Search This Blog

Friday, November 30, 2012

அருள் மழைகாஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் பகிர்ந்துகொள்கிறார்.

ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்னு சொன்னா. உடனே பெரியவா,அப்படியாங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.


ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!


அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.
அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.


காஞ்சிப் பெரியவரும்,ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணைநடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா,அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!


-- 
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 

Thursday, November 29, 2012

எனது இந்தியா (தண்டனையைத் தீர்மானித்த மதம்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

டெல்லியை ஆண்ட பால்பனும் அலாவு​தீன் கில்ஜியும், பொதுமக்கள் முன்னி​லையில் யானையை வைத்து மரண தண்ட​னையை நிறைவேற்றி இருக்கின்றனர். முகலாயப் பேரரசர் ஹுமாயூன், அவரது ஆட்சியைப் பற்றி ஓர் இமாம் தவறாக விமர்சித்ததற்காக, அவரை யானைக் காலால் மிதித்துக் கொல்ல தண்டனை அளித்து இருக்கிறார். முகலாயப் பேரரசரான ஜஹாங்கீர், யானையை வைத்து மரண தண்டனை வழங்கியதைப் பற்றி பிரெஞ்சுப் பயணி பெர்னியர் தனது குறிப்பில் பதிவுசெய்துள்​ளார். முகலாயர் ஆட்சியில் யானைகளுக்கு தந்தங்களில் இணைக்கப்பட்ட கூர்மையான தகடுகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளை துண்டாக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் பிற்பாதி காலம் வரை நீடித்த இந்தப் பழக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் வளர்ச்சியால் குறைந்து இறுதியில் முற்றிலும் கைவிடப்பட்டது.

அது போலவே, ஒருவரது கழுத்தைக் கயிற்றால் சுற்றி கயிற்றின் இரு முனைகளால் கால் கட்டை விரல்கள் இரண்டையும் கட்டிவிடுவர். இதனால், நிமிர முடியாமல் குனிந்த நிலையிலேயே இருக்க வேண்டி இருக்கும். இந்த நிலையில், முதுகின் மேல் ஒரு கல்லை வைத்துவிடுவர். இந்தத் தண்டனையின் பெயர் அண்ணாந்தாள். தேவதாசிப் பெண்களுக்கு இதுபோன்ற கொடூரத் தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது என்று பேராசிரியர் சிவசுப்ரமணியன் தனது 'தேவரடியார்களும் அடிமை முறையும்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். பண்டைய இந்தியாவின் தண்டனை முறைகளைப்பற்றி ஆராய்ந்த விஜய் சோமன், தண்டனைகளைத் தீர்மானிப்பதில் மதம் முக்கியப் பங்கு வகித்து இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மத குருமார்கள், துறவிகள் ஆகியோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள அதுவே காரணம் என்கிறார்.


மராத்தியர் ஆட்சிக் காலத்திய தண்டனை முறை​களைப் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது மோடி ஆவணம். தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு மராத்திய மன்னர்கள் ஏறத்தாழ 180 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளனர். மராத்தியர் ஆட்சியில் அரசு ஆவணங்கள் யாவும் மராத்திய மொழியில் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதும்போது அவர்கள் பயன்படுத்திய எழுத்து முறைக்கு 'மோடி எழுத்து’ என்று பெயர், அதனால் இவை 'மோடி ஆவணம்’ என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மராத்திய ஆட்சியில் பயன்படுத்தப்பட்டது ஆர்ச்சைக் மோடி என்று அழைக்கப்படுகிறது. இந்த வடிவம் சிவாஜி காலத்தில் இருந்த மோடி வடிவமாகும். தஞ்சைக்கு வந்த பிறகு இந்த எழுத்து முறையில் மராத்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் கலந்து, மோடி எழுத்து உருவாகி இருக்கிறது. 1858-ம் ஆண்டுக்குப் பிறகு, தஞ்சையில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேய அரசு, மோடி ஆவணங்களை மூட்டையாகக் கட்டிக் கிடப்பில் போட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு இந்த அரிய ஆவணங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

1,700 மூட்டைகளுக்கும் மேலாக இருந்த ஆவணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு 59 தொகுதிகளாக தமிழில் மொழி​பெயர்க்கப்பட்டுள்ளன. 1989-ம் ஆண்டு 'தஞ்சை மராட்டிய மன்னரின் மோடி ஆவணங்கள்’ எனும் தலைப்பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர் முனைவர் பா.சுப்பிரமணியன். இந்த அரிய புத்தகத்தில், மராத்தியர் காலத்தில் நிலவிய தண்டனை முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, சிலவற்றைப் பாருங்கள்... 'பொய் சாட்சி சொன்னவரை தண்டிப்பதற்காக அவரது உடல் முழுவதும் கறுப்பு, வெள்ளைப் புள்ளிகளை இட்டு, கழுதையின் மேல் வாலின் பக்கம் முகமாக உட்காரவைத்து, அவர் கழுத்தில் எருக்கம் பூ மாலைகளைப் போட்டு, குற்றத்தின் விவரத்தைச் சொல்லி, தமுக்கு அடித்துக்கொண்டு பிரசித்தமான வீதிகளில் பட்டணம் முழுவதும் சுற்றிவர வேண்டும் எனத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. ராஜமால்படி களிமோடு என்னும் ஊரில் இருக்கும் வீராயி என்பவள் செம்பு திருடினாள் என அவளைச் சாவடியில் அடைத்தனர். அவளுடைய கழுத்தில் செம்பைக் கட்டி இன்ன குற்றம் செய்தாளென்று வாசித்துக்கொண்டு நான்கு வீதிகளிலும் தண்டோராவுடன் சுற்றவைத்து, ஒவ்வொரு வீதியிலும் பிரம்பால் மூன்று அடி வீதம் அடித்து மூன்று வாசல்களையும் காட்டிவிட்டு, கோட்டைக்கு வெளியே விரட்டிவிட்டது. சொந்தக்காரனிடம் செம்பு கொடுக்கப்பட்டது.’

ஆயுத சாலையில் ஒரு தச்சன் வேலை செய்துவிட்டு வீட்டுக்குப் போகையில் பாராக்காரன் அவனுடைய வேஷ்டியை உதறிப் பார்த்தபோது, ஒரு பித்தளைத் தகடு வேஷ்டியில் இருந்தது. முறையாகக் காவல் பணி செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்த குற்றத்துக்காக பாராகாரனுக்கு ஆறு தேங்காய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜான் பைஃப் என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் ரெசிடென்ட் பிரதிநிதி தஞ்சையில் ஆற்று வெள்ளத்தைப் பார்க்கப் பயணித்தார். அப்போது, தேவதாசியின் மகள் 'நாகு’ என்பவள் வண்டியில் அமர்ந்து ரெசிடென்டின் யானைக்கு எதிராகப் பயணித்தாள். இதன் பொருட்டு அவளுக்கு ஒரு சக்கரம் இரண்டு பணம் தண்டம் விதிக்கப்பட்டது. பொய், புரட்டு செய்தவனுக்கு காலில் விலங்கு போட்டு ஒரு வருஷம் வரை மராமரத்து வேலை செய்ய வைத்து பிறகு, முழங்காலுக்குக் கீழே பிரம்பால் அடித்து விரட்டப்பட்டு இருக்கிறான்.


மோடி ஆவனத்தில் காணப்படும் சான்றுகள் தமிழகம் குறித்து முற்றிலும் வேறுவிதமான சித்திரம் ஒன்றை நமக்குத் தருகின்றன. மோடி ஆவணங்கள் இன்னும் முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. ஒருவேளை, அவை யாவும் பதிப்பிக்கப்பட்டால், கடந்த காலத்தில் புதையுண்டு போயிருந்த பல உண்மைகள் வெளிவரும். மோடி ஆவணங்களைப் போலவே மராத்தியர்களின் காலத்தை அறிய உதவுகிறது மெக்கன்சி சுவடிகள். சென்னை மாகாணத்தின் முதல் தலைமை நில ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்ட காலின் மெக்கன்சி, பணி நிமித்தமாகச் சென்ற இடங்களில் இருந்த சுவடிகளையும், கல்வெட்டுக்​களையும், நாணயங்களையும், நாட்டுப்புறக் கதைகளையும், வழிபாட்டு முறைகளையும், வாழ்வியல் நெறிகளையும் தொகுத்து இருக்கிறார். இதற்காக, அவரோடு சமஸ்கிருதம் தெலுங்கு, சமணம் அறிந்த பண்டிதர்கள் உடன் சென்று இருக்கின்றனர். கிராமங்களில் இருந்து அவர் சேகரித்த ஏடுகளை முறையாகப் பகுத்து முக்கியச் செய்திகளை குறிப்புகளாக எழுதிவைத்து இருக்கிறார். மேலும், தான் செல்லும் இடங்களில் இருந்த சிற்பங்கள், ஓவியங்கள் குறித்தும் கோட்டோவியங்கள் தீட்டிவைத்து இருக்கிறார். திப்புவுக்கு எதிராகப் போரிட்டவர் மெக்கன்சி. ஆனாலும், மற்ற வெள்ளை அதிகாரிகளைப் போல இல்லாமல், இந்தியாவின் அரிய கலைச்செல்வங்களையும் ஏடுகளையும் பாதுகாப்பதில் அக்கறையாக இருந்திருக்கிறார். அவர் சேமிப்பில் இருந்து லண்டனுக்கு எடுத்துச் சென்றவை போக எஞ்சியவை, சென்னையில் உள்ள அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நமக்குக் கிடைத்துள்ள தமிழ்ச் சுவடிகளுள் (தாள்) மெக்கன்சி தொகுத்துவைத்திருக்கும் தாள் சுவடிகள்தான் பெரும்பான்மையாக இருக்கின்றன என்று, முனைவர் ம.ராசேந்திரன் தனது 'கர்னல் காலின் மெக்கன்சி’ நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். கொலை செய்த, கொள்ளை அடித்த கைதிகளைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட தண்டனைகள் அரசியல் கைதிகளுக்குப் பொருந்தாதவை என்று மனித உரிமை ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இந்தியத் தண்டனைகளில் மிகவும் மோசமானது தூக்குத் தண்டனை. இன்று, உலகெங்கும் மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமையாளர்கள் போராடுகின்றனர். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரண தண்டனை விதிக்கப்படுவது இல்லை.

96 நாடுகள் அதிகாரப்பூர்வமாக மரண தண்டனையை விலக்கி விட்டன. மரண தண்டனையை அதிகம் பயன்படுத்துவது அரபு நாடுகளும், சீனாவும்​தான். சிங்கப்பூர் இதில் முதல்இடம் வகிக்கிறது. மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என்பது குறித்து இந்தியாவிலும் தொடர் இயக்கங்கள் நடக்கின்றன. ஒரு நாடு முன்னேறி இருப்பதன் அடையாளம் அங்கு குற்றங்கள் குறைந்து இருப்பதுதான். ஆனால், இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் அதி கமாகிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. வெளியே தெரியவருபவை குறைவே. நீதிமன்றத்தை நாடிச் செல்வதும் மிகக் குறைவுதான். குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதற்கே பல தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே போனாலும் பணம், செல்வாக்கு, பதவி போன்றவை வழக்கின் போக்கைத் திசைதிருப்பி விடுகின்றன. பல வழக்குகளில் தீர்ப்பு வருவதற்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். மறுக்கப்படும் நீதி சாமான்ய மனிதன் மனதில் ஆழ மான வேதனையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கடந்த காலங்களில் நீதி எனப்படுவது, சட்டத்தால் மட்டும் உருவாக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் தனி மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை அறமாகவும் இருந்தது. இன்று, தனி மனிதனும் தனது அறத்தைக் கைவிட்டுவிட்டான். நீதி அமைப்புகளும் சாமான்ய மனிதனைக் கைவிட்டு விட்டன என்பது ஆழ்ந்த கவலை தரும் உண்மை.

கொசுவரூபம் - டெங்கு


இந்திய அரசும் இந்த நாட்டின் மாநில அரசுகளும் மிக அலட்சியமாகக் கையாளும் ஒரு பிரச்னை, இப்போது சர்வதேச மருத்துவச் சமூகமும் உலக சுகாதார நிறுவனமும் மிகத் தீவிரமாக விவாதிக்கும் பொருளாகி இருக்கிறது. சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் அனுமானமும் கணிப்புகளும் உறுதியானால், இந்தியா அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். இந்தக் கணிப்புகள் சொல்லும் அதிரவைக்கும் செய்தி... 'டெங்கு ஒரு கொள்ளைநோயாக உருவெடுக்கிறது!

சமீபத்தில், பருவநிலை மாறுபாடுகள் தொடர்பாக விவாதித்த உலக சுகாதார நிறுவனம், டெங்கு தொடர்பாக ஓர் அஞ்சவைக்கும் எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. உலகெங்கும் பருவநிலை மாறுபாட்டால், கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டி இருக்கும் அது, மலேரியா மற்றும் டெங்குவின் தாக்குதல் இனி விஸ்வரூபம் எடுக்கும் என்று சொல்கிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கும் சூழலில், எதிர்காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து கோடிப் பேர் டெங்கு வால் பாதிக்கப்படலாம் என்றும் அவர்களில் 15 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம் என்றும் சொல் கிறது.இந்தியாவுக்கு இது மிகப் பெரிய கெட்ட செய்தி. ஏனென்றால், உலகில் டெங்குவின் மையமே இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், டெங்குவால் 2009-ல் 15,535 பேர் பாதிக்கப்பட்டு, 96 பேர் உயிரிழந்திருக்கின்றனர்; 2012-ல் இதுவரை மட்டுமே 35,000 பேர் பாதிக்கப்பட்டு, 216 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது அரசுடைய கணக்கு. இந்த போலிக் கணக்கின்படி பார்த்தாலே, டெங்கு பாதிப்பு 100 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. ஆனால், உண்மையான கணக்கு இந்திய மக்களால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று சொல்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள். ''டெங்கு தொடர்பாக இந்திய அரசு சொல்லும் கணக்குகள் கேலிக்கூத்தானவை'' என்கிறார்  சர்வ தேச அளவில் குறிப்பிடத்தக்க ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான அட்லாண்டா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் டெங்கு பிரிவுத் தலைவரான ஹெரால்டு எஸ்.மார்கோலீஸ். ''எப்படியும் ஆண்டுக்கு 3.7 கோடிப் பேர் இந்தியாவில் டெங்குவால் பாதிக்கப்படலாம்'' என்கிறார் டெங்கு ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஹால்ஸ்டெட்.

இந்த எண்ணிக்கை நமக்கு மலைப்பை உருவாக்கலாம். ஆனால், உள்ளூர் கள நிலவரங்கள் நம்பச் சொல்கின்றன. இந்திய அரசின் கடந்த அக்டோபர் வரையிலான கணக்கு, நாட்டிலேயே தமிழகத்தில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது (5,376 பேர்). தமிழகத்திலேயே அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஒன்றான மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில், இதுவரை 15 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசு சொல்கிறது. டெங்குவில் நான்கு வகைகள் இருக்கின்றன. அதேபோல, நோயின் தாக்குதலிலும் பல கட்டங்கள் இருக்கின்றன. பெரிய தொந்தரவுகள் கொடுக்காமல் ஒரு வாரத்தில் கடந்துவிடுவதில் இருந்து, மரணத்தைத் தருவது வரை. டெங்குவால் பாதிக் கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்வதற்குள் ளாகவே பலரையும் அது கடந்துவிடும். கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் மட்டுமே உயிரிழக்கிறார்கள். உண்மைகளை மறைக்க இந்த அம்சத்தைத்தான் அரசு பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால், டெங்குவால் ஒரு வாரக் காய்ச்சலில் அடிபட்டவர்களும்கூடப் பல மாதங்களுக்கு அதன் பாதிப்புகளை உடல் அளவிலும் மனதள விலும் சுமக்க வேண்டும். மேலும், அடுத்தடுத்த முறை டெங்குவின் பாதிப்புக்கு உள்ளானால், மரணத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பும் அதிகம்.டெங்குவுக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை. நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் அதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கின்றன. பிரெஞ்சு மருந்து நிறுவனமான 'சனோஃபி பாஸ்டர்’ இதில் முன்னணி வகிக்கிறது. கடந்த வாரம் டெங்கு நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் முக்கிய கட்டத்தை எட்டி இருப்பதாக அறிவித்த இந்த நிறுவனம், ''எல்லாம் நல்லபடியாக முடிந்தால், 2015 இறுதிக்குள் சந்தைக்கு இந்த மருந்து வரலாம்'' என்கிறது. ''ஆனால், அப்படி வந்தாலும், டெங்குவில் இப்போது இருக்கும் மூன்று வகைகளுக்குத்தான் அது பலன் அளிக்கும். மீதி ஒரு வகைக்கு மருந்து கண்டறியப்பட வேண்டும். டெங்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சி என்பது பெரும் சவால், முழுமையான தடுப்பு மருந்து இன்னும் 10 ஆண்டுகளில் கண்டறியப்படலாம், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்!'' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.இத்தகைய சூழலில், ஐரோப்பாவிலும் இப்போது டெங்கு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 1,357 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தியாவோடு ஒப்பிடுகையில், இது பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், இதற்கே ஐரோப்பிய நாடுகள் பதற்றம் அடைந்திருக்கின்றன. முன் எப்போதையும் விட டெங்குவின் தாக்குதல் இப்போது தான் மோசமாக இருக்கிறது என்று சொல்கிறது ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம். சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்தியா வில் இருந்து டெங்கு பாதிப்போடு வந்தவர்கள் மூலமாகவே உலகெங்கும் டெங்கு பரவுகிறது; இந்திய அரசின் அலட்சியமும் தில்லுமுல்லுமே உலகம் முழுவதும் டெங்கு பரவ முக்கியமான காரணம் என்று ஐரோப்பியர்கள் சந்தேகிக்கின்றனர். பிரச்னையை இந்திய அரசு மூடி மறைப்பதால், மக்கள் இடையே விழிப்பு உணர்வு இல்லாமல் போகிறது; மருந்தைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் அது முட்டுக்கட்டையாகிறது என்று அவர்கள் கருதுகின்றனர்.இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் மட்டும் தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 34 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டு உள்ளது. அரசின் துரோகத்தால், தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன. டெங்குவுக்கு ஒரு வார சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் மருத்துவமனைகள், வெறும் 300 ரூபாய்க்குச் செய்யக்கூடிய டெங்கு ரத்தப் பரிசோதனைக்கு 5,000 ரூபாய் வரை வசூலிக்கின்றன. அரசு சிறப்பு ரத்த தான முகாம்கள் நடத்தினால், ஏராளமாக ரத்தம் திரட்ட முடியும் என்கிற சூழலில், அப்படிச் செய்யாததால், டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு ரத்தத்தட்டுகள் பெற கூடுதல் விலை கொடுத்து மக்கள் அலைகிறார்கள். ஒருபுறம் நோயும் இன்னொருபுறம் சுயநல வெறி பிடித்த அரசும் மருத்துவத் துறையுமாக நோயாளிகளைக் கொல்கின்றன.

ஒரு கொள்ளைநோய்த் தாக்குதலின்போது, மக்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் மக்களைக் காக்கவும் முடியாத அரசு, குறைந்தபட்சம் மக்கள் அவர்களை அவர்களே காத்துக்கொள்ளக்கூட அனுமதிக்காமல் தடையாக இருக்கிறது. காலம் இதை ஒருபோதும் மன்னிக்காது!


சமஸ்

Monday, November 26, 2012

அருள் மழையார் துறவி? எது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் ...
பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.
ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.

...
இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் "யார் துறவிஎது துறவு" என்பதற்கு இலக்கணம்!

ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.
இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டு அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை (Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட, பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ள வேண்டும்.காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்; பணமல்ல.எனவே, எப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் என்று சர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்குப்ளஸ்கூடாது என்று கருதுகிறேன். ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே என வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. நெருக்கடி ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம்…!’
நன்றி: "தீபம்" (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)Saturday, November 24, 2012

ஓ பக்கங்கள் - இரண்டு கடிதங்கள்! ஞாநி

கடிதம் 1:


அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் வணக்கம்.

இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட்படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை.

தீபாவளியை இருவரும் அவரவர் வழியில் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்தது என்பதை கீழ்வரும் செய்திகளிலிருந்து அறிந்து மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மயிலாடுதுறை பொறையாறு அருகே இரண்டு காவலர்கள் குடிபோதையில் ஒரு காரை உடைத்து நொறுக்கினார்கள்.

கோவை அருகே குடிபோதையில் ஒரு காவலர் தம்மேல் அதி காரியைக் கண்டபடி திட்டினார்.

தர்மபுரியில் ரோந்துப் பணியில் இருந்த ஒரு காவல் அதிகாரி குடிபோதையில் தள்ளாடினார்.

அரசின் காவலர்கள் இப்படி முன்மாதிரிகளாகக் கொண்டாடும்போது குடிமக்கள் பின்தங்கியிருக்க முடியுமா?

ராயபுரத்தில் குடி போதையில் இருந்த ஒரு கணவன், உடல் சோர்ந்து படுத்திருந்த கர்ப்பிணி மனைவியை எழுப்பி தோசை தரச் சொன்னதும் அவள் உடனே தராததால், கழுத்தை நெரித்துக் கொன்றான். கொருக்குப் பேட்டையில் குடித்துக் கொண்டிருந்த இரு நண்பர்களில் ஒருவன் தரையில் வைத்திருந்த மதுக் கோப்பையைத் தவறுதலாக இடறி அது கொட்டி விட்டதால் எரிச்சலடைந்த மற்றொரு நண்பன் அவனைக் கத்தியால் குத்திக் கொன்றான்.
இவையெல்லாம் ஒன்றுமே இல்லை.

சேலம் ஆத்தூரில் ஐந்து நண்பர்கள் குடித்துவிட்டுப் பெரும் போதையில் இரண்டு பைக்குகளில் தாறுமாறாக சாலையில் சென்றார்கள். அவசர காலத்தில் உயிர்காக்க உதவும் ஆம்புலன்ஸ் வண்டியின் டிரைவரான அரசு ஊழியர் சண்முக சுந்தரம் என்பவர் அதே சாலையில் தன் டூவீலரில் வந்தார். குடிகார இளைஞர்களை நிதானமாக வண்டி ஓட்டும்படி சொன்னார். ஆத்திரமடைந்த ஐவரும், சண்முகசுந்தரத்தை சாலையிலேயே இழுத்துப் போட்டு அடித்து உதைத்துக் கொன்றே விட்டார்கள். அதில் ஒருவன் கல்லூரி மாணவன்! சண்முக சுந்தரத்துக்கு பள்ளிப்படிப்பு படிக்கும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தத் தீபாவளி அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த செய்திகளில் எப்படி பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து தள்ளாடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தின. பள்ளி வளாகத்துக்குள்ளேயே கும்பலாக உட்கார்ந்து படித்துக் கொண்டு அல்ல, குடித்துக் கொண்டு இருந்த மாணவர்களைக் கண்டித்த ஆசிரியரை அவர்கள் தாக்கிய செய்தியையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

எட்டாம் வகுப்பு வரை படித்தும் தமிழையோ ஆங்கிலத்தையோ எழுத்துக் கூட்டிக் கூடப் படிக்க சிரமப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பதாக ஓர் ஆய்வு ஒரு பக்கமும், 10வது, 11வது வகுப்பு மாணவர்கள் மத்தியிலேயே மது அடிமைத்தனம் உருவாகிவிட்டதாக இன்னொரு ஆய்வும் தெரிவித்ததை நீங்கள் இருவரும் படித்தீர்களா என்று தெரியவில்லை.

மேலே சொன்ன எந்த நிகழ்ச்சியின் போதும் நீங்கள் இருவரும் ஒரு அறிக்கை கூட வெளியிட்டதில்லை. எதெதற்கோ அறிக்கை வெளியிட்டு அறிக்கைப் போரே நடத்துபவர்கள் நீங்கள். தமிழகமே இப்படி மது அடிமைத்தனத்தால் சீரழிவதைப் பற்றி உங்கள் இருவரிடமிருந்தும் ஒரு அறிக்கை கூட வந்ததில்லை. 

ஏனென்றால் இந்தச் சீரழிவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களே நீங்கள்தான். உங்களில் ஒருவர்தான் 35 வருட காலம் தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை நீக்கி அடுத்த 40 வருட காலமாக பல தலைமுறைகளுக்கு மதுவைப் பழக்கிக் கொள்ள வழிவகுத்தவர். உங்களில் இன்னொருவர்தான் பள்ளிக் கூடங்களை தனியாரை நடத்த விட்டுவிட்டு, மதுக்கடைகளை அரசாங்கம் நடத்தும் புரட்சியைச் செய்தவர். இதன் விளைவுகளில் ஒரு சிறு துளியைத்தான் மேலே பட்டியலிட்டேன். இன்றைய தமிழகத்தில் 18 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞர்களில் பாதி பேருக்கு மேல் குடிகாரர்களாகிவிட்டார்கள். தமிழகத்தில் இருக்கும் சுமார் மூன்று கோடி குடும்பங்களில் வீட்டுக்கு ஒரு மது அடிமை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை படுவேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மதுவால் சீரழியும் காவலர்கள் பற்றியோ ஆசிரியர்கள் பற்றியோ வெளியான செய்திகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் இன்னமும் செய்தியாகாமல் தப்பித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான குடிகாரர்கள் இருக்கிறார்கள். ஒரு சமூகத்தில் காவலர்களும் ஆசிரியர்களுமே குடிபோதைக்கு அடிமையானால், அந்தச் சமூகம் இன்னும் எவ்வளவு உள்ளுக்குள்ளேயே அழுகிக் கிடக்கும் என்று யூகிக்கலாம். தினசரி சுமார் 2 கோடி தமிழர்களேனும் மது குடித்து மதி இழப்பதை சாத்தியப் படுத்தியிருக்கிறீர்கள். அதன் விளைவுதான் இன்று தமிழகத்தில் எலெக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், ப்ளம்பர், மெக்கானிக், மேசன் என்று பல துறைகளிலும் மிகக் கடும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஏழைப் பெண்கள் ஏழைமையால் படும் துயரம் போதாதென்று தம் வீட்டு ஆண்களின் போதையால் படும் கூடுதல் துயரம் சொல்லி மாளாது. நேரமிருந்தால் உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களிடமே மனம் விட்டுப் பேசிப் பாருங்கள். குடிப்பழக்கத்தால் சீரழியும் குடும்ப சோகங்களை அவர்கள் கொட்டித் தீர்ப்பார்கள். 

கடந்த இருபது வருடங்களில் நீங்கள் இருவரும் மாறிமாறி ஆட்சி நடத்தியதால் தமிழர்களுக்கு எந்தப் பெரிய லாபமும் ஏற்பட்டுவிடவில்லை. உங்களில் ஒருவர் வீட்டுப் பெண் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் புகார் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றதும், ஒரு பேரன் மோசடி வழக்கில் கைதாக பயந்து மாதக் கணக்கில் தலை மறைவாக ஒளிந்திருப்பதும், உங்களில் மற்றவர் தன் அன்புக்குரிய உடன் பிறவா சகோதரியுடன் சட்ட விரோத சொத்துக் குவிப்பு வழக்கில் வருடக்கணக்கில் நீதிமன்றப் படி ஏறி இறங்கிக் கொண்டிருப்பதும்தான் உங்கள் சாதனைகள். உங்கள் இருவரின் ஆட்சியில் ஏற்பட்ட நன்மைகளுடன் தீமைகளை ஒப்பிட்டு காஸ்ட்- பெனிஃபிட் ரேஷியோ பார்த்தால், தமிழர் பெற்றதை விட இழந்ததே அதிகம்.உங்கள் இருவருக்கும் கொஞ்சமேனும் மனசாட்சி இன்னமும் மீதம் இருக்குமானால், தயவுசெய்து இந்த மது அவலத்துக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். ‘தமிழினத் தலைவர்’ அவர்களே, தமிழக அரசு பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், அதை தி.மு.க முழுமையாக ஆதரிக்கும். தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு தொடரும் என்று அறிக்கை வெளியிடுங்கள். ‘புரட்சித் தலைவி’ அவர்களே, ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்றும் அதை ஆதரிக்கும் தி.மு.க.வுக்கு நன்றி என்றும் அறிவியுங்கள்.இதைச் செயத் தாமதமாகும் ஒவ்வொரு கணமும் தமிழகம், தமிழ் இனம் அவலப் பெருங்குழியில் வீழ்ந்து கொண்டே இருக்கிறது. ஈழத்தமிழர்களை அழிக்கும் பழி சிங்கள ராஜபட்சே மீதானது. ஆனால் இந்தியத் தமிழர்களைக் கத்தியின்றி ரத்தமின்றி மதுக் கோப்பைகளாலேயே அழிக்கும் பழியை நீங்கள் இருவர்தான் சுமக்கப் போகிறீர்கள்.

உங்கள் இருவராலும் தமிழகத்தில் மது விலக்கைக் செயல்படுத்த முடியாதென்றால், ஒரே ஒரு வேண்டுகோள்தான் எனக்கு மீதம் இருக்கிறது. தயவுசெய்து இருவரும் அரசியலை விட்டு வெளியேறுங்கள். அதுவே தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய மாபெரும் தொண்டாக இருக்கும்.இன்றிரவு உறங்கப் போகும் முன்பு ஒரு தவறும் செய்யாத ஒரு சண்முகசுந்தரம் நடுத்தெருவில் உங்களால் ஊக்குவிக்கப்பட்ட குடிகாரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு இரவிலும் அப்பாவின் கொடூர சாவைப் பற்றி எண்ணி தூக்கம் இழக்கும் அந்தக் குழந்தைகளை எண்ணிப் பாருங்கள். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பூரண மதுவிலக்கு ஆதரவு அறிக்கையை எழுதி வெளியிட்டு பரிகாரம் தேடுங்கள்.

இன்னும் உங்கள் இருவர் மீதும் எஞ்சியிருக்கும் சொற்ப நம்பிக்கையுடன்,
ஞாநி

கடிதம் 2:

அன்புள்ள மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம். தர்மபுரியில் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு உடனடியாகத் தீர்வு தேடும் ஒரு முயற்சியாகவே இதை உங்களுக்கு எழுதுகிறேன்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா சபை தவறிவிட்டது; அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சர்வதேசப் பார்வையுடன் அறிக்கை விடும் நீங்கள் அதற்கு முன் உள்ளூர் பார்வையில் தர்மபுரி தலித்துகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பு, என்ன பரிகாரம் என்பதைப் பேசியாக வேண்டும்.

தர்மபுரி தலித் கிராமங்களில் தாக்குதல் செய்தவர்கள் எல்லாரும் உங்கள் சொந்தங்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. தாக்குதலை ஆரம்பித்துவைத்தது ஒரு கலப்புத் திருமணம்தான். கடந்த காலத்தில் தலித் தலைவர் திருமாவளவனுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் சென்று வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே இருந்த பகையுணர்வை தணித்த நீங்கள் இப்போது ஏன் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு முன்வரத் தயங்குகிறீர்கள்?  இந்த சாதி அரசியலால் வன்னியர்கள் அடையப்போகும் நன்மை என்ன? கடந்த காலத்தில் நீங்கள் மாறி மாறி திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்ததாலோ, உங்கள் மகனை மத்தியிலே அமைச்சராக சில வருடம் வைத்திருந்து அழகு பார்த்ததாலோ, வன்னிய சாதியினரின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்று விளக்க முடியுமா? உங்கள் அரசியல் பலத்துக்கு வன்னியர்களை பயன்படுத்தப் பார்த்தீர்களே தவிர, அதனால் வன்னியருக்கு விளைந்த நன்மை என்ன? வன்னிய சமுதாயத்தையே குடிகாரர்களாக்கி அழிக்கப் பார்க்கிறார்கள் என்று உங்கள் கட்சிப் பிரமுகர் காடுவெட்டி குரு திராவிடக் கட்சிகள் மீது குற்றச்சாட்டை உங்கள் முன்னிலையிலேயே வைத்தார். சரியான குற்றச்சாட்டுதான். உங்கள் மீது எனக்கு இன்னமும் இருக்கும் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் காரணம் நீங்கள் குடியை எதிர்ப்பதும், உங்கள் டி.வி.யில் இன்னும் பிடிவாதமாக வணிக சினிமாவை அனுமதிக்க மறுப்பதும்தான். வன்னியர் மட்டுமல்ல, எல்லா தமிழ் சாதிகளையும் குடி அழிக்கிறது. ஆனால் அதை ஊக்குவித்த திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியலாக நீங்கள் முன்வைப்பது என்ன? சாதி அரசியல் தான்.வன்னியர்களை திராவிடக் கட்சிகள் குடிகாரர்களாக்கியது. நீங்களோ வன்முறையாளர் களாய்க்குகிறீர்கள். குடி சீரழிக்கும். சாதிவெறி உயிர் கொல்லி. நீங்கள் அறிந்தோ அறியாமலோ ஊக்குவிக்கும் இந்த சாதி வெறி எதிர் வன்முறையைத் தூண்டினால் எஞ்சுவது அழிவுதான். வன்னியர் பெரிதும் வாழும் ஆற்காடு மாவட்டங்களில் பிரபலமான கூத்து மகாபாரத யுத்தத்தில் இறுதியில் எல்லாரும் அழிந்ததைத்தான் சொல்லிச் சொல்லி எச்சரிக்கிறது. அந்த அழிவை நோக்கி வன்னியரையும் தலித்துகளையும் தள்ளும் சாதி அரசியலைவிட திராவிட அரசியலே மேல் என்றுதான் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு வன்னியரும் முடிவெடுப்பார்கள்.

சாதி அரசியல் உங்களையும் அடுத்த தேர்தலில் அழித்துவிடும். உங்கள் சொந்தங்களையும் நிரந்தரமாக யுத்த பூமியில் ரத்தம் சிந்தியே வாழச் செய்துவிடும். ஒரு வன்னிய அன்புமணி, மருத்துவம் படித்து நவீன மனிதனாக மாறியதுபோல ஒவ்வொரு வன்னிய இளைஞனும் மாற தேவைப்படுவது தமிழுணர்வும் மானுட நேயமும் தான்.இன்னும் காலம் தாமதமாகி விடவில்லை. இந்த முட்டாள் தனங்களுக்கு நீங்கள் நினைத்தால் இப்போதே முற்றுப்புள்ளி வைக்கலாம். சாதி ஒழிப்புதான் உங்கள் உண்மையான நோக்கம் என்றால், நாயக்கன் கொட்டா கிராமத்து இளவரசனையும் திவ்யாவையும் அழைத்துப் பாராட்டுவிழா நடத்துங்கள். அந்தச் செய்தி ஒவ்வொரு வன்னியர் மனத்திலும் ஒவ்வொரு தலித் மனத்திலும் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தும். மறுபடியும் திருமாவை அழைத்துப் பேசுங்கள். இருவருமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுங்கள். மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். எந்த வன்னியர்கள் தாக்குதலைச் செய்தார்களோ அவர்களைக் கொண்டே இடித்த வீடுகளைக் கட்டிக் கொடுக்கச் செய்யுங்கள். பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிக்கு நீங்கள் முன்னின்று நிதி திரட்டிக் கொடுங்கள். வன்னியராகக் குறுகாமல், தமிழராக நிமிருங்கள். 

இல்லையென்றால், தமிழின் பெயரால், தமிழரின் பெயரால் ஐ.நாவுக்கு அறிவுரை சொல்லும் தகுதியே உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.
சிந்தியுங்கள்.


அன்புடன்
ஞாநிFriday, November 23, 2012

புஜாரா - புதுசா ஒரு நம்பிக்கை!


இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர்கள் ஒரு பெரிய சோகத்தைக் கடந்துதான் சாதிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார்கள். டிசம்பர் 2006ல், கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி மேட்ச் நடந்து கொண்டிருக்கும் போது கோலியின் தந்தை இறந்துபோனார். ஆனால், தம்முடைய அணி கடினமான சூழ்நிலையில் இருந்ததால் அதிகாலையில் தந்தை இறந்த செய்தி கிடைத்தும் தொடர்ந்து அன்றைய ஆட்டத்தில் கலந்து கொண்டு 90 ரன்கள் அடித்து அணியை மீட்டெடுத்த பிறகுதான் தந்தைக்கான இறுதிக் கடமைகளை முடிக்கச் சென்றார் கோலி. புஜாராவுக்கும் இப்படிப்பட்ட ஓர் இழப்பு உண்டு. 2005ல், தம்முடைய 17வது வயதில், புற்றுநோயின் பாதிப்பால் தாயைப் பறிகொடுத்தார். தாய் இறந்த அதே தேதியில்தான் (அக். 9) முதல் டெஸ்ட் ஆட புஜாராவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

2010ல், இந்திய அணியில் இடம்பிடித்த புஜாரா, அதற்கு முன்பு 2006லிருந்து ரஞ்சி மற்றும் இதர உள்ளூர் போட்டிகளிலும் இந்தியா ஏ அணிக்காகவும் மாங்குமாங்கு என்று ரன்களைக் குவித்து வந்தார். கங்குலி ஓய்வு பெற்றபிறகு, புஜாராவை ஒதுக்கிவிட்டு யுவ்ராஜ் சிங், ரைனாவுக்கு வாய்ப்பளித்தது, முன்னாள் தேர்வுக்குழு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆடுகிற மேட்சுகளிலெல்லாம் டபுள் செஞ்சுரி, டிரிபிள் செஞ்சுரி அடித்து ரன் மிஷினாக இருந்தார் புஜாரா. இதனால், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் புஜாரா தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் டெஸ்டிலேயே, சேஸிங்கில் மூன்றாவதாகக் களம் இறங்கி சுறுசுறுவென 72 ரன்கள் எடுத்து தம்முடைய வருகையை உலகுக்கு அறிவித்தார். ஆனால், அடுத்தடுத்து இரண்டு சறுக்கல்கள் ஏற்பட்டன. தென் ஆப்பிரிக்காவில் ஆடிய டெஸ்டுகளில், புஜாரா சரியாக ஆடவில்லை. தொடர்ந்து வந்த ஐ.பி.எல்.லில் காயம் ஏற்பட்டு, பல மாதங்கள் படுக்கையில் கிடக்க நேர்ந்தது. இதனால் மீண்டும் யுவ்ராஜ், ரைனாவுக்கும் புதிதாக கோலிக்கும் டெஸ்ட் மேட்சுகளில் வாய்ப்பளிக்கப்பட்டன. நல்ல வேளையாக டிராவிடும், லஷ்மணும் ஓய்வு பெற்றதால் அணிக்குள் மீண்டும் சேர்க்கப்பட்ட புஜாராவுக்கு, நிரந்தரமாக மூன்றாவதாகக் களம் இறங்க நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. உடனே ஒரு செஞ்சுரி அடித்தார். இப்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் டபுள் செஞ்சுரி. இதோ இன்று ஒரு சதம். அடுத்த திராவிட் கிடைத்துவிட்டார் என்று கிரிக்கெட் நிபுணர்களும் ரசிகர்களும் புஜாராவை முழுமனதாக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.  

‘நான்கூட ஆரம்ப காலங்களில் இவ்வளவு சிறப்பாக ஆடவில்லை’என்று பாராட்டு தெரிவிக்கிறார் டிராவிட்.

சாதாரணமாக செஞ்சுரி அடித்ததோடு புஜாரா திருப்தியடைவதில்லை. முதல்தர ஆட்டங்களில் அவர் அடித்த 16 செஞ்சுரிகளில், ஒன்பது செஞ்சுரிகள் 150 ரன்களுக்கு மேல் கடந்தவை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா கடைசி வரை அவுட் ஆகாமல் ஆடியதைக் கண்டு இங்கிலாந்து பௌலர்கள் மிரண்டு போனார்கள். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் அவர்களால் புஜாராவை அவுட் செய்யவே முடியவில்லை. புஜாராவை டெஸ்ட் மேட்ச் பிளேயர் என்று மட்டும் ஒதுக்கிவிடமுடியாது. வெகுவிரைவில் ஒருநாள் அணியில் அவர் இடம்பிடிக்கப் போகிறார். இந்திய வீரர்களுக்கு இடையே நடந்த சேலஞ்சர் டிராபியில், ஆடிய மூன்று மேட்சுகளில், இரண்டு செஞ்சுரிகளும் ஒரு பிஃப்டியும் அடித்திருக்கிறார் புஜாரா. ஃபீல்டிங்கும் அமர்க்களமாகப் பண்ணக்கூடியவர் என்பதால் ஒருநாள் ஆட்டத்துக்கும் பொருந்திப் போகிறார். 

சமீபகாலமாக சின்னஞ் சிறிய ஊர்களில் இருந்துதான் அற்புதமான வீரர்கள் இந்திய கிரிக்கெட்டுக்குக் கிடைக்கிறார்கள். ராஜ்கோட் என்கிற சிறிய ஊரிலிருந்து கிளம்பியவர் புஜாரா. ‘கிரிக்கெட்டுக்குத் தேவையான பெரிய வசதிகள் எதுவும் கிடைக்காமல், கிடைத்த வசதிகளைக் கொண்டுதான் ஆடப் பழகியிருக்கிறேன்,’ என்கிறார் புஜாரா.

எட்டு வயதில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்து பல தடைகள், இழப்புகளைத் தாண்டித்தான் இவ்வளவு தூரம் சாதித்திருக்கிறார். தாய் இறந்த அடுத்த வருடத்தில், அக்-19 உலகக்கோப்பையில் கலந்துகொண்ட புஜாரா, அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையைச் செய்தார். திறமை மட்டுமில்லாமல் உறுதியான மனோதிடம் கொண்ட வீரர்கள்தான் இந்திய கிரிக்கெட்டுக்கு அவசியம். புஜாராவுக்கு அதற்குரிய தகுதிகள் இயல்பாக இருக்கின்றன. டிராவிட் இடத்தை நிரப்புவதும் அவருடைய இழப்பை உணராமல் இருப்பதும் சாதாரண விஷயமில்லை. புஜாராவால் இந்த இரண்டையும் போகிற போக்கில் சாதிக்க முடிந்திருக்கிறது.