Search This Blog

Friday, November 14, 2014

அண்ணாமலையார் தீபம்!

கார்த்திகை மாதத்து பௌர்ணமி பெரும்பாலும் கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும். அந்நாளே கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்படுகிறது. சில தருணங்களில் பௌர்ணமியும் கார்த்திகையும் முன்னும் பின்னுமாக வருவது உண்டு.

திருவண்ணாமலையில், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர திருநாளிலேயே தீபவிழா கொண்டாடப்படுகிறது. அதன் சுற்று வட்டார ஊர்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. மற்றைய தலங்களில், குறிப்பாகக் கடலோரம் அமைந்த தலங்களில் பௌர்ணமியன்றே தீப விழா கொண்டாடப்படுகிறது.

இப்படி முன்னும் பின்னுமாக வரும்போது, கிருத்திகை நட்சத்திர நாள் தீபவிழாவை அண்ணாமலையார் தீபம் என்றும், பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படுவதை சர்வாலய தீபம் என்றும் அழைக்கின்றனர்.


கார்த்திகை தீபத் திருநாளில், மாலை 6 மணிக்குச் சரியாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். அதேநேரம், கீழே ஆலயத்தில் கொடி மரத்துக்கு முன் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, அவர்களுக்கு மகா தீபாராதனை நடைபெறும். அப்போது, சிறு விமானத்தில் (வாகனத்தில்) எழுந்தருளும் அர்த்தநாரீஸ்வரர்... சுற்றிலும் தீவட்டிகள் ஒளி வீச, திருநடனம் (முக்தி நடனம்) புரிவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆலயத்தின் உள்ளே இருந்து வரும் பெருமான் விரைவாக வந்து ஒருசில நிமிடங்கள் மட்டுமே திருநடனம் புரிந்துவிட்டு, உடனடியாக உள்ளே சென்றுவிடுகிறார்.

இதை தரிசிக்கும் அன்பர்களின் இருபத்தோரு தலைமுறைகளும் முக்தியை அடைகின்றன என்றும், உலக வாழ்வில் மேன்மை மிக்க இன்பங்களை அடைந்து சுகமாக வாழ்வர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வருடம், நவம்பர் 26ம் தேதியன்று திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மகாதீபம். அன்று அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அருணை சிகரத்தின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

1 comment: