருந்து என்பதை மறந்து, சத்து என்று பலரும் பருகிக் கொண்டிருக்கிறோம். 'பாலில் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்), புரதச்சத்து, பொட்டாசியம் நிறைய இருக்கிறது. ஒரு கப் பாலில் சுமார் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இது, எலும்புகளையும் பற்களையும் பாதுகாக்க உதவும்’ என்றுதான் எல்லாரும் நம்புகிறோம். ஆனால், 'உண்மை இதற்கு மாறானது’ என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 94-ம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்கன் 'எபிடெமியாலஜி ஜர்னல்' மூலமாக டாக்டர் கிளைன் வெளியிட்ட செய்தியில், 'இடுப்பு எலும்பு முறிவு, பால் பருகும் மக்களிடம்தான் அதிகம். பால் அதிகம் பருகாத நாடுகளில் இது குறைவு’ என்று கூறியிருக்கிறார்.ஜான் ஹங்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஆஸ்கி, 'பால் குடிக்காதீர்கள்’ என்று ஒரு புத்தகமே எழுதிஇருக்கிறார். 'பாலில் கால்சியம் நிறைய இருந்தாலும், பாலின் அமிலத் தன்மையால் எலும்புகளிலிருந்து கால்சியம் உருகி நீரில் வெளியேறுகிறது. ஆகவே, எலும்புகள் பலவீனமாகின்றன’ என்பது அவருடைய வாதம்.ரத்த சோகை (அனீமியா), பலவகை அலர்ஜிகள், டைப்-1 சர்க்கரை நோய், ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பு புற்றுநோய், பெண்களுக்கு மார்பகப் புற்று நோய், பால் ஒவ்வாமை இப்படி பலவிதமான பிரச்னைகளுக்கும்... ஆஸ்துமா, சைனஸ் போன்றவற்றை அதிகப்படுத்துவதற்கும் பால் ஒரு காரணியாக இருக்கிறது என்பதும் விஞ்ஞானிகள் பலரின் ஆராய்ச்சி முடிவு.இதில் சமீப ஆண்டுகளாக இன்னொரு புதிய ஆபத்தும் வந்திருக்கிறது. மாடுகள் சீக்கிரம் பெரிதாக வளர்ந்து கசாப்புக்குத் தயாராக வேண்டும்... நிறைய பால் கொடுக்க வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாக... துரித வளர்ச்சி ஹார்மோன் (Recombinant Bovine Growth Hormone -RBGH) ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு மூன்றாம் மாதத்திலிருந்தே இதை போடுவதால், 15 மாதத்திலேயே அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கிறது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பவுண்டு பால் சுரக்கும் மாடுகள், 20 ஆயிரம் பவுண்டு பால் சுரக்கின்றன. மாடுகளின் மாமிசத்திலும் இந்த ஹார்மோன் கலந்திருப்பதால், 'இதைச் சாப்பிடும் மனிதர்களுக்கு நிறைய பக்க விளைவுகள் வரலாம்’ என்பது ஒரு கருத்து. ஹார்மோன் ஊசியின் இன்னொரு விளைவு, இந்த ஊசி போடப்பட்ட மாடுகளின் பாலைக் குடிப்பதால்... சர்க்கரை நோய், பெண்கள் சீக்கிரம் பூப்பெய்தல், அதீத மார்பக வளர்ச்சி, ஆண்களுக்கும் மார்பக வளர்ச்சி என்று ஏகப்பட்ட பிரச்னைகள் வரலாம். ஆண்களுக்கான மார்பக அறுவை சிகிச்சை அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.இத்தகைய பிரச்னைகள் எழுந்திருப்பதால்... கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் அனைத்து நாடுகள் என உலகின் பெரும்பாலான பாகங்களில், மாடுகளுக்கான ஹார்மோன் ஊசி தடை செய்யப்பட்டு விட்டது. நம்நாட்டில், வழக்கம்போல பன்னாட்டுக் கம்பெனிகள் அந்த ஊசியை விற்பனை செய்து லாபம் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது... நாம், தூங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு நடுவே... 'ஆஸ்துமா, அலர்ஜி, லாக் டோஸ் ஒவ்வாமை போன்ற குணங்கள்... பச்சை பாலில் குறைவு. இன்சுலின் போன்ற வளர்ச்சிப் பொருட்களின் அளவும் குறைவாக இருக்கும்' என்றும் நம்பப்படுவதால், பதப்படுத்தப்படாத பச்சைப்பால் உபயோகிப்போர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.மக்காச்சோளம், தானியங்கள் போன்ற உணவில் வளர்ந்து, ஹார்மோன் ஊசியால் பெருத்து, 'அமுதசுரபி'யாகப் பால் சுரந்து, 'பாஸ்ட்சரைஸ்' முறையில் பதப்படுத்தும் பாலைவிட, பூச்சிக்கொல்லிகள் தெளிக்காத புல்வெளியில் மேய்ந்து, தனியார் வீடுகளில் கிடைக்கும் பச்சைப் பால் மிகவும் உயர்ந்தது என்கிற கருத்தும் வலுத்து வருகிறது.'பால் அவசியம் வேண்டும்' என்று நீங்கள் முடிவு செய்தால், இதையே பின்பற்றுங்களேன்!

டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

Sunday, November 03, 2013

நோபல் வெற்றியாளர்கள் 2013

டைனமைட்டைக் கண்டறிந்த ஆல்ஃபிரெட் நோபல், ஒருநாள் செய்தித்தாளைப் பார்த்தபோது, 'டைனமைட்டைக் கண்டறிந்த மரண வியாபாரி மரணம்’ என்று தவறான செய்தி வெளியாகி இருந்தது.

இதைப் பார்த்து மனம் நொந்துபோன  நோபல், தன் பெயர் இவ்வாறு அழைக்கப்படக் கூடாது என்று நினைத்தார். தனது சொத்துகளைப் பயன்படுத்தி, மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடும் பல்துறை அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று உயில் எழுதினார். அதன் அடிப்படையில்தான், 1901-ம் ஆண்டிலிருந்து இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய ஐந்து துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.


'பேங்க் ஆஃப் ஸ்வீடன்’ என்ற வங்கி, தனது 300-வது ஆண்டை 1968-ல் கொண்டாடியபோது, நோபல் பரிசுக் குழுவுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கியது. எனவே, 1969-ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசும் இணைந்தது.

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?


வேதியியல் 

வேதியியல் வினைகளின் தொடக்கமும் முடிவும் மட்டுமே பொதுவாக நம் கண்களால் கண்டறியக்கூடியது. அந்த வேதிவினையில் இடம்பெறும் இடைவினைகள், நம் கண்களால் கண்டறிந்து பதிவுசெய்ய முடியாதது. (வெளிவரும் புகை, மேலே படியும் சிறு துகள்கள், 'சொய்ங்’ சத்தம் போன்ற சில விவரங்களை மட்டுமே நம்மால் கண்டறிய முடியும்.)


இத்தகைய நுணுக்கமான இடைவினைகளை நாம் கண்டறியும்போது, நமது வேதியியல் ஆராய்ச்சிகள் மேலும் மேலும் செழுமை அடையும். நம் கண்களால் கண்டறிய முடியாத இத்தகைய சிறிய தகவல்களைக்கூட கணினியின் துணைகொண்டு பதிவுசெய்யவும், விளக்கவும் முடியும் என்று நிரூபித்தவர்கள் மார்ட்டின் கார்ப்ளஸ், மைக்கேல் லெவிட் மற்றும் ஏரி வார்ஷெல். இந்த மூவருக்கும் இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சிக்கலான வேதியியல் ஆய்வுகளையும் மாதிரிகளையும் சுலபமாகப் புரிந்துகொள்ள இவர்களது கண்டுபிடிப்புகள் உதவுகின்றன. ஆய்வகச் சோதனை முடிவுகளும், கணினி வழி கண்டறியப்பட்ட சோதனை முடிவுகளும் பொருந்திப்போகின்றன. எனவே, மிகவும் அபாயகரமான வேதியியல் சோதனைகளைக் கணினி முறைகளைக்கொண்டு செய்வது பயனுடையதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதன் மூலம் வேதியியல் ஆய்வுகள் பெருமளவு முன்னேறும்.


இலக்கியம்

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, கனடா நாட்டைச் சேர்ந்த 'ஆலிஸ் மன்றோ’ வுக்குக் கிடைத்துள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, சிறுகதை இலக்கியத்துக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 13-வது பெண். கனடாவிலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் பெண்.

தற்கால சிறுகதை இலக்கியத்தில் மிகச் சிறந்த சிகரங்களைத் தொட்டவர் ஆலிஸ் மன்றோ. மிக இயல்பான வார்த்தைகளும் சொற்றொடரும் அமையப்பெற்ற நடையைச் சிறுகதைகளில் கையாள்பவர். கடந்த 2009-ம் ஆண்டு, இவரது சிறுகதைகளைக் கௌரவிக்கும் விதமாக 'மேன் புக்கர்’ பரிசு வழங்கப்பட்டது.


பொருளாதாரம்

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல்  பரிசு பெறுபவர்கள், யூஜீன் பாமா, ராபர்ட் ஷில்லர் மற்றும் லார்ஸ் பீட்டர் ஹேன்சன்.

'' 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பதுபோல, சந்தையில் பொருட்களின் விலை குறைவாக இருக்கும்போது, வாங்கிவிட வேண்டும். சந்தையில், விற்பனை புத்திசாலித்தனமாக நடப்பது இல்லை. அதனால், சந்தையில் அடிக்கடி வீழ்ச்சி ஏற்படும்'' என்பது போன்ற கொள்கைகளை ஷில்லர் வெளியிட்டார். ஆனால், இவருடன் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் யூஜீன் பாமா, ''நிதிச் சந்தை திறமையாகச் செயல்படக்கூடியது'' என்ற கொள்கையை வெளியிட்டார்.


இந்த இரண்டு கொள்கைகளில் ஒன்று சரியானது என்று நிரூபிக்கப்படும்போது, மற்றொன்று தவறாகிறது. எனவே, இந்த இருவரின் கொள்கைகளையும் ஆராய்ந்து, ஒரு முழுமையான கோட்பாட்டை உருவாக்கினார் பீட்டர் ஹேன்சன். எனவே, மூவருக்கும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


  
மருத்துவம்
மனித உடலின் அடிப்படை, அலகு செல் என்பது  தெரியும். அந்தச் செல்கள் உடலுக்குத் தேவையான சமயத்தில், தேவையான இடங்களுக்கு மூலக்கூறுகளை எவ்வாறு கடத்துகின்றன என்பதைப் பற்றிய ஆய்வுக்காக   ஜேம்ஸ் இ.ராத்மேன், ராண்டி ஷெக்மேன், தாமஸ் சுதோப் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு நொதிகள், புரதங்கள் போன்ற மூலக்கூறுகள் கடத்தப்படுகின்றன. இந்தச் சிறுசிறு மூலக்கூறுகளுக்கு 'வெசிக்கிள்கள்’ என்று பெயர். இந்த வெசிக்கிள்களின் இயக்கம், அது எவ்வாறு கடத்தப்படுகிறது, கடத்தலுக்குக் காரணமான மரபணுவை அடையாளம் காணுதல் போன்ற தகவல்களைத் தனித்தனியாகக் கண்டறிந்தார்கள்.


இந்த வெசிக்கிள்களின் கடத்தலில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக நரம்புத்தளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு மற்றும் நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன. இந்தக் குறைபாடுகளைத் தடுக்க, இவர்களின் கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும். இயற்பியல்

நவீன இயற்பியலின் முக்கியமான கண்டுபிடிப்பு சென்ற ஆண்டு நிகழ்ந்தது. 'கடவுள் துகள்’ என்று தவறுதலாகப் பெயரிடப்பட்ட 'ஹிக்ஸ்போசான் துகள்’, சென்ற ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைப் பொருட்களும் அணுக்களால் ஆனது, இந்த அணுக்களுக்கு நிறையை வழங்குவது எது என்பதைக் கண்டறிவதில் பல இயற்பியலாளர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்தார்கள்.

இந்த ஆராய்ச்சியில், பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்சுவா ஆங்கலர், ராபர்ட் பிரௌட் ஆகியோர் இணை ஆய்வறிக்கைகளை வெளியிட்டார்கள். அவர்களில் முதன்முதலாகக் கருதுகோளை வெளியிட்ட, ஹிக்ஸின் பெயரால், 'ஹிக்ஸ்போசான் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. (இதில் 'போசான்’ என்ற வார்த்தை, இந்தியரான சத்தியேந்திரநாத் போஸ் அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.)


போசான் துகள் கண்டறியப்பட்ட அன்று ஹிக்ஸ், மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதார். போசான் துகள் பற்றிய கொள்கை முடிவு, இயற்பியலின் அணுக் கொள்கைகளிலும் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதிலும் துணைபுரியும் வகையில் உள்ளது.

மேலே சொன்ன மூவரில், ராபர்ட் பிரௌட் 2011-ல் மரணம் அடைந்ததால், அவருக்குப் பரிசு அறிவிக்கப்படவில்லை. பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்சுவா ஆங்கலருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, போசான் துகளைக் கண்டறிந்த CERN ஆய்வுக்கூடத்துக்கும் பரிசு அளிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். ஆனால், அமைதி தவிர்த்த பிற பரிசுகள், அமைப்புகளுக்கு வழங்கப்படுவது இல்லை.


 அமைதிக்கான பரிசு 

 ரசாயன ஆயுதங்களைக் கண்காணிக்கும் குழுவான 'ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனம்’ (OCPW) இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளது. அறிவியல் மற்றும் வேதியியல் துறையில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகள், ஆயுதங்களின் வளர்ச்சியிலும் பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்ப, அதிக அழிவை உண்டாக்கும் ரசாயன ஆயுதங்களின் பயன்பாடும் அதிகரித்து வந்த நிலையில், 1997-ம் ஆண்டு, வேதியியல் ஆயுதங்கள் ஒழிப்பு உச்சி மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் OCPW அமைக்கப்பட்டது.


இந்த அமைப்பில் 189 நாடுகள், ரசாயன  ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்ற உறுதிமொழியில் கையப்பம் இட்டு, உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளன.  சமீபத்தில் சிரியாவில் பயன்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்கள் மற்றும் அவற்றின் கொடுமைகளை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக, மிகத் தெளிவான  ஆய்வறிக்கையை வெளியிட்டது இந்த அமைப்பு.

ரஷ்யா மற்றும் அமெரிக்க  நாடுகளின் தலைமையில் சிரியாவை 190-வது உறுப்பினராகச் சேர்க்கும் முயற்சிகளைச் செய்தது. உலகம் முழுவதும் ரசாயன ஆயுதங்கள் அழிப்பில், ஆரவாரமின்றி சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்த அமைப்பைக் கௌரவிக்கும் விதமாக நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.இயற்பியல், வேதியியல், பொருளாதாரத்துக்கான பரிசுகளை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் (Royal Sweedish Academy of science)என்ற அமைப்பு அளிக்கிறது. மருத்துவத்துக்கான பரிசை, கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்(Karolinska institute) ஐ சேர்ந்த நோபல் அசெம்ப்ளி (Nobel Assembly) என்ற அமைப்பும் அளிக்கிறது. இலக்கியத்துக்கான பரிசை, ஸ்வீடிஷ் அகாடமி (Swedish Academy) அமைப்பு அறிவிக்கிறது. இந்த மூன்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவை. அமைதிக்கான பரிசை மட்டும் நார்வே நோபல் கமிட்டி (Norwegion Nobel Commitee) வழங்குகிறது. அமைதிக்கான பரிசு நார்வேயில் உள்ள ஓஸ்லோ (Oslo) நகரத்திலும், மற்ற பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் (Stockholm) நகரிலும் வழங்கப்படும். நோபல் பரிசு பெற்றுள்ள அத்தனை பேருக்கும், ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி, விருதுகள் வழங்கப்படும்.

Saturday, November 02, 2013

தீபாவளி திருக்கதைகள்!

ஸ்ரீராமனும் தீபாவளியும்!
14 வருடங்களாக பரதன் ஸ்ரீராமனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஸ்ரீராமன் வருவதாகக் குறிப்பிட்டிருந்த நாளும் வந்துவிட்டது. ஆனால் ஸ்ரீராமனோ வந்தபாடில்லை. 'இனி யோசனைக்கு இடமில்லை. என் சங்கல்பத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது’ என்று எண்ணியவன், முக்கியஸ்தர்களையும் ராஜப் பிரதானிகளையும் அழைத்து ''எனது சங்கல்பப்படி இன்று அக்னிப்பிரவேசம் செய்யப் போகிறேன்'' என்று அறிவித்தான்; 'ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்’ என்று சத்ருக்னனை வற்புறுத்திப் பணித்தான். அக்னி குண்டமும் வளர்க்கப்பட்டது.

அவன் அக்னியை வலம் வந்து முடிக்கும் தறுவாயில் ஒரு குரல், ’வந்துவிட்டான் ராமன்...’  என்று! ஆமாம், அனுமன்தான் விரைந்து வந்து ஸ்ரீராமனின் வருகையை அறிவிக்கிறான். அப்போது பரதனின் நிலை எப்படி இருந்ததாம்?

வேதியர் தமைத்தொழும் வேந்த ரைத்தொழும்
தாதியர் தமைத் தொழும் தன்னை யே தொழும்
ஏதும் ஒன்று அறிகிலான் இருக்கும் நிற்குமால்
காதல்என் றீதுமோர் கள்ளின் தோற்றிற்றே! என்கிறார் கம்பர்.


ஆமாம்! ஆனந்தப் பெருக்கில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று அறியாதவனாக, எல்லோரையும் வணங்கி தன்னையும் வணங்கி நிற்கும் பரதனின் நிலை இப்படி என்றால், அயோத்தி மக்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! பெரிதும் மகிழ்ந்தனர். சீதாவுடன் ஸ்ரீராமனும் வந்துசேர்ந்தார். ''இத்தனை நாட்கள் நீங்கள் இல்லாமல் இருளோ என்றிருந்த அயோத்தி இனி ஒளி பெற, விளக்கேற்றி வை, சீதா!'' என்று கோசலை பணிக்க, சீதா தீப ஒளி ஏற்றினாள். அயோத்தி மக்களும் இல்லங்கள்தோறும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடினார்கள்.தீபாவளிக்கான காரணக் கதைகளில் இதுவும் ஒன்று என்பர்.


 திருமகளின் திருமண நாள்!

அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும், மந்தர மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்த திருக்கதை நமக்குத் தெரியும். அப்போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. உலகையும் உயிர்களையும் காக்கும் பொருட்டு, அந்த விஷத்தை சிவபெருமான் ஏற்று திருநீலகண்டன் ஆனார்.

தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அதன் பலனாக அடுத்தடுத்து ஐராவதம், உச்சைச்ரவஸ் எனும் குதிரை, காமதேனு, கற்பக விருட்சம், சந்திரன், மூதேவி ஆகியோர் தோன்றினர். பின்னர் பேரெழில் பெட்டகமாக, கோடி சூரிய பிரகாசத்துடன் திருமகள் தோன்றினாள். அவளை மணந்துகொள்ள அனைவரும் போட்டி போட்டனர்.


ஆனால் திருமகள் சலனமோ, ஆசைகளோ இல்லாமல் இருந்த திருமாலே தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று விரும்பி, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தாள். அப்போது மூத்தாள், 'நானே முதலில் தோன்றியவள் என்பதால், எனக்கே முதலில் திருமணம் நடைபெற வேண்டும்’ என்று வாதிட்டாள். ஆனால், அவளை மனைவியாக ஏற்க ஒருவரும் முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த உத்தாலகர் என்ற முனிவர், மூத்தாளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமது தவ வலிமையால் அவளைப் பரிசுத்தப்படுத்து வதாகவும் கூறி மூத்தாளை மணந்துகொண்டார்; திருமகளை திருமால் மணந்தார்.

இருள் போன்ற மூதேவியை ஏற்றுக்கொண்ட உத்தாலகரின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், திருமகளின் திருமண நாளைக் கொண்டாடும் வகையிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பார்கள்.


மகாபலி பெற்ற வரம்!

பக்த பிரகலாதனின் பேரன் மகாபலி. பண்பும் பரிவும் கொண்டவன். ஆனாலும், தான் செய்யும் புண்ணிய காரியங்கள் குறித்து கர்வமும் இருந்தது அவனுக்கு. அதேநேரம், அவன் பெற்றிருந்த வரங்களால் இந்திர பதவிக்கு ஆபத்து வரக்கூடும் என்று தேவர்களும் அச்சத்தில் இருந்தனர். அவர்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள். மகாபலியை தடுத்தாட்கொள்ள நினைத்த பரம்பொருள் வாமன அவதாரம் எடுத்தார்.


மகாபலி இந்திர பதவி வேண்டி யாகம் செய்துகொண்டிருந்த யாகசாலைக்குச் சென்றார். மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். 'அவ்வளவுதானே! தந்தால் போச்சு’ என்று இறுமாப்புடன் ஒப்புக்கொண்டான் மகாபலி. ஆனால் வந்திருப்பது யார் என்பதை அறிந்த அசுரகுரு சுக்கிராச்சாரியர் மகாபலியைத் தடுத்தார். ஆனால், மகாபலி அவர் கருத்தை ஏற்கவில்லை. வாமனருக்கு மூன்றடி நிலம் தானமாகக் கொடுப்பதாகக் கூறி, தாரை வார்த்துக் கொடுத்தான். மறுகணம் வாமனர் திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்தார். முதல் நாள், தம் ஒரு திருவடியால் பூமியை அளந்தார். அடுத்த நாள், தம் மற்றொரு திருவடியால் விண்ணை அளந்தார். 3-வது நாள், இன்னும் ஓர் அடியை எங்கே வைப்பது என்று பகவான் கேட்க, மகாபலி தன் தலையைக் காட்ட, பகவான் அவன் தலைமீது மூன்றாவது அடியை வைத்தபடி, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார்.

மகாபலி 'நான் தங்களுக்கு தானம் கொடுத்த மூன்று தினங்களில் நடுவில் வரும் சதுர்த்தசி திதியில் மக்கள் எல்லோரும் அதிகாலையில் எழுந்து, ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும்’ என்று வரம் கேட்டான். பகவானும் அப்படியே அனுக்கிரஹம் செய்தார். இது, மகாபலிக்கான தீபாவளித் திருக்கதை!


வனவாசம் முடிந்தது!
சகுனியின் ஆலோசனையின்படி பாண்டவர்களை சூதாட அழைத்தான் துரியோதனன். அதில் கலந்துகொண்ட தருமர் நாடு, நகரம் அனைத்தையும் இழந்தார். அதன் காரணமாக பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் செய்யும் நிலை. பாண்டவர்கள் வனம் செல்ல, அவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தத்தின் மக்கள் சோகத்தில் மூழ்கினர். இந்திரபிரஸ்த நகரமே இருண்டு போனது.

காலம் கழிந்தது. பல்வேறு சோதனைகளைக் கடந்து வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் நிறைவு செய்து நாடு திரும்பினார்கள் பாண்டவர்கள். அவர்களது வருகையை அறிந்த இந்திரபிரஸ்த மக்கள் பேரானந்தம் அடைந்தனர்.


அந்த நகரமே விழாக்கோலம் பூண்டது. தென்னை, வாழை, பாக்கு, கமுகு மரங்களால் தோரணங்கள் அமைத்து, வீதியெங்கும் நீர் தெளித்து மாக்கோலம் இட்டு அலங்கரித்தார்கள். எங்கும் மங்கல ஒலி முழங்கின. அதுமட்டுமா? வீட்டுக்கு வீடு தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து மகிழ்ந்தார்கள் மக்கள்.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்றும், பாண்டவர்கள் நாடு திரும்பியது ஒரு தீபாவளித் திருநாள் என்றும் கூறுவார்கள்.

தீய எண்ணங்களை ஒழித்து, ஆத்ம ஜோதியாகத் திகழ வேண்டும். ஆனால், அதற்கான முயற்சியில் பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கும்; பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியது வரும். இதை பாண்டவர்கள் மூலம் உணர்த்தி, அவர்கள் துன்பங்களைத் தாண்டி வெற்றி பெற்ற கதையை, தீபாவளித் திருநாளில் நினைவுகூர்வது சிறப்பாகும். அப்போது, நமக்கும் தீமைகளை அணுகாத திடசிந்தையும், கடவுளின் அணுக்கமும் வாய்க்கும்.காசியும் வியாசரும்!

காசிக்குச் சென்றால் கர்ம வினைகள் தொலையும் என்பது நம்பிக்கை. 'இது எவ்வளவு தூரம் உண்மை?’ என்று சோதிக்க நினைத்தார் வியாசர். அதற்காக சீடர்களுடன் காசிக்குப் புறப்பட்டார். ஆனால், அங்கு அவர்களுக்கு ஒரு வாரமாக உணவு கிடைக்கவில்லை. ஒருநாள் ஓர் இல்லத்தின் முன் நின்று குரல்கொடுத்தார் வியாசர். வெகுநேரமாகியும் கதவு திறக்கப் படவில்லை. பொறுமை இழந்த வியாசர், காசி மக்களைச் சபிக்க முற்பட்டார். அப்போது இல்லத்தின் கதவு திறந்தது. வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட பெண்மணி, ''நிறுத்துங்கள்'' என்றாள். சாபமிடுவதற்காகத் தூக்கிய வியாசரின் கைஅப்படியே நின்றுவிட்டது. பின்னர், அந்தப் பெண்மணி வியாசரைப் பார்த்துப் புன்னகைத்ததும்தான் அவரால் கையைக் கீழே இறக்க முடிந்தது.

வியாசர் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்து எல்லோருக்கும் இலை போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர், ''எல்லோரும் சாப்பிடுங்கள்'' என்றாள். வியாசர் திகைத்தார். ''இலையில் எதையும் பரிமாறவில்லையே!'' என்று கேட்டார். தொடர்ந்து ஏதோ சொல்ல அவர் வாயைத் திறப்பதற்குள், இலை முழுதும் விதவிதமான உணவு வகைகள் நிறைந்திருந்தன. வியப்பு மேலிட அனைவரும் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நிமிர்ந்தால், சாக்ஷ£த் அன்னபூரணியே காட்சியளித்து மறைந்தாள்.


இந்தத் திருவிளையாடல் எதற்காக எனும் கேள்வி வியாசரை துளைத்தெடுத்தது. இதற்கான பதிலை சிவனாரைத் தரிசித்து கேட்டார் வியாசர். ''உங்களில் எவருமே சிரத்தையாக காசிக்கு வரவில்லை. இந்த ஊரைச் சோதிக்க வந்தீர்கள். அதனால் ஏற்பட்டதுதான் இந்த ஒரு வாரப் பட்டினி'' என்றார் சிவபெருமான். உண்மைதான்! நோக்கங்கள் உயர்வாக இருந்தால்தான், அனுபவமும் முறையாக இருக்கும்.பார்வதியின் விரதக் கதை!
பிருங்கி என்றொரு  முனிவர், சிறந்த சிவபக்தர். சிவபெருமானை மட்டுமே பரம்பொருளாகக் கருதி வழிபடுபவர். ஒருநாள் கயிலைக்குச் சென்றார். அங்கே, ஸ்வாமியுடன் பார்வதியம்மையும் இருந்தாள். 'ஸ்வாமியை மட்டுமே வணங்கிச் செல்லும் பிருங்கி இன்று நம்மையும் வணங்கட்டுமே’ என்று, ஸ்வாமிக்கு நெருக்கமாக அமர்ந்துகொண்டாள் அம்மை.

ஆனால், பிருங்கி முனிவர் வண்டின் உருவமெடுத்து, ஸ்ரீபரமேஸ்வரனை மட்டும் வலம் வந்து வணங்கி வழிபட்டார் (இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் சக்தியைப் பறித்ததும், அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து அருளிய கதையும் நாமறிந்ததே).


அம்பிகை மனம் வருந்தினாள். தான் வேறு, சிவம் வேறு இல்லை என்பதை உலக மக்களுக்கு உணர்த்த எண்ணினாள். அதற்காக தவம் செய்ய பூலோகம் வந்தாள். பூமியில் கௌதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தவள், முனிவரின் ஆலோசனைப்படி கடும் விரதமும் தவமும் இருந்து சிவனாரை வழிபட்டாள். அதன் பலனாக உமையவளுக்கு ஸ்ரீபரமேஸ்வரரின் திருமேனியில் ஒருபாதி இடம் கிடைத் தது. இந்த அருட்சம்பவம் நிகழ்ந்ததும் ஒரு தீபாவளித் திருநாளில்தான் என்பர்.

அம்பிகை கடைப்பிடித்தது கேதாரீஸ்வர விரதம். இப்போது அம்பிகைக்கும் சேர்த்து கேதாரகௌரி விரதமாகக் கடைப்பிடிக்கிறார்கள். புரட்டாசி மாதம் வளர் பிறை தசமி திதி நாளில் இருந்து துவங்கி ஐப்பசி அமாவாசை வரையிலும் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இயலாதவர்கள் கடைசிநாளில் மட்டுமாவது விரதம் இருந்து, அம்மையப்பனை ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர திருவடிவில் தியானித்து வழிபடுவது, சகல நன்மைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்.திருவிளக்கை ஏற்றி வைத்தோம்...
தீபாவளி தினத்தில் தீபச்சுடரின் வெளிச்சம் படும் இடங்களில் எல்லாம் லட்சுமிகடாட்சம் நிறைந்திருக்கும் எனச் சொல்லும் ஞானநூல்கள், இதற்குக் காரணமான ஒரு கதையையும் விவரிக்கின்றன.


அரிய வரங்கள் பல பெற்றிருந்த நரகாசுரன் தேவர்களையும் ரிஷிகளையும் பெரிதும் கொடுமைப்படுத்தினான். அவனால் பெரும் துன்பத்துக்கு ஆளான அனைவரும், துவாரகாபதியாம் ஸ்ரீகிருஷ்ணரிடம் வந்து சரண் புகுந்தனர். நரகனை அழித்து தர்மத்தை நிலைநாட்டும்படி வேண்டிக்கொண்டனர். பகவானும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து, ஆறுதல் கூறியதுடன், சத்யபாமாவின் துணையோடு அதர்மத்தை அழிக்கப் புறப்பட்டார். இதுதான் தக்க தருணம் என்று காத்திருந்த பாணாசுரன் முதலான வேறு பல அசுரர்கள், பாற்கடலில் இருக்கும் திருமகளை எப்படியாவது கவர்ந்து செல்ல திட்டமிட்டார்கள். இதை அறிந்த திருமகள் என்ன செய்தாள் தெரியுமா? அருகிலிருக்கும் தீபச்சுடரில் ஐக்கியமாகிவிட்டாளாம். இந்தச் சம்பவம் நிகழ்ந்ததும் தீபாவளித் திருநாளில்தான். ஆகவே, அன்று திருவிளக்கு முதலாக வீடு முழுவதும் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றிவைத்து, லட்சுமிதேவியை தீபலட்சுமியாக வழிபடுவார்கள். அப்போது, ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின்

கீழ்க்காணும் பாடலைப் பாடி அலைமகளை வழிபட, நமது வறுமைகள் யாவும் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.
நமோ (அ)ஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
  நமோ (அ)ஸ்து பூமண்டல நாயிகாயை
நமோ (அ)ஸ்து தேவாதிதயாபராயை
  நமோ (அ)ஸ்து ஸார்ங்காயுத வல்லபாயைகங்கை... நம்பிக்கை!

தீபாவளி அன்று காலை எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் தீபாவளியன்று 'கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று பரஸ்பரம் விசாரித்துக்கொள்வது வழக்கம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நம்பிக்கையும், பாவனையும்தான் முக்கியம். தண்ணீரில் கங்கை எழுந்தருளி இருக்கிறாள் என்று நம்பிக்கையுடன் நீராடினால், நமது பாவங்கள் அனைத்தும் நசித்துப்போகும்.


ஒருமுறை, பார்வதிதேவி ''எல்லோரும் கங்கையில் நீராடி பாவங்களைத் தொலைத்துக் கொண்டால், நரகத்துக்கு அவசியம் இல்லையே'' என்று சிவ பெருமானிடம் கேட்டாள். ''உண்மைதான்! ஆனால் கங்கையால் ஏற்படும் புண்ணியம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது'' என்ற சிவபெருமான், நாம் இருவரும் கிழத் தம்பதியாக கங்கைக் கரைக்குச் செல்வோம். நீ அங்கு வருபவர்களிடம் என்னைத் தூக்கிச்சென்று கங்கையில் நீராட்டினால், பொன் - பொருள் பரிசு தருவதாகக் கூறு. ஆனால், அப்படி என்னைத் தூக்கினால் எனது பாவங்கள் அவர்களைச் சேரும் என்று கூறு'' என்றார். பார்வதியும் அப்படியே கங்கையில் நீராடி வருபவர்களிடம் மன்றாடினாள். ஒருவரும் முன்வரவில்லை.

கடைசியில் திருடன் ஒருவன் முன்வந்தான். அவனிடம், ''இவரைத் தூக்கினால் இவரது பாவம் உன்னைச் சேருமே'' என்றாள் மூதாட்டியக இருந்த பார்வதி.  அதற்கு முரடன், ''அதனால் என்ன... அப்படியே பாவங்கள் சேர்ந்தாலும் அதைக் கரைப்பதற்குத்தான் கங்கா மாதா இருக்கிறாளே!'' என்றான் நம்பிக்கையுடன். அவ்வளவில் அவனுடைய பாவங்கள் தொலைந்ததுடன் அவனுக்கு சிவ-பார்வதி தரிசனமும் கிடைத்தது. வழிபாட்டில் நம்பிக்கையும், பாவனையும்தான் முக்கியம்.கிணற்றுக்குள் கங்கை!

கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர்.  இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான்தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம்.

ஒருமுறை இவரது வீட்டில் சிராத்தம் வந்தது. வீட்டில் அதற்கான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. ஐயாவாள் காவிரியில் குளிக்கக் கிளம்பினார். வழியில் ஏழை ஒருவன் பசியால் துடித்துக்கொண்டிருந்தான். அவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவிட்டார். ஆனால், அவரைப் பிடிக்காத அந்தணர்கள் சிலர், ஏழைக்கு அவர் உணவிட்டதைக் காரணம் காட்டி அவரை விலக்கி வைத்தனர். அவரது வீட்டுக்குச் செல்வதில்லை என்றும் முடிவெடுத்தனர். அன்றைய சிராத் தத்தை அந்தணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்துமுடித்தார் ஐயாவாள்.


சிலநாட்களில் மீண்டும் ஒரு சிராத்தம் வந்தது. அதை முறைப்படி செய்ய விரும்பிய ஐயாவாள், அந்தணர்களிடம் சென்று வீட்டுக்கு அழைத்தார். 'தகுந்த பிராயச்சித்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன்’ என்றார். 'எனில் கங்கையில் குளித்து வாரும்!' என்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவர வெகுநாட்கள் ஆகுமே! எனவே, ஸ்ரீதர ஐயாவாள் தனது வீட்டுக் கிணற்றடிக்குச் சென்றார். கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார். மறுகணம் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கிப் பெருகி, வீதியெங்கும் வெள்ளமெனப் பாய்ந்தாள். ஊர்மக்களும் அந்த அந்தணர்களும் தங்கள் தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினர். அதை ஏற்று ஸ்ரீதர ஐயாவாள் மீண்டும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்க, அந்தக் கிணற்றிலேயே கங்கை ஐக்கியமானாளாம். இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம்!


குபேர யோகம்!

விச்ரவசு என்றொரு முனிவர்; சிறந்த சிவபக்தர். அவர் யாகம் ஒன்று செய்ய விரும்பினார். ஆனால், திருமணம் ஆனவர்களே யாகம் செய்ய முடியும் என்பதால், பரத்வாஜ முனிவரின் மகளை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைஸ்ரவணன் என்று பெயர் வைத்தார்.
தந்தையைப் போலவே இவனும் பக்திமானாக இருந்தான். ஒருநாள் பெற்றோரிடம் சென்று, தான் பிரம்மனைக் குறித்து தவமியற்றப் போவதாகச் சொன்னான். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சியே! அவனை மனதார ஆசீர்வதித்து அனுப்பினர். வைஸ்ரவணன் அமைதியான ஓரிடத்துக்குச் சென்று, தவத்தில் மூழ்கினான். அது சாதாரண தவம் இல்லை. முதலில் ஆகாரமின்றி தண்ணீரை மட்டுமே அருந்தி தவமிருந்த வைஸ்ரவணன், பிறகு தண்ணீரையும் தவிர்த்து வெறும் காற்றை மட்டுமே புசித்தபடி தவத்தைத் தொடர்ந்தான்.


அவனது பக்தி வைராக்கியத்தைக் கண்டு அகமகிழ்ந்த பிரம்மதேவன், அவன் முன் காட்சி தந்தார். ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். ''தங்களைத் தரிசித்ததே பெரும் பாக்கியம். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?'’ என்று பணிவுடன் கூறினான் வைஸ்ரவணன். இதனால் மேலும் மகிழ்ந்த பிரம்மதேவன், அவனை அஷ்டதிக் பாலகர்களில் ஒருவனாகவும், எல்லாச் செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாகவும் நியமித்தார்.

இப்படி அருள்பெற்ற வைஸ்ரவணனே குபேரன் ஆவார். தீபாவளி தினத்தில் பூஜிக்கவேண்டிய தெய்வங்களில் இவரும் ஒருவர். அன்று இவரை வழிபட, வறுமைகள் அகன்று நமது வாழ்வு வளம் பெறும்.


மன்னர்களும் தீபாவளியும்!

மும்பையில் பல பகுதிகளில் தீபாவளி தினத்தை சுவாரஸ்யமாக அனுஷ்டிக்கிறார்கள். அன்று தங்கள் வீட்டு வாசலில் மண்ணாலான சிறிய கோட்டையைக் கட்டுகிறார்கள். கோட்டை கட்டும் இந்த நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்பதுதான் இதன் சிறப்பம்சம். ஏன் இந்த மண் கோட்டை கொண்டாட்டம்?

சத்ரபதி சிவாஜி தன் படைகளுடன் சென்று தீரத்துடன் போரிட்டு, பகைவர்களின் கோட்டையைக் கைப்பற்றியது ஒரு தீபாவளித் திருநாளில்தான். இதை ஞாபகப் படுத்தும் விதமாகவே, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் மண் கோட்டை கட்டி வைத்து, வீரசிவாஜியின் வீரதீரத்தை நினைவுகூர்கிறார்கள்.


* அதேபோன்று மௌரியப் பேரரசர் அசோகர் தனது திக்விஜய யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பிய நாள் அசோக தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

* உஜ்ஜயினி மன்னனான விக்ரமாதித்தன் தன்னுடைய பகைவர்களான ஷாகாஸ் என்பவர்களை வென்று, முடிசூட்டிக்கொண்டதும் ஒரு தீபாவளித் திருநாளில்தான்.

* சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங்கையும், 52 ராஜபுத்ர அரசர்களையும் சிறையிலடைத்தது, அன்றைய மொகலாயப் பேரரசு. குரு கோவிந்த சிங் அந்தச் சிறையிலிருந்து தப்பியதுடன், தன்னுடன் சிறைப்பட்டிருந்தவர்களையும் தப்பிக்கவைத்து காப்பாற்றினார். விடுதலையான அவர்களுக்குப் பொற்கோயிலில் விளக்கேற்றி வைத்து வரவேற்பு கொடுத்ததுடன், வீடுகளிலும் விளக்கேற்றிவைத்துக் கொண்டாடினார்கள் என்கிறது வரலாறு.


அன்பெனும் அகல் விளக்கு!

முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் ஓரிடத்தில் சேர்த்து, அவர்கள் மூலம் உலகை உய்விக்க எம்பெருமான் திருவுளம் கொண்டார். அதன்படி மூவரும் திருக்கோவிலூர் தலத்தை அடைந்தனர்.


அங்கே, வைணவர் ஒருவரது இல்லத்தில் இருந்த இடைகழியில் தங்கியிருந்தார். பொய்கையாழ்வார். அப்போது பூதத்தாழ்வாரும் அங்கு வந்தார். 'இந்த இடத்தில்  ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்’ என்று பொய்கையாழ்வார் சொல்ல, இருவரும் அமர்ந்தனர். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் வந்தார். 'இங்கு இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’ என்று கூறி, மூவரும் நின்றுகொண்டனர். மூவரும் பகவானின் மகிமைகளைப் பேசிக் களித்திருந்தனர். அப்போது நான்காவதாக ஓர் நபர் உட்புகுந்தது போன்று நெருக்கம் ஏற்பட்டது. இருள் சூழ்ந்துவிட்ட அந்த வேளையில் புதிதாக வந்திருப்பது யார் என்று தெரியவேண்டாமா?

எனவே பொய்கையாழ்வார், 'வையம் தகழியா...’ என்று துவங்கி தமது பாசுரத்தால், பூமியாகிய தகழியில் கடல் நீரையே நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தாழ்வார், 'அன்பே தகழியா...’ எனத் துவங்கி அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தனையைத் திரியாகவும் கொண்டு ஞான தீபம் ஏற்றினார். பேயாழ்வார் 'இந்த இரண்டு ஒளியினாலும் இருள் அகன்றதால் எம்பெருமானைக் கண்டேன்’ என்று பாசுரம் பாடுகிறார்.

நாமும் நம் மனத்துள் அன்பெனும் விளக்கேற்றி, மாசுகள் எனும் இருளகற்றி, உள்ளே பரம்பொருளைக் குடியிருத்தி, நாளும் நல்லதே செய்து, உள்ளளி பெருக்கி மகிழ்வோம்!பூமிக்கு வந்த பாகீரதி!

ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். அவர் ஒருமுறை யாகம் ஒன்று நடத்தினார். யாகக் குதிரை திக் விஜயம் புறப்பட்டது. விரோதிகள் சிலர், அந்தக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவைத்தனர். குதிரையைத் தேடிப் புறப்பட்ட சகர குமாரர்கள், ஒருவழியாக கபில முனிவரின் ஆசிரமத்தில் அதைக் கண்டுபிடித்தனர். கபில முனிவரே குதிரையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தவறாகக் கருதி, முனிவரைத் தாக்க முயன்றனர். ஆனால், கபில முனிவரின் ஒரு பார்வையிலேயே எரிந்து சாம்பலானார்கள் சகரனின் புதல்வர்கள்.

 

அவர்களுக்குப் பிறகு திலீபன் எனும் அரசன் வரையில் சகர வம்சத்தின் சந்ததியினர் பலரும், கபிலரால் எரிந்து சாம்பலாகிப்போன தங்களின் முன்னோர் நற்கதி அடைவதற்குப் பலவாறு முயற்சித்தனர். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. பிறகு திலீபனின் மைந்தனான பகீரதன், கங்கை பூமிக்கு வந்தால் அவள் மூலம் முன்னோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதை அறிந்து, அவளை நோக்கி தவம் செய்தான். கங்கையும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். ஆனால், பொங்கிப் பாய்ந்து வரும் தன்னைத் தாங்கும் சக்தி பூமிக்கு இல்லை என்பதை பகீரதனுக்கு உணர்த்தி, சிவனாரைக் குறித்து தவமியற்ற அறிவுறுத்தினாள். பகீரதன் சிவனாரைக் குறித்து கடும் தவம் இருந்தான். சிவனார் மனம் கனிந்தார்; பகீரதனுக்கு அருள் புரிந்தார்.

அதன்படி, கங்கையை சடையில் தாங்கி அவளின் வேகத்தை மட்டுப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கையால் பகீரதனின் முன்னோர் நற்கதி அடைந்தனர். அவள் பூமிக்கு வரக் காரணம் பகீரதன் என்பதால், கங்காதேவிக்கு 'பாகீரதி’ என்றும் ஒரு பெயர் உண்டு!


பூமாதேவியின் புதல்வன்!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தம்தானே? ஒவ்வொருமுறை போரிடும்போதும், இறையருளால் தேவர்களே ஜெயித்தனர். இந்த நிலையில், 'பூலோகத்தில் நிகழும் யாகங்களும், அந்த யாகங்களில் அளிக்கப்படும் உணவுகளுமே தேவர்களுக்கு பலம் சேர்க்கிறது. எனில், பூலோகத்தை இல்லாமல் பண்ணிவிட்டால் என்ன’ என்று விசித்திர எண்ணம் உதித்தது இரண்யாட்சன் என்ற அசுரனுக்கு.

சற்றும் தாமதிக்காமல் பூமிப்பந்தைக் கவர்ந்துகொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்துகொண்டான். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள். அவர் வராஹ அவதாரம் எடுத்தார். கடலுக்கு அடியில் சென்று அசுரனுடன் கடும் போரிட்டு, அவனை அழித்து பூமிப்பிராட்டியை மீட்டுவந்தார். இப்படி வராஹ அவதாரம் எடுத்த பெருமாளுக்கும் பூமிப்பிராட்டிக்கும் பிறந்தவனே நரகாசுரன்.


அவன் நலம் வேண்டி, ''ஸ்வாமி, என் மகன் மரணம் அடையாமல் இருக்க வரம் தாருங்கள்'' என்று பிரார்த்தித்தாள். ''அது இயலாத காரியம். அவனது மரணம் என்னால் நிகழும். நீயும் அருகில் இருப்பாய்'' என்றார் ஸ்ரீவிஷ்ணு. அந்த பூமாதேவியின் அம்சமே சத்யபாமா. இன்னொரு தகவலும் சொல்வர். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடம் சாகா வரம் கேட்டான். அப்படியான வரத்தைத் தர இயலாது என்று மறுத்தார் பிரம்மன். ''எனில், எனது மரணம் என் அன்னையால் நிகழ வேண்டும்'' என்று வரம் கேட்டான். பெற்ற தாயே மகனைக் கொல்ல மாட்டாள் என்ற எண்ணத்தில் இந்த வரத்தைக் கேட்டான். பிரம்மனும் வரம் தந்தார். அதன்படியே அவன் முடிவும் அமைந்தது. பூமிதேவியின் மகன் என்பதால்தான் நரகாசுரனுக்கு பௌமன் என்றும் பெயர் உண்டு!அசுரன் கேட்ட வரம்!
வருண பகவானின் வெண்குடை, தேவேந்திரனின் குண்டலங்கள் என தேவர்களின் உடைமைகளை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் நிம்மதி யும் பறிபோனது நரகாசுரனால். துயரத்தில் தவித்த தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் சரண்புகுந்தார்கள்.


சத்தியத்தின் துணையோடு புறப்பட்டார் பகவான். ஆமாம்! சத்யபாமா தேரோட்ட நரகாசுரனின் தலைநகர் ப்ராக்ஜோதிஷபுரத்தை நோக்கிக் கிளம்பினார். கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் ஆகிய கோட்டைகளை அழித்து நகருக்குள்ளும் புகுந்தார். கணப்பொழுதில் நரகனின் படைகள் அழிக்கப் பட்டன. கடைசியில் நரகாசுரனே போர்க்களம் வந்தான். ஆனால், அவனது ஆயுதங்கள் எல்லாம் கண்ணனின் முன்னால் வலுவிழந்து போயின. நரகன் வீழ்த்தப்பட்டான். அப்போது பூமிப்பிராட்டி ''இந்த மரண காலத்தில் இவனுக்கு ஞான உபதேசம் செய்ய வேண்டும்'' என்று வேண்டினாள். அதன்படியே கண்ணனின் கருத்தும் கண்களும் நரகாசுரனின் பக்கம் திரும்பி அருள் மழை பொழிந்தன.

தெளிவு பெற்ற நரகாசுரன், ''பரந்தாமா! நான் மறையும் இந்த நாளை எல்லோரும் நல்ல நாளாகக் கொண்டாட வேண்டும். அன்று எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காவும் வாசம் செய்ய வேண்டும். அனைவரும் எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி, விளக்கேற்றி வழிபட்டு, நல்லுணர்வைப் பெற வேண்டும். அவர்களுக்கு எல்லாவிதமான மங்கலங்களையும் நீங்கள் அருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தான் (இந்த வரத்தை பூமிதேவி கேட்டதாக பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது). கண்ணனும் வரம் தந்தார். நரகாசுரன் முக்தி பெற்ற அந்த நாளே தீபாவளி. நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி கண்ணன் நம்மை ஆட்கொள்வதையே இந்தக் கதை உணர்த்துகிறது.


ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரம்
ஸ்ரீ சக்ரமத்யே வசந்தீம் - பூத
ரக்ஷ : பிஸாசாதி துஷ்டான் ஹரந்தீம்
ஸ்ரீ காமகோட்யாம் ஜ்வலந்தீம் - காம
ஹீனைஸ்ஸு காம்யாம் பஜே தேஹிவாசம்
கருத்து: ஸ்ரீசக்ரத்தின் மத்தியில் வசிப்பவளும், பூதம், பிசாசம் முதலான துஷ்ட சக்திகளை அழிப்பவளும், ஸ்ரீகாமகோடியில் ஜொலிப்பவளும், காமம் அற்றவர்களால் எளிதில் அடையக்கூடியவளுமான உன்னை பூஜிக்கிறேன். ஓ காமாக்ஷி... வாக்கு முதலான வரங்களைக் கொடுக்க வேண்டும்.

தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, ஸ்ரீகாமாக்ஷி அம்மையைப் போற்றும் இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சர்வ மங்கலங்களும், சம்பத்துக்களும் நம்மை வந்தடையும்.