Search This Blog

Sunday, August 31, 2014

ஹென்றி ஃபோர்டு

எல்லோருக்குமே காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இவருக்கோ எல்லோரும் காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை! அப்படிப்பட்ட ஆசைதான் இவர் மிகப் பெரிய கார் நிறுவனத்தை உருவாக்க காரணமாக இருந்தது. ஹென்றி ஃபோர்டு எனும் அந்த மனிதர் இந்தச் சாதனையை செய்வதற்குமுன், தாண்டிவந்த தடைகள் பல ஆயிரம்.

ஹென்றி ஃபோர்டு 1863-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் பிறந்தார். சிறுவயதில் இவரது தந்தை, பண்ணையில் வேலைக்குச் செல்வது பிடிக்காமல், இவரே ஒரு மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சென்றார். மோட்டார் கம்பெனியில் வேலை பார்க்க உனக்குத் தகுதியில்லை என ஃபோர்டை சிறிது காலத்திலேயே அந்த நிர்வாகம் வெளியேற்றியது. அடுத்தடுத்த வாய்ப்புகளும் இவருக்குத் தோல்வியைத்தான் கொடுத்தன. ஆனால், ஃபோர்டுக்கு இயந்திரங்கள் மீதும், மோட்டார்கள் மீதும் இருந்த காதல் குறையவே இல்லை.


ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பை பார்த்தார். இதனை ஏன் வாகனங்களில் பொருத்தக்கூடாது என்று யோசித்தார். உதிரிபாகங்கள், பழைய உலோகங்களையும் கொண்டு அவரது வீட்டிலேயே ஒரு வாகனத்தை வடிவமைத்தார். இந்த வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க, கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து வீட்டின் சுவற்றை இடித்துத் தள்ளி வேகமாகத் தன் வாகனத்தை இயக்கினார்.

எளியவர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் டி மாடல் காரை தயாரித்தார். அமெரிக்காவில் குறைந்த விலையில் கார்களை விற்று, கார் இல்லாதே அமெரிக்கரே இல்லை என்ற நிலையை உருவாக்க முதல் முயற்சியை வெற்றிகரமாக எடுத்தார்.

கார் தயாரிப்பில் அடுத்தடுத்து பலபேர் சேர்ந்து ஒவ்வொரு பகுதியாக இணைக்கும் அதிவேக அசெம்ப்ளி லைன் முறையின் மூலம் பல லட்சம் கார்களை உருவாக்கி சாதித்தார். இதன் மூலம் மற்ற நிறுவனங்களைவிட குறைந்த விலையில், குறைந்த நேரத்தில் கார்களை தயாரித்து அளிக்க முடிந்தது.

கோடி கோடியாக பணத்தை சேர்த் தவர், ஃபோர்டு அறக்கட்டளையை நிறுவி மக்களுக்கு உதவினார். உங்கள் கனவும் விடாமுயற்சியும் பலமாக இருந்தால் ஹென்றி ஃபோர்டு மாதிரி, நீங்களும் தடைகளைத் தாண்டி வரலாற்றில் நிலைத்து நிற்கலாம்!

மோடியின் 100 நாட்கள்!

மோடியின் தலைமையிலான அரசின் 100 நாள் செயல்பாட்டைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். ஓர் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி சரியானதொரு முடிவினை எடுக்க 100 நாட்கள் என்பது நிச்சயம் போதாது. மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி சொல்லப்படுகிற கருத்துகள் அனைத்தும் தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையிலேயே  அமைந்திருக்கிறது. விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மோடி அரசின் செயல்பாட்டை கணிப்பதே இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 

மோடி பதவியேற்றபின், கடந்த மூன்று மாத காலத்தில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்திருக்கிறது. பணவீக்கமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தொழில் துறை முக்கியஸ்தர்கள் பலரும் இனி வளர்ச்சி நிச்சயம் என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள்.  இதுநாள் வரை கிடப்பில் கிடந்த பல மசோதாக்களை சட்டமாக மாற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றன. அதிகார வர்க்கத்துக்கு முன்னுரிமை தருவதன் விளைவாக, அரசியல்வாதிகளின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. அரசு நிர்வாக மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் மோடி.
 
கடந்த 100 நாட்களில் இப்படி பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், நலிந்துகிடக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த  இவை மட்டுமே போதாது. நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த தெளிவான திட்டம் எதையும் இந்த அரசு இதுவரை முன்வைக்கவில்லை. உள்கட்டமைப்புத் துறையில் குறைந்தபட்சமாக செய்துமுடிக்கப்பட வேண்டிய வேலைகள்கூட ஆரம்பித்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. விவசாயத் துறை யில் உற்பத்தி பெருக்குவதாகட்டும், தொழில் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகட்டும், அடுத்த ஓராண்டு காலத்திலாவது பெரிய மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. என்றாலும் இனிவரும் நாட்களிலும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் இப்படியே இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகத்தினால் சீர்குலைந்துபோன பொருளாதாரத்தை சீர்செய்துவிட்டுதான் மீண்டும் வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் இந்த அரசாங்கத்துக்கு இருப்பதை மறுக்க முடியாது.

நாட்டை நிச்சயம் முன்னேற்றுவார் என்கிற மக்களின் நம்பிக்கையை மோடி இன்னும் இழந்துவிடவில்லை. ஓர் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையிலேதான் நடக்கிறது என்று கூறும் மோடி, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாற வெகுகாலமாகாது என்பதை உணரும் நேரமிது!  

சாம்சங் கேலக்ஸி ஆல்பா!

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் போனான     ‘ஐபோன் 6’-ஐ  வரும் செப்டம்பர் முதல் வாரம் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிைலயில் ஆப்பிளுக்கு கடும் போட்டியைத் தந்துவரும் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான ‘சாம்சங் கேலக்ஸி ஆல்பா'வை (Samsung Galaxy Alpha)’ வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

மெட்டாலிக் லுக்கில் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த ‘கேலக்ஸி ஆல்பா’ 4.7 இன்ச் அகலமான ‘SUPER AMOLED’ தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த ‘SUPER AMOLED’ டிஸ்ப்ளே 720x1280 பிக்சல்ஸ் (~ 312 pixels per inch) திறனைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆல்பா Octa-core processor (1.3 GHz Cortex-A7 + 1.8GHz Cortex-A15) மற்றும் Exynos 5 Octa 5430 chipset ஆகிய அதிவேக பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், 2GB ரேமை கொண்டு இயங்கும் சாம்சங் கேலக்ஸி ஆல்பாவின் இன்டர்னல் மெமரி 32GB ஆகும். இதுதவிர, ‘Mali-T628MP6’ என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் சாம்சங் கேலக்ஸி ஆல்பாவில் அடங்கும்.


பேட்டரி வசதியைப் பார்க்கும்போதும் சாம்சங் கேலக்ஸி ஆல்பா 1860mAH பேட்டரியைக் கொண்டுள்ளது. 12 மெகா பிக்ஸல் LED ப்ளாஷ் வசதியோடு வரும் பின்புற கேமராவையும் 2.1 மெகா  பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி ஆல்பா மூலம் 2160p-ல் வீடியோவை ரிக்கார்டு செய்யலாம்.

சாம்சங் கேலக்ஸி ஆல்பா ஆண்ட்ராய்டு 4.4-ல் இயங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேகமான UI ‘TouchWiz’-ம் இந்த      OS-ல் அடங்கும். இதயத் துடிப்பினை அளவெடுக்கும் ‘Heart-rate monitor’ மற்றும் ‘Finger Print Scanner’ சாம்சங் கேலக்ஸி ஆல்பாவின் சிறப்பம்சங்கள்.

LTE நெட்வொர்க்கில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஆல்பா, குறைந்த 6.7mm அடர்த்தியும் 115g எடையும் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஆல்பா சுமார் ரூ.42,000 என்கிற விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, August 30, 2014

அருள்வாக்கு பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு


‘நமஸ்கார மாஹாத்ம்யம்’ ஸவிஸ்தாரமாகச் சொல்லிவிட்டேன். இந்த ‘டாபிக்’ எதற்காக எடுத்துக் கொண்டேனென்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு, பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர் ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான் தெரிவிக்க நினைத்துப் பேசினேன்.
 
என்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய மரியாதை என்றெல்லாம் ரொம்பவும் முழக்க ஆரம்பித்த நாளாகவே விநய ஸம்பத்துக்கு ஹானி ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும் அடங்காமையிலும் கொண்டுவிட்டிருக்கிறது. Right, right என்று கிளம்பியதில் ஒரே fight ஆகியிருக்கிறது! ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இந்தப் புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை. இதை ஆகே்ஷபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும், எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா? அந்த அளவு மீறாமல் வரம்பு கட்டிப் புதுக் கொள்கைகளை அமல்படுத்தினால் எல்லாம் அதனதன் இடத்தில் சீராக இருந்து, இப்போதுள்ள ஓயாத வர்க்கப் போராட்டங்கள் ஓய்ந்து லோகத்தில் சாந்தியும் ஸௌஜன்யமும் ஐக்கியமும் ஏற்படும்.
 
எப்படி அளவுபடுத்துவது, வரம்பு கட்டுவது என்றால் ஸமூஹம் முழுவதிலும் மறுபடி விநயஸம்பத்தை விருத்தி பண்ணுவதால்தான். பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூர்ணத்வம் தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான். விநயத்தை வர வழைக்க வழி? அது வேண்டும் என்ற ‘பேஸிக்’ எண்ணத்தோடு பெரியவர்களாக இருக்கப்பட்டவர்களைத் தேடிப் போய் விழுந்து நமஸ்காரம் பண்ணுவதுதான். இந்த க்ரியையே ‘பேஸிக்’காக, பேஸ்மென்டாக அடிமட்டத்தில் இருந்ததைப் பெரிய மாளிகையாக எழுப்பிக் கொடுத்து விடும்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, August 28, 2014

கணபதியே சரணம்!

 
'கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
 
நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
 
அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில,  'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:
 
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!
 
யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!
 
சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். 

தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

தோரண கணபதியை வழிபடும்முறை:

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும்.  இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
 
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.

இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன்  விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.


 

Tuesday, August 26, 2014

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் 'கணபதி தரிசனம்’ என்ற பெயரில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளில் சில... உங்கள் பார்வைக்காக!

(விலை குறிப்பிடப்படாத சிங்க கணபதி, ஹேரம்ப கணபதி, ஏகரட்சக கணபதி, மும்முக கணபதி, சிருஷ்டி கணபதி உள்ளிட்ட 32 கணபதி சிலைகள் அடங்கியது ஒரு செட். இதன் விலை 5,71,725)

 

5)

Monday, August 25, 2014

சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா?

தினமும் சாப்பிடும் உணவு, சரிவிகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம், அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா என்று யோசிப்பது இல்லை. அவசரகதியில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்று, சமைக்கவும் சாப்பிடவும் தொடங்குகிறோம். சமையலறையில் குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம் எனச் நான் ஸ்டிக் பொருட்கள் நிறைந்துகிடக்கின்றன. மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்களை இனி அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும் என்ற நிலை.  


 

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நவீனமான பாத்திரங்களில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் என்ன, எந்த வகைப் பாத்திரங்கள் பாதுகாப்பான சமையலுக்குத் தேவை, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்?

மண் பாத்திரம் 

மண்பாத்திரங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாக, ஒரே சீராகப் பரவுகிறது. மேலும், மண்பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவி, சரியான முறையில் சமைக்க உதவுகின்றன. இதனால், அதில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறுகிறது. இதனால், சமைத்த உணவு பல மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக எண்ணெய் பயன்படுத்தத் தேவை இல்லை. உணவில் உள்ள  அமிலத்தன்மையைச் சமப்படுத்தும். உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவுகளைச் சமைக்கும் போது, தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது.  மண் பாத்திரங்களை, அவ்வப்போது கழுவி வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

இரும்புப் பாத்திரம்
பல காலமாக சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு, சமையலுக்கு ஏற்றது. இதில், சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு, நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். கொஞ்சம் இரும்புச் சத்து உணவோடு கலந்து உடலில் சேரும். ரத்தசோகையைக் குணப்படுத்தும்.  ஆனால், துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை இரும்புக் கடாயில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, துவர்ப்புச் சுவையுடன் வினை புரிந்து உணவுப்பொருள் கருப்பு நிறமாக மாறுவதுடன், சுவையும் வேறுபடும். விரைவில் கெட்டு விடவும் வாய்ப்புகள் அதிகம்.  இரும்புப் பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர, அதில் நீண்ட நேரம் உணவை வைக்கக் கூடாது. சமைத்து முடித்தவுடன் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.

வெண்கலப் பாத்திரம்
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால், உடல் சோர்வு நீங்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம். இதில் சமைத்த பொருட்கள் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது.  ஆனால் வெண்கலப் பாத்திரத்தை சரியாகக் கழுவி, வெயிலில் காய வைத்துதான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அடுத்த முறை சமைக்கும்போது களிம்புப் படலம் உண்டாகி உணவின் தன்மையே நச்சாக மாறிவிடும். இதனால்தான் வெண்கலப் பானையில் வைத்த பொங்கல், சில சமயங்களில் நிறம் மாறிவிடுவதைக் காணலாம்.

செம்புப் பாத்திரம்
செம்புப் பாத்திரத்தில் சமைத்த உணவுக்குப் பித்த நோய், கண் நோய், சூதக நோய், சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்தையும் குணமாக்கும் ஆற்றல் உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் எல்லாம் நீங்கிவிடும். 

ஈயப் பாத்திரம்
ஈயம், நம் உடலுக்கு உகந்ததல்ல. ஈயப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. சளி, இருமல் இருப்பவர்கள் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததைத் தொடர்ந்து சாப்பிட்டால், வயிறு உப்புசம் ஏற்படலாம். ஈயத்துக்குப் பதிலாக வெள்ளீயப் பாத்திரங்கள் பயன்படுத்தலாம். நாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த‌ ஈயச்சொம்பு என்பது வெள்ளீயத்தினால் செய்யப்பட்டது. இந்தக் கலவைதான், ஈயச்சொம்பில் சமைக்கும் ரசம் நல்ல மணத்துடன் இருப்பதற்குக் காரணம்.

பீங்கான் பாத்திரம்
பீங்கானும் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருப்பதுதான். பீங்கான் சமைப்பதற்கு ஏற்றது என்றாலும், பீங்கான் பாத்திரம் உயர்தரத்தில் ஆனதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காரணம், மலிவு விலை பீங்கான்கள், அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் உயர்ந்தபட்சக் கொதிநிலையில் உருவாக்கப்படுவது இல்லை. இத்தகைய மலிவு விலை பீங்கான்களை, அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் சமைத்தால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அலுமினியப் பாத்திரம்
ஒவ்வொரு முறையும் அலுமினியப் பாத்திரத்தைக் கழுவும்போது, அதில் கருப்பாக ஒரு கலவை படியும். அலுமினியம்தான் அது.  இந்தக் கலவை உணவில் கலந்து, உடலிலும் சேர்ந்து மூளையில் உள்ள நியூரான்களை அழிக்கும் ஆபத்து ஏற்படலாம். மேலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது ஆஸ்துமா, காசநோய் போன்ற சுவாசக் கோறுகளும் அல்சர் பாதிப்பும் ஏற்படலாம். அலுமினியம் ஒரு கடின உலோகமாக ((Heavy metal) இருப்பதால்,  அமிலத்தன்மை கொண்ட தக்காளி போன்ற உணவுப் பொருட்களுடன் வினைபுரிந்து, உடலுக்குள் எளிதாகச் சென்று, தசை மற்றும் சிறுநீரகங்களில் படிய ஆரம்பிக்கும். அலுமினியத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் சமையல் வேலை முடிந்தவுடன் உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடுவது நல்லது.

நான் ஸ்டிக் பாத்திரம் 

சமைக்க எளிமையானதாக இருந்தாலும், இதைச் சூடுபடுத்தும்போது வெளிவரும் 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) என்னும் நச்சுப் பொருள் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதைத் தவிர்க்க
முடியாது என்பவர்கள், அதனை மிதமான சூட்டில் சமைப்பது நல்லது. 

டாக்டர் ஆர்.எஸ்.ராமசுவாமி
சென்னை  மத்திய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் ஐ.டி ரிட்டர்ன்... கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?

மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31. இந்த தேதியை பல்வேறு காரணங் களுக்காகப் பலரும் தவறவிட்டிருப் பார்கள். அவர்கள் இனி வரிக் கணக்குத் தாக்கலை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், 2015 மார்ச் வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். அபராதம் எதுவும் கிடை யாது. இதை ஆங்கிலத்தில் காலதாமதமாக ரிட்டர்ன் தாக்கல் (Belated Return) செய்வது என்பார்கள்.

 பாதிப்புகள் என்னென்ன?

வருமான வரி எதுவும் கட்ட வேண்டும் எனில், மாதத்துக்கு 1% வட்டி கணக்கிட்டு கட்ட வேண்டும்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால் தாமதம் ஏற்படும்.


மூலதன ஆதாய இழப்பு மற்றும் வணிக இழப்பு ஏதும் இருந்தால், அதனை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

உங்கள் வரிக் கணக்கில் ஏதாவது தவறு இருந்தால், அதனை சரிசெய்து மீண்டும் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாது.

வெளிநாட்டுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில், வீட்டுக் கடன் / கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், கடந்த மூன்றாண்டுகளின் வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரத்தைக் கேட்பார்கள். எனவே, சரியான நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பது அவசியம்.

ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் வரிக் கணக்கு விவரங் களைத் தாக்கல் செய்ய வேண்டும். காரணம், இதில் ஏதாவது தவறு இருந்தால் சரிசெய்துகொள்ள வாய்ப்புக் கிடையாது.

எனவே, படிவம் 16-ல் உள்ள விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்களை மிகச் சரியாக ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவும்.


Sunday, August 24, 2014

க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகள்... எங்கேயும், எப்போதும் தீர்வு !

பென்-டிரைவ், மெமரி கார்ட், ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்து செல்வது கஷ்டமான விஷயம்தான். வங்கியில் நம் சேமிப்புக் கணக்கில் பணம் போட்டு, ஏதாவது ஒரு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கிற மாதிரி, நம் புகைப்படங்கள், வீடியோகள், ஃபைல்ஸ் போன்றவற்றை நம் ‘க்ளவுட் ஸ்டோரேஜ்’ அக்கவுன்ட்டில் சேமித்துவிட்டு, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்தக் கருவியின் மூலமும் பயன்படுத்திக்கொள்வதுதான் ‘க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகள் (Cloud Storage Services)’. சில சிறந்த ‘க்ளவுட் ஸ்டோரேஜ்’ சேவைகளை இனி பார்ப்போம்.
 
1. கூகுள் டிரைவ் (Google Drive)
ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தும்  சேவை இது. ஜிமெயில் அக்கவுன்ட்டைக் கொண்டு இயங்கும் இந்த க்ளவுட் ஸ்டோரேஜ்ஜில் 15GB வரை இலவசமாகச் சேமிக்கலாம். 100 GB அளவை பயன்படுத்த மாதத்துக்கு 1.99.


2. ட்ராப் பாக்ஸ் (Drop Box)
விண்டோஸ், ஆப்பிளின் ஐ ஓஎஸ், மேக் ஓஎஸ், கூகுளின் ஆண்ட்ராய்ட் போன்ற ஓஎஸ்களைத் தாண்டி லினக்ஸ் மற்றும் ப்ளாக்பெர்ரி ஓஎஸ்களுக்கும் சேவையைத் தரும் ஒரே க்ளவுட் ஸ்டோரேஜ் இது. இலவசமாக, 2GB வரை சேமிக்கலாம். 100GB வரை பயன்படுத்த மாதம் 6 யூரோக்கள் செலவாகும்.

3. மைக்ரோசாஃப்ட் ஒன் டிரைவ் (Microsoft One Drive)

15GB வரை இலவசமாகச் சேமிக்கலாம். மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த சேவை.

4. பாக்ஸ் (Box)

 இதில்10GB வரை இலவசமாக சேமிக்கலாம். ஆனால், ஒரு ஃபைலின் அளவு 250MB-க்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு மாதத்துக்கு 7 யூரோக்கள் கொடுத்தால், 100GB வரை சேமித்துக்கொள்ளலாம். அப்போது ஒரு ஃபைலின் அளவு 5GB வரை இருக்கலாம்.

 

Saturday, August 23, 2014

திருப்பதியில் சில அதிசயங்கள்!


திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன. அவற்றில் சில
* திருப்பதி ஆலயத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறையின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்த பாறைகளும் ஒரே விதமானது.

* ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இந்த பச்சைக் கற்பூரம் ஒரு வகையான ரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான திருவுருவச் சிலைக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் பூசுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

* எந்த கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்ட தடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலேகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் போல் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3,000 அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசம் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக நகைகளைக் கழற்றும் போது ஆபரணங்களெல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல், வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

திருப்பதி திருக்கோயில் மடப்பள்ளி (சமையல் கட்டு) மிக பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்திரான்னம், வடை முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

* ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோயில் கர்ப்பக்கிரக குலசேகரப்படியை தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசேகரப் படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப்பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையைக் கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரத்தைச் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் 2,000 ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினிலிருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரீஸ் நகரத்திலிருநது வாசனைத் திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு தங்கத்தாம்பளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவிலுள்ள ஆம்ஸ்ட்டர்ட்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம் தமாலம், கிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ. 1,000 கோடி. இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடம் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரி நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை; பாதக் கவசம் 3.75 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூபாய் 100 கோடியாகும். திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* சிவராத்திரி அன்று கே்ஷத்ரபாலிகர் என்ற உற்சவம் நடைபெறுகிறது - அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமயா ஏழுமலையானை பிரம்மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும் க்தி ஸ்வரூபமாகவும் பாடி அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக் கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமயாவும் சம காலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர். மந்திரம், சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமாவளியைப் பாடியுள்ளார்.

* தினசரி அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்ற ஐதிகம் உள்ளது.

* ஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளியமரம்.

* எந்த சாத்விக சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் இரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுத பாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம்முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று அழைக்கப்பட்டார்.

1781-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33வது பிரிவைச் சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயமடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானப் பிரார்த்தித்து இருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடனைச் செலுத்தியிருக்கிறார்.

*ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ கர்னல் ஜியோ ஸ்டிரெட்டின் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

* திருப்பதி அலர்மேலுமங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது - செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால் இதை நெய்யும் போது மூன்று வேளையும் குளிப்பார்கள். அவர்கள் மது, புலால் உண்ணமாட்டார்கள் வெள்ளிக் கிழமை அபிஷேகத்திற்கு பரிமள அறையில் வியாழன் இரவு அரைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திற்குச் சேர்க்கப்படுகிறது. வெளி நாடுகளிலிருந்து வாசனைத் திரவியங்களை பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ. 50,00 மதிப்புள்ள வாசனைத் திரவியங்கள் வருகின்றன.

* ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இருகைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்தில் விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ‘வேங்கடமெனப் பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம்பெறும். சாத்து முறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழு மலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கிபி. 1764ல் நிஜாம் ஒருவனது தலைமையில் வந்த முஸ்லிம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

* திருவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த பூமாலைகள் திருப்பதிக்குக் கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்குச் சாத்தப்படுகிறது.அருள்வாக்கு - நிலைத்த ஆனந்தம் எது?

மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன, சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது? எல்லாவற்றிலும் பெரிய ஞானம், நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். 
மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா? யோசித்துப் பார்த்தால் பரம தாத்பரியமானது தெரிவது, இந்த ஞானம், ஆனந்தம், நாம் என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டு கொள்வோம்.வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட நம்முடையது என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும் போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்தச் சம்பந்தம் போய்விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது. உதாரணம், சொல்கிறேன். ஒருவனுக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வயல் என்னுடையது என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவனுக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவனுக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவாய் செய்கிறது. அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. எனது என்ற சம்பந்தம் இருந்தமட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Tuesday, August 19, 2014

இறைவனின் நாடகமும் மனிதரின் நாடகமும்!


லோகம் முழுக்க ஒரு நாடகம்; பகவான் கபட நாடக சூத்திரதாரி என்று மகான்கள் சொல்கிறார்கள். சர்வ தேசத்திலும் மகாகீர்த்தி வாய்ந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். அவர்கூட ஓர் இடத்தில், ‘லோகம் முழுதுமே ஒரு நாடக மேடைதான்; எல்லா ஸ்த்ரீ - புருஷர்களும் அதிலே வரும் நடிகர்கள்தான்’ என்று சொல்கிறார்.

ஸ்வாமி நடத்துகிற இந்தப் பெரிய நாடகத்தில் மநுஷ்யனும் ‘நாடகம்’ என்று ஒரு கலையை உண்டாக்கியிருக்கிறான். அநாதி காலமாக இலக்கியத்தில் இது ஒரு முக்கியமான அங்கமாக இருந்து வந்திருக்கிறது. வேதங்களிலே ஆங்காங்கே சம்பாஷணை ரூபத்தில் இரண்டு பேர் பேசிக் கொள்கிற மாதிரியான மந்திரங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்காரர்கள் இதுதான் நாடகக் கலையின் தோற்றுவாய் (Origin) என்று சொல்கிறார்கள். தமிழிலும் இயல், இசை, நாடகம் என்று சொல்கிறார்கள். ‘கத்யம்’ (Prose) என்பதை ‘இயல்’, ‘பத்யம்’(Poetry) என்பதை ‘இசை’ என்று சொல்லி, ‘நாடகம்’ என்பதற்கு மட்டும் அதே வார்த்தையையே தமிழிலும் வைத்துக் கொண்டிருக்கிறோம். ‘கூத்து’ என்பதே நாடகத்திற்கான தமிழ் வார்த்தை.

ஸம்ஸ்கிருதத்தில் கவி சிரேஷ்டர்கள் என்று தலை மேல் வைத்துக் கொண்டு கொண்டாடக்கூடிய காளிதாஸன், பவபூதி காலத்திலிருந்து நாடக இலக்கியம் மகோன்னதமாக வளர்ந்திருக்கிறது. காளிதாஸன், பவபூதி இருவருமே கவிகள் (Poets) என்பதைவிடப் பெரிய நாடகாசிரியர்களாக ( Dramatist) இருந்திருக்கிறார்கள். இன்னும் பாஸன், விசாகதத்தன் முதலான பல பேரும் நாடகாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


கேள்விக்குறியாகும் தோனி தலைமை!

 
2012-ல் நடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்துக்கு முன் இரண்டுக்கு ஒன்று என்ற நிலையில் இங்கிலாந்து முன்னணியில் இருந்தது. இப்போது இங்கிலாந்தில் நடந்துவரும் தொடரிலும் அதே நிலைதான். ஒரே வித்தியாசம் 2012 தொடரில் பல இங்கிலாந்து வீரர்கள் அபாரமாக ஆடினர். இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் அதே அபாரத்தை மோசமாக விளையாடுவதில் காட்டி இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
 
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என்று ஊர் ஊராய் சென்றடைந்த தோல்விகளும், கை நழுவிப்போன, ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டங்களும் தோனியின் அணித் தலைமையை கேள்விக்குட்படுத்தின. இந்தத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தை லார்ட்ஸில் இந்தியா வென்றபோது, அணியின் ஒருங்கிணைப்பிலும், தோனியின் தலைமையிலும் நல்லதொரு மாற்றம் நிகழ்ந்திருப்பதா ஒருவார காலத்துக்கு அனைத்து ஊடகங்களும் முழங்கித் தள்ளின.
 
லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து யுகங்கள் ஆகிவிட்டது போன்ற மாயத்தோற்றத்தை அடுத்த இரண்டு ஆட்டங்களும் ஏற்படுத்தியுள்ளன. லார்ட்ஸ் ஆட்டத்தில் தென்பட்ட உத்வேகமும், தோனியின் அதிரடி அணுகுமுறையும் தெரியாமல் நிகழ்ந்த விபத்தென அடுத்த ஆட்டங்கள் எண்ண வைக்கின்றன.
 
சௌரவ் கங்குலி தலைமை ஏற்பதற்கு முன் வெளிநாட்டுத் தொடர்களை ஆரம்பிப்பதற்கு முன்பே இந்தியா தோற்றுவிடும். தொடர் போனாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தனிமனித சாகஸங்கள் நிகழ்த்திக் கொண்டால் போதும் என்ற எண்ணத்திலேயே மொத்த அணியும் இயங்கும். தோனியின் தலைமை மெல்லமெல்ல அந்த நிலைக்கு இந்திய அணியைத் தள்ளியிருக்கிறது.இரண்டாவது டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் அரை மணிநேரத்தில் தாமாகவே களமிழந்ததைப் பார்த்த தோனி, அடுத்த ஆட்டங்களில் வந்து நின்றால் போதும் என்று எண்ணியிருப்பார் போலும். மூன்றாவது டெஸ்டில் முதல் நாளில் காலையில் விக்கெட்டுகள் விழாதபோது, முதல் இடைவேளைக்குப் பிறகு டிராவுக்கு விளையாடினால் போதும் என்றே தோனியின் தலைமை அமைந்திருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. இங்கிலாந்து வீரரா பார்த்து ஆட்டமிழக்கும் வரை தோனி தன் பௌலர களை தட்டாமாலை சுற்றி ஓவருக்கு ஒருமுறை மனம் போன போக்கில் மாற்றியது ஒருவகையில் அவருடைய சுவாரஸியத்தைக் காட்டியது.
 
நான்காவது ஆட்டத்தில் 200-க்கு குறைவாக ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்த இங்கிலாந்தை மேலும் அதிரடியா தாக்காமல் இருந்த தோனி தற்காப்பான அணுகுமுறை கொண்டவராய் என்று பார்த்தால் அதுவும் இல்லை. மூன்றாம் நாளைத் தாக்குப்பிடித்தால் அடுத்த நாள் வருணபகவான் கிருபை நிச்சயம் உண்டு என்ற நிலையிலும் அணியின் நலனைவிட மோயின் அலியை அடித்து துவம்சம் செய்வதே முக்கியம் என்று ஆட்டத்தை இழந்தார். இந்த இரண்டுங்கெட்டான் நிலையே வெளிநாட்டில் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம்.
 
அணித் தலைமை என்பது பெரும் அழுத்தம் தரக்கூடிய ஒன்று தான். அதனுடன் கூட விக்கெட் கீப்பிங்கும் சீராகச் செய்ய முடியாதபட்சத்தில், மெய்க்குல்லம், சங்ககாரா போல கீப்பிங்கை யாவது வேறொருவருக்கு விட்டுக்கொடுக்கலாம் தோனி.  ஸ்டம்புக்குப் பின்னால் நின்றாலொழிய நான் ஒரு மோசமான ஃபீல்டர் என்று கூறிக் கொள்வதில் உண்மை இருக்கலாம். அதனால் அணிக்கு எந்தப் பயனும் இல்லை. முதல் ஸ்லிப்புக்கும் கீப்பருக்கும் இடையே செல்லும் பந்தை விக்கெட் கீப்பர்தான் பிடிக்க முயல வேண்டும். இந்தத் தொடரில் அத்தகைய கேடுகளை தோனி வேடிக்கைதான் பார்க்கிறார். 
 
சுலபமான ஸ்டம்பிங்குகளை தவறவிட்டுள்ளார். தன்னுடைய மோசமான ஃபார்மின் பிரதிபலிப்பாகவே ஜடேஜாவை லெக் ஸ்டம்புக்கு வெளியில் போடச் சொல்லுதல், அஸ்வினுக்கு லாங் ஆன் ஃபீல்டரை வைத்து களம் அமைத்துக் கொடுத்தல் போன்ற நெகட்டிவ் சூழல்களில் அணியைத் தள்ளுகிறாரோ என்று தோன்றுகிறது.அறையில் தீட்டிய திட்டங்கள் செயலாக்கம் பெறும்போது கேப்டனுக்கு அதிகம் வேலையில்லை. அந்தத் திட்டங்கள் தவறாகும்போது அணித் தலைவரின் பங்கு அவசியமா கிறது. இந்தத் தொடரைப் பொறுத்தமட்டில், அணித் தேர்விலோ, ஃபீல்டிங் களம் அமைப்பிலோ, பௌலிங் மாற்றங்களிலோ தோனியின் சமயோசிதம் சற்றும் வெளிப்படவில்லை. எதிரணியின் தவறுகளுக்குக் காத்திருத்தல் மட்டுமே தன் திட்டம் என்பது போல செயல்பட்டு வருவது கவலைக்குரியது. ஒருநாள் தொடர்களில் கடைசி நிமிட சாகஸங்களும், ஐ.பி.எல்.லில் வெளிநாட்டு வீரர்களின் ஆள்பலமும், உள்ளூரில் முட்டிக்குமேல் எழும்பாத ஆடுகளங்களும் தோனியின் தலைமையை பிரம்மாண்டமாகக் காட்டக்கூடும். உண்மையான உரைகல்லான டெஸ்ட் கிரிக்கெட் டில் இந்தியாவின் எந்த அணித் தலைவரை விடவும் அதிகமாக வெளிநாட்டில் தோற்றவர் என்பது பெரும் கறை. இதை தோனி குறைந்த பட்சம் ஆமோதிக்கவாவது செய்வாரா? அடுத்த கேப்டன் என்று கட்டியம் கூறப்பட்ட விராத் கோலி சுமாராகவாவது இந்தத் தொடரில் ஆடியிருந்தால் இந்நேரம் தோனியின் தலைமையை மாற்ற வேண்டி கூச்சல்கள் வானைப் பிளந்திருக்கும். 2012-ஐ போலவே இப்போதும் சரியான மாற்று இல்லாத ஒரே காரணத்தினால் தோனியின் தலைமை இன்னும் சில காலம் தொடரக்கூடும். தோனியின் இடம் கிட்டத் தட்ட நிரந்தரம் ஆகிவிட்ட நிலையில் அவருடைய ‘சித்தம்போக்கு சிவன் போக்கு’ அணுகுமுறை மாற அவரே ஏதாவது செய்தால்தான் உண்டு.
 
லலிதாராம்
 
 

Monday, August 18, 2014

நோக்கியா... சாம்சங்... மைக்ரோமேக்ஸ்...

செல்போன்கள் நம் நாட்டில் நுழைந்த காலத்தில், நோக்கியா நிறுவனம் தயாரித்த செல்போன்கள்தான் முதலிடத்தில் இருந்தது. அதிக எடையுள்ள கீ-பேடு உள்ள செல்போன் பயன்படுத்திய திலிருந்து மாறி, இன்று ஸ்லிம்-டச் ஸ்கிரீன் செல்போன்களுக்கு நம் வாடிக்கையாளர்கள் மாறிவிட்டார்கள்.

டிசைன், சைஸ், துல்லியமான கேமரா, டபுள் சிம்/டிரிபிள் சிம் என பல்வேறு வசதிகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு தருவதால், புதிய செல்போன் நிறுவனங்கள் பழைய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பந்தயத்தில் முன்னணியில் நிற்கின்றன. நோக்கியா, சாம்சங், மைக்ரோமேக்ஸ் என போட்டியில் மல்லுக்கட்டி நிற்கும் இந்த நிறுவனங்கள் எப்படி தங்களை நம் நாட்டில் நிலைப்படுத்திக் கொண்டன, எப்படி மாறி முதலிடத்தைப் பிடித்தன?
 
‘இன்று செல்போன் என்பது அனைவருக்கும் அத்தியாவசியம் தேவைப்படும் பொருட்களில் ஒன்றாகி விட்டது. அதிலும் நாம் எந்தத் தொழில் நுட்பம் உள்ள செல்போன் வைத்திருக் கிறோம் என்ற அளவுக்கு மாறிவிட்டது இன்றைய தொழில்நுட்ப செல்போன் உலகம். செல்போன் உலகில் முதலிடம் என்பது நிரந்தரமற்றது. புதுமைகளும், வித்தியாசங்களும் அதிவேகமாக மாறிவரும் துறை என்பதால் இதில் முதலிடம் என்பது கைமாறிக் கொண்டேதான் இருக்கும்.
 
 
இந்திய செல்போன் மார்க்கெட்  அதிகம் நம்பியிருப்பது நடுத்தர வருமானம் கொண்ட நபர்களைத்தான். அதிக விலை கொடுத்து வாங்கும் ஆப்பிள் போன்களை மிகச் சிலர்தான் விரும்புகிறார்கள். 

இந்தியர்கள் செல்போன் பயன் பாட்டைத் துவங்கிய காலத்திலிருந்து நீண்ட காலத்துக்கு விற்பனையில் முன்னணி வகித்த நிறுவனம் நோக்கியாதான். காரணம், அறிமுகத்தில் நல்ல தரத்திலும் மக்களுக்குப் புரியும்படியான யூசர் ஃப்ரெண்ட்லி செல்போன்களை அறிமுகப்படுத்தியது நோக்கியாதான். ஏறக்குறைய அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்திய செல்போன் நிறுவனம் என்றே சொல்லலாம். கேமரா, மியூசிக் என அனைத்து வசதிகளோடும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய முதல் செல்போனாகவும் நோக்கியா இருந்தது.ஆனால், தொழில்நுட்பம் என்கிற விஷயத்தில் நோக்கியா நிறுவனம் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இதேசமயத்தில் தான் மற்ற செல்போன் நிறுவனங்களும் இந்திய செல்போன் மார்க்கெட்டை நோக்கி படையெடுக்கத் துவங்கின. வெளிநாடுகளில் மட்டுமே இருந்த தொழில்நுட்பமாகக் கருதப்பட்ட தொடுதிரை செல்போன்கள் எனப்படும் டச் ஸ்கிரீன் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகத் தொடங்கின. ஏற்கெனவே சிறிய அளவில் சாதாரணக் கீ-பேடு போன்களை விற்பனை செய்துவரும் பிரிவில் இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனை கொண்டு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.
டச் ஸ்கிரீன் செல்போனிலும், இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனிலும் கால்பதிக் காமல் இருந்தது நோக்கியா. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சாம்சங் இந்தப் பிரிவுகளில் தன்னை நிலைபடுத்திக் கொண்டது. புதிய தொழில்நுட்பம், புதிய செயல்பாட்டு அமைப்பு என்ற அடிப்படையில் இந்தியர்களின் ஸ்மார்ட்போன் மனநிலையைப் புரிந்துகொண்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டது சாம்சங். நோக்கியா தொழில்நுட்பத்தில் தவறவிட்ட இடத்தைப் புதிய தொழில்நுட்பத்தால் பிடித்தது சாம்சங்!

 

பழைய சிம்பியான் (SYMBIAN) ஓஎஸ்களைப் பயன்படுத்தி வந்தவர் களுக்குத் தெரிந்திருந்த அடுத்தத் தொழில்நுட்பமாக ஐஓஎஸ் (iOS) தான் இருந்தது. அது அனைவராலும் பயன்படுத்த முடியாத விலை அதிகமுள்ள ஆப்பிள் போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்ட்ராய்டு ஓஏஸ்களுடன் சாம்சங் டச் ஸ்கிரீன் மொபைலை அறிமுகப்படுத்தி விற்பனையில் நோக்கியாவை முந்தியது.சாம்சங் நல்ல தொழில்நுட்பத்தை வழங்கினாலும் சற்று விலை அதிகமுள்ள செல்போனாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நேரத்தில்தான் சீனாவின் செல்போன் நிறுவனங்களும், இந்திய செல்போன் நிறுவனங்களும் வரத் தொடங்கின. குறைந்த விலையில் செல்போன்களை வழங்கத் துவங்கின. வருமானம் குறைவாக உள்ளவர்களாலும் செல்போன்களை வாங்க முடியும் என்ற நிலை ஆரம்பிக்கத் துவங்கியது ஆனால், சரியான தரத்தை இந்த நிறுவனங்களால் வழங்க முடியவில்லை.அப்போது குறைந்த விலையில் ஓரளவுக்கு நல்ல தரத்தில் ஒரு நிறுவனம் வந்தால் அதனால் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறமுடியும் என்ற நிலை இருந்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது மைக்ரோமேக்ஸ்.சாம்சங் தரும் அதே தொழில்நுட்பம் நோக்கியாவை போன்ற யூசர் ஃப்ரெண்ட்லி அமைப்பு, குறைந்த விலை என வாடிக்கையாளரை முழுமையாகத் திருப்திப்படுத்தும் விதத்தில் அமைந்தது மைக்ரோமேக்ஸ். அதிகமாக செல்போன் விற்பனையாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவரும் நிலையில் இந்தியர்களின் மனநிலைக்கு ஏற்ற செல்போனை விற்கும் இந்திய நிறுவனம் ஒன்று விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது ஆச்சர்யம்தான்!

அழைப்புகளுக்காவும், குறுஞ்செய்தி களுக்காவும் மட்டும் இருந்துவந்த செல்போன்கள், இன்று எங்கு செல்வது எனக் காட்டும் மேப் வசதி, இன்டர்நெட் வசதி என பல்வேறு வசதிகளை வழங்கும் ஆப்ஸ்கள் என செல்போன் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாறிவிட்ட நிலையில், இந்தப் போட்டி கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான களத்தை உருவாக்கி யுள்ளது. இதில் இந்தியர்களின் மனநிலையைப் புரிந்த நிறுவனங்கள் முதலிடத்தை நோக்கிய போட்டியில் எப்போதும் முன்னணியில் ஓடிகொண்டு தான் இருக்கும்.

சைபர்சிம்மன்

ஸ்மார்ட் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள்!

செல்போன் உலகில் நிலவும் போட்டியைச் சமாளிக்க, செல்போன் நிறுவனங்கள் புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளன. கடைகள் மூலமாக அவர்கள் சென்றடையும் வாடிக்கையாளரின் அளவு குறைவாக உள்ளது என இந்த நிறுவனங்கள் நினைப்பதால் இ-காமர்ஸ் துறையைக் கையில் எடுத்துள்ளன சில நிறுவனங்கள். குறிப்பாக, மோட்டோரோலாவின் மோட்டோ-இ, ஷியோனி எம்ஐ3 போன்ற செல்போன்கள் ஆன்லைனில் மட்டும்தான் கிடைக்கும் என்பதால் அதற்கான புக்கிங்குகள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்துவிடுகின்றன. இதெல்லாம் செயற்கையாகச் செய்யப்படும் ஹைப் (hype)தான். இதை நிஜமென்று நம்பத் தேவையில்லை என்று விமர்சனம் செய்கிற நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. ஆக, வாடிக்கையாளர்கள் உஷாராக இருப்பது அவசியம்!

தொடரும் சாம்சங், ஆப்பிளின் வீழ்ச்சி!
 
ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களின் போட்டி அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி உள்நாட்டு நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களுக்கு நிகராக அவற்றைவிட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதால் தற்போது சரிவில் உள்ள முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஆப்பிளின் சந்தை பங்களிப்பு வரும் 2015-ம் ஆண்டில் முறையே 31 மற்றும் 15 சதவிகிதமாக குறையும் என பிட்ச் தரவரிசை நிறுவனம் கணித்துள்ளது. உலக ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 5 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில் அதில் 15 சதவிகிதத்தை சீனாவின் ஷியோமி நிறுவனம் பிடித்துள்ளது. இது சாம்சங்கின் 12 சதவிகிதத்தைவிடவும் அதிகம்.


மேரி கோம்! - தடைக்கல்லும் படிக்கல்லே!

திருமணமான பெண்களை வேலைக்குப் போக அனுமதிப்பதே இன்றும் பெரும்பாடாக பல வீடுகளில் இருக்க, வீராங்கனையாக, அதுவும் குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாகி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்குகிற அளவுக்கு உயர வேண்டும் எனில், எத்தனை தடைகளைத் தாண்டி வந்திருக்க வேண்டும். அப்படி பல தடைகளைத் தாண்டி வந்தவர்தான் மேரி கோம்.
 
மணிப்பூரின் கங்காதேய் பகுதியில் மார்ச் 1, 1983ல் பிறந்தார் மேரி கோம். பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத கோம், மீண்டும் தேர்வுக்குத் தயாராவதை விரும்பவில்லை. தனது சிறுவயது இன்ஸ்பிரேஷனான டிங்கோ சிங்கின்  பாக்ஸிங் திறமை அவரை குத்துச்சண்டைக்கு இழுத்தது. 2000ல் குத்துச்சண்டை விளையாட்டில் அடியெடுத்து வைத்தார். ஆனால், கைக்குப்போடும் கிளவுஸ்கூட அவரால் வாங்க முடியாத அளவுக்கு வறுமையான சூழல். அவரிடமிருந்த ஆர்வம் கிளவுஸ் போடாத வெறும் கையாலேயே குத்துச்சண்டையை பழக வைத்தது.

 

இதெல்லாம் மேரி கோமின் குடும்பத்துக்கு தெரியாமலே நடந்தது. ஒருநாள் செய்தித்தாளில் சிரித்தபடி மேரி கோமின் புகைப்படம் வெளியாக, அதிர்ந்தார் அவரது தந்தை. ‘‘நீ குத்துச்சண்டை போடறியா... அப்புறம் எவன் உன்னை கல்யாணம் செஞ்சுக்குவான்?’’ என்று கத்த ஆரம்பித்தார்.   ஆனால், தாய் ஆதரவு அவருக்கு இருந்தது.வறுமை ஒருபக்கம், சவால்கள் இன்னொரு பக்கம் என பயிற்சியைத் தொடங்கிய கோம் சர்வதேச அங்கீகாரத்துக்காகப் போராடினார். இறுதியில் ஒலிம்பிக்கில் சண்டையிடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.  வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட மேரி கோம், இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியர் ஒருவர் குத்துச் சண்டை யில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்ற பெருமையையும் பெற்றார்.பதக்கம் வென்ற மேரி கோம், வடகிழக்குப் பகுதி பல ஆண்டு காலமாக கவனிக்கப்படாமல் இருப்பதை அமைதியாக எடுத்துச் சொன்னார். துணிந்துவிட்டால் எதுவுமே தடையில்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னதால்தான், அவரது வாழ்க்கை இன்று சினிமா படமாகிறது. மேரி கோம் ஒரு ரியல் ஹீரோயின்...
 

கேட்ஜெட் : சிக்னல் சிக்கலை தீர்க்கும் கோடென்னா!

வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில் சமீபத்தில் ‘கோடென்னா’ (goTenna) என்ற கருவி வெளியாகியுள்ளது.

சிற்றலை (Low frequency) மூலம் இயங்கும் இந்தக் கருவி எந்த செல்போன் நெட்வொர்க்கின் உதவியும் இல்லாமல் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பவல்லது. அதாவது, இந்த ‘கோடென்னா’ கருவியை இரண்டு நபர்கள் வைத்திருந்தால், அவர்கள் இருவரும் செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்திகளை பரிமாறலாம். மௌத்-ஆர்கன் போலத் தோற்ற மளிக்கும் இந்தக் கருவியின் மேல்புறத்தை ஆன்டெனா போல இழுத்துவிடலாம்.

 

நீண்ட தூரத்திலும் பயன்படுத்தும் வகையில் 151-154 MHz அலைவரிசையை இந்தக் கருவி பயன்படுத்துகிறது. 147mm உயரமும் 56.7 கிராம் எடையும் கொண்ட இந்தக் கருவி தண்ணீர் மற்றும் தூசிகள் உள்ளே செல்ல முடியாதபடி  அமைக்கப் பட்டுள்ளது.ஒரு இண்டிகேட்டர் லைட் மற்றும் ஃப்ளாஷ் மெமரியைக் கொண்டுள்ளது ‘கோடென்னா’. இந்த ஃப்ளாஷ் மெமரி பல்லாயிரக்கணக்கான மெசேஜ்களை சேமித்துக்கொள்ளும் தன்மையுடையது. லித்தியம்-ஐயான் (Lithiyum-ion) பேட்டரியைக் கொண்டுள்ள இந்தக் கருவியை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.இந்தக் கருவியை இரண்டு வெவ்வேறு இடத்தில் வைத்திருக்கும் நபர்கள் அவர்களது ஸ்மார்ட்போனில் ‘கோடென்னா’வை கட்டாயமாக இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். தற்சமயம் இந்தக் கருவி ஆப்பிளின் ‘ios’ மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களில் மட்டும்தான் கிடைக்கிறது. பரபரப்பான நகரத்தில் 2.5 கி.மீ தூரத்திலும்,  பாலைவனத்தில் 10 கி.மீ, வரையில் இந்தக் கருவியைக் கச்சிதமாகப் பயன்படுத்தலாம்.

அமெரிக்கச் சந்தையில் இரண்டு ‘கோடென்னா’ கருவிகள் $149.99 என்ற விலையில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் செல்போன் உலகத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Thursday, August 14, 2014

எபோலா... என்ன செய்ய வேண்டும்?

இன்று உலகை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்! இந்தக் கொலைகார வைரஸின் தாக்குதலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 932. 'உலகின் அனைத்து நாடுகளும் எபோலா தாக்குதல் குறித்து அதீத முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்! 

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா... என எத்தனையோ வியாதிகள் வருகின்றன. ஆனால், அவற்றைவிட எபோலா வுக்கு உலகம் கூடுதலாக அலறுகிறதே... ஏன்? ஏனெனில், எபோலா வந்தால் மரணம் நிச்சயம். அதற்கான தடுப்பு மருந்துகளோ, குணமாக்கும் மருந்துகளோ இன்னும் கண்டறியப் படவில்லை. திடீர் காய்ச்சல், கடும் அசதி, தசை வலி... எனத் தொடங்கி, கடும் வயிற்றுப்போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசிவது வரை சென்று இறுதியில் மரணம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நான்கு நாடுகளில்தான் இப்போது எபோலாவின் தாக்குதல் அதிகம். ஆகஸ்ட் முதல் வார நிலவரப்படி இந்த நாடுகளில் மொத்தம் 1,603 பேர் எபோலா பாதிப்புக்கு உள்ளாகி, அதில் 932 பேர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். 'எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை மிக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது இதுவே முதல்முறை’ என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். 1976-ம் ஆண்டு காங்கோ குடியரசு நாட்டில் எபோலா வைரஸ் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உகாண்டா, சூடான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போதைய எபோலா தாக்குதல் முழுக்க, முழுக்க உள்ளடங்கிய கிராமப்புறங்களில் நிகழ்கிறது. மருத்துவ வசதிகள் உடனுக்குடன் சென்று சேர முடியாத அந்தப் பகுதிகளில், நோயின் தீவிரமும் பரவுதலும் மிக வேகம்!

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான், 'நமது கட்டுப்பாட்டு வரம்புக்கு அப்பாற்பட்டு எபோலா பரவிக்கொண்டிருக்கிறது’ என்று பதறுகிறார். எபோலா தாக்குதலுக்குள்ளான நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 44,700 இந்தியர்கள் வசிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் மூலம் எபோலா இந்தியாவுக்குள் வரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மற்றொரு கோணத்தில், திடீரென எபோலா பயம் பரவ என்ன காரணம் என்ற ரீதியிலும் விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன. எபோலா மருந்துக்கான மார்க்கெட்டை உண்டாக்கும் முயற்சி, எபோலா வைரஸ்களை 'உயிரியல் ஆயுதமாக’ நிலைநிறுத்தும் முயற்சி என்றெல்லாம் ஏக பரபரப்புகள்.


இந்தப் பிரச்னையில் தென்னிந்தியா, அதிலும் குறிப்பாக சென்னை மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சென்னை, 'இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டினர் சிகிச்சைக்காக இங்கு வந்துசெல்கின்றனர். இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலா வருபவர்களில் 45 சதவிகிதம் பேர் சென்னைக்குத்தான் வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 150 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். இவர்கள் மூலமாக எபோலா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம். இரண்டாவது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான நர்ஸ்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறார்கள். அதில் ஆப்பிரிக்க நாடுகளும் உண்டு. இவர்கள் திருவனந்தபுரம் அல்லது சென்னை விமான நிலையத்தின் வழியேதான் ஊர் திரும்ப வேண்டும். இவர்கள் மூலமாகவும் எபோலா வரலாம். தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் நிறைய ஆப்பிரிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்பும்போது எபோலாவைச் சுமந்து வரக்கூடும். இவற்றையும், இன்னும் மற்ற சாத்தியங்களையும் யூகித்து, முன் தடுப்பு நடவடிக்கைகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டாக வேண்டும்.
நகர்மயமாதலில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கும் சென்னையில் மக்கள் நெருக்கடி மிக அதிகம். ஆக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!

எபோலா... அறிகுறிகள் என்ன?

எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது.
1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்... அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து... போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.

2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.

3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா தாக்கும்.

எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.

எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு... போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.  

எபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.  

சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர் களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்!

எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469
 

வீழ்கிறாரா விஜயகாந்த்?

''அரசியலுக்கு வர்றதா இருந்தா நிச்சயம் வருவேன். அப்படி நான் அரசியலுக்கு வந்தா சும்மா அறிக்கை விடுறது, பேசுறது... இதெல்லாம் பிடிக்காது. இறங்கின முதல் நாளே முழு வேகத்துல இறங்கணும். அப்படி இறங்கி நின்னு வேலை பார்க்கப் பிரியப்படுறவன் நான்’ - தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் தனக்குத்தானே போட்டுக்கொண்ட சபதம் இது. இதோ... அவர் கட்சி தொடங்கி 10-வது ஆண்டு தொடங்கவிருக்கிறது. சபதம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் 'கடமைக்கே’ என்று அறிக்கை மட்டுமே விட்டு கட்சி நடத்தியதால், 10-வது ஆண்டின் தொடக்கத்திலேயே கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது!
 
2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி, அரசியல் கட்சித் தலைவராக அரங்கத்துக்கு வந்தார் விஜயகாந்த். அதற்கு முந்தைய 30 ஆண்டு காலம் அரிதாரம் பூசி, பல்வேறு அவதாரங்களை தமிழ் சினிமாவில் காட்டி, வாங்கிய பேரும் புகழும் அவர் கட்சி ஆரம்பித்தபோது கை கொடுத்தது. ஏதோ ஒரு கட்சியில் இருந்து பிரிந்துவந்து இந்தக் கட்சியை விஜயகாந்த் தொடங்கவில்லை. யாரோ ஆரம்பித்து வளர்த்து எடுத்த கட்சியில் இணைந்து, அதனை அவர் தன் வசப்படுத்திவிடவும் இல்லை. அவரே ஆரம்பித்த கட்சி இது. அந்த வகையில் சுயம்புவான கட்சி இது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, கருப்பையா மூப்பனார்... ஆகிய மூவருடனும் நெருக்கம் பாராட்டியும், தமிழ், தமிழர் விவகாரங்களில் கருத்துச் சொல்லியும் தனது அடையாளங்களைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வந்தவர்தான் விஜயகாந்த். அதே சமயம் எந்தக் கட்சியிலும் சேராத ரஜினிகாந்துக்குத் தரப்பட்ட அதிகப்படியான முக்கியத்துவம், விஜயகாந்த்தை யோசிக்கவைத்தது. அதுவே தனது ரசிகர் மன்றங்களுக்கு என பிரத்யேகக் கொடியை அறிமுகப்படுத்தியாகவேண்டிய ஆசைக்கு அடித்தளம் அமைத்தது.

 

விழுப்புரத்துக்கு ஒரு திருமணம் நடத்திவைக்கப் போனார் விஜயகாந்த். சென்னையில் இருந்து விழுப்புரம் வரை சுமார் 220 இடங்களில், கொடி ஏற்றிவைக்க கம்பங்கள் தயாராக இருந்தன. '150 கி.மீ தூரத்துக்குள் இத்தனை ஆயிரம் ரசிகர்களா...’ என்று கணக்குப்போட்ட விஜயகாந்த், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்சிக்கு அச்சாரம் போட்டார். தே.மு.தி.க-வைத் தொடங்கும்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி. அதுவும் ஆட்சி முடியும் கட்டம். 2006-ல் தி.மு.க ஆட்சி மலர்ந்துவிட்டது. எந்த கருணாநிதியை தன் நெஞ்சில் தாங்கி விஜயகாந்த் வளர்ந்தாரோ, அதே கருணாநிதியைக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய நிர்பந்தம்.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழ்த் திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு திரையுலக பொன்விழாவை கடற்கரையில் நடத்திக்காட்டிய விஜயகாந்த், தன்னை சிவந்த கண்களோடு எதிர்ப்பார் என்று கருணாநிதியும் கற்பனை செய்யவில்லை. விஜயகாந்த் என்றோ, தே.மு.தி.க என்றோ குறிப்பிடாமல் 'நடிகர் கட்சி’ என்றே முரசொலியும் கருணாநிதியும் கொச்சைப்படுத்தினார்கள். எம்.ஜி.ஆரையுமே ஒரு காலகட்டம் வரை அப்படித்தானே அழைத்தார்கள்.நடிகர் கட்சி என்றபோது, 'நடிக்க முயன்று நடிப்பு வராமல் தோற்றுப்போன காகிதப் பூ கதாநாயகன் அல்ல நான்’ என்று கருணாநிதியை விமர்சித்தார் விஜயகாந்த். 'பகுதிநேர அரசியல்வாதி’ என்று அழைக்கப்பட்டார். '24 மணி நேரமும் கருணாநிதி அரசியல் செய்கிறார் என்றால், இத்தனை படங்களுக்கு எப்படி கதை-வசனம் எழுதினார்?’ என்று கேட்டார் விஜயகாந்த். ஆனாலும், விஜயகாந்தை தலைவராகவோ, தே.மு.தி.க-வை ஒரு கட்சியாகவோ மதிக்கவே இல்லை கருணாநிதியும் தி.மு.க-வும்.

தி.மு.க ஒருவரைக் கொச்சைப்படுத்துகிறது என்றால், அ.தி.மு.க அவரை அரவணைக்கும். அந்த விதியும் விஜயகாந்தைப் பொறுத்தவரை உல்ட்டா ஆனது. 2006-2009-ம் ஆண்டு காலகட்டங்களில் பெரும்பாலும் போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா முடங்கியே கிடந்தார். 'கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று விஜயகாந்த் சுற்றிச்சுழன்று வந்தார். கிராமப்புற எம்.ஜி.ஆர் ரசிகர்கள், இவர் பக்கம் லேசாகச் சாயத் தொடங்கினார்கள். இடைத்தேர்தல்களை ஜெயலலிதா புறக்கணிக்க, விஜயகாந்த் அதில் கணிசமான வாக்குகளை வாங்கி முன்னேறிக்கொண்டிருந்தார். தி.மு.க-வுக்கு மாற்று தே.மு.தி.க-வாக மாறலாம் என்ற நிலைமை நெருங்க ஆரம்பிக்கும்போதுதான், 'குடிகாரர்’ என்ற அஸ்திரத்தை அம்மா ஏவினார். 'இவருக்கு எப்படித் தெரியும்? பக்கத்துல உட்கார்ந்து ஊத்திக் கொடுத்தாரா?’ என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி, அவரது துணிச்சலின் அடையாளம். அடுத்த பதில் ஜெயலலிதாவிடம் இருந்து வரவே இல்லை. அ.தி.மு.க மேடைகளில் விஜயகாந்த் விமர்சனங்கள் ஆரம்பமாகின.பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அங்கீகரிக்கலாம்; தமிழீழத்துக்கு ராஜபக்ஷே தலை ஆட்டலாம்; ஆனால், விடுதலைச்சிறுத்தைகளை பா.ம.க. ஏற்காது. இருப்பினும் விஜயகாந்த் விஷயத்தில் தொல்.திருமாவளவனும் கோ.க.மணியும் கைகோத்து, வட மாவட்டங்களில் தே.மு.தி.க-வின் பாய்ச்சல் பொறுக்கமுடியாமல் பரிதவித்து அறிக்கைவிட்டார்கள். இப்படி எல்லாக் கட்சிகளும் சேர்ந்து எதிர்க்கும் கட்சியாக தே.மு.தி.க-வை வளர்த்தெடுத்த பெருமை விஜயகாந்த்துக்கு மட்டுமே உண்டு!''தமிழ்நாட்டில் எனது   முகத்தைப் பார்க்க லட்சோபலட்சம் மக்கள் இன்றைக்கும் ஆர்வமாக உள்ளனர் என்பதே எனக்குக் கிடைத்த மாபெரும் சொத்து. பணம், பிரியாணி பொட்டலம், பான வகைகள்... என பல வகைகளில் செலவழித்தும், மக்கள், சிலரைக் கண்டால் எரிச்சல் அடைகிறார்கள். அந்த நிலை எனக்கு இல்லை'' என்று விஜயகாந்த் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு 2009-2011 காலகட்டம் அவரை உச்சத்தில் ஏற்றியது.  

'குடிகாரர்’ என்று கொச்சைப்படுத்தப்பட்ட விஜயகாந்த்துக்காக, சட்டமன்றத் தேர்தல் சமயம் இரண்டு மாதங்கள் காத்திருந்து 41 தொகுதிகளைத் தூக்கிக்கொடுத்தார் ஜெயலலிதா. 'நடிகருக்காக’ முரசொலியில் வெளிப்படையாக அறிவிப்புகளைக் கொடுத்தார் கருணாநிதி. பகுதி நேர அரசியல்வாதியான விஜயகாந்தைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் காத்திருந்தார். 'தி.மு.க கூட்டணிக்கு வாருங்கள்’ என்று திருமாவளவன் தாம்பூலம் வைத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் சேர்ந்த பா.ஜ.க கூட்டணியை விட்டுவிடக் கூடாது என்று பா.ம.க-வும் ஓடிவந்து ஒட்டிக்கொண்டது. உதாசீனப்படுத்தியவர்கள் அனைவரும் உறவு கொண்டாடத் துடிக்கும் அளவுக்கு அரசியலில் பிரமிப்பான வளர்ச்சி அடைந்தார் விஜயகாந்த்!2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்  8.5 சதவிகித வாக்குகளைத் தனித்துப் பெற்றவர், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவிகித வாக்குகளை அள்ளினார். தி.மு.க., அ.தி.மு.க. தயவு இல்லாமல் தனிப்பட்ட ஒரு கட்சி சட்டமன்றத் தேர்தலில் 8 சதவிகித வாக்குகளைத் தாண்டுவது தே.மு.தி.க-வுக்கு மட்டுமே வசப்பட்டது.  இவை அனைத்தையும்விட, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேடி வந்தது. ஆனால், அந்த மகுடம் சூட்டப்பட்டதைவிட, 60 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க, ஐந்து முறை ஆட்சியில் இருந்த தி.மு.க பின்னுக்குத் தள்ளப்பட்டு தே.மு.தி.க முன்னுக்கு வந்திருந்தது. அதுதான் சாதனை!ஆனால், அந்தச் சாதனையைக் கொண்டாட முடியாத அளவுக்கு உடனே சரியத் தொடங்கியதே, தே.மு.தி.க எதிர்கொண்ட சிக்கல். தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி அமைத்து அடைந்த புகழையும், அ.தி.மு.க-வுடன் கைகோத்துப் பெற்ற வெற்றியையும் ஓரிரு மாதங்கள்கூட விஜயகாந்தால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. சட்டமன்றத்தில் அவர் முகத்தைப் பார்க்கவே, ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. அம்மாவுக்குப் பிடிக்காவிட்டால் ஆண்டவனையே எதிர்க்கக்கூடிய அ.தி.மு.க-வினர், இவரைப் பார்த்தாலே கூச்சல் எழுப்பியது ஜனநாயக ஒழுங்கீனம். ஆனால், அதற்காக சபைக்கே வராமல் விஜயகாந்த் 'பாய்காட்’ செய்தது ஜனநாயகத்தையும் மக்களையும் அவமானப்படுத்தியதற்குச் சமம்.எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது அரசு வாகனம், மூவர்ணக் கொடி, அவையில் முதலாவது இருக்கை... என்பன மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதும்கூட! அப்படியாவது விஜயகாந்த் இயங்கினாரா? எதிர்க்கட்சி அந்தஸ்தே இல்லாத தி.மு.க-தான், வெளியேற்றப்பட்ட தே.மு.தி.க- வினருக்கும் சேர்த்து 'ஜனநாயகம் படும்பாடு’ என்ற பேச்சுக் கச்சேரியை நடத்தியாக வேண்டும் என்றால், 'எதிர்க்கட்சி அந்தஸ்துடன்’ தே.மு.தி.க என்ற கட்சி எதற்கு? இத்தனை எம்.எல்.ஏ-க்கள் எதற்கு? ஆட்சிக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவதும் இல்லை; விஜயகாந்த் பங்கேற்பதும் இல்லை. நிருபர்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், 'என்கிட்டதான் கேட்பீங்களா? அந்தம்மாகிட்ட போயிக் கேளுங்கய்யா. நான்தான் இளிச்சவாயனா?’ என்று கேட்கிறார் விஜயகாந்த். அதாவது நானும் ஜெயலலிதாவைப்போல கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது அவரது எண்ணம்.

இதே பந்தாவை கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்களிடம் காட்டியதால்தான் ஒவ்வொருவராக கம்பி நீட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனை எம்.எல்.ஏ-க்கள் விலகி நிற்பதும், அவர்களை இத்தனை மாதங்கள் கடந்த பிறகும் விலக்காமல் வைத்திருப்பதும், விஜயகாந்த் பலவீனத்தின் உதாரணங்கள். தன்னைத் தவிர மற்றவர்கள் தேவை இல்லை என்பது அவரது மனோபாவமாக இருக்குமானால், அவரது இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகும் நாள் தூரத்தில் இல்லை!

''நான் சினிமாவில் இருந்து வந்தவன். ஒரு படம் ஜெயிக்கும், அடுத்த படம் அடிவாங்கும். அடுத்தது எதிர்பாராமல் தூக்கிவிடும். மாறி மாறி நடந்த இந்தப் போராட்டத்தில் மனம் பழகிவிட்டது'' என்று ஒரு முறை விஜயகாந்த் சொன்னார். அரசியல் என்பது தனித்தனி சினிமா அல்ல; ஒரே படம்தான். ஒவ்வொரு காட்சியிலும் எப்படி ஆக்ஷன் காட்டுகிறோம் என்பதை வைத்தே, அடுத்த காட்சிக்கு மக்களைத் தக்கவைக்க முடியும். கடந்த மூன்று ஆண்டு காலமாக விஜயகாந்த் தியேட்டரில் கூட்டம் குறைந்துகொண்டே வருகிறது.

ஆகவே, கேப்டன் உஷார்!

ப.திருமாவேலன்
 

Wednesday, August 13, 2014

சாலையோரக் கடைகளில் சாப்பிடலாமா?


இன்றைய மாணவர்கள் வகுப்பு இடைவேளைகளிலும் சரி, பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதும் சரி, சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களைக் குடிப்பதற்காகச் சாலையோரக் கடைகளை மொய்க்கின்றனர். இந்தப் பழக்கம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து தருகிறது என்று எச்சரித்துள்ளது, உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் அதிக அளவுக்கு டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு, காலரா, வாந்தி பேதி, சீதபேதி போன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சுத்தமும் சுகாதாரமும் குறைந்துள்ள சாலையோர உணவகங்களில் மக்கள் சாப்பிடுவதுதான் முக்கியக் காரணம் என்று அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.  

தள்ளு வண்டிகளில் உணவு வியாபாரம் செய்வோர் சமைத்த உணவுகளை மூடிப் பாதுகாப்பதில்லை; நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில்தான் உணவுகளை வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக மீன், இறைச்சி போன்றவற்றைப் பல துண்டுகளாக்கி, அவற்றில் மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை நிறமூட்டியைப் பூசி, எண்ணெயில் வறுப்பதற்குத் தயாராக வைத்திருப்பார்கள். அப்போதுதான் அவர்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். அதேநேரத்தில் சாலைகளில் கிளம்பும் புழுதியும், வாகனங்கள் கக்கும் புகையும், மாசு நிறைந்த காற்றும் இந்த உணவுகளில் பட்டுப் புதைந்து, நச்சுக்கிருமிகளைத் தந்துவிடும். இவற்றில் ஈக்கள் மொய்க்கும். இது தொற்றுநோய்களுக்கு வழிவிடும்.

அடுத்து இந்த உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தரம் குறைந்தவை; கலப்படம் மிகுந்தவை. உதாரணமாக, இவர்கள் சமையலுக்கு ஆகும் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, தேங்காய் எண்ணெயையும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் கலந்து இறைச்சியை வறுக்கவும் பொரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். நெய்க்குப் பதிலாக டால்டாவையும், நல்லெண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் ‘எல்.டி.எல்.’ எனும் கெட்ட கொழுப்பு அதிகம். இதன் காரணமாக சாலையோர உணவகங்களில் அடிக்கடி சாப்பிடுவோருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் இளம் வயதிலேயே ஏற்படுகிற வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது என்று ‘இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்’ ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது.

இன்னொன்று, இம்மாதிரி உணவகங்களில் சமையல் எண்ணெயைச் சிக்கனப்படுத்துவதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைத்து உணவு தயாரிப்பார்கள்; பலகாரம் சுடுவார்கள். இதில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைக்கும்போது ‘டிரான்ஸ் கொழுப்பு அமிலம்’ உற்பத்தியாகிறது. இது தான் இருக்கிற கொழுப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை நேரடியாகவும் விரைவாகவும் அடைத்து, மாரடைப்பை உடனடியாக வரவழைக்கும் ஆபத்து நிறைந்தது.  

மேலும், இனிப்புப் பண்டங்களின் சுவையைக் கூட்டவும், அவற்றைக் கவர்ச்சிகரமாகக் காட்டவும் ‘தேசிய உணவு மற்றும் மருந்துத் தரக்கட்டுப்பாட்டுத் துறை’ அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகளையும், தரமில்லாத எசன்ஸ், அஜினோமோட்டோ போன்றவற்றையும் கலப்பதுண்டு. இந்த வேதிப் பொருள்கள் கலந்த உணவைச் சாப்பிடும்போது அஜீரணம், வயிற்றுப்போக்கில் தொடங்கி, இரைப்பை, குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் உண்டு.

ஆகவே, வீட்டில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் சிற்றுண்டிகளையும் பள்ளிக்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் கு.கணேசன்

உலகில் இருப்பது ஒரே கடல்!


கடற்கரைக்குப் போவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும். தமிழ்நாட்டின் கிழக்குக் கரை ஓரமாக உள்ள எந்த ஊராக இருந்தாலும் கடற்கரைக்குப் போய் நாம் காண்பது வங்கக் கடலே. உண்மையில் இதன் பெயர் வங்காள விரிகுடா.

இந்தியாவின் மேற்குக் கரையோரமாக உள்ளது அரபுக் கடல். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்குத் தெற்கே இந்துமாக் கடல் அமைந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இந்துமாக் கடல், பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல், வட துருவப் பகுதியில் அமைந்த ஆர்டிக் கடல், தென் துருவப் பகுதியில் அண்டார்டிக் கண்டத்தை ஒட்டி அமைந்த தென் கடல் ஆகிய ஐந்து பெரிய கடல்கள் (சமுத்திரங்கள்) அமைந்துள்ளன. இவற்றைப் பெருங்கடல்கள் என்றும் சொல்வதுண்டு.

இவற்றைத் தவிர வங்கக் கடல், அரபுக் கடல், செங்கடல், பாரசீக வளைகுடா, பால்டிக் கடல், மத்திய தரைக்கடல் என நூற்றுக்கும் மேற்பட்ட கடல்கள் உள்ளன. இவை மேலே கூறப்பட்ட ஐந்து பெருங்கடல்களின் ஓரங்களில் அல்லது நடுவில் நிலப் பகுதியை ஒட்டி அமைந்தவை. தவிர, இவை சமுத்திரங்களை விடவும் சிறியவை.

சொல்லப் போனால் உலகம் முழுமைக்குமாக ஒரே கடல்தான் உள்ளது. உலகில் ஏதாவது ஒரு மூலையிலிருந்து கப்பலில் கிளம்பினால் பூமியை ஒரு தடவை சுற்றி வந்துவிட முடியும். அதாவது ஐந்து பெருங்கடல்களும் மற்றுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய கடல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையே.

கன்னியாகுமரியிலிருந்து கிளம்பினால் ஸ்ரீநகர் வரை நம்மால் காரில் செல்ல முடியும். அது மாதிரிதான் இதுவும். கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீநகர் வரை தொடர்ச்சியாக உள்ள நிலப்பகுதியை நாம் பல்வேறு மாநிலங்களாகப் பிரித்து வெவ்வேறு பெயர்களை வைத்துள்ளோம். அந்தந்த மாநிலங்களுக்குள்ளாக பல மாவட்டங்களும் தாலுகாக்களும் உள்ளன. உலகில் கடல்களையும் நாமாக இவ்விதம் பிரித்து தனித்தனிப் பெயர்களை வைத்துள்ளோம்.

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்தால் பூமியானது பெரிய உருண்டையாகத் தெரியும். உலகின் கடல்கள் எல்லாம் சேர்ந்து நீல நிறத்தில் காட்சி தரும். கடல்கள் இடையே எல்லை என்பதே இல்லை என்பது நன்கு புலப்படும்.

உலகின் நிலப் பகுதியில் மேடு பள்ளம் உண்டு. மலைகள் உண்டு. பள்ளத்தாக்கு உண்டு. ஆனால் கடலின் மேற்பரப்பில் மேடான பகுதி, பள்ளமான பகுதி என்பது கிடையாது. ஆகவேதான் கடல் மட்டம் என்ற அளவு முறையைப் பயன்படுத்துகிறோம்.

இமயமலையில் அமைந்த எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர் உயரம் என்று சொல்கிறோம். அதாவது அது கடல் மட்டத்திலிருந்து அவ்வளவு உயரம் என்று அர்த்தம். நிலப் பகுதியில் உள்ள எல்லா இடங்களும் இவ்விதம் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்று கணக்கிடப்பட்டு அவ்விதமே குறிப்பிடப்படுகின்றன.

உங்கள் ஊரில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தால் பிளாட்பாரத்தின் கோடியில் பெயர்ப் பலகை இருக்கும். அதில் அந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம் என்பது மீட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் இதைக் காணலாம்.

நீங்கள் ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டினால் ஒரு பக்கம் மேடாகவும் ஒரு பக்கம் தாழ்வாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றினால் ஒரே அளவாக இருக்கும். தண்ணீரின் மேற்பரப்பில் மேடு பள்ளம் இருக்காது. இதை நீர் மட்டம் (Water Level) என்பார்கள். வீடு கட்டும் கொத்தனார்கள் கட்டுமானப் பணியின்போது ஒரே அளவாக இருக்கிறதா என்று சோதிக்க நீர் மட்டம் பார்ப்பார்கள். இதற்கென கருவி வைத்திருப்பார்கள்.
நியாயமாகப் பார்த்தால் ஏரிகளில் காணப்படுவது போல கடல்களில் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் எப்போதும் ஒரே அளவில் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பது இல்லை. கடல்களில் காற்று காரணமாக அலைகள் வீசுகின்றன. புயல்கள் காரணமாக பெரிய அலைகள் தோன்றுகின்றன. இவை அல்லாமல் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஓரளவு ஈர்ப்பு காரணமாக கடல் நீர் பொங்கும். பின்னர் உள்வாங்கும். பூமி தனது அச்சில் சுழல்வதால் எல்லாக் கடல்களிலும் இது நிகழும். இதை வேலை ஏற்றம் என்றும் வேலை இறக்கம் என்றும் கூறுவர். (வேலை என்றால் கடல் என்று பொருள்).

இதன் விளைவாக உலகில் துறைமுகங்களில் ஒரு சமயம், அதாவது வேலையேற்றத்தின்போது கடல் நீர் வெள்ளம் போல உள்ளே பாயும். வேறு சில சமயங்களில் வேலை இறக்கத்தின்போது துறைமுகத்திலிருந்து கடல் நீர் இதேபோல வெளியே பாயும். கடல் நீர் துறைமுகத்துக்குள்ளே பாயும்போது கப்பல்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழையும். துறைமுகத்திலிருந்து கடல் நீர் வெளியே பாயும்போது அதை அனுசரித்து கப்பல்கள் துறைமுகத்திலிருந்து வெளியே செல்லும்.

வேலை ஏற்றமும் வேலை இறக்கமும் ஏற்படும் நேரங்கள் எல்லா இடங்களிலும் தினமும் மாறிக்கொண்டே இருக்கும். இதை முன்கூட்டிக் கணித்து அது பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுகள் வெளியிடப்படுகின்றன. துறைமுக நிர்வாகிகளுக்கும் கப்பல் கேப்டன்களுக்கும் இந்தக் கையேடுகள் மிக உதவியாக உள்ளன.கடல் மட்ட மாறுபாடு பற்றிக் குறிப்பிட்டோம். உலகின் கடல்களில் அபூர்வமாக ஒரு சில இடங்களில் கடல் ஒரு பக்கம் மேடாகவும் மறுபக்கம் தாழ்வாகவும் இருக்கத்தான் செய்கிறது. தென் அமெரிக்கக் கண்டமும் வடஅமெரிக்கக் கண்டமும் சேரும் இடத்தில் பனாமா என்ற நாடு உள்ளது. இங்கு மேற்குப் புறத்தில் பசிபிக் கடல் உள்ளது. கிழக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடல் உள்ளது. இந்த இடத்தில் பசிபிக் கடல் பகுதியின் நீர் மட்டமானது அட்லாண்டிக் கடலின் நீர் மட்டத்தைவிட 20 செண்டிமீட்டர் உயரமாக உள்ளது. இதற்கு பசிபிக் பகுதியில் உள்ள நீரோட்டமே காரணம்.உலகில் உள்ள பெருங்கடல்கள் பற்றி ஆரம்பத்தில் கவனித்தோம். இவற்றில் பசிபிக் கடல்தான் பரப்பளவில் மிகப் பெரியது. அட்லாண்டிக் இரண்டாவது இடத்தையும் இந்துமாக்கடல் மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.இந்தக் கடல்களின் பரப்பளவு மாறாமல் என்றுமே இந்த அளவில் நீடிக்குமா என்று கேட்கலாம். ஆனால் அது அப்படி இல்லை. அட்லாண்டிக் கடலின் பரப்பளவு ஆண்டு தோறும் மெல்ல அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பசிபிக் கடலின் பரப்பளவு மெல்லக் குறைந்து வருகிறது.

என்.ராமதுரை


எளிய பரிசோதனை - உடையாத பலூன்!


நெருப்புப் பட்டாலோ, கூர்மையான பொருள்பட்டாலோ உடைந்துவிடக்கூடியது பலூன். நெருப்பில் பட்டாலும் பலூன் உடையாமலோ, உருகாமலோ இருக்கும். எப்படி? செய்து பார்க்கலாம் வாருங்கள்.

என்ன தேவை?

பலூன்கள் - 2
மெழுகுவர்த்தி -1
தீப்பெட்டி - 1
தண்ணீர் - 1/2 கப்


எப்படிச் செய்வது?

ஒரு பலூனை ஊதி நன்றாகக் கட்டிக்கொள்ளுங்கள்.

இன்னொரு பலூனில் 1/4 கப் தண்ணீரை ஊற்றி, ஊதி, இருக்கமாகக் கட்டுங்கள்.
மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.

நீர் ஊற்றாத பலூனை மெழுகுவர்த்தி ஜுவாலைக்கு அருகில் கொண்டு செல்லுங்கள்.

இப்போது பலூன் உடைந்துவிடுகிறது.

அடுத்து, தண்ணீர் ஊற்றிய பலூனை எடுத்துக்கொள்ளுங்கள்.

மெழுகுவர்த்தியின் ஜுவாலையில் காட்டுங்கள்.

என்ன நிகழ்கிறது? பலூன் உடையவில்லை. தொடர்ந்து சிறிது நேரம் நெருப்பில் காட்டினாலும் பலூன் உடையவில்லை. ஏன்?

சாதாரண பலூனை நெருப்பில் காட்டும்போது நேரடியாக வெப்பம் பலூனைத் தாக்குவதால் பலூன் உடைந்துவிடுகிறது. அதே நேரம், தண்ணீர் இருக்கும் பலூனில் வெப்பம் நேரடியாக பலூனைத் தாக்கவில்லை. வெப்பம் தண்ணீருக்குக் கடத்தப்படுகிறது. இதனால் பலூன் உடையவில்லை. இதே போல பால் பாக்கெட்டில் தண்ணீர் விட்டும் செய்து பாருங்கள்!

Tuesday, August 12, 2014

ஃப்ளிப்கார்ட் vs அமேஸான்!

அயர்ன்பாக்ஸிலிருந்து ஃப்ரிட்ஜ் வரை எந்தப் பொருளாக இருந்தாலும், அதை வாங்கும்முன் கடை கடையாக ஏறியிறங்கி, ஒன்றுக்கு பத்துமுறை விசாரித்து வாங்குவதுதான் நம் வழக்கம். ஆனால், இன்றைக்கு இ-காமர்ஸ் வந்தபின் வீட்டில் இருந்தபடியே எல்லா பொருட்களையும் வாங்குகிற நிலைமை உருவாகிவிட்டது. இனிவரும் காலத்திலும் பலரும் இ-காமர்ஸ் மூலமே பொருட்களை வாங்க வாய்ப்பிருப்பதால், இந்தத் துறையில் இருக்கும் நிறுவனங்களிடம் பெரும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, ஃப்ளிப்கார்ட் - அமேஸான் நிறுவனங் களிடையே ஜெயிக்கப் போவது நீயா, நானா என்கிற விஷயத்தில் கடும்போட்டி நடக்கிறது.  
 
ஃப்ளிப்கார்ட் ஒரு பில்லியன் டாலர் (ரூ.6,000 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது என்ற செய்தி மக்களை சென்றடை வதற்குள், அமேஸான் 2 பில்லியன் டாலர் (ரூ.12,000 கோடி) முதலீட்டை இந்திய வர்த்தக விரிவாக்கத்துக்காக ஒதுக்கிவிட்டது. இ-காமர்ஸ் நிறுவனங்களிடையே ஏன் இந்தப் போட்டி, இந்த நிறுவனங் களில் ஏன் இத்தனை பணத்தை முதலீடு செய்கிறார்கள், இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் ?


 

‘‘இ-காமர்ஸ் நிறுவனங்களில் எக்கச்சக்கமாக நிதி திரண்டாலும், மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே தனது கடைசி காலாண்டு அறிக்கையில் நஷ்டத்தையே கண்டுள்ளன. இருந்தும் ஏன் இந்த நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிற  கேள்விக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் தரும் விளக்கங்கள் ஆச்சர்யமானவை.

ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நிறுவனங்கள் நிதி திரட்டும்போது மொத்த வாடிக்கையாளர்கள் இத்தனை லட்சம் பேர் உள்ளனர்; அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு இவ்வளவு தொகையை எங்களிடம் செலவிடு கிறார்கள்; இவர்களது செலவு விகிதம் வரும் 5 ஆண்டுகளில் இவ்வாறு மாறலாம்; அப்படி மாறினால் எங்கள் நிறுவனம் இவ்வளவு லாபம் சம்பாதிக்கும் என்று சொல்லித்தான் நிதி திரட்டுகின்றன.

இ-காமர்ஸ் நிறுவனங்களின் இந்த விளக்கத்தை முழுக்க நிராகரித்துவிடவும் முடியாது. 1999 - 2000 ஆண்டுகளில் டாட் காம் என்ற இணையதள சேவையை ஆரம்பித்த பல நிறுவனங்கள் நஷ்டத்தில் காணாமல்போயின. ஆனால், இன்று இ-காமர்ஸ் துறையும் அப்படி நொடிந்துபோகும் என்று சொல்லிவிட முடியாது.

காரணம், மக்களின் வேலை, அவர்களால் ஷாப்பிங்குக்கு என்று தனி நேரம் ஒதுக்க முடியாத சூழல் போன்ற காரணங்களால் ஆன்லைன் வர்த்தகம் முக்கிய பங்காற்றுகிறது.

ரீடெயில் நிறுவனங்களும் இதைத்தான் செய்கின்றன. அவைகளும் அடக்க விலையில் சுமார் 3-4 சதவிகித லாப வரம்பில்தான் பொருட்களை விற்கின்றன. ஆனால், அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ரீடெயில் நிறுவனங்களைவிட 20% குறைவான விலையில் விற்கின்றன.

இதனைதான் நன்றாக கவனிக்க வேண்டும். இவர்கள் திரட்டும் நிதியில் இருந்துதான் இதுபோன்ற ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றன. இவர்களது நோக்கமே தொலைநோக்கில் லாபத்தை அடைவதுதான்.

தற்போது 1 பில்லியனை திரட்டியுள்ள ஃப்ளிப்கார்ட்டுமே இந்தப் பணத்தை அப்படிதான் செலவு செய்யும். 10,000 ரூபாய்க்கு விற்கும் ஒரு பொருளை இந்த நிறுவனம் 9,500 ரூபாய்க்கு தருகிறது எனில், இதுபோன்று அவர்கள் திரட்டிய நிதிகளால் மட்டுமே முடியும். அவர்கள் இதற்கு, நாங்கள் கடைகள் என்ற அமைப்புக்கு செலவு செய்வதில்லை; இதற்கு பயன்படும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு என பல காரணங்கள் கூறினாலும் இதற்கு ஆகும் செலவு குறைவுதான். ஆனால், அதற்கும் அதிகமாக ஆஃபரில் பொருட்களை விற்பதற்கு இதுபோன்று திரட்டப்பட்ட நிதிதான் உதவுகிறது.

அமெரிக்க அமேஸானை இந்திய ஃப்ளிப்கார்ட்டால் சமாளிக்க முடியுமா என்பது அடுத்த சுவாரஸ்யமான கேள்வி. அமேஸானும் ஃப்ளிப்கார்ட்போல ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான். அது சர்வதேச அளவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, குறைந்த விலையில் ஆஃபர்களை வழங்கி வருகிறது.
இரு நிறுவனங்களுமே இந்தியாவின் மீது இலக்கு வைத்துள்ளன. ஏனெனில், உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு இந்தியா. இங்குதான் அவர்களால் அதிக வாடிக்கையாளர்களைத் தொடர முடியும்.

அமேஸான் போன்ற பெரிய சர்வதேச நிறுவனம் பணத்தால் இந்தியாவில் தன்னை விரிவுபடுத்தி கொண்டதால், ஃப்ளிப்கார்ட்டை வீழ்த்திவிடும் என்று இல்லை. இங்குள்ள போட்டியை சமாளிக்கும் உத்திகளை ஃப்ளிப்கார்ட் கையாளும்பட்சத்தில், அமேஸானுக்கு ஃப்ளிப்கார்ட் சவாலாக இருக்கும். உதாரணமாக, ஃப்ளிப்கார்ட் இப்போது எஃப்கார்ட் எனும் கொரியர் வசதியைக் கொண்டுள்ளது. இதுவும்கூட வாடிக்கையாளரின் நம்பிக்கையை அதிகரிக்கும் விஷயம்தான். இன்னமும் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது பணம் தருவதைதான் அதிகம் விரும்புகிறார்கள். மற்ற வழிகளில் பணம் செலுத்தும் வசதிகள் இருந்தும், அதிகமானோர் நம்பிக்கை இன்மையால் இந்த முறையைத்தான் தொடருகிறார்கள். இது மாறினாலே இ-காமர்ஸ் துறையின் நம்பிக்கை அதிகரித்து, நிறுவனங்கள் லாபப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கிவிடும்.

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேஸான் மட்டும் இந்தப் போட்டியில் இல்லை. இதுபோன்று பல நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் ஃப்ளிப்கார்ட்டிலோ அல்லது அமேஸானிலோ ஆர்டர் செய்தால் அவர்களது இருப்பிலிருந்து டெலிவரி செய்வார்கள். ஆனால், ஸ்நாப்டீல் போன்ற சில நிறுவனங்கள் உங்கள் ஆர்டரை பொருள் தயாரித்த கம்பெனி களுக்கு அனுப்பிவிடும். அதற்கான கட்டணத்தை மட்டும் பெற்று கொள்ளும். பொருள் தயாரித்த கம்பெனிகளே உங்களுக்்கு பொருளை டெலிவரி செய்யும். அப்படி செய்வதில் ரிஸ்க் குறைவு. அதனால் இதுபோன்ற நிறுவனங்களும் நாளை தன்னை நிலைநிறுத்தி நிதி திரட்டும் வாய்ப்பு உள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் என்று வரும்போது உள்நாட்டு நிறுவனமா, வெளிநாட்டு நிறுவனமா என்று வாடிக்கையாளர்கள் பார்க்க மாட்டார் கள். குறைந்த விலை, அதிக சேவை தரும் நிறுவனம் எதுவோ, அதையே மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கை யாளர்கள் விரும்புகிற வகையில் நடக்கும்பட்சத்தில், அமேஸான் நிறுவனத்துக்கு நிச்சயம் பெரிய போட்டியைக் கொடுக்கும்! தூக்கத்தை தொலைக்கலாமா?

நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை  நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.
 
'சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்குச் சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் 'மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாகச் சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் சேரும். சிலர், வேலை காரணமாக 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.


ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமென்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்னைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை. இந்தப் பிரச்னையைச் சில வகை தெரப்பி, மெலட்டோனினைச் சுரக்கவைக்கும் மாத்திரைகளைக் கொடுத்துக் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு செல்போனைத் தூர வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்.'

நைட் ஷிஃப்ட்டில் உள்ளவர்களுக்கு... 

இரவு 7 மணிக்கு வேலைக்குச் செல்பவர்கள், கிளம்பும் முன் காலையில் 'பிரேக்ஃபாஸ்ட்’ சாப்பிடுவது போல் சாப்பிட்டு வேலைக்கு செல்ல வேண்டும். பகல் உணவை, நள்ளிரவு 1 மணியளவில் சாப்பிட வேண்டும்.

 வேலை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லும்போது, முடிந்தவரை இருசக்கர வாகனத்தைத் தவிர்த்து வெளிச்சம் படாதவாறு வேன் போன்றவற்றில் பயணிக்க வேண்டும்.

 வீட்டில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் இரவு உணவை உண்ண வேண்டும். பிறகு கட்டாயம் செல்போனைத் தள்ளிவைத்துவிட்டு, ஜன்னல்களை அடைத்து, வெளிச்சம் புகாத அறையில் உறங்கி மாலை எழுந்திருக்க வேண்டும்.

  வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துச் செயல்பட்டால், இரவு நேர ஷிஃப்ட் காரணமாக உடலில் ஏற்படும் வியாதிகளின் பிடியில் இருந்து விடுபடலாம்.

 
 

உடல் பருமனைத் தவிர்க்க

ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்?
 
சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கலோரிகள் சேர்ந்து, அதை ஆரோக்கி யமான முறையில் செலவிடத் தவறும்போது உடல் பருமன் ஏற்படுகிறது.

 உடல் பருமன், அழகு சார்ந்த விஷயம் அல்ல, இது ஒரு நோய் என்பதை, முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையேனும் உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பைக் கண்டறிய முடியும்.

 அவ்வப்போது உடலுக்குப் புத்துணர்வு அளிக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். காலை மாலை நேரத்தில் வாக்கிங் செல்லலாம். நீச்சல் பயிற்சி செய்யலாம்.

 அதிக அளவில் தண்ணீர் அருந்துவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், பழச்சாறுகள் அருந்துவதற்குப் பதில், வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். இதனால், உடலில் கூடுதல் கலோரிகள் சேருவது தவிர்க்கப்படும். வெந்நீரில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் துரிதப்படுத்தும் திறன் தேனுக்கு உண்டு. இதனால் கூடுதல் அளவில் கொழுப்பு கரைக்கப்படுவது உறுதி.

 காலை, மதியம், இரவு மூன்று வேளை அதிக அளவில் உணவை உட்கொள்வதற்குப் பதில், இரண்டு முதல் மூன்று மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். காலை உணவை 8 மணிக்கும், மதிய உணவை 1 மணிக்கு முன்னதாகவும், இரவு உணவை 8 மணிக்கு முன்னதாகவும் எடுத்துக்கொள்வது அதிக அளவில் கலோரிகளை எரிக்க உதவும்.

 பசி இன்றி எதையும் சாப்பிட வேண்டாம். வயிறு நிரம்பிவிட்ட உணர்வு மூளைக்குப் போய்ச் சேர, சிறிது நேரம் பிடிக்கும். பொறுமையாகச் சாப்பிட வேண்டும். இரண்டு உணவு வேளைக்கு நடுவில், கலோரி நிறைந்த நொறுக்குத் தீனிகளை எடுக்கக் கூடாது.

 நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். தினசரி உணவுப் பட்டியலில் ஐந்து கப் காய்கறி, சர்க்கரை அளவு குறைவான பழம் இருக்க வேண்டும். இதில் ஒரு கப் பச்சையாகச் சாப்பிடக்கூடிய காய்கறிகளாக இருக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, வெள்ளரி, காரட் போன்ற காய்கறிகளை சாலட்டாகச் செய்து சாப்பிடலாம்.

 சில உளவியல் காரணங்கள் கூட அதிகம் சாப்பிடும் பழக்கத்தைத் தூண்டுகிறது. சோகம், துயரம், தனிமை போன்ற சூழ்நிலையில் பலரும் நாடுவது உணவுகளைத்தான். அதிகம் சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படும்.


 அனைத்துக்கும் மேல், மிக வேகமாக உடல் எடையைக் குறைக்கும் மருந்து, மாத்திரை, கருவிகளை நம்ப வேண்டாம். இதனால் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு மிகமிக அதிகம். கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைப்பதுதான் ஆரோக்கியம்.

குழந்தைகளின் உடல் பருமனைத் தவிர்க்க... 

 குழந்தைகளுக்குச் சுண்டல் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை அறிமுகப்படுத்துங்கள்.

 சரியான நேரத்துக்குச் சாப்பிடப் பழக்குங்கள்.

 சாப்பிடும்போது தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள்.

 கம்ப்யூட்டர் கேம்ஸுக்குப் பதில் சக நண்பர்களுடன் விளையாட ஊக்கப்படுத்துங்கள்.

 பர்கர், பீட்சா போன்ற ஜங்க் உணவுகளின் தீமைகளைப் பற்றிச் சொல்லிப் புரியவையுங்கள். இதுபோன்ற உணவை உட்கொள்ளும்போது சற்று அதிக நேரம் விளையாடவிடுங்கள்.

 தேநீர், காபி, குளிர்பானங்கள் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள் அல்லது குறைத்திடுங்கள்.