Search This Blog

Sunday, November 03, 2013

நோபல் வெற்றியாளர்கள் 2013

டைனமைட்டைக் கண்டறிந்த ஆல்ஃபிரெட் நோபல், ஒருநாள் செய்தித்தாளைப் பார்த்தபோது, 'டைனமைட்டைக் கண்டறிந்த மரண வியாபாரி மரணம்’ என்று தவறான செய்தி வெளியாகி இருந்தது.

இதைப் பார்த்து மனம் நொந்துபோன  நோபல், தன் பெயர் இவ்வாறு அழைக்கப்படக் கூடாது என்று நினைத்தார். தனது சொத்துகளைப் பயன்படுத்தி, மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடும் பல்துறை அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று உயில் எழுதினார். அதன் அடிப்படையில்தான், 1901-ம் ஆண்டிலிருந்து இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய ஐந்து துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.


'பேங்க் ஆஃப் ஸ்வீடன்’ என்ற வங்கி, தனது 300-வது ஆண்டை 1968-ல் கொண்டாடியபோது, நோபல் பரிசுக் குழுவுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கியது. எனவே, 1969-ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசும் இணைந்தது.

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?


வேதியியல் 

வேதியியல் வினைகளின் தொடக்கமும் முடிவும் மட்டுமே பொதுவாக நம் கண்களால் கண்டறியக்கூடியது. அந்த வேதிவினையில் இடம்பெறும் இடைவினைகள், நம் கண்களால் கண்டறிந்து பதிவுசெய்ய முடியாதது. (வெளிவரும் புகை, மேலே படியும் சிறு துகள்கள், 'சொய்ங்’ சத்தம் போன்ற சில விவரங்களை மட்டுமே நம்மால் கண்டறிய முடியும்.)


இத்தகைய நுணுக்கமான இடைவினைகளை நாம் கண்டறியும்போது, நமது வேதியியல் ஆராய்ச்சிகள் மேலும் மேலும் செழுமை அடையும். நம் கண்களால் கண்டறிய முடியாத இத்தகைய சிறிய தகவல்களைக்கூட கணினியின் துணைகொண்டு பதிவுசெய்யவும், விளக்கவும் முடியும் என்று நிரூபித்தவர்கள் மார்ட்டின் கார்ப்ளஸ், மைக்கேல் லெவிட் மற்றும் ஏரி வார்ஷெல். இந்த மூவருக்கும் இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சிக்கலான வேதியியல் ஆய்வுகளையும் மாதிரிகளையும் சுலபமாகப் புரிந்துகொள்ள இவர்களது கண்டுபிடிப்புகள் உதவுகின்றன. ஆய்வகச் சோதனை முடிவுகளும், கணினி வழி கண்டறியப்பட்ட சோதனை முடிவுகளும் பொருந்திப்போகின்றன. எனவே, மிகவும் அபாயகரமான வேதியியல் சோதனைகளைக் கணினி முறைகளைக்கொண்டு செய்வது பயனுடையதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதன் மூலம் வேதியியல் ஆய்வுகள் பெருமளவு முன்னேறும்.


இலக்கியம்

இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, கனடா நாட்டைச் சேர்ந்த 'ஆலிஸ் மன்றோ’ வுக்குக் கிடைத்துள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, சிறுகதை இலக்கியத்துக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 13-வது பெண். கனடாவிலிருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் பெண்.

தற்கால சிறுகதை இலக்கியத்தில் மிகச் சிறந்த சிகரங்களைத் தொட்டவர் ஆலிஸ் மன்றோ. மிக இயல்பான வார்த்தைகளும் சொற்றொடரும் அமையப்பெற்ற நடையைச் சிறுகதைகளில் கையாள்பவர். கடந்த 2009-ம் ஆண்டு, இவரது சிறுகதைகளைக் கௌரவிக்கும் விதமாக 'மேன் புக்கர்’ பரிசு வழங்கப்பட்டது.


பொருளாதாரம்

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல்  பரிசு பெறுபவர்கள், யூஜீன் பாமா, ராபர்ட் ஷில்லர் மற்றும் லார்ஸ் பீட்டர் ஹேன்சன்.

'' 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பதுபோல, சந்தையில் பொருட்களின் விலை குறைவாக இருக்கும்போது, வாங்கிவிட வேண்டும். சந்தையில், விற்பனை புத்திசாலித்தனமாக நடப்பது இல்லை. அதனால், சந்தையில் அடிக்கடி வீழ்ச்சி ஏற்படும்'' என்பது போன்ற கொள்கைகளை ஷில்லர் வெளியிட்டார். ஆனால், இவருடன் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் யூஜீன் பாமா, ''நிதிச் சந்தை திறமையாகச் செயல்படக்கூடியது'' என்ற கொள்கையை வெளியிட்டார்.


இந்த இரண்டு கொள்கைகளில் ஒன்று சரியானது என்று நிரூபிக்கப்படும்போது, மற்றொன்று தவறாகிறது. எனவே, இந்த இருவரின் கொள்கைகளையும் ஆராய்ந்து, ஒரு முழுமையான கோட்பாட்டை உருவாக்கினார் பீட்டர் ஹேன்சன். எனவே, மூவருக்கும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


  
மருத்துவம்
மனித உடலின் அடிப்படை, அலகு செல் என்பது  தெரியும். அந்தச் செல்கள் உடலுக்குத் தேவையான சமயத்தில், தேவையான இடங்களுக்கு மூலக்கூறுகளை எவ்வாறு கடத்துகின்றன என்பதைப் பற்றிய ஆய்வுக்காக   ஜேம்ஸ் இ.ராத்மேன், ராண்டி ஷெக்மேன், தாமஸ் சுதோப் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு நொதிகள், புரதங்கள் போன்ற மூலக்கூறுகள் கடத்தப்படுகின்றன. இந்தச் சிறுசிறு மூலக்கூறுகளுக்கு 'வெசிக்கிள்கள்’ என்று பெயர். இந்த வெசிக்கிள்களின் இயக்கம், அது எவ்வாறு கடத்தப்படுகிறது, கடத்தலுக்குக் காரணமான மரபணுவை அடையாளம் காணுதல் போன்ற தகவல்களைத் தனித்தனியாகக் கண்டறிந்தார்கள்.


இந்த வெசிக்கிள்களின் கடத்தலில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக நரம்புத்தளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு மற்றும் நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன. இந்தக் குறைபாடுகளைத் தடுக்க, இவர்களின் கண்டுபிடிப்பு பெரும் உதவியாக இருக்கும்.



 இயற்பியல்

நவீன இயற்பியலின் முக்கியமான கண்டுபிடிப்பு சென்ற ஆண்டு நிகழ்ந்தது. 'கடவுள் துகள்’ என்று தவறுதலாகப் பெயரிடப்பட்ட 'ஹிக்ஸ்போசான் துகள்’, சென்ற ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைப் பொருட்களும் அணுக்களால் ஆனது, இந்த அணுக்களுக்கு நிறையை வழங்குவது எது என்பதைக் கண்டறிவதில் பல இயற்பியலாளர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்தார்கள்.

இந்த ஆராய்ச்சியில், பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்சுவா ஆங்கலர், ராபர்ட் பிரௌட் ஆகியோர் இணை ஆய்வறிக்கைகளை வெளியிட்டார்கள். அவர்களில் முதன்முதலாகக் கருதுகோளை வெளியிட்ட, ஹிக்ஸின் பெயரால், 'ஹிக்ஸ்போசான் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. (இதில் 'போசான்’ என்ற வார்த்தை, இந்தியரான சத்தியேந்திரநாத் போஸ் அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது.)


போசான் துகள் கண்டறியப்பட்ட அன்று ஹிக்ஸ், மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதார். போசான் துகள் பற்றிய கொள்கை முடிவு, இயற்பியலின் அணுக் கொள்கைகளிலும் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதிலும் துணைபுரியும் வகையில் உள்ளது.

மேலே சொன்ன மூவரில், ராபர்ட் பிரௌட் 2011-ல் மரணம் அடைந்ததால், அவருக்குப் பரிசு அறிவிக்கப்படவில்லை. பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்சுவா ஆங்கலருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, போசான் துகளைக் கண்டறிந்த CERN ஆய்வுக்கூடத்துக்கும் பரிசு அளிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். ஆனால், அமைதி தவிர்த்த பிற பரிசுகள், அமைப்புகளுக்கு வழங்கப்படுவது இல்லை.


 அமைதிக்கான பரிசு 

 ரசாயன ஆயுதங்களைக் கண்காணிக்கும் குழுவான 'ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனம்’ (OCPW) இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளது. அறிவியல் மற்றும் வேதியியல் துறையில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகள், ஆயுதங்களின் வளர்ச்சியிலும் பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்ப, அதிக அழிவை உண்டாக்கும் ரசாயன ஆயுதங்களின் பயன்பாடும் அதிகரித்து வந்த நிலையில், 1997-ம் ஆண்டு, வேதியியல் ஆயுதங்கள் ஒழிப்பு உச்சி மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் OCPW அமைக்கப்பட்டது.


இந்த அமைப்பில் 189 நாடுகள், ரசாயன  ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்ற உறுதிமொழியில் கையப்பம் இட்டு, உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளன.  சமீபத்தில் சிரியாவில் பயன்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்கள் மற்றும் அவற்றின் கொடுமைகளை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக, மிகத் தெளிவான  ஆய்வறிக்கையை வெளியிட்டது இந்த அமைப்பு.

ரஷ்யா மற்றும் அமெரிக்க  நாடுகளின் தலைமையில் சிரியாவை 190-வது உறுப்பினராகச் சேர்க்கும் முயற்சிகளைச் செய்தது. உலகம் முழுவதும் ரசாயன ஆயுதங்கள் அழிப்பில், ஆரவாரமின்றி சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்த அமைப்பைக் கௌரவிக்கும் விதமாக நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.



இயற்பியல், வேதியியல், பொருளாதாரத்துக்கான பரிசுகளை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் (Royal Sweedish Academy of science)என்ற அமைப்பு அளிக்கிறது. மருத்துவத்துக்கான பரிசை, கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்(Karolinska institute) ஐ சேர்ந்த நோபல் அசெம்ப்ளி (Nobel Assembly) என்ற அமைப்பும் அளிக்கிறது. இலக்கியத்துக்கான பரிசை, ஸ்வீடிஷ் அகாடமி (Swedish Academy) அமைப்பு அறிவிக்கிறது. இந்த மூன்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவை. அமைதிக்கான பரிசை மட்டும் நார்வே நோபல் கமிட்டி (Norwegion Nobel Commitee) வழங்குகிறது. அமைதிக்கான பரிசு நார்வேயில் உள்ள ஓஸ்லோ (Oslo) நகரத்திலும், மற்ற பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் (Stockholm) நகரிலும் வழங்கப்படும். நோபல் பரிசு பெற்றுள்ள அத்தனை பேருக்கும், ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி, விருதுகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment