Search This Blog

Tuesday, November 06, 2012

மிருகம் உருவான கதை


என் கழுத்தில் கயிறு ஒன்று கட்டப்பட்டபோது நான் அமைதியாகவே இருந்தேன். கொஞ்சம் தலையைத் தாழ்த்தி வாகாக என் கழுத்தைக்கூட நீட்டினேன். ஏன் தெரியுமா? மனிதர்கள் உயர்ந்தவர்கள். தீங்கு செய்ய மாட்டார்கள். அருகில் இருந்து பழகியதை வைத்துச் சொல்கிறேன். என்னால் செய்ய முடியாத பல பெரிய விஷயங்களை, என்னால் புரிந்து கொள்ள முடியாத பல ஆச்சரியங்களை மனிதர்கள் சர்வ சாதாரணமாக நிகழ்த்துகிறார்கள். வாலைக் குழைத்து அவர்கள் காலடியில் அமைதியாகப் படுத்துக் கொள்வதுதான் அவர்களுக்குச் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.

என் பெயர் பக். அலாஸ்காவில் உள்ள ஒரு நீதிபதியின் வீட்டில் செல்ல நாயாக வளர்ந்து வருகிறேன். தூய்மையான அன்பும் கரிசனமும் கொண்டவர் என் எஜமான். அவரது ஒவ்வோர் அசைவையும் நான் அறிவேன். எப்போது அழைப்பார், எப்போது அணைப்பார், எப்போது வாஞ்சையுடன் தடவித் தருவார் என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்போது நான் இருப்பது அவருடைய பணியாளர் ஒருவருடன். அதனால்தான் என் கழுத்தில் இந்தக் கயிறு கட்டப்பட்டிருக்கிறது.

சதுரமாகக் கத்தரிக்கப்பட்டிருக்கும் சீட்டுகளைக் கையில் பிடித்து கொண்டிருந்தார் அந்தப் பணியாளர். உடன் அமர்ந்திருந்தவர்களும் அதே போன்ற சீட்டுகளை வைத்திருந்தார்கள். நான் ஒவ்வொருவரையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது அவர்கள் சிரிப்பதையும் ஹோவென்று கத்துவதையும் வைத்துப் பார்க்கும்போது ஏதோ விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எழுந்து கெண்டார்கள். வீட்டுக்குக் கிளம்பலாம் என்று நானும் எழுந்தேன்.

அப்போதுதான் அந்த விநோதம் நடந்தது. அந்தப் பணியாளர் கயிற்றை எடுத்து அருகில் இருந்த நண்பரிடம் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வெளியேறிவிட்டார். கயிற்றின் ஒரு முனை என் கழுத்தில். இன்னொரு முனை, ஓர் அந்நிய மனிதனிடம். இதற்கு முன்னால் இப்படி நடந்ததில்லை என்பதால் எனக்குக் குழப்பமாக இருந்தது. ஒரு வேளை அருகில் எங்காவது சென்றிருக்கிறாரா? இங்கு என்ன நடக்கிறது?

தயக்கத்துடனும் பயத்துடனும் நான் குரல் கொடுத்தபோது அந்த அந்நிய மனிதன் கயிற்றை இறுக்கினான். என்னைப் பிடித்து இழுக்கவும் செய்தான். கயிறு கழுத்தில் அழுத்தியது. அதுகூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. என்னை ஒருவன் கட்டாயப்படுத்தி இழுக்கிறான் என்னும் உணர்வே அதிக காயத்தை ஏற்படுத்தியது. அந்தக் கயிறு என் பாதுகாப்புக்காக அணிவிக்கப்பட்டது என்று தான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த மனிதன் கத்தினான். அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளின் பொருள் புரியாவிட்டாலும் அவனுடைய முகத்தில் தென்பட்ட கடுகடுப்பைக் கண்டபோது கோபம் பொத்துக் கொண்டு வந்தது. என்னை அவமானப்படுத்தியதோடு நிற்காமல் என்னைத் திட்டவும் செய்கிறானே! அவனுக்குச் சமமாக நானும் என் குரலை உயர்த்தினேன்.

அவனுக்கு என் மொழி புரியவில்லை. என்னை மேலும் பலவந்தப்படுத்தி இழுத்தான். என் கோபம் பெருகியது. நீதிபதியிடம் திரும்பிச் சென்று அவர் மடியில் தலையைப் புதைத்து என்னைக் கைவிட்ட பணியாளர் பற்றியும் இந்த முரட்டுத்தனமான அந்நியனைப் பற்றியும் புகார் செய்ய வேண்டும் என்று கருவிக்கொண்டேன். அது, பிறகு. முதலில், இவனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்.

கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிடு என்றது உள்மனம். திமிறினேன். அவன் விடாமல் இழுத்தான். கால்களை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி நிற்க முயற்சி செய்தேன். உன்னை எனக்குப் பிடிக்கவில்லை, என்னை விட்டுவிடு என்பதை எனக்குத் தெரிந்த அத்தனை சாத்தியமான வழிகளிலும் வெளிப்படுத்தினேன். அவன் கேட்பதாக இல்லை.

எனவே சட்டென்று அவன்மீது பாய்ந்தேன். கூரான பற்களைக் காட்டி பயமுறுத்தினேன். அவன் கொஞ்சம் பின்வாங்கினான். முகத்தில் பயம் தெரிந்தது. இதுதான் தருணம். ஓடு! ஓடிவிடு! நான் அவனிடம் இருந்து கிட்டத்தட்ட விடுபட்டு விட்ட தருணத்தில் திடீரென்று நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்து என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு பெட்டியை என்மீது கவிழ்த்துவிட்டான் ஒருவன். சட்டென்று இருள் என்னைச் சூழ்ந்து கொண்டது. பயம். கண்கள் தெரியவில்லை. என்னைச் சுற்றி விநோதமான குரல்கள் கேட்டன. கத்தி, கத்தி ஓய்ந்து போனேன்.

பெட்டியோடு சேர்த்து என்னைத் தூக்கிப் போனதை உணர முடிந்தது. என்னை எங்கோ கொண்டு செல்கிறார்கள். அநேகமாக இது ரயில் வண்டியாக இருக்கலாம். நீதிபதியின் வீட்டைவிட்டு இப்போது வெகு தொலைவுக்கு வந்துவிட்டதைப் போல் இருந்தது.

கண் விழித்தபோது ஓர் இருண்ட அறையில் இருந்தேன். மயக்கமும் சோர்வும் அவமானமும் என்னை அழுத்திக் கொண்டிருந்தன. இதோ மீண்டும் காலடிச் சத்தம். நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இனியும் தாமதிக்கக்கூடாது. கதவு திறக்கப்படும்போது பாய்ந்து விடவேண்டும்.

அறையில் ஒரு சிறிய ஓட்டை மட்டும் திறக்கப்பட்டது. அதன் வழியே உணவு தள்ளிவிடப்பட்டது.

சாப்பிடு, பிசாசே!"

என்ன ரொம்ப பிகு செய்து கொள்கிறதா?"

செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட நாய் போல. நம் வழிக்குக் கொண்டு வர நேரம் ஆகும்."

என்னிடம் கொடு. இரண்டே நாள்களில் நம் பின்னால் வாலைக் குழைத்துக்கொண்டு வரச் செய்கிறேன்."

நீ முரடன். இதன் மதிப்பு தெரியாமல் நடந்து கொண்டால் நமக்குத்தான் இழப்பு."

கவலைப்படாதே. நீ எதற்காக இதை வாங்கியிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும், நான் இதை வழிக்குக் கொண்டு வருகிறேன்."

பசி இம்சித்தது. நான் அந்தத் தட்டை நெருங்கக்கூட இல்லை. மானம் உயிரை விடப் பெரிது அல்லவா? போயும் போயும் இவர்களுடைய உணவையா சாப்பிட வேண்டும்? காத்திருந்தேன். இரண்டு நாள்கள் கழிந்தன. ஒரு சொட்டு நீர்கூட இல்லை. என்னைக் கட்டாயப்படுத்திப் பார்த்தார்கள். என்னைச் சாப்பிடவைக்க முடியவில்லை.

சிவப்பு ஸ்வெட்டர் மனிதன் இறுதியாகக் கதவைத் திறந்தான். என்னை நோக்கித் தட்டைத் தள்ளினான். நான் அமைதியாக நின்றேன். கத்துவதற்கோ ஓடுவதற்கோ என்னிடம் பலமில்லை. அவன் நகர்ந்தான்.

நான் தடுமாறியபடி திரும்பினேன். மின்னல் போல் என் முதுகில் ஒரு சுளீர்! சுருண்டு விழுந்தேன். பிரம்பு ஒன்று மின்னிக் கொண்டிருந்தது. எழுந்திருக்க முயன்றேன். முடியவில்லை. இந்தமுறை அந்தப் பிரம்பு என் முன் கால்களின்மீது பாந்தது. மூர்ச்சையடைந்து அப்படியே விழுந்தேன்.

நினைவு திரும்பியபோது அந்தச் சிவப்பு ஸ்வெட்டர் மனிதனின் கால்களுக்குக் கீழே சுருண்டு கிடந்தேன். என் முதுகில் தட்டி, உணவை நீட்டினான். எதிர்க்க வலுவில்லை. தவிரவும், இறந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. இது பசியா அல்லது வலியா? பயமா அல்லது பலவீனமா?

சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். மனிதர்கள் அலாஸ்காவின் பனி பொழியும் பகுதிகளில் ஒரு புதிய உலோகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தகதகவென்று மின்னும் அந்த மஞ்சள் உலோகத்தை வண்டியில் கட்டி இழுத்து வருவதற்கு வலுவான நாகள் தேவைப்படுகின்றன என்பதால், நான் திருட்டுத் தனமாகக் கடத்தி வரப்பட்டிருக்கிறேன்.

ம், சாப்பிடு" என்று பிரம்பை எடுத்தான் அந்தச் சிவப்பு ஸ்வெட்டர் மனிதன்.

நான் சாப்பிடத் தொடங்கினேன். உணவு உள்ளே இறங்கும்போது கண்களில் நீர் கோத்துக் கொண்டது. இனி நான் நீதிபதியைப் பார்க்கப் போவதில்லை. யார் மடிமீதும் முகம் புதைக்கப் போவதில்லை. என் உலகம் மாறிவிட்டது. அல்லது நானே தான் மாறிவிட்டேனா?

ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்தது. இனி பிரம்புதான் என் எஜமான். இன்னொன்றும் புரிந்தது. மனிதர்கள் அத்தனை உயர்ந்தவர்கள் இல்லை. இந்த எண்ணம் எனக்குள் பரவிய அந்த நொடியில் இருந்து நான் மிருகமாக மாற ஆரம்பித்தேன்!

ஜேக் லண்டன் (1876-1916)

சாடர்டே ஈவினிங் போஸ்ட் பத்திரிகையில் தொடராக வெளிவந்து பிறகு புத்தகமாகவும் வெளிவந்த கூடஞு The Call of the Wild ஜேக் லண்டனுக்கு முதல் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்தது. அன்று தொடங்கி இன்று வரை, அதிகம் விற்பனையாகும் அமெரிக்க நாவல்களின் பட்டியலில் இந்தப் புத்தகம் இடம் பெற்று வருகிறது. நாவல்கள் மூலம் உலகின் மிகப் பெரும் செல்வந்தராக உயர்ந்த முதல் அமெரிக்க எழுத்தாளர் ஜேக் லண்டன்.

மருதன் 




No comments:

Post a Comment