Search This Blog

Saturday, May 31, 2014

அருள்வாக்கு - ஹிந்து மதம் கண்ட பாதிப்பு!


சுதந்திரப் போராட்டமும்கூட இந்த அம்சத்தில் மக்களை உரிய திசையில் திருப்பிவிடத் தவறிவிட்டது என்ற துரதிர்ஷ்டவசமான உண்மையைக் கூறாதிருக்கவியலாது. இப்போராட்டத்தின் முக்கியமான தலைவர் மேல்நாட்டினரின் ஆட்சியைக் களைவதோடுகூட, அல்லது அதனினும் முக்கியமாக, அவர்தம் வாழ்முறையில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட மோகத்தையும் களைந்தெறிய வேண்டுமென்ற கொள்கை உடையவராயினும், ஏனைய போராட்டத் தலைவர்களும் அவற்றைப் பின்பற்றிய ஏராளமான மக்களும் அதில் அவ்வளவாகக் கவனம் கொள்ளவில்லை. 

நாட்டை அந்நியரின் அரசியல் ஆளுகையிலிருந்து மீட்பதொன்றுக்கே முழு கவனமும் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் கருதியதால், மக்களின் மனப்பான்மையையும் வாழ்முறையையும் அந்நிய வழிகளின் ஆளுகையிலிருந்து மீட்பதற்கு எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. நாடு அந்நியராட்சியிலிருந்து அரசியல் சுதந்திரம் பெறும்போது அதிலுள்ள பிரஜைகள் ஹிந்து மதம் மட்டுமின்றி எம்மதத்தினராயினும் ஏதோ ஒரு மதத்தின் மூலம் உள்ளவுயர்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் கருதாது, அரசியல் சுதந்திரத்துக்காக மட்டுமேதான் போராட்டம் நடத்தப்பட்டது. எனவே குறிப்பாக ஹிந்து மதஸ்தர் மனிதாபி மானத்தில் பின்னடைவு காணும் நிலையே நீடித்து வந்தது. அந்நிலையில்தான் இறுதியாகச் சுதந்திரம் வந்திருப்பதும்.

இங்கு கவனத்திற்குரிய அம்சம் யாதெனில், இந்திய மக்களில் ஹிந்துக்கள் மாத்திரம் தான் இவ்விதம் சுயமனிதாபிமானம் குன்றியது. இஸ்லாமியர் எப்போதுமே தீவிரமான சுயமதப் பற்றும் சமுதாயக் கட்டுப்பாடும் உள்ளோராதலின் அவர்கள் மேனாட்டு வழிகளில் ஹிந்துக்கள் போல் மயங்கி சுய மதக் காப்பில் பின்தங்கவில்லை. கிறிஸ்துவர்களோ அம்மேனாட்டினரின் மதத்தைச் சேர்ந்தோரேயாதலின், அவர்கள் விஷயத்தில் இப்பிரச்னை எழும்பவேயில்லை. அதாவது ஹிந்து மதம் மட்டுமே பாதிப்புற்றது.

சுதந்திரப் போராட்ட காலத்தின் போதும் ஹிந்து சமயத்துக்காகவும் அதன் சமூகத்தினருக்காகவும் சமய ஸ்தாபனம் எனக் கூற முடியாமல் சமூக ஸ்தாபனமாகவே இருந்துகொண்டு எழுச்சியுடன் போராடிய ஓரிரு இயக்கங்கள் ஆற்றிய சிறு பங்கைத் தவிர, மாபெரும் சுதந்திரப் போராட்ட இயக்கம் எதுவும் செய்யாமல், ஹிந்து சமயம் பின்னடைவிலேயே உள்ள நிலையில்தான் முடிவாகச் சுதந்திரம் வந்திருப்பது.

இந்த நடைமுறை உண்மைகளை ஹிந்துக்களல்லாதாரும் நடுவு நிலையிலிருந்து நோக்கினால், சுதந்திர பாரத அரசாங்கமானது மக்களின் உள்ள உயர்வுக்குத் தமது பங்கான பணியை ஆற்ற வேண்டுமென்றும், மதத்தின் மூலம்தான் அவ்வுயர்வு நடப்பதாகச் சரித்திரம் காட்டியிருப்பதால் இங்குள்ள எல்லா மதங்களுக்கும் எம்மதமாயினும் போஷணையளிக்க வேண்டுமென்றும் உணர்ந்து அதைச் செயற்படுத்துமாயின், மிகவும் பாதிப்புற்றிருப்பதும் மிகப் பெரும்பாலோருக்கு உரியதுமான ஹிந்து மதத்துக்கே அரசாங்கத்தின் வழியாக அதிகப் பொருள் உதவி அளிக்க வேண்டுமென்பதை ஒப்புக்கொள்ளவே செய்வர்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

குஜராத்தின் முதல் பெண் முதல்வர்!

 
மோடி பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கான விடை, லோக்சபா தேர்தலின் கடைசிகட்ட வாக்குப் பதிவு நடந்துமுடிந்த பிறகு வெளியான வாக்குக் கருத்துக் கணிப்புகள் மூலமாகத் தெரிந்து விட்டது. ஆனாலும், ‘மோடிக்கு அடுத்து குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போவது யார்?’ என்ற சஸ்பென்ஸ் அதன் பிறகும் நீடித்தது. காரணம், குஜராத் முதலமைச்சராக இருந்த வரையில், மோடி தனக்கு பிறகு நெம்பர் 2 என யாரையும் அடையாளம் காட்டியதில்லை. ஆனால், அதற்கு ஆசைப்பட்டவர்கள் இருக்கவே செய்தார்கள். 
 
அதனால்தான், மோடிதான் பிரதமர் என உறுதியானவுடன், குஜராத்தின் நிதி அமைச்சரான நிதின் பட்டேல், ‘தனக்கு அந்த வாய்ப்புத் தரப்பட்டால், அதனை ஏற்கத் தயார்’ என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார். குஜராத் முதலமைச்சர் பந்தயத்தில் சௌரப் பட்டேல் (பத்தாண்டுகள் முதலமைச்சர் மோடிவசமிருந்த பல முக்கியமான துறைகளுக்கு இவர்தான் துணை அமைச்சர்), புருஷோதம் ருபாலா (இவர் ராஜ்யசபா எம்.பி.), வாஜுபாய் வாலா (சபாநாயகர்) என்று சிலரது பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டாலும், இறுதியில் வின்னிங் போஸ்ட்டைத் தொட்டவர் ஆனந்திபென் பட்டேல் தான்! மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சீனியர் அமைச்சர் இவர். சுமார் 15 வருடங்கள் அமைச்சராக இருந்திருக்கிறார். குஜராத்தில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் எம்.எல்.ஏ. இவர்தான். இப்போது குஜராத்தின் முதல் பெண் முதல்வர்.
 
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான ஆனந்தி பென், பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பள்ளிக்கூட ஆசிரியர் ஆனார். 1987ல், பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு சர்தார் சரோவர் என்ற நர்மதா அணைக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த சமயத்தில், இரண்டு மாணவிகள் தவறி விழுந்தபோது, உடனே தண்ணீரில் குதித்து, அவர்களைக் காப்பாற்றினார். இதற்காக, மாநில அரசின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. எம்.எட். படிப்பை முடித்தபோது அவர் தங்கப்பதக்கம் பெற்றார். பின்னர் அகமதாபாத் நகரில் உள்ள மோனிபா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரின்சிபாலாகப் பணியாற்றினார். ஆசிரியப் பணிக்காக ஒருமுறை மாநில அரசின் விருதும், ஒரு முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.  

ஆரம்பக்கால ஆர்.எஸ்.எஸ். நாட்களிலிருந்தே மோடிக்கு ஆனந்திபென்னைத் தெரியும். மோடியின் அழைப்பின் பேரில்தான், அவர் அரசியலுக்கு வந்தார். மோடி, குஜராத் மாநில பா.ஜ.க. செயலாளராக இருந்தபோது, அவர் ஆனந்தி பென்னை பெண்கள் பிரிவுக்குத் தலைவி ஆக்கினார். பின்னர் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். கேசுபா பட்டேலின் கீழ் அமைச்சராக இருந்தபோதிலும், கேசுபா பட்டேலும், சஞ்சை ஜோஷியும் சேர்ந்து கொண்டு, மோடியை குஜராத்திலிருந்து வெளியேற்றத் திட்டமிட்ட காலகட்டத்தில், மோடிக்கு ஆதரவாக நின்றவர்களுள் ஒருவர் ஆனந்திபென்; இன்னொருவர் அமித் ஷா. 
 
73 வயதில் தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து, தன் பணியைத் தொடங்கிவிடும் ஆனந்திபென் தினமும் காலை யோகாவும், பிராயாணமும் செய்யத் தவற மாட்டார். குஜராத் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மூன்று முறை முதல்வராக அரியணை ஏறிய மோடியின் நம்பிக்கை பெற்றவராக ஆகியிருக்கிறார் ஆனந்தி பென்.

சந்திரமௌலி

Friday, May 30, 2014

சுடோகு... ஓர் அறிமுகம்!

உலகமே டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கிறது. கைபேசி, கணினி என எண்களின் ராஜ்ஜியம் எங்கெங்கும் நிறைந்துள்ளது. அத்தகைய எண்களை வைத்து ஒரு விளையாட்டை உங்கள் மழலைகளுக்குக் கற்றுத் தரலாமே! இந்தக் கட்டுரையை கவனமாகப் படித்து உங்கள் குழந்தைகளுக்கு சுடோகுவில் உள்ள லாஜிக் விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். முதலில் கடினமாகத் தெரிந்தாலும், புத்திசாலித்தனமான யூகங்களால் இதை எளிதில் சால்வ் செய்ய முடியும். ஃபின்லாண்டின் கணித மேதை டாக்டர் ஆர்டோ இங்காலா என்பவர் உருவாக்கிய சுடோகு தான் மிகவும் கஷ்டமான புதிர் என்று கருதப்பட்டது. வலைத்தளங்களில் கிடைக்கும் அதுபோன்ற சுடோகுகளை ப்ரிண்ட் எடுத்து குழந்தைகளைப் போடச் சொல்லலாம். செய்தித்தாள்களில் வரும் சுடோகுகளையும் போடச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள். இதில் உள்ள லாஜிக் புரிந்துவிட்டால் எத்தகைய கடினமான சுடோகுவாக இருந்தாலும் உங்கள் சுட்டீஸ் நொடியில் முடித்து விடுவார்கள். என்ன ரெடியா? 
சுடோகு என்பது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ஓர் எண் விளையாட்டு. எழுத்து என்றால் மொழி வேண்டும். எண்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியானவைதானே!


ஜப்பானில் உள்ள நிகோலி என்ற நிறுவனம் இதை சுடோகு என்ற பெயரில் பிரபலப்படுத்தியது. (சுடோகு என்றால் ஒற்றை இலக்க எண் என்பது பொருள்).
இதில் பொதுவாக 9க்கு 9 என்கிற சதுர அளவில் 81 கட்டங்கள் இருக்கும். 1லிருந்து 9 வரை எந்த வரிசையில் வேண்டுமானாலும்,(ஒவ்வொரு வரிசையிலும்) எழுதலாம். இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்று வரும் எந்த வரிசைக்கும் இது பொருந்தும். அதுமட்டுமல்ல இந்த 9 x 9 கட்டத்தை 3 X 3 என்று 9 சமமான பகுதிகளாகப் (BLOCKS)பிரிக்க முடியும். இந்த ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 9 கட்டங்களிலும் 1லிருந்து 9 வரை உள்ள எண்களைக் காணலாம்.

இப்படி எண்களை (1லிருந்து 9 வரை உள்ள எண்களை) இந்தக் கட்டங்களில் நிரப்பிவிட்டு, அதிலிருந்து சில எண்களை நீக்கிவிடுவார்கள். (சில சமயம் பல எண்களைக்கூட நீக்கிவிடுவார்கள்). விடுபட்ட எண்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் சுடோகு விளையாட்டு.
விடுபட்ட எண்களைக் கண்டுபிடிக்க சில குறிப்புகள் இதோ.
எந்த ஒரு வரிசையிலும் (இடமிருந்து வலமுள்ள வரிசையோ (ROWS) அல்லது மேலிருந்து கீழ் வரிசையிலோ (COLUMNS) 1லிருந்து 9 வரை உள்ள எல்லா எண்களும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே (மொத்தம் 9 கட்டங்கள்தான் ஒவ்வொரு வரிசையிலும் என்பதால்) 1லிருந்து 9 வரை உள்ள எந்த எண்ணுமே அந்த வரிசையில் ஒருமுறைதான் இடம் பெற்றிருக்கும்.
ஒவ்வொரு ‘ப்ளாக்’கிலும் (அதாவது 3 X 3 என்றிருக்கும் சிறு பகுதியில்) 1 முதல் 9 வரை உள்ள அத்தனை எண்களும் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஒருமுறைதான் இடம் பெற்றிருக்கும். நீங்கள் இதை விளங்கிக் கொண்டீர்களா என்பதைத் தெரிந்து கொள்ள இதோ ஒரு சின்ன சோதனை.
கீழே உள்ள கட்டங்களில் 3 இடங்களில் கேள்விக் குறிகள் உள்ளன. கேள்விக் குறி உள்ள கட்டங்களில் இடம் பெற வேண்டிய எண்கள் எவை? யோசியுங்கள்.
முதல் வரிசையில் உள்ள கேள்விக்குறிக் கட்டத்தில் இடம்பெற வேண்டிய எண் 3 ஏனென்றால் அடுத்த 3 X 3 என்றிருக்கும் சிறு பகுதியில் 1லிருந்து 9வரை உள்ள எல்லா எண்களும் (3த் தவிர) அந்த வரிசையில் உள்ளது.
ஐந்தாவது வரிசையில் மேலிருந்து கீழாக 5, 7 ஆகிய கட்டங்களுக்குக் கீழ் உள்ளது இரண்டாவது கேள்விக்குறி. அந்தக் கட்டத்தில் இடம் பெற வேண்டிய எண் 3. ஏனென்றால் ஒவ்வொரு 3 X 3 கட்டங்களாக இதைப் பிரித்தால்,ஒவ்வொன்றிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்கள் இடம் பெற்றிருக்கும். அப்படிப் பார்த்தால் மேற்புறம் நடுவில் உள்ள 3 X 3 கட்டங்களில் 9,5,6,2,7,8,4,1 ஆகிய எண்கள் காணப்படுகின்றன. 1லிருந்து 9 வரை உள்ளவற்றில் இதில் மிஸ் ஆகும் ஒரே எண் 3-தான். இதனால்தான்கேள்விக் குறி உள்ள கட்டத்தில் 3 இடம் பெற வேண்டும்.
ஐந்தாவது வரிசையில் மேலிருந்து கீழாக ஏழாவது கேள்விக் குறி உள்ள கட்டத்தில் இடம் பெற வேண்டிய எண் 9. ஏனென்றால் 1லிருந்து 8 வரை உள்ள எண்கள் அந்த வரிசையில் ஏற்கனவே உள்ளன. இதன் அடிப்படையில்தான் சுடோகோ விளையாட வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்துவர கடினமான சுடோகோவும் ஈஸியாகும்.Tuesday, May 27, 2014

தானியங்கள்... தரும் பலன்கள்!
Monday, May 26, 2014

யார் இந்த அமித்ஷா?


இன்று மோடியின் வலதுகரமாக விளங்குபவராக குறிப்பிடப்படும் அமித்ஷாவுக்கு வயது 50. வசதியான குஜராத்தி பிசினஸ் குடும்பத்தில் பிறந்த அமித்ஷா பயோ கெமிஸ்டிரியில் பட்டம் பெற்றவர். பல வருடங்கலாக ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய அமித்ஷா, சில காலம் ஸ்டாக் புரோக்கராக இருந்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு வந்தவர். முதலில் அத்வானிக்கு நெருக்கமாக இருந்து, குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் அவருக்குத் தேர்தல் பணியாற்றியவர். 2002ல் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 2007ல் இரண்டே கால் லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் குஜராத் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2003ல், மோடியின் அமைச்சரவையில் மிக இளைய அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஒரு பக்கம், அமித்ஷாவின் அரசியல் வியூகங்களால் கட்சிக்குக் கிடைத்துள்ள தேர்தல் வெற்றி பாராட்டப்பட்டாலும், ஷா மீது குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர்கள், இளம்பெண் மீதான ரகசிய கண்காணிப்பு போன்ற கரும் புள்ளிகளும் உண்டு.

எப்படிக் கிடைத்தது 73/80?

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிர தேசத்தில் இருக்கும் எண்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 40ல் ஜெயிக்க வேண்டும். அப்போதுதான், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்க முடியும் என்று பா.ஜ.க. தனக்குத்தானே இலக்கு நிர்ணயித்துக் கொண்டது. அத்தனை சீட்டுக்கள் கிடைக்கும் என்றும், கிடைக்காது என்றும் மீடியாவும், மற்ற கட்சிகளும் சொல்லிவந்தன. 

ஆனால், தேர்தல் முடிவுகள் மற்றவர்களுக்குப் பயங்கரமான அதிர்ச்சியையும், பா.ஜ.க.வுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பா.ஜ.க.வுக்குச் சொந்தமாக 71 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்துக்கு இரண்டு இடங்களும் கிடைத்துள்ளன. மீதமுள்ள ஏழு இடங்களும் இரண்டு அரசியல் குடும்பத்தினருக்குச் சென்றுள்ளன. ஆம், இரண்டு இடங்களில் காங்கிரசின் முதல் குடும்பத்தைச் சேர்ந்த சோனியா, ராகுல் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள ஐந்து இடங்களில் சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம் சிங் குடும்பத்துக்கே சென்றுள்ளது.  

முலாயம் சிங் மெயின்புரி, அசம்கர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். முலாயமின் மருமகளும், உ.பி. முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள், கன்னவுஜ் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். தவிர, பதவ்ன், ஃபிரோசாபாத் ஆகிய இரண்டு தொகுதிகளில் முலாயம் தமது நெருங்கிய உறவினர்களான தர்மேந்திர யாதவ், அக்ஷ யாதவ் ஆகிய இருவரையும் நிறுத்தி, வெற்றி பெறச் செய்திருக்கிறார். இதை லக்னௌ பத்திரிகையாளர் வட்டாரத்தில் மொத்த உ.பி.யையுமே சங் பரிவார், காந்தி பரிவார், முலாயம் பரிவார் மூன்றும் வளைத்துப் போட்டுவிட்டதாக கமென்ட் அடிக்கிறார்கள். 

 ஆனால் உ.பி.யில் இத்தனை பெரிய அளவில் பம்பர் அறுவடை பா.ஜ.க.வுக்கு எப்படிச் சாத்தியமானது? இதுதான் இந்திய அரசியலிலே எழுந்து நிற்கும் ஆச்சர்யக் கேள்வி. இதற்கு முழுக்க முழுக்கக் காரணமானவர், மோடியின் வலதுகரமாக விளங்கும் அமித்ஷாவையே சாரும். அவரை, உத்தரப்பிரதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளராக்கி, களமிறக்கினார் மோடியும், ராஜ்நாத் சிங்கும். அவர் செயல்படுத்திய பல்வேறு வியூகங்களில் மிக முக்கியமானது அப்னா தளத்துடன் கூட்டணி அமைத்து, அதற்கு இரண்டு சீட்கள் கொடுத்தது என்கிறார்கள் உ.பி. அரசியலைக் கூர்ந்து கவனித்துவரும் பார்வையாளர்கள். காரணம், அப்னா தளம் ஒரு பெரிய அரசியல் கட்சி இல்லை என்றாலும், அதன் முக்கியத்துவத்தை பா.ஜ.க. மிகச் சரியாகக் கணித்து, அதைத் தன்னோடு சேர்த்துக் கொண்டது. கன்சிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கியபோது, அவரோடு கூட இருந்தவர் சோனாலால் பட்டேல். ஆனால், கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட மாயாவதி யோடு அவருக்கு ஒத்துப் போகவில்லை. எனவே, 1995ல், தனியாகப் போய், ‘அப்னா தள்’ என்ற கட்சியைத் தொடங்கினார். 1999ல் சோனா லால் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட, அதன்பின் அவரது மகள் அனுப்பிரியா பட்டேல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இந்தக் கட்சி உறுப்பினர்கள். உ.பி. சட்டசபையில் இந்தக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. உண்டு. அப்னா தளத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டதன் பயனாக, மாநிலம் முழுவதிலுமாக உள்ள ஓ.பி.சி. வாக்கு வங்கியின் ஆதரவை பா.ஜ.க. பெற முடிந்தது. இது வரலாறு காணாத வெற்றிக்கு வழி செய்தது. இதைத் தவிர, வாரணாசி தொகுதியில், மோடியின் வெற்றிக்கு அப்னா தளம் கட்சியின் வாக்கு வங்கியும் ஒரு காரணம்.அமித் ஷா, உ.பி.யில் பா.ஜ.க.வின் ஆதரவுத் தளத்தை விஸ்தரிக்க பல நடவடிக்கைகளில் இறங்கினார். அவற்றுள் மிகவும் முக்கியமானது, இளம் வாக்காளர்களைக் கவர்ந்து, அவர்களைத் தேர்தல் பணிக்குப் பயன்படுத்திக் கொண்டது ஆகும். இதற்காக, மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 1300 கல்லூரி வளாகங்களுக்குச் சென்று, மாணவர்களை வாலன்டியர்களாத் திரட்டி, அவர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தினார். முந்தைய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சந்தித்த தோல்வியின் காரணமாக சுணங்கிப் போயிருந்த அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, பழைய பூத் கமிட்டி உறுப்பினர்களை மாற்றி, அதற்குப் புதிய துடிப்புமிக்க இளைஞர்களை உறுப்பினர்களாக நியமித்தது மிக நல்ல பயன் தந்தது. 

அது மட்டுமில்லாமல், மீடியா மூலமாக சென்றடைய முடியாத மாநிலத்தின் பகுதிகளில் சென்று பிரசாரம் செய்வதற்காக முழு நேரத் தொண்டர் படைகளை உருவாக்கி, 800 வாகனங்களைக் கொடுத்து, மாநிலம் முழுவதும் அனுப்பி வைத்தார். அதற்கு முன்பாக, இதற்கு முந்தைய சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வேட்பாளர்களாகப் போட்டியிட்டுத் தோல்விகண்டவர்களை சிறு, சிறு குழுக்களாகச் சந்தித்து, அவர்களின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன என்பதை அவர்கள் மூலமாகவே கட்டறிந்து கொண்டார்.

இன்னொரு பக்கம், கட்சியில் அமித் ஷாவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உள்ளூர் தலைவர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. ‘வெளியூர்க்காரரான உங்களுக்கு, உ.பி. பாலிடிக்ஸ் பற்றி என்ன தெரியும்?‘ என்று அவரிடமே கேட்டவர்கள் உண்டு. ஆனால், அமித்ஷா கோபப்படாமல், ‘நான் வெளி ஆசாமிதான்.கட்சிப் பணியாற்றுவதற்காக உ.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன். உள்ளூர் அரசியல்வாதிகளான உங்கள் ஒத்துழைப்போடு, உங்கள் ஊர் அரசியலைப் புரிந்துகொண்டு, என் பணியை ஆற்ற உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்’ என்று பேசி அவர்கள் ஆதரவைப் பெற்று, தம் தேர்தல் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தினார்.  


கட்சிக்காரர்கள், பொறுப்பாளர்களுடனான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தபோது, வகுப்பறை மாடலில் இல்லாமல், அனைவரும் பங்கேற்க வழிசெய்யும் வகையில் வட்டமேஜை கூட்டங்களாக இருக்கச் செய்தார். தேர்தல் டிக்கெட் கொடுப்பதற்கு, மேலிட அனுமதியோடு சில விதிமுறைகளை அமித்ஷா பின்பற்றினார். தொடர்ச்சியாகத் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்குத் தொகுதியில் அவர்களுக்குச் செல்வாக்கு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு சீட் கிடையாது. தொகுதிக்காரர்களுக்குத் தான் சீட். 

 மாநிலத்தின் ஜாதிக்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதே சமயம் அனைத்து ஜாதியினரும் போட்டியிட வாய்ப்பளிக்கவும் வழி செய்யும் வகையில் வேட்பாளர் தேர்வு நடந்தது. நரேந்திர மோடியை, குஜராத்தில் மட்டுமில்லாமல், உ.பி.யிலும் ஒரு தொகுதியில் நிற்கவைப்பது; அதற்கென பாரம்பரிய கலாசாரத்துக்குப் பெயர் பெற்ற வாரணாசியைத் தேர்ந்தெடுத்தது, அதன் மூலம், உ.பி.யிலும், பீகாரிலும் பா.ஜ.க. ஆதரவு அலையை ஏற்படுத்துவது என எல்லா விஷயங்களிலும் அமித்ஷாவின் கை இருந்தது.


 

 

 

 


மேகத்தில் சேமித்து வைக்கலாம்! - கிளவுட் தொழில்நுட்பம்

 
என் நண்பன் ஒருவன் தம் கணினியில் இருந்த பத்து வருட பேக்கப்பும் (காப்புநகல்) வைரஸ் பிரச்னையால் அம்பேல் ஆகிவிட்டது என்று அழுது புலம்பினான். மூன்று மாதத்துக்கு மேல் பிரயத்தனப் பட்டு லோலோவென்று அலைந்து தம் கணினியிலிருந்த டாக்குமென்டுகளை மீட்டெடுத்தான். அதற்காக ஆயிரக்கணக்கில் தண்டச்செலவு. இந்த மாதிரியான சூழ்நிலையை நம்மில் பலர் எதிர்கொண்டிருப்போம்.
 
தொழில்நுட்ப உலகில் கிளவுட் எனப்படும் ‘மேகம்’ என்ற தொழில்நுட்பம் பற்றி கேள்விப்பட்ட துண்டா? சாமானிய மொழியில் இப்படிச் சொல்லலாம். உங்கள் வீட்டுக் கணினியில், ஐபேடில் உங்கள் குடும்ப ஃபோட்டோக்கள், வீடியோ, பிற டாக்குமெண்டுகள், இப்படி பல ஜீபி பேக்கப் வைத்திருப்பீர்கள். வைரஸ், திருட்டு இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் இந்த பேக்கப்புகள் தொலைந்துவிட்டால் என்ன ஆகும்? சிடி பேக்கப், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் என்று சில விஷயங்கள் உள்ளபோதிலும், இந்தப் பிரச்னைக்கான தீர்வுகளில் முக்கியமானது ‘கிளவுட்’ தொழில்நுட்பம்.
 
விண்டோஸ் 8-ல் இந்தச் சிறப்பம்சம் ஓ.எஸ்ஸுடன் (onedrive) கூடவே தரப்படுகிறது. இது தவிர, (www.dropbox.com) மாதிரியான இணையதளங்களும் கிளவுட் சேமிப்புக்கிடங்கைத் தருகின்றன. வெப்சைட்டுகளுக்கு வருடத்துக்குப் பராமரிப்புத் தொகை வழங்குவதுபோல், இந்த ட்ராப்பாக்ஸுக்கும் வழங்க வேண்டும். நமது கணினி, ஐபேடுகளில் இருக்கும் முக்கிய ஆவணங்கள் அவ்வளவு பத்திரம் கிடையாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் இந்த மேக சேமிப்புக்கிடங்கில் பதிவேற்றி வைத்தால் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் வழங்கியில் (செர்வர்) பத்திரமாக இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் (செல்பேசி, ஐபேட்) அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
சரி, நிறுவனங்களுக்கும் இதே பிரச்னை இருக்குமல்லவா? ஒரு நிறுவனத்தில் மென்பொருள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், இன்னபிற முக்கிய டேட்டாக்கள் எல்லாவற்றையும் அந்த நிறுவன வழங்கியிலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதாக இருக்காது. அதற்கான சிறந்த தீர்வாக இந்த மேகத் தொழில்நுட்பம் இருக்கும் என்றும் கூறுகின்றனர். மைக்ரோசாப்ட், அமேசான், ஐ.பி.எம். போன்ற முன்னணி நிறுவனங்கள் கிளவுட்டில் வேகமாக முன்னேறி பல விஷயங்களை அறிமுகம் செய்தவாறு உள்ளன.  

இந்த மேகத்தொழில்நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு, ஆரக்கிள் மாதிரி நிறுவனங்கள் ஒருபடி மேலே போய் சேமிப்புக் கிடங்கைத் தாண்டி, மென்பொருட்களை எப்படி மேகத்தில் பராமரிக்கலாம் என்று ஆராய்ந்து சில யுக்திகளை வழங்கிய வண்ணம் உள்ளன. இனி வருங்காலம் மேகத்தோடுதான் பயணிக் கும்!!!
 
இன்னொரு விஷயம், இந்த மேகத்தொழில்நுட்பம் நன்றாகச் சூடுபிடிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட பாதிப்பேருக்கு மேல் வேலை கிடையாது. ஆமாம், சர்வர் பராமரிப்பு, மென்பொருள் பராமரிப்பு இவையனைத்தும் மேகத்துக்கு சென்றுவிடும்.
 
அது சரி, இந்த மேகத்தைப் பராமரிக்கும் நிறுவனத்திலிருக்கும் சர்வரில் ஏதாவது வைரஸ் பிரச்னை, இல்லை அந்த நிறுவன கட்டடத்தில் தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? இந்த நிறுவனங்கள் நல்ல கட்டமைப்பு வசதிகளுடன்தான் இருக்கும். எளிதில் எந்தப் பிரச்னையும் வராது. அதையும் மீறி வந்தால் என்ன செய்வது என்று குதர்க்கமாகக் கேட்கிறீர்களா? ‘பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற வைத்தியருக்கு.....’

தி.சு.பா.

அருள்வாக்கு - கேட்டுக் கொள்வது


OBEDIENCE; சுச்ருஷை

இங்கேயும் லோக ஜனங்களின் ஜகமத்யத்தை (ஒரே போன்ற சிந்தனையை)க் காட்டுவதாக ஒன்று பார்க்கிறோம்.

ˆObey என்ற வார்த்தையிலிருந்தே obedience வந்திருப்பதாக எவரும் புரிந்துகொள்ள முடியும். லாடினிலிருந்து வந்த அந்த (ஒபீடியன்ஸ் என்ற) வார்த்தைக்கு ‘கவனமாகக் கேட்டுக் கொள்வது என்றே மூலத்தில் அர்த்தம் என்றும் சொல்கிறார்கள்.

‘சுச்ருஷை’ என்று ஒன்று நாம் சொல்கிறோம். குரு சுச்ருஷையையே சிஷ்யனுக்குத் தலையான கடமையாகச் சொல்கிறோம். அதற்கும் நேர் அர்த்தம் ‘கேட்டுக் கொள்கிறது’தான். ஆக, கீழ்ப்படிதல் என்பதற்கு இங்கிலீஷ் வார்த்தையான ஒபீடியன்ஸ், பணிவிடை என்பதற்கு நம் தேசத்து வார்த்தையான சுச்ருஷை ஆகிய இரண்டும் ‘கேட்டுக் கொள்வது’ என்ற ஒரே அர்த்தத்தின் அடியாகத்தான் இருக்கிறது. கீழ்ப்படிவதும் பணிவிடையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்கிற விஷயங்கள். இரண்டிற்கும் இரண்டு வேறே பாஷைகளில் ஒரே அர்த்தம். ஏன் அப்படி இருக்கணுமென்றால்.

‘கேட்டுக் கொள்வது’ என்றால், என்ன கேட்டுக் கொள்கிறோமோ அந்தப்படியே செய்ய வேண்டும் என்பதுதான் உள்ளர்த்தம். ‘சொன்னதைக் கேளு!’  

‘சொன்னபடிக் கேக்கறதில்லே’ என்றெல்லாம் ‘சொல்லும்’போது அது தானே அர்த்தம்? "Hear'-கும் அந்த அர்த்தமுண்டு. பெரியவர்கள் சொன்னபடி நடப்பதுதான் நிஜமான சுச்ருஷையும் ஒபீடியன்ஸும். அதனால்தான் அப்படி வார்த்தைகள் ஏற்பட்டிருக்கின்றன.

ரொம்பப் பொருத்தமாக ஒன்று தோன்றுகிறது. ஒபீடியன்ஸைக் கீழ்ப்படிதல் என்று சொல்கிறோம். உடம்பு பூராவையும் வாஸ்தவமாகவே கீழே பூமியிலே படியவிட்டுக் கிடப்பதுதான் ஸாஷ்டாங்க நமஸ்காரமாக இருக்கிறது!

இப்படி (சிஷ்யன் குருவுக்கு) நமஸ்கரிப்பதை முதலில் சொல்லி விட்டு, அப்புறமே கேட்டுக் கேட்டு உபதேசம் பெற்றுக் கொள்வது, சுச்ருஷை என்று நாம் வழக்கில் சொல்கிற சரீரரீதிப் பணிவிடையைப் பண்ணுவது என்று பகவான் வரிசை பண்ணிக் கொடுத்திருக்கிறார்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

தில்லி - ஐ.பி.எல் - சச்சின் -மெஸ்ஸி- ‘சக் தே இந்தியா’


தில்லி இந்த முறையும் தனது இயல்பை விட்டுக் கொடுக்கவில்லை. இதுவரை நடந்த ஐ.பி.எல்.களில் இரண்டு முறை கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த தில்லி, இந்தமுறையும் வெற்றிகரமாக கடைசி இரண்டு இடங்களில் ஒன்றைப் பிடித்துவிட்டது. ஐ.பி.எல். வரலாற்றில் மிகவும் மோசமாக ஆடுகிற அணிகளில் ஒன்றாக தில்லி இருப்பது யாரும் எதிர்பாராத ஒன்று. இத்தனைக்கும் இந்திய அணியில் ஏகப்பட்ட தில்லி வீரர்கள் ஆடுகிறார்கள். தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஐ.பி.எல்.லில் மட்டும் தில்லிக்கு இன்னமும் ஒரு நல்ல அணி வாய்க்கவில்லை. 2011, 2013 வருடங்களில் கடைசி இடத்தைப் பிடித்ததால் இந்த முறை ஒட்டுமொத்த அணியையும் மாற்றி அமைத்தார்கள். ஆனாலும் மீண்டும் மீண்டும் கடைசி இடத்தைப் பிடிப்பதே தில்லியின் வழக்கமாக இருக்கிறது. அடுத்த வருடமும் தில்லி அணியில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அதேபோல கடந்த 6 ஐ.பி.எல்.களில் ஒரே ஒருமுறை மட்டுமே ஃப்ளே ஆஃப்க்குத் தகுதி பெற்ற பஞ்சாப் அணி, இந்தமுறை ருத்ரதாண்டவம் ஆடுகிறது. மேக்ஸ்வெல், மில்லர் அவுட் ஆனால்கூட இளம் வீரர்கள் அணியைக் கரை சேர்க்கிறார்கள். ஒரு மேட்சில் ஷேவாக் ஆடினால், அடுத்த மேட்சில் சஹா பட்டையைக் கிளப்புகிறார். திடீரென்று வோஹ்ரா அடி பின்னுகிறார். பஞ்சாப் அணியைத் தாண்டி ஐ.பி.எல்.ஐ. வெல்ல முடியுமா என்பதுதான் மற்ற அணிகளின் கவலை. பஞ்சாப் ஐ.பி.எல்.ஐ வென்று, மேன் ஆஃப் தி மேட்ச், மேன் ஆஃப் தி சீரீஸ் பட்டங்களை மேக்ஸ் வெல் வெல்வார் என்பதுதான் பலருடைய ஆருடம்! ஆனால் டி20யில் அதிர்ச்சிகளுக்கு எப்போதும் இடமுண்டு. இந்த ஐ.பி.எல். என்னவிதமான ஆச்சர்யங்களைத் தரப்போகிறதோ?!

சி.எஸ்.கே. இந்த முறை ஒரு தவறு செய்துவிட்டது. ராஜஸ்தான் அணியில் லெக்ஸ்பின்னரான 42 வயது பிரவின் டாம்பேவை ஏலத்தில் தேர்ந்தெடுத்திருந்தால் சென்னைக்குப் பல சௌகரியங்கள் கிடைத்திருக்கும். இவ்வளவு திறமையான இந்திய வீரர், அதுவும் இவ்வளவு குறைந்த தொகைக்குக் கிடைப்பது மிகவும் அரிது. ஏலத்தில், வெறும் 10 லட்சத்துக்கு மட்டுமே விலை போனார் டாம்பே. இத்தனைக்கும் அவர் சென்ற வருட ஐ.பி.எல். சாம்பி யன்ஸ் டிராபி இரண்டிலும் அற்புதமாக பௌலிங் செய்து கலக்கினார். வயதைக் காரணம் காட்டி அவர் மீது எந்த அணியும் நம்பிக்கை வைக்காதது, ராஜஸ்தானுக்குச் சாதகமாகப் போய்விட்டது. 10 லட்சத்துக்கு இத்தனை திறமைகளைக் காண்பித்த வீரர் யாருமில்லை. ‘என்னுடைய வேலையை எளிதாக்குகிறார், டாம்பேவுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் வாட்சன் சொல்லும் அளவுக்கு அணியில் டாம்பேவின் பங்களிப்பு மிக அபாரமாக இருக்கிறது. இந்திய டி20 அணியில் ஒரு வாய்ப்பு வழங்கிப் பார்க்கலாம்.  

இந்தமுறையும் அதிக ரன்கள் எடுத்த வீரராக ஒரு வெளிநாட்டு வீரர்தான் (மேக்ஸ்வெல் அல்லது ஸ்மித்) தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஐ.பி.எல். ஆரம்பித்தது முதல் இன்றுவரை, 2010ம் வருடம் தவிர (சச்சின்), மற்ற எல்லா வருடங்களிலும் வெளிநாட்டு வீரர்கள்தான் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார்கள். கடந்த மூன்று வருடங்களில் இரண்டு முறை இந்தப் பெருமை கெல்-குச் சென்றது. இந்தியாவில் நடக்கும் ஒரு போட்டியில், இந்திய பிட்சில், வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணி வீரர்களைத் தாண்டிச் செல்வது விநோதம்தான்.

இந்த வருட ப்ரெஞ்ச் ஓபனை நடாலால் ஜெயிக்க முடியுமா என்கிற கேள்வி டென்னிஸ் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ப்ரெஞ்ச் ஓபனுக்கு முன்பு கடைசியாக நடந்த ரோம் மாஸ்டர்ஸ் போட்டியிலும் நடால் தோற்றுவிட்டார். களிமண் தரையில் நடால்தான் எப்போதும் ராஜா. கடந்த 9 வருடங்களில் எட்டு முறை ப்ரெஞ்ச் ஓபன் சாம்பியன். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் மூன்று களிமண் தரையில் நடந்த போட்டிகளிலும் நடாலால் சாம்பியன் ஆகமுடியவில்லை. இந்த மூன்று தோல்விகளால் நடாலால் ப்ரெஞ்ச் ஓபனை ஜெயிக்க முடியுமா என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ப்ரெஞ்ச் ஓபன் போட்டிக்கான சரியான பயிற்சி கிடைக்கவில்லை, தொடர்ந்து தோற்றிருக்கிறார், ஜெயிப்பது கடினம்தான் என்பது பல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. 2005க்குப் பிறகு இப்போதுதான் நடாலுக்கு இப்படியொரு சங்கடம் ஏற்பட்டுள்ளது.  \\

ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் நடாலைத் தோற்கடித்து சாம்பியன் ஆன ஜோகோவிச், இருவருக்கும் நடந்த 41 போட்டிகளில் 19 முறை வென்றிருக்கிறார். கடந்த இரண்டு ப்ரெஞ்ச் ஓபன் போட்டிகளிலும் ஜோகோவிச், நடாலிடம்தான் தோற்றுப்போனார். ஆனால் இந்தமுறை நடாலுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறவர், ஜோகோவிச்தான். இன்னும் இரண்டு வாரங்களில் நடால் மீண்டும் ப்ரெஞ்ச் ஓபன் பெருமையைத் தக்க வைத்துக்கொள்ளப்போகிறாரா அல்லது கோட்டை தகர்க்கப்படுமா என்பது தெரிந்துவிடும்.உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரரான 26 வயது மெஸ்ஸிக்கு பார்சிலோனா அணி, வருடத்துக்கு 160 கோடி ரூபாய் சம்பளம் அளிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. (2018க்குப் பிறகு ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படும்) 2004-05 முதல், பார்சிலோனா அணிக்காக ஆடிவரும் அர்ஜெண்டினா வீரரான மெஸ்ஸியால் இதுவரை 21 போட்டிகளை வென்றுள்ளது பார்சிலோனா அணி. சம்பளம், விளம்பர வருவாய் எல்லாம் சேர்த்து மெஸ்ஸி வருடத்துக்கு 426 கோடி ரூபாய் சம்பாதித்து, உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர் என்கிற அந்தஸ்தை அடைந்துள்ளார்! 

‘லகான்’, ‘சக் தே இந்தியா’ போன்ற விளையாட்டுத் தொடர்பான படங்களுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 5 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக்ஸில் வெண்கலம் என இந்தியாவுக்குச் சர்வதேச அரங்கில் பெருமைத் தேடித் தந்துள்ள பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு, அவரது பெயரிலேயே ஹிந்திப் படமாக உருவாகி வருகிறது. மேரிகோமாக நடிப்பவர், பிரியங்கா சோப்ரா. இந்தப் படம் பார்த்த பிறகு பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்துவார்கள். 17 வயதில், சாலையில் ஒருவன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தபோது, தற்காப்புக் கலையைப் பயன்படுத்தி அவனிடமிருந்து தப்பித்தேன். என்னுடைய வாழ்க்கை வரலாறு, பெண்களுக்கு நிச்சயம் ஒரு தூண்டுகோலாக இருக்கும்" என்கிறார் மேரி கோம். தன்னைப் பற்றிய கதை என்பதால் மேரி கோமின் சம்மதத்துடன்தான் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுடைய காதல் மற்றும் திருமணக் காட்சிகள் மிகவும் சுவாரசியமான முறையில் வந்துள்ளன," என்கிறார் மேரி கோமின் கணவர். சென்ற வருடம் வெளியான மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பாக் மில்கா பாக்’, சூப்பர் ஹிட் ஆகி, நூறு கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்த வரிசையில், மேரி கோம் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ‘மேரி கோம்’ அக்டோபர் 2ம்தேதி வெளியாகிறது.  

ச.ந.கண்ணன்


முதுநிலைக் கல்வி

 
பட்டப்படிப்பைப் பற்றி பலருக்கும் ஓரளவு அறிமுகம் இருக்கிறது - ஆனால் பட்ட மேற்படிப்பில் (முதுநிலைக் கல்வியில்) பல சிறப்புப் பிரிவுகள் அறிமுகமாகிவிட்டன. ஒவ்வொன்றிலும் அதற்கே உரிய வேலைவாய்ப்புகளும் காத்திருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்வோமா? 
 
எம்.எஸ்சி. பட்ட மேற்படிப்பில் நிதிநிலைக் கணிதம் (Financial Mathematics), செயல்படு நிதி நிலை (Operational Finance) போன்றவை உள்ளன. இவற்றைப் பெரும்பாலும் வடஇந்தியக் கல்லூரிகளே அளிக்கின்றன. சென்னையிலுள்ள கணிதக் கழகம் (Chennai Methamatical Institute) எம்.எஸ்சி-யில் கணினிக் கணிதம் (Computation mathematics) என்னும் கல்விப் பிரிவை அளிக்கிறது.  

டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபன்டமென்டல் ரிசர்ச் எஜுகேஷன் என்னும் நிறுவனம் முதுநிலை அறிவியல் படிப்பில் வணிகப் புள்ளியியல் (Business Statistics) என்னும் கல்வியை அளிக்கிறது. வெளிநாட்டு வணிகம் (Master of Foreign Trade),சர்வதேச வணிகம் (Master of International Business) ஆகியவற்றில் முதுநிலைக் கல்விகளைப் படித்தால், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம். இவற்றில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த செயல்முறைகளை விரிவாகவே சொல்லித் தருகிறார்கள்.எம்.பி.ஏ. என்பதிலேயே பல சிறப்புக் கல்விகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. கூட்டாண்மை ஆளுகை (Corporate Governance) காப்புறுதி மற்றும் இடர் மேலாண்மை (Insurance and Risk Management), நிகழ்ச்சிகள் மேலாண்மை (Event Management) போன்றவை சில உதாரணங்கள். பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் எம்.பி.ஏ.வில் மெட்டீரியல் மேனேஜ்மென்டை சிறப்புப் பாடமாக கற்றுத் தருகிறது.பொருளாதாரச் சிறப்புப் பிரிவு என்றாலே எம்.ஏ. படிப்பு மட்டும்தான் நினைவுக்கு வரவேண்டும் என்பதில்லை. Madras School of Economics என்னும் நிறுவனம் M.Sc.யில் நிதிநிலைப் பொருளாதாரம் (Financial Economics),சுற்றுச் சூழல் பொருளாதாரம் (Environment Economics) பயனுறு அளவுசார் நிதியியல் (Applied Quantitative Finance) போன்ற பல சிறப்புப் பிரிவுகளை அளிக்கின்றன. வணிகப் பொருளாதாரம் (Business Economics),கிராமப் பொருளாதாரம் (Rural Economics)போன்றவற்றையும் பல கல்வி நிறுவனங்கள் அளிக்கின்றன. முக்கியமாக தில்லியில் பல கல்வி நிறுவனங்கள் பொருளாதாரப் படிப்பில் கவனம் செலுத்துகின்றன. சில உதாரணங்கள் இவை : ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், டெல்லி ஸ்டீபன் கல்லூரி ஆகியவை.
 
பொறியியல் படிப்பில் சிவில் பிரிவைப் படித்தவர்கள் முதுநிலைப் படிப்பில் சிலவகை சிறப்புப் பிரிவுகளை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றில் சில நீராற்றல் மற்றும் நீர்வளப் பொறியியல் (Hydraulic and Water Resource Engineering)மற்றும் புவி தொழில்நுட்பப் பொறியியல் (Geo Technical Engineering).
 
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் ஓசோன் இன்ஜினியரிங் சிறப்புப் பாடமாக அளிக்கப்படுகிறது.  வடஇந்தியாவிலுள்ள சில ஐ.ஐ.டி.க்களில் கட்டடத் தொழில்நுட்பம் (Building Technology), கட்டுமான மேலாண்மை (Construction Management) என்னும் கல்வி அளிக்கப்படுகிறது. நிலநடுக்கம் தொடர்பான பொறியியல் படிப்பை ரூர்கியிலுள்ள ஐ.ஐ.டி. அளிக்கிறது. E.E.E.எனப்படும் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் M.E.அல்லது – M.Tech.போன்றவற்றில் சிறப்புப் பாடமாக கீழே உள்ளவற்றில் எதையும் தேர்ந்தெடுக்கலாம். ஆற்றல் பொறியியல் (Energy Engineering), அணுசக்திப் பொறியியல் (Nuclear Engineering), உயர் மின்னழுத்தப் பொறியியல் (High Voltage Engineering),மின்சக்தி முறைகள் (Power Systems) ஆகியவை அவற்றில் சில. Sociology எனப்படும் சமூகவியல் துறையில் உடல்நல சமூகவியல் (Sociology of Health,) சட்ட முறை சமூகவியல் (Sociology of Legal Systems), கிராம சமூகவியல்(Rural Sociology)போன்ற சிறப்புப் பிரிவுகள் அறிமுகமாகி விட்டன. மின்வேதியல் பொறியியல் (Electro Chemical Engineering) முதுநிலைப் படிப்பில் வெப்பம் மற்றும் பொருண்மை மாற்றம் (Heat and Mass Transfer), அரிமானப் பொறியியல் (Corrosion Engineering) என்னும் பலவித பிரிவுகள் அறிமுகமாகியுள்ளன. எனர்ஜி இன்ஜினியரிங் என்பதில் சேர சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் பிரிவுகளில் பாடம் பெற்றவர்கள் தகுதி உள்ளவர்கள் ஆகிறார்கள். 
 
முதுநிலைப் படிப்பில் நானோ தொழில்நுட்பம், மருத்துவக் கருவிமயமாதல் (Medical Instrumentation) ஆகியவற்றுக்கு டிமான்ட் இருக்கிறது. சமீபத்தில் மருந்தியல் பொறியியல் (Pharmaceutical engineering) கல்வியும் அறிமுகமாகி விட்டது.  

எம்.டெக்.கில் பாதுகாப்புப் பொறியியல் (Safety Engineering) எனப்படும் தொழில் தொடர்பான பாதுகாப்பு பொறியியலை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் புவித் தகவலியல் (Geo informatics), வான்வெளிப் பொறியியல் (Aerospace engineering), பீங்கான் தொழில் நுட்பம் (Ceramic engineering), தானியங்கு ஊர்திப் பொறியியல் (Automobile engineering), பாலிமர் பொறியியல் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 
அமெரிக்காவில் படிக்க முடியுமா?

அமெரிக்காவில் படிக்க வேண்டுமென்றால், இளநிலை பட்டமாக இருந்தால் SAT, TOEFL, IELTS போன்ற நுழைவுத் தேர்வுகள் எழுதித் தேற வேண்டும். முது நிலையாக இருந்தால் GRE எழுத வேண்டும். அதே போல், மேலாண்மை படிப்பிற்கு GMAT எழுத வேண்டும். நீங்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இடம் பெற முடியும். வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை ஸ்காலர்ஷிப் மிகமிக அவசியம். திட்டமிட்டு உழைத்தால், நல்ல மதிப்பெண்ணும், உதவித் தொகையும் நிச்சயம்தானே.

அமெரிக்கா படிப்பு பற்றி அறிய: http://www.yashnatrust.org/

யூகேவில் படிக்க : http://www.britishcouncil.in/study&uk

ஆஸ்திரேலியாவில் படிக்க: http://www.studyinaustralia.gov.au/


ஜி.எஸ்.எஸ்.
 

Thursday, May 22, 2014

பல்

'நாம் உண்ணும் உணவை நன்கு மென்று உண்பதற்காகப் பற்கள் உதவுகின்றன. கடினமான பல்லில் பாதிப்பு ஏற்பட்டு பல்லின் உறுதியைப் பாதிப்பதை சொத்தைப்பல் என்கிறோம். உலக அளவில், மிக அதிக அளவில் ஏற்படும் உடல் நலக்குறைபாடாக பல் சொத்தை விளங்குகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதைச் சரிப்படுத்தாவிட்டால் பாதிப்பு வேர் வரை இறங்கி, மற்ற பற்களையும் பாதித்துவிடும்.

பல் சொத்தை பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருந்தாலும், இந்தக் காரணத்தினால்தான் பல்லில் சொத்தை ஏற்படுகிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள், சொத்தைப் பல்லை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். வலி எடுக்க ஆரம் பித்தால்தான் டாக்டரிடம் செல்கின் றனர். சிலரோ, சொத்தைப் பல் என்றதும், பிடுங்கிவிடச் சொல் கின்றனர். பல் சொத்தை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

சொத்தை வரக் காரணங்கள்: 

பாக்டீரியாவும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுமே பல் சொத்தை ஏற்பட முக்கியக் காரணங்கள்.

 மரபு வழியாகவும், உமிழ்நீர் அடர்த்தியாக இருந்தாலும் பல் சொத்தை வர வாய்ப்பு அதிகம்.

  கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகாலத்தில் பல்லில் நோய்த் தொற்று இருந்து, அது தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு வரலாம்.  

  குழந்தைகள் இரவில், ஃபீடிங் பாட்டிலில் பால் குடித்தபடியே தூங்குவதன் மூலம், பற்களில் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும்.  

  சரியாக பல் துலக்காததாலும் சொத்தை வரலாம்.

  உணவுப் பழக்கங்கள்... ஜங்க் ஃபுட்ஸ், சாப்பிடும் உணவுகள் பெரும்பாலும், ஒட்டும் தன்மையுள்ள பசை உணவாகவே இருக்கிறது. பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டால் அது பற்களின் இடையே மாட்டிக்கொள்ளுமே தவிர, ஒட்டாது.

 அதையே சமைத்துச் சாப்பிடும்போது, பற்களில் ஒட்டுகிறது. இந்த உணவுத் துகள்கள் அதிகம் சேர்ந்து பற்களைப் பாதிக்கின்றன.

அறிகுறிகள்: 

  கருப்பான கோடு போல் இருக்கும்.

  தொட்டால் அந்த இடம் மிருதுவாக இருக்கும்.  சிலருக்கு 'படக்’ என்று உள்ளே போகும் அளவுக்கு குழியும் வந்திருக்கலாம்.

  பல் குழியாகி ஆழமாகப்போவதைப் பொருத்து பாதிப்புகள் தெரியவரும்.

 காய்ச்சல், தொண்டையில் வலி, காது, தலை, கழுத்து போன்ற இடங்களில் வலி இருக்கும்.  

 சிகிச்சைகள்: பற்குழி வேர் வரை அரித்து வலியை ஏற்படுத்தும்போதுதான் கிராம்பு வைப்பது போன்ற கை வைத்தியங்களைக் கடைப்பிடிக்கிறோம். இதை அப்படியே கவனிக்காமல்விட்டால், வேர் வரை பாதிப்பை ஏற்படுத்தி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

   எக்ஸ்-ரே மூலம் பல் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, மேல் வரை மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தால், ஆன்டிசெப்டிக் லேயர் கொடுத்து அதுக்கு மேல் ஃபில்லிங் செய்யப்படும்.  

 வீக்கம், சீழ் இருந்து, வேர் வரை போய் இருந்தால் 'ரூட் கெனால்’ மூலம் பல்லின் வேர்ப் பகுதி சுத்தம் செய்யப்படும். பல்லின் வேர்ப் பகுதி இல்லாததால் அந்த பல்லுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். ஒரு கட்டத்தில் பல் பொடிப்பொடியாக உடைந்துவிடவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அந்தப் பல்லின் மேல் பகுதியில மெட்டல் கேப் போட்டுவிடலாம். இதனால் பல்லின் உறுதித்தன்மை பாதுகாக்கப்படும்.

 பிடுங்கினால் பிரச்னையா? 

சிலர் சொத்தை வந்தால் பிடுங்கிவிடுகின்றனர். சரி எடுத்துவிட்டோமே, என்று மாற்றுப் பல் கட்டுவதுமில்லை. இதனால் பக்கத்தில் உள்ள பற்களும் பாதிப்புக்கு உள்ளாகும். பல் எடுத்த இடத்தில் இடைவெளி ஏற்பட்டு முக அழகைக் கெடுத்துவிடும். வார்த்தைகள் குளறும். நாக்கை அடிக்கடி கடிக்க நேரிடும்.

பாதுகாப்பான பற்களுக்கு... 

 தினமும் இரண்டு முறை பல் தேய்க்கவேண்டும்.

 குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன் ஈறுப் பகுதியை தண்ணீரில் கழுவி, நன்றாக துணியால் துடைத்துவிடவேண்டும்.  

 சாக்லேட் மற்றும் எந்த உணவைச் சாப்பிட்டாலும், உடனே, நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.  

 சாதாரண டூத் பேஸ்ட் பட்டாணி அளவே போதுமானது.  

 'ஜிக்ஜாக்’ முறையில் பல் தேய்ப்பது ஒழுங்கைத் தருவதுடன் ஆரோக்கியமாக இருக்கும்.  

 குழந்தைகளுக்கு பற்கள் வலுவாக இருக்க, ஃப்ளூரைடு வார்னிஷ் தடவ வேண்டும்.

 8 வயது வரை குழந்தைகள் சரியான முறையில் பல் தேய்ப்பதற்கு பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்.

 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

 பச்சைக் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கிழங்கு வகைகள், அரிசி சாதம் சாப்பிடலாம்.  

 ஐஸ்க்ரீம், கேக், குக்கீஸ், சாக்லேட்ஸ் தவிர்ப்பது நல்லது.

 சாப்பிட்ட பிறகு சுகர் ஃப்ரீ சுயிங்கம் மெல்லலாம். இதனால், உமிழ்நீர் நன்கு சுரந்து, பற்கள் சமச்சீர் தன்மைக்கு வந்துவிடும்.  பல்லில் சொத்தை வராமலும் தடுக்கும்.


Monday, May 19, 2014

பிரதமர் மோடி

இந்திய தேர்தல் வரலாற்றில், ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப்பின், தனிப் பெரும்பான்மையோடு ஜெயித்து ஆட்சி அமைக்கும் பெருமையைப் பெற உள்ளது பாரதிய ஜனதா கட்சி.
 
1984-ல் ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி கண்டது. அதன்பிறகு இப்போது பாரதிய ஜனதா கட்சிதான் 272 இடங்களுக்கு மேல் வெற்றி வாகை சூடும் நிலையில் உள்ளது. வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொண்டபோதுகூட இப்படி ஒரு வெற்றியை அந்தக் கட்சி கண்டதில்லை.

இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம், நரேந்திர மோடி என்பதைச் சொல்லவேண்டியதே இல்லை. மோடியின் இந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது, இந்தியா முழுக்க உள்ள சாதாரண மனிதனின் ஒரே ஒரு எதிர்பார்ப்புதான்.

'காங்கிரஸின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் ஊழல், பொருளாதார வளர்ச்சியின்மை, விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை எனப் பல பிரச்னைகள். மேலும், தொழில் வளர்ச்சி பெரிய சரிவில் சிக்கியது. இனி, மோடி இதை மாற்றட்டும்’ என்கிற எதிர்பார்ப்பில்தான் பெருவாரியான மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

'குஜராத் மாடல்’ என்கிற உதாரணத்தை உருவாக்கி, அதை இந்தியா முழுவதுக்கும் உரைகல்லாக மாற்றிக் காட்டிய மோடி, இனி இந்தியா முழுக்க சிறப்பானதொரு வளர்ச்சி காண வைப்பதன் மூலம் 'இந்தியா மாடல்’ என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும். இந்த 'இந்தியா மாடல்’, சீனா மாடல்’ என்கிற கருத்தையே தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா ஒரு வல்லரசாக மாற முடியும்.

 

இதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது ஊழலற்ற அரசாங்கம். மக்கள் நலனில் அக்கறைகாட்டும் அரசாங்கம் அமைந்துவிட்டாலே போதும், தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துவிடும்.

இதுநாள்வரை நாட்டின் வளர்ச்சியில் கடைப்பிடித்து வந்த கட்டுப்பெட்டித்தனமான நடைமுறைகளை பாரதூரமாக மாற்றுவதன் மூலமே இதையெல்லாம் மோடி செய்துகாட்ட முடியும். 

மக்கள் தங்களது அபிலாஷையை தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள். மக்களின் இந்த அபிலாஷைகளை இனி மோடி எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் முக்கியமான விஷயம்.

அடுத்துவரும் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே மோடியின் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் இருக்கிறது!

Saturday, May 17, 2014

‘யெல் நினோ’ - கடலில் கிளம்பும் பூதம்

பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவின் யாங்ஸே நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 1,500 பேர் மாண்டனர். இதற்குக் காரணம் அப்போது கடற்பரப்பில் ஏற்பட்ட ‘யெல் நினோ’தான். இப்போது பசிபிக் பெருங்கடலில் வெப்ப அளவு கன்னாபின்னா என்று அதிகமாகி வெப்பமடைந்த தண்ணீர்ப் பரப்பு கிழக்கு நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறதாம். இது முந்தைய பல பத்தாண்டுகளில் இல்லாத அளவில் எல்லோரும் கவலைப்படுகிற மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்கிறார் ஆஸ்திரேலியாவின் பருவநிலை அறிவியலாளர் ஒருவர். 
 
பசிபிக் கடல் பரப்பில் இப்படி வெப்பநிலை உருவாவதைத்தான் ‘யெல் நினோ’ என்கிறார்கள். இதன் விளைவாக உலக உருண்டையின் வெவ்வேறு பகுதிகளில் ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கும் இன்னொரு பக்கம் கடும் வறட்சியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக உணவுப் பொருள் உற்பத்தி பாதிப்படைகிறது.இன்னும் கொசுக்களால் உண்டாகும் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்களும் விரைவாகப் பரவுகிற அபாயம் உண்டு. இந்தியா, வெனிசுலா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் மலேரியா நோய்ச் சுழற்சி ஏற்படுவதற்கு ‘யெல் நினோ’ பாதிப்பே காரணம் என்பதை இப்போது கண்டறிந்திருக்கிறார்கள். ‘யெல் நினோ’ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு ‘சிறுவன்’ என்று பொருள் கொள்ளலாம். பொதுவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பரப்பில் கிறிஸ்துமஸ் காலத்தையொட்டி இது ஏற்படுவதால் இதைக் ‘குழந்தை இயேசு’ என்று அடையாளப்படுத்தினார்கள். பசிபிக் கடற்கரைக்கு அப்பால் குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் வெப்பமடைவதுதான் ‘யெல் நினோ’. இதேபோல் அளவுக்கு அதிகமாகக் கடல் பரப்பு குளிர்ச்சியடைவதும் உண்டு. இதை ‘லா நினா’ என்பார்கள். இதற்கு ‘சிறுமி’ என்று பொருள். முற்காலத்தில் இதை ‘யெல் வீஜோ’ (கிழவன்) என்று வழங்கியிருக்கிறார்கள். கீழைப் பசிபிக் பெருங்கடலின் நீர்ப் பரப்பில் இப்படி ஏற்படுகிற வெப்ப அளவு மாறுபாடுகளை ‘யென்ஸோ’ என்ற ஒரே சொல்லால் குறிப்பிடுகிறார்கள். (யெல் நினோ சதர்ன் ஆஸிலேஷன்). இந்த மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை இன்னும் முழுமையாக ஆராய்ந்து சொல்ல முடியவில்லை. பொதுவாக, வேளாண்மை, மீன்பிடித் தொழில்களை மட்டுமே சார்ந்துள்ள வளர்ந்துவரும் நாடுகள், குறிப்பாக பசிபிக் பெருங்கடல் பரப்பை ஒட்டியிருக்கும் நாடுகள் இந்த விளைவுகளால் பெரிதும் பாதிப்படைகின்றன.
 
இந்த விளைவு ஒழுங்கற்ற கால இடைவெளியில் ஏற்படுகின்றன. இரண்டு முதல் ஏழு ஆண்டுகள்.  சராசரியாக ஐந்து ஆண்டுகள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கடல் பரப்பு வெப்ப நீட்டிப்பு ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை இருக்கலாம். அதற்கு மேலும் கால அளவு நீண்டால் இதை ‘யெல் நினோ எபிஸோட்’ என்கிறார்கள்.
 
இந்த ‘பூதம் கிளம்பிவிட்டது’ என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்துகொள்வது?  

* இந்தியப் பெருங்கடல், இந்தோனேஷியக் கடல் பகுதி, ஆஸ்திரேலியக் கடல்பகுதிகளில் மேல் மட்ட அழுத்தம் அதிகமாகும்.
 
* பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதியிலுள்ள தாஹித்தி போன்ற பகுதிகளில் மேற்பரப்பின் காற்றழுத்த அளவு வீழ்ச்சியடையும்.
 
* தென் பசிபிக் பகுதியின் டிரேட் விண்டின் வேகம் பலவீனமடையும் அல்லது கிழக்கு நோக்கித் திரும்பும்.
 
* பெருவுக்கு அருகில் காற்றின் வெப்ப அளவு கூடுதலாகி வடக்குப் பெரு பாலைவனப் பகுதிகளில் மழை கொட்டும்.  

* மேற்குப் பசிபிக், இந்தியப் பெருங்கடல் பரப்பிலிருந்து கிழக்குப் பசிபிக் வரை வெப்பநீர் பரவும். இதனால் மேலைப் பசிபிக் பகுதியில் கடும் வறட்சியும், சாதாரணமாக வறண்ட \ பகுதியாக உள்ள கீழைப் பசிபிக் பகுதியில் பெருமழையும் பொழியும்.
 
1972 யெல் நினோ விளைவின்போது கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழில் பெரும் அளவுக்குப் பாதிப்படைந்ததாம். 1982 -83 விளைவின் போது சில குறிப்பிட்ட மீன் இனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. சிலவகை மீன் இனங்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
 
2008 மார்ச்சில் ஏற்பட்ட ‘லா நினா’ விளைவின்போது மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது.கடந்த பல பத்தாண்டுகளாக ‘யெல் நினோ’ விளைவுகள் கூடுதலாகியுள்ளன என்றும், ‘லா நினா’ விளைவுகள் குறைந்துள்ளன என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்) என்று நம்பப்படுகிறது.வரலாற்றைப் புரட்டிப் போட்டதிலும் இந்த முகமறியாத ‘யெல் நினோ’வின் பங்கு இருக்கிறது. 1789 - 1793 விளைவுகளால் ஐரோப்பாவில் வேளாண் விளைபொருள் உற்பத்தி பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு, ‘பிரெஞ்சுப் புரட்சி’யே உருவாகக் காரணமானதாம். 1876-77 ‘யெல் நினோ’ விளைவால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வட சீனாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஒருகோடியே முப்பது லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.உலகிலேயே பாம் ஆயில் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தோனேஷியா. 2014 ஜூன் வாக்கில் ‘யெல் நினோ’ விளைவு தொடங்கிவிட்டால் இதில் கடும் பாதிப்பு உண்டாகுமாம்.
 
‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து...’ என்று ஆண்டாள் பாடிய காலம் போயே போய்விட்டது. தாறுமாறான பருவநிலைகள் உருவாவதற்கு மனிதர்களின் சுயநலமே காரணமாக அமைந்து விட்டிருக்கிறது. முக்கியமாக வனவளத்தைப் பறிகொடுத்துவிட்டுக் ‘கான்கிரீட் காடு’களைத் தினமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ‘யெல் நினோ’, அது இது என்று எதன் மீதாவது பழிபோடவா நமக்குத் தெரியாது?
 
சுப்ர.பாலன்

Thursday, May 15, 2014

கிளென் மேக்ஸ்வெல்.

கிளென் மேக்ஸ்வெல்.

'பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...’ ரேஞ்சுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் முரட்டு ஆட்டம் ஆடி மிரட்டுகிறார் மேக்ஸ்வெல். அதிரடி ஆட்டக்காரர்களான கிறிஸ்கெயில், வீரேந்திர ஷேவாக்கே 'இவன் வேற மாதிரி’ என மிரண்டுபோய் பேட்டி கொடுக்கிறார்கள்.

கட்டாக்கில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டி வரை ஏழு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியிருக்கும் மேக்ஸ்வெல், 435 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் நான்கு முறை 80 ரன்களை சரவெடி அதிரடியாகக் கடந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு வரை மும்பை அணியில் இருந்த கிளென் மேக்ஸ்வெல்லை யாருமே கண்டுகொள்ளவில்லை. 'நீ யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்த?’ என இப்போதுதான் 'ஆட்டோ டிரைவர் மாணிக்கத்திடம்’ விவரம் கேட்பது போல, ஐ.பி.எல். ரசிகர்கள் மேக்ஸ்வெல் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

2012-ம் ஆண்டு டெல்லி அணியில் இருந்த மேக்ஸ்வெல்லை, 2013-ம் ஆண்டு ஆறு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 'மில்லியன் டாலர் பேபி’ என்ற முத்திரையுடன் மும்பை அணிக்கு வந்தவரை மூன்றே மூன்று போட்டியில் மட்டுமே விளையாட வைத்ததோடு, அடுத்த சீஸனிலேயே அவரை அணியில் இருந்தும் கழற்றிவிட்டு அவமானப்படுத்தியது மும்பை. ஆனால், மீண்டும் ஆறு கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போனார் கிளென் மேக்ஸ்வெல். இங்கே வந்த பிறகுதான் ட்விஸ்ட்.


ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவரான மேக்ஸ்வெல்லின் பெற்றோருக்கும் கிரிக்கெட்டுக்கும் பெரிய சம்பந்தம் இல்லை. அவருடைய வீட்டின் அருகிலேயே கிரிக்கெட் கிளப் இருந்தது. தன்னைவிட ஒன்பது வயது மூத்த அண்ணன் அங்கே கிரிக்கெட் பயிற்சியில் சேர, அவருடன் துணைக்குச் செல்ல ஆரம்பித்த மேக்ஸ்வெல், பிறகு அண்ணனைவிட தேர்ந்த ஆட்டக்காரராக மாறினார். ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் டாஸ்மானியா அணிக்கு எதிராக ஆடியது கிளென் மேக்ஸ்வெல்லின் விக்டோரியா அணி.

தற்போதைய ஆஸ்திரேலியா மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லி சதம் அடித்து, டாஸ்மானியா அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டாஸ்மானியா அணியில் வேட், ஃபின்ச், எட் கோவன் என ஆஸ்திரேலிய அணியின் அத்தனை சீனியர் வீரர்களும் இருந்தனர். விக்டோரியா அணி வெற்றிக்கு 52 பந்துகளில் 100 ரன் அடிக்க வேண்டும், நான்கு விக்கெட்டுகளே மீதம் இருக்கின்றன என்ற நிலையில் களம் இறங்கினார் 21 வயது மேக்ஸ்வெல். பென் ஹில்ஃபெனாஸ், ஃபாக்னரின் பந்துகளைச் சிதறடித்து ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்டிலேயே யாரும் நிகழ்த்தாத சாதனையாக 19 பந்துகளில் அரை சதம் அடித்து அணியை வெற்றி பெறவைத்தார் மேக்ஸ்வெல். அந்த அரை சதம்தான் ஆஸ்திரேலிய அணிக்குள் அவரை அழைத்துவந்தது.

காலுக்கு அருகே போடப்படும் பந்துகளை வாரி பவுண்டரி லைனுக்கு மேலே அடிப்பதில் மேக்ஸ்வெல்லுக்கு இணையாக இப்போதைக்கு உலக கிரிக்கெட்டில் யாரும் இல்லை. ரிவர்ஸ் ஸ்வீப்களையும், ரிவர்ஸ் ஷாட்களையும் அத்தனை அநாயாசமாக அடிக்கிறார் மேக்ஸ்வெல்.

''ஆடம் கில்கிறிஸ்ட்டின் ஆட்டமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். பயிற்சியாளர்கள் கிரிக்கெட்டை எப்படி டெக்னிக்கலாக ஆட வேண்டும் என்று சொல்லித் தருவார்களோ, அந்த ஸ்டைலிலும் ஆடுவார். அதே சமயம் இப்படி ஒரு ஷாட் ஆட முடியுமா என ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய ஷாட்களையும் அறிமுகப்படுத்துவார். அவருடைய ஸ்டைலில் ஆட ஆரம்பித்தேன். ஆனால், பயிற்சியாளர்கள் எல்லாம் இப்படி ஆடக் கூடாது என மிரட்ட, டெக்னிக்கல் கிரிக்கெட்டை மட்டுமே ஆடிக்கொண்டிருந்தேன். ஐ.பி.எல். எனக்கு ஒரு திறந்தவெளி மைதானம். இங்கே என்ன ஷாட் ஆட வேண்டும், எது ஆடக் கூடாது என தீர்மானிப்பவன் நான்தான். அதனால்தான் என்னால் சிக்ஸர்களாக அடிக்க முடிகிறது'' என்கிறார் மேக்ஸ்வெல்.

மேக்ஸ்வெல் எல்லா பௌலர்களையும் பதம் பார்த்தாலும், குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துகளை திரும்பித் திரும்பி அடிக்கிறார். ''ஒருமுறை ஷேன் வார்னின் பந்தை ரிவர்ஸ் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார் ஜான்டி ரோட்ஸ். உலகின் தலைசிறந்த ஸ்பின் பௌலர் ஷேன் வார்ன். அவரது பௌலிங்கில் ரிவர்ஸ் ஷாட் எல்லாம் அடிக்கிறாரே என வியந்தேன். ஒருவர் பௌலிங்கின் உச்சத்தில் இருக்கும்போது அவரது பௌலிங்கில் வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க ஆரம்பித்தால், அந்த பௌலர் திணறிவிடுவார் என்பது எனக்குப் புரிந்தது.

2012-ம் ஆண்டு இந்தியாவில் விளையாட வந்தபோது அஷ்வின்தான் இந்தியாவின் டாப் ஸ்பின்னர். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர் பொதுவாக ஆஃப் ஸ்பின் பந்துகளை வீசத் தயங்குவார். வலது கை பேட்ஸ்மேன்கள் அடிக்காமல் இருக்க கேரம் பந்துகளை வீசுவார். அந்தக் கேரம் பாலைத்தான் நான் அடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டேன். கேரம் பால் போட்டால் இடது பக்கம் திரும்பி அடிக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. அது முதல் அவர் எனக்கு கேரம் பால் போட்டாலே, நான் இடது பக்கம் திரும்பி ஓங்கி அடிக்க ஆரம்பித்தேன்!'' என்கிறார் மேக்ஸ்வெல்.

இந்த ஐ.பி.எல்-லில் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய நான்கு ஓவர்களில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் மேக்ஸ்வெல்.

2015-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்தான் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நாயகன். உலக சாம்பியனான இந்தியா, கோப்பையைத் தக்கவைக்கவேண்டுமானால், மேக்ஸ்வெல்லின் பேட்டிங்குக்கு தடைபோடும் வித்தை, வியூகங்களை இந்த ஐ.பி.எல். போட்டித் தொடரிலேயே கண்டுபிடிக்க வேண்டும்!

சார்லஸ்


Wednesday, May 14, 2014

பட்ஜெட் டூர்

எந்த ஊருக்கு சுற்றுலா செல்லலாம்? எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்? பஸ்ஸா, காரா, ரயிலா? எவ்வளவு செலவாகும்? ஹோட்டலில் தங்க கட்டணம் எவ்வளவு? வீட்டுக்கு வீடு இப்படித்தான் இப்போது பேசிக்கொண்டிருப்பீர்கள். இதோ உங்களுக்கு உதவுவதற்காகவே... இங்கே இடம்பிடிக்கிறது 'பட்ஜெட் டூர்... உங்களுக்கேத்த ஊர்!'

 


முக்கிய குறிப்பு: இந்த இடங்கள் அனைத்தும் சென்னையிலிருந்து கணக்கிடப்பட்டு, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் போக நினைக்கும் ஊர், உங்களுடைய இடத்திலிருந்து எத்தனை கிலோமீட்டர் என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப போக்குவரத்து கட்டணத்தை யூகித்துக்கொள்ளுங்கள். கார்களைப் பொறுத்தவரை, முக்கிய நகர் வரை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வழி பயணத்துக்கானது. அங்கு நீங்கள் பார்க்க விரும்பும் இடங்களைப் பொறுத்து, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். திரும்பவும் காரில் வருவது என்றால், கட்டணம் கூடும்.

விமான கட்டணங்கள், ரிசர்வ் செய்யும் தேதியைப் பொறுத்து மாறுதல்களுக்குட்பட்டவை.

சா.வடிவரசு 

டிராவல் இன்ஷூரன்ஸ்...

டிராவல் இன்ஷூரன்ஸ்... சுற்றுலா செல்லும்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்து, திருட்டு, பயண ரத்து போன்றவற்றில் இருந்து, பொருளாதார ரீதியாக காக்கக்கூடிய ஆபத்பாந்தவன்!

'வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். ஆனால், உள்நாட்டு சுற்றுலாவுக்கு கட்டாயம் இல்லை. என்றாலும், பாலிசி எடுப்பதுதான் பாதுகாப்பானது. இதற்கான பிரீமியம், நாட்களின் அடிப்படையில் இருக்கும். 6 மாத குழந்தை முதல் 70 வயது பெரியவர்கள் வரை எடுக்க முடியும். அனைத்து ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மூலமாகவும் இதை எடுக்கலாம்.


 நெருங்கிய உறவினர் இறந்துபோவது, நாம் விபத்தில் சிக்குவது போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் சுற்றுலாவை ரத்து செய்தால், டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்கும். விமானம் 5 மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் ஆகும்போது, வெளியில் அறை எடுத்து தங்கினால், க்ளைம் செய்ய முடியும். போராட்டம் போன்ற காரணங்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் ரயில், விமான நிலையத்தை அடைய முடியவில்லை என்றாலும், டிக்கெட் தொகையை க்ளைம் செய்யமுடியும். போட்டிங், ரைடிங், ஃப்ளையிங் என விளையாட்டு மற்றும் சாகசங்களை நிகழ்த்தும்போது... விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவச் செலவுகளுக்கும் க்ளைம் பெற முடியும். இன்னும் சில இனங்களுக்காகவும் க்ளைம் பெற முடியும்'.''சுற்றுலாவின்போது எந்த அசம்பாவிதம் நிகழ்ந்தாலும், உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புகொண்டு பதிவு செய்வது அவசியம்'.

- கிருஷ்ணதாசன்,துணைத் தலைவர்இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ்.

இரா.ரூபாவதி

Saturday, May 10, 2014

லியாண்டர் - பூபதி


வழக்கமாக லியாண்டர் பெயஸும் மகேஷ் பூபதியும் அடித்துக் கொள்வதுதான் இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.) எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கும். ஆனால், இந்த முறை இருவரும் டேவிஸ் கோப்பையில் ஆடுவதாக விருப்பம் தெரிவித்திருப்பது ஏ.ஐ.டி.ஏ.வுக்குச் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசியானா குரூப் -1 பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி, தென்கொரியாவை வென்று, உலக குரூப் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. தென் கொரியாவுடனான போட்டியில் சோம்தேவ் தேவ்வர்மன், சனம் சிங், சாகேத் மைனேனி, ரோஹன் போபண்ணா ஆகியோர் பங்கேற்றார்கள். அடுத்ததாக, பெங்களூருவில் செப்டெம்பர் 12 -14ல் நடக்கும் ப்ளே ஆஃப் சுற்றில் இந்திய அணி செர்பியாவுடன் விளையாடுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால், 2015-ம் ஆண்டுக்கான உலகப் பிரிவு பிரதான முதல் சுற்றுக்குத் தகுதி பெறும். செர்பியாவுடனான போட்டியில் யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் ஏ.ஐ.டி.ஏ. முன்னால் உள்ள மிகப்பெரிய சவால். எதனால் இந்தக் குழப்பம்?

2013 வரை தொடர்ந்து டேவிஸ் கோப்பையில் ஆடிவந்தார் லியாண்டர். ஆனால் 2014ல் திடுதிப்பென்று விடுமுறை விண்ணப்பம் கொடுத்தார். 2014ல், 16-17 போட்டிகளில் ஆடுகிறேன். அதனால் டேவிஸ் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைக்கான போட்டிகளிலிருந்து என்னை விலக்கிக் கொள்ளவும். வேறு எந்தப் பிரச்னைகளை முன்வைத்தும் இந்த முடிவை எடுக்கவில்லை" என்று சொந்தக் காரணங்களை முன்வைத்து, இந்திய டென்னிஸ் சங்கத்துக்குத் தகவல் கொடுத்தார்.  

மகேஷ் பூபதியின் கதையே வேறு. கடைசியாக 2011ல் டேவிஸ் போட்டியில் ஆடியதுதான். 2012 ஒலிம்பிக்ஸில் லியாண்டருடன் ஆடமாட்டேன் என்று பூபதி அடம்பிடித்ததால் ஏராளமான சர்ச்சைகள் உருவாகின. ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு நடந்த டென்னிஸ் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் மகேஷ்பூபதி, ரோஹன் பொபன்னா ஆகியோர் ஜூன் 2014 வரை இந்தியாவின் சார்பில் டென்னிஸ் போட்டிகளில் விளையாட பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் பூபதி. கர்நாடக உயர்நீதி மன்றமும் ஏ.ஐ.டி.ஏ.வின் முடிவுக்குத் தடை விதித்தது. ஆனாலும் பூபதிக்கும் பொபன்னாவுக்கும் டேவிஸ் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த வருட ஜனவரியில் பொபன்னா மட்டும் மீண்டும் டேவிஸ் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். (பூபதியை ஏசியன் கேம்ஸில் ஆடவைக்கும் திட்டமுண்டு என்று ஏ.ஐ.டி.ஏ. தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.) ஆனால், பூபதியை டேவிஸ் கோப்பையில் ஆட வைப்பது பற்றி இதுவரை ஏ.ஐ.டி.ஏ. முடிவெடுக்கவில்லை. பூபதி, இந்த வருடத்தோடு டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் அவருக்குண்டான வாய்ப்பை ஓர் இளம் வீரருக்கு வழங்கலாம் என்பது ஏ.ஐ.டி.ஏ.வின் விருப்பம். மகேஷ் பூபதி, 2012ல் இந்திய டென்னிஸ் சங்கத்துடன் மல்லுக்கட்டியதால் இன்றுவரை அதன் பலனை அனுபவித்து வருகிறார்.  

இந்த நிலையில், லியாண்டரும் பூபதியும் செர்பியாவுடன் ஆட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஏ.ஐ.டி.ஏ. செயலாளர் வேறுவிதமாகப் பேட்டியளித்தது டென்னிஸ் சங்கத்தில் இன்னும் பூசல்கள் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய டென்னிஸ் தேர்வுக்குழு, மீண்டும் பின்னால் செல்லப்போகிறதா அல்லது இளையதலைமுறை மீது நம்பிக்கை வைக்கப்போகிறதா என்பதை முடிவுசெய்ய வேண்டும்," என்று ஏ.ஐ.டி.ஏ. செயலாளர் பரத் ஓசா பேட்டி கொடுத்திருக்கிறார். அணித்தேர்வு ஜூலையில் நடக்கவுள்ளது.தென் கொரியாவை வெளிநாட்டில் இதுவரை இந்திய அணி தோற்கடித்ததில்லை. லியாண்டர், பூபதி இல்லாமல் ஆடிய இந்திய அணி சமீபத்தில் இந்தச் சாதனையைச் செய்துள்ளது. அதனால் அந்த வெற்றிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் மீண்டும் புதிய தலைமுறை வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா அல்லது லியாண்டர் - பூபதி இருவரையும் மீண்டும் டேவிஸ் கோப்பை அணியில் சேர்த்துக் கொள்வதா? இதுதான் ஏ.ஐ.டி.ஏ. முன்னால் இருக்கும் கேள்விகள்.1993ல் டேவிஸ் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பிரான்சையும் பிறகு 1995ல் க்ரோஸியாவையும் (இவானி செவிக் ஆடிய போட்டி) தோற்கடித்ததில் லியாண்டரின் பங்களிப்பு உண்டு. மேலும், டேவிஸ் கோப்பை இரட்டையர் ஆட்டத்தில், லியாண்டரும் பூபதியும் 1997லிருந்து இன்றுவரை ஆடிய 23 ஆட் டங்களில் ஒன்றில்கூட தோற்காமல் தொடர்ச்சியாக ஜெயித்து வருகிறார்கள். இது ஓர் உலக சாதனையும்கூட. செர்பியா, 2010ம் ஆண்டின் டேவிஸ் கோப்பை சாம்பியன். ஜோகோவிச் முதலிய உலகத்தரமான வீரர்கள் கொண்ட வலுவான அணி. (2011ல் இந்தியாவை 4-1 என்ற கணக்கில் செர்பிய அணி தோற்கடித்தது.) செர்பியாவைத் தோற்கடிக்க லியாண்டர், பூபதி போன்ற அனுபவசாலிகள் தேவை என்பது பலருடைய கருத்து. ஆனால், தென் கொரியாவை அதன் மண்ணில் லியாண்டர், பூபதி இல்லாமலேயே வீழ்த்திய இளைஞர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது இன்னொரு தரப்பினரின் விருப்பம். என்ன செய்யப்போகிறது ஏ.ஐ.டி.ஏ.?


அருள்வாக்கு - மாலை மாற்று

 
‘விகடகவி’, ‘குடகு’ முதலிய வார்த்தைகளைத் திருப்பிப் படித்தாலும், ‘விகடகவி’, ‘குடகு’ என்றே இருக்கும். ‘மலையாளம்’ என்பதை இங்கிலீஷில் Malayalam என்று எழுதினால் திருப்பிப் படித்தாலும் அதே ஸ்பெல்லிங் வரும். இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.
 
காசியாத்திரை ஹிந்துவாகப் பிறந்தவர்களுக்கு முக்யமாக விதிக்கப் பட்டிருக்கிறது. அதோடு கயா ச்ராத்தம், த்ரிவேணி என்கிற ப்ரயாகையில் ஸ்நானம், பித்ரு கார்யம் எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. இதையும் பாலின்ட்ரோமாகச் சொல்வதுண்டு. காசிக்கு காசிகா என்றும் பெயர். இது பின்னிருந்து முன்னாகவும் ‘காசிகா’தான். ‘கயா ப்ரயாக’ என்பதும் இப்படியே.இப்படி ஒரு வார்த்தையைத் தலைகீழாகப் படிப்பதைப் பெரிய விளையாட்டாகப் பண்ணி காவ்ய ரஸத்தைப் பற்றியே ரஸமாக ஒரு ஸ்லோகம் இருப்பதாக ஒரு பண்டிதர் சொன்னார். ‘ஸாக்ஷரா’ என்றால் வெறுமே படிப்பறிவு மட்டுமுள்ளவர்கள் என்று அர்த்தம். அதாவது வறட்டு வறட்டு என்று நிறையப் படித்திருப்பார்கள். இலக்கியச் சுவையில் ஊறியிருக்கமாட்டார்கள். ‘ஸரஸ’ என்றால் இலக்கியச் சுவையில், காவ்ய ரஸத்தில் ஊறியவன் என்று அர்த்தம். ரஸம் அறிகிற பக்வ மனஸ் இல்லாமலிருக்கிறவன் அந்தப் படிப்பு நெறியிலிருந்து மாறினால் குணம்கெட்ட ராக்ஷஸனாகி விடுவான்; ஆனால் ரஸிகனோ எப்படி வெளியிலே மாறினாலும் அவனுடைய உயர்ந்த ரஸிகத் தன்மை போகவே போகாது என்பது அந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம்.ஸாக்ஷரா, ஸரஸ என்ற வார்த்தைகளைத் திருப்பிப் போட்டே இந்த தாத்பர்யத்தை ஸ்லோகம் நிலைநாட்டி விடுகிறது. ‘ஸாக்ஷரா’வைத் திருப்பிப் படித்தால் ‘ராக்ஷஸா’! ‘ஸரஸ’வோ திருப்பிப் படித்தாலும் ‘ஸரஸ’வேதானே?திருஞானஸம்பந்தர் ஸாக்ஷபத் பரதேவதையின் க்ஷீரத்தைப் பானம் பண்ணியதால் குழந்தையாக இருந்து கொண்டே எத்தனைவிதமான செய்யுள் வகை உண்டோ அத்தனையிலும் வர்ஷிக்கிறாற்போலக் கொட்டினவர். பாலின்ட்ரோமாகவே முழுச் செய்யுள் செய்வதற்கு ‘மாலை மாற்று’ என்று பேர். மிகவும் கஷ்டமான இந்த ‘மாலை மாற்று’ வகையில் பதினோரு இரட்டை வரிச் செய்யுள்களை ஞானஸம்பந்தர் அநுக்ரஹித்திருக்கிறார்.
 
படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கும். முதல் அடி இப்படி இருக்கிறது.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
கடைசியிலிருந்து திருப்பிப் படியுங்கள்; அதுவே வரும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

Wednesday, May 07, 2014

சோட்டா பீம் & மௌக்ளி

 
சோட்டா பீம் என்றால் குட்டி பீமன் என்று அர்த்தம். சோட்டா பீம் சாகசங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர், கடந்த 2009ம் வருடம் முதல் போகோ சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. தோலக்பூர் கற்பனையான ஓர் ஊர். அந்த ஊரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பீம். இது நூற்றுக்கு நூறு இந்தியப் பின்னணியில், இந்தியச் சிறுவர், சிறுமியரைக் கவர்வதற்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். இன்று இந்தியாவின் நெம்பர் ஒன் அனிமேஷன் தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சோட்டா பீம் இந்தியாவிலும், உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியக் குழந்தைகளை மட்டுமின்றி பல்வேறு நாட்டுக் குழந்தைகள் மத்தியிலும் கூட பிரபலமாகி இருக்கிறது. மகாபாரதத்தில் வரும் வீர பராக்கிரமசாலியான பீமன்தான் சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு உந்துதலாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கிரிபன் கோல்ட் அனிமேஷன் நிறுவனம் சோட்டா பீம் அனிமேஷன் தொடரைத் தயாரித்து வருகிறது. 
 
இயற்கை அழகு சூழ்ந்த தோலக்பூரைச் சேர்ந்த சோட்டா பீம் பலசாலி மட்டுமில்லை; மிகவும் புத்திசாலியும் கூட. ஊரில் யார் கஷ்டப்பட்டாலும், சோட்டா பீமுக்குப் பொறுக்காது. உடனே அவர்களுடைய பிரச்னையைத் தீர்ப்பதற்குப் புறப்பட்டுவிடுவான். ஊரைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களைக் கூட வீரத்தோடு மோதி விரட்டி அடித்துவிடுவான்.  

பீமின் புத்திசாலித்தனத்தையும் புகழையும் கண்டு பொறாமைப்படும் சிறுவன் காலியா. ஊரில் உள்ள சிறுவர்களில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், தீர்வு காண பீமைத்தான் நாடுவார்கள். சோட்டா பீமுக்கு அவ்வப்போது ஏதாவது பிரச்னைகளைக் கொடுப்பது காலியா மற்றும் நண்பர்களின் வழக்கம். ஆனால், பீம் அவற்றை எல்லாம் சுலபமாகச் சமாளித்து, அவர்கள் முகத்தில் கரி பூசிவிடுவான்.
 
தோலக்பூரின் அரசன் இந்திரவர்மா. சோட்டா பீமை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஊர் மக்கள், சோட்டா பீம் வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜா இந்திர வர்மா, இளவரசியை பீமுக்குக் கல்யாணம் செய்து வைத்து, அரசாட்சியை அவனிடம் ஒப்படைப்பார் என்று ஒரு பேச்சு கூட உண்டு.  

குட்டி பீமுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். லட்டு சாப்பிட்டு விட்டால் போதும் அவனுக்கு அசாத்தியமான பலம் வந்துவிடும். பீமின் நெருங்கிய தோழி ஏழு வயது சுட்கி, பீமுக்குப் பிடித்த லட்டு கொண்டு வந்து கொடுப்பாள். அவ்வப்போது, பீமுக்கு அவள் தருகிற யோசனைகள் மிகவும் உபயோகமாக இருக்கும். பீம் கூடவே இருந்து அவனுக்கு உதவும் இன்னொரு சுட்டிப் பையன் ராஜு. இவர்கள் அணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு ஜாலியான உறுப்பினர் ஜக்கு என்ற குரங்கு.

சோட்டா பீம் பிரபலம் காரணமாக சோட்டா பீம் முத்திரையுடன் கூடிய பல பொருட்கள் விற்பனையாகின்றன.


மௌக்ளி


ருட்யார்ட் கிப்ளிங் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் பிறந்த ஆங்கிலேய எழுத்தாளர். இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அவர் குழந்தைகளைக் கவரும்படியாக உருவாக்கிய ஒரு கதாபாத்திரம்தான் மௌக்ளி. ஜங்கிள் புக் என்ற புத்தகத்தின் மூலம்தான் மௌக்ளி என்ற சுவாரசியமான கற்பனை கதாபாத்திரம் வாசகர்களுக்கு அறிமுகமானது. பத்தொன்பதாம் நூறாண்டின் இறுதியில் அவர் இந்தக் கதைகளை எழுதினார்.

ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, மீண்டும் வேலை செய்ய இந்தியாவுக்கு வந்தவர். அதனால் அவருக்கு இயற்கையாகவே இந்தியாவின் மீதும் அதன் இயற்கை வளங்களின் மீதும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுவே அவரது கற்பனையோடு இணைந்து, கதைகளாக உருப் பெற்றன. 

மௌக்ளி கதாபாத்திரத்தை மத்தியப் பிரதேசத்தின் காடுகளோடு இணைந்த ஒரு பாத்திரமாக உருவாக்கினார். அவர் முதலில் எழுதிய கதைகளில், காட்டுப் பகுதியில் வசிக்கும், அபார வேட்டையாடும் திறன் கொண்ட ஓர் இளைஞனாக அறிமுப்படுத்திவிட்டு, அதன் பிறகு எழுதிய கதைகளில்தான் மௌக்ளியின் பால பருவத்தைப் பற்றிய கதைகளை எழுதினார். பெற்றோர்களைப் பிரிந்து, காட்டில் தனியே விடப்பட்ட குழந்தையான மௌக்ளியை, அன்போடு எடுத்து வளர்க்கின்றன ஓநாய்கள். தாங்கள் வளர்க்கும் மனிதக் குழந்தைக்கு மௌக்ளி என்று பெயர் சூட்டுகின்றன.

காட்டில் வசிக்கும் விலங்குகளின் கால்களில் முள் குத்திவிட்டால், அவை உடனே மௌக்ளியிடம் உதவி கேட்டு வரும். அவன் பொறுமையோடு அந்த முள்ளை எடுப்பான். இதனால் விலங்குகள் அனைத்துக்கும் மௌக்ளி நெருங்கிய நண்பனாகிவிடுவான். காட்டில் வசிக்கும் ஷேர்கான் என்ற புலி மௌக்ளியைச் சாப்பிட நினைத்தாலும், அதனிடமிருந்து ஓநாய்கள் காப்பாற்றுகின்றன. ஒரு கட்டத்தில் நெருப்பைக் கண்டால் புலிக்குப் பயம் என்பதை அறிந்து, அந்த நெருப்பைப் பயன்படுத்தி, புலி தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறான் மௌக்ளி. 

ஜங்கிள் புக் கதைகளுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக, அது திரைப்படமாகவும், ரஷ்யாவில் அனிமேஷன் படங்களாகவும், டிவி தொடர்களாகவும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றன. பி.பி.சி. ரேடியோவில் பிரபல நடிகர்களின் குரல்களில் ஜங்கிள் புக் கதைகள் ஒலிபரப்பாகி, மௌக்ளி இளைஞனர்கள் மத்தியில் பெரும் ஹீரோவாக விளங்கினான். ரஷ்யாவில் மௌக்ளியையும் அவன் நண்பர்களையும் தபால்தலையில் வெளியிட்டு கௌரவித்திருக்கிறார்கள்.

திமிங்கிலம்

 
யானையைப் பார்த்தால் நமக்கு வியப்பாக இருக்கிறது. நிலத்தில் வாழும் விலங்குகளில் யானை தான் மிகப்பெரியது. ஆனால் உலகின் மிகப்பெரிய விலங்கு கடல்களில் வாழும் நீலத் திமிங்கிலமே. சற்றே நீல நிறத்துடன் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர். நீலத் திமிங்கிலம் குறைந்தது 30 மீட்டர் நீளம் கொண்டது. எடையோ சுமார் 120 டன். அதாவது 20 யானைகளின் எடைக்குச் சமம். 
 
கிரில் எனப்படும் மிகச்சிறிய கடல் வாழ் உயிரினத்தைத்தான் அது உண்டு வாழ்கிறது. கிரில்கள் இறால் போன்றவை. கிரில் நான்கு செ.மீ. நீளம் கொண்டது.

கிரில்கள் கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். ஒரு கூட்டத்தில் பல ஆயிரம் கிரில்கள் இருக்கும். நீலத் திமிங்கிலம் தனது வாயைத் திறந்தபடி கிரில் கூட்டத்தின் வழியே செல்லும்போது பல ஆயிரம் கிரில்கள் திமிங்கிலத்தின் வாக்குள் சிக்கும். நீலத் திமிங்கிலம் ஒரு நாளில் நான்கு முதல் ஏழு டன் கிரில்களை விழுகுகிறது.
 
திமிங்கிலத்தின் வாக்குள் விசேஷ அமைப்புகள் உள்ளன. நிறைய கிரில்கள் உள்ளே சிக்கியதும் திமிங்கிலம் வாயை மூடிக்கொள்ளும். அதன் தொண்டைக்குள் ‘கதவுகள்’ போன்ற திறப்புகள் விரியும். வயிறும் விரிவடையும். திமிங்கிலத்தின் மேல் தாடையில் சீப்புகள் போன்ற அமைப்புகள் உள்ளன. திமிங்கிலம் தனது நாக்கை உயர்த்தும்போது சீப்புகள் போன்ற அமைப்புகள் வழியே கடல் நீர் வெளியே சென்று விடும். உள்ளே சிக்கிய கிரில்களைத் திமிங்கிலம் விழுங்கி விடும்.வடிவில் பிரம்மாண்டமானது என்பதால் நீலத் திமிங்கிலம் விஷயத்தில் எல்லாமே பெரிதாக இருக்கிறது. அதன் நாக்கு எடை நான்கு டன். அதன் நாக்கின் மீது 12 பேர் வரிசையாக நிற்கலாம். அதன் இருதயமோ கார் அளவு இருக்கும்.திமிங்கிலத்தின் குட்டியானது பிறக்கும் போதே மூன்று டன் எடை கொண்டதாக உள்ளது. நீளமோ 25 அடி. திமிங்கிலங்களில் ஸ்பெர்ம் திமிங்கிலம், ஹம்ப்பேக் திமிங்கிலம், மிங்கி திமிங்கிலம், பெலுகா திமிங்கிலம், ஆர்க்கா திமிங்கிலம் உட்பட பலவகைத் திமிங்கிலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் உணவும் வெவ்வேறு விதமாக உள்ளது. திமிங்கிலங்கள் அனைத்துமே குட்டிப் போட்டுப் பால் கொடுப்பவை.
 
திமிங்கிலங்களில் இன்னொரு விசேஷம் இவை மீன்களைப் போல நீருக்குள் சுவாசிப்பவை அல்ல. நம்மைப் போல காற்றை சுவாசிப்பவை. நீருக்குள் நடமாடினாலும் இவை ஒவ்வொரு தடவையும் சுவாசிப்பதற்காக நீர் மட்டத்துக்கு வரும். நுரையிலிருந்து காற்றை புஸ் என்று வெளியே விட்டுவிட்டு புதிதாக காற்றை உள்ளிழுத்துக் கொண்டு மறுபடி நீருக்குள் சென்று விடும்.

நம்மால் நீருக்குள் சில கணங்களே தம் கட்டி இருக்க முடியும். திமிங்கிலங்கள் அரை மணி நேரத்துக்கு மேல் தம் கட்டி நிற்கும். அதாவது ஒரு தடவை காற்றை உள்ளே இழுத்துக்கொண்டால் அரை மணி நேரத்துக்கு அதனால் நீருக்குள் நடமாட முடியும். ஸ்பெர்ம் திமிங்கிலம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீருக்குள் இருக்கும் திறன் கொண்டது.

திமிங்கிலங்களிடம் இது விஷயத்தில் இயல்பாக சில விசேஷத் திறன்கள் உள்ளன. நாம் சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 15 சதவிகிதத்தைத்தான் உடல் கிரகித்துக் கொள்கிறது. ஆனால் திமிங்கிலத்தின் நுரையீரலுக்குள் செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 90 சதவிகிதத்தை திமிங்கிலம் ஈர்த்துக் கொள்கிறது. இந்தக் கூடுதல் ஆக்சிஜன் திமிங்கிலத்தின் தசைகளில் அடங்கிய செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 90 சதவிகிதத்தை திமிங்கிலம் ஈர்த்துக் கொள்கிறது. இந்தக் கூடுதல் ஆக்சிஜன் திமிங்கிலத்தின் தசைகளில் அடங்கிய மையோகுளோபின் எனப்படும் விசேஷ புரத செல்களில் சேமித்து வைக்கப்படுகிறது. திமிங்கிலங்களிடம் மற்ற விலங்குகளை விட அதிக அளவில் மையோகுளோபின் உள்ளது. தவிர, திமிங்கிலத்தினால் ஆக்சிஜன் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளவும் முடிகிறது.

திமிங்கிலம் கடலுக்குள் மூழ்கியிருக்கும்போது அதன் இதயத் துடிப்பு வேகம் குறைந்து விடுகிறது. சில உறுப்புகளுக்குக் குறைவான ரத்தமே செல்கிறது. இப்படியான காரணங்களால் திமிங்கிலத்தால் நீருக்குள் அதிக நேரம் இருக்க முடிகிறது.

திமிங்கிலம் நீண்ட நேரம் சுவாசிக்காமல் இருந்து விட்டு நீருக்கு மேலே வரும் கட்டத்தில் வேகமாக மூச்சை வெளிவிடுகிறது. அப்போது கடல் நீரானது நீரூற்று போல நல்ல உயரத்துக்குப் பீச்சிடும். இது 12 மீட்டர் உயரம் வரை இருக்கும். திமிங்கிலம் இருக்கு மிடத்தைக் கண்டுபிடிக்க நவீன வழிகள் இல்லாத அந்த நாட்களில் கடல் நீர் இப்படி உயரே எழும்புவதை வைத்து திமிங்கில வேட்டைக்காரர்கள் அதன் இருப்பிடத்தை அறிந்துகொண்டனர்.

திமிங்கிலம் நீருக்குள் இருக்கும்போது கட்டைக் குரலில் குரல் எழுப்பும். இந்த ஒலி எதிரொலித்துத் திரும்புவதை வைத்து இரை எங்கே உள்ளது என்பதைத் திமிங்கிலம் கண்டுகொள்ளும். தங்கள் இனத்துடன் தொடர்புகொள்ளவும் இந்த ஒலியை அது பயன்படுத்திக் கொள்கிறது. சிலவகைத் திமிங்கிலங்கள் எழுப்பும் ஒலியானது 1600 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.

திமிங்கிலங்கள் உலகின் எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்றன. தென் துருவப் பகுதியில் அண்டார்டிகா அருகே உள்ள திமிங்கிலங்களும் சரி, வட துருவ ஆர்டிக் பகுதியில் காணப்படும் திமிங்கிலங்களும் சரி, குளிர் காலத்தில் வெப்ப மணடல கடல் பகுதிகளுக்கு வருகின்றன. குட்டி பிறந்ததும் பழைய இடத்துக்கே சென்று விடுகின்றன. இப்படி இடம் பெயரும் காலத்தில் திமிங்கிலங்களால் தொடர்ந்து உணவு இன்றி இருக்க முடியும்.

கடந்த காலத்தில் பல்வேறு வகையான திமிங்கிலங்களும் இஷ்டத்துக்கு வேட்டையாடப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து திமிங்கிலங்களைக் காப்பதற்காக அமைக்கப் பட்ட சர்வதேச திமிங்கில கமிஷன் உலகின் கடல்களில் வர்த்தக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடக் கூடாது என்று 1986ம் ஆண்டில் சர்வதேச அளவில் தடையை அமல்படுத்தியது. ஆனால் இவ்விதக் கட்டுப்பாட்டை ஜப்பான், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் எதிர்த்து வருகின்றன. ‘ஆராய்ச்சிக் காரணங்களுக்காக’ திமிங்கிலங்களை வேட்டையாடலாம் என சர்வதேச தடைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தடைச் சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தி மேற்படி நாடுகள் இன்னமும் திமிங்கிலங்களை வேட்டையாடி வருகின்றன. திமிங்கிலங்களைப் பாதுகாப்பதில் பல நாடுகளையும் சேர்ந்த தனியார் அமைப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

என்.ராமதுரை
 

தோனியின் பாகிஸ்தான் ரசிகர்!

 
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசியானா குரூப் -1 பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி, தென்கொரியாவை வென்று, உலக குரூப் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னாள் வீரர் ஆனந்த் அமிர்தராஜ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் சோம்தேவ் வர்மன், சனம் சிங், சாகேத் மைனேனி, ரோஹன் போபண்ணா ஆகியோர் பங்கேற்றார்கள். இந்திய அணி மிக எளிதாக 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவைத் தோற்கடித்தது. இப்போது, உலகப் பிரிவு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளில் இந்திய அணியும் ஒன்று. உலகப் பிரிவு பிரதான முதல் சுற்றில் தோல்வியைத் தழுவிய 8 அணிகளுடன் இந்த 8 அணிகள் மோதும். செப்டெம்பர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும் ப்ளே ஆஃப் சுற்றில் இந்திய அணியுடன் செர்பிய அணி மோதுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால், 2015-ம் ஆண்டுக்கான உலகப் பிரிவு பிரதான முதல் சுற்றுக்குத் தகுதி பெறும்.
 
ரஷ்யாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று இன்னொரு முறை உலக சாம்பியனுக்கான போட்டியில் கார்ல்சனுடன் மோத இருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். முதல் ஆட்டத்தில் ஆரோனியனை வென்ற பிறகு ஆனந்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆடிய 14 ஆட்டங்களில் ஒன்றில் கூடத் தோற்காமல் வெற்றி பெற்றிருக்கிறார் ஆனந்த்.  

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் 62 வயது முகமது பஷீரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாகிஸ்தான் தேசியக் கொடியை உடையாக அணிந்து பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளில் காட்சியளிப்பார். இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். பங்களாதேஷில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைப் பார்க்க இவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. பிறகு என்ன நடந்தது? வலைப் பயிற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நான் அங்கு சென்றேன். தோனிக்கு என் முகம் பரிச்சயம் என்பதால் பேசினார். இறுதிப் போட்டியைப் பார்க்க என்னிடம் டிக்கெட் இல்லை என்றேன். எதிர்பாராதவிதமாக உடனே டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்தார். நான் நீண்ட நேரம் நிற்பதை அறிந்து எனக்குப் பழங்கள் கொடுக்கும்படி உத்தரவிட்டார். அன்றைய தினம் தோனி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திவிட்டார். நான் பாகிஸ்தான் அணியின் ரசிகன்தான், இப்போது தோனியின் ரசிகனாகவும் என்னை உணர்கிறேன்" என்கிறார் பஷீர். 
 
சென்னையில் நடந்த தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிஸாவை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது பஞ்சாப். அணியின் பயிற்சியாளர் அவ்தார் சிங், பஞ்சாப்பில் எந்தளவுக்கு ஹாக்கியின் வளர்ச்சி உள்ளது என்பதை விவரிக்கிறார். எங்கள் மாநிலத்தில் மொத்தம் 6 நகரங்களில் 8 ஹாக்கி மைதானங்கள் உள்ளன. இந்திய ஜூனியர் மற்றும் இந்திய சீனியர் என இரண்டு அணிகளிலும் பஞ்சாபைச் சேர்ந்த 14 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எப்போதும் இந்திய அணிக்கு 7 வீரர்களை நாங்கள் அனுப்பிக் கொண்டிருப்போம்" என்கிறார்.
 
மே 31 முதல் ஹாக்கி உலகக்கோப்பை நெதர்லாந்தில் நடக்க உள்ளது. இதற்கான பயிற்சிக்களமாக நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து தன்னைத் தயார்படுத்தியுள்ளது இந்திய ஹாக்கி அணி. கடந்த முறை உலகக் கோப்பை இந்தியாவில் நடந்தது. இந்த முறை நெதர்லாந்திலும் ஸ்காட்லாந்திலும் நடக்க உள்ளன. அதனால் நெதர்லாந்து பயணம் மிக முக்கியமாது" என்கிறார் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங்.  

ச.ந.கண்ணன்

Monday, May 05, 2014

ஆந்திரா பாலிடிக்ஸ்


இந்தத் தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்? என்று சற்றும் யூகிக்கமுடியாத மாநிலம் ஒன்று உண்டென்றால், அது ஆந்திரப் பிரதேசம்தான். காரணம், இப்போது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக, நாடாளுமன்றத் தேர்தலை மனத்தில் கொண்டு, ஆந்திரப்பிரதேசம் தெலங்கானா, சீமாந்திரா என்று இரண்டு கூறுகளாக்கப்பட்டு தேர்தலை எதிர் கொள்கிறது. 

மொத்தம் உள்ள 42 நாடாளுமன்றத் தொகுதிகளில் சீமாந்திரா பகுதியில் 25ம், தெலங்கானாவில் 17ம் உள்ளன. சட்டசபை உறுப்பினர்களைப் பொறுத்தவரை ஆந்திராவில் மொத்தம் 292 பேர். இதில் தெலங்கானா வில் 117 இடங்கள்; சீமாந்திராவில் 175. 

தெலுங்கு தேசமும், பா.ஜ.க.வும் மட்டுமே கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. மற்றபடி காங்கிரஸ், இடதுசாரிகள், தெலங்கானா ராஷ்டிர சமிதி இவற்றோடு பவன் கல்யாண், முன்னாள் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி இருவரும் புதிதாகத் தொடங்கியுள்ள கட்சிகளும் களத்தில் உள்ளன. பிரஜா ராஜ்ஜியம் என்று தனிக்கட்சி தொடங்கி, தேர்தலில் சில இடங்களைப் பெற்று, அதன் பின் கட்சியைக் காங்கிரசோடு இணைத்து, மத்திய மந்திரிசபையில் இடம் பிடித்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பிதான் பவன்கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. வுக்கு ஆதரவு அளிக்கிறது பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி. 

தெலங்கானா பகுதி வாக்காளர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வாக்களித்துவிட்டார்கள். சீமாந்திரா பகுதியில் தேர்தல் மே 7ஆம் தேதி நடக்க உள்ளது. பிரிக்கப்படாத ஆந்திர சட்டசபைக்கு நடக்கும் கடைசித் தேர்தல் இது. வரும் ஜூன் இரண்டாம் தேதி நாட்டின் 29வது மாநில மாக தெலங்கானா முறைப்படி அமையும். 

தெலங்கானா பிரச்னையை முன்னிறுத்தி டி. ஆர். எஸ். கட்சியைத் தொடங்கினார் சந்திரசேகர ராவ். பல சந்தர்ப்பங்களில் அவரை ஏமாற்றியும், அவமானப் படுத்தியும் சீண்டியது காங்கிரஸ். ஆனாலும், தெலங்கானா மாநிலம் உருவானால், கட்சியை, காங்கிரசுடன் இணைத்துவிடவேண்டும் என்று மறைமுகமாக கண்டிஷன்கூடப் போட்டது. அப்படிச் செய்தால், சீமாந்திராவை இழந்தாலும், தெலங்கானாவில் அமோக வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டது. ஆனால், அந்தக் கனவு புஸ்வாணமாகிப் போனது. காங்கிரஸ் கட்சியோடு இணைய சந்திரசேகரராவ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். காரணம், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்தால், ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புள்ள பா.ஜ.க.வுடன் ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பில்லாமல் போய் விடுமல்லவா? அது மட்டுமில்லாமல், ராவுக்கு தெலங்கானா மாநில முதலமைச்சர் பதவியைத் தர காங்கிரஸ் தயாராக இல்லை என்பதும் இன்னொரு காரணம். தெலுங்கானாவைப் பொறுத்தவரை, தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்குத்தான் அதிகமான இடங்களைப் பெறும் வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மீதி இடங்களில் காங்கிரசுக்கும், தெலுங்குதேசம் - பா.ஜ.க. கூட்டணிக்கும் சம அளவில் சீட்கள் கிடைக்கலாம் என்கிறார்கள்.  

சீமாந்திரா பகுதியைப் பொறுத்தவரை, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஜெ சமைகியாந்திரா கட்சி என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கிய கிரண்குமார் ரெட்டி, அவரது பிலேர் தொகுதியில் இந்தத் தடவை, தான் நிற்காமல் தன் தம்பி கிஷோர் ரெட்டியை களமிறக்கி உள்ளார். மாநிலம் முழுக்கச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால், அவர் இம்முறை போட்டியிடவில்லையாம். கிரண்குமார் ரெட்டியின் கட்சியில் தெலுங்கானா எதிர்ப்பு காரணமாக காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருசில எம்.பி.க்களும், அவரது மந்திரி சபையில் இருந்த ஒருசில மந்திரிகளும் தவிர, நாடறிந்த பிரபலங்கள் அதிகமில்லை. தேர்தல் கமிஷனிடம் சோல்லி, ஆம் ஆத்மியின் துடைப் பம் ஸ்டைலில் செருப்பு சின்னத்தைப் பெற்றிருக்கிறார் கிரண்குமார் ரெட்டி. 

இந்தத் தேர்தலில் ஆந்திராவில்தான் மிக அதிகமாகப் பணம் புகுந்து விளையாடுகிறது என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான சில குறிப் பிட்ட நாட்களுக்குள், நாடெங்கும், தேர்தல் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளில் சிக்கிய 265 கோடி ரொக்கப் பணத்தில் ஆந்திராவில் சிக்கியது மட்டும் 103 கோடி. இதைத் தவிர, 70 கிலோ தங்கம், 300 கிலோ வெள்ளி மட்டுமின்றி மூன்றே முக்கால் லட்சம் லிட்டர் கள்ளச் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லை, மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 36% அதாவது சுமார் 70ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது.

சீமாந்திரா பகுதியில் வழக்கம் போல அரசியல் புள்ளிகளோடு சேர்ந்து பல தொழிலதிபர்களும் கள மிறங்கி இருக்கிறார்கள். இந்த முறை சீமாந்திரா பகுதியில் ஜகன்மோகன் ரெட்டியின் கை ஓங்கி இருக்கும் என்பது ஒரு கணிப்பு. இவரது ஒ.எஸ்.ஆர். காங் கிரஸ் கட்சியின் சார்பில் மட்டும் நான்கு தொழிலதிபர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எங்கள் எதிரி காங்கிரஸ்தான். சீமாந்திரா மக்களின் நலங் களைப் பாதுகாக்கத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தருவதில் எங்களுக்குப் பிரச்னையில்லை" என்கிறார் ஜகன் மோகன் ரெட்டி.  

ஜகன் மோகன் ரெட்டி, தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் சீமாந்திராவுக்கு ஹைதராபாதைவிட சிறப்பான புதிய தலைநகர் உருவாக்கப்படும். அது இந்தியாவுக்கே ஒரு மாதிரி நகரமாக விளங்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சீமாந்திராவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிரஞ்சீவிதான் முதல் அமைச்சர் என்று சொல்கிறது காங்கிரஸ் வட்டாரம். ஆனால், அவரது தம்பி பவன் கல்யாண், காங்கிரசை விரட்டுவோம்; நாட்டைக் காப்பாற்றுவோம்" என்று உரக்கக் குரல்கொடுத்து, பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். சீமாந்திரா பகுதியில், இளம் வாக்காளர்களை ஈர்க்க, பவன் கல்யாணின் பிரசாரம் கைகொடுக்கிறது. காங்கிரஸ் தரப்பில் விஜயசாந்தி, ஜெயசுதா, ஜெயபிரதா மூவரும் பிரசாரம் செய்கிறார்கள்.

டந்த லோக்சபா தேர்தலில் 42ல் 33 இடங்களில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்தத் தேர்தலில் இரட்டை இலக்கத்தைத் தொடாது; கடந்த பத்தாண்டுகளாக தெலங்கானா விஷயத்தில் காங்கிரஸ் செய்த நாணயமற்ற பாலிடிக்ஸ், இந்தத் தேர்தலில் காங்கிரசை பலிவாங்குவது நிச்சயம்" என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும், பல காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள், தெலுங்கு தேசம் கட்சிக்குப் போவிட்டது காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் சறுக்கல். மத்திய அமைச்சராக இருந்த என்.டி.ஆரின் மகள் புரந்தேஸ்வரி, காங்கிரசிலிருந்து விலகி, தெலுங்குதேசம் கட்சியில் சேரத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால். சந்திரபாபு நாயுடு, புரந்தேஸ்வரியையும், ஆந்திர எம்.எல்.ஏ.வுமான அவரது கணவரையும் பா.ஜ.க.வில் சேரும்படி ஆலோசனை சொன்னதன் பேரில்தான் புரந்தேஸ்வரியும், அவரது கணவரும் காவிக் கட்சியில் ஐக்கியமானார்கள் என்றும் சொல்கிறார்கள்.  

போகிற போக்கைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை மே. வங்காளம், தமிழ்நாடு போல ஆந்திராவிலும் ஆகிவிடுமோ..?