Search This Blog

Saturday, September 21, 2013

ஐபோன் 5 சி

 
ஐபோன் மீது உலகெங்கும் பயங்கர ஈர்ப்பு உண்டு. ஐபோன் அழகும், அதன் இயங்குதளத்தின் இயல்பும், அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையும் அதன் மேல் பைத்தியத்தையே ஏற்படுத்திவிடும். ஆப்பிள் தொடர்ந்து இந்த ரசனையான அனுபவத்தை அதன் ஒவ்வொரு போன் மாடலிலும் மெருகேற்றிக் கொண்டே வந்தது.
 
ஆனால், இந்த எழிலுக்கும் திறமைக்கும் நவீன தொழில்நுட்பத்துக்கும் ஒரு விலை உண்டு. ஆப்பிள் ஐபோன்கள் எல்லாம் விலை விஷயத்தில் கொஞ்சம் அதிகம்தான். அதுவும் இந்தியாவுக்குள் ஐபோன்கள், அமெரிக்க விலையைவிட இருபது சதவிகிதம் அதிகமாகவே விற்கப்படுகின்றன.  ஐபோன்களுக்கு உலகெங்கும் இருக்கும் மிகப்பெரிய போட்டியாளர் ஆண்டிராய்ட் வகை போன்கள்தான். அதுவும் சாம்சங் கேலக்ஸி போன்கள் சந்தையை வெகுவேகமாகக் கைப்பற்றிக்கொண்டு வருகின்றன.இந்நிலையில், ஆப்பிள் இந்தியா, சீனா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளுக்கு ஏற்ப விலைகுறைவான போன்களை அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஐபோன் 5 சி என்ற அந்த மாடலைப் பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல மீடியாவில் கசிந்து கொண்டே இருந்தது.கடைசியாக சென்ற வாரம் ஐபோன் 5 சி மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டது. இதில் சி என்பது கலர் என்றே சொல்லலாம். நீலம், இளம் பச்சை, பிங்க், மஞ்சள், வெண்மை ஆகிய நிறங்களில் ஐபோன் 5 சி கிடைக்கும். மற்றபடி இந்த மாடலில் ஐபோன் 5இல் இருந்த அதே பிராசசரே இருக்கிறது. பேட்டரி பத்து மணிநேரம் வரை தாங்கும் என்று ஆப்பிள் அறிவித்திருக்கிறது. இந்தப் போன் மாடல் கெட்டியான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு இருப்பது தான் இதில் ஒரே புதுமை!உண்மையில், ஐபோன் 5 சி புதிய அனுபவத்தைத் தரும், வித்தியாசமாக இருக்கும், பெரிய முன்னேற்றமாக இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், அதெல்லாம் இல்லாமல் வெகு சாதாரணமாக, இதற்கு முந்தைய மாடலில் இருந்து பெரிய வளர்ச்சி ஏதுமில்லாமல் 5 சி இருப்பது அனைவரையும் கொஞ்சம் ஏமாற்றத்துக்குள்ளாக்கி இருக்கிறது.ஒரே ஒரு விஷயம், விலை. அமெரிக்காவில், 16 ஜிபி ஐபோன் 5 சி, 99 டாலர். 32 ஜிபி 199 டாலர்.மொபைல் ஆபரேட்டர்களின் காண்ட்ராக்டோடு இருந்ததால்தான் இந்த விலை. இல்லையெனில் இதன் உண்மை விலை 549 டாலர்கள். அதாவது, அமெரிக்காவில், தொலைதொடர்பு நிறுவனங்கள், ஐபோனின் விலையில் பெரும்பங்கை ஆப்பிளுக்குச் செலுத்தி, அதன் சந்தை விலையைக் குறைக்கும். அதற்கு மாற்றாக, ஐபோன் வாடிக்கையாளர்கள், அந்தக் குறிப்பிட்ட ஆபரேட்டர்களின் நெட்வொர்க்கையே பயன்படுத்த வேண்டும். இப்படித்தான் ஐபோன் 5 சி மாடலுக்கு இரண்டு வருட காண்ட்ராக்டோடு விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
 
அமெரிக்காவில் வேண்டுமானால், இந்த விலை குறைவாக இருக்கலாம். ஆனால், இந்தியாவிலோ சீனாவிலோ இது குறைந்த விலை இல்லை. இந்தியாவுக்கு வரும்போது, ஐபோன் 5 சியின் விலை ரூ. 40,000 ஆக இருக்கும். இதில் பாதி விலையில் சூப்பரான போன்கள் சந்தையில் கிடைக்கும்போது, இவ்வளவு விலை கொடுத்து யார் வாங்குவார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.சீனாவிலோ, ஐபோன் 5 சியின் விலை கிட்டத் தட்ட 730 டாலர்கள். அங்கே இது மிக மிக அதிக விலை. அப்படியானால், ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய மதிப்பைக் குறைத்துக் கொண்டு சந்தையை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றே அர்த்தமாகிறது.ஆனால், ஆப்பிள் எப்போதும் தன்னுடைய தொழில்நுட்பத்தாலும் எழில்நிறை தயாரிப்பினாலுமே சந்தையில் கோலோச்சுகிறது. இம்முறையும் இந்த 5 சி மாடல், அதன் பல்வேறு வண்ணங்களுக்காகவே பயங்கர டிமாண்டைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வண்ணம் என்பது ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட். அதில் பின்தங்கியிருந்த ஆப்பிள், 5 சி மாடல் மூலம், புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தும்.ஆப்பிள் எது செய்தாலும் அது தலைப்புச் செய்தி தான். மக்களின் மனநிலையைப் புரிந்து வைத்துள்ள நிறுவனம் அது. இம்முறையும் அதன் திட்டம் சோடை போகாது. 
 
 
ஆர்.வெங்கடேஷ்

No comments:

Post a Comment