Search This Blog

Tuesday, April 14, 2015

ரயில்கள்! - உலகை மாற்றிய புதுமைகள்!

இன்றைக்கு சென்னையிலிருந்து மதுரைக்கு போவதாக இருந்தாலும் சரி, கோவைக்கு செல்வதாக இருந்தாலும் சரி, அனைவரின் ஒரே தேர்வாக இருக்கின்றன ரயில்கள். இன்றைக்கு அத்தனை பேரும் விரும்பும் ரயில்கள், அவை வழக்கத்துக்கு வந்த காலத்தில் எல்லோரும்  பார்த்து பயந்து ஓடிய சுவாரஸ்யமான வரலாறும் இருக்கவே செய்கிறது. ரயில்கள் தண்டவாளத்தில் ஓடியதைப் பார்த்து நமக்கு ஆபத்து வந்துவிடும் என்றுதான் மனிதர்கள் நினைத்தார்கள்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல் பாலங்களில் வண்டிகளை இழுத்தும் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் மனிதன். 13-ம் நூற்றாண்டில் ஆஸ்த்ரிய நாட்டு மன்னர்கள் தங்களது பயணங்களுக்கு மரத்தாலான ரயில்களைப் பயன்படுத்தியுள்ளனர். மனிதர்கள் மற்றும் விலங்குகளை இதனை இழுக்க பயன்படுத்தினர்.

1769-ல் ஜேம்ஸ் வாட் நீராவி என்ஜினைக் கண்டுபிடித்தபின் இரும்பினால் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. ரயில் இன்ஜினும் பெட்டிகளும் எளிதாக நகர்வதற்காக ரயில் தண்டவாளங்களும் இரும்பினாலேயே தயார் செய்யப்பட்டன.

முதலில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட ரயில் இன்ஜின் வழக்கத்துக்கு வந்தன. இங்கிலாந்திலிருந்து வேல்ஸ்க்கு சரக்கு கொண்டு செல்ல இந்த ரயில்கள் பயன்படுத்தப் பட்டன. பிற்பாடு பயணிகளை அழைத்துச் செல்லும் போக்குவரத்து வாகனமாகவும் மாறியது.

நிலக்கரியில் ஓடிய ரயில் பிறகு டீசலில் ஓடத் துவங்கி, இன்றைக்கு மின்சார ரயிலாக மாறிவிட்டது. ரயில் தொழில்நுட்பம் கடந்த அரை நூற்றாண்டுகளில் கண்ட அசூர வளர்ச்சியின் காரணமாக, இன்றைக்கு மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் மின்னலாக பறக்கும் புல்லட் ரயில்கள் பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டன. அடுத்த பத்து ஆண்டுகளில் புல்லட் ரயில்கள் இந்தியாவிலும் ஓடும் என்றே எதிர்பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல இன்றுவரை ரயிலைத் தவிர வேறு  வாகனம்  உருவாகவில்லை என்பதே உண்மை!
ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment