Search This Blog

Sunday, July 29, 2012

எனது இந்தியா (இந்தியாவின் அரண்! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


காளி ஆற்றுக்கும் டீஸ்டா ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள பகுதி நேபாள இமயமலை. இந்தப் பகுதியில்  எவரெஸ்ட், கஞ்சன் ஜங்கா, தவளகிரி, அன்னபூர்ணா ஆகிய சிகரங்கள் உள்ளன. டீஸ்டா ஆற்றுப் பள்ளத்தாக்கில் இருந்து பிரம்மபுத்திரா ஆறு வரை உள்ள பகுதி அஸ்ஸாம் இமயமலை. பர்மா பகுதியில் இந்த மலையின் உயரம் குறைந்து தாழ்ந்த குன்றுகளாகக் காணப்படுகின்றன. இவை, பாட்காய் குன்றுகளில் இருந்து உலூஷாய் குன்றுகள் வரை வடக்குத் தெற்காக அமைந்துள்ளன. இமயமலை, இந்தியாவுக்கு ஓர் அரணாக விளங்கியபோதும், பல்வேறு நாட்டு வணிகர்களின் நுழைவாயிலாகவும் விளங்கி இருக்கிறது. சீனாவின் பட்டுச் சாலை இமயத்தில்தான் நுழைகிறது. இதனால் அரேபிய, பெர்ஷிய, சீன வணிகர்களின் பண்பாட்டுக் கலப்பை இங்கே நாம் காணலாம்.

இமயமலைப் பகுதியை பல்வேறு சிறிய இனக் குழுக்களைச் சேர்ந்த அரசர்களே ஆட்சி செய்துவந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியின் புராதனப் பெயர் காஷ்தேஸ். அதாவது, காஷ் இன மக்களின் தேசம் என்பதாகும். இவர்கள் மத்திய இமாலயப் பகுதியில் வசித்த மலைவாசிகள். இவர்களின் வழியாக உருவானவர்களே சத்ரி இனம். இயற்கையை வணங்கி வந்த காஷ் இன மக்கள், புத்த மதம் தோன்றிய பிறகு, பௌத்தர்களாக மாறினர்.இந்திய நிலவியல் சர்வே முடிவில் 1852-ல் எவரெஸ்ட் சிகரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதன் உச்சிக்கு ஏறி சாதனை செய்ய வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் மலையேற்றக் குழுவினர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 1924-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, பிரிட்டிஷ் மலையேற்றக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் மலூரி மற்றும் ஆண்ட்ரூ இர்வின் ஆகிய இருவரும், எவரெஸ்ட் சிகரத்தைத் தொடும் முயற்சியில் மலையேறத் தொடங்கினர். ஆனால், இருவரும் காணாமல் போய்விட்டனர். 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பனியில் உறைந்துகிடந்த ஜார்ஜ் மலூரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது கைப்பையில் கிடைத்த பொருட்களையும் நாட்குறிப்பையும்கொண்டு அவர்கள் பனிப் புயலில் சிக்கி இறந்துபோனது தெரியவந்தது.


இவர்களைப் போலவே 10 பேர் எவரெஸ்ட் உச்சியை அடைய முயற்சி செய்துள்ளனர். அதில் ஒருவரும் வெற்றிபெறவில்லை. இதில், 13 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல வருடங்களாக, உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டின் உச்சியை அடைவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள மலையேறுபவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவால். 1953-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி, எட்மண்ட் ஹிலாரி என்ற நியூசிலாந்து வீரரும் டார்ஜிலிங்கைச் சேர்ந்த நேபாளியான டென்சிங் நார்கேயும், எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர். இன்றுவரை முன்னோடி சாதனையாக அது கருதப்படுகிறது. இந்த 50 வருடங்களுக்குள் எவரெஸ்ட்டின் உச்சியை 1,200-க்கும் மேற்பட்டோர் தொட்டு இருக்கின்றனர்.

இதில், ஷெர்பா அப்பா எனப்படும் நேபாளி ஆக்சிஜன் உதவி இல்லாமல் எவரெஸ்ட்டில் பயணம் செய்து அதன் உச்சியை அடைந்து இருக்கிறார். அதோடு, 13 வருடங்களில் 12 முறை எவரெஸ்ட் உச்சியை அடைந்த வீரரும் இவர் ஒருவரே!ஷெர்பா எனப்படும் நேபாளிகள் புத்த மதத்தைத் தழுவியர்கள். இந்தியாவில் இருந்து நேபாளத்துக்குஇடம்பெயர்ந்தவர்கள். யாக் எனப்படும் எருதுகளைப் பராமரித்து அதை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். கடுமையான உழைப்பாளிகள். ஷெர்பா என்றால், கிழக்கில் இருந்து வந்தவர்கள் என்று பொருள். இன்று வரை, எவரெஸ்ட் மலையேற்றத்துக்குத் துணைபுரிகின்றவர்கள் இந்த ஷெர்பாக்கள்தான். இவர்கள் பனிக் கரடி போன்றவர்கள். எவ்வளவு மோசமான பனிப்பொழிவின்போதும் இவர்களால் மலையேற முடியும். அதோடு, வழிகாட்டுதலில் இவர்களைப் போல துல்லியமாக எவரும் செயல்பட முடியாது.


எவரெஸ்ட் உச்சியை எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங்கும் அடைவதற்கு துணையாக 400 பேருக்கும் அதிகமானோர் உதவி செய்து இருக்கின்றனர். மலையேற்றக் குழுவிலேயே 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். மலையின் ஒவ்வொரு தளத்திலும் முகாம் அமைக்கவும் அவர்களுக்குத் தேவையான உணவு சமைக்கவும், சுமைகளைத் தூக்கி வரவும், மருத்துவம் செய்யவும், வழிகாட்டவும் 40-க்கும் மேற்பட்டோர் உடன் வருவார்கள்.

ஒரு முறை எவரெஸ்ட் மலையை ஏறுவதற்கு ஒரு ஆளுக்குக் குறைந்தபட்சம் ஆகும் செலவு 75,000 டாலர். இந்திய மதிப்பில் 40 லட்ச ரூபாய். பணம் இருந்தால் மட்டும் மலை ஏறிவிட முடியாது. இதற்காக, நேபாள அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்காகக் காத்திருப்பவர்களின் பட்டியலில் இப்போது 2,000 பேர் இருக்கிறார்கள். இவ்வளவு சிரமங்களைத் தாண்டி மலை ஏறி எவரெஸ்ட் உச்சியை அடைந்த டென்சிங், தனது மலையேற்ற அனுபவங்களை தொகுத்து ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். நேபாளிக் குடும்பம் ஒன்றில் பிறந்த டென்சிங், சிறு வயது முதலே மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது 11-வது வயதிலேயே மலை ஏறத் தொடங்கினார். அதோடு, பிரிட்டிஷ் மலையேற்றக் குழுவில் கூலியாக வேலை செய்துகொண்டு, இமயமலையின் பல்வேறு சிகரங்களுக்கு சென்றுவந்து இருக்கிறார்.

தனது சுய முயற்சியால், மலையின் நுட்பங்களை அறிந்த டென்சிங், ஹிலாரியுடன் இணைந்து 1953-ம் ஆண்டு எவரெஸ்ட் பயணத்தைத் தொடங்கினார். முந்தைய ஆண்டு அவர் மேற்கொண்ட இதே பயணம் கடுமையான பனிப் புயல் காரணமாகப் பாதியில் கைவிட நேர்ந்தது. ஆகவே இந்த முறை, அவர்கள் மிகக் கவனமாகப் பயணம் செய்தனர். எவரெஸ்ட்டின் உச்சியில் முதலில் யார் கால்வைத்தது என்று, பத்திரிகை பேட்டியில் டென்சிங்கிடம் கேட்டபோது, தங்கள் இருவரில் யார் முதலில் கால்வைத்தது என்பதை, தான் ஒருபோதும் சொல்லப்போவது இல்லை என்றும், இது ஒரு கூட்டு முயற்சி என்றும் கூறினார். ஆனால், புகைப்படங்கள் நிரூபிக்கும் சாட்சி எவரெஸ்ட் உச்சியில் டென்சிங் மட்டுமே நிற்கிறார் என்பதே.இதை மறுக்கும் ஹிலாரி, டென்சிங்குக்குப் புகைப்படம் எடுக்கத் தெரியாது என்ற காரணத்தால் அவரை, தான் புகைப்படம் எடுத்துள்ளதாகவும், அதனால் மட்டுமே தன்னைப் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும் விளக்கம் அளித்து இருக்கிறார்.எவரெஸ்ட் மலையேற்றத்தில் வெற்றி பெற்ற​வர்​களை​விடவும், பாதிப் பயணத்தில் இறந்து​போனவர்​களின் எண்ணிக்கை அதிகம். பனிப் பொழிவில் சிக்கிக்கொண்டோ அல்லது எதிர்பாராமல் உடல்நலக் குறைவு ஏற்பட்டோ இறந்துபோனவர்கள் அதிகம். தனது பயணம் ஒன்றில் ஒரு பனிப்பாறையை தான் உடைத்தபோது, பல வருடத்துக்கு முன், மலையேறச் சென்ற ஒரு வெள்ளைக்காரனின் உடல் அப்படியே உறைந்துபோயிருந்ததை மீட்டு எடுத்ததாக டென்சிங் நினைவு கூர்கிறார். மலையேற்றத்துக்கு விருப்பம் இருந்தால் மட்டும் போதாது. கடுமையான உடற்பயிற்சியும் மனப்பக்குவமும் தேவை. காரணம், உயரம் அதிகமாக அதிகமாக உடல் தன் இயல்பை இழந்துவிடுவதோடு மிகப் பெரிய தனிமை மனதை வெகுவாக பாதிக்கக்கூடியது. பல நேரங்களில் அது பைத்திய நிலைக்கு ஒப்பாக இருக்கும் என்று சொல்லும் டென்சிங், அதுபோன்ற நேரங்களில் நான் தனியாக மலையேறவில்லை என்றும், தன்னோடு புத்தரும் உடன் இருக்கிறார் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.


எவரெஸ்ட் உச்சியை அடைந்தபோது, டென்சிங் தன்னை மறந்து கூச்சலிட்டார். 15 நிமிடங்கள் உலகின் உயர்ந்த சிகரத்தின் உச்சியில் தனியாக நின்றுகொண்டு இருந்த டென்சிங், உலகம் எத்தனை பிரம்மாண்டமானது, அழகானது என்று தன்னை அறியாமல் அழுததாக விவரித்து இருக்கிறார். பௌத்த நம்பிக்கைகொண்ட டென்சிங், எவரெஸ்ட் உச்சியில் எதையாவது காணிக்கையாகப் புதைத்துவிட்டு வர விரும்பினார். அதன்படியே தனது மகள் நீமாவின் விருப்பப்படி அவள் கொடுத்து அனுப்பிய நீல நிறப் பேனா ஒன்றையும், கொஞ்சம் இனிப்புகளையும் எவரெஸ்ட் உச்சியில் புதைத்துவிட்டு வந்தார். இன்றும், உலகின் உச்சியில் ஒரு பேனா மிக நிசப்தமாகப் புதையுண்டு கிடக்கிறது.

டென்சிங்குக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால், சரளமாக அவரால் ஏழு மொழிகளில் பேச முடியும். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வெற்றியின் காரணமாக, பிரிட்டிஷ் அரசின் மிக உயர்ந்த விருது டென்சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசும் அவரைக் கௌரவித்தது. இவற்றைவிட, புத்தரின் கருணைதான் இந்தச் சாதனையை தனக்கு வழங்கியது என்று நம்பும் டென்சிங், மலையேறுபவர்களுக்கான நிறுவனம் ஒன்றை நிறுவி, இமயமலைப் பயணத்துக்கு உதவி செய்து வந்தார். 1986-ம் ஆண்டு டார்ஜிலிங்கில் இறந்துபோன டென்சிங்கின் வாழ்வு, ஓர் எளிய மனிதனின் கடுமையான உழைப்புக்கும், இயற்கையைப் புரிந்துகொண்ட ஒரு மனதுக்கும் கிடைத்த வெற்றி. டென்சிங்கின் மகனும் இன்று, எவரெஸ்ட் மலையேறி சாதனை செய்து இருக்கிறார். இன்றும் மனிதனின் காலடி படாத சிகரங்களில், சூரியன் தனியே ஒளிர்ந்துகொண்டு இருக்கிறது.

'இமயமலை ஓர் அன்னை. அதன் உயர்ந்த மார்பகங்கள்தான் சிகரங்கள். அந்த மார்பில் இருந்து பாலை அருந்தியவன் நான். ஆகவே, அந்த அன்னைக்கு என்றும் கடமைப்பட்டவன்’ என்கிறார் டென்சிங். மலையை ஒருபோதும் மனிதனால் வெற்றிகொள்ள முடியாது. அது, இயற்கையின் புதிர். அதோடு இணைந்து வாழ்வது மட்டுமே சாத்தியமானது என்று, தனது நூலில் பல முறை குறிப்பிட்டு இருக்கிறார் டென்சிங். இமயம் சுட்டும் உண்மையும் அதுதான்.


எனது இந்தியா (இமயம் எனும் அரண் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ஒரு தேசத்தின் நிம்மதியை அதனுடைய எல்லைப் பாதுகாப்பே முடிவு செய்கிறது. எல்லைகள் யாவும் மனிதர்கள் வகுத்துக் கொண்டது என்ற போதும் அவற்றை உருவாக்குவதும் கட்டிக் காப்பதும் எளிதானது அல்ல. வெறும் படைபலத்தால் மட்டுமே எல்லைகளைக் காப்பாற்றி விடமுடியாது. அதற்கு உயிர்த்தியாகம் செய்யும் அளவுக்கு தேசப்பற்றும், உறுதியான காவல் நடவடிக்கைகளும், கவசம் போல தடுப்பு அரண்களும் அவசியம். அந்த வகையில், இந்தியாவின் எல்லை உறுதியானது. காரணம், அது மனிதர்கள் உருவாக்கிய எல்லைக்கோடு அல்ல. இயற்கையாகவே அமைந்த அரண். ஒரு கவசம் போல இந்தியாவை பாதுகாக்கிறது இமயம்.

இமயமலையின் வரலாறு இந்தியச் சரித்திரத்தில் மிக முக்கியமானது. அது வெறும் மலைத்தொடர் மட்டுமின்றி இந்திய நாகரிகத்தின் தொட்டில் என்றே அழைக்கப்படுகிறது. இமயமலையின் ஊடாகத்தான் இந்தியச் சமூகத்தின் தொன்மை நினைவுகள் புதையுண்டு இருக்கின்றன. மகாபாரதம் போன்ற இதிகாசம் சுட்டிக்காட்டும் வாழ்க்கைமுறைஇமயமலையோடு தொடர்பு உடையதே. இமயமலையைச் சேர்ந்த வனப்பகுதியில் பூர்வகுடி மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர். புராதனச் சிற்றரசர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்து இருக்கின்றனர். மற்ற ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவைப் பொத்திப் பாதுகாக்கும் உள்ளங்கையைப் போலவே திகழ்கிறது இமயம்.

மகாகவி காளிதாசன், மலைகளின் அரசன் என்று இமயத்தை புகழ்ந்து பாடி இருக்கிறார். ஞானிகள், துறவிகள், வரலாற்று ஆய்வாளர்கள், கவிஞர்கள் என்று பலராலும் புகழ்ந்து பாடப்படும் இமயம், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் நெருக்கடியால் இன்று சூழப்பட்டு இருக்கிறது. இந்த மலையில் இருக்கும் அரியவகை விலங்குகளும், தாவரங்களும் அழிந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இமயம் என்றால் ஒரு பிரம்மாண்டமான மலை என்ற பொதுப்பிம்பம் நமக்கு இருக்கிறது. அது உண்மை அல்ல. இமயமலை என்பது ஒரு நீண்ட மலைத்தொடர். இந்தியாவின் பத்து மாநிலங்களை இணைக்கும் ஒரு சங்கிலித்தொடர். பிறை வடிவ அரண் போல அமைந்து இந்தியாவை பாதுகாக்கிறது இமயமலை.

உலக வரலாற்றில் இரக்கமற்ற தண்டனைகளை தந்த கொடூர மன்னர் என செங்கிஸ்கான் பற்றி அழுத்தமான பிம்பம் ஒன்று பதிந்து இருக் கிறது. அதேநேரம், அவரது ஆளுமைத்திறன் காரணமாக சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றுசேர்த்து  புத்தம் புதிய தேசத்தை உருவாக்கி ஒரு மகா பேரரசை அமைத்தவர் என்றும் செங்கிஸ்கான் புகழப்படுகிறார்.

செங்கிஸ்கான் தனது படையை பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம் வீரர்கள் கொண்ட தனித் தனிப்பிரிவுகளாக அமைத்துச் செயல்பட்டார். இப்படி, படையை டிவிசன்களாகப் பிரிப்பது அதுதான் முதன்முறை. இவரது மங்கோலிய வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் பயணம் செய்தனர். வழியில், உணவோ நீரோ கிடைக்காவிட்டால் குதிரையைக் கொன்று அதன் உதிரத்தைக் குடிப்பது இவர்களது வழக்கம்.

செங்கிஸ்கானின் நிஜப்பெயர் தெமுசின். கி.பி. 1162-ம் ஆண்டு பிறந்தவர். இவர் உருவாக்கிய மங்கோலியப் படை, எதிரிகளைக் கொன்று குவித்து வடசீனா முழுவதையும் கைப்பற்றியது. ஐம்பதாயிரம் வீரர்களுடன் இந்தியா நோக்கி புயலென வந்து கொண்டிருந்த செங்கிஸ்கானை வழிமறித்து தடுத்தது இமயமலையே. அவர், அரசியல் நெருக்கடி காரணமாக ஆப்கான் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி விடவே இந்தியா தப்பித்தது.

மங்கோலியப்படை சென்ற இடங்கள் எல்லாம் வன்கொலைகள், கற்பழிப்புகள் நடைபெற்றன. ஓய்வு இல்லாமல் படை நடத்திச்சென்று நகரங்களைத் தாக்கி தீ வைத்து வெறியாட்டம் ஆடியது செங்கிஸ்கானின் படை. தன்னால் கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் ஒரு முடியைப் பிடுங்கி தனது கொடியில் தொங்க விடுவது செங்கிஸ்கானின் வழக்கம். அப்படி, மயிர்களால் ஆன கொடிமரம் ஒன்று அவர் கூடவே இருந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். 1227-ல் செங்கிஸ்கான் இறந்த போதும் அவர் கல்லறையில் இருந்து உயிர்பெற்று எழுந்து வந்து ஒரு உலகப் பேரரசை நிறுவுவார் என்று மங்கோலியர்கள் இன்றுவரை நம்புகின்றனர். ஒருவேளை, இந்தியாவுக்குள் செங்கிஸ்கான் படை நுழைந்து இருந்தால் இந்தியா சிதறுண்டு போயிருக்கும் என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். இந்த ஆபத்தில் இருந்து காத்தது இமயமலை.

இன்னும் முழுமையாக ஆராயப்படாத இமயமலை, உறைபனி மூடி மேகங்கள் உரசும் எழில் கொண்டது. ஹிம் என்றால் பனி. ஆலயா என்றால் கோயில். பனி தெய்வத்தின் உறைவிடம் எனப்படும் இமயத்தை, கடவுளின் வீடு என்றே இந்தியர் நம்புகின்றனர். பௌத்தர்களும் அதை புத்தரின் உறைவிடம் என்று வழிபடுகின்றனர். பௌத்த மற்றும் இந்து மதத் துறவிகள், இமயமலையை வழிபடுவதை ஒரு புனிதச் சடங்காகவே இன்று வரை கருதுகின்றனர். உலகிலேயே மிக உயரமானதும் நீளமானதுமான இமயம், 2500 கி.மீ. தூரம் வரை அறுபடாமல் நீண்டு செல்லும் ஒரு மலைத்தொடர்.மூன்று மலைத்தொடர்களாக  அமைந்துள்ளது இமயம். இதில் உள்இமயம் எனப்படும் ஜான்ஸ்கர் மலைத்தொடர், சிந்து ஆற்றின் வளைவுக்கு அருகில் உள்ள நங்க பர்வதத்தில் தொடங்கி தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியாகச் சென்று பிரம்மபுத்திரா ஆற்றின் முகப்பை அடைகிறது. இந்த மலைத்தொடரின் உயரம் 7,000 மீட்டர். சராசரி அகலம் 25 கிமீ.

நடு இமயம் எனப்படும் பங்கி தொடரின் உயரம், 5000 மீட்டருக்கும் அதிகமானது. இதன் அகலம் 80 முதல் 100 கிமீ. புற இமயம் எனப்படும் சிவாலி, 15 முதல் 50 கிமீ அகலம் கொண்டது. அதன் உயரம் 9,000 மீட்டர். இதன் தென்சரிவு செங்குத்தானது. வடசரிவில் டிராய் காடுகள் அடர்ந்துள்ளன. சிவாலிக் குன்றுகளுக்கும் தாழ்ந்த இமயத் தொடர்களுக்கும் இடையில் உள்ள வண்டல் மண் நிறைந்த அகன்ற தட்டையான பள்ளத்தாக்குகள் 'தூன்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கொரு உதாரணம் டேராடூன்.

இந்தியாவின் வளமைக்குக் காரணமான பல முக்கிய ஆறுகள் இமயமலையில்தான் உற்பத்தி ஆகின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனா, பூடான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் வழியாக இமயமலைத் தொடர் அமைந்துள்ளது. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி மற்றும் யாங்சி போன்ற ஆறுகள் இமயமலையில் ஓடும் முதன்மை ஆறுகள். இந்த ஆறுகள் பெரும்பாலும் பெண் பெயரில்தான் அழைக்கப்படுகின்றன. இதில் விதிவிலக்கு பிரம்மபுத்திரா. அதுமட்டுமே ஆண் பெயரைக் கொண்டது.

பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியைச் சேர்ந்த இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் வழியாக ஓடி வங்கதேசத்துக்குள் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ. ஓடும் இந்த ஆறு இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ. தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலேயே பிரம்மபுத்திரா பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, 10 கி.மீ. அகலம் கொண்டது. பிரம்மபுத்திரா நதியை நம்பியே அருணாசல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் விவசாயம் இருக்கிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் சீனா ஓர் அணையைக் கட்டி நீர்மின் திட்டத்துக்காக பயன்படுத்தியது. இப்போது மேலும் ஓர் புதிய அணை ஒன்றைக் கட்டி இந்தியாவுக்கு நீர் வரத்தை குறைக்க சீனா முயற்சி செய்கிறது.

இமயத்தில் இருந்து இந்துகுஷ் நீண்டு செல்கிறது. கிழக்கே லுஷாய் மலைகள் உள்ளன. இந்துகுஷ், வட ஆப்கானிஷ்தானில் உள்ள மலைத்தொடர். காபூல் மாநிலம் இந்த மலைத்தொடரை தொட்டுக் கொண்டே இருக்கிறது. இது, கடக்க முடியாத மலைத்தொடர். கணவாய்களே அதன் வாசல். ஆகவே இவை, இந்தியாவின் வட எல்லை அரணாக விளங்குகின்றன. தமிழின் சங்க இலக்கியத்தில் இமயம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பிறகு, இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று அகநானூற்றுப் பாடலில் குறிப்பு இருக்கிறது.

கொண்டல் மழை, இமயத்தைத் தீண்டிப் பொழியும் என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். இப்படி, இமயம் குறித்து நிறைய உதாரணங்களை நாம் இலக்கியச் சான்றுகளாகக் காண முடிகிறது. மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பங்களை ஆராய்ந்துள்ள அறிஞர்கள், அவை இமயத்தைச் சேர்ந்த சிற்பிகளின் துணையோடு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்கின்றனர். காரணம், அர்ச்சுனன் தபஸ் சிற்பத்தில் காணப்படும் கங்கையும், அங்குள்ள ஆடு, குரங்கு, மான் போன்றவையும் இமயத்தில் மட்டுமே காணப்படுபவை என்கின்றனர். குறிப்பாக, மாமல்லபுரம் சிற்பங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள பேராசிரியர் பாலுசாமி, இமயத்தின் தாவரங்கள், விலங்குகளே இந்தச் சிற்பங்களில் காணப்படுபவை என்று உறுதியாகக் கூறுகிறார்.

உலகத்திலேயே உயர்ந்த மலையாக அறியப்படும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்கின்றனர்.  சுமார் நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியக் கண்டம் தனியாக ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருந்து பயணித்து வடக்கு நோக்கி நகர்ந்து இருக்கிறது. அது, வட கண்டத்துடன் மோதி இடைப்பட்ட கடலடி பகுதி மேல் எழுந்து இமயமலையாக உருவாகி உள்ளது. இந்தப் பாறைகளிலிருந்து, பல கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன. அதை ஆராய்ந்த போது, இமயமலை கடலின் அடியில் இருந்தது என்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர்.

உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில்ஒன்பது சிகரங்கள் இமயமலையில் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை கே 2, நங்கபர்வத், அன்ன பூர்னா, கஞ்சன்ஜங்கா மற்றும் எவரெஸ்ட். இமய மலைச் சிகரங்களை மூடியுள்ள பனியானது ஆண்டு முழுவதும் உருகுவது கிடையாது. மலையின் மேல் சுமார் இருபது அடி தடிமனுக்கு பனி மூடிய நிலையில் உள்ளது. இமயமலைப் பகுதி, இந்திய நாகரிகங்களின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேதான் இந்தியாவின் புராதன சிந்துச்சமவெளி நகர நாகரிகம் தொடங்கி இருக்கிறது.

சர் சிட்னி புராடு (Sir Sidney Burraud) என்ற அறிஞர் இமயமலையைப் பல பிரிவுகளாகப் பிரித்து உள்ளார். அதன்படி, சிந்து ஆற்றுப் பகுதியில் உள்ளது பஞ்சாப் இமயமலை. இது, 134 கி.மீ. நீளமும் 40 கி.மீ. அகலமும் கொண்டது. வட மேற்கில் இருந்து தென்கிழக்காக இதில் பள்ளத் தாக்கு அமைந்துள்ளது. இதில்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. சட்லஜ் ஆற்றுக்கும் காளி ஆற்றுக்கும் இடையில் உள்ள பகுதி, குமான் இமயமலை.  இதில் நந்தாதேவி, பத்ரிநாத், கேதார்நாத், மானச கங்கோத்ரி போன்ற மலை உச்சிகள் உள்ளன.


Saturday, July 28, 2012

ஈ....

ஈக்கள் எப்படி நோயைப் பரப்புகிறது :

 
பார்க்க அப்பாவியாகத் தெரியும் இந்த ஈக்கள் செய்யும் வேலை மிகவும் அபாயகரமானது. குப்​பைகள், கழிவு நீர், மலம் போன்ற ஏராளமான கிருமிகள் குடியிருக்கும் இடம்தான் இவற்றின் வாழ்விடம். நூறுக்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை சுமந்து திரியும் ஈயின்  ஆயுட்காலம் ஒரு வாரம்தான். ஆனால், அதற்குள் இது எத்தனையோ ஆபத்துகளை உருவாக்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 500 முட்டைகள் வரை இடும் ஈயானது, தன்னுடைய வாழ்நாளில் 75 முதல் 150 முறை முட்டையிடும். அப்படி என்றால் ஒரு ஈ, தனது வாழ்நாளில் எத்தனை ஈக்களை உற்பத்தி செய்கிறது என்று கணக்கிட்டுக்​கொள்​ளுங்கள்.கழிவுகளில் குடியிருக்கும் ஈ, உணவாக உட்கொள்​வதும் அந்தக் கழிவுகளைத்​தான். ஈக்களின் கால்களில் பிசின் போன்ற வட்டமான ஒரு உறுப்பு உள்ளது. கழிவுகளின் மீது உட்காரும்​போது இந்தப் பிசின் போன்ற பகுதியில் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன. பிறகு அந்த ஈக்கள் உணவுப் பொருட்களின் மீதோ அல்லது நம் உடலின் மீதோ உட்காரும்போது, கிருமிகள் எளிதாக நம் உடலுக்குள் சென்றுவிடுகின்றன.
 
டைஃபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு, வாந்தி, போலியோ, மஞ்சள் காமாலை, காச நோய், ஆந்த்ராக்ஸ், கண் அழற்சி, வயிற்றுப் புழுக்கள் போன்ற பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கும் காரணியாக விளங்குகின்றன ஈக்கள். இந்த ஈக்களால் ஆண்டு தோறும் பல லட்சம் பேர் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். இவை எல்லாம்  ஆரம்பத்தில் சாதாரண வியாதிகளாகத்தான் தோன்றும். ஆனால், கண்டு​கொள்ளவில்லை என்றால் பெரிய ஆபத்தாகி விடும். உதாரணமாக வயிற்றுப்போக்கு தொடர்ச்​சியாக இருக்கும்போது, உடலில் நீர்ச்சத்து குறைந்து மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. மஞ்சள் காமாலை, ஆந்த்​ராக்ஸ் போன்றவையும் உயிருக்கு உலை வைக்கக்கூடியவை.அதனால் குப்பைகளைத் தேங்க விடாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெருகாமல் தடுக்க முடியும். உணவுப் பொருட்களை மூடி வைத்தே பயன்படுத்த வேண்டும். மொத்தத்தில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஈக்களால் பிரச்னை இல்லை. சுற்றுப்புறம் என்பது நம் வீடு மட்டும் அல்ல; பொது இடங்களையும் சேர்த்துத்தான். பக்கத்துத் தெருவில் தேங்கி இருக்கும் மழைநீரில் உள்ள ஈ, உங்கள் வீட்டுக்குப் பறந்துவர ஒரு நிமிடம்கூட ஆகாது. ஆகவே கவனம் தேவை!
 
 
மருத்துவர் கருணாநிதி. 
 

அருள்வாக்கு - தோல்வி, அவமானம் ஏன் வருகிறது?


‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப்பட்ட கலை அநுபவங்களுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்பதாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால் தான் சொல்கிறோம் போலிருக்கிறது! இதில் எந்த ரஸத்தையும் தனியாகச் சாப்பிட முடியவில்லை. வெறும் உப்பை, வெறும் புளியை, மிளகாயை, கடுக்காயை, பாகற்காயைச் சாப்பிடுவது என்றால் முடியாத காரியம். சர்க்கரை, வெல்லத்தை வேண்டுமானால் ஏதோ கொஞ்சம் சாப்பிடலாம். ஆனாலும் அது கூட, மாவு கீவு சேர்த்துத் தித்திப்புப் பட்சணமாகப் பண்ணினால். சாப்பிடுகிற அளவுக்கு வெல்லத்தையும் சர்க்கரையையும் சாப்பிட முடிவதில்லை. அது திகட்டி விடுகிறது. ஆனால் தனியாகச் சாப்பிட முடியாத இந்த ஷட் ரஸ வர்க்கங்களையும் விதம்விதமாகக் கலந்துவிட்டால், பல தினுசு வியஞ்சனங்கள் செய்து வயிறாரச் சாப்பிட முடிகிறது. ஒன்று சேருவதில், ஸங்கத்தில் விளைகிற பெரிய ருசிக்கு இது ஒரு திருஷ்டாந்தம். வாழ்க்கையிலும் இப்படியே ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டிவிடும். அதனால்தான் அழுகை சிரிப்பு, வெற்றி தோல்வி, மான அவமானம் எல்லாம் கலந்து வருகின்றன.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

Friday, July 27, 2012

பதில்கள் தேடும் கேள்விகள்... - ஓ பக்கங்கள், ஞாநி

நீ ஆணா, பெண்ணா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லியே தீரவேண்டும் என்ற நெருக்கடியை நம்மில் பெரும்பாலோர் சந்திப்பதே இல்லை.
 
ஆனால் இந்த நெருக்கடியை சந்திக்க வேண்டி வருவோரின் வாழ்க்கை நரகமாக்கப்படுகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதன் அடையாளமாகத் தான் இன்று விளையாட்டு வீரர்கள் பிங்கியும் சாந்தியும் இருக்கிறார்கள்.

இந்திய தடகள வீராங்கனைகளான இருவரின் வாழ்க்கையும் அவர்கள் பெண்கள்தானா என்ற கேள்வியால் நரகமாக்கப்பட்டுவிட்டது. இவர்களின் பிரச்னையைப் புரிந்துகொள்ளுவதற்கு முதலில் இயற்கை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும், ஆண், பெண் என்ற வரையறை இயற்கை ஏற்படுத்தியதல்ல. நாம் ஏற்படுத்தியதுதான். இயற்கை நாம் ஆண் என்று சொல்லும் வடிவத்துக்கும் பெண் என்று சொல்லும் வடிவத்துக்கும் இடையில் எண்ணற்ற வடிவங்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அறிவியல் அவற்றை அறிந்திருக்கிறது. ஆனால் சமூக ரீதியில் அவற்றுக்கெல்லாம் நாம் உரிய பெயர் சூட்டி வகைப்படுத்தி அங்கீகரிக்கத் தவறியிருக்கிறோம் என்பதுதான் அசல் பிரச்னை.

உடல்ரீதியாக அறிவியல் முற்றிலும் இது ஆண் உடல் என்றும் இது பெண் உடல் என்றும் வரையறுக்கும் உடல்கள் அமையப் பெறாமல் இரு தன்மைகளும் வெவ்வேறு விகிதங்களில் அமைந்த உடல்களைப் பெற்றவர்களை நம் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அவர்களுக்கு உடல் எப்படி இருந்தபோதிலும் மன ரீதியாக தன்னை ஆண் என்று உணர்ந்தால் ஆணாகவும், பெண் என்று உணர்ந்தால் பெண்ணாகவும் அறிவித்துக் கொள்ளும் உரிமையை நம் சமூகம் வழங்குகிறதா? அல்லது இரண்டுமில்லாத மூன்றாம் பாலினம் என்று தன்னை அறிவித்துக் கொண்டால், அதற்குரிய சட்ட அங்கீகாரமும் சமூக வசதிகளும் இன்னமும் இல்லையே?

இந்தத் தீர்க்கப்படாத சமூக சிக்கல்களை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்தும் விதத்தில்தான் விளையாட்டுத் துறையில் ஏற்படும் சர்ச்சைகள் அமைகின்றன.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கிக்கு இப்போது வயது 26. பதினேழு வயதிலேயே ஆசிய உள்விளையாட்டுரிலே ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றவர். பின்னர் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம். அடுத்து ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம். தொடர்ந்து விபத்துகளினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பிங்கி மறுபடியும் தேறி வந்து களத்தில் இறங்கியபோது, அவருக்கு எதிராக அவருடன் இருந்த ஒரு பெண் பாலியல் வன்முறை புகார் கொடுத்ததையடுத்து கைதானார். பிங்கி ஆண் என்றும் தன்னிடம் கட்டாய உடல் உறவு கொள்ள முயன்றார் என்றும் புகார். கைது செயப்பட்ட பிங்கிக்கு பாலியல் சோதனைகள் செய்யப்பட்டன.

தனியார் மருத்துவமனையில் பிங்கிக்கு நடந்த உடல்சோதனையின் வீடியோ படங்கள் செல்போன்களிலும் இணையத்திலும் பரப்பப்பட்டன. தனியார் மருத்துவமனை சோதனை பிங்கியை ஆண் என்று முடிவு செய்தது. ஆனால் இதை பிங்கி ஆட்சேபித்ததையடுத்து அரசு மருத்துவ மனையில் சோதனைகள் செய்யப்பட்டன. அதில் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை என்று சொல்லப்பட்டது. அடுத்து பிங்கியின் குரோமோசோம் பேட்டர்ன் சோதனை செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

பிங்கி மீது முதலில் பாலியல் வன்முறை புகார் செய்த பெண் தான் பொய்ப் புகார் கொடுத்ததாக இப்போது சொல்லியிருக்கிறார். பிங்கிக்கு அரசு கொடுத்த நிலத்தை அவரிடம் வாங்கிய அவதார் சிங் தூண்டுதலில் பொய்ப் புகார் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். இந்த அவதார் சிங் ஏற்கெனவே கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்திய குற்றத்தில் கைதானவர். அவர் மனைவி ஜோதிர்மயியும் தடகள வீராங்கனை. பிங்கியுடன் சேர்ந்து ஓடியவர். மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யாக இருந்தவர்.

பிங்கிக்கும் ஜோதிர்மயி கணவருக்கும் நிலத்தகராறு, பணத்தகராறு என்பது தனி விஷயம். அரசு விளையாட்டு வீரர்களுக்குக் கொடுத்த நிலத்தை அவதார் சிங் அவர்களை மிரட்டி கம்மி விலைக்கு வாங்கிக் கொள்கிறார் என்பது அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.

ஆனால் இந்த பணத் தகராறினால், பிங்கியின் பாலின அடையாளம் பிரச்னையாக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு அவர் தடகளப் போட்டிகளில் மெடல்கள் வென்றபோதெல்லாம் யாரும் அவரை ஆணா பெண்ணா என்று கேட்கவில்லை.

அடையாள சர்ச்சையில் சிக்கி சீரழிக்கப்பட்டவர் தமிழ்நாட்டின் சாந்தி சவுந்தரராஜன். இப்போது 31 வயதாகும் சாந்தி 11 சர்வதேச மெடல்களும் 50 உள்ளூர் மெடல்களும் வென்றவர். 2006ல் கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். சில சக வீரர்கள் ஆட்சேபித்ததையடுத்து அவருக்கு பாலியல் சோதனை செய்யப்பட்டது. அவரை பெண்ணாகக் கருத முடியாது என்று முடிவு செய்து கொடுத்த மெடல் பறிக்கப்பட்டது.

உண்மையில் சாந்தியின் பிரச்னை வேறு. பெண்ணாகவே பிறந்தபோதும் ஆண்ட் ரோஜென் சென்சிட்டிவிட்டி சிண்ட்ரோம் என்ற குறைபாட்டுடன் அவர் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் குறைபாட்டினால், பெண் உடல் இருந்தபோதும் பெண் தன்மைக்குரிய சுரப்புகள் பாதிக்கப்படுகின்றன.

சாந்திக்காக இந்திய அரசோ, தமிழக அரசோ, ஆசிய விளையாட்டு நிர்வாகத்துடன் சண்டையிட்டதாகத் தெரியவில்லை. இப்போது சாந்தி வறுமையினால் தினக்கூலி வேலைக்குச் செல்வதாக செய்திகள் வெளியானபின், அரசு தரப்பில் இருந்து ஆதரவுக் குரல்கள் வருகின்றன. முதலில் சாந்தி ஏன் தினக் கூலியானார் என்பதே மர்மமாக இருக்கிறது. 2006ல் அவரது மெடல் பறிக்கப்பட்டபோதும் கூட, அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சாந்திக்கு 15 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தார். ஓராண்டு கழித்து மனஉளைச்சலினால் சாந்தி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பின்னர் புதுக்கோட்டையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி தருவதற்கான மையத்தை சாந்தி தொடங்கி நடத்தி வந்தார். அதில் 2009ல் 68 பேர் பயிற்சி பெற்றதாகவும் அவர்களில் சிலர் சென்னை மாரத்தானில் பரிசுகள் வென்றதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் மூன்றே வருடங்களில் சாந்தி தினக்கூலியானது ஏன் என்று புரியவில்லை. பரிசுப் பணம் சாந்தியின் சகோதரி திருமணச் செலவிலும் சகோதரர் படிப்புச் செலவிலுமாக தீர்ந்துபோய் விட்டதாக சொல்லப்படுகிறது. அது உண்மையானால், லட்சக் கணக்கில் தங்களுக்காக செலவு செய்த சாந்தியை அவரது சகோதரரும் சகோதரியும் தினக்கூலியாளாக போக விட்டுவிட்டது நம் குடும்ப அமைப்பின் கோளாறையே காட்டுகிறது.

இப்போது மத்திய விளையாட்டு அமைச்சர் அஜமக்கான் தென் ஆப்ரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்காக அந்த நாட்டு அரசு போராடியதைப் போல சாந்திக்காக இந்திய அரசு போராடுமென்று அறிவித்திருக்கிறார்.

இந்தியாவைவிடப் பின் தங்கிய நாடாகக் கருதப்படும் தென் ஆப்ரிக்கா காஸ்டர் செமன்யாவுக்காகப் போராடியதில் நூற்றில் ஒரு பங்கு கூட இந்தியா இதுவரை சாந்திக்காக செய்யவில்லை. 2006ல் மெடல் பறிக்கப்பட்ட உடன் போராடாமல் விட்டுவிட்டு 2012ல் என்ன, எப்படி போராடுவார்கள் என்று தெரியவில்லை.

காஸ்டர் செமன்யாவின் விஷயத்தில் மிக முக்கியமான அம்சம் அவர் ஆணா பெண்ணா என்று நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவைக் கூட பகிரங்கப்படுத்த அவர் தடை வாங்கியிருப்பதுதான்.

செமன்யா 2008ல் உலக ஜூனியர் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர்.

செமன்யா 2009ல் 800 மீட்டர் ஓட்டத்திலும் 1500 மீட்டர் ஓட்டத்திலும் உலக ரிக்கார்டுகளை ஏற்படுத்தியதும், அவரது பாலியல் அடையாளத்தை சோதிக்க சர்வதேச தடகளக் கூட்டமைப்பு நட வடிக்கை எடுத்தது.

உடனே இதற்கு பெரும் எதிர்ப்பு பல்வேறு விளையாட்டு வீரர்களிடமிருந்து மட்டுமல்ல, தென் ஆப்ரிக்க அரசிடமிருந்தே வந்தது. செமன்யாவுக்கு சரியான ஆலோசனை சொல்ல தவறியதற்காக அவரது கோச் ராஜினாமா செய்தார். தென் ஆப்ரிக்க அரசின் அறிவுரைப்படி செமன்யா, மிகப்பெரிய சட்ட நிறுவனத்தை தன் வக்கீலாக நியமித்தார். சோதனை முடிவுகளை வெளியிட கோர்ட்டில் தடை வாங்கப்பட்டது. தனக்கு தந்த மெடலையும் பணத்தையும் செமன்யா வைத்துக் கொள்ளலாம் என்று தென் ஆப்ரிக்க அரசு அறிவித்தது. ஒரு பெண் எப்போது பெண் தன்மையற்றவராகக் கருதப்படுவார் என்பது பற்றிய சர்வதேச தடகளக் கூட்டமைப்பின் விதிகள் தெளிவாக இல்லை என்று தென் ஆப்ரிக்க அரசு கூறிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வருட லண்டன் ஒலிம்பிக்சில் தென் ஆப்ரிக்க அணியின் கொடியை ஏந்தி மைதானத்தில் வலம் வர இருப்பவர் செமன்யாதான்.

செமன்யா விஷயத்தில் தென் ஆப்ரிக்க அரசு நடந்துகொண்டதைப் போல இங்கே சாந்திக்கு நடக்காமல் போனதற்குக் காரணம், இங்கே இருக்கும் மத்திய அரசுக்கும் சரி மாநில அரசுக்கும் சரி, விளையாட்டுத் துறையிலும் கொள்கைகள் சீராக இல்லை. பாலியல் அடையாளங்கள் பற்றிய அரசுக் கொள்கை என்பது ஒன்று இல்லவே இல்லை.

மீடியா வெளிச்சம் போட்டுக் காட்டியதும் சாந்திக்காகக் குரல் கொடுத்து ஓடிவரும் தொழிலதிபர்களும் அரசியல் வாதிகளும் இதையும் இன்னொரு தானதர்மமாகக் கருதாமல், இப்போதேனும் தெளிவான பாலியல் அடையாளக் கொள்கையை நம் அரசுகள் வகுக்க வற்புறுத்தவேண்டும்.

அவை உருவாகும்வரை சாந்திகளும் பிங்கிகளும் நம் சமூகத்தில் சர்ச்சைகளாகவும் கேலிப் பொருட்களாகவும் மட்டுமே இருப்பார்கள் என்பதே கசப்பான உண்மை.

இந்த வார யோசனை!

கொடநாட்டுக்கு அதிகாரிகளை ஜெயலலிதா அடிக்கடி வரவழைப்பதால், அங்கே போவரும் வழிகளை நன்றாக பராமரிப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே ஜெயலலிதா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டமாக தேர்ந்தெடுத்து ஒரு வாரம் அங்கே போயிருந்து ஆட்சி நடத்தும்படி பரிந்துரைக்கிறேன்.

இந்த வாரத் திட்டு!

காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரங்களை நடத்துவதற்காக தன் அமைச்சக வேலைகளை கவனிக்காமல் வேலை நிறுத்தம் செத ஷரத் பவாருக்கு இ.வா.தி. பல மாநிலங் களில் வறட்சி மிரட்டும் நேரத்தில் விவசாய அமைச்சர் வேலைக்குச் செல்லாமல் ஸ்டிரைக் செதது கேவல மானதாகும். 

 

Thursday, July 26, 2012

அருள்வாக்கு - சூரிய வெளிச்சம் போல ஆனந்தம்...


ஆனந்தம் என்பதுதான் நம் ஆத்மாவின் ஸ்திரமான, சாசுவதமான ஸ்வபாவம். எதிலும் பட்டுக் கொள்ளாமல், துக்கலேசமேயில்லாமல், தன்னில் தானாக இருக்கிற சாந்த நிலையில் இருப்பதுதான் ஆனந்தம்.
அந்த ஆனந்தம் சூரிய வெளிச்சம்போல சர்வ வியாபகமாகப் பரந்து இருப்பது. ஆனால் நமக்கு அது தெரியவில்லை. மரத்தடியில் சூரிய வெளிச்சம் தெரியாத மாதிரி, மாயையின் நிழலில் இருக்கிற நமக்கு இந்த ஆனந்தம் தெரியவில்லை. மரக்கிளை ஆடும்போது இடுக்கு வழியே துளித் துளி வெளிச்சம் வருகிற மாதிரி கோபம், கர்மம், வீரம், பயம், சோகம் இத்யாதி உணர்ச்சிகள் ஆட்டம் போடுகிற போது, ஆனந்தத்தின் ஒளி துளித் துளி நம் மேல்படுகிறது. நல்ல உணர்ச்சி, கெட்ட உணர்ச்சி எதுவானாலும் நாம் ஒன்றை உணருகிறோம் என்றால் அதற்கு ஆத்மாதானே அடிப்படை? அதனால் எந்த ரஸத்தை அனுபவித்தாலும், ஆத்மாவின் ஸ்வபாவமான ஆனந்தம் அதற்குள் கொஞ்சம் ‘டால்’ அடித்துக் கொண்டு தான் இருக்கும். இப்படியில்லாமல் மரத்தை விட்டு வெளியிலே வந்துவிட்டால், முழு ஸூர்ய வெளிச்சம். கிளைகள் பலவிதமாக ஆடுகிறபோது, பல தினுசாக விழுந்த துளித் துளி வெளிச்சமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்த முழு வெளிச்சம் அதுதான்.
சூரிய வெளிச்சத்தில் கலர் இல்லை. அந்த மாதிரி சாந்தத்தில் தனியாக ஒரு உணர்ச்சி, ஒரு ரஸம் இல்லை என்பது ஒரு அபிப்பிராயம். ஆனாலும் ஸூர்ய வெளிச்சத்திலிருந்துதான் இத்தனை கலர்களும் வந்திருக்கின்றன. ஸ்பெக்ட்ராஸ்கோப்பில் ஸூர்ய வெளிச்சத்தைப் பிரித்து (Split) பண்ணிப் பார்த்தால் அதிலிருந்தே ஏழு கலர்களும் வருவதைப் பார்க்கலாம். ஸயன்ஸ் நிபுணர்கள் ஸூர்ய வெளிச்சத்தில் இன்னின்ன கலர்கள் இன்னின்ன விகிதத்தில் இருக்கின்றன என்று அளவிட்டிருக்கிறார்கள். அதே விகிதத்தில், இந்த ஏழு கலர்களைக் கலக்கிற போதெல்லாம், அத்தனை கலர்களும் சேர்ந்து வெள்ளையாகிவிடுகின்றன!
ஒரு உணர்ச்சியும் இல்லாத சாந்தத்தில்தான் அத்தனை உணர்ச்சிகளும் பிறந்திருக்கின்றன; அந்த உணர்ச்சிகளுக்கு ஆஸ்பதமான ஸகல ஜீவர்களும் காரியங்களும் அதற்குள்ளேயே அடக்கம்; சாந்த ஆத்மாதான் இத்தனையும்.
- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Wednesday, July 25, 2012

அருள் மழை ----------- 63

ஒழுக்க நெறிகள்!நம்மளவு சௌகரியமோ, அறிவோ அழகோ இல்லாதவர்களைப் பார்த்து நாம் தாழ்த்தியாக  நினைத்துக் கர்வப்படக் கூடாது. கர்வம் என்பது சொறி, சிரங்கு
எல்லாவற்றையும்விடக் கொடிய பெரிய வியாதி போன்றது. போன பிறவியில் நம்மைவிடத்  தப்பு செய்ததால் அவர்கள் இப்போது பணத்தில், புத்தியில், அழகில் நம்மைவிடக்  கீழாக இருக்கலாம். ஆனால் நமக்குக் கர்வம் வந்தால், இதுவே அவர்கள் செய்த  தப்புக்களையெல்லாம் விடப் பெரிய தப்பு. இதனால் நாம் அடுத்த பிறவியில் இப்போது அவர்கள் இருப்பதைவிடக் கீழான நிலையில் பிறப்போம்.

இன்னும் பலவிதமான அழுக்குகள் இருக்கின்றன. பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றி  கேலியாகவோ, நிந்தையாகவோ பேசுவதில் உங்களுக்கு எண்ணம் போகவே கூடாது. இப்படிப்  பேசுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறதே என்பதற்காக இதில் ஈடுபடக்கூடாது.  ஒருவனிடம் தப்புத் தெரிந்தால், அதை நேரில் நல்லபடியாக, நயமாக, அன்பாக அவனிடமே
சொல்ல வேண்டுமே ஒழிய, அந்தத் தப்பை மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுவது வெறும்  கோழைத்தனம்தான். இப்படிப் புறங்கூறுகிறபோது அங்கே அந்தப் பையன்  இல்லாதிருக்கலாம் – ஆனால் எங்கேயும் உள்ள ஸ்வாமி அங்கேயும் இருக்கிறார்.  என்றைக்கோ ஒரு நாள் அவர் தண்டித்து விடுவார். அதற்கு யாரும் தப்ப முடியாது.

பொய், பயம், பொறாமை, நிந்தனை ஆகிய அழுக்குகளைப் போக்குகிற சோப்பு, சீயக்காய்,  அரப்பு, வாசனைப் பொடி மாதிரி சத்தியம், தைரியம், விட்டுக் கொடுக்கிற சுபாவம்,  இன்சொல் ஆகியன இருக்கின்றன.

இப்படியே நம் மன அழுக்கைப் போக்குகிற நல்ல குணங்கள் பல இருந்தாலும்கூட, வேறொரு  ஜலம் இல்லாவிட்டால் இந்த நல்ல குணங்கள் மாத்திரம் நமக்கு மனத்தூய்மையைக்  கொடுக்க மாட்டா. அந்த ஜலம்தான் தெய்வ பக்தி. எல்லா அழுக்குகளும் நீங்குவதற்கு,  கங்கா ஸ்நானமாக இருப்பது ஸ்வாமியிடம் செய்கிற பிரார்த்தனைதான்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய
ஸ்வாமிகள்

Monday, July 23, 2012

அருள் மழை ----------- 62


கார்த்திகை மாதம்,நல்ல குளிர்,விடியற்காலை,கோட்டை அடுப்பை அடுப்பை மூட்டி, பெரியவாள் ஸ்நானத்துக்கு வெந்நீர் போட வேண்டும்.
அந்தப் பணியைச் செய்யும் ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பை... நோக்கிப் போனார்.ஒரு சொடுக்கில் அவரை அழைத்தார்கள் பெரியவாள்.அவர் அருகில் வந்து நின்றார்.அரைகுறை வெளிச்சம்."இன்னிக்கு அடுப்பு மூட்ட வேண்டாம்..வெந்நீர் வேண்டாம்.....".வெந்நீர் வேண்டாம் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.ஆனால்,அடுப்பை மூட்டாமல் நைவேத்யம் தயார் செய்ய முடியாதே?பெரியவாள், திருவாரூர் வெங்கட்டராமய்யர் என்ற மற்றொரு சமையல்காரரைக் கூப்பிட்டார்கள்.

"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ.....அதைப் பற்ற வை. சுவாமி நைவேத்யம் அதில் பண்ணு...."என்றார்கள் மேல் முறையீட்டுக்கு இடமில்லாத உத்தரவுகள். காலை சுமார் ஏழு மணிக்கு 'மியாவ்' என்று மெல்லிய குரல் கேட்டது. கடவுளே! நைவேத்யத்தில் வாய் வைத்து விடப் போகிறதே!

சூ.......சூ.......ஒரு சலசலப்பும் இல்லை.

பூனை எங்கிருந்து குரல் கொடுத்தது?

ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பு அருகே சென்று பார்த்தார்.ஒரு தாய்,நாலு குட்டிகள்..மெய் மறந்து உறங்கிக் கொண்டிருந்தன,கோட்டை அடுப்பின் கதகதப்பை அனுபவித்துக் கொண்டு."உச்ச மன்ற"த்தின் ஆணைக்குக் காரணம் இப்போது தெளிவாகத் தெரிந்தது.

"குளிர் தாங்காமல், பூனையும் குட்டிகளும் அங்கே வந்து படுத்துக் கொண்டிருந்தன.அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து வேறு எங்கே போகும்? குளிரில் நடுங்குமே? எனக்கு வெந்நீர் வேண்டாம்.பூனைகள் நன்றாகத் தூங்கட்டும்!."

ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.

Sunday, July 22, 2012

என்று தணியும் இந்த இன் ஜினீயரிங் மோகம் ? !


'இன்ஜினீயரிங் படித்தால்... நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடும்; கார், பங்களா என்று வசதியான, சொகுசான வாழ்க்கையை அடைந்துவிடலாம்' என்கிற ஆசையின் வெளிப்பாடாகத்தான் பெரும்பாலான பெற்றோர்... கடனை வாங்கி, வீட்டை, நகையை அடகு வைத்து... கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகளை இன்ஜினீயரிங் படிக்க வைக்கிறார்கள்.

ஆனால், அனைவருமே நல்ல மார்க் வாங்கி நான்கு வருடத்துக்குள் படிப்பை முடித்து விடுகிறார்களா? அப்படி பாஸாகி வரும் அத்தனை லட்சம் மாணவர்களுக்கும் உடனே வேலை கிடைத்து விடுகிறதா? கிடைக்கும் வேலையில் அவர்கள் சாதிக்கிறார்களா? 

''தமிழக இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங், அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்... சரியான கேள்வியோடுதான் வந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கிற 535 இன்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 'இன்ஜினீயர்’ என்கிற பெருமைமிகு பட்டத்துடன் வெளியே வருகிறார்கள். ஆனால், இவர்களில் பாதி பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. மீதி..?'' ''இன்ஜினீயரிங் படித்துவிட்டால் என் பிள்ளைக்கு உடனே கைநிறைய சம்பளம் கிடைத்துவிடும் என்கிற அறியாமை மற்றும் ஆசை பெற்றோர் பலரிடமும் நிறைந்திருப்பதுதான்... இன்ஜினீயரிங் கல்லூரிகள் வருடம்தோறும் லட்சம் லட்சமாக இவர்களைத் தயாரித்து (?!) அனுப்புகிறது. அப்படி வருபவர்களில் எத்தனை பேர், உண்மையிலேயே இந்தப் படிப்பை படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுப் படித்தவர்கள்? இதனால்தான், ஒவ்வொரு வருடமும் 50 சதவிகித மாணவர்களே நல்ல மதிப்பெண்களுடன் பாஸாகி வருகிறார்கள். மீதி என்ன ஆனார்கள் என்பது பற்றி யாரேனும் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அவர்கள் தங்கள் படிப்புக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஓட்டல் வேலையில்கூட குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகிறார்கள். அல்லது வழிமாறிப் போகிறார்கள்''

''மற்ற ஊழல்களைவிட கல்வி ஊழல்தான் நாட்டில் நம்பர் 1 ஊழலாக இருக்கிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஒரு வகையில் துணை போகிறோம். இன்ஜினீயரிங் படிப்பில் பிள்ளைகளை சேர்க்கும் முன்... கல்லூரி எப்படி இருக்க வேண்டும் என்று அக்கறை செலுத்துவது இல்லை. 'ஏஐசிடிஇ’ (All India Council for Technical Education) வழிகாட்டல்படி, ஒவ்வொரு கல்லூரியும் 'மேன்டேட்டரி டிஸ்குளோஷர்’ என்கிற கட்டாயமான வெளிப்படைத் தன்மைபடி, தங்கள் கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் எத்தனை மாணவர்கள் சேர்ந்தனர், அவர்களில் எத்தனை பேர் பாஸ் செய்தனர் என்பது போன்ற தகவல்களை தங்கள் வெப்சைட்டில் கண்டிப்பாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பத்து சதவிகித கல்லூரிகள்கூட அறிவிப்பது இல்லை. இதை அப்டேட் செய்யாத கல்லூரிகள்... தரமற்றவைதான்.கல்லூரியின் தேர்ச்சி சதவிகிதத்தைத் தெரிந்துகொண்டு சேர்ப்பது, மாணவனின் எதிர்கால நலனுக்கு உதவும். அண்ணா யுனிவர்சிட்டியின் வலைதளத்துக்குச் சென்றால்... இதைத் தெரிந்து கொள்ளலாம். அக்கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் பேராசிரியர்கள், லெக்சரர்களின் கல்வித் தகுதியைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருந்தால்தான்... மாணவர்களும் தகுதியானவர்களாக இருப்பார்கள். சம்பந்தப்பட்ட கல்லூரி யின் வலைதளத்துக்குச் சென்றால்... இதையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின்பு, பத்து வருடங்கள் கழித்து பதவி உயர்வு வரும்போதும், அவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தார்கள் என்பதையும் கணக்கில் எடுக்கிறார்கள். இன்று பல நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தரமான கல்லூரிகளில் படித்து வந்தவர்கள். ஆகையால், ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், ரிசல்ட் விகிதம் எல்லாவற்றையும் பரிசீலித்தே கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்!
''அமெரிக்கா போன்ற நாடுகள், இந்தியாவில் இருந்து வரும் இன்ஜினீயர்களிடம் தரமில்லை என்று நினைப்பதால், அவர்கள் வாங்கியிருக்கும் பொறியியல் பட்டத்துக்கு உண்மை யிலேயே தகுதியானவர்களா என்பதை அறிய தனியாக பரீட்சை எழுத வைக்கிறார்கள் (இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள www.washingtonaccord.org என்ற வலைதளத்தைப் பார்க்கவும்)  என்பதிலிருந்தே நம் பொறியியல் டிகிரியின் நிலையை புரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் இன்ஜினீயரிங் படிப்பின் மீதான மோகத்திலிருந்து பெற்றோர் விடுபடுவது நல்லது. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்பது மூடநம்பிக்கை. இத்துறையில் படித்து வருபவர்கள் 10 சதவிகிதத்தினர் மட்டுமே அதேதுறையில் பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள்... மற்ற மற்ற துறைகளில்தான்.

பெருகும் காலியிடங்கள் ! 

97-ம் ஆண்டில், தமிழகத்தில் சுமார் 90 இன்ஜினீயரிங் கல்லூரிகள்தான் இருந்தன. இது, 2007-ம் ஆண்டில் 277 ஆக உயர்ந்தது. தற்போது 535 கல்லூரிகள் என்று வந்து நிற்கிறது. இப்படி கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால்... காலி இடங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதும் நடக்கிறது. இந்தக் கல்வியாண்டில் (2012-13), மொத்தம் 2,51,454 இன்ஜினீயரிங் ஸீட்டுகள் உள்ளன. விண்ணப்பித்திருப்பதோ... 1,80,071 மாணவர்கள்தான். சுமார் 70 ஆயிரம் இடங்கள் இந்த வருடமும் காலிதான். இந்நிலையில், இந்த ஆண்டு இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது... பலரையும் கவலைக்குள்ளாக்கியிருக் கிறது. இதன் காரணமாகவும் மாணவர் சேர்க்கை குறையக் கூடும் எனத் தெரிகிறது !


நாச்சியாள்

Saturday, July 21, 2012

டாக்டர் இல்லாத இடத்தில்... கல்வி இல்லாத இடத்தில்... - ஓ பக்கங்கள், ஞாநி


டேவிட் வெர்னர் 1977ல் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ என்ற மருத்துவ வழிகாட்டி புத்தகத்தை வாலன்ட்டரி ஹெல்த் அசோசியேஷன் அஃப் இந்தியாவும் க்ரியா பதிப்பகமும் இணைந்து முதன் முதலில் தமிழில் வெளியிட்ட நாளிலிருந்து நான் அதைப் பயன்படுத்தி வருகிறேன். பல பதிப்புகள் வெளிவந்துவிட்ட அந்த நூலின் புதிய பதிப்பை இப்போது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

அது வெறும் முதல் உதவிப் புத்தகம் அல்ல. கிராமங்களில் இருக்கும் நலப்பணியாளர்கள் அங்கே டாக்டர் இல்லாத இடத்தில் நோயாளிக்கு என்ன செய்ய வேண்டுமென்பதை விவரமாக ஒவ்வொரு நோய், விபத்து, நோயாளியின் நிலை சார்ந்து தெரிவிக்கும் வழிகாட்டி நூல் அது. நோக்கான மருந்துகள் பட்டியலும், மருந்துகளின் தன்மை பற்றியும் சாப்பிட வேண்டிய அளவு பற்றியும் சில நம்பகமான வீட்டு வைத்திய முறைகள் பற்றியும் நூலில் தெரிந்துகொள்ளலாம். பிரசவம் பார்த்தல், பாம்புக் கடி, தேள் கடிகளுக்கு சிகிச்சை அளித்தல், அவசரத்துக்கான சிறு அறுவைச் சிகிச்சைகள் செய்தல் பற்றியெல்லாம் இந்த நூல் சொல்லித் தருகிறது.

அதே சமயம் இந்த நூல் டாக்டருக்கு மாற்று அல்ல. டாக்டர் இல்லாதபோது என்ன செய்யவேண்டும் என்று சொல்வதோடு எப்போது உடனே டாக்டரிடம் போயாக வேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்லுகிறது.

உத்தரப்பிரதேச மாநில அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு அவசர சிகிச்சையாக, ஒரு வார்டுபாய் ஊசி மருந்தேற்றியும் காயத்துக்கு தையல் போட்டுச் சிகிச்சை செய்தது பற்றியும் ஆங்கில டி.வி.சேனல்கள் பெரும் சர்ச்சையை எழுப்பியதும் எனக்கு டேவிட் வெர்னரின் நூல்தான் நினைவுக்கு வந்தது. புலந்த்ஷஹார் போன்ற சிறிய மாவட்ட மருத்துவமனைக்கு விபத்தில் அடிபட்ட 20 பேரைக் கொண்டு வந்தால் நிச்சயம் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் கவனிக்க ஆளுக்கொரு டாக்டராக 20 டாக்டர்களை அனுப்பமுடியாது. டாக்டரின் மேற்பார்வையில் வழிகாட்டுதலில் நர்சுகளும் வார்டு பாய்களும் சேர்ந்துதான் சிகிச்சை அளிக்க முடியும். புலந்த்ஷஹாரில் அதுதான் நடந்திருக்கிறது. சரியான வழிகாட்டுதலாய், சரியான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதை மட்டுமே கவனிக்க வேண்டும்.

இந்தியாவுக்கு இப்போது மொத்தம் 17 லட்சம் டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் இருப்பது 7 லட்சம் பேர்தான். பத்து லட்சம் டாக்டர் பற்றாக்குறை என்று மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் அடிப்படையான சில எளிய சிகிச்சைகளை அளிக்க மருத்துவ உதவியாளர்களைப் பெருவாரியாகப் பயிற்சி கொடுத்து நியமிக்கும் யோசனையும் திட்டமும் அரசுகளால் சுமார் 40 வருடங்களாக அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது.

சில தொண்டு நிறுவனங்கள் கிராமப் பகுதிகளில் ஏற்கெனவே அப்படிப்பட்ட முயற்சிகளை நடைமுறைப்படுத்தி வருவதை இணைய இதழான ஃபர்ஸ்ட் போஸ்ட் நிருபர் அப வைத்யா சுட்டிக் காட்டியுள்ளார்.

நாகபுரிக்கு 360 கிலோமீட்டர் தொலைவில் ஹேமல்காசா என்ற இடத்தில் சமூக சேவகர் பாபா ஆம்தேவின் மகன் டாக்டர் பிரகாஷ் ஆம்தே நிறுவியிருக்கும் மருத்துவ மனையில் வருடத்துக்கு சுமார் 40 ஆயிரம் பழங்குடி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை தரப்படுகிறது. சிகிச்சை தருவோரில் பெரும்பாலோர் எம்.பி.பி.எஸ். படிக்காத மருத்துவ பணியாளர்கள்தான். இவர்களும் பழங்குடியினரே. இதற்கென சிறப்புப் பயிற்சியை ஆம்தேவின் நிறுவனம் அளித்துவருகிறது. இதேபோல சமூக சேவகர் பங்க்கர் ராய், ராஜஸ்தான் மாநில திலோனியா கிராமத்தில் எழுபதுகளில் ஏற்படுத்திய பேர்ஃபுட் காலேஜ், கிராமப் பெண்களை மருத்துவப் பணியாளர்களாக வேலை செய்யப் பயிற்றுவிக்கிறது.

பேர்ஃபுட் டாக்டர்கள் என்பது பல காலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு கருத்து வடிவம். மருத்துவரைத் தேடி நோயாளி வராமல், நோயாளியைத் தேடி மருத்துவரே நடந்து சென்று சிகிச்சை அளித்தல் என்ற இந்தக் கருத்து, கிராமங்களில் மருத்துவ வசதி கிட்டாமல் இருந்த நிலையில் முன் வைக்கப்பட்டது. நலப்பணியாளரே ஒவ்வொரு கிராமமாகச் சென்று நோயாளிகளுக்கு முதல்கட்ட சிகிச்சையை அளிப்பது என்றும் அடுத்தகட்ட சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் மருத்துவ மனைக்குச் சென்றால் போதுமென்பதும் இந்தக் கருத்துருவத்தின் அம்சங்கள்.

சீன நாட்டில் மாவோவின் ஆட்சிக்காலத்தில் அவர் முன்வைத்த திட்டம் இது. நெல் விவசாயிகளிலிருந்தே இந்த நடை நலப்பணியாளர்களை மாவோ உருவாக்கினார். இந்தத் திட்டத்தின் விளைவாக சீன கிராமங்கள் பெரும் கொள்ளை நோய்கள் வராமல் தப்பித்தன என்றும்; அடிப்படைச் சுகாதாரம் மேம்பட்டது என்றும் உலகச் சுகாதார நிறுவனம் 2008ல் குறிப்பிட்டுள்ளது என்று அப வைத்யா சுட்டிக்காட்டுகிறார்.

நமக்குப் பற்றாக்குறையாக இருக்கும் பத்து லட்சம் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களை உருவாக்குவது ஒரு பக்கம் நடக்கட்டும். இன்னொரு பக்கம் ஒரு தேர்ந்த டாக்டர் சொன்னால், அவர் சொன்னபடி ஊசி போடுவதையும், தையல் போடுவதையும் கட்டுக் கட்டுவதையும் செய்து முடிக்கும் திறன் உடைய ஆயிரக்கணக்கான நலப்பணியாளர்களைத் தயாரிக்க வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது.

ஒரு வார்டுபாய் சிகிச்சை தரலாமாய் என்று குமுறுபவர்களுக்கு, இரண்டு செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன். வார்டுபாய், டாக்டரின் கண்காணிப்பில் சரியானபடி தையல் போட்டாரா என்பது மட்டுமே முக்கியமானது. இரண்டாவதாக 1996ல் நான் தினமணியில் இதழாசிரியராகப் பணியாற்றியபோது, என் ஆசிரியராக இருந்தவர் மறைந்த நண்பர் ஆர்.எம்.டி. எனப்படும் திருஞானசம்பந்தம். டேபிள் டேபிளாகச் சென்று பேப்பர்களையும் ஃபைல்களையும் விநியோகிப்பதும் காபி வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பதையும் செய்து கொண்டிருந்த ஒரு அட்டெண்டர், செய்திகளில் காட்டிய ஆர்வத்தைக் கவனித்த ஆர்.எம்.டி மெல்ல மெல்ல அந்த அட்டெண்டரை சின்னச் சின்ன செய்திகளை எழுதவைத்து ஒருசில வருடங்களில் நிருபராக, உதவி ஆசிரியராக ஆக்கியதை நேரில் பார்த்தேன். இது அத்தகைய இரண்டாவது அனுபவம். ஏற்கெனவே அவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் எங்கள் நிருபர் பிரிவில் பணியாற்றிய இரண்டு டைப்பிஸ்ட்டுகளை மெல்ல மெல்ல வளப்படுத்தி நிருபர்களாக்கியவர்.

வார்டுபாய்களும் நர்சுகளும் கூட சில வருடங்கள் தொழில் அனுபவத்துக்குப் பின்னர் பார்ட்டைம் படிப்பு வசதி செய்து கொடுத்தால் டாக்டர்களாக முடியும் என்பதை நாம் உணரவேண்டும். ஒரு பக்கம் பெரும் வசதிகள் குவிந்திருக்கும் மிகச் சில மாநகரங்களும்; மறுபக்கம் பெருவாரியான ஊர்களிலும் கிராமங்களிலும் அடிப்படை மருத்துவ வசதிகளே இல்லாமல் மக்கள் இருக்கும் நிலையும் உள்ளதை மாற்ற, வித்தியாசமான வழிகளை நாம் யோசித்தே ஆகவேண்டியிருக்கிறது.

(கண்ணைத் தொடைச்சுக்க)
தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட மம்தா பேனர்ஜிக்கு இ.வா.கை.கு.
கல்வி இல்லாத இடத்தில்....

‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’ என்ற கவிஞர் பாட்டை நினைவுக்குக் கொண்டு வந்தது ஒரு கொடூரச் செய்தி.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளிலும் தங்கள் இடங்களில் 25 சதவிகிதத்தை ஏழை மாணவர்களுக்குக் கொடுத்தாகவேண்டும் என்ற விதியின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்ட மூன்று சிறுவர்களின் முன்தலை முடியை வெட்டி அவர்களை மட்டும் அடையாளப்படுத்தியிருக்கிறது பெங்களூருவில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம். அடிமைகளுக்கு சூடு போட்டு முத்திரை குத்தியதன் நவீன வடிவம். (நூறு ரூபாய் திருடினால் அவன் பெயர் ஊர் விலாசம் ஃபோட்டோ எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தும் நம் பத்திரிகைகள் எந்தப் பள்ளி என்று அதன் பெயரை வெளியிடாமல் காப்பாற்றுகின்றன).

இதர பணம் கட்டும் மாணவர்களுடன் இந்தச் சிறுவர்கள் சேரக் கூடாதாம். தனி இருக்கை. இவர்களுக்கு அசெம்ப்ளி பிரேயர் கிடையாதாம். ஹோம் வொர்க்கும் கிடையாதாம். சீருடை மட்டும் உண்டு!

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பள்ளிக் கட்டணங்களை (தப்புத் தப்பாக) சீரமைத்து அறிவித்தபிறகு, பல பள்ளிகள் அரசு அறிவித்த கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு தனி வகுப்பு, தாங்கள் சொல்லும் ஃபீசைக் கட்டுவோருக்கு தனி வகுப்பு என்று நடத்தி வருகின்றன.

அரசு கொண்டு வரும் சட்டங்கள் அரை குறையாகவும் ஓட்டைகளோடும் இருப்பது இந்த அராஜகங்களுக்கு வசதியாக இருக்கின்றன. ஏற்கெனவே கல்வி உரிமைச் சட்டத்தில் பல விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற குறையை ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பகிரங்கமாக எந்தக் கூச்சமும் இல்லாமல், தங்கள் விருப்பு வெறுப்புகளைக் காட்டும் பள்ளி நிர்வாகங்கள் மீது அரசுகள் ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாணவர்களை பாரபட்சமாக நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கையை நம் அரசுகளிடம் எதிர்பார்ப்பதே அர்த்தமில்லாமல் போய்விட்டது. ஏழைக் குழந்தைகளை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நம் பள்ளியில் சேர்த்துக் கொண்டால், உங்கள் குழந்தைகளுக்குத் தொற்று நோய் வரும்; கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டுவிடும்; எனவே இந்தச் சட்டத்தை எதிர்த்து அரசுக்குக் கடிதம் எழுதுங்கள் என்று பெற்றோருக்குக் கடிதம் எழுதிய ஒரு பள்ளி பிரின்சிபாலை அரசு தன் உயர்மட்டக் குழுவில் நியமிக்கிறது. அப்புறம் எப்படி விளங்கும்?

கல்வி உரிமைச் சட்டம் என்பது ஒரு நாசூக்கான மோசடி. ஏதோ முற்போக்காக எல்லாருக்கும் கல்வி கிடைக்கத்தான் வழி செய்துவிட்டது போல பாவனை செய்து அரசு நம்மை ஏமாற்ற பயன்படுத்தும் முகமூடி அது.

எல்லோருக்கும் தரமான கல்வி மலிவான விலையில் கிடைக்கச் செய்ய இது வழியல்ல. ஒவ்வொரு தனியார் பள்ளியிடமிருந்தும் 25 சதவிகித இடங்களுக்கான பணத்தை அரசு வாங்கிக் கொள்ளலாம். அதைச் சரியாகச் செலவிட்டு ஒவ்வொரு அரசு பள்ளியையும் தனியார் பள்ளியின் தரத்தில் நடத்தினாலே நிலைமை மாறிவிடும். அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை. ஆசிரியர்கள் சங்கத்தை நினைத்து பயம் வேறு.

சட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தத் தனியாரின் ரவுடிப் பள்ளிகளில் எப்படிப் பட்ட கல்வி கிடைக்கும்? இப்படி தன் வகுப்பில் மூன்று குழந்தைகளை மட்டும் வித்தியாசமாக ஆசிரியர் நடத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்றக் குழந்தைகள் அதிலிருந்து என்ன கற்றுக் கொள்வார்கள்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறை வழிகளைத் தாங்களும் எப்படி பின்பற்றுவது என்றா?

கல்வி எங்கே இருக்கிறது? பள்ளிக் கூடத்திலா? இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோமா? இப்படிப்பட்ட நிகழ்வுகள் கல்வி, பள்ளிக்கு வெளியில்தான் இருக்கும் என்ற எண்ணத்தையே உண்டாக்குகின்றன. அண்மையில் தங்கள் குழந்தைகளை, பள்ளிக்கே அனுப்புவதில்லை என்று முடிவெடுத்துச் செயல்படுத்தி வரும் ஒரு (மெத்தப் படித்தவர்கள்) குழுவுடன் தொடர்பு கிடைத்தது. அதெப்படி குழந்தையை வீட்டிலேயே வைத்துக் கற்பிப்பது, சரியாக இல்லையே என்று நினைத்தேன். இப்போது பெங்களூரு பள்ளி போன்றவற்றைப் பார்க்கும்போது மாற்றுத் திட்டம் பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்துகொண்டால் தேவலை என்று தோன்றுகிறது. தெரிந்ததும் பகிர்வேன்.

மதுக்கடைகளை மூடக் கோரி அடையாளப் பூட்டுப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கும் பா.ம.க.வுக்கும் டாக்டர் ராமதாசுக்கும் இ.வா. பூ.

எப்படியும் தனி ஈழம் கேட்டு தீர்மானம் போடப் போவது இல்லை என்று கலைஞர் கருணாநிதி அறிவித்துவிட்ட நிலையில், ஏன் இன்னும் டெசோ மாநாட்டில் சிறப்புரையாற்ற அவர் ராஜபக்ஷேவுக்கு அழைப்பு அனுப்பாமல் இருக்கிறார் ?

சாரியட்ஸ் அஃப் பையர் (Chariots of Fire) - ஒலிம்பிக் சினிமா


இங்கிலாந்தில் திரையிடப்பட்டிருக்கும் ஒரு படத்துக்கான இரண்டு மாதத்துக்கான காட்சிகள் ஹவுஸ்புல். படம் புதிதில்லை. முப்பத்தோரு வருட பழைய படம். நம் கர்ணனைப் போல டிஜிட்டல் டெக்னாலஜியில் புதுப்பிக்கப்பட்டிருக்கும் ஒரு படம். டி.வி.டி.யும் விற்றுத் தள்ளிக் கொண்டிருக்கிறது. படத்தின் பெயர் சாரியட்ஸ் அஃப் பையர் (Chariots of Fire). இந்தச் சாதனைகளுக்குக் காரணம் படத்தின் கதை.

1924ல் நடந்த ஒலிம்பிக்ஸின் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்ற இரண்டு வீரர்களின் கதை. 1981ல் வெளியான இந்தப் படம் நான்கு ஆஸ்கர் அவார்ட்களைப் பெற்ற படம். இந்த வருட புத்தாண்டு தினத்தில் லண்டன் ஒலிம்பிக் 2012-ன் அறிமுக இசையாக, இப்படத்தின் இசை அறிவிக்கப்பட்டது. படத்தின் பல காட்சிகளும், இசையும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படுவதால், தயாரிப்பாளர்களுக்குப் பணம் கொட்டுகிறது. முதல்முறையாக விளையாட்டு வீரர்கள் அல்லாத ஒலிம்பிக் பங்கேற்பாளராக, ஒரு சினிமா, அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1919ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேரும் ஹெரால்ட் ஆபிரஹாம்ஸ் என்ற மாணவனுக்கு அவன் சார்ந்த இனத்தால் அங்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை. தம்மை நிலைநிறுத்திக்கொள்ள தமக்கு நன்கு தெரிந்த விளையாட்டான ஓட்டத்தில் பங்கு கொள்ள தொடங்குகிறான். முதல்முறையாக கேம்பிரிட்ஜ் பல்கலை வளாகத்தின் சுற்றுப்புறச் சுவரை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் 12 மணி அடித்து ஓவதற்குள் ஓடிக் கடந்து சாதனையைச் செய்கிறான். இதனால் மேலும் பல ஓட்டங்களில் பங்கேற்று வெற்றிபெறும் வாய்ப்புக் கிட்டுகிறது.ஒரு மதபோதகரின் குடும்பத்தில் பிறந்து பாதிரியாராகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இளைஞன் எரிக் லிட்டெல்,‘கடவுளின் மேன்மையைச் சொல்வதற்காக, ஓட்டப் பந்தயங்களில் ஓடுபவன். எரிக்கிடம் ஒரு தேசிய அளவிலான போட்டியில் ஆபிரஹாம்ஸ் என்ற மற்றொரு வீரன் தோற்க நேரிடுகிறது. இதனால் மனமுடைந்து சோர்ந்திருந்த ஆப்ரஹாமுக்கு எதிர்பாராதவிதமாக ஒரு கோச்சின் உதவி கிடைக்கிறது. கல்லூரி நிர்வாகம் அதனை ஆதரிக்காவிட்டாலும் துணிந்து பயிற்சியில் ஈடுபடும் ஆபிர ஹாம்ஸுக்கு கோச் சொல்லிக் கொடுக்கும் டெக்னிக்களினால் 1924 ஒலிம்பிக்கில் நாட்டுக்காகப் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. உடன் ஓடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓட்டக்காரர் தம்மை முதலில் தோற்கடித்த வீரர் எரிக் லிட்டெல். பாரிஸில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக்ஸில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அட்டவணை இடப்பட்டிருப்பது ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஒரு உண்மையான கிருத்துவர் மதக் கொள்கைகளின்படி ஞாயிறு அன்று எதையும் செய்யக்கூடாது என்பதால், போட்டியில் பங்கேற்க மறுத்துவிடுகிறார் எரிக். ஒலிம்பிக் கமிட்டி தலைவர் மன்னர் பிலிப்ஸ் வேண்டியும் மறுப்பதால், அது உலகத் தலைப்பு செய்தியாகிவிடுகிறது. அவருக்குப் பதில் மற்றொரு ஓட்டக்காரர் பங்கேற்பதால், எரிக் அந்த வீரர் ஓட வேண்டிய 400 மீட்டர் பந்தயத்தில் அதற்காகத் தயாரித்துக் கொள்ளாத நிலையிலும் ஓடி, தங்க மெடல் பெறுகிறார்.

ஆப்ரஹாம்ஸும் தங்க மெடல் பெறுகிறார். தீவிரமான மதநம்பிக்கை கொண்ட ஓட்ட வீரன், திறமையினால் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் சாதித்த மற்றொரு வீரன் என்ற இரண்டு ஒலிம்பிக் போட்டியாளர்களின் பின்னணியிலிருக்கும் இந்தச் சாதாரண கதையை விறுவிறுப்பான திரைக்கதையினாலும், இசையினாலும் பார்ப்பவர் அசந்துபோகும் அளவுக்குப் படமாக்கியவர் ஹட்ஸன் (Hugh Hudson). ஒலிம்பிக் போட்டிகளின் பயிற்சிகள், காட்சிகளுக்கான களங்கள், சோந்த விருப்பு வெறுப்புகளுக்காக நாட்டுக்கு விளையாட மறுப்பது போன்ற புதிய விஷயங்கள் இருந்ததும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.

வசூல் ரிகார்ட், அவார்ட்கள் போன்றவற்றையெல்லாம் தாண்டி காலம் முழுவதும் வாழும் பெருமையை பெற்ற சினிமாக்கள் சில மட்டுமே. சாரியட்ஸ் அஃப் ஃபயர் (Chariots of Fire) அவற்றில் ஒன்று. இரண்டு ஒலிம்பிக் ஓட்டக்காரர்களின் கதையைச் சொல்லும் இந்தப் படத்தை 2012 ஒலிம்பிக் கமிட்டி கௌரவிப் பதுதான், அதைவிட மிகப்பெரிய பெருமை.

ரமணன்

திருவையாறு - சோழ நாடு

தெய்வ மணம் கமழும் திருநாடாக விளங்குவது சோழ நாடு. "சோழ நாடு சோறுடைத்து' என்பார்கள். வெறும் வயிற்றுக்கு மட்டும் சோறன்று; உயிருக்கு சோறாகிய திருவருள் இன்பமும் தரும் என்றும் பொருள் கொள்ளலாம். சோழ நாட்டில் அன்னை காவிரியால் எழில் பெறும் கரைகள் வெறும்  மண்ணகமல்ல,  விண்ணகம். அதனால்தான் திருநாவுக்கரசர் சோழநாட்டையே சுற்றிச் சுற்றி வலம் வந்தார். இறுதியில் அவருக்குக் கயிலையின் மீது நாட்டம் ஏற்பட்டது. எனவே கயிலை நோக்கிச் சென்றார். ஆனால் இறைவனோ அவரை கயிலைக்கு அழைக்காமல் தன் குடியிருப்பை தற்காலிகமாக ஐயாற்றுக்கு மாற்றினார். ஆம், திருவையாறு, அப்பருக்கு திருக்கயிலாயம் ஆனது. நம்பினோருக்கு உய்வு தரும் திருத்தலமானது. இந்நிகழ்வு நடந்தேறியது ஒரு ஆடி அமாவாசை நன்னாளில்தான்.  திருநாவுக்கரசர் யாத்திரையாகப் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றார். அப்போது தென்கயிலாயமாகிய திருக்காளத்திக்கு வந்தார். திருக்காளத்தியப்பரை வணங்கி மகிழ்ந்தார். அதன்பின் வட கயிலாயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினார். திருக்காளத்தியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீசைலம், மாளவம், இலாடம் (வங்காளம்), மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய பகுதிகளைக் கடந்து கங்கைக் கரையில் உள்ள வாரணாசியை அடைந்தார். அதன்பின் மனிதர்களால் எளிதில் போக முடியாத வழிகளில் கயிலை மலையை நோக்கி நடந்து சென்றார் திருநாவுக்கரசர். வழியில் கிடைத்த இலை, சருகு, கிழங்கு, பழங்கள் மட்டுமே உண்டு, சில சமயம் அதனையும் தவிர்த்து இரவு பகலாக திருக்கயிலாயத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டார் திருநாவுக்கரசர்.  ஒரு நிலையில் அவரின் பாத தசைகள் தோய்ந்து போயின. மணிக்கட்டுகள் மறத்துப் போயின. அப்போதும் இறைவன் மீது கொண்ட பக்தியால் உறுதி தளராமல், வைராக்யத்துடன் மார்பினால் உந்தியும், உடலால் புரண்டும் சென்று கொண்டிருந்தார்.  அப்பரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒரு முனிவர் வடிவில் அவருக்கு எதிரே தோன்றினார். "" இம்மானிட வடிவில் கயிலை செல்வது கடினம். முற்றிலும் இயலாது'' என்றார். ஆனால் அப்பர் பெருமானோ, ""ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைக் கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்'' என்று பதிலுரைத்து உறுதியுடன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார். அப்பரின் வைராக்யத்தை மெச்சிய முனிவர் வடிவம் கொண்ட இறைவன், ""ஓங்கும் நாவினுக்கு அரசனே! எழுந்திரு! இதோ இங்குள்ள பொய்கையில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் கயிலையில் இருக்கும் கோலத்தைக் காண்க'' என்று அருளிச் செய்து மறைந்தார். அங்கு உடனே தடம்புனல் ஒன்று நாவரசர் முன் தோன்றிற்று. அதில் மூழ்கிய அவர் திருவையாற்றில் கோயிலுக்கு வட மேற்கே சமுத்திர தீர்த்தம் என்றும், உப்பங்கோட்டை பிள்ளை கோயில்குளம் என்றும் வழங்கும் அப்பர்குட்டை திருக்குளத்தின் மீது உலகெல்லாம் வியக்குமாறு எழுந்தார். திருக்கயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு நெகிழ்ந்தார். உமாதேவியுடன் வீற்றிருந்த சிவபெருமானைக் கண்ணாரக் கண்ட நாவரசர் தேனொழுகும் திருப்பதிகங்களும், தாண்டகங்களும் பாடலானார். காணப்படுவன யாவும் சிவமும், சக்தியுமாய் காட்சி  தருவதை வியந்தவர்,  ""மாதர்ப் பிறைக் கண்ணியானை  மலையான் மகளொடும் பாடிய  போதொடு நீர் சுமந்து எத்திப்  புகுவார் அவர் பின் புகுவேன்'' என்று பாடி சிவானந்தப் பேரின்பத்தில் திளைத்து இன்புற்றார். "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்' என்று தான் கண்ட காட்சிகளை நமக்கும் தனது பதிகம் மூலம்  காண்பிக்கிறார்.

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

To hear the song

அப்பர் பெருமானின் உழவாரத் திருத்தொண்டிற்கும் உள்ளத்தின் உறுதிப்பாட்டிற்கும் அடிமைத் திறத்திற்கும் உவந்து திருக்கயிலையே திருவையாற்றுக்கு வந்தது.  இன்றும் திருவையாற்றில் ஆடி அமாவாசை நாளில் கயிலைக் காட்சி விழா நடைபெறுகிறது. 
 
திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம். மேலும் திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலையை தரிசித்ததன் புண்ணியம் கிடைக்கும். திருவையாற்றில் நாளை (ஜூலை 30), ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக் காட்சி விழா நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். காலை 7 மணி அளவில் சிவ பூஜையும், பகல் 12 மணி அளவில் காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்டவரத மகா கணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு 9 மணி அளவில் ஐயாறு ஆலயத்தில் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும்.  அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதயன், தலையே நீ வணங்காய், வேற்றாகி விண்ணாகி, மாதர் பலிறைக் கண்ணியினை ஆகிய ஐந்து பதிகங்களை பக்க வாத்தியத்துடன் இசைத்து ஆராதனை  செய்வார்கள்.  ""யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது'' என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் ந்நாளில் திருவையாறு சென்று திருக்கயிலைக் காட்சியைக் காண்போம்.  

 அமைவிடம்: தஞ்சாவூரிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு. தஞ்சை, கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தைத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04362 - 260332.
For history of Aiyaarappar temple, click:

http://temple.dinamalar.com/New.php?id=677

Friday, July 20, 2012

எனது இந்தியா! (இரண்டு ஆசிரியர்கள் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ரலாற்றின் போக்கைத் திசைமாற்றம் கொள்ளச்​செய்வதில் தனிப்பட்ட ஆளுமைகளுக்கு எப்போதுமே முதன்மையான பங்கு உண்டு. குறிப்பாக, பண்டைய காலத்தில் ஓர் அரசனை உருவாக்குவதில் அவனது ஆசிரியருக்கு முக்கியப் பங்கு இருந்தது. குருகுலக் கல்விபோல ஆசிரியருடன் தங்கி அவருக்குச் சேவை செய்து நல்லறிவையும் அறத்தையும் வீரத்தையும் கற்றுக்கொள்வது அரசர்களின் மரபு. இரண்டு ஆசிரியர்கள் வரலாற்றில் தனித்து அறியப்படுகிறார்கள். ஒருவர், சந்திர குப்த மௌரியனை உருவாக்கிய சாணக்கியர். ராஜதந்திரி, அரசியல் மாமேதை, நீதி சாஸ்திரம் கற்ற பேராசான் என்று புகழப்படும் சாணக்கியர், மௌரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர். மற்றொருவர், ஒளரங்கசீப்புக்குக் கல்வி போதித்த முல்லா சாஹிப் என்ற ஆசிரியர். முல்லா, தனக்கு முறையாகக் கல்வி போதிக்காமல் சுயபுகழ்ச்சியும் முகஸ்துதியும் அத்துமீறிக்கொண்டவர் என்று 1652-ல் ஒளரங்கசீப் மிகக் கோபமாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இது, வரலாற்றில் இடம் பெற்ற ஒரு மோசமான ஆசிரியனைப் பற்றிய அரிய பதிவு. இந்த இரண்டு ஆசிரியர்களும் எதிரெதிர் துருவங்கள்.

ஒருவர் மாமன்னரை உருவாக்கி அறத்தை நிலைநாட்டியவர். மற்றவர் சுயநலத்துக்காக கல்வியை அடகுவைத்தவர். வரலாறு இருவரையுமே நினைவு வைத்துள்ளது!

தத்துவஞானி, மகா பண்டிதர் என அழைக்கப்பட்ட சாணக்கியர், தட்சசீலப் பல்கலைக்கழகத்தில் ஆசிரி​யராகப் பணியாற்றியவர். சந்திர குப்தனுக்கும் அவனது மகன் பிம்பிசாரனுக்கும் ஆசானாக இருந்தவர். சந்திர குப்தனை அரியணையில் ஏற்றுவதாக அவர் செய்த சபதம் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது. மாக்கியவல்லியின் ராஜதந்திரங்களைப் பற்றி இன்று வியந்து பேசுகிறோம். ஆனால், அதற்கு 1,800 ஆண்டுகளுக்கு முன்பே அர்த்தசாஸ்திரம் எழுதி அரசியலுக்கு இலக்கணம் வகுத்து இருக்கிறார் கௌடில்யர். இதுவும் சாணக்கியரின் மறுபெயரே. அவரை விஷ்ணுகுப்தன் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். பொருளாதாரம், நீதி, நிர்வாகம், படை நடத்துதல், நல்லாட்சி தருதல் என அரசின் அடிப்படை அம்சங்களைத் தெளிவாக வரையறை செய்கிறது அர்த்தசாஸ்திரம். சாணக்கியர் கி.மு 350-ல் பிறந்தவர். இவரது பிறப்பிடம் எதுவெனத் தெளிவான குறிப்புகள் இல்லை. ஆனால், பாடலிபுத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பௌத்த நூலான மகாவம்ச தீபிகையில் சாணக்கியரின் சொந்த ஊர் தட்சசீலம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தென் இந்தியாவைச் சேர்ந்தவராக சாணக்கியர் இருக்கக்கூடும் என்றும் சமண சிந்தாமணி கூறுகிறது. விஷ்ணுகுப்தர் என்பவரும் கவுடில்யர் என்பவரும் ஒருவர் அல்ல என்று சொல்​லும் வரலாற்று அறிஞர்களும் இருக்கிறார்கள். தட்ச சீலத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தத்துவம் போதித்து இருக்கிறார் சாணக்கியர். இள வயதிலேயே தேர்ந்த ஞானமும் விவேகமும் தைரியமும்கொண்டு இருந்த சாணக்கியர், சந்திர குப்தனைக்கொண்டு நந்தவம்சத்தை அழித்து மௌரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். சமஸ்கிருத இலக்கியங்களில் சாணக்கி​யரைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். குறிப்பாக, 'முத்ரா ராட்சசம்’ என்ற நாடகம் சந்திர குப்தன் ஆட்சியைப்பற்றிக் குறிப்பிடுகிறது.


அந்த நாடகத்தில் சாணக்கியரோடு சந்திர குப்தனுக்கு ஏற்பட்ட ஆழமான நட்பு விவரிக்கப்படுகிறது. மௌரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க சாணக்கியர் மேற்கொண்ட தந்திரங்கள் இன்றளவும் முக்கியமான அரசியல் பாடங்களாகக் கருதப்படுகிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க அதன் அடிப்படை வலிமை​யானதாக இருக்க வேண்டும்.

அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால், இங்குள்ள மக்கள் சமாதானத்தையும் அமைதியையும் விரும்புபவர்களாக இருந்தனர். இந்த மனப்பாங்கை,  நிலமே மனிதர்களுக்கு கற்றுத்தருகிறது. பூமியிடம் இருந்து மௌனத்தையும் காத்திருப்பதையும் தன்னலமற்றப் பகிர்ந்துகொள்ளலையும் இந்தியர்கள் கற்றுக்கொண்டனர். அதனால்தான் அவர்களுக்கு இன்னொரு தேசத்தின் மீது படையெடுத்துச் சென்று நாடு பிடிக்கும் ஆசை இல்லை. தனது பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வலிமையான ஒருவரை நாடிச் செல்வது எளிய மனிதர்களின் இயல்பு. இதே மனநிலைதான் அரசனைத் தேர்வு செய்வதிலும் மக்களுக்கு இருக்கிறது என்கிறார் சாணக்கியர். வலிமையான மைய அரசு அமைவதுதான் சாம்​ராஜ்யத்தை உருவாக்குவதில் முதல் படி. அதைத் தனது சீடரான சந்திர குப்தனைக்கொண்டு மெய்யாக்கிக் காட்டினார் சாணக்கியர். இன்றும் ஆட்சிப் பணியில் இருப்பவர்களுக்கு ஆதார நூலாகவே அர்த்த சாஸ்திரம் இருக்கிறது.

சந்திர குப்தனுடைய சபையில் ராஜகுருவாகப் பணியாற்றிய சாணக்கியர் குறித்து ஏராளமான கதைகள் இருக்கின்றன. அவருடைய மரணம்கூட புதிரானது. பிந்துசாரன்தான் சாணக்கியரைக் கொன்றான் என்று கூறும் வரலாற்று ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். அரசனின் கோபத்துக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டார் சாணக்கியர் என்றொரு கதையும் இருக்கிறது. உயிரோடு அவர் புதைக்கப் பட்டதாக சமண மரபுக் கதைகள் கூறுகின்றன. சாணக்​கியரின் வாழ்க்கை தெளிவற்ற சித்திரமாக இருந்தாலும் அவரது அர்த்த சாஸ்திரம் இந்தியாவின் மகத்தான நீதி நூலாகக் கொண்​டாடப்படுகிறது. 455 சூத்திரங்​​களைக்​கொண்ட அர்த்த சாஸ்திரத்தில் 216 சூத்திரங்கள் ராஜ​நீதியை வலியுறுத்துகின்றன. அர்த்த சாஸ்திரம் என்பது ஒரு தொகை நூல்தான். இதில் கூறப்​பட்டுள்ள அறக் கருத்துக்கள் முன்னதாகப் பலராலும் சொல்லப்பட்டவை. அவற்றை சாணக்கியர் தொகுத்துத் தந்து இருக்கிறார் என்று கூறும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். இதுபோலவே, மகாபாரதத்தில் வரும் விதுரன் அருளியதாகச் சொல்லப்படும் விதுர நீதியும் ஒரு முக்கியமான நீதி சாஸ்திர நூல். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது.

குறிப்பாக, அரசன் எவ்வாறு நீதி வழங்க வேண்டும் என்பதற்கு இரண்டு நூல்களும் ஒன்றுபோலவே வழிகாட்டுகின்றன. ஆகவே, இந்த அறக் கருத்துக்கள் இந்தியச் சமூகத்​தில் தொன்மையாக இருந்து வந்திருக்கின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சந்திர குப்தனின் வழியாக வரலாற்​றின் ஒளி வீசும் ஆசானாக சாணக்கியர் நிலைபெற்றுவிட்டார். ஆனால், ஒளரங்கசீப்புக்கு ஆசிரி​யராக இருந்தபோதும் கறைபடிந்த மேகமாகவே காட்சி அளிக்கிறார் முல்லா சாஹிப். ஒளரங்கசீப் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட பிறகு, முல்லா சாஹிப், 'ஒளரங்கசீப் சபையில் தனக்கு கௌரவப் பதவியும் சன்மானமும் தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து இருந்தார். அதற்குப் பதிலாகத்தான், ஒளரங்கசீப்  இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறார். இந்தக் கடிதம், தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, துக்ளக் இதழில் 01.11.1974-ல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கடிதத்தின் முழு வடிவம் இது. ஒளரங்கசீப்பின் கோபத்தையும் கல்வியின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் இந்தக் கடிதம் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. அதோடு, ஆசிரியர்களின் பொறுப்பு உணர்ச்சியையும் உண்மையைத் தைரியமாக எடுத்துச் சொல்லும் துணிவையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அந்த வகையில், இந்தக் கடிதம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேலாக ஆனபோதும் இன்றைக்கும் அது பொருத்தமானதாகவே உள்ளது. இனி, ஒளரங்கசீப்பின் கடிதம்...

''கற்றவரே!

நீர் என்னிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரச சபையில் ஒரு முக்கியப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன். நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்து இருக்க வேண்டுமோ... அப்படிச் செய்து இருந்தால், உங்களுக்கு நான் பதவியைத் தருவதுபோன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

ஏனென்றால், நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப்பட்டு இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டு இருக்கிறது.
 
ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?

ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள்.  போர்ச்சுக்கீசிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விவரமும் கூறவில்லை. பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள்.

ஆஹா...! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு! எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்து இருக்க வேண்டும்?  உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர்முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜ தந்திரங்கள் என்ன?  இவற்றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்து இருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக்கொடுத்து பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும் அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்து இருக்க வேண்டாமா? எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால் அங்கே புரட்சிகள் தோன்றின? அந்த சாம்ராஜ்யங்கள் அழிந்தன  என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்து இருக்க வேண்டாமா?

அறிவியல் சாதனை! நாத்திகர் கண்டுபிடித்த கடவுளின் துகள்!இந்த உலகம் பிறந்தது எனக்காக என மகிழும் நம்மில் சிலருக்குத் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் ஒரு கேள்வி- இந்த உலகம் எப்படிப் பிறந்தது? யார் படைத்தது?
‘அவர்தான் கடவுள்’ என உலகின் பல மதங்கள் சொல்லுகின்றன. ஆனால் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்த ‘பிங் பேங்க்’ வெடிப்பு நடந்த அந்த வினாடியில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறிய அணுக்கள்தான் நாம் இருக்கும் பூமி, நட்சத்திரங்கள், கோள்கள், வெளிமண்டலம் எல்லாம் நிலைகொண்டன என்கிறது விஞ்ஞானம். பிரபஞ்சம் இப்படி உருவானதாக உலகளவில் விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தியரி இது. இதன்படி பிரபஞ்சம் சூரியன், சந்திரன், கடல், காற்று, நீங்கள், நான், நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கல்கி உள்பட எல்லாமே மூலத் துகள்களால் (Elementary Particles) ஆனது.
‘பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். இதில் 11 அணுத்துகள்களை ஒரு முக்கியமான அணு இணைக்கிறது. அந்த ஒரு அணுத்துகளுடன் தொடர்பு கொண்ட பின்னரே மற்ற அணுக்களுக்கு மாஸ் (எடை அல்ல நிறை) கிடைக்கிறது. அதனால்தான் பேரண்டம் உருவாகியிருக்கிறது’ என்கிறது விஞ்ஞானம். விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக இருந்த அந்த ஒரு அணுத்துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என பெயரிட்டிருந்தார்கள். பெயருக்குக் காரணம் இதை உலகுக்குச் சொன்ன விஞ்ஞானியின் பெயர் பீட்டர் ஹிக்ஸ். அவர் கையாண்ட கணக்கீட்டு முறையைக் கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ். இவர் 1920களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடன் பணியாற்றியவர். அணுத்துகள் ஆராய்ச்சியில் உலக புகழ் பெற்றவர். அவரது பெயரால் அணுச்சிதறல்கள் போஸான்கள் அழைக்கப்படுகின்றன.
(இந்த மாபெரும் மேதை இந்தியாவில் கவனிக்கப்படாமலும் உலகம் மறந்து போனதற்கான காரணமும் அதிலிருக்கும் அரசியலும் தனிக்கதை.)
அப்படியானால் அந்த அணுத்துகள் தான் கடவுளா? என்ற விவாதம் வலுத்துக்கொண்டிருந்ததினால் அது ‘கடவுள் அணுத்துகள்’ என்றே பாப்புலராக அறியப்பட்டது. ஆனால் கடவுளுக்கும் இந்த அணுத்துகளுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஹிக்ஸ் போஸான் பற்றி இயான் லெடெர்மென் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 1993ல் ஒரு புத்தகம் எழுதினார். சனியன் பிடித்த அணு; இதுதான் பிரபஞ்சத்தின் விடை என்றால் கேள்வி என்ன? (The Goddamn Particle: If the Universe Is the Answer, What Is the Question?') என்று ஒரு புத்தகம் எழுதினார். பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அதை God Particle என்று மாற்றிவிட்டதால் உலகம் அதை அப்படியே அழைத்தது.
இந்தப் பேரண்டம் உருவாகக் காரணமான மற்ற அணுக்கூறுகளின் எடை அளவை கணக்கில் கொண்டு மீதியிருக்கும் ஒரு மிகச்சிறிய பகுதியான (இம்மியளவு) மூல அணுக்கூறான துகள் ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் என்பதைக் கணக்கிட்டுவிட்டார்கள். அந்த எடையைப் பரிசோதனைகள் மூலம் நிருபித்துவிட்டால் நமக்காகப் பிறந்த இந்த உலகம் எப்படி; எவற்றினால் உருவாயிற்று என அறியமுடியும் என்று அதைத் தேடி அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்த நிலையில் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிக்க முடியாததால் ஆராய்ச்சியில் இருந்து அமெரிக்கா விலகியது.கண்ணாலும், மைக்ரோஸ்கோப்பிலும் பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழிதான் இருந்தது. அதன் சரியான எடையைக் கண்டுபிடிப்பது. அதற்கு அணுக்களை மோதவிட்டு ஒரு பிரளயத்தை ஏற்படுத்திப் பார்க்கவேண்டும், 20 நாடுகள் இணைந்து உருவாக்கிய ஐரோப்பியக் கூட்டமைப்பு சார்பில் பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. பரப்பில் வட்ட வடிவ ஆய்வகம் அமைத்து செர்ன் (CERN) 7 விதமான ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாக 10 மில்லியன் டாலர் செலவில் 17 கி.மீ. நீள சுரங்கத்தில் விஞ்ஞானிகள் இரவு பகலாகச் செய்த ஆராய்ச்சியின் ஒரு கட்டம்தான் இந்தச் சிறிய செயற்கைப் பிரளயம்.40 ட்ரில்லியன் (40 லட்சம் கோடி) புரோட்டான்களின் அதிபயங்கர வேகத்தில் மோதச்செய்து வெடித்துச் சிதறிய அணுத் துணைத்துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) கண்டுபிடித்துவிட்டனர். ஹிக்ஸ் போஸானின் எடை ஆராய்ச்சிகளில் கணக்கிட்டிருந்ததுபோலவே மிகச் சரியாக 125.3 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் என்ற உண்மைதான் இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பிரளயத்தினால் உலகம் அழியும் என்று நம்பும் உலகில் ஒரு செயற்கைப் பிரளயத்தை உருவாக்கிப் பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனித முயற்சியின் வெற்றியாக இப்போது ‘கடவுளின் அணுத்துகள்’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
இது ஏதோ ஒரே நாளில் நிகழ்ந்த அற்புதம் போல், ‘கிட்டத்தட்ட கடவுள்’ ‘கடவுளைக் கண்டுபிடித்துவிட்டார்கள்’ (எப்போது காணாமல் போனார்?) என்றெல்லாம் மீடியாக்கள் சாகஸம் செய்கின்றன. உண்மையில் இது பல ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வந்த ஓர் ஆராய்ச்சியின் முடிவு. பின் ஏன் இவ்வளவு கலாட்டா என்கிறீர்களா? அணுத்துகள் ஆராய்ச்சியில் ஒரு துகளைப் பரிசோதனை ரீதியாக உருவாக்கி விட்டதாக அறிவிக்க ஐந்து சிக்மா துல்லியம் தேவை (ஐந்து சிக்மா என்பதன் பொருள் 99.999% சரியானது என்பது. அதாவது லட்சத்தில் ஒன்றே ஒன்று மட்டும் பிழையாகலாம்). அந்த நிலையில் நடைபெற்ற பரிசோதனை இப்போது வெற்றியில் முடிந்திருக்கிறது. 3000000க்கும் அதிகமான விஞ்ஞானிகளின் 25 வருட உழைப்பின் பலன்தான் இந்தக் கண்டுபிடிப்பு. இந்தியாவிலிருந்தும் டாடா இன்ஸ்டிட்யூட் அஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) உள்ளிட்ட ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து பல விஞ்ஞானிகள் CERN ஆராய்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் பாலோ ஜிபெலினோ இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் வரலாற்றுத் தந்தையாக இந்தியா விளங்கியது. இந்த சாதனையை அடைய இந்திய விஞ்ஞானிகளின் பங்கு மகத்தானது," என்று சொல்லியிருப்பதால் நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். என் வாழ்நாளிலேயே நான் எழுதிய தியரி நிரூபிக்கப்பட்டிருப்பது நம்ப முடியாத ஆச்சர்யம்" எனச் சொல்லும் 83 வயது பீட்டர் ஹிக்ஸ்க்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு நிச்சயம். ‘கடவுளின் துகளை’ கண்டுபிடித்ததாக அறியப்படும் இவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது!