Search This Blog

Wednesday, October 07, 2015

மிரட்டும் டெங்கு... தப்பிக்க என்ன வழி..?

‘டெங்கு’ காய்ச்சல் பீதி, நாடெங்கிலும் பரவிவருகிறது. இதன் தாக்கம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், அதைப் பற்றிய புரிதல் அவசியம். படியுங்கள்... தெளியுங்கள்!

 

 வைரஸ் காய்ச்சலான டெங்கு, `ஏயிடிஸ் எஜிப்டி' (Aedes aegypti) என்கிற கொசுக்களினால் பரவக் கூடியது. ஒரு மனிதரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. இந்தக் கொசுக்கள், பகல் நேரங்களில் கடிக்கக் கூடியவை. கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும் இந்தக் கொசுக்கள், நல்ல தண்ணீரில் முட்டைகளை இடக்கூடியவை.

 நோயின் ஆரம்ப கட்டத்தில் அதிகப்படியான காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்பகுதியில் வலி ஏற்படுதல், எலும்பை முறிக்கும் அளவுக்கு வலி, களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், காய்ச்சல் குறைந்த பிறகும் தோல் தடித்து சிவப்படைதல் போன்றவை ஏற்படும். முறையான சிகிச்சை இன்றி அடுத்தகட்டம் போகிறபோது, கல்லீரல் அழற்சி, சுவாசக் கோளாறு, மூளையில் ரத்தக் கசிவு, மூளை நரம்பு செயலிழத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.

 பொதுவாக ஒரு மனிதனின் மைக்ரோ லிட்டர் ரத்த அளவில், 1,50,000 - 4,50,000 வரை தட்டணுக்கள் (Platelete Transfusion) இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இந்த அணுக்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாக குறைந்துவிடுகிறது. விளைவாக பல் ஈறுகள், மூக்கு, வயிறு, குடல் இவற்றில் ரத்தக் கசிவு உண்டாகிறது. இன்னும் 10,000 மைக்ரோலிட்டராக  குறைகிறபோது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தட்டணுக்களை உட்செலுத்த வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகிறது.

 நல்ல ஓய்வு, உடலின் நீர் இழப்பை சரிசெய்யும் உணவு, காய்ச்சலுக்கு தகுந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல்... இவற்றை மேற்கொள்ள வேண்டும்.

 பப்பாளி இலைச் சாறு, டெங்கு காய்ச்சலின் வீரியத்தைக் குறைக்கும். நம் பாரம்பர்ய நாட்டுவைத்திய முறையில், நிலவேம்பு, மலைவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு எல்லாம் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை என்று கூறியுள்ளார்கள்.

‘மைக்ரோ’ மருந்து ஆராய்ச்சி நிறுவனம் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அதைக் கண்டறிந்து, ‘கேரிகா பப்பாயா’ எனும் தாவரவியல் பெயர் கொண்ட பப்பாளியின் இலைச் சாற்றில் இருந்து ‘கேரிபில்’ எனும் மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளது.

நமக்கிருக்கிறது நம் பாட்டன் சொன்ன வைத்தியம்... பப்பாளி இலைச் சாறு!.


No comments:

Post a Comment