Search This Blog

Thursday, February 28, 2013

மார்கண்டேய கட்ஜு - இந்தியாவின் மனசாட்சி!

நான் ஏன் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த விரும்பவில்லை?’ - இப்படி ஒரு தலைப்பில் கட்டுரை எழுதத் துணிச்சல் வேண்டும். அது மார்கண்டேய கட்ஜுவுக்கு இருக்கிறது. அதுவும் பால் தாக்கரே மரணத்தை ஒட்டி இணையதளத்தில் கருத்துச் சொன்னதற்காக இரண்டு மும்பை மாணவிகள் கைதுசெய்யப்பட்ட சமயத்தில் இப்படி எழுதினார் கட்ஜு. அதற்கு முன்னும் பின்னும் நாட்டுநடப்புகள்குறித்து பட்டவர்த்தனமாக கட்ஜு வெளியிடும் கருத்துகள் ஒவ்வொன்றும் இந்திய அரசியல் அரங்கில் மாபெரும் சலனங்களை உண்டுபண்ணுகின்றன.

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் என்ற பதவி அத்தனை அதிகாரம் மிக்கது இல்லை. ஆனால், மார்கண்டேய கட்ஜு தலைவராக வந்த நாளில் இருந்து அதிரடிகளுக்குப் பஞ்சமே இல்லை. சமீபத்தில், 'பாரதிய ஜனதா தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத் தப்போவதாகச் சொல்லப்படுகிறது. 1933-ல் ஜெர்மானியர்கள் செய்த தவறை, 2014-ல் இந்திய மக்கள் செய்துவிடக் கூடாது’ என்று எழுதினார். ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு எழுதியதற்காக கட்ஜு பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்த, அதற்கு காங்கிரஸ் பதில் சொல்ல... சர்ச்சைகள் தொடர்கின்றன. ஆனால், கட்ஜு இத்தகைய எதிர்ப்புகளுக்கு ஒருபோதும் அஞ்சியவர் அல்ல. அவருக்கு பா.ஜ.க., காங்கிரஸ் என்ற கட்சி பேதமும் இல்லை.

அவரது முக்கியமான விமர்சனக் கணைகள் அனைத்தும் மீடியாக்களையே குறிவைக்கின்றன. ஒரு தனியார் சேனலின் நேர்காணலின்போது, ''நமது மீடியா மக்களை மடையர்களாக்கும் வேலையைச் செய்கிறது. ரோமாபுரி அரசன், 'மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியவில்லை எனில், சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்’ என்று சொல்வானாம். அதுபோல இங்கு மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்காமல் டி.வி. பார்க்கவைக்கிறோம். அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதில், ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை மீடியா  பரப்புகிறது!'' என்று கட்ஜு தெரிவித்த கருத்து, ஊடக உலகையே உலுக்கிப்போட்டது.

ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவா கவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் இஸ்லா மியர்களின் பங்களிப்பு குறித்தும் கட்ஜு தொடர்ச்சியாக எழுதிவருகிறார். 'ஹஜ் பயணத் துக்கு அரசு மானியம் வழங்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்ற மனு வந்தபோது, அதை டிஸ்மிஸ் செய்தார். ஒடிஸாவில் கிறிஸ் துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, ''மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால், அரசாங்கம் விலகிக்கொள்ளட்டும்'' என்று அதிரடியாகச் சொன்னார். ஆனால் அவரே, இஸ்லாமியமாணவர் கள் தாடி வைத்துக்கொள்வது தொடர்பான ஒரு வழக்கில், ''இதை அனுமதித்தால் நாடு 'தலிபான்’ மயமாகிவிடும்'' என்று சொன்னபோது பெரும் கொந்தளிப்பு உருவானது. இந்து மத அடையா ளங்களுடன் மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக் கப்படும்போது, இஸ்லாமிய அடையாளங்களுடன் அனுமதிக்கப்படுவதில் என்ன தவறு என்று பலரும் கேட்டனர். உடனே, தனது கருத்தைத் திரும்பப் பெற்றதோடு அதற்காக மன்னிப்பும் கோரினார்.

1946-ல் லக்னோவில் பிறந்த கட்ஜு, காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை எஸ்.என்.கட்ஜு அலகாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். பண பலமும் செல்வாக்கும் மிக்க குடும்பப் பின்னணி என்றபோதிலும் கட்ஜு, சாதாரண மக்களை நோக்கியே சிந்தித்தார்.

சம்ஸ்கிருதம், உருது இரு மொழிகளிலும் சம அளவு புலமைகொண்ட கட்ஜு, 'இந்தியாவில் உருது மொழிக்கு இழைக்கப்படும் அநீதி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை முக்கியமானது. ''உருது, வெளிநாட்டு மொழி; அது முஸ்லிம்கள் மட்டுமே பேசும் மொழி... என்ற இரண்டு நம்பிக்கைகளுமே முழுப் பொய். உருது, இந்திய மண்ணில் உருவான மொழி. கடந்த தலைமுறை வரையிலும் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களாலும் உருது பேசப்பட்டது'' என உருதுக்காக உறுதியாக வாதாடியவர். தமிழ் மீதும் பெரும் பற்றுகொண்டவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் சில காலம் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்தவர். பால் தாக்கரே பற்றிய தனது கட்டுரையை, 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற பாரதியார் பாடலில் இருந்து தொடங்கியவர்.

20 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றியபோது கட்ஜுவின் நீதிமன்ற அறை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஒரு வாரத்துக்குக் குறைந்தது 100 வழக்குகளையேனும் விசாரிப்பார். 'லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பெண்ணுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் முக்கியமான தீர்ப்பு இவர் வழங்கியதுதான். மூளை மரணம் அடைந்த நிலையில் உள்ளவர்களைக் கருணைக் கொலை செய்வது தொடர்பான வழக்கில், 'இது தொடர்பான சட்ட விதிகளைத் தளர்த்திக்கொள்வதைப் பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று கருணைக் கொலைகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு எழுதினார். அவரே, 'கௌரவக் கொலைகள் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடுவோரைத் தூக்கில் போட வேண் டும்’ என்று காட்டம் காட்டினார். இந்திய சாதியச் சடங்குகளைவிடாமல் பின்பற்றும் மக்களைக் கண்டு கடுப்பாகி, '90 சதவிகிதம் இந்தியர்கள் முட்டாள்கள்’ என்றார் கோபத்துடன். ''இந்திய - பாகிஸ்தான் பிரச்னை தீர்வதற்கு ஒரே வழி, இரண்டு நாடுகளும் ஒன்றுசேர்வதுதான்'' என்றார் அதிரடியாக. இவை அதிர்ச்சி அலைகளை உருவாக்கலாம். ஆனால், அவரது நோக்கம் அது அல்ல. அவர் தீர்வுகளை விரும்புகிறார். அதை நோக்கி இடைவிடாமல் இயங்குகிறார். அவர், இந்தியாவின் மனசாட்சி!

செரினா வில்லியம்ஸ்!

தன் துறையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதைவிடக் கஷ்டம் அந்த இடத்தைத் தக்கவைப்பது. நிகழ்காலத்தில் அதற்குச் சரியான உதாரணம்... டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்! டென்னிஸ் ரேங்கிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து, அதை இழந்து, மீண்டும் அதை எட்டிப் பிடித்திருக்கும் செரினாவின் போராட்டக் கதை... அத்தனை வலி. போராடுபவர்களுக்கான வழி!  

 முதலில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... செரினாவின் தந்தை ரிச்சர்ட் ஒரு டென்னிஸ் பைத்தியம். தனது மகள்கள் புகழ்பெற்ற டென்னிஸ் பிளேயர்கள் ஆக வேண்டும் என்று முடிவெடுத் தவர், செரினா மற்றும் அவரது அக்கா வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் சிறுமிகளாக இருக்கும் போதே அவர்களிடம் குட்டி டென்னிஸ் பேட்டைக் கொடுத்துவிட்டார். ஆனால், சகோதரி கள் பயிற்சிக்குச் சென்ற இடத்தில், ஆப்பிரிக்க வழிவந்த அமெரிக்கர்கள் என்பதால், நிறத்தாலும் இனத்தாலும் சக வீரர்களால் அவமானத்துக்கு ஆளானார்கள். அதனால், ரிச்சர்ட் தானே தன் மகள்களுக்கு டென்னிஸ் கற்றுக்கொடுத்தார். இதனால் தன் குழந்தைப் பருவத்தின் இயல்பான சந்தோஷங்களைப் பறிகொடுத்து, எந்நேரமும் பயிற்சி என்றே கஷ்டப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு வெற்றியின்போதும் செரினா தவறாமல் சொல்லும் வார்த்தைகள்... 'ஐ லவ் மை டாட்!’


செரினா எந்த அளவுக்கு வெற்றியைத் தீவிரமாகத் துரத்தினாரோ, அதே அளவுக்கு வலிகளும் காயங்களும் அவரைத் துரத்தின. 1995-ம் ஆண்டு முதன்முறையாக சர்வதேச டென்னிஸ் அறிமுகம்ஆகும்போது செரினாவின் வயது 13 தான்.

முதல் சுற்றிலேயே தோல்வி. விரக்தியில் டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியேறியவர், ஒரு வருடம் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள வில்லை. முழுதாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கடும் பயிற்சி மற்றும் முயற்சிக்குப் பின் 1997-ல் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் 304-ம் இடம் பிடித்தார். அப்போது ஏழாவது ரேங்க்கில் இருந்த மேரி பியர்ஸையும், நான்காவது இடத்தில் இருந்த மோனிகா செலஸையும் செரினா அடித்துத் துவம்சம் செய்ய, 'யார் இந்தப் பொண்ணு?’ என்று டென்னிஸ் அரங்கின் கவனத்தை ஈர்த்தார். தொடர் வெற்றிகளின் காரணமாக வருடக் கடைசியிலேயே செரினா ரேங்க் 99-க்கு உயர்ந்தது.

செரினாவின் பலம் அவரது சர்வீஸ். கிட்டத்தட்ட கறுப்புக் குதிரை மாதிரி இருக்கும் செரினாவின் ஒவ்வொரு சர்வீஸும் மணிக்கு 208 கி.மீ. வேகத்தில் பறக்கும். மற்ற எந்தப் பெண் வீராங்கனைகளிடமும் இல்லாத அஸ்திரம் இது. சர்வீஸ் வேகத்தோடு வியூக விவேகங்களும் கூட்டணிவைக்க, முதல் நிலை வீராங்கனை மார்டினா ஹிங்கிஸைத் தோற்கடித்து முதல் கிராண்ட் ஸ்லாம் வெற்றி, அமெரிக்க ஓப்பன் சாம்பியன் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் இரண்டே வருடங்களில் டாப் 5 ரேங்குக்குள் வந்தார். ஆனால், அந்த  வருடமே தோல்விகளும் அவரைத் துரத்தின. ஓய்வு இல்லாத தொடர் பயிற்சி அவருக்குக் கால் வலியைப் பரிசாகத் தந்தது. 2000, 2001 முழுக்க செரினா மருத்துவமனைக்கும் வீட்டுக்கும்தான் அலைந்துகொண்டுஇருந்தார். கால் வலி, தசை நார் கிழிந்தது, இடுப்பு வலி எனப் போட்டிகளின்போதே கோட்டில் சுருண்டு விழும் செரினாவை டென்னிஸ் உலகம் கவலையோடு கவனித்துப் பின் மறந்தேவிட்டது.

2010-ல் காலில் கண்ணாடி கிழித்து 18 தையல்கள் போடப்பட்டன. 2011-ல் நுரையீரலில் ரத்தக் கட்டிகள் உருவாகின. ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைந்துபோய் மரணப் படுக்கைக்கே சென்று மீண்டுவந்தார். 2013 ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பனில்  காலிறுதிக்கு முன்னேறினார். கால் மூட்டு வலி பாடாய்ப்படுத்த, மருத்துவர்கள் சகிதம்தான் மைதானத்துக்குள்  அடியெடுத்துவைத்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே வலி வேலையைக் காட்டியது. ஆனாலும், மனம் தளராமல் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆடிவிட்டுத்தான் டென்னிஸ் கோர்ட்டைவிட்டு வெளியே வந்தார். அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் அது
செரினாவின் மன உறுதியைக் காட்டியது. இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும் 30 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 46 ஒற்றையர் பிரிவு பட்டங்கள், 4 ஒலிம்பிக் தங்கம் என 10,590 புள்ளிகளோடு செரினா மீண்டும் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார்.  

''எனக்கு டென்னிஸ் மட்டுமே தெரியும். வலிகளைத் தாண்டி நான் டென்னிஸைக் காதலிக்கிறேன். வீல் சேரில் தூக்கிச் செல்லும் நிலைமை வந்தாலும், டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியேற மாட்டேன். இது இப்போது மட்டுமல்ல; எப்போதும் என் நினைவில் இருப்பது. இந்த எண்ணமே என்னை வெற்றியை நோக்கி உந்துகிறது!'' - இது செரினாவின் ஸ்டேட்மென்ட்.
அதுதான் செரினா!

Tuesday, February 26, 2013

எனது இந்தியா (ஜந்தர் மந்தர்!) - எஸ். ரா..

ன்னர்கள் என்றாலே கோயில்கள் கட்டுவது, கோட் டைகள் அமைப்பது, குளங்களை வெட்டுவது போன்ற பணிகளை மட்டும்தான் செய்தார்களா? அறிவியல் பூர்வமான ஆய்வுப் பணிகளுக்கு ஒரு மன்னர்கூட ஆதரவு அளிக்கவில்லையா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. ஒரு கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றச் சென்றபோது ஒரு மாணவர் எழுந்து, 'இந்தியா பழைமையான நம்பிக்கைகளில் ஊறிப்போன நாடு. அதற்கு அறிவியல்பூர்வமான சிந்த னையே கிடையாது. வெள்ளைக்காரர்களின் வருகைதான் அறிவியல் சிந்தனையை அறிமுகப்படுத்தியது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார். இது, பிரிட்டிஷ்காரர்கள் ஏற்படுத்திவைத்த தவறான எண்ணம். காலனிய ஆட்சி நம் அறிவின் வளர்ச்சியை மேம்படுத்தியதை நான் மறுக்கவில்லை. ஆனால், நவீன அறிவியல் சிந்தனையை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்தது பிரிட்டிஷ் என்பதுதான் தவறு. வானவியல், கணிதம், நிலவியல், மருத்துவம், எண்ணியல், உலோக வியல், கப்பல் கட்டுமானம் எனப் பல துறைகளில் இந்தியர் சிறந்து விளங்கி இருக்கின்றனர்.

இந்திய வானவியலுக்கு தனி வரலாறு இருக்கிறது. நாம் அறிவியலின் வரலாற்றை இன்னமும் கூட முழுமையாக வாசித்து அறியவில்லை. எத்தனை பேர் ஜந்தர் மந்தர் பார்த்து இருக்கிறீர்கள்? என்று மாணவர்களிடம் கேட்டேன். அந்தக் கூட்டத்தில் ஒரு மாணவர்கூட பார்த்ததில்லை என்றனர். டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு எத் தனை பேர் சென்று இருக்கிறீர்கள் எனக் கேட்டபோது, 15 பேருக்கும் அதிகமானோர் கையை உயர்த்தினர். ஆனால், அவர்களில் எவரும் ஜந்தர் மந்தர் பற்றி அறிந்து இருக்கவில்லை. வெறும் தகவல் தரவுகளாக, மனப்பாடப் பகுதியாக மட்டுமே வரலாற்றை நமது வகுப் பறைகள் மாற்றிவைத்து இருக்கிறது. இது எங்கோ ஒரு கல்லூரியில் யாரோ சில மாணவர்களுக்கு மட்டுமே நடந்த விஷயம் இல்லை. பெரும்பான்மை மாணவர்கள் இந்திய வரலாற்றின் முக்கிய இடங்கள், கல்வெட்டுகள், அகழ்வாய்வு நடந்த இடங்கள் என எதையுமே பார்த்தது இல்லை. வரலாறு என்பது சுயபெருமை பேசும் விஷயமாக மட்டுமே மக்கள் நினைக்கின்றனர். சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், மேம்படுத்தவும் வரலாறு தேவை என்பதை இன்றைய சமூகம் இன்னும் உணரவே இல்லை.

 

ஜந்தர் மந்தர் என்பது ஜெய்ப்பூர், டில்லி, உஜ்ஜயினி, வாரணாசி மற்றும் மதுரா ஆகிய இடங்களில் வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட வானவியற் கருவிகளின் தொகுப்பாகும். ஜெய்ப்பூர் அரசரான இரண்டாம் ஜெய்சிங் மஹாராஜாவால் 1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இவை உருவாக்கப்பட்டன. இந்த ஐந்திலும் ஜெய்ப்பூரில் உள்ள வான் ஆய்வுக்கூடமே மிகவும் பெரியது. ஜந்தர் என்றால் கருவி. மந்தர் என்றால் கணிப்பு. ஜந்தர் மந்தர் என்றால் 'கணிப்புக் கருவி’ என்று பொருள்படும்.

நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவது, வானில் தோன்றும் கிரகணங்களை முன்னறிவிப்பது, விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது, கோள்களின் சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் கோள்களின் நகர்வு அட்டவணைகளைக் குறிப்பதற்காக மாபெரும் வடிவவியற் கருவிகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட வானவியல் கூடமே ஜந்தர் மந்தர். இங்கு, சாம்ராட் இயந்திரம் எனப்படும் ராட்ச சூரியக் கடிகாரம் உள்ளது. இது, உலகிலேயே மிகப் பெரிய சூரியக் கடிகாரமாக 27 அடி உயரத்தில் நிற்கிறது. இங்கே, சூரியனின் நிழல் ஒரு நொடிக்கு 1 மில்லி மீட்டர் அல்லது ஒரு நிமிடத்துக்கு கையின் பரப்பளவு அளவு நகர்கிறது. முகலாய ஆட்சியின் இறுதிக் காலத்தில் வானசாஸ்திர மற்றும் கிரகங்கள் குறித்த அறிவோடு பிரசித்தி பெற்றிருந்த ஒரு ராஜவம்ச இளவரசரின் படைப்பாக்கம் என்று, ஜந்தர் மந்தர் பெருமையோடு நினைவு கொள்ளப்படுகிறது. ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்த வானியல் கூடமானது அழகான பளிங்குக்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் 'ராம் யந்திரா’ என்னும் நுணுக்கம் வாய்ந்த கருவி ஜெய்சிங் மஹாராஜாவின் வானசாஸ்திர அறிவுக்குச் சான்றாகத் திகழ்கிறது.  


துருவா, தக்ஷிணா, நரிவல்யா, ரஷிவலயாஸ், சின்ன சாம்ராட், பெரிய சாம்ராட், வானோக்கு பீடம், தீஷா, சின்ன ராம் யந்த்ரா, பெரிய ராம் யந்த்ரா, சின்ன கிரந்தி, பெரிய கிரந்தி, ராஜ் உன்னதம்ஸா, ஜெய் பிரகாஷ் மற்றும் திகந்தா போன்ற பல்வேறு வானவியற் கருவிகள் இங்கு நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வானோக்குக் கட்டடக் கருவிகள் பருவகால நேரங்கள், கிரகண அறிவிப்புகள், சுற்று வீதிகளில் நகரும் விண்மீன்களைக் குறிப்பிடுதல், கோள்களின் சாய்வுக் கோணங்களை அளத்தல், சூரிய நகர்ச்சியைத் தொடர்ந்து கணித்து நோக்குதல் போன்ற வானியல் தகவல்களைச் சேகரிக்கும் 14 வரைவியல் சாதனங்கள் (Geometrical Devices) கொண்டவை.  

இந்திய வானியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கூறும் அறிவியல் அறிஞர் எஸ்.ஜெயபாரதன், ''இந்திய வானவியலின் வளர்ச்சி தனிச்சிறப்பு கொண்டது. இந்தியர்கள் பாரம்பரிய அறிவின் துணைகொண்டு சூரிய, சந்திர கிரகணங்களைக் கணித்திடவும். பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்கவும், ஈர்ப்பு விசையின் நியதியை பற்றிச் சிந்திக்கவும். பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணிக்கவும் முடிந்திருக்கிறது'' என்று கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ஆரியபட்டாவின் வானவியல் அறிவைப் புகழ்ந்து பேசும் இவர், ''கி.பி.500-ல் ஆரியபட்டா ஒரு கணித முறையை வெளியிட்டுள்ளார். அதில், பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு சூரியனை மையமாக வைத்து ஒப்புநோக்கி, மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டுள்ளார். பூமியின் 15,82,23,7500 வேகச் சுற்றுக்கள், நிலவின் 57,75,3336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று ஆரியபட்டா சுட்டிக் காட்டினார். பிறகு, அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 என்று துல்லியமாகக் கணித்தார். இது ஓர் அரிய சாதனை'' என்று குறிப்பிடுகிறார்.

அதுபோலவே இவரது கட்டுரையில் இன்னொரு முக்கியச் செய்தியும் இடம் பெற்றுள்ளது. அது, ''யக்ஞவால்கியா என்ற ரிஷி, சூரியன் பூமியைவிட மிகப் பெரிதென்று 2,000 வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறார். அவரே முதன்முதலில் பூமியில் இருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புத் தூரங்களை அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர். இப்போது, அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் என்று துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர்'' என்று, ஜெயபாரதன் கூறுகிறார்.

இந்திய வானியலாளர்களில் முதன்மையானவர் ஆரியபட்டா. அவரது பிறப்பிடத்தைச் சரியாகத் தீர்மானிக்கும் வகையில் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இவர், குசுமபுர என்னும் இடத்துக்குச் சென்று அங்கே உயர்கல்வி கற்றதாகவும், அங்கேயே வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இவருடைய நூலுக்கு உரை எழுதிய பாஸ்கரா, குசுமபுரம் என்பது பாடலிபுத்திரம்தான் என்கிறார். ஆரியபட்டா எழுதிய நூல்களில் ஆரியபட்டியம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யபட்டா, கேரளாவைச் சேர்ந்தவர், கல்வி கற்பதற்காக நாளந்தா பல்கலைக் கழகத்துக்குச் சென்றவர் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.

5-ம் நூற்றாண்டிலேயே இயற்கணிதத்தைச் சார்ந்து ஒரு நூலை எழுதி இருக்கிறார் ஆரிய பட்டா. இவரது வானவியல் நூலில் பல்வேறு வானவியல் ஆராய்ச்சிக்கான கருவிகளைப் பற்றி விவரித்து இருக்கிறார். அவற்றில், சங்கு யந்திரம், சாயா யந்திரம், தனுர் யந்திரம்/சக்ர யந்திரம், யஸ்தி யந்திரம், சத்ர யந்திரம் மற்றும் தண்ணீர் கடிகாரங்கள் போன்றவை முக்கியமானவை. பை என்பது ஒரு விகிதமுறா எண் என்ற முடிவுக்கு வந்தவர் ஆர்யபட்டா. ஆர்யபட்டாவின் வானியல் ஆய்வு முறையானது அவுதயகா முறை என அழைக்கப்பட்டது. ஆர்யபட்டா மற்றும் அவரது சீடர்கள் பயன்படுத்திய வானவியல் குறிப்புகள் மற்றும் அட்டவணையை மையமாக வைத்தே இந்தியாவில் நாட்காட்டிகள் தயாரிக்கப்பட்டன. ஆர்யபட்டாவைச் சிறப்பிக்கும் வகையில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளுக்கு ஆர்ய பட்டா என்று பெயர் சூட்டப்பட்டது. சந்திரனில் காணப்படும் ஒரு கிண்ணக் குழிக்கும் ஆர்யபட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. இவரைப்போலவே, புகழ் பெற்றிருந்த வானவியல் அறிஞர் பாஸ்கரா. இவர் ஒரு கணித மேதை. இவர் எழுதிய லீலாவதி என்ற நூல் கணிதத் துறையில் மிக முக்கியமானது.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வானியலாளர் பாஸ்கரா. முதன் முதலில் இடமதிப்பில் எண்களைக் குறிப்பிட்டது இவர்தான். பூஜ்யத்தைக் குறிக்க சிறிய வட்டம் வரைந்தவரும் இவர்தான். எண் முறையில் 10 இணை அடிப்படையாகக்கொண்ட எண்கள், சுழியத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை கணிதத்துக்கு இவர் அளித்த கொடை, ஆரியபட்டாவின் கொள்கைகளை எளிமைப்படுத்தி விளக்கும் உரையாக 'ஆர்யபட்டிய பாஷ்யா’ என்ற உரை நூலையும் இவர் எழுதி இருக்கிறார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்தியா அனுப்பிய இரண்டாவது செயற்கைக்கோளுக்கு 'பாஸ்கரா’ என்ற பெயர் சூட்டியது.

''நாம் இந்தியர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள்தான் நமக்கு எண்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொடுத்து இருக்கின்றனர். அந்த முறை இல்லாமல் போயிருந்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்காது' என்று அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் பாராட்டி இருக்கிறார்.

இந்த வானவியல் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றவர்தான் மகாராஜா இரண்டாம் சவாய் ஜெய்சிங், இவர்தான் ஜெய்ப்பூர் நகரை வடிவமைத்தவர். முழுவதும் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்ட ஜெய்ப்பூரை சிவப்பு நகரம் என்றே அழைக்கின்றனர். பாலைவனத்துக்குள் இருந்த ஆம்பர் நகரில் இருந்து இடம் மாற விரும்பிய ஜெய்சிங் தண்ணீர் வசதியுள்ள இடத்துக்கு தலைநகரை மாற்ற ஜெய்ப்பூரை உருவாக்கினார். இன்று, ஜெய்ப்பூர் உள்ள இடம் ஒரு காலத்தில் மிகப் பெரிய ஏரியாக இருந்தது. அந்த ஏரியை ஒட்டியும், கரைகளின் மறுமுனையிலும் புதிய நகரை வடிவமைக்கும் பணியை ஜெய்சிங் தொடங்கினார்.

வானவியல் கணிதம், கட்டடக் கலை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்த ஜெய்சிங், இந்த நகரை வடிவமைப்பதற்காக நிறையக் கட்டடக்கலை நூல்களை பெர்ஷியனில் இருந்து மொழியாக்கம் செய்யவைத்தார். இதற்காக தனியே மொழிபெயர்ப்புத் துறை அமைக்கப்பட்டது. ஜெய்சிங்கின் உதவியாளர் சாம்ராட் ஜெகன்நாத் கிரேக்க வானவியல் நூல்களை மொழியாக்கம் செய்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து, 40-க்கும் மேற்பட்ட அரிய கணிதம் மற்றும் கட்டடக் கலை சார்ந்த நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
Thursday, February 21, 2013

அருள்வாக்கு - விலக்க வேண்டிய சபை!


எந்த ஸபையை விலக்க வேண்டும்?
வயது முதிர்ந்த மந்திரிகளில்லாத ஸபையை.

இவ்வுலகில் மனிதன் எவ்விஷயத்தில் ஜாக்கிரதையுடனிருக்க வேண்டும்?
ராஜ ஸேவை செய்வதில்.

ப்ராணனைவிட ப்ரியமானது எது?
குலதர்மமும் ஸாதுக்களின் சேர்க்கையும்.

ரக்ஷிக்கத் தக்கது யாது?
கீர்த்தியும், கற்புடையமாதும், ஸ்வபுத்தியுமாம்.

லோகத்தில் கற்பக் கொடியாகவுள்ளது எது?
ஸத்சிஷ்யனுக்கு அர்ப்பணம் செய்யும் படிப்பு. படித்தவன் ஒவ்வொருவனும் முன்னாளில் தான் படித்த படிப்பைச் சிஷ்யர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

எந்த ஆயுதம் எல்லோருடைய கையிலும் உள்ளது?
யுக்தி. (நியாயபூர்வமாக நிரூபணம் செய்யக் கூடிய சக்தி.)

எது ஸேனை
தைர்யம்.

எது யமன்?
கவனமில்லாதிருந்துவிடல்.

விஷம் எங்கிருக்கிறது?
துர்ஜனங்களிடத்தில் இருக்கிறது.

அபயம் எது? (பயப்பட வேண்டாத நிலைமை)
வைராக்யம் (ஆசையை விட்டுவிடின், அதுவே அபயம்.)

எது பயம்?
பணம்தான்.

எது பாதகம்?
ஹிம்ஸித்தல்.

பகவானுக்கு யாரிடத்தில் பரம ப்ரியம்?
தானும் மனதில் உபத்திரவப்படாமல் பிறருக்கும் உபத்திரவத்தை நினைக்காதவனிடத்தில்.

(ப்ரச்னோத்தர ரத்னமாலை - என்ற நூலிலுள்ள வடமொழி கேள்வி-பதிலை தமிழாக்கம் செய்து 27.1.33-ல் சென்னையில் மகா பெரியவர் பேசியது)

Wednesday, February 20, 2013

எனது இந்தியா (ஒதுக்கி வைக்கப்பட்ட டாட்டா! ) - எஸ். ராமகிருஷ்ணன.....

சீனாவில் இருந்து தேயிலை, மருந்துப் பொருட்கள் மற்றும் பீங்கான் சாமான்களை வாங்கிவந்து பம்பாயில் விற்று மிகப்பெரிய வணிகராக உயர்ந்தார் ஜீஜீபாய். சீனாவுக்கும் பம்பாய்க்கும் இடையில் அவரது வணிகக் கப்பல்கள் தன்னாட்சி செலுத்தத் தொடங்கின. அவரைப் பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷ், சீனாவுக்கு ஓபியம் கடத்தியது என்றும் கூறப்படுகிறது. ஜீஜீபாயின் வளர்ச்​சியால் பார்ஸிகள் கடல் கடந்து சீனாவுக்குச் சென்று வியாபாரம் செய்யத் தொடங்கினர். ஜீஜீபாய் தான் சம்பாதித்த பணத்தை, தான, தர்மக் காரியங்களில் செலவிடத் தொடங்கினார். கல்வி, மருத்துவம், காப்பகம் என்று தாராளமாக பணத்தைச் செலவு செய்தார். இன்றும் அவரது பெயரில் சேவை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசியலிலும் பார்ஸிகள் இந்திய விடுதலைக்கு உதவிசெய்தவர்கள். குறிப்பாக,  தாதாபாய் நௌரோஜியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவராக இருந்த தாதாபாய் நவ்ரோஜி எழுதிய, 'இந்தியாவின் வறுமையும் பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும்’  என்ற புத்தகம், பிரிட்டிஷ் அரசு இந்தியர்களை எப்படிச் சுரண்டி வாழ்கிறது என்ற உண்மையை உலகுக்கு எடுத்துக்காட்டியது. 1825-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, மும்பையில் உள்ள ஒரு பார்ஸி குடும்பத்தில் நவ்ரோஜி பிறந்தார். அவருக்கு நான்கு வயதானபோது, தந்தை பலன்ஜி தோர்டி இறந்துவிட்டார். அவரது அன்னை மானெக்பாய், நவ்ரோஜியைக் கஷ்டப்பட்டுப் படிக்கவைத்தார். எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த நவ்ரோஜி, அதே கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1852-ம் ஆண்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய நவ்ரோஜி, ஆங்கிலேயரின் ஆட்சிமுறையை தீவிரமாக எதிர்த்து செயல்படத் தொடங்கினார். இந்திய மக்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதே சுதந்திரச் செயல்பாட்டின் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று நவ்ரோஜி கருதினார். அதற்காக, அடித்தட்டு மக்களுக்குக் கல்வியறிவு வழங்கவும், விடுதலை வேட்கையை எழுப்பவும் 'கியான் பிரசார் மண்டல்’ என்ற அமைப்பை உருவாக்கினார். 1855-ல் இங்கிலாந்துக்குச் சென்ற தாதாபாய், இந்திய வர்த்தக அமைப்பை 1859-ல் அங்கு தொடங்கினார்.


பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கிவருவதாக நவ்ரோஜி குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சி​யாளர்கள், ராணுவத்தினர், முதலாளிகள், வணி​கர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், லாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கின்றனர் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்பதை நவ்ரோஜியே முதன்முதலில் பட்டியலிட்டார் என்கிறார். பம்பாயில் கல்விச் சாலைகள் உருவாக்கப்​பட்டவுடன் பார்ஸி இனப் பெண்கள் அதிக அளவில் கல்வி கற்றுக்கொள்ளத் தொடங்கினர். அதில் முக்கியமானவர் மேடம் காமா. 1896-ம் ஆண்டு பம்பாய் நகரம் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டபோது, மேடம் காமா தன்னார்வக் குழு ஒன்றில் இணைந்து தீவிரமாகத் தொண்டு செய்தார். இதனால், பிளேக் நோய் அவருக்கும் தொற்றியது. பிறகு, இங்கிலாந்து மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று, நோயிலிருந்து மீண்டு வந்தார். லண்டனில் இருந்த காலத்தில் தாதாபாய் நவ்ரோஜியின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் மேடம் காமா. எவருக்கும் அஞ்சாத வீராங்கனையாக சுதந்திரப் போராட்டக் களத்தில் செயல்பட்டவர். இவர் அனுப்பிய துப்பாக்கியைக்கொண்டுதான் வாஞ்சிநாதன், ஆஷ் துரையை சுட்டுக் கொன்றார். இப்படி, பார்ஸிகள் இந்திய சுதந்திரப் போரில் தனித்துவமான பங்களிப்பு செய்தனர்.

பார்ஸிகள் தங்கள் இனத்துக்குள்ளாகவே மணஉறவு கொள்ளக்கூடியவர்கள். பார்ஸி இனப் பெண்ணை வேறு சமயத்தைச் சேர்ந்தவர் திருமணம் செய்வதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வது இல்லை. ஒருவேளை, பார்ஸி இன ஆண், இன்னொரு சமயப் பெண்ணை மணந்துகொண்டாலும் அந்தப் பெண்ணை பார்ஸி சடங்குகள் மற்றும் வழிபாடுகளில் ஏற்றுக்கொள்வதும் இல்லை. உறவுகளுக்குள் தலைமுறை தலைமுறையாக திருமணம் நடைபெற்று வருவதால், பார்ஸிகளுக்கு மரபணுக் கோளாறுகள் அதிகம் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பார்ஸி அல்லாத பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவளை பார்ஸி மதத்துக்கு மதமாற்றம் செய்தாலும் அவளுக்கு மத உரிமைகள் வழங்கப்பட முடியாது என்று இருக்கும் கெடுபிடியை எதிர்த்து ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கைத் தொடுத்தவர் பிரபல தொழில் அதிபர் ஆர்.டி.டாட்டா. இவர், ஒரு பிரெஞ்சுப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப் பிறகு, அந்தப் பெண்ணை பம்பாய்க்கு அழைத்து வந்து தனது சமயத்துக்கு மதம் மாற்றினார் டாட்டா. ஆனாலும், அவளுக்கு மதச் சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதி தர முடியாது என்று பார்ஸி மத அமைப்பு தடை விதித்தது. இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் முறையிட்டார் டாட்டா. பார்ஸிகளின் சார்பாக பார்ஸி பஞ்சாயத்து என்ற அமைப்பு வாதிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதமாற்றத்தில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மதம் மாறிய ஒருவர் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும். இந்த வழக்கில் டாட்டாவின் மனைவி சேர்க்கப்படவில்லை. ஆகவே, இந்த வழக்கை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்தனர். ஆனால், பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து மதமாற்றத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டால், அதை நீதிமன்றம் தலையிட்டு வழிகாட்ட முடியாது. மத அமைப்புகளே அதைப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியது. இந்த வழக்கு காரணமாக, பார்ஸிகள் டாட்டாவின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தது அவர்களின் பிடிவாதமான சமயப்பற்றுக்கு ஒரு சாட்சி. இதை பார்ஸிகளின் பலவீனம் என்கிறார் நுரோஜி என்ற பத்திரிகையாளர். 

பார்ஸிகள், இறந்த உடலை அடக்கம் செய்யும் முறை மிக விசித்திரமானது. இறந்தவரின் உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவே, கழுகுக்கு இரையாக வைத்துவிடுவார்கள்.

அப்படி, இறந்த உடலைக் கொண்டுபோய் வைக்கும் கட்டடத்துக்கு, 'டாக்மா’ அல்லது 'டவர் ஆஃப் சைலன்ஸ்’  என்பது பெயர்.

இதற்கு, பார்ஸிகள் சொல்லும் விளக்கம் என்னவென்றால், இறந்த உடலைப் புதைப்பதால் மண் மாசுபடுகிறது. எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. நதிகளில் உடலைவிடுவதால் நீர் மாசுபடுகிறது. இறந்த பிறகு, இந்த பூமியை மாசுபடுத்தக் கூடாது என்ற காரணத்தால் அவற்றை கழுகுக்கு உணவாகத் தந்துவிடுகிறோம் என்கின்றனர்.

ஆனால், இது ஒரு பழைமையான பாலைவனச் சடங்கு. அங்கே, இறந்த உடல்களை இப்படி கழுகுகளுக்கு உணவாக அளிக்கும் முறை இன்றும் இருக்கிறது. அதையே பார்ஸிகளும் பின்பற்றுகின்றனர் என்கிறார்கள் மானுடவியலாளர்கள்.

பம்பாயில் இதுபோன்ற 'டவர் ஆஃப் சைலன்ஸ்’ ஒன்று மலபார் பகுதியில் காணப்படுகிறது. அது, இரண்டு அடுக்குக் கட்டடம் இரண்டாம் கட்டடத்தில் உள்ள படிகளில் ஏறி 50 மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய கோபுரத்தின் உச்சியில் இறந்தவரின் உடல் வைக்கப்படுகிறது. இந்தக் கோபுர உச்சிக்கும், கட்ட​டத்துக்கு உள்ளும் வெளியாட்கள் செல்ல அனு​மதி கிடையாது.

சவச்சடங்கு செய்பவர்கள் என்று தனித்து அடையாளம்கொண்ட சிலரே இறந்த உடலைக் கொண்டுசெல்லும் பணியைத் தொடர்ந்து செய்கின்றனர். அவர்கள் வெளியுலகுக்கு வராமல் சமுதாயத்தில் இருந்து விலகி வாழ்கின்றனர். அவர்கள் மட்டுமே இறந்த உடலை கோபுரத்துக்கு எடுத்துச் செல்வார்கள். பார்ஸிகளின் இறுதிச் சடங்கில் முக்கியமானது மரணத் தறுவாயில் உள்ளவரின் முன் அமர்ந்து அவருக்குப் புனித நூலின் பகுதியை வாசித்துக் காட்டுவது. அதுபோலவே, மாதுளைச் சாறு ஒரு மிடறு குடிக்கவைப்பதும் சடங்காக நடத்தப்படுகிறது. இறந்த உடலைக் குளிக்கவைத்து சலவை செய்த வெள்ளைத் துணியைச் சுற்றி வைத்துவிடுவார்கள். அதைப் பிறர் தொடுவது தீட்டாகக் கருதப்​படுகிறது.

இறந்த உடலை வீட்டில் இருந்து வெளியே கொண்டு​வரும்போது அதை ஒரு நாய் பார்க்க வேண்டும் என்ற சடங்கும் இருக்கிறது. காரணம், 'நான்கு முகமுள்ள நாய் ஒன்று மரணத்தின் தூதுவனாக இருப்பதாக’, அவர்கள் நம்புகின்றனர். அதன் பிறகு, 'டவர் ஆஃப் சைலன்ஸ்’ கட்டடத்துக்கு உடல் கொண்டுசெல்லப்படுகிறது. அங்கே, உடல் கழுகுகளுக்கு இரையாக வைக்கப்படுகிறது. கழுகுகள் தின்றதுபோக மீதமுள்ளவற்றைச் சேகரித்து அப்புறப்படுத்திவிடுகின்றனர். ஓர் உடல் ஓர் ஆண்டு வரை அங்கே கிடக்க அனுமதிக்கப்​படுகிறது.

உடலை அழிக்கவல்ல கழுகு இனத்தின் வீழ்ச்சி காரணமாக, இன்று டவரில் வைக்கப்படும் உடல்கள் அழிவதற்கு பல காலம் ஆகிறது. இந்தக் குறையை நீக்க, நவீன அறிவியல் முறைப்படி மிகப் பெரிய சூரியக் கண்ணாடிகளை வைத்து உடலை அழிக்க முயற்சிகள் நடக்கின்றன. இப்போது, சோலார் முறைப்படி உடலை அழிப்பதற்கான வசதிகளை பார்ஸிகள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இன்று, இந்தியாவில் ஒன்றரை லட்சம் பார்ஸிகள்தான் இருக்கின்றனர். இது, மிகச் சிறிய எண்ணிக்கை என்றாலும், இவர்கள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 90,000 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் பார்ஸி இன மக்களை 'ஏழை பார்ஸிகள்’ என அறிவிக்க வேண்டும் என, பார்ஸிகள் சமயச் சங்கத்தினர் சமீபத்தில் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர் என்றால், பொருளாதார ரீதியில் அவர்கள் எவ்வளவு உயர்ந்து இருக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

Sunday, February 17, 2013

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?

நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. நம்மவர்களின் மரபணுக்கள்தான் (Genes)   காரணம்; நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே; உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது என்றெல்லாம் பட்டிமன்ற பாணியில் அவை விவாதிக்கப்படுகின்றன. இதில், 'அரிசியை மையப்படுத்திய நம் உணவுப் பழக்கமே உண்மையான காரணம்' என்பதும் முக்கியமாக பேசப்படுகிறது!

இத்தகைய சூழலில்... 'சர்க்கரை நோய்க்கும் அரிசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று சமீப காலம் வரை பெரும்பாலான டாக்டர்கள் (சர்க்கரை நோய் நிபுணர்கள் உட்பட) உறுதியாக சொல்லிக் கொண்டிருந்த வாதம்... தற்போது முற்றாக உடைபட்டு போயிருக்கிறது.

ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது என்பதை கணக்கிடுவதற்கு 'கிளைசீமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index)என்று பெயர். சுருக்கமாக 'ஜிஐ' (GI). சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் 'ஜிஐ' 100. இதை அடிப்படை அளவுகோலாக வைத்து மற்ற உணவுகளையும் கணித்திருக்கிறார்கள்.

100-70 வரை 'ஜிஐ' உள்ள உணவுகளை, 'அதிக ஜிஐ' என்றும், 70-55 வரையிலான உணவுகளை 'நடுத்தர ஜிஐ' என்றும், 55-க்கு கீழே உள்ள உணவுகளை, 'குறைந்த ஜிஐ' என்றும் அழைக்கிறோம்.

அதிக 'ஜிஐ’ உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகி, சீக்கிரம் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீக்கிரம் அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கு மூலகாரணமாக அமைகின்றன. குறைந்த 'ஜிஐ’ உணவுகள், மெதுவாக ஜீரணமாகி, மெதுவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துகின்றன. ஆகவே, 70-க்கும் மேல் 'ஜிஐ' உள்ள உணவுகள் ஆபத்தானவை. 55-க்குக் கீழ் உள்ள உணவுகளே பாதுகாப்பானவை.


அப்படியானால், நாம் உண்ணும் உணவின் 'ஜிஐ' எவ்வளவு என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதானே!

அதற்கான பட்டியலை மேலே கொடுத்திருக்கிறேன்... பார்த்துக் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளில், ஒவ்வொரு உணவுப் பண்டத்தின் கவரிலும் 'ஜிஐ' அளவு குறிப்பிட வேண்டும் என்று சட்டமே வந்துவிட்டது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது - கைக்குத்தல் அரிசியின் ஜிஐ, 50 என்பதுதான். குட்டைரக பொன்னி போன்றவற்றின் 'ஜிஐ' அளவு மிகவும் அதிகம் - 75.


நீளரக அரிசிகளின் (சம்பா, பாசுமதி) 'ஜிஐ' இடைப்பட்ட ரகம்: 56 - 58. ஆக, பாசுமதி அரிசி சாப்பிடும் வடநாட்டவர்களைவிட, பொன்னி அரிசி சாப்பிடும் நம்மவர்கள் சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்! இத்தனை நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் 'பொன்னி அரிசிதான் வேண்டும்' என்கிற உங்களின் பிடிவாதம் சரியா... இல்லையா... என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

'சர்க்கரையைக் கணக்கிடுவதற்கு, உணவுப் பண்டங்களின் 'ஜிஐ' மட்டுமல்லாமல்... சாப்பிடும் உணவின் மொத்த அளவும் (Quantity)கூட கணக்கிடப்படுவது முக்கியம்' என்கிற கருத்தும் உண்டு. இதை 'கிளைசீமிக் லோடு' (Glycemic Load)என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக 'ஜிஎல்' (GL) நம் உணவில் பொதுவாக மாவுச்சத்து 50%, கொழுப்புச் சத்து 30%, புரதச்சத்து 20% இருக்க வேண்டும். ஆனால், நம்மவர்கள் உணவில் மாவுச்சத்து 75% இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படியானால், நம்முடைய 'குளுக்கோஸ் சுமை’ அதிகம்தானே? அதிக 'ஜிஐ' இருக்கும்போது, அதிக 'ஜிஎல்'லும் சேர்ந்தால், சர்க்கரை நோயின் வாய்ப்பு அதிகம் என்பதில் என்ன ஆச்சர்யம்?


மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமான 'அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகம்' (American Diabetes Association)'எந்த மாவுப்பொருளைச் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமில்லை - எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்’ என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதுதான் உலகெங்கும் உள்ள டாக்டர்கள், 'அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடி சம்பந்தமில்லை’ என்று சமீப காலம் வரை அடித்துச் சொன்னதற்குக் காரணம்.

இதை உடைத்துப் போட்டிருப்பது... அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் கடந்த 22 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் மக்களிடம் நடத்திய ஆராய்ச்சி முடிவு. அதென்ன முடிவு?

கிரெடிட் கார்டு - 3டி பாதுகாப்பு!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். மும்பையைச் சேர்ந்தவர் பிரதாப் காயன். இவர் பெட்ரோலிய கம்பெனி ஒன்றின் மூத்த அதிகாரி. இவர் மும்பையில் இருக்க, இவரது கிரெடிட் கார்டு மூலம் அமெரிக்காவில் 200 டாலருக்குப் பொருட்கள் வாங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவல் எஸ்.எம்.எஸ். ஆக வந்தது ஓர் அதிகாலை நேரத்தில். எஸ்.எம்.எஸ்.ஸைக் கண்டு அதிர்ந்தார் பிரதாப் காயன். கிரெடிட் கார்டு தன் கையில் இருக்க, வேறு யார் அதை பயன்படுத்த முடியும் என்கிற யோசனை அவருக்கு.

வேகவேகமாக கார்டை பிளாக் செய்ததால் 200 டாலருடன் தப்பித்தார் அவர். ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்காத பலர் லட்சக்கணக்கில் ரூபாயை இழந்திருக்கிறார்கள். ஒருவர், இருவரல்ல, இந்தியா முழுக்க  பலரது கிரெடிட் கார்டுகளிலிருந்து கடந்த இரு மாதங்களாக 30 கோடி ரூபாய்க்கு மேல் இப்படி பணம் பறிபோயிருக்கிறது. 

கிரெடிட் கார்டு விவரங்களை திருடுபவர்கள் எளிதில் அதனைக்கொண்டு ஏதாவது ஒரு பொருளை வாங்கிவிட முடியும். இதை தடுக்க ரகசிய பின் எண்ணை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கிரெடிட் கார்டு கம்பெனிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம், இந்த பின் எண் பல அயல்நாடுகளில் கட்டாயமாக்கப்படாததால் நம் கார்டு மோசடி பேர்வழிகளால் அயல்நாடுகளிலேயே அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.


கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை பாதுகாப்பாகப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் 

''கிரெடிட் கார்டை இரண்டு விதமாகப் பயன்படுத்த முடியும். ஒன்று, ஷாப்பிங் மால், பல்பொருள் அங்காடி, ஓட்டல் போன்ற இடங்களில் கார்டை பயன்படுத்தும்போது. ஓட்டலில் சாப்பிட சென்றால் கார்டை தந்துவிட்டு, நாம் உட்கார்ந்திருப்போம். அந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு பற்றிய அடிப்படை தகவல்கள் அனைத்தும் திருடு போக வாய்ப்பு இருக்கிறது.

இன்னொன்று, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதும், பொருட்களை வாங்கும் போதும் நமது கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருடு போக வாய்ப்புண்டு. ஆன்லைனில் பொருள் வாங்க நம் கிரெடிட் கார்டு நம்பர், சி.வி.வி. நம்பர் (card verification Value),பின் நம்பர் ஆகியவற்றை தந்தால்போதும். இப்போதுள்ள வேகமான வாழ்க்கைமுறையில் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க பலருக்கும் நேரம் இல்லை. இதனால்தான் ஆன்லைனில் பொருட்களை அதிகமாக வாங்குகிறார்கள். தவிர, கடைகளைவிட அதிகமான தள்ளுபடி, வீட்டிற்கே டெலிவரி ஆவது என பல கவர்ச்சி கரமான விஷயங்கள் அதில் இருக்கின்றன. விலை மலிவாகக் கிடைப்பதால் அதிகம் தெரியாத இணையதளங்கள் மூலமும் பலர் பொருட்களை வாங்குகிறார்கள். இந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் சி.வி.வி. எண் ஆகியவை திருடு போக வாய்ப்பிருக்கிறது''
.
நம்முடைய கிரெடிட் கார்டை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நம் பிரச்னைகள் தீரும். இதற்கு என்ன செய்யலாம்?


''கிரெடிட் கார்டு பத்திரமாக இருப்பதற்காக, வங்கிகள் ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கிரெடிட் கார்டை தற்போது வழங்கி வருகிறது. இதன் மூலம் உங்கள் கார்டு தொலைந்தால் அது எந்த இடத்தில் உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இந்த கார்டு செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.  போலி கார்டுகளையும் உருவாக்குவது கடினம். ஏனெனில், இந்த சிப் கார்டு நான்கு துண்டுகளாக இருக்கும். நான்கையும் இணைத்தால் மட்டும்தான் கார்டு செயல்படும். ஒவ்வொரு சிப் கார்டும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கார்டை வாங்க கட்டணங்கள் உண்டு. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். குறைந்தபட்ச 500 ரூபாயிலிருந்து கட்டணங்கள் இருக்கும்.

ஆன்லைனில் அதிக பரிவர்த்தனை செய்பவர்களுக்காகவே 3டி முறையில் பாதுகாப்பு வசதியை இப்போது அறிமுகப் படுத்தியுள்ளன. இதில் வங்கி முதலில் ஒரு பாஸ்வேர்டை தரும். இந்த பாஸ்வேர்டை பயன்படுத்திய உடனே செயல் இழந்துவிடும். இதன்பிறகு உங்களின் பாஸ்வேர்டை நீங்களே உருவாக்கிக்கொள்ளவேண்டும். இதில் உங்களின் வழக்கமான கார்டு நம்பர், சி.வி.வி. எண், பின் நம்பர் ஆகிய தகவல்களை கொடுத்தபின் ஆறு கேள்விகளைக் கேட்கும். இது முழுவதும் உங்களின் தனிப்பட்ட தகவல்களாகவும், வித்தியாசமான கேள்வியாகவும் இருக்கும். அதாவது, உங்களின் அப்பாவுடன் பிறந்தவர் கள் எத்தனை பேர், உங்களின் அலுவலகம் எத்தனையாவது மாடியில் உள்ளது என்கிற மாதிரியான கேள்விகளை கேட்கும். இதற்கடுத்து ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் இதில் ஏதாவது இரண்டு கேள்விகள் வரும். அதற்கு பதிலளித்தால்தான் பரிவர்த்தனையைத் தொடர முடியும்.

மேலும், இந்தத் தகவல்களை யாரும் திருட முடியாது. இந்தத் தகவல் கோடிங் முறையில் மற்றவர்கள் படிக்க முடியாத முறையில் பதிவாகும். அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் பரிவர்த்தனையில் பணத்தைச் செலுத்தவேண்டும் எனில், அதை அந்த கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்றுதான் செலுத்த முடியும். தவிர, ஆர்.பி.ஐ.யின் அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியும்.

முறையான வங்கியின் இணையதளங்கள் அனைத்தும் Https என்றுதான் ஆரம்பிக்கும். ஆனால், போலியான இணையதளங்கள் http என ஆரம்பிக்கும். இதைக் கவனித்தாலே போதும் மோசடி நிறுவனங்களை நிமிட நேரத்தில் ஒதுக்கிவிடலாம்.

கிரெடிட் கார்டை வாங்கும்போதே அதை பின் நம்பருடன் வங்கிகளில் கேட்டு வாங்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் சிக்கல் என்னவென்றால், பின் நம்பரை தவறாகப் பதிவு செய்தால் கார்டை வங்கி பிளாக் செய்துவிடும். முதல்முறை என்றால் கார்டை ரிலீஸ் செய்வார்கள். அடிக்கடி இப்படி நடந்தால் புது கார்டுதான் வாங்கவேண்டியிருக்கும். இதற்கு தனிக் கட்டணம் தரவேண்டும்''.

இனியாவது கிரெடிட் கார்டை பத்திரமாகப் பயன்படுத்துவீர்கள்தானே?

பட்ஜெட் எதிர்பார்ப்பு ! - எந்தத் துறைக்கு என்ன தேவை..?

ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னும் 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இன்னும் சீரானபாடில்லை..! அதிக பணவீக்க விகிதம், அதிக வட்டி விகிதத்தால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) சுமார் 5.5% அளவுக்குதான் இருக்கும் என பலரும் ஆரூடம் சொல்லத் தொடங்க, எதிர்வரும் பட்ஜெட்டில் தொழில் துறைக்கு பல்வேறு சலுகை களை அளித்தால்தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி ஏற்படும். எந்தெந்தத் துறைக்கு என்ன வேண்டும் என்று பல்வேறு துறை நிபுணர்களின் கருத்துகள் இனி;
 உள்கட்டமைப்பு !

 ''இன்றைக்கு இந்தியா முழுக்க மிக முக்கிய பிரச்னையாக இருப்பது மின்சார பற்றாக்குறை. இதற்கு காரணம், நிலக்கரி பற்றாக்குறைதான். மேலும், அரசிடமிருந்து நிலக்கரியை வாங்கி மின் உற்பத்தி செய்யும் பல தனியார் நிறுவனங்கள், அவற்றின் மொத்த உற்பத்தியையும் பிற தனியார் நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு விற்று வருகின்றன. இதற்குபதில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை மாநில மின் வாரியத்துக்கு சலுகை விலையில் தரவேண்டும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும்.


நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் 15 முதல் 20 நிறுவனங்கள் தான் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. மீதி நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறை, நிலத்தைக் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னையில் சிக்கி இருக்கின்றன. இதனால், நிலக்கரியை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். 2012-ல்

1 டன் நிலக்கரி 40 டாலருக்கு விற்றது. அது இப்போது 80 டாலராக அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லை என்றால் ஜி.டி.பி. வளர்ச்சி இல்லை. எனவே, மத்திய அரசு, மின் உற்பத்தித் துறை சந்தித்துவரும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கவேண்டும்'.

ஸ்டீல் மற்றும் சிமென்ட் !

ஸ்டீல் துறை, மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கலைச் சந்தித்து வருகிறது. இதற்கு காரணம், பல இடங்களில் கச்சா இரும்பு போதிய அளவுக்குக் கிடைக்கவில்லை. மேலும், அதனை வெட்டி எடுக்க காலதாமதமாகிறது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை விரைந்து அனுமதி தரும்பட்சத்தில் இந்தக் காலதாமதம் தவிர்க்கப்படும். இதற்கான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். 

சிமென்ட் துறை தற்போது குறைவான டிமாண்டில் இருக்கிறது; செலவும் அதிகரித் துள்ளது. அந்த வகையில் சிமென்ட் மீதான கலால் வரியை அதிகரிக்கக் கூடாது என்பது இத்துறையினரின் முக்கிய கோரிக்கை.

விருந்தோம்பல் துறை !

ஓட்டல் துறைக்கு இன்ஃப்ரா அந்தஸ்து தரப்பட்டால் அதிக முதலீடு வரும். அந்த வகையில் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என இத்துறை யினர் எதிர்பார்க்கிறார்கள். ஓட்டல் கட்டடங்களுக்கான தேய்மானத்தை தற்போதுள்ள 10 சதவிகிதத்திலிருந்து 20 சத விகிதமாக உயர்த்தவேண்டும். மேலும், ஓட்டல்களில் தற்போது 25,000 ரூபாய்க்கு மேல் செலுத்தும் போது பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதை ரூ.1 லட்சம் ரூபாயாக அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

பெட்ரோலியத் துறை..!

பெட்ரோலியப் பொருட்களின் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படும் நாப்தா ரிஃபார்மேட் உள்ளிட்டவை மீதான இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கவேண்டும் என பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசை கேட்டிருக்கின்றன.

கேப்பிட்டல் மற்றும் இன்ஜினீயரிங் கூட்ஸ் !

பொருளாதார மந்தநிலை மற்றும் புதிய முதலீடு குறைந்துபோனதால் கேப்பிட்டல் மற்றும் இன்ஜினீயரிங் கூட்ஸ் துறை மிகவும் பாதிக்கப்பட்டி ருக்கிறது. குறிப்பாக, தேவையும் உற்பத்தியும் குறைந்துள்ளதால் சென்வாட் வரியைக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான வரியையும் குறைக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 

தகவல் தொழில்நுட்பத் துறை.. !

ஐ.டி. சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கும் (எஸ்.இ.இசட்.) ஐ.டி. மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மாற்று வரியை (மேட்) பட்ஜெட்டில் நீக்கவேண்டும் என சாஃப்ட்வேர் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் மத்திய அரசை கேட்டிருக்கிறது. 2011-12-ல் மேட் (MAT - Minimum Alternative Tax) வரி 18.5 சதவிகிதமாக  அதிகரிக்கப்பட்ட பிறகு எஸ்.இ.இசட். திட்டங்களில் செய்யப் பட்ட முதலீடு குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது. 

ஜவுளி !

பாலியஸ்டர் ஃபைபர் மீதான கலால் வரியைக் குறைக்கவேண்டும். அப்போதுதான் கையால் நெய்யப்படும் நூலிழை ஏற்றுமதிக்கு ஊக்கம் கிடைக்கும் என ஜவுளித் துறையிடமிருந்து கோரிக்கை சென்றிருக்கிறது.

ரியல் எஸ்டேட் !

''ரியல் எஸ்டேட் கட்டுமானங்களுக்கு அரசுத் துறைகளின் அனுமதி வாங்க எப்படியும் சில ஆண்டுகள் ஆகிவிடுகிறது. இந்தக் காலதாமதத்தைத் தவிர்க்க சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டுவர வேண்டும். இதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வரவேண்டும்'.


சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு விதிக்கப்பட்ட மேட் என்கிற குறைந்தபட்ச மாற்று வரி கடந்த பட்ஜெட்டில் நீடிக்கப்பட்டது, அதை இந்த பட்ஜெட்டில் நீக்கவேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. 

கடனுக்கான வட்டி விகித குறைப்பு மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டுவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல், ரியல் எஸ்டேட்டை இன்ஃப்ரா துறையின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்டவைகளையும் ரியல் எஸ்டேட் துறை பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறது. 

மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர் அஜய் மகேன், அபோர்டபிள் ஹவுஸிங்-க்கு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அந்தஸ்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதை ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறைக்கும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்திருக்கிறது.

பொருளாதாரத்தைச் சீராக்க நிதி அமைச்சர் இக்கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமே!

ஜி.எஸ்.டி: இந்த பட்ஜெட்டில் வரலாம்...!
  ''இந்த பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. பற்றிய அறிவிப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், இதை 2014-ல்தான்  அமல்படுத்த முடியும். காரணம், ஜி.எஸ்.டி. மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பில் நான்கில், மூன்று பங்கு ஆதரவு கிடைத்தால் மட்டும்தான் அமலுக்கு வரும். மேலும், இந்தியாவிலுள்ள 50 சதவிகித மாநிலங்களாவது இந்த முறையை ஏற்றால்தான் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஜி.எஸ்.டி., மாநிலங்களின் வரி வசூலிக்கும் அதிகாரத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்கும். சேவை வரியை மாநில அரசு வசூலித்துக்கொள்ளும் அதிகாரம் கிடைக்கும். ஆனால், அதில் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்ப்பவர்களுக்கு எந்த மாநிலம் சேவை வரி விதிக்கவேண்டும் என்பதில் குழப்பம் வரும்.

தங்களின் வரி வருமானம் குறையும் என மாநில அரசுகள் இதைக்கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வருமானம் குறைந்தால் மத்திய அரசு உதவி செய்யும் என சொல்லி இருக்கும் மத்திய அரசு, அதற்கென 12,000 கோடி ரூபாயை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மாநிலங்களின் வருமான இழப்பு 32,000 கோடியாக உள்ளது.

ஜி.எஸ்.டி. வந்தால் சில பொருட்களுக்கு வரி மேலும் கூடும். சிலவற்றுக்கு வரி குறையும். இதனால் குறிப்பிட்ட பொருட்களின் விலை உயரும். அதிகம்பேர் வரிச் செலுத்தும் வளையத்திற்குள் வருவார்கள் என்பதால் அரசின் வரி வருமானம் கணிசமாக உயரும். 

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் கிரெடிட் சிஸ்டம் வந்தால்தான் பயனுள்ளதாக இருக்கும். கிரெடிட் சிஸ்டம் என்பது ஒரு பொருளை வாங்கும்போது வரிச் செலுத்தி இருப்பீர்கள். அதை மீண்டும் விற்கும்போது அல்லது அதை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி விற்கும்போது வசூலிக்கும் வரியில் ஏற்கெனவே கட்டிய வரியைக் கழித்துவிட்டு மீதமுள்ள வரியை மட்டும் அரசுக்குக் கட்டினால் போதும்.''

Friday, February 15, 2013

ஸ்போர்ட்ஸ் - ஹாக்கியின் விஸ்வரூபம்!


சம்பளத்துக்காக இந்திய ஹாக்கி வீரர்கள் போராடிய அவலமெல்லாம் இனி இருக்காது. சர்தார், சந்தீப் சிங்குகள் பி.எம்.டபிள்யூ. கார் வாங்கிவிட்டார்கள். இளம் வீரர்கள் பங்களா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம், எச்.ஐ.எல். என்கிற ஹாக்கி இந்தியன் லீக் போட்டி நிகழ்த்திய மாயம். கிரிக்கெட் வீரர்கள்போல ஹாக்கி வீரர்களின் கையிலும் பணம் விளையாடுகிறது. 

ஐ.பி.எல். மாதிரி ஹாக்கிக்கும் ஒரு லீக் அமைய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது, எச்.ஐ.எல். லலித் மோடி ஐ.பி.எல்-ன் சூத்திரதாரியாக இருந்தது போல எச்.ஐ.எல்-ன் மூளை, இதயம் எல்லாமே நரிந்தர் பத்ராதான். ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச் செயலர். கடுமையாக உழைத்து இந்திய ஹாக்கியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று விட்டார். இந்த வருட எச்.ஐ.எல்-லில், தில்லி, மும்பை, பஞ்சாப், ராஞ்சி, உத்தர பிரதேசம் என ஐந்து அணிகள் விளையாடின. (அடுத்த வருடம் சென்னையும் பெங்களூருவும் இணையலாம்) ஒவ்வொரு அணியிலும் 24 பேர். 14 இந்தியர்கள். 10 வெளிநாட்டவர்கள். 

இந்திய ராணுவ வீரர்கள் இருவரை பாகிஸ்தான் ராணுவம் கொன்றதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பால் பாகிஸ்தான் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆனால், பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு வந்திருந்த பாகிஸ்தான் மகளிர் அணியினர் பாதுகாப்பாக கடைசிவரை ஆடினார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி ஏலத்தில் இந்திய கேப்டன் சர்தார் சிங் அதிகபட்சமாக ரூ. 43 லட்சத்துக்கும் ரகுநாத் ரூ. 42 லட்சத்துக்கும் சந்தீப் சிங் ரூ. 35 லட்சத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘இந்திய ஹாக்கி வீரர்கள் உரிய வசதிகள் இல்லாமல் நடத்தப்பட்டது மிகவும் உறுத்தியது. இனிமேல் அவர்களுக்கு எந்தக் குறையும் இருக்காது. விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தலாம்,’ என்று பெருமிதம் கொள்கிறார் பத்ரா.

போட்டியை வென்ற ராஞ்சி அணிக்கு 2.5 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. இறுதிப் போட்டி ராஞ்சியில் நடந்தபோது கிரிக்கெட் மேட்சுக்கு நிகரான எழுச்சியை ரசிகர்களிடம் காணமுடிந்தது. இதன் வெற்றியால், இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடக்கவுள்ள சர்வதேசப் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்ய ஹீரோ நிறுவனம் முன்வருகிறது.

ஹாக்கியில் எதுவுமே சாதிக்காமல் இரண்டு தலைமுறை கடந்துவிட்டது. கடந்த இரண்டு ஒலிம்பிக்ஸில் பெரிய அவமானம் ஏற்பட்டாலும் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் கிடைத்த நான்காம் இடம், எச்.ஐ.எல்-இன் வெற்றி, வீரர்கள் - ரசிகர்களின் உற்சாகம் போன்றவை இந்திய ஹாக்கி இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளன.

ஓ பக்கங்கள் - பாலியல் குற்றத்துக்கு என்ன தண்டனை? ஞாநி


பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னைப் புத்தகத் திருவிழாவில் என் புத்தக அரங்கில் வாசகர்களிடம் தினசரி கருத்துக் கணிப்பை விடாமல் நடத்தி வருகிறேன். ஒவ்வோராண்டும் அப்போதைய முக்கிய பொது பிரச்னைகள் பற்றிக் கேள்வி கேட்பது வழக்கம். வோட்டுப் போட பலரும் ஆர்வத்துடன் வருவது இந்த வருடமும் நடந்தது. இந்த முடிவுகள் பெரும்பாலும் படித்த நடுத்தர வகுப்பினர் மனநிலையைப் பிரதிபலிப்பவை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முடிவாகப் பார்ப்போம்

கமல்ஹாசன் தம் விஸ்வரூபம் திரைப்படத்தை நேரடியாக வீடுகளில் டி.டிஹெச். மூலம் ஒளிபரப்புச் செய்ய முயற்சித்தது சினிமா துறையின் பல பகுதியினரிடமிருந்து பெரும் எதிர்ப்பைக் கிளப்பியதில் அவர் அதைக் கடைசியில் கைவிட வேண்டி வந்தது. ஆனால் அவர் அதைச் செய்திருந்தால் பெரிய வரவேற்பு இருந்திருக்கும் என்றே நமது தேர்தல் முடிவு காட்டுகிறது. அந்த முயற்சி, சினிமா தொழிலுக்கும் பார்வையாளருக்கும் பயன் தரும் முயற்சி என்று வோட்டளித்தவர்கள் - 65 %. எனவே விஸ்வரூபம்-2ம் பாகத்தை டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதைப் பற்றி கமல் சிந்திக்கலாம். அவரது டி.டி.ஹெச். முயற்சியால் யாருக்கும் பயனில்லை என்றவர்கள் - 32%. இந்தப் பிரச்னை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று ஒப்புக் கொண்டவர்கள் - 3%.


ஒவ்வொரு கட்சியும் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு விதவிதமான இலவசங்களை (புதுப்பெயர்: விலையில்லாதவை) அளிக்க முன்வருவதை, படித்த மிடில் க்ளாஸ் மக்கள் கடுமையாக விமர்சிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களில் பலபேர் தாங்களே அவற்றை விடாப்பிடியாக அலைந்து திரிந்து பெற்றுக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். எனவே இதைப்பற்றி இந்த முறை வாக்கெடுப்பு நடத்தினோம். அரசு தரும் இலவசங்கள்: டிவி, மிக்சி, கிரைண்டர், வேட்டி, சேலை, ரொக்கம் முதலியவை ஏழைகளுக்குத் தேவை: நான் வாங்கமாட்டேன் என்று வோட்டளித்தவர்கள் - 30 %. யாருக்கும் தேவையில்லை: ஆனால் கொடுப்பதால் நான் வாங்கிக் கொள்வேன் என்றவர்கள் - 8% (இவர்கள்தான் என் கண்ணில் அதிகம் படுபவர்கள் போலிருக்கிறது). இலவசங்களை மொத்தமாக நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தவர்கள் - 62%!

இலவசம் போலத்தான் ரேஷன் பொருட்களும்... ரேஷன் கடைகளை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக பொருட்களை வாங்க மான்யப் பணத்தை நேரடியாக ஏழை மக்களுக்கு ஆதார் அட்டை மூலம் தரும் அரசு முடிவால் போலி ரேஷன் அட்டைகள் ஒழிந்து அசல் ஏழைகள் பயனடைவர் என்று நினைப்பவர்கள் - 7%. பொருட்களை தனியாரிடம் வாங்குவதற்குக் கட்டாயப் படுத்துவதால் விலைகள் உயர்ந்து ஏழைகள் பாதிக்கப்படுவர் என்று 39% கருதுகின்றனர். ரொக்கப் பணம் குடும்பத்தின் உணவுக்குச் செலவாகாமல் வேறு வீண் செலவுகளுக்குப் போய்விடும் என்று நினைப்பவர்கள் 54%. இதில் நானும் ஒருவன். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு ஏழைகளின் கடும் உழைப்பில் குறிப்பாக ஏழைப் பெண்களின் வியர்வையில் வந்த பணம் வீட்டு ஆண்களின் திமிரால் போய்க் கொண்டிருப்பதை ஏற்கெனவே பார்த்து வருகிறோம்.

என்னைப் பொறுத்தமட்டில் இன்று தமிழகத்தின் தலையாய பிரச்னை மதுதான். தமிழகத்தில் அரசாங்கத்தின் மது வியாபாரம் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டோம். உடனடியாக எல்லா மதுக்கடைகளையும் மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பவர்கள் 30 சதவிகிதம் பேர்! முழுக்க ஒழிக்க முடியாது என்பதால் கடை நேரத்தைக் குறைத்து பார்களை மூடவேண்டும் என்ற சமரசத் தீர்வை ஆதரித்தோர் 60 சதவிகிதம். அந்நியவகை மதுவை ஒழித்துவிட்டு கள்ளுக் கடைகளைத் திறக்கவேண்டும் என்றவர்கள் 10 சதவிகிதம் பேர். சுமார் 90 சதவிகிதம் பேர் ஏதோ ஒருவகையில் மதுவுக்கு எதிர்ப்பாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சில்லறை வணிகத்தில் வால்மார்ட்டுகள் வந்தால் மிடில் க்ளாஸ் மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி இருக்கும். அதேசமயம் இவர்களுக்கும் தொலைநோக்கில் பாதிப்பு வரும் என்பதே என் கருத்து. இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், பார்ப்போம்.
சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு கம்பெனிகளை அனுமதிப்பது உள்ளூர் வணிகர்களைப் பாதிக்கும். ஆனால் விவசாயிகளுக்கும் பொருள் வாங்குவோருக்கும் நல்லது என்று சொன்னவர்கள், வெறும் 8%தான். உள்ளூர் வணிகர்களையும் இது பாதிக்காது; எல்லாருக்கும் நல்லது என்று நினைப்பவர்கள் 30%! உள்ளூர் வணிகர்கள், விவசாயிகள், பொருள் வாங்குவோர் எல்லாரையும் தொலைநோக்கில் நிச்சயம் பாதிக்கும் என்று கருதுவோர் 62% !! மிடில் க்ளாஸ் தன்னைப் பற்றி மட்டுமல்லாமல் எல்லோர் நலனையும் சிந்திக்கிறது, தொலைநோக்கிலும் சிந்திக்கிறது என்று இதை எடுத்துக் கொள்வோமா?

மின் பற்றாக்குறைக்கு யார் பொறுப்பு? தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறைக்கு தி.மு.க ஆட்சிதான் பொறுப்பு என்பவர்கள் - 14%. இல்லையில்லை, அ.இ.அ.தி.மு.க. ஆட்சிதான் எனக் கருதுவோர் - 9%. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இருவருமே பொறுப்பு என்று நினைப்பவர்களே மிக அதிகம் - 68%. மாநில அரசுகளின் தவறுகளுக்கு அடிப்படைக் காரணம் மத்திய அரசின் கொள்கைகள்தான் என்று சொன்னவர்கள் - 9%.

மரண தண்டனை பற்றிய விவாதம் அண்மையில் அதிகமாகவும் கூர்மையாகவும் நடக்கிறது. இங்கே நிலை என்ன? பாலியல் குற்றங்களைச் செய்வோருக்கு மரண தண்டனை தரச் சொல்லும் கோரிக்கை சரியானது என்று சரிபாதி பேர் சொல்லியிருக்கிறார்கள் - 50%. இன்னொரு 50%ல், அது தவறானது என்பவர்கள் - 17%; எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்று சொன்னவர்கள் - 33%. இந்தக் கடைசி பிரிவு கணிசமாக அதிகரித்து வருகிறது என்பது எனக்கு மகிழ்ச்சி. அதுதான் என் நிலை. ஆயுள் சிறையில் வைத்து கௌன்சிலிங் தருவதே சரி.

தில்லி சம்பவத்தை ஒட்டி மீடியாவில் நடந்த விவாதங்களில் அடிபட்ட இன்னொரு விஷயம், பலரும் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் மீதே பழி போடுவதாகும். பெண்ணின் உடை, இரவு பத்து மணிக்கு மேல் வெளியே செல்வது இதெல்லாம் பெண்ணின் தப்பு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். யாரும் ஆண் சரியாக நடந்து கொள்ளாததைப் பற்றி ஆவேசக் குரல் எழுப்புவதில்லை. எனவே இதைப் பற்றிக் கருத்து கேட்டோம். பெண்கள் மீதான பாலியல் சீண்டல், வன்முறைகளுக்குக் காரணம் பெண்ணின் தவறான உடை என்று 26% பேர் கருதுகிறார்கள் என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. வேறு என்ன காரணங்கள் முக்கியமானவை என்று கேட்டிருந்தோம். மீடியாவின் காமத் தூண்டுதல்கள் என்று 46% சொன்னார்கள். இது எனக்கும் உடன்பாடுதான். ஆணைச் சரியாக வளர்க்காத குடும்பம் என்று 28% சொன்னார்கள். உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். குடும்பத்தின் தவறுகளை ஒப்புக் கொள்ளும் மனநிலை இன்னும் மிடில் க்ளாசுக்கு போதுமான அளவுக்கு வளரவில்லை.

சாதி கடந்த காதல் திருமணங்களுக்கு எதிராக மகாபலிபுரம் விழாவில் காடுவெட்டி குருவின் பேச்சு, அடுத்து தர்மபுரியில் அதே பிரச்னையில் நடந்த தலித் குடியிருப்பு தாக்குதல் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பக்கம் கவனத்தைத் திருப்பின. புத்தகத் திருவிழா வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்? காதல் என்ற பெயரில் நாடகமாடி பிற சாதிப் பெண்களைச் சில தலித் இளைஞர்கள் ஏமாற்றிப் பணம் பறிப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறிவருவது தவறான சாதிவெறிக் கருத்து என்றவர்கள் - 30%. இல்லை, அவர் சொல்வது அசலாக நடக்கும் நிஜம்தான் என்று கருதுவோர் வெறும் 11%. பெண்ணை ஏமாற்றுவதை எல்லா சாதி இளைஞர்களும் செய்கிறார்கள் என்று அடித்துச் சொல்லியிருப்பவர்கள் - 59%. நானும் இந்த கடைசி அணியில்தான் இருக்கிறேன். காதலைப் பற்றிய தப்பான புரிதல் எல்லா சாதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கிறது. ஏமாறுவோரும் ஏமாற்றுவோரும் எல்லா சாதிகளிலும்தான் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மிக முக்கியமான அரசியல் கட்சி தி.மு.க. அதில் நடப்பவை ஏதோ ஒரு விதத்தில் எல்லோருடைய அக்கறைக்கும் உரியவை. எனவே ஸ்டாலினை அடுத்த தலைவராக கருணாநிதி முன்மொழிவேன் என்று அறிவித்தது ஒரு முக்கிய நிகழ்வு. அதைப் பற்றிக் கேட்டோம். கலைஞர் அறிவித்திருப்பது தாமதமான, ஆனால் சரியான முடிவு என்று 34% பேர் சொன்னார்கள். இல்லை அது தவறான முடிவு என்றவர்கள் வெறும் 4%தான். இதை அழகிரி அவசியம் கவனிக்க வேண்டும். கலைஞருக்குப் பின் யார் வந்தாலும் தி.மு.க.வை இனி காப்பாற்ற முடியாது என்று சொன்னவர்கள் தான் மிக அதிகம் -62%! இதை ஸ்டாலின் கவனத்தில் எடுக்க வேண்டும். குஷ்பு மீதான தாக்குதல் போன்றவை 62 சதவிகிதத்தினர் கருத்தை வலுப்படுத்தக் கூடியவை. தி.மு.க.வுடன் எனக்கு கடும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது அரசியல் கட்சியாக தன்னைத் திருத்திக் கொண்டு ஆரம்ப கால லட்சியவாதத்துக்குத் திரும்பி நேர்மையோடும் வலிமையோடும் இருந்தால் தமிழக அரசியலுக்கு நல்லது என்பது என் கருத்து. அது சாத்தியம்தானா என்பதைக் காலம்தான் சொல்லும்.

காலத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் இன்னொரு பெரும் பிரச்னை கூடங்குளம் அணு உலை. தமிழகத்தில் பலரும் அதை ஏதோ அந்தப் பகுதி மக்களின் பிரச்னை என்று குறுக்கிப் பார்க்கிறார்கள். உண்மையில் அது அனைவரின் பிரச்னையுமாகும். ஆனால் அந்தப் புரிதல் இருக்கிறதா என்று பார்க்க, கருத்துக் கணிப்பு செய்தோம். 500 நாட்களாக நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நியாயமானது என்று சொன்னவர்கள் - 72%! இது எனக்கு பெருமகிழ்வைத் தருகிறது. இல்லை அது தவறானது என்போர் வெறும் - 16%. சரியா தவறா என்று தெரியவில்லை என்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் - 12%. இவர்கள் மனத்தை மாற்றுவது முக்கியமான தேவை.

அடுத்த மக்களவைத் தேர்தலில் யாரை ஆதரிப்பீர்கள் என்பதுதான் கடைசி நாள் கேட்ட கேள்வி...

1. காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி 2. பி.ஜே.பி. அணி 3. தனித்துப் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க அணி 4. மூவரும் அல்லாத வேறு அணி; இதில் எது? இதுதான் ரிசல்ட்: 1 - 23% 2 - 20% 3 - 28% 4 - 29%!. புத்தகத் திருவிழாவுக்கு எல்லா கட்சிக் காரர்களும் ஏறத்தாழ சம பலத்தில் வருகிறார்கள் என்று தெரிகிறது!!

Thursday, February 14, 2013

அருள்வாக்கு - ஸம்ஸ்காரங்களும் ஸத்குணங்களும்


ஆத்ம குணம், ஆத்மாவை ஸம்ஸ்காரங்களால் சுத்தி பண்ணிக் கொள்வது என்றெல்லாம் சொல்கிறபோது ஆத்மா என்பது த்வைதிகள் சொல்கிற, அதாவது பரமாத்மாவுக்கு வேறாக இருக்கிறாற் போலத் தெரிகிற, ஜீவாத்மாவைத்தான். வாஸ்தவத்தில் இருப்பது ஒரே ஆத்மாதான்; ஜீவ ஆத்மா, பரம ஆத்மா என்ற பேதமே இல்லை. இந்த ஆத்மா நித்ய சுத்தமானது. ஆகையால் அதை ஸம்ஸ்காரத்தால் சுத்தி பண்ணுவது என்பதே தப்பு. அது நிர்குணமான வஸ்து. அதனால் ஆத்ம குணம் என்பதும் தப்பு. ஆனாலும் அந்த நிர்குண வஸ்து மாயையோ, கீயையோ எதையோ ஒன்றை வைத்துக் கொண்டு நம் எல்லார் மாதிரியும் ஆகி, நமக்கு ‘அதுவே தான் நாம்’ என்பது துளிக்கூடத் தெரியாமல் தானே நடைமுறையில் பண்ணி இருக்கிறது? இப்படி த்வைதமாக பேத லெவலில் இருக்கிற ஜீவனைத்தான் இங்கே ஆத்மா என்று சொல்லியிருக்கிறது. இது அழுக்குப் பிடித்ததுதான். அதனால் ஸம்ஸ்காரம் பண்ணி இதை சுத்தமாக்க வேண்டும். இது துர்க்குணம் பிடித்தது. அதனால் எட்டு ஆத்ம குணங்களை அப்பியஸித்து இதை நல்ல குணமுள்ளதாக்க வேண்டும். அப்புறம் ஸம்ஸ்காரம் முதலான காரியங்களும் போய்விடும்; குணங்களும் - உயர்ந்த ஸத்வ குணமும் கூட - போய்விடும். ஜீவாத்ம பரமாத்ம பேதமில்லாத அகண்ட ஏக ஆத்ம அனுபவம் அப்போதுதான் ஸித்திக்கும். அதை அடைவதற்காகவே இப்போது காரியமும் (ஸம்ஸ்காரமும்), குணமும் வேண்டும்.

நமக்கு லக்ஷ்யமாக உள்ள புராண புருஷர்களின் உத்தம குணங்களை நேரே அப்படியே எடுத்துக் கொண்டு அனுஸரிக்கலாம் என்றால், அதற்கு முடியாமல் ஆசாபாசங்கள், துவேஷங்கள், பயம், மனஸின் மற்ற கிருத்ரிமங்கள் எல்லாம் இடைஞ்சல் செய்கின்றன. நமக்கு நிறைய கர்மாக்களைக் கொடுத்து, அதோடு, ‘இப்படித்தான் உட்கார வேண்டும், இப்படித்தான் நிற்க வேண்டும், இப்படித்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் டிரெஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கும்படி பண்ணினால்தான் மனஸ் தடித்தனமாகக் கண்டபடி போகாமல் இருக்கிறது. தடித்தனம், அஹங்காரம் குறைய குறையத்தான் ஆசை, துவேஷம், பயம், துக்கம் முதலானவைகளை அடக்கிக் கொண்டு உத்தம குணங்களிலிருந்து நழுவாமல் இருக்க முடிகிறது. ஸம்ஸ்காரங்களும் ஸத்குணங்களும் ஒன்றோடொன்று சேர்ந்து வருகின்றன.

ஐடியலாக இருக்கிற புராண புருஷர்களின் குணங்களை - கதையாகக் கேட்டு, நாமும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட குணங்களை - நாம் யதார்த்தத்தில் பெறுவதற்கு ஸம்ஸ்காரங்கள் ஸஹாயம் செய்கின்றன.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Wednesday, February 13, 2013

எனது இந்தியா (பார்ஸி இன வரலாறு!) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்திய மதங்களில் ஜொ​ராஷ்ட்​ரியம் தனித்து​வமிக்கது. இது, ஈரானில் தோன்றிய மதம் என்​றாலும் இந்தியாவில் காலூன்றி நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கிறது. இந்த மதம் நூற்றாண்டுகளாக மதச் சண்டைகள் எதிலும் ஈடுபடாமல், துவேஷம் காட்டாமல், சமா​தானமும் வளர்ச்சியும் மட்டுமே குறிக்​​கோளாகக்கொண்டு செயல்​படுகிறது. பார்ஸிகள் இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்தியாவில் மத சுதந்திரம் எந்த அளவு போற்றப்படுகிறது என்பதற்கு, ஜொராஷ்ட்ரியத்தின் வளர்ச்சிக்கு அது அளித்திருக்கும் இடமே சாட்சி. பார்ஸி இனம் இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் வரலாற்றுக்கும் குறிப்பிடத்தக்கப் பங்​களிப்புகளை செய்து இருக் கிறது.

''இந்தியாவில் பார்ஸிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அறப் பணி மற்றும் மனித நேயப் பண்புகளில் சிறந்து விளங்குகின்றனர்'' என்று மகாத்மா காந்தி பாராட்டி இருக்கிறார். பார்ஸி இன மக்களின் உழைப்பு, பம்பாய் நகரின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது. தாதாபாய் நௌரோஜி மற்றும் பிகாஜி காமா போன்றோர், இந்திய சுதந்திர இயக்கத்தில் இருந்த முக்கியமான பார்ஸியர்கள்.

இயற்பியல் வல்லுனர் ஹோமி பாபா, பாடகர் ஃப்ரெட்டி மெர்குரி, இசை இயக்குநர் ஜுபின் மேத்தா, இந்திய ராணுவத்தின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்‌ஷா, தொழில் அதிபர்கள் டாட்டா, கோத்ரெஜ் மற்றும் வாடியா ஆகியோர் பார்ஸிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். உலகின் பழைமையான இனங்களில் ஒன்று பார்ஸி. இவர்களின் பூர்வீகம் அன்றைய பாரசீகம் எனப்படும் இன்றுள்ள ஈரான், ஈராக் பகுதிகள். ஜொராஷ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களை ஜொராஷ்​டிரர்கள் என்றும் அழைக்​கின்றனர்.


சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன், ஈரானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பார்ஸிகள் புலம் பெயர்ந்தனர்.

ஜொராஸ்ட்ரிய மதம் ஜொராஸ்டார் என்ற ஞானியால் தோற்றுவிக்​கப்பட்டது. ஜொராஸ்டார் இன்றைய வடக்கு ஈரானில் பிறந்தவர் என்கின்றனர். இவரது இளமைப்பருவம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், தனது 40-வது வயதில் வட கிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்​பவரைச் சந்தித்து, தனது மதக்​கோட்பாடுகளை அவருக்கு விளக்கி மன்னரை தனது சமயத்துக்கு மாற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறார். அதன் காரணமாக, ஜொராஷ்ட்ரிய மதம் நாட்டின் மதமாக வளர்ந்து இருக்கிறது.

''இந்த உலகில் ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். அவரது பெயர் அஹூரா மாஜ்டா'' என்கிறார் ஜொராஸ்டார். அதன்பொருள் மெய் அறிவுகொண்ட கடவுள் என்பதாகும். கடவுளைப் போலவே இந்த உலகில் தீமையும் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதன் வடிவம் அங்ரா மைன்யு. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே நமது வாழ்க்கை. அதற்கான போராட்டக் களம்தான் இந்த பூமி. இதில் நன்மை எது? தீமை எது? என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியவன் மனிதனே. நன்மைதான் எப்போதும் வெல்லும் என்பதை மனிதன் உணர வேண்டும் என்பதையே ஜொராஷ்ட்ரியம் விளக்குகிறது. இந்த மதத்தின் புனித நூல் அவஸ்தா என்று அழைக்கப்படுகிறது.

ஜொராஷ்ட்ரிய மதம், பாரசீகம் முழுவதும் பரவுவதற்கு மகா சைரஸ் என்ற மன்னன் காரணமாக இருந்தான். அவனே பாரசீகத்தோடு ஈரானை இணைத்துக்கொண்டவன். அதன் காரணமாக, அடுத்த 200 ஆண்டுகளில் பாரசீக மன்னர்கள் ஜொராஷ்ட்ரிய மதத்தைத் தழுவினர். கி.பி.226-ல் சாஸ்சானிட் அரசர்களின் காலத்தில் அரச சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாரசீகத்தை, முஸ்லிம்கள் ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகு, இந்த மதத்துக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பலர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இரானில் இருந்து தப்பிய ஜொராஷ்ட்ரியர்கள் ஹார்மொஸ் என்ற தீவில் தஞ்சம் புகுந்தனர். பிறகு, அவர்களின் சந்ததிகள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையான குஜராத்தை வந்தடைந்தனர்.


அப்போது, குஜராத்தை ஆட்சி செய்த ஜாதவ் ரானா என்ற மன்னர், அவர்களுக்குத் தனது தேசத்தில் புகலிடம் அளிக்க விரும்பவில்லை. இதுகுறித்து, பெர்சியப் பழங்கதை ஒன்று விவரிக்கிறது. ஈரானில் இருந்து அகதிகளாக வெளியேறி குஜராத்தை அடைந்த ஜொராஷ்ட்ரியர்கள், தஞ்சம் கேட்டு மன்னர் ஜாதவ் ரானாவுக்குத் தகவல் அனுப்பினர். அவர் ஒரு குவளையில் பாலைக் கொடுத்து அனுப்பி, இங்கு மக்கள் தொகை அதிகம் என்பதால் இங்கே இடம் இல்லை என்ற தகவலையும் அனுப்பினார். ஜொராஷ்ட்ரிய தலைவர், தனது பையில் இருந்து கொஞ்சம் சர்க்கரையை எடுத்து அதே பாலில் போட்டு மன்னருக்கே அதை அனுப்பிவைத்தார். பாலில் சர்க்கரை சேர்வதற்கு நிச்சயம் இடம் இருக்கத்தானே செய்யும்!

அந்த செய்கையும் புகலிடம் கேட்பதில் அவர்களுக்கு இருந்த புத்திசாலித்தனத்தையும் புரிந்துகொண்ட மன்னர் ரானா, குஜராத்தில் அவர்கள் தங்கிக் கொள்ள அனுமதி வழங்கினார். அன்று முதல் இன்று வரை பார்ஸிகள் இந்தியச் சமூகம் எனும் பாலில் கலந்த சர்க்கரையாக வாழ்ந்துவருகின்றனர் என்கிறார் பார்ஸி இனத் தலைவர் நவ்ரோஜி. பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிடுவதற்காகவே, இவர்களை பார்ஸிகள் என்று அழைக்கின்றனர். புகலிடம் பெற்ற பார்சிகள் விவசாயிகளாகவும், நெசவாளிகளாகவும், தச்சுவேலை செய்பவர்களாகவும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.

பார்ஸிகள் நெருப்பை வணங்கக் கூடியவர்கள். நெருப்பே ஆதி தெய்வம் என்ற நம்பிக்கை​கொண்டவர்கள். அவர்கள் எங்கே சென்றாலும் நெருப்பை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட நெருப்புக்காக அவர்கள் குஜராத்தில் ஒரு கோயில் கட்டினர். அந்தக் கோயிலில் உள்ள நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. இன்று, உலகின் எந்த நாடுகளில் பார்ஸிகள் வசித்தாலும் ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட நெருப்பின் ஒரு சுடரை தங்களுடன் எடுத்துச் சென்று அதையே வழிபடுகின்றனர். சென்னையிலும்கூட அக்னி கோயில் எனப்படும் பார்ஸிகளின் நெருப்புக் கோயில் ராயபுரத்தில் இருக்கிறது. இந்த அக்னி கோயிலின் நூற்றாண்டு விழா, கடந்த மாதம் நடந்தது. 1795-ம் ஆண்டில் பார்ஸி இனத்தவர் சென்னையில் காலடி வைத்தனர். சென்னையில் இன்று 300 பார்ஸி குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன.

சென்னையில் நெருப்புக் கோயில் உருவாக்கப்​பட்டதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. அதாவது, சென்னையில் வாழ்ந்த பார்ஸியான பிரோஜ் கிளப்வாலா என்பவர் தனது மகன் இறந்தபோது சடங்கு செய்வதற்காக அக்னி கோயில் இல்லையே என வருந்தினர். தனது சொந்தப் பணத்தில் ஓர் இடத்தை வாங்கி அதில் நெருப்புக் கோயில் கட்டி, அதை பார்ஸி இன மக்களுக்கு அர்ப்பணம் செய்து இருக்கிறார். இந்த அக்னி கோயிலில் 100 ஆண்டுகளாக நெருப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே நெருப்புக் கோயில் இதுமட்டும்தான்!

பார்ஸிகள் தொழில் செய்வதில் கெட்டிக்காரர்கள். ருஸ்தம் மெனேக் என்ற பார்ஸிக்காரர், கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் புரோக்கராகப் பணியாற்றியவர். இவரைப்போலவே, போர்த்துக்கீசியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் வணிகப் பரிமாற்றம் ஏற்படுவதற்கு பார்ஸிகள் உதவி செய்து இருக்கின்றனர்.

1661-களில் பம்பாய் நகரை வணிகத் தலைநகரமாக மாற்ற நினைத்த பிரிட்டிஷ் அங்கே வந்து குடியேறுபவர்களுக்கு நிறைய சலுகைகளை அறிவித்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு ஏராளமான பார்ஸிகள் பம்பாயில் குடியேறினர். அதன் காரணமாகவே இன்றும் பம்பாயின் பங்கு வர்த்தகம் பார்ஸிகளின் கையில் இருக்கிறது.

பம்பாயில் உள்ள தாஜ் ஹோட்டல் கட்டப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், ஓர் அரிய தகவலைக் கூறி இருக்கிறார். ஆங்கிலேயர் கொலாபா கடற்கரையில் நில மீட்பு செய்துகொண்டு இருந்தபோது, 1898-ல் நவம்பர் 1-ம் தேதி இரண்டரை ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு காலக் குத்தகைக்கு வாங்கினார் பம்பாயின் பார்ஸி இனத்துப் புகழ்பெற்ற ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடா எனும் தொழிலதிபர். அங்கு, அன்று அப்பலோ ஹோட்டல் என ஒன்று இருந்ததாகவும், ஜரோப்பியர் அல்லாத அவரை ஹோட்டல் நிர்வாகம் அவமதித்து வெளியேற்றிய காரணத்தால், இந்த தாஜ் ஹோட்டலைக் கட்டினார் என்றும் கூறுகிறார்கள். அப்பலோ ஹோட்டல் வரலாற்றில் மாய்ந்து போய்விட்டது. இன்றும், ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடாவுக்கு மும்பை ஃபோர்ட் பகுதியில் அற்புதமான சிலை ஒன்று உண்டு. கேட்வே ஆஃப் இந்தியாவுக்கும் மூத்தது தாஜ் ஹோட்டல். 1903-ல் நவம்பர் 16-ம் தேதி இது திறக்கப்பட்டது. சரியாக 105 ஆண்டுகள் ஆகின்றன. முதல் உலகப் போரின்போது, இந்த ஹோட்டல் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டு, சேவை செய்து இருக்கிறது.

பார்ஸிகள் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் போட்டியிட்டு பருத்தி வணிகம் செய்தனர். 1854-ல் இந்தியாவின் முதல் காட்டன் மில்லான பாம்பே ஸ்பின்னிங் மில்லை ஆரம்பித்தவர் காஸ்வாஜி நானாபாய் தாவர் என்ற பார்ஸிக்காரர். இங்கிலாந்துக்குப் போட்டியாக இந்தியாவில் நூற்பு ஆலைகளை ஏற்படுத்தி, பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கிக் காட்டியவர்கள் பார்ஸிகளே. இதன் காரணமாக, பம்பாய் நகரில் பாதி பார்ஸிகளின் சொத்துக்களாக மாறின. பிரிட்டிஷ் கம்பெனிக்குக் கடன் கொடுக்கவும், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு வாடகைக்கு வீடுகளைக் கொடுக்கும் அளவுக்கும் பார்ஸிகள் பொருளாதார நிலையில் உயர்ந்தனர். 'பாம்பே சமாச்சார்’ என்ற பத்திரிகையை தொடங்கி வெற்றிகரமாக நடத்தியதும் பார்ஸிகள்தான். 1736-ம் ஆண்டு சூரத் நகரில் உள்ள கப்பல் கட்டும் துறையில் நுசர்வான்ஜி வாடியா என்பவர் சிறந்து விளங்கினார். இவரது திறமையை மெச்சிய பிரிட்டிஷ் அவரை பம்பாய்க்கு வரவழைத்து, தங்களுக்குத் தேவையான கப்பல் கட்டுமானப் பணிகளை அவர் பொறுப்பில் ஒப்படைத்தது. 40 ரூபாய் சம்பளத்துக்கு சேர்ந்த அவர், 50 ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக கப்பல் கட்டும் பணியைச் செய்து இருக்கிறார்.

அவரோடு, மும்பை வந்த தொழிலாளர் குடும்பங்கள் துறைமுகப் பகுதியை ஒட்டியே குடியிருந்தனர். வாடியாவின் நன்மதிப்பு காரணமாக கப்பல் கட்டும் தொழில் மற்றும் துறைமுக வேலைகளில் பார்ஸிகள் ஈடுபடத் தொடங்கினர். அவர்களில் பலர் இன்று மிகப் பெரிய கோடீஸ்வரர்கள். அவரைப் போலவே, ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாய் என்பவர் குஜராத்தில் ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்து, பதின்வயதிலே கூலியாக வேலைக்குச் சென்றவர். பிறகு, காலி பாட்டில்களை வாங்கி விற்கும் தொழில் செய்தார். ஓர் ஆங்கிலேய வணிகரின் நட்பு கிடைத்த காரணத்தால், கப்பலில் சீனாவுக்குச் சென்று வணிகம் செய்யத் தொடங்கினார்.

Tuesday, February 12, 2013

ஓ பக்கங்கள் - இன்னும் 15 நாட்கள்! ஞாநி


மத்திய அமைச்சர் நாராயணசாமியின் கணக்கில் காலம் என்பது, வருடக் கணக்கில் யுகக் கணக்கில் இருப்பதே அல்ல. அதன் லிமிட் 15 நாட்கள்தான். ஒவ்வொரு முறை கூடங்குளம் அணுஉலை பற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டாலும், இன்னும் 15 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்று அலுக்காமல் பல 15 நாட்களாகச் சொல்லி வருபவர் அவர். 

அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினால்தான் கூடங்குளம் அணுஉலை இயங்கமுடியாமல் தாமதமாகிறது என்று யாரும் சொல்லமுடியாது. மத்திய அரசும் மாநில அரசும் அடுத்தடுத்து அமைத்த குழுக்கள் அறிக்கை கொடுத்த பின்னர் போராட்டக்காரர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அணுஉலை பணிகள் நடப்பதைப் போராட்டக்காரர்கள் தடுக்கவும் இல்லை. 

ஆனால் இதுவரை உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜ் ஆகியோர் மீது 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெயர் பதிவு செய்யப்பட்ட 5296 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றில் இதுவரை நடந்தே இராத சிறப்பாக, பெயர்களே பதிவு செய்யப்படாமல், 2,21,483 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தப் போராட்டத்திலும் இத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த மார்ச் 18ம் தேதியன்று காவல் படைகளைக் குவித்து இடிந்தகரை கிராமத்தை அரசு முற்றுகையிட்டபோது அணுஉலை வளாகத்தில் ஆயத்தப் பணிகள் எந்தத் தடையும் இன்றி விரைவாக நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டது. மே மாதத்தில் மின் உற்பத்தி ஆரம்பித்துவிடும் என்று சொன்னார் நாராயணசாமி. அதன்பின் ஒவ்வொரு 15 நாட்களிலும் அவர் சொன்ன அறிவிப்புகளின்படி, ஜூலையில், ஆகஸ்டில், செப்டெம்பரில், அக்டோபரில், நவம்பரில், டிசம்பரில், ஜனவரியில் மின்உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். இப்போது போராடும் மக்கள் மீது அரசு முற்றுகையிட்டே ஒரு வருடமாகப் போகிறது. ஆனால் அணு உலை இயங்க ஆரம்பிக்கவில்லை. 

ஏன்?

தொழில்நுட்பப் பிரச்னைதான் காரணம் என்று அரசும் அணுசக்தித் துறையுமே இப்போது அதிகார பூர்வமாக ஒப்புக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. இந்த அணுஉலை பாதுகாப்பானதல்ல என்று ஆரம்பத்திலிருந்து போராட்டக்காரர்கள் சொல்லி வரும் கருத்துக்கு வலு சேர்ப்பதாகவே இப்போது அரசு தரப்புச் செய்திகளே அமைந்திருப்பதை, சூழல் ஆர்வலர் நித்யானந்தன் ஜெயராமன் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

கூடங்குளம் முதல் அணு உலையில் முழு உலை தொடர்பான எல்லா பரிசோதனைகளையும் திரும்பச் செய்து பார்ப்பதற்கான அனுமதியை அணுசக்திக் கண்காணிப்பு வாரியம் வழங்கியுள்ளதாக ஜனவரி 25 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புத்தம் புது அணு உலையில், பரிசோதனை ஓட்டத்தை ஒருமுறை செய்தால் போதுமானதுதானே? ஏன் இரண்டாம் முறை செய்ய வேண்டும்? முதல் சோதனையில் சிக்கல்கள், தோல்விகள் வந்தால்தானே அடுத்தது தேவைப்படும்?

அந்தத் தோல்வி என்ன? சில வால்வுகள் சரியாக இயங்கவில்லை என்று அதிகாரபூர்வமாகவே சொல்லப்பட்டது. அணுசக்தித் துறை தலைவர் ஆர்.கே.சின்ஹாவின் அறிக்கைப்படி குறிப்பிட்ட வால்வுகளில் இருக்கும் ஓட்டம், அழுத்தம், வெப்பநிலை என்று பல அம்சங்களின் தரம் சோதிக்கப்பட வேண்டியிருக்கிறது. அதாவது முதல் சோதனையில் இவை எதுவும் தேறவில்லை என்று அர்த்தம்.

கடந்த டிசம்பரில் நடந்த சோதனையில் சில வால்வுகள் சரியாக இயங்காததால், அவை மாற்றப்பட்டன. பழுதுபார்க்கப்பட்டன. புத்தம்புது வால்வுகள் ஏன் பழுதாக இருக்கின்றன என்பதும் அவற்றை ஏன் பழுது பார்க்க வேண்டும் என்பதும் அணுசக்தித் துறை பதில் சொல்லாத கேள்விகள். இந்த மாடல் வால்வுகள் உலகிலேயே முதன்முறையாக இப்போது தான் அணு உலையில் பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் அவை பாதுகாப்பானவை என்று முன்கூட்டியே சர்டிஃபிகேட் கொடுக்க அப்துல்கலாம் முதல் நாராயணசாமி வரை தயாராக இருக்கிறார்கள்!

கூடங்குளம் அணு உலைக்கு இயந்திரங்களை, பாகங்களை சப்ளை செய்யும் ரஷ்ய கம்பெனி மீது நிறைய ஊழல் புகார்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் உள்ளன. ரோசாட்டம் என்ற இந்த ரஷ்ய அரசு கம்பெனியின் ஊழல் முறைகேடுகள் பற்றி ஏற்கெனவே ஓ பக்கங்களில் எழுதியிருக்கிறேன் (கல்கி 15.1.2012). 2010ல் மட்டும் ரோசாட்டம் நிறுவனத்தின் கீழுள்ள 35 அதிகாரிகள் ஊழலுக்காக நீக்கப்பட்டார்கள். 2011ல் ரோசாட்டமின் கீழ் இருக்கும் வெவ்வேறு துறைகளின் தலைவர்கள் பன்னிரண்டு பேர் ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள். 

கடந்த பிப்ரவரியில் ரோசாட்ட மின்துணை கம்பெனியான சியோ பொடால்ஸ்க்கின் பொருள் கொள்முதல் இயக்குனர் செர்ஜி ஷுடோவ் என்பவரை ரஷ்ய அரசு கைது செய்துள்ளது. உலகம் முழுக்க இருக்கும் ரஷ்ய அணு உலைகளுக்குப் பாகங்களை சப்ளை செய்யும் கம்பெனி இது. பல்கேரியா, இரான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் ரஷ்ய அணு உலைகளுக்கான பாகங்களைத் தயாரிக்கும்போது தரம் குறைந்த உக்ரேனிய எஃகைப் பயன்படுத்தியதாக ஷுடோவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலைக்கு என்னென்ன பாகங்களை ஷுடோவின் கம்பெனி வழங்கியிருக்கிறது என்ற விவரங்களை வெளியிட இந்திய - ரஷ்ய அரசுகள் முன்வரவேண்டும். இதற்காகத்தான் வால்வு சிக்கல் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடும்படி உதயகுமார் கோருகிறார். அதற்கு நாராயணசாமி யார்யாரோ கேட்பதற்காக அறிக்கை வெளியிடமுடியாது என்கிறார். உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் கேட்பார் போலிருக்கிறது.

கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு, தரம் பற்றி இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் நித்யானந்தன் ஜெயராமன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜூலை 2011லேயே அணுசக்தித் துறை வட்டாரங்களை ஆதாரம் காட்டி பி.டி.ஐ. வெளியிட்ட ஒரு கட்டுரையில், கூடங்குளம் உலையின் கபாலத்திலேயே சிக்கல் இருப்பது தெரியவந்திருக்கிறது. 

உலையின் கபாலம் என்பது வட்ட வடிவில் உச்சியில் தெரியும் அமைப்பாகும். கதிரியக்கம் கசியாமல் இருக்க டபிள் கன்ட்டெனர் என்ற முறையில் இரட்டை அடுக்காக கான்க்ரீட்டில் இது கட்டப்படுகிறது. இதைக் கட்டும்போதே உள்ளே செல்ல வேண்டிய கேபிள் கம்பிகள் எல்லாம் பொருத்தப்பட்டு விட வேண்டும். நம் வீட்டில் சுவர் கட்டும்போதே மின் கம்பிகள் உட்புறம் செல்ல வழி அமைத்துக் கட்டுகிறோம் அல்லவா, அதைப் போல..! கட்டிய சுவரை இடித்து மின்கம்பி பதித்து திரும்பப் பூசுவது சுவரை பலவீனப்படுத்தும்.

ஆனால் கூடங்குளம் அணு உலையின் கபாலத்தில் உட்செல்ல வேண்டிய பல கிலோமீட்டர் நீளம் உள்ள கேபிள்கள் கட்டும்போது வந்து சேரவே இல்லை. கட்டுமான வேலைக்கு வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக எந்தெந்தப் பொருட்கள் வரவேண்டுமென்ற வரிசைக்கிரமம் உள்ளது. அதில் இந்த கேபிள்கள் மிஸ் ஆகிவிட்டன!

எனவே கட்டிய கபாலத்தில் திரும்ப ஓட்டை போட்டு கேபிள்களைச் செலுத்தித் திரும்பப் பூசியிருக்கிறார்கள். இந்தக் கபாலத்தை பைக் ஓட்டுபவரின் ஹெல்மெட்டுக்கு ஒப்பிடலாம். ஹெல்மெட் ஒற்றை வார்ப்பாக இருக்க வேண்டும். அதில் நடுவே வெட்டி பீஸ் போட்டு ஒட்டினால், ஹெல்மெட் பாதுகாப்பாக இருக்க முடியாது. உலகில் அணுஉலை வரலாற்றிலேயே இப்படி உலையின் கபாலத்தை ஓட்டை போட்டுப் பூசிய நிகழ்வு எங்கேயும் நடந்த செய்தியே இல்லை. 

எனவே கூடங்குளம் அணு உலை கட்டுமானம் தொடர்பான எல்லா தகவல்களையும் அரசு வெளியிட வேண்டும். அணு உலையே வேண்டாம் என்று சொல்பவர்களை விட, அணு உலை வேண்டும் என்று வாதாடுபவர்கள்தான் இப்போது இந்தப் பிரச்னைகளில் குரல் எழுப்பவேண்டும். 

உலை பாதுகாப்பானது என்று அடித்துப் பேசிய அப்துல்கலாம், இப்போது வால்வ் பிரச்னை பற்றியும் கபாலமோட்சம் பற்றியும் தயவுசெய்து வாய் திறக்க வேண்டும்.

நாடக முன்தணிக்கை ஒழிந்தது!

விஸ்வரூப இரைச்சலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்பு ஊடக, பத்திரிகை கவனத்தை அதிகம் பெறாமல் போய்விட்டது. தமிழ்நாடு நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை எதிர்த்து நான் போட்ட வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. என் சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் யசோத் வரதன், சுனில் குமார் ஆகியோர் வாதிட்டனர். அரசியல் சட்டம் தொடர்பான வழக்கு என்பதால் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலையே ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தம் தீர்ப்பில் இந்தச் சட்டத்தின் பல ஷரத்துகள் அரசியல் சட்டத்தில், சட்டம் முன்னர் அனைவரும் சமம் என்று கூறும் 14ம் பிரிவு, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் 19ம் பிரிவு ஆகியவற்றுக்கு விரோதமானவை என்று கூறி அந்த ஷரத்துகள் செல்லாதவை என்று அறிவித்திருக்கிறார். 

ஏன் இந்த 60 வருடச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தேன் என்பதை விரிவாக ஏற்கெனவே ஓ பக்கங்களில் (கல்கி 29.4.2012) எழுதியிருக்கிறேன். இப்போது வந்துள்ள தீர்ப்பின்படி இனி யாரும் முன்கூட்டியே அனுமதி கோரி சென்னையில் காவல் துறை ஆணையரிடமோ, மாவட்டங்களில் ஆட்சி யரிடமோ நாடகப் பிரதியை அளித்து விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அரங்கிலோ, வெளியிலோ நாடகம் நடத்த நாடகப் பிரதியை முன் அனுமதி கோரி தர வேண்டியதில்லை.

தீர்ப்புச் செய்தி சில இதழ்களில் வெளியானதும், எனக்கு வந்த நன்றி/பாராட்டு தொலைபேசி அழைப்புகளில் பெரும்பாலானவை பல்வேறு சிற்றூர்களிலிருந்தே ஆகும். அங்கே நாடகம் நடத்தும் குழுக்கள் சென்னையில் இருக்கும் நாடகக் குழுக்கள் சந்திப்பதை விட, அதிகமான அலைச்சலையும் தொல்லையையும், ஊழலையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். எதிர்ப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த நாடகக் காரர்களான மறைந்த எம்.ஆர்.ராதாவுக்கும் கோமல் சுவாமிநாதனுக்கும் இந்தத் தீர்ப்பை காணிக்கையாக்குகிறேன்.

பூச்செண்டும் திட்டும்!

தில்லி பஸ்சில் நடந்த பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் பெயரையும் படத்தையும் இதுவரை இந்தியாவில் செய்தித்தாள்களும் ஊடகங்களும் வெளியிடாமல் இருந்து வருவது நம் பூச்செண்டுக்குரியது. பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோர் பெயரை, விவரங்களை வெளியிடக் கூடாது என்ற நெறிமுறை இப்போதுதான் முதல்முறையாக முழுமையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால் தில்லி நிகழ்வுக்குப் பின்னர் நடந்த பல நிகழ்வுகளில் இந்த நெறி பின்பற்றப்படவில்லை. பாலியல் கொடுமைக்குள்ளான இரண்டு வயதுக் குழந்தையின் படத்தையே மாலைமலர் ஏடு வெளியிட்டிருக்கிறது. இன்னும் பல ஏடுகள் இந்தத் தவறைச் செய்கின்றன. அவர்களுக்கெல்லாம் இந்த வாரத் திட்டு.

விஸ்வரூப கேள்விகள்!

கேள்வி 1: தணிக்கை வாரியத்தின் மீது நீதிமன்றத்திலேயே ஊழல் புகார் சொன்ன தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆதாரம் காட்டவேண்டும் அல்லது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரியிருப்பதற்கு பதில் சொல்லாமல் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்?
கேள்வி 2: படத்தில் ஏழு வெட்டுகள் இருந்தால் படம் தங்களுக்கு எதிரானதல்ல என்று திருப்தி அடையும் தமிழக முஸ்லிம் தலைவர்களுக்கும், எந்த வெட்டும் இல்லாமலே படத்தைப் பார்க்கத் தயாராக இருக்கும் இதர மாநில முஸ்லிம்களுக்கும் இருக்கும் ஏழு வித்தியாசங்கள் என்ன?

Monday, February 11, 2013

அருள்வாக்கு - ஆத்மாஇந்த லோக வாழ்க்கையில் ஸந்தோஷம், துக்கம் இரண்டும் கலந்து கலந்து வருகின்றன. சிலருக்கு ஸந்தோஷம் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு துக்கம் அதிகமாக இருக்கிறது. மனஸைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, எத்தனை துக்கத்திலும் சிரித்துக் கொண்டு ஸந்தோஷமாயிருப்பவர்கள் எங்கேயாவது அபூர்வமாக இருக்கிறார்கள். ஸந்தோஷப்பட எத்தனையோ இருந்தும் திருப்தியில்லாமல் அழுபவர்களோ நிறைய இருக்கிறோம். குறையிருக்கிறது என்றால் துக்கம் என்றுதான் அர்த்தம்.

எப்போதும் ஸந்தோஷமா இருக்க வேண்டும் என்பதுதான் அத்தனை ஜீவராசிகளும் விரும்புவது. எப்போதும் ஸந்தோஷமாயிருக்கிற இடங்கள் இரண்டு உண்டு. தேவலோகம் அல்லது ஸ்வர்க்கம் என்பது ஒன்று. இன்னொன்று ஆத்ம ஞானம். ஆத்மா ஸந்தோஷமே வடிவானது. ஆனந்தமே பிரம்மம் என்று உபநிஷத் சொல்கிறது. அந்த பிரம்மம்தான் ஆத்மா. இப்படித் தெரிந்து கொண்டு விட்டால் சாச்வத ஸந்தோஷந்தான். ஆனால், இது இந்திரியங்களாலும் மனஸாலும் அநுபவிக்கிற ஸந்தோஷம் அல்ல. இந்திரியம், மனஸ் எல்லாவற்றையும் கடந்து, ‘சரீரம் நானில்லை, புத்தி நானில்லை, சித்தம் நானில்லை’ என்று பண்ணிக்கொண்ட உச்சாணி நிலை அது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Sunday, February 10, 2013

எனது இந்தியா ஆசாத் இந்தியா ரேடியோ !) - எஸ். ராமகிருஷ்ணன.....

இதைஅடுத்து, பம்பாயில் 'ஹாம் ரேடியோ’ நடத்தி அனுபவம் பெற்றிருந்த பிரின்டரின் உதவியை நாடினார் உஷா. பிரின்டர் அரசியல் ஈடுபாடு அற்றவர். ஆனாலும், தனது கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதால், உஷாவுக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டார். அதன்படி, மும்பையில் உள்ள சிகாகோ அண்ட் கோ-வில் இருந்து ஹெச்.எஃப். டிரான்ஸ்மீட்டர், மைக்ரோஃபோன் ஆகிய கருவிகளை வாங்கி, ஒரு ரேடியோ ஒலிபரப்பு அமைப்பை உருவாக்கினார். பம்பாயில் உள்ள சௌபாத்தி பகுதியின் உயரமான கட்டடம் ஒன்றில் ரகசியமாக ஒளித்துவைக்கப்பட்ட இந்த ஒலிபரப்புக் கருவிகளைக்கொண்டு, 1942-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி  காங்கிரஸ் ரேடியோ தனது ஒலிபரப்பைத் தொடங்கியது. இது, 42.34 அலைவரிசையில் ஒலிபரப்பாகும் ரேடியோ. இந்தியாவில், பெயர் குறிப்பிடப்படாத ஓர் இடத்தில் இருந்து ஒலிபரப்பு செய்யப்படுகிறது என்று உஷா மேத்தாவின் குரல் இந்த உலகுக்கு சுதந்திர ரேடியோ ஒலிபரப்பை அறிமுகம் செய்தது.

ரேடியோ ஒலிபரப்புக்காக தேசத் தலைவர்​களின் சொற்பொழிவுகள், தகவல்கள் மற்றும் பாடல்கள் ரகசியமாகப் பல இடங்களில் பதிவுசெய்து கொண்டு வரப்​பட்டு ஒலிபரப்பு செய்யப்​பட்டன. தினமும் காலை 8.30 மணிக்கும் இரவு 8.45 மணிக்கும் இந்த ரேடியோ செய்திகளை வழங்கியது. தேசமெங்கும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் எவ்வாறு தீவிரமாகப் பரவி வருகிறது என்பதை இந்த ரேடியோ தெளிவாக உலகுக்கு எடுத்துச் சொல்லியது.


இதனால், ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ் காவல் துறை இதை முடக்கத் திட்டமிட்டது. இந்த ரேடியோ எங்கே இருந்து ஒலிரப்பாகிறது என்பதைக் கண்டுபிடிக்க உளவாளிகள் நியமிக்கப்பட்டனர். அந்த உளவாளிகளின் கண்ணில் படாமல் தினமும் ஒரு இடத்தில் இருந்து மாறிமாறி ரேடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்படியும் காவல் துறை அவர்களைப் பின்தொடர்ந்து வரவே, கோயில் ஒன்றின் உள்ளே இருந்த மடப்பள்ளியில் இருந்தும், மடாலயம் ஒன்றில் இருந்தும் ரேடியோவை இயக்கினர். காங்கிரஸ் ரேடியோவுக்கு பொதுமக்களிடம் பலத்த வரவேற்பு ஏற்பட்டது. காந்தியின் சிந்தனைகள், நேருவின் சொற்பொழிவுகள், அடக்குமுறையை எதிர்கொள்ளும் விதம் என்று, இந்த ரேடியோ மக்களிடம் மிகுந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தின. இதனால், பிரிட்டிஷ் அரசு கடும்கோபம் அடைந்தது.

1942-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, காங்கிரஸ் ரேடியோ பற்றி கண்காணிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. போலீஸ் ஸ்டெனோகிராபர்கள் ரேடியோவில் ஒலிபரப்பாகும் செய்திகளை வரிவிடாமல் எழுதி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பினர். ஒரு பிரிட்டிஷ் உளவாளி, பிரின்டரை பின்தொடர்ந்து சென்று அவரது செயல்பாடுகளைக் கண்காணித்தார். அவர்தான் காங்கிரஸ் ரேடியோவை உருவாக்குவதில் முன்நின்றவர் என்பதை உறுதிசெய்தவுடன் பிரின்டரைக் கைதுசெய்து, தலைகீழாகத் தொங்கவிட்டு சித்ரவதை செய்தனர். உடலில் துணி இல்லாமல் ஐஸ் கட்டியில் படுக்கவைக்கப்பட்டார். வலி தாங்க முடியாமல் கதறிய பிரின்டர், ரேடியோவை இயக்குபவர்களைக் காட்டிக்கொடுக்க சம்மதித்தார். பிரின்டர் கொடுத்த தகவல்களைக்கொண்டு உஷா மேத்தா மற்றும் அவரோடு சேர்ந்து இயங்கிய அச்சு​தராவ் பட்வர்தன், புருஷோத்தம் தாஸ் போன்​றோர் கண்காணிக்கப்பட்டனர். சரியான நேரத்தில், அவர்களை வளைக்க பிரிட்டிஷ் போலீஸ் காத்திருந்தது. பம்பாயில் உள்ள ரத்தன் மகால், அஜித் வில்லா, லாப்பேர்னம் ரோடு, லட்சுமி பவன், பருக்வாடி கட்டடம், கிர்காம் ரோடு, மகாலட்சுமி கோயில், பாரடைஸ் பங்களா என்று காங்கிரஸ் ரேடியோ தினம் ஒரு இடமாக மாறிக்கொண்டே இருந்தது.

பிரிட்டிஷ் உளவுத் துறை பின்தொடர்வதை அறிந்த உஷா மேத்தா, ஒருவேளை தான் கைது செய்யப்பட்டால், தனக்குப் பிறகு இந்தப் பொறுப்பை ராம் மனோகர் லோகியா மற்றும் விதால்தாஸ் மாதவ்ஜி காகர் ஆகியோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ரேடியோ எங்கிருந்து செயல்படுகிறது என்பதைக் குறித்த பிரின்டரின் நம்பகமான தகவலை பெற்றுக் கொண்ட பிரிட்டிஷ் போலீஸ், உஷா மேத்தா மற்றும் அவரது கூட்டாளிகளை சுற்றிவளைத்து கைது செய்தது. உஷா மேத்தா அதற்கு எல்லாம் பயப்படவில்லை. ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் சகல அவமரியாதைகளையும், தண்டனைகளையும் ஏற்றுக்​கொண்டார் உஷா. ஆனாலும், அவர் தனது கூட்டாளி​களைக் காட்டிக் கொடுக்கவில்லை.

சிறப்பு நீதிமன்ற விசாரணையின்போது வழக்​கறிஞர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் உஷா பதில் சொல்லவில்லை. அவர் தெரிந்தே குற்றம் செய்தார் என்று கருதிய நீதிபதி, அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். உஷாவோடு கைது செய்யப்பட்டவர்கள் ஓர் ஆண்டு தண்டனை பெற்றனர். ரேடியோவை இயக்கியவர்களைக் காட்டிக்கொடுக்க உதவியதற்காக, நாரிமன் பிரின்டர் விடுவிக்கப்பட்டார். சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக்கொடுத்த துரோகி என்று அவரை பார்சிகளே கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆகவே, மும்பையில் இருந்த தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு தலைமறைவான பிரின்டர், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட உஷா மேத்தா, மிகவும் கடுமையாக நடத்தப்பட்டார். அவருக்கு மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டன. இதனால், மெலிந்து நோயாளி ஆனார். உயிர் காக்கும் சிகிச்சை வேண்டி அவர் விண்ணப்பிக்கவே, பம்பாய் ஜே.ஜே. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்​​பட்டார். மருத்துவமனையிலும் நான்கு காவலர்​கள் அவரை இரவு பகலாகக் காவல் காத்தனர். உடல்நலம் தேறியதும் மீண்டும் எரவாடா சிறைக்குக் கொண்டுவரப்பட்டார். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் காங்கிரஸ் தலைவர்களைக் காட்டிக்கொடுத்தால், வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க உதவி செய்​வதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறினர். ஆனால், உஷா மறுத்துவிட்டார்.

1946-ம் ஆண்டு இந்தியாவில் அமைக்கப்பட்ட தற்காலிக இந்திய அரசாங்கம் உஷா மேத்தாவை விடுதலை செய்தது. உடல்நலம் குன்றிப் படுக்கையில் கிடந்தபோதும் உஷா மனம் தளரவில்லை. அவர், டாக்டர் பட்ட ஆய்வு செய்து பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். காந்திய சிந்தனைகள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த உஷா மேத்தாவுக்கு, 'பத்மவிபூஷண்’ பட்டம் அளித்துக் கௌரவித்தது இந்தியா. 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி இறந்தபோது உஷாவுக்கு வயது 80. காங்கிரஸ் ரேடியோவை உருவாக்கி நடத்தியது தனது வாழ்நாளின் சாதனை என்று உஷா தனது நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார். இவரது அரிய சேவை காங்கிரஸ் கட்சியின் வரலாற்றுப் பதிவுகளில் கண்டுகொள்ளப்படவே இல்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய உண்மை.

காங்கிரஸ் ரேடியோவைப் போலவே ரகசியமாகச் செயல்பட்ட இன்னொரு ஒலிபரப்பு 'ஆசாத் இந்தியா ரேடியோ’. இது, நேதாஜியின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆரம்ப காலங்களில் இந்த ரேடியோ ஜெர்மனியில் இருந்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு, சிங்கப்பூரிலும் ரங்கூனிலும் இருந்து ஆசாத் ரேடியோ ஒலிபரப்பப்​பட்டது.

நேதாஜியின் சொற்பொழிவுகள், பிரிட்டிஷ் எதிர்ப்புப் பிரசாரங்கள் மற்றும் பாடல்களுக்கு முக்கியத்​துவம் கொடுத்து இந்த ரேடியோ செயல்பட்டது. தமிழ், ஆங்கிலம், வங்காளம், உருது, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இந்த ரேடியா செய்திகளை ஒலிபரப்பியது. ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களே இதன் ஒலிபரப்பாளர்கள். அன்று, பிரிட்டிஷ் நடத்திய ரேடியோக்கள் இந்தியாவைப் பற்றிய செய்திகளைக் கடுமையாகத் தணிக்கை செய்த​போது, அதை எதிர்த்து உண்மையை உலகறியச் செய்தது ஆசாத் இந்தியா ரேடியோ. நேதாஜியின் பல முக்கிய உரைகள் இந்த வானொலி வழியாக​வே ஒலிபரப்பாகின. குறிப்பாக, யுத்த காலத்தில் இந்தியர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டையும் கெரில்லா தாக்குதல் முறையின் அவசியத்தையும் பற்றி நேதாஜி ஆற்றிய உரைகள் மக்களிடம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தின.

ஆசாத் ரேடியோ ஒலிபரப்பை மக்கள் கேட்கவிடாமல் தடுப்பதற்காக வீடுகளுக்குள் புகுந்த போலீஸ், ரேடியோ பெட்டிகளைப் பறிமுதல் செய்தனர். ஆசாத் இந்தியா கேட்பது தண்​டனைக்கு உரிய குற்றமாகக் கருதப்பட்டது.

ஜப்பானிய ராணுவம் டோக்கியோவில் குண்டு மழை பொழிந்த போது, 22 வயதான ஹரி பிரபோ என்ற இளம்பெண் அந்த யுத்த பூமியைக் கடந்து சென்று இந்திய தேசிய ராணுவத்துக்கான ரகசிய ரேடியோ ஸ்டேஷனை அடைந்து, வங்காளத்தில் செய்தியை ஒலிபரப்பினார். 1942 முதல் இரண்டு ஆண்டுகள் நாள் தவறாமல் இவர் செய்தி வாசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோவில் இருந்து சோப் தயாரிப்பதற்காக டாக்கா வந்த டகேடா என்ற ஜப்பானியர் மீது காதல்கொண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் ஹரி பிரபோ. இருவரும் 1912-ல் டோக்கியோ திரும்பினர். தனது ஜப்பானிய வாழ்க்கை பற்றி பிரபோ வங்காளத்தில் எழுதிய 'ஒரு இந்திய மனைவியின் ஜப்பானிய வாழ்க்கை’ என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது.

பிரபோ ஜப்பானிய மொழி கற்றுக்கொண்டதுடன் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உதவி செய்வதற்காக அவர் நேதாஜி பற்றிய செய்திகளைத் தொகுத்து தினமும் ஒலிபரப்பி இருக்கிறார். இவரைப்பற்றி சமீபத்தில் ஒரு ஆவணப் படம் வெளியாகி இருக்கிறது. பிரிட்டிஷ் உளவுத் துறையின் சகல நெருக்கடிகளையும் சந்தித்து ஆசாத் இந்தியா ஒலிபரப்பு இந்திய மக்களிடம் சுதந்திர எழுச்சியை உருவாக்கியது என்பதே உண்மையான வரலாறு.

காங்கிரஸ் ரேடியோவும், ஆசாத் இந்தியா ரேடியோவும் போராடி வளர்த்த இந்திய நாட்டுப்பற்றை இன்றைய பண்பலைகள் தங்களின் சுயலாபத்துக்காகக் காற்றில் பறக்கவிட்டுவிட்டன. பண்பலைத் தமிழ் என்றொரு பண்பாடற்ற தமிழ் பேசும் முறை உருவாகி, மொழியை, தமிழ்ப் பண்பாட்டைத் தொடர்ந்து சீரழித்து வருகின்றன.

உண்மையான சமூக அக்கறைகொண்ட ஊடகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு சுதந்திரப் போராட்டக் காலத்தில் செயல்பட்ட காங்கிரஸ் ரேடியோவும், ஆசாத் இந்தியா ரேடியோவும் சான்றுகள்.

இந்த வழியைப் பின்தொடராமல், சமூகத்தை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்து ஊடகங்கள் தவறும்போது அதன் விளைவுகள் மிக மோசமாகவே இருக்கக்கூடும் என்பதே வரலாறு காட்டும் உண்மை.

Friday, February 08, 2013

அருள்வாக்கு - ப்ரகாசம் பெற...


எத்தனையோ வாழ்க்கை ப்ரச்னை எங்களுக்கு. ஆபீஸ்கார்யம், வீட்டுக் கார்யம் என்று அலைகிறோம், அவதிப்படுகிறோம். அது தெரியாமல், எங்கேயோ மடத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘அதைக் கத்துக்கோ, இதைக் கத்துக்கோ’ என்று நீங்கள் உபதேசம் பண்ணினால் எப்படி?" என்று கேட்கலாம். மனஸிருந்தால் எதையும் செய்து விடலாம். இத்தனை வாழ்க்கை ப்ரச்னை இருந்தாலும் எத்தனை பொழுது அரட்டை, ந்யூஸ் பேப்பர், ஸினிமா, சீட்டுக்கட்டு இத்யாதியிலே போகிறது? இப்படி வீணாகப் போகிற காலத்தில் பாதி பொதுநலப் பணிகளுக்கு என்றும், பாதி ஏதாவது வித்யாப்யாஸத்துக்கு என்றும் வைத்துவிட்டால் போதும் - ஸமூஹப் பணிகளும் நடந்துவிடும். நம்முடைய வித்யைகளும் ப்ரகாசம் பெற்று விடும். நாமும் ப்ரகாசம் பெற்று விடுவோம்.

வேலை - வெட்டி, குடும்பத்தொல்லை என்று மன்றாடுபவர்களுக்கு ‘டைவர்ஷன்’ வேண்டாமா என்று கேட்கலாம். ஆசையோடு மனஸ் ஈடுபட்டு ஏதாவது ஒரு வித்யையை அப்யஸிக்க ஆரம்பித்தீர்களானால் உங்களுக்கே தெரியும். இந்த அப்யாஸத்தை விடப் பெரிய ‘டைவர்ஷன்’ எதுவும் இல்லையென்று, களைத்துப்போன மனஸுக்கு வேண்டிய உத்ஸாஹத்தை இவையே (வித்யைகளே) ஊட்டிவிடும். அப்படியும் ஒரேயடியாக நீங்கள் ‘டைவர்ஷன்’ என்பதை விட்டுவிடும்படிச் சொல்லவில்லை. அதுவும் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், நீங்களே ஆலோசித்துப் பார்த்து, ‘இப்படிப் பொழுதை வேஸ்ட் பண்ணுகிறோமே’ என்று நினைக்கக் கூடியவைகளை விட்டு விட்டு - இப்படி நிறைய அகப்படும் - அந்தப் பொழுதை இப்படியொரு pursuit-ல் (தேட்டத்தில்) செலவிட்டால் போதும். ஏதாவதொரு ஸ்வதேச வித்யையில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெற்றுவிடலாம். நம் முன்னோர்கள் போன வழி அதுதான்.

மநுஷ்யப் பிறவி கிடைத்தும் அதன் அறிவாலே பெறக் கூடியவற்றைப் பெற்று அதன் மூலம் மநுஷ்யத்வத்துக்கு மேலே போக முயற்சி பண்ணாமல் நாம் செத்துப் போனால் அது ஆடு, மாடு ஜன்மாவுக்கு ஸமானந்தான். ஒரு ஆடு ஆடாகவோ, மாடு மாடாகவோ இருந்து மடிவதில் அவற்றுக்குக் குறைவு இல்லை. ப்ரக்ருதியில் ஈச்வரன் அவற்றுக்கு ஏற்படுத்திய தர்மப்படி இருந்ததாகவே ஆகும். ஆனால், மனிதப் பிறவி எடுத்தவர்கள் இதற்கு அவன் அநுக்ரஹித்துள்ள உபரி அறிவின் தர்மப்படி அதை ஒரு வித்யையால் சோபித்துக் கொள்ளச் செய்யாமல் விட்டுவிட்டால் அது ரொம்பவும் துர்ப்பாக்யம். அறிவுக்கு மேலே உள்ள ஆண்டவனுக்காக, ஆத்மாவுக்காகத்தான் அறிவை விட்டு விட்டு, ‘இதெல்லாம் எதற்கு?’ என்று ஸகல சாஸ்திரங்களையும் வித்யைகளையும் தள்ளலாமே தவிர, நம் நிலையில் அப்படிக் கேட்டு விட்டு விடுவது தகாது. இது ஒன்றுக்கும் உதவாத சோம்பேறியின் வாய் வேதாந்தந்தான்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அருள்வாக்கு - யார் யார் வாய்க் கேட்பினும்!


அறமும் அறிவு நூலால் வருவதே; அறிவு நூலின் பயனும் அறத்துக்கு உதவ வேண்டுவதே. ஆகையால் இவற்றைப் பிரித்துக்கூடச் சொல்லக் கூடாது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு

என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறது.

எந்த விஷயமாகட்டும், அதை யார்தான் எடுத்துச் சொல்லட்டும். அதன் ஸரியான தாத்பர்யம் என்னவென்று பார்த்து ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று அர்த்தம். இப்படிச் சொன்னதால் முதலிலேயே எந்த ஒரு வித்யையும் தப்பு என்று ஒதுக்கி வைத்துவிடாமல் அதிலும் ஏதாவது உசந்த கருத்து இருக்குமா என்று ஆலோசிக்க வேண்டுமென்று ஏற்படுகிறது. அதேபோல, ‘போயும் போயும் இவர்களிடமா கற்றுக் கொள்வது? இவர்கள் சொல்லியா கேட்டுக் கொள்வது?’ என்றெல்லாம் நினைக்காமல், ‘சொல்வது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; சொல்வதில் தாத்பர்யம் இருந்தால் எடுத்துக் கொள்வோம்’ என்று நினைக்க வேண்டுமென்றும் ஏற்படுகிறது. இந்த இரண்டு பண்புகளையும் தர்ம சாஸ்திரங்களில் வெகுவாக ஆதரித்து வற்புறுத்தியிருக்கிறது.

‘விஷயமிருக்கிறதா என்று பார்க்கிறேன்’ என்று பொய் ஸமாதானம் சொல்லிக் கொண்டு, கன்னாபின்னா ஸமாசாரங்களைக் கூட ஒருத்தன் படிக்கலாம். அதாவது ‘எப்பொருளை’யும் படிக்கலாம். ஆனால் உசத்தி தாழ்த்தி பார்க்காமல் ‘யாரார் வாய் கேட்பது’ லேசில் முடியாது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்