Search This Blog

Saturday, September 14, 2013

ஓ பக்கங்கள் - இயேசுவின் கடைசிக்கால சாட்சியங்கள்! ஞாநி


பாரீசில் நான் பார்த்த முக்கியமான இன்னொரு இடம் நாட்டர் டேம் கதீட்ரல். கலை, இசை, ஆன்மிகம், மதம், இலக்கியம் எல்லாம் இணையும் இடம் இது. நண்பர் அகிலாதான் நாங்கள் இந்த இடத்துக்குச் சென்றேயாக வேண்டும் என்று வற்புறுத்தியவர். இசைக் கலைஞரான அவர், அந்த மாதா கோயிலில் அன்று இசைக்கப்பட இருக்கும் கிரெகோரியன் சேண்ட்சை அனைவரும் அவசியம் கேட்க வேண்டும் என்றார். எனவே சென்றோம்.

கிரெகோரியன் சேண்ட்ஸ், மாதா கோயில் என்று தொடர்வதற்கு முன்னால், ஒரு விஷயத்தைப் பேச வேண்டும். அங்கே சென்ற நாங்கள் மத, கடவுள் நம்பிக்கைகள் இல்லாதவர்கள். நாத்திகரும் பகுத்தறிவாளருமான நீங்கள் கோயில்களுக்கெல்லாம் போவீர்களா?’ என்று இந்தியாவிலும் என்னைச் சிலர் அவ்வப்போது கேட்பதுண்டு. எந்த இடத்துக்கும் செல்வேன். கும்பிடுவதில்லை, அவ்வளவுதான். வரலாற்றைப் புரிந்து கொள்ளவேண்டுமானால் எல்லா இடங்களுக்கும்தான் செல்ல வேண்டும். பாரீசில் ஆலயத்துக்கும் சென்றேன். ஆடை அவிழ்ப்பு நடன விடுதிக்கும் சென்றேன். (அந்தந்த இடத்தின் பிரதான நிகழ்வுகளான தொழுதலிலும் விழுதலிலும் பங்கேற்கவில்லை, அவ்வளவு தான்.) இந்த ஐரோப்பிய பயணத்தின்போது பல இடங்களில் தேவாலயங்களுக்குச் சென்றேன். காரணம் அவையெல்லாம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்.கிரெகோரிச்யன் சேண்ட் என்பது கிறித்தவத் தேவாலயத்தில் இசைக்கப்படும் ஒரு இசை வகை. ஸ்ரீரங்கத்திலோ, திருவல்லிக்கேணியிலோ, பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டாகப் பிரபந்தம் பாடுவதைக் கேட்டால் உற்சாகமாக இருக்கும். கிரெகோரியன் சேண்ட் அந்த வகையைச் சேர்ந்தது அல்ல. இசை வடிவ ரீதியில் அதை வேதபாராயண மெட்டுக்குச் சமமாக ஓரளவு ஒப்பிடலாம். ஆப்பரா இசை வடிவத்துக்கு அருகாமையில் இருப்பது கிரெகோரியன் சேண்ட். ரொம்ப எளிமைப்படுத்திச் சொல்வதென்றால், மாடர்ன் தியேட்டர்ஸ் இசையமைப்பாளர் வேதா இசையமைத்த ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்’ பாட்டின் மெட்டு கிரெகோரியன் சேண்ட்டிலிருந்து கடன் வாங்கிய மூடில் இருக்கும். கண்ணை மூடிக் கொண்டு கிரெகோரி சேண்ட்டைக் கொஞ்ச நேரம் கேட்டீர்களென்றால், கொஞ்சம் சோகம், கொஞ்சம் அமைதி, கொஞ்சம் உருக்கம், கொஞ்சம் மென்மை, கொஞ்சம் சிலிர்ப்பு எல்லாம் இருக்கும். ரொம்ப நேரம் கேட்டால், அலுப்பாக இருக்கும். பக்தி எப்போதும் இசையைச் சார்ந்தே இருக்கிறது. ஆலயங்களில் கூட்டாகப் பாடுவது பக்தியின் முக்கிய அம்சம். கிரெகோரியன் சேண்ட்டைத்தான் தன் அதிகார பூர்வமான பக்தி இசை வடிவமாக ரோமன் கத்தோலிக்க சர்ச் கருதுகிறது. போப்பாண்டவர் கிரெகோரி தி கிரேட் என்பவரால் உருவாக்கப்பட்டதால் இந்த இசைக்கு அந்தப் பெயர் என்று கருதப்பட்டாலும், இந்த வடிவம் 5ம் நூற்றாண்டு முதல் ரோமானிய வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. போப் கிரெகோரி காலத்தில் அது செம்மைப்படுத்தப்பட்டுச் செழுமையாக்கப்பட்டிருக்கிறது. சுமார் 1200 வருடம் பழைமையான இந்த இசைவகையை நான் கேட்ட ஆலயத்துக்கு இந்த வருடம் வயது 850!நாட்டர் டேம் கதீட்ரல் ஆலயத்துக்கு இன்னொரு சிறப்பு அதுதான் பாரீசின் சீரோ கிலோமீட்டர்! அங்கிருந்துதான் பிரான்ஸ் நாட்டின் நகரின் ஒவ்வொரு இடத்தின் தூரமும் கணக்கிடப்படுகிறது. (சென்னையில் தமிழ்நாட்டின் சீரோ கிலோமீட்டர் கல் எங்கே இருக்கிறது தெரியுமா? அண்ணா சாலை தொடங்கும் இடத்தில் இருக்கும் முத்துசாமி பாலத்தின் நடுவில் இருக்கிறது! திருச்சி 195 மைல் தூரம் என்றால், இந்தக் கல்லிலிருந்து அவ்வளவு தூரம் என்று அர்த்தம்.) அது மட்டுமல்ல, நாட்டர் டேம் ஆலயம் இருப்பது ஒரு தீவில் ! பாரீஸ் நகரத்துக்குள் ஒரு தீவா? ஆம். பாரீசில் ஓடும் சேன் நதியில் எஞ்சியிருக்கும் ஒரு தீவு- இல் டே லா சைட். பழம் தீவான இது இப்போது பாரீஸ் நகரின் மையமாகி விட்டது. இரு பாலங்கள் தீவை பாரிசுடன் இணைக்கின்றன. இங்கே மெட்ரோ ரயில் நிலையம் கூட உண்டு.நாட்டர்டேம் என்றால், நம்ம அம்மா என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். ப்ரெஞ்ச்சில் டேம் என்றால் பெண். நாட்டர்டேம் நம்ம பொண்ணு. ஆங்கிலத்தில் அவர் லேடி. இங்கே குறிக்கப்படும் பெண், ஏசுவின் அன்னை மேரி. நாட்டர்டேம் கதீட்ரலை 1163ம் வருடம் கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். முடித்த வருடம் 1345. ஆலயத்தின் கட்டடக் கலையின் சிறப்பு இதன் இரட்டைக் கோபுரங்கள். மொத்தம் 69 மீட்டர் உயரமுள்ள இவற்றின் 387 படிகளை ஏறிப் போய் பார்த்தால் முழு பாரீஸ் நகரின் தோற்றத்தையும் பார்க்க முடியுமாம். நான் போகவில்லை. இடத்தை 850ஆம் வருடக் கொண்டாட்டத்துக்காக பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கோபுரத்தின் உச்சியில்தான் இந்த ஆலயத்தின் புகழ்பெற்ற இமானுவேல் என்ற மணி இருக்கிறது. இந்த மணியின் எடை மட்டும் 13 டன். இருப்பது ஒரு மணி அல்ல. இன்னும் எட்டு மணிகள் இன்னொரு கோபுரத்தில் உள்ளன. எல்லா மணிகளையும் ஒன்றாக அடித்தால் அதிர்ச்சியைக் கட்டடம் தாங்காது என்பதால், தனித் தனியேதான் அடிப்பார்களாம். மணிகள் விஷயம் கோர்ட் வழக்கில் இருக்கிறது. புதுப்பிப்பதற்காக மணிகளைக் கழற்றியதும்,எல்லாவற்றையும் உருக்கி விடலாம் என்று நினைத்தார்கள். புராதன மணிகளை உருக்கக் கூடாது என்று வழக்கு போட்டு தடை வாங்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தில் கிறித்தவ பக்தர்கள் புனிதப் பொருட்களாகக் கருதும் சில பொருட்கள் இருக்கின்றன. இயேசுவை சிலுவையில் அறைந்தபோது அவரைக் கிண்டல் செய்தவர்கள், நீ என்ன ராஜாவா ? அப்படியானால் இந்தக் கிரீடத்தை அணிந்து கொள் என்று சொல்லி முள்ளாலான கிரீடத்தை தலையில் அமுக்கி வைத்துச் சித்திரவதை செய்ததாக வர்ணிக்கப்படுகிறது. ஒரு முட்செடியையே அப்படி கிரீட மாக்கியதாகச் சொல்லப்படும். அந்த முட்கிரீடத்தின் ஒரு பகுதி நாட்டர்டேம் ஆலயத்தில் உள்ளது.இயேசு தலையில் வைத்த முட்கிரீடத்தின் பகுதி என்று சொல்லப்படுபவை உலகில் மொத்தம் 700 உள்ளன. இருபது இடங்களில் இவை வைக்கப்பட்டுள்ளன. நாட்டர்டேம் ஆலயத்தில் இருக்கும் முள், 1238ல் கான்ஸ்டாண்ட்டிநோபிள் அரசன் பால்ட்வினால், பிரெஞ்ச் அரசன் லூயி 9ன் தயவு கோரி அளிக்கப்பட்டது. 

இதேபோல இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி என்று சொல்லப்படும் பொருளும் நாட்டர் டேம் ஆலயத்தில் இருக்கிறது. ரோமானிய அரசி ஹெலனா 328ஆம் வருடத்தில் இந்தச் சிலுவையைக் கண்டறிந்தாராம். அதன் பகுதிகள் உலகில் பல தேவாலயங்களில் உள்ளன. மூன்று வெவ்வேறு மரங்களிலிருந்து ஏசு சுமந்த சிலுவை செய்யப்பட்டதாம் ஹெலனா, சிலுவையை மட்டும் கண்டுபிடிக்கவில்லை. அதில் இயேசுவைப் பொருத்தி அடித்த ஆணிகளையும் கண்டறிந்தார். அந்த ஆணிகளில் ஒன்று நாட்டர் டேம் கோயிலில் இருக்கிறது. அந்த ஆலயத்தின் இன்னொரு புகழ்பெற்ற பொருள் இசைக்கருவியான ஆர்கன். இந்த ஆலயத்தின் தலைமை ஆர்கன் இசைக்கலைஞராக நியமிக்கப்படுவது பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.  நாட்டர் டேம் ஆலயத்துக்கு வரலாற்றில் கிடைத்த இன்னொரு சிறப்பு, அதை வைத்து ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஒரு முழு நாவலையே எழுதியதுதான். எழுத்தாளர் பிரெஞ்ச் படைப்பாளியான விக்டர் ஹியூகோ. நாவலின் தலைப்பு: தி ஹஞ்ச்பேக் ஆஃப் நாட்டர் டேம். (நாட்டர் டேம் கூனன்)

1 comment: