Search This Blog

Thursday, December 27, 2012

எனது இந்தியா (தையல்காரர் தயாரித்த கொடி! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டதன் பின்னால், பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இந்திய தேசியக் கொடி முதன்முதலாக கல்கத்தாவில் ஏற்றப்பட்டது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அதற்கு முன்பே பெர்லின் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்தியப் புரட்சியாளர் மேடம் காமாவால் 1905-ம் ஆண்டிலேயே ஏற்றப்பட்டது என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேடம் காமா தயாரித்த அந்தக் கொடியில் மேலே சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழே பச்சை என்று மூன்று பட்டைகளும், சிவப்புப் பட்டையில் ஒரு தாமரை மலரும், எட்டு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு இருந்ததாகவும், மஞ்சள் பட்டையில் நீல வண்ணத்தில் 'வந்தே மாதரம்’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்ததாகவும், பச்சைப் பட்டையின் இடது மூலையில் சூரியனின் உருவமும், வலது மூலையில் பிறை நிலவு இருந்ததாகவும் கூறுகின்றனர். மேடம்  காமா எனப்படும் ருஸ்தம் பிகாஜி கர்மா, 1861-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி பம்பாயில் வாழ்ந்து வந்த செல்வச்செழிப்பு மிக்க பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயது முதலே தேச விடுதலைப் போரில் அக்கறையுடன் இருந்தார் காமா. அதனால், அவரு​டைய தந்தை 1885-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி ருஸ்தம் காமா என்பவருக்கு மணம்செய்து வைத்தார். ருஸ்தம் காமா, பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனால், மனைவி மேடம் காமாவோ, நேர் விரோதமானவர். அதனால், வீடு அரசியல் களமானது.


பம்பாயில் பிளேக் நோய் பரவியபோது, நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதில் ஈடுபட்டார் காமா அம்மையார். அதன் விளைவாக, அவருக்கும் அந்த நோய் ஏற்பட்டது. இருப்பினும், தேச சேவையில் தொடர்ந்து பணியாற்றினார். நோய் காரணமாக உடல் நலிந்து பலவீனமாக இருந்ததால், அவரை ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் வற்புறுத்தினர். அதனால், மேடம் காமா 1902-ம் ஆண்டு ஐரோப்பாவுக்குச் சென்றார். ஜெர்மனி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மூன்று ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்ற மேடம் காமா, 1905-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். அங்கே, அவருக்கு ஓர் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முழு ஓய்வும் சிகிச்சையும் அவரை முழுநலம் பெறச் செய்தது.

அப்போது, லண்டனில் தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்த மேடம் காமா, சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அவருடைய செயலாளராகப் பணி​யாற்றினார். அந்தக் காலத்தில் லண்டனில் இயங்கி வந்த, 'இந்தியா ஹவுஸ்’ இந்திய விடுதலைக்காகப் பாடு​படுவோரை எல்லாம் ஒன்று திரட்டியது. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, வ.வே.சு.ஐயர், வீர சாவர்க்கர் போன்றவர்களின் நட்பும் மேடம் காமாவுக்குக் கிடைத்தது. 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷலிஸ்ட் மாநாட்டில்  இந்திய தேசியக் கொடி ஒன்றை எடுத்து விரித்து உயர்த்திக் ​காட்டிய மேடம் காமா, 'இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் எங்கள் தேசியக் கொடி. இந்தக் கொடி இப்போது வானளாவப் பறக்கிறது'' என இந்தியாவின் முதல் கொடியைப் பறக்கவிட்டார். இந்தக் கொடி உருவாக்கத்துக்கு தனக்கு ஆலோசனை சொன்னவர்கள் வ.வே.சு, ஐயர் மற்றும் வீர சாவர்க்கர் என்று காமா குறிப்பிட்டுள்ளார்.

1917-ம் ஆண்டில் அடுத்த தேசியக் கொடி உருவானது. இதை வடிவமைத்தது திலகரும் அன்னி பெசன்ட் அம்மையாரும். அந்தக் கொடியில் மேலி ருந்து கீழாக ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் மாறி மாறி வரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் முதல் ஏழு பட்டைகளில் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. கொடியின் வலது உச்சியில் வெள்ளை நிற இளம் பிறையும் அதற்கு மேல் ஒரு நட்சத்திரமும் இடம்பெற்று இருந்தன. உச்சியின் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இணைக்கப்பட்டு இருந்தது. இதை, தேச பக்தர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பச்சையாகப் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்துகொண்டு அவர்களுடன் நாம் சமரசமாகப் போக வேண்டுமா? என்று பலரும் குமுறினார். அதனால், அந்தக் கொடி கைவிடப்பட்டது. அதன் பிறகு, 1921-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் அனைத்து இந்தியக் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அப்போது, பிங்காலி வெங்கைய்யா என்பவர் 30 நாடுகளின் கொடியை ஆராய்ந்து முடிவில் தேசியக் கொடி ஒன்றை உருவாக்கி காந்தியிடம் காட்டினார். பிங்காலி வெங்கையா ஒரு தையற் கலைஞர். அவர் உருவாக்கிய தேசியக் கொடியில் இரண்டு பட்டைகள் இருந்தன. மேல்புறம் பச்சையும், கீழ்புறம் சிவப்பும் இருந்தன. பச்சையும் சிவப்பும் இந்தியாவின் இரண்டு பிரதான வகுப்புகளான இந்து முஸ்லிம் இருவரையும் குறிக்கிறது என்றார் பிங்காலி வெங்கையா. அந்தக் கொடியைப் பரிசீலித்த காந்திஜி, அந்த தையற் கலை ஞரை வெகுவாகப் பாராட்டிவிட்டு, கூடுதலாக சில யோசனை வழங்கினார். அதை, வெங்கையா மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அன்றே அந்தக் கொடியை உருவாக்கி காந்திஜியிடம் கொடுத்தார். அதுவே பின்னாளில் நமது தேசியக் கொடியாக சில மாற்றங்களுடன் உருக்கொண்டது. நமது தேசியக் கொடிக்கு ஆரம்ப வடிவம் கொடுத்த தையல்காரர் பெங்காலி வெங்கைய்யா, அரசால் எந்த மரியாதையும் செய்யப்படாமல் வறுமையில் வாடி 1963-ம் ஆண்டு இறந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியானது அங்கீகரிப்பதற்கு முன்னரே காந்திஜி இந்தக் கொடியை அங்கீகரித்து விட்டதால் அது மிகவும் பிரபலமடைந்து விட்டது. ஆகவே, காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநா டுகளிலும் அந்த மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆகவே, பின்னர் அந்தக் கொடியை காங்கிரஸ் அங்கீகரித்துக்கொண்டது. கொடியில் இடம் பெற் றிருந்த நிறங்களின் தத்துவார்த்தம் சம்பந்தமாக இந்து, சீக்கியர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக, சில இடங்களில் சண்டை நடந்தது.

1931-ம் ஆண்டு கராச்சியில் காங்கிரஸ் மகா​சபை கூடியபோது, அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்​தக்க வகையில் ஒரு தேசியக் கொடியை உருவாக்குவது அவசியம் என்றும் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட மூவண்ணக் கொடியில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று பட்டைகள் இருக்கும். நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் நீல நிறத்தில் கைராட்டைச் சின்னம் பொறிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அன்று முதல் அதுவே நமது தேசியக் கொடி ஆனது. 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி அதே கொடியைச் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாகவும் இந்திய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியின் கொடியாகவும் அதுவே இருந்ததால், அரசாங்கக் கொடிக்கும் கட்சிக் கொடிக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக நடுவில் உள்ள கைராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி, இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராகிய ஜவஹர்லால் நேரு தேசியக் கொடி பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், சம அளவில் அமைந்த மூன்று நீண்ட செவ்வகப் பாகங்கள்கொண்ட நீள்சதுர மூவண்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு சமர்ப்பித்தார். உச்சிப் பாகம் குங்குமப்பூ நிறத்திலும், அடிப்பாகம் பச்சை நிறத்திலும் உள்ளன. மத்தியில் உள்ள பாகத்தின் நிறம் வெள்ளை. இதன் மையத்தில் கருநீல நிறத்தில் அசோகச் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரக் கொடியின் மாதிரி ஒன்று இந்தியத் தர நிர்ணயக் கழக அலுவலகத்தில் முத்திரையிட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. தேசியக் கொடிகளைப் பல்வேறு அளவுகளில் தயாரித்துக் கொடுப்பதற்கு ஷாஜஹான்பூர் ராணுவ உடைத் தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு 'இந்திய கேஸரி’, 'இந்தியப் பச்சை’ என்று பெயர். உலகில் உள்ள வண்ணத் தர நிர்ணயப் பட்டியல்களில் இந்த இரு வண்ணங்களும் இல்லை. எனவே, இந்தியத் தேசியக் கொடிக்கு என்றே விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நாட்டின் தேசியச் சின்னம், மூன்று சிங்கங்களின் முகங்கள். இந்தியத் தேசிய வாசகம் 'சத்யமேவ ஜெயதே’. அதன் பொருள், வாய்மையே வெல்லும். இது, முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்று. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர். அதன் மேல் நான்கு சக்கரங்களைப் பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு. அந்தச் சக்கரங்கள் தர்மச் சக்கரங்கள் எனப்படுகின்றன. அதில் 24 ஆரங்​கள் இருக்கின்றன. இது பௌத்தர்களின் எட்டுக் கோல்களைக்​கொண்ட தர்மச் சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சக்கரங்களுக்கு அருகிலேயே நான்கு பக்கமும் சிங்கம், குதிரை, எருது, யானை ஆகியவற்றின் உருவங்கள் அமைந்துள்ளன. முரசின் மேற்பகுதியில் நான்கு சிங்கங்கள் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டி நிற்கின்​றன. சாரநாத்தில், மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில் அசோ​கச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல் தூணை நிறு​வினார். அதுவே, தேசிய சின்னமாகத் தேர்வு செய்யப்​பட்டு இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளிலும், அரசு விழாக்​களிலும் மட்டுமே நாம் தேசியக் கொடியை, தேசிய கீதத்தை முதன்மைப்படுத்துகிறோம். அதுவும்கூட, சம்பிரதாய​மாகவே.

இவை வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. நமது தேசிய அடையாளங்கள். அதன் மகத்துவத்தை நாமே அறிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தப்பட​வேண்டிய உண்மை.

Saturday, December 22, 2012

எனது இந்தியா (தேசிய கீதம், தேசியச் சின்னம் மற்றும் தேசியக் கொடி!) - எஸ். ராமகிருஷ்ணன்....

சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான மூன்று அடை​யாளங்கள், தேசிய கீதம், தேசியச் சின்னம் மற்றும் தேசியக் கொடி. இந்த மூன்​றையும் அதன் வரலாறு அறியாமலேயே பயன்படுத்திவருகிறோம். 'ஜன கண மன’ எனத் தொடங்கும் நமது தேசிய கீதத்தைப் பாடுகிறவர்களில் எத்தனை பேருக்கு அதன் தமிழ் அர்த்தம் தெரியும்?

தேசிய கீதத்தின் அர்த்தம் தெரியாமலேயே பாடுவது தவறு இல்லையா? மகாகவி ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், 52 வினாடிகள் ஒலிக்கக்கூடியது. நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்திதான். மொத்தம் ஐந்து பத்திகளை தாகூர் எழுதி இருக்கிறார். தேசிய கீதம் முதன்முறையாக 1911-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அந்த மாநாடு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்தது. ஆகவே, அன்று பாடப்பட்ட இந்தப் பாடல் இங்கிலாந்து மன்னரை வரவேற்றுப் பாடப்பட்டது என்ற சர்ச்சைகூட சமீபத்தில் உருவானது.

இது, அன்றைய ஆங்கில நாளேடுகள் வெளியிட்ட தவறான தகவலால் ஏற்பட்டது. உண்மை​யில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாட​லையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத 'ஸ்டேட்ஸ்மேன்’, 'இங்கிலிஷ்​மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாகத் தகவல் வெளி​யிட்டன. அந்தக் குழப்பமே இன்று சர்ச்சையாக எழுந்துள்ளது. வங்காளத்தில் எழுதப்பட்ட நமது தேசிய கீதத்தை, இந்திப் பாடல் என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதுபோன்ற பிழையான தகவல்கள், வரலாற்று உண்மைகளைத் திரித்துப் பேசுவதற்கு வழிவகுத்துவிடுகின்றன.


இரண்டு தேசங்களின் தேசிய கீதத்தை எழுதிய பெருமை தாகூருக்கு உண்டு. அவர்தான் பங்களாதேஷின் தேசிய கீதமான 'அமர் ஷோனார் பாங்க்ளா’ என்ற பாடலை எழுதினார். வங்காள மொழியில் அமைந்த 'ஜன கண மன’ பாடலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவரும் தாகூரே!

1911-ம் ஆண்டு 'ஜன கண மன’ பாடப்பட்டாலும் அதற்கு முறையாக இசை அமைக்கப்பட்டது 1918-ம் ஆண்டுதான். இந்தப் பாடலுக்கு, ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த ஜேம்ஸ் எச். கசின் மற்றும் அவரது துணைவியார் ஆகிய இருவரும் இசை அமைத்தனர். மதனப்​பள்ளியில் அன்னிபெசன்ட் அம்மையார் அமைத்த தியாசபிக்கல் கல்லூரியில், 1919-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கி இருந்த நாட்களில்தான் தாகூர் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்போது, கல்லூரியின் முதல்வராக இருந்த மார்க்ரெட் கசின், தாகூரின் முன்னிலையில் இந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தார். அதை, தாகூர் மிகவும் ரசித்துப் பாராட்டி இருக்கிறார். அந்த மெட்டுதான் இன்று நாம் பாடும் பாடலுக்கான அடிப்படை.  

தாகூர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாடலின் நகல் பிரதி இன்றும் மதனப்பள்ளியில் கண்காட்சிக்கு இருக்கிறது.

'ஜன கண மன ’ பாடலை நேதாஜி தனது ஐ.என்.ஏ-வில் தேசியகீதமாகப் பயன்படுத்தி வந்தார். ஐ.என்.ஏ-வுக்காக இந்தப் பாடலை பேண்ட் வாத்திய இசைக் குழுவினர் வாசிக்கும்படி இசை அமைத்தவர் கேப்டன் ராம்சிங். இதற்காக, இவருக்கு நேதாஜி தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவித்து இருக்கிறார். 'ஜன கண மன’ பாடல் இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட ஒன்று. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாடாளுமன்றத்தில் திருமதி. சுவேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் ஆகியோர், 'ஸாரே ஜஹான் சே அச்சாஹ்’ என்ற பாடலைப் பாடினர். அந்தப் பாடல்தான், இந்தியாவின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. இந்தப் பாடலை எழுதியவர் மகாகவி இக்பால். இந்திய நாட்டின் சுதந்திரத்துக்குப் பின், எந்தப் பாடலை இந்தியாவின் தேசிய கீதமாகத் தேர்வுசெய்வது என்ற கேள்வி எழுந்தது. காரணம், சுதந்திரப் போராட்டக் காலத்தில் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்’, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'ஜன கண மன’, முஹம்மது இக்பால் எழுதிய 'ஸாரே ஜஹான் சே அச்சா’ ஆகிய மூன்று பாடல்கள் மிகவும் புகழ் பெற்று இருந்தன.

இந்த மூன்றில் எதைத் தேசிய கீதமாகத் தேர்வுசெய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. காரணம், இந்த மூன்று பாடல்களும் மக்கள் மத்தியில் புகழ்பெற்று இருந்தன. அத்துடன், பல்வேறு தேசியத் தலைவர்கள் இந்தப் பாடல்களை உணர்ச்சிப்பூர்வமாக பாடி மக்களிடம் எழுச்சியை உருவாக்கி இருந்தனர். ஆகவே, எந்தப் பாடலை தேசிய கீதம் என அறிவிப்பது என்ற முடிவை அரசியல் நிர்ணய சபையின் வசம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 1882-ம் ஆண்டு பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்’ நாவலில் 'வந்தே மாதரம்’ பாடல் இடம் பெற்றுள்ளது. 'வந்தே மாதரம்’ பாடல், ஜாதுனாத் பட்டாச்சார்யா என்பவரால் மெட்டு அமைக்கப்பட்டு புகழ் பெற்ற பாடலாகத் திகழ்ந்தது. இந்தப் பாடல் துர்க்கையை வாழ்த்திப் பாடுகிறது.   இஸ்லாமியர் மனம் புண்படுவார்கள் என்பதால், இந்தப் பாடலை தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது என்ற எதிர்ப்புக் குரல் உருவானது.

1908-ம் ஆண்டு அமிர்தசரஸ் நகரில் நடந்த முஸ்லிம் மாநாட்டில் பேசிய சையத் அலி இமாம், 'வந்தே மாதரம்’ பாடலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதே​போல், 1923-ம் ஆண்டு காக்கி​நாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்​டத்தில், விஷ்ணு திகம்பர் 'வந்தே மாதரம்’ பாடலைப் பாட முயன்​றார். அப்போது, காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவராக இருந்த மௌலானா முஹம்மது அலி, இந்தப் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது, அதனால் இந்தப் பாடலைப் பாட அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார்.

ஆரம்ப காலத்தில், 'வந்தே மாதரம்’ பாடலை தாகூர் ஆதரித்தாலும், 1939-ம் ஆண்டு நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார். இவர்களைப் போலவே காந்தி, எம்.என்.ராய் மற்றும் நேதாஜி ஆகியோரும் இது இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்துகிறது என்றால், அதைத் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டாம் என்று கருதினர்.

'ஸாரே சஹான் சே...’ பாடல் 1904-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி 'இத்திஹாத்’ என்ற வார இதழில் வெளியானது. இந்தப் பாடல் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்யவில்லை. இந்த மூன்று பாடல்களையும் அரசியல் நிர்ணய சபை பரிசீலனை செய்தது. ஆனாலும், எதைத் தேர்வுசெய்வது என்ற குழப்பம் நீடித்தது. முடிவு உடனே அறிவிக்கப்படவில்லை. அரசியல் நிர்ணய சபையின் கடைசி நாளான 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடிய கூட்டத்தில், இந்தியாவின் தேசிய கீதம் குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தில் தேசிய கீதம் பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக, தேசியகீதம் எது என்பது குறித்த ஓர் அறிக்கையை ராஜேந்திர பிரசாத் வெளியிட்டார். அதில், தாகூர் எழுதிய 'ஜன கண மன’ பாடலின் சொற்களும் இசையும் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும். அதே நேரம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்களித்த 'வந்தே மாதரம்’ பாடலுக்கும் 'ஜன கண மன’-வுக்குச் சமமான அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், 'ஸாரே சஹான் சே’ பாடல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்தப் பாடல் இன்றும் ராணு வத்தினரிடம் எழுச்சிமிக்க பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, தேசிய கீதம் பற்றி விவாதம் ஏதும் நடக்கவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு வரை ஆங்கிலேயர்கள், 'காட் சேவ் தி க்வீன்’(God save the Queen) என்ற பாடலைத்தான் இந்தியா எங்கும் பாடிக்கொண்டு இருந்தனர். அந்தப் பாடலுக்கு மாற்றாக 'ஜன கண மன’ ஒலிக்கத் தொடங்கியது. வங்காள மொழியில் அமைந்த இந்தப் பாடலின் ஒரு பகுதிதான் தேசிய கீதமாக இன்று பாடப்படுகிறது. இந்தப் பாடலின் எளிமையான மொழியாக்கம் இதுவே.

ஜன கண மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்குப் பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா - பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம், திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது.
விந்திய ஹிமாசல யமுனா கங்கா - கடக்க முடியாத இயற்கை எல்லையான விந்திய மலை உன்னுடையது. உலகின் மிகப் பெரிய சிகரத்தைக்கொண்ட இமயமலை உன்னுடையது. வற்றாத இரு நதிகளான கங்கையும் யமுனையும் உன்னுடையவை. இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக்கொண்டு இருக்கின்றன.

உத்சல ஜலதி தரங்கா - மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்து இருக்கும் மாக்கடல்கள் உன் புகழைத் தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக்கொண்டு இருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே - உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக்கொண்டு இருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே - உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா - உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டு இருக்கிறோம்.

ஜன கண மங்கல தாயக ஜய ஹே - இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! - வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

1950-ல் இருந்து இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன’ பாடலும் தேசப் பாடலாக 'வந்தே மாதரம்’ பாடலும் பாடப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள், கிழக்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுன்ட் பேட்டனிடம் 1945-ம் வருடம் ஆகஸ்ட் 15-ம் தேதி சரண் அடைந்தனர். எனவே, அந்த நாள் அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். அதனால், ஆகஸ்ட் 15-ல் இந்தியாவுக்கும் சுதந்திரம் கொடுக்க மவுன்ட் பேட்டன் முடிவு செய்தார் என்கிறார்கள். ஆகஸ்ட் 15-ம் தேதி அஷ்டமி என்பதால் அன்று சுதந்திரம் பெறக்கூடாது. ஆகஸ்ட் 17-ம் தேதி சுதந்திரம் பெற வேண்டும் என்று ஜோதிடர்கள், நேருவைச் சந்தித்து வலியுறுத்தினர். தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று நேரு மறுத்துவிட்டார். ஆனாலும், கடைசி வரை அஷ்டமி அன்று சுதந்திரம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து இருக்கின்றன.

Friday, December 21, 2012

அருள்வாக்கு - ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன?


வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் - என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.

ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம் செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்பதுபோல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகி விட்டால் ‘பரமபதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு. ‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள். மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல்லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடைமை என்று இலக்கணமாகச் சொல்லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம்தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத்தாக உடையவர்’ என்று அர்த்தம்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஓ பக்கங்கள் - காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! - ஞாநி


தர்மபுரியில் தலித் குடியிருப்புகள் தலித்தல்லாத சாதியினரால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்துக்கு காதல் காரணமா இல்லையா என்ற ஆராய்ச்சி அரசியல் களத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாத ஒரே அம்சம், நடந்தது வன்முறையா இல்லையா என்ற அபத்தமான தலைப்பு மட்டும் தான்.

தலித் இளைஞனும் வன்னியப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாலும் அதில் விரக்தியடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாலும்தான் இந்தத் தாக்குதல் நடந்தது என்று நானும் கருதவில்லை. தாக்குதல் நடத்து வதற்கான மனநிலை ஏற்கெனவே கனன்று கொண்டிருந்தது. அதற்கு ஒரு சாக்காக இந்தக் காதல் திருமணம் அமைந்தது என்றே தோன்றுகிறது. இது இல்லாவிட்டால், இன்னொரு சாக்கு கிடைத்திருக்கக் கூடும்.

காதல் திருமணம்தான் உண்மையான பிரச்னை என்றால், நடந்த வன்முறையில் காதலர்கள் தாக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், எந்த வீட்டிலும் எந்த நபரும் தாக்கப்படவில்லை. வீடுகளிலிருந்து ஆட்களை விரட்டிவிட்டு, வீடுகளையே தாக்கி அழித்திருக்கிறார்கள் தாக்கிய கும்பல்கள். தங்களைவிட மோசமான நிலையில் இருந்த தலித்துகளின் குடும்பங்களிலிருந்து பலர் படித்து வேலை வாய்ப்புகளை அடைந்து நகரங்களில் குடியேறி பொருள் சம்பாதித்து, கிராமத்தில் இருக்கும் குடும்பத்தின் நிலையை மேம்படுத்தி, தங்களை விட வசதியாக, தங்கள் கண்ணெதிரே வாழ்வது பற்றிய பொறாமையும் எரிச்சலுமே தாக்குதலின் பின்னால் இருப்பதாகவே தெரிகிறது. அந்தப் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் பின்னால் இருப்பது சுய சாதிப் பெருமையும் சாதிவெறியும்தான். பொருளாதாரத்தில் முன்னேறி சமூக அந்தஸ்தில் அடுத்த படிக்குச் சென்றால் தங்கள் சாதி மேலாண்மை பாதிக்கப்படும் என்ற கவலையில் தலித்துகளின் செல்வத்தை, வளத்தை அழித்திருப்பதாகவே தெரிகிறது.

நடந்த தாக்குதல் காதல் திருமணப் பிரச்னையால் நடக்கவில்லை என்று வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு சாதியினர் சொன்னபோதும், இந்தத் தாக்குதலையொட்டி, சமூக அரசியல் களத்தில், இன்று காதல் திருமணம் என்பது விவாதத்துக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது. இது இப்படி விவாதத்துக்கு உட்படுவது எனக்கு நல்லதாகவே படுகிறது. எது காதல், எப்படி காதலிப்பது, எப்போது காதலிக்கலாம், எந்தக் காதலை ஏற்கலாம், நிராகரிக்கலாம் என்றெல்லாம் அரசியல் தலைவர்களே பேசவேண்டிய கட்டாயம் வந்திருப்பது நல்லது.

மாற்று சாதிப் பெண்களை மயக்கி தங்களைக் காதலிக்க வைத்து, பின்னர் ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையில் தலித் இளைஞர்கள் ஈடுபடுவதாக டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாகவே புகார் சொல்கிறார். திட்டமிட்டு ஒரு பெண்ணை மயக்கிக் கவிழ்த்து பணம் பறிக்கும் கயமையுடையவர்கள் எல்லா சாதிகளிலும் இருக்கிறார்கள். பெண்ணை ஏமாற்றுவோர் இந்தக் குறிப்பிட்ட சாதியில்தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுதான் சாதி வெறி. இந்தச் சாதியினரெல்லாம் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்று சில சாதிகளை ஆங்கில ஆட்சியில் வரையறுத்ததுபோல, இந்தச் சாதியினர் போலிக் காதலர்கள் என்று புதிய வரையறையை ராமதாசும் அவருடன் அணி சேர்ந்திருக்கும் இதர சாதித்தலைவர்களும் உருவாக்குகிறார்கள்.

எந்தப் புரிதலும் இல்லாமல், கண்டதும் காதல் என்று வெறும் பாலியல் கவர்ச்சியைக் காதல் என்று இன்று பல யுவன்களும் யுவதிகளும் குழப்பிக் கொள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ராமதாஸ் சொல்வது போல தலித் இளைஞர்கள் மத்தியில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. எல்லா சாதிகளிலும் இருக்கும் ஆண்கள், பெண்கள் மத்தியில் காதலைப் பற்றிய சரியான புரிதலே இல்லாத விடலைத்தனம் இருக்கிறது.

காதல் பற்றிய அந்த விடலைத் தனத்துக்கு உரம் போட்டு நீர் ஊற்றி வளர்ப்பது யாரென்று அடையாளம் காணவேண்டும். அது சினிமாதான். அது காட்டி வருவது காதலே அல்ல. காமப் பசியைத்தான் காதல் என்று சித்திரித்துக் கொண்டிருக்கிறது. விடலை மனங்களுக்கு சினிமா கற்றுக் கொடுத்திருக்கும் ஈவ் டீசிங் கொஞ்சநஞ்ச மல்ல. பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகும் மாணவியின் சைக்கிளை மடக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு என்னை லவ் பண்ணாதான் விடுவேன் என்று மிரட்டும் பொறுக்கியை ஹீரோவாகக் காட்டுகிறது தமிழ் சினிமா. சினிமாவில் அந்தப் பெண் ஏழெட்டு முறை மிரட்டலுக்குப் பின் அந்தக் ‘காதலை’ ஏற்றுக் கொண்டு விடுவாள். வாழ்க்கையில் என்ன நடக்கும்? ஒரே சாதிக்காரராயிருந்தால், முதல்முறை டீசிங்குக்குப் பிறகு அந்தப் பெண்ணை ஸ்கூலுக்குப் போகாதே என்று நிறுத்திவிடுவார்கள். எதிரெதிர் சாதியானால் இது சாதிக் கலவரமாக மாறிவிடும்.

கடந்த பத்தாண்டுகளில் வந்திருக்கும் தமிழ்ப்படங்களில் பெரும்பாலானவை, மீடியாவால், பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டவை, விருதுகள் பெற்றவை. பொறுக்கிகள், பொறுக்கித்தனம், பெண்ணை வலுக்கட்டாயமாகக் காதலிக்கவைத்தல் போன்ற அம்சங்களையே கதாநாயக அம்சங்களாக உயர்த்திப் பிடித்தவை. விதிவிலக்கான நல்ல படங்கள் மிகச் சில. பெண் உடலுக்கு ஆணும், ஆண் உடலுக்குப் பெண்ணும் ஆசைப்பட்டு ஏங்குவதும்; அதை அடைய விதவிதமான வன்முறையில் ஈடுபடுவதையுமே காதல் என்று வணிகப் படங்கள் நம்மை நம்பவைத்து வருகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவு என்ன? காம உணர்ச்சியால் மட்டும் உந்தப்பட்ட இளைஞர்கள், தன்னை காதலிக்காததும் தனக்குக் கிடைக்காத பெண்ணை அழித்துவிடும் வெற்றியுடன் ஆசிட் ஊற்றும்வரை போகிறது.

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சென்னையில் ஒரு மருத்துவ மனையில் இருக்கிறாள் காரைக்கால் விநோதினி. ஏழைப்பெண். படித்து வேலைக்குப் போய் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டத்துக்கு வந்த சமயத்தில் விடலை இளைஞன் செய்த ஆசிட் தாக்குதலினால் இரு கண் பார்வையையும் இழந்து அவள் உயிருக்குப் போராட, அவளைக் காப்பாற்ற தேவையான சிகிச்சைக்கு பல லட்சங்களையும் திரட்ட அவளுடைய ஏழைப் பெற்றோர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடலை வக்கிரங்களின் ஊற்றுக் கண்ணான படங்களை எடுத்தவர்கள் - பணம் போட்டவர் முதல் எழுதி இயக்கி நடித்தவர் வரை - பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். இந்தப் படங்களால் மனம் பேதலிக்கும் விடலைகளும் பல சாதிகளிலும் இருப்பவர்கள்தான். இப்படிப்பட்ட படங்களுக்கெதிராக அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்க வேண்டுமே தவிர, ‘உங்க சாதிப் பையன்கதான் மோசம் எங்க சாதிப் பொண்ணுங்க அப்பாவி’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது.

சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள விடாமல் தடுக்கும் சமூகத்தில் எது காதல் என்ற குழப்பம் ஏற்படுவதே இயற்கை. தன் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியெல்லாம் விடலை வயதில் அறிவுபூர்வமாகத் தெரிந்து கொள்ள வழியில்லாமல், வளரும் சிறுவரும் சிறுமியும் காம ஈர்ப்பை காதல் என்று மயங்குவதுதான் நடக்கும். படிப்பு, சொந்தக் காலில் நிற்பதற்கான வேலைவாய்ப்பு, சம்பளம் இவற்றையெல்லாம் இருவரும் அடைந்த பின்னர்தான் நாம் சேர்ந்து நமக்கான குடும்பத்தை உருவாக்க முடியும். ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பரஸ்பர மதிப்பும் அன்பும் நம்மிடையே இருக்கிறதா என்ற அறிவு முதிர்ச்சி இல்லாமல் உருவாகும் எந்தக் காதலும் உடல்களைத் தாண்டி நீடிக்காது.

நம் சமூகப் பிணிகளில் ஒன்றான சாதியை ஒழிக்க காதல் திருமணங்கள் நிச்சயம் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் சாதி கடந்த திருமணங்கள் எளிதானவை அல்ல.

சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் வெற்றி பெற பல அம்சங்கள் முக்கியமானவை. உணவுப் பழக்கத்தில் அவரவர் விருப்பத்தை மற்றவர் மதிக்கும் அம்சம் அதில் ஒன்று. சாதி மதம் சார்ந்த குடும்பப் பழக்க வழக்கங்கள் அடுத்தவை. இருவருமே தங்கள் வாழ்க்கையின் இனிமைக்கு சாதியோ மதமோ பிரதானமானதல்ல / தேவையில்லை என்ற அறிவுடன் இருப்பது முக்கியம். இருபக்க உறவினர்களும் இழுக்கும் இழுப்புகளுக்கெல்லாம் ஆட்படாமல் சுயமாகச் சிந்திக்கவும் அதன்படி செயல்படுவதற்குமான ஆற்றல் தேவை. இதையெல்லாம் அவர்களுக்கு எது தரும்? சுயசார்பு இருக்க வேண்டும். அறிவு முதிர்ச்சி இருக்க வேண்டும். இருவருக்கும் ஒருவர் மீது மற்றவருக்கு அன்பும் மதிப்பும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட காதல், விடலை வயதில் எப்படி சாத்தியம்? அதுவும் காதல் என்றால் காமம் என்றே நம்பவைக்கும் சினிமா சூழலில்?

ஒரு சிறுவனும் சிறுமியும் பேசினாலே கற்பு பறிபோய்விடும் என்று அஞ்சும் சமூகச் சூழலில்? தன் உடலைத் தானே புரிந்து வசப்படுத்த இயலாத வாழ்க்கை முறையில்? இந்தச் சூழலை மாற்றினால்தான் மெய்யான காதல் தழைக்க முடியும். மெய்யான காதலே சாதி மதங்களைக் கடக்கும் வல்லமையுடையது. அப்படிப்பட்ட காதலர்களை எந்த வயதில் பார்த்தாலும் நம் மனத்திலும் காதல் ஊறும் என்பது என் அனுபவம். என் கண்ணெதிரே நான் பார்த்தவர்கள் பாப்பாவும் உமாநாத்தும். கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும்!

இந்த வாரக் கேள்வி

ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குவதை எதற்காக அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும்? அடுத்து சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பையை அள்ள துப்புரவாளர்களை நியமித்தால் அதற்கொரு விழா கொண்டாடுமா? கடும் மின் பற்றாக்குறை இருக்கும் நிலையில் எதற்காக இந்த விழாக்கள்- வீண் செலவுகள்?

இந்த வருட அதிர்ச்சி

கழிப்பறை இல்லாத வீடு

புத்தம் புதிதாகக் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் வீடு கட்டுகிறவர் அந்த வீட்டில் கழிப்பறையே வைத்துக் கட்டாமல் அதில் குடியேறினால், அவரை அதிபுத்தி சாலி என்போமா? படுமுட்டாள் என்போமா?

இந்திய அரசாங்கம் கூடங்குளத்தில் அதைத் தான் செய்திருக்கிறது. சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துக் கட்டியிருக்கும் அணு உலையில் வரப்போகும் அணுக்கழிவுகளை எங்கே வைப்பதென்றே இன்னும் முடிவு செய்யவில்லை என்று நீதிமன்றத்தின் முன்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. அணுக்கழிவுகளுக்கான ஏற்பாடு என்ன என்ன என்று திரும்பத் திரும்ப எதிர்ப்பாளர்களும் நீதிபதிகளும் கேட்டதையடுத்து இந்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்திருக்கிறது. கைவிடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கத்துக்குள் வைக்கப்போவதாக முதலில் செய்தி வந்தது. கோலார் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதும் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று அரசு மறுத்தது. அப்படியானால் எங்கேதான் அணுக்கழிவை வைக்கப் போகிறீர்கள் என்று நீதிமன்றம் கடைசியாகக் கேட்டதும், இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை என்று அரசு பதில் சொல்கிறது. அடுத்து தற்போது அணுஉலைக் கழிவுகளில் 3 சதவிகிதம் 7 ஆண்டுகளுக்கு கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அணுக்கழிவுகளை எங்கே எடுத்துச் செல்வீர்கள்? என உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
கூடங்குளம் அணுக்கழிவை எங்கே வைப்பதென்று இன்னும் தெரியாமலிருக்கும் அரசு, இதுவரை கல்பாக்கத்திலும் இதர அணு உலைகளிலும் உருவாக்கிய அணுக்கழிவுகளை எங்கே எப்படி வைத்திருக்கிறது என்ற உண்மைகளை உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

Thursday, December 20, 2012

காரணம் - தயிர் கடைவது ஏன்?

 
பாவை நோன்பு மேற்கொண்டு, பகவானுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டியவர் ஆண்டாள் நாச்சியார். அவர் திருப்பாவையில் ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று தொடங்கும் இரண்டாம் பாசுரத்தில், ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம்’ என்று பாடுகிறார். அடுத்த சில பாசுரங்களிலேயே, ‘ஆச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ’ என்கிறார். விரதம் இருப்போர் தயிர் கடைவது ஏன்? இது முரண்பாடு அல்லவா?
 
இப்படி ஒரு கேள்வி நம் மனத்தில் தோன்றக்கூடும். ஆனால், அதற்கு நான்கு காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள் ஆசார்யார்கள்.

முதற்காரணம்: விரதம் இல்லாத குழந்தைகள், மூத்தோர்... உள்ளிட்ட பிறருக்கு நெய், பால், தயிர், வெண்ணெய் வேண்டாமா? அதனால் தயிர் கடைகிறார்கள்.

இரண்டாம் காரணம்: கண்ணன் வந்து தேடும்போது வெண்ணெய் போன்றவை இல்லையென்றால், பகவத் அபசாரமும், அவனது தோழர்களுக்கு அவை கிடைக்காவிடில், பாகவத அபசாரமும் ஏற்பட்டு விடுமே. தெய்வக் குற்றமும், அடியார் குற்றமும் ஏற்பட்டு விடக்கூடாதே என்று கடைகிறார்களாம்.

மூன்றாவது காரணம்: எவரும் எக்காரணம் கொண்டும், எந்தக் காலத்திலும், தன் கடமையிலிருந்து தவறக்கூடாதாம். யசோதை தினமும் தயிர் கடைவதில் தவறவேமாட்டாளாம்.

நான்காவது காரணம்: ஓர் உட்பொருள். பகவத் சிந்தனை என்னும் மத்தினால் வேதம், மந்திரம், பாசுரம் (என்னும் தயிர்) என்னும் சாரங்களை கடையக் கடைய, நல்ல ஞானம், மோட்சம் பற்றிய ஞானம், நற்கதி ஆகியவை கிடைக்குமாம்.

வெறும் பாசுரமாக, பொருளறியாமல் மனப்பாடம் செய்வதை விட்டுவிட்டு, இப்படி ஆழ்ந்து பார்க்கும்போது, திருப்பாவை தித்திக்கும் அமுதமாகிறது.

எனது இந்தியா (கல்விக்காக நூறு கிராமங்கள் !) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்தியாவில் காஷ்மீரம், பாடலிபுத்திரம், பிரயாகை, மதுரா, அயோத்தி,  பனாரஸ், வைசாலி, கனோஜ் போன்ற முக்கிய நகரங்களில் தங்கி, பௌத்தம் குறித்து  ஆய்வு செய்தார் யுவான் சுவாங். அதன் தொடர்ச்சியாக அவர், நாளந்தா பல்கலைக்கழகத்துக்குச் சென்று தனது விருப்பத்தைத் தெரிவித்தவுடன், அங்கேயே தங்கி ஆய்வு செய்யவும் கற்றுக் கொள்ளவும் அனுமதித்​தனர்.
 யுவான் சுவாங் நாளந்​தாவில் யோக சாஸ்​திரங்​களைக் கற்றுக்​கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அந்த நாட்களில் நாளந்தா பல்கலைக்​கழகத்தில், 10 ஆயிரம் மாணவர்கள் தங்கி, கல்வி பயின்று வந்தனர். அங்கே 18 பாடப் பிரிவுகளில் மாண​வர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். இதற்​காக 1,541 ஆசிரியர்கள் பணியாற்றினர். இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான வருமானத்துக்காக, 100 கிராமங்கள் வழங்கப்பட்டு இருந்தன. அதோடு, 200 வீடுகளில் இருந்து தினமும் பாலும் தேவையான பட்சணங்களும் தானமாகத் தரப்பட்டன.

அங்கே தங்கியிருந்து மகாயான பௌத்த சமய சாரங்களை முழுமையாகக் கற்று அறிந்தார். அதன்பிறகு, அங்கிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்தார். தமிழகத்தில் உள்ள காஞ்சி புரத்துக்கு வந்துசேர்ந்த யுவான் சுவாங், அங்கிருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றியிருக்கிறார். பிறகு, அங்கிருந்து புறப்பட்டு இலங்கைக்குச் சென்றார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.


இந்தியாவில், புத்தர் பிறந்த இடமான லும்பினியில் இருந்து புத்தர் மெய்ஞானம் பெற்ற கயா வரை உள்ள எல்லா பௌத்த ஸ்தலங்களையும் பார்வையிட்ட யுவான் சுவாங், அதைப்பற்றி விரிவான குறிப்புகளாகப் பதிவு செய்து இருக்கிறார்.

17 வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்ப அவர் முடிவுசெய்தபோது, அவரோடு 20 குதிரைகளில் 657 தொகுதிகளாக்கப்பட்ட 520 பௌத்த பிரதிகள் ஏற்றிச் செல்லப்பட்டன. அவற்றில் 224 தொகுதிகள் பௌத்த சூத்திரங்கள். 192 தொகுதிகள் தர்க்க சாஸ்த்திரங்கள்.

இந்தியாவுக்குள் வரும்போது சந்தித்த பிரச்னைகளைவிட, சீனாவுக்குத் திரும்பிச் செல்வதற்கான பயணம் மிகுந்த போராட்டமாக அமைந்தது. முடிவில் அவர், சீனா சென்று சேர்ந்து, தனது சேகரிப்புகள் அத்தனையையும் சேர்த்து அறிவாலயம் ஒன்றை உருவாக்கினார். யுவான் சுவாங்கின் பயணத்தைப் பாராட்டி, யுவான் சுவாங் கொண்டுவந்த நூல்கள் அத்தனையையும் சீன மொழியில் மொழியாக்கம் செய்தவற்காக சிறப்பு நிதி உதவியை மன்னர் அளித்தார்.

இந்த அறிவாலயத்தில் இளம் துறவிகள் பலரும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிகளை சீன பாஷையில் மொழிபெயர்த்தனர். யுவான் சுவாங் தனிநபராக 74 புத்தகங்களின் 1,335 அத்தியாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். நான்கு தொகுதிகளாக தனது நினைவுக் குறிப்புக் களையும் எழுதி இருக்கிறார். அந்த நினைவுக் குறிப்புக்களின் வழியாக பண்டைய இந்தியாவின் அறிவியல், வானவியல், கணிதம், விவசாயம், கலைகள் பற்றி நிறைய அறிய முடிகிறது.

குப்தர் கால இந்தியாவில் இருந்த சாதிய முறைகள் பற்றியும் அன்றைய பௌத்த மதப் பிரிவுகள் மற்றும் இந்து மதச்சடங்குகள், கோட் பாடுகள் பற்றியும் யுவான் சுவான் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

664-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள், தனக்கு விருப்பமான பௌத்த சூத்திரம் ஒன்றை மொழியாக்கம் செய்துவிட்டு, கடந்துபோன தனது பயண நாட்களைப் பற்றிய கனவுகளுடன் தூங்கச் சென்ற யுவான் சுவாங், அப்படியே இறந்து போனார். இன்றும் அவரது அறிவாலயம் சீனாவில் முக்கிய பௌத்தக் காப்பகமாகத் திகழ்கிறது.

நூற்றாண்டுகளைக் கடந்து யுவான் சுவாங்கின் சாகசப் பயணம், 'நாட்டார் கதை’ போல மக்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு எண்ணிக்கையற்ற கிளைக் கதைகளைக் கொண்டதாகிவிட்டது. சமீபத்தில், அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட யுவான் சுவாங்கின் வாழ்க்கைக் கதையில், மாயம் செய்யும் குரங்குகளும் டிராகன்களும் அவருக்கு உதவி செய்வதற்காக புத்தரால் அனுப்பப்பட்டன என்று கதை விரிகிறது. யுவான் சுவாங்கின் வாழ்வைச் சுற்றிலும் புனைவு தன் நெசவை நுட்பமாக நெய்கிறது.
யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளில் அவர் கேள்விப்பட்ட கதைகள் மாற்றுருவில் கலந்து இருக்கின்றன. அதுபோன்ற கதைகள் பௌத்த ஜாதகக் கதை மரபில் உருவானவை. குறிப்பாக, மகாசத்துவர் என்ற மன்னர் பசியால் துடித்த பெண் புலிக்கு தனது உடலை உணவாகத் தருவதற்காக பாறையில் இருந்து குதித்தார். அப்படியும் பெண் புலியால் நடந்து வந்து அவர் உடலைப் புசிக்க முடியவில்லை. அதனால், அவரே தனது காயங்களுடன் புலியை நெருங்கிச் சென்று தனது உடலைக் கிழித்து குருதியை வடிய விட்டார், அதைக்குடித்து புலி பசி தணிந்தது.

அப்படி, புலிக்காக தனது உயிரைத் தந்த மன்னரின் நினைவாக ஒரு ஸ்தூபி எழுப்பப்​பட்டது. அது தக்ஷ சீலத்தின் அருகே இருப்பதாக யுவான் சுவாங் கூறுகிறார். இது புத்த ஜாதகக் கதைகளில் ஒன்று. அதன் மாறுபட்ட வடிவம் வேறுவிதமாக கதாசாகரத்தில் கூறப்படுகிறது, ஆனால், இப்படியான ஸ்தூபி ஒன்று அசோகர் காலத்தில் அமைக்கப்பட்டது என்ற உண்மை அதில் புதைந்திருக்கிறது. ஆகவே, யுவான் சுவாங்கின் தகவல்களை முழுமையாக மறுக்கவும் முடியாது. அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடி யாது.

இன்றும், பௌத்த யோக சூத்திரங்களைப் பற்றி ஆராயும் அனைவரும் யுவான் சுவாங்கின் ஞானத்தையும் அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கும் புத்தகங்களையும் மிக உயர்வாகவே மதிப்பிடுகிறார்கள். என்றோ சரித்திரத்தில் படித்த யுவான் சுவாங்கும், அல்​பெரூனியும் மட்டுமே யாத்ரீகர்கள் அல்ல. அறிவைத் தேடியும் சமூக மாற்றத்துக்கான போராட்டத்தின் பொருட்டும் பயணம் செய்யும் அனைவரும் மதிக்கப்பட வேண்டிய பயணிகளே.

மண் புழுக்கள்கூட தன் உடலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓர் இடம்விட்டு மற்றோர் இடம் ஊர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை என்று நினைக்​கிறார்கள்.

இன்று, தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகள் தமிழிலே வாசிக்கக் கிடைக்கின்றன. யுவான் சுவாங்கின் பயணத்தை, அசோகன் முத்துசாமி ஒரு நீண்ட நாவலாக எழுதியிருக்கிறார். 'போதியின் நிழலில்’ என்ற அந்த நூல் யுவான் சுவாங்கை தமிழில் அறிந்து கொள்ள நினைப்ப​வர்களுக்கு ஓர் எளிய வழிகாட்டியாகும்.

Tuesday, December 18, 2012

அருள்வாக்கு - ஸ்நேகிதன் யார்?


ஜீவராசிகள் எவனுக்கு வசமாம்?
ஸத்யமும் ப்ரியமுமான வசனமுடைய வணக்கமுள்ளவனுக்கு.

தானம் என்பது எது?
கேட்காது கொடுத்தல்.

ஸ்நேகிதன் யார்?
பாவஞ் செய்யாது தடுப்பவன்.

அழகு எது?
சீலம்

வாக்கிற்கு அழகு எது?
ஸத்யம்.

வித்வான்களின் மனதைக் கவர்வது யாது?
நல்ல கவிதையும் புத்தியுள்ள ஸ்த்ரீயும்

முடவன் யார்?
முதிர்ந்த வயதில் தீர்த்த யாத்திரை போகிறவன்.

ஸகல குணங்களையும் அழிப்பது எது?
லோபம் - கருமித்தனம்

பகைவன் எவன்?
காமம்

பொய் சொல்வது எப்பொழுது பாபமல்ல?
தர்மத்தை ரக்ஷிக்கச் சொல்லப்பட்ட பொய் பாபமல்ல.

எது தர்மம்?
நமது வம்சத்தில் பிறந்த பெரியோர்களால் ஸ்நானானுஷ்டான முள்ளவர்கள் அனுஷ்டித்த தர்மமே நமக்கும் தர்மம்.

(ப்ரச்னோத்தர ரத்னமாலை - என்ற நூலிலுள்ள வடமொழி கேள்வி - பதிலை தமிழாக்கம் செய்து 27.1.33-ல் சென்னையில் மகா பெரியவர் பேசியது)
(கேள்வி - பதில் தொடரும்)

உங்கள் தட்டில் உணவா விஷமா - அரிசி

நம்முடைய உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை ஆராய நினைக்கும் நாம், முதலாவதாக தொட்டுப் பார்க்க வேண்டிய பெரும்பொருள்... அரிசியே!

ஆம்... உலகில் 60% மக்களின் அன்றாட உணவு அரிசிதான். உலகில் பயிரிடப்படும் தானியங்களில், மக்காச்சோளத்துக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயிரிடப்படுவது நெல்தான். மக்காச்சோளத்தின் பெரும்பகுதி விளைச்சல், மனிதர்களைவிட, கால்நடைகளுக்குத்தான் தீவனமாகிறது. ஆகவே, உலகில் மனிதர்களுக்கான தலையாய விளைபொருள்... நெல்தான்!

அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதிவந்தார்கள். சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை.

ஆனால், அரிசியின் உண்மையான பூர்விகம்... இந்தியாதான்- அதுவும் நம் தமிழகம்தான் என்ற உண்மை, நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம்?!

அரிசி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் 'ரைஸ்' (rice) என்று அழைக்கப்படுகிறது. இதுவே கிரேக்க மொழியில் 'ஆரிஸா' (oryza) என்றும், அரபி மொழியில் 'அர்ஸ்' (urz) என்றும்     அழைக்கப்படுகிறது. இப்போது பாருங்கள்... அரிசி -     ஆரிஸா - அர்ஸ் - ரைஸ்! ரைஸ் என்ற வார்த்தையின் பூர்விகம் புரிகிறதா?


இது வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் இல்லை. சங்க காலங்களுக்கு  முந்தைய காலத்தில், முன்தோன்றிய மூத்த இலக்கியமான தொல்காப்பியத்தில், நெல்லைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தின் காலம் சுமார் கி.மு 500 முதல் 1,400 ஆண்டுகள் வரை என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அப்படியானால், சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நெல்லின் ஆதிக்கம் இருந்தது என்பது விளங்கும்.

தொல்காப்பியர் ஒரு பெரிய தமிழ்ப் புலவர் என்று மட்டுமே நாம் அறிவோம். ஆனால், இன்றைய விஞ்ஞான முறை விவசாயத்துக்கு ஈடாக மரபியல் (genetics) பற்றியெல்லாம் அப்போதே பேசிய பெரும் 'இயற்கை விஞ்ஞானி' அவர் என்பதை, மருதமலை முருகன் என்ற ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரித்து, அவற்றுக்கான இலக்கணத்தையும் பிறவற்றையும் விரிவாகக் கூறும் தமிழ் இலக்கியப் பாங்கு உலகில் வேறு எங்கும் காணமுடியாத அதிசயம். தொல்காப்பியம் தவிர, சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து - இன்னும் பல சங்க இலக்கியங்களிலும் அரிசியைப் பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் காணப் படும் கல்வெட்டுகளில், 'துவாபர யுகத்தில்... இந்திரனிடமிருந்து பாண்டிய மன்னன் அரிசியைப் பெற்றான்' என்ற செய்தி உள்ளது. கலியுகத்துக்கு முந்தையது துவாபரயுகம். இது, சுமார் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்பார்கள். அப்படியானால், தமிழர்களின் அரிசிக்கு என்னதான் வயது?
இவற்றையெல்லாம்விட, சமீபத்தில் திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஆதிச்சநல்லூரிலும், பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற கிராமத்திலும் நடத்திய அகழ்வாராய்ச்சியில், பேராசிரியர் ராஜன் கண்டுபிடித்த உண்மைகள் பிரமிப்பானவை. அங்கு கிடைத்த முதுமக்கள் தாழி ஒன்றின் உள்ளே, காற்றுப்புகாத மண்பாண்டம் ஒன்றில் இரண்டு கிலோ வைரவ சம்பா நெல் புத்தம் புதிதாக இருந்தது. அதை அமெரிக்காவில்  உள்ள ஓர் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பிய தில், அந்த நெல் கி.மு.480-ம் வருடத்தைச் சேர்ந்தது என்று முடிவு தெரிவிக்கப்பட்டது. 2,500 வருடங்கள் பூச்சி மருந்துகளின்றி கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பண்டைய தமிழனின் தொழில்நுட்பம் எத்தனை வியப் பானது?!

ஆதிச்சநல்லூர் என்ற பெயரையே சிறிது ஆராய்வோம். அதன் உண்மையான பெயர் ஆதிசெந்நெல்லூர் ஆதி + செந்நெல் + ஊர். செந்நெல் விளையும் பூமி என்றுதானே பொருள்? திருநெல்வேலி மட்டும் என்னவாம்? நெல் பயிரால் சூழப்பட்ட ஊர் என்றுதானே பொருள்? இந்த ஊரின் முக்கியக் கடவுள் நெல்லையப்பர் அல்லவா?!

பண்டைய தமிழர்களின் கலாசாரங்களும் விழாக்களும் அரிசியை மையப்படுத்தியே அமைந்தன. சிலப்பதிகாரம் கூறும் இந்திர விழாவும், தை மாத மகர சங்கராந்தியன்று இல்லந்தோறும் படைக்கப்படும் பொங்கலும் நெல் விளைச்சலைக் கொண்டாடும் பண்டிகைதான். இன்றைய திருமண விழாக்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு 'அட்சதை’யாகத் தெளிப்பது, அரிசியைத்தானே?!

பல்வேறு வகையான அரிசிகளைப் பற்றிய குறிப்புகள் நம் இலக்கியங்களில் நிறைய உள்ளன. மூங்கில் அரிசி முதல் யானை நின்றால்கூட மறைக்கும் அளவு உயர வளரும் மலை நெல்/யானை நெல் வரை பல பாடல்கள். கடைசியாக, உலகெங்கும் பேசப்படும் மூன்று வகை அரிசிகள் - கறுப்பு, சிவப்பு, வெள்ளை ரகங்கள் தமிழகமெங்கும் விளைந்தன.

1528-ம் வருடத்திய 'பழனி செப்பு பட்டயத்தில்’ சுமார் 12,000 வகை நெல் பயிர்கள் உண்டென்றும், அவற்றில் சுமார் 100 வகை பயிர்கள் முக்கியமானவை என்றும் குறிப்புகள் உள்ளன.

அந்தப் பயிர்கள் எல்லாம் இப்போது எங்கே? நிச்சயமாக அவற்றைக் கடல் எதுவும் கொள்ளவில்லை. 12,000 வகைகள் 100 ஆகி, அந்த நூறில் கறுப்பு, சிவப்பு, வெள்ளை என்று மூன்று ஆகி, கடைசியில் வெள்ளை - அதிலும் வெள்ளையிலும் வெள்ளை என்ற இன்றைய ஒற்றை இலக்கில் வந்து நிற்பதன் மர்மம் என்ன?!

Sunday, December 16, 2012

எத்தனால் பெட்ரோல்

வர்த்தகப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு, உயரும் பணவீக்கம், வட்டிவிகிதம் அதிகரிப்பு, வளர்ச்சி குறைவது என இப்போதைக்குப் பல பிரச்னைகள் இந்தியாவுக்கு. இந்தப் பிரச்னைகள் அத்தனைக்கும் காரணம், இந்தியா செய்துவரும் அதிகளவு இறக்குமதிதான். இதில் கச்சா எண்ணெய் இறக்குமதி மிக அதிகம். கச்சா எண்ணெய்யை அதிகளவு இறக்குமதி செய்வதில் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தியா. 1986-ல் ஒரு நாளைக்கு சுமார் மூன்று லட்சம் பேரல்களை இறக்குமதி செய்தோம். ஆனால், அதுவே இப்போது பத்து மடங்குக்கு மேலாக உயர்ந்திருக்கிறது.

 கடந்த சில வருடங்களாகவே இந்தியா ஏற்றுமதி செய்யும் தொகையில் சுமார் 40 சதவிகிதம் அளவு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே போய்விடுகிறது. கடந்த 2011-12-ம் ஆண்டு இறக்குமதி மட்டும் 485 பில்லியன் டாலர். இதில் கச்சா எண்ணெய் மட்டும் 160 பில்லியன் டாலர்கள். ஆனால், இந்தியா செய்யும் ஏற்றுமதி வெறும் 300 பில்லியன் டாலர்கள் மட்டுமே. கூட்டிக்கழித்துப் பார்த்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது நம் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் நாளுக்குநாள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது நிச்சயம் நமக்கு ஒரு பெரும் பிரச்னைதான்.

இந்தச் சூழ்நிலையில் அதன் இறக்குமதியைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக, பெட்ரோலுடன் 5 சதவிகிதம் எத்தனாலைக் கலக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் வருடத்துக்கு சுமார் 100 கோடி லிட்டர் பெட்ரோல் பயன்பாடு குறையும். தவிர, இந்தியாவில் எத்தனால் உற்பத்தி நிறைய இருக்கிறது. (கடந்த நிதி ஆண்டில் 220 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தியானது!)

2009-ம் ஆண்டே இதற்கான முடிவு எடுக்கப்பட்டாலும் இப்போதுதான் மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இதன் காரணமாக 15 சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு வெளியிடப்படுவதும் குறையும். ஏற்கெனவே சில மாநிலங்களில் 2 சதவிகிதம் அளவுக்கு எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவு காரணமாக இனி அனைத்து மாநிலங்களிலும் கடந்த டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து 5 சதவிகித எத்தனாலைக் கலக்க வழி பிறந்திருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவின் இறக்குமதி கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், இந்தியாவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் எண்ணம் குறைந்துகொண்டே வருகிறது. இதைத் தடுப்பது அவசியம். இல்லை எனில், பெட்ரோலில் எத்தனாலைக் கலக்கும் விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். வருமுன் காப்போம்!Saturday, December 15, 2012

மோட்சம் தரும் ஏகாதசி!


 

வளர்பிறையில் வரும் ஏகாதசி, தேய்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு.

உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, ஸபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி ஆகியன 25 ஏகாதசிகள் ஆகும். இவற்றுள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் 'மோட்ச ஏகாதசியையே, வைகுண்ட ஏகாதசி எனப் போற்றுகிறோம்!

திருமால் தமது நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதேநேரம், பகவானின் காதுகளில் இருந்து வெளிப்பட்ட அசுரர்கள் இருவர், பிரம்மனைக் கொல்ல முயன்றனர். பெருமாள் அவர்களைத் தடுத்து ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.

ஆனால் அசுரர்களோ, ''நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உமக்கே வரம் தருவோம்'' என்றார்கள். ஸ்வாமியும் ஒப்புக்கொண்டார். ''அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்'' என்று வரம் கேட்டார். அசுரர்கள் திகைத்தனர். ''ஸ்வாமி! தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என வேண்டிக்கொண்டனர்.

அதன்படியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதி நேரத்தில், மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ''தெய்வமே! தங்கள் பரம பதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார். அங்கே திருமாலின் திவ்விய மங்கல வடிவம் கண்டு மகிழ்ந்தனர் அசுரர்கள். அப்போது அவர்கள், ''பகவானே, தங்களை விக்கிரக வடிவமாக பிரதிஷ்டை செய்து, மார்கழி- வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும்'' என்று பிரார்த்தித்தனராம்.

அவர்களின் வேண்டுதல் பலிக்க திருவருள் புரிந்தார் பெருமாள்.  இன்றைக்கும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து, சொர்க்கவாசல் வைபவத்தைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு, வரம் தந்து வாழ்வளிக்கிறார் எம்பெருமான் (இதுபோன்று வேறுபல புண்ணியக் கதைகளும் உண்டு).

எனது இந்தியா (புத்தனைத் தேடிய பயணி !) - எஸ். ராமகிருஷ்ணன்....

பள்ளிப் பாடப் புத்தகங்களில் பலரும் படித்து, மறந்துபோன 100 பெயர்களில் ஒன்று யுவான் சுவாங்.
 சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி, பருத்து வீங்கிய கழுத்து, வட் டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடல் அமைப்பு கொண்ட யுவான் சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால், அவரது பயணத்தின் பின்னுள்ள தேடுதலையும், அவர் பதிவு செய்துள்ள வரலாற்றுக் குறிப்புகளையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ளவே இல்லை.

சமீபத்தில், ரிச்சர்ட் பெர்ன்ஸ்டெயின் என்ற அமெரிக்க எழுத்தாளர் யுவான் சுவாங்கின் பாதையில் திரும்பப் பயணம் செய்து, 'அல்டிமேட் ஜர்னி’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில், யுவான் சுவாங் மேற்கொண்ட பயணத்தின் இடர்ப்​பாடுகளையும், அவர் கடந்துவந்த பாதையின் வரைபடங்களையும் மீள்ஆய்வு செய்தபோது, 'எப்படி இந்த மனிதர் அந்த நாட்களில் பயணம் செய்தார்?’ என்று வியப்படைந்து, 'யுவான் சுவாங் ஒரு மகத்தான யாத்ரீகர்’ என்கிறார்.

'எவ்விதமான முறையான வரைபடமும் வாகன வசதிகளும் இன்றி நடந்தும், கோவேறுக் கழுதைகளிலும் யுவான் சுவாங் பயணம் செய்து இருக்கிறார். அதே பாதையில் இன்று எல்லா வசதிகள் இருந்தும் பாதுகாப்பாக ஆப்கானுக்குள் நுழைய முடியவில்லை. காரணம் தாலிபான்கள், கண்ணி வெடிகுண்டுகள், தீவிரவாத வன்முறைகள்.

அந்தக் காலத்தில் மழை நேரங்களில் ஓர் ஆற்றைக் கடந்து செல்வதற்கு பல மாதங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது. இன்று உறுதியான இரும்புப் பாலம் இருக்கிறது. ஆனால், அதைக் கடக்க அரசு அனுமதி மறுப்பதால், பல வருடங்கள் காத்திருக்கவேண்டி இருக்கிறது’ என்று தனது நூலை முடிக்கிறார். காலம் காட்டும் உண்மை இப்படித்தான் இருக்கிறது.

நாடு பிடிக்கவோ அல்லது மதப் பிரசாரம் செய்வதற்காகவோ, ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பயணம் மேற்கொண்ட வாஸ்கோடகாமா, கொலம்பஸ், கேப்டன் குக், பார்த்தலோமியா டயஸ், ஜீகன்பால்க் போன்ற பயணிகளைப் போலின்றி, அறிவையும் ஞானத்தையும் தேடி பல்லாயிரம் மைல்கள் தனியே பயணம் செய்து, இந்தியாவுக்கு வந்துசேர்ந்த புத்தத் துறவி யுவான் சுவாங்.

தனது வாழ்நாளில் 17 வருடங்களை அவர் பயணத்திலேயே கழித்திருக்கிறார். கழுதைகளிலும், ஒட்டகங்களிலும், மட்டக்குதிரைகளிலும்,கால்​​நடையாக நடந்தும் இவர் கடந்து வந்ததூரம் 20 ஆயிரம் மைல்களுக்கும் அதிகம். இந்தியாவைக் காண வேண்டும் என்ற ஆசை யுவான் சுவாங்கின் சிறு வயதில் வேர்விடத் தொடங்​கியது.

யுவான் சுவாங்கின் குடும்பம் பௌத்த மதத்தில் தீவிரப் பற்றுகொண்டது. அவரது அப்பா கன்பூசிய சிந்தனையில் தேர்ச்சி பெற்ற அறிஞர். யுவான் சுவாங்கின் சகோதரர்கள் பௌத்தத் துறவிகளாக இருந்தனர். ஆகவே, தத்துவமும் இலக்கியமும் சிறு வயதிலேயே அவருக்கு அறிமுகம் ஆனது.

தனது 12-வது வயதில் இளம் துறவியாக பௌத்த மடாலயத்தில் அனுமதிக்கப்பட்ட யுவான் சுவாங், அங்கே பௌத்தத் தத்துவமும் கன்பூசிய சிந்தனைகளும் கற்றார். அதன்பிறகு, அவர் பௌத்த அறிவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும், 'தி கிரேட் லேர்னிங் டெம்பிள்’ என்ற மடாலயத்துக்கு அனுப்பப்பட்டார். இந்த மடாலயத்தில் 500-க்கும் மேற்பட்ட துறவிகள் இருந்தனர். அவர்களது முக்கியப் பணி பௌத்த சமய ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்வது.

அந்த நாட்களில் பெரும்பான்மையான பௌத்த ஏடுகள் பாலி மொழியில் இருந்தன. இந்தியாவில் இருந்து கிடைத்த சில ஏடுகள் சமஸ்கிருதத்திலும் இருந்தன. ஆகவே, சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகள் அறிந்த பௌத்தத் துறவிகள், தங்கள் வாழ்நாளை மொழிபெயர்ப்புச் சேவைக்காகச் செலவு செய்தனர்.

பௌத்த சமய சூத்திரங்களையும் அறநெறிகளையும் கொண்ட ஏடுகளில் ஒன்றை மொழியாக்கம் செய்வதற்கு ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை மூத்த துறவிகள் பரிசீலனை செய்வார்கள். பிறகு, அந்த ஏடு அறிஞர் குழுவால் மூலப்பிரதியோடு ஒப்பீடு செய்யப்படும். முழுமையாகத் திருத்தம்செய்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அந்த மொழிபெயர்ப்பை பிரதி எடுப்பதற்காக 40 துறவிகள் வேலை செய்தனர். அவர்கள் ஏடுகளைப் பிரதி எடுத்து, சீனாவில் இருந்த வெவ்வேறு மடாலயங்களுக்கு அனுப்பி வைப் பார்கள். இப்படி, தங்கள் வாழ்நாள் சேவையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்ட துறவிகளின் நடுவில் பணியாற்றத் தொடங்கிய யுவான் சுவாங், இந்தியாவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்ளத் தொடங்கினார்.

இதற்காக அவர் சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள விரும்பினார். நான்கு ஆண்டுகள் முழுமையாக பயிற்சி மேற்கொண்டு சமஸ்கிருத விற்பன்னரானார். இதன் காரணமாக அவரால் பல முக்கிய ஏடுகளை எளிதாக சீன மொழியில் மொழிபெயர்க்க முடிந்தது.

629-ம் ஆண்டு மடாலயத்தில் தங்கி இருந்த ஓர் இரவில், இந்தியாவில் உள்ள கயாவில் புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அருகில், தான் பிரார்த்தனை செய்துகொண்டு இருப்பதாக யுவான் சுவாங்குக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு தன் மனதில் நீண்ட நாட்களாகப் புதையுண்டு கிடந்த ஆசையின் வடிவம் என்பதை உணர்ந்தார் யுவான் சுவாங்.

ஆகவே, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, பகவான் புத்தர் பிறந்த இடத்தைக் கண்டு வர வேண்டும் என்பதோடு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பௌத்த ஏடுகளை சீனாவுக்குக் கொண்டுவர வேண்டும் என விரும்பினார். இந்த விருப்பத்தை அவரது மூத்த துறவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்லாயிரம் மைல் பயணம் செய்து இந்தியாவைச் சென்று அடைவது நடக்க முடியாத செயல் என்று ஏளனம் செய்தனர். ஆனால், யுவான் சுவாங் தன்னால் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்பினார்.

ஆனால், தாங் அரசு அந்த நாட்களில் யுத்தத்தைச் சந்தித்துக் கொண்டு இருந்த காரணத்தால், எவரும் தேசத்தைக் கடந்து வெளியேறுவதற்கோ உள்ளே வருவதற்கோ அனுமதிக்கவில்லை. யுவான் சுவாங் சூழலைப் பொருட்படுத்தாமல், தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு, குதிரையில் பயணம்செய்து தாங் அரசின் எல்லையைக் கடந்து சென்றார். சீனாவில் இருந்து இந்தி​யாவுக்குச் செல்வதற்கான முறையான வரைபடங்கள் அந்த நாட்களில் கிடையாது. ஆகவே, அவர் தனது பயணத்தை சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்டார்.

மேற்கு நோக்கிய பயணம் என்று திசையை மட்டும் மனதில் கொண்டபடி தொடங்கிய அவரது பயணம், எண்ணிக்கையற்ற பிரச்னைகளைச் சந்தித்தது. சீதோஷ்ண நிலையும், வழிப்பறியும், பசியும், நோயும் அவரைத் தாக்கியது. ஆனாலும், அவர் தன் கனவுப் பாதையில் தொடர்ந்து பயணித்தார்
சீனாவின் எல்லையைக் கடக்கும்போது, அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை அருகில் உள்ள மடாலயம் ஒன்றில் கொண்டுபோய் சேர்த்துவிடும்படியாக ராணுவ அதிகாரி கட்டளை இட்டதும், 'அப்படித் தன்னைச் செய்வதாக இருந்தால், அந்த இடத்திலே கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போவேன்’ என்று யுவான் சுவாங்  தனது கத்தியைக் கையில் எடுத்தார்.

அவரது மனத்துணிவும் விருப்பமும் அறிந்த ராணுவ அதிகாரி, எல்லையைக் கடந்து செல்ல அனுமதித்தார். யுவான் சுவாங் புகழ்பெற்ற கோபி பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது, வெயிலும் தாகமும் வாட்டி எடுத்தது. பாதை தவறி மணலில் அங்குமிங்குமாக அலைந்து களைத்துப்போன யுவான் சுவாங், அந்தப் பாலைவனத்திலேயே இறந்து​விடக்கூடும் என்று நம்பினார். இனி, தனது முயற்​சியால் எதுவும் நடக்கப்போவது இல்லை என்று உணர்ந்த​வராக தன்னைக் குதிரையோடு சேர்த்துக் கட்டிக் கொண்டார்.

குதிரை பாலைவனத்தில் தனது போக்கில் போகத் தொடங்​கியது. எந்தத் திசையில் செல்கிறது என்று தெரியவில்லை. ஆனால், குதிரை எதையோ அறிந்தது​போல சீராகப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் கண் விழித்தபோது, தன் எதிரில் பெரிய பாலைவனச் சோலையையும் அங்கே குளிர்ந்த தண்ணீர்ப் பொய்கை இருப்பதையும் கண்டார்.

அவரால் அது நிஜம் என்று நம்ப முடியவில்லை. ஓடிப்போய்த் தண்ணீரைக் குடித்தார். அங்கேவிளைந்​திருந்த ஈச்சம்பழங்களைத் தின்றார். குதிரைதன் உள்ளுணர்வில் எங்கே தண்ணீர் உள்ளதுஎன்பதை அறிந்திருக்கிறது என்று உணர்ந்த யுவான் சுவாங், அதுவும் புத்தரின் கருணை என்று நன்றி செலுத்திய​தோடு, முடிவற்ற மணல் திட்டுகள் நிரம்பிய பாலையில் தனி ஒரு ஆளாக பல மாதங்கள் அலைந்து திரிந்து முடிவில் தர்பான் என்ற நாட்டை அடைந்தார்.

அந்த நாட்டின் அரசர் புத்தத் துறவிகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால், அவரைத் தேடிச்சென்றார். அரசரும் யுவான் சுவாங்கின் அறிவுச் செல்வத்தைக் கண்டு வியந்து, தனது ஆஸ்​தான குருவாக தன்னோடு வைத்துக்கொண்டார். ஓர் ஆண்டு அங்கே கழித்த யுவான் சுவாங், தனது இந்தியப் பயணத்துக்குத் தயாரானபோது அரசர் அனுமதி தர மறுத்தார். தன்னை இந்தியப் பயணத்துக்கு அனுமதிக்கா விட்டால், தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக யுவான் சுவான் பட்டினி கிடக்கத் தொடங்கினார். அரசர் அனுமதி தந்ததோடு தனது நாட்டின் அரசப் பிரதிநிதி என்று முத்திரை ஓலையையும், பாதுகாப்புக்காக ஆட்களும், வழியில் தேவைப்படும் பொருட்களையும் கொடுத்து அனுப்பினார்.

ஆனால், ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து செல்லும் போது, அவரை யாரோ ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் பயணம் செய்கிறார் என நினைத்தனர் கொள்ளைக்காரர்கள். அதனால், அவரை வழிமறித்துத் தாக்கி, காவலர்களைக் கொன்று அவரது உடைமைப் பொருட்களைப் பறித்தனர். திரும்பவும் கால் ஒடிந்த குதிரை ஒன்றோடு தனி நபராக விடப்பட்டவர், அங்கே இருந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். வழி முழுவதும் பௌத்த மடாலயங்களில் தங்கியும், சிறு நிலப்பரப்புகளை ஆண்ட அரசர்கள் மற்றும் மக்களது வாழ்க்கைமுறை கலாசார செயல்பாடுகள் யாவையும் குறிப்புகளாக எழுதிக்கொண்ட யுவான் சுவாங், வெவ்வேறு பௌத்த சமய ஏடுகளையும் சேகரிக்கத் தொடங்கினார்.

Friday, December 14, 2012

அருள்வாக்கு - அரியக்குடிக்கு ஆலோசனை!


ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார்: நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்லபடியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்தப் பாரம்பர்யம் தொடர்ந்து போகும் படியாய்ப் பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராமணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதைச் சொல்லிக் கொடுத்தே தீரணும்னு, ‘அத்யாபனம்’னே அவனுக்குக் கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லாக் கலைக்கும், சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தை தன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்டப் போகும் படியாய்ப் பண்ணணும்.

ஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணணும். தாங்க(ள்) பாடற ஸம்ஸ்க்ருதப் பாட்டு, தெலுங்குப் பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டு, அர்த்த பாவத்தோட பாடணும். தமிழே போறும்னு சொன்னா ஸரியில்லே. ஸங்கீத நுட்பம், அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹா பெரியவா பலபேர் இந்தத் தமிழ் தேசத்துல தெலுங்கிலேயும் ஸம்ஸ் க்ருதத்திலேயும் நூத்துக்கணக்காகப் பாட்டுக்களைக் கொட்டிட்டுப் போயிருக்கா. அதெல்லாம் வேண்டாம்னு தள்றது நமக்குத்தான் நஷ்டம். தமிழிலேயும் நிறையப் பாடட்டும். மத்த பாஷையிலேயும் பாடட்டும். ‘அர்த்தம் தெரியலையே’ன்னா தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுக்கறது கஷ்டமேயில்லை. நமக்கா இஷ்டம் இருந்தா ஆகாத போகாத ஸமாசாரங்களுக்கெல்லாம் எத்தனை ஒழைச்சுத் தெரிஞ்சுக்கறோம்? சுத்தமான ஸங்கீதம், ஒசந்த அர்த்த விசேஷம் - இதுகளுக்கே வித்வான்கள் ‘டெடிகேட்’ பண்ணிண்டா பாஷை குறுக்கே நிக்காது. இதுக்கெல்லாம், ஸங்கீத உலகத்துல இப்ப முதலா இருக்கிற நீ ஒன்னாலானதைப் பண்ணு. அநுக்ரஹ பலம் உனக்கு சக்தி கொடுக்கட்டும்."
அரியக்குடி நாத்தழுதழுத்து, என் ஆயுஸில் இன்றைவிட நான் பெரிய பாக்கியம் அடைந்ததில்லை" என்று கூறி விடைபெற்றார்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Wednesday, December 12, 2012

எனது இந்தியா (பலிகடா ஆன மொழிகள்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

கி.பி. 7-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, பௌத்த ஜைன மதத்தினர் செல்வாக்கு இழந்து, பிராமணர்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பிராகிருத மொழிகளுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ்கிருத மொழியின் ஆதிக்கம் ஏற்பட்டது.

கி.பி.10-ம் நூற்றாண்டில் சோழர்கள், பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அங்கு புழக்கத்தில் இருந்த வட்டெழுத்துக்களை மாற்றி, புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினர். சோழ அரசர்கள் கி.பி. 10-ம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டி நாட்டில் புகுத்தியதற்கு, குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களே சான்று என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி, இந்த சாசனங்கள் பழைய வட்டெழுத்தில் எழுதப்​பட்ட சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்து எழுதி ராஜராஜன் அமைத்​தான் என்று கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, தனது 'பண்டைய இந்தியா’ என்ற நூலில், கி.பி 150-ல் தான் முதன்​முதலாக சமஸ்கிருத மொழி எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 2-ம் நூற்றாண்டுக்கு முன், சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. அந்தக் காலத்திய கல் வெட்டுக்கள் எதிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் இல்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிராமி, கரோஷ்டி முறைகள் இன்று நடைமுறையில் இல்லை. பிராமி எழுத்து முறையில் இருந்து பல்வேறு விதமான எழுத்து முறைகள் தோன்றி இருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவில் இது வட்டெழுத்தாக உருவானது. வடமாநிலங்களில் கோண வடிவில் எழுதப்படுவதாக மாறியிருக்கிறது.


பிராகிருதம் என்பது பண்டைய இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளையும் அதன் வழக்கு​களையும் குறிக்கிறது. பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல; அது ஒரு மொழிக் குடும்பம். இந்த மொழிக் குடும்பத்துக்குள் நிறையக் கிளைகள் இருக்கின்றன. பிராகிருதம் வெகுமக்களால் பேசப்​பட்டு வந்த ஒன்றாகும். பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழியாகவே சமஸ்​கிருதம் இருக்கிறது. இந்த மொழி லத்தீன் போலவே வழிபாட்டுக்கு உரிய மொழியாகவும் கருதப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியில் நீதி பதியாகப் பணியாற்று​வதற்காக வங்காளத்துக்கு வந்த வில்லியம் ஜோன்ஸ் லத்தீன், கிரேக்கம் இரண்டையும் தெளிவாகக் கற்றவர். இந்தியச் சட்டங்களை அறிந்து கொள்வதற்காக சமஸ்கிருதம் படிக்கத் தொடங்கினார். லத்தீன் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தார். அதுபற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து இவை ஒரு பொது மொழியை வேராகக்கொண்டவை என்ற கருத்தை முன்மொழிந்தார். இந்தக் கருத்தாக்கம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, இந்திய - ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஒன்றில் இருந்துதான் இந்த மொழிகள் தோன்றி இருக்கக்கூடும் என்ற நிலைப்பாடு உருவானது. அதுபோலவே, புத்தர் பேசிய பாலி மொழி இன்று பேச்சுவழக்கில் இல்லை. பீகாரில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் பாலி மொழி கற்பிக்கும் பட்டப் படிப்புகள் இருந்தபோதும் அது வழக்கொழிந்த மொழியாகவே கருதப்படுகிறது. அசோகர் ஆட்சி புரிந்த மகத நாட்டின் தொன்மை மொழியாக இருந்தது பாலி. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அம்பேத்கர், பாலி மொழிக்கான இலக்கண அகராதி ஒன்றை உருவாக்கி உள்ளார். பாலி மொழிக்கு மாகதி என வேறு பெயரும் உண்டு. பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாமே பாலி மொழியிலேயே எழுதப்பட்டன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள் சமஸ்கிருத மொழியில் நூல்களை இயற்றத் தொடங்கினர். ஆனாலும் தென்னிந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்றுதொட்டு இன்று வரை பாலி மொழியையே போற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, பாண்டி நாட்டுத் தஞ்சை, மானாவூர், துடிதபுரம், பாடலிபுரம், சாத்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பௌத்தபுரம் முதலான ஊர்களில் பாலி மொழியை நன்கு அறிந்திருந்த பௌத்த ஆசிரியர் பண்டைக் காலத்தில் இருந்தனர் என்பதை பௌத்த நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நாவாய் (கப்பல்), பக்கி (பறவை), பாடசாலை (பள்ளிக்கூடம்), நாவிகன் (கப்பலோட்டி), பதாகை (கொடி), தாம்பூலம் (வெற்றிலை) முதலிய சொற்களும் பாலி மொழியில் இருந்து பௌத்தர்கள் மூலமாகத் தமிழ்நாட்டில் பரவியிருக்க வேண்டும் என, மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார். எந்த மொழி, கல்வி மொழியாக இருக்கிறதோ எது ஆட்சிமொழியாக இருக்கிறதோ, எந்த மொழி இளம் தலைமுறையினரின் தொடர்பு மொழியாக இருக்கிறதோ, எந்த மொழியில் மக்களின் உலகப் பார்வையும் பயன்பாடும் வெளிப்படுகிறதோ அந்த மொழிக்கு மட்டுமே உயிர்வாழும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மொழியியலாளர்கள். இயற்கையின் பன்முகத் தன்மையே மொழியையும், மக்கள் வாழ்வு முறைகளையும் முடிவு செய்கிறது என்கிறார் மொழி யியல் அறிஞர் டேவிட் ஹார்மோன். இவரது ஆய்வில் மரங்களின் அடர்த்திக்கும் மொழிகளுக்கும் உள்ள தொடர்பு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது, மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறுகிறார். குறைந்தது ஒரு வருடத்துக்கு 10 மொழிகளாவது இறந்து விடுகின்றன என்கிறார்கள். காலனி ஆதிக்கத்தால் ஐரோப்பாவில் மட்டுமே 12-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து இருக்கின்றன. பன்மொழி சார்ந்த கலாசாரம் உலகம் தழுவிய வணிகத்துக்குத் தடைக்கல்லாக இருந்ததால், உலகம் முழுவதற்குமான பொது மொழி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்ற குரல் நீண்ட காலமாக ஒலிக்கிறது.

இதற்காக, செயற்கையாக ஒரு மொழியை வடிவமைக்க வேண்டும் என்ற கருத்து முன்மொழியப்பட்டு, வாலேபூக் எனும் செயற்கை மொழி முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த மொழி உலகம் தழுவிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து, எஸ்பிரேண்டோ என்றமொழி வடிவமைக்கப்​பட்டு, சில காலம் புழக்கத்தில் இருந்தது. அதுவும் தோல்வி அடைந்தது. ஆனால் காலனி ஆதிக்கத்தின் வழியே இன்று ஆங்கிலம், அந்த இடத்தை அடைந்து இருக்கிறது. பன்னாட்டு வணிகர்களின் வளர்ச்சிக்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் மொழிகள் பலிகடா ஆக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை. மொழி அழிவது என்பது உலகமயமாவதன் பிரச்னை. இந்தியாவின் பல்வேறு மொழிகள் இந்த உலகமயமாதலின் சிக்கலில் மாட்டிக்கொண்டு தனது உரிமைகளை, அடையாளத்தை இழந்து வருகின்றன. ஒரு மொழி பேசும் இனம் அதற்கான மொழி உரிமையைப் போராடி நிலைநிறுத்துவதன் மூலம், தன் இழந்துவிட்ட சமூக அரசியல் உரிமைகளை அடைந்துவிட முடியும் என்பதற்கு சாந்தலி மொழி பேசும் பழங்குடியினர் ஓர் உதாரணம். நீண்ட நெடிய வரலாறு உடைய இந்தியா, இன்று அவிழ்க்க முடியாத சிக்கல்களில் சிக்கித்தவிக்கிறது. குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், சிதைவுகள் நம் நாட்டின் அடையாளத்தை முற்றிலும் மாற்றி இருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா உடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ஐரோப்பிய அரசியல் கட்டுரையாளர்கள் பலராலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவை இணைத்துவைத்துள்ள அம்சம், இங்குள்ள ஜனநாயகம் மற்றும் இந்தியர்களின் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளே ஆகும்.

'இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு’ என்ற தனது நூலில் ராமச்சந்திர குஹா, இந்தியத்தன்மை எது என்பதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். குறிப்பாக, இன்றுள்ள இந்தியா எப்படி உருவானது? அப்படி உருவாவதற்கு அது எதிர்கொண்ட சவால்கள்? கடந்துவந்த பிரச்னைகளைப் பற்றி குஹா காட்டும் சித்திரம் இன்றைய இந்தியாவின் உண்மையான முகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தல், புதிய ஜனநாயகப் பொறுப்புகளை எப்படி அறிமுகப்படுத்தியது, 2,000 ஆண்டுகளாக மன்னர்களும் அவர்களின் விசுவாசிகளும் ஆண்டுவந்த இந்தியா, எப்படி தன்னை மக்கள் ஆட்சியிடம் ஒப்படைத்துக்கொண்டது என்பதைப் படிக்கும்போது இந்தியாவின் மாற்றத்துக்கான எத்தனிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கடந்த காலத்தைப் பற்றி, வரலாற்று ஆசிரியனின் பார்வை நிகழ்கால முரண்பாடுகள் பற்றிய ஆழ்ந்த அறிவில் இருந்து விளக்கப்படும்போது உண்மையான வரலாறு உருவாகிறது என்பார் இ.ஹெச்.கார்.

இந்தியாவின் வரலாற்றை வாசிக்கும் எவரும் அதன் கடந்த காலத்தில் வீழ்ந்துகிடக்கவும் முடியாது. அதே நேரம் கடந்த காலத்தை முற்றிலும் புறந்தள்ளவும் முடியாது. இந்தியாவின் எதிர்காலம், அதன் கடந்த காலம் எனும் வேரோடு தொடர்பு உடையதே. வரலாறு என்பது நாம் படித்துக் கடந்து செல்வது மட்டுமல்ல, அதில் நமது பங்களிப்பும் இருக்கிறது. வரலாற்றை நேசிப்பவர்கள் கடந்த காலத்தை உள்வாங்கிக்கொண்டு அதன் வழியே நிகழ்காலத்தைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் முற்பட வேண்டும். அதுவே, வரலாற்றைச் சரியாக உள்வாங்கிக்கொண்டதற்கான அத்தாட்சி!

Tuesday, December 11, 2012

அருள் மழை

 
பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது  திரு நடராஜ சாஸ்த்ரிகள் குடும்பம். \அவர் தஞ்சாவூர் பங்காரு
காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில் முகாம்.
பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை
ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை
பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு
போனார்.
 
ஆனால், இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப
வருத்தம்! மாலையோடு வீடு திரும்பினார். அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானே? இந்த
மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள். "இல்லே, இல்லே,
அம்பாளும்,  பெரியவாளும் வேற வேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற
பெரியவாளுக்குத்தான்! ஆமா. இது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு,
அதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார். 

மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும், பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்து, நடராஜ
சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில்  உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக 
தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு! "பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம்
பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார். உடனே வீடுகளுக்குள்
இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம்,
குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்! பெரியவாளுடைய வேகம் அப்படி
இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல்
இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்த
வேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!
 
பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு, சற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள்
வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாக பூஜை ரூமுக்குள் போய், முன்தினம் "பெரியவாளுக்குத்தான்!" என்று
முத்ரை குத்தப்பட்டு, ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை அப்படி
லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவது போல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன்
தலையில் சூடிக் கொண்டார்! சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய, விக்கித்து
நின்றனர்! ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒரு பரமகருணையா? என்று சொல்லமுடியாத
ஆனந்தம்! திக்கு முக்காடினார்கள். எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம் நடந்தார். சற்று நின்று
திரும்பி, "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார். அவ்வளவுதான்! ஆடிப்
போய்விட்டார் சாஸ்த்ரிகள்! நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக்கிண்ணம் குடுக்கணும்
என்று சொல்லி, ஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். இதோ! அவர்கள் நேற்று பேசியதை ஏதோ
பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா' வெள்ளிக்கிண்ணம் எங்கே?' என்று கேட்கிறார்!  ஓடிப் போய்
பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார். பகவான்
ஸர்வவ்யாபி! என்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்! 

Monday, December 10, 2012

'விஸ்வரூபம்’ - டி.வி-யில் ரிலீஸ்!

உலகத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக, 'விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக சின்னத் திரையில் வெளியிடுவதன் மூலம், சினிமாத் துறையில் அதிரடிப் புரட்சி செய்யப்போகிறார் கமல்ஹாசன்.

'விஸ்வரூபம்’ படம் ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்​களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு முதல் நாளே அதாவது, 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சின்னத் திரையில் 'விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுகிறார் கமல்ஹாசன். இதற்காக, டாடா ஸ்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்த 'விஸ்வ​ரூபம்’ படத்தை மொத்தமாக டாடாவிடம் விற்கவில்லை. திரையிடப்போகும் ஒரு ஷோவுக்கு ஒரு கனெக்ஷனுக்கு 1,000 ரூபாய் வீதம் கணக்கு வைத்து பணத்தை வசூலிப்பார்களாம். வசூலாகும் தொகையில் சதவிகித அடிப்படையில் கமலும் டாடாவும் பிரித்துக்கொள்வார்கள்.

 


எப்போதுமே ஒரு நடிகன் நல்ல வியாபாரியாக இருக்க முடியாது. ஆனால், கமல் நல்ல நடிகன், பெஸ்ட் பிசினஸ்மேன். இது யாராலும் தடுக்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி. 

Sunday, December 09, 2012

சி.டி.எஸ். காசோலை!

வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய காசோலைகள் செல்லாது. புதிய சி.டி.எஸ். காசோலைகள் மட்டும்தான் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சி.டி.எஸ். காசோலை என்றால் என்ன? இதை ஏன் இப்போது கொண்டு வருகிறார்கள்? இந்த சி.டி.எஸ். காசோலையைப் பெறுவது எப்படி? என பலருக்கும் பலவித கேள்விகள் இருப்பதால் அந்த கேள்விகளை கார்ப்பரேஷன் வங்கியின் சேவைப் பிரிவின் தலைமை மேலாளர் எஸ்.சீனிவாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
  
 

''தற்போதுள்ள நடைமுறைப்படி, காசோலை களை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய இமேஜை ஸ்கேன் செய்து, நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு வங்கிகள் அனுப்புகின்றன. அங்கிருந்து அந்தந்த வங்கிகளுக்கு காசோலை களின் இமேஜ் அனுப்பப்படும். வங்கிகள் அந்த இமேஜை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையென்றால் வாடிக்கையாளரின் கணக்குக்குப் பணத்தை வரவு வைக்கும். ஏதாவது பிரச்னை என்றால் திரும்ப அனுப்பிவிடும்.  இந்த நடைமுறையைத்தான் கடந்த ஒரு வருடமாக வங்கிகள் பின்பற்றுகின்றன.

இப்படி செய்வதில் வங்கிகளுக்குப் பல சிக்கல். ஒவ்வொரு வங்கியின் காசோலையும் வித்தியாசமாக உள்ளது. தேதி, வாடிக்கையாளரின் கணக்கு எண், வங்கியின் பெயர், அடையாளச் சின்னம் என ஒவ்வொன்றும் ஓர் இடத்தில் இருக்கும். இதனால், காசோலைகளை சரிபார்க்க  காலதாமதம் ஆகிறது. இந்த காலதாமதத்தைத் தீர்க்கத்தான் சி.டி.எஸ். காசோலைகளை நடை முறைப்படுத்த உள்ளது ரிசர்வ் வங்கி.

 

 
இந்த காசோலையில் தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண் எழுதுவதற்கு தனி கட்டங்கள் இருக்கும். சி.டி.எஸ். காசோலைகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள கட்டத்தில் வாய்டு ( என்று இருக்கும். இதை வைத்து போலிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வங்கிகளில் காசோலை களின் இமேஜை ஸ்கேன் செய்யும்போதே போலிகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

புதிய சி.டி.எஸ். காசோலைகள் பெறும் வழிமுறைகள் சுலபமான வைதான். ஏற்கெனவே உள்ள காசோலைகளை வங்கிக் கிளை களில் ஒப்படைத்துவிட்டு, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும்  விண்ணப்பித்து பெறலாம்.

ஏற்கெனவே முன்தேதி இட்ட காசோலைகளை யாருக்காவது தந்திருந்தீர்கள் என்றால் அவற்றைத் திரும்ப வாங்கி, அவர்களுக்குப் புதிய சி.டி.எஸ். காசோலைகளை வழங்குவது உங்களின் பொறுப்பு. கடந்த மாதம் நீங்கள் புதிய காசோலை வாங்கி இருந்தால் அது பெரும்பாலும் சி.டி.எஸ். காசோலையாகவே இருக்கும்.  

சி.டி.எஸ். காசோலைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் குறுகிய நேரத்தில் வாடிக்கை யாளர்கள் பணத்தைப் பெறமுடியும். வெளியூர் காசோலைகளுக்கு தனிக் கட்டணம் எதுவுமில்லை. இதெல்லாம் வாடிக்கையாளருக்குச் சாதகமான விஷயங்கள்.

அதே சமயம், முன்பெல்லாம் காசோலையில் எழுதும்போது தவறு ஏற்பட்டால் அதை அடித்துத் திருத்தலாம். ஆனால், இனி அடித்து எழுதும் காசோலைகளை வங்கி ஏற்காது''
உங்கள் தட்டில் உணவா...விஷமா ?

மருத்துவத்தில் இரண்டு வகைகள் உண்டு. வருமுன் காப்பது, வந்தபின் சிகிச்சை. சொல்லுங்கள்... இதில் முதல் வகை மருத்துவம்தானே சிறந்தது!
'ப்ரிவென்ஷன் ஈஸ் பெட்டர் தென் க்யூர்' (Prevention is better than cure)என்பது ஆங்கிலப் பழமொழி. இதைவிடக் கடுமையான சீனப்பழமொழி ஒன்று உண்டு.The superior doctor prevents sickness; The mediocre doctor attends to impending sickness; The inferior doctor treats actual sickness.அதாவது, உயர்தர மருத்துவர் வியாதி வராமல் தடுப்பார்; நடுத்தர மருத்துவர் வரப்போகும் நோய்க்கு வைத்தியம் செய்வார்; கீழ்த்தர மருத்துவர்தான் வந்துவிட்ட நோய்க்கு வைத்தியம் செய்வார்.

இதையேதான் தாமஸ் எடிசன் என்கிற பிரபல மருத்துவ அறிஞர் இப்படிக் கூறுகிறார்... The Doctor of the future will give no medicine - but will concentrate in diet and preventive aspects.'எதிர்கால மருத்துவர் மருந்துகள் கொடுக்கமாட்டார் - நோயைத் தடுப்பதிலும் உணவு முறைகளிலுமே கவனம் செலுத்துவார்’ என்கிறார்.
ஆக, வரும் முன் காப்பதே சிறந்த மருத்துவ முறை என்பதைத்தான் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வரும் முன் காப்பது என்றால்... எப்படி?!


அம்மை, காலரா போன்ற தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது அல்ல. இவற்றையெல்லாம்விட முக்கியமான தடுப்புமுறை ஒன்று உண்டு. அது... உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் உள்ள தவறுகளைச் சரிபடுத்திக்கொள்வது.

அப்படி என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம் நாம்..?! சொல்கிறேன்..!

பண்டைய மனிதனின் வாழ்க்கை முறையும், இன்றைய மனிதனின் வாழ்க்கை முறையும் எல்லா விஷயங்களிலும் தலைகீழாக மாறியுள்ளன. இதைத்தான் வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று சொல்கிறோம். தடம்புரண்ட பல வாழ்க்கை முறைகளை மீண்டும் மாற்றியமைத்தால், பெரும்பாலான உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.


ஆதி மனிதன் உணவுக்காக விலங்குகளைப்போல் வேட்டையாடி வாழ்ந்துவந்தான். கடின உடல் உழைப்பையும், கலப்படமில்லாத காய், கனிகள், இறைச்சி என்ற உணவு முறையையும் அவன் பின்பற்றினான். அப்போதெல்லாம், விபத்துக்களால், கொடிய விலங்குகள் மற்றும் விஷப்பூச்சிகளால், தொற்று நோய்க்கிருமிகளால் மட்டுமே அவனுக்கு மரணம் நேர்ந்தது. அடிக்கடி மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட போர்களும் ஆயிரக்கணக்கில் உயிர்களைப் பலி வாங்கின. ஆனால், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சர்க்கரைநோய், புற்றுநோய் போன்ற வியாதிகளில் மடிந்த மனிதன் எவனும் கிடையாது.

வேட்டையாடுதலை நிறுத்தி, காடுகளைச் சீராக்கி, வயல்வெளிகளை உருவாக்கி, பயிர்த்தொழில் ஆரம்பித்த காலம் முதல் அவனுக்கு உடல் உழைப்பு குறைந்தது; ரத்தக்கொதிப்பு நோய் ஆரம்பித்தது. காலப்போக்கில், காய், கனிகள் என்கிற இயற்கை உணவு முறைக்கு மாறாக, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்தான் (விஞ்ஞான ஆராய்ச்சியில் மனிதன் பெரிய சாதனைகளைப் புரிந்தது முதலில் சமையலில்தான்!). சமைக்கும்போது, உடலுக்கு நலம் தரும் பல நல்ல சத்துப் பொருட்கள் அழிந்தன. இது போதாதென்று உடலுக்குக் கேடு விளைவிக்கும் பல பொருட்களை உணவில் சேர்த்தான். உதாரணமாக, பொட்டாசியம் எனும் உப்பு உடலுக்கு மிகவும் நல்லது. இதய பாதுகாப்புக்கும், ரத்தக் கொதிப்பைத் தடுப்பதற்கும் இந்த உப்பு அவசியம். சமையலில் இந்த பொட்டாசியம் வெளியேறிவிடுகிறது. ஆனால், உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் சோடியம் (சமையல் உப்பு) சேர்க்கப்படுகிறது. அந்த நாள் முதல்தான் மனிதனுக்கு எண்ணற்ற நோய்கள் தோன்ற ஆரம்பித்தன. ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக நோய்கள், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் என அவன் உடல் இருப்பிடமானது அதற்குப் பின்தான் (உப்பைப் பற்றி இன்னும் விரிவாக பிறகு விவாதிப்போம்).
அடுத்து அவன் சமையலில் சேர்க்க ஆரம் பித்தது... அதுதான் எண்ணெய். இறைச்சி, மீன், காய்கறிகளில் இருக்கும் கொழுப்பு போதாதென்று புதிதாக எண்ணெய் போன்ற கொழுப்புகளையும் சேர்த்துக்கொண்டே போனான். புளி, மிளகாய் போன்ற மசாலாக்களையும் கலந்தான். நல்ல நிறம் வேண்டும் என்று சிலவற்றையும், நல்ல மணம் வேண்டும் என்று சிலவற்றையும், நல்ல பளபளப்பு வேண்டும் என்று சிலவற்றையும், கெட்டுப்போகாமல் நீடித்துப் பாதுகாக்க என்று சிலவற்றையும் - இப்படியாக புதிது புதிதாக சேர்த்துக்கொண்டே போனான். நாளடைவில், வணிகர்கள் சிலரின் பேராசையால், கலப்படம் என்ற புதிய கலாசாரம் உருவாகியது. எண்ணற்ற நச்சுப்பொருட்கள் உணவில் கலந்தன.

இத்தனை வேதிப்பொருட்களும் உணவில் ஒன்று சேரும்போது, மனிதனுக்குப் புதுப்புது வியாதிகள் வருவதில் வியப்பு ஏது..?!

நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதைப் போல், எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்பதும் மிகமுக்கியம். அதிக உணவு ஆபத்து என்பதை உலகளவில் எல்லோரும் இப்போது உணரத் தொடங்கிவிட்டனர்.

''நாம் உண்ணும் உணவில் நான்கில் ஒரு பங்கில்தான் நாம் உயிர் வாழ்கிறோம் - மீதம் மூன்று பங்கில் டாக்டர்கள்தான் உயிர் வாழ்கிறார்கள் (We only live of a quarter of what we eat - the doctors live of the remaining)என்பது எகிப்திய பழமொழி.

'மூன்று வேளை உண்பவன் ரோகி
இரண்டு வேளை உண்பவன் போகி
ஒரு வேளை உண்பவன் யோகி’ என்பது நம்முடைய பழமொழி.


மனித உடம்பை, வெறும் காற்றடைத்த பை என்று இகழ்ந்து, தவமே சிறந்தது என்று தியான வாழ்க்கை வாழ்ந்த முனிவர்களுள் திருமூலர் முற்றிலும் மாறுபட்டவர். 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பவர், அதற்கான முக்கிய வழியையும் கூறுகிறார்...

'அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுளகண்டம் கறுத்த கபாலியும் ஆமே’ என, 'குறைவான உணவே ஆரோக்கியத்தின் சூட்சமம்' என்று தெளிவுபடுத்துகிறார்  திருமூலர்.

அறம் - பொருள் - இன்பம் என மனிதனின் எந்தப் பிரச்னையையும் விட்டுவைக்காத திருவள்ளுவர், 'மருந்து’ என்கிற அதிகாரத்தின் 10 குறள்களில், 6 குறள்கள் சீரற்ற உணவு முறையே நோய்க்குக் காரணம் என்பதை ஆணித்தரமாகச் சொல்வதற்காக பயன்படுத்துகிறார் (மனிதனைக் கொல்லும் 10 முக்கிய வியாதிகளில் 6 வியாதிகள், உணவு சம்பந்தப்பட்டவை என்கிற இன்றைய ஆராய்ச்சியையும், இதையும் நான் வியந்து பொருந்திப் பார்த்துள்ளேன்!). குறிப்பாக,

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு  
                               அருந்தியது
அற்றது போற்றி உணின்’ என்ற குறளில், ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை அறிந்து பின்பு உண்டானாயின், அவன் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்று வேண்டுவதில்லை என்று மிகப்பெரும் ஃபார்முலாவை மிக எளிதாக எடுத்து வைக்கிறார் வள்ளுவர்.

ஒரு வேளை உணவாவது குறைத்தால், உடலுக்கு மிகவும் நல்லது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. 'ஒரு வேளை உணவை இழத்தல், நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது’ என்பது ஸ்பெயின் பழமொழி.

‘Eat your morning breakfast as a prince... Eat your dinner like a pauper’என்பது ஆங்கிலப் பழமொழி. 'காலை உணவை இளவரசன் மாதிரி சாப்பிடு, இரவு உணவை பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடு' என்பது அதன் அர்த்தம். நம் ஊரில் பிராமணர்களின் உணவுமுறை கிட்டத்தட்ட இதுமாதிரிதான். காலை உணவும், மதிய உணவும் கலந்த (breakfast + lunch = brunch) உணவை 9 மணிக்கு எடுத்துக் கொண்டு, ஆபீஸ் வேலைகளை முடித்து விட்டு, மாலையில் எளிய இரவு உணவு என்ற அவர்களின் உணவுமுறை அர்த்தமுடையதுதான்.

பொதுவாக, நம்மில் பெரும்பாலானவர்கள்... பசி எடுத்துச் சாப்பிடுவதில்லை. கடிகாரத்தைப் பார்த்து, 'ஆஹா, மணி 9 ஆகிவிட்டது...’ என்று வயிற்றுக்குப் போட்டுக் கொள்கிறோம். ஆனால், மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எதுவும் அப்படியில்லை. பசித்தபோது மட்டுமே உணவு தேடுகின்றன, வேட்டையாடுகின்றன. டி.வி. சேனல்களில் (Discovery channel, Animal planet) பார்த்திருப்பீர்களே... சிங்கம் ஒன்று படுத்திருக்கும். அதற்கு வெகு அருகில் மான், குதிரை போன்ற மற்ற விலங்குகள் சர்வ சாதாரணமாக புல் மேய்ந்து கொண்டிருக்கும். சிங்கத்துக்கு எப்போது பசிக்கிறதோ, அப்போது மட்டும் பாய்ந்து சென்று ஒரு மானை அடித்துக் கொன்றுவிட்டு, கூட்டமாகச் சேர்ந்து சாப்பிடும். ஆனால், மனிதர்கள் பசித்தாலும், பசிக்காவிட்டாலும் மூன்று வேளை முழுச்சாப்பாடும், மற்ற வேளைகளில் நொறுக்குச் சாப்பாடும் சாப்பிடுகிறோம்.

மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பிச்சப்பன் தலைமையில் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பாதாள அறை ஒன்றில் சகல வசதிகளுடன் ஒருவர், ஒரு வாரம் தங்குவார். அவருக்கு நாள், நேரம் குறித்த காலண்டர், கடிகாரம் போன்ற வசதிகள் கிடையாது. மற்றபடி, புத்தகங்கள், சங்கீதம் போன்ற வசதிகள் உண்டு. பசி எடுக்கும்போது போனை எடுத்து, என்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். சற்று நேரத்தில் கேட்ட உணவு பக்கத்து அறையில் வைக்கப்படும். நினைத்தபோது தூங்கலாம், விழிக்கலாம். இப்படி ஒரு வாரம் ஆராய்ந்ததில், பலருக்கு மூன்று வேளை சாப்பாடு தேவையில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

தொன்மைப் பழமொழிகள் தொடங்கி, இன்றைய ஆராய்ச்சிகள் வரை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு இங்கே பேசுவதற்குக் காரணம், நாமும் இனி கைக்கடிகாரத்தைப் பார்க்காமல், வயிற்றுக்குள் இருக்கும் உயிரியல் கடிகாரத்தை (biological clock) பார்த்து மட்டுமே சாப்பிட்டால், ஆரோக்கியம் வளர்பிறை என்பதை வலியுறுத்திச் சொல்வதற்காகத்தான்!

அதேபோல, விரதமும் முக்கியமான உணவுக் கட்டுப்பாட்டு முறையே! மனித உடலுக்கு நன்மை பயக்கும் பல நல்ல விஷயங்களை மருத்துவர்களோ மற்றவர்களோ சொல்வதைவிட, மதங்கள் மூலமாக - பக்தி மார்க்கத்தில் சொன்னால் நன்றாக எடுபடும் என்று நம் முன்னோர்கள் நினைத்தார்கள். அதன் விளைவுதான் நாம் உலகெங்கும் பார்க்கும் விரத முறைகள்.

ஈஸ்டர் என்றால் 40 நாட்கள் கடும்விரதம் எடுப்பது கிறிஸ்தவர்கள் வழக்கம். ரம்ஜான் என்றால் 30 நாட்கள் கடும்விரதம் அனுஷ்டிப்பது முகமதியர்களின் வழக்கம். இந்து மதம் இதையெல்லாம் தாண்டி பல்வேறு விரதங்களைப் புகுத்தியது. சபரி மலை செல்வோர், 48 நாட்கள் கடும்விரதம் இருப்பதையும் நாம் அறிவோம். இப்படியாக எல்லா மதத்தினரும் ஒரே மாதிரியாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் அனுஷ்டிப்பது ஆச்சர்யமாக இல்லையா?!

இந்த மாதிரி விரத காலங்களில், சர்க்கரை நோயாளிகள் பலருடைய சர்க்கரை அளவு வெகுவாகக் குறைவதையும், ரத்தக் கொதிப்பு நோயாளிகள் பலருடைய ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் மருத்துவர் என்கிற வகையில் நான் கண்கூடாகப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னிடம் வரும் நோயாளிகள் பலரிடம், 'பேசாம வருஷத்துக்கு மூணு தடவை நீ சபரிமலை போகலாமே!’ என்பேன் அடிக்கடி.

திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளுக்கு என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள விரத முறைகள்... மனித உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அதன் மூலம் உள்ளத்தையும் உயிரையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் வகுத்த வழிமுறைகளே என்று புரிகிறதுதானே!

திருமூலர் சொல்லும் 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பதன் பொருளும் இதுதானே!

உண்டி சுருங்குவதும், பல்வேறு விரத முறைகளும் உடலுக்கு நல்லது என்று குறிப்பிட்டேன். இவை வெறும் மதரீதியான சம்பிரதாயங்களா அல்லது இவற்றுக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் உண்டா என்பதைச் சற்று ஆராய்வோம்.

மருத்துவ முறைகளில் சிறந்தது உண்ணா நோன்பே என்று முன்னோர்கள் நினைத்தனர். 'லங்கணமே பரம ஒளஷதம்’ என்பது முதுமொழி. விரதத்தை முழு உண்ணா நோன்பு (Dry Fasting), நீர் உண்ணா நோன்பு (Water Fasting), சாறு உண்ணா நோன்பு (Juice Fasting) என்று மூன்று முறைகளில் நம்மை மேற்கொள்ள வைத்தனர் முன்னோர்.

தண்ணீர்கூட அருந்தாமல், காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் விரதம், முழு உண்ணா நோன்பு. இதனை ஒருநாள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அதற்குமேல் மேற்கொண்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம்.

தேவைப்படும்போது தண்ணீர் மட்டும் அருந்துவது, நீர் உண்ணா நோன்பு. இதை 7 நாட்கள் கடைப்பிடிக்க முடியும். என்றாலும், 3 நாட்கள் மேற்கொண்டாலே போதுமானது.

தேவைப்படும்போது தண்ணீருக்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாறு, ஆரஞ்சுப் பழச்சாறு, திராட்சை, அன்னாசி, மாம்பழம், பப்பாளிச் சாறு போன்றவற்றை அருந்தி விரதம் இருப்பது, சாறு உண்ணா நோன்பு. 7 நாட்கள் இப்படி இருக்கலாம். அதற்கு மேலும் அவரவர்களின் சக்திக்கு ஏற்றவாறு இருப்பதுண்டு.

மகாத்மா காந்தி முதல் அன்னா ஹஜாரே வரை பல்வேறு தலைவர்கள் பல்வேறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததை நாம் அறிவோம். சமூக, அரசியல்ரீதியான விழிப்பு உணர்வை ஏற்படுத்த அவை மேற்கொள்ளப்பட்டன. நாள் கணக்கான இந்த விரதங்களைத் தவிர, சில மணிக்கணக்கான விரதங்களையும் நாம் பார்த்ததுண்டு. காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் என்று பலர் இருப்பது, பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும், விரதம் இருப்பவர்களின் உடல்நலத்துக்கு சிறிது நன்மை ஏற்படுத்தும். நம் உடல் நலத்துக்கு எந்த விரதம் உகந்தது, எப்படி உகந்தது என்று பார்ப்போம்.

வாரத்தில் ஒருநாள் விரதம் இருப்பது எல்லோருக்கும் மிகவும் சிறந்தது. அப்படி விரதம் இருக்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. அப்போது கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கிளைக்கோஜன் (Glycogen) என்ற சர்க்கரையை உடல் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பும் எரிபொருள் சக்தியாக மாற்றப்பட்டு உடல் உறுப்புகளை இயங்க வைக்கும். இவற்றால், உடலின் அடிப்படை இயக்கக் கூறுபாடுகள் (Basal metabolic rate) குறைவாகிறது. இதன் நேரடி விளைவு... ரத்தத்தில் கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவு குறைவதோடு, ரத்த அழுத்தமும் சீராகிறது.

இதனால் ஏற்படும் இன்னொரு சுவாரசியமான விளைவு - பல ஹார்மோன்கள் திறம்பட உற்பத்தியாகின்றன. அவற்றில் ஒரு ஹார்மோன், வயது முதிர்வைத் தடுக்க வல்லது. அந்த 'ஆன்டி ஏஜிங் ஹார்மோன்’, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, முதுமையில் வரும் பல்வேறு நோய்களையும் முறியடித்து ஆயுட்காலத்தை கணிசமாக நீட்டிக்க உதவும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விரதம் இருக்கும் நேரத்தில் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களும், கழிவுப் பொருட்களும் நீக்கப்படுகின்றன. விஷத்தை முறியடிக்கும் முறை (Detoxification process) என்று இதை அழைப்போம். இந்த நச்சு, கழிவுப்பொருட்கள் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், சுரப்பிகள் மற்றும் சருமம் மூலம் வெளியேற்றப்படுகின்றன.

மொத்தத்தில் விரதத்தின் பலனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகின்றன. அஜீரணக் கோளாறுகள் சரியாகின்றன. மனமும் அமைதியாகி, இயற்கையான, இதமான தூக்கம் வரும். மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு திடீரென வெகுவாகக் குறைவது நல்லதல்ல என்பதால், அவர்கள் உண்ணா நோன்பு மேற்கொள்வது ஆபத்தாகலாம். மற்றபடி எல்லா தரப்பினருக்குமே இது நல்ல வாழ்க்கை முறை.

நம்மில் பலரும் தற்போது ஒரு விசித்திரமான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது, அரிசிச் சோற்றை மட்டும் தவிர்த்து... இட்லி, தோசை, காபி போன்ற பலகாரங்களை உண்பது விரதமாகக் கருதப்படுகிறது. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதே தவிர, இதனால் வேறு ஒன்றும் பிரயோஜனமில்லை.

வாரம் ஒருமுறை விரதம் இருக்கலாம் என்று கூறினேன். இதைவிட நல்ல முறை ஒன்று உண்டு. அதுதான் தினமும் பட்டினி இருப்பது! அது எப்படி முடியும்? இதைக் கடைப்பிடிப்பதற்கு சுலபமான வழி, இரவுச் சாப்பாட்டை சீக்கிரமே முடிக்க வேண்டும். அதாவது மாலை 6 - 7 மணிக்கு. அதன் பிறகு 12 மணி நேரம் விரதம். காலைச் சிற்றுண்டியை 7 - 8 மணிக்குச் சாப்பிடலாம். காலை உணவுக்கு மேலை நாட்டவர்கள் என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள் கவனியுங்கள்.அதாவது விரதத்தை முடித்தல்! எவ்வளவு பொருத்தமான வார்த்தை!

'ஐந்துக்கு எழுந்திரு - ஒன்பதுக்கு உணவருந்து. ஐந்துக்கு சாப்பிடு - ஒன்பதுக்கு உறங்கு’ என்ற பிரபல ஃபின்லாந்து பழமொழியும் இந்த தத்துவத்தையே வலியுறுத்துகிறது என்பதை நினைவுகொள்வோம்.

நச்சுப் பொருட்களை வெளியேற்றும் உபாயமாக விரதங்களைச் சுட்டிக் காட்டினேன். ஆனால், இதையெல்லாம் மீறி, நூற்றுக்கணக்கான நச்சுப்பொருட்களை உணவு என்ற ரூபத்தில் நாம் அன்றாடம் உண்டு வருகிறோம். அவற்றைத் தெரிந்துகொண்டால் தவிர, அவற்றிலிருந்து விடுபடுவது குறித்து நாம் நினைக்க மாட்டோம். நாம் உட்கொள்ளும் பல முக்கிய உணவுகள், தற்போது எவ்வாறெல்லாம் சிதைந் திருக்கின்றன?Saturday, December 08, 2012

எனது இந்தியா (மொழியும், நிலமும் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

வரலாறு திரிக்கப்படும், சிதைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆள்பவர்களும் ஆள விரும்புகிறவர்களும் வரலாற்றைத் தங்களின் சுயலாபங்களுக்காகத் திருத்தி எழுதுவதும், தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிக்கொள்வதும் தொடர்ச்சியாக நடக்கும் மோசடி. மற்ற அறிவுத் துறைகளைவிட வரலாறுதான் அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறது. அதிக சர்ச்சைக்கும் சண்டைக்கும் காரணமாக இருக்கிறது. காலத்தின் மனசாட்சியாக வரலாறு இருப்பது அதிகாரத்தில் இருப்பவர்களில் பலருக்கு உறுத்தலாக இருக்கிறது. வரலாற்றை முற்றிலும் அழித்துவிட முடியாது என்பதால், அதை திரித்துக் கூறுவதில் அக்கறை காட்டுகிறார்கள்.

வரலாற்றைப் பாதுகாக்க முக்கியத் தேவை மொழியைப் பாதுகாப்பதே. மொழி என்பது வெறும் பரிவர்த்தனைக்கான வாகனம் மட்டும் அல்ல. அதுதான் வரலாற்றின் ஆதாரம். கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் சுவடிகளிலும் பதிவுசெய்யப்பட்ட வரலாறுகளே, கடந்த காலத்தை இன்று நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே நாம் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறோம்.


இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. அவற்றில், 216 மொழிகளை 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். 1,576 மொழிகள் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1,796 மொழிகள் இந்தப் பட்டியலுக்குள் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இவற்றில், 18 மொழிகள் அதிகாரப்பூர்வ அரசு மொழிகள். மீதம் உள்ள மொழி​கள் வெறும் பேச்சுவழக்கில் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் பெரும்​பாலான மொழிகளுக்குஎழுத்து வடிவமே கிடையாது. இந்தியாவின் சில மாநிலங்களில் அந்த மாநிலங்களின் முக்கிய மொழி​களைவிட பிறமொழி பேசு​பவர்​கள்தான் பெரும்பான்​மையாக வசிக்கின்றனர்.

சிக்கிம் மாநிலத்தில் பெரும்​பான்மையாகப் பேசப்படும் மொழி நேபாளி. 63 சதவிகித சிக்கிம் மக்கள் நேபாளிதான் பேசுகின்றனர். திரிபுராவில் அந்த மாநில மொழியான திரிபுரியைவிட, பெங்காலிதான் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியாகத் திகழ்கிறது. இங்கு, 68.9 சதவிகிதம் பேர் பெங்காலி பேசுகின்றனர். திரிபுரி பேசுபவர்கள் 23.5 சதவிகிதம் மட்டுமே. பஞ்சாப் மாநிலத் தலைநகராகவும், யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் சண்டிகரில், பஞ்சாபியைவிட இந்தி மொழிதான் பெரும்பான்மையினர் பேசும் மொழியாக உள்ளது.

61.1 சதவிகிதம் பேர் இந்தி பேசுகின்றனர். பஞ்சாபி பேசுவோர் 34.7 சதவிகிதம்தான். இந்தப் பிரச்னை இந்தியாவெங்கும் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துவருகிறது. சமகாலப் பிரச்னைக்கானத் தீர்வை அறியவேண்டுமானால், அதன் வேரை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவில் கோலோச்சிய பல மொழிகள் இன்று அடையாளம் இல்லாமல் அழிந்துபோய் விட்டன. ஒரு மொழி அழியும்போது அந்த மொழியில் பதிவாகியிருந்த மக்கள் வரலாறும் சேர்ந்தே அழிகிறது. 2010-ம் ஆண்டு அந்தமான் நிகோபார் தீவில் பேசப்பட்டுவந்த பழைமைவாய்ந்த 'போ’ என்ற மொழி மரணம் அடைந்தது. அந்த மொழியைப் பேசிவந்த 'போவா’ என்ற 80 வயதுப் பெண் இறந்ததும், அந்த மொழியும் அழிந்துவிட்டது.

அதுபோலவே, கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியா என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், மரணம் அடைந்தார். அவரோடு கேரளாவின் கொச்சிப் பகுதியில் பேசப்பட்டுவந்த 'க்ரியோல்’ என்ற மொழியும் இறந்துவிட்டது. இது, போர்த்துக்கீசிய மலையாளக் கலப்பு மொழி. 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொச்சிப் பகுதி கத்தோலிக்கர்களால் பேசப்பட்ட மொழி. அழிந்துவிடும் நிலையில் உள்ள மொழிகளின் விவரத்தை யுனெஸ்கோ நிறுவனம் 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதில், 2,473 மொழிகள் அழியும் அபாயத்தில் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஐந்து மொழிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்சயம் அழிந்துவிடும், 82 மொழிகள் அழியும் அபாயம் உள்ளவை எனச் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

மைசூரில் உள்ள இந்திய மொழிகள் கழகம், 'உலக நாடுகளின் நிலையோடு ஒப்பிடுகையில் தாய்மொழி அழியும் அபாயம் இந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் மொழிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று கூறுகிறது. மொழிகளைப் பாதுகாக்க அது, பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும். கூடுதலாக, பேச்சுவழக்கில் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டும் எழுத்து வடிவில் புத்தகங்களாக வெளிவருவதும் அவசியம். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவிலும் ஏற்படும். அதாவது, ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவில் 250 மொழிகள் பழங்குடியினரால் பேசப்பட்டன. இன்று, அவற்றில் இரண்டு மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 90 ஆயிரம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டு உள்ளார். அவற்றில், மூன்றில் இரண்டு பகுதி தென்னிந்தியாவைச் சேர்ந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் தன்மை குறித்து ஆய்வுசெய்த எ.சுப்பராயலு, தமிழ்க் கல்வெட்டுக்களை காலநிரல்படி பகுப்பாய்வுசெய்து கி.மு. 300 - கி.பி. 500-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 400. கி.பி. 501 - கி.பி. 850-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 900. கி.பி. 851- கி.பி. 1300-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். கி.பி.1300 - கி.பி.1600-க்கு இடையில் உள்ளவை 6,000. கி.பி. 1600 - கி.பி.1900-க்கு இடைப்பட்டவை 2,000. வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை 300 என ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்களில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பதிப்பித்து முறையாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. கல்வெட்டுக்களில் இருக்கும் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் போன்றவற்றை இன்று நம்மால் எளிதாக வாசிக்க முடியாது. காரணம், அவை இன்று வழக்கில் இல்லை. இந்த எழுத்து வடிவங்களைப் பற்றி அறிந்துகொள்வது வரலாறு படிக்கிறவர்களுக்கு மிக அவசியம்.

பிராமி என்பது இந்தியாவில் இருந்த ஒரு பழங்கால எழுத்து முறை. அசோகரின் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களிலேயே எழுதப்பட்டுள்ளன. பௌத்த அறிஞரான ரீஸ் டேவிட், பிராமி எழுத்து முறையானது மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார். பிராமி, இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதப்பட்ட ஒரு அபுகிடா வகை எழுத்து முறை. பிராமி முறையில் மெய் எழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிர் எழுத்துக்களுக்கு தனியான வடிவமும், உயிர்மெய் எழுத்துக்களை எழுத, மெய் எழுத்துக்களுக்கு சில உயிர்க்குறிகள் மாற்றப்படுகின்றன. கூட்டெழுத்துக்களை எழுதும்போது, ஓர் எழுத்துக்குக் கீழே இன்னோர் எழுத்து எழுவது இதன் இயல்பு. இந்த வகையில்தான், கல்வெட்டுக்களில் பிராமி எழுத்து வடிவங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

இன்னோர் எழுத்து முறை கரோஷ்டி. இது, வடமேற்கு இந்தியாவிலும் ஆப்கனிலும் பயன்​படுத்தப்​பட்டு வந்திருக்கிறது. பிராமி எழுத்து முறை இந்தியா முழுவதும் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் உள்ள பிராமியை 'தமிழ் பிராமி’ என்கிறார்கள். இதை, தமிழி என்றும் சில அறிஞர்கள் அழைக்கிறார்கள். ஆனால், வரலாற்று அறிஞர் ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமி என்றே கூறுகிறார். ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தமிழி எனப்படும் தமிழ் பிராமி எழுத்து கி.மு. 500-க்கு முற்பட்டது என்கிறார் டாக்டர் சத்தியமூர்த்தி.

திருநெல்வேலி மாவட்டத்தில் மருகால்தலை என்ற ஊருக்கு அருகில் உள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கீழவளவு, முத்துப்பட்டி, அரிட்டாபட்டி, கருங்காலக்குடி, வரிச்சியூர், மருகால்தலை, குன்னக்குடி, ஆறுநாட்டார்மலை பாண்டவமலை ஆகிய இடங்களில் உள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் கண்டு​பிடிக்கப்​பட்டன.

ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமிக் கல்​வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார். தமிழ் பிராமி எழுத்து​முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும், எழுத்து ஒற்றுமையும் அதிகமாக இருப்பதால், செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும் 4,000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அசோகர் காலக் கல்வெட்டுக்களில் பிராமி எழுத்துக்கள் இருந்ததால் பிராமி எழுத்து வடிவம் அங்கிருந்தே தெற்குப் பகுதிக்குப் பரவி இருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், தமிழகத்தில் உள்ள கொடுமணல் ஆய்வு மூலம் தெற்கில் இருந்தே வடக்குக்குப் பிராமி எழுத்துக்கள் சென்று இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. பௌத்தர்களுக்கும் தமிழுக்குமான உறவை ஆராய்ந்த சீனி.வேங்கடசாமி, பேச்சுவழக்கில் இருந்த பிராகிருத மொழிகளிலேயே பௌத்தர்களும் ஜைனர்களும் தங்களது மதநூல்களை எழுதினர். பௌத்தர், மாகதி எனப்படும் பாலி மொழியையும் ஜைனர் அர்த்தமாகதி எனப்படும் சூரசேனியையும் மொழியாகக்கொண்டு எழுதி வைத்ததால், தமிழ்நாட்டிலே அந்த மதங்கள் பரவியபோது, தமிழரும் அந்த மதநூல்களைப் பயிலவேண்டியது ஆயிற்று. அந்தப் பிராகிருத மொழிகளிலே, சமஸ்கிருத மொழியில் உள்ளதுபோல நான்கு ககரங்களும் நான்கு டகரங்களும், இரண்டு சகரங்களும், இரண்டு ஜகரங்களும் ஷ, க்ஷ, ஸ, ஹ முதலிய எழுத்துக்களும் இருப்பதால், அந்த எழுத்துக்கள் இல்லாத தமிழ் மொழியிலே எளிதாக எழுதிப் படிக்க முடியவில்லை. ஆகவே, புதிதாக ஒருவகை எழுத்துக்கள் உருவாக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி உருவானதே கிரந்த எழுத்து.