Search This Blog

Sunday, June 30, 2013

வாய்ப்புண் -காப்போம்!

 
நம் செரிமான மண்டலத்தின் முதல் உறுப்பும் முக்கிய உறுப்புமாக இருப்பது வாய்தான். சமையல் அறையில் பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. ஹாலில் இருக்கும் நமக்குப் பிரியாணி வாசனை மூக்கைத் துளைக்கிறது. பிரியாணியைப் பார்த்ததும் நம் மூக்கும் கண்களும் மூளைக்குச் செய்தி அனுப்புகின்றன.உடனே, வாயில் உமிழ்நீர் சுரக்கிறது. வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. உணவைச் செரிப்பதற்குத் தேவையான அத்தனை நொதிகளும் சுரக்கத் தொடங்குகின்றன. உணவுச் செரிமானத்தின் முதல் கட்டம் வாயில்தான் தொடங்குகிறது. வாய்க்குள் போகும் உணவுப் பொருள்கள், தாடையாலும், பற்களாலும், நாக்காலும் நொறுக்கப்படுகின்றன; அரைக்கப்படுகின்றன. இவ்வாறு அரைக்கப்பட்ட உணவுடன் உமிழ்நீர் கலக்கிறது. உமிழ்நீரில் ‘அமைலேஸ்’ எனும் நொதி உள்ளது. இது உணவில் உள்ள ‘ஸ்டார்ச்’ எனும் மாவுப்பொருளை ‘மால்டோஸ்’ எனும் இரட்டைச் சர்க்கரைப் பொருளாக மாற்றி, உணவுச் செரிமானத்தை ஆரம்பித்து வைக்கிறது. ‘மியூசின்’ எனும் வேதிப்பொருள் உணவைக் கூழாக்குகிறது. இப்படிக் கூழான உணவானது தொண்டைக்குள் தள்ளப்படுகிறது. உணவை அரைப்பது, உமிழ்நீரைச் சுரப்பது, ஸ்டார்ச்சைச் செரிமானம் செய்வது, உணவை விழுங்குவது ஆகியவைதான் வாயின் முக்கியப் பணிகள். இப்பணிகளைச் செய்ய முடியாதபடி சில பிரச்னைகள் வாய்க்கு வரலாம். அவற்றுள் முதன்மையானது, வாய்ப்புண். 
 
நம் அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படக் கூடியதுதான், வாய்ப்புண். ஆனால், அதைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால் பிரச்னை பெரிதாகி விடும். கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறும். அப்புண்களில் வலி உண்டாகும். கழுத்தில் நெறிகட்டும். காய்ச்சல் வரும். நாக்கு எரியும். உணவைச் சரியாகச் சாப்பிட முடியாது.  வாய்ப்புண் வருவதற்கு முக்கியக் காரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு. இதிலும் குறிப்பாக, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் - B2 மற்றும் B12 சத்து, புரதச் சத்து முதலியவை குறையும்போது ரத்த வெள்ளையணுக்கள் குறைந்து, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும்; ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து, ரத்தசோகை நோய் ஏற்படும். அப்போது வாய்ப்புண் வரும். அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருகிறது. கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்திப் புண்ணாக்கும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் வாயின் உறுப்புகளைப் பாதிக்கும்போது வாய்ப்புண் வரும். ‘ஆன்டிபயாடிக்’ போன்ற சில மருந்துகள் மற்றும் சில ஒப்பனைப்பொருள்களின் ஒவ்வாமை காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு. பல் ஈறுகளில் ஏற்படுகிற குறைபாடுகளும் வாய்ப்புண்ணுக்கு வழி அமைக்கும். புகைபிடிப்பதாலும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதாலும் வாய்ப்புண் அடிக்கடி வரும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு அங்குச் சுரக்கும் அதீத அமிலம் படுத்துறங்கும்போது உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். இதன் விளைவால் தொண்டை மற்றும் வாயில் புண்கள் ஏற்படுவதுண்டு. பற்களுக்குக் ‘கிளிப்’ பொருத்தப்படும்போது ஆரம்பத்தில் வாயில் புண்கள் உண்டாகும். செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றாலும் அடிக்கடி வாயில் புண்கள் வருவதுண்டு. உடலில் வைட்டமின் - B2 பற்றாக்குறை ஏற்படும்போது முதலில் பாதிப்படைவது, வாதான். அதிலும் குறிப்பாக உதடு, நாக்கு, வாய் ஓரங்களில் புண்கள்(Angular stomatitis) உண்டாகும். நாக்கு சிவந்து வீங்கும். நாக்கு பிசுபிசுப்பாக இருக்கும். இந்த நிலைமையில் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு அல்லது வைட்டமின்- B2 கலந்த மருந்துகளைச் சாப்பிட்டு இந்தப் பற்றாக்குறையைச் சரி செய்யவில்லை என்றால், உதட்டில் வெடிப்புகள் உண்டாகும். உதடும் நாக்கும் செந்நிறமாக மாறும். உதட்டின் மேற்புறம் வெடிப்புகளும் புண்களும் தோன்றும். 
 
இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் குறைபாடுகளைச் சரி செய்தால், சத்துக்குறைவு காரணமாக வரும் வாய்ப்புண்ணை நிச்சயம் தவிர்க்கலாம். குறிப்பாகச் சொன்னால் வெல்லம், பேரீச்சை, தேன், பச்சைநிறக் காய்கறிகள், கீரைகள், பச்சைப்பட்டாணி, சோயாபீன்ஸ், நிலக்கடலை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்து மிகுந்துள்ளது. பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, கைக்குத்தல் அரிசி, தீட்டப் படாத கோதுமை, கேழ்வரகு போன்றவற்றில் வைட்டமின் - B2 மிக அதிகம். இறைச்சி, மீன், முட்டை, ஈரல் ஆகிய அசைவ உணவுகளில் வைட்டமின்- B12 அதிக அளவில் உள்ளது. முளைகட்டிய பயறுகள், பருப்புவகைகள், பால் பொருள்கள் ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமுள்ளது. இந்த உணவுகளில் ஒன்று மாற்றி ஒன்றைத் தினமும் சாப்பிட்டால் வாய்ப்புண் வருவதற்கு வாய்ப்பு குறையும். வாய்ப்புண்ணுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். நாள்பட்ட வாய்ப்புண்கள் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது.சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாயில் நாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்கள். பற்களில் சொத்தை இருந்தாலும், பல் ஈறுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வாய்ப்புண் இருந்தாலும் துர்நாற்றம் வரும். பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகமுள்ளவர்களுக்கு உணவுத்துகள்கள் பற்களுக்கு இடையில் சொருகிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் ‘இன்டர்டென்டல்’ பல்துலக்கியைப் பயன்படுத்தினால் உணவுத் துகள்கள் வெளியில் வந்துவிடும். தரமான ‘மவுத் வாஷ்’ கொண்டு வாயைக் கொப்பளித்தால், வாய்நாற்றம் மறையும். 
 
* உணவில் ஊட்டச் சத்துகள் உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 
 * வாய் சுத்தம் காத்தால் வாய்ப்புண் வருவதை நிச்சயம் தடுக்கலாம். சாப்பிட்டு முடிந்ததும் நன்றாக வாயைக் கொப்பளித்துச் சுத்தப்படுத்த வேண்டும்.
* புகை பிடிக்கக்கூடாது. புகையிலை, வெற்றிலை போடக்கூடாது. பான்மசாலா ஆகாது.
* தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து உதடும் வாயும் வறண்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* செயற்கைப் பல் செட்டினால் பிரச்னை என்றால் உடனே அதை மாற்றிவிட வேண்டும்.
* மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே மருந்து, மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
 

நெல்சன் மண்டேலா - அலெக்ஸாண்டர் - காமராஜர்

நெல்சன் மண்டேலா
 
 
தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் 1918 ஜூலை 18 அன்று பிறந்தார். அப்பா சோசா பழங்குடி இனத் தலைவர். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட மண்டேலா மேற்படிப்பை லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக் கழகங்களில் முடித்தார். ஜோகனஸ்பர்க் கல்லூரியில் பகுதி நேரம் சட்டக் கல்வியும் பயின்றார். ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸில் சேர்ந்து கறுப்பர் இன விடுதலைக்காகப் போராடினார். 
 
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மண்டேலா மீது வழக்கு பாய்ந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் வின்னியுடன் திருமணம். கணவனின் கொள்கைகளுக்காகப் போராடியதுடன் அவரது பொதுவாழ்க்கைக்கு முழு ஒத்துழைப்பும் வின்னி அளித்தார்.  கறுப்பின மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் சிறுபான்மை வெள்ளையர்களே ஆண்டு வந்தனர்.சொந்த மண்ணிலேயே கறுப்பர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இதற்கிடையே ‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின்’ தலைவர் பொறுப்பும் தேடி வர, அரசுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக இறங்கினார் மண்டேலா. பலமுறை சிறையில் அடைக்கப்பட்ட போதும் இவரது வேகம் குறையவில்லை. 1956ல் கறுப்பின மக்களுக்குப் பிரத்யேக கடவுச் சீட்டு வழங்கப்படுவதை எதிர்த்து நடைபெற்ற ஊர்வலத்தில் வன்முறை வெடித்து 69 பேர் கொல்லப்பட்டனர். தேசத் துரோக குற்றத்துக்காக ஐந்து ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு 1961ல் விடுதலையானார். வெளியே வந்த மண்டேலா அமைதிப் போராட்டத்தை விடுத்து ஆயுதப் போராட்டத்துக்குத் தயாரானதுதான் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பம். வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளைப் பெற்றுக் கொண்டு ராணுவ மையங்கள் மீது கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார். அரசு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கறுப்பின மக்களுக்கு ஆதரவான இவரது போராட்டத்தை மனித உரிமைகளுக்கு விரோதமான போராட்டமாக பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள் முத்திரை குத்தின. அரசுக்கு எதிராகச் சதி, புரட்சி, கலகம், பொதுச் சொத்துகளுக்குச் சேதம், ராஜத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1962ல் மண்டேலா கைது செய்யப்பட்டார். 1964 ஜூன் 12ம் தேதி ஆயுள் தண்டனை எனத் தீர்ப்பானது. 46 வயதில் சிறை சென்ற மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு 1990ல் தனது 73 வயதில் விடுதலை ஆனார். உலக வரலாற்றில் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் மண்டேலா தான்!இவரது சேவைகளைப் பாராட்டி ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இந்திய அரசு ‘பாரத ரத்னா’, ‘மகாத்மா காந்தி சர்வதேச விருது’, ‘நேரு சமாதான விருது’ ஆகியவற்றை வழங்கி பெருமைப்படுத்தியது. 
 
1994 மே 10 அன்று தென்னப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி ஆனார். 1999ல் பதவியை விட்டு விலகியதுடன் மீண்டும் அதிபராகவும் மறுத்தார். ஐ.நா. அறிவிப்பைத் தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18 ‘மண்டேலா தினமாக’க் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
அலெக்ஸாண்டர்
 
கிரேக்கத்தின் ஒரு பகுதியான மாசிடோனிய மன்னன் இரண்டாம் பிலிப்ஸுக்கும் அரசி ஒலிம்பியாவுக்கும் கி.மு. 356 ஜூலை 20ல் பிறந்தார் அலெக்ஸாண்டர். தனது மகன் மிகச் சிறந்த அறிவாளியாகத் திகழ வேண்டும் என்னும் நோக்கத்துடன் தத்துவ மேதை அரிஸ்டாடிலை ஆசிரியராக நியமித்தார். கலை, இலக்கியம், நாடகம், கவிதை, அறிவியல், அரசியல் என அனைத்தையும் அலெக்சாண்டர் கற்றுக்கொண்டார்.  
 
மன்னர் பிலிப்ஸிடம் அரேபியக் குதிரையை விற்க வணிகர் ஒருவர் வந்திருந்தார். யாருக்கும் அடங்காத முரட்டுக் குதிரையாக இருந்ததால், அதை வாங்க விருப்பமில்லை. 10 வயதே நிரம்பிய அலெக்சாண்டர் குதிரையை அமைதிப்படுத்தினார். அலெக்சாண்டரின் திறமைக்குப் பரிசாக ‘பூஸிஃபாலஸ்’ என்ற அந்தக் குதிரையை பரிசாக அளித்தார் மன்னர்.  18 வயதில் போர்க் களமிறங்கி தந்தைக்கு உதவியாக கெரனியா, அதினியம், திபன் படைகளை வெற்றி கொண்டார். கி.மு. 336ல் தந்தை கொல்லப்படவே, 19 வயதில் அரியணை ஏறினார் அலெக்ஸாண்டார். சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி உலகையே தனது காலடியின் கீழ்கொண்டு வர வேண்டுமென்பது அலெக்சாண்டரின் ஆசை. முதல் முயற்சியாக தெஸ்ஸாலி, திரேஸ் நகரங்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டார். இவரது போர்த்திறனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல கிரேக்க அரசுகள் தாமாகவே சரணடைந்தன. தொடர்ந்து பாரசீகம், சிரியா, ஃபினீஷியா, பாபிலோனியா, எகிப்து நாடுகளைத் தனது ஆளுகையின் கீழ்கொண்டு வந்தார். வெற்றியின் அடையாளமாக அலெக்சான்ட்ரியா என்ற நகரை உருவாக்கினார். மத்திய தரைக்கடல் நாடுகளை இணைத்துக் கொண்ட பிறகு, இந்தியாவை வெற்றிகொள்ளும் நோக்கத்துடன் பஞ்சாபில் தடம் பதித்தார். போரஸ்ஸை வெற்றி கொண்ட போதும் அவரது வீரத்தை மெச்சி ஆட்சியைத் திருப்பிக் கொடுத்தார். பல வருடங்கள் தொடந்து போரிட்டதால் சோர்ந்து போன படை வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபடவே வேறு வழியின்றி ஊர் திரும்ப முடிவெடுத்தார். கி.மு. 323, ஜூன் 13ல் 33 ஆவது வயதில் மலேரிய காய்ச்சலால் மரணமடைந்தார் அலெக்ஸாண்டர். 
 
காமராஜர்
 
 
கறுப்பு காந்தி, கர்ம வீர்ர், படிக்காத மேதை, கிங் மேக்கர் என்று அழைக்கப்படுகிறார் காமராஜர். பத்தாண்டு காலம் தமிழக முதல்வராக இருந்த போதும் சொந்த வீடோ, வங்கியில் பணமோ இல்லாமல் ஏழையாகப் பிறந்து ஏழையாகவே மறைந்த மக்கள் தலைவர் காமராஜர். 1903 ஜூலை 15 அன்று குமாரசாமிக்கும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாக விருதுநகரில் பிறந்தார். வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களின் விடுதலைப் பேச்சுகளால் கவரப்பட்டு 16 வயதில் காங்கிரஸ் உறுப்பினரானார். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு கொல்கத்தா அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  
 
1936ல் தீரர் சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரான போது காமராஜர் செயலாளர் ஆனார். 1940ல் வேலூர் சிறையிலிருந்து கொண்டே விருதுநகர் நகரசபைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்1953ல் முதல்வர் ராஜாஜி பதவி விலக, 1954ல் காமராஜர் முதல்வரானார். மாணவர்கள் படிக்க வருவதை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தொழில், விவசாயத் துறைகளிலும் தமிழகத்தை முன்னேற்றினார். பாரத மிகு மின் நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சென்னை சுத்திகரிப்பு ஆலை, ஐசிஎஃப், இந்துஸ்தான் போடோ ஃபிலிம்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை நிறுவினார். பவானி, மேட்டூர், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர் நீத்தேக்கங்களை உருவாக்கினார். முதல்வர் பதவியை விட மக்கள் சேவையும் கட்சிப் பணியுமே முக்கியம் எனக் கருதி ‘காமராஜர் திட்டம்’ ஒன்றை உருவாக்கி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டு கட்சியைப் பலப்படுத்தினார். நேருவின் மறைவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் பிரதமர்களாக்கி ‘கிங் மேக்கர்’ என்று புகழ்பெற்றார். அயராது உழைத்த காமராஜர், 1975 அக்டோபர் 2 அன்று தேதி தூக்கத்திலேயே மரணமடைந்தார். 

தங்கம் விலை: இன்னும் குறையுமா?

தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சந்தையில் மிகவும் குறைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலின்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,997 டாலர் என்கிற அளவுக்கு விலை குறைந்தது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு 2,400 ரூபாய்க்கும் கீழே சென்றது.
 
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே குறைந்து வந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி 85 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்டுகளை விற்பனை செய்வதை வரும் ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்தபின் டாலரின் மதிப்பு அதிகரித்து தங்கத்தின் விலை குறைந்தது. 2010 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒரு அவுன்ஸ் 1,200 டாலருக்கு சென்ற வாரத்தில் சென்றது.நியூயார்க்கின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். கோல்டு இ.டி.எஃப். ஃபண்ட் இந்த ஆண்டில் இதுவரை 381 டன் அளவுக்கு தங்கத்தை விற்பனை செய்துள்ளது. மேலும், தங்கத்தை அதிகமாக வாங்கும் சீனா மற்றும் இந்தியாவில் தேவை சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைகள் மீது கடன் தருவதைக் குறைத்ததும், இறக்குமதி வரியை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளாலும், சீனாவில் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாலும் தங்கத்தின் மீதான தேவை குறைந்துள்ளது.

 

 
இரண்டு மாதங்களுக்கு முன் தங்கம் விலை இறங்கியபோது நம் நாட்டில் பெருமளவிலானவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கம் வாங்கினார்கள். ஆனால், இப்போது அதைவிட தங்கம் விலை குறைந்தபோதும் அதை வாங்குவதற்கான ஆர்வம் மக்களிடம் இல்லை. காரணம், தங்கம் இன்னும் குறையும் என்கிற எதிர்பார்ப்பும், இனி அதன் விலை பெரிதாக உயராது என்கிற எண்ணமும்தான்.


 

Saturday, June 29, 2013

தோனி - சல்யூட்!

 
ஓரிரண்டு தோல்விகள் மூலம் என்னையும் என் அணியையும் சுலபமாக எடை போட்டுவிடாதீர்கள். கிரிக்கெட்டில் பொறுமை முக்கியம். என்னையும் என் அணியையும் நம்புங்கள்." டி20 - 50 ஓவர் என இரு உலகக்கோப்பை வெற்றிகள், சாம்பியன் டிராபி கோப்பை, டெஸ்ட் - ஒருநாள் போட்டிகளின் தர வரிசைப்பட்டியலில் நெ.1 இடம், 2 ஐ.பி.எல். கோப்பைகள், சாம்பியன் லீக் வெற்றி என கிரிக்கெட்டில் உள்ள அத்தனை சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கும் தோனியின் உணர்வுகளை இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது. 
 
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் கிடைத்த 8 டெஸ்ட் தோல்விகள், இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வி பின்னடைவுகளால் 6 மாதங்களுக்கு முன்புவரை, தோனி மீது நம்பிக்கை இல்லை. வீராத் கோலி எப்போது கேப்டன் ஆவார் என்றார்கள். ஆனால், அவ்வப்போது நிகழும் தோல்விகளால் தம்மை இகழ்வது எவ்வளவு பெரிய தவறு என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் தோனி.  இந்திய கேப்டனாக இருப்பதை விடவும் ஒரு பெரிய கொடுமை எதுவுமில்லை. எப்போதும் சீனியர்களை அரவணைக்க வேண்டும், கூடவே ஜூனியர்களையும் வழிநடத்த வேண்டும். ஒரு சிறிய தவறுக்கு நாடே பொங்கி எழும். நிபுணர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். தோனி, இயல்பில் பொறுமையானவர். ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட்களில் தோற்றபோது அவர்மீது நம்பிக்கை வைக்க ஓர் ஆள்கூட இல்லை. இந்திய அணித் தேர்வுக்குழுவும் அவரை நீக்க எல்லா ஏற்பாடுகளும் செய்தது. பிறகு பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீனிவாசனால் அது தடுக்கப்பட்டது. அதன்பிறகு ஆடிய காமன்வெல்த் பேங்க் சீரிஸ் தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை. இந்த நிலையில் வேறு எந்த கேப்டனாக இருந்தாலும் உடனே பதவி விலகி இருப்பார். ஆனால், தோனி தொடர்ந்து தம் திறமைமீது உறுதியாக இருந்தார். 
 
கோலி அடுத்த கேப்டன் என்கிற பேச்சு அடிபட்டபோதும் நிதானம் தவறவில்லை. அதேசமயம், ஷேவாக், கம்பீர் போன்ற முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பிய போதும் தோனி அவர்களை அணியிலிருந்து நீக்கவில்லை. அந்த வேலையைத் தேர்வுக் குழு செய்ய வேண்டும் என்று காத்திருந்தார். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. மெல்ல மெல்ல இந்திய அணியில் நிகழ்ந்த சில மாற்றங்கள் தோனியின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுத்துள்ளன.  ஹர்பஜனுக்கு மாற்றாக வந்த அஸ்வின் உடனடியாக அணியில் தம் இடத்தை உறுதி செய்தார். சச்சின் ஒருநாள் அணியிலிருந்து ஓய்வு பெற்றதால் அணிக்குள் நுழைந்த ஷிகர் தவன் ஒரு பிரளயத்தையே உருவாக்கி இருக்கிறார். கூடவே, தவானும் முரளி விஜயும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து ஒரு புதிய கூட்டணியைத் தொடங்கியிருக்கிறார்கள். யுவ்ராஜ் சிங்கின் மறு அவதாரம் பலனளிக்காதபோது ரவீந்தர் ஜடேஜா கையை உயர்த்தினார். சச்சின், ஷேவாக், கம்பீர், யுவ்ராஜ் சிங், ஷாகீர் கான், ஹர்பஜன் சிங் என 2011 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்கள் இன்று இந்திய அணியில் இல்லை. பதிலுக்கு அணியில் இடம்பிடித்த புதிய வீரர்கள் புதிய மலர்ச்சியைக் கொண்டு வந்துருக்கிறார்கள். 2000ம் வருடம், கங்குலி தலைமையில் உருவான புதிய அணி ஞாபகத்துக்கு வருகிறது. தோனி, முதல் முதலில் கேப்டனானபோது ஓர் இளைஞர் அணி பட்டாளத்தைக் கொண்டு டி20 உலகக்கோப்பையையும் காமன்வெல்த் சீரீஸ் தொடரையும் வென்று காண்பித்தார். இன்றும் அதே போல் ஒரு அணியின் உதவியோடு சாம்பியன் டிராபியை வென்றுள்ளார். இந்த நேரத்தில், தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் படேலையும் பாராட்டவேண்டும். ஜாம்பவான்களை எல்லாம் தைரியமாக அணியிலிருந்து நீக்கி, இனிமேல், ஆடுகளத்தில் பங்களிக்காதவர்களுக்கு அணியில் இடமில்லை என்கிற பயத்தை உருவாக்கி இருக்கிறார். 
 
இந்திய ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான நேரம். ஏராளமான தோல்விகள், ஐ.பி.ல். பிரச்னைகள் என கிரிக்கெட்டையே வெறுக்கும் அளவுக்குப் பல சங்கடமான விஷயங்கள் சமீபகாலத்தில் நடந்துவிட்டன. அத்தனைக்கும் மருந்தாக அமைந்திருக்கிறது, சாம்பியன்ஸ் டிராபி வெற்றி. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை 4-0 என்கிற கணக்கில் வென்ற பிறகு கிடைத்திருக்கும் இன்னொரு மகத்தான வெற்றி.  இந்திய கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் அறியப்படுவதுபோல கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற புகழை அடைந்திருக்கிறார் தோனி. சச்சினின் ஓய்வு வரை அவரைக் கேள்வி கேட்காமல் சுதந்திரமாக வைத்திருப்பது போன்ற நம்பிக்கையை இனி தோனி மீதும் வைக்கவேண்டும். அடுத்த தலைமுறைக்கான அணி, தோனியின் பின்னால் நிற்கிறது. 
 
புதிய முகம்!
 
இனி இந்திய அணியில் ஷேவாக், கம்பீர் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஷிகர் தவான், ரோஹித் சர்மாவோடு முரளி விஜயும் தொடக்க ஆட்டக்காரராக அணியில் இடம்பெற்றுள்ளார். தவிர, ரெஹானேவுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஐ.பி.எல்.-லில் ஹர்பஜன் சிங் சிறப் பாகப் பந்து வீசினார். ஆனால் ஜடேஜாவின் அசத்தலான பந்துவீச்சு, ஹர்பஜனுக்கு சுலபத்தில் வழிவிடுவதாகத் தெரியவில்லை. அஸ்வின், ஜடேஜா, மிஸ்ராவுக்குப் பிறகுதான் ஹர்பஜன். அதாவது, வெயிட்டிங் லிஸ்ட். மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்குக்கு ஓர் இடம் கிடைத்துவிட்டதாலும், புஜாரா, எப்போது வேண்டுமானாலும் 50 ஓவர் அணிக்குள் நுழையலாம். ஷாகீர்கானுக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கலாம். ஜூலையில் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் ஆட்டங்களில் ஆடுகிறது. அதற்கான இந்திய அணியில் பழைய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா அல்லது மீண்டும் ஒரு இளைஞர் பட்டாளத்தைத் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்குமா என்பது பெரிய சஸ்பென்ஸ். 

விழுந்த ரூபாய் எழுமா?

இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் இந்திய ரூபாய் ஒரு அமெரிக்க டாலருக்கு 54 - ரூபாய் என்ற கணக்கில் இருந்து ரூபாய் 58.98 என்ற அளவுக்கு ஒரு பெரிய வீழ்ச்சியைக் கண்டது. இந்த 10 சதவீத வீழ்ச்சி நான்கு நாள் இடைவெளியில் ஏற்பட்டது. என்ன காரணம்?

இந்தியா ஆண்டொன்றுக்கு சுமார் 500 - பில்லியன் டாலர் மதிப்புக்குப் பிற நாடுகளில் இருந்து மிகத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்கிறது. இதில் பெருமளவு கச்சா எண்ணெய்! அதன் மதிப்பு சுமார் 150 பில்லியன் டாலர். அடுத்தபடியாக தங்கம்! சுமார் 60 பில்லியன் டாலர். தவிர கனரக இயந்திரங்கள், தாவர எண்ணெய், செய்திப் பத்திரிகைகளுக்குத் தேவையான காகிதம் (Newsprint), ராணுவ சாதனங்கள், இத்யாதி, இத்யாதி... இறக்குமதியில் அடங்கும்.  நமது பொருளாதார இயந்திரம் தடங்கலின்றி இயங்க வேண்டுமானால் தங்கத்தைத் தவிர, இந்த இறக்குமதி பொருள்கள் அனைத்தும் மிக அவசியம். இதற்கு நாம் செலுத்த வேண்டிய பணத்தை டாலரில் கணக்கிட்டு நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பின் மூலம் சரி செய்கிறோம். ஆண்டொன்றுக்கு நமது ஏற்றுமதிப் பொருள்களின் மதிப்பு சுமார் 300 - பில்லியன் டாலர்தான். இதைத் தவிர வெளிநாடு வாழும் இந்தியர்கள் அனுப்பும் அன்னியச் செலாவணி மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் ஈட்டும் அன்னியச் செலாவணி.இந்த இரண்டு துறைகளின் மூலம் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 - பில்லியன் டாலர் அளவுக்கு அன்னியச் செலாவணி பெறுகிறது. ஆக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் துண்டு விழும் தொகை சுமார் 100 பில்லியன் டாலர். இதைச் சமாளிக்க இந்திய அரசு, தொழில்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதுடன் அன்னிய முதலீட்டாளர்களை இந்திய பங்குச் சந்தை மற்றும் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவும் அனுமதித்திருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களின் மூலம் பற்றாக்குறையைச் சரிக்கட்ட முயலுகிறது.

ஜூன் முதல் வாரத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தாங்கள் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்க்குச் செலுத்த வேண்டிய அமெரிக்க டாலரை வர்த்தக வங்கிகளிலிருந்து அதற்கான இந்திய ரூபாயைக் கட்டிப் பெற வேண்டியிருந்தது. அதேசமயத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (FII)தாங்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த பங்குகளை விற்று அந்தத் தொகையை டாலராக மாற்றி எடுத்துச் செல்லும் முயற்சிகளில் இறங்கினார்கள். இதனால் டாலருக்கு ஏக கிராக்கி!  வர்த்தக வங்கிகளிடம் குறிப்பிட்ட அளவு அமெரிக்க டாலர் கைவசம் இல்லாததால் இந்திய ரூபாயின் வீழ்ச்சி 4 - நாட்களுக்குள் சுமார் 5 ரூபாய்வரை இறங்கியது. இந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த பாரத ரிசர்வ் வங்கி உடனே செயல்பட்டு தன் கைவசம் இருந்த டாலரில் ஒரு பகுதியை விற்க ஆரம்பித்தது. அதனால் ரூபாயின் தொடர் வீழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டாலும் தற்போதைய நிலவரப்படி இந்திய ரூபாய் ஒரு டாலருக்கு சுமார் 58 ரூபாய்க்கும் அதிகமாகவே இருக்கிறது.ரூபாயின் இந்த வீழ்ச்சியினால் நாம் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை உயர்கிறது. காரணம் ஒரு டாலருக்கு நாம் கொடுக்க வேண்டிய அதிக இந்திய ரூபாய். முக்கியமாக கச்சா எண்ணெய் விலை சுமார் 10 சதவிகிதம்வரை அதிகமாகக் கூடும். இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறும். அதனால் மற்ற பொருள்களின் விலையும் ஏறும். பண வீக்கம் அதிகமாகும். சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் சிரமப்படுவார்கள்.

இதற்கு என்ன நிவாரணம்?

எந்த நாட்டிலும் ஏற்றுமதியும், இறக்குமதியும் ஒரே அளவில் இருந்தால் பிரச்னை இல்லை! இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருந்தால் அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக உயருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி அதிகமாகிறது. ஏற்றுமதி குறைகிறது!

நிதி அமைச்சர் சிதம்பரம் தங்கம் இறக்குமதி அதிகரித்து வருவதைப் பற்றி அவ்வப்போது தம் முடைய கவலையைத் தெரிவிக்கிறார்.

சமீபத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவிகிதத்திலிருந்து 8 - சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டும் தங்கத்தின் இறக்குமதியின் அளவு குறைந்ததாகத் தெரியவில்லை.

தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால் நாம் அவசியமாக இறக்குமதி செய்ய வேண்டிய பொருள்களுக்குக்கூட கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை வரும்.

வி.கோபாலன்

ஓ பக்கங்கள் - மூன்றாவது அணி எங்கே? ஞாநி


இந்திய, தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் சமயங்களில் எல்லாம் அடிபடும் ஒரு தலைப்பு - மூன்றாவது அணி! முதல் இரண்டு அணிகள் எவை என்பதில் இன்று யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தில்லி அரசியலென்றால், அவை காங்கிரஸ், பி.ஜே.பி.! தமிழக அரசியலென்றால், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.! ஆனால் இவைதான் முதல் இரு அணிகள் என்ற நிலை ஏற்பட்டது எழுபதுகளுக்குப் பிறகுதான்! இந்த வரலாற்றைப் புரிந்து கொண்டால்தான் இனி மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உண்டா இல்லையா என்பதையே ஆராயமுடியும். 

இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நடந்த முதல் பொதுத் தேர்தலின்போது தில்லியிலும் தமிழ்நாட்டிலும் இருந்த இரு பிரதான கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். மற்றது இரண்டு இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிதான். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு படவில்லை. தில்லியில் நேருவின் காங்கிரஸ் 364 எம்.பி.களைப் பெற்றது. கம்யூனிஸ்டுகள் அடுத்த இடத்தில் 16 எம்.பி.களுடன் இருந்தனர். ஹைதராபாத்தில் கம்யூனிஸ்டுகளின் இயக்கமாக இருந்த மக்கள் ஜனநாயக முன்னணி தனிக் கட்சியாகப் போட்டியிட்டு 7 எம்.பி.களைப் பெற்றது. ஜெயப் பிரகாஷ் நாராயணனின் சோஷலிஸ்ட் கட்சி 12 இடமும் கிருபளானியின் கிசான் மஸ்தூர் பிரஜா (உழவன் உழைப்பாளி குடிமக்கள்) கட்சி 9 இடங்களும் பெற் றன. பின்னர் சோஷலிஸ்ட் கட்சியும் கிசான் பிரஜாவும் இணைந்து பிரஜா சோஷலிஸ்ட் கட்சியாயிற்று.

இன்றைய பி.ஜே.பி.யின் முன்னோடியான ஜன சங்கம் அந்த முதல் தேர்தலில் பெற்றது வெறும் மூன்று எம்.பி. இடங்கள்தான். அதன் தோழமை அமைப்பான இந்து மகாசபா பெற்றது நான்கு. இன்னொரு இந்துத்துவ அமைப்பான ராமராஜ்ய பரீஷத் பெற்றது மூன்று. ஒரிசாவில் பழைய மகாராஜாக்களின் கட்சியான கணதந்திர பரீஷத் ஏழு எம்.பி. இடங்களைப் பிடித்தது.

அதே தேர்தலில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை ராஜதானியில்,பெரியார் திராவிடர் கழகத்தை உருவாக்கி விலகியதும், தேய்ந்துபோய்விட்ட ஜஸ்டிஸ் கட்சி போட்டியிட்டும் ஒரு இடம் கூடப் பெறவில்லை. முதல் தேர்தலில் தி.மு.க. தில்லிக்கும் போட்டியிடவில்லை; மாநில சட்டசபைக்கும் போட்டியிடவில்லை.சென்னை ராஜதானியில் சட்டமன்றத் தேர்தலிலும் முதல் இடத்தில் காங்கிரசும் (164 எம்.எல்.ஏ.க்கள்) இரண்டாம் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியுமே (62) இருந்தன. பெரியார், கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார். தி.மு.க. போட்டியிடாத போதும் (பா.ம.க.வின் முன்னோடிகளான) வன்னியர் சாதிக் கட்சிகளை ஆதரித்தது! அவை 25 இடங்களைப் பெற்றன! பின்னர் காங்கிரஸ் அணிக்குப் போய்விட்டன. ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் ஜெயப்பிரகாசரின் சோஷலிஸ்ட் கட்சி 35 எம்.எல்.ஏ.க்களையும் கிருபளானியின் கிசான் பிரஜா கட்சி 13 எம்.எல்.ஏ.க்களையும் என்.ஜி. ரங்காவின் லோக் கட்சி 15 எம்.எல்.ஏ.க்களையும் அடைந்தன. இவையெல்லாம் சென்னை ராஜதானிக்குள் அப்போது இருந்த ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம், கேரளப் பகுதிகளில் செல்வாக்குடன் இருந்தவை. தமிழ்நாட்டில் அல்ல.இப்படி முதல் தேர்தல் நடந்த 1952ல் காங்கிரசுக்கு அடுத்த அணியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. வளர்ந்து 1957ல் அடுத்த தேர்தலில் போட்டியிட்டதுமே பலத்த அடிவாங்கிவிட்டது. தி.மு.க.வுக்கு 13. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெறும் நான்கு சீட்! இந்தச் சரிவுக்கு முக்கியமான இன்னொரு காரணம் இந்தத் தேர்தலின்போது சென்னை ராஜதானி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதாகும். கம்யூனிஸ்டுகளுக்கு தமிழ்நாட்டை விட ஆந்திரம், கேரளம், ஒரிசா பகுதிகளிலேயே அதிக செல்வாக்கு இருந்தது. அடுத்து வந்த 1962 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தும் கூட கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்தது இரண்டு எம்.எல்.ஏ.தான். தி.மு.கவுக்கு 50! தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்ற ஈ.வி.கே. சம்பத்தின் கட்சி போட்டியிட்ட 9 இடத்திலும் தோற்றது. காங்கிரஸ் 139 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சியாயிற்று.

1967 தேர்தலின்போது கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு இரு கட்சிகளாகியிருந்தது. அதில் மார்க்சிஸ்ட் கட்சி, வலதுசாரியான ராஜாஜியின் சுதந்திரா கட்சி சகிதம் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. சுதந்திராவுக்கு 20 இடங்களும் மார்க்சிஸ்ட்டுக்கு 11 இடங்களும் கிடைத்தன. யாருடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு எம்.எல்.ஏ.க்களை பெற்றது.இப்படியாக 1952ல் இரண்டாம் நிலையில் இருந்த இடதுசாரிகள் 1967ல் சென்னையில் அந்த இடத்தை இழந்து அடிமட்டத்துக்குப் போய் விட்டார்கள். தில்லியில் அவ்வளவு மோசமில்லை. தொடர்ந்து 20 முதல் 40 வரை இடங்களைப் பெற்றுப் பெரும்பாலும் இரண்டாம் இடத்திலேயே இருந்து வந்தனர். 1967 தேர்தலில் காங்கிரஸ் பலவீனமடைந்த போதும் கூட ஆட்சியைப் பிடித்தது. கம்யூனிஸ்டு கட்சி இரண்டாகப் பிளவுபட்டும் கூட இரு பிரிவுகளுமாகச் சேர்ந்து 42 இடங்களை வென்றன. ஜனசங்கம், சோஷலிஸ்ட்டுகள், சுதந்திரா போன்றோர் எல்லாம் அடுத்த நிலையிலேயே பலவீனமாக இருந்தனர்.பலமான நிலையில் காங்கிரஸ், அடுத்து பல இடங்கள் தள்ளியிருந்தாலும் இரண்டாம் இடத்தில் இடதுசாரிகள் என்று 1967 வரை தில்லியில் இருந்த நிலை எழுபதுகளில் மாறத் தொடங்கியது. முக்கியமான காரணம் இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சியை 1969ல் பிளவுபடுத்தியதுதான். பிளவுபட்ட காங்கிரசின் ஓர் அணி இந்திரா தலைமையில் சோஷலிசம் பேசிற்று. ராஜ மான்ய ஒழிப்பு, வங்கி தேசியமயம் எல்லாம் செய்யப்பட்டன. இன்னொரு அணி வலதுசாரி பழமைவாதம் பேசிற்று.சோஷலிஸ்டுகளில் கொஞ்சம் பேர் இந்திராவுடன் சேர்ந்தார்கள். இடதுசாரிகள் அவ்வப்போது இந்திராவை ஆதரிப்பது, எதிர்ப்பது என்று மாறி மாறி நிலை எடுத்தார்கள். ஜனசங்கம் போன்ற வலதுசாரி மத வாத அமைப்பும், சுதந்திரா போன்ற வலதுசாரி மதச்சார்பற்ற அமைப்பும் சோஷலிஸ்டுகளில் ஜனநாயகத்தை முக்கியமாகக் கருதியவர்களும் இந்திராவை எதிர்த்த காங்கிரசின் அணியுடன் கலக்க ஆரம்பித்தார்கள். 1970 முதல் 1980 வரை பத்தாண்டுகள் தில்லி அரசியலில் இந்த மிக்சிங் நடந்தபடி இருந்தது. இதில் கடைசியில் பயனடைந்தவர்கள் இந்துத்துவவாதிகளான ஜனசங்கிகள்/ஆர்.எஸ்.எஸ்.தான். 

சென்னை அரசியல் இன்னும் விசித்திரமாயிற்று. 1967ல்தான் ஆட்சியிலிருந்து அகற்றிய காங்கிரசுடனே தி.மு.க. 1971ல் நான்கே வருடங்களில் கூட்டு சேர்ந்தது. காரணம் இப்போது இரண்டு காங்கிரஸ் கட்சிகள் வந்துவிட்டன. ஒன்று இந்திரா. இன்னொன்று காமராஜ். தமிழ்நாட்டில் தம் தலைமைக்குச் சவால் காமராஜிடமிருந்துதான் வரமுடியும் என்று தெளிவாக உணர்ந்திருந்த கலைஞர் கருணாநிதி, இந்திராவைப் பயன்படுத்தி காமராஜைப் பலவீனப்படுத்தினார். தி.மு.க.வுக்கு எதிராக காமராஜர் உருவாக்கிய எதிர்ப்பலையெல்லாம், அனைத்திந்திய அளவில் அவர் சார்ந்திருந்த பிற்போக்கான சக்திகளினால் வீணாயிற்று.அப்போது இந்திரா மட்டும் காமராஜரைத் தம்முடன் இருக்கும்படி செய்திருந்தால், தமிழக அரசியல் மாறிப் போயிருக்கும். அனைத்திந்திய அரசியலும்தான். ஆனால் அது நிகழவில்லை. 1971 தேர்தல் வெற்றி, வங்கதேச உருவாக்கப் போர் வெற்றி எல்லாம் முடிந்ததும், இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்யவும், ஊழலைத் தடுக்கவும் இந்திராவிடம் எந்தத் திட்டமும் இல்லை. இதில் உண்டான அதிருப்தி வட மாநிலங்களில் மாணவர் இயக்கமாக உருவாகி, சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் மக்கள் இயக்கமாக மாறியது. ஜனசங்கம் முதல் லோகியாவாதிகள் வரை ஓரணியில் திரண்டனர்.தமிழ்நாட்டில் காமராஜரை இந்திரா அலை மூலம் வீழ்த்திய கலைஞர், இந்திராவைத் தேர்தல் தொகுதி உடன்பாட்டின் மூலம் வீழ்த்தியிருந்தார். 1971 சட்ட மன்றத் தேர்தலை விட மக்களவைத் தேர்தலையே தன் அதிகாரத்துக்கு முக்கியமென இந்திரா கருதியிருந்த பலவீனத்தைப் பயன்படுத்தி கலைஞர், தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்குப் போட்டியிட ஒரு சீட் கூட தராமல் தொகுதி உடன்பாடு செய்தார். 1967ல் ஆட்சியை இழந்தபோது கூட 40 சதவிகித வாக்கு பெற்றிருந்த காங்கிரஸ் சட்ட சபைக்குள் நுழையவே முடியாமல் போயிற்று.கலைஞரின் இந்த அரசியல் சூழ்ச்சியை காங்கிரசுக்குள் இருந்த சோஷலிஸ்டுகளும் காங்கிரஸை வெளியிலிருந்து ஆதரித்த சில கம்யூனிஸ்டுகளும் முன்னதாகவே புரிந்து கொண்டு விட்டனர். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கட்சிக்குள்ளும் வெளியிலும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளும் கலைஞர் கருணாநிதியையும் அவரது தி.மு.க.வையும் பலவீனப்படுத்தாமல் காங்கிரஸோ இடதுசாரிகளோ திரும்ப மேலெழ முடியாது என்பது இவர்களுக்கு நன்றாக உறைத்தது. எனவே கட்சிக்குள் தமக்குப் போட்டியாளரான எம்.ஜி.ஆரைப் பலவீனப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்த கலைஞரை அதே எம்.ஜி.ஆரைக் கொண்டே வீழ்த்துவது என்று எதிர் வியூகம் வகுக்கப் பட்டது.

ஆனால் காங்கிரஸ் சோஷலிஸ்டுகள்- கம்யூனிஸ்டுகளின் இந்த முயற்சி பஸ்மாசுரன் கதை மாதிரி ஆகிவிட்டது. தி.மு.க.வின் முதன்மை இடத்துக்குக் காங்கிரசும் வரமுடியவில்லை. தன் பழைய இரண்டாம் இடத்துக்கு இடதுசாரிகளும் வரமுடியவில்லை. முதல் இரண்டு இடங்களும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டுக்கும்தான். இதில் யாரேனும் ஒருவரை நம்பித்தான் தாங்கள் இருக்க முடியும் என்ற நிலைக்கு காங்கிரசும் இடதுசாரிகளும் தள்ளப்பட்டுவிட்டார்கள். எழுபதுகளின் இறுதியிலிருந்து இதுதான் தமிழகச் சூழல். இதில் மூன்றாம் அணி என்றால், அது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. அல்லாத இன்னொன்றாகவே இருக்க முடியும். அதற்கான முயற்சிகள் என்ன ஆயின; இனி அதெல்லாம் சாத்தியமா என்று பின்னர் பார்ப்போம்.  தில்லி அரசியல் காங்கிரஸ்-இடதுசாரிகள் என்று அறுபதுகளில் இருந்த நிலையை ஜே.பி. இயக்கமும் அதைச் சமாளிக்க இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலையும் மாற்றியமைத்தன. இந்துத்துவர்கள் முதல் வலதுசாரிகள், சோஷலிஸ்டுகள் வரை சங்கமித்து உருவாக்கிய ஜனதா கட்சி காங்கிரசுக்கான மாற்று இரண்டாம் அணியாகத் தோற்றமளித்தது. ஆனால் அதை உருவாக்கி அதில் ஊடுருவி அதைப் பயன்படுத்தி, தங்களையே முதன்மைப்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்த ஜனசங்கிகள், இரண்டே வருடங்களில் ஜனதாவைப் பலவீனமாக்கி, பாரதிய ஜனதா கட்சியாக இன்னொரு அவதாரம் எடுத்தனர். 

எண்பதுகளில் இருந்து தில்லி அரசியலைப் பொறுத்தமட்டில் முதல் அணி காங்கிரஸ், இரண்டாம் அணி பி.ஜே.பி. என்ற நிலை இப்படித்தான் தொடங்கியது. இப்போது அங்கேயும் இவையல்லாத மூன்றாம் அணி சாத்தியமா, இதற்கு முன் இரண்டாம் நிலையில் இருந்த இடதுசாரிகளும் சோஷலிஸ்டுகளும் புத்துயிர்ப்பு பெறுவார்களா என்பதைப் பின்னர் பார்ப்போம்.

எனது இந்தியா (ஜமீன்தார்கள்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

நிலவரி வசூல்தான், ஒரு நாட்டின் முக்கிய வருமானம். அதை எப்படி வசூல்செய்வது என்பது காலம்காலமாகத் தொடரும் பிரச்னை. தன் கையைக்கொண்டே தன் கண்ணைக் குத்தவைப்பதுதான், பிரிட்டிஷ் அரசின் ராஜதந்திரம். அப்படி, இந்தியாவின் ஏழை விவசாயிகளை அடக்கி ஒடுக்கி வரி வசூல் செய்கிறேன் என்று, கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பிரிட்டிஷ் வகுத்த திட்டமே ஜமீன்தாரி முறை. தங்களின் வருவாயைப் பெருக்கிக்கொள்வதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்த முறை, 1793-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜமீன் என்ற பாரசீகச் சொல்லுக்கு, நிலம் என்று பொருள். நில உடைமையாளர் என்ற பொருளில்தான், ஜமீன்தார் என்ற பெயர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நில வரி, குத்தகை வரி, யுத்த காலங்களில் படைக்கு ஆள் அனுப்புவது, உள்ளுர் நீதி பரிபாலனம் என்று செயல்பட்ட ஜமீன்தார்கள், சுயேச்சையான குறுநில மன்னர்களைப் போல ஆணவமும் அதிகாரமுமாக நடந்துகொண்டனர். 

ஜமீன்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாற்றில் மறக்க முடியாத பாடம். மொகலாயர்கள் காலத்தில் தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில வரி வசூல் செய்வதற்கும் உள்ளூர் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்வதற்கும் மான்சப்தார்கள் நியமிக்கப்பட்டனர். உயர்குடியைச் சேர்ந்தவர்களும் ராஜவிசுவாசிகளும் மட்டுமே மான்சப்தார்களாக நியமிக்கப்பட்டனர். இது, பெர்சிய நடைமுறை. அக்பரின் ஆட்சிக் காலத்தில் மான்சப்தார்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். இவர்களுக்கு அரசு மானியங்களும் பட்டங்களும் உயர் மரியாதைகளும் கிடைத்தன. நிலவரி வசூல் செய்வதில் மான்சப்தார்கள் கடுமையாக நடந்துகொண்டனர். அக்பர் காலத்தில் நிலவரி வருவாய் 363 கோடி தாம்கள் என அயினி அக்பரியில் ஒரு குறிப்பு இருக்கிறது. அக்பர் காலத்தில், மாநிலங்கள் சுபாக்கள் எனவும், மாவட்டங்கள் சர்க்கார் எனவும், தாலுக்கா என்பது பர்கானா என்றும் பிரிக்கப்பட்டிருந்தன. 1579-ல் மொகலாயப் பேரரசு 12 சுபாக்களாக பிரிக்கப்​பட்டிருந்தன. அக்பர் காலத்தில் நிலம் அளக்கப்​பட்டு வரி ஒழுங்குபடுத்தப்பட்டது.


அந்த வகையில், நிலம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது. பருவம் தவறாமல் பயிரிடப்படும் நிலம் பெலாஜ் என்றும், சில பருவங்களுக்குத் தரிசாக விடப்படும் நிலம் பரவுதி எனவும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தரிசாக விடப்படும் நிலம் சச்சார் எனவும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்படாமல் இருக்கும் நிலம் பஞ்சார் என்றும் அழைக்கப்பட்டன. மொத்த விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு விளைபொருள், அரசாங்கத்துக்கு வரியாக செலுத்தப்பட்டது. வரி வசூலிக்க, கார்கூன்கள் என்று அழைக்கப்பட்ட உள்ளூர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கூலியாக, தானியங்கள் வழங்கப்பட்டன. மான்சப்தார் முறையின் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷ்காரர்கள் ஜமீன்தார் முறையை நடைமுறைப்படுத்தினர். 

மொகலாயப் பேரரசர் ஷா ஆலம் 1765-ல் கம்பெனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்தது. இதற்கு திவானி உரிமை என்று பெயர். கம்பெனி இதைப் பயன்படுத்தி விவசாய வரியின் மூலம் தங்களின் வருவாயை அதிகப்படுத்திக்கொள்ள முடிவுசெய்தது. இதற்கு முன்னோடியாக கிழக்கிந்தியக் கம்பெனி 1767-ல் நில அளவாய்வுத் துறையை உருவாக்கி, மொத்த நிலப்பரப்பையும் அளந்தது. ஆகவே, அவர்களால் எவ்வளவு வரி விதிப்பது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772-ல் ஏலத்தில் விடும் முறையை அறிமுகம்செய்தார். அதன்படி, வரி வசூலிக்கும் உரிமையை விரும்பியவர்கள் ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். உரிய வரியை வசூல்செய்து அரசுக்குச் செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை தாங்களே வைத்துக்கொள்ளலாம் என்பதே இந்த முறை. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி முழுமையாகக் கிடைத்தது. ஆனால், ஏலமிடுவதிலும், வசூல் செய்வதிலும் நிறைய முறைகேடுகள் நடந்தன. ஆகவே, இந்தத் திட்டம் தோல்வி அடைந்தது. (இன்று இதே முறையின் சற்று உருமாறிய வடிவமே, தமிழகத்தின் மாநகராட்சி மற்றும் பல்வேறு அரசுக் குத்தகைகளில் நடைமுறையில் இருக்கிறது என்பது வரலாற்று முரண்.)

அதன் பிறகு, கம்பெனி ஏஜென்ட்கள் என நியமிக்கப்பட்டவர்கள் வரி வசூல் செய்தனர். இவர்களுக்கு நிலத்தின் வகைகள் மற்றும் குத்தகை முறை பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே, ஏஜென்ட்களாலும் நில வரியை முழுமையாக வசூலிக்க முடியவில்லை. இந்தியாவில், நிலம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க எழுத்துப்பூர்வமான சான்றுகள் மிகக் குறைவு. ஆகவே, இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. இதனால், வரி வசூல் செய்வதில் நிரந்தர முறை ஒன்றை அறிமுகம்செய்ய பிரிட்டிஷ் அரசு முடிவுசெய்தது. 1793-ல் காரன் வாலிஸ் புதிய திட்டத்தை அறிமுகம்செய்தார். அது நிரந்தரமாக வரி வசூலிக்கும் உரிமை தரும் 'பெர்மனென்ட் செட்டில்மென்ட்’ திட்டம். அதன்படி, முந்தைய காலங்களில் நில வரி வசூலிக்கும் உரிமை மட்டுமே பெற்றிருந்தவர்கள், அதே நிலத்தின் உரிமையாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள், ஆண்டுதோறும் கம்பெனிக்குத் செலுத்த வேண்டிய வரி, நிலையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகைக்குப் பெயர் 'பேஷ்குஷ்’.

இப்படி நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்கள் இஷ்டம்போல பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக்கொள்ளலாம். இவர்கள் 'ஜமீன்தார்’, 'மிட்டாதார்’, 'தாலுக்தார்’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர். ஒருவேளை, ஒரு ஜமீன்தாரால் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நில வரி வசூலிக்க முடியாமல் போய்விட்டால், அந்த உரிமை கம்பெனியால் பிடுங்கப்படும். பொதுவாக, ஜமீன்தார்கள் வாரிசு முறையில் தேர்வுசெய்யப்படுவதால் ஜமீன் உரிமை வேறு ஒருவருக்குக் கிடைப்பது எளிதானது அல்ல. இந்த நடைமுறை காரணமாக, ஜமீன்தார்கள் என்ற புதிய நிலப்பிரபுக்கள் இந்தியாவெங்கும் உருவாக ஆரம்பித்தனர். இவர்களில் சிலர் ஒருகாலத்தில் மன்னர்களாக இருந்து தங்களின் உரிமையை இழந்தவர்கள் மற்றும் குறுநிலமன்னர்களின் வாரிசுகள். ஜமீன்தார் முறையால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இரண்டு விதங்களில் லாபம் கிடைத்தது. ஒன்று, தாங்களே நேரடியாக விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்யும் சிக்கலில் இருந்து விடுபடுவது, இரண்டாவது தங்களுக்கு விசுவாசிகளாக ஜமீன்தார்கள் என்ற ஓர் இனத்தையே உருவாக்கிக்கொள்வது.

பண்டைய இந்தியாவில் கிராமத்தின் நில வரி மூலம் கிடைக்கும் வருவாய், அந்தக் கிராமத்தின் உள்ளூர் கட்டு​மானம் மற்றும் விவசாயம் சார்ந்த வளர்ச்சிக்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஜமீன்தார் முறை அறிமுகமான பிறகு உழைப்பவனிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டதுடன், நில வரி முழுவதும் ஜமீன்தாரின் தனிச் சொத்தாக மாறத்தொடங்கியது. ஏழை விவசாயிகள் நில வரி செலுத்த முடியாமல் தங்கள் நிலங்களைப் பறிகொடுத்து கூலிகளாக மாறினர். சிலர் குத்தகைதாரர்களாக மாறி, அதே நிலத்தில் விவசாயம் செய்தனர். குண்டர்களைக்கொண்டு கெடுபிடியாக வரி வசூல் செய்த ஜமீன்தார்கள், அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக்கொண்டு மீதியை மட்டுமே அரசுக்குச் செலுத்தினர். இதனால், ஜமீன்தார்கள் செல்வச் செழிப்புடன் சர்வாதிகாரம் படைத்தவர்களாக வாழ்ந்தனர். சென்னை மாகாணத்தின் ஆளுனராக 1820-ல் பொறுப்பேற்ற சர் தாமஸ் மன்றோ, 'ரயத்வாரி’ முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி, வரியானது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நேரடியாக வசூலிக்கப்பட்டது. 'ரயத்’ என்ற சொல்லுக்கு 'உழவர்’ என்று பொருள். இந்த முறையில் விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்து அரசுக்குச் செலுத்த இடைத்தரகர்கள் கிடையாது. ஆனால், விதிக்கப்பட்ட வரி மிகவும் அதிகமாக இருந்தது. ரயத்வாரி முறையில் நிலச் சொந்தக்காரர்களுக்கு 'மிராசுதார்’ என்று பெயர்.  

மிராசுதாரர்கள் பெரும்பகுதி நிலத்தைக் கட்டுக் குத்தகைக்கோ அல்லது வாரக் குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள். அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த உரிமையும் கிடையாது. நிலச் சொந்தக்காரர்கள் இஷ்டப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி, வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.  

இதனால், விளைபொருட்​களில் 80 சதவிகிதத்தைக் குத்தகையாக மிராசுதாரர்​களுக்குக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ரயத்வாரி முறையில் நிலங்கள் சில தனிநபர்கள் கையில் குவியத் தொடங்கின.

இதுபோலவே, 'மகால்வாரி’ என்றொரு வரிவிதிப்பு முறையை பஞ்சாபில் அமல்படுத்தினர். இந்த முறையில் குத்தகை நிலங்களின் வரியை வசூல்செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டியது, உள்ளூர் நிர்வாகத்தின் கடமை. இதில் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் இத்தகைய கொடுமையான வரிவிதிப்பு முறைகள், பாரம்பரிய இந்திய விவசாயத்தைக் கொஞ்சம் கொஞ்சம் அமுக்கிக் கொல்லத் தொடங்கின.

பழந்தமிழகத்தில் வரி வசூல் செய்வது மிகவும் கெடுபிடியாக நடைபெற்றுள்ளது என்பதை விவரிக்கும் வரலாற்று ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன், தனது 'தமிழ்ச் சமூகத்தில் வரி’ என்ற கட்டுரையில், பல அரிய தகவல்களைக் கொடுத்துள்ளார். சோழர் காலக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் 'மண் கலம் உடைத்து, வெண்கலம் எடுத்து’ என்ற தொடர் இடம்பெற்று இருக்கிறது. இந்தத் தொடர், சோழப் பேரரசின் அலுவலர்கள் வரி வாங்குவதில் எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டனர் என்பதைக் காட்டுகிறது. வரி செலுத்த முடியாத ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து, அவனது வீட்டிலுள்ள மதிப்பு வாய்ந்த பொருளான வெண்கலப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்வதை 'வெண்கலம் எடுத்து’ என்ற சொல் குறிக்கிறது. வெண்கலப் பாத்திரங்கள் எதுவும் இன்றி வெறும் மண் பாத்திரங்கள் மட்டுமே இருந்தால், அதைப் பறிமுதல் செய்வதால் பயன் இல்லை. இருந்தாலும், அவனுக்குத் தண்டனை வழங்கும் வழிமுறையாக அந்த மண் பாத்திரங்களை உடைத்து நொறுக்குவதை 'மண்கலம் உடைத்து’ என்ற சொல் உணர்த்துகிறது. வரி செலுத்த இயலாதவனின் உலோகப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்தும் மண் பாத்திரங்களை உடைத்தும் அவன் சமைத்து உண்ண முடியாது செய்வது பொற்காலச் சோழர்களின் வரிவாங்கும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்துள்ளது.

Friday, June 28, 2013

தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி?

தலைமுடி ‘கருகரு’வென்று இருந்தால், அந்த மகிழ்ச்சியே தனிதான். அதேநேரத்தில் தலைமுடி கொட்டத் தொடங்கிவிட்டால், கவலைப்படுகிறவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். 

முடியின் வளர்ச்சி

சராசரியாக ஒருவருக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டர் நீளத்துக்குத் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் வளர்கிறது. ஒரு தலைமுடியின் அதிகபட்ச ஆயுள் காலம் 94 வாரங்கள். வயதாக ஆக தலைமுடியின் ஆயுள் 17 வாரங்கள் வரை குறைந்துவிடும். முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் கட்டம், வளர்ச்சிப் பருவம். இந்தப் பருவத்தில் முடி வளர்ந்து கொண்டிருக்கும். அடுத்த கட்டம் தேக்கம். இந்தக் கட்டத்தில் முடி வளராது. அடுத்த கட்டம், முடி உதிரும் பருவம். இந்தப் பருவத்தில் முடி உதிரத் தொடங்கும். இது ஒரு சக்கரச் சுழற்சிபோல நிகழ்கிறது. ஒரு முடி உதிர்ந்து கொண்டிருக்கும்போது, மற்றொரு முடி வளர்ந்து கொண்டிருக்கும். இதனால்தான், ஒரே நேரத்தில் எல்லா முடிகளும் உதிர்வதில்லை. தினமும் 75 லிருந்து 150 முடிகள் உதிர்வது இயற்கை.  

முடி கொட்டுவதற்கு என்ன காரணம்?

தலைமுடி கொட்டுவதற்கு முக்கியக் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு. இதிலும் குறிப்பாக, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, கால்சியம் சத்து, பயாட்டின் சத்து, புரதச்சத்து முதலியவை குறையும் போது முடி கொட்டும். டைபாய்டு, மலேரியா, அம்மை, மஞ்சள்காமாலை போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் போதும் முடி கொட்டும். ரத்தம், மூட்டு தொடர்பான நோய்கள் இருந்தால், தலையில் பொடுகு இருந்தால், பேன் மற்றும் ஈறுகள் இருந்தால் முடி கொட்ட வாய்ப்புண்டு. கரப்பான் நோய், காளான் நோய் போன்றவை முடி உதிர்வதைத் தூண்டும். தலைமுடி கொட்டுவதற்குப் பரம்பரையும் ஒரு முக்கியக் காரணம்தான். தைராய்டு ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் முடி கொட்டுகிறது. சில மாத்திரை, மருந்துகளாலும் முடி கொட்டலாம். சிலருக்குத் தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டுவதுண்டு. இந்தக் காரணங்களைத் தவிர்த்தால் அல்லது சிகிச்சை பெற்றால், முடி கொட்டுவது நிற்கும்.  

இளநரை ஏற்படுவது ஏன்?

வயதாக ஆக தலைமுடி நரைப்பது இயல்பு. சிலருக்கு இளமையிலேயே தலைமுடி நரைத்து விடுகிறது. இதற்கு வம்சாவழி ஒரு முக்கியக் காரணம். பெற்றோருக்கு இளநரை ஏற்பட்டிருந்தால், குழந்தைகளுக்கும் இளநரை ஏற்படும் வாய்ப்பு பெருகும். மன அழுத்தம், பரபரப்பான செயல்பாடு, கவலை, கோபம், சோகம் போன்ற மனம் தொடர்பானவை இளநரை ஏற்படுவதை ஊக்குவிக்கும். தலைமுடி ‘கருகரு’வென முளைக்க வேண்டுமானால், மெலனின் எனும் நிறமிப் பொருள் சரியான அளவில் நம் உடலில் உற்பத்தியாக வேண்டும். இதற்குப் புரதசத்து, கால்சியம் சத்து, வைட்டமின் - B5 போன்றவை தேவை. ஆகவே, இளமையில் சத்துக் குறைபாடு ஏற்படுமானால், தலைமுடி நரைத்துவிடும். இளநரை ஏற்படுவதைத் தவிர்க்க பால், பருப்பு, முளைகட்டிய பயறுகள், பச்சைநிறக் காய்கறிகள் சாப்பிடுவதை அதிகப்படுத்துங்கள். தலைக்குத் தினமும் மசாஜ் கொடுங்கள். நன்றாகத் தூங்கி ஓய்வெடுங்கள்.  

பொடுகுக்குத் தீர்வு

தலைச் சருமத்தில் ‘சீபம்’ எனும் எண்ணெய்ச் சுரப்பு அதிகமாகும்போது, பொடுகு தோன்றுகிறது. செத்துப்போன தோல் செல்கள் எண்ணெய்ச் சுரப்பில் ஒட்டிக்கொண்டு வெள்ளை நிறப் பக்குகளாக வெளியேறுவதைப் ‘பொடுகு’ என்கிறோம். இது, எண்ணெய்ச் சருமம் கொண்டவர்களுக்கு அதிக அளவில் தொல்லை கொடுக்கும். ‘மலசேஜியா குளோபோசா’ எனும் காளான் கிருமிகளாலும பொடுகு தோன்றலாம். மருத்துவர் ஆலோசனைப்படி செலினியம் அல்லது கீட்டோகொனஜோல் மருந்து கலந்த ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளித்து, தலைமுடியைச் சுத்தமாகப் பராமரித்தால், பொடுகுத் தொல்லை குறையும். 

கரப்பான் காரணமா?

சிலருக்குக் கரப்பான் நோய் காரணமாகத் தலை முடி உதிரும். கரப்பான் என்பது ஒருவகைத் தோல் அழற்சி நோய். சோப்பு, ஷாம்பூ, உணவு, உடை மற்றும் ஆபரணங்கள் ஒவ்வாமைதான் இந்த நோய்க்கு அடிப்படை. தலைச்சருமம் வீங்கி, சிவந்து, அரிப்பை ஏற்படுத்தும். அதைச் சொறியும்போது, நீர் கோத்து, புண்ணாகிவிடும். அந்த இடங்களில் தலைமுடி உதிர்ந்துவிடும். இதற்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால் கரப்பான் குணமாகும். 

தலையில் பேன் வரக் காரணம்

தலைமுடியைச் சுத்தமாகப் பராமரிக்காமல் இருப்பது, தலைப்பேன் உள்ள நபருடன் நெருக்கமாகப் பழகுவது போன்றவை பேன் தொல்லையை ஏற்படுத்தும். பேன் உள்ளவர் பயன்படுத்திய சீப்பு மூலம் மற்றவர்களுக்குப் பேன் பரவிவிடும். இரவில் படுக்கப் போகும்போது, ‘பெர்லைஸ்’ எனும் பேன் கொல்லி தைலத்தைத் தலைமுடி முழுவதும் பூசி, தலையில் துண்டு கட்டிப் படுத்து, காலையில் ஷாம்பூ தேய்த்துக் குளித்துவிட வேண்டும். ஒருவாரம் கழித்து, மீண்டும் ஒருமுறை இதுபோல் குளிக்க வேண்டும். தலைப்பேன் தொல்லை வராது. 

தலைமுடியைப் பாதுகாக்க...

அனைத்து ஊட்டச் சத்துகளும் அடங்கியுள்ள உணவைத் தினமும் சாப்பிட வேண்டும். குறிப்பாக, பால், கீரைகள், பழங்கள் சாப்பிடுவது தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். 

தினமும் ஒருமுறை குளிக்க வேண்டும்.

தரமான ஷாம்பூவை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.
தலைக்குக் குளித்ததும் தலைமுடியை இயற்கையாக உலர்த்துங்கள். ‘டிரையர்’ தவிருங்கள்.

தலைக்குத் தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும். 

தலை சீவ மென்மையான சீப்பைப் பயன்படுத்துங்கள். அடுத்தவர்கள் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.
கொத்துக் கொத்தாக தலைமுடி கொட்டினால் மருத்துவரை ஆலோசியுங்கள்.

நவீன சிகிச்சை என்ன?

இப்போதெல்லாம் ஆண்களுக்கு இருப்பது வழுக்கைப் பிரச்னை. பெண்களுக்கு அவர்களுக்கு இருக்கும் சில ஹார்மோன்கள் காரணமாக, பெரும்பாலும் இந்தப் பிரச்னை எழுவதில்லை. தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் முடி முளைக்கவைக்க ‘முடி மாற்றுச் சிகிச்சை’ எனும் நவீன சிகிச்சை உள்ளது. முடி முளைக்கத் தொடங்கிவிடும்.
 
 

இந்த மாதப் பிரபலங்கள் - ஆன் ஃப்ராங்க் -கக்கன்-ஹெலன் கெல்லர்

ஆன் ஃப்ராங்க்

ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் எடித் ஃப்ராங்க் - ஓடோ ஃப்ராங்க் ஆகியோருக்கு மகளாக 1929 ஜூன் 12ல் பிறந்தார் ஆன். இவர் புகழ்பெற்ற ஜெர்மன் நாட் குறிப்பு எழுத்தாளர். 1933ல் ஹிட் லர் ஜெர்மன் நாட்டின் அதிபராகப் பதவியேற்ற கையோடு யூதர்களை முற்றிலுமாக அழிக்க உத்தரவிட்டார். உயிருக்குப் பயந்து ஓடோ ஃப்ராங்க் குடும்பத்துடன் ஹாலந்துக்குச் சென்றார். எந்த ஹிட்லருக்குப் பயந்து ஓடோ ஃப்ராங்க் ஹாலந்து வந்தாரோ அதே நாஜிப் படை ஹாலந்தையும் வீழ்த்தியது. 

ஹாலந்தில் வாழ்ந்த யூதர்கள் சுதந்தரமாக நடமாடவோ, கருத்துகளை வெளியிடவோ தடை விதிக்கப்பட்டது. 1942 ஜூன் 12 அன்று ஆனின் 13ஆவது பிறந்தநாள் பரிசாக ஒரு டையரி கிடைத்தது. ஓடோ ஃப்ராங்க் குடும்பத்தினருடன் நாஜி முகாமில் ஆஜராக வேண்டும் என உத்தரவு வரவே, உயிருக்குப் பயந்து மீண்டும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். 

ஆம்ஸ்டர்டாமில் கழித்த இரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை ஆன் தனது டயரியில் பதிவு செய்தார். ஆனால் இந்தத் தலைமறைவு வாழ்க்கையும் நீடிக்கவில்லை. 1944 ஆகஸ்ட் 4 அன்று ஜெர்மானிய உளவுப்படை இவர்கள் பதுங்கிய இடத்தை முற்றுகையிட்டு, கைது செய்தது. ஓடோ ஃப்ராங்க் தனது மனைவியையும், மகள்களையும் கடைசியாகப் பார்த்தது அப்போதுதான். 

கைது செய்யப்பட்டவர்கள் கொடூரமான வதை முகாமில் அடைக்கப்பட்டனர். சுகாதாரக் குறைவு, உணவு மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக டைபஸ் என்னும் கொடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு 15 வயது ஆன் 1945ல் உயிரிழந்தார். வதை முகாமில் அடைக்கப்பட்டு இவரைப் போல் இறந்த யூதக் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1 மிலியன்.

ஹிட்லரின் மரணத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. மனைவியையும் மகள்களையும் பறிகொடுத்த நிலையில் ஓடோ ஃப்ராங்க் மட்டுமே உயிர் பிழைத்தார். ஆன் எழுதிய டையரி கிடைத்தது. 1947 ஜூன் 25ல் ‘தி டைரி ஆஃப் யங் கேர்ள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியாகியது. பின்னர் 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 

கக்கன்


இவரைப் போல் ஓர் அரசியல்வாதியை இனி காண முடியுமா என்று வியக்கும் வகையில் வாழ்ந்தவர் கக்கன். 1908 ஜூன் 18 அன்று மதுரை மாவட்டம், தும்பைப்பட்டி கிராமத்தில் பூசாரிக் கக்கனுக்கும் குப்பி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். மேலூர் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், திருமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். தன்னைப் போன்ற தலித் மாணவர்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக இரவு பாடசாலைகளைத் தொடங்கி கல்வி கற்பித்தார். 

இளம் வயதிலேயே சுதந்தரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1934ல் மதுரை வந்த காந்தியைச் சந்தித்ததைத் தொடர்ந்து காந்தியின் சீடரானார். 1939ல் தமிழக முதல்வராக இருந்த மூதறிஞர் ராஜாஜி கோயில் நுழைவு மற்றும் அதிகாரச் சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையில் தலித்துகளை வழி நடத்தி மதுரை மீனாட்சி கோயிலில் நுழைந்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் கக்கன் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார். 

1946ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 1946-1950 வரை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1952-57 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். 1954ல் காமராஜர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதைத் தொடந்து கக்கன் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1957ல் மதராஸ் மாகாணத்துக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறவே கக்கன் பொதுப்பணி, பழங்குடியினர் நலம் ஆகிய துறைகளின் அமைச்சரானார். 1962 தேர்தலிலும் காங்கிரசே வெற்றி பெற கக்கன் விவசாயம் மற்றும் உள்துறை அமைச்சரானார். 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்கும் வரை சுமார் 10 ஆண்டு காலம் அமைச்சராக இருந்தார்.

5 ஆண்டுகள் மக்களவை உறுப்பினர், 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தும் சொந்த வீடோ, வாகனமோ இன்றி, கக்கன் எளிமையாக வாழ்ந்தார். அரசு பேருந்துக்காகச் சாலையில் காத்துக் கிடந்தததும், நோயுற்ற போது மதுரை பொதுமருத்துவமனையில் படுக்கையின்றித் தரையில் படுக்க வைக்கப்பட்டதும் நாடறிந்த செய்தி. நேர்மையான அரசியல்வாதிக்கு இலக்கணமாக வாழ்ந்த கக்கன் 1981 டிசம்பர் 23 ம் தேதி ஏழையாகப் பிறந்து ஏழையாகவே மறைந்தார்.

ஹெலன் கெல்லர்

புகழ்பெற்ற எழுத்தாளரும் கல்வியாளருமான ஹெலன் கெல்லர் 1880 ஜூன் 27ல் பிறந்தார். ஆர்தர் ஹென்லி கெல்லர், கடே ஆடம்ஸ் கெல்லர் இவருடைய பெற்றோர். பிறந்த ஒன்றரை வருடங்களில் அவருடைய கண் பார்வையும், செவித்திறனும் செயலிழந்து போயின. படிப்படியாகப் பேசும் திறனையும் இழந்தார்.

1866ல் ஆன் சலிவன் இவருக்குக் கல்வி கற்பிக்கப் பிரத்யேக ஆசிரியையாக நியமிக்கப்பட்டார். ஹெலனின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமைக்குரியவர் சலிவன் என்பதுடன் அவர் மூலம் ஹெலன் உலகத்தைப் பார்த்தார், கேட்டார், பேசினார். எழுத்து வடிவங்களை ஹெலனின் உள்ளங்கையில் வைத்து அழுத்தி அவற்றின் மூலம் பொருட்களின் பெயர்களையும் பின்னர் பிரெலி முறையில் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தார். 1890ல் ஹொரேஸ் மான் பள்ளியின் சாரா ஃபுல்லர் மூலம் பேசும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 1904ல் ராட்க்ளிஃப் கல்லூரியில் படித்து ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் ஹெலன் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 

1903ல் எழுதிய ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப், 1908ல் தி வேர்ல்ட் ஐ லிவ் இன், 1913 அவுட் ஆஃப் தி டார்க், 1930 மிட்ஸ்ட்ரீம், 1955ல் டீச்சர் : ஆன் சலிவன், 1957 தி ஓபன் டோர் ஆகிய புத்தகங்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. பார்வை, பேச்சு மற்றும் கேட்கும் திறன்களை இழந்த நிலையில் பட்ட துயரங்களையும், குறைகளைகளையும் ‘ஸ்டோரி ஆஃப் மை லைஃப்’ புத்தகத்தில் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார் ஹெலன் கெல்லர். 

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக நிதி திரட்டப் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 1959ல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் 1962 திரைப்படமாகவும் வெளிவந்த ‘தி மிரகிள் வொர்க்கர்’ இரு ஆஸ்கர் பரிசுகளைத் தட்டிச் சென்றது. 1964ல் பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் விருதைப் பெற்றார். 1968 ஜூன் 1 அன்று மறைந்தார். தனக்குப் பிடித்த 19ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பெண்மணி ஹெலன் கெல்லர் என்று புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வைன் பாராட்டியிருக்கிறார்.
 

Thursday, June 27, 2013

சாம்பியன் டோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டெஸ்ட் போட்டி’த் தொடரை 4-0 என்று கைப்பற்றிய இந்திய அணி, ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை 'ஒரு நாள் போட்டி’த் தொடரில் ஒரு போட்டியைக்கூட இழக்காமல், '20-20’ஆக நடந்த அந்த ஃபைனலில் சாம்பியன் பட்டம் தட்டியிருக்கிறது. சந்தேகமே வேண்டாம்... டெஸ்ட், ஒரு நாள், 20-20... இந்த மூன்று வடிவங்களிலும் இப்போதைக்கு சாம்பியன் இந்தியாதான்!

ஆர்ப்பாட்டம் இல்லை. அதிர்ச்சி வைத்தியங்களும் இல்லை. ஜஸ்ட் லைக் தட் க்யூட்டாக 2013 சாம்பியன் கோப்பையை வென்றிருக்கும்   இந்திய அணியின் வெற்றிப் பயணம் மிக சுவாரஸ்யமானது. ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி, அதில் நாம் கற்றுக்கொள்ளச் சில பாடங்கள் இருக்கின்றன.

சீசண்டு சீனியர்கள்’ இல்லாத, அனுபவமற்ற ஜூனியர்கள் மட்டுமே நிரம்பிய அணி என்பதால், தொடருக்குள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் கலந்துகொண்டது இந்திய அணி. ஆனால், 'வார்ம்அப்’ அளிக்கும் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை நிர்ணயித்த 334 ரன் இலக்கைத் துரத்திப் பிடித்ததும், 308 ரன் இலக்கை நிர்ணயித்து ஆஸ்திரேலியாவை 65 ரன்களுக்குள் சுருட்டியதும்... இந்திய அணி பெற்ற அசுரத்தனமான வெற்றி. மற்ற அணிகள் பயிற்சிப் போட்டிகளைச் சும்மா 'வார்ம்அப்’தானே என்று விளையாட, இந்தியா அந்தப் போட்டிகளை சீரியஸாகவே எதிர்கொண்டது. பயிற்சிப் போட்டிகளில் 'உள்ளும் வெளியிலுமாக’ 15 பேர் வரை விளையாடிக்கொள்ளலாம் என்ற விதியை இந்தியா அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. இலங்கைக்கு எதிரான இமாலய இலக்கைத் துரத்தி எட்டிய பின் பேசிய டோனி, 'இங்கு விளையாடும் 11 பேர்தான் முக்கியமான போட்டிகளிலும் விளையாடவிருக்கிறார்கள். அதனால், அந்த விதியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பயிற்சிப் போட்டியென்றாலும், போட்டி போட்டிதானே!’ என்றார். அந்த வெற்றிகளுக்குப் பிறகு, பிற அணிகள் களம் இறங்குவதற்கு முன்னரே இந்தியாவை நினைத்து மிரளத் தொடங்கிவிட்டன. எந்தச் செயலின் தொடக்கமும் சிறப்பாக இருந்தால், பாதி வேலை முடிந்துவிட்டதாகக் கணக்கில்கொள்ளலாம் என்பார்கள். அப்படிப் பயிற்சி ஆட்டங்களிலேயே 'பாதி வெற்றி’யை எட்டிவிட்டது இந்திய அணி!

 


'அனுபவமற்றவர்கள்’ என்று விமர்சிக்கப்பட்டாலும் ஷிகர் தவான், ஜடேஜா போன்றவர்களுக்கு எப்படி வியூகம் வகுப்பது, ஜடேஜா பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என மற்ற அணியினர் குழம்பிவிட்டார்கள். இது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்த திருப்புமுனை. முக்கியமான தருணங்களில் சில ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் எடுப்பது இந்தியப் பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் வழக்கம். இறுதிப் போட்டியில் முந்தைய மூன்று ஓவர்களில் இஷாந்த் 27 ரன்களை வழங்கியிருந்தாலும், 18-வது ஓவரை அவரையே வீசச் செய்தார் டோனி. அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே, சிக்ஸர், இரண்டு வொய்டுகள் என்று முதல் மூன்று பந்துகளில் ரன்களை வாரி வழங்கினார் இஷாந்த். கிட்டத்தட்ட போட்டி கைவிட்டுப் போய்விட்டது என்று நினைத்த சமயம், அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களைப் பறித்தார் இஷாந்த். அதுவும் நன்றாக செட்டில் ஆகி பந்துகளை விளாசிக்கொண்டிருந்த மோர்கன், போபரா ஆகிய இருவரின் விக்கெட்டுகள். அந்த இருவரும் கடைசி ஓவர் வரை விளையாடியிருந்தால், வெற்றி நிச்சயம் இங்கிலாந்து வசமாகியிருக்கும். 'இஷாந்த் பந்தைச் சுலபமாக அடிக்கலாம் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நினைப்பார்கள். சுலபமாக அடிக்கவும் செய்வார்கள். ஆனால், அவர் பந்தில்தான் அவுட்டும் ஆவார்கள் என்று நினைத்தேன். ரன்கள் போனாலும் அலட்டிக்கொள்ளாமல் விக்கெட்டுகளைப் பறிக்கும் குணம் இஷாந்திடம் உண்டு!’ என்றார் டோனி. துல்லியமாகக் கணக்கிட்டால் நமது பலவீனங்களையே பலமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதற்கு, இவையெல்லாம் உதாரணங்கள்!

இதற்கு முன்னரெல்லாம் பெரிய போட்டித் தொடரில் இந்திய அணி கால் இறுதியைத் தாண்டியிருக்காது. ஆனால், போட்டித் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவராக சச்சினோ, கங்குலியோ பட்டியலில் முதல் இடம் பிடிப்பார்கள். இல்லாவிட்டால், அப்படியான தனி நபர் சாதனைகள் எதுவும் இல்லாமல், ஒவ்வொரு போட்டியிலும் தட்டிமுட்டி, குறைந்தபட்ச வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறி, கடைசிக்கட்ட நெருக்கடியில் ஜெயிக்கும் இந்திய அணி. ஆனால், இந்தத் தொடரில் அப்படியான எந்த இக்கட்டையும் இந்தியா சந்திக்கவில்லை. விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் முதல் இடம், தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் இந்தியாவின் ஷிகர் தவான், அதிக விக்கெட் வீழ்த்தியவர் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா. க்ளீன் ஸ்வீப்!ஒவ்வொரு போட்டியிலும் 50 ரன்களுக்குக் குறையாமல் எடுக்க வேண்டும் என்பது எனக்கு அளிக்கப்பட்ட இலக்கு. இதே போல ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப இலக்கு நிர்ணயித்தார்கள். அவரவர் வேலையை அவரவர் செய்தோம். கோப்பை நம் வசமானது!’ என்கிறார் ஷிகர் தவான். திறமையைக் கையாளுதல் என்பார் கள் இதை, மேலாண்மைப் பாடங்களில்!

கேப்டன் டோனி தன் அணியினரை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. வெற்றிக்குப் பின்னர், 'மேட்ச் ஃபிக்ஸிங், சூதாட்டப் புகார் களங்கங்களைத் துடைக்கத்தான் இப்படி வெறி பிடித்தாற்போல விளையாடினீர்களா?’ என்ற கேள்விக்கு, 'இல்லவே இல்லை. இங்கே கிரிக்கெட் விளையாடத்தான் என் பாய்ஸை நான் அழைத்துவந்தேன். 'ரேங்க்கிங்கில் மட்டும் நம்பர் ஒன்னாக இருந்தால் பத்தாது. களத்திலும் அப்படி இருக்க வேண்டும். உங்கள் திறமைகளை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்’ என்று மட்டும் அவர்களிடம் சொன்னேன்!’ என்றார் டோனி. தன் அணியினரை சில்லறைக் காரணங்களுக்காக விட்டுக்கொடுக்காத அதே சமயம், 'இங்கு அடிக்கடி மழை பெய்யும். நாம் மோசமாக விளையாடி மழை வந்து நம்மைக் காப்பாற்றாதா என்ற நினைப்போடு யாரும் களம் இறங் காதீர்கள். ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும், எந்த ஓவரிலும் நம் கைதான் ஓங்கியிருக்க வேண்டும்’ என்று அவர்களிடம் வலியுறுத்தவும் தவறவில்லை. புறக் காரணங்களை மனதில்கொள்ளாமல், சாக்கு சொல்லாமல் நம் கடமையைக் கச்சிதமாகச் செய்ய வேண்டும் என்பது இங்கு 'நோட் தி பாயின்ட்’!

நம்புவீர்களா...? 31 வயதே ஆன டோனிதான் இப்போதைய இந்திய அணியில் மிக சீனியர் ப்ளேயர். முழுக்கவே புதியவர்களின் கைகளில் அணியைக் கொடுத்துவிட்டு, சிக்கலான தருணங் களில் வழிநடத்தும் பொறுப்பை மட்டும் மேற் கொள்கிறார் டோனி. ஆனால், பேட்டிங்கோ, விக்கெட்-கீப்பிங்கோ... அந்தப் புதியவர்களுக்குச் சவால் கொடுக்கும் வகையில் பெர்ஃபார்ம் செய்வதும் டோனி ஸ்பெஷல். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தத்தளித்த அணியை, 77 பந்துகளில் 91 ரன்கள் குவித்து 308 ரன்களுக்குக் கரை சேர்த்தபோதும் சரி... தொடரில் அதிகபட்ச ஆட்டமிழப்புகளுக்குக் காரணமாக (9... அதில் 4 ஸ்டம்ப்பிங்!) இருந்த விக்கெட் கீப்பராகப் பட்டியலில் முதல் இடம் பிடித்தபோதும் சரி... தனிநபராகவும் டோனி அட்டகாசப்படுத்தினார்.    

இது போக, தொடர் முழுக்கவே போட்டிகளின்போது இக்கட்டான சமயங்களில் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார் டோனி. அந்தப் பல மணி நேர உளைச்சல்களுக்குப் பரிசாகக் கிடைத்த சாம்பியன் கோப்பை டோனியின் கைகளில் எவ்வளவு நேரம் இருந்தது தெரியுமா? 17 நொடிகள்! பரிசளிப்பு மேடையில் தன்னிடம் வழங்கப்பட்ட கோப்பையை உடனடியாக அணியினரிடம் ஒப்படைத்துவிட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டார் எம்.எஸ்.டி.
அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு!
 Wednesday, June 26, 2013

உத்தரகாண்ட் ராம்பாரா கிராமம் எங்கே?

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கும் உத்தரகாண்ட்டில் மீண்டும் மழை ஆரம்பித்துள்ளதால், ஒட்டுமொத்த இந்தியாவும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.

 உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேல். இறந்தவர்களின் எண்ணிக்கையோ ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றனர். சாவு எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமானதற்கு என்ன காரணம்? இந்தக் கேள்விக்கான விடையை அறிவதில்தான் மத்திய - மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

'இந்திய வரைபடத்தில் ராம்பாரா கிராமம் இருந்த இடம் தெரிய​வில்லை. வெள்ளப்பெருக்கு அந்தக் கிராமத்தை சின்னா​பின்ன​மாக்கிவிட்டது. அந்தக் கிராமத்​தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது சஸ்பென்​ஸாக இருக்கிறது. 10 அடி உயர சகதி வெள்ளம் அந்தக் கிராமத்தையே கபளீகரம் செய்து​விட்டது'.

கிட்டத்தட்ட 1,000 பேர் மக்கள்தொகையைக் கொண்டது கேதர்நாத். இங்குள்ள புகழ்பெற்ற சிவன் கோயில், மூன்று பக்கமும் மலை சூழ்ந்தது. மந்தாகினி ஆற்றங்கரையில் இந்தக்கோயில் அமைந்திருக்கிறது. மே முதல் செப்டம்பர் வரைதான் கோயில் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் கோயில் மூடப்படும். கடுமையான குளிர், பனி சூழ்நிலையில் அங்கே யாரும் போக முடியாது.

கடல் மட்டத்தில் இருந்து கேத்ரிநாத் கோயில் சுமார் 11,754 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த இடத்தை அடைய கௌரி குண்டு என்ற இடத்தில் இருந்து 14 கி.மீ. மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். அதற்கு ஏழு கி.மீ. முன்னதாக ராம்பாரா கிராமம் எதிர்படும். கான்கிரீட் கட்டங்களால் ஆன இங்குள்ள விடுதிகளில், புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் தங்கி இருப்பார்கள். அந்த வகையில், பேய் மழைக்கு முன்பு இங்கே தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டும். இப்போது அங்கே எவ்வளவு பேர் உயிருடன் இருக்கின்றனர் என்பதே தெரியவில்லை. பேரழிவு நடந்த ஒரு வார காலத்துக்குப் பிறகு மீட்புப் படையினர் அந்த ஏரியாவை  இப்போதுதான்  அடைந்திருக்கின்றனர். 

இதேபோல், கேதர்நாத் கோயிலுக்கு மேலே மூன்று கி.மீ. தொலைவில் காந்திசரோவர் என்கிற மிகப் பெரிய ஏரி உள்ளது. கன மழையால் அந்த ஏரி நிரம்பி வழிந்ததாலோ, ஒரு பகுதி உடைந்து தண்ணீர் திடீரென வெளியேறியதாலோதான் வெள்ளப்​பெருக்கு ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேதர்நாத்தை உள்ளடக்கிய ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 17 வரை பெய்த மழை அளவு 410 மி.மீ (கடந்த ஆண்டு இதே நாட்களில் பெய்த மழை 85.9 மி.மீ). இந்த அளவுக்கு மிக அதிகமாக மழை கொட்டியதுதான் வெள்ளப்பெருக்கு ஏற்பட இன்னொரு காரணம் என்கின்றனர். 

Tuesday, June 25, 2013

வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் அனைத்துமே, நாம் நோயின்றி வாழ்வதற்காகவே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தவைதான்.  ஆனால், இன்றைய நவீன உலகில், பாரம்பரிய விஷயங்களைப் புறந்தள்ளிவிட்டு ஆடம்பர விஷயத்திற்கு அடிமையாகிவிட்டதன் விளைவு, அத்தனை வியாதிகளும் வரிசை கட்டி வரத் தொடங்கிவிட்டன. 

உதாரணத்துக்கு, அந்தக் காலத்தில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போதே, கால்களை நன்றாகக் கழுவிவிட்டு உள்ளே நுழையும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றோ வீட்டிற்குள் நுழைந்ததும் கால்களைக் கழுவுவது என்பதையே கைகழுவிவிட்டார்கள். சிலரோ வெளியில் கிடத்த வேண்டிய செருப்பையே, வீட்டின் படுக்கை அறை வரை போட்டுக் கொள்கின்றனர். கால்களை அழகுப்படுத்திக்கொள்ளும்போது அதைத் தாங்கி நிற்கும், செருப்பைச் சரிவர சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகின்றனர்.  செருப்பின் அசுத்தத்தால், எந்த அளவுக்கு ஆபத்து ஏற்படும்?

பெரும்பாலான நோய்களுக்கு மூலக்காரணமே வெறும் காலில் நடப்பதுதான். வீட்டிற்குள் ஒன்று, வெளியே ஒன்று எனத் தனித்தனி செருப்புகளை உபயோகிப்பது நல்ல பழக்கம்தான்.  அதே நேரம், வெளியே சென்று வரப் பயன்படுத்தும் செருப்பை வீட்டில் பயன்படுத்துவதுதான் பெரும் ஆபத்து. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இனம் தெரியாத பல நோய்கள் படையெடுப்பதற்கும் இதுவே காரணம். காலில் ஆணி, மரு, பித்தவெடிப்பு போன்றவை இருந்தால் அது இன்னும் பெரியதாகி, பிரச்னையை ஏற்படுத்தும். வைரஸ் தொற்று, காலில் நகச்சுத்தி போன்றவை ஏற்படும்.  

அதிலும், குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்குக் கால் பராமரிப்புதான் முக்கியம். காலில் காயம் ஏற்பட்டால், சீக்கிரத்தில் ஆறாது. அவர்கள் வீட்டில் பயன்படுத்துவதற்கு என்று, பிரத்யேகமாக விற்கக்கூடிய வி.சி.ஜி மற்றும் வி.சி.ஸி போன்ற செருப்புகளைத்தான் உபயோகிக்க வேண்டும். தப்பித் தவறி அசுத்தமான செருப்புகளுடனோ அல்லது வெறும் காலுடனோ நடந்தால் தேவை இல்லாத பிரச்னைகளைச் சந்திப்பதோடு, சில சமயங்களில் காலை எடுக்கக்கூடிய அபாய நிலையும் ஏற்படலாம். வீட்டு வாசலில் தொடங்கி, தோட்டம் வரை வீட்டின் ஒவ்வோர் அறைக்கும் தனித்தனி மிதியடிகளை உபயோகிப்பதன் மூலம், செருப்பில் இருக்கும் தூசுகள் மிதியடிகளில் படிந்து எளிதில் சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன், வீட்டிற்கு வெளியிலேயே செருப்பைக் கழற்றிவிடவேண்டும். கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி செருப்பில் ஒட்டி இருக்கலாம்.  இதுவே, உடலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். செருப்பை அதற்கு உரிய இடத்தில் வைத்து கை, காலினை நன்றாகக் கழுவ வேண்டும். பாத்ரூமிற்கு என்று தனியாக செருப்பைப் பயன்படுத்துவது நல்லது. இதையும் பாத்ரூம் அருகிலேயே தனியாக வைத்துவிடுங்கள். அதனை மற்ற அறைகளுக்குள் கொண்டு போவதால், அலர்ஜி, ஆஸ்துமா, இடைவிடாத தும்மல் போன்றவை வந்து பாடாய்ப்படுத்தும்.

சரியும் ரூபாய்... சாதகம் என்ன? பாதகம் என்ன?

கடந்த வியாழக்கிழமை அன்று ரூபாய் 60-க்கும் அருகே போய், பங்குச் சந்தையை பதைபதைக்க வைத்தது. சென்ற திங்கட்கிழமை அன்று நடந்த ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் கடன் மற்றும் நிதிக் கொள்கையில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. இதன்காரணமாக ரூபாய் ஓரளவு உயர்ந்தது. ஆனால், புதன்கிழமை இரவு கியூ.இ. 3-யை விரைவில் குறைக்கப் போவதாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-ன் தலைவர் பென் பெர்னான்கி சொன்னதால், வியாழனன்று இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்துக்கு இறங்கிவிட்டது.  

ரூபாய் சரிந்தால் என்ன, உயர்ந்தால் என்ன என்று நாம் சும்மா இருந்துவிட முடியாது. ரூபாய் சரிவதால் நம் அன்றாட வாழ்க்கையில் பல பாதிப்புகள் (சில சாதகங்களும் உண்டு!) நமக்கு ஏற்படும். அப்படி என்ன பாதிப்பு ஏற்படும் என்கிறீர்களா?

பணவீக்கம் அதிகரிப்பு!

உள்நாட்டில் விலைகள் அதிகரிப்பதி னால் மட்டும் பணவீக்கம் அதிகரிக்காது. ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பணவீக்கம் அதிகரிக்கும். இதற்கு 'இறக்குமதியாகும் பணவீக்கம்’ என்று சொல்வார்கள். உதாரணமாக, சில நாட்களுக்கு முன் பெட்ரோல் விலையை 2 ரூபாய் உயர்த்தியது மத்திய அரசு. காரணம், ரூபாய் மதிப்பு சரிந்ததே! பெட்ரோல் மட்டுமல்ல, பாமாயில், உரம், இரும்புத்தாது, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும். (சில பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்து விட்டது!)

வட்டி குறையாது!
ரூபாய் மதிப்பு சரிவதால், பணவீக்கம் அதிகமாக இருக்கும். எனவே, ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களைக் குறைக்க இன்னும் அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும். இதனால் வீட்டுக் கடன் மற்றும் மற்ற கடன்களுக்கு வட்டி விகிதம் குறைவது தள்ளிப்போகும். வட்டி குறையும் என்று காத்திருந்தவர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

லாபம் குறையும்!
ரூபாய் சரியும்போது கச்சா எண்ணெய்யை அதிக விலை தந்து வாங்க வேண்டியிருக்கும். இதனால்  நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். இதனால் அரசின் மானிய சுமை அதிகரிக்கும். தவிர, பல முன்னணி நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் வாங்கி இருப்பதால், அதிக வட்டி கட்டவேண்டியிருக்கும். இதனால் அந்த நிறுவனங்களின் லாபம் குறையும்.

மாணவர்களுக்கும் பாதிப்பு!
வெளிநாட்டுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்றுலா செல்பவர்கள் அதிக தொகையைச் செலவிட வேண்டியிருக்கும். சுற்றுலா செல்பவர்கள்கூட டூரை சில மாதங்களுக்கு தள்ளிப்போடலாம். ஆனால், வெளிநாட்டுக்கு படிக்கப் போகிறவர்கள் வேறு வழியில்லாமல் அதிக தொகையைச் செலுத்தியே ஆகவேண்டும்.

சாதகங்கள் என்னென்ன?
ரூபாய் சரிவினால் ஐ.டி., பார்மா, டெக்ஸ்டைல் உள்ளிட்ட துறை நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும். அந்நிய முதலீடுகள் இந்தியாவை நோக்கி இன்னும் அதிகமாக வரலாம். என்.ஆர்.ஐ.களின் முதலீடும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

அள்ளித் தந்த ஃபண்டுகள்!
 ரூபாய் மதிப்பு சரிந்ததால், இன்டர்நேஷனல் ஃபண்டுகள் நல்ல லாபம் தந்திருக்கின்றன.  ஜே.பி.மார்கன் ஏசியன் ஈக்விட்டி ஆஃப்ஷோர் பண்ட் சுமார் 32 சதவிகித வருமானத்தைத் தந்திருக்கிறது. மேலும், ஆறு ஃபண்டுகள் 20 சதவிகிதத்துக்கு மேல் லாபம் தந்திருக்கிறது.

Monday, June 24, 2013

மகா பெரியவா சொன்ன கதைகள்!

கண்கூடாக நேரில் பார்க்கும் சில விஷயங்களையே உண்மை என்று எளிதில் நம்பிவிடாமல், ஆயிரம் கேள்விகள் கேட்பதுதான் மனித மனத்தின் இயல்பு. அப்படியிருக்க, புராணங்கள் சொல்வதை கேள்வி கேட்காமல் ஏற்குமா என்ன? அதெப்படி ஒருத்தனுக்கு பத்து தலைகள் இருக்க முடியும்? ஆயிரம் தலை பாம்பு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை! எல்லாம் 
கட்டுக்கதை...இப்படி, விமர்சனங்கள் எழுப்புமே தவிர, புராணங்களும் ஞானநூல்களும் சூட்சுமமாக உணர்த்தும் உண்மையை உணர்ந்துகொள்ளாது.
மகாபெரியவாளுக்கும் இப்படி ஓர் அனுபவம் நேர்ந்தது! அதுபற்றி அவரே கூறுகிறார்...


புராணத்தில் காச்யபருக்கு கத்ரு என்ற பத்தினி இருந்தாள்; அவளுக்குப் பாம்புகள் குழந்தையாகப் பிறந்தன என்று பார்த்தால், உடனே இதெல்லாம் ஒரே அஸம்பாவிதம் என்று தள்ளிவிடுகிறோம். ஆனால், போன வருஷம் (1958) பேப்பரி லேயே (செய்தித்தாள்) வந்ததை ரொம்பப் பேர் பார்த்திருப்பீர்கள். 'ஒரு மார்வாடிப் பெண்ணுக்குப் பாம்பு பிறந்தது’ என்று அந்த 'ந்யூஸ்’ இருந்தது. அதைப் பார்த்தபோதுதான் எனக்கே இந்த மாதிரி இன்னொரு விஷயம் உறுதிப்பட்டது.

நான் ஸ்வாமிகளாக ஆகிறதற்கு முந்தி ஒரு குடும்பத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த வீட்டில் பிறந்த பெண்களும் சரி, அந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்படுகிற பெண்களும் சரி... தாழம்பூ வைத்துக் கொள்ளமாட்டார்கள். பின்னாளில் நான் ஸ்வாமிகளான அப்புறம், அவர்களிடம் ஏனென்று கேட்டபோது, அவர்கள் ஒரு கதை சொன்னார்கள். கதையென்றால் இட்டுக் கட்டினது இல்லை.

''பத்துப் பதினைந்து தலைமுறை களுக்கு முன்னாடி எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குப் பாம்பு குழந்தையாகப் பிறந்துவிட்டது. இதை வெளியில் சொல்லிக்கொள்ள வெட்கம். ஆனாலும், வீட்டோடு வளர்த்து வந்தார்கள். பாம்புக்குப் பால் போட்டி (புகட்டி) குழந்தை மாதிரியே வளர்த்தார்கள். அதுவும் யாரையும் ஹிம்சை பண்ணாமல், தன்பாட்டுக்கு வீட்டோடு விளையாடிக்கொண்டிருந்ததாம்.

இந்த விசித்திரக் குழந்தையை எங்கேயும் எடுத்துக்கொண்டு போக முடியவில்லை, விட்டுவிட்டும் போக முடியவில்லை என்பதால், அம்மாக்காரி ரொம்ப அவசியமானால் ஒழிய எங்கேயும் வெளியே போகவே மாட்டாள். 'கல்லானாலும் கணவன்’ என்கிற மாதிரி 'பாம்பானாலும் குழந்தை’தானே? அந்த வாத்ஸல்யம்!

ஆனால், ரொம்பவும் நெருங்கின பந்துக்களின் கல்யாணமொன்று வந்தபோது, அவளால் போகாமல் இருக்கமுடியவில்லை. அப்போது, வீட்டில் வயசான கிழவி ஒருத்தி இருந்தாள் (அவள் அந்தப் பாம்புக் குழந்தையின் பாட்டியா என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் தூர பந்துக்களில்கூட நாதியற்றவர்களை வைத்துப் பராமரிக்கிற நல்ல பழக்கம் இருந்து வந்தது.

இப்போதுதான் தாயார்- தகப்பனாரோடேயே சேர்ந்து இல்லாமல் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று நவீன நாகரிகத்தில் பறக்கிறார்கள். முன்னெல்லாம் அவிபக்த குடும்பம்தான் (joint family); அதிலே யாராவது ஒரு அத்தை, பாட்டி, ஒன்றுவிட்ட சின்ன தாத்தா என்று வைத்துக்கொண்டு ரக்ஷிப்பார்கள். இந்த கதை நடந்த அகத்திலும் ஒரு கிழவி இருந்தாள்). அவளுக்குக் கண் தெரியாது. அந்தக் கிழவியின் பாதுகாப்பில் பாம்புக் குழந்தையை விட்டுவிட்டு, அதன் தாயார் வெளியூருக்குப் போனாள்.

பாம்புக்கு விசேஷமாக என்ன செய்ய வேண்டும்? குளிப்பாட்ட வேண்டுமா? தலை வார வேண்டுமா? சட்டை போட வேண்டுமா? இல்லாவிட்டால், தூக்கி வைத்துக்கொள்ள வேண்டுமா? இதெல்லாம் இல்லை. வேளாவேளைக்கு அதற்குப் பால் விட்டால் மட்டும் போதும். அதனால் அம்மாக்காரி அந்தக் கிழவியிடம், 'காய்ச்சின பாலை, கை நிதானத்திலேயே கல்லுரலைத் தடவிப் பார்த்து, அதன் குழியிலே விட்டுவைத்துவிடுங்கள். நேரத்தில் குழந்தை (பாம்பு) வந்து அதைக் குடித்துவிடும்’ என்று சொல்லிவிட்டு ஊருக்குப் போனாள். அந்தப் பாம்பை இப்படிப் பழக்கியிருந்திருப்பாள் போலிருக்கிறது,
கிழவியும் அப்படியே செய்தாள். பாம்பும் தாயார் சொன்னபடியே வந்து குடித்துவிட்டுப் போயிற்று. அப்புறம், ஒரு வேளை நாழி தப்பிப் போயிற்று. கிழவி அசந்து போய்விட்டாளோ என்னவோ? கல்லுரலில் பார்த்த பாம்புக்குப் பாலில்லை. அது ரொம்ப ஸாது. கொஞ்ச நேரம் காத்துப் பார்த்தது. அப்புறம் அதுவும் அசந்து போய், அந்தக் கல்லுரல் குழியிலேயே சுருட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு விட்டது.

கிழவி அதற்கப்புறம்தான், கொதிக்கக் கொதிக்கப் பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு கல்லுரலுக்கு வந்தாள். அதிலே பாம்புக்குட்டி படுத்துக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரியவில்லை. வழக்கம் போலவே கொதிக்கக் கொதிக்க இருந்த பாலை அப்படியே ஒரு நிதானத்தில் குழிக்குள்ளே விட்டுவிட்டாள். பாம்பின் மேலேயேதான் விட்டுவிட்டாள். பாவம்! அந்தக் குட்டிப் பாம்பு அப்படியே துடிதுடித்துச் செத்துப்போய்விட்டது.

அங்கே ஊருக்குப் போயிருந்த அம்மாக் காரிக்கு ஸொப்பனமாச்சு! ஸொப்பனத்திலே அந்தப் பாம்புக்குட்டி வந்து, 'நான் செத்துப் போய்விட்டேன். நீ போய் என்னை எடுத்துத் தாழங் காட்டிலே தஹனம் பண்ணிவிடு! இனிமேல், உங்கள் அகத்தில் பிறக்கிற பெண்களும், வாழ்க்கைப்படுகிற பெண்களும் தாழம்பூ வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று சொல்லிற்று (தாழம் புதர்தான் பாம்புக்கு ரொம்பப் ப்ரீதி!). அதிலிருந்து எங்கள் குடும்பத்துல யாரும் தாழம்பூ வைத்துக் கொள்வதில்லை'' என்று அந்த அகத்துப் பெண்கள் சொன்னார்கள்.

இந்தக் கதையைப் பற்றி எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது, இப்படிக்கூட நடந்திருக்குமா என்று. அப்புறம் போன வருஷம், ஒரு பெண்ணுக்குப் பாம்பு பிறந்த நியூஸைப் பார்த்த பின், இதைப் பற்றி ஸந்தேஹப்பட வேண்டாம் என்று மேலும் உறுதியாயிற்று.

உங்களுக்குப் புராண நம்பிக்கை போதவில்லை என்று நான் கண்டிப்பது தப்புதான். எனக்கே ஐதிஹ்யமாக ஒரு குடும்பத்தில் சொன்னதில் நம்பிக்கை போதாமல், நியூஸ் பேப்பரில் வந்த நியூசைக் கொண்டுதானே ஐதிஹ்யத்தை கன்ஃபர்ம் செய்து கொள்ள வேண்டியிருந்தது?

இதுதான் இப்போது நாம் இருக்கிற ஸ்திதி! பேப்பரில் வந்து விட்டால் எத்தனை நம்பத் தகாததானாலும், பொய் என்று தோன்றவில்லை. ஆனால், புராணம் என்றாலே கட்டுக் கதை என்று அலக்ஷ்யம்!

எனது இந்தியா - மண்மேடான அரிக்கமேடு

வணிகம் செய்ய வந்த யவனர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்திலேயே தங்கி விட்டனர். அவர்களே இங்கு கலை வளர்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தனர். 'யவனர் போல முயற்சிகொள்’ என்று பாரதியார் குறிப்பிட்டுள்ளது முக்கியமானது. யவனர்களில் ஒரு பிரிவினர் கொங்கணக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தும் இருக்கின்றனர். வணிகர், படைவீரர், கலைஞர், தூதுவர், கொடையாளி, குறுநில மன்னர் எனப் பல்வேறு நிலைகளில் யவனர்கள் தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். அந்த நினைவு கள் தமிழக வரலாற்றின் ஊடாக தனித்த மேகங்களாக மிதந்துகொண்டிருக்கின்றன.

யவனர் காலம் முதலே புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாக விளங்கியிருக்கிறது. கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய இந்த நகரம் இன்று மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இன்றைய புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று கடலில் கலக்கிறது. கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் பயணம்செய்த கிரேக்கப் பயணிகள் தென்னிந்தியத் துறைமுகங்கள் பற்றி சிறுகுறிப்புகளை எழுதியிருக்கின்றனர். அவற்றில், 'பெரிபிளஸ் ஆஃப் எரித்ரயென்’ மிகவும் முக்கியமானது. இதில் சோழமண்டலக் கரையில் உள்ள துறைமுகங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.


கிழக்குக் கடற்கரையில் வணிகச் சந்தை கூடும்போது டிமிரிகாவில் இருந்தும் வடக்கு துறைமுகங்களில் இருந்தும் வரும் கப்பல்கள் தங்குவதற்கு வசதியான இடங்களாக கருதப்படுவது காமரா. அதற்கடுத்தது பொதுகே மற்றும் சோபட்மா ஆகியவை. இவற்றில், டிமிரிகா எனக் குறிப்பிடப்படுவது தமிழகம், காமரா என்பது காவிரிப் பூம்பட்டினம், சோபட்மா என்பது மரக்காணம். பொதுகே என்பது அரிக்கமேடு என்று, வரலாற்று ஆய் வாளர்கள் கருதுகின்றனர். மிளகு ஏற்றிச்செல்ல வரும் கப்பல்கள் தங்குமிடமாக தமிழகத் துறைமுகங்களில் ஒன்றாக பொதுகே நிலவியது என்று ஆய்வாளர் தாலமி குறிப்பிடுகிறார்.

காவிரிப்பூம்பட்டினம் மற்றும் பொதுகே ஆகிய இரண்டையும் எம்போரியம் என்று அழைக்கின்றனர். அதாவது, பாய்மரக் கப்பல்கள் வந்து தங்கிச் செல்லும் துறைமுகம் என்பது அதன் பொருள்.  ரோம வணிகர்கள் தங்களின் பொருட்களை சேமித்துவைக்கும் இடத்தையும் எம்போரியம் என்றே அழைத்தனர். அப்படி, பொருளை சேமித்துவைத்து தங்களின் நாட்டில் இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப அவர்கள் வாணிகம்செய்த துறைமுகங்கள்தான் இவை இரண்டும் என்கிறது வரலாற்றுக் குறிப்பு. காவிரிப்பூம்பட்டினம் பற்றி நிறைய இலக்கியச் சான்றுகளை நாம் காண முடிகிறது. ஆனால், பொதுகே பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

ஒருவேளை, சோழர்களின் தலைநகராக 'புகார்’ இருந்தது காரணமாக இருந்திருக்கக்கூடும். பொதுகே வெறும் வணிக நகராக மட்டுமே இயங்கியது என்பதால், இலக்கிய முக்கியத்துவம் பெறாமலேயே போயிருக்கக்கூடும். பொதுகே இன்று அரிக்கமேடு என்று அழைக்கப்படுகிறது. ''ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள மேடு என்பதால் அரிக்கமேடு என்று அழைக்கப்பட்டிருக்கலாம்'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கே.ஆர்.சீனிவாசன். செஞ்சி ஆற்றின் கிளை நதியான அரியாங்குப்பத்தாறு கடலில் கலக்கும் நீர்வழியில் அமைந்துள்ள மேடு என்றும் நிலர் பொருள் கூறுகின்றனர். கி.பி. 100 முதல் 220-ம் ஆண்டு வரை இந்தப் பகுதியில் புத்தர் வழிபாடு இருந்திருக்கிறது. ஆகவே, அரிங்கன்மேடு அதாவது புத்தன் மேடு என்பதே அரிக்கமேடு ஆகியது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால், இவை இரண்டையும்விட இது சமணப்பெயரின் மிச்சமே என்கிறார் அரிக்கமேட்டை ஆராய்ச்சி செய்துள்ள தில்லை வனம்.

அரிக்கமேடு என்பது சமண சமயக்கடவுள் அருகனோடு தொடர்பு கொண்டது. சந்திரகுப்தர் காலத்தில் சமண வழிபாடு தென்னிந்தியாவில் பரவியிருந்தது. அதன்படி, பல்வேறு ஊர்களில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறுவப் பட்டன. அப்படி உருவான அருகன் வழிபாட்டுத் தலமே அரிக்கமேடு என்கிறார். இதற்கு ஆதாரமாக இந்தப் பகுதியில் சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தில்லை வனம்.

ஆனால், பௌத்த சிற்பங்களும் மிச்சங்களும் இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இது ஒரு பௌத்த ஸ்தலமாகவே இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. பண்டைய பொதுகே துறைமுகம் மிகப் பெரியதாக இருந்திருக்கக்கூடும். பண்டக சாலைகள், தொழிற் கூடங்கள் மற்றும் குடியிருப்பு கள் அடங்கிய பெரிய நகர மாகவே இருந்திருக்கலாம். ஆகவே, வீராம்பட்டினம், காக் காயந்தோப்பு, அருகன்மேடு, சின்னவீராம்பட்டினம் ஆகியவை ஒன்று சேர்ந்து பழைய பொதுகேயாக இருந் திருக்கக்கூடும். பொதுகே பகுதியில் சமண பௌத்தத் துறவிகளுக்கான தவப்பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இடம் சாக்கியன் தோப்பு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதுவே மருவி இன்று காக்கயன்தோப்பு என்று அழைக்கப்படுகிறது. இது பௌத்த நினைவின் மிச்சம்.

1779-ம் ஆண்டு வரை அரிக்கமேட்டின் வரலாற்று முக்கியத்துவத்தை எவரும் உணர்ந்திருக்கவில்லை. இந்தப் பகுதியில் செங்கல் சூளைகள் அதிகமாக இருந்திருக்கின்றன. அப்படி ஒரு செங்கல் சூளைக் காகத் தோண்டப்பட்ட குழிக்குள் சீனக் களிமண் ஜாடிகள் கண் டெடுக்கப்பட்டன. அதன் பிறகே இங்கு அகழ்வாய்வுப் பணி செய்யப்பட்டது.

அரிக்கமேட்டின் பெருமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் லெழாந்துய் என்ற பிரெஞ்சுக்காரர். வானவியல் ஆய்வுக்காக புதுச்சேரியில் தங்கியிருந்த இவர், வரலாற்றுச் செய்திகளில் ஆர்வம்கொண்டு இந்தப் பகுதியை ஆராய்ந்தார். இவர் சேகரித்த தகவல்களைக்கொண்டு இவர் எழுதிய நூலில் அரிக்கமேட்டின் சிறப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு, ஒரு நூற்றாண்டு காலம் யாரும் இந்தப் பகுதியில் எந்த ஆய்வும் நடத்தவில்லை. 1937-ல் புதுச்சேரி பிரெஞ்சுக் கல்லூரிப் பேராசிரியர் ழுவோ துய்ப்ராய், அரிக்கமேடு பகுதியில் காணப்பட்ட மண்பாண்டங்கள், மணிகள் ஆகியவற்றைச் சேகரித்து விரிவான ஓர் ஆய்வு நடத்தி, லெ செமோர் என்ற ஆய்வு இதழில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் ஆர்வம்கொண்டு வியட் நாமில் இருந்து கொலுபேவ் என்ற அறிஞர் அரிக்கமேட்டுக்கு வந்தார். அவர் பல்வேறு தொல்பொருள் ஆய்வுகளை நடத்தி, அதன் வரலாற்றுத் தொன்மையை ஆராய்ந்தார். 1940-ம் ஆண்டு சென்னை அருங்காட்சியகத் தலைவராக இருந்த ஐயப்பன், அரிக்க மேட்டில் ஆய்வு நடத்தி, தொல்பொருள் சின்னங்களை சேகரித்தார். அரிக்கமேடு என்பது தென்னிந்தியாவின் தட்சசீலம் போன்றது என்று, ஐயப்பன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிறகு, 1944-ல் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனராக இருந்த மார்ட்டிமர் வீலர் அரிக்கமேட்டைப் பற்றி கேள்விப்பட்டு, புதுவைக்கு வந்தார். இங்கு கிடைத்த சான்றுகளை ஆராய்ந்து, இதை விரிவாக ஆய்வுசெய்ய உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, மூன்று மாதங்கள் அரிக்கமேட்டில் தீவிர அகழ்வாய்வு செய்யப்பட்டடன. அந்த ஆய்வில் கிடைத்த மட்கலங்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டன.

கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், அரிக்கமேடு பானை எழுத்துகள் பற்றி எழுதிய கட்டுரை, உலகின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அரிக்கமேடு ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கின.

1941 முதல் 1992 வரை அரிக்க மேட்டில் செய்த பல்வேறு அகழ் வாய்வுகளில் மட்கலன்கள், மணி வகைகள், அணிகலன்கள், கண்ணாடிப் பொருட்கள், நாணயங்கள், உறைகிணறுகள், சாயத்தொட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் விளக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமலா பெக்லி தலைமை யில் நடந்த ஆய்வில் சங்கு வளையல்கள், காதணிகள், வண்ணம் தீட்டப் பயன்படும் குச்சிகள், மரச்சீப்பு, சுடுமண் விலங்கு பொம்மைகள், நீலக் கண்ணாடிக் கோப்பைத் துண்டுகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ஆம்போரா சாடி போன்றவை கிடைத்துள்ளன. பண்டைய காலங்களில் மத்தியத் தரைக்கடல் நாடுகளில் மது, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேமித்துவைக்க ஆம்போரா ஜாடிகளைப் பயன்படுத்துவர். இந்த ஜாடிகளை ரோமானியர்கள் தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். இது, மென்மையான களிமண்ணால் வனையப்பட்டு, பழுப்பு நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

ஆம்போரா ஜாடியின் அடிப்பகுதி கூர்மையாகவும், கழுத்துப் பகுதியில் இருபுறமும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இதை எடுத்துச் செல்வது எளிது. இந்த ஜாடிகள் கி.மு. 100-ல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதுபோலவே, மத்தியத் தரைக்கடல் நாடுகளில் செய்யப்பட்டு வந்த ரௌலெட்டே எனும் மட்கலன்கள் விசேஷமானவை. இந்தக் களிமண் இந்தியாவில் கிடைக்காது. உருக்கு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த மட்கலன்கள் ரோமானியர்களால் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அழகுமிக்க இந்த மட்கலன்கள் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைத்திருக்கின்றன. களிமண் கூஜா ஒன்றும் அரிக்கமேட்டு ஆய்வில் கிடைத்துள்ளது. இது, ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுவது. குளிர்ந்த நீரை சேமித்துவைத்துக் குடிக்கப் பயன்படுத்தப்படும் இந்தக் கூஜா, கடற்பயணத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அரிக்கமேடு அகழ்வாய்வுகள் வெளிப்படுத்திய கட்டடப் பகுதிகளுக்குள் முக்கியமானது, அதன் பண்டக சாலை. செவ்வக வடிவம்கொண்ட இந்தப் பண்டகசலை, பெரிய செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பண்டக சாலை ஆற்றங்கரையை நோக்கி இருக்கும்படி கட்டப்பட்டு இருக்கிறது. அதுபோலவே, துணிகளுக்கு சாயமிடும் சாயப் பட்டறைகளும், தொட்டிகளும் அரிக்கமேட்டில் இருந்திருக்கின்றன. அவற்றில் இருந்து கழிவு நீர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக சிறு வாய்க்கால்கள் தனியே அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமானப் பணிகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மறுபக்கம் போலவே இருக்கிறது. சங்குக் கண்ணாடி ரத்தினக் கற்கள், படிகக் கற்கள் ஆகியவை அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. இதைக் கருத்தில்கொள்ளும்போது, அங்கே மணி உருவாக்கும் தொழிற்சாலை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முற்றுப்பெறாத சங்கு வளையல்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன. சிறிய சங்குகளை அறுத்து காதணிகள் செய்திருக்கின்றனர்.  தாமிரத்தால் செய்யப்பட்ட கிலுகிலுப்பை, குழவிக்கற்கள், முதுமக்கள் தாழி, மரச்சுத்தி எனப் பல்வேறு அரிய பொருட்கள் அரிக்கமேடு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வணிகம் காரணமாக ரோமானியர்கள் தமிழகம் வந்திருந்தபோதும் அவர்களின் பண்பாடும் கலைகளும் தமிழகத்தில் ஊடுருவி, பண்பாட்டுக் கலப்பு ஏற்பட்டுள்ளது.  

ரோமானியர்கள் இந்தியாவுக்குக் கடலில் பயணம்செய்து வருவதற்கு பருவக்காற்றே முக்கிய துணையாக அமைந்திருந்தது. இந்தப் பயணங்கள் வடமேற்குப் பருவக் காற்று சாதகமாக வீசும் பருவகாலத்தில் நடந்திருக்கிறது. எகிப்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்படும் பயணம் ஜூலையிலும், இந்தியாவில் இருந்து எகிப்து செல்லும் பயணம் கோடையிலும் தொடங்கி இருக்கிறது. ஒரு பயண காலம் என்பது மூன்று மாதங்கள். ரோமானியர்கள் எகிப்திய துறைமுகத்தில் சரக்கு ஏற்றிக்கொண்டு செங்கடலின் கீழ்முகமாகப் பயணம் செய்து அரேபியத் துறைமுகமான மூசாவைக் கடந்து பாபல் ஜலசந்தி வழியாக அரேபியாவின் தெற்குத் துறைமுகமான கானேவில் தங்கி, அங்கிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர்.  

அவர்களில் ஒரு பிரிவினர் அரபிக் கடலில் பயணம்செய்து குஜராத்தை அடைந்திருக்கின் றனர். மற்ற குழுவினர் மலபார் பகுதியை அடைந்து அங்கிருந்து கடல் வழியாக அரிக்கமேட் டுக்கு வந்திருக்கின்றனர். முசிறி மற்றும் அரிக்கமேடு துறைமுகங்கள், கப்பல்கள் வந்து தங்கும் தளமாக மட்டுமின்றி சரக்குகளை பெரிய கப்பலில் இருந்து சிறிய படகுகளுக்கு மாற்றி சிறிய துறைமுகங்களுக்கு செல்வதற்கு உதவி செய்வதற்கும் வசதியுள்ள இடமாக இருந்தன. அரிக்கமேட்டின் வட பகுதியில் தனியான படகுத்துறை ஒன்று இருந்தது. அரிக்கமேட்டை அடைந்த ரோமானியப் பொருட்கள் அங்கிருந்து வடக்கே வசவசமுத்திரம் தெற்கே அழகன் குளம் ஆகிய பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. பிறகு, அழகன் குளத்திலிருந்து வைகை ஆற்று வழியாக மதுரைக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

பல்வேறு பொருட்கள் ரோமானியர்களால் இறக்குமதி செய்யப்பட்டது போலவே தந்தம், மிளகு, தேக்கு, அகில், வாசனைத் திரவியங்கள், பட்டு, முத்து ஆகிய பொருட்கள் தமிழகத்தில் இருந்து ரோமுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இந்த வணிக முயற்சிகளுக்கு ரோமானியப் பேரரசு, தமிழக மன்னர்களுடன் முறையான வணிக ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. வெளிநாட்டு வணிகர்களிடம் சுங்க வரி வசூலிக்கும் பழக்கம் அரிக்கமேட்டிலும் இருந்திருக்கிறது, இந்த வரிப் பணத்தைக்கொண்டு துறைமுகக் கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பழந் தமிழர் வாழ்வியலுக்கு சான்றாகத் திகழும் அரிக்கமேடு, மிக முக்கியமான வரலாற்றுப் பெட்டகம். அங்கே இன்னமும் முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதுவரை நடந்த முக்கிய ஆய்வுகள்கூட அயல்நாட்டினர் செய் தவைதான்.

சிந்துச் சமவெளி ஆய்வை மட்டுமே பிரதானமாகக் கவனம்கொள்ளாமல் இதுபோன்ற தொன்மையான இடங்களையும் இந்தியத் தொல்பொருள் துறை விரிவாக ஆய்வுசெய்ய வேண்டும். அப்படி ஆய்வுசெய்தால், அறியப்படாத உண்மைகள் உலகின் வெளிச்சத்துக்கு வரும்.

ஷிகர் தவான்

வீரேந்தர் ஷேவாக் என்ற பெயரை மறக்கவைத்துவிட்டார் ஷிகர் தவான். ஷேவாக்கின் அதிரடி, டிராவிட்டின் கன்சிஸ்டென்ஸி... கலந்து செய்த கலவையாக வெளுத்து வாங்கும் ஷிகர் தவான், ஐ.சி.சி. சாம்பியன் டிராபியின் முதல் இரு ஆட்டங்களிலும் குவித்த இரண்டு செஞ்சுரிகளும், 'யாருடா இவன்?’ என கிரிக்கெட் உலகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. இதற்கு முன்னரும் அவரை கிரிக்கெட் உலகம் திரும்பிப் பார்த்தது. ஆனால், அது சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன். 2004-ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக இந்திய அணிக்காக ஆடிய 19 வயது டெல்லிவாலா ஷிகர் தவான், அப்போது மூன்று செஞ்சுரிகளுடன் குவித்த 505 ரன்கள்தான் இன்று வரை ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரின் தனி நபர் சாதனை. அப்போது சின்ன புகழ் வெளிச்சம் ஷிகர் தவான் மீது பாய்ந்தாலும், பிறகு மறக்கப்பட்டார்.
 
இந்திய சீனியர் அணியில் இடம் பெற, ஷிகர் தவான் ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த இடைவெளியில் கொஞ்சமும் சோர்வடையாமல், ரஞ்சிப் போட்டிகளில் முத்திரை பதித்தே வந்திருக்கிறார். ஆனாலும், அவருக்கான வாய்ப்புக் கதவுகள் திறக்கவே இல்லை. இடையில் ஒருநாள் போட்டிகளில் கிடைத்த மிக சொற்ப வாய்ப்புகளில் சொதப்பினார் ஷிகர். மறந்தேவிட்டார்கள் அவரை. பிறகு, சுதாரித்து ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் மளமளவென ரன்கள் குவித்தபடி இருந்தாலும் தேர்வாளர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பவே இல்லை.

இந்த நிலையில்தான், தொடர்ந்து மைதானத்தில் சொதப்பிக்கொண்டும் மைதானத்துக்கு வெளியே கிரிக்கெட் வாரியத்துடன் சலம்பிக்கொண்டும் இருந்த ஷேவாக்குக்குப் பதிலாக ஒரு பிளேயரைத் தேடிக்கொண்டுஇருந்தார்கள். அப்போதைய ரஞ்சி சீஸனில் ஷிகர் வைத்திருந்த சராசரி 63.75. மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே அவரை டெஸ்ட் போட்டிக்குத் தேர்வுசெய்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த அறிமுகப் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் (85) சதமடித்த சாதனையுடன் ஷிகர் குவித்த ரன்கள் 187. அந்தப் போட்டியில் கண்ணில் தட்டுப்படாத வெற்றியைச் சாத்தியப்படுத்தியது ஷிகரின் இன்னிங்ஸ். ஒரு நாயகன் மீண்டும் உருவான இன்னிங்ஸ் இது.


அதன் பிறகு, காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஷிகர், இப்போது ஐ.சி.சி. சாம்பியன் போட்டியில் விட்ட இடத்திலிருந்து ஆக்ரோஷத்தைத் தொடர்கிறார். இப்போதைய இந்திய பேட்ஸ்மேன்களில் ஆஃப் சைடில் நுணுக்கமாகவும் ஆக்ரோஷமாகவும் அடித்து ஆடக்கூடியதில் ஷிகர் செம ஸ்ட்ராங். இன்றும் இந்திய பேட்ஸ்மேன்களைக் கவிழ்க்கும் ஷார்ட் - பிட்ச் பந்துகளை ஷிகர் அத்தனை எளிமையாக எல்லைக் கோடுகளுக்கு மேலே பறக்கவிடுகிறார். மிக சொற்ப இன்னிங்ஸ்களிலேயே ஷிகரின் பலத்தைக் கணித்துவிட்ட ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சாளர்கள் இப்போதெல்லாம் அவருக்கு ஷார்ட்-பிட்ச் பந்துகளை வீசுவதே இல்லை.    

ஷிகர் தவானின் திருமணம் அசத்தல் திருப்பங்கள் நிறைந்த காதல் கதை. ஷிகர் தவானைவிட அவருடைய மனைவி ஆயிஷாவுக்கு வயது அதிகம். விவாகரத்தான வரும்கூட. அதோடு, ஷிகரைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே, இரண்டு குழந்தைகளுக்குத் தாயானவர். 2012-ல் ஷிகர், ஆயிஷாவைத் திருமணம் செய்துகொள்ளும்போது ஆயிஷாவின் மூத்த மகளுக்கு 10 வயதுக்கு மேல் இருக்கும்.

'இக் கணத்தில் வாழ்’ என்றார் புத்தர். ஷிகரின் கிரிக்கெட் ஸ்டைல் அதற்குக் கச்சிதமான உதாரணம். களத்தில் பந்தை எதிர்கொள்ளும்போது அவருடைய சிந்தனை முழுக்க அந்த நொடி எதிர்கொள்ளவிருக்கிற பந்தின் மேலேயே இருக்கும். பேட்டிங் மேஸ்ட்ரோக்களான விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் ஆகியோ ரிடம் காணப்படும் குணம் இது. இப்போ தைய நிலையில் கிரிக்கெட்டைக் கொண் டாட விடாமல் மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் என ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதற்காக ஷிகர் தவானின் தன்னம்பிக்கையை நாம் கொண்டாடாமல் இருக்க முடியாது!