Search This Blog

Tuesday, December 04, 2012

டச் ஸ்க்ரீன் - இயங்குவது எப்படி?


‘தொட்டாற்சிணுங்கி’ என்று ஒரு செடி உண்டு. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அந்தச் செடியை நீங்கள் லேசாகத் தொட்டாலே போதும். உடனடியாக அந்தப் பகுதியில் இருக்கிற எல்லா இலைகளும் சுருங்கி உள்ளே போய் விடும்.

கிட்டத்தட்ட அதேமாதிரி தொட்டாச்சிணுங்கி என்ற இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், தொட்டால் இயங்குகிற கருவிகளையெல்லாம் நாம் தினந்தோறும் பயன்படுத்துகிறோம். நான் எதைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?

‘டச் ஸ்க்ரீன்’ என்று சொல்லப்படுகிற தொடுதிரைத் தொழில்நுட்பம் இப்போது ரொம்பப் பிரபலமாக இருக்கிறது. செல்போன்களில், டேப்லட் கம்ப்யூட்டர்களில், சூப்பர் மார்க்கெட் கடைகளில் உள்ள பில் போடுகிற கருவிகளில், பேங்க் ஏடிஎம் இயந்திரங்களில், ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் அவன், டிவி என்று இன்னும் எங்கெங்கேயோ இதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம்.

இந்தக் கருவிகளை எல்லாம் இயக்குவதற்கு நாம் பொத்தான்களையோ, ரிமோட்டையோ தேடிச் சிரமப்பட வேண்டியதில்லை. அங்கே இருக்கிற திரையை நம் விரல்களால் லேசாகத் தொட்டாலே போதும், சட்டென்று அது இயங்க ஆரம்பித்துவிடும்.

ஆனால் அதே திரையை, உங்கள் பேனாவிலோ, பென்சிலிலோ தொட்டுப் பாருங்கள். எதுவுமே தெரியாத மாதிரி தேமே என்று முழிக்கும்.

அதாவது, மனிதர்கள் விரல் பட்டால் மட்டுமே இயங்குகிற மாதிரி அந்தத் தொடுதிரைகளைத் தயாரித்திருக்கிறார்கள். அந்தத் தொழில்நுட்பத்தைதான் இப்போது விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

நாம் இரண்டு செல்போன்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று சாதாரண ஸ்க்ரீன் மொபைல், இன்னொன்று டச் ஸ்க்ரீன் மொபைல்.

இந்த இரண்டு செல்போன்களிலும் காட்சிகள் தெரிகின்றன, கலர் போட்டோக்களைப் பார்க்கிறோம், வீடியோ இயங்குகிறது, பாட்டுப் பாடுகிறது, ஏதாவதும் டைப் செய்தால் அது அப்படியே திரையில் தோன்றுகிறது... ஒரே ஒரு வித்தியாசம், சாதாரண செல்போன் திரையை நாம் தொட்டால் எந்த ரியாக்ஷனும் இருக்காது, டச் ஸ்க்ரீன் செல்போன் மட்டும் நாம் தொடுவதைப் புரிந்துகொண்டு, அதுக்கு ஏற்ற மாதிரி இயங்குகிறது.

காரணம், சாதாரண செல்போன் திரையுடைய ஒரே வேலை, காட்சிகளை வண்ணத்தில் திரையிட்டுக் காட்டுவதுதான். அதற்கான எலக்ட்ரானிக் நுட்பங்களை மட்டுமே அந்தத் திரையில் பதித்து வைத்திருக்கிறார்கள்.

டச் ஸ்க்ரீன் என்பது, கிட்டத்தட்ட சாதாரண ஸ்க்ரீன் மாதிரியேதான் இருக்கும், இது செய்கிற எல்லா வேலைகளையும் அதுவும் செய்யும், ஆனால் கூடுதலாக அதில் ஒரு விசேஷ அடுக்கு இருக்கும்.

உதாரணமாக, உங்கள் வீட்டில் டிபனுக்குத் தோசை செய்கிறார்கள், ஒரு தோசையை வெறுமனே பரிமாறி விடுகிறார்கள், இன்னொரு தோசைக்குள்ளே உருளைக்கிழங்கை வைத்து‘மசால் தோசை’யாகத் தருகிறார்கள்.

இந்த இரண்டு தோசைகளையும் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் தெரியும். ஆனால் சாப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசம் புரியும். காரணம், இரண்டாவது தோசைக்குள்ளே ஓர் அடுக்கு உருளைக்கிழங்கு ஒளிந்திருக்கிறது.

அதுபோல, டச் ஸ்க்ரீனுக்குள்ளே இருக்கிற அந்த விசேஷ ‘மசாலா’, கூடுதல் அடுக்கு, ஏராளமான வயர்கள் நிறைந்த ஒரு சின்னத் தகடு!

உங்கள் வீட்டில் டென்னிஸ் அல்லது பேட்மின்டன் மட்டை இருந்தால், அதைக் கையில் எடுத்துப் பாருங்கள். குறுக்கும் நெடுக்குமாகப் பல நரம்புகள் நெருக்கமாகப் பின்னப்பட்டிருக்கும். இந்த நரம்புகளுக்கு நடுவில் இருக்கிற பகுதி சின்னச் சின்னச் சதுரங்களாகத் தெரியும்.

டச் ஸ்க்ரீனுக்குள்ளேயும் இந்த மாதிரி ஒரு கட்டமைப்புதான் இருக்கிறது. நரம்புக்குப் பதிலாக, அங்கே சின்ன மின்சார வயர்கள் மேலேயும் கீழேயும் ஓடுகின்றன. இப்படிப் பல நூறு வயர்கள் சேர்ந்துதான் ஒரு தொடு திரையை உருவாக்குகிறது.

இந்த வயர்கள் சாதாரணமாக நம் கண் பார்வைக்குத் தெரியாது. காரணம், அதெல்லாம் ரொம்ப மெலிதாக இருக்கும், அதன் தடிமன் ஒரு தலைமுடியையும் விடக் குறைவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
இப்படி டச் ஸ்க்ரீனில் இருக்கிற எல்லா வயர்களுக்குள்ளும் கொஞ்சம் மின்சாரம் எப்போதும் பாய்ந்து கொண்டே இருக்கும். இந்த மின்சாரம் ஒழுங்காகப் பாய்கிறதா, அல்லது அதில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறதுக்கு ஓர் எலக்ட்ரானிக் சமாசாரம் உண்டு. கிட்டத்தட்ட, வீட்டு வாட்ச்மேன் மாதிரிதான்!

இப்போது, அந்த டச் ஸ்க்ரீனின் நடுவில் நீங்கள் உங்கள் விரலை வைக்கிறீர்கள். என்ன ஆகும்?

ஒரு பெரிய நதி. அதில் ஏராளமாகத் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் கரையோரமாக நடந்து போய்த் தண்ணீருக்குள்ளே ஒரு குச்சியை விடுகிறீர்கள்.

இப்போது, அந்த நதி முழுவதும் தண்ணீர் இருந்தாலும்கூட, நீங்கள் குச்சியை வைத்த இடத்தில் மட்டும் நீரோட்டம் கொஞ்சம் மாறுபடும். இல்லையா?

அதுமாதிரி, அந்த டச் ஸ்க்ரீனில் உங்கள் விரல் எங்கே பட்டதோ, அந்த இடத்துக்குக் கீழே இருக்கிற வயர்களில் பாய்கிற மின்சாரத்தில் மட்டும் ஒருசின்ன மாற்றம் உண்டாகும். இதை அந்த ‘எலக்ட்ரானிக் வாட்ச்மேன்’ கண்டுபிடித்து விடுவார். சட்டென்று அங்கே ஓடிப் போய் நீங்கள் என்ன வேலை செய்ய நினைத்தீர்களோ அதைச் செய்து முடித்து விடுவார்.

உதாரணமாக, அந்த விரல் பட்ட இடத்தில் ஒரு வீடியோ இருக்கிறது என்றால், உடனே அந்தப் படம் ஓட ஆரம்பிக்கும், அல்லது, ஆடியோ பாடும், கேம்ஸ் விளையாடலாம், கேமெராவில் படம் பிடிக்கலாம், யாரையாவது போனில் அழைத்துப் பேசலாம்... இப்படி நாம் பயன்படுத்துகிற கருவிக்கு ஏற்ப ஏகப்பட்ட பயன்பாடுகள் உண்டு, எல்லாம் விரல் நுனியில்!

வெறுமனே தொடறது மட்டுமில்லை, விரலைப் பயன்படுத்தி நாம் சில சைகைகளையும் செய்யலாம். வலதுபக்கம் தள்ளலாம், இடதுபக்கம் தள்ளலாம், அழுத்தலாம், இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அர்த்தம் உண்டு. அதைக் கவனித்து, அதுக்கு ஏற்ப உங்கள் ‘எலக்ட்ரானிக் வாட்ச்மேன்’ செயல்படுவார்.

இதுதவிர, பெரும்பாலான டச் ஸ்க்ரீன்களில் நாம் இரண்டு, மூன்று விரலைக்கூடப் பயன்படுத்தித் தொடலாம், சைகைகளைச் செய்யலாம்.

இப்போது நீங்கள் ஒரு போனில் போட்டோக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். விரலை வலது பக்கம் தள்ளினால், அடுத்த போட்டோ வருகிறது, இடதுபக்கம் தள்ளினால், முந்தின போட்டோ வருகிறது, இரண்டு விரல்களைப் பயன்படுத்தினால் அந்த போட்டோ அளவு பெரிசாகிறது... இப்படி எல்லாமே விரல்களின் மூலம் செய்து கொள்ளலாம்.

இதனால், டச் ஸ்க்ரீன் கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் எல்லாரும், அதிலேயே ஆழ்ந்து போய்விடுகிறார்கள். நேரம் ஓடுவதே தெரியாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். அதுக்குப் பிறகு, மற்ற சாதாரண ஸ்க்ரீன் உள்ள கருவிகளைப் பயன்படுத்தவே அவர்களுக்கு மனம் வருவதில்லை.

இது என்ன பெரிய விஷயம்? சமீபத்தில் வெளியான சில கருவிகளில், முக்கியமாக நவீன தொலைக்காட்சிகளில் இந்த டச் ஸ்க்ரீன்கூட இல்லை, அதுக்குப் பதிலாக, வெறுமனே நம் கைகளுடைய அசைவைப் பார்த்து அதற்கு ஏற்பச் செயல்படுகிற வசதியைச் சேர்த்திருக்கிறார்கள்.

உதாரணமாக, நீங்கள் உங்கள் கைகளைக் காற்றில் இடதுபக்கம் நகர்த்தினால், டிவியில் சேனல் மாறும், கையைக் குவித்து முன்னாடி குத்தினால் ஒலி குறையும். இப்படி ஒவ்வொரு சைகைக்கும் ஒவ்வோர் அர்த்தம்!

அடுத்து என்ன? நாம் சிந்தித்ததும் வேலை நடக்கவேண்டுமா? யாராவது ஒரு விஞ்ஞானி அதையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்!



கேளுங்கள்!


1. சில டச் ஸ்க்ரீன்களை நாம் தொட்டவுடன் வேலை செய்கிறது, ஆனால் வேறு சில, அழுத்தினால்தான் இயங்குகிறது. இந்த வித்தியாசம் ஏன்?

நவீன டச் ஸ்க்ரீன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன், இன்னொன்று, ரெசிஸ்டிவ் டச் ஸ்க்ரீன்.

இதில் கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன் கொஞ்சம் விலை அதிகம். ஆனால் பிரமாதமாக வேலை செய்யும். அதோடு ஒப்பிடும்போது ரெசிஸ்டிவ் டச் ஸ்க்ரீன் மந்தம்தான். கையை வைத்து ஓரளவு அழுத்தினால் மட்டுமே புரிந்து கொண்டு இயங்கும். வேகமும் கொஞ்சம் குறைவு.

ஆனாலும், விலை குறைவு என்ற காரணத்தால், ரெசிஸ்டிவ் டச் ஸ்க்ரீன்கள் பல கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பணம் கொஞ்சம் கூடுதலாகச் செலவானாலும் பரவாயில்லை, நல்ல வேகமும் சிறப்பான அனுபவமும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கெபாசிட்டிவ் டச் ஸ்க்ரீன் உள்ள பொருள்களைத் தேடி வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

2. சில டச் ஸ்க்ரீன் கருவிகளில், நம் விரலுக்குப் பதிலாகச் சின்னப் பேனா மாதிரி ஒரு கருவியைப் பயன்படுதுகிறார்களே, அது ஏன்?

விரல் தொடுதிரையெல்லாம் வருவதற்கு முன் அறிமுகமான தொழில்நுட்பம் அது. எல்லா பேனாக்களையும் பயன்படுத்த முடியாது, அதற்கு என்றே வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் பேனாதான் வேண்டும், அதன் பெயர் ஸ்டைலஸ்!

சில ஸ்டைலஸ்களில் வயர் உண்டு. அது அந்தக் கருவியோடு பிணைக்கப்பட்டிருக்கும். மற்ற பெரும்பாலான ஸ்டைலஸ்கள் வயர்லெஸ்ஸாகச் செயல்படும்.

அடிப்படையில் விரலும் ஸ்டைலஸும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் வேலை பார்க்கிறது. வித்தியாசம் என்னவென்றால், இந்த இரண்டு வகை ஸ்க்ரீனுக்குள்ளேயும் இருக்கிற மின்சார அமைப்புகள் மாறுபடும். விரலால் தொடும்போது இயங்குகிற ஸ்க்ரீன் ரொம்ப நுட்பமானதாக இருக்கும்.

இப்பவும் ஸ்டைலஸ் பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். விரலில் தொட்டுப் பயன்படுத்துவதை விட அதுதான் வேகமானது, ஸ்க்ரீனும் விரைவில் அழுக்காகாது என்று சொல்கிறார்கள்.

ஆனால், மக்கள் ஸ்டைலஸ் என்று ஒரு குச்சியைத் தனியாகத் தூக்கிக்கொண்டு அலைய விரும்புவதில்லை. விரலைத் வைத்து தொட்டால் வேலை நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுதான் இப்போது சூப்பர் ஹிட்!



1 comment: