Search This Blog

Saturday, November 21, 2015

நவரசமும் சாந்தமும்!



ஒரு காவியம் அல்லது நாடகம் என்றால் அதில் ஒரு கதை, Plot இருக்கிறது. அநேக ஸம்பவங்கள் வருகின்றன. இயற்கை வர்ணனைகள் இருக்கின்றன. உவமை போன்ற அணிகள், எதுகை, மோனை போன்ற சொல் ஜாலம் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் அதற்கு உயிர் இல்லை. ‘ரஸம்’ என்ற உணர்ச்சி அநுபவம்தான் உயிர் என்று வைத்தார்கள். ஒரு வாக்கியத்தில் எத்தனை சொல்லழகு இருந்தாலும் அது கவிதையாகிவிடாது, ‘ரஸம்’ இருந்தால்தான் அது கவித் தன்மை பெறும் - ‘வாக்யம் ரஸாத்மகம் காவ்யம்’ என்று ஒரு பெரிய ‘கிரிடிக்’ சொல்லியிருக்கிறார். இந்த ரஸங்களின் கணக்கில் இரண்டு தினுசான அபிப்பிராயங்கள் உண்டு. ஒரு சாரார் எட்டு ரஸம் என்பார்கள். இன்னொரு சாரார் ஒன்பது ரஸம் (நவரஸம்) என்பார்கள். சிருங்காரம், ஹாஸ்யம், கருண (சோகம்), ரௌத்திரம் (கோபம்), வீரம், பயானகம் (அச்சம்), பீபத்ஸம் (அருவறுப்பு), அத்புதம் (அற்புதம்) என்ற எட்டும் ரஸங்கள் என்பது ஒரு கட்சி. இவற்றோடு ‘சாந்தம்’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நவரஸக்காரர்களின் வாதம்.

சாந்தத்தை ரஸமாகச் சேர்க்காத ஆலங்காரிகர்கள் அதை மட்டமாக நினைத்தார்கள் என்று அர்த்தமில்லை. பார்க்கப் போனால் அவர்கள் தான் நவரஸக்காரர்களை விட அதை உயர்த்தியாக மதித்தார்கள். நம் பண்பாடே சாந்தத்தில் நிறைந்து போவதுதான். “சாந்தி: சாந்தி : சாந்தி:” என்று மூன்று முறை சொல்லியே எந்த வைதிக காரியத்தையும் நாம் பூர்த்தி செய்கிறோம். அந்த சாந்த நிலையில், உணருகிறவன் - உணரப்படுவது என்ற பேதமில்லாமல் எல்லாம் அடங்கிப் போகிறது.

No comments:

Post a Comment