Search This Blog

Saturday, August 31, 2013

வீரேந்திர ஷேவாக், யுவ்ராஜ் சிங், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் - இவர்களெல்லாம் நினைவிலிருக்கிறதா?

 
இந்திய கிரிக்கெட் அணிக்கு இது ஓர் அற்புதமான நேரம். அணித் தேர்விலும் ஆட்டத்தின் முடிவுகளிலும் இத்தனை பெரிய எழுச்சி இதுவரை ஏற்பட்டதில்லை. எங்குச் சென்றாலும் வெற்றி கிடைக்கிறது. இந்திய சீனியர் அணி என்றில்லாமல் இந்தியா ஏ, இந்திய ஜூனியர் அணிகளும் போட்டிகளை வென்றிருப்பது, இந்திய அணி மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை முன்னிறுத்துகிறது. இந்திய அணியில் புதிய திறமைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. பழைய வீரர்களின் ஞாபகமே வராதபடி, புதியவர்கள் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். எனில், மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய எண்ணுபவர்களுக்கு என்னதான் வழி?
 
‘உடல்தகுதியுள்ள வீரர்கள் யாராக இருந்தாலும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புண்டு. இளைஞர்கள் மட்டும்தான் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறுவது தவறு’ என்று சமீபத்தில் தோனி கூறியிருந்தார். இதை வைத்து இந்த ஜாம்பவான்களுக்கு மீண்டும் கதவு திறக்கும் என்று நம்பிக்கை கொள்ளலாமா?  அணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவோம் என்று நம்பிக்கையுடன் பேட்டி கொடுத்து வருகிறார்கள். யுவ்ராஜ் சிங்கும் ஜாகீர்கானும் பிரான்சுக்குச் சென்று, ரக்பி மற்றும் கால்பந்து விளையாட்டுப் பயிற்சியாளரிடம் உடல்தகுதியை மேம்படுத்தி இருக்கிறார்கள். கௌதம் கம்பீர், கவுண்டி கிரிக்கெட் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார். ஷேவாக், ஹர்பஜன் ஆகியோரும் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு, அடுத்த சவாலுக்குத் தயாராகிறார்கள். யுவ்ராஜ் சிங்குக்கு எத்தகைய வாய்ப்புகள் இருக்கின்றன? இந்திய ஒருநாள் அணியின் மிடில் ஆர்டரில் யுவ்ராஜ் சிங் நுழைய வாய்ப்புண்டு. இப்போதுள்ள தினேஷ் கார்த்திக்கின் இடம் இன்னமும் உறுதியாகவில்லை. யுவ்ராஜ் சிங் ஒரு நாள் அணிக்குள் நுழைவது தோனிக்கும் கூடுதலாக இன்னொரு ஸ்பின்னர் கிடைத்ததாக இருக்கும். ஜாகீர்கான் ஏற்கெனவே மறுபிரவேசம் கண்டவர். இது அடுத்தது. ஜாகீரால் டெஸ்ட் அணிக்குள் மட்டும் நுழைய வாய்ப்புண்டு. இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகிய மூவரும் டெஸ்ட் அணியில் நிலையான இடத்தைப் பிடிக்காததே காரணம். புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வினய் குமார், உனாட்கட், முஹமத் ஷமி ஆகிய ஆறு பேரும் இந்திய ஒருநாள் அணியின் வேகப்பந்து வீச்சு வளையத்துக்குள் இருக்கிறார்கள். இதனால் ஒருநாள் அணியில் ஜாகீரால் இடம்பிடிப்பது கடினமே. தவிரவும், இந்திய ஏ அணிக்காக தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாகப் பந்துவீசிய ஈஸ்வர் பாண்டேவுக்கும் வாப்பளிக்கவேண்டிய நிலைமை உருவாகியிருக்கிறது. 
 
ஹர்பஜன் சிங்?

தோனிக்கு அஸ்வின், ஜடேஜாவே போதும். தவி ரவும், மிஸ்ரா எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து நிரந்தரமான இடத்தைப் பிடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார். இவர்களைத் தாண்டிப் பார்த்தால், பிரக்யான் ஓஜா டெஸ்ட்டுக்கு மிகவும் பொருந்திவிட்டார். புதியவர்களில், ரசூல் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில், பஜ்ஜிக்கு எங்கே இடமிருக்கிறது? அடுத்த ஐ.பி.எல்.லுக்குப் பிறகுதான் ஹர்பஜனுக்கு விடிவுகாலம். இல்லையென்றால் சாம்பியன் லீக் மூலமாக ஏதாவது மாற்றம் வந்தால்தான் உண்டு.

ஷேவாக்?

டெஸ்ட் அணியில், ‘சச்சினின் ஓய்வுக்குப் பிறகு நான்காவதாகக் களம் இறங்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்று முதலிலேயே அந்த இடத்துக்குத் துண்டு போட்டு இருந்தார் ஷேவாக். ஆனால், அந்த இடத்தில் கோலியை நிரப்பவே தோனி விரும்புவார். ஷிகர் தவானின் மாபெரும் பாய்ச்சலால் ஷேவாக், கம்பீர் ஆகியோருக்குப் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முரளி விஜயும் டெஸ்ட் அணியில் நிரந்தரமான இடத்துக்கான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறார். ஒருநாள் ஆட்டங்களில் சிறப்பாக ஆடும் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியிலும் வாய்ப்பளிக்கப்பட்டால் ஷேவாக்கால் அடுத்த ஒருவருடத்துக்கு இந்திய அணிக்குள் நுழையவே முடியாது.

கம்பீர்?

யுவ்ராஜ் போல கம்பீரும் விரைவில் இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்புண்டு. தேர்வாளர்களுக்கு கம்பீர் மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. கம்பீரால் தொடக்க ஆட்டக்காரராகவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஆட முடியும் என்பதால். அதற்கு முன், அவர் தன்னை எப்படி நிரூபிக்கப் போகிறார்?  செப்டெம்பரில் சேலஞ்சர் டிராபி (மற்றும் சாம்பியன் லீக்), அக்டோபரில் துலீப் டிராபி, பிறகு, ரஞ்சிப் போட்டிகள். இந்த மூன்றிலும் சிறப்பாகப் பங்களித்தால் மட்டுமே இவர்களால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியும் என்கிற இக்கட்டான நிலைமை. ஆனால், இந்திய ஏ அணிக்குக்கூட இவர்கள் தேர்வு செய்யப்படாதது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய வெற்றிகளில் பங்காற்றிய வீரர்களுக்கு நிரந்தரமான வாய்ப்புகளை அளிக்கவும் இந்தியா ஏ மற்றும் இந்திய ஜூனியர் அணிகளில் தங்களை வெளிப்படுத்திய வீரர்களுக்குப் புதிய கதவுகளைத் திறக்கவும் தோனியும் தேர்வாளர்களும் விருப்பப்படுவார்கள். எனவே, தவிர்க்கவே முடியாத நிலைமை என்கிற சூழல் உருவானால் மட்டுமே இந்த ஐந்து பேரால் மீண்டும் இந்திய அணிக்குள் திரும்ப முடியும். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதுதான் கேள்வி!கடந்த ஜூனிலிருந்து இந்த ஜூன் வரைக்குமான தோனியின் வருமானம் 180 கோடி ரூபாய் என்று மதிப்பிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ். உலகப் புகழ்பெற்ற ரஃபல் நடால், உசைன் போல்ட் ஆகியோரை விடவும் அதிக வருமானம். சச்சினின் வருமானம் 125 கோடி ரூபா. சினிமா நட்சத்திரங்களை விடவும் விளையாட்டு வீரர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.தோனியே இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால் பி.சி.சி.ஐ. எத்தனை சம்பாதிக்க வேண்டும்? தோனி, சச்சினோடு ஒப்பிடும்போது பி.சி.சி.ஐ. என்கிற நிறுவனத்தின் லாபம் குறைவுதான். 2012-2013 ஆண்டில், பி.சி.சி.ஐ.யின் வருமானம், 950 கோடி ரூபாய். ஆனால் இதில் லாபம், 350 கோடி ரூபாய் மட்டும்.

 

No comments:

Post a Comment