Search This Blog

Monday, January 27, 2014

அருள்வாக்கு - வாழ்க்கை என்கிறது என்ன?


பல தினுஸான சலனங்கள்தான் வாழ்க்கை. இப்போது இருப்பது நாளைக்கு இல்லை என்று மனஸாலேயும், வாக்காலேயும், சரீரத்தாலேயும், புத்தியாலேயும், பணத்தாலேயும் பல தினுஸான காரியங்களைப் பண்ணி மாறிக்கொண்டே இருப்பதுதான். ஆலோசித்துப் பார்த்தால் தெரியும், Life என்பது – Movementதான் என்று. இதிலே சரீரத்தினால் தெரியும் மூவ்மென்டுகள்தான் பளிச்சென்று தெரிவது. அதிலேயும் சரீரம் முழுவதையும், ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிப் பிரயாணம் பண்ணுகின்றோமே, அதுதான் முக்கியமான ‘மூவ்மென்டாக’ த் தெரிகிறது. அதைத்தான் ‘ப்ரவேசே நிர்கமே ததா’ என்று சொல்லியிருக்கிறது. ‘ப்ரவேஸம்’ ஒரு இடத்துக்குள்ளே போவது. ‘நிர்கமம்’ ஓரிடத்திலிருந்து புறப்பட்டு வெளியில் போவது.இப்படியே எந்தவிதமான மூவ்மென்டாலும் ஏதோ ஒரு விஷயத்துக்குள் ப்ரவேச்சிக்கிறோம்; ஏதோ ஒன்றை விட்டுவிட்டுப் புறப்படவும் செய்கிறோம். இவை எல்லாவற்றிலும் ஒருத்தனுக்கு இடைஞ்சல் வராது. வாழ்க்கையைச் சலனம் என்று சொன்னேன். இன்னொரு ‘டெஃபனிஷன்’ (இலக்கணமும்) சொல்லுகிறதுண்டு. பத்திரிகைகளில் அந்த ‘டெஃபனிஷன்’தான் ரொம்பவும் அடிபடுகிறது. வாழ்க்கைப் போராட்டம், வாழ்க்கைப் போராட்டம் என்றே நிறைய கேட்கிறோம். டார்வின் தியரி, ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் தியரி எல்லாமே போராடிப் போராடித் தான் ஜீவகுலம் உருவாயிருக்கிறது என்றே சொல்கின்றன.யோசனை பண்ணிப் பார்த்தால் சலனமும், போராட்டமும் ஒன்றுக் கொன்று ‘கனெக்ஷன்’ உள்ளவை என்று தெரியும். யாரோ ஒரு ஜீவனுக்கு மட்டும் சலனம். மற்றதெல்லாம் சலனமில்லாமல் இருக்கிறது என்றால்தான் இந்த ஒருத்தன் தன் இஷ்டப்படி ஸுமூகமாக ஸஞ்சாரம் பண்ண முடியும். (எல்லா தினுஸு ஸஞ்சாரங்களையும்தான் சொல்கிறேன்.) ஆனால் வாஸ்தவத்தில் அப்படியா இருக்கிறது? அத்தனை ஜீவராசிகளுக்கும்தான் ஓயாத சலனமாக இருக்கிறது. அசேதன வஸ்துகளிலுங்கூட ஒரே சலனம்! ஒரு அணுவுக்குள்ளே எலெக்ட்ரிஸிடியின் வேகத்தோடு ஸதா ஸஞ்சாரம் நடந்துகொண்டே இருக்கிறது. இப்படிப் பல உயிர்களும், ஜட வஸ்துக்களும் ஒரே ஸமயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தால் அவற்றுக்கிடையே மோதல்களும் உண்டானபடிதானே இருக்கும்.

ஓ பக்கங்கள் - அரசியல் முதல் பாலியல் குற்றம் வரை மக்கள் கருத்து ! ஞாநி

 
மக்களிடம் பல்வேறு சமூக, அரசியல் விஷயங்கள் பற்றிக் கருத்துக் கேட்பதை பத்திரிகைகள், ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. நான் பங்கேற்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் ஒவ்வோர் ஆண்டும் என் ‘ஞானபாநு’ அரங்கில் இப்படி தினசரி தேர்தலை நடத்தி வருகிறேன். மக்கள் வாக்களிப்பதற்கு வோட்டுப் பானைகள் வைத்திருப்போம். குடவோலைகளில் தெரிய வரும் முடிவுகள் மறுநாள் அரங்கில் வெளியிடப்படும்.
 
இந்த வருடமும் அப்படி கேட்ட சில கேள்விகளும், மக்கள் அளித்த முடிவுகளும் இதோ :

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் மாற்றாக யாரை ஆதரிப்பீர்கள்?

1. ம.தி.மு.க - 35%
2. பா.ம.க. - 7%
3. இடதுசாரிகள் - 19%
4. வேறு யாரேனும் - 29%.

இந்த வேறு யாரேனும் என்பதில் சிலர் காங்கிரஸ், பி.ஜே.பி., ஆம் ஆத்மி, தே.மு.தி.க. என்றெல்லாம் கூட எழுதினார்கள். தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் விரும்பும்போது அவர்களுக்குத் தனிப்பானை வைத்திருக்கக்கூடாதா என்று ஒருவர் கேட்டார்.

மக்களவைத் தேர்தல்: மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்புகிறீர்கள்?

1. காங்கிரஸ் - 12%
2. பி.ஜே.பி - 56%
3. ஆம் ஆத்மி - 26%
4. மூவரும் கூடாது - 6%.

இந்த முடிவுகளில் காங்கிரஸ் பெருவாரியாக நிராகரிக்கப்படுவது ஒரு வியப்பான செய்தி அல்ல. பொதுவாக, படித்தவர்கள் மத்தியில் பி.ஜே.பி.க்கு நரேந்திர மோடியை முன்னிறுத்தியதால் மிகப்பெரும் ஆதரவு வந்துவிட்டது என்று சொல்லப்படும் நிலையில், பி.ஜே.பி.க்குக் கிடைத்திருப்பது 56 சதவிகிதம்தான். பி.ஜே.பி. கூடாது என்று கருதும் படித்தவர்கள் 44 சதவிகிதம் என்பது கணிசமான எண்ணிக்கை. அப்படியானால் படிக்காதவர்கள் மத்தியில் பி.ஜே.பி.யின் நிலை என்னவாக இருக்கும் என்று யூகிக்கலாம்.

இரண்டாவது செய்தி, தமிழ்நாட்டில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தும் எந்த வேலையையும் இதுவரை செய்யாத ஆம் ஆத்மி கட்சிக்கு 26 சதவிகிதம் ஆதரவு இருப்பதாகும். ‘ஆம் ஆத்மி’ தொடர்பாக இன்னொரு கேள்வியும் கேட்டிருந்தோம்.

ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் தழைக்கமுடியுமா?

1. கேஜரிவால் போல இளைஞர்களை ஈர்க்கும் பலமான தலைமை இருந்தால் தழைக்கும். - 55%

2. ஹிந்தி பெயரை மாற்றாமல் சரியான தலைமை இருந்தாலும் தழைக்காது. - 5%

3. என்ன செய்தாலும் இங்கே இருக்கும் அரசியல் கலாசாரத்தில் அது வளரமுடியாது. - 40%.

இந்த முடிவுகள் சுவாரஸ்யமானவை. காரணம் ஹிந்திப் பெயரே இருந்தாலும் கூட சரியான தலைமை இருந்தால் தழைக்கும் என்பவர்கள் 55%.

ஆனால் தமிழக அரசியல் கலாசாரத்துக்கும் ஆம் ஆத்மி கலாசாரத்துக்கும் பொருந்தி வராது என்று நினைப்பவர்கள் 40 சதவிகிதம்.

படித்தவர்கள் மத்தியில் தமிழக அரசியல் சூழல் பற்றி ஒரு விரக்தி மனப்பான்மை கடுமையாக இருப்பதையே இது காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கில் இலங்கைப் படைகளால் கொல்லப்பட்டும் சிறைபிடிக்கப்பட்டும் வந்திருக்கும் மோசமான வரலாற்றுச் சூழலில், அரசியலுக்கு அப்பால், இந்தப் பிரச்னையின் வேருக்குப் போய் தீர்வு காண்பது அவசியம் என்பதால் ஒரு கேள்வி கேட்டோம்.

தமிழக மீனவர் இலங்கைக் கடலில் அத்து மீறுவதால் இலங்கைப் படைகளால் வதைக்கப்படும் பிரச்னைக்குத் தொலை நோக்குத் தீர்வு என்ன?
1. நம் கடலில் மீன் வளத்தைக் குறைக்கும் ராட்சத மீன்பிடி கப்பல்கள் தடை செய்யப்படவேண்டும் - 61%

2. இலங்கைக் கடலை இந்திய அரசு குத்தகைக்கு எடுத்து நம் மீனவர்கள் பயன்படுத்தத் தரவேண்டும் - 30%

3. நம் மீனவர்களுக்கு நவீன கல்வி அளித்து மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் - 9%.

இதில் இரண்டாவது, மூன்றாவது தீர்வுகளைப் பல அறிஞர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். ராட்சத மீன்பிடி கப்பல்களைத் தடைசெய்வதையே பெருவாரியான மக்கள் ஆதரித்திருக்கிறார்கள்.

புத்தகக் காட்சி நடைபெற்ற சமயத்தில் அரசியலில் பெரும் கவனத்தை எழுப்பிய தமிழ்நாட்டு நிகழ்வு தி.மு.க.வின் மு.க.அழகிரி அளித்த தொலைக்காட்சிப் பேட்டியாகும். இந்த நிலையில் வைத்த கேள்வி இது...

தி.மு.க.வில் மு.க. அழகிரி எழுப்பும் எதிர்ப்பு:

1. வலுவடைந்து கட்சியையே உடைக்கும் - 21%

2. என்ன செய்தாலும் ஸ்டாலின் தலைமையில் கட்சி வருவதைத் தடுக்க முடியாது - 79%.

இந்தப் பதில் அழகிரியைத் தவிர வேறு யாருக்கும் ஆச்சரியமாக இருக்காது.

சென்ற வருடம் இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கியமான நிகழ்வுகளில் பாலியல் குற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.

நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் மீதான குற்றங்களை விசாரிக்கத் தனி அமைப்புத் தேவை என்கிறது உச்ச நீதிமன்றம்:

1. சரியான கருத்து. உடனே தனி அமைப்பை அரசு உருவாக்கவேண்டும் - 40%

2. தவறான கருத்து. எல்லா குடிமக்களையும் போலவே அவர்களும் விசாரிக்கப்படவேண்டும் - 60%

பாலியல் குற்றங்கள், நம் சமூகத்தில் வயது, சாதி, மத, வர்க்க, இன வேறுபாடின்றி நடப்பது பற்றி நாம் மிகமிகக் கவலைப்பட வேண்டும். காரைக்கால் கொடூரம் எல்லா அரசியல் கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. எல்லா பாலியல் குற்றங்களுக்கும் அடிப்படை, ஆண்- பெண் உறவு பரஸ்பர மதிப்புடனும் சமத்துவத்துடனும் இருக்க வேண்டுமென்ற அறிவு வளராததுதான். ஆனால் ஊடக விவாதங்களில் என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படும், விவாதிக்கப்படும். இது பற்றிக் கேள்வி எழுப்பினோம்.

பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு முக்கிய காரணம்...

1. பெண்களின் உடை, நடத்தை - 19%

2. மீடியா, சினிமாவின் காமக் கலாசாரம் - 26%

3. ஆண்களைச் சரியாக வளர்க்கத் தெரியாத குடும்ப அமைப்பு - 55%.

இந்தப் பதில்களில் எனக்குக் கிடைத்த முக்கியமான செய்தி, நம் படித்த வர்க்கம் கொஞ்சமேனும் குடும்ப அமைப்புப் பற்றி ஒரு சுயவிமர்சனப் பார்வையை இப்போது பெறத் தொடங்கியிருக்கிறது என்பதுதான்.

ஊடகங்களில் சர்ச்சையில் அடிபட்ட இன்னொரு விஷயம் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் காஷ்மீரில் ரெஃபரெண்டம் தேவை என்று சொன்னது பற்றியாகும்.

காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கலாமா, கூடாதா என்று காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு எடுக்கச் சொல்வது...

1. சரி. 1947ல் செய்யாததை இப்போதாவது செய்ய வேண்டும் - 45%

2. தவறு. வடகிழக்கு போன்ற மீதி மாநிலங்களிலும் இதே போல செய்யவேண்டிய ஆபத்து ஏற்படும் - 43%

3. காஷ்மீருக்கு மட்டும் வாக்கெடுப்பு சரி. மீதி மாநிலங்களுக்கு அனுமதிக்கக்கூடாது - 12%.

இந்தப் பதில்கள் காஷ்மீர் பற்றி உணர்ச்சிவசப்படாமல் கருத்து சொல்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையே எனக்குக் காட்டுகிறது.

உணர்ச்சியைத் தூண்டும் இன்னொரு விஷயம் ஜல்லிக்கட்டு. மக்கள் கருத்து என்ன?

1. மனிதரும் விலங்குகளும் வீரம் என்ற பெயரால் சாவதாலும் சாதி மோதல்களுக்கு வழிவகுப்பதாலும் தடைசெய்யப்படவேண்டும். - 53%

2. பண்பாட்டு, மரபு என்பதால் கடும் விதிமுறைகளுடன் ஒழுங்குபடுத்தப்பட்டு அனுமதிக்க வேண்டும்.- 47%

3. எது சரி என்று குழப்பமாக இருக்கிறது.- 0%.

மூன்றாவது பதில்தான் முக்கியமானது. யாருக்கும் இதில் எந்தக் குழப்பமும் இல்லை. தங்கள் நிலையில் தெளிவாகவே இருக்கிறார்கள். ஏறத்தாழ சரி பாதியாக எதிரெதிர் கருத்துக்கும் ஆதரவு இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் இன்றைய தமிழகத்தின் முதல் முக்கியமான பிரச்னை மதுதான். சுமார் ஒரு கோடி பேர் தினசரி மது குடிக்கும் தமிழகத்தில் மக்கள் கருத்து என்ன? இதோ எங்கள் கேள்வியும் பதிலும்.

தமிழகத்தில் மதுக் கடைகள்:

1. மார்ச் 31னுடன் மூடி பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் - 38%.

2. படிப்படியாகக் குறைத்துவந்து ஓராண்டுக்குள் முழுக்க மூடவேண்டும்.- 52%

3. நல்ல வருமானம் கிடைப்பதால் தொடர்ந்து நடத்தலாம். - 10%.

எப்படிப் பார்த்தாலும் 90 சதவிகிதம் பேர் மதுக் கடைகள் மூடப்பட வேண்டுமென்றே நினைக்கிறார்கள். இது எனக்கு மிக ஆரோக்கியமான நிலையாகத் தோன்றுகிறது.

இந்த வருடக் கருத்துக் கணிப்பில் கிடைத்த முடிவுகள் எனக்கு நம் சமூகம் பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கின்றன. இந்தப் புத்தகக் காட்சியில் மூன்று விஷயங்கள் எனக்கு முக்கியமாக நடந்தன. ஒரு கோவில் சுவரில் ‘இங்கே லுங்கி, நைட்டி அணிந்து வரக்கூடாது’ என்று போட்டிருந்ததை நான் ஃபேஸ்புக்கில் விமர்சித்திருந்தேன். லுங்கி என்பது மதம் சார்ந்த உடை அல்ல. ஏழைகளின் உடை.  என் கருத்தை ஆட்சேபித்த சிலர் ‘நான் புத்தகக் காட்சிக்கு லுங்கி அணிந்து வருவேனா?’ என்று சவால் எழுப்பினார்கள். இந்தச் சவால் விடுத்தவரையே லுங்கி வாங்கிப் பரிசளிக்கும்படி கேட்டேன். கொண்டுவந்து கொடுத்தார். அதில் புத்தகக் காட்சிக்குச் சென்று என் நூல் வெளியிட்டு நிகழ்வில் பங்கேற்றது ஒரு மகிழ்ச்சி.இரண்டாவது மகிழ்ச்சி, வேறு சில எழுத்தாளர்கள் முயற்சிக்கத் தொடங்கியிருப்பது போல நானும் என் நூலை வெளிவரும் முன்னரே ஏலத்தில் எடுக்கும்படி வேண்டுகோள் விட்டதற்குக் கிடைத்த வரவேற்பாகும். என் ‘ஆப்பிள் தேசம்’ நூலை அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்க ஃபேஸ்புக் மூலம் மட்டும் 17 பேர் வந்தனர். மொத்தமாக சுமார் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் மூன்றில் ஒரு பங்கு எழுத்தாளராகிய எனக்கு. இன்னொரு பங்கு பதிப்பாளருக்கு. மூன்றாவது பங்கு, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் ஏழை மாணவர்கள் படிக்க, பாடமல்லாத நூல்களை வாங்கித் தருவதற்கு.மூன்றாவது மகிழ்ச்சி, நான் ஆரம்பம் முதல் 37 வருடங்களாகத் தவறாமல் பங்கேற்கும் சென்னைப் புத்தகக் காட்சியின் தொடக்க விழா மேடையில் அறிவிப்பின் மூலம் நான் வரைந்த பாரதி ஓவியத்தை நாட்டுடைமையாக்கியதாகும். அந்த வகையில் 31 வருடங்கள் முன்னர் நான் வரைந்த பாரதி ஓவியத்தை, இப்போது எனக்கு 60 வயது நிறைந்ததையொட்டி சமூகத்துக்குப் பயனுள்ள விதத்தில் கொண்டாடுவதற்காக, நாட்டுடைமையாக்கி அறிவித்தேன். தனிப்பட்ட உடல்நிலை, சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழ்நிலை எல்லாம் கவலைக்குரியதாக இருக்கும் சமயங்களில் இப்படிச் சில சின்னச் சின்ன மகிழ்ச்சிகளுடன் நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது.

 
 


 

Friday, January 24, 2014

குங்குமம்


திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா?" என்றார். உத்தரவு" என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்" என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச் சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான் குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்" என்று சைகையிலேயே ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள் குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள்.  அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா" என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள் பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.  கங்கையில் மூழ்கினால் பாவம் தொலையுமா?


காசி யாத்திரைக்குப் புறப்பட்ட ஒருவன் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து ஆசி பெற வந்தான். கங்கை அங்கிருந்து இங்கு வந்திருக்கிறாளே, நீ ஏன் இங்கேயே ஸ்நானம் செய்யக் கூடாது?" என்று கேட்டார் பரமஹம்சர்.

அதற்கு அவன், சுவாமி! கங்கையில் விசேஷ சக்திகள் உள்ளனவாம். எப்படிப்பட்ட பாவியானாலும் ஒருமுறை கங்கையில் முழுகினாலே பாவங்கள் அனைத்தும் தொலைந்து அவனுக்கு ஸ்வர்க்கவாசம் கிட்டுமாம்" என்றான்.ஸ்ரீராமகிருஷ்ணர், நீ இதற்கு முன்பு காசிக்குப் போயிருக்கிறாயா? கங்கைக் கரையிலுள்ள பெரிய பெரிய மரங்களைப் பார்த்திருப்பாயே?" என்று கேட்டார். சிறு வயதில் என் தந்தையுடன் போயிருக்கிறேன். அப்பொழுது மரங்களைப் பார்த்த ஞாபகம் இலேசாக இருக்கிறது" என்றான் யாத்திரிகன்.ஸ்ரீராமகிருஷ்ணர் இப்போது வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தார் அந்த மரங்களில்தான் ரகசியம் அடங்கி இருக்கிறது! கங்கையில் ஸ்நானம் செய்பவர்கள் முதலில் தம் சட்டைகளைக் கழற்றி வைக்கின்றனர். அப்பொழுது அவர்களுக்குள் இருக்கும் பாவங்களுக்கு கங்கையின் ஸ்பரிசத்தினால் நாம் நாசமடைவோம் என்கிற பயம் உண்டாகிறது. அவை பறந்து சென்று மரங்களின் மேல் அமர்ந்து கொள்கின்றன. அங்கு தம் எஜமானவர்கள் திரும்பி வருவதை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அவர்கள் ஸ்நானம் செய்து மேலே வந்த உடனே மரத்தில் காத்திருந்த பாவங்கள் அவர்களைப் பிடித்துக் கொள்கின்றன. இந்த விஷயத்தை யாரும் சொன்னதில்லை; சொல்லவும் போவதில்லை. ஏனெனில் அப்போது காசி பண்டிதர்களின் வருமானம் குறைந்துவிடுமே. அதனால் நீ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!" என்றார்.யாத்திரிகனுக்குப் பயம் ஒரு பக்கம், தான் வெகுவாகக் கௌரவிக்கும் துறவி பொய் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை ஒரு பக்கம். காசிக்குப் போயும் பாவம் தொலையாவிட்டால் இவ்வளவு கஷ்டமான யாத்திரையை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்கிற பகுத்தறிவு ஒரு பக்கம்.அவனுக்கு இன்னொரு யோசனை வந்தது. சுவாமி! தாங்கள் சொல்வது சரியென்றே வைத்துக் கொள்ளலாம். காசியில் இறந்தால் அல்லது அங்கு அந்திம சம்ஸ்காரம் நடந்தால் அந்த ஆத்மா ஸ்வர்க்கத்திற்குப் போவதாகச் சொல்லப்படுகிறதே. அவர்கள் செய்த பாவங்கள் எங்கு போகின்றன?" என்று பணிவாகக் கேட்டான்.இந்தப் பாவங்களும் அதேபோல் தான். இறந்தவனுடைய உடலை, கங்கைக் கரைக்குக் கொண்டு வந்ததுமே அவனது பாவங்கள் மரத்தில் ஏறிவிடுகின்றன. ஆனால், அவற்றிற்குத் திரும்பி வருவதற்கு உடல் அங்கு இருப்பதில்லை. வேறு வழியின்றி அவை வேறு உடல் தேடி அம்மரங்களிலேயே காத்துக் கொண்டிருக்கின்றன.தினமும் உன்னைப் போன்ற பல ஆயிரம் மக்கள் கங்கையில் ஸ்நானம் செய்ய வருவார்களல்லவா? அவர்களில் யாரையாவது தேர்ந்தெடுத்து. அவனுக்குள் புகுந்து விடுகின்றன. அவனுக்குத் தன்னுடைய பாவங்களுடன் அதிகப் படியாகப் பாவங்கள் சேருகின்றன. இதொன்றையும் அறியாமல் அவன் காசி யாத்திரை செய்த திருப்தி, மகிழ்ச்சியுடன் தன்னையறியாமல் இந்தப் பாவங்களையும் சுமந்து கொண்டு திரும்புகிறான்" என்று விளக்கினார்.

அப்படியானால் என் பாவங்களைப் போக்குவது எப்படி?" என்று கேட்டான். பரமஹம்சர் சாந்தமாக, எல்லாவற்றையும் பவதாரிணிக்கு அர்ப்பித்துவிடு. ‘இனி பாவம் செய்யாமல் காப்பாற்று. முந்தைய பாவங்களின் பலனைத் திடமனதுடன் துக்கப்படாமல் அனுபவிக்கும் மனநிலையை எனக்குக் கொடு’ என்று கேள். அவளே காசி, அவளே கங்கை" என்று உணர்ச்சிப் பெருக்குடன் உபதேசித்தார்.யாத்திரிகன் தெளிந்த மனத்துடன் திரும்பினான்.


Tuesday, January 21, 2014

ஏழுக்கு இத்தனை பெருமைகளா?

இயற்கையில், ஆண்டவனின் படைப்புகள் பொதுவாக ஏழு ஏழாக இருப்பதையே கண்கூடாகப் பார்க்கிறோம். இந்த 'சப்தம’ என்று சொல்லப்படும் ஏழு என்ற எண் உரு தெய்வாம்சம் பொருந்தியதாகக் கருதப்படுகிறது.

முதல் படைப்புகளான ஏழு கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை தங்கள் நீள்வட்டப் பாதையில் மிகவும் துல்லியமாக ஒரு நொடிகூடத் தவறாமல் காலம் காலமாக சுற்றிச் சுழல்கின்றன.உலகின் எல்லா நாடுகளிலும், இந்த ஏழு கிரகங்களை ஒட்டியே வாரத்துக்கு 7 நாட்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று முறையாக வகுக்கப்பட்டிருக்கின்றன.இயற்கைப் பிறப்புகள் தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரம் என ஏழாக அமைந்துள்ளன.இயற்கை வண்ணங்கள் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு. வானவில்லில் காட்சி தருகிற ஏழு நிறங்கள் இவை.இசையில், ச-ரி-க-ம-ப-த-நி என சப்த ஸ்வரங்கள் அமைந்துள்ளன.அது மட்டுமா... அயோத்தி, காசி, மாயா, உஜ்ஜயினி (அவந்தி), துவாரகா, மதுரா, காஞ்சி ஆகிய ஏழு நகரங்களில் வசிப்பதும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய ஏழு நதிகளில் நீராடுவதும் புண்ணியம் நிறைந்தவை எனப் போற்றப்படுகின்றன.

சப்தரிஷிகள் என அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரஸர்  ஆகியோரைக் கொண்டாடுகிறார்கள். சப்த சிரஞ்ஜீவிகளாக அஸ்வத்தாமர், மகாபலி, ஆஞ்சநேயர், வியாசர், விபீஷணர், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு பேரையும் அவர்களுக்கு உரிய நாளில், வணங்கி வழிபடுகிறோம்.

மெடிக்ளைம்: சந்தேகமும் தீர்வும்...

'நான் ஏன் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கணும்? தேவை இல்லாமல் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரனுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கணும்?' என்ற நண்பர் ஒருவர், அலுவலகத்தின் கட்டாயம் காரணமாக மெடிக்ளைம் பாலிசியை எடுத்தார். இன்சூரன்ஸ் எடுத்த ஒன்றரை மாதத்தில், விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிருக்கு ஆபத்து இல்லை. இருப்பினும், மிகப் பெரிய காயங்கள் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவக் காப்பீடு இருந்ததால், மருத்துவச் செலவின்றி அவர் வீடு திரும்பினார்.

'ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும், அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவும் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில், மருத்துவக் காப்பீடு என்பது தவிர்க்க முடியாதது. மருத்துவச் செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால்தான் மக்களும் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.'- ஃபார்ச்சூன் பிளானர் நிறுவனரும், நிதி ஆலோசகருமான பி.பத்மநாபன்.

ஏன் எடுக்க வேண்டும் காப்பீடு?

எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். ஒருவேளை, எதிர்பாராத நேரத்தில் திடீர் விபத்துகள் ஏற்பட்டால், நோய்கள் தாக்கினால், அதை எப்படி எதிர்கொள்வது? அதற்குத் தீர்வாக இருப்பதுதான் மருத்துவக் காப்பீடு. எளிதாகச் சொல்லப்போனால், நமக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நோய்கள் வரலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்று நினைத்தால், குறைந்த அளவு பிரீமியத்தைக் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி, அதனால் ஏற்படும் செலவுகளை, காப்பீட்டு நிறுவனம் மூலம் பெறக்கூடிய திட்டமே மருத்துவக் காப்பீடு. 

தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசி!

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், 'நான் ஏன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று நினைக்கலாம். ஆனால், ஃபேமிலி ஃப்ளோட்டர் என்ற பாலிசித் திட்டம் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பீட்டுப் பயன்பாட்டுக்குள் கொண்டுவரலாம். தனிநபர் பாலிசியும் உள்ளது. இது அவ்வளவு பிரபலம் இல்லை. ஒருவர் திருமணம் ஆவதற்கு முன்பு, தனிநபர் பாலிசி எடுக்கலாம். பின்பு திருமணம் ஆன பின்பு மனைவி மற்றும் குழந்தைகளையும் அதில் இணைத்துக்கொள்ள முடியும். தனித்தனியாக எடுப்பதைவிட, ஃப்ளோட்டர் பாலிசி பிரீமியம் குறைவு. 

நம்மைப் பற்றிய விவரங்கள்!  

க்ளைம் எளிதாக இருக்க வேண்டுமானால், நாம் நம்முடைய உடல் சம்பந்தப்பட்டவற்றை ஒன்றும் மறைக்காமல் சொல்ல வேண்டும். முகவரிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, ஏதாவது வியாதி இருக்கிறதா, இல்லையா என்று முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்து, அதனை விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவுசெய்திருக்க வேண்டியது அவசியம்.


காப்பீட்டைக்  கண்டறிவோம்!  

மிகப் பெரிய சவால்... 'எந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு எடுப்பது, மேலும் எந்த நிறுவனத்தில் எடுப்பது, நமக்கு எது தேவை’ என்பதை நாம் அறிய வேண்டும், பிறகு சில கேள்விகளை இரண்டு, மூன்று நிறுவனங்களில் கேட்பதன் மூலம் நமக்கு ஓரளவு தெளிவு கிடைக்கும். இன்று இணையதளங்களில் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு விடைகிடைக்கும். அதிலும் ஒருமுறை நாம் தேர்வுசெய்தது சரியாக உள்ளதா என்று பார்க்க முடியும். 'காசுக்கேத்த தோசை’ என்பார்கள், அதுபோல பிரீமியத்தை மட்டும் பார்க்காமல், அதில் என்னென்ன கவர் செய்கிறார்கள்... அதில் ஏதாவது கண்டிஷன் இருக்கிறதா... என்று பார்த்தால், நம்மால் நல்ல ஒரு காப்பீட்டைக் கண்டுபிடிக்க முடியும். 

பொதுவான தவறு!  

இன்று நிறையப் பேர், 'எனக்கு அலுவலகத்தில் காப்பீடு உள்ளது... அதனால் எனக்கு தனியாகத் தேவைப்படாது’ என எண்ணுகிறார்கள். அது மிகவும் தவறு. இன்று எல்லோரும் தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் சூழல். மேலும் வெகு காலம் யாரும் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்வதில்லை, அப்படி இருக்கும்போது, ஒரு வேலையைவிட்டு மறு வேலையில் சேரும்போதுகூட, நமக்கு ஏதாவது நோய் வரலாம். மேலும், பாலிசி எடுத்துச் சில ஆண்டுகள் கழித்துதான் சிலவகையான நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும். அதனால் தனியாக எடுத்துக்கொள்வது நல்லது. இன்று புதிய வகையான பாலிசிகள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று நம்முடைய வரம்பு போக, உயிர்க்கொல்லி நோய்கள் எதுவும் கண்டெடுக்கப்பட்டால், நம்முடைய பாலிசி தொகைபோல இருமடங்கு கொடுக்கிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

மருத்துவமனையில் அனுமதிக்கும்  முன்பும் பின்பும்!  

சில நோய்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு சில டெஸ்ட் எடுக்க நேரிடும், சில மாத்திரைகள் சாப்பிடவும் செய்யலாம். இவை வழக்கமான மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் முடிவுசெய்யப்படும். 30 முதல் 60 நாட்களுக்கு முன்பு வரை ஆகும் செலவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையே இதன் வரம்புக்குள் கொண்டுவரப்படும். அதேமாதிரி நாம் மருத்துவமனையைவிட்டு வந்தவுடன் நோய் உடனடியாகக் குணமாகாது. அதன்பிறகும் ஆகும் செலவுகளையும் இதில் சேர்க்க முடியும். சிகிச்சைத் திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோய்கள், அதிக மருத்துவச் செலவை ஏற்படுத்தும் நோய்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. 

நிதிப் பற்றாக்குறை! 

மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, நாம் உடல்ரீதியாக மட்டும் பாதிப்புக்குள்ளாவது இல்லை. மாறாக நம்மால் வேலைக்குச் செல்ல முடியாது. அதனால் நம்முடைய சம்பளத்தில் துண்டு விழும். நிதிச் சுமைகளை யார் கவனிப்பது என்பதுபோன்ற கேள்விகள் மனதைப் பிசையும். நாம் எடுக்கும் பாலிசிக்கு ஏற்ப நமக்கும், நம்மைப் பார்த்துக்கொள்பவருக்கும், சில பாலிசிகளில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை தருகிறார்கள்.

மருத்துவப் பரிசோதனை செய்பவர்கள், காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும்தான். எனவே, உங்கள் தரப்பு வாதம்தான் வெற்றிபெறும்.

முன்னோர் வழிபாடு! - தை அமாவாசை வழிபாடு!

இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!

சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. இவை, இறைவனை வழிபட நாம் செய்யும் காரியங்கள். பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், தெய்வத்தை வழிபடும் வேளையில், பித்ருக்கள் வரப் பயப்படுவார்கள் என்கிறது சாஸ்திரம்.ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு!மனிதர்கள் தாம் வாழும் காலத்தில், தான தருமங்கள் செய்து வருதல் வேண்டும். நம்மைப் பெற்ற தாய், தகப்பன் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மிகப் பெரிய தர்மம் ஆகும். இறந்த பின்பு செய்கின்ற தானத்தைவிட, இருக்கும்போது அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல ஆகாரம் கொடுப்பதே மிகப் பெரிய தர்மம் என்கிறது  கருடபுராணம்.பாபம் என்றால் என்ன, அது யாரைச் சேரும் என்பதைப் பற்றி நமது வேதங்களும், உபநிஷத்துகளும் விரிவாகச் சொல்லியிருக் கின்றன. பொய் பேசுதல், பிறர் பொருளை அபகரித்தல், அல்லது அபகரிக்க நினைத்தல் போன்றவை தீய காரியங்களாகும். இவை எல்லாமே பாபம் என்று கருடபுராணம் சொல்கிறது.சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன. அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது. ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.

நவீன உலகம், விஞ்ஞான யுகம், கணினி யுகம் என்று காலம் வேகமாக மாறிவிட்டது. 'என் வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. தர்ப்பணம் செய்யவே நேரம் இல்லை’ என்று அங்கலாய்க்கிறார்கள் பலர். மாதத்தில் ஒரே ஒருமுறை வருகிற அமாவாசைக்கே இப்படிச் சொல்கிறார்கள். ஆனால், வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். ஆகவே, எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாமல், தட்டிக் கழிக்காமல் முன்னோரை உரிய காலத்தில் வழிபடுவது நமக்கு நன்மை பயக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும், ஆடி மாத அமாவாசை தர்ப்பணமும், தை மாத அமாவாசை தர்ப்பணமும் அவசியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டிய சிராத்தம் விட்டுப்போனால் (தீட்டு ஏற்படுவதால்) மஹாளயபட்சம் அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.இந்தப் புனிதமான தர்ப்பணங்களை உத்தராயன, தட்சிணாயன காலங்களில் செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகார கனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள். இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம். ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற  அமாவாசையில்,  இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம்.

 

கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.தை அமாவாசை நாளில், அந்தப் புண்ணிய தினத்தில், நம் முன்னோருக்குச் செய்யும் கடமைகளைக் குறைவறச் செய்வோம். நம் குலம் தழைத்து, வாழையடி வாழையாய் வளமுடன் வாழ்வோம்!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

சி.எஃப்.எல். பல்பு - ஜாக்கிரதை

 
'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
 
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.
 
அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
 
வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

Saturday, January 18, 2014

சிறுபான்மையினர் வோட்டு யாருக்கு


சிறுபான்மைச் சமூகம், வோட்டு போடுவது குறித்து முடிவெடுப்பதற்கு வைத்திருக்கும் அளவுகோல்கள் என்ன? ஒரு கட்சியை எதிர்ப்பது என்றால் அந்தச் சமூகம் முழுவதும் எதிர்க்குமா? மதவாதிகள் எந்த அளவுக்கு வோட்டு போடும் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள்? சிறுபான்மையோர் வாக்கு வங்கி என்று ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த வாக்கு வங்கியைக் கண்டு அரசியல் கட்சிகள் பயப்படுகின்றனவா?

2004 நாடாளுமன்றத் தேர்தல். அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதா. ஆனால் அவரைக் குறித்து சிறுபான்மையோருக்கு ஒரு அச்சமும், பதற்றமும் ஏற்பட்டிருந்த சூழல். காரணம் அவர் அந்தச் சமயம் கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டம். நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையோர் மொத்தமாக அ.இ.அ.தி.மு.க.வைப் புறக்கணித்து, தி.மு.க. அணிக்கே வோட்டு போடுவார்கள் என்று வெளிப்படையாகவே தெரிந்தது. சிறுபான்மையோர் என்றால் பொதுவாக அது இஸ்லாமியர்களைக் குறிப்பதாகவே அமைந்துவிட்டது. காரணம் கிறித்துவர்கள் எண்ணிக்கை இஸ்லாமியர்களை ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு. என்னைப் பொறுத்த வரையில் இஸ்லாமிய வாக்கு வங்கி என்ற ஒன்று கிடையாது. எல்லா இஸ்லாமியர்களும் ஒரே மாதிரிதான் வாக்களிப்பார்கள் என்று சொல்வதும் தவறு. இதை நான் பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை.தங்கள் மீது வெறுப்பையும், வன்மத்தையும், வன்முறையையும் ஏவிவிடும் அரசியல் இயக்கத்தை இஸ்லாமிய மக்கள் விரும்பவதில்லை. அதுபோன்ற அரசியல் இயக்கத்தையும், அதனுடன் கூட்டணி அமைக்கும் இயக்கத்தையும் அவர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு அவர்கள் ஆதரவு இருக்காது என்பது தெரிந்த ஒன்று. குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகே தங்கள் இருப்பையும், பாதுகாப்பையும் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாமிய சமூகம் பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் குடும்பத்துக்கு எதிரான நிலையை எடுத்திருக்கிறது. மாநில அரசியலை எடுத்துக் கொண்டால் திராவிட இயக்கத்துக்கு நெருக்கமாகவே இருந்து வந்திருக்கிறது இஸ்லாமிய சமூகம். இப்போதுகூட ஜெயலலிதா பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாவிட்டால்கூட தேர்தலுக்கு அப்புறம் (தனக்கு பிரதமர் வாய்ப்பில்லாத பட்சத்தில்) பா.ஜ.க.வுக்கே ஆதரவு கொடுப்பார் என்று உறுதியாக அந்தச் சமுதாயம் நம்புகிறது. தவிர இஸ்லாமியர்களை மதக் கலவரங்களிலிருந்து பாதுகாக்க மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை மோடியைப் போன்றே ஜெயலலிதாவும் எதிர்க்கிறார் என்பதை இஸ்லாமியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கிறித்துவர்களைப் பொறுத்தமட்டில் இஸ்லாமியர்களைப் போன்று அவர்களுக்கு எந்த மன அழுத்தமும் இல்லை.தமிழ்நாட்டு மக்கள் தொகையான சுமார் ஏழே கால் கோடியில் முஸ்லிம்களும், கிறித்துவர்களும் 90 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை இருக்கிறார்கள். சுமார் ஐந்து கோடி வாக்காளர்களில் சுமார் 60 லட்சம் சிறுபான்மை வாக்காளர்கள் இருக்கலாம் என்கிறார்கள். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், நாகப்பட்டினம், தஞ்சை, தேனி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்குச் சிறுபான்மை சமூகம் அங்கேயெல்லாம் அடர்த்தியாக இருக்கிறது. சிறுபான்மைச் சமூகம் - குறிப்பாக இஸ்லாமியர்கள் 90 சதவிகிதம் பேர் படிப்பறிவு இல்லாமல் வறுமையில் வாடுபவர்கள் என்று நீதிபதி சச்சார் கமிட்டி சொல்லியிருக்கிறது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பத்து சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதைக் கண்டு கொள்ளாததால் காங்கிரஸ் மீது, இஸ்லாமிய சமூகம் கொஞ்சம் கடுப்பில்தான் இருக்கிறது. 

2011ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சிறுபான்மையோர் வோட்டு வங்கியை நாடாளுமன்றத் தேர்தலில் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தியது, ஜெருசலம் போகும் கிறித்துவர்களுக்கு மானியம் கொடுப்பது, கிறித்துவர்கள் பெரும்பான்மையாக இறங்கியிருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை போலீஸ் நடவடிக்கை மூலம் அடக்காதது என்று பல செயல்பாடுகள். அதேபோல் கடுமையான அழுத்தம் இருக்கும் போதும் பா.ஜ.க. வோடு தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்காமல் இருப்பதுகூட ஒரு வெளிப்படையான யுக்திதான். 

விஜயகாந்த் செல்வாக்கு வீழ்கிறதா?


காங்கிரஸும் பா.ஜ.க.வும், தி.மு.க.வும் விஜயகாந்த்தை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் இழுக்கக் கடுமையான முயற்சி செய்கின்றன. யாருடைய ‘பேக்கேஜ்’ ரொம்பவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்துக் கூட்டணி அமைத்து, பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும் மாநில மாநாட்டில் தே.மு.தி.க. வேட்பாளர்களை அறிவிக்கவிருக்கிறார் விஜயகாந்த். ஆனால் தே.மு.தி.க. செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில் விஜயகாந்த்தை இந்தக் கட்சிகள் கெஞ்சுவதற்குத் தக்க காரணம் இல்லை என்கிறார்கள். கட்சி தொடங்கிய 2006ல் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தே.மு.தி.க. வாங்கிய வோட்டு 8.33 சதவிகிதம். 2009ல் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, அவர் வாங்கியது 10.1. சதவிகிதம். அதே சமயம் 2011 சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு அ.தி.மு.க. ஆதரவுடன் அவர் வாங்கியது 7.88 சதவிகிதம்தான். 

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக வந்திருப்பதாகச் சொன்ன விஜயகாந்த் அ.தி. மு.க.வுடன் 2011ல் கூட்டணி அமைத்தபோது சுமார் 2 சதவிகிதம் நடுநிலைமை வாக்காளர்களின் வாக்கை இழந்து விட்டார் என்று சொல்கிறது ஒரு கணிப்பு. அதேபோல் இப்போது தி.மு.க.வுடன் கூட்டு அமைத்தால் இன்னமும் 2 சதவிகித ஆதரவை இழப்பார் என்கிறார்கள். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு 75000 வாக்குகள் கிடைத்து வந்த நிலையில் வரும் தேர்தலில் அது கணிசமாகக் குறையுமாம்.  தே.மு.தி.க.வுக்கு இப்போது நான்கு முதல் ஆறு சதவிகித வாக்குகள்தான் இருக்கும் என்று மும்பை தனியார் நிறுவனம் எடுத்த கணிப்பு சொல்கிறது. இந்த நிலையில் ஜனவரி மூன்றாம் வாரத்தில் இன்னமும் 3 தே.மு.தி.க. உறுப்பினர்கள் ஆளும் கட்சி ஆதரவாக மாற இருக்கிறார்கள். இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனி அமைப்பு ஒன்றும் தொடங்கி விருதுநகர் தொகுதியை அம்மாவிடம் கேட்பதாக இருக்கிறார்களாம். அப்படிக் கிடைத்தால் இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாண்டியராஜன் போட்டியிடுவாராம்.ஜனவரி மூன்றாம் வாரம் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வர இருக்கிறது. இப்போதிருக்கும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் தம்பித்துரை, செம்மலை ஆகிய இருவருக்குத்தான் மீண்டும் விட்டுக் கொடுக்கப்படும் என்ற பேச்சு இருக்கிறது. அதே சமயம் மூத்த அமைச்சர்கள் சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடுமாம். அந்த வகையில் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. கூட்டணிக் கட்சிகளான வலது, இடது கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கொடுக்க ஆளும் கட்சி முடி வெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதை இரண்டாக்குவதற்காக தோழர்கள் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு காத்துக் கொண்டே இருக்கிறார்கள். (கொடநாடு) மலையிலிருந்து இறங்கி வந்த பிறகு சந்திக்கலாமே என்று சொல்லி விட்டாராமே அம்மா. படபடப்பில் இருக்கிறார்கள் தோழர்கள்.

பிரியன் 


அரசியல் வேண்டவே வேண்டாம்! - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

 
பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகை, ஸ்போர்ட்ஸ் என்று நான் சொன்னதில் பாலிடிக்ஸ் என்பது மாணவர்களுக்கு வேண்டவே வேண்டாம். தேச நடப்பு அதில்தானே இருக்கிறது என்று கேட்கலாம். தேச நடப்பு அதில்தான் இருந்தாலும் அந்த நடப்பை நல்ல கூர்மையான அறிவுடன் நடத்தித் தரவும் கல்வியில் தேர்ச்சிப் பெறுவதுதானே உதவும்? இப்போது கல்விக்கு இடையூறு செய்துகொண்டு பொலிடிகல் பிரச்னைகளில் இறங்குவது அதை மேலும் உணர்ச்சி வேகத்தால் கெடுத்து, தங்களையும் கெடுத்துக் கொள்வதில்தான் முடியும். ‘மேலும்’ கெடுத்து என்று சொன்னேன். ஏனென்றால் தற்போது அரசியலில் யோக்யர்களும், யோக்யமான கொள்கைகளும் அபூர்வமாகிக் கொண்டே வந்து அது ஸ்வய நலத்துக்கும், ஆத்திர-க்ஷாத்திரங் களுக்குமே வளப்பமான விளைநிலமாகியிருக்கிறது. இந்த நிலையில் பக்குவ தசைக்கு வராத இளவயஸு மாணவர்கள் அதில் போய் விழுந்தால்?
 
இப்போது போலில்லாமல் பாலிடிக்ஸ் - அரசியல் - ஒழுங்காக, தார்மிகமாக இருந்தாலும், எதற்கும் உரிய பருவம் என்று ஒன்று உண்டாகையால், படித்துத் தேர்ச்சி பெற்று உத்யோகத்துக்குப் போய் வாழ்க்கைப் பொறுப்பு எடுத்துக் கொள்ளவே கடமைப்பட்டுள்ள மாணவ ஸமூஹம் அரசியலில் இறங்கவே கூடாது.‘நாம் தேசத்தை நல்ல வழியில் நடத்துவதற்கு நல்ல புத்தி பலமும், தர்ம பலமும், தெய்வ பலமும் பெற வேண்டும். முதலில் இவற்றை நாம் பெற்று, நிலைப்படுத்திக் கொண்டால்தான் பிற்பாடு தேச ப்ரச்னைகளின் பளுவைக் கஷ்டப்படாமல், தாங்கி அதை அபிவிருத்தி செய்ய முடியும். ஆகவே பலம் பெறாத தற்போதைய ஸ்திதியில் நாம் ராஜீய வியவஹாரங்களில் இறங்குவது நமக்கும் நல்லதில்லை, ராஜ்யத்துக்கும் நல்லதில்லை’ என்று யௌவனப் பிராயத்தினர் உணர வேண்டும்.
 
இவற்றில் புத்திபலத்தை முக்யமாகக் காலேஜில் பெறுகிற படிப்பாகவே பெற வேண்டும்; அதோடு அதைக் கொண்டுதான் நாளைக்கு இவன் ஒரு உத்தியோகத்திலே அமர்ந்து வீட்டை நடத்த முடியும் என்றும் ஏற்பட்டிருக்கிறது. படிப்புக்குக் குந்தகம் பண்ணிக் கொண்டால் வீட்டை நடத்த முடியாமல் போகும். தன் வீட்டையே நடத்தாதவன் நாட்டை எப்படி நடத்த முடியும்?

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

Thursday, January 16, 2014

வரிப் பிரச்னையில் குழம்பும் பா.ஜ.க!

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா வரிகளையும் ஒழித்துக்கட்டுவோம்’ என்று சில வாரங்களுக்குமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பா.ஜ.க, இப்போது இன்னொரு குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறது. வங்கி மூலம் நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2 சதவிகிதம் வரி விதிப்பதன் மூலம் தற்போது அரசாங்கத்துக்குக் கிடைக்கும் 12.5 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைவிட அதிக வருமானம் கிடைக்கும். இதன் மூலம் வருமான வரியை எளிதாக ஒழித்துக் கட்டலாம் என்று விளக்கம் சொல்ல முற்பட்டிருக்கிறது.
 
வரி ஒழிப்புப் பிரச்னையில் பா.ஜ.க முதலில் சொன்ன கருத்து பலத்த விமர்சனத்துக்கு உள்ளானதுபோல, இப்போது சொல்லப்பட்டிருக்கும் கருத்தும் பல கேள்விகளை எழுப்புகிறது. வங்கிகள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால், இனிவரும் நாட்களில் மக்கள் பலரும் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்வதையே விட்டுவிடுவார்கள். தற்போது நடப்பதுபோல, நேரடியாகப் பணம் தந்துவாங்கும் போக்கே மீண்டும் தலையெடுக்கும். வங்கி மூலம் அல்லாமல், நேரடிப் பரிவர்த்தனையில் ஈடுபட்டால் கடும் அபராதம் விதிப்போம் என்று சொல்லி, அதைக் குறைக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்றாலும், தற்போது சரியாக நடக்கும் ஒரு விஷயத்தை இத்தனை சிக்கல் நிறைந்ததாக ஏன் மாற்றவேண்டும்?  
 
தவிர, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரே சதவிகிதத்தில் வரி என்று வரும்போது அதிகம் சம்பாதிப்பவர்கள் குறைவாகவும், குறைவாகச் சம்பாதிக்கிறவர்கள் அதிகமாகவும் வரிக் கட்டவேண்டிய நிலை உருவாகும். இது, ஏழைகள் மீது கூடுதல் பாரத்தைச் சுமத்துவதாகவே இருக்கும். தவிர, ஏற்கெனவே இருக்கும் ஏழை, பணக்காரர் என்கிற இடைவெளியை இன்னும் அதிகமாக்கவே செய்யும்.எல்லாவற்றுக்கும் மேலாக, உலகின் வேறு சில நாடுகளில் இந்த நடைமுறை கொண்டுவந்தபோது படுதோல்வி அடைந்ததாகவும், அரசுக்குக் கிடைக்கவேண்டிய வருமானமும் பாதியாகக் குறைந்ததாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.

 
 ஏற்கெனவே இருக்கும் வரி விதிப்பை இன்னும் செழுமைப்படுத்துவதன் மூலமும், புதிய நேரடி வரி, பொருள் மற்றும் சேவை மீதான வரி போன்ற சட்டங்களை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதன் மூலமும் அரசின் வருமானத்தை அதிகரிப்பதை விட்டுவிட்டு, இதுபோன்ற கருத்துகளை எந்த முன்யோசனையும் இன்றி வெளியிடுவது, பா.ஜ.க. மீது மக்களுக்கு இருக்கும் நன்மதிப்பைக் குறைக்கவே செய்யும்.

ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம்...

ஏடிஎம் குறித்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால், டெக்னாலஜி வந்தும் அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாத நிலை உருவாகும். 

இனிமேல் நீங்கள் நினைத்த நேரத்திலெல்லாம் ஏடிஎம்-க்குப் போய்ப் பணத்தை எடுக்க முடியாது. ஒரு மாதத்தில் ஐந்து முறைக்குமேல் நீங்கள் ஏடிஎம்-ல் பணம் எடுத்தால், அதற்குத் தனியாகப் பணம் கட்டவேண்டும். இப்படிச் செய்தால்தான் வங்கிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன இந்தியா முழுக்க உள்ள பல வங்கிகள்.

தற்போது எல்லா வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தனது ஏடிஎம் மூலம் எத்தனைமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கு ஐந்துமுறை மட்டும் இலவசமான பணப் பரிவர்த்தனை (பணம் எடுப்பதல்லாத செயல்பாடுகள் உள்பட) செய்யலாம் என்றும், அதற்குமேல் செய்தால் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தையும் வசூலித்து வந்தன. பணம் எடுக்க சுமார் 17 ரூபாயும் (வங்கிக்கு வங்கி இந்தக் கட்டணம் வித்தியாசப்படும்), பேலன்ஸ் தொகையைச் சோதித்தறிய சுமார் 6 ரூபாயும் கட்டணம் வசூலித்தன வங்கிகள்.

இந்த நடைமுறையை மாற்றி, இனி எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் அவர் ஐந்துமுறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். ஆறாவது முறை பணப் பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் சுமார் 18 ரூபாய் கட்டணம்  வசூலிக்க வேண்டும் என்கிற புதிய நடைமுறையைக் கொண்டுவருவதில் எல்லா வங்கிகளும் தீவிரமாக இருக்கின்றன.


நஷ்டத்தில் இயங்குகின்றன! 

//''ஏடிஎம் இயந்திரங்களைப் பாதுகாக்க, பராமரிக்க அதிகம் செலவாகிறது. பெங்களூரு ஏடிஎம்-ல் பெண் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இன்னும் கூடுதல் கவனத்தை ஏடிஎம் மையங்களின் மீது வங்கிகள் செலுத்தவேண்டி இருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள ஒரு லட்சம் ஏடிஎம் மையங்களைப் பராமரிக்க நான்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் சில ஏடிஎம்-கள் மூலம் நாள் ஒன்றுக்கு ஐந்து பணப் பரிவர்த்தனைகள் நடப்பதே அரிதாக இருக்கிறது. இதனால் வங்கிகள் பெரிய அளவில் நஷ்டப்படுகின்றன''//

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள்!

ஆப் லாக் அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆண்ட்ராய்டு தொழில் நுட்பம்கொண்ட ஸ்மார்ட் போன்களை சிறப்பாகப் பயன்படுத்த பல ஆப்ஸ்கள் உள்ளன. இணையதளத்தில் உலாவ, கோப்புகளைச் சேகரித்து வைக்க, புகைப்படம் எடுக்க என பலவிதமான செயல்பாடுகளுக்கும் ஆப்ஸ்கள் நிறைய உதவுகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆப்ஸை இப்போது  பார்ப்போம்.

ஆப் லாக்! (App Lock) 

இந்த அப்ளிகேஷன் மொபைல் போன்களில் உள்ள எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி), கான்டக்ட்ஸ் (மொபைல் எண்கள்), ஜீ-மெயில், ஃபேஸ்புக், கேலரி (புகைப்படக் கோப்பு), மெயில்கள் (தனிப்பட்டவை மற்றும் அலுவலகம் சார்ந்தவையாககூட இருக்கலாம்!) போன்ற ஸ்மார்ட்போன் உரிமையாளரின் தனிப்பட்ட விஷயங்களை மற்ற யாரும் தெரிந்துகொள்ளாதபடி பாதுகாக்கப் பயன்படுகிறது.

இந்த அப்ளிகேஷன் மூலம் ஒருவர் மொபைல் போனில் தனக்கு மட்டுமே தெரியவேண்டும் என்கிற விஷயங்களை பாஸ்வேர்டு போட்டு பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். தங்களுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டு மற்றவர்களுக்குத் தெரியாதபட்சத்தில் மொபைல் போனில் இருக்கும் தகவல்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது. இதனால் நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று பயப்படத் தேவையில்லை.

அதுபோல, வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை எடுத்து விளையாடும்போது செட்டிங்ஸ்களை மாற்றிவிடுவார்களோ என்கிற பயமும் வேண்டாம். இந்த அப்ளிகேஷன்கள் பல பெயர்களில் கிடைக்கின்றன. அவற்றில் சில, ஃபாஸ்ட் ஆப் லாக் (Fast App lock), ஆப் லாக் மாஸ்டர் (Applock Master).

ஹைலைட்:

இந்த அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

24 மொழிகளில் இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.

உங்கள் தட்டில் உணவா... விஷமா?

இத்தனை அத்தியாயங்களாக நான் சொல்லி வந்த அத்தனை விஷயங்களையும் நீங்கள் தொடர்ந்து உள்வாங்கியவர் என்றால், 'நாம் உண்ணுவதெல்லாம் உணவல்ல, விஷம்' என்பதை ஓரளவுக்கு உணர்ந்திருக்க முடியும். இப்போது, ஒரேயடியாக அதை உணர்த்தும் வகையில் வந்து கொண்டிருப்பவைதான்... மரபணு மாற்றப்பட்ட உணவுகள் (ஜி.எம். உணவுகள்). மனித இனத்தின் எதிர்காலத்தையே பெரும் கேள்விக்குறியாக்கும் புதிய பூதாகார பிரச்னை இது என்றால், பொய்யில்லை!
 
மேலோட்டமாக பார்க்கும்போது... 'மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அறிவியலின் புதிய கண்டுபிடிப்பு. இது நல்ல விஷயம்தானே.. இதற்கு ஏன் எதிர்ப்பு?' என்று கேட்கத் தோன்றும்.

இதற்கு விடை மிகவும் சுலபம். ஒவ்வொரு விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அணுசக்தியால் மின்சாரமும் தயாரிக்கலாம், அணுகுண்டும் தயாரிக்கலாம். மரபணு மாற்றமும் அப்படியே. 'இந்த விஞ்ஞான யுக்தியை தாவரங்களுக்குப் பயன்படுத்தினால்... உணவு உற்பத்தியை பல மடங்கு பெருக்கலாம், புது வகையான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யலாம், பூச்சிகள் தாக்குதல் இல்லாமல் அமோக வளர்ச்சி, கெட்டுப்போகாத - அழுகிப்போகாத தன்மை, நல்ல நிறம், நல்ல சைஸ் போன்ற குணங்களோடு உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்யலாம்' என்கிற கற்பனையில் மரபணு விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்றார்கள். அவர்கள் நினைத்தபடியே இது நடந்திருந்தால், இது ஒன்றும் அப்படி கெட்ட விஷயமாக இருந்திருக்காது. ஆனால், 'பிள்ளையார் பிடிக்க, குரங்காக முடிந்த கதை' என்பது போல அது மாறியிருப்பதுதான் சோகம்.
மண்ணில் இருக்கும் 'பேசில்லஸ்துரிஞ்ஜியான்ஸிஸ்’ எனும் நுண்கிருமியின் மரபணுவை, செடியின் விதைகளில் செலுத்தினார்கள். இந்த மரபணு செடியில் புகுந்து ஒருவகை கிருமிநாசினியை உற்பத்தி செய்தது. இதனால் செடிகளைத் தாக்கும் பூச்சிகள், தானாகவே விரட்டப்பட்டன. இந்த தொழில்நுட்பத்தால் முதலில் விளைந்த பருத்தி, 'பி.டி. பருத்தி' என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் ஆரம்பித்தது பிரச்னை.

'இந்தப் பருத்திச் செடியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் இறக்கின்றன; பருத்திக் காடுகளில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு உடலில் அரிப்பு, தும்மல், இருமல், ஆஸ்துமா ஏற்படுகிறது...' என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கிளம்பின.

இந்தச் சலசலப்பு வேகமாகப் பரவவே... 'மரபணு மாற்று தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?' என்று ஆராய்ச்சி செய்து அறிக்கை தரும்படி 1996-ல் ஒரு குழுவை அமைத்தது இங்கிலாந்து அரசு! உலகின் தலைசிறந்த மரபணு விஞ்ஞானி புஜ்டாய், இதன் தலைமை ஏற்றார். ஆராய்ச்சியின் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தன.

மரபணு மாற்ற முறையில் விளைந்த உருளைக்கிழங்கு, எலிகளுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. 90 நாட்களில் எலிகளின் உடலில் பல மாறுதல்கள் தோன்றின. முக்கியமாக குடலில் உள்ள செல்கள் நீண்டும், மெலிந்தும் வளர்ந்தன. இது புற்றுநோயின் முதல் கட்டம். இதே போன்ற மாற்றங்கள் மூளை, ஈரல், சிறுநீரகம், ஆண் விந்துப்பை, பெண் சினை முட்டைப்பை போன்ற உறுப்புகளிலும் ஏற்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் லண்டனின் புகழ்பெற்ற 'லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. உலகமே ஸ்தம்பித்தது.

மரபணு மாற்ற விதைகளை உற்பத்தி செய்து, உலகெங்கும் விற்று கோடிகளில் புரளலாம் என்று கற்பனை செய்திருந்த கம்பெனிக்கு இது பேரிடியாக விழுந்தது. அடுத்தடுத்து என்ன நடந்ததோ... அடுத்த வாரமே 'லான்செட்’ இதழ், தன் கட்டுரையை வாபஸ் பெற்றது. 'ரோவட்’ நிறுவனம், தன்னிடம் 36 வருடம் ஆராய்ச்சி பணிபுரிந்த விஞ்ஞானி புஜ்டாயை டிஸ்மிஸ் செய்தது. அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கம்போல, 'மரபணு மாற்றப்பட்ட உணவு மிகவும் பாதுகாப்பான அற்புத உணவு' என்று 'ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட ஆறு 'விஞ்ஞானிகள்’ புறப்பட்டு வந்தனர்.

விளைவு..?

மரபணு மாற்றப்பட்ட அரிசி, கோதுமை, சோயா, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்திரிக்காய், வாழைப்பழம், எண்ணெய் வித்துக்கள் என்று ஏகமாக உலகெங்கும் வியாபித்துவிட்டன. இப்போது, சராசரி அமெரிக்கனின் உணவில் 75% உணவுகள், மரபணு மாற்றப்பட்ட உணவுதான் என்கிறது ஒரு கணக்கீடு. அமெரிக்கர்கள் பெரிய கொடைவள்ளல் போல ஜி.எம். உணவுகளை, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்தார்கள். ஆனால்... ஸாம்பியா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் போன்ற நாடுகள், 'செத்தாலும் பரவாயில்லை - எங்களுக்கு வேண்டவே வேண்டாம்!’ என்று மறுத்துவிட்டன.

ஒவ்வொரு நாட்டிலும் மந்திரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கோடி கோடியாகப் பணம் இறைக்கப்பட்டது. நம் நாடு? பல்வேறு தரப்பிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு அலையால், மரபணு மாற்ற உணவுப் பயிர்களுக்கு தடை விதித்தது. ஆனால், வெறும் கண்துடைப்புதான். இப்போது பழங்கள், சோளம் என்று மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் பலவும் இந்திய கடைகளிலேயே தாராளமாகக் கிடைக்கின்றன.

ஆக, திருட்டுத்தனமாக கொல்லைப்புற வழியாக மரபணு மாற்ற உணவுகளும் பயிர்களும் நம் நாட்டில் நுழைந்துவிட்டன என்பதுதான் உண்மை.

ஜி.எம். உணவுகளால் என்னென்ன கெடுதல்கள் வரலாம்? ஒரு குறிப்பிட்ட பூச்சியைக் கொல்வதற்காகத் தயாரிக்கப்பட்ட ஜி.எம். விதைகள், பல புதிய பூச்சிகளை / கிருமிகளை / வைரஸ்களை உருவாக்கலாம். புதிய டி.என்.ஏ உருவாவதால்... அலர்ஜி சம்பந்தமான பாதிப்புகள் வரலாம். குடல், ஈரல், மற்ற உறுப்புகளில் எல்லாம் புற்றுநோய் வரலாம். உடலின் நோய் எதிர்ப்புசக்தி அழிக்கப்படலாம்.

'ஒரு புதிய மருந்து கண்டுபிடித்தால், அதை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, விலங்குகளுக்குக் கொடுத்து ஆராய்ந்து, பிறகு மனிதர்களின் 'புரிந்துணர்வு ஒப்புதலோடு’ பரிசோதனை மேற்கொண்ட பிறகே... சந்தைப்படுத்தப்படும். ஆனால், நம் யாருடைய சம்மதமும் பெறாமலேயே, நம்மை லேபரேட்டரி எலிகளைப்போல் பாவித்து இந்த ஜி.எம். உணவுகளை உண்ணச் செய்வது என்ன நியாயம்..?

'மரபணு விஞ்ஞானம் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. இதைப் பற்றிய ஏராளமான விஷயங்கள் நமக்கு இன்னும் புரியவில்லை’ என்கிறார்கள் மனித இனத்தில் அக்கறையுள்ள விஞ்ஞானிகள். ஆனால், இந்த எச்சரிக்கைகள் யார் காதிலும் விழவில்லை.

மனித ஆரோக்கியம் தவிர, வேறு பல பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்னைகளும் ஏற்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பூச்சிகளைக் கொல்லும் இந்த விதைகள், சகட்டுமேனிக்கு நன்மை பயக்கும் உயிரினங்கள் அத்தனையையும் அழித்துவிடும். வளமான விளைநிலங்கள் மலடாக்கப்பட்டுவிடும் என்றும் கவலைப்படுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் மான்சான்டோ கம்பெனியிடம் கையேந்தி விதை வாங்கும் அவலம் உண்டாகும். இந்தியா வெகு விரைவில் விவசாயத்தில் அமெரிக்காவுக்கு அடிமை நாடாக மாறும் என்பதெல்லாம் நிஜம்தான். அதுசரி, பூனைக்கு மணி கட்டுவது யார்? விஞ்ஞானிகள், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் எல்லோரும் சேர்ந்து சமுதாய விழிப்பு உணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்.

இம்மாதிரி போராட்டங்களை வாழ்நாள் முழுவதும் தலைமை ஏற்று நடத்திய இயற்கை விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் (என்னை இந்தத் துறையில் ஆர்வம்கொள்ள வைத்தவர்!), சில நாட்களுக்கு முன் இயற்கை எய்தியது, நாட்டுக்கே பேரிழப்பு. ஆனாலும், அவரின் பணியை தொடர்வதற்கு, பலர் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்கு நிம்மதி.

சூப்பர் 6
Friday, January 10, 2014

நீர் - என்.சொக்கன்

உலகில் பெரும்பகுதி தண்ணீர்தான் இருக்கிறது. நம் உடலுக்குள்ளும் பெரும்பகுதி தண்ணீர்தான். தண்ணீர் சேர்க்காமல் எதையும் சமைக்க முடியாது, சாப்பிட முடியாது. ஒருவேளை சாப்பாட்டை மறந்தாலும், தண்ணீர் குடிக்காமல் மனிதர்களால் உயிர்வாழவும் முடியாது.

மனிதர்கள் மட்டுமல்ல, செடி, கொடி, மரத்தில் ஆரம்பித்து நுண்ணுயிரிகள், விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றுக்கும் தண்ணீர் தேவை. எந்த அளவு தேவை என்ற கணக்கு மாறுமே தவிர, தண்ணீர் இன்றி வாழும் தாவரம், உயிரினம் எதுவுமே கிடையாது. உலகின் ஜீவாதாரம் என்று பார்த்தால், அது தண்ணீர்தான்!வேதியியல் பாடத்தில், தண்ணீரின் ரசாயனக் குறியீடு H2Oˆ என்று படித்திருக்கிறோம். அதாவது, இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன் இணைந்து கிடைப்பது தண்ணீர்.ஆனால், மற்ற ரசாயனங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம், தண்ணீர் இப்படித்தான் கிடைக்கும் என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது. பூமியிலும் மற்ற சில கிரகங்களிலும் திடப்பொருள், திரவப் பொருள், வாயு என்று மூன்று வடிவங்களிலும் தண்ணீர் கிடைக்கிறது.திடப் பொருள், அதாவது பனிக்கட்டி. ரெஃப்ரிஜிரேட்டரில் நாம் உறைய வைக்கிற ஐஸ் கட்டியில் தொடங்கி, கடலுக்குள் தென்படும் பெரிய பனிப்பாறைகள் வரை, தண்ணீரின் திட வடிவம்.திரவ வடிவம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். குழாயில் பிடித்துக் குடிக்கும் தண்ணீரில் ஆரம்பித்து ஆறு, கடல், அருவி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.வாயு வடிவம் என்பது நீராவி. தண்ணீரைப் பாத்திரத்தில் வைத்துக் கொதிக்க வைத்தால், ஒரு கட்டத்துக்கு மேல் அது வாயு வடிவத்தில் வெளியேறத் தொடங்கிவிடும்.இப்படிப் பல விதங்களில் நம்மைச் சுற்றித் தண்ணீரின் மூன்று வடிவங்களும் இருக்கின்றன. ஒன்றை இன்னொன்றாக மாற்றுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மூன்று நிலைகளிலும் தண்ணீர் சமையலுக்குப் பயன்படுகிறது. பனிக்கட்டியை வைத்துப் பழரசங்களைக் குளிர்விக்கிறோம், திரவத்தை வைத்துக் காய்கறிகளை வேக வைக்கிறோம், வாயு வடிவத்தில் இட்லி, புட்டு போன்றவற்றை வேகச் செய்கிறோம்!‘தண்ணீர்’ என்ற தமிழ்ச் சொல்லே மிக அழகானது. தண்மை + நீர் என்று அதைப் பிரிக்க வேண்டும். அதாவது, குளிர்ச்சியான நீர்.இந்தப் பூமியில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு தண்ணீர்தான். ஓர் உலக வரைபடத்தை எடுத்துப் பாருங்கள், எங்கு பார்த்தாலும் நீலக் கடல் தெரியும். கடல் தவிர ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி என்று பல இயற்கை வழிகளிலும் கிணறு, அணைக்கட்டு, நகராட்சித் தொட்டிகள் எனக் குறுகி, நம் தெருமுனையிலும் வீட்டிலும் உள்ள குழாய்கள் வரை நீரைப் பெறலாம், போதாக்குறைக்கு மழையாக வானத்திலிருந்தும் கொட்டும்.உலகில் உள்ள தண்ணீரில் 97% கடலில் உள்ளது. அதை நாம் அப்படியே குடிக்க முடியாது. சுத்திகரித்துக் குடிப்பதற்கும் இப்போதைய தொழில் நுட்பத்தில் ஏகப்பட்ட செலவாகும்.அடுத்து, 2% தண்ணீர் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாக உறைந்திருக்கிறது. அவற்றையும் நாம் வரவழைத்துக் குடிப்பது சாத்தியமில்லை. மீதமுள்ள 1%, அதாவது ஒரே ஒரு சொட்டு, அந்தத் தண்ணீரைதான் நாம் குடித்துக் கொண்டிருக்கிறோம். அதை வைத்துதான் ஒட்டுமொத்த உலகமும் வாழ்ந்தாக வேண்டும்! இதனால்தான் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்குச் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை.

தண்ணீர் இருக்கிறது என்பதற்காக அதனை வீணடிப்போரும் உண்டு. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. பெரும்பாலானோர் தாங்கள் நீரை வீணடிக்கிறோம் என்று புரியாமலே அதனை வாரி இறைக்கிறார்கள்.உதாரணமாக, ஒருவர் தினமும் பாத் டப்பில் குளிக்க நூறு லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம், அதையே அவர் ஒரு வாளியில் பிடித்துக் குளித்தால் இருபத்தைந்து லிட்டர் போதும்.இன்னொருவர் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டபடி பல் துலக்குகிறார். இரண்டு நிமிடங்கள்தான். அதற்குள் அவர் வீணாக்கும் தண்ணீர் எவ்வளவு தெரியுமா? சுமார் 15 லிட்டர்கள். இப்படி உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொருவரும் தினசரி முப்பது முதல் ஐம்பது லிட்டர் வரை தண்ணீரைச் சேமித்தாலே போதும். நமக்கும் நல்லது, பூமிக்கும் நல்லது!கடலில் இருப்பதும் தண்ணீர்தான். நம் வீட்டில் குழாயில் வருவதும் தண்ணீர்தான். பாட்டிலில் விற்பனையாவதும் தண்ணீர்தான். ஆனால், கடல் நீர் உப்புக் கரிக்கிறது, நம் வீட்டுத் தண்ணீர் சாதாரணமாக இருக்கிறது, பாட்டில் தண்ணீர் சற்றே இனிப்பாக உள்ளது... உண்மையில் தண்ணீரின் சுவைதான் என்ன?தூய்மையான நீருக்கு நிறம் கிடையாது, சுவை கிடையாது, வாசனையும் கிடையாது! கடல் நீரில் உப்பு கலந்துள்ளது. ஆகவே, அதன் சுவையை அது பெற்றுவிடுகிறது. பாட்டில் தண்ணீரில் பல தாதுகள் சேர்ந்திருப்பதால், அதுவும் ஒரு சுவையைப் பெறுகிறது. கடல், ஆறு என நிலப்பரப்புக்கு மேலே கிடைப்பது போலவே, அதன் கீழேயும் தண்ணீர் உள்ளது. இதனைப் பெரிய கிணறு வெட்டியோ, ஆழ்துளைக் கிணறை அமைத்தோ நாம் மேலே கொண்டு வரலாம். அதன் தரத்தைப் பொறுத்துக் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தலாம்.

இந்த நிலத்தடி நீரை நாம் உறிஞ்சி எடுக்க எடுக்க, அது மேலும் கீழே சென்று கொண்டிருக்கும். இந்த நிலையை மேம்படுத்த மழை நீர் சேகரிப்புத் திட்டங்கள் உதவும்!விவசாயத்திற்கு மழை அவசியம். சரியான நேரத்தில், சரியான அளவில் மழை பெய்தால்தான் பயிர்கள் சிறப்பாக வளரும், அறுவடையும் நன்றாக இருக்கும். ஆகவே, விவசாயத்தை நம்பியிருந்த நம் முந்தைய தலைமுறை மக்கள் மழையைக் கொண்டாடினார்கள். பலவிதங்களில் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி பூமியை வளப்படுத்தினார்கள்.மனித உடலில் முழுக்கத் தண்ணீர் இருந்தாலும், அது இயங்குவதற்கு வெளியிலிருந்து தண்ணீர் ஒரு குறிப்பிட்ட அளவில் தினமும் தேவை. இதற்காக, ஒரு நாளைக்கு 8 தம்ளர் என்ற அளவு சிபாரிசு செய்யப்படுகிறது. ஆனால், இதை நாம் கண்டிப்பாக எண்ணிப் பின்பற்ற வேண்டியதில்லை. வெயில் அதிகமுள்ள நாள்களில் சற்றே கூடுதலாகவும், குளிர் நாள்களில் குறைவாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் ஆனால் தொடர்ந்து மிகக் குறைவாகவே தண்ணீரைத் குடிக்கிறவர்களின் உடலுக்குப் பின்னாளில் பல பிரச்னைகள் வரக்கூடும். ஆகவே, தினமும் மறக்காமல் நான்கு முதல் ஐந்து தம்ளர் தண்ணீரைக் குடித்துவிடுவது நல்லது!தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்குப் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது, தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பது.தண்ணீரை அருந்துவது, சமைப்பது ஒருபுறமிருக்க, அது இன்னும் பலவிதங்களில் நமக்குப் பயன்படுகிறது. நீரால் உடலைத் தூய்மைப்படுத்தலாம், பாத்திரங்களைத் தேய்க்கலாம், விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம், நெருப்பை அணைக்கலாம், இயந்திரங்கள் செயல்படும் போது உண்டாகும் சூட்டைக் குளிர்விக்கலாம்... அவ்வளவு ஏன், அதிலிருந்து மின்சாரம்கூட எடுக்கலாம்!நீர் மின்சாரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓடுகிற அல்லது கொட்டுகிற நீரின் ஆற்றலைப் பயன்படுத்தி இயந்திரங்களைச் சுழலவிட்டு, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
தண்ணீரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதும் உண்டு. கப்பல்கள், சிறு படகுகள் போன்றவற்றில் மனிதர்களோ பொருள்களோ பயணம் செய்யலாம்.

நலம் காப்போம் - பாதங்களைப் பாதுகாப்பது எப்படி? டாக்டர் கு.கணேசன்


நம் உடல் எடை எத்தனை கிலோவாக இருந்தாலும் அத்தனையும் தாங்கித் தளராத நடைபோட நமக்குப் பெரிதும் உதவுவது, பாதங்கள். நம் முகப்பொலிவைக் காக்க நாம் காட்டும் அக்கறையில் கால் பங்கு செலவழித்தால் போதும், பாதங்கள் பளிச்சிடும்; ஆரோக்கியமாக இருக்கும். இதோ பாதங்களைப் பாதுகாக்க சில ஆலோசனைகள்...

பாதங்களில் வரும் நோய்களில் முதன்மையானது சேற்றுப்புண். கான்டிடா ஆல்பிகன்ஸ் எனும் காளான் கிருமிகள் பாதங்களில் விரல் இடுக்குகளைப் பாதிக்கும்போது சேற்றுப்புண் வருகிறது. இந்தக் கிருமிகள் அசுத்தமுள்ள இடங்களிலும் அதிக ஈரமுள்ள இடங்களிலும் நன்கு வளர்ச்சி பெறும். ஆகவே அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்பவர்கள், துணி துவைப்பவர்கள், மீன் பிடிப்பவர்கள் போன்றோருக்குச் சேற்றுப் புண் வருகிறது. இரவில் பாதங்களைச் சுத்தப்படுத்தி விட்டு, காளான்கொல்லி களிம்பு ஒன்றை விரல் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் குணமாகி விடும். இது மீண்டும் வராமலிருக்க விரல் இடுக்குகளில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அடுத்து வருவது நகச்சுற்று. அசுத்தமான நகம், நகத்தில் அடிபடுவது, நகத்தை வெட்டும்போது சதையோடு வெட்டிவிடுவது, கூர்மையான பொருள் குத்தி விடுவது போன்றவற்றால் பாக்டீரியா கிருமிகள் நகத்தைச் சுற்றியுள்ள தோல் மற்றும் தசையைத் தாக்கும். அப்போது ‘நகச்சுற்று’ ஏற்படும். இதன் விளைவால், நகத்தைச் சுற்றி வீக்கமும் வலியும் உண்டாகும். இதற்குத் தகுந்த ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிட்டால் குணமாகும். நகச்சுற்றில் சீழ் வைத்துவிட்டால் சீழை வெளியேற்ற வேண்டும். ஐஸ்கட்டியைப் பிளாஸ்டிக் பையில் வைத்து நகச்சுற்று வந்த கால் விரலில் ஒற்றடம் கொடுத்தால் வலி குறையும். நகச்சொத்தை என்பது ‘ட்ரைக்கோபைட்டன் ரூப்ரம்’ எனும் ஒருவகைப் பூஞ்சையால் வருவது. நகம் சொத்தையானால், நகத்தின் பெரும்பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படும். பின்பு அது சுருங்கி, வதங்கி, உடைந்து, சிதைந்து போகும். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். நகச்சொத்தையில் தகுந்த களிம்பு தடவி, சில வாரங்களுக்கு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைச் சாப்பிட அது குணமாகும். நகச்சொத்தை உள்ளவர்கள் அடிக்கடி தண்ணீரில் கால் விரல்களை முக்குவதைத் தவிர்க்க வேண்டும். விரல்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாதப் பிரச்னைகளில் அடுத்து வருவது ஆணிக்கால். இது ஒரு தோல் வளர்ச்சி நோய். பாதத்தில் உண்டாகும் அதிக உராய்வு அல்லது அதிக அழுத்தம் காரணமாக பாதத்தோல் தடித்துவிடும். அப்போது உடல் பளு இதில் அழுத்துவதால் தடித்த தோல் கடினமாகி, கட்டிபோல் திரண்டுவிடும். இதுதான் ஆணிக்கால். சரியான செருப்பு அல்லது ஷூ அணியாதவர்களுக்கு ஆணிக்கால் வரும் வாய்ப்பு அதிகம். அதிக எடையுள்ள செருப்புகளை அணிந்தால் பாதங்களில் ‘கேலஸ்’ எனும் ‘காப்பு’ வரும். இவற்றை ‘கார்ன்-கேப்’ அல்லது மின்சூட்டுக் கோல் கொண்டு அகற்றிவிடலாம். சிலருக்குச் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படும்.பாதங்களில் வெடிப்புகள் உண்டாவது அடுத்த பிரச்னை. பொதுவாக தோலில் ஈரம் குறைந்து போவதால் இது ஏற்படுகிறது. அதிலும் பனிக் காலத்தில் இந்தப் பிரச்னை அதிகரிக்கும். பாதங்களில் ‘மாச்சுரைசர்’ களிம்பையோ எண்ணெயையோ தடவிக்கொள்ளலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது சமையல் உப்பு கலந்து, அதில் பாதங்களை 5 நிமிடங்கள் நனைக்க வேண்டும். 

பாதங்களில் பனியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்போது தோன்றுகிற ஒரு தொல்லை ‘உறைபனிக்கடிக் காயம்’(Frost Bite). உறைநிலைக்கும் கீழான காலநிலையில் தோலில் உள்ள சிறிய ரத்தக்குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் குறைந்து, திசுக்கள் இறக்கின்றன. இதன் விளைவால் இந்த நோய் ஏற்படுகிறது. இதன் முதல் அறிகுறி பாதத்தில் வலி ஏற்படுவது. பிறகு, மதமதப்பு உண்டாவது. காயத்தில் தொடு உணர்ச்சி குறைவது. தோல் வெளுப்பது. இவற்றைத் தொடர்ந்து, காயம் நீலநிறமாக மாறுவது. பாதங்களை இளம் சூடான தண்ணீரில் அமிழ்த்தி வைப்பதாலும், காயமுள்ள பாதத்தைச் சற்றே உயர்த்தி வைப்பதாலும் வலி குறையும். காயமுள்ள காலுடன் தேவையின்றி நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.நீண்ட காலம் ஈரம் நிறைந்த, குளிர் மிகுந்த சூழலில் கால்கள் இருக்குமானால், விரல்களுக்குக் கீழும், விரல் இடுக்குகளிலும் புண்கள் தோன்றும். இவை கொப்புளங்களாக மாறும். இவற்றுக்கு ‘மறைகுழிப்புண் பாதம்’ (Trench Foot) என்று பெயர். இந்த நோயின் ஆரம்பத்தில் தோல் சிவக்கும். மதமதப்பு ஏற்படும். தொடு உணர்வு குறையும். சிவந்த இடம் வீக்கம் அடையும். கொப்புளம் தோன்றும். அதிலிருந்து ரத்தம் வடியும். இந்நோயுள்ளவர்கள் ஈரமான காலுறைகளைப் பயன்படுத்தக்கூடாது. எப்போதும் உலர்ந்த காலுறைகளையே அணிய வேண்டும். பாதங்களை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும். சற்றே வெதுவெதுப்பான தண்ணீரில் பாதங்களை அமிழ்த்தலாம். பாதங்களில் ’மாச்சுரைசர்’ களிம்பைத் தடவிக்கொள்ளலாம் அல்லது எண்ணெயைத் தடவலாம்.வாரம் ஒருமுறை பாதநகங்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். நக ஓரங்களில் கல், மண் அல்லது அழுக்கு படிந்துவிட்டால் அவற்றை அகற்ற ஊக்கு, ஊசி போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. பருத்தி துணியின் முனையை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, அதை வைத்துச் சுத்தப்படுத்த வேண்டும். செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும். இரவில் வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு கலந்து பாதங்களை 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, பழைய பல் துலக்கியை வைத்து பாதங்களை நன்றாகச் சுத்தம் செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயைத் தடவ வேண்டும். அதிக எடை இல்லாத, பாதத்தின் வளைவுக்கு ஏற்ற ரப்பர் அல்லது மென்மையான தோல் செருப்புகளை அணிவதுதான் நல்லது. பிளாஸ்டிக் மற்றும் ‘பிவிசி’யில் தயாரிக்கப்பட்ட செருப்புகளைத் தவிர்க்க வேண்டும். ஹீல்ஸ் இல்லாத, முழுவதும் தட்டையாக உள்ள செருப்புகள்தான் பாதங்களைப் பாதுகாக்கும். ஒன்றரை அங்குலத்துக்கு மேல் ஹீல்ஸ் உயரம் இருக்கக்கூடாது. பெரிய ஹீல்ஸ் அணிபவர்களுக்குக் காலின் வடிவம் மாறிவிடும். கால் பெருவிரலில் வீக்கம் ஏற்படும்.

மார்டின் லூதர் கிங் - சுவாமி விவேகானந்தர் -மொஸார்ட்


அமெரிக்காவில் அடிமை முறை மற்றும் நிறவெறிக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். அவரைப் போலவே நிற வெறிக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்தவர் மார்டின் லூதர் கிங். தாங்கள் கடைப்பிடித்த கொள்கைகளுக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டனர் இருவரும். 

1929 ஜனவரி 15. அமெரிக்காவில் பிறந்த மார்டின் லூதர் கிங் சமூக உரிமைப் போராளி, ஆப்பிரிக்க- அமெரிக்க மனித உரிமைத் தலைவர் என்று பன்முகம் கொண்டவர். அவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவின் தென் மாகாணங்களில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க இன மக்கள் தெருக்களில் நடக்கக்கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பேருந்துகளிலும் ரயில்களிலும் ஒதுக்கப்பட்ட தனி இடத்தில்தான் பயணிக்க வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை இல்லை. தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். 

1955ல் அலபாமா மாகாணம் மாண்ட்கோமரி என்ற ஊரில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த ரோசா பார்க்ஸை, அமெரிக்கர்களுக்கு இடம் அளிக்கும்படி கேட்டனர். தான் பயணச் சீட்டு வாங்கியிருப்பதாகச் சொல்லி, ரோசா பார்க்ஸ் இருக்கையை விட்டு எழ மறுத்தார். உடனே அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்தக் கொடுமைக்கு எதிராக கறுப்பின மக்களை ஒன்று திரட்டிய மார்டின் லூதர் கிங், ‘பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டத்தை’ வெற்றிகரமாக நடத்தினார். அரசு வேறு வழியின்றிப் பேருந்தில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்களுக்குத் தனி இருக்கை என்ற சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. 

மகாத்மா காந்தியின் வன்முறையற்ற போராட்டம் மார்டின் லூதர் கிங்கைப் பெரிதும் ஈர்க்கவே, அவரும் அதே அறவழியைப் பின்பற்றினார். அமெரிக்கர் மீது பகைமை பாராட்டாமல் அதே நேரம் ஆப்பிரிக்கர்களின் உரிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் என அமைதியாகப் போராடினார். ‘கறுப்பின மக்களின் காந்தி’ என்று உலகம் முழுவதும் மார்டின் லூதர் கிங் புகழ் பெற்றார். 

‘எனக்கொரு கனவு உண்டு’ என்ற தலைப்பில் மார்டின் லூதர் கிங் 1963 ஆகஸ்ட் 27ம் தேதி வாஷிங் டனில் நிகழ்த்திய உரை வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அதே ஆண்டு ‘வேலையும் சுதந்தரமும் வேண்டி வாஷிங்டனுக்குப் பேரணி’ என்ற மிகப்பெரிய பேரணிக்குத் தலைமை தாங்கினார். சமாதானத்துக்கான இவரது மகத்தான பணியைப் பாராட்டி, 1964ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தவரை, 1968 ஏப்ரல் 4 அன்று ஜேம்ஸ் ஏர்ல் ரே என்ற நிறவெறியன் சுட்டுக் கொன்றான்.

சுவாமி விவேகானந்தர்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமைச் சீடரான சுவாமி விவேகானந்தர் வேதாந்த தத்துவத்தின் செல்வாக்கு மிக்க ஆன்மிகத் தலைவர்களுள் ஒருவர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவரும் இவரே. 1863 ஜனவரி 12 அன்று விஸ்வநாத் தத்தா - புவனேஸ்வரி தேவி ஆகியோருக்கு மகனாக, கொல்கத்தாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. துறவியானதைத் தொடர்ந்து தனது பெயரை சுவாமி விவேகானந்தர் என்று மாற்றிக் கொண்டார்.  

குழந்தைப் பருவம் முதற்கொண்டே படிப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். இசை, தியானம் ஆகியவற்றில் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார். சமூகத்தில் நிலவிய சாதி, மத வேறுபாடுகளை எதிர்த்ததுடன், மூடப்பழக்க வழக்கங்களையும் கடுமையாகச் சாடினார். 1879ல் கொல்கத்தாவிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார். பின்னர் தத்துவம் பயின்றார். ‘பிரம்ம சமாஜத்தில்’ இணைந்தார். ஆனாலும் தனது தேடல்களுக்கான பதில்கள் கிடைக்கவில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து, ‘கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘ஆம், உன்னைப் பார்ப்பது போலவே தெளிவாகப் பார்த்தேன்’ என்ற பதிலிலிருந்த நேர்மையும் உண்மையும் அவரையே தனது குருவாக ஏற்றுக்கொள்ள வைத்தன. 1886ல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் காலமான பிறகு, அவரது வாரிசாகப் பரிந்துரைக்கப்பட்டார். நாடு முழுவதும் நீண்ட பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொண்டார். மன்னர்களின் அரண்மனைகளிலும் ஏழைகளின் குடிசைகளிலும் தங்கி அவர்களுடன் நெருங்கிப் பழகினார். 1892 டிசம்பர் 24ல் கன்னியாகுமரியை அடைந்தார். ஒரு பாறையின் மீதமர்ந்து தொடர்ந்து 3 நாள்கள் தியானம் செய்தார். அவர் அமர்ந்து தியானம் செய்த பாறையே இன்றைக்கு ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயருடன் புகழ் பெற்றிருக்கிறது.  

1893ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு, ‘அமெரிக்கச் சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்த சிறப்பு மிக்க வார்த்தைகள் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. இந்திய வரலாறு, சமூகம், பண்பாடு, நாகரிகம், இலக்கியம், ஆன்மிகம், தத்துவம் ஆகியவை குறித்து பல்வேறு நாடுகளில் ஆற்றிய சொற்பொழிவுகள் அற்புதமானவை!  1897ல் இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் இந்தியர்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைக்க எண்ணினார். சமூக சேவை மூலமே இது சாத்தியப்படும் என்பதை உணர்ந்து ‘ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன்’ மற்றும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்’ ஆகியவற்றை நிறுவினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருண்டு கிடந்த இந்தியாவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர், 1902 ஜூலை 4 அன்று மறைந்தார்.

மொஸார்ட்


உலகப் புகழ் பெற்ற மாபெரும் இசை மேதையான மொஸார்ட், 1756 ஜனவரி 27 அன்று அன்னமரியா- லியோபோல்ட் மொஸார்ட் தம்பதிக்கு மகனாக ஆஸ்திரியாவில் பிறந்தார். 3 வயதில் இசைக் கருவியை மீட்டுதல், 4 வயதில் இசை நூல்களைக் கற்றல், 5 வயதில் பாடல்களை இயற்றுதல் என்று குழந்தை மேதையாகத் திகழ்ந்தார் மொஸார்ட்!தனது பத்து வயதுக்குள் அனைத்து இசைக் கருவிகளையும் மீட்டும் திறன் பெற்றிருந்தார். ஐரோப்பாவில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறாத நாடே இல்லை என்னும் அளவில் புகழ் பெற்றார். போப்பாண்டவர் முன்னிலையில் நடத்திய இசை நிகழ்ச்சி இவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தது. உலகையே இசையால் மயங்க வைத்த மொஸார்ட்டின் சொந்த வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. ஆய்வுப் பணி, இசை நிகழ்ச்சி, புதிய இசை வடிவங்களைக் கண்டுபிடித்தல் என ஓய்வில்லாமல் உழைத்தார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். 1791 டிசம்பர் 5. உலகையே மகிழ்வித்துக் கொண்டிருந்த நாதம் அடங்கியது. மொஸார்டின் இசையைக் கேட்டால் அகநிலை மாறுதல், கற்பனைத் திறன் மேம்படுதல், மூளையின் பல பகுதிகள் தூண்டப்படுதல் எனப்பல கோணங்களில் ‘மொசார்ட் விளைவு’ ஆய்வுகள் நடைபெற்று வருவதே இவர் பெருமைக்குச் சான்று. 35 வயதுக்குள் 41 சிம்ஃபனிகள், 27 பியானோ நிகழ்ச்சிகள், 23 ஸ்ட்ரிங் க்வார்டெட், 7 ஓபெரா என யாராலும் கற்பனை கூட செய்ய முடியாத இசைச் சாதனைகளை நிகழ்த்தி முடித்துள்ளார் மொஸார்ட்! 

சச்சினுக்குக் கௌரவம்!


உயிரோடு இருப்பவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை, தபால்தலைகளை வெளியிடுவதில்லை ஆனால், அன்னை தெரசா உயிருடன் இருந்தபோது, 1980ல் அவருடைய தபால்தலையை வெளியிட்டது. அடுத்ததாக, சச்சின் டெண்டுல்கருக்கு அந்தக் கௌரவம் கிடைத்துள்ளது. 1989ல் இருந்த சச்சின் மற்றும் இன்றைய சச்சின் என இரண்டு விதமான புகைப்படங்களுடன் தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தபால்தலையின் விலை ரூ.20.  சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நிறைய விழாக்களில் கலந்து கொண்டு தன் அனுபவங்களையும் அறிவுரைகளையும் கூறி வருகிறார். வாழ்க்கையில் மிகப்பெரிய திட்டம் இருக்க வேண்டும். எதிர்காலம் குறித்து கனவு காண வேண்டும். அதை அடைவதற்கான முயற்சிகள் இருக்க வேண்டும். 10 வயதில், அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு ஒரு திட்டம் இருந்தது. அதுபோல நீங்களும் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்படுங்கள்" என்கிறார் லிட்டில் மாஸ்டர்.

Tuesday, January 07, 2014

தை பிறந்தால்...வழி பிறக்கும்!

அனைவருக்கும் தைத் திருநாள் வாழ்த்துகள். முதலில்... தைத்திருநாளில், பொங்கல் பண்டிகையின்போது, மதியம் 12 முதல் 1 மணி வரை அல்லது மாலை 5 முதல் 6 மணி வரை பொங்கல் வைக்க உகந்த நேரம் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

மாதப் பிறப்பு என்பதே முக்கியமான நாள். அதிலும் தை, சித்திரை, கார்த்திகை என பல மாதங்களின் முதல் நாள் மிகுந்த விசேஷமானதாகப் போற்றப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க மாதம்... தை! பிறக்கும்போதே கோலாகலமான பண்டிகையுடன் பூமி சார்ந்த விழாவாக, உயிரினங்களைப் போற்றுகிற உன்னதத் திருவிழாவாகத் துவங்குகிறது.

பொங்கலோ பொங்கல்!

உத்தராயன புண்ய காலத்தின் துவக்கமும் இன்றைக்குத்தான்! பொங்கல் திருநாள், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் என மூன்று நாள் விமரிசையாகக் கொண்டாடி வணங்கவேண்டிய அற்புதமான நாட்கள். இந்தக் கொண்டாட்டத்தில் இன்னொரு விஷயமும் அடங்கியிருக்கிறது. 'நன்றி மறப்பது நன்றன்று’ என்கிற வள்ளுவரின் சொல்லுக்கு ஏற்ப, இந்தப் பண்டிகைகள், சூரிய பகவானை வணங்குவதற்கான விழாவாகவும் மாடு- கன்றுகளுக்கு நன்றி பாராட்டும் வைபவமாகவும் கொண்டாடப்படுகிறது.


அருட்பெருஞ்ஜோதி..!

இதையடுத்து, வருகிற 17.1.14, அன்று வடலூரில் கோலாகலமாக நடைபெறும் வள்ளலார் ஜோதி தரிசனத்தை நாம் அறிவோம். ஜோதியே கடவுளின் சொரூபம், ஜோதி தரிசனத்தின் மூலமாகவே இறைவனை அடையலாம்,  என்பதையெல்லாம் உணர்த்திய வள்ளலார் சுவாமிகள் ஜோதியுடன் கலந்து ஜோதியாகவே காட்சி தந்த நன்னாள். இந்தநாளில், வள்ளலாரை நினைப்பதும், அவர் அவதரித்து ஜோதியில் ஐக்கியமான வடலூர் சென்று தரிசிப்பதும் மகா புண்ணியம்!

ஜனவரி 30-ஆம் தேதி, தை அமாவாசை, பிப்ரவரி 6-ஆம் தேதி ரத சப்தமி, 7-ஆம் தேதி தை கிருத்திகை (ஆலயத்தில்), 8-ஆம் தேதி கிருத்திகை விரதம் எனத் தை மாதத்தில், எத்தனை எத்தனை விழாக்கள்? எவ்வளவு கொண்டாட்டங்கள்?
முதலில் தை மாதப் பிறப்புக்கு, அதாவது பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகை என்று (13.1.14) கொண்டாடுகிறோம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்கிற சொல்லுக்கு ஏற்ப, நம்மிடம் உள்ள தீய எண்ணங்களைப் போக்கச் செய்து, நல்ல எண்ணங்களைக் கொண்டவராக வலம் வர வேண்டும். இதைக் குறிப்பதற்காக, நம் வீட்டில் உள்ள பழையப் பொருட்களை வெளியே எடுத்து வந்து, கொளுத்திவிட்டு, ஸ்நானம் செய்கிற வழக்கம் உண்டு!


பழையன கழிதல்!

போகி என்றால் இந்திரன் என்று அர்த்தம். எனவே, இந்திர பூஜையை பொங்கலில் இருந்து செய்வதால், முன்னதாக அதற்கு தயார் படுத்திக்கொள்வதற்காகவும் பழையன கழிதல் எனும் விழாவை வைத்திருக்கலாம். இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம்... இயற்கையை மாசுபடுத்தக்கூடியவை எது என்று பார்த்து அவற்றை விலக்கிவிடுவதே உத்தமம். இயற்கையுடன் இயைந்தவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பயன்படுத்துவதே நம் நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை. 'சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம். அதாவது சுத்தமே சிவம். எனவே, தூய்மையான மனதும், இடமுமே சிவபெருமானுக்கு உகந்தது என்பதை உணர்ந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவோம்.

பொங்கலோ பொங்கல்!

பொங்குதல் என்றாலே உள்ளிருந்து வெளிவருதல் என்று அர்த்தம். அதாவது, 'மகிழ்ச்சி பொங்குதல்’, 'பால் பொங்குதல்’ என்றும் கூறுவது நம் இயல்பு. 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற வாக்கியமானது சிறந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது.

மனிதன், பல நேரங்களில் பலவித குழப்பங்களால் சூழப்பட்டு, அவற்றிலிருந்து எப்படி வருவது எனத் தெரியாமல் தத்தளித்து, கலங்கிக் கிடக்கிறான்.  இது போன்று நாம் கஷ்டப்படுவதிலிருந்து காப்பதற்கு பலவிதமான பண்டிகைகளை, நம் இந்து சமயம் அமைத்துத் தந்திருக்கிறது. அவற்றில் மிக எளிமையானதும், மிகுந்த பயனளிப்பதும், அனைவராலும் போற்றக்கூடியதுமான பண்டிகை 'தைப்பொங்கல்’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லலாம்!

சிறு வயதில் நானும் என் சகோதரிகளும் எங்கள் தாயார் பொங்கல் வைத்து, ஆதவனை வழிபட்டு பொங்கல் பொங்குகிற சமயத்தில் 'பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!’ என்று கூவி, டமாரம் அடித்து மகிழ்ந்ததை மறக்கவே முடியாது.  வயது ஆக ஆக பழையபடி நம்மால் ஆடிப்பாடி கொண்டாட முடியவில்லை என்றாலும், இந்தப் பண்டிகைகளின் பின் இவ்வளவு பயன்கள் உள்ளதா என்பதைக் கண்டு வியந்து மகிழ்கிறேன். எவ்வளவு நல்ல காரியங்கள் நாம் செய்திருந்தால், நாம் மனிதப்பிறவி எடுத்து இது போன்ற உயர்ந்த தர்மங்களை போதிக்கும் சமயத்தில் பிறந்து, நாத்திகனாக இல்லாமல் நமது முன்னோர்கள் கொடுத்துள்ள இந்த அரிய பொக்கிஷங்களை அனுபவித்து வருகிறோம் என நெகிழ்கிறேன்.


வருடத்துக்கு 12 மாதங்கள். அதில் 10-வது மாதம் தை. இந்த மாதத்தின் பிறப்பை பொங்கல் பண்டிகை என்று நாமும், ஆந்திரம், மேற்கு வங்காளம், கேரளா, பீகார், கோவா, கர்நாடகம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்வதால் மகர சங்கராந்தி என்றும், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சூரியன் வடக்கு நோக்கிச் செல்வதால் உத்தராயன புண்யகாலம் என்றும் ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் லோஹ்ரி என்றும் பலப்பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது.

நன்றி சொல்லுவோம்!

சூரியன் - இந்த உலகின் ஆதாரம். ஆதவன் அளிக்கக்கூடிய ஆற்றலே நம்முடையதாக வெளிப்படுகிறது. அவருடைய வெப்பத்தால் உலகில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நமக்குத் தேவையான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளித்து அனைத்து ஜீவராசிகளையும் வாழ்விக்கக் கூடிய சக்தி படைத்தவரே ஆதவன். அவரின் அசைவே காலம். அவர் எந்த ராசியில் அமர்கிறாரோ அதுவே மாதமாகவும், எந்த நேரத்தில் உதிக்கிறாரோ அதுவே நாளாகவும், தன்னுடைய ஒளியினால் மற்ற கிரஹங்களுக்கும் நக்ஷத்திர கூட்டங்களுக்கும் ஒளி பெறச் செய்து, உலகை திறம்பட வழி நடத்துபவரே சூரிய பகவான்!

நன்றி குறித்து நாளெல்லாம் பேசுகிறோம். 'நன்றி கெட்ட உலகம்’ என்று புலம்புகிறோம். உண்மையில், நம் வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படை ஆற்றலை அளித்துவரும் கதிரவனுக்கு நன்றி சொல்கிறோமா என யோசியுங்கள். நம் முன்னோர்கள், தேவர்களின் காலைப்பொழுதின் முதல் மாதமான இந்த தை மாதத்தில், அதாவது சூரியன் உதிக்கக்கூடிய வேளையில், சூரியனுக்கு நன்றி சொல்வது சிறப்பானது என்று சொல்லிச் சென்றுள்ளார்கள். சூரிய நமஸ்காரம் சூரியனை குறித்த தோத்திரங்கள் சொல்வதால் தேக ஆரோக்கியம் கூடும்; மனத்துள் தெளிவு பிறக்கும்!

அதேபோல், உழவர்களுக்கும் உழவுத் தொழிலுக்குப் பயன்படும் மாடுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி செலுத்துவோம். அதனால்தான் இந்த விழாவை உழவர் திருநாள் என்று கொண்டாடுகிறோம்.

எப்படிச் செய்யவேண்டும் பொங்கல்?
பொங்கல் பானையில் அரிசி, பால், வெல்லம், திராட்சை, முந்திரி போன்றவற்றை இணைத்து, அந்தப் பானையில் பசுமஞ்சள் கிழங்கை கங்கணமாக சுற்றி, சமைத்த பொங்கலைப் பொங்கியவுடன் ஆதவனுக்கு அர்ப்பணம் செய்து, தானும் தன்  குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் பகிர்ந்து சாப்பிட்டு  பெரியோரின்  ஆசிகளைப் பெற வேண்டும். ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்த நாளை மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பொருள் அமைந்ததாகவும் ஆக்க நமது முன்னோர்கள் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நாளில் முன்னோர்களைக் குறித்து தர்ப்பணம் செய்வதும் சிறந்த பலனை அளிக்கும். இந்நாளில் புண்ணிய நதிகளிலோ, கடலிலோ நாம், ஸ்நானம் செய்து தான தர்மங்களைச் செய்வதால், சிறந்த பலன்களை பெறலாம் என்கின்றன நீதி நூல்கள்.

மாட்டுப்பொங்கல்

'மாதர: ஸர்வ பூதானாம்
காவ: ஸர்வ சுக்ப்ரதா:’ என்று உலகுக்கே தாயாகவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இன்பத்தை அளிக்கக்கூடியதுமான கோமாதா என்று போற்றக்கூடிய பசுவையும், காளைகளையும் சிறப்பாக வழிபட சிறந்த நாள்! அருகில் உள்ள பசு மடங்களுக்குச் சென்று பசுவை வழிபடுவதால், அளவற்ற இன்பம், சகல காரியங்களிலும் நன்மை, அழியாச் செல்வம் எனப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

இன்று காலை நீராடுவதற்கு முன், பெண்கள் அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு (இருந்தால்) சென்று, அவர்களின் சகோதரர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று பச்சை சாதம் (வெற்றிலை பிழித்து கலந்தது), வெள்ளை சாதம், சிவப்பு சாதம் (குங்குமம் கலந்தது) மஞ்சள் சாதம்
(மஞ்சள் கலந்தது, சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஐந்து விதமான அன்ன வகைகளை பிடிப்பிடியாக இலையில் வைத்துக் கடவுளை வேண்டுவது வழக்கம். இதுபோன்று சகோதரர்களும் தங்கள் சகோதரிகளுக்குத் தங்களால் இயன்ற பரிசுப் பொருட்களை அளித்து மகிழ்வது இருவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்!


காணும் பொங்கல்!

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அலைபேசியில் பேசி, தகவலைப் பரிமாறிக்கொள்ளும் மோசமான சூழல் இது!  எனினும், இது போன்றவற்றிலிருந்து நாம் விடுபட்டு அன்பையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொள்ளுதல் மிகவும் முக்கியம். அதற்கான நாள்தான் இன்று! இந்த நாளில் குடும்பத்தார் அவர்களின் நெருங்கிய உறவினருடனோ, நண்பர்களுடனோ சுற்றுலா மையங்களுக்குச் சென்று, பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும்!

தைப்பூசம்

தேவர்களின் குருவான பிரஹஸ்பதியின் பூச நட்சத்திரத்தில் குருவை வழிபடுவது, நம் வாழ்வைத் தெளிவாக்கும். சிவாகமங்களில்,  ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய நட்சத்திரத்தை 'மாஸபம்’ என்பார்கள். தை மாதத்தின் பூச நட்சத்திரம் அல்லது பௌர்ணமி திதியைக் கொண்டு, ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வது நாட்டு மக்களுக்கும் நாட்டை ஆள்பவர்களுக்கும் உயர்வைக் கொடுக்கும் என ஆகமங்கள் தெரிவிக்கின்றன. இன்று சிவபெருமான், முருகக் கடவுள் மற்றும் பிரதான தெய்வமாக வழிபடக்கூடிய அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தல் சிறப்பு. 'புஷ்ய மாஸே து புஷ்யர்க்ஷே குர்யாத் க்ஷேளத்ராபிஷேசனம்’ (காமிகாகமம்) என்று தேன் அபிஷேகம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது.


சூல விரதம்!

சைவர்கள் சிறப்பாகப் போற்றும் எட்டு மகா விரதங்களில் சூல விரதமும் ஒன்று. மார்கழி திருவாதிரையில் தனித்து ஆடுகிற சிவனார், தைப் பூசத்தில், உமையவளுடன் திருநடனம் புரிந்தார். எனவே உமையருபாகனைத் துதிப்பது ரொம்பவே விசேஷம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்! இந்த விரத மகிமைகளை வீரபத்திரர், பாணுகம்பனுக்கு உபதேசிப்பதாக ஸ்கந்த புராணம் தெரிவிக்கிறது.

அகத்திய மகரிஷி தந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைக¬ளை காவடி போன்று தூக்கி வந்த இடும்பன் என்ற அசுரனை ஆட்கொண்ட கலியுகக் கடவுள் கந்தப்பெருமான்! கவலைகள் மலையைப் போன்று இருப்பதால், அவற்றை எம்மிடம் அளித்து நீ கவலையற்று இரு என்று உணர்த்தி எந்த அடியை தொழுதால் இவ்வுலகம் காப்பாற்றப்படுகிறதோ அவருக்கு பக்தர்கள் காவடியை சமர்ப்பித்து பிறவிப் பிணியிலிருந்து விடுபடச் சிறந்த நாள்!

இரண்யவர்மன் எனும் அரசன் தில்லையில் ஆனந்த நடராஜருக்கு அர்ப்பணித்த திருப்பணிகளால் மகிழ்ந்த கூத்தபிரான், அந்த மன்னனுக்கு ஆனந்தக் காட்சி அளித்த நாளும் இதுவே!  

பொதினி என்று போற்றப்படும் பழநியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதண்டாயுதபாணியை வழிபட்டு கஷ்டங்கள் நீங்கி, இன்பம் பெற காவடிகளைச் சமர்ப்பிப்பது வாழ்வில் வளம் சேர்க்கும்!  

தை அமாவாசை
இந்தச் சரீரம், கடவுளின் அருளினால், நம் தாய் தந்தையர் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பரிசு!  தாய் தந்தையர் இந்தப் புவியில் இருக்கும்போது, அவர்களை போஷிக்க வேண்டும். அவர்கள் மேலுலகம் சென்றபின், அவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்வதே நம் தலையாயக் கடமை!

'அமாயா: பிதரப் ப்ரோக்த: திதீனாம் அதிபா: க்ரமாத்’ என்று சொல்லியபடி, அமாவாசை நாளில், நம் முன்னோர்களை வழிபடுவது மிக மிக அவசியம்! 'நன்றி மறவேல்’ எனும் வாக்கின்படி, நாம் இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்தவர்களைத் திருப்தி செய்தால்தான், நம்மால் இந்த உலகுக்கு வந்தவர்களைச் செவ்வனே காக்க முடியும்! நம் முன்னோர்களே நம் சந்ததியைக் காத்தருள்வார்கள்.  

முன்னோர் வழிபாடு என்பதை, வருடத்தில் அனைத்து மாதங்களிலும் செய்ய முடியாதவர்கள் கூட, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய முக்கிய நாட்களில் மறக்காமல் செய்தால், நம் கடமையைச் செய்தால், நாமும் நம் குடும்பமும் நிறைவுடன் வாழ்வோம் என்பது உறுதி!

ரத ஸப்தமி!

தை மாதம் வளர்பிறை ஸப்தமி திதியன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. மிக எளிமையான, அதேநேரம் நம் சந்ததியை வளமாக்கும் விசேஷமும்கூட!
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விடியற்காலையில் எழுந்து கிழக்கு நோக்கி நின்றபடி, ஏழு எருக்க இலைகள் அதனுடன் அட்சதை, பசுஞ்சாணி,
மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை நோக்கி, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் போக்கச் செய்யும்படி பிரார்த்திக்க வேண்டும். இந்த நாளன்று பகலவனின் தேரானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்புவதால் மிகுந்த ஆற்றல் படைத்தது என்பது ஐதீகம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்!
எனும் துதியை ஸப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை!

பீஷ்மாஷ்டமி!

தன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே பீஷ்மாஷ்டமி எனும் நன்னாள்!

ஓம் பீஷ்மாய நம: என்று மூன்று முறை, தண்ணீரை கைகளினால் அர்க்கியமாக விடவேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை!

எப்படி தொலைபேசியில் ஒருவரின் எண்ணை டயல் செய்தால் அவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவருடன் பேச முடிகிறதோ, அதுபோன்று நம் முன்னோர்கள், இந்த நாட்களில் இவரிவர் குறித்து இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி அந்தந்தக் கிரியைகள் தனிச் சிறப்பு கொண்டவை என்பதை  அறிந்து, உணர்ந்து, புரிந்து பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்தால்... தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நீங்களும் உறுதிபடச் சொல்வீர்கள்!

ஸ்ரீசண்முக சிவாச்சார்யர்