Search This Blog

Thursday, September 26, 2013

சச்சின் சகாப்தம்!

'நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனி மனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்!''- 1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தபோது, அந்த அணியின் கேப்டன் மார்க் டெய்லர் சொன்ன வார்த்தைகள் இவை. இந்திய கிரிக்கெட்டில் 'சச்சின் சகாப்தம்’ எத்தனை அழுத்தமானது என்பதை உணர்த்தும் ஓர் உதாரணம் இது!
 
இந்த ஆண்டோடு கிரிக்கெட்டில் 24 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் சச்சின். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விரைவில் விடைபெற இருக்கிறார். தென் ஆஃப்ரிக்கா அல்லது மேற்கு இந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் போட்டிகளில் 200-வது போட்டியோடு அவர் விடைபெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. கிரிக்கெட்டில் அறிமுகமான காலம் முதல் சமீப டி-20 டிரெண்ட் வரை தனது தகுதி, திறமைகளை அப்டேட் செய்துவந்த சச்சினிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.

இறுதி வரை போராடு!

16 வயதில் பொடியனாக பாகிஸ்தான் மைதானத்துக்குள் நுழைந்தபோது, முதல் போட்டியில் 15 ரன்கள் அடித்த சச்சின், வக்கார் யூனிஸ் பந்தில் க்ளீன் போல்ட். ''நான் என்னென்ன திட்டங்களோடு மைதானத்துக்குள் நுழைந்தேனோ, அது எதுவுமே நிறைவேறவில்லை. 'கிரிக்கெட் விளையாட நான் தகுதியானவன் அல்ல’ என்று அப்போது தோன்றியது. அந்த எண்ணமே என்னை மிகவும் சோர்வுறச் செய்தது. ஆனால், இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன் என்ற பாசிட்டிவ் சிந்தனையால் அந்தச் சோர்வை விரட்டினேன். அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே 59 ரன்கள் அடித்தேன். அந்த பாசிட்டிவ் எண்ணம் அன்று தோன்றாவிட்டால், இன்று இந்த சச்சினே இல்லை!'' - இந்த நேர்மறைச் சிந்தனை அவருக்கு மட்டுமல்ல... நம் அனைவருக்குமே அவசியம் தேவை!

மாத்தி யோசி!

  டான் பிராட்மேன், விவ் ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், ப்ரையன் லாரா, ராகுல் டிராவிட்... என பல பேட்ஸ்மேன்களை உருவாக்கியிருக்கிறது கிரிக்கெட். ஆனால், சச்சினின் ஆட்டத்தில் உள்ள கச்சிதமான நுணுக்கத்தை மற்றவர்களின் ஆட்டத்தில் முழுமையாகப் பார்க்க முடியாது. மேற்கு இந்திய வீரர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் வாகான பந்துகளை முரட்டுத்தனமாக அடித்து ஆடுவதும், அடிக்க ஏதுவாக இல்லாத பந்துகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதுமான பாணியைப் பின்பற்றுவார்கள். ஆனால், தவறான பந்துகளைத் தண்டித்தும் மற்ற பந்துகளை ஃபீல்டர்களுக்கு இடையில் தள்ளிவிட்டு 'கேப்பில் கிடா வெட்டும்’ ஆட்டத்தை அறிமுகப்படுத்தி, அதை 'வெற்றி யுக்தி’யாக மாற்றியவர் சச்சின்.


கடந்து செல்!

  விமர்சனங்களை எப்படிக் கையாள்வது என்பதையும் சச்சினிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சி, 'கடவுள்’ என புகழ்ந்தாலும் சரி, 'சுயநலமாக ஆடுகிறார்’, மோசமான ஃபார்ம் காரணமாக 'எண்டுல்கர்’ என விமர்சித்தாலும் சரி, எதையும் ஒரு சின்னப் புன்னகையோடு கடந்துவிடுவார் சச்சின். அதுவும், இதுவும், எதுவும் கடந்துபோகும் என்பது சச்சினுக்குத் தெரிந்திருக்கிறது!

வேண்டும் இன்னொரு வீரநடை!

சூப்பர் மேனாகவே இருந்தாலும் பூமியில்தானே தரை இறங்க வேண்டும்! அதேபோல 'சாதனை நாயகன்’ சச்சினுக்கு பேட்டிங் பவர் குறைந்து வருவதும் உண்மையை, வேறு வழியில்லை என்றாலும், நாம் ஜீரணிக்கத்தான் வேண்டும்! 40 வயதான சச்சினுக்கு சீறி வரும் பந்துகளைக் கணிக்கும் திறன் குறைந்துகொண்டே போகிறது.  பேட்ஸ்மேன் முனையில் நிற்கும் சச்சின் முகத்தில் முதல்முறையாக பயத்தையும் பதற்றத்தையும் பார்க்க முடிகிறது. கொல்கத்தா டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் அடித்ததுதான் சச்சின் கடைசியாக விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் அதிகபட்ச ஸ்கோர். ஓய்வை அறிவிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார் சச்சின். 'அது எப்போது?’ என்பதை அவரே அறிவிப்பார் என்ற சுதந்திரத்தை சச்சினுக்கு அளித்துவிட்டுக் காத்திருக்கிறது கிரிக்கெட் உலகம். 

'பல சதங்கள் அடித்திருக்கிறேன். பல சாதனைகள் படைத்திருக்கிறேன். ஆனால், வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் கிரிக்கெட் களத்திலிருந்து பெவிலியனுக்கு வீரநடை போட்டு நடந்திருக்கிறேன். ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, மணல் புயலுக்கு நடுவே சதம் அடித்து இந்திய அணியை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வைத்தபோதுதான், 'நான் ஒரு விவ் ரிச்சர்ட்ஸ் போல உணர்ந்தேன்!’ என்று சொல்லியிருக்கிறார் சச்சின்.

விரைவில் அவர் விளையாட இருக்கும் 200-வது டெஸ்ட் போட்டியில் அப்படியான ஒரு வீரநடைக்குப் பின் சச்சின், ஓய்வு முடிவை அறிவித்தால், அது இத்தனை வருட முத்திரை சாதனைகளுக்கான கிரீடமாக இருக்கும்!

சார்லஸ்

 
 

No comments:

Post a Comment