Search This Blog

Wednesday, August 21, 2013

விக்ரம் சாராபாய் - நீல் ஆர்ம்ஸட்ராங்க் - அன்னை தெரெசா

விக்ரம் சாராபாய்

விஞ்ஞானி, தொழிலதிபர், கல்வியாளர், இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாய், 1919 ஆகஸ்ட் 12, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார். இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் செயிண்ட் ஜான் கல்லூரியில் இயற்கை விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தார். ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியதால் அவசரமாக இந்தியா திரும்ப வேண்டியதாயிற்று.

இந்தியாவுக்குத் திரும்பிய விக்ரம் சாராபாய் பெங்களூருவிலுள்ள இந்திய விஞ்ஞான நிலையத்தில் சேர்ந்தார். நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானி சர்சிவி ராமன் வழிகாட்டுதலில் மின்காந்த நுண்ணலைகளின் விளைவுகள் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். உலகப் போர் முடிந்த பிறகு மீண்டும் இங்கிலாந்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1947ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.  கேரளாவைச் சேர்ந்த பிரபல நாட்டியக் கலைஞர் மிருனாளினியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் மல்லிகா சாராபாயும் சிறந்த நடனக் கலைஞர். முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பிய விக்ரம் சாராபாய், 1947ல் அகமதாபாத்தில் இயற்பியல் அவுக் கூடத்தை நிறுவி தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதே ஆண்டு அகமதாபாத் ஜவுளி ஆலை ஆய்வுச் சங்கத்தை நிறுவி 1956 வரை அதன் ஆணையராகச் செயல்பட்டார். 1957ல் அகமதாபாத் மேலாண்மைச் சங்கம், சாராபாய் கெமிகல்ஸ், சாராபாய் எஞ்சினியரிங் எனப் பல தொழிற்சாலைகளை நிறுவினார். அகமதாபாத்தில் தொடங்கப்பட்ட ‘இந்திய மேலாண்மை நிலையம்’ இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற கல்வி நிலையங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 1962ல் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக் குழுவை நிறுவி அதன் தலைவராக விக்ரம் சாராபாயை நியமித்தார். முதல் திட்டமாக தும்பாய் நடுநிலைக் கோடு ராக்கெட் ஏவுதளம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டது. ராக்கெட், ஏவு வாகனம், ஆளில்லா உளவு விமானம், செயற்கைக்கோள் ஆகியவற்றின் வடிவமைப்பு, சோதனை மற்றும் ஏவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

1966ம் ஆண்டு பன்னாட்டு அணுவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வியன்னாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த போது ஆல்ஃப்ஸ் மலைத் தொடரில் விமானம் மோதி ஹோமி பாபா மரணமடைந்தார். ஹோமி பாபா இடத்தை நிரப்பவும் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவும் விக்ரம் சாராபாயை அழைத்தார் அப்போதைய பிரதமர் இந்திர காந்தி. இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் பொறுப்பையும் வழங்கினார். விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளின் தலைவர் பொறுப்புகளில் விக்ரம் சாராபாய் திறம்படச் செயலாற்றினார்.  பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை வழங்கி இந்திய அரசு அவரைப் பெருமைப்படுத்தியது. 1968ல் விண்வெளி ஆய்வு மற்றும் ஆக்கப்பூர்வ பயன்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970ல் வியன்னாவில் நடைபெற்ற பன்னாட்டு அணுசக்தி முகமையின் தலைவராகவும் அணுசக்தியின் ஆக்கப்பூர்வ பயன்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு மாநாட்டின் துணைத் தலைவராகவும் தேர்வானார். 1971 டிசம்பர் 30, திருவனந்தபுரத்திலுள்ள தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வையிடச் சென்றபோது, தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்யக் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளாததால் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது மர்மமாகவே போய்விட்டது. இறக்கும் போது அவரது வயது 52. திருவனந்தபுரத்திலுள்ள தும்பா ராக்கெட் ஏவுதள மையம் இவரது நினைவைப் போற்றும் வகையில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நீல் ஆர்ம்ஸட்ராங்க்


சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க். 1930 ஆகஸ்ட் 5 அமெரிக்காவில் பிறந்தார். 16 வயது மாணவராக இருக்கும் போதே பயிற்சி பைலட்டாக விண்வெளியில் பறந்தார். 1947ல் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து கொரியாவுக்கு எதிரான போரில் பங்கேற்றார். போர் விமானங்களைத் திறம்பட இயக்கியதைத் தொடர்ந்து 3 பதக்கங்களை வென்றார்.

1955ல் விமானப் பொறியியல் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து ஒகையோ லூயி ஆய்வு மையத்திலுள்ள விமானவியல் தேசிய ஆலோசனைக் குழுவில் இணைந்தார். ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் விமானங்களின் தரத்தைப் பரிசோதிக்கும் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார். விமான ஆய்வு மையத்தை விட்டு விலகி 1962ல் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியைப் பெறுவதற்காக நாசாவில் சேர்ந்தார். 1966ல் ஜெமினி-8 கட்டளை விமானி என்ற முறையில் ஆளில்லாத எஜினா உந்துகணையுடன் இவரும் டேவிட் ஸ்காட்டும் இணைந்து முதல் மனித விண்வெளித்தள அமைப்பு முயற்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.  1968ல் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அப்போலோ 11 விண்கலத்தில் கமாண்டராகப் பதவி உயர்வு பெற்றார். 1969 ஜூலை 16, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து அப்போலோ 11 ராக் கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. சந்திரனின் வட்டப் பாதையில் சுற்றும்போது ‘ஈகிள்’ கொலம்பியாவிலிருந்து பிரிந்தது. காலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க ஆர்ம்ஸ்ட்ராங்கையும் ஆல்ட்ரின்னையும் சுமந்து கொண்டு ஈகிள் நிலவின் மேற்பரப்பில் இறங்கியது. நியூயார்க் நேரப்படி இரவு 10.50 க்கு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தார். இதன் மூலம் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் என்று புகழ் பெற்று, வரலாற்றில் பதிவானார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நிலவில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளுக்காக கல்லையும் மண்ணையும் சேகரித்தார். ‘மனிதனுக்கு இது சிறிய காலடிதான். ஆனால் மனித இனத்துக்கு அசுரப் பாய்ச்சல்’ என்று தனது மகத்தான சாதனையைப் பகிர்ந்து கொண்டார் ஆம்ஸ்ட்ராங்.

அன்னை தெரெசா


நீலக்கரையுடன் கூடிய வெள்ளை நிறப் பருத்திச் சேலை, சுருக்கங்கள் நிறைந்த முகம், கருணை பொங்கும் விழிகள், நாடு, மதம், இனம், மொழி வேறுபாடற்றச் சேவை மனப்பாங்கு... இவையே அன்னை தெரெசாவின் அடையாளம். 1910 ஆகஸ்ட் 26 அன்று அல்பேனியாவில் பிறந்தார். இவரது இயற் பெயர் ஆக்னஸ் கொன்ஸா பொஜாஹ்யூ.  சின்ன வயதிலேயே ஆக்னஸுக்கு இறை பணியில் ஆர்வம் அதிகம் இருந்தது. 18வது வயதில் லொரெட்டோ மிஷினரியில் சேர்ந்தார். 1929ல் கொல்கத்தாவிலுள்ள லொரெட்டோ கிளையில் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியரானார் ஆக்னஸ். தனது பெயரை ‘தெரெசா’ என்று மாற்றிக் கொண் டார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியைச் செய்தார். 1944ல் தலைமை ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் ஆர்வமிருந்தாலும் சமூகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வசதியாக 1948ல் ஏழைகளுக்கான மிஷினரியைத் தொடங்கினார். 1950ல் ‘மிஷினரீஸ் ஆஃப் சாரிடி’ என்ற பெயருடன் சமூகப் பணியைத் தொடர வாட்டிகன் அனுமதி அளித்தது. நோயாளிகளுக்காக ‘நிர்மல் ஹ்ருதயம்’, தொழு நோயாளிகளுக்காக ‘சாந்தி நகர்’, ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள், குழந்தைகளுக்கான இல்லங்கள் என்று ஏராளமானவற்றை நடத்திவந்தார். 13 சகோதரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் 600க்கும் அதிகமான மிஷனரிகள் மூலம் பல்லாயிரக்கணக்கான கன்னியாஸ்திரிகள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். பத்மஸ்ரீ, மக்சஸே விருது, உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் ‘டாக்டர்’ பட்டங்கள், பாரதரத்னா மற்றும் உலகின் மிக உயரிய நோபல் பரிசு ஆகியவை அன்னை தெரெசாவைத் தேடி வந்தன.

பிறப்பால் அல்பேனியன், குடியுரிமையால் இந்தியன், உடலாலும் உள்ளத்தாலும் உலகத்திலுள்ள அனைத்து ஏழைகளுக்கும் சொந்தமானவள்’ என்ற தெரெசாவின் வாக்கு ஆத்மார்த்தமானது. பொதுத் தொண்டுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அன்னை தெரெசா 1997 செப்டெம்பர் 5 உயிர் நீத்தார்.

No comments:

Post a Comment