Search This Blog

Wednesday, May 29, 2013

மகா பெரியவா சொன்ன கதைகள்!

தறிய காரியம் சிதறும்! அனுபவம் வாய்ந்த இந்தப் பொன்மொழியின் உண்மையை நாம் எல்லோருமே ஏதாவது ஒரு தருணத்தில் நேரிடையாக உணர்ந்திருப்போம். அதனால்தான், எந்தவொரு காரியத்திலும் தெளிவான முடிவெடுக்கப் பெரியவர்கள் வலியுறுத்துவார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர், மறுநாள் அதிகாலையில் வெளியூர் புறப்பட்டுச் செல்ல வேண்டியது இருந்தது. வழக்கமாக அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடும் அவர், அந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை முந்தைய நாளே செய்யாமல், 'நாளைக்கு மட்டும் இன்னும் சற்று முன்னதாக 4 மணிக்கே எழுந்திருந்தால், எல்லா ஏற்பாட்டையும் செய்துவிடலாமே!’ என்று நினைத்துப் படுத்துவிட்டார்.

அதிகாலை 4 மணிக்கு எழுவதற்காக தனது மொபைல் போனில் அலாரமும் வைத்துக் கொண்டார்.

வழக்கமாக 5 மணிக்கெல்லாம் விழித்துவிடும் அவர், அன்றைக்கு ஏனோ 6 மணிக்குத்தான் விழித்தார். மொபைலில் இன்னும் அலாரம் அடிக்கவில்லையே என்று எண்ணியபடியே, எதிரே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்க்க நேரம் 6 மணி என்பதைக் காண்பித்தது. பதறிப்போனார் நண்பர். மொபைலை அவசரமாக ஆய்வு செய்ததில்

4 A.M. என வைப்பதற்குப் பதிலாக 4 P.M. என செட் செய்திருந்தார். அதனால்தான், அலாரம் மாலை நேரத்து 4 மணிக்காகக் காத்திருந்தது.
அப்புறம் என்ன... அறக்கப்பறக்கப் புறப்பட்டு பஸ் பிடித்து வெளியூர் போனார் அவர். யாரைப் பார்க்க வேண்டுமோ அவரையும் சந்தித்தார்.

'தாமதமாக வந்தாலும் பரவாயில்லை; நல்ல நேரத்தில்தான் வந்து இருக்கிறீர்கள். இன்னும் 10 நிமிஷம் தாண்டி வந்திருந்தால் ராகு காலம் வந்திருக்கும்...' என்றார், நெற்றி நிறையத் திருநீறும், அதன் நடுவே ஒரு ரூபாய் நாணய அளவுக்குக் குங்குமமும் வைத்திருந்த அந்த ஜோதிடர்.

ஆம்... தனது மகளுக்கு வந்திருந்த வரனின் ஜாதகத்தை இவரிடம் கொடுத்துப் பொருத்தம் பார்க்கவே வந்திருந்தார் அந்த நண்பர்.

'சரி, ஜாதகத்தைக் கொடுங்கோ! பொருத்தம் எப்படின்னு பார்த்துச் சொல்லிடுறேன்...' என்று ஜோதிடர் சொல்லவும், தான் கொண்டு வந்த பையில் ஜாதகத்தைத் தேடினார் நண்பர். ஆனால், மகளின் ஜாதகம் இருந்ததே தவிர, மாப்பிள்ளையின் ஜாதகத்தைக் காணவில்லை.

புறப்பட்டு வந்த வேகத்தில், மாப்பிள்ளையின் ஜாதகத்தை எடுக்காமல் வந்தது அப்போதுதான் நண்பரின் ஞாபகத்துக்கு வந்தது. அப்புறம் என்ன... 'ஆரம்பமே தடையாகவும், அலைக்கழிப்பாகவும் இருக்கே...’ என்று நினைத்த நண்பர், தன் மகளுக்கு அடுத்த வரனைத் தேடவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். தனது விதியை நினைத்து நொந்து கொண்டார்.

நம் காஞ்சி மகா ஸ்வாமிகளும் இப்படிப்பட்ட விதி பற்றி ஓர் உண்மை நிகழ்வைச் சொல்கிறார்.

'எண்ணூறு வருஷங்களுக்கு முன் பாஸ்கராசார்யார் என்று பெரிய கணித ஸித்தாந்தி ஒருவர் இருந்தார். நமக்கு என்னதான் கெட்டிக் காரத்தனம் இருந்தாலும், பகவத் ஸங்கல்பத்தை மாற்றமுடியாது என்பதற்குத் திருஷ்டாந்தமாக அவர் வாழ்க்கையில் ஒன்று நடந்தது.


அவருடைய பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை ஜ்யோதிஷப் புலியான பாஸ்கராசார்யார் அறிந்திருந்தார். ஆனாலும், தமது கெட்டிக்காரத்தனத்தினால் ஸகல க்ரஹங்களும் தீர்க்க ஸெளமங்கல்யத்தைத் தரும்படியான ஒரு லக்னத்தைக் கண்டுபிடித்து, அதிலே புத்திரிக்கு விவாஹம் செய்துவிட்டால், அவளை தீர்க்கஸுமங்கலியாக இருக்கச் செய்து விடலாம் என்று நினைத்தார். அந்த மாதிரியான ஒரு லக்னத்தில் லீலாவதிக்குக் கல்யாண முஹூர்த்தம் வைத்தும் விட்டார்.

அந்தக் காலத்தில் இப்போதுபோல் கடிகாரம் கிடையாது. ஆனாலும், வாஸ்தவத்தில் அக்காலத்தில் இருந்ததுதான் அசல் கடிகா. கடம், கடிகா, கடிகை என்பதெல்லாம் பானை மாதிரியான தீர்த்த பாத்திரத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜல பாத்திரமே பூர்வகாலத்திய கடிகா அல்லது கடிகாரம். அதிலே மேல்பாகம், கீழ்பாகம் என்று பிரிந்திருக்கும். மேல் பாகத்தில் விட்ட ஜலம் ஒரு துவாரம் வழியாகக் கீழ் பாகத்தில் துளித்துளியாக விழும். மருந்து பாட்டிலில் டோஸ்மார்க் பண்ணியிருக்கிற மாதிரி, கீழ் பாகத்தில் அளவுக் கோடுகள் போட்டிருக்கும். துளித் துளியாய் விழும் ஜலம், இன்ன கோடு வரை வந்தால் இத்தனை நாழிகை என்று கணக்குப் பண்ணிவிடுவார்கள்.

அதிலுள்ள டோஸ்மார்க் ஒரு நாளில் அறுபதில் ஒரு பங்காகும். 'நாழிகை’ என்று தமிழில் சொல்லப்படும் இந்தக் கால அளவுக்கு ஸம்ஸ்கிருதத்தில் 'நாடிகா’ என்பதோடு 'கடிகா’ என்றே இன்னொரு பெயர் உண்டு. அது 24 நிமிஷம் கொண்டது. Water -clock, water-glass என்று இங்கிலீஷிலும் சொல்வார்கள். ஜலம், சீதோஷ்ணத்தைப் பொறுத்து evaporate (ஆவி) ஆவதால், இதில் ஏதாவது கணக்குப் தப்பு வரும் என்று, பின்னர் மணல் கடிகாரம் பண்ணினார்கள்.

அந்நாள் வழக்கப்படி, லீலாவதி விளையாட் டுப் பெண்ணாக இருந்த சின்ன வயசிலேயே கல்யாணம் நிச்சயித்திருந்தது. அந்தக் குழந்தை, மேலே சொன்ன மாதிரியான ஜல கடிகாரத் திடம் வந்து, குனிந்து பார்த்து, ஏதோ சேஷ்டை பண்ணிற்று. அப்போது அதன் மூக்குத்தியில் இருந்து ஒரு சின்ன முத்து, கடிகாரத்துக்குள் விழுந்து, மேல் பாகத்துக்கும் கீழ் பாகத்துக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மாட்டிக்கொண்டுவிட்டது.

இதனால், விழுகிற துளி சின்னதாகிவிடும் அல்லவா? இப்படி, இருக்கவேண்டியதைவிடச் சின்னதான துளிகளாக விழுந்து முஹூர்த்த லக்னக் கோட்டுக்கு ஜலம் வந்தபோது, வாஸ்தவத்தில் அந்தச் சுப நேரம் தப்பி, அடுத்த லக்னம் வந்துவிட்டது. அது கெட்ட லக்னம். அந்த லக்னத்தில் விவாஹமானதால் லீலாவதி ஜாதகப்படியே ரொம்பவும் பிஞ்சு வயஸில் பதியை இழந்துவிட்டாள்.

முத்து விழுந்ததை அந்தக் குழந்தை உள்பட ஒருத்தரும் முதலில் கவனிக்காததால், இத்தனைப் பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அப்புறம் விஷயம் தெரிய வந்தபோது விதியை யாரும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டார்கள்.

கணித சாஸ்திர விஷயமாகப் பிற்காலத்தில் பாஸ்கராசார்யார் ஒரு கிரந்தம் செய்ய வேண்டுமென்று நினைத்தார். சின்ன வயசிலேயே விதவையாகித் தம்மிடம் வந்துவிட்ட லீலா வதியை கணிதத்தில் பண்டிதை ஆக்கி, அவள் பெயரிலேயே தம் புஸ்தகத்தை எழுதினார்.  சாதாரணமாக ஒரு பரம்பரையில் பாட்டி, முப்பாட்டிகளின் பேரைக் குழந்தைக்கு வைத்து, அவர்களுடைய நினைவை நீடிக்கச் செய்கிறார் கள் அல்லவா? பாஸ்கராசார்யார் என்ன பண்ணினார் என்றால், குழந்தையே பெறாத தம்முடைய குழந்தையை, கணித மாணாக்க பரம்பரை முழுவதற்கும் ஓர் ஆதிப் பாட்டியாகச் சிரஞ்சீவித்துவம் பெறும்படியாகத் தம்முடைய புஸ்தகத்துக்கே 'லீலாவதி கணிதம்’ என்று அவள் பேரை வைத்துவிட்டார்.

அதில் வியக்த கணிதம், பீஜ கணிதம் முதலிய பலவகைக் கணிதங்கள் இருக்கின்றன. 'லீலாவதி கணக்கு’கள் கதை மாதிரியும், விடுகதை மாதிரி யும், கவிதை மாதிரியும் சுவாரஸ்யமாக இருக்கும்.

கிரஹ ஸ்திதிகள், கிரஹங்களின் கதிகள் முதலியவற்றை நிர்ணயிப்பதற்கு உபயோகமாக 'ஸித்தாந்த சிரோமணி’ என்ற ஒரு கிரந்தத்தையும் பாஸ்கராசார்யார் எழுதியிருக்கிறார்.'


எனது இந்தியா ( காலிஸ்தான் வன்முறை !) - எஸ். ரா...

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஒருங்கிணைந்த பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த மேற்கு பஞ்சாப், பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. சீக்கியர் மற்றும் இந்துக்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு பஞ்சாப், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்தியாவின் உணவுக் களஞ்சியம் எனப்படும் பஞ்சாப், வீரத்தின் விளைநிலம். இன்று வரை ராணுவத்தில் சீக்கியர்களே பெருமளவில் இருக்கின்றனர். சமயம், பண்பாடு, கலாசாரம் எனத் தங்களுக்கென தனித்துவமான அம்சங்களைக்கொண்ட சீக்கியர்கள், விசுவாசத்துக்காக உயிர்கொடுப்பவர்கள். இந்தியப் பிரிவினை, பல்லாயிரம் சீக்கியர்களைக் காவு வாங்கியிருக்கிறது. அதன் ஓலக் குரலை இன்றும் பஞ்சாபி இலக்கியங்களில் காணலாம்.
 
 

சீக்கியம் 15-ம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய மதம். சீக்கியம் என்பதன் பொருள் சீடர் அல்லது மாணவர் என்பதே. இது, ஞானி குருநானக் உருவாக்கிய மதம். ஒரே முடிவற்ற இறைவனையும், குருநானக் முதல் ஸ்ரீகுரு கோவிந்த் சிங் வரையிலான பத்து குருக்களையும், புனித நூலான கிரந்த சாஹிப்பையும், பத்து குருக்களின் போதனைகளையும் முழுமனதாக நம்புபவனே சீக்கியன். சீக்கிய ஆண்கள் சிங்கம் எனப் பொருள்படும் சிங் என்ற பெயரையும், பெண்கள் ராணி எனப் பொருள் தரும் கௌர் என்ற பெயரையும் தங்களின் பெயருக்குப் பின்னால் இணைத்துக்கொள்கின்றனர். சீக்கிய மதத்தின் பூர்வீகம், ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணம். சீக்கியர்கள் ஐந்து விஷயங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவை, கேஷ் எனப்படும் வெட்டப்படாத தலைமுடி, இதை சுருக்கி சிறிய கொண்டை போல போட்டுக்கொள்கின்றனர். கங்கா எனப்படும் மரத்தாலான சீப்பு, கச்சாஹெரா எனப்படும் இடுப்பிலிருந்து முட்டி வரை இருக்கும் வெள்ளை ஆடை, கடா எனும் இரும்பாலான கையணி, அத்துடன் கிர்ப்பான் எனும் வளைகத்தி.  குரு கோவிந்த் சிங் 'கல்சா’ எனும் அமைப்பை 1699-ல் நிறுவி இந்த ஒழுக்கமுறையை அறிமுகம்செய்தார். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதம் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளானது. சீக்கியக் குருமார்கள் சிலர் மொகலாயர்களால் கொல்லப்பட்டனர். இன்று, உலகளவில் 27 மில்லியன் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் சீக்கியர்கள் இடம்பெயர்ந்து, அதிக அளவில் இங்கிலாந்துக்குச் சென்றனர். பிறகு, அமெரிக்கா, கனடா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் குடியேறினர். இந்திய ராணுவத்தில் சீக்கிய ரெஜிமென்ட், மிகவும் திறமை வாய்ந்தது. இந்த ரெஜிமென்ட், 2 பரம்வீர் சக்ரா விருதுகளையும், 14 மஹாவீர் சக்ரா, 5 கீர்த்தி சக்ரா, 67 வீர் சக்ரா மற்றும் 1,596 கேலன்டிரி விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் சீக்கியர்கள் மிகுந்த மனவலிமையோடு போராடினர். பிரிட்டிஷ் அரசால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் தீவுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட 2,646 இந்தியர்களில், 2,147 பேர் சீக்கியர்கள். ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களில் 799 பேர் சீக்கியர்கள். விடுதலைப் போராட்டத்தின்போது, தூக்கிலிடப்பட்ட இந்தியர்களில் 73 பேர் சீக்கியர்கள்.


தங்களுக்கெனத் தனி வரலாறுகொண்டிருக்கும் சீக்கியர்கள் நெடுங்காலமாகவே, தங்களின் சுயாட்சிக்காக தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் குரல் எழுப்பி வந்தனர். தங்களுக்கான தனி நாடாக 'காலிஸ்தான்’ வேண்டும் என்று குரல் எழுப்பினர். காலிஸ்தான் என்றால், தூய்மையின் தேசம் என்று பொருள். இந்தக் கோரிக்கையை அகாலி அமைப்பு, மின்டோ மார்லி கமிட்டியிடம் முன்வைத்தது.  காலிஸ்தான் குறித்து பல தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒருங்கிணைந்த இந்தியாவில் சீக்கியர்களுக்கான சமூக, பொருளாதார மற்றும் மத ரீதியான உரிமைகள் முழுமையாகக் காப்பாற்றப்படும் என்று, நேரு வாக்குறுதி அளித்தார். காந்தியும் சீக்கியர்கள் சார்பாகவே பேசினார். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு தனி நாடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. தங்களை ஏமாற்றிவிட்டதாக சீக்கியர்கள் குரல் எழுப்பினர். தனிநாடு கேட்கும் அமைப்புகளுக்குத் தடைவிதிக்கப்படும் என்று  நேரு எச்சரித்தார். பஞ்சாபில் 1952, 57 மற்றும் 62 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதாப் சிங் கைரோன், பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றார். இவர், மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாகவே செயல்பட்டார் என்று குற்றம்சாட்டியது அகாலி தளம். 1966-ல் இந்திரா காந்தி பிரதமரானதும், ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணம் பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம் என மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. தங்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக, சீக்கியர்கள் சந்தோஷப்பட்டனர். அதன்பிறகு, அங்கு நடந்த தேர்தலில் அகாலி தளம் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அர சியல் காரணங்களுக்கான பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்ட காலிஸ்தான் கோரிக்கை உருமாறி, தீவிரவாத இயக்கமாகத் திசைமாறியது. 1972-ல் நடந்த பொதுத் தேர்தலில் தோற்றுப்போனது அகாலி தளம். தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து ஆனந்த்பூர் தீர்மானம் என்ற ஒன்றை வெளியிட்டது. அதில்தான் காலிஸ்தான் கோரிக்கை மீண்டும் உயிர்பெற்றது. கூடவே, மதவாத அதிகாரம் வலுப்பெற வேண்டும். அதற்கு இளைஞர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டது. இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது சீக்கியரான ஜகஜித் சிங் சௌஹானின் செயல். 1971-ம் ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான் என்பவர், காலிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட இருப்பதாக, அமெரிக்காவில்  வெளியாகும் நியூ யார்க் டைம்ஸ் இதழில் விளம்பரம் கொடுத்தார். இதையடுத்து,  நிதி உதவிகள் குவியத் தொடங்கின. 1980-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி ஜகஜித் சிங் சௌஹான், இந்திரா காந்தியை சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, தேசிய காலிஸ்தான் கவுன்சிலை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அதன் தலை வராக தன்னையும், பொதுச் செயலாளராக பல்பீர் சிங் சந்து என்பவரையும் அறிவித்தார். 1980-ம் ஆண்டு மே மாதம் சௌஹான், லண்டன் சென்றார். அங்கு, காலிஸ்தான் என்ற தனிநாடு உதயமானதாக அறிவித்தார். அதேபோன்ற அறிவிப்பை அமிர்தசரஸில் சந்துவும் வெளியிட்டார். அதோடு, காலிஸ்தான் நாட்டுக்கான தனி ரூபாய் நோட்டு, ஸ்டாம்ப்கள் வெளியிடப்பட்டன. காலிஸ்தான் பற்றிய பகிரங்க அறிவிப்புகளுக்குப் பிறகும் சௌகான் மற்றும் சந்து ஆகியோர் மீதோ அவர்களது அமைப்பின் மீதோ, அப்போதிருந்த காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸின் கண்மூடித்தனமான போக்கை அகாலி தளத் தலைவர் லோங்கோவால் கடுமையாக கண்டித்தார்.


1977-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸைத் தோற்கடித்தது அகாலி தளம். அதையடுத்து, பஞ்சாபில் காங்கிரஸ் வளர வேண்டுமானால், அகாலி தளம் கட்சியை உடைக்க வேண்டும் என காங்கிரஸ் திட்டமிட்டது. அதற்கு ஆயுதமாக அடையாளம் காணப்பட்டவரே பிந்தரன்வாலே. தீவிர மதப்பற்றுமிக்க குடும்பத்தில் பிறந்து பஞ்சாபின் புகழ்பெற்ற சமயப் பள்ளியான தம்தாமி தக்ஸால்சில் படித்தவர் பிந்தரன்வாலே. சமயப் பள்ளியான தம்தாமி தக்ஸாலின் தலைவராக இருந்தார். பிந்தரன்வாலேயைக்கொண்டு சீக்கிய இளைஞர்களை மனமாற்றம் செய்யத் தொடங்கியது காங்கிரஸ். நிரங்காரி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் அகண்ட் கீர்த்தனி பிரிவுக்கும் இடையே, 1978-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அகண்ட் கீர்த்தனியைச் சேர்ந்த 13 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாபில் மதக் கலவரம் வெடித்தது.


Sunday, May 26, 2013

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன?
 
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!

ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.  

அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.


எப்படி வருகிறது?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.

யாரை அணுகுவது?

வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வங்கி நடைமுறைகள்!

ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது. 

எஃப்.ஐ.ஆர். ஃபைல்!

பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.


 
ஆர்.பி.ஐ.-ன் உதவி!

வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.''

Saturday, May 25, 2013

எனது இந்தியா ( நடமாடும் சடலங்கள் !) - எஸ். ரா...

லீகுக்கு ஆதரவான நாளிதழ்களில் 16-ம் தேதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்​கான திட்டமிடல் வெளியானது. அதன்படி, அன்று இரண்டு மணிக்கு பெரிய பொதுக் கூட்டமும் பிரார்த்தனையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதையட்டி சிறப்புப் பேரணி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. நிலை​மையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு செய்யத் தொடங்கியது.

அதே நேரத்தில், கடைகளைத் திறந்துவைத்து வழக்கம் போல வியாபாரம் செய்ய வேண்டும், முஸ்லிம் லீகின் மிரட்டலுக்கு நாம் பயந்துவிடக் கூடாது என்று இந்து விசுவாசிகளாக உள்ள காங்கிரஸ் உறுப்​பினர்கள் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டனர். ஒருவேளை, தாங்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுக்க மக்கள் படை தயாராக உள்ளது என்று காங்கிரஸ் பிரமுகர் பிரபுல்ல சந்திர கோஷ் அறிவித்தார்.

இதைக் கேட்டு முஸ்லிக் லீக் கடும்கோபம் அடைந்தது. திறந்துவைக்கப்படும் கடைகளைச் சூறையாடுவோம் என்று உணர்ச்சிவேகத்தில் அவர்களும் அறிவித்தனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தால், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆகஸ்ட் 16-ம் நாள் காலை கல்கத்தாவில் பதற்றத்துடனே தொடங்கியது. கடைகளைத் திறப்பதா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்ட காரணத்தால் வியாபாரிகள் தயங்கிக்கொண்டே இருந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடைகளைத் திறக்கும்படி கட்டாயப்படுத்தினர். லால்பஜார் பகுதியில் உள்ள இந்துக்களின் கடைகள் திறக்கப்பட்டன.  


இரும்புக் கம்பிகள், உருட்டுக்கட்டைகள் சகிதமாக அந்தப் பகுதிக்கு வந்த முஸ்லிம் லீக் அமைப்பினர், திறந்திருந்த கடைகளைச் சூறை​யாடத் தொடங்கினர். அடிதடியும், தீ வைத்தலும் நடந்தன. இந்தத் தகவல் நகரம் முழுவதும் பரவியது. உடனே, நகரின் மற்றொரு பகுதியில் உள்ள இஸ்லாமியத் தலைவர்களின் வீடுகள் தாக்கப்​பட்டன. மசூதிகள் மீது கற்கள் வீசப்பட்டன. இரு தரப்பு மோதல்களையும் கட்டுப்படுத்த காவல்​துறை முடுக்கிவிடப்பட்டது. பொதுக் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள 30,000 பேர் வரக்கூடும் என போலீஸ் கணித்து இருந்தது. ஆனால், ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் திரண்டுவிட்டனர். இதனால், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறியது.

2 மணிக்கு முஸ்லிம் லீக்கின் பொதுக் கூட்டம் தொடங்கியது. நகரெங்கும் முஸ்லிம்கள் தாக்கப்​படுவதாகவும் கலவரத்தில் காயமடைந்து ஆறு பேர் உயிருக்கு ஊசலாடுகின்றனர் என்றும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு ஆவேசமடைந்த லீக் உறுப்பினர்கள், லாரி​கள் மற்றும் வேன்களில் கூட்டம் கூட்டமாக ஏறிச்சென்று ஆயுதங்களால் இந்துக்களைத் தாக்கத் தொடங்கினர். முதற்கட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன. பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகினர். 16 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். நூலகங்கள், துணி குடோன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.


இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இந்து மதவாதி​களின் கூட்டம் கிளம்பியது. முஸ்லிம்களின் வீடுகள் நொறுக்​கப்பட்டன. பெண்களைத் துரத்தி துரத்திக் கொலை செய்தனர். வணிக நிறுவனங்களை உடைத்துச் சூறையாடினர். இரண்டு தரப்பும் கொலை வெறியுடன் களம் இறங்கி நகரைச் சூறையாடியதில் 30,000 பேர் இறந்திருக்கக்கூடும் என்கின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக 10,000 பேருக்கும் குறைவாக இறந்துபோனதாகவே தெரி​விக்கப்படுகிறது. இந்தக் கலவரத்தில் ஒரு லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

ஒரே நாளில் கல்கத்தா மாநகரம் முற்றிலும் சூறையாடப்பட்டுத் தீக்கிரையானது. மக்கள் எங்கே போவது எனத் தெரியாமல் உயிர் பயத்தில் தப்பி ஓடினர். காணும் இடமெல்லாம் சடலங்கள், எரியும் கட்டடங்கள், முதல் நாள் இரவு வன்​முறை வெறியாட்டம் நீண்டது. சாலையோரம் வசித்த பிச்சைக்காரர்கள்கூட இதில் தப்பிக்க முடியவில்லை.

மறுநாள், ஆகஸ்ட் 17 அன்று லிஜ்ஜாபகான் பகுதியில் உள்ள கேசோரம் துணி ஆலை ஒன்றில் வேலை பார்த்த ஒரியாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 300 பேர் ஆலைக்குள்ளேயே அடித்துக் கொல்லப்பட்டு தீ வைத்து எரிக்கப்​பட்டனர். இந்தக் கொடூரச் சம்பவத்தில் இந்துக்கள், சீக்கியர், முஸ்லிம் என பேதமில்லாமல் பலரும் பலியாகினர். இந்தச் சம்பவம் இந்தியாவை உலுக்​கியது. இதன் காரணமாக ஒரிசா, பீகார், உத்தரப் பிரதேசம் பஞ்சாப் என பல மாநிலங்களில் மதக் கலவரம் வெடித்தது. கல்வி நிலையங்களில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த மாணவர்களைக்கூட வெளியே இழுத்துப் போட்டு அடித்துத் துவைத்தனர். மருத்துவமனைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. டாக்ஸியில் சென்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றை வண்டியோடு  தீ வைத்து எரித்தது ஒரு கும்பல். இதற்குப் பதிலடியாக கல்கத்தாவின் புறநகர் பகுதி மருத்துவமனையில் புகுந்த ஒரு கும்பல், ஒரு வார்டுக்கு தீ வைத்தது. நோயாளிகள் பலர் மூச்சுத் திணறி இறந்தனர்.

நான்கு நாட்கள் நடந்த இந்தக் கலவரம் கல்கத்தாவை மயான பூமியாக மாற்றியது. வரலாறு காணாத அளவுக்கு சடலங்கள் சாலைகளில் கிடந்தன. அவற்றைத் தின்ன வரும் கழுகுகள் கூட்டமாக நகரை வட்டமிட்டன. சடலங்களை அப்புறப்படுத்த வருபவர்களுக்கு இலவசமாக மதுவும் உணவும் வழங்கப்படுவதோடு கூடுதல் கூலியும் வழங்குவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.


சடலகங்களை வண்டிகளில் அள்ளிச்சென்று மொத்தமாகப் புதைத்தனர். சடலங்களில் இருந்து தொற்றுநோய் பரவிவிடுமோ என்ற பயம் காரணமாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்​பட்டன. இதற்கிடையில், வீடுகளை இழந்த மக்கள் நகரைவிட்டு வெளியேறத் தொடங்கினர். போக்கு​வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உணவுக்கும் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உறங்க இடமில்லாமல் மரங்களில்தான் மக்கள் தூங்கினர். நான்கு நாட்கள் நடந்த இந்தக் கலவரத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு ஐந்து பட்டாலியன்களை கல்கத்தாவில் இறக்கியது. இதில் இந்தியர்களும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும் இருந்தனர். அந்த வீரர்கள் கடுமையாகப் போராடி கலவரத்தை ஒடுக்கினர்.  

ஆகஸ்ட் 21 அன்று வங்கத்தில் முழுமையான வைஸ்ராய் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 22-ம் தேதி கலவரம் கட்டுக்குள் வந்தது. உடனே, நிவாரணப் பணிகளும் தொடங்கப்பட்டன. கல்கத்தாவில் கலவரம் ஒடுங்கியபோதும், அதன் எதிரொலியாக நவகாளியில் கலவரம் பற்றிக்கொண்டது. அங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பீகாரிலும் கலவரம் பற்றி எரியத் தொடங்கியது. கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக காந்தி ஒரு நடைபயணத்தைத் தொடங்​கினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒத்திகை போலவே, கல்கத்தா கலவரம் அமைந்துவிட்டது.

இந்தக் கலவரம் இரண்டு பக்கமும் தூண்டி​விடப்பட்டே நடந்திருக்கிறது. இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை அகன்றுவிட்டது. சகோதரர்களைப் போல பழகியவர்களை வெறிகொண்டு கொல்ல முனைந்துவிட்டனர். மோசமான மனப்போக்கின் அடையாளம் என்பதன் சாட்சியாகவே இந்தச் சம்பவம் இருந்தது. காந்தியின் தலையீடும் அவர் மேற்கொண்ட நடைபயணமும் கலவரத்தைக் கட்டுப்படுத்த உதவியது. 166 மைல்கள் நடந்து 47 கிராமங்களுக்குச் சென்றார் காந்தி. அந்த நவகாளி பகுதிகளில் இன்று வரை மதஒற்றுமையுடன் மக்கள் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்கத்தா கலவரத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று, ஐரோப்பியர்களோ பிரிட்டிஷ்காரர்களோ எவரும் கொல்லப்படவில்லை. சுதந்திர எழுச்சி பற்றி எரிந்த காலத்தில்கூட கலவர நேரத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தாக்குதலுக்கு ஆளாகவேயில்லை. ஆகவே, அவர்கள் இதை மதக் கலவரமாக மட்டுமே கருதினர். ஒருவகையில் அவர்கள் விரும்பியதுபோல இந்தியாவை இரண்டு துண்டாடப் போதுமான காரணம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.

சாமான்ய மனிதர்கள் கையில் துப்பாக்கி, கத்தி, கோடரி ஆகிய ஆயுதங்களுடன், தெருவில் கும்பல் கும்பலாக வேட்டையாடிய அந்தக் கொடூர நாட்கள் கல்கத்தாவின் நினைவுகளில் அழியாத ரத்தக்​கறையாகவே இருக்கிறது.

கல்கத்தா கலவரம் ஒடுக்கப்பட்ட பிறகு, வைஸ்ராய் அழைப்பை ஏற்று மந்திரிசபை அமைக்க நேருவுக்கு அங்கீகாரம் அளித்தது காங்கிரஸ் காரியக் கமிட்டி. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி வைஸ்ராயைச் சந்தித்த நேரு, மந்திரிகளின் பட்டியலைக் கொடுத்தார். நேரு பிரதமராகவும், சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், ஆசப் அலி, ராஜாஜி, சரத் சந்திரபோஸ் ஜான் மத்தாய், ஷாபத் அகமத்கான் உட்பட 13 பேர் அமைச்சர்களாகவும் இடம் பெற்றிருந்தனர் .
முஸ்லிம் லீகின் முறையான அனுமதியின்றி நேருவின் மந்திரிசபையில் சேர்ந்ததற்காக, ஷாபத் அகமத் கானை, சில முஸ்லிம் இளைஞர்கள் தாக்கி, கத்தியால் குத்தினர். காயத்துடன் அவர் உயிர் தப்பினார். நேருவின் மந்திரிசபை செப்டம்பர் 2-ம் தேதி பதவி ஏற்றது. நேரு மந்திரிசபை பதவி ஏற்கும் நாளை துக்க நாளாகவே நாங்கள் கருதுகிறோம் அதற்காக எல்லா இடங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என முஸ்லிம் லீக் அறிவித்தது. கறுப்புக் கொடி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பம்பாயில் வகுப்புக் கலவரம் நீடித்தது. இதில், 181 பேர் பலியாகினர். 579 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இடைக்கால மந்திரிசபையில் முஸ்லிம் லீக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று வைஸ்ராய் தொடர்ந்து வற்புறுத்தினார். கடைசியில், ஜின்னா சம்மதித்தார். இதனால், நேரு மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த சரத் சந்திரபோஸ், ஷாபத் அகமத்கான், சையத் அலி ஜாகிர் ஆகிய மூவரும் பதவி விலகிக்கொண்டனர். முஸ்லிம் லீக் சார்பாக ஐந்து மந்திரிகளை ஜின்னா இடம்பெறச் செய்தார்.

ஆனால், முஸ்லிம் லீக் மந்திரிகள் நேருவின் தலைமைக்குக் கட்டுப்படாமல் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தனியாக செயல்படத் தொடங்கினர். இந்தக் குழப்ப நிலை நேருவுக்கும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. மந்திரிசபையில் இருந்து முஸ்லிம் லீக் மந்திரிகள் ராஜினாமா செய்யவேண்டும் என்று வைஸ்ராய்க்கு கடிதம் அனுப்பிவைத்தனர். இதுபற்றி, ஜின்னாவிடம் வைஸ்ராய் கருத்துக் கேட்டபோது ''முஸ்லிம் லீக் மந்திரிகளை வெளியேற்றினால் ஆகஸ்ட் 16-ம் தேதி கல்கத்தாவில் என்ன நடந்ததோ, அதுபோல நாடு முழுவதும் கலவரம் நடக்கும்'' என்று பயமுறுத்​தினார். இதனால், ''முஸ்லிம் லீக் மந்திரிகளை பதவி விலகும்படி கட்டாயப்படுத்த முடியாது' என்று வைஸ்​ராய் கூறிவிட்டார். அப்படியானால், '' காங்கிரஸ் மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள்' என்று நேருவும் படேலும் அறிவித்தனர்.

நெருக்கடி நிலையை உணர்ந்த வைஸ்ராய், இங்கிலாந்து அரசுக்கு உடனே தகவல் அனுப்பினார். இதன் காரணமாக, பிரதமர் நேரு, ஜின்னா, நிதி மந்திரி லியாகத் அலிகான், பல்தேவ்சிங் ஆகியோரை உடனே லண்டனுக்கு அனுப்பிவைக்குமாறு வைஸ்ராய்க்கு இங்கிலாந்துப் பிரதமர் ஆட்லி கட்டளையிட்டார். அதன் பேரில், நால்வரும் 1947 பிப்ரவரியில் லண்டனுக்கு சென்றனர்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே, இந்தியாவுக்குச் சுதந்திரம் தருவதற்கான வழிமுறை​களைப் பற்றி பிரிட்டிஷ் அரசு யோசிக்கத் தொடங்கியது. அதன் பிறகுதான் பாகிஸ்தான், இந்தியா என இரண்டு தேசங்கள் உருவாக்கப்படப் போகின்றன என்ற நிலை உருவானது. அதையடுத்துதான் இந்திய சுதந்திரமும் இந்தியப் பிரிவினையும் நடந்தேறின.
இந்திய சுதந்திர வரலாறு நமக்கு சுட்டிக்​காட்டும் உண்மை என்னவென்றால், மதக் கலவரங்கள் எப்போதுமே திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன. இந்தக் கலவரங்களால் அதிகமாக பாதிப்பு அடைபவர்கள் சாமான்ய மக்களே. அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் மதக் கலவரங்களில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கின்றனர். மதம், மக்களிடையே சகிப்புத்தன்மையும் அன்பையும் பகிர்ந்து தருவதற்கு மாற்றாக... கொலை வெறியை, வன்முறையை வளர்த்துவிடுகிறது என்றால், அதை வழிநடத்துபவர்களின் செயல்களில்தான் தவறு இருக்கிறது.

கல்கத்தா, நவகாளி கலவரங்களில் பலியான அப்பாவி மக்களின் கருகிய உடல்கள் நம்மிடம் யாசிப்பது, மதத்தின் பெயரால் மனித உயிர்களைப் பலி கொடுக்காதீர்கள் என்பதை மட்டுமே. அதை நாம் மறந்தால், நடமாடும் சடலங்களாகவே நாம் கருதப்படுவோம்.

Friday, May 24, 2013

ஸ்பாட் ஃபிக்ஸிங் என்றால் என்ன தெரியுமா?


ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது ஆட்டத்தின் போக்கை செயற்கையாகத் தன்வசப்படுத்துவது. நோ பால் வீசுவது, வைட் பந்து வீசுவது, பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன்கள் எடுப்பதுபோல பௌலிங் செய்வது, ரன் அடிக்காமல் இருப்பது, கேட்ச்சைக் கோட்டை விடுவது என்று மைதானத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்களை முன்கூட்டியே தீர்மானிப்பது. இதில் விளையாட்டு உணர்வு அடிபட்டு, பணம் சம்பாதிப்பதும் அணிக்குத் துரோகம் விளைவிப்பதுமே முக்கியமானவை. இதற்கு பெரும்பாலும் அவுட் ஆஃப் பார்ம் மற்றும் சாதாரண வீரர்கள்தான் பலியாவார்கள். ஆக, இப்படியான சூதாட்ட முறைகளைத் தடைசெய்ய புதிய சட்டம் அவசியம்! தற்போது, 3 ஐ.பி.எல். வீரர்களைக் கைது செய்த தில்லி காவல் துறைதான் 2000ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹான்ஸி குரோனியே மீதான மேட்ச் ஃபிக்ஸிங் புகாரையும் விசாரித்தது. அந்த வழக்கில் 13 வருடங்களாகியும் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியவில்லை. ஐ.பி.சி. 420, 120 பி பிரிவுகளில் வழக்கு குரோனியே மீது பதிவுசெய்யப்பட்டது. இப்போது இதே பிரிவுகளில்தான் 3 ஐ.பி.எல். வீரர்கள் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்திய அரசு இதுவரை மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக எந்தவொரு வலுவான சட்டத்தையும் கொண்டுவராததால் மூன்று பேரும் பெரிதாகப் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கருத்து நிலவுகிறது. இப்போது, சூதாட்டத்தைத் தடை செய்வதற்கு ஏற்ற வகையில் வலுவான ஒரு சட்டத்தை இயற்றி அதைக் கண்டிப்புடன் அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. ‘சூதாட்டம் தொடர்பாக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும். இது தொடர்பான வரைவை விரைவில் தயாரிப்போம்" என்கிறார் சட்ட அமைச்சர் கபில் சிபில். சொன்னது போலவும் பத்து ஆண்டு தண்டனை என்று சட்டம் கொண்டு வர உள்ளனர்..

பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீனிவாசன் இதுகுறித்து கருத்து சொல்கையில், இந்தியாவில் சூதாட்டம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. சூதாட்டத் தரகர்களை பி.சி. சி.ஐ.யால் கட்டுப்படுத்த முடியாது. மற்ற நாடுகளில் சூதாட்டம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் சட்டரீதியான அங்கீகாரம் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. இனிமேல், ஒவ்வொரு ஐ.பி.எல். அணியையும் கண்காணிப்பதற்கு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் நியமிக்கப்படுவார்கள்" என்றார். இனி கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விரிவான விவாதமும், சட்டத் திருத்தமும் கிரிக்கெட் பற்றி மக்களிடம் நம்பிக்கையையும் எழுப்ப வேண்டியது அரசின் உடனடி நிலைப்பாடாகும்.

டிராவிட் மாதிரி கிரிக்கெட்டை விருப்பத்துக்காக ஆடிய காலம் இப்போது இல்லை. முன்பு கல்வியறிவுள்ள சூழல்களிலிருந்து கிரிக்கெட் வீரர்கள் தோன்றினார்கள். இன்று கிரிக்கெட்டின் வரலாறு, கிரிக்கெட்டின் அருமை தெரியாதவர்கள் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு கிரிக்கெட் ஆட வருவதால்தான் இத்தனை பிரச்னைகள். இந்தச் சர்ச்சைகளால் டி20-யின் மகத்துவம் குறைந்துவிடவில்லை. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இந்திய கிரிக்கெட்டைச் சுத்தப்படுத்தலாம். ஐ.பி.எல். மூலமாக நமக்கு கரன் சர்மா மாதிரியான நிறைய புதிய வீரர்கள் கிடைக்கிறார்கள். மூன்று கிரிக்கெட் வீரர்களின் கைதுக்குப் பிறகு நடந்த மேட்சுகளிலும் ரசிகர்கள் தொடர்ந்து ஐ.பி.எல்.க்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதனால் ஒரு சிலருடைய தவறுகளால் ஐ.பி.எல்.க்கு எந்தக் களங்கமும் ஏற்படாது. தவறு செய்த வீரர்களுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தால்தான் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது.

தில்லி போலீஸ், ஐ.பி.எல். வீரர்களைக் கைது செய்த வேளையில், சென்னையில் சூதாட்டத் தரகர்களைக் கைது செய்யும் பணி சுறுசுறுப்படைந்தது. பிரசாந்த் என்ற முக்கிய தரகர்தான் சென்னை சூதாட்டங்களை வழிநடத்தியவராம். அவரோடு சஞ்சய் பாவ்னா, உத்தம் ஜெயினும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சூதாட்டங்களைத் தடைசெய்யவே முடியாது" என்று தெனாவட்டாகப் பேசியிருக்கிறார் பிரசாந்த்!

ஐ.பி.எல். ஸ்பாட் ஃபிக்ஸிங் - சூது கவ்வியது!

 
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நிருபர் கூட்டத்தில் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் ராகுல் டிராவிட். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 
 
டிராவிட், நீங்கள் ஓர் அற்புதமான ஸ்லிப் ஃபீல்டர். ஆனால், சமீபகாலமாக நிறைய கேட்சுகளைக் கோட்டை விட்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடைய ஓய்வை முடிவு செய்ததா?"

உண்மைதான்" என்று ஒப்புக்கொண்டார் டிராவிட். நான் மட்டுமல்ல, எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் கேட்ச்சை ட்ராப் செய்வது என்பது கொடுமையான விஷயம். அவுட் ஆவதைக்கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், கேட்ச்சை நழுவவிட்டால் அந்தக் காயம் அவ்வளவு சீக்கிரம் காயாது" என்றார். இந்திய கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் அளவுக்கு அணிக்காகத் தலையைக்கூட கொடுக்கும் மனோபாவம் கொண்ட வீரர் எவருமில்லை. ஆனால் இன்று டிராவிடின் தலைமையில் ஆடிய, அவரிடமிருந்து எந்த ஒழுங்கையும் கற்றுக் கொள்ளாத 3 வீரர்கள் வெகுசுலபமாக ரசிகர்களுக்குத் துரோகம் விளைவித்திருக்கிறார்கள். ஐ.பி.எல்.லில் சீரியஸ் கிரிக்கெட்டே இல்லை, எல்லாமே ஃபிக்ஸிங்தான் என்கிற வாதத்துக்கு வேறு வலு சேர்த்திருக்கிறார்கள்.

இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் பங்கேற்ற ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களும் சூதாட்டக் கும்பலுடன் சேர்ந்து கொண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் மோசடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த தில்லி காவல் துறையினர், மூவரையும் கைது செய்துள்ளார்கள். இந்த மூன்று வீரர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களின் செல்போன்களை இடைமறித்துக் கேட்கப்பட்டபோது மே 5, 9, 15 ஆகிய தேதிகளில், ஜெய்ப்பூர், மொஹாலி, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்ற போட்டிகளில் மூவரும் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தில்லி காவல் ஆணையர் நீரஜ் குமார் ஐ.பி.எல். ஊழல்கள் பற்றி விவரிக்கையில்... மூன்று வீரர்களும் சமிக்ஞை முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது வீடியோ ஆதாரம் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசாந்த், பேன்ட் பாக்கெட்டில் வெள்ளை நிற டவலை வைத்துக் கொள்வதை அடையாளமாக்கினார். கிரிக்கெட் வீரர்களின் செல்போன் உரையாடலை ஆய்வு செய்தபோது, தங்களுக்கு அழகிகள் சப்ளை செய்ய வேண்டும் என்று சூதாட்டக்காரர்களிடம் கேட்டுக் கொண்டது பதிவாகி இருக்கிறது. சில ஓவர்கள் மட்டுமல்ல, முழு மேட்சிலும் ஃபிக்ஸிங் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது" என்கிறார். நாளுக்குநாள் கிடைக்கிற புதுத் தகவல்கள் ஒவ்வொன்றும் நம்ப முடியாதவையாக இருக்கின்றன.

ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. ஸ்ரீசாந்துக்குப் பெண் பார்த்துவிட்டார்கள். செப்டெம்பரில் திருமணம் நடக்க இருந்தது. அங்கீத் சவான், தன் காதலியை ஜூன் 2-ந்தேதி அன்று திருமணம் செய்ய இருந்தார். ஸ்ரீசாந்தின் திருமணத்தைக் கெடுக்க, திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம். சரியான ஆதாரம் இல்லாமல் யாரையும் குறை சொல்ல முடியாது. ஆனால், தோனி, ஹர்பஜன் மீது சந்தேகம் இருக்கிறது. ஹர்பஜனுக்கு எதிராக ட்விட்டரில் பேசியதால் சதி உண்டாகியிருக்கலாம்" என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் ஸ்ரீசாந்தின் சகோதரரான மது பாலகிருஷ்ணன். என் மகனுடன் ஒரு பெண் இருந்ததாகச் செய்தி வந்தபிறகு இனி அவரை யார் மணந்து கொள்வார்?" என்று பரிதாபமாகக் கேட்கிறார் ஸ்ரீசாந்தின் தாயார். ஸ்ரீசாந்த் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஒட்டுமொத்த கேரள கிரிக்கெட் ரசிகர்களும் குமுறுகிறார்கள். குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பதற்கு இத்தனை விளைவுகள் இருக்கும் என்பதை மூன்று பேரும் அறிந்திருக்க வாய்ப்புண்டா?

சட்டப்படி தவறு என்றாலும் கிரிக்கெட் சூதாட்டம் மும்பை, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் மும்முரமாக நடைபெற்றுள்ளது. ஐ.பி.எல். சீஸன் முழுக்க நடந்த சூதாட்டங்களில் 25,000 கோடி ரூபாய் கைமாறப்பட்டுள்ளது. ஒரு ஐ.பி.எல். மேட்ச் நடந்தால் அதில் பெட்டிங் செய்ய 120 வழிகள் உள்ளன. அதாவது 120 பந்துகளிலும் பெட்டிங் பண்ணலாம். ஐ.பி.எல். பார்ப்பவர்களுக்குத்தான் இது விளையாட்டு. வேறு சிலருக்கு இது பண விளையாட்டு! இனிமேலாவது ஐ.பி.எல். நிர்வாகம் விழிப்புடன் இல்லாவிட்டால், அதற்குத் தடைவிதிக்க நீண்ட நாளாகாது.
 

Thursday, May 23, 2013

ஜெயலலிதா அரசின் ப்ளஸ், மைனஸ் என்ன..?

ராண்டில் நூறாண்டு சாதனை’ என்றார் போன வருடம். 'சாதனை புரிந்த ஈராண்டு; சரித்திரம் பேசும் பல்லாண்டு’ என்கிறார் இப்போது.

ஆனால், ஜெயலலிதா சொல்வதை வழிமொழியும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை. விண்ணை எட்டும் விலைவாசி, சிறு மற்றும் பெருந்தொழில்களைக்கூட மோசமாக்கி நாசமாக்கிய மின்வெட்டு. இந்த இரண்டுக்கும் மத்தியில் கொண்டாடும் சூழ்நிலை மக்களுக்கு இல்லை. விலைவாசி, மின் விநியோகம், சட்டம்-ஒழுங்கு இந்த மூன்று துறைகளிலும் முத்திரை பதித்த ஆட்சியைத்தான் பொதுமக்கள் சிறப்பான ஆட்சி என்று ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அந்த மூன்றிலுமே ஸ்கோர் செய்யவில்லை ஜெ. அரசு. இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட ஜெயலலிதா அரசின் ப்ளஸ், மைனஸ் என்ன..? 

'மகராசி’ அரசாட்சி! 

ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வழங்குவது அடித்தட்டு மக்கள் வீட்டில் அடுப்பெரிய உதவு கிறது. அதேபோல் சென்னை மாநகராட்சியில் உருவாகி நிற்கும் 'அம்மா உணவகங்கள்’ மிகமிக அடித்தட்டு மக்களின் பசித்த வயிறுகளுக்குப் பந்தி பரிமாறுகின்றன. இவை அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இதே தரம் மற்றும் சுகாதாரத் துடன் விரிவுபடுத்தப்பட்டு, தொடர்ந்து சீராகப் பராமரிக்கப்பட்டால், எம்.ஜி.ஆருக்குச் சத்து ணவுத் திட்டம் கொடுத்த அழியாப் புகழைப் போல ஜெயலலிதாவுக்கு 'அம்மா உணவகங்கள்’ கொடுக்கும்.

இதேபோல் கிராமப்புறத்தில் அமலில் இருக்கும் 'அம்மா திட்டம்’ ஒன்றும் பலதரப் பட்டவர்க்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அரசு அலுவலரிடம் இருந்து ஒரு கையெழுத்தோ, கார்டோ வாங்குவதற்குள் அப்பாவிகள் வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. இதைத் தவிர்க்க, வருவாய்த் துறை சார்பில் அனைத்துத் துறை நலத் திட்ட உதவிகளும் நேரில் சென்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, உழவர் பாதுகாப்பு நலத் திட்ட உதவி கள் என அனைத்தையும் ஓர் ஊராட்சிக்குச் சென்று ஒரே நாளில் அளிக்கும் திட்டம் இது. மிகச் சரியாகச் செய்துகொடுக்கும் வருவாய்த் துறை அதிகாரிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தால், வரும் ஓராண்டுக்குள் அரசாங்க எதிர்பார்ப்பு இல்லாமல் அனைத்து மக்களும் செயல்படக்கூடிய சுபிட்ச நிலைமை உருவாகக்கூடும். அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி என்பது எப்போதும் இந்த மக்கள்தான். அவர் கள் நலன் சார்ந்தே இத்தகைய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன!  


மத்திய அரசுடன் மல்லுக்கட்டு!

எதிர்க் கட்சியாக இருக்கும்போது மத்திய அரசைக் கடுமையாக எதிர்ப்பது, ஆளும் கட்சி ஆனதும் ஆதாயங்களை அனுபவிப்பது... இது அனைத்துக் கட்சிகளுக்கும் வழக்கமானதுதான். ஆனால், ஜெயலலிதாதான் மத்திய அரசு மீதான தனது கடுமையான விமர்சனங்களைப் பின் வாங்காமல் பிரயோகிக்கிறார். 'ஆட்சியைப் பிடிப்பது எனது விருப்பமல்ல; மக்களுக்கு நன்மை செய்வதே குறிக்கோள். தமிழர்களின் உரிமையைப் பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று பகிரங்கமாக ஜெயலலிதா அறிவித்தார்.

காவிரிப் பிரச்னையில் ஆணையத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடாததை, முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளாவுக்குச் சார்பான நிலைப்பாடு எடுக்கத் திட்டமிட்டதை எதிர்த்தது முதல், சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்கும் உரிமையை மாநில அரசின் கையில் இருந்து பறிப் பது, அனைத்து நலத் திட்டங்களுக்குமானமானி யத்தை நேரடியாக வழங்குவதைக் கண்டிப்பது வரை... மத்திய அரசுக்கு இவர் காட்டிய எதிர்ப்பின் பட்டியல் நீளமானது. பி.ஜே.பி. ஆளும் மாநில முதல்வர்கள் கூட இத்தகைய எதிர்ப்பைக் காட்ட்வில்லை.

'மாநில சுயாட்சி’ என்று வெற்று வாதமாகப் பேசிக்கொண்டிருப்பதை விட, நடைமுறையில் அதற்கான பகிரங்க எதிர்ப்பைக் காட்டுவதே தற்போதைய அதிஅவசியத் தேவை. மாநில அரசாங்கங்கள் மத்திய அரசின் குத்தகைப் பிரதேசங்களாக நினைக்கும் மனோபாவத்தை எதிர்க்கும் முதலமைச்சராக ஜெயலலிதாதன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

நிம்மதி இழந்த மக்கள்!

'நெல்லுச் சோறு’ சாப்பிடுவது ஒரு காலத்தில் மிக அபூர்வமாக இருந்தது. தற்போது அப்படி ஒரு சூழ்நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். தரமான அரிசிக்கான விலை, தர முடியாத விலையாக இருக்கிறது. பருப்புக்கும் இதே நிலைதான். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பம் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை 2,500-க்கு வாங்கியது என்றால், இன்று அதன் சந்தை மதிப்பு விலை 6,000-க்கும் மேல். இந்த வர்த்த கத்தை அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த அரசாங்கமும் கண்ணை மூடிக் கொள்ள முடியாது.

விலைவாசி உயர்வதால் மானிய விலையில் அரிசி, பருப்பு கொடுப்பது நிரந்தரத் தீர்வு ஆகாது. விளைச்சலை அதிகப்படுத்தி, உற்பத்திப் பெருக்கத்தை முடுக்கிவிடுவதே தொலைநோக்கில் நலன் பயப்பதாகும். ஆனால், உணவுப் பொருள் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகுறித்து இந்த அரசாங்கம் எத்தகைய முயற்சியும் எடுக்கவில்லை!
 
ஷாக்... ஷாக்... ஷாக்!
ஜெயலலிதாவின் இமேஜை ஏகத்துக்கும் டேமேஜ் செய்த விஷயங்களில் முக்கியமானது மின்சாரம். எந்த ஆட்சியாக இருந்தாலும், மின் உற்பத்தியை 10 ஆண்டுகளுக்குப் பிறகான தேவையைக் கருத்தில்கொண்டே திட்டமிட வேண்டும். ஆனால், தமிழகத்தை மாறிமாறி ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு ஆட்சிகளுக்கும் அந்த அக்கறை எள்ளளவும் இருந்தது இல்லை. அதன் விளைவாகத்தான் தமிழகம் இருண்ட கண்டமாகிவிட்டது.

இந்த அவஸ்தை ஜெயலலிதா மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 7,000 கோடியில் அவர் உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் புதிய புனல் மின் நிலையம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை 10 ஆண்டுகள் கழித்து வழங்கும்.
இப்படியான திட்டங்களை முன்னரே தீட்டா ததன் விளைவுதான் சமீபத்தியக் கெட்ட பெயர். ஆண்டுதோறும் மக்கள்தொகை உயரும் சதவிகித அடிப்படையில் மின் உற்பத்தித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். புதிய திட்டங்களில் காட்டும் அக்கறையை ஏற்கெ னவே இருக்கும் மின் திட்டப் பராமரிப்புகளிலும் காட்ட வேண்டும். மேட்டூர், வட சென்னை, தூத்துக்குடி திட்டங்கள் திடீர் திடீரெனப் பழுதடைவதைத் தடுத்தாக வேண்டும்!

நல்ல, திறமையான மந்திரி யார்?

தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களில் நல்லவர்கள் யார், வல்லவர்கள் யார் என்று ஜெயலலிதா ஒரு பட்டியல்எடுத்துப் பார்க்க வேண்டும். 30 அமைச்சர் களும் யோக்கியசிகாமணிகளாக அமைவது குதிரைக் கொம்புதான். ஆனால், சரிபாதியாவது சரியானவர்களாக இருக்க வேண்டாமா? 'அரசியலில் துறவறம் பூண்டு மக்கள் சேவையை நான் செய்துவருகிறேன்’ என்று ஜெயலலிதா சொல்கிறார். ஆனால், ஒரு சுயநல வட்டத்தை உருவாக்கிக்கொண்டு, சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட மதிக்காமல், 'பசை’ காட்டினால்தான் காரியம் நடக்கும் என்று செயல்படும் மந்திரிகளை அறிந்துகொள்ள வேண்டாமா?  

'நமக்கு எதுக்குங்க வம்பு? சும்மா மந்திரியா இருந்தாப் போதும்’ என்று எந்த முடிவுமே எடுக்காத மந்திரிகளும் உண்டு. சென்னை வீடு, தலைமைச் செயலகம், தொகுதி, சொந்த ஊர்... என நான்கு எல்லைக்குள் கார் கபடி மட்டுமே ஆடிக்கொண்டிருக்கும் மந்திரிகளும் உண்டு. அ.தி.மு.க-வில் தகுதியானவர்.

இல்லையா? அவர்களை அடையாளம் காண முடியவில்லையா? தகுதியானவர்களுக்கும் செயல்படத் தயக்கம் இருக்கிறதா? அல்லது அவர்கள் அப்படி இருப்பதுதான் மேலிடத்தின் விருப்பமா?

ஈழத் தாய்!
கருணாநிதியின் காலை வாரிய ஈழத் தமிழர் பிரச்னையை ஜெயலலிதா சிக்கெனப் பிடித்துக்கொண்டார். 'இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி, குற்றம் நடத்தியவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். தமிழ் ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்’ என்பது ஜெயலலிதாவின் திடீர் நிலைப்பாடு. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கள் வீரர்கள் கலந்துகொள்ளத் தடை விதித்தது முதல், மூன்று தமிழர் தூக்குக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தது வரை அவரது முடிவுகளில் அரசியல் உள்நோக்கம் இருந்தாலும், தமிழ் ஈழ ஆதரவாளர் கள் மத்தியில் அதற்கோர் ஆதரவு அலை உருவாகியிருப்பதையும் மறுக்க முடியாது!

யாமிருக்கப் பயமேன்!
'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்’ என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால், அங்கிருந்த திருடர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் திருட்டு, கொள்ளை, வழிப்பறிகள் முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்தன.

இங்கே பிரச்னை கருணாநிதியா, ஜெயலலி தாவா என்பது அல்ல. பொதுவாகவே போலீஸ் மீது பயம் போய்விட்டது. எந்தத் தப்பும் செய்யா தவன்தான், நியாயமான புகார் கொடுக்க காவல் நிலையத்துக்குச் செல்லப் பயப்படுகிறான். தொடர்ச்சியாகத் தவறு செய்பவர்களுக்குக் காவல் நிலையம்தான் தப்பிக்கும் வாசலைத் திறந்துவைக்கிறது. இந்த கள்ள போலீஸ் விளையாட்டு நடக்கும் வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி குறையாது.

அ.தி.மு.க. ஆட்சியில் போலீஸுக்குப் பொதுவாகவே 'எதுவும் செய்யலாம்’ என்ற லைசென்ஸ் வழங்கப்படும். அதுவும் இதற்குக் காரணம். மோட்டிவ் கொலைகள், ஆதாயக் கொலைகள் என எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் குற்றங்கள் பெருகிவருகின்றன. கூலிப் படைகள், பெயர்ப் பலகை மாட்டி தனி வெப்சைட் திறக்காத குறையாகப் பட்டவர்த்தனமாகச் செயல்படுகின்றன. 20 வயது இளைஞர்கள் சர்வசாதாரணமாக ஃபீஸ் ஃபிக்ஸ் பண்ணி, போட்டுத்தள்ளிவிட்டுப்போகிறார்கள்.

இதைத் தடுக்கக் காவல் துறையின் உயர் அதிகாரிகளால் முடியவில்லை. அவர்களுக்கு வேறு பிசினஸ் உள்ளது. இப்போதே இதைக் கவனிக்காவிட்டால், ஐந்து ஆண்டுகள் முடியும் போது இந்த ஆட்சியால் கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளின் தொகை, நீக்கப்பட்ட மந்திரி களைவிடக் கூடுதலாக இருக்கும்!

எதுக்கு எவ்வளவு ரேட்?
'ஒரு நேர்மையான நிர்வாகத்தைக் கொடுப்பேன்’ என்று ஜெயலலிதா முதலில் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியில் சுற்றிக்கொண்டிருந்த புரோக்கர் கூட்டம் இப்போதும் சுற்றிச் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம், கல்வி ஆகிய பசையான துறைகளை மையமாக வைத்து இவர் கள் அலைகிறார்கள். கான்ட்ராக்ட், கமிஷன் பேசப்படும் இடங்களில் இவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பதவிக்கும், பணி உயர்வுக்கும், இடமாறுதலுக்கும், நியமனத்துக்கும் தனித்தனிக் கட்டணங்களை இந்தப் புரோக்கர்கள் அறிவிக்கிறார்கள். கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது இது இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.


குறிப்பிட்ட 20 பேர், மொத்தத் தமிழக நிர்வாகத்தையும் தங்களது சொந்த அபிலாஷைகளுக் குப் பயன்படுத்திவருவது ஜெயலலிதாவுக்கு நிச்சயம் பெருமை சேர்க்காது!

ஆபீஸர்ஸ் ராஜ்யம்!
இது அதிகாரிகளின் அரசாங்கமாக இருக்கிறது. தகுதியற்ற அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் அதிகாரிகள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். பல முக்கியமான துறைகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமைச்சர்களே நடுங்குகிறார்கள். 'சி.எம். ஆபீஸ்ல இவங்க ஏதாவது போட்டுக்கொடுத்திருவாங்க’ என்று பயப்படும் அமைச்சர்கள் அதிகம். முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளின் 'குட் புக்’கில் இடம்பெற்றிருக்கும்  ஐ.ஏ.எஸ்கள் நினைத்தால் எதுவும் சாத்தியம். இதனால், சிலரது வசதி வாய்ப்புகள் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட முடியாத உச்சத்தைத் தாண்டி எகிறுகிறது. குறிப்பிட்ட 10 பேரின் கொட்டத்தை அடக்குவதன் மூலமாக, ஜெய லலிதா தனது தனித்தன்மையை நிரூபிக்கலாம்.

தைரியலட்சுமி!
காஞ்சி சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரை ஜெயலலிதா கைதுசெய்தபோது டி.ராஜேந்தர் சொன்னார், 'கருணாநிதி இருந்திருந்தால், சங்கர மடத்தின் வாட்ச்மேனைக்கூடக் கைதுசெய்திருக்க மாட்டார்’ என்று. டாக்டர் ராமதாஸ் கைதும் அத்தகைய செல்வாக்கை ஜெயலலிதாவுக்கு ஊட்டியிருக்கிறது. முடிவு செய்துவிட்டால் யாரையும் தட்டிக்கேட்கும் தைரியம் அவருக்கு உண்டு.


கொங்கு மண்டல விவசாயிகளைப் பாதிக்கும் 'கெய்ல்’ திட்டத்தை முடக்கியது முதல், தென் மண்டலத்தில் கிலி பரப்பிய 'ஸ்டெர்லைட்’ வரை தடைபோட்டார். தீவிரவாதி என்றாலே தாடிவைத்த முஸ்லிமாகக் காட்டும் சினிமா விஸ்வரூபங்களுக்குத் தடை போட்டார். நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான வழக்கு அந்த மாஃபியாக்களை அடங்கவைத்தது. மதுரை பி.ஆர்.பி-க்கு எதிரான நடவடிக்கை அ.தி.மு.க -வின் மூத்த பிரமுகர்கள் பலருக்கே குடைச்ச லைக் கொடுத்தது. குட்கா, பான்பராக் ஆகிய போதை வஸ்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதில் பல விஷயங்கள் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

ஆக, ஒரு தலைமைக்குத் தேவையான தெளிவும், தீர்க்கமும், உறுதியும் ஜெயலலிதாவிடம் உண்டு. தற்போது தமிழகத்தின் வேறெந்த அரசியல் ஆளுமையிடமும் காணக் கிடைக்காத தகுதிகள் இவை.

சித்திரை மாதம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம், வள்ளுவர் சிலை பராமரிப்பு, சமச்சீர் கல்வி என எல்லாவற்றையும் 'கருணாநிதி எதிர்ப்புக் கண்ணாடி’ போட்டுப் பார்ப்பதை முதலில் விட வேண்டும்.

தமிழன்னைக்குச் சிலை வைப்பதை விட்டு விட்டு, தமிழக அரசு நிர்வாகத்தில் இருக்கும் களங்கங்களைக் களையெடுங்கள்.

Wednesday, May 22, 2013

எனது இந்தியா ( இடைக்கால அரசாங்கமும் கல்கத்தா கலவரமும் !) - எஸ். ரா...

1945ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி இந்திய வைஸ்ராய் வேவல், ரேடியோவில் ஓர் உரை நிகழ்த்தினார். அதில், ''இந்திய மக்களுக்கு விரைவில் முழு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள மத்திய, மாநில சட்டசபைத் தேர்தல்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களைக்கொண்டு ஓர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும். விரைவில், அரசியல் நிர்ணய சபை முறையாக உருவாக்கப்படும்'' என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அவர் இங்கிலாந்து பிரதமர் ஆட்லியை சந்தித்துவிட்டு வந்த பிறகே அறிவித்தார். இதே அறிவிப்பு லண்டன் ரேடியோவில் பிரதமர் ஆட்லியாலும் அறிவிக்கப்பட்டது. இப்படி ஓர் அறிவிப்பை பிரிட்டிஷ் வெளியிடுவதற்கு வலிமையான காரணங்கள் இந்தியாவில் உருவாகியிருந்தன. அதுவரை தங்கள் கட்டுக்குள் இருந்த இந்திய மக்கள் இனிமேலும் தங்களை சகித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்பதைப் பிரிட்டிஷ்காரர்கள் நன்றாக உணர்ந்திருந்தனர். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் அடித்தளங்கள் நொறுங்கிவருவதைக் கண்ட அரசு, முள்ளைக்கொண்டு முள்ளை எடுப்பதைப் போல தங்களின் ஆசைகளை இந்தியர்களைக்கொண்டே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. அதன் விளைவே இந்த அறிவிப்பு. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறப்போவதன் முதல் படிதான் இந்த அறிவிப்பு என்று பலரும் கருதினர்.


இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது கப்பற்படை எழுச்சி. 1946-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி திங்கள்கிழமை மும்பை கடற்கரையில் இருந்த எச்.எம்.ஐ.எஸ். 'தல்வார்’ என்ற கப்பற்படையின் பயிற்சிக் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் ஒன்றுகூடி கப்பலின் கொடிக் கம்பத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியை இறக்கினர். அதற்கு மாற்றாக காங்கிரஸின் மூவர்ணக் கொடி, முஸ்லீம் லீக்கின் பச்சை நிறக் கொடி, கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி ஆகியவற்றை ஒருசேரக் கம்பத்தில் பறக்கவிட்டனர்.

இந்தச் செய்தி வேகமாகப் பரவியது. ஒவ்வொரு கப்பலிலும் இதே நிலைமை உருவாகத் தொடங்கியது. மறுநாள் காலை, வேலைநிறுத்தம் செய்த மாலுமிகள் பம்பாய் மாநகரத் தெருக்களில் ஊர்வலம் சென்றனர். இந்தப் போராட்டக் குழுவுக்கு எம்.எஸ்.கான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியக் கப்பற்படை எழுச்சிகொண்டது என்றாலும், இதன் அடிப்படையாக அமைந்தது சுதந்திர தாகமே. கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று, லட்சக்கணக்கில் மாணவர்களும் தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கினர். பம்பாய் மாநகரமே ஸ்தம்பித்தது. பிரிட்டிஷ் அரசு, பம்பாயை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடும் முயற்சி செய்தது. பீரங்கிகளும் துப்பாக்கிகளும் குவிக்கப்பட்டன. மக்கள் எழுச்சியை இரும்புக் கரம்கொண்டு அடக்க முயன்றது பிரிட்டிஷ் அரசு.


இதனால், இரண்டு நாட்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிழந்தனர். காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் இந்தக் கிளர்ச்சியை நிறுத்துமாறு அறிக்கைகள் வெளியிட்டன. மாலுமிகள் உடனே சரணடையுமாறும், அவர்கள் பழிவாங்கப்படாமல் இருக்க காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் வல்லபாய் படேல் கூறினார். இறுதியாக, 'நாங்கள் இந்தியாவிடம் சரணடைகிறோம். பிரிட்டனிடம் அல்ல’ என கப்பற்படை வேலைநிறுத்தக் கமிட்டி சரணடைந்தது. மாலுமிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு கடுமையான சிறைத் தண்டனைக்கு ஆளாகினர். அதன்பிறகே, இந்தி யாவில் ஓர் இடைக்கால அரசு அமைப்பது என்ற எண்ணம் இங்கிலாந்தில் உருவானது.

1946-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி, இந்தியத் தலைவர்களோடு பேசுவதற்கு கிரிப்ஸ், லாரன்ஸ், அலெக்சாண்டர் ஆகியோர் அடங்கிய கேபினட் மிஷனை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி. இடைக்கால அரசு அமைப்பது என்றும் அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கத் தேவையான ஒரு குழு அமைப்பது என்றும் அந்தக் கமிஷன் முடிவுசெய்தது. அதன் வழிகாட்டலில் மூன்று அடுக்குகளால் ஆன ஓர் அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டது.  அதன்படி, தகவல் தொடர்பு, ராணுவம், அயல்நாட்டு விவகாரம் போன்றவற்றைக் கவனிக்க மத்திய அரசாங்கம் என்றும், அடுத்ததாக மாநிலங்கள் என்றும், மூன்றாவதாக சமஸ்தானங்கள் என்றும் வரையறை செய்யப்பட்டது.  இதில், சமஸ்தானங்கள் தங்கள் விருப்பப்படி அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்துகொள்ள உரிமை வழங்கப்பட்டது. காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இதர சிறுபான்மையினர் பிரதிநிதிகளுடன் வைஸ்ராய் ஆலோசனை நடத்தி ஓர் இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்த முயற்சித்தார். முஸ்லிம் லீக், காங்கிரஸுக்கு இணையான பிரதிநிதித்துவம் வேண்டும் என்றது. மேலும், முஸ்லிம் பிரதிநிதிகளைத் தேர்தெடுக்கும் உரிமை தனக்கே வேண்டும் என வலியுறுத்தியது. காங்கிரஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கிடையில், எங்கள் குறிக்கோள் தனி பாகிஸ்தானே என முஸ்லிம் லீக் அறிவித்தது. இந்த நிலையில்தான், இடைக்கால அரசு அமைப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலைவர்கள், தேர்தலை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சதி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தவர்களை விடுவிக்கவில்லை. முதலில், மத்திய சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 102 இடங்களில், காங்கிரஸ் 57 இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லிம் லீக் 30 இடங்களைப் பிடித்தது. சுயேச்சைகளுக்கு 5 இடங்களும் சீக்கியர்​களுக்கு 8 இடங்​களும் கிடைத்தன.
மாநிலச் சட்டசபைகளுக்கு 1946-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை மாகாணம், மும்பை, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒரிசா, அசாம், பீகார் ஆகிய ஏழு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதாகக் கருதப்பட்ட சிந்து, வடமேற்கு எல்லை, வங்காளம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் காங்கிரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் முஸ்லிம் லீக்குக்கும் அங்கே பெரும்பான்மை கிடைக்கவில்லை.

சென்னை மாகாணத்தில் டி.பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் மந்திரிசபை பதவியேற்றது. இந்த மந்திரிசபையில் ருக்மணி லட்சுமிபதி (சுகாதாரம்), வி.வி.கிரி (தொழில்), கே.கோடி ரெட்டி (வரி), டேனியல் தாமஸ் (உள்ளாட்சி, டிராம் போக்குவரத்து), கே.ஆர்.காந்த் (வருவாய்), எம்.பக்தவத்சலம் (பொதுப் பணி), பி.எஸ்.குமாரசாமி ராஜா (வேளாண்மை), டி.எஸ்.அவினாசி லிங்கம் (கல்வி), வி.கூர்மையா (செய்தி, அரிஜன முன்னேற்றம்), வி.வீராசாமி (கைத்தொழில்), ராகவ மேனன் (போக்குவரத்து) ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற்றனர்.

1946-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி மத்தியில் இடைக்கால மந்திரிசபை அமைக்க நேருவை அழைத்தார் வைஸ்ராய். மந்திரி சபையில் முஸ்லிம் லீக்குக்கு 5 இடங்கள் உண்டென்றும் அதை எப்போது வேண்டுமானாலும் நிரப்ப ஜின்னாவுக்கு உரிமை உண்டு என்றும் வைஸ்ராய் அறிவித்தார். மந்திரிசபை அமைக்க வைஸ்ராய் தன்னிச்சையாக நேருவை அழைத்ததை அறிந்து, ஜின்னா மிகவும் கோபம் அடைந்தார். இந்தச் செயல் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை வைஸ்ராய் மிகவும் அவமதித்துவிட்டதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். அத்துடன், நேருவின் தலைமையில் அமையவிருப்பது இந்துக்களின் ஆட்சி. அது, தங்களுக்கு ஏற்புடையது இல்லை எனக் கண்டனம் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 16-ம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

'நேரடி நடவடிக்கை நாள்’ அன்று இந்தியாவின் பல இடங்களிலும் கல​வரங்கள் ஏற்பட்டன. கல்கத்தாவில்தான் உக்கிரமாக இருந்​தது. கொலை, கொள்ளை, தீ வைப்பு, கற்பழிப்பு என கல்கத்தா முழுமை​யாகச் சூறையாடப்பட்டது. கொத்துக்கொத்தாக மனிதர்கள் சாலையோரங்களில் செத்துக்கிடந்தனர். சடலங்களைப் புதைப்பதற்குக்கூட வழியில்லாத நிலை உருவானது. இந்தக் கலவரம், இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத படிப்​பினையை ஏற்படுத்தியது. கல்கத்தா கலவரத்துக்கு இரண்டு முக்கியக் காரணங்​களைக் கூறுகின்றனர். ஒன்று, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் ஆகியவற்றுக்கு இடையே உருவாகி வளர்ந்த கசப்பு உணர்ச்சி. மற்றொன்று, வங்காளத்தின் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாகவும் மேற்குப் பகுதியில் இந்துக்கள் அதிகமாகவும் வாழ்கின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்டு இருந்த வியாபாரப் போட்டிகள், வேறுபாடுகள், மதவாதிகளால் தூண்டி​விடப்​பட்டு இந்த கலவரத்துக்​கான விதை விதைக்கப்பட்டது என்​கின்றனர்.

ஆகஸ்ட் 16-ம் தேதி கல்கத்தாவில் வன்முறை வெடிக்கக்கூடும் என, போலீஸ் அதிகாரிகள் அரசிடம் முன்னெச்​சரிக்கை செய்தனர். இதையட்டி, தலைமைச் செயலாளர் ஆர்.எல்.வாக்கர், கவர்னரைச் சந்தித்து 16-ம் தேதி பொது விடுமுறை அளித்துவிட்டால் கலவரத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற யோசனை​யைத் தெரிவித்தார். ஆனால், அப்படி பொது விடுமுறை அளிப்பது கலவரத்தை மேலும் தூண்டுவதற்கு வழிவகுத்துவிடும், ஓய்வில் இருப்பவர்கள் பெரும் திரளாக வந்து கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்று காங்கிரஸ் எதிர்த்தது. ஆனால், 16-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கவில்லை என்றால் வணிக வளாகங்கள் போக்குவரத்து ஆகியவை பெரிதும் பாதிக்கப்படும் எனக் கருதிய கவர்னர், விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார். அதே நேரம், முஸ்லிம் லீக் நாடு முழுவதும் அன்று ஹர்த்தால் நடைபெற வேண்டும் என்றும் அதன் முடிவில் பெரிய பேரணி நடத்தப்போவதாகவும் அறிவித்தது. இந்த எதிர்ப்பு தினத்தை, ஒரு பகிரங்க யுத்த தினமாகவே லீக் தலைவர்கள் அறிவித்தனர்.

Sunday, May 19, 2013

சிறந்த கல்லூரி: எப்படி தேர்வு செய்வது?

 
எம்.பி.ஏ.வோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்போ, அதை எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது முக்கியம். கல்விக் கடன் கிடைப்பது முதல் எதிர்காலத்தில் வேலை கிடைப்பது வரை நாம் பயிலும் கல்லூரியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, எல்லாவகையிலும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது ஒரு மாணவனின்  கடமை. அதனை அக்கறையோடு செய்துதரவேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? எதன் அடிப்படையில் அந்தக் கல்லூரி நிறுவனம் சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது?
 
மூன்று விஷயங்கள்!
 
''இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள், தொலைக்காட்சியில் வரும் கல்லூரிகள் தொடர்பான விளம்பரங்களைப் பார்த்தோ, உறவினர்களின் கட்டாயத்தின் அடிப்படையிலோதான் தங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைத் தீர்மானிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.  

பொதுவாக, கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது முக்கியமான மூன்று விஷயங்களைக் கவனிக்கவேண்டும். கல்லூரி ஏ.ஐ.சி.டி.இ-யிடம் (All India Council for Technical Education - AICTE) அனுமதி பெற்றிருக்கிறதா?, கல்லூரிகளில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறதா?, கல்லூரிகளில் சிறப்பு வசதிகள் ஏதேனும் இருந்து அதற்கான சிறப்பு அங்கீகாரத்தை கல்லூரிகள் பெற்றிருக்கிறதா? என்பதைக் கவனிக்கவேண்டும்.கல்லூரியில் உள்ள லேப் வசதி, போதுமான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகளை ஆராய்ந்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியிருந்தால் மட்டுமே பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்தும். படித்து முடித்தவுடன் பல்கலைக்கழகப் பட்டமும் வழங்கும். எனவே, இது மிக முக்கியம்.

 வெளிப்படையான விஷயங்கள்! (Moderate Disclosure)

ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு, கல்லூரி சம்பந்தப்பட்ட சில முக்கியமான தகவல்களை கல்லூரி நிர்வாகத்தின் இணையதளத்திலோ அல்லது ஆண்டு மலரிலோ வெளிப்படையாக, தெளிவாக குறிப்பிடவேண்டும் என்று சொல்லி இருக்கிறது. சில கல்லூரிகள் மட்டுமே இந்த விவரங்களை முழுமையாக  தருகின்றன. பல கல்வி நிறுவனங்கள் இவ்விவரங்களை தராமலே தவிர்த்துவிடுகின்றன.  

* ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் அனுமதி பெற்ற கல்லூரி களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நம்பர் வழங்கப்படும். அந்த நம்பரை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

* ஒரு கல்லூரியில் என்னென்ன துறை சார்ந்த படிப்புகள் இருக்கின்றன, துறை வாரியாக பேராசிரியர்களின் விவரங்களையும் தெரிவிக்கவேண்டும். (பேராசிரியர்களின் பெயர்கள், அவர்களின் புகைப்படங்கள், படிப்பு விவரங்கள், அவர்கள் படித்த கல்லூரி, அனுபவம், ஆராய்ச்சி பற்றிய தகவல்களை  தெளிவாகத் தெரியப்படுத்துவது அவசியம்).

* கல்லூரி நிர்வாகக் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் யார் என்பதையும், அவர்களின் விவரங்களையும் குறிப்பிடுவது அவசியம்.

* மூன்று ஆண்டுகளாக எவ்வளவு பேர் கல்லூரியில் படிக்கிறார்கள் (துறைவாரியாக பிரித்துக் குறிப்பிடுவது அவசியம்), அவர்களில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகளை கல்லூரி நிறுவனம் அமைத்து தந்திருக்கிறது என்கிற விவரங்களை தெரியப்படுத்தவேண்டும்.

* எதன் அடிப்படையில்  மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை விளக்கமாக  எடுத்துச் சொல்லவேண்டும்.

* கல்லூரி வளாகத்திற்குள் எத்தனை வகுப்பறைகள் இருக்கின்றன, மாணவ, மாணவிகளின் தங்கும் விடுதியில் எத்தனை ரூம்கள் இருக்கின்றன என்கிற விவரங்களும் சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

எப்படி தேர்வு செய்வது?

துண்டு பிரசுரங்களிலோ அல்லது கல்லூரியின் இணையதளத்திலோ வெளியிடப்பட்டிருக்கும் கட்டட படங்களைப் பார்த்தோ, அவர்களின் சிறப்பம்சங்கள் என்று சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை இணையதளத்தில் படிப்பதால் மட்டுமே, எந்த ஒரு கல்லூரியையும் தேர்வு செய்யக்கூடாது. படத்தில் உள்ள கட்டடங்கள் வேறு எங்கோ எடுக்கப்பட்டதாககூட இருக்கலாம். அல்லது நீங்கள் செலுத்தப் போகும் கல்லூரிக் கட்டணத்தினால்கூட கட்டப்படலாம். தவிர, கல்லூரியின் இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் சரியானதுதானா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். அந்தக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையோ அல்லது அந்தக் கல்லூரியில் படித்து முடித்த மாணவர் களில் சிலரிடமோ விவரங்களைக் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம்.

சாய்ஸ் வேண்டும்!

நீங்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது, ஒரே ஒரு கல்லூரியை மட்டும் தேர்வு செய்யாதீர்கள். மூன்று கல்லூரிகளைத் தேர்வு செய்து வைத்துக்கொண்டால்தான், ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியும். நீங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால், சோர்ந்து போகாதீர்கள். நீங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரி உலகிலேயே சிறந்தது; நீங்கள் தேர்வு செய்துள்ள படிப்பு உலகிலேயே சிறந்தது என்கிற நம்பிக்கையோடு படிக்க ஆரம்பியுங்கள்.

ஏமாற வேண்டாம்!

முன்பெல்லாம் கல்லூரி என்பது கல்வி பயிற்றுவிக்கும் இடமாக இருந்தது. இன்றைக்கு அது பணம் சம்பாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. அதுமாதிரியான கல்வி நிறுவனங்களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நெடுஞ்செழியன்
 


 

Saturday, May 18, 2013

டாக்டர் ராமதாஸ் - ஓ பக்கங்கள், ஞாநி

அன்புள்ள டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு,


வணக்கம். மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், என் மீது நீங்கள் வைத்திருந்த மதிப்பினால் வீடு தேடி வந்து என்னுடன் ஒரே கட்டிலில் அமர்ந்து மூத்த உறவினர் போல தயக்கமும் இன்றி மூன்று மணி நேரம் உரையாடியது என் மனத்தில் இன்னமும் பதிந்திருக்கிறது. விடை பெற்று காரில் ஏறியதுமே நீங்கள் தன்னிச்சையாகப் பாதுகாப்பு பெல்ட்டை அணிந்ததை நான் வியந்து பாராட்டியதும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

சமூகத்தில், ஆழமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குடன் நீங்கள் சங்கம் தொடங்கிய நாள் முதல் கட்சி வளர்த்த நாள் வரை என்னவெல்லாம் செய்து வந்திருக்கிறீர்கள் என்று கோப்புகள், ஆவணங்கள் உதவியோடு அன்று எனக்கு விளக்கினீர்கள். சினிமாவைச் சார்ந்திராத தொலைக்காட்சி நடத்துவது, தாய்மொழிக் கல்வி, அரசின் நிதி நிலை அறிக்கைக்கு துறை வாரியாக மாற்று யோசனை அறிக்கைகள், பூரண மதுவிலக்கு என்று நீங்கள் அன்று சொன்ன உங்களின் பல கொள்கைகள் எனக்கும் உடன்பாடானவையே. அனைத்தையும் விட வட தமிழகம் முழுவதும் நீங்களும் தொல். திருமாவளவனும் சேர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் வாயிலாக கடந்த சுமார் பத்தாண்டுகளாக ஏற்படுத்தியிருக்கும் சாதி சமரச அமைதி உணர்வு மகத்தானது. ஏனென்றால் வன்னியர்களை நான் ஆதிக்க சாதியாகக் கருதியதில்லை. தீண்டாமை என்ற ஒற்றை அம்சத்தைத் தவிர வன்னியரும் தாழ்த்தப்பட்டோரும், ஒரே அடித்தள வாழ்நிலையில்தான் வட தமிழகத்தில் வாழ்கிறார்கள். அதை அந்த மண்ணின் மைந்தனான நான் நேரடியாக அறிவேன். இந்த இரு பிரிவினரும் அரசியல்ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த வட்டாரத்தில் வேறு எந்த அரசியல் சக்தியும் ஆதிக்க சாதியும் தேர்தல் அரசியலில் வீழ்த்தவே முடியாது என்ற உண்மையையும் நாம் விவாதித்தோம். ஆனால் நீங்களோ, தாழ்த்தப்பட்ட சாதியினர் தம் கட்சி ஆதரவுடன் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் என்ற பெயரால் காதல் நாடகங்கள் நடத்தி மிரட்டிப் பணம் பறிப்பதை எதிர்க்கவே ஓர் உயர் சாதிக் கூட்டமைப்பை ஏற்படுத்தியதாகப் புரியவைக்க முயற்சித்தீர்கள்.  விடலைக் காதலை, காதல் நாடகங்களை, மிரட்டிப் பணம் வசூலிக்கும் கட்டப் பஞ்சாயத்தை நானும் ஆதரிக்கவில்லை; மனிதநேயமும் சமத்துவமும் விரும்பும் எவரும் ஆதரிப்பதில்லை. ஆனால் நீங்கள் காண மறுக்கும் உண்மை, இந்த அட்டூழியங்கள் எல்லாம் ஏதோ ஒரு சாதியினர் மட்டும் செய்பவை அல்ல. இப்படி செய்வோர் எல்லா சாதிகளிலும், கட்சிகளிலும் - உங்கள் கட்சி உட்பட இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் நம் சமூகம் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதுதான் தீர்வே தவிர, பழியை ஒற்றைச் சாதி மீது மட்டும் போட்டு இதர சாதிகளை ஓரணி திரட்டும் முயற்சி தவறானது என்பதை உங்களிடம் சொன்னேன். இதனால் என்ன ஆயிற்று? சாதி சங்கத்தலைவர் என்ற குறுகிய வட்டத்திலிருந்து எல்லாருக்குமான பொதுவான அரசியல் தலைவர் என்ற பிம்பத்தைப் பெறத் தொடங்கிய நீங்கள் மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். எப்படிப்பட்ட வீழ்ச்சி இது உங்களுக்கு! பொது மேடையிலும் தனிப் பேச்சிலும் கண்ணியமாக, கறாராகப் பேசுபவர் என்ற பிம்பம் நொறுங்கி, மாமல்லபுர மேடையில் உங்கள் சகா காடுவெட்டி குருவே வெட்கப்படும் அளவுக்கு அல்லவா உங்கள் பேச்சு தரம் தாழ்ந்து போயிற்று!

திராவிடக் கட்சிகளின் ஊழல் முகத்துக்கு முன்னால் இருக்கும் முற்போக்குச் சாயம் முற்றிலுமாக வெளுக்கும்வரை கூட இருந்து உங்களை வளர்த்துக் கொண்ட நீங்கள், இனி அவற்றுடன் கூட்டு இல்லை என்று அறிவித்தபின், அவற்றைவிட முற்போக்கான அமைப்புகளுடன் அல்லவா அணி சேர்ந்திருக்க வேண்டும்? நீங்களோ, திராவிடக் கட்சிகளை விட பிற்போக்கான சாதி அமைப்புகளை ஒன்றிணைத்து அதன் உடனடிப் பயனாக, சிறைக்குச் சென்றீர்கள்.  உங்களுக்கு ஒரு ரோல் மாடல் கலைஞர் கருணாநிதி. மற்றவர் செல்வி ஜெயலலிதா. இரண்டாமவரை அரசியலில் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவே இயலாது. எம்.ஜி.ஆர். இல்லையென்றால் அவர் இல்லை. எம்.ஜி.ஆர். போன்ற செல்வாக்குடையவர் ஆசி இல்லாமல் வரும் நீங்கள் பின்பற்றியது கருணாநிதியின் ரோல் மாடலைத் தான். அவர் ஆசி வழங்க அண்ணா இல்லையென்றாலும் அரசியலில் மேலே வந்திருக்கக்கூடிய ஆற்றல் உடையவர். கலைஞரிடமிருந்து எங்கும் தமிழ், சாதிய எதிர்ப்பு, சமூக நீதி என்ற கோஷங்களையெல்லாம் எடுத்துக் கொண்ட நீங்கள், அவருடைய குடும்பப் பாசம், சுய நல அரசியல், வாரிசு ஊக்குவிப்பு, ஊழல், அராஜகம் என்ற அத்தனை எதிர்மறை அம்சங்களையும் எடுத்துக் கொண்டீர்கள். அவரை இன்று வீழ்த்திய அதே அம்சங்கள் உங்களையும் வீழ்த்திவிட்டன. மாமல்லபுரத்தில் நீங்கள் சாதி வெறியைத் தூண்டியதால் தாழ்த்தப்பட்டோர் மட்டும் பாதிக்கப்படவில்லை. உங்கள் சாதியினர் இருவரும் செத்தார்கள். அடித்தட்டில் இருக்கும் இரு சாதியினர் கைகளில் எழுது கோலைத் தர வேண்டிய மருத்துவர் நீங்கள். மனிதக் கறி வெட்ட, கத்தியைக் கொடுக்கும் கசாப்புக் கடைக் காரராகி விட்டீர்கள்.

நீங்களும் உங்களோடு சிறை புகுந்தோரும் இருக்க வேண்டிய இடம் சிறையல்ல. பல்கலைக்கழகம். சிறையிலிருந்து வெளியே வரும்போது தவறைத் திருத்திக் கொள்வீர்கள்; சாதி கூட்டமைப்பைக் கலைத்து விட்டு ஆரோக்கிய மாற்று அரசியலை முன்வைப்பீர்கள்; உங்கள் ரோல் மாடலாக இனியேனும் காந்தியையும் மண்டேலாவையும் அம்பேத்கரையும் எடுத்துக் கொள்வீர்கள் என்றெல்லாம் என்னைப் போன்ற சிலருக்கு ஒரு சிறிய நப்பாசை இருந்தது, ஆனால் நீங்கள் சாதி எனும் போதையில் அடிமையாகி விட்டீர்கள். இது அழிவுப் பாதை. உங்களையும் உங்களை நம்பி வருவோரையும் அழிக்கும். உங்களை விமர்சித்து 11.8.1996ல் ‘டாக்டருக்கு சிகிச்சை தேவை’ என்று எழுதினேன். பதினேழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நீங்கள் இப்படி நோய்வாய்ப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவராகி விட்டீர்கள்! உங்களைவிட மூத்தவரான கலைஞரைவிட உங்களுக்குத்தான் இப்போது அவசரமாக அரசியல் ஓய்வு தேவைப்படுகிறது. விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன். சிறை ஏற்படுத்தாத மனமாற்றத்தை மருத்துவமனையேனும் ஏற்படுத்தினால் மகிழ்வேன்.

அன்புடன்,

ஞாநி

ஓ பக்கங்கள் - இது நீதி அல்ல, சட்டம்! ஞாநி

அன்புள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு,


வணக்கம். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. நாட்டின் வளர்ச்சிக்கு அது தேவை. எனவே அதை மூடச் சொல்ல முடியாது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவித்தால் போதும் என்று தீர்ப்பளித்திருக்கிறீர்கள். இவை எதுவும் எங்களுக்குப் புதிதல்ல. ஏற்கனவே நாராயணசாமி என்று ஒருத்தர் இரண்டு வருடங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆதாரங்கள், ஆவணங்கள் எதையும் காட்டாமல், தேசத்தின் வளர்ச்சிக்கு அணு மின்சாரம் தேவை என்று கருத்துச் சொல்ல அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவு உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறது? இந்தியாவில் அணு மின்சாரத்தின் சுமார் 50 வருட வரலாற்றில் வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு என்பது தம்மாத்தூண்டு என்பதற்கும் ஆனால் அதற்கு ஆன செலவு வெள்ளை யானையை உருவாக்கி பராமரிக்கும் செலவு என்பதற்கும் எண்ணற்ற ஆவணங்களை நாங்கள் மக்கள் முன்பு வைத்தது போல, உங்கள் மன்றம் வைக்கவில்லையே. 

அணு உலை பற்றிய மக்கள் அச்சங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்னையை நீதிமன்றம் முன்பு வழக்காகக் கொண்டு வந்த ஆர்வலரைப் பாராட்டி இருக்கிறீர்கள். உலையை மூடவேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை ஏன் நிராகரிக்கிறீர்கள் என்று உங்கள் தீர்ப்பில் பதில்களே இல்லையே. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படி சில அரசு அமைப்புகளுக்கு உத்தரவிடுகிறீர்கள். யார் அவர்கள்? இதுவரை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யத் தவறியவர்கள், சட்ட விதிகளை மீறியவர்கள் என்று வழக்குப் போட்டவர் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டிய அதே அமைப்புகள். எப்போது கேட்டாலும், எல்லாம் சரியாக இருக்கிறது என்ற ஒற்றைப் பதிலைச் சொல்லி வந்தவர்கள் அவர்கள். எதெல்லாம் தப்பு தப்பாக இருக்கிறது என்று ஆதாரங்களை நாங்கள் சுட்டிக் காட்டினால், அப்போது அது மட்டும் சரியில்லை, சரி செய்துவிடுவோம் என்று எங்களிடமும் நீதிமன்றங்களிடமும் மழுப்பலாகப் பதில் தருபவர்கள். அவர்களிடமே திரும்பப் பொறுப்பை ஒப்படைக்கும் நீங்கள், அவர்கள் சரியாகச் செய்கிறார்களா இல்லையா என்று கண்காணிக்க எந்த ஏற்பாட்டையும் செய்யவே இல்லையே? அதைச் செய்யாமலே உலையை இயக்கலாம் என்கிறீர்களே? இது என்ன தீர்ப்பு? இது என்ன நீதி?சுற்றுச்சூழல் தொடர்பான விதிகளை வரிசையாக அவர்கள் மீறியதை, ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியதும் மீறியதை ஒப்புக்கொண்டு திரும்ப அனுமதி பெறுகிறோம் என்கிறார்கள். வேறு எந்தக் குடிமகனுக்காவது நீதிமன்றம் இந்தச் சலுகையை வழங்கியதுண்டா? விதியை மீறி சாதாரண கட்டடம் கட்டினால் இடிக்கச் சொல்லி இருக்கிறதே நீதி மன்றம்?! இப்போது எங்கள் மக்களின் பாதுகாப்பை, விதியை மீறியவர், விதிமீறலை அனுமதித்தவர், கண்டுகொள்ளாதவர், அங்கீகரித்தவர் என்று அதே அமைப்புகளிடம் திரும்பவும் ஒப்படைக்கிறீர்களே, இது என்ன நீதி? 

அணு உலையின் பாகங்களை வழங்கிய ரஷ்ய கம்பெனி ஊழல் கம்பெனி என்பதை மறுத்துக் கொண்டே இருந்தவர்கள் இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். பாகங்களைச் சரிபார்க்கும் வேலையை இப்போது அவர்களிடமே ஒப்படைக்கிறீர்களே? அவர்கள்தானே ஊழல் கம்பெனியிடம் வாங்கியவர்கள்? ஊழலை இதுவரை மறுத்தவர்கள்? வேறு சுயேச்சையான அமைப்பிடம் அல்லவா இந்தப் பொறுப்பை நீங்கள் தரவேண்டும்? திருடியவனிடமே ஸ்டாக் சரிபார்க்க கஜானா சாவியைக் கொடுக்கலாமா?நாளை இந்த அணு உலையில் விபத்து நடந்தால், அதற்கு இனி நீங்களும் தானே பொறுப்பு? 

அநீதியான ஒரு தீர்ப்பில், ஆறுதல் போல போராடும் மக்கள் மீது போடப்பட்ட ஆயிரக்கணக்கான கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெறச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறீர்கள். ஒருவேளை வழக்கை ரத்து செய்தால், போராடும் மக்கள் அணு உலை எதிர்ப்பைத் தொடராமல் கைவிட்டு விடுவார்கள் என்ற நப்பாசையாக இருக்கலாம். அறவழியில் போராடும் எதிர்ப்பாளர்கள் மீது இனிமேலும் வழக்குப் போட வேண்டாம் என்று அரசுக்கு நீங்கள் சொல்லி இருந்தால் அதுதான் சரியாக இருந்திருக்கும். ஏனென்றால் தொடர்ந்து அணு உலைகளை எதிர்ப்பவர்கள் எதிர்த்துக் கொண்டுதான் இருப்போம். அவை ஆபத்தானவை, பயனற்றவை, வளர்ச்சிக்கு எதிரானவை என்பது நீங்கள் கவனிக்கத் தவறிய ஆவணங்களால் வரலாறுகளால் நாங்கள் உணர்ந்து அறிந்து தெளிந்த உண்மைகள். 

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அதை எதிர்த்துப் போராடிய மக்கள் எல்லாரும் அன்றைய சட்டப்படி, அவற்றின் கீழ் தண்டனை வழங்கிய நீதிபதிகளின்படி, குற்றவாளிகள்தான். ஆனால் அந்த மக்கள்தான் பின்னால் அதிகாரம் கைமாறியதும், புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கச் செய்தார்கள். இப்போது இருக்கும் சட்டங்கள் எங்களுக்கான நீதிகளுக்குப் போதுமானவை என்று நம்பியே உங்களிடம் வந்தோம். இல்லை, அவை போதாது என்றால், மறுபடியும் மக்கள் திரண்டு சட்டங்களை மாற்றுவோம்; நீதிபதிகளை மாற்றுவோம். நீதியை மாற்ற முடியாது. அது எப்போதும் எங்களுக்கானது.

அன்புடன்,

மக்களை நேசிப்பதால், அணு உலைகளை வெறுக்கும் ஒரு மனிதன்.

சால்ட் & பெப்பர் - ‘தல’ ரகசியம்!

 
சமீபத்தில் அஜித்தின் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஹேர் ஸ்டைல் மிக அதிகமாக திரையுலகத்தினரால் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது. ‘மங்காத்தா’ தந்த மங்காத ஸ்டைல் அது! பெயரிடப்படாத விஷ்ணு வர்த்தன் புதுப்படத்திலும் ‘தல’க்கு சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல்தான். அந்த ஸ்டைலின் ரகசியம் என்ன?
 
‘சால்ட் அண்ட் பெப்பர் என்பது நேச்சுரலாக நடக்க வேண்டியது. ஒரு மனிதனுக்கு ஐம்பது சதவிகிதம் கறுப்பு முடியும் ஐம்பது சதவிகிதம் வெள்ளை முடியும் இருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. ஆர்ட்டிஃபிஷியலா க்ரியேட் பண்ணணும். உடலின் ஹார்மோன்களுக்குத் தக்கவாறு தலைமுடியும் நல்ல கரிய நிறமாகவோ, செம்பட்டையாகவோ லேசான க்ரே நிறங்களிலோ அமைவதுண்டு.
 
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கைப் பிரபலப்படுத்தியவர் ஹாலிவுட் ஸ்டார் ஜார்ஜ் க்ளூனி. இங்கு நம்ம அஜித்! ‘தல’யுடையது ரியல் லுக். அவர் ரியலான தோற்றத்தை மெயின்டெய்ன் பண்ணி இருக்கிறார். ஆர்ட்டிஃபிஷியலா க்ரியேட் பண்ணும்போது ‘தல’யுடைய ரியாலிட்டி மிஸ்ஸிங்கா தோன்றும் வாய்ப்பிருக்கு.  சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், ஒரு டிஃபிகல்ட் பிராஸஸ். பத்துவிதமான ஹேர் ஸ்ட்ரக்சரின் அடிப்படையில்தான் கலரிங் பிராஸஸ் நடக்கும். முதலில் ப்ளான்ட் கலர் போடுவார்கள். பிறகு ப்ளாக், டார்க்கெஸ்ட் பிரௌன், லைட் பிரௌன்... (ஐயோடா சாமி) என செயினாகப் போகும்... 
 
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கினால் ஒரு கெத்து, தோரணை, ஸ்டைல், அட்டிட்யூட் வருகிறது என நம்புகிறார்கள். ஜார்ஜ் க்ளூனிக்கு உலகெங்கிலும் பெண் ரசிகைகள். ட்ரெண்ட் செட்டர் என பெயரெடுத்த சல்மான் திடீரென சால்ட் அண்ட் பெப்பர் ஃப்ரெஞ்ச் குறுந்தாடியில் வளைய வர அந்த லுக் ஹிட்டோ ஹிட். மாடல் கம் வித்தியாச நடிகர் மிலிந்த் சோமனின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் மிகப் பிரபலம். அவருடைய ரஜில் ஹேர் லாஸ், வழுக்கை... படு பிரபலம். ஆனால் மிலிந்த் மகா லக்கி. பளபள லாங் தலைமுடியுடன் எப்படி வளைய வருகிறார் என உள்ளுக்குள் அழுபவர்கள் பலர். ப்ரியங்கா சோப்ரா தைரியமாக ‘சாத் கூன் மாஃப்’ என்ற சினிமாவில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றினார். மலையாள நடிகர் ஜெயராம் தன்னுடைய அடுத்து வரும் படத்துக்கு ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஹேர் ஸ்டைலில் தோன்றுகிறாராம். ஆமிர்கான் ‘தூம் -3’ யில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் இருக்கலாம் என்கிறது சினிமா வட்டாரம்.

யார் என்ன செய்து கொண்டாலும், நம்ம ‘தல’ போல வருமா?
 

தோனி = நூறு கோடி!

 
தோனியின் ஒருவருட விளம்பர வருமானம் எவ்வளவு தெரியுமா? ரூ. 100 கோடி. இந்திய விளையாட்டு வீரர்களில் யாரும் இந்தளவுக்கு ஒரு வருடத்தில் சம்பாதித்தது கிடையாது. ஒரு விளம்பர ஒப்பந்தத்துக்கு குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் சார்ஜ் பண்ணுகிறார். இதுவரை 17 நிறுவனங்களுடன் தோனி கைகோத்திருக்கிறார். உலகளவில் பிரபலமான உசைன் போல்ட், ஜோகோவிச் போன்றவர்களை விடவும் அதிகம் சம்பாதிக்கிறார் தோனி. 
 
இதோ இன்னொரு சாய்னா! 
 
இந்திய பேட்மிண்டனுக்கு அடுத்த சாய்னா நேவால் கிடைத்திருக்கிறார். 17 வயது பி.வி. சிந்து, மலேசிய கிராண்ட் ஃப்ரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் போட்டியை வென்று சீன வீராங்கனைகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். அவருடைய முதல் கிராண்ட் ஃப்ரிக்ஸ் பட்டம் இது. இப்போது, உலகளவில் 13வது இடத்தில் இருக்கும் சிந்து, அடுத்ததாக, முதல் பத்து இடங்களுக்குள் நுழைய பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. ‘பொதுவாக, பேட்மிண்டனில் சீனர்களின் ஆதிக்கம் அதிகம். ஆனால், என்னால் சீன வீராங்கனைகளை ஜெயிக்க முடியும்’ என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் சிந்து. மலேசிய கிராண்ட் ஃப்ரிக்ஸ் வெற்றியால் சிந்துவுக்குப் பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. Universal Collectabillia என்கிற விளம்பர நிறுவனம் டெண்டுல்கர் மற்றும் அவர் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம், சிந்துவின் போட்டிகளுக்கான செலவுகளை அடுத்த 2016 ஒலிம்பிக்ஸ் வரை கவனித்துக் கொள்கிறது. மலேசிய போட்டியை ஜெயித்ததற்கும் சிந்துவுக்கு ரூ. 5லட்சம் கொடுத்துள்ளது.
 
ஜோகோவிச் Vs நடால்!
 
 
மே 26ம் தேதி ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது. பீட் சாம்பிராஸ், போரிஸ் பெக்கர், ஜோகோவிச், எட்பர்க் போன்ற பிரபல டென்னிஸ் வீரர்கள் எல்லாம் ஒருமுறைகூட ஜெயிக்காத போட்டி. ஆனால் ரஃபெல் நடால் இதுவரை 7 முறை ப்ரெஞ்ச் ஓபனை ஜெயித்துள்ளார். இதனால், இந்த முறையும் நடால்தான் வெல்வார் என்று டென்னிஸ் ரசிகர்கள் எடைபோடுகிறார்கள். ஒரே பிரச்னை, உலகின் முதல்தர வீரராக இருக்கிற ஜோகோவிச்சும் 5ம் ரேங்கிங்கில் இருக்கும் நடாலும் ப்ரெஞ்ச் ஓபனின் காலிறுதியில் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. நடால், காயம் காரணமாகச் சில மாதங்கள் டென்னிஸிலிருந்து விலகியிருந்ததால், அவருடைய ரேங்கிங் குறைந்துவிட்டது. இந்தத் தடவை, நடால், எட்டாவது முறையாக வென்றால் அதிகத் தடவை ப்ரெஞ்சு ஓபனை வென்ற சாதனையைச் சமன் செய்துவிடுவார். நடால் வெல்லாவிட்டால்? கடந்த 8 ஆண்டுகளில், மூன்றுமுறை தவிர, கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கங்கள் ஆகியவையெல்லாம் நடால், ஃபெடரர், ரோவாக் ஜோகோவிச், முர்ரே ஆகிய நான்கு பேரில் யாராவது ஒருவருக்குத்தான் சென்றிருக்கிறது. அதனால், இந்தமுறை நடால் அல்லது இந்த நான்கு பேரைத் தாண்டிய ஒரு புதிய வீரர் ஜெயிப்பதையும் நினைத்துப் பார்க்கமுடியாது. மேலும், இந்த நான்கு முன்னணி வீரர்களுக்குச் சவால் விடும் இளைஞர்களின் பங்களிப்பும் குறைவாக இருக்கிறது. 2012 இறுதியில், டாப் 50யில் ஒருவீரர் கூட 21 வயதிற்குள் இல்லை. 
 
பொறுப்பு + அர்ப்பணிப்பு = டிராவிட்!

ஐ.பி.எல். ஆரம்பிப்பதற்கு முன்னால், சிறந்த கேப்டன்களில், சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக டிராவிட் இருப்பார் என்று எத்தனை பேரால் ஊகித்திருக்க முடியும்? ராஜஸ்தான் அணியை இளைஞர்கள், புதியவர்களின் பங்களிப்புடன் அருமையாக வழிநடத்தி வருகிறார் டிராவிட்.

முணுக் என்றால் கோபப்படும் கோலி, கம்பீர்களுக்கு மத்தியில், அணியைக் கட்டுக் கோப்பாக உருவாக்கியிருக்கிறார் டிராவிட். சாம்சன் போன்ற இளைஞர்களுக்குத் தாராளமாக வாய்ப்புகள் அளிக்கிறார். இதனால், ஐ.பி.எல். கோப்பையை டிராவிட் வெல்ல வேண்டும் என்று ஏராளமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். ராகுல் டிராவிட்டிடம் உள்ள பொறுப்பு, அர்ப்பணிப்பு போன்றவை எல்லோரிடமும் இருந்துவிட்டால் இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்!
 

அருள்வாக்கு = ஈடுபாடு!


‘எதனிடம் ஈடுபாடு வைக்கிறோமோ அது உயிருள்ள ஒன்று; அதிலே நம் சிற்றுயிர் ஈடுபாடு என்ற பெயரில் உறவு கொண்டாடுகிறது; அப்புறம் உறவும் போய், தானும் போய், அதுவேயாகிவிட வேண்டும்’ என்று இருப்பதே அன்பு. உயிர்! அது முக்கியம்! ப்ராண ஸ்நேஹிதன், உயிர்த் தோழன் என்கிறோமே, அப்படி உயிரோடு உயிர் சேர்வது அன்பு. செஸ்ஸுக்கு, கிரிக்கெட்டுக்கு உயிர் (இருப்பதாகத்) தெரிகிறதா?

ஸங்கீதம், நாட்யம், காவ்யம், ஆகியவற்றை உயிருள்ள தேவதையாக வைத்து தங்களையே அதற்குக் கொடுத்து ஈடுபாட்டுடன் அப்யாஸம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவற்றில் ரொம்பவும் உயர்ந்த கட்டத்தைத் தொடும்போது, மெய்மறந்து பண்ணினார்கள்" என்கிறோம். என்ன அர்த்தம்? அப்போதைக்குத் தனி - நானை அந்தக் கலைக்கே இவர்கள் கொடுத்து விடுகிறார்கள். அதைத்தான் ‘மெய்மறந்து’ என்கிறோம். அந்தக் கலைக்கு ‘உயிர்’ இருப்பதால் அதுவே இவர்களுக்குள்ளே புகுந்து இவர்களை அதில் உசந்த ஒன்றைப் பண்ணும்படிச் செய்கிறது.

ஸயன்ஸில் கூட இப்படி மெய்மறந்த நிலையில்தான் - ‘இன்ட்யூஷ’னில் - ஐன்ஸ்டைன் போன்றவர்கள் ‘டிஸ்கவரி’ பண்ணுகிறார்களென்றால், அதெப்படி? கலைகளை அப்யஸிக்கிறவர்களைப் போல அவர்கள் ஒன்றும் ஸயன்ஸ் ஒரு உயிருள்ள தேவதை என்று நினைக்கவில்லையே என்றால், எல்லா உயிர்களுக்கும் மேலே ஒரு பேருயிர் இருக்கிறதோ, இல் லியோ? அத்தனை கலை, ஞானம், கார்யம் எல்லாவற்றுக்கும் அதுதானே மூலம்? ஒரே ஈடுபாடாக, dedicated-ஆக இவர்கள் ஸயன்ஸுக்குத் தங்களை அர்ப்பித்துக் கொண்டிருப்பதை மெச்சி அந்தப் பேருயிரே அவர்களுடைய சிற்றறிவின் வேலைக்கு மேற்பட்ட இன்ட்யூஷனாக ஒரு உண்மையை அவர்களுக்குத் தெரிவித்து விடும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, May 16, 2013

எனது இந்தியா (வங்காள தேசம் உருவான கதை !) - எஸ். ரா

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து பங்காளதேஷ் என்ற பெயரில் தனிச் சுதந்திர நாடாக்கித் தந்ததில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இந்தியப் பிரிவினையின் குளறுபடிகளில் ஒன்று, வங்கதேசத்தை பாகிஸ்தானுடன் இணைத்தது. கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையில் 1,600 கிலோமீட்டர் இடைவெளி உள்ளது. இந்த இரண்டு பகுதிகளுக்குள் எவ்விதமான போக்குவரத்து நடைபெற்றாலும் அது இந்தியாவின் வழியாகவே நடைபெற வேண்டும். மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான்களை இஸ்லாமிய மதம் ஒன்றுபடுத்திவைத்திருந்தபோதும் மொழி அவர்களைப் பிரித்துவைத்திருந்தது. மேற்கு பாகிஸ்தானில் வசிப்பவர்கள் உருது பேசுபவர்கள். கிழக்கு பாகிஸ்தானில் வசித்தவர்களோ வங்க மொழி பேசுபவர்கள். ஆகவே, அவர்களுக்குள் மொழி சார்ந்த பிரிவினை இயல்பாகவே இருந்தது.

ஒன்பதாம் நூற்றாண்டில்தான் வங்கத்தில் இஸ்லாம் அறிமுகமானது. டெல்லி சுல்தான்களின் ஆட்சிக்​காலத்தில், பக்தியார் கில்ஜியின் படையெடுப்பு காரணமாக, மரபான இந்து ராஜ்ஜியப் பரிபாலனத்தை இழந்தது வங்கம். அதன் தொடர்ச்சியாக, இஸ்லாமியமயமாக்கம் வங்கத்தில் பரவலானது. மொகலாயர்கள் காலத்தில் வங்கம் முழுமையாக அவர்கள் வசமானது. ஒன்றிரண்டு சிற்றரசுகள் மட்டுமே திரைசெலுத்தி ஆண்டுவந்தனர். 15-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் தங்களது வணிக முயற்சிகளுக்காக வங்கத்தில் களமிறங்கினர். ஆனால், அவர்களால் அங்கே வேர்விட முடியவில்லை. ஒளரங்கசீப் காலத்தில் வங்கத்தின் நவாப் ஒருவர் தன்வசமிருந்த மூன்று கிராமங்களையும் அதை ஒட்டிய நிலப்பரப்பை முழுமையும் பிரிட்டிஷ்காரர்களுக்கு விற்றுவிட்டார். அப்படி விற்கப்பட்ட ஊர்களில் ஒன்றுதான் கல்கத்தா. பிரிட்டிஷ் வணிக முயற்சிகளுக்கு கல்கத்தா ஆதாரப்புள்ளியாக விளங்கியது. கல்கத்தா துறைமுகத்தை தனது தலைமைக் கேந்திரமாகக்கொண்டு செயல்படத் தொடங்கிய கிழக்கிந்தியக் கம்பெனி, உள்ளுர் அரசியலிலும் தலையிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரத்தைக் கைப்பற்றி வங்கத்தை ஆளத் தொடங்கியது. வங்கத்தை இரண்டாகப் பிரித்து கூறுபோட்டது கிழக்கிந்தியக் கம்பெனி. அதன் இறுதிக் கட்டமே இந்திய- பாகிஸ்தான் பிரிவினை. முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளைப் பிரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியபோது, இந்தியா​வோடு நெருக்கமாக உள்ள வங்கத்தைப் பிரித்து பாகிஸ்தானோடு இணைக்கக் கூடாது என்ற  எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஆனால், ஜின்னா அதை  ஏற்றுக்கொள்ளவில்லை.


பாகிஸ்தான் தனிநாடாக உதயமானது. அதன் கிழக்குப் பகுதியாக மாறிய கிழக்கு வங்கம், ஆட்சி அதிகாரம் தங்களை இரண்டாம்தரப் பிரஜைகள்​போல நடத்துகிறது என்பதை உணர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம் வங்க மொழியை ஆட்சி மொழியாக பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள மறுத்தது​தான். பணம் மற்றும் நாணயங்களில் வங்க மொழி இடம்பெறவில்லை. அரசாணைகளில் வங்க மொழி புறக்கணிக்கப்படுகிறது என்ற எதிர்ப்புக் குரல்கள் 1948-ல் உரத்து ஒலிக்கத் தொடங்கின. குறிப்பாக, டாக்கா பல்கலைக்கழகத்தில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதற்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவத் தலைவர்​களில் ஒருவரே முஜிபுர் ரஹ்மான். போலீஸார் கடுமையான தாக்குதல் நடத்தி போராட்டத்தை ஒடுக்கினர்.

மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு சித்ரவதை​செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, முக்கிய அரசியல் தலைவர்களும் வங்க மொழிப் பிரச்னைக்குக் குரல் கொடுக்கத் தொடங்கினர். பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக வங்க மொழி இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட அரசியல் எழுச்சியை பாகிஸ்தான் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கியது.

டாக்கா நகருக்கு வந்த ஜின்னா, உருது மொழி மட்டுமே பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும், வங்க மொழிக்கு ஒருபோதும் அந்த இடம் கிடையாது என்று பேசியது கிழக்கு வங்க மக்களிட்ம் பலத்த கோபத்தை ஏற்படுத்தியது. உருது மொழியை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என, முஸ்லிம் லீக் அமைப்பில் இருந்த வங்காளத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மரபும் செழுமையும் மிக்க தங்கள் மொழி அவமதிக்கப்படுகிறது என்று உணர்ந்த வங்காளிகள், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுவது என முடிவு செய்தனர். இதன் விளைவாக, வங்கத்துக்கு சுயாட்சி வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. வங்க தேசியஉணர்வு கொண்டவர்கள் முஸ்லீம் லீக்கில் இருந்து பிரிவது என முடிவு செய்தனர். அதன்படி, 1949-ம் ஆண்டு ஜூன் 23-ல் பிரிந்து 'அவாமி தேசிய லீக்’ என தேசியக் கட்சியைத் தொடங்கினர். இது, சுயாட்சிக்கான கிளர்ச்சியில் ஈடுபட்டது. ஆனால், அவர்களால் பாகிஸ்தானின் சர்வாதிகார பலத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை. வங்க மக்களிடம் உருவாகி வரும் அரசியல் விழிப்புஉணர்வை ஒடுக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் பாகிஸ்தான் செயல்பட்டது. 1952-ல் வங்கத்தில் மாணவர் கிளர்ச்சி தீவிரம் அடைந்தது. அதை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மாணவர்கள் பலர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டமே வங்க தேச வரலாற்றின் முக்கியத் திருப்புமுனை. மாணவர்கள் கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் எதிர்ப்பு உணர்ச்சியை அதிகப்படுத்தியது. வங்க மொழியை பிரதானப்படுத்தி தேசிய அரசியல் இயக்கம் வலுக்கத் தொடங்கியது. 1953-ல் 'அவாமி தேசிய லீக்’ இயக்கம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஆனதில்லை, அது ஒட்டுமொத்த வங்காளிகளின் விடுதலைக்குப் பாடுபடும் என அறிவித்தது.

1954-ல் நடந்த தேர்தலில் முஸ்லிம் லீக்குக்கு எதிராகக் கூட்டணி அமைத்து களம் இறங்கியது அவாமி லீக். தங்களின் சின்னமாக படகைத் தேர்வு செய்துகொண்டது அவாமி. வங்காளிகளின் அன்றாட வாழ்வோடு இணைந்தது படகு. ஆகவே, அந்தச் சின்னம் அவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது. தேர்தலில் அவாமி லீக் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. அந்தக் கட்சிக்கு 143 இடங்கள் கிடைத்தன. முஸ்லிம் லீக் வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் முக்கிய அமைச்சர்கள் பலர் தோல்வி அடைந்தனர். தேர்தலில் மாணவர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். அவாமி லீக்கின் மாணவர் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு பாகிஸ்தானின் முக்கியத் தலைவர்களை தோற்கடித்தனர். இதன் காரணமாக, புதிய அமைச்சரவையில் மாணவர் தலைவர்களும் இடம் பெற்றனர். முஜிபுர் ரஹ்மானுக்கு வர்த்தகத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவாமி லீக், வங்கத்துக்கு கூடுதல் உரிமைகள் வேண்டும் என, பாகிஸ்தான் மைய அரசை வலியுறுத்தத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. வங்காள மொழியின் சிறப்புகளைப் போற்றிப் பாதுகாக்கும்படி டாக்காவில் புதிய அகாடமி உருவாக்கப்பட்டது.

வங்கத்தில் உருவான எதிர்ப்பு அரசி​யலை முற்றிலும் ஒடுக்க வேண்டும் என்று, பாகிஸ்தான் அரசு காத்துக்கொண்டே இருந்தது. அதன்படி, சுயாட்சி கேட்பது தவறு எனச் சுட்டிக்காட்டி வங்காள தேச அவாமி லீக் அரசை 1954-ல் பதவிநீக்கம் செய்தது. அது, வங்க அரசுக்குத் தற்காலிகப் பின்னடைவை ஏற்படுத்திய​போதும் அரசியல்ரீதியாக அது தன்னைப் பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது. 1956-ல் புதிய கூட்டணி அமைத்து பாகிஸ்தானின் மைய அரசின் தலைமையைக் கைப்பற்றியது அவாமி லீக். அந்தக் கட்சியின் தலைவர் ஹீசைன் சாகித் சுக்ரவாடி, பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி ஏற்றார். இதன் காரணமாக, வங்கத்துக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அவாமி லீக்கின் வளர்ச்சியை முடக்க வேண்டும் என புதிய அரசியல் சிக்கல்களை உருவாக்கத் தொடங்கியது பாகிஸ்தான் அரசு. அரசியல் கிளர்ச்சிகளையும், போராட்டத்தையும் தூண்டிவிட்டு ஹீசைன் சாகித் சுக்ரவாடி பதவி விலக வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தியது. 1957-ல் ஹீசைன் சாகித் சுக்ரவாடி கட்டாயமாக பதவி விலக நேரிட்டது.

1958 நவம்பர் 7-ல் பாகிஸ்தான் அதிபர் இஸ்கந்தர் மிஸ்ரா, ராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தார். அத்துடன், ஜெனரல் அயூப்கானை கட்டுப்பாட்டுப் பொறுப்பாளராக நியமித்தார். ஆனால், அதிகார வெறிகொண்ட அயூப்கான் ராணுவத்தின் பிடியைக்​கொண்டு தானே அதிபர் என அறிவித்துக்கொண்டதுடன் எதிர்ப்பவர்களைக் கொன்று குவித்து எல்லா அரசியல் கட்சிகளையும் தடை செய்தார். அரசியல் கட்சிகளில் முக்கியத் தலைவர்கள்  கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1962-ல் அயூப்கான் ஒரு கண்துடைப்பு நாடகம் ஆடி, புதிய அரசியல் நிர்ணய சட்டங்களை உருவாக்கிக்கொண்டார். ராணுவ ஆட்சியை எதிர்த்து நின்று அவரை அகற்ற முயன்ற அரசியல் முயற்சிகள் பலவும் தோற்றன.

பாகிஸ்தானின் ராணுவ ஆட்சிக்கு எதிராக வங்கத்தில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த முறையும் டாக்கா பல்கலைக்கழகமே இதன் தலைமைக் கேந்திரமாக விளங்கியது. ஆயிரக்​கணக்கான மாணவர்கள் திரண்டு ராணுவ ஆட்சியை அகற்ற குரல் கொடுத்தனர். 1963-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி பெய்ரூட்டில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் ஹீசைன் சாகித் சுக்ரவாடி, மர்மான முறையில் இறந்துகிடந்தார். இது, அவாமி லீக்குக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. வங்கத்தின் உரிமை​களைக் கேட்டு சேக் முஜிபுர் ரஹ்மான் முன்மொழிந்த ஆறு அம்சத் தீர்மானங்கள் வங்க மக்களி​டம் அவருக்குப் பெரும் புகழை ஏற்படுத்தியது. ஆகவே, அவர் அவாமி லீக்கின் பெரும் தலைவராக மக்​களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். வங்கத்தில் எழுந்த கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக, 1966-ல் சேக் முஜிபுர் ரஹ்மான் சிறையில் அடைக்கப்பபட்டார்.