Search This Blog

Saturday, August 15, 2015

Minions

மஞ்சள் நிறம், குட்டையான உருளை வடிவம், சற்றே வாழைப்பழத்தை நினைவுபடுத்தும் தோற்றம், ஜீன்ஸ், ஒற்றை மற்றும் இரட்டைக் கண்கள், அந்தக் கண்களை கவர் செய்யும் பூதக் கண்ணாடி போன்ற மாஸ்க் என உலகச் சுட்டிகளை ஒட்டுமொத்தமாகச் சுண்டி இழுத்த மினியன்ஸ், மீண்டும் அட்டகாசம் பண்ண வந்துட்டாங்க.


2010-ம் ஆண்டு வெளியான ‘டெஸ்பிகபிள் மி’ (Despicable me) படத்தில் அறிமுகமானவங்கதான் இந்த மினியன்ஸ். படத்தின் ஹீரோ, க்ரூவுக்கு உதவியாக இருந்து, தங்களின் குறும்புகளால் எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்கவெச்சாங்க. இரண்டாம் பாகமான, ‘டெஸ்பிகபிள் மி 2’ படத்திலும் அதகளம் செய்தாங்க. இந்த கேரக்டர்களுக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்த்து, இவங்களை மட்டுமே மையமாவெச்சு எடுக்கப்பட்டிருக்கும் புதிய அனிமேஷன் 3D படம், ‘மினியன்ஸ்’ (Minions).  66 நாடுகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிச்சிருக்கு.

‘இந்த மினியன்ஸ் யார்? எங்கே இருந்து வந்தவங்க?’ என்ற கேள்விகளுக்கு, முந்தைய படங்களில் பதில் இருக்காது. இந்தப் படம், அதுக்கான பதிலில் இருந்து ஆரம்பிக்குது. ஒற்றைச் செல் உயிரினம் தோன்றிய காலத்தில், அதிலிருந்து பிரிந்து உருவானதுதான் மினியன்ஸ். ஒவ்வொரு காலகட்டத்திலும் வலிமையும் புத்திக்கூர்மையும் உள்ள ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, உதவி செய்துட்டு இருக்கிறதுதான் இவங்களோட வாழ்க்கை.
உதவுறாங்க என்பதைவிட, தங்களின் குறும்புத்தனத்தால் அந்தத் தலைவர்களைப் படுத்துறாங்க எனச் சொல்றதுதான் சரியா இருக்கும். டி-ரெக்ஸ் என்கிற டைனோசர்களின் முன்னோடி, குகை மனிதன், ட்ராகுலா என ஒவ்வொரு காலகட்டத்திலும் இவங்ககிட்டே தலைவனா சிக்கிக்கிட்டுத் தவிக்கும் பட்டியல் ரொம்ப நீளம். ஆரம்பத்தில் வரும் அந்தக் காட்சிகள், வயிறு குலுங்கச் சிரிக்கவைக்குது. மாவீரன் நெப்போலியனையும் விட்டுவைக்கலை.


ஒருவழியாக அந்தத் தலைவர்களின் காலங்கள் முடிஞ்சுடுது. இப்போ, மினியன்ஸ் அன்டார்ட்டிகாவில் இருக்காங்க. அந்தக் கூட்டத்தில் புத்திசாலிகள் எனச் சொல்லிக்கிற ஸ்டூவர்ட், கெவின், பாப் என்ற மூன்று பேருக்கும் புதுத் தலைவனைத் தேடும் பொறுப்பு வருது.

அன்டார்ட்டிகாவில் இருந்து நியூயார்க் நகருக்கு வந்து, ஸ்கார்லெட் ஓவர்கில் (Scarlet Overkill) என்ற பெண்ணைச் சந்திக்கிறாங்க. சூப்பர் வில்லியான ஸ்கார்லெட், ‘லண்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தைத் திருடி எடுத்துவந்தால், உங்களுக்கான தலைவனைக் காட்டுகிறேன்’ என்கிறார். அடுத்து என்ன நடக்குது? மினியன்கள், தங்கள் தலைவனைக் கண்டுபிடிச்சாங்களா என்பதை குறும்பு கொப்பளிக்கச் சொல்வதுதான் மீதிக் கதை.

கலக்கலான இந்த 3D அனிமேஷன் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிச்சு இருக்கு. வில்லியான ஸ்கார்லட்டுக்குக் குரல் கொடுத்திருப்பவர், புகழ்பெற்ற ஹாலிவுட் நாயகி, சாண்ட்ரா புல்லக் (Sandra Bullock). டெஸ்பிகபிள் மி 1 & 2 படங்களை இயக்கிய, பியர்ரி கோஃபின் (Pierre Coffin), கெலே பால்டா (Kyle Balda) சேர்ந்து இயக்கி இருக்கிறார்கள். பால்டா, ‘ஜுமான்ஜி’, ‘டாய் ஸ்டோரி 2’ ஆகிய படங்களில் பணியாற்றியவர்.

மினியன்ஸ் பாடும் ‘பா... பா... பா... பனானா’ என்ற பாட்டுதான் இப்போ உலகச் சுட்டிகளின் ரைம்ஸ்.
ஷாலினி நியூட்டன்

No comments:

Post a Comment