Search This Blog

Friday, August 16, 2013

ஸ்மார்ட் வாட்ச்!


ஜேம்ஸ்பாண்ட் படங்களில், கைக்கடிகாரங்களில் மைக்ரோபோன் வைத்துக் கொண்டு பேசுவது, அதிலிருந்தே சுடுவது போன்ற சாகசங்களை எல்லாம் பார்த்து வியந்திருப்போம். அதெல்லாம் சும்மா கற்பனை என்று நினைக்காதீர்கள். தொழில்நுட்பம் அந்தக் கற்பனைகளுக்கு உருவம் கொடுத்துக் கொண்டே வருகிறது.லேட்டஸ்ட், ஸ்மார்ட்வாட்ச். அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் என்றொரு புதிய வகை தோன்றியிருக்கிறது. செல்போன், ஐபேட், டேப்லட் போன்றவை கைகளில் வைத்து இயக்குபவை. இதையடுத்து, மனித உடலோடு இணைந்து செயல்படும் தொழில் நுட்பத்தையே வேரபிள் டெக்னாலஜி என்று அழைக்கிறார்கள். அதில் முதலில் வருவது கைக்கடிகாரம். இரண்டாவது மூக்குக் கண்ணாடி. கைக்கடிகாரத்தை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், தொழில்நுட்ப உருவேற்றலாம் என்று நிறுவனங்கள் யோசித்ததின் விளைவுதான் ஸ்மார்ட்வாட்ச். இது வெறுமனே நேரம் மட்டும் காட்டும் கடிகாரம் அல்ல. இதன் மூலம், விளையாடலாம், மொழி பெயர்ப்புகள் செய்யலாம், கணக்குகள் போடலாம். இன்னும் சிலவற்றில் கேமரா, தெர்மோ மீட்டர், காம்பஸ், ஜி.பி.எஸ்., மேப்புகள், ஸ்பீக்கர், மெமரி கார்ட் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. இதனை வயர்லெஸ் ஹெட்செட், மைக்ரோபோன், மோடம் போன்றவற்றோடும் பேசவைக்க முடியும்.அடுத்தகட்டமாக மொபைல் தொழில் நுட்பத்தோடு இன்னும் நெருக்கமாக எப்படி கடிகாரத்தை இணைக்க முடியும் என்று எழுந்த ஆய்வின் பலன், இந்த ஆண்டு பெரிய முன்னேற்றத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. அதன் பெயர்தான் பெபிள் இபேப்பர் வாட்ச். ஐபோனோடும் ஆண்ட்ராய்டு போன்களோடும் சுலபமாக இணைக்கத்தக்க இந்த ஸ்மார்ட்வாட்ச் செய்யும் அற்புதங்கள்தான் இப்போது உலகெங்கும் பயனர்களிடையே பாப்புலராக இருக்கிறது.

பெபிள், ஐபோனோடும் ஆண்ட்ராய்ட் போனோடும் ப்ளூடூத் மூலம் தொடர்புகொள்ளும். உங்கள் போனில் மின்னஞ்சல் வந்தால், குறுஞ்செய்தி வந்தால், அலர்ட்டுகள் வந்தால், உடனடியாக அது உங்கள் பெபிள் கைக்கடிகாரத்தில் தெரியும். சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு என்றே பெபிளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் அபாரம். ஜி.பி.எஸ். மூலம் வழிகாட்டும், வேகம் கணக்கிட்டுக் காட்டும், தொலைவைத் தெரிவிக்கும். இதையே ஓட்டப்பந்தய வீரர்களும் பயன்படுத்தலாம். கூடுதலாக இசையையும் கேட்கலாம்.கைக்கடிகாரம் உங்கள் போனோடு தொடர்பு கொண்டிருப்பதால், உங்களுக்கு விருப்பமான கைக்கடிகார டையலையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். எப்படி டெஸ்க்டாப் ஸ்கிரீனில் முகப்படங்களை மாற்றுகிறீர்களோ அப்படி கைக்கடிகார முகப்புகளையும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச், ஐம்பது மீட்டர் ஆழ தண்ணீருக்குள் இருந்தாலும் தண்ணீர் புகாதாம்.பெபிளுக்கு அடுத்த முன்னேற்றம் ஹாட் வாட்ச்கள். எப்படி பெபிள் மக்களிடம் இருந்து பணத்தைத் திரட்டி, தன் தொழில்நுட்பத்தை உருவாக்கியதோ, அதே போன்ற கிரவுட் ஃபண்டிங் மூலம் உருவாகியிருப்பதே ஹாட் வாட்ச்கள். இந்த ஸ்மார்ட் வாட்ச், ஒரு படி உயர்ந்தது. உங்கள் பாக்கெட்டில் ஸ்மார்ட் போன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லையாம். இருபது முப்பது அடிகள் தள்ளியிருந்தாலும், ஸ்மார்ட்வாட்ச் வேலை செய்யும். முன்பிருந்த ஸ்மார்ட்வாட்ச்களில் குறுஞ்செய்திகளை, மின்னஞ்சல்களைப் படிக்க மட்டும்தான் முடியும். இதில் அதற்குப் பதிலெழுதவும் முடியும். போதாக் குறைக்கு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை கைக்கடிகாரத்தில் இருந்தே அப்டேட் செய்யலாம்.போனைத் தொடாமலேயே கைக்கடிகாரத்தை அருகில் வைத்துக் கொண்டே பேசும் வசதியும் இதில் உண்டு. நான்கு அழகழகான மாடல்கள் சந்தைக்கு வரவிருக்கின்றன. இப்போதே, எண்ணற்றோர் இதற்காக முன்பணம் கட்டிவிட்டுக் காத்திருக்கின்றனர்.

இதன் அடுத்தகட்டம்தான் சூப்பர். ஸ்மார்ட்வாட்ச் கோதாவில் ஆப்பிள் நிறுவனமும் சாம்சங் நிறுவனமும் கூட இறங்க இருக்கின்றன. அவர்கள் தயாரிக்கவிருக்கும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. கைக்கு அழகாக கடிகாரம் மட்டுமல்ல, கணினியையே பொதித்துத் தர தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துவிட்டன. பயனர்களுக்கு, புதிய அனுபவம் நிச்சயம்!

ஆர்.வெங்கடேஷ்

No comments:

Post a Comment