Search This Blog

Monday, February 23, 2015

திசைகாட்டி!

இன்று நாம் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், யாரிடமும் வழிகேட்பதே இல்லை. நம்மிடம் உள்ள செல்போனில் மேப் ஆப்ஸ்களுக்குள் புகுந்து, நாம் செல்லும் இடத்தைக் குறிப்பிட்டால், நாம் செல்ல வேண்டிய வீட்டு வாசல் வரை வழிகாட்டிவிடு கின்றன.

இந்த நவீன ஆப்ஸ்கள் கண்டுபிடிப் பதற்கு முன்பே மனிதர்கள் தங்கள் பயணங்களைச் சரியாக மேற்கொண்டார் கள் என்றால், அதற்குக் காரணம் காம்பஸ் எனும் திசைகாட்டிதான்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் காந்த ஊசிகளைப் பயன்படுத்தி வழிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில், நான்காம் நூற்றாண்டில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க இந்தத் திசைகாட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. காந்தம் வடக்கு, தெற்காகத் திசை காட்டும். அதற்குப் பக்கவாட்டில் கிழக்கு, மேற்கு திசைகளைக் கணித்து அது காட்டும் கோணத்தில் பயணித்துச் சரியான இலக்கை பயணிகள் அடைந்துள்ளனர்.


இந்தியர்கள் ஐரோப்பா வரை சென்று போரிட்டதற்கும், வாஸ்கோடகாமா இந்தியா வந்ததற்கும்கூட இந்தத் திசைகாட்டிதான் முக்கியக் காரணம். பெரிய நாடுகளையும், இயற்கை வளங் களையும் கண்டறிய இந்தத் திசைகாட்டி தான் பயன்பட்டது. பின்னர் காலப்போக்கில் இந்தக் காந்த ஊசி திசைகாட்டிகள் சூரியசக்தியில் இயங்கும் வகையிலும், ரேடியோ கதிர்களைக் கொண்டும் இயங்கும் விதத்திலும் மாறின.

தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையத்தில் புகுந்த உலகம் இந்தப் பழைமையான கருவியைப் பயன்படுத் துவது குறைந்தது. அதனால் இந்தக் கருவி கணினி செல்போனுக்குள் நுழைந்து இணையத்தோடு இணைந்த திசைகாட்டி மேப் ஆப்ஸ்களாக மாறியது.

இன்றைக்கு சென்னையில் இருந்து கொண்டு டெல்லிக்குச் செல்ல வேண்டும் எனில், எவ்வளவு கி.மீ பயணிக்க வேண்டும், இடையே எத்தனை ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும், விமானம், ரயில், கார் ஏன் நடந்துசென்றால் எத்தனை மணி நேரத்தில் செல்லலாம் என்று கணித்துச் சொல்லிவிடுகின்றன இந்த நவீன திசைகாட்டிகள். வாழ்க்கை யில் இக்கட்டான சூழலில் யாராவது வழிகாட்டுவார்களா என்பதுபோல் வழிதெரியாமல் இருக்கும் பலருக்கு இந்தத் திசைகாட்டி எனும் கண்டுபிடிப்பு தான் வழிகாட்டியாக உள்ளது.

 ச.ஸ்ரீராம்

வைவோ எக்ஸ்ஃபைவ்மேக்ஸ்-(Vivo X5Max)

சமீபத்தில் வைவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனானஐ வெளியிட்டது. இந்த ஸ்மார்ட் போன்தான் இன்றைய டெக் உலகத்தின் மிக மெல்லிசான ஸ்மார்ட் போன்.

1. வடிவமைப்பு: 

'வைவோ X5Max’ ஸ்மார்ட் போன் கவர்ச்சியான டிசைனைக் கொண்டது. 4.75mmஅடர்த்தியுள்ள மெல்லிஸான இந்த ஸ்மார்ட் போனின் எடை 156 கிராம். இந்த ஸ்மார்ட் போனின் பிரேம் முழுவதும் மெட்டலினால் ஆனது. இதனால் போனை எளிதாக கையில் பிடித்துக் கொள்ளலாம்.


2. டிஸ்ப்ளே: 

வைவோ X5Max அகலமான 5.5 இன்ச் super AMOLED 1080*1920 401 ppi டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே மிகத் துல்லியமாகக் காட்சியளிக்க உதவும். ஆனால், முழுமையான சூரிய வெளிச்சத்தில் இந்த டிஸ்ப்ளே சற்று சுமாராகவே காட்சியளிக்கிறது.


3. பிராசஸர்: 

இந்த போன் சக்திவாய்ந்த    Snapdragon 615 SoC Octocore பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்த 1.7 GHz பிராசஸரோடு Adreno 405 GPU என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 16GB இன்டர்னல் மெமரியுடன் வரும் இந்த போனை 128GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.


4. கேமரா: 

13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவையும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது. இந்த கேமரா சராசரி படங்களையே எடுக்கும் திறனைப் பெற்றுள்ளது. பின்புற கேமரா மூலம் 1080P வீடியோக்களை ரிக்கார்டு செய்யலாம்.


5. பேட்டரி: 

2000 mAh பேட்டரியைக் கொண்டுள்ள வைவோ X5Max, முழுமையான பயன்பாட்டுக்கு 8 மணி நேரம் வரை தாங்கும் என எதிர்பார்க்கலாம். டூயல் சிம் 3G வசதிகளோடு வரும் இந்த ஸ்மார்ட் போன், ஒருநாள் வரை சாதாரண பயன் பாட்டுக்குத் தாங்கும் என்று எதிர்பார்க்கலாம். 


6. ஓ.எஸ்: 

வைவோ X5Max ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் ஓ.எஸ் கொண்டு இயங்குகிறது. லெனோவோ நிறுவனத்தின் பிரத்யேகமான 'Fun- Touch OS' டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். மேலும், இந்த ஸ்மார்ட் போனுக்கு ஆண்ட்ராய்டு 5.0 'லாலிபாப்’ அப்டேட் கிடைக்கும் என்று வைவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

பிளஸ்: டிசைன் ஓ.எஸ்
மைனஸ்: கேமரா விலை.

இந்திய மார்க்கெட்டில் 'வைவோ X5Max’ ஸ்மார்ட் போன் ரூபாய் 32,980 என்ற விலையில் விற்கப்படுகிறது.

செ.கிஸோர் பிரசாத் கிரண்.

Saturday, February 21, 2015

தேசத்துக்கு அஸ்திவாரம்!
ஸ்திரீகள் யாவரும் ‘தாக்குலம்’ என மரியாதையாகச் சொல்லப்படுகிற யாவரும் ஸரஸவாணிகளாக ஆக வேண்டும் என்பதே என் ஆசை. நாட்டின் மஹோன்னத நிலைக்கு அஸ்திவாரம், ஸைன்யத்தின் பலமோ, ஸயன்ஸின் அபிவிருத்தியோ, மந்திரிகளின் யுக்தியோ, பொருளாதார முன்னேற்றமோ இல்லை. பெண்கள் தர்மத்தை நடத்துவதால் பெறுகிற தெய்வத்தன்மையே தேசத்துக்கு அஸ்திவாரம், ஜீவரத்தம் எல்லாம்.

அவர்கள் அப்படி தர்மப்படி ஆகிவிட்டால் நம்முடைய வேத மதத்துக்கு ஒரு நாளும் ஒரு குறைவும் வராது. அம்பாள் ஸ்வரூபமாகவே அவர்களைச் சொல்லியிருக்கிறது. அம்பாள்தான் இப்படிப்பட்ட அநுக்ரஹத்தைச் செய்ய வேண்டும்.

Friday, February 20, 2015

பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ்!

உடலுக்கு எப்படி உடற்பயிற்சி தேவையோ, அதேபோல் நம் அறிவுக்கும் பயிற்சி தேவை. இதற்கு சரியான தீர்வுதான் ’Brain Training Apps'. அமெரிக்க உளவியல் அமைப்பும் இந்த 'பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ்’  மனித அறிவின் செயல்பாட்டை சரிவர வகுத்து அதன் திறனை அதிகரிக்க உதவும் என்று சொல்கிறது. இதோ சில பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ் இதோ...

Lumosity
இந்த அப்ளிகேஷன்தான் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனானது நம் அறிவின் ஞாபகத்தன்மை, கவனம், பிரச்னைகளைத் தீர்க்கும் அணுகுமுறை, வேகம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த அப்ளிகேஷனின் குறிப்பிட்ட சேவைகள் மட்டும்தான் இலவசம். இதன் முழுச் சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு $15 அல்லது வருடத்துக்கு $80 செலுத்த வேண்டும்.

இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.

 Fit Brain Trainer
இது ஒரு ஆல்இன்ஒன் பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன். இதில் 360க்கு அதிகமான டிரெய்னிங் கேம்ஸ் உள்ளது. இவை அனைத்தும் பயன் பாட்டாளர்களின் ஞாபகத்திறன், கவனத் தன்மை ஆகியவற்றை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. இதில் ஒவ்வொரு வாடிக்கையாளர் களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண் அதே வயதில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களின் மதிப்பெண் களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.

இந்த அப்ளிகேஷன் இலவசமானது. இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.

Cognifit Brain Fitness

இதில் உள்ள புதிர்கள் மற்றும் கேம்ஸ்கள் அனைத்தும் நரம்பியல் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப் பட்டவை. பயன்பாட்டாளர்கள் தங்களது வளர்ச்சியை இந்த அப்ளிகேஷனில் எளிதாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் திறமைக்கேற்ப இந்த அப்ளிகேஷன் புதிர்களையும், விளையாட்டுகளையும் மாற்றி வழங்கும் தன்மையைக் கொண்டது. இதில் நான்கு விளையாட்டு கள் மட்டும் இலவசம். முழுச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் மாதமொன்றுக்கு $13 அல்லது முழுவது மாக $120 கட்ட வேண்டும்.

 
 
Brain Trainer Special

இந்த அப்ளிகேஷன் எழுத்துக்களை வெவ்வேறு வரிசையில் நினைவில் வைத்துக்கொள்வது, போன் நம்பர்களை நினைவில் வைத்துக்கொள்வது, கணித புதிர்கள் ஆகியவற்றைக் கொண்டு       பயன்பாட்டாளர்களின் அறிவுத்திறனை வளர்க்கிறது. இது முற்றிலும் இலவசமான அப்ளிகேஷன். இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும்தான் பெற முடியும்.

Happify

நேர்மறை உளவியல் யுக்திகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், இதில் உள்ள புதிர்கள், விளையாட்டுகள் அனைத்தும் பயன் பாட்டாளர்களை நாள் முழுவதும் மகிழ்ச்சி யாக வைத்திருக்க உதவும். இந்த  இலவச அப்ளிகேஷன், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓஸ் இயங்குதளத்தில் மட்டுமே  பயன்படுத்த முடியும்.

ஸ்டீவ் ஜாப்

ஆப்பிள்’ என்றவுடன் ஆதாம் - ஏவாள்,  ஐசக் நியூட்டன் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வரும் பூகோள வரலாற்றுச் சரித்திரத்தை மாற்றியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இன்று 'ஆப்பிள்’ என்றால் பழம் என்பதுகூட மறந்து, ஆப்பிள் நிறுவன செல்போனே நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு உலகத்தின் கவனம் கவர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாள் பிப்ரவரி 24. அன்றைய தினம் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் என்ன செய்வார்கள்? வழக்கம்போல பரபரப்பாக வேலைபார்ப்பார்கள். ஏனென்றால், ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருந்திருந்தாலும் அதுதான் நடந்திருக்கும். 2011-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பிறகு, மூன்றரை வருடங்களை, அவர் இல்லாமலேயே கடந்துவிட்டது ஆப்பிள். முதல் இரண்டு வருடங்கள் சிரமப்பட்டாலும், இப்போது சுதாரித்து 'டிரெண்டிங் ரூட்’ பிடித்து, கேட்ஜெட்ஸ் உலகில் மீண்டும் தன் ஆதிக்கத்தை  நிலைநாட்டிவருகிறது ஆப்பிள். அதற்குக் காரணம், ஆப்பிளை வழிநடத்தும் ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகளே. 'மாத்தி யோசி’ என்பதை உலகத் தொழிலதிபர்களின் தாரக மந்திரம் ஆக்கியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். 


நண்பர்களுடன் சேர்ந்து 1,000 டாலர் முதலீட்டில்  கார் ஷெட்டில் வைத்து கணினி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கியபோது, அந்த நிறுவனத்துக்குப் பெயர் எதுவும் இல்லை. தான் போகும் வழியில் இருக்கும் ஆப்பிள் பழத் தோட்டங்கள் நினைவில் வர, தன் நிறுவனத்துக்கு 'ஆப்பிள்’ எனப் பெயர் வைத்தார் ஸ்டீவ். அப்போது  'ஆப்பிள் ரெக்கார்ட்ஸ்’ என்ற ஒரு நிறுவனம் சந்தையில் ஏற்கெனவே இருந்தது. கார் ஷெட்டில் தொடங்கப்பட்ட ஆப்பிள்  நிறுவனத்தைவிட ஆப்பிள் ரெக்கார்ட்ஸ் பல மடங்கு பெரிது. 'எங்கள் நிறுவனத்தின் பெயரை எப்படி உங்கள் நிறுவனத்துக்குச் சூட்டலாம்?’ என ஸ்டீவ் ஜாப்ஸ் குழாம் மீது அது வழக்கு போட்டது. வழக்கை எதிர்கொண்டார் ஸ்டீவ்.' 'ஆப்பிள்’ எனப் பெயர் வைத்தால், டெலிபோன் டைரக்டரியில் என் நிறுவனத்தின் பெயர்தான் முதலில் வரும். டெலிபோன் டைரக்டரியாக இருந்தாலும், என் நிறுவனம்தான் முதலில் இருக்க வேண்டும். அதுவும் போக பசிக்கும்போது சில ஆப்பிள்களை மட்டுமே சாப்பிட்டுப் பசியாறியிருக்கிறேன். அந்த நன்றிக் கடனுக்காகவும் 'ஆப்பிள்’ என்ற பெயரை நான் விட்டுத் தர மாட்டேன்’ என, பல வருடப் போராட்டத்துக்குப் பிறகு 'ஆப்பிள்’ என்ற பெயரையே தன் நிறுவனத்துக்கு என பிரத்யேகமாகப் பெற்றார்.
உலகின் வேறு எந்த கேட்ஜெட்டிலும் இல்லாத புது நவீன வசதிகள், தன் நிறுவனத் தயாரிப்புகளில் இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தார் ஸ்டீவ். கணினிகள் புழக்கத்துக்கு வந்த புதிதில், பெரும் நிறுவனங்களில் கணினிப் படிப்பு படித்தவர்கள் மட்டுமே அவற்றை இயக்க முடியும் என்ற நிலையே இருந்தது. அந்த சமயம், 'எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகூட நம் நிறுவன கணினிகளை இயக்கும் அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டும்’ என அடம்பிடித்து ஆப்பிள் கணினிகளை வடிவமைக்கச் செய்தார் ஸ்டீவ். 'எல்.கே.ஜி குழந்தை கணினியைப் பயன்படுத்த வேண்டும்’ என அதற்கு முன்னர் யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்த 'மாத்தி யோசி’தான் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை சாமான்யர்களிடமும் கொண்டுசேர்த்தது.

ஐ.பி.எம்., ஹெச்.பி., மைக்ரோசாஃப்ட்... போன்ற நிறுவனங்கள் தங்கள் மின்னணுப் பொருட்களின் உள்கட்டமைப்பு பற்றி மட்டுமே யோசித்தனர். ஆனால், ஸ்டீவ் தங்கள் பொருட்களின் சாஃப்ட்வேர், ஹார்டுவேர்... இரண்டுக்கும் சரிசம முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கினார். மென்பொருள் தயாரிக்கவும் வெளிக்கட்டமைப்பைத் தயாரிக்கவும் தனித் தனி குழுக்களை நியமித்திருந்தார் ஸ்டீவ். இதை, 'ஸ்டீவுக்கு ஹார்டுவேர், சாஃப்ட்வேர் என இரண்டு மனைவிகள். ஆனால், அவர்களுக்குள் எப்போதும் யார் சிறந்தவர் என சண்டை வராது’ என்பார்கள் ஆப்பிள் ஊழியர்கள்.

23 வயதில் 10 லட்சம் டாலர், 24 வயதில் 10 கோடி டாலர் என ஸ்டீவ் ஜாப்ஸின் சொத்து அசுரத்தனமாக அதிகரிக்க, அவர் முதலீடு செய்தது 500 டாலர் மற்றும் நிறைய புத்திசாலித்தனம் மட்டுமே. ஆப்பிள் ஐ-போன் அறிமுகமாகி உலகெங்கும் பரபர வரவேற்பு குவித்த புதிதில், 'மற்ற நிறுவனங்கள் 10 வருடங்கள் கழித்து செய்யத் திட்டமிட்டிருந்ததை ஸ்டீவ் இப்போதே செய்துவிட்டார்’ என மீடியா பாராட்டின. அதற்கான மனநிலை குறித்தும் பின்னொரு நாளில் குறிப்பிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்... ' 'எல்லா நாளும், இது என் கடைசி நாள் என எண்ணி வாழ்ந்தால், நிச்சயம் ஒருநாள் அது நிஜமாகிப்போகும்’ என சிறுவயதில் நான் படித்த ஒரு வாசகம் என் மனதில் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. அதனால் என் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் கடைசிநாளாகவே கருதுவேன். அதுதான், 'பத்து வருடங்கள் கழித்தே இது சாத்தியம் ஆகும்’ என்ற எண்ணத்தை மீறி புதுப் புது தயாரிப்புகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தை அளித்தது’ என்றார் ஸ்டீவ்.

'ஆப்பிள்’ தன் புதுமைப் பசியை இன்னும் தக்கவைத்திருப் பதற்கு, ஸ்டீவ் ஜாப்ஸின் அந்த வெற்றி ஃபார்முலாவே காரணம்!

Monday, February 09, 2015

ஏடிஎம் - உலகை மாற்றிய புதுமைகள்!

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒருவர் எப்போதும் கையிலும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. சட்டைப் பையில் இருக்கும் பணம் எப்போது வேண்டுமானாலும் தொலைந்து போகலாம். ஆனால், திடீரென பணம் தேவைப்பட்டால்..?

 இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப அறிஞர்கள் யோசித்தபோது உருவானதுதான் ஏடிஎம் என்று சொல்லப்படும் ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின். இந்த ஏடிஎம் தோன்றிய வரவாறு சுவாரஸ்யமானது.

பட்டனைத் தட்டுவதன் மூலம் சாக்லேட் தரும் இயந்திரம்தான் பணம் தரும் ஏடிஎம் மெஷினுக்கான அடிப்படை. 1960-களில் பார்க்லேஸ் வங்கி லண்டனில் முதல்முறையாக இந்த ஏடிஎம்  இயந்திரத்தைப் பொருத்தியது. இதன்மூலம் வங்கிக் காசாளர் அளிக்கும் காசோலையை நகலெடுத்து கொள்ளும் இயந்திரமாக அறிமுகப்படுத்தியது. பின்னர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வசதியையும் அறிமுகம் செய்தது.


பின்னர் வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை, கடைசியாகச் செய்த பரிமாற்ற விவரங்கள், சிறு அறிக்கை ஆகியவற்றையும் அறிந்துகொள்ளும் விதமாக இந்தக் கண்டுபிடிப்பு மாறியது. வங்கிக் கணக்குகள் கணினிமயமானபின்பு, பிளாஸ்டிக் கார்டுகள் மூலம் பணம் எடுக்கும் வசதிகள் உருவாக்கப்பட்டன. இதனை ஒருவர் மட்டுமே பயன்படுத்த ரகசிய எண்களும் அறிமுகம் செய்யப்பட்டு பாதுகாப்பாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

இன்றைக்கு பிளாஸ்டிக் கார்டு என்பது மறைந்து, வெறும் ரகசிய எண்ணை மட்டுமே பதிந்து, பணத்தை எடுக்கிற அளவுக்கு ஏடிஎம் தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. இந்தியாவில் இந்தத் தொழில்நுப்டம் அறிமுகமான 15 ஆண்டுகளுக்குள் அன்றாட மக்களின் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டது ஏடிஎம் இயந்திரம். இன்று ஏடிஎம்மை பயன்படுத்த கட்டணம் என்றாலும், அதற்காக அதை பயன்படுத்துவதை மக்கள் குறைத்துக் கொள்ளவில்லை.

இன்று நீங்கள் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும், உங்கள் செலவுக்குப் பணம் எடுத்துக் கொள்ளாமல் வெறும் ஒரு பிளாஸ்டிக் கார்டை எடுத்துக்கொண்டு சென்றால், உங்களால் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். இந்த 'எனி டைம் மணி’ மூலம் நமக்குக் கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை!

ச.ஸ்ரீராம்


ஃபிட்னெஸ் கேட்ஜெட்ஸ்

 பரபரப்பான வாழ்க்கையில் ஃபிட்னெஸ் என்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் முக்கியமான பங்கைப் பெற்றுவிட்டது. அதைச் சரிவரச் செய்வதற்கு உதவியாக இருப்பதுதான் ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகள். இந்த ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகளை வைத்துக்கொண்டு, நமது ஃபிட்னெஸ் பயிற்சிகளை யார் உதவியும் இல்லாமல், எந்தத் தவறும் இல்லாமல் செய்யலாம்.

 1. Nike+Fuelband:
கவர்ச்சியாகக் காட்சியளிக்கும் இந்த கேட்ஜெட்டைக் கையில் ஒரு ப்ரேஸ்லெட்டைப்போல அணிந்துகொள்ளலாம். இந்தக் கைப்பட்டையில் (Band)  உள்ள சென்சார்கள் மனிதனின் தினசரி அசைவுகளைக் கண்காணித்துக் கொள்கிறது. கண்காணித்த தகவல்களை ‘Nike Fuel’-களாக மாற்றிவிடும். ‘Nike Fuel’ என்பது ஒவ்வொரு வேலைக்கும் நாம் செலவிடும் சக்தியின் ஒரு புதுமையான அளவுகோல். இதைவைத்து ஒருவர் தங்களது தினசரி உழைப்பைக் கண்காணித்துக் கொள்ளலாம். இந்தக் கைப்பட்டையை ப்ளூ-டூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் இணையத்தில் ஒரு நைக் அக்கவுன்ட்டும் தேவை. இந்தக் கைப்பட்டை இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 14,590 என்ற விலையில் விற்கப்படுகிறது.

 2. Polar RC*3 GPS:

இந்த கேட்ஜெட் சைக்கிளிங் செய்பவர்களுக்கும் ஓடுபவர்களுக்கும் மிகப் பயனுள்ள கேட்ஜெட்டாக அமையும். பார்ப்பதற்கு ஒரு வாட்ச் போலக் காட்சியளிக்கும் இந்த கேட்ஜெட் GPS வசதியைக் கொண்டது. இதன்மூலம் ஒருவர் பயணத்தைக் கடக்கும் தூரம், நேரம் மற்றும் வேகம் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ளலாம். இந்த விவரங்கள் அனைத்தும் 'Polar’ இணையதளத்தின் அக்கவுன்ட்டில் சேமிக்கப்படும்.

இந்த கேட்ஜெட்டின் விலை ரூ.20,000.

3. Griffin Adidas MiCoach Armband:

இந்தக் கைப்பட்டையை கையின் மேற்பகுதியில் மாட்டிக்கொள்ளலாம். இந்த கைப்பட்டை முழுவதும் ‘நைலானால்’ ஆனது. மேலும், இதன் எடை மிகக் குறைவு. எனவே, இந்தக் கைப்பட்டையை கையில் அணிவதற்கு எந்த இடையூறும் இருக்காது. இந்தக் கைப்பட்டையில் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது ஐ-பேடு ஆகியவற்றைப் பொருத்திவிடலாம். ஓடும்போதும் வொர்க்-அவுட் செய்யும்போதும் இந்த பட்டை கையில் அணிவதற்கு வசதியாக இருக்கும். ஸ்மார்ட் போன்/ஐ-பேடில் உள்ள அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த இந்தக் கைப்பட்டை மிக உதவியாக இருக்கும். ஹெட்-போன்ஸ் இணைப்பதும் இந்தப் பட்டையில் சுலபம்தான். இதன் விலை இந்தியாவில் ரூ.2,500/

   4.Beddit - Sleep Monitor:

நல்ல தூக்கமே நல்ல ஆரோக்கியத்துக்கு வழி. அந்த வகையில் நம் தூக்கத்தைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டதே இந்த 'Beddit’ கேட்ஜெட். இந்த கேட்ஜெட் பார்ப்பதற்கு ஒரு பெரிய கைப்பட்டை (Band) போல இருக்கும். இதை நாம் தூங்கும் படுக்கையில் நன்கு விரித்து, அதன் மீது படுத்துத் தூங்கினால் போதும். இந்த கேட்ஜெட் தூங்குபவர்களின் இதயத் துடிப்பு, சுவாச அளவு, தூக்க சுழற்சி மற்றும் தூங்கும் நேரம் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ளும். கண்காணித்த தகவல்களை வைத்துக் கொண்டு 110 மதிப்பெண்ணுக்கு மார்க்கும் தரும். இந்த மார்க்கை ப்ளூடூத் மூலம் நமது போனுக்கு அனுப்பி விடும். இதன்மூலம் நம் தினசரி தூக்கத்தின் தரத்தைத் தெரிந்துக்கொள்ளலாம். இதன் விலை ரூ.9,200.

கேட்ஜெட்டுகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்!
 
செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, February 07, 2015

சொல்லும் பொருளும் போல!

 
வாழ்க்கை என்பது தம்பதிகளாக வாழ்வதுதான். ஆண்கள் இந்தக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே பந்தமில்லாமல், பொறுப்பில்லாமல் சுதந்திரமாக வாழலாம் என்ற பலரும் நினைக்கிறார்கள். அதேபோல் பெண்களும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே ஏதோ உத்யோகம் செய்துகொண்டு, சம்பாதித்து சுதந்திரமாக ஒரு பந்தத்திலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். 
 
ஆனால் உண்மையாகப் பார்க்கும்போது கல்யாணம் செய்து கொள்ளாத ஆணோ, பெண்ணோ வாழ்க்கையில் பல பொறுப்புகளையும், பல பந்தங்களையும் பல கஷ்டங்களையும் எற்றுக் கொண்டிருப்பதானது கண்கூடாகத் தெரிகிறது.

கல்யாணமான தம்பதிகளுக்கு வரக்கூடிய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தம்பதிகளே, பரஸ்பரம் பேசி பலவித பிரச்னைகள், கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. கணவனும், மனைவியும் சொல்லும் அதன் விளக்கமும் போல, இரு உடல் ஒரு மனதாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்றால் சந்தேகங்கள் அபிப்ராய பேதங்கள் இருப்பது சகஜம். அவைகளைப் பெரிதுபடுத்தாமல் இறைவன் கொடுத்த புத்தியை நன்றாக உபயோகித்து, ஒரு தடவைக்குப் பலதடவை நன்றாக செது, பொறுமையுடன், பொறுப்புடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், ‘நான் எவ்வளவு நாள் விட்டுக் கொடுப்பது? நீங்கள் விட்டுக்கொடுத்தால் என்ன?’ என்று சொல்லிக்கொள்ளாமல் இரு உடல் ஒரு மனதுடன், சொல்லும் பொருளும் போலும், சமுத்திரத்தில் வரும் அலை எப்படி வந்து போய் ஒன்றாகிறதோ அதுபோல், நம்மிடையே ஒருவருக்கொருவர் மனஒற்றுமையுடன் வாழ்வதே வாழ்க்கை.
 

Friday, February 06, 2015

பன்றிக் காய்ச்சல்...

சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகையே பீதிக்கு ஆளாக்கிய பன்றிக்காய்ச்சல், இப்போது மீண்டும் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளது. சென்னையில் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக ஒருவரைக் கண்டறிந்த நிலையில், சென்னையை அடுத்த மறைமலைநகரில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொஞ்சம் பாதுகாப்பாக இருந்தால், பன்றிக்காய்ச்சலைத் தவிர்க்க முடியும், ஒருவருக்குப் பன்றிக்காய்ச்சல் வந்தாலும் சரிப்படுத்த முடியும்.
 
சாதாரண வைரஸ் காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால், பன்றிக் காய்ச்சல் மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தீவிரமாகும். இருமல், தும்மல் அதிகமாக இருக்கும். தலைவலி, தொண்டை வலி, உடல் வலி, கண்களில் எரிச்சல் என்று, பாதிப்புகள் தொடர்ச்சியாக வரும். சிலருக்கு இடைவிடாத வாந்தி, வயிற்றுப்போக்கும் வரலாம். இருமல் அதிகமாகி எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. இருமலை அலட்சியப்படுத்தினால், நுரையீரலின் தசைகள் ஆரோக்கியத்தை இழந்து, சுருங்க ஆரம்பித்துவிடும்.

இருமல், சளி இருப்பவர்கள் இரண்டு மூன்று முறையாவது சோப் போட்டுக் கை கழுவ வேண்டும். நோய் உள்ளவர்களின் கை, கால், வாய்ப் பகுதிகளை மற்றவர்கள் தொடக் கூடாது. சளி, இருமல் தொடர்ந்து இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல், உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ என்று வந்தால், சிகிச்சைக்காக உடனே அவரைத் தனிமைப்படுத்த வேண்டும்.

காய்ச்சல் வந்தவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்புவதும் சளி சிந்துவதும் கூடாது.

வாஷ்பேசினில் எச்சில் துப்பினால், தண்ணீரால் வாஷ்பேசினை நன்கு கழுவிவிட வேண்டும். சளி சிந்திவிட்டு, கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவ வேண்டும். பன்றிக்காய்ச்சல் உள்ளவர்கள் வெளி இடங்களுக்குச் செல்லக் கூடாது. கூட்டம் கூடுகிற இடங்களுக்குச் சென்றால், அவரால் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு அதிகம். அதேபோல், நோயாளிகள் உபயோகப்படுத்திய பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, நோயாளியின் எச்சில்பட்ட டம்ளர், தட்டு போன்றவற்றை, மற்றவர்கள் தொடக் கூடாது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை, இது எளிதில் தாக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்துமா, கல்லீரல், நுரையீரல், ரத்த சம்பந்தமான குறைபாடு உள்ளவர்கள், நரம்பியல் கோளாறுகள், சர்க்கரைக் குறைபாடு உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்களுக்கு வர சாத்தியங்கள் அதிகம். அதேபோல், பன்றிக் காய்ச்சல் இருப்பவர் உங்கள் அருகில் இருந்தால், அது உங்களைத் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை!

கருணாநிதி, பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர்

அரிசி சக்கையா? சத்தா?

‘வெள்ளை அரிசியை ஒதுக்குங்கள், பிரவுன் அரிசிதான் பெஸ்ட்’ - ஆரோக்கிய விரும்பிகளின் அட்வைஸ் இது. பிரவுன் (பழுப்பு) அரிசியா? வெள்ளை அரிசியா எதைச் சாப்பிடுவது?

பிரவுன் அரிசியும் வெள்ளை அரிசியும் வெவ்வேறு ரகமோ, வெவ்வேறு இடங்களில் விளைபவையோ இல்லை. பிரவுன் அரிசி என்பது தவிடு நீக்காத அரிசி. நாம் தற்போது சாப்பிடும் அரிசி, தவிடு நீக்கப்பட்டு, வெள்ளை நிறத்துக்காக, நன்றாக பாலீஷ் செய்யப்பட்டது. பிரவுன் அரிசி எனப்படும் தவிடு நீக்காத அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அரிசியை பாலீஷ் செய்யும்போது, இந்தச் சத்துக்கள் நீக்கப்படுகின்றன.

பிரவுன் அரிசி யாருக்கு ஏற்றது?

அனைவருக்குமே ஏற்றது. வெள்ளை அரிசியைக் காட்டிலும் அதிக நார்ச்சத்து கொண்டது பிரவுன் அரிசி. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதிக உடல் உழைப்புள்ள வேலைகளைச் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவர்கள் ஆகியோருக்கு மிகவும் நல்லது. இந்த அரிசியில் செலினியம் அதிகம் இருப்பதால், இதயநோய், கீல்வாதம், புற்றுநோய் போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கும், நரம்புமண்டலங்கள் சீராக செயல்படுவதற்கும் மக்னீசியம் அவசியம். நாள் ஒன்றுக்குத் தேவையான மக்னீசியத்தில் 80 சதவிகிதம் ஒரு கப் பிரவுன் அரிசியில் கிடைத்துவிடுகிறது.


பிரவுன் அரிசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக ஏற்றும். இந்த அரிசியின் கிளைசமிக் குறியீட்டு எண், வெள்ளை அரிசியைவிடவும் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள், ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளை அரிசியைத் தவிர்த்து, பிரவுன் அரிசியைச்  சாப்பிடலாம். குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே பிரவுன் அரிசியைக் கொடுத்துப் பழக்குவது நல்லது. உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கவும், தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும் பிரவுன் அரிசி வழிவகை செய்கிறது. செரிமானத்திறன் பிரச்னை உள்ளவர்கள், வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் பிரவுன் அரிசியைத் தவிர்ப்பது நல்லது.

பிரவுன் அரிசியை எப்படிச் சாப்பிடவேண்டும்?

பிரவுன் அரிசியை வெள்ளை அரிசியைக் காட்டிலும் அதிக நேரம் வேகவைத்துப் பயன்படுத்த வேண்டும். பிரவுன் அரிசியை சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற கலவை சாதங்களுக்குப் பயன்படுத்தலாம். சுவையும் பலனும் கூடுதலாக இருக்கும்.


பிரவுன் அரிசியை மாவாக அரைத்து, எண்ணெய் சேர்க்காமல் தோசையாகச் சுட்டு சாப்பிட்டால்  நல்ல பலன் கிடைக்கும். வேகவைத்த அரிசி சாதத்தை, அப்படியே விழுங்கக் கூடாது. நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.

வெள்ளை அரிசி யாருக்கு ஏற்றது?

நோயாளிகள், ஜீரணக்கோளாறு உடையவர்கள், பற்கள் இல்லாததால், மென்று சாப்பிட முடியாமல் அவதிப்படுபவர்கள் போன்றோருக்கு, வெள்ளை அரிசி ஏற்றது. வெள்ளை அரிசியில் சில சத்துக்கள் குறைவே தவிர, அனைவரும் பயன்படுத்தலாம்.

பிரவுன் அரிசியும் சிவப்பு அரிசியும் ஒன்றா?

சிவப்பு அரிசியும், பிரவுன் அரிசியும் வேறு வேறு ரகம். அனைத்து ரக அரிசியிலும் தவிடு நீக்கப்படாத அரிசியே பிரவுன் அரிசி என்கிறோம். தவிடு நீக்காத சிவப்பு அரிசியை பிரவுன் -சிவப்பு அரிசி என்கிறோம். கேரளாவில் தான் சிவப்பு அரிசி அதிகளவு பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் பெரிய அளவில் புழக்கத்தில் கிடையாது. பிரவுன் அரிசியை மெஷின் மூலம் தவிடு நீக்கிவிட்டு மேலும் மேலும் பாலீஷ் செய்யப்பட்டு கடைகளில் கிடைப்பது தான் நாம் தற்போது உணவாக பயன்படுத்தும் வெள்ளை அரிசி.

- எஸ்.ஷோபனா, உணவியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்

Sunday, February 01, 2015

காப்பீடு! - உலகை மாற்றிய புதுமைகள்!


நான் இல்லாவிட்டால் என் குடும்பத்தைக் காப்பாற்றுவார் யார் - எதற்குமே அஞ்சாதவர்கூட இந்தக் கேள்வியைக் கேட்டு மிரண்டுபோவது உண்டு. இன்னும் சிலருக்கு, தீவிபத்து, வெள்ளம், பொருட்கள் திருடு போவது என ஏதாவது ஓர் அசம்பாவிதத்தினால் செய்யும் தொழிலில் நஷ்டம் வந்தால், என்ன செய்வது என்கிற பயம். இதுமாதிரியான அத்தனை பயங்களுக்கும் மனிதன் கண்டுபிடித்த ஓர் எளிய தீர்வுதான், இன்ஷூரன்ஸ் திட்டங்கள்.

கி.மு 3 மற்றும் 2-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சீன மற்றும் பாபிலோனிய வணிகர்கள் தங்களது வர்த்தகத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க, கடன் வாங்குபவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. பொருட்களைக் கொண்டு செல்லும்போது பாதி வழியில் திருடு போனாலோ,  இயற்கைச் சீற்றத்தால் அழிந்துபோனாலோ ஏற்படும் இழப்பிலிருந்து மீண்டுவர   இந்த ஏற்பாடு மிகவும் உதவியாக இருந்தது.


14, 15-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலிருந்து உலகம் முழுக்க வணிகம் செய்ய வர்த்தகர்கள் கிளம்பியபோதுதான் பொருட்களுக்குப் பாதுகாப்பு தரும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.  ஆனால், 19-ம் நூற்றாண்டில்தான் தனிநபர்களுக்கான மருத்துவக் காப்பீடு அறிமுகமானது. தனிநபர்களுக்கு  வரும்  நோய்களுக்கான இன்ஷூரன்ஸ் வசதி உருவானபோது தான், திடீரென ஏற்படும் மருத்துவச்  செலவை எப்படி சமாளிப்பது என்கிற பயம் பலருக்கும் நீங்கத் தொடங்கியது.

இன்றைக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தானாகவே முன்வந்து ஆயுள்காப்பீட்டு பாலிசிகளை எடுக்கின்றனர். தொழில் துறை சார்ந்தவர்கள் பொருட்களை அனுப்பும்போது அதற்கான இன்ஷூரன்ஸை எடுக்காமல் அனுப்புவதே இல்லை என்கிற அளவுக்கு நிலைமை முன்னேறி இருக்கிறது.

சில பிரபலங்கள் தங்கள் உடல்  உறுப்புகளைக் கூட இன்ஷூரன்ஸ் செய்யும் வழக்கம் வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல, நம் நாட்டிலும் உருவாகி இருக்கிறது. பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் தன் கால்களையும், பாடகரான ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டன் தனது குரலையும் இன்ஷூரன்ஸ் செய்தனர். நம்மூர் சச்சினும் தோனியும் இதுமாதிரி இன்ஷூரன்ஸ் செய்து வைத்திருக்கின்றனர்.

திடீரென வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க 2000 வருடங்களுக்கு முன்பே மனிதன் சிந்தித்திருக்கிறான் என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

ச.ஸ்ரீராம்
 

சுகன்யா சம்ரிதி திட்டம்...


மோடி அரசு ஆட்சிக்கு வந்தபின் அடிக்கடி புதிய திட்டங்கள் அறிமுகமாகி வருகிறது. ஜன் தன் திட்டத்தின் மூலம் இந்தியாவில் வசிக்கும் எல்லோருக்கும் வங்கிக் கணக்கு என்கிற திட்டத்தை ஆர்வத்துடன் அமல்படுத்தியது. தற்போது, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்துக்காக புதிதாக ஒரு வங்கிக் கணக்கை அறிமுகம் செய்துள்ளது.

யார் தொடங்க முடியும்? 

பிறந்த பெண் குழந்தை முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் வங்கி அல்லது அஞ்சலகத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் துவங்கி 1.5 லட்சம் ரூபாய் வரை அந்தக் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். இப்படி 14 ஆண்டுகள் வரை இந்தக் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தக் கணக்கை துவங்கியபின் அந்தக் குழந்தையின் 18வது வயது வரை கணக்கில் செலுத்தியுள்ள பணத்தை எடுக்க முடியாது. அதன்பின் 50 சதவிகிதம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். இந்தக் கணக்கு 21 வருடங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும். ஒருவேளை இடையே திருமணம் நடந்தால், அந்த வருடத்தோடு இந்தக் கணக்கு முடிந்துவிடும்.அதற்குப்பின் இந்தக் கணக்கைத் தொடர முடியாது. 21 வருடங்கள் கழித்து மீதமுள்ள தொகையையும் அதற்கான ஆண்டுக் கூட்டு வட்டியையும் பெறலாம்.

ஒரு பெண் குழந்தைக்கு அதிகபட்சமாக 10 வயதில் இந்தக் கணக்கைத் துவங்கினால் 31 வயது வரை அதன் கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் உதவும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதிக்கு அரசு 9.1 சதவிகித கூட்டு வட்டியை யும், முதலீட்டில் வருமான வரி விலக்கும் அளித்துள்ளது.

இதனால் இனி பெண் குழந்தைகள் கல்விக்கும், திருமணத்துக்கும் பணம் ஒரு தடையாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது. உதாரணமாக, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் இந்தத் திட்டத்தில் கணக்கைத் துவங்கி, ஆண்டுக்கு 50,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால், வருடத்துக்கு 9.1 சதவிகிதம் வட்டி என்ற கணக்கின்படி 21 வருடங் கள் கழித்து, சுமார் 28.3 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது அந்தக் குழந்தையின் திருமணத்துக்கு உதவியாக இருக்கும். ஒருவேளை 18வது வயதில் எடுத்தால், ரூ.20 லட்சம் கிடைக்கும். இதில் பாதி தொகை அந்தக் குழந்தையின் கல்விக்குப் பயன்படும்விதமாக அமையும். மீதித் தொகை கணக்கு ஆரம்பித்து 21 வருடம் முடியும்போது கொடுக்கப்படும்.  

 

மனமும் அறிவும் தெளிய...


மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிறபோது தான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி தெளிவாக இருக்கிறபோது படித்தால் பாடம் நன்றாக ஏறுகிறது. கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப் போகிறது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது.

தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியைப் பார்வதி - பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி - மஹாவிஷ்ணுவாகவோ நினைத்துக்கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும்; புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாகவரும். நன்றாகப் பாஸ் பண்ணிவிடலாம்.

ரொம்பப் புத்திசாலியாக இருந்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணினால்கூட, நல்லவன் என்ற பெயரெடுக்காவிட்டால் பிரயோஜனம் இல்லை. நல்ல பெயர் இல்லாவிட்டால் பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நல்லவனாக இருந்து விட்டால் அது நமக்கும் சந்தோஷம்; மற்றவர்களுக்கும் சந்தோஷம்; பெரியவனான பின் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும் அதுதான் உதவும்.

நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாக, இரண்டாகவும் செய்வது ஸ்வாமியிடம் நாம் வைக்கிற பக்திதான்.